Wednesday, November 28, 2007

எழுத்துக்கலை பற்றி இவர்கள்( 4 ) லா.ச.ராமாமிர்தம்

1. எழுத எழுத எழுத்துக்கே ஒரு சீற்றம் உண்டு. இரை தேடி அலைகிறது.

2. மனசாட்சி, ஆணித்தரம், தராசின் நிர்த்தாட்சண்யம், விஷய வெளியீட்டில் பொன் எடைபோன்ற சொல்செட்டு, அதே சமயத்தில் சரளம், நையாண்டி - இப்படியும் கட்டுரைகள் உண்டு. தி.ஜ.ர வின் பேனாவிலிருந்து புறப்பட்டவையே இந்த இலக்கணங்களுக்குச் சாட்சி.

3. எந்த உத்தியை எழுத்தாளன் கையாண்டாலும் சரி, அதோடு இணைந்து, அதே சமயம் அதைத் தன்னோடு பிணைக்கும் கட்டுப்பாடு, பொறுப்பு, உழைப்பு, discipline அவன் பாஷைக்கு அத்யாவசியம்.

4. கதை எழுதுவது பெரிய விஷயமல்ல. அந்த அழகிய சிற்பத்தை இழைத்து இழைத்து, தட்டித்தட்டி கண்மூடாமல் நகாசு வேலை செய்து சிற்பத்தின் கண் திறந்து உக்ரஹத்தை வரவழைக்க வேண்டும்.

5. சில சமயங்களில் மனதில் ஒரு எண்ணம் எழுந்ததும் சமயமும் சந்தர்ப்பமும் அற்று அதையொட்டி, அதே மனத்தில் வாக்குத் தொடர்கள் எழுகின்றன. எழுந்ததும் அவைகளே எண்ணங்களாகவும் மாறி தாமே தம்மைத் தனித்தனித் தொடர்புகளுடன் பெருக்கிக்கொண்டு விடுகின்றன.

6. கதையம்சம் என்று தனியாக எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.எந்தக் காட்சியில், எந்த ஓசையில், ஒரு அற்புத அம்சத்தில் கண், செவி, மனம் இதயம் என்று காண்கிறதோ, அங்கேயே கதை பிறந்து விட்டது.

7. நெருப்புண்ணா வாய் சுடணும். அப்படி வார்த்தையைச் சுண்டக்காய்ச்சி எழுதணும்.

8. நிறையப் படிக்கணும். தமிழ் மட்டுமல்ல, தெரிஞ்ச மொழி எல்லாத்துலேயும் நிறைய புக்ஸ் படிச்ச பிறகு எழுத ஆரம்பிக்கணும். இப்போ வாசகர் கடிதம் எழுதறவன் கூட எழுத்தாளன்னு சொல்லிக்கிறான். அவனுக்குக்கூட கடிதத்துக்கு இவ்வளவுனு பரிசு எல்லாம் தர்றா. அதனால எழுத்தாளன் ஆகிறது இப்போ ரொம்ப சுலபம்.....

9. யாருமே எழுத்தாளனாய்த்தான் இருக்க வேண்டும் என்றில்லை. அவரவர் வழியில் அழகைப் பேணுபவர்தான். ஆனால் அழகை எங்கேயும் கண்டு கொள்ள மனம் பழக வேண்டும். மாலையின் செவ்வானம் அவள் ஜ்வாலா முகத்தை நினைவூட்ட வேண்டும். வாழைமரத்தில் ஆடும் வாழை இலைப் பச்சையில் அவளுடைய தட்டாமாலையில் சுற்றும் பச்சைப் பாவாடை மனதில் தோன்ற வேண்டும். அப்பொதுதான் தரிசனம் நிகழும். எழுத்தாளனுக்கு, அவன் எழுத்து காட்டும் முகங்கள் தான் தரிசனங்கள். To cmprehend in the known factor, the unknown - that is mytsic experience.

10.எல்லாவற்றுக்கும் கடைசியாக; முதலும் அதுதான். சிறுகதையோ, நெடுங்கதையோ எழுத ஆரம்பித்து விடு. விஷயம் பிறகு தன் வெளியீட்டுக்குத் தன் வழியை எப்படியேனும் பார்த்துக் கொள்ளும். தண்ணீரில் முதலில் விழுந்தால்தான், குளிப்பதோ, மூழ்கிப் போவதோ, நீச்சல் அடிப்பதோ. எழுதப் போகிறேன், அதற்கு ஹோட்டல் ஓஷியானிக்கில் அறை வாடகைக்கு எடுக்கக் காத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திரியாதே. இதோ, திண்ணையில் உட்கார்ந்து, அட்டையைத் துடைமீது வைத்துக் கொண்டு ஆரம்பி. ஆரம்பித்துவிடு.

Tuesday, November 27, 2007

'எழுத்துக்கலை' பற்றி இவர்கள்..........(3) சுஜாதா.

1. எழுத்தாற்றலை ஓரளவுக்குப் பயிற்சியால் வளர்த்துக் கொள்ள முடியும்.தமிழ் நன்றாகத் தெரிய வேண்டும். தமிழில் நிறையப் படிக்க வேண்டும். அதிகம்பேசாமல் நிறையக் கவனிக்க வேண்டும்.எழுத்து என்பது 'Memory shaped by art' என்று சொல்வார்கள். உண்மை எத்தனை? கற்பனை எத்தனை?அவற்றை எந்த அளவில் கலப்பது? நடந்ததைச் சொல்வதா? நடந்திருக்க வேண்டியதைச் சொல்வதா? - இந்த ரசாயனம் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நாளாகும். இதற்குக் குறுக்கு வழியே இல்லை. நிறைய எழுதிப் பார்க்க வேண்டும்.

2. பால்சாக் ஒரு நாளைக்குப் பனிரெண்டு மணி நேரம் எழுதினார். அத்தனை
எழுத வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு ஒருபக்கம் எழுதினாலே வாழ்க்கையில் நூறு புத்தகம் எழுதி விடலாம

3. The image that fiction producesis purged of the distractions, confusions, and accidents of ordinarylife என்றதுபோல தினவாழ்க்கையிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். தெரிந்த மனிதர்கள்,தெரிந்த சம்பவங்கள் பற்றி முதலில் எழுதுவது நல்லது. சொந்தக் கதை எழுதுவதை விட, மனதில் வந்த கதையைச் சொந்தப் படுத்திக் கொண்டு எழுதுவது சிறப்பு.

4. எழுதியதைச் சில தினங்கள் விட்டுப் படித்துப் பார்க்க வேண்டும். அப்போது
ஒரு வாசகனின் கோணத்திலிருந்து அதை பார்க்க இயலும். கொஞ்சம் கூடக்கருனணயே காட்டாமல் அநாவசிய வார்த்தைகளையும் வாக்கியங்களையும் சிதைத்து விட வேண்டும். 'நான் எழுதியதெல்லாம் மந்திரம் போல; ஒரு வார்த்தையை நீக்க முடியாது; நீக்கக் கூடாது என்பதெல்லாம் மடத்தனம்.உனக்கே திருப்தி வரும்வரை திரும்பத் திரும்ப எழுதுவதிலும் திருத்துவதிலும் நீக்குவதிலும் சேர்ப்பதிலும்தான் நல்ல எழுத்து ஜனிக்கிறது.

5. எழுத்தாற்றல் வந்துவிட்டது உங்களுக்கே புரியும். ஒரு ஜுரம் போலஉணர்வீர்கள். நீங்கள் சிருஷ்டித்த பாத்திரங்கள் உங்களை ஆக்கிரமிப்பார்கள். எழுதுவதில் உள்ள வேதனைகள் கழன்று போய் உங்களை எழுத ஆரம்பிக்கும். இந்த நிலை வருவதற்குச் சில தியாகங்கள் தேவை.

6. உருவம், உள்ளடக்கம் என்று பலர் ஜல்லியடிப்பதைக் கேட்டிருக்கிறேன்.டெண்டர் நோட்டீக்சுகுக்கூட உருவமும் உள்ளடக்கமும் இருக்கிறது. பின்சிறுகதை என்பது தான் என்ன? கூர்ந்து கவனியுங்கள். சிறுகதை என்பதுஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கும் உரைநடை இலக்கியம்.

7. எழுதுகிறவனுக்குக் கவனம் முக்கியம். எலோரும் கவனிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்துப்பார்த்தால் நாம் கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம். கவனிப்பது என்பது உடல் நிலையையும், மனநிலையையும் பொறுத்தது. காண்கிற எல்லாவற்றையும் கவனிக்க எனக்குச் சில வருஷங்கள் ஆயின. கவனித்த
அத்தனையையும் எழுத வேண்டுமென்பதில்லை.எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள் - முக்கியமாக மானுடம் வேண்டும்.

8. எழுதுவதற்கென்று ஏதாவது விதிகள் உள்ளனவா? நல்ல அப்சர்வேஷன் பவர் வேண்டும்.எனது கண்களையும் காதுகளையும் எப்போதும் கவனமாகத் திறந்துவைத்திருக்கிறேன். வாசிப்பது எழுதுவதற்குப் பெரிதும் துணை புரிகிறது.எதைப்பற்றித் தெலிவாகத் தெரியுமோ அதைப் பற்றியே எழுதவேண்டும்.

Sunday, November 25, 2007

எழுத்துக் கலை பற்றி இவர்கள்.......(2). தி.ஜானகிராமன்

1. எழுத்தாளனுக்குரிய அடிப்படைக் குணம் எல்லோரிடமும் கலந்து பழகத் தெரிவது தான். தன்னை, வாழும் உலகினின்று பிரித்துக் கொண்டு வாழ முற்படும் ஒருவனால் இவ்வுலகை, இன்பமான இந்த(எக்ஸிஸ்டென்ஸ்) இருக்கையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

2. எழுதுவதற்கு அடிப்படையானது ஒரு உத்வேகந்தான். எழுதுபவன், படைக்கும் ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டியதுதான் அடிப்படைத் வேவை. மரபு வழிப்படி இலக்கியங்களைப் படித்துவிட்டுத்தான் எழுத வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. "இண்டென்ஸ் பீலிங்" எனும்படியான சிரத்தை தேவை. குறையற்ற ஆழமான உணர்ச்சித் திளைப்பில் தான் படைப்பிலக்கியத்தின் கரு உதிக்கிறது எனலாம்.

3. பலசமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும்போது நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலை கொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப் பந்தயமல்ல. நூறு கஜ ஓட்டப் பந்தயத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ, வேகத்தை மாற்றிக் கொள்ளவொ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக அவசியம். வளவளப்பு என்றால் அதிகச் சுமை. ஓடுவது கஷ்டம்.

4. சிறுகதை எழுத உக்திகளைச் சொல்லித் தரலாம். உணர்வில் தொய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும், முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. செக்காவின் உக்திக்கு ஒரு அச்சு தயார் செய்து கொண்டு, அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம். ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும். புதிதாக ஒன்றும் வந்துவிடாது. உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும் தான் முக்கியம். அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஒரு உருவம் கிடைக்கும்.

5. தனித்தன்மையும், உணர்ச்சி நிறைவும், தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்தி பெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும்.

6. எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடியவேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையை கடந்தால் ஒருமைக் கோப்புக்கும் ஊறு விளையத்தான் செய்யும்.

7. செக்காவ், மாப்பசான், போ, மாம், தாகூர், கு.ப.ரா, புதுமைப் பித்தன், லா.ச..ரா, ஸீன்ஓகாளி, ஜாய்ஸ், ஸ்டீஃபன்கிரேன், ஹென்ரிஜேம்ஸ், போவன், காவபாட்டா போன்ற வெவ்வேறுசிறுகதை ஆசிரியர்களைப் படித்தால் சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்யக்கூறுகள் உண்டு என்பதும், சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்யம் என்பதும் தெரியும். உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம், இடை, முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்க வேண்டிய அவசியம் என்பதும் இந்தக் கதைகநளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத் தெரிவதும், தெளிவில்லாமல் பூசினாற்போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம்: பூசினாற்போலவும் விழலாம். அது விளகின் தூரம், ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத்தைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில் உணர்ச்சியோ, சிந்தனையோ போதிய தீவிரத் தன்மை பெறும்பொது உருவமும் தானாக ஒருமைப் பாட்டுடன் அமைந்து விடுகிறது.

8. உணர்ச்சியின் தீவிரத்தன்மை எப்போது, எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதற்கில்லை. அது ஒவ்வோர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ, ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை, ஊறும் தன்மை. எனக்குக் கிட்ட ஒரு வாரமோ, ஒரு வருஷமோ பிடிக்கலாம். உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்கிறார்கள். எழுத்து தொழிலாகி பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழகிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.

(இன்னும் வரும்)

Friday, November 23, 2007

'எழுத்துக் கலை' பற்றி இவர்கள்....(1)'தேவன்'

1. எழுத்தாளன் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். பேனாவைச் சற்று
ஒதுக்குப் புறமாக வைத்து ஓய்வு கொடுத்து விட்டால் அப்புறம் அதன் அருகில்
கையைக் கொண்டு போவது சிரமம். பேனாவும் கனக்கும். அதைக் காகிதத்தில்
ஓட்டுவது தேர் இழுக்கிறமாதிரி இருக்கும். படிக்கிற பேருக்கு உலுக்கு மரம்
போடுகிறமாதிரி தோன்றும். பேனா ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்,
அப்போதுதான் எழுத்தாளனுக்கும் எளிது. வாசகனுக்கும் சுகம்.

2. எழுதுவது என்றால் ஒரு ஆவேசம் வேண்டி இருகிறதே! அப்படி வந்தால் தான்
எழுத்து ஜீவனுடன் இருக்கிறது.

3. எழுத எழுதத்தான் மெருகு ஏறும். வார்த்தைப் பிரயொகம் சுபாவமாக வரும்
உங்களிடம் எழுத்துக்கலைக்கு வேண்டிய விஷயம் இருக்கிறது. அதை
சரியானபடி பயன் படுத்த வேண்டும். பேனாவுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்.

4 எழுதி எழுதித்தான் கை பண்பட வேண்டும். மனதில் அற்புதமான 'ஐடியா'
உருவாகும். அதையே எழுத்தில் பார்க்கும்போது ஜீவன் இல்லாமல் போய்விடும்..
மூளையும் கையும் ஒத்துழைக்க வேண்டும். பாஷை அனுகுணமாக வேலை
செய்ய வேண்டும். மூன்றும் ஒத்துக் கொண்டால்தான் 'மார்க்' வாங்கலாம்.
எழுத்து என்பது சாமான்யம் இல்லை.

5. எழுதுவத் மிகவும் சிரமமான, சங்கடமான தொழில். ''அழகாக வார்த்தைகளைக்
கோத்துக் கொடுத்து விட்டேனே!'' என்றால் பிரயோசனமில்லை. எத்தனையோ
பொறுமை, எத்தனையொ உழைப்பு, வாழ்க்கையை ஊன்றிக் கவனித்து ஏற்பட்ட
பக்குவம், பொது ஜனங்கள் எதை விரும்புவார்கள் என்ற சரியான ஊகம், எப்படி
எழுதினால் சிறப்பாக அமையும் என்று கண்டு கொள்கிற ஞானம் - இத்தனையும்
ஒரே ஆசாமியிடம் வேண்டும். இது ஒரு நாளில் வருகிற வித்தை இல்லை. பல
வருஷங்கள் உழைத்தே இந்தத் தேர்ச்சியை அடைய முடியும்.

6. மனித சுபாவங்களில் எண்ணற்ற வகைகள் இருக்கின்றன. அவற்றில் மிகப்
பெரும்பாலானவை ஒரே திசையை நோக்குபவை. ஒரு சின்னக் காரியம் செய்து
விட்டுப் பெரும் புகழைப்பெற விரும்புகிறவர்கள், அதைப்பற்றி அடிக்கடிப்
பேசுகிறவர்கள், ஒரு சில இடங்களில் தலையைக் காட்டிவிட்டுப் புகைப்
படத்திலும் புகுந்து கொள்பவர்கள், தன் அருமையை இன்னும் உலகம் கண்டு
கௌரவிக்கவில்லை என்று நிரந்தரமாகக் குறைசொல்பவர்கள் - இந்த மாதிரி
ரகங்களைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பான்மைக் கட்சியை அலங்கரிப்பவர்கள்.
ஹாஸ்யமாக எழுதுவதற்கு இவர்கள் தருகிற விஷயம் வேறு யாருமே கொடுக்க
மாட்டார்கள்.

7. எழுதுகிற கதை தமிழ்நாட்டுக் கதையாக இருக்க வேண்டும். கதைப் பாத்திரங்
களைப் படிக்கும் போது ''எங்கேயோ பார்த்திருக்கிறோமே'' என்று பிரமை
தட்ட வேண்டும். அதுதான் எழுத்திலே காட்டும் ஜாலம்.

8. ஒரு மனிதனைக் கவனித்து, குணாதிசயங்களை உணர்ந்து, பேனா முனையில்
அதைக் கொணர்ந்து பிறர் அந்த மனிதரை மனக்கண் முன் பார்க்கும்படி
செய்வது எத்தனை கடினமான காரியம்! அதற்கு எத்தனையோ சாமர்த்தியம்
வேண்டும். வார்த்தைக்கட்டு வேண்டும்.

9. எழுத்தாளன் கண்ணால் ஒன்றைக் கண்டுவிட்டு சும்மா இருந்து விடுவானா?
தான் கண்ட அனுபவத்தைப் பிறருக்குச் சொல்லாவிட்டால் அப்புறம் என்ன
எழுத்தாளன் என்று பெயர்?

10. வாசகர்கள் எல்லோரும் நல்லவர்கள். அவர்களுக்கு யாரிடத்திலும் மனதில்
எள்ளளவும் துவேஷம் கிடையாது. நன்றாக இருகிறதை உடனே தயங்காமல்
குறைக்காமல் சொல்லுவார்கள். அதில் நம்பிக்கை யுடன் எழுதிவிட்டால்
யாரும் அசைக்க முடியாது.

( இன்னும் வரும் )

Tuesday, November 20, 2007

உவமைகள் - வருணனைகள் - 50 (பாக்கியம் ராமசாமி)

'பாக்கியம் ராமசாமி'(ஜ.ரா.சுந்தரேசன்) படைப்புகளிலிருந்து.


1. அப்புசாமி தண்ணீர் அதிகமாகிவிட்ட உப்புமா மாதிரி தளரத் தளர நடந்து வருவதைப் பார்த்ததுமே அவனுக்குத் 'திக்'கென்றது.

- 'அப்புசாமியின்பொன்னாடை'கட்டுரையிலிருந்து.

2. அப்புறம் சற்றுக் கீழே தள்ளி மூன்று வரிகள் - கடற்கன்னி எனப்படும் 'மெர்மெய்ட்' மாதிரி பாதி இந்தி, பாதி இங்கிலீஷ் உருவில் படுத்திருந்தது.

-'இன்லண்ட் லெட்டரில் இடைஞ்சல்கள்'.

3. போட்டி தினம். சூரியன் வழக்கம் போலச் சரியாக கிழக்கே உதித்துவிட்டு, தப்பான பிளாட்பாரத்துக்கு வந்துவிட்ட ரயில் மாதிரி 'திருதிரு' வென்று விழித்தது. 'நாம் ஒருகால் லேட்டாக உதித்துத் தொலைத்துவிட்டமோ? வழக்கமாக நாம் உதிக்கும்போது அப்புசாமி கட்டிலில் துப்பட்டிக்குள் அல்லவா இருப்பார்? இன்றைக்குக் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட,கண்ணைமூடி ஏதோ சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறாரே'.

- 'அலங்காநல்லூர் அப்புசாமி'.

4. மாமியார் 'கொள்கொள்' ளென்று இருமினால் கூட சில வார்த்தைகள் புகழ்ந்து வைக்கலாம். அவர் காதில் படுகிறமாதிரி ''எங்க மாமியார் இருமினாங்கன்னா வெண்கல மணியாட்டம் பிசிறில்லாம இருக்கும். இருமல்னா 'ப்யூர்' இருமல். இழுப்பு, வீசிங் அதெல்லாம் இருக்காது. கோவிலில் சாயங்கால பூஜையிலே அடிக்கிற மணியோட நாதம் தான் எனக்கு ஞாபகம் வ்ருது. அது என்னவோ ஆச்சரியம் பாருங்கள் - ஒரு ரெண்டு மாசம் இருமுவார். அடுத்த ஒரு மாசம் இரும மாட்டார். மறுபடி ஒரு ரெண்டு மாசம் இருமுவார். அப்புறம் பதினைந்து நாள் இரும மாட்டார். எல்லோராலும் இப்படி இருமிவிட முடியாது.

மாமியாருக்கு இருமல் நின்று போய்விட்டால் கூடக் கஷ்டப்பட்டு இருமிக் கொண்டிருப்பார். - மருமகளின் சர்டிபிகேட்களால்.

- 'புகழும் கலை'.

5. எங்கள் அடுக்கக வாட்ச்மேன் டியூட்டி என்று எதையும் குறிப்பாகப் பார்த்ததாகக் கூற முடியாது. 'உளன் எனில் உளன்; இலன் எனில் இலன்' என்று பக்தர்கள் கடவுளைக் குறிப்பிடுவதைப் போல எங்கள் வாட்ச்மேன் இருக்கிறார் என்றால் இருக்கிறார்; இல்லை என்றால் இல்லை!

- 'வாங்கய்யா வாட்ச்மேனய்யா'.

6. ஒரு பழைய புஸ்தகத்தின்மீது வாகாக ஒரு கொசு உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ''நன்றாகக் கவனி'' என்று நான் சொல்லிவிட்டு அந்தக் கொசுவைத் தொந்தரவு செய்யாமல், உஷாராக 'பேட்'டை மெதுவாக மெதுவாக...(ஆசன ஆண்டியப்பன் யோகா செய்யும் குழந்தைகளுக்குச் சொல்வது போல) மெதுவாக கொசுவுக்கு ஒரு சாண் உயரத்தில் குடைபொலப் பிடித்துக் கொண்டேன்.

- 'புது முறையில் கொசுவைக் கொலை செய்வது எப்படி?'.

7. உன் மச்சினன் எப்பவும் ரொம்பக் கோபக்காரன். மச்சினன் (muchசினன்) என்ன மூடுல இருந்தானோ? ஆபீசுலே ஸஸ்பென் ஷன்லே இருக்கானோ? அல்லது அவனுக்குக் கீழிருந்தவனுக்கு 'ஃபர்பாமென்ஸ்' இன்கிரிமெண்ட்' சேத்துக் குடுத்துட்டானோ?

- 'சம்பளம் ஒரு வம்பளம்'.

8. பழுப்புக்கவர்லே, ஏதாவது கவர் - நீலக்கலர் அதி விசேஷம் - வந்தால் என் மனசிலே ஒரு கிளுகிளுப்பு ஏற்படுவது வழக்கம். டிவி யிலிருந்து வானொலியிலிருந்து ஏதாவது சன்மானம் அல்லது லைப்ரரிகள் எதிலிருந்தாவது 'செக்', இந்த மாதிரியான விஷய மாக இருக்கும். (வெகு அபூர்வமாக வரும் என்றாலும்) பழுப்புக்கவர் வந்தாலே, மனசிலே ஒரு பழைய காதலி, காதலனைப் பார்ப்பது போன்ற ஒரு இன்பப் படபடப்பு ஏற்படுவது வழக்கம். அப்படி ஒரு கவர் போனவாரம் வந்து சேர்ந்தது.

- 'நீ செத்தாயா பிழைச்சாயா?'.

9. "ஐயோ பொறி கொள்ளாடா? இந்தப் பாழாய்ப்போன பட்டணத்திலே எந்தப் பலகாரக் கடையிலேயும் பொறிகொள்ளுங்கிற அயிட்டம் கிடைக்காதேடா! அதிசயம்டா! அது ஒரு அபூர்வம்டா! இங்கே பாம்பே மிக்ஸர்னும், நவதானிய மிக்ஸர்னும் எண்ணெயிலே போட்டுப் பொறிச்சுத் தர்ரதெல்லாம் பொறிகொள்ளாடா? உங்கப்பாட்டி பண்ணிக் கொண்டு வருவாளே, நடுநடுவே பல்லு பல்லாக் கொப்பரைத் தேங்காய் - ஒரு தரம் அவள் பல்லே கூட இருந்தது -மஞ்ச மசக்க மஞ்சள் தேச்சுக் குளிச்சுட்டு சுமார் ஈரமாக வந்தசுமங்கிலி மாதிரி அந்தப் பொறிகொள்ளோட அழகே அழகுடா! நடுநடுவே மொச்சக் கொட்டை என்ன சிரிப்பு சிரிக்கும்! காராமணி, கொள்ளு, பூண்டும் வரட்டு மிளகாயும் அரைச்சு விட்டுருப்பா.கவிதைடா!''.

- 'பலகாரத் திருவிழாவில் அப்புசாமி'.

10. வீதிக்கு யாரோ கிசுக்கிச்சு மூட்டினார்கள். அது சிரித்தது.

-'அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்'.

'எனது களஞ்சியத்திலிருந்து - 26

'எனது களஞ்சியத்திலிருந்து - 26
==========================


உயர்வு நவிற்சி அணி;
------------------

கவிதைக்கு 'உயர்வு நவிற்சி ரு சிறப்பான அணியாகும். 'உயர்வு நவிற்சி'என்பது சொல்ல வந்த பொருளை அதீதமாக வருணித்து கேட்பதற்கு இன்பம் தருவதாக வியக்க வைப்பது.

எடுத்துக்காட்டாக கண்ணகியை விதந்து வருணிக்கிற கோவலன், எளிய சொற்களில் -

'கண்ணே, மணியே, கட்டாணி முத்தே, கட்டிகரும்பே.............

என்று இயல்பாகப் பேசுவதாகக் கவிஞர் எழுதி இருக்கலாம். ஆனால்
இளங்கோவடிகள் உயர்வு நவிற்சி அணி அழகோடு,

'மாசறு பொன்னே! வலம்புரி முத்தே
காசறு விரையே! கரும்பே! தேனே'

என்று வருணிக்கும்போது வாசிக்கும் நமக்கு 'ரு சிலிர்ப்பு ஏற்படுகிறதில்லையா?
அது கவிஞனின் கற்பனைத் திறத்தை எண்ணி வியக்க வைக்கிறது. அப்படிச் சில
கற்பனை நயத்தை எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

சேக்கிழாரின் பெரிய புராணத்தில் இப்படி அநேக உயர்வு நவிற்சி
அழகை அனுபவிக்கலாம்.

சுந்தரர் பரவை நாச்சியார் என்கிற அழகிய பெண்ணைக் கண்டு
காதல் கொள்கிறார். அவள் அவரது கண்களுக்கு எப்படிக் காட்சி தருகிறாள்
தெரியுமா?

கற்பக விருட்சத்தின் பூங்கொம்பு 'ன்று எதிரே நிற்கிறதாம்.
மன்மதனின் பெருவாழ்வே "ர் உருவெடுத்து எதிரே நிற்பதாகத் தோன்றுகிறதாம்.
புண்ணியம் அனைத்தும் சேர்ந்த புண்ணியம் அவர் எதிரே நிற்பதாகக் கருதுகிறார்.
கண்களாகக்குவளை மலரையும், செவ்விதழ்களாகப் பவளத்தையும், முகமாகச் சந்திரனையும்,
கூந்தலாகப் புயலினையும் சுமந்து வாசனைக் கொடியொன்று கண்முன் துவள்கிறது.
"ர் அற்புதம் அவர் கண்முன்னே சிறு களிநடம்புரிவதாக அதிசயிக்கிறார்.

இப்போது சேக்கிழாரது பாடலைப் பார்க்கலாம்;

''கற்பகத்தின் பூங்கொம்போ!
காமன்தன் பெருவாழ்வோ!
பொற்புடைய புண்ணியத்தின்
புண்ணியமோ! புயல் சுமந்து
விற்குவளை பவளமலர்
மதிபூத்த விரைக்கொடியோ!
அற்புதமோ! சிவன் அருளோ!
அறியேன் என்று அதிசயித்தார்.''

சுந்தரர் மட்டுமா? நாமும் தான் சேக்கிழாரின் இனிய சந்த அழகுடனான
கற்பனைநயம் கண்டு அதிசயித்து நிற்கிறோம்.

'விறலி விடு தூது' என்னும் கவியின்பக் களஞ்சியத்தை ஆக்கிய
சுப்ரதீபக்கவிராயர் 'ரு மோகன முகத்தைப் பற்றிச் சொல்லும்பொது,

''சோலைப் பசுங்குயிலை, சொன்னப் பசுங்கிளியைக்
கோலப் பருவமுலைக் கோமளத்தை, வேலையன்ன
காம ரசதாழிக் கரும்பைச் செழுங்கனியைச்
தேமல் இளங் கொங்கைத் திரவியத்தைக் - காமுகர்க்கு
அற்புதத்தைத் தேனை அதிமோக ரஞ்சிததத்தைக்
கற்பகத்தைச் சர்க்கரையைக் கற்கண்டை''

என்று உயர்வு நவிற்சி அணியை அடுக்கிக் கொண்டே போகும் கற்பனைத்
திறம்எண்ணி எண்ணி இன்புறத் தக்கது.

மேலும் வரும் வருணனைகள் உயர்வு நவிற்சியின் உச்சம் எனலாம்

''கம்மியன் கையால் அடித்துக்
காய்ச்சி வெட்டித் தீராமல்
செம்மலரோன் கைம் மலரால்
செய்து விட்ட பொற்பாவை
கையால் பிடித் தொருவர்
கட்ட இதழ் கன்றாமல்
மையார் குழலார்
மடியிருக்கும் பூமாலை
"ங்கு மலைக் காட்டின்
உள்ளிருந்து தூங்காமல்
தூங்கு சப்ர மஞ்சமிசைத்
தூங்கும் நவரசத் தேன்
மொய்த்த மலைக் காட்டு
முள்ளூடு அலையாமல்
மெத்தையின் மேலேறி
விளையாடும் தோகை மயில்
கொம்புதொறும் போய்த் தாவிக்
கூவித் திரியாமல்
அம்பொன்மணி ஊசலிருந்து
ஆடும் குயிற் பேடு
கொஞ்சி மொழி கூறிக்
கூட்டிற் கிடவாமல்
செஞ்சொல் மதனகலை
செப்புங் கிளிப் பேடு''

( பொற்பாவை - சிற்பி கையால் அடித்துச் செய்யவில்லை. பிரும்மா தன்
கையால்செய்த பாவை.

பூமாலை - பூத்தொடுப்பவர் கைபட்டு தொடுக்கும்போது கன்றிபோகாத
மாலை.

தேன் - உயர்ந்த மலைகளின் உயரத்தில் தூங்காமல் மெல்லிய
பூவணையில் தூங்குகிற சுவைமிக்க தேன்.

தோகைமயில்-மலைக்காட்டு முள்ளில் உலவாது மெத்தைமேல்
விளையாடும் மயில்.

குயிற்பேடு - பெண் குயில். இக் குயில் மரங்களில் தாவிக் குதித்துக்
கூவாது. இது ஊஞ்சலில் இருந்து ஆடுங் குயில்.

கிளிப்பேடு - பெண்கிளி. இது கூட்டினுள்ளே அடைபட்டுக் கிடந்து குழறி
மொழிபகராது. இக் கிளி மன்மதக்கலை பேசும் )

கம்பனது ராமகாவியத்தில் காணப்படும் எண்ணற்ற உயர்வு நவிற்சி
அணிகள் நம்மை இன்புறுத்துவன.

ராமனது பட்டாபிஷேகக் காட்சியில் 'ரு பாடலில் உயர்வு நவிற்சி
அணியை அமைத்திருக்கிறார் கவிச்சக்கரவர்த்தி.

மரகதமலை 'ன்று. அதன்மீது செந்தாமரை மலர்
காடாகப் பூத்திருக்கிறது. அம்மலையில் வேல்போன்ற கன்களை உடைய மயில் 'ன்று
வீற்றிருக்கிறது;

''மரகத சைலம் செந்தா
மரை மலர்க்காடு பூத்து
திரைகெழு கங்கை வீசும்
திவலையால் நனைந்து செய்ய
இருகுழை தொடரும் வேற்கண்
மயிலொடும் இருந்தது ஏய்ப்பப்
பெருகிய செவ்வி கண்டார்
பிறப்பெனும் பிணிகள் தீர்ந்தார்''

( சைலம் - மலை; திரை - அலை; திவலை - நீர்த்துளி; குழை - காது.
காதளவு நீண்ட கண்கள். இங்கே மரகதமலையாக ராமனையும், மயிலாக
சீதையையும் அலங்கரித்தது உயர்வு நவிற்சி. அம் மயிலோடு இருந்த மரகத
மலையைக் காணும் பேறு பெற்றவர்கள் பிறவி எனும் பிணிகள் தீர்ந்து பெருவாழ்வு பெற்றார்.)

இலக்கியக் கடலில் முத்துக் குளிப்பவர் இதுபோன்ற எண்ணற்ற
அழகுகளைக் கண்டு இன்புறலாம்.

- ஆதாரம் ; 'ராய.சொ' வின் 'காவிரி'

--- 0 ---

Monday, November 19, 2007

கால நதிக்கரையில் - அத்தியாயம் - 30

கால நதிக்கரையில் - அத்தியாயம் - 30

(நாவல் - நிறைவுப் பகுதி)இந்த மேலமந்தை கீழமந்தையிலிருந்து மாறுபட்டது. கீழமந்தை ஒதுக்கமானது. மேலமந்தை அந்தவழியே போகும் வெளியூர்ப் பாட்டையில் இருந்தது. கீழமந்தையில் அய்யனார் கோயில் திரௌபதைஅம்மன் கோயில்களின் திருவிழாக்களில் ஆடு கோழி பலியிடுவதும் சாராயம் வைத்துப் படைப்பதும் நடக்கும். ஆனால் மேலமந்தை நிகழ்வுகள் சுத்த சைவமானவை. சிறுத்தொண்டர் அன்னப் படையல், மாரியம்மன் கூழ் ஊற்றுதல், காமதகனம் போல - பலி, சாராயம் இல்லாதவை. எல்லாமே ஊர் மக்களுக்கு எழுச்சியும் ஆர்வமும் ஊட்டுபவை. காமுட்டி என்கிற காமதகனப் பாடல்கள் வெகு சுவாரஸ்யமானவை. சிதம்பரம் படிப்பு முடிந்து தொலை தூரத்தில் வேலைக்குப் போனது வரை ஒரு ஆண்டுகூட இக்கொண்டாட்டங்களைத் தவற விட்டதில்லை. தொடர்ந்து நடக்கிறதா என அறிய மருதுவிடம் கேட்டார்.


"எங்கேங்க? அதெல்லாம் போன தலமொறையோடப் போயிட்டுது. நடத்தி வச்ச பெரிய தலையெல்லாம் ஒருத்தர் கூட இப்ப இல்ல. இப்ப இருக்கிற தலமொறைக்கு அரசியலும், நாட்டாமைக்குப் போட்டியும் தான் இருக்கே தவிர ஊரு வளர்ச்சியிலும், திருவிழா நடத்துறதிலும் எவுனுக்கு அக்கறை? யாராவது ஒருத்தரு தப்பித்தவறி முனைஞ்சாலும் அதத் தடுக்கிறபேருதான் இப்ப அதிகம்" என்று புலம்பாத குறையாய் மருது சொன்னான்.


"அப்பிடியுமா இருக்காங்க? யாரு அப்பிடித் தடுக்கிறது?"


"எல்லாம் பெரிய எடத்துப் பிள்ளைங்கதான். பெருங்காயம் வச்ச டப்பாங்களே அதும் மாதிரி எடுத்து நடத்த முடியலேண்ணாலும் தன்னக் கேக்காம எப்பிடிச் செய்யலாம்னு வறட்டு அதிகாரம் மட்டும்தான் செய்யுதுங்க. நீங்கள்ளாம் வேலைக்குப் போனப்புறம் ரொம்ப நாளைக்கு முன்னே ஒண்ணு நடந்துது. மாரியம்மன் கோயிலுக் குப் பக்கத்துலே இருக்கிற புள்ளையார் கோயிலுக்கு மானியமோ நித்திய பூசைக்கு ஒரு ஏற்பாடோ கெடையாது. வடக்குத்தெரு ராமகோடிதான் யாராவது வேண்டுதலச் செய்யக் கூப்புட்டா வந்து அபிஷேகம் பண்ணி மணியடிச்சு படைச்சுக் குடுப்பான். நம்ம பெரிய புரோகிதரு ஏதோ நெனச்சி, தான் மத்தியானம் சாப்புடுறதுக்கு முன்னால ஒரு உண்டையப் புள்ளையாருக்குக் காட்டிட்டு சாப்புடுவோமேன்னுட்டு உச்சி ளையிலே ஒரு சொம்பு தண்ணிய புள்ளையாரு தலையில ஊத்தி அபிஷேகம் பண்ணி நைவேத்தியம் காட்ட ஆரம்பிச்சாரு. அதுக்காக அவுரு ஆருகிட்டியும் எந்த ஒதவியும் கேக்குல. பாவம் புள்ளையாருக்குத்தான் குடுத்து வக்கில! ரெண்டு நாளுதான்

அவரு முன்னால வெளக்கெரிஞ்சுது. அதுக்குள்ள அதத் தடுத்துட்டாங்க!"


"அப்பிடியா? யாரு அது?"


"எல்லாம் உங்கப் பெரியப்பாரு மகந்தான். அய்யரக் கூப்புட்டு 'ஆரக் கேட்டுக் கிட்டு புள்ளயாருக்கு பூச பண்றீங்கண்ணு?' கேட்டிருக்காரு. அதுக்கு அய்யரு 'நா ஆருகிட்டியும் பொருளோ பணமோக் கேக்குலியே! கேப்பாரில்லாம இருண்டு கெடக்குதேண்ணு நா சாப்புடறதுக்கு முந்தி ஒரு உருண்டய நைவேத்தியம் பண்ணிட்டுச் சாப்புடுறேன். இதுலே ஆருக்கு என்ன இடைஞ்சல்?' னு சொல்லி இருக்காரு. 'இன்னிக்கு இப்பிடித்தான் சொல்லுவிங்க, அப்பறமா நாந்தான் ரொம்ப நாளா பூசை பண்ணிக்கிட்டு வந்தேன்னு உரிமக் கொண்டாடுவீங்க!' ன்னு உங்க அண்ணன் சொன்னாரு. 'இதுல உரிமக் கொண்டாட என்ன இருக்கு? புள்ளயாருக்கு மானியமோ, தெனப்படிக்கு சாசனமோ எதுவும் இல்லியே! ஏதோ புண்ணியத்துக்குச் செய்யறத தடுக்கலாமா?' ன்னு தயவாத்தான் கேட்டிருக்காரு அய்யரு. ஆனா அவுரு மொறட்டுத் தனமா 'அதெல்லாம் முடியாது. இனிமே நீங்க பூசையெல்லாம் செய்ய வேணாம்' னுட்டாரு. அய்யரு பாவம், நமக்கு எதுக்கு இவங்க கிட்டல்லாம் வம்புன்னு விட்டுட்டாரு. இப்பிடித்தான் நல்லது செய்யாமத் தடுக்கறதுக்கு இங்க நெறயப் பேரு இருக்காங்க. அதனால ஊர்ல திருவிழாவாவது கொண்டாட்டமாவது?" என்று மருது அலுத்துக் கொண்டான்.


சிதம்பரம் அந்தப் புரோகிதரை நினத்துக் கொண்டார்.


மற்றப் புரோகிதர்களிடருந்து அவர் மாறுபட்டவர். உச்சிக்குடுமி, பஞ்சகச்சம், நெற்றியில் சந்தனக் கீற்று என்று தோற்றம் பழமையைக் காட்டினாலும் எண்ணத்தில், செயல் பாட்டில் புதுமை விரும்பி அவர். கொஞ்சம் ஆங்கில அறிவும் உண்டு.

அப்பாவுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் அப்பாவுடன் பேசுவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். மற்ற எல்லோரையும் அவரவர் ஜாதியை ஒட்டி 'பிள்ளை', 'முதலியார்' என்று அழைத்தாலும் அப்பாவை மட்டும் அவர் 'சார்" என்றே விளித்துப் பேசுவார். அப்பாவும் மற்றவர்கள் மாதிரி அவரை 'சாமி' என்று விளிக்காமல் அவரைப் போலவே 'சார்' என்றே அழைப்பார்கள். அதில் இருவருக்கும் ஒரு அந்நியோன்யம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியும். அவர் ஜோதிடம் பார்ப்பதில் வல்லவர். அப்பாவுக்கும் ஜோதிடம் தெரியும் என்பதால் அவர்கள் சந்தித்தால் ஜோதிடம் பற்றியோ, அன்றைய செய்தித்தாளில் வந்துள்ள நாட்டு நடப்புகள் பற்றியோ பேசுவார்கள். அப்பாவுக்கு இதையெல்லாம் பகிர்ந்துகொள்ள அவரை விட்டால் ஊரில் வேறு யாரும் இல்லை.


முதன் முதலில் ஊருக்குள் கிராமபோன் பெட்டியை வாங்கி வந்தவர் அவர் தான். அத்தோடு அவர் ஒரு சின்ன ரேக்ளா வண்டியையும் வைத்திருந்தார். பக்கத்துக் கிராமங்களுக்குப் புரோகிதத்துக்குச் செல்கையில் அந்த ரேக்ளா வண்டியில்தான் செல்வார். இந்தக் காலத்தில் நகரங்களில் புரோகிதர்கள் மோட்டார் சைக்கிளில் புரோகிதத்துக்குப் போவதை ஆரம்பத்தில் ஆச்சரியமாகப் பார்த்தது போல் அந்தக் காலத்தில் அவர் ரேக்ளா வண்டியை ஓட்டிச் செல்வதைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறார்கள். குதிரையைப் பராமரிப்பதும் அவரே தான். குதிரையைத் தேய்த்துக் குளிப்பாட்டுவது, வயற்காட்டுக்குப் போய் புல் அறுத்து வந்து போடுவது, கொள்ளை வேகவைத்துக் கொடுப்பது எல்லாம் அவர்தான். ஆள் வைத்துக் கொள்வதில்லை.


அது மட்டுமல்ல, புரோகிதருக்கு ஊராரால் ஒதுக்கப்பட்டிருந்த கால்காணி மானிய நிலத்தையும் அவரே நேரடியாகப் பயிர் செய்தார். அதற்கும் ஆள் கிடையாது. கூலி ஏர் மட்டும்தான் வைத்துக் கொள்வார். மற்றபடி அண்டை வெட்டுவது, நாற்று நடுவது, அறுப்பது, தாளடிப்பது எல்லாம் அவரும் அவர் பிள்ளைகளும்தான். பூணுலை எடுத்து வலது காதில் சுற்றிக் கொண்டு மண்வெட்டி¨யால் அவர் அண்டை வெட்டும் போது பார்ப்பவர்களுக்கு வலிக்கும். 'காலம் கலிகாலம் என்பது சரியாகி விட்டதே! தர்ப்பையைப் பிடிக்கும் கையால் மன்வெட்டியைப் பிராமணர் பிடிக்கவும் ஆச்சே!' என்று பார்க்கிற மூத்தகுடிகள் ஆதங்கப் படுவார்கள். அவரிடமும் சொல்வார்கள். 'இதில என்ன கௌரவம் வேண்டி இருக்கு? அவங்கவங்க வேலைய அவங்கவங்களே செய்துக்கிறதுலே 'கலிகாலம்' எங்க வந்துது?' என்பார் அய்யர்.


எதிலும் எப்போதும் ஊர்மக்களுக்கு அவர் புருவம் உயர்த்தச் செய்பவராகவே இருந்தார். புரோகிதத்தில் அப்படி ஒன்றும் பெரிதாக வருமானம் வந்துவிடாது. என்றாலும் பெரிய அளவில் தன் மைத்துனியின் கல்யாணத்தை பேண்டு வாத்தியம், சாரட்டில் ஊர்வலம், சங்கீதக் கச்சேரி என்று ஐந்துநாள் கல்யாணமாக அமர்க்களமாக நடத்தி வைத்தார். அந்தத் திருமணம் வெகுநாட்கள் ஊரில் பேசப்பட்டது சிதம்பரத்துக்கு இன்னும் நினைவிருக்கிறது.


அவரது பேச்சு எப்போதும் அறிவார்ந்ததும் சுவாரஸ்யம் மிக்கதாகவும் இருக்கும். சிதம்பரம் அவரது பேச்சை மிகவும் ரசிப்பார். சிதம்பரத்தை அவருக்கு மிகவும் பிடிக்கும். சிதம்பரம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தற்செயலாய்க் கடைவீதியில் அவரைப் பார்க்க நேர்ந்தது. உச்சி வெயிலில் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தார். சிதம்பரத்தை அவர் பார்க்கவில்லை. சிதம்பரம்தான் பார்த்து அருகில் போய்ப் பேசினார்.


சிதம்பரத்தை அங்கே அப்போது சந்தித்ததில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் மிகவும் களைப்போடு இருந்தார். ஓட்டலுக்கு அழைத்துப் போய் காப்பி வாங்கித் தரலாம் என்று நினைத்தார். ஆனால் அவர் படு ஆசாரம். வெளியில் எங்கும் சாப்பிட மாட்டார். என்றாலும் தயக்கத்துடனே, 'ரொம்பக் களைப்பா இருக்கீங்க போல்ருக்கு. ஒட்டலுக்குப் போயி ஒரு காப்பி சாப்புடலாமா? நீங்க வெளியில எங்கும் சாப்ட மாட்டீங்கண்ணு தெரியும்......." என்று இழுத்தார்.


அவரது சோர்ந்த முகத்தில் ஒரு பிரகாசம் ஏற்பட்டது. "ஆமப்பா! ஏதாவது சாப்டாத் தேவலை தான். வெளியிலே சாப்டறதில்ல தான். ஆனா காலம் மாறச்சே நாமும் மாத்திக்க வேண்டியதுதான். பிராமணாள் ஓட்டல்லியும் அனாச்சாரம்தான்.

என்ன செய்ய? அதப் பாத்தா முடியாதுதான்" என்று சொல்லிவிட்டு உடன் வந்தார்.


சிதம்பரம் அருகில் இருந்த ஓட்டலில் காப்பி வாங்கித் தந்தார். ஆர அமர அதை ரசித்துப் பருகிய பிறகு அவர் முகத்தில் ஒரு தென்பு ஏற்பட்டது. "ரொம்பத் திருப்தியா இருக்கு சிதம்பரம். அதுல பாரு - நம்மக் காசப் போட்டு வாங்கிச் சாப்டா பணம் செலவழிக்க வேண்டி இருக்கேன்னு சாப்ட திருப்தியே இருக்காது. ஆனா இப்படி யாராவது வாங்கிக் கொடுத்து சாப்டா ஏற்படுற திருப்தி இருக்கே அது வேறமாதிரி தான்" என்றார். அதைச் சொல்ல அவர் கூச்சமோ கௌரவமோ பார்க்க வில்லை. மிகவும் யதார்த்தமான வெளிப்பாடு அது.


அவரைப் பற்றிய சிந்தனையினூடே மந்தையின் தெற்குமுனையில் இருந்த அவரது வீட்டைப் பார்க்க விரும்பினார். தெற்குத் தெருவின் தொடக்கத்தில் அது இருந்தது.


"அய்யரு வாழ்ந்த இடத்தப் பாக்கலாம்" என்று மருதுவை அழைத்தபடி நடந்தார்.


"அதுல மட்டும் என்னா பாக்கப் போறீங்க? அதுவும் இப்ப பாழ்மனைதான். அவரோட வாரிசெல்லாம் பொழப்புத் தேடி நாலா பக்கமும் போய்ட்டாங்க. ஆனா அவரு வாழ்ந்ததவிட இப்ப ரொம்ப சௌரியமா இருக்காங்க. அவரோட பேரப் புள்ளைங்க இப்ப புரோகிதத்துக்கு மோட்டார் சைகிள்ல தான் போறாங்க. இந்த ஊர விட்டுப் போனவங்க எல்லாம் புண்ணியவான்கள்தான். நாங்கதான் முன் தலமொறயிலெ பாவம் பண்ணுனவங்க சிலபேரு இன்னும் இங்கியே தடுமாறிக்கிட்டிருக்கிறோம்" என்று மருது மிகவும் நொந்து பேசினான். அந்த அளவு அவனுக்கு அடுத்த தலைமுறையின் ஆரோக்கியமற்ற செயல்பாடுகள் கசப்பை உண்டாக்கி இருந்தன.


அய்யர் குடியிருந்தது கூரை வீடுதான். சிமிட்டித்தளம் போட்ட தரை. பத்துப் பேர் படுக்க வசதியாய் மழமழ வென்று நீண்ட தெருத்திண்ணை. தோட்டத்தில் கிணறு. சிதம்பரம் வீட்டைத் தவிர அவர் வீட்டில்தான் கிணறு இருந்தது. கிணற்றின் அவசியத்தை உணர்ந்து அவரே இளமையில் வெட்டிக் கொண்டது அது. வீட்டின் பின்னாலேயே மான்ய நிலம். அவர் இருந்தவரை நிறைவாகவே வாழ்ந்தார். இப்போது அவரது நினைவாக எதுவுமில்லை. அவரைப் பற்றிய நினைவு மட்டுமே எஞ்சி இருந்தது. அந்த ஏமாற்றம் நெஞ்சில் கனக்க அவர் வீட்டுக்கு இடப்புறம் இருந்த பெரிய ஏரியின் தெற்குத் தெரு படித்துறையை நாடி நடந்தார் சிதம்பரம்.


சின்ன வயதில் மூச்சுப் பிடித்து ஏறிய ஏரியின் உயரமான கரை இப்போது கரைந்து தெரு மட்டத்துக்கு சற்றே உயர்ந்து தெரிந்தது. படிகள் கற்களை இழந்து சரிவான மேடாக ஆகி இருந்தது. கரைமீது ஏறிப் பார்த்தார். அடடா! சின்ன சமுத்திரம் போல அலை அடித்துப் பரந்து இருந்த பெரிய ஏரி இப்போது சின்னக் குட்டை போலச் சிறுத்திருந்தது. கண்ணுக்கெட்டியவரை வேலிக்காத்தான் முட்செடிகள். அதைத் தாண்டி ஏரியைப் பலர் ஆக்கிரமித்து பயிர்செய்திருப்பது தெரிந்தது. ஏரியின் மறுகரையில் ஊருக்கு பெருத்த வருவாய் ஈட்டித் தந்த விழல் கூட்டம் அந்தப் பகுதியிலும் மொண்ணையாய் இருந்தது.


என்ன இப்படி எதைப் பார்த்தாலும் தேய்பிறையாய்த் தெரிகிறதே தவிர வளர்பிறையாய் எதுவும் காணப்படவில்லையே என்று சிதம்பரத்துக்கு மனதை வருத்தியது. இனி பார்க்க எதுவும் இல்லாத நிலையில் ஊர் திரும்பிவிட முடிவு செய்தார். மருதுவுக்குத் அவரது பிரிவு வருத்துவதாக இருந்தது.


அப்புவின் வீட்டுக்குப்போய் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பு முன் அவர் படித்த 'ஐயா'வின் பள்ளி இருந்த இடத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டார். பள்ளி இப்போது பழையபடி பொதுச் சாவடியாகி பஞ்சாயத்துக் கட்டடமாக மாறி இருந்தது. பள்ளியின் மேலாக உயர்ந்து பரந்து கவிழ்ந்திருந்த - ஐயா காலத்து ஆலமரம் இருந்த சுவடே இல்லாதிருந்தது. சிதம்பரத்தின் பால்ய நினைவுகளை

அதிகமும் ஆக்ரமித்து அய்யாவின் ஆளுமையை நினைவூட்டிக் கொண்டிருந்த அந்தத் தொன்மையான ஆலமரம் இன்றி, விதவைக் கோலத்தில் காட்சி அளித்த அந்த இடத்தைப் பார்க்கச் சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டார்.


முப்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கூட 'ஐயா' இறந்தபோது, மயானத்தில் ஆற்றங்கரையில் நின்று நினத்துப் பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது. மூன்று தலை முறைக்கு இவ்வூரில் கல்விக் கண் திறந்து வைத்தவரை நன்றி மறந்து நடுத்தெருவில் நாதியற்று சாகவிட்ட ஊராரின் போக்கை ஆற்றின் போக்கோடு ஒப்பிட்டுப் பார்த்ததை நினைத்துக்கொண்டார். 'மனிதர்கள் வருவார்கள் மனிதர்கள் போவார்கள், ஆனால் நான் என்றும் இப்படியே போய்க் கொண்டிருப்பேன்' என்று ஓடை ஒன்று சொல்வதாக உள்ள ஆங்கிலக் கவிதையை ஒட்டி, 'சமுதாயம் என்கிற நதியும் அதன் கரையில் வரும் எந்த மனிதரையும் பற்றிக் கவலைப்படாமல் போய்க் கொண்டிருக்கிறது' என்று சிந்தித்ததை இப்போது எண்ணிப் பார்த்தார்.


'காலநதியும் அப்படித்தான்; அது மாறாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. அதன் கரையில் வரும் மனிதர்களும் இடங்களும் மாற்றத்துக்கு உள்ளானாலும் அக்காலக் கட்டத்தின் நினைவுகள் மாற்றம் பெறாது என்றும் நிலைத்திருக்கும்' என்று சிதம்பரத்தின் சிந்தனை ஓடியது.


(நிறைவுற்றது)

Sunday, November 18, 2007

கால நதிக்கரையில்......29

கால நதிக்கரையில்......(நாவல்) - 29


மேல மந்தையை நெருங்குகையில் சிதம்பரம் நின்று அங்கு வலப்புறம் இருந்த அவர்களது சிறிய வீட்டைப் பார்த்தார்.
"என்ன பாக்குறீங்க? இதையும்தான் வித்தாச்சே! இதில பாக்க என்ன இருக்கு? வாங்குனவன் வெளியூர்க்காரன். அவன் அப்படியே போட்டு வச்சிருக்கான். இதுவும் இடிஞ்சுதான் கெடக்கு"
"இதுலதானே எங்க பாட்டி கடேசி காலத்துலே இருந்தாங்க! பாவம், சாகுறப்ப நாங்க எத்தினி பேரப் பிள்ளைங்க இருந்தும் நெய்ப் பந்தம் பிடிக்க சின்னத் தம்பி ஒருத்தனைத் தவிர நாங்க யாரும் இருக்க முடியாமப் போனதை நெனச்சாத் துக்கமா இருக்கு. பேத்திகள் மட்டும் எல்லோரும் இருந்தாங்க" என்று பாட்டிக்காக மனம் கசிந்தார் சிதம்பரம்.

"ஏன்? என்ன ஆச்சு?"

"பெரியண்ணன் தொலைதூரத்தில வேலையிலே இருந்தாரு. மத்த நாங்க மூணு பேரும் காலேஜுல படிச்சிக்கிட்டிருந்தோம். அப்பா எங்க படிப்புக் கெட வேண்டாம்னு அப்ப சேதி அனுப்பலே. எல்லாருக்கும் மறுநாள்தான் கார்டு போட்டி ருந்தாங்க. ஆனா அப்பா தனியாளா அப்ப சிரமப்பட்டதை அப்புறம்தான் தெரிஞ்சு கிட்டோம்" என்று சொல்லிய சிதம்பரம் பாட்டியின் மரணத்தை ஒட்டி அப்பாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை நினைவுபடுத்திப் பார்த்தார்.

பாட்டி செத்தபோது உள்ளூர் திரௌபதி அம்மன் திருவிழாவில் பூசாரி தட்டெடுப்பது சம்பந்தமாக பெரியப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட சுயஜாதிக் காரர்கள் சிதம்பரம் வீட்டுக்கு நல்லது கெட்டது எதற்கும் போவதில்லை என்று ஜாதிக் கட்டுமானம் செத்ததற்கு உடன் பங்காளிகள் நாலு குடும்பம் தவிர வேறு யாரும் வரவில்லை. பெரியப்பா அதற்கு முன்பே காலமாகி இருந்தார். பெரியப்பா மகன்கள் இரண்டு பேர் இருந்தார்கள் என்றாலும் நீண்ட நாட்களாய்ப் பேச்சு வார்த்தை இல்லாததால் ஒப்புக்கு அன்று வந்திருந்தார் கள். அவர்கள் எதிர் கோஷ்டியுடன் நெருக்கமான நட்புடையவர்கள். அவர்களால் அப்பாவுக்கு எந்த பலமும் இல்லை.

பறையடிப்பவர்கள், வெட்டியான், வண்ணான், நாவிதன் யாரும் வராதபடி தடுக்கப்பட்டார்கள். இதில் மனதை வருத்தும் விஷயம் என்னவென்றால் - வராத வர்கள், தடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் அதற்கு முதல் நாள் வரை, பாம்புக்கடிக் காகவோ, வேறு மருந்து மற்றும் யோசனைகளுக்காகவோ அப்பாவிடம் வந்து போனவர்கள். அதற்காக அப்பாவிடம் விசுவாசம் கொண்டிருந்தவர்கள். அம்மா அதைச் சொல்லி ஆதங்கப்பட்டதுடன் ஊரின் மிக மூத்த மனுஷியின் கடைசிக் காரியம் எப்படி நடக்குமோ என்று கலங்கி இருக்கிறார்கள். ஆனால் அப்பா கலங்கவில்லை. பண்ணையாட்களை அனுப்பி வெளியூர் உறவினர்களுக்குத் தகவல் அனுப்பினார்கள்.

பக்கத்து கிராமத்தின் பெரிய மிராசுதாரரான அம்மாவின் அக்கா மாப்பிள்ளை, சேதி சொன்ன ஆட்கள் மூலம் நிலைமையை அறிந்து மிக ஆத்திரம் அடைந்தவராய் தன் செல்வாக்கில் இருந்த தன் ஊர் வெட்டியான், பறையடிப்பவர், வண்ணான்,
நாவிதன் இன்னும் அடியாட்கள் பலரோடு வந்து தடுத்தவர்கள் தலை குனியும்படி அமோகமாக இறுதிச் சடங்கை குறைவில்லாமல் நடத்திக் கொடுத்தார். அவரது ஏற்பாட்டின்படி - வெளியூர் உறவினர்களும் உள்ளூர் உடன் பங்காளிகளும் உள்ளூர் பிறஜாதிக்காரர்களுமாய் கூட்டம் அலை மோத, தாரைதப்பட்டை, அதிர் வேட்டு வெடிமுழக்கங்களுடன் 90 வயது வாழ்ந்த பாட்டியின் நிறை வாழ்வை கௌரவிக்கிற மாதிரி - இறுதி யாத்திரை அமர்க்களமாய் நடந்து முடிந்திருக்கிறது.
அப்பாவு வாழ்வும்சரி, சாவும்சரி எளிமையாக இருக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். அவர்களுக்குப் பிறரது கவனத்தை ஈர்க்கும்படியோ படாடோபமாகவோ எதையும் செய்வதில் எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் இப்போது அவர்களால் தடுக்கமுடியாதபடி மாப்பிள்ளையின் தலையீடும், கௌரவப் பிரச்சினையுமாய் அமைந்துவிட மௌனமாய் அதை ஏற்க வேண்டி வந்தது. வராதவர்களை, அவர்களைத் தடுத்தவர்களைப் பற்றி அம்மாவுக்கு மிகுந்த அதிருப்தி இருந்தாலும் அப்பா அவர்கள் மீது கோபப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் வெறும் கருவிகள், நாளையே அவர்கள் தன்னிடம் வருவதை யாரும் தடுக்கக்க முடியாது என்பதை அறிந்தவர்கள். அது அப்படியே ஆயிற்று. பதினாறாம் நாள் காரியம் முடிந்த மறுநாளே அவர்களில் பலர் பாம்புக் கடிக்காகவும் மற்ற வைத்தியத்துக்காவும் கூச்சமின்றி அப்பாவை நாடி வந்தார்கள். அப்பா எந்தவித மனத்தடையும் இன்றி எப்போதும் போல அவர்களுக்கு உதவி செய்து அவர்களை நாணமுறச் செய்ததும் நிகழ்ந்தது.

பதின்ம வயதுக்கு முன்னரே சிதம்பரத்துக்கு பாட்டியுடனான நெருக்கம் குறைந்து போனதால் பாட்டியின் நினைவுகள் முழுமையாய் இல்லை. அப்பா பெரியப்பா இருவரில் அப்பாவிடம் தான் பாட்டிக்கு ஒட்டுதல் அதிகம். பெரியப்பாவின் முரட்டு சுபாவம் அம்மாவையும் நெருங்க விடவில்லை. பேரப்பிள்ளைகளில் சின்ன மகன் குழந்தைகளிடம் பாட்டிக்குக் கொஞ்சம் பாசம் உண்டு. அப்பாவுக்கும் பெரியப் பாவுக்கும் பாகப்பிரிவினை நடந்தபோது பாட்டிக்கு வீட்டின் ஒவ்வொருவர் பாகத்திலும் ஒரு அறை ஒதுக்கப்பட்டது. பாட்டி யாரிடம் இருப்பது என்ற பிரச்சினைக்குப் பாட்டியே முடிவு செய்தபடி பெரியப்பா வீட்டு அறையில் சாமான்களை வைத்துக் கொண்டு அப்பா பகுதியில் உள்ள அறையில், தானே சமைத்துக்குக் கொள்ள ஏற்பாடாயிற்று. பாட்டி தன்னால் ஒருவருக்கும் சிரமம் வேண்டாம் என்பதோடு மருமகள் இருவரிடமுமே சுமுகமான உறவு இல்லாததாலும் பிடிவாதமாக தன்னை ஏலம் போடுவதை ஏற்கவில்லை. மிகவும் தள்ளாமை வந்தபிறகும் கண்பார்வை மங்கியபோதும் பாட்டி யாரிடமும் இருக்கப் பிடிவாதமாக மறுத்து விட்டார். அதனால் அப்பாவே கொஞ்ச நாட்கள் பாட்டிக்குச் சமைத்துப் போட்டிருக்கிறார்கள். பிறகுதான் பாட்டி விரும்பிய படி மேல மந்தைக்கு அருகில் இருந்த அப்பாவின் பாகத்தில் இருந்த வீட்டைச் செப்பனிட்டு பாட்டியை அதில் இருக்கச் செய்து, சமைத்துப் போடவும் கூடமாட உதவிக்கு அருகில் இருக்கவும் பங்காளி வழியில் ஒரு மூதாட்டியை அப்பா ஏற்பாடு செய்தார்கள்.

பின்னாளில் சிதம்பரம் அம்மாவிடம் பாட்டியைத் தள்ளாத வயதில் அப்படித் தனியாக விட்டதற்காகக் குற்றம் சாட்டும் தொனியில் பேசிய போது அம்மா, தன் ஆதங்கத்தை ஒரு குற்றச்சாட்டுபோல் சொன்னது நினைவுக்கு வருகிறது. "நானா வச்சிக்க மாட்டேன்னேன்? அவங்கதான் ஒத்துப்போவலே! அந்தக் காலத்துலே உங்கப் பாட்டி என்னை எப்பிடிப் படுத்தி வச்சாங்கன்னு ஒனக்குத் தெரியுமா? கல்யாணமான புதிசுலே, புள்ளாயார் சுத்திக்கு நா செஞ்ச கொழுக் கட்டைய எடுத்துக்கிட்டு ஊடுஊடாப் போயி 'மருமவ செஞ்சிருக்கிற கொழுக்கட்ட லட்சணத் தப் பாத்தியா?' ன்னு காட்டுனவங்கதானே?" என்று எல்லா மருமகள்களையும் போலப் பழங்கணக்குகளைப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் பாட்டி இந்த வீட்டில் இருந்தவரையில் - அம்மாவிடம் பேசாது இருந்தபோதும் - அம்மா ஊருக்குப் போயிருந்த சமயங்களில் பேரப்பிள்ளைகளை அனுசரணையாய்க் கவனித்துக் கொண்டது சிதம்பரத்துக்கு ஞாபகம் இருக்கிறது.
பேரப்பிள்ளைகளை உட்கார வைத்து காலையில் பழைய சோற்றைப் பிழிந்து தட்டுகளில் போடும்போது சமயத்தில் சன்னமான புழு இருப்பதுண்டு. புழு இருந்து விட்டால் தம்பி துள்ளிக் குதிப்பான். அதை அப்படியே அள்ளி வெளியே குத்தாகப் போடுவான். பாட்டி, "அடேய்! சோத்தை எறைக்காதே! ஒரு பருக்கையை எறச்சா ஒம்பது நாளு பட்டினி கெடக்கணும்!" என்று அவனைக் கண்டிப்பார்.

அப்போது அது மிரட்டல் மாதிரிதான் இருந்தது. பின்னாளில் இரண்டாவது உலகப்போரின் போது கடுமையான ரேஷன் வந்தபோது மக்கள் அரிசி கிடைக்காமல் கோதுமையையும், சோளத்தையும் சமைத்துச் சாப்பிட வேண்டி வந்தபோது பாட்டி
யின் எச்சரிக்கை உண்மையாயிற்று. கோயம்புத்தூர் விவசாயக்கல்லூரியில் படித்த சின்ன அண்ணன் விடுதியில் அரிசிச் சோறு போடும் நாட்களில், பட்டை போட்ட அளவுச் சோற்றின் ஒரு பருக்கையைக் கூடச் சிந்தாமல் சாப்பிட நேர்ந்ததைச் சொல்லி 'பாட்டி வாக்குப் பலித்துவிட்டது' என்று சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

தம்பி இன்னொரு வகையிலும் பாட்டிக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வான். வீட்டுக்குள் தாழ்வாரத்தில் அமர்ந்து பாட்டி ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கையில் பாட்டியின் நீட்டிய கால்கள், நடந்து போகத் தடையாயிருக்கும். சிதம்பரமோ மற்ற பிள்ளைகளோ அப்போது பாட்டியைச் சிரமப்படுத்தாமல் ஒதுங்கிப் போவார்கள். ஆனால் தம்பி அப்படி ஒதுங்கிப் போகாமல் ஒரே தாவாகப் பாட்டியின் கால்களைத் தாண்டித்தான் போவான். குனிந்து அரிசியில் கல்பொறுக்கிக் கொண்டிருக்கும் பாட்டி நிமிராமலே "ஆருடா சின்னக் காளையா?" என்று கேட்பார் கள். ஆனால் தம்பி அதையெல்லால் லட்சியம் செய்ய மாட்டான்.
பாட்டிக்கு ஒரு பெரிய மரப்பெட்டி அப்பாவின் பகுதியில் இருந்தது. ஒரு ஆள் தாராளமாய்ப் படுத்து புரளும் அளவுக்கு அகலமும் நீளமும் கொண்ட இடுப்பளவு உயரம் கொண்ட பெட்டி அது. அதில்தான் பாட்டியின் பாத்திர பண்டங்களும் இதர பொருள்களும் இருந்தன. அதன் கதவைத் தூக்கி நிமிர்த்துவது கஷ்டமாக இருக்கும். ஆனாலும் பாட்டி தினமும் அதை இரண்டு மூன்று தடவைகளாவது திறக்காமல் இருப்பதில்லை.
பாட்டியின் செருவாட்டுப் பொக்கிஷமும் அதில் தான் இருந்தது. ஒரு பெரிய சுருக்குப் பை நிறைய அந்தக் காலத்து வெள்ளி ரூபாய் நாணயங்கள் - ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் மொட்டைத்தலை பதித்த கனமான நாணயங்கள் - அதில் இருந்தன. யாரும் இல்லாத நேரமாய் பாட்டி அதை எடுத்து நீட்டிய கால்களுக்கிடையே வைத்து எண்ணிப் பார்ப்பது தினசரி நிகழ்ச்சி. அம்மாவோ பிள்ளைகளோ யாராவது வந்து விட்டால் விரித்த கத்தரிக்கோல் மூடிக் கொள்கிறமாதிரி பாட்டியின் நீட்டி விரித்த கால்கள் நெருங்கி சுருக்குப் பை மறைக்கப்பட்டுவிடும். 'அப்படி தெனமும் என்னதான் அதுல பாக்குணுமோ? கால் மொளச்ச ஓடியாப் போயிடும்?' என்று அம்மா அதை விமர்சிப்பதுண்டு. பாட்டி தினமும் எண்ணிச் சரிபார்க்க வேண்டிய அவசியமே இல்லைதான். பூட்டப்பட்ட பெட்டியின் பெரிய சாவி எப்பொழுதும் பாட்டியின் இடுப்பிலேயே சொருகப் பட்டிருக்கும். அப்படியே சாவி கிடைத்தாலும் யாரும் பெட்டியைத் திறக்கப் போவதில்லை. ஆனாலும், கண்பார்வை மங்கிய காலத்திலும்கூட, தடவித்தடவி எண்ணிப் பார்ப்பதை பாட்டி நிறுத்தியதில்லை. ஆனால் அப்படிப் பார்த்துப் பார்த்து பூட்டி வைத்த பணம் பாட்டியுடனேயே போய்விடவில்லை தான்.
வெள்ளிப் பணங்கள் நிறைய பாட்டியிடம் இருப்பது தெரிந்த பெரியப்பாவின் பிள்ளைகள் பாட்டி செத்தபிறகு பங்கு கேட்டுத் தகராறு செய்வார்களோ என்று அம்மா பயந்ததுண்டு. ஆனால் பாட்டியின் சாவை ஒட்டிய கரும காரியங்களுக்கான செலவிலும் பங்கேற்க வேண்டி வரும் என்று அவர்கள் அதை கிளப்பாமல் விட்டு விட்டார்கள். அப்பாவின் மறைவுக்குப் பிறகு இருபது ஆண்டுகளுக்கு மேலாய் அம்மா அதைப் பத்திரமாய் வைத்திருந்து பிள்ளகள் அனவருக்கும் தலைக்கு பத்து வெள்ளிப் பணம் என்று பாட்டியின் நினைவாக வைத்துக்கொள்ளக் கொடுத்தார்கள். அப்போதே அதன் விலை அதிகம். அசல் வெள்ளி நாணயம் என்பதால் ஒன்றே ஐம்பது ரூபாய்க்கு மேல் விலை போவதாக இருந்தது. அந்தப் பணத்தில் ஒரு நாணயத்தை மட்டும் இன்னும் சிதம்பரம் பாட்டியின் நினவாக வைத்திருக்கிறார்.
பாட்டிக்கு சிதம்பரத்தையும் சின்ன அண்ணனையும்தான் பிடிக்கும். பெரியண்ணன் குழந்தையிலிருந்தே பெரியம்மா வீட்டில் வளர்ந்ததால் அதிகம் பாட்டியுடன் பழக்கமில்லை. சின்னண்ணன் கல்லூரியிலிருந்து வரும்போது வாங்கிவரும் பழங்களில் பாட்டிக்கென்று தனியாக எடுத்துப்போய்க் கொடுப்பார். அப்பா சிதம்பரத்தையும் அப்படி விடுமுறையில் வரும்போது 'நீ வாங்கிக்கிட்டு வந்த பழத்துலே கொஞ்சம் கொண்டு போயி பாட்டிக்குக் குடுத்துட்டு விசாரிச்சுட்டு வாடா' என்பார்கள். தான் தனித்துப் போய்விடவில்லை, பேரப் பிள்ளைகள் பாசமாய் இருக்கிறார்கள் என்று பாட்டிக்கு ஒரு ஆறுதல் ஏற்படட்டும் என்பதற்காக அப்பா அப்படிச் சொல்வார்கள். சிதம்பரமும் அப்படியே செய்வார். ஆனால் பாட்டி பரப்பிரும்மம் போல. அதற்கெல்லாம் பூரித்துப்போவதோ, பேரப்பிள்ளைகள் தன்னை வந்து பார்க்காது போனாலும் அதுபற்றி ஆதங்கப்படுவதோ இல்லை. அப்படித்தான், தனக்கு பேரப்பிள்ளைகள் எல்லோரும் வந்து நெய்ப் பந்தம் பிடிக்காதது பற்றியும் லட்சியம் பண்ணி இருக்கப் போவதில்லை என்று பட்டது.

"வா, போகலாம்" என்று திரும்பி, மருதுவுடன் சிதம்பரம் நடந்தார். மேல மந்தைக்கு வந்து மாரியம்மன் கோயில் எதிரே கொட்டப்பட்டிருந்த மணலில், அடர்ந்து கவிந்திருந்த வேப்ப மரநிழலில் அமர்ந்தார்கள்.

(தொடரும்)

கால நதிக்கரையில்.....28.

கால நதிக்கரையில்......(நாவல்) - 28

சிதம்பரம் வீட்டுக்கு நேர் எதிரே தெருவின் மறுபக்கத்தில் நின்றிருந்த அந்தக் கல்க்கம்பத்துக்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு உண்டு. அது தெருவிளக்குக்கான கம்பம். அதில் கண்ணாடிக் கூண்டு வைத்து முன்பெல்லாம் அதனுள் இரவில் விளக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அது வெகுகாலத்துக்கு முன்பாக இருக்கலாம். சிதம்பரத் துக்கு நினைவு தெரிந்த நாளாய் அதில் விளக்குக் கூட்டைக் கண்டதில்லை. கூண்டைப் பொருத்த ஒரு இரும்பு முளை மட்டும் கல்த்தூணின் உச்சியில் இருந்தது. பிற்பாடு அந்தக் கல்த்தூண் சிதம்பரம் வீட்டுக்கு அடையாளச் சின்னம் ஆகிப் போனது.

கிராமப் பஞ்சாயத்து எல்லாம் வரும் முன்னர் ஊர்ப் பெருந்தனக்காரர் ஒருவரை 'உஷார்க் கமிட்டி' என்ற ஒரு கண்காணிப்புக் கமிட்டியின் தலைவராக வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் நியமித்திருக்கிறார்கள். வரிவசூல் செய்வது
மணியக்காரர் பொறுப்பு. மற்றபடி ஊரின் நல்லது கெட்டது எல்லாம் கவனிப்பது தலைவர் தான். அது கௌரவ உத்தியோகம். சிதம்பரத்தின் பெரியப்பா 'உஷார்க் கமிட்டி'த் தலைவராக வெகு நாட்கள் இருந்தார். அதனால் விளக்குக் கம்பம் அவர்
வீட்டுக்கு எதிரே அமைக்கப் பட்டது. அதுவே தலைவர் வீட்டு அடையாளம் ஆயிற்று.
உஷார்க் கமிட்டி என்ன வேலை செய்ததோ சிதம்பரத்துக்கு நினைவில்லை. ஆனால் ஊரில் நடக்கும் சண்டை, வம்பு வழக்கு தலைவரிடம் பஞ்சாயத்துக்கு வரும். யார் வீட்டிலாவது திருட்டுப் போய், திருடன் அகப்பட்டால் திருடனைப் பிடித்து வந்து தலைவர் வீட்டுக்கு எதிரே உள்ள கல்த்தூணில் கட்டி விடுவார்கள். தலைவர் விசாரித்து அபராதமோ தண்டனையோ வழங்குவார். அந்த வழக்கம் காரணமாய், எந்த இருவருக்குள்ளாவது தகராறு வந்தால், 'நடுத்தெருப் புள்ள வீட்டுக் கல்த்தூண்ல புடிச்சுக் கட்டிடுவேன், ஆமாம்!' என்று சவால் விடுவது சகஜமாயிற்று.
பெரியப்பா காலையில் எழுந்து தெருவுக்கு வந்ததும் அவர் கண்ணில் படுவது விளக்குக் கம்பத்தில் கட்டப் பட்டிருக்கும் திருடனும், அவனுக்குக் கிடைக்கப் போகும் தண்டனையை வேடிக்கை பார்க்கக் காத்திருக்கும் கும்பலும்தான். பெரியப்பா வீட்டுக் குறட்டில் நீளமான புளியம் கொப்புகள் - பத்துப் பதினைந்து போல வெட்டி வைக்கப் பட்டிருக்கும். திருட்டுக் கொடுத்தவன் தயார் செய்து வைக்க வேண்டிய சாங்கியம் அது.
பெரியப்பா கொஞ்சம் தாமதமாக காலை 8 மணியளவில் தான் எழுந்து தெருவுக்கு வருவார். சாதாரணமாகவே அவர் ரொம்பவும் கோபக்காரர். இரக்கம், தயை, தாட்சண்யம் அவரது பார்வையில் இருக்காது. விசாரணை எதுவுமே இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே தண்டனை தான். அதனால் பெரியப்பாவைப் பார்த்ததுமே குற்றவாளி நடுங்கிக் குற்றுயிராகிவிடுவான்.
முழங்காலுக்கு சற்று மேலே நிற்கிற மாதிரி நெஞ்சுவரை உயர்த்திக் கட்டிய நாலு முழ வேட்டி மட்டும் தான் அப்போது அது அவரது உடை. எலும்புகள் துருத்தி நிற்கும் நெஞ்சுக் கூட்டை முன்னிறுத்தியவாறு வந்து திண்ணையில் உட்காருவார்.
உடனே திருட்டுக் கொடுத்தவன் முன்னால் வந்து திருட்டு நடந்த விவரம் சொல்லிகையும் கªவுமாய்த் திருடனைப் பிடித்ததைச் சொல்லுவான். அவ்வளவுதான்! 'குபீலெ'னப் பெரியப்பா எழுவார். எதிர்ச் சாரிக்கு வேகமாய் நடந்து போய் கல்த்தூணில் கட்டப்பட்டு பயத்தால் மிரட்சியுற்றிருப்பவனை ஒரு பயங்கர பார்வை - இரைமீது பாயப் போகும் கொடிய விலங்கு போலப் பார்ப்பார்.

அதற்குள் பிராது கொடுத்தவன் புளியங் கொப்புகளை ஏந்தியபடி பின்னே வந்து நிற்பான். திருடும்போது கையும் கªவுமாய்ப் பிடிபட்ட தகவல் மட்டும் போதும். குற்றம் சாட்டப் பட்டவனிடம் எதுவும் கேட்க வேண்டியதில்லை அவருக்கு.
''குடுறா..!'' என்ற அதட்டல் ஒலி அவரிடமிருந்து எழும். அவரது நீட்டிய கையில் நீண்ட புளியங்கொப்பு வைக்கப்படும். அடுத்த கணம் 'வீல்' என்ற அலறல் தான் கேட்கும். பயப்பிராந்தி எல்லோர் கண்களிலும் தெரியும். அடி என்றால் அப்படி ஒரு ஆவேசமான அடி! உடல் முழுக்கக் கண்மூடித் தனமான விளாசல்! ஏதோ அவரை எதிரி தாக்கியதுபோலவும் அதில் வெறி கொண்டு அவனை விளாசுவது போலவும் இருக்கும். ரத்தம் பீரிட்டுப் பெருகி வழியும். மரண ஓலம் போல அடிபடுகிறவனின் அலறல் இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு அவர்கள் மீது விழும் அடிபோல உடல் நடுங்கும். ஆனாலும் தடுப்பவர் எவரும் இலர். அந்தக் காலத்தில் கிரேக்கத்தில் அடிமைகள் மீது பசித்த சிங்கத்தை ஏவி விட்டுக் கடித்துக் குதறச்செய்வதை வேடிக்கை பார்த்த மக்கள் போலத்தான் இங்கும். 'என்ன கொடுமை இது?' என்று சிந்திக்கவும் கூடாமல் அத்தனை பேரும் வேடிக்கைக் காட்சி போலப் பார்த்ததுதான் பெரிய கொடுமையாக சிதம்பரத்துக்கு அந்த வயதில் பட்டது. சில சிறுபிள்ளைகள் கோரக்காட்சியைக் கண்ட பயத்தில் அலறி அழுவார்கள்.
கை ஓயும் வரை அல்லது அடிபடுகிறவன் மயங்கி விழும் வரை அடி நிற்காது. நாலைந்து கொப்புகள் ஒடிந்து வீசப்பட்டுவிடும். அப்புறம்தான் கையிலிருக்க்¢ற கொப்பை வீசி எறிந்துவிட்டு, "அவுத்து உடுடா!" என்று ஓய்வார். அதற்குள் அவர் கை அசந்தும் கால் தொய்ந்தும் களைத்துப் போனவராய் 'பொத்' தென்று திண்ணையில் வந்து விழுவார். மேல்மூச்சு கீழ்மூச்சுவாங்கும்.
இத்தனைக்கும் அடி பட்டவன் 'பூ...' என்று வேகமாக ஊதினால் ஒரு கஜம் தள்ளிப் போய் விழுகிற நோஞ்சான் உடம்பு அவருக்கு. ஆனால் கட்டப்பட்டவனிடம் பயம் எதற்கு? கட்டப்படாதிருந்தாலும் கூட அவன் அவரை எதிர்க்க முடியுமா?
பிறகு வழக்கமான நடைமுறைப்படி பெரியப்பா வீட்டிலிருந்து கொடுக்கப்படும் எண்ணெயை வாங்கி அடிபட்டு ரத்தம் கசியும் இடங்களில் தடவி ஒத்தடம் கொடுப்பதும் பெரியப்பா விட்டெறியும் காசை வாங்கிப்போய் வலி மறக்க அவனுக்குக் கள் வாங்கிக் கொடுப்பதும் அவனைச் சேர்ந்தவர்களின் பொறுப்பு.
இத்தகைய குரூரத் தண்டனையைப் போலீசில் புகார் செய்யவும் முடியாது. அந்தளவு பெரியப்பாவுக்கு செல்வாக்கும் அதிகாரமும் இருந்தது. இப்போது எண்ணிப் பார்க்கையில் சிதம்பரத்துக்கு அந்தக் கொடுமைக்காரரின் தம்பி மகனாக இருந்து
விட்டதற்கான குற்ற உணர்ச்சி எழுகிறது. வீழ்ந்து புதைந்து கிடக்கும் கல்க்கம்பத் தைப் பார்க்கிறார். பெரியப்பாவும் அவரது குரூரமுமே சாய்க்கப்பட்டு மண்ணில் புதைந்து கிடப்பது போலத் தோன்றுகிறது.

கண்மூடித்தனமாக அடித்தாலும் கை மார்புக்கு மேல் எழாமல் கவனமாய் இருப்பார் பெரியப்பா. அதனால் உயிராபத்து ஏதும் நிகழ்ந்ததில்லை. உணர்ச்சி வசப்படாமல் எந்திரத்தனமாய் தண்டனை இருக்கும் என்பதால் அவருக்கு எந்தப்
பழியும் வந்ததில்லை.

ஆனால் அடுத்த ஊரில் பெரியப்பாவைப் பார்த்து இப்படிக் கட்டிவைத்து அடித்த ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு ஆள் செத்துப் போனான். அதற்குக் காரணம் உணர்ச்சி வசப்பட்டு, பின் விளைவுகளைச் சிந்திக்காமல் கத்துக்குட்டித்தனமாக
கண்டபடி அடித்ததால் ஒரு அடி செவிப்பொட்டில் பலமாய் விழுந்து ஆள் செத்து விழுந்தான். ஆவேசம் தணிந்த பிறகுதான் நிலைமையின் விபரீதம் புரிந்தது. அடித்தது ஒருவர் மட்டுமல்ல, இரண்டு மூன்றுபேர் என்பதால் கிலி பிடித்து மிரண்டவர்களுக்குத் தென்பு ஏற்பட்டது. இனி என்ன செய்யலாம் என்று யோசித்து, செத்தவன் வெளியூர் ஆள் என்பதால் அவசர அவசரமாய் செய்தி பரவுவதற்குள் உடலைக் கொளுத்தி விட்டார்கள். ஊர் ஒரே ஜாதிக்காரர்களைக் கொண்டது என்பதால், கட்டுக்கோப்பாக செய்தி வெளிப்படாமல் அழுத்தி விட்டார்கள். மணியக்காரருக்கு லஞ்சம் கொடுத்து அவர் புகார் செய்யாமல் சரிக்கட்டி விட்டார்கள்.
ஆனாலும் எப்படியோ விஷயம், செத்தவனின் ஊர் ஆட்களுக்குத் தெரிந்து போலீசுக்குப் போய் புகார் கொடுத்து விட்டார்கள். போலீஸ் வந்து தலைவரையும் அவரது கூட்டத்தையும் பிடித்துப்போய் வழக்குப் பதிவு செய்து உள்ளே தள்ளி
விட்டார்கள். போலீசுக்குத் தகவல் தராமல், உடலைக் கொளுத்துவற்கு உடந்தையாய் இருந்த மணியக்காரரும் கம்பி எண்ண வேண்டியாதாயிற்று. வெள்ளைக்காரன் காலத்துப் போலீஸ் என்பதால் சரிக்கட்ட முடியாது போயிற்றோ என்னவோ?
ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகள் பத்து வருஷம் போல கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்து நாய்ப் படாத பாடுபட்டு, சொத்துக்களை விற்று வழக்கை நடத்தி, கடைசியில் சாட்சி சொல்ல ஆள் இல்லாததால் ஒரு வழியாய் விடுதலை ஆனார்கள். முன்யோசனை இல்லாத முரட்டுத்தனம், வறட்டு அதிகார போதை காரணமாய் இளமையையும் சொத்துக்களையும் இழந்ததுதான் மிச்சம் பாவம்!

இதில் சம்பந்தப் பட்ட மணியக்காரர்பாடுதான் பரிதாபத்திற்குரியது. அவர் சிதம்பரம் ஊர்க்காரர்தான். எதிலும் ஜாக்கிரதையும் கவனமும் காட்டுபவர்தான். ஆனாலும் கனத்த தொகை நீட்டப்பட்டதால் வசமிழந்து சிக்கிக் கொண்டார்.
கொலை நடந்த ஊர்க்கார்கள் ஒட்டு மொத்தமாய் ஜாதி விசுவாசத்தால் கொலைகாரர்களுக்கு அனுசரனையாய் ஆதரவாய் இருந்தார்கள். ஆனால் மணியக்காரருக்குச் சொந்த ஊரில் எந்தப் பிடிப்பும் அனுதாபமும் இல்லை. தன் ஊரிலிலேயே கொஞ்ச நாட்கள் மணியம் பார்த்தபோது தாட்சண்யம் காட்டாமல் பலரது பகைமையைச் சம்பாதித்துக் கொண்டவர். அதனால் கொலை வழக்கில் அவர் சிக்கிக் கொண்டதில் ஊரில் அநேகருக்கு மகிழ்ச்சிதான். அவர் தலைமறைவாய் அலைந்த போதும் பணி நீக்கம் செய்யப் பட்ட போதும் சொந்த பந்தங்களின் அனுதாபம் கூடக் கிட்டவில்லை. அதற்குக் காரணம் இருந்தது.
அவர் ஊர்ப் பெரியவர்களின் வெறுப்பையும் சொந்த சாதிக்காரர்களின் பகைமையையும் சம்பாதித்திருந்தார். யாருக்கும் கட்டுப் படாத சுபாவம். தெய்வ பக்தி, சாஸ்திர சம்பிரதாயங்களைப் பேணுதல் எதிலும் நம்பிக்கை இல்லாதவர். அவரது அப்பா இறந்தபோது பதினாறாம் நாள் காரியம் கூட அவர் செய்யவில்லை. பிறகு திதி, திவசம் எதுவும் செய்யவில்லை. 'பெத்த தகப்பனுக்கு திவசம் கூட செய்யாத பாவி - அந்த பித்ரு சாபம்தான் இப்பொழுது கொலைக்கேசில் சிக்கிச் சீரழிகிறான்' என்பது பெரியவர்களின் தீர்ப்பு.
அப்பொழுது சிறுவனாய் இருந்த சிதம்பரத்துக்கும் அவர் தன் அப்பாவுக்குக் கருமகாரியம், திவசம் எல்லாம் செய்யாதது பெரிய குற்றமாகத்தான் பட்டது. இப்பொழுது அதை நினைத்துப் பார்த்தால் அவர் மீது அனுதாபமே எழுகிறது.
இன்று தானும் சகோதரர்களும் வந்திருக்கிற முடிக்கு அவர் ஐம்பது வருஷத்துக்கு முன்பே வந்திருந்தது இப்போது குற்றமாகப் படவில்லை. அப்பா ஆசார அனுஷ்டானங் கள் மிக்கவர்கள். மிகுந்த தெய்வ பக்தியும் தெய்வ நம்பிக்கையும் உடையவர்கள். தினசரி சிவபூஜையும் அனுஷ்டானமும் தவறாது செய்தவர்கள். பிள்ளைகளையும் அப்படியே வளர்த்தவர்கள். இருந்தும் பின்னாளில் எல்லா சகோதரர்களும் வெகு தொலைவில் வேறுவேறு இடங்களில் வாழ்ந்ததால் அப்பா அம்மா திதிக¨ளை சிறிது காலத்துக்குப் பின் தொடர முடியாமல், பக்கத்து நகரில் இருந்த ஒரு அநாதைச் சிறுவர் இல்லத்துக்கு ஒரு பெருந்தொகையைக் கட்டி ஆண்டு தோறும் அவர்கள் நினைவு நாட்களில் ஒருநாள் முழுதும் அநாதைச் சிறுவர்க்கு உணவிட ஏற்பாடு செய்து தம் பித்ருக் கடனைத் தீர்க்க வேண்டிவந்ததை இப்போது எண்ணிப் பார்த்தார். அப்பாவுக்கும் இந்த திதி திவசங்களில் பெரிதும் நம்பிக்கை இல்லாததால், இப்படி ஏழைச் சிறுவர்களுக்கு அவர்கள் நினைவாக உணவிடுவது ஏற்புடையதாகத்தான் இருக்கும் என்று சமாதானம் செய்து கொண்டார்கள். ஆனால் இயலாமையாலோ, நம்பிக்கை இன்மையாலோ அப்போது மணியக்காரர் தன் பித்ருக் கடனைச் செய்யாததைக் குற்றமாகக் கருதியதை எண்ணி இப்போது உறுத்தல் ஏற்பட்டது.

"கிளம்பலாமா?" என்று மருது அவரை எழுப்பினான். எழுந்து மேல மந்தையை நோக்கி நடந்தார்கள்.

(தொடரும்)

Thursday, November 15, 2007

தீபாவளி?

தீபாவளி?

புத்தாடை இன்றி
நடைப் பயிற்சிக்கு
போனேன்.

எதிர்ப்பட்ட நண்பர்கேட்டார்;
'என்ன இது?
தீபாவளிகொண்டாடவில்லையா?'

பட்டாசு சுட
நான்பையன் இல்லை;

பலகாரம் விரும்பி ரசிக்க
நான்பால்யமும் இல்லை;

பழைய உடையே
நிறைய இருக்கையில்
புதிதுக்கு அவசியம் நேரவில்லை;

பத்திரிகை மலர்களை மேய
நான்போஸ்டரை ருசித்து அசைபோடும்
பசுமாடும் இல்லை;

பிறகு என்ன இருக்கிறது
தீபாவளியில்?

Sunday, November 11, 2007

பந்த்

பந்த்

இரண்டு நாளாய்
இடியும், மின்னலும்,
காற்றும் மழையும்-

இதனிடையே
வெற்றிகரமாய் ஒரு 'பந்த்'!

கரைவேட்டிக்காரர் யாரும்
கதவடைக்கச் சொல்லவில்லை;
பாமாகாவும்
பாதை மறியல் செய்யவில்லை;

குட்டித் தொண்டர்களின்
குறிபார்த்தக் கல்வீச்சில்
பஸ் நிறுத்தம் ஏதுமில்லை;

சாலை நடுவே
வீழ்ந்த மரங்களுக்கு
சாதிக்கட்சிகள் பொறுப்பில்லை;

மின்கம்பிகளும்
தொலைபேசிகளும்
துண்டிக்கப் பட்டதற்கு
சமூக விரோதிகள் காரணமில்லை;

அத்யாவசிய சேவைகளுக்கு
அரசு தரும் சலுகையும் இல்லை;

பொது ஜனங்களும்
புகார் ஏதும் செய்யவில்லை
போலீசுக்கும் வேலை இல்லை;

எந்தக் கட்சியின் ஆதரவும் இன்றி
வெற்றிகரமாய் நடந்தது 'ப்ந்த்'!

எதிர்க்க யாரும் இல்லை
என்பதால் அல்ல -
எதிர்க்கத் திராணி
யாருக்கும் இல்லை
என்பதால்தான்!

இயற்கை நடத்திய
'பந்த்' துக்கு
இமாலய வெற்றி!