Monday, February 28, 2011

இவர்களது எழுத்துமுறை - 28.வாசந்தி

1. Writing is the process of learning. எழுத எழுத மனித மனங்களைத்
துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். எழுத எழுத இன்னும்
பக்குவம் அடைந்த மனிதனாக ஒரு படைப்பாளி மாறுகிறான் என்பதே
என் எண்ணம்.

2. டெல்லி, கல்கத்தா, மிசோரம், அருணாசலப்பிரதேஷ், மேகாலயா,
நேபாள் இங்கெல்லாம் இருந்தபோது பல விதமான அனுபவங்கள் எனக்கு
ஏற்பட்டன. பல விஷயங்களைக் கூர்ந்து கவனித்தேன். அப்போதுதான்
பெண்கள் பிரச்சினைகள் பற்றி ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தேன். எங்கே
போனாலும் பெண்கள் நிலைமை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்று
நான் உணர்ந்தேன். நகரமாகட்டும், கிராமமாகட்டும், ஏழையாகட்டும்,
பணக்காரனாகட்டும் பெண்கள் நிலைமை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
குடும்பச்சூழ்நிலையில் இதை நான் உணர்ந்துகொண்டபோதுதான் இதற்கான
காரணங்களை ஆராய முற்பட்டேன். மற்றப் பெண்கள் எப்படி
இருக்கிறார்கள் என்று என் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன். எல்லா
மானிலங்களிலும் எந்தக் கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும், பெண்கள்
நிலைமையில் மாற்றமில்லை என்பதை உணர்ந்தேன். அடிப்படையில் நம்
தேசம் நிலமான்ய சமுதாய (fudel) அமைப்பின் மிச்சமாகவும், தந்தை வழி
சமூகமாகவும் இருப்பதே இதற்குக் காரணம் என்பதை உணர்ந்தேன்.
அப்போது கிடைத்த நேரங்களில் பெருவாரியாக இந்தப் பிரச்சினைகள்
பற்றியும் இலக்கியங்களையும் நிறையப் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது.
மீண்டும் தீவிரமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

3. ஜெயகாந்தன் கதைகளை விரும்பிப் படிப்பேன். ஜானகிராமன் கதை
களையும் படிப்பேன்.ஆனால் அவர்களைப்போல் எழுத வேண்டும்,
இவர்களைப்போல் எழுதவேண்டும் என்றெல்லாம் நினைத்து இல்லை.

4. நான் மத்தியதர வர்க்கத்துப் பெண்களை மட்டும் எழுதவில்லை.
பலதரப்பட்ட பெண்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். அடிமட்டத்தில்
இருக்கும் கல்வியறிவு அற்ற பெண்களை - அவர்களது பிரச்சினைகளை
ஆராயும்போது பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இந்த
அனுபவங்களையொட்டி சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள பெண்களைப்
பற்றியும் என் கதைகளில் நிறைய எழுதியிருக்கிறேன்.

5. எளிமையாகப் படிக்கும்படியாக இருப்பதே என் நடை என்று
நினைக்கிறேன். It is quite easy to be too difficult. புரியாமல் எழுதுவது
ரொம்ப சுலபம். புரியும்படியாக எளிமையாக எழுதுவதுதான் ரொம்ப
கஷ்டம். தமிழ் இன்னும் இயல்பாக இருக்க வேண்டும் என்று
முயற்சிக்கிறேன். தமிழ்நாட்டுச் செய்திகளுக்கு இன்னும் அதிக
முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்கிறேன்.

6. நான் ஒன்றை எழுதிவிட்டு அதை உடனே பத்திகைக்கு அனுப்பும்
வழக்கமே கிடையாது. அதைத் திரும்பத் திரும்பப் படித்து எவ்வளவு
சொற்சிக்கனம் இருக்கணுமோ அதைக் கடைப்பிடித்து மீண்டும்
எழுதுகிறேன். சொல்லுகிற விஷயத்தை 'எப்படிச்சொல்கிறோம்' என்பது
தான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அதனால் நடைக்கு ஒரு
முக்கியத்துவம் கொடுத்து கலைநயத்துடன்தான் எழுதுகிறேன். முதலில்
எழுதிக் கொண்டிருக்கிறபோது இருந்தைவிட நாமும் நமது பார்வைகளை
யும், அணுகுமுறைகளையும் காலம் வளர வளர மாற்றிக் கொண்டு
வருகிறோம். அந்தப் பக்குவம் எழுத்தில் இருக்கத்தானே வேண்டும்?
ஐந்தாறு வருடமாக நான் வடிவம், கலைநயம் இவற்றிற்கு முக்கியத்துவம்
கொடுத்துத்தான் எழுதுகிறேன். 0

Wednesday, February 23, 2011

இவர்களது எழுத்துமுறை - 27.அசோகமித்திரன்

1. 'என் எழுத்து' என்று சொல்கிறபோது, 'என்' என்கிற அகங்காரம் இல்லாத,
வராத எழுத்துதான் நல்ல எழுத்து. என் கதையில் 'நான்' வரலாம். ஆனால்
அந்த நான், கதைப்பாத்திரத்தின் நான்தான். எழுதுகிற என்னுடைய 'நான்'
கதையில் வரக்கூடாது. எழுத்தாளரின் அகங்காரம் தவிர்த்த எழுத்தைத்தான்
நான் ஏற்க முடிகிறது. நான் முயற்சி செய்வதும் அதைத்தான். என்னைப்
பொறுத்தமட்டில் எழுத்தில் - கதை எழுதுவதில் மட்டுமல்ல - வாழ்க்கையில்
தினசரி நடப்பில், ஒரு கடிதம் எழுதுவதில், பேசுவதில், செயலில் எதிலுமே
அகங்காரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.

2. எழுத்துக்கென்று விசேஷ முக்கியத்துவம், அந்தஸ்து எதுவும் கிடையாது.
ஒருவன் எழுத்தாளனாக இருப்பதும், இன்னோருத்தன் ஆட்டோ டிரைவராக
இருப்பதும் எல்லாம் ஒன்றுதான். அவரவர்கள் வேலையில் அவர்கள்
உன்னதத்தை அடைகிறார்கள். எனக்குத் தெரிந்தது எழுதுவது.

3. ஒருவன் ஒருமுறை, ஐந்து முறை, பத்துமுறை கூட சாமர்த்தியமாக
அவனுடைய உள்ளுணர்வை மறைத்து எழுதிவிடலாம். ஆனால் சுமார்
நாற்பது ஆண்டுகள் ஒருவன் தொடர்ந்து எழுதி வந்தால் அவன்
உள்ளிருப்பது அனைத்தும் வெளிக்காட்டப்படாமல் இருக்க முடியாது.
என்னை அறிவது யாருக்காவது முக்கியமானால், அவரை என் படைப்புக்
களைப் படிக்கக் கேட்டுக் கொள்கிறேன். என் படைப்பு எதுவுமே முதல்
வாசிப்பில் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஆதலால் அவருக்கு நேரமும்
ஆர்வமும் இருக்குமானால் இரண்டாம் முறை படிக்கக் கேட்டுக்
கொள்கிறேன். என் நம்பிக்கை, அது அவருக்கு ஏமாற்றத்தைத் தராது.

4. 'என் கதைகளைப் படிக்கிற பலருக்கு அது உண்மையிலேயே நல்ல
எழுத்தா இல்லையா என்றே உணரமுடியாத சிக்கல் இருக்கிறது; இதற்குக்
காரணம் என் நடை எளிமையாக, அலங்காரம் இல்லாததாக இருப்பது;
நிறைய தகவல்கள் தொகுக்கப் படுகின்றன; அதிலிருந்து ஒரு கதை என்று
உய்த்துணர வேண்டி இருக்கிறது' என்ற உணர்வு பலருக்கு இருப்பதை
அறிந்திருக்கிறேன். உக்தி மட்டுமே இலக்கியமாகிவிடும் என்று நான்
நினைக்கவில்லை. ஒர் உக்தி கையாளப்படுகிறது என்ற நினைப்பே எழச்
செய்யாத உக்திதான் மிகச் சிறந்ததாகக் கருதுகிறேன். சொல்ல
வேண்டியதை நேரிடையாக அடைமொழிகளைப் பயன்படுத்தாமல்,
ஆசிரியர் சார்பு கொள்ளாமல் எழுத முயல்வதே என் பாணி.

ஆசிரியரே தம் பாத்திரங்கள் எவருடனும் ஒன்றிக் கொள்ளாமல்
எழுதுவதால் வாசகர்களுக்கும் பாத்திரத்துடன் ஒன்ற முடியாது. இதனால்
பாத்திரங்கள் எவ்வளவு பழகியவர்கள், தெரிந்தவர்கள் போல இருந்தாலும்,
வாசகர்கள் அவற்றிலிருந்து விலகியே இருப்பார்கள். இப்படி விலகி
இருப்பதில் அதிகத் தகவல்கள் அறிய சாத்தியமுண்டு. தகவல்கள் மூலம்
சூழ்நிலையையும், கதையின் தொனியையும் தெரியவைக்கும் உக்தி
என்னுடையது மட்டுமல்ல. எல்லா உரைநடை எழுத்தாளர்களும் வெவ்வேறு
அளவுக்கு இதை உபயோகப்படுத்தித்தான் இருக்கிறார்கள். குறிப்பாகத்
திரைப்பட வடிவில் இந்த உக்தி நிறையவே பயன்படுத்தப்படுகிறது.

5. எழுத்தாளன் என்பவன் இதுவே இறுதி என்பது போன்ற எண்ணங்கள்
வைத்துக் கொள்ளக்கூடாது என்றே கருதுகிறேன். இரு நபர்கள் இடையே
பிளவு ஏற்படாமல் இருக்கச் செய்யவே என் எழுத்து பயன்பட வேண்டும்
என்று கருதுவதாகச் சொல்லலாம். யாரையும் வித்தியாசப்படுத்தி, பெரியவர்
சிறியவர் என்று கருதாமல் பார்க்கும் நிலையை எழுத்து செய்ய வேண்டும்.
அதுதான் வாழ்க்கையின் உயரிய நிலை. 0

Wednesday, February 16, 2011

இவர்களது எழுத்துமுறை - 26. ஆதவன்

1. நான் முதன்முதலில் எழுதத் தொடங்கியபோது என்னைச் சுற்றி எந்தவிதமான
ஆலோசகர்களும் இருக்கவில்லை. அம்மா சுடச்சுட வார்த்துப்போடும் தோசைகளை
சுற்றிலும் உட்கார்ந்து உடனுக்குடன் தீர்த்துக்கட்டும் குழந்தைகளைப்போல என்
பேனா உருவாக்கும் வாக்கியங்களையும் பாராக்களையும் சப்புக்கொட்டிக் கொண்டு
படிக்க ஆவலுடன் ஒரு ரசிகர்குழாம் இருக்கவில்லை. நான் தனியாக - கவனிக்கப்
படாதவனாக - இருந்தேன். படிப்பிலும் சராசரியாக, விளையாட்டுக்களிலும்
தைரியமும் சாமர்த்தியமும் இல்லாத காரணத்தால், பெரும்பாலும் புறக்கணிக்கப்
பட்டவனாக, என்னையே எனக்கு நிரூபித்துக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்
தினாலும் ஏக்கத்தினாலும் திடீரென்று ஒரு நாள் நான் எழுதத் தொடங்கினேன்.
எனக்கென்று ஒரு புதியஉலகம் - தனி உலகம் - நிர்மாணிக்கத் தொடங்கினேன்.
இந்த உலகத்தில் நான்தான் ராஜா; நான் வைத்ததுதான் சட்டம்.

2. 1962ல் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது முதன் முதலாகக்
காதலித்தேன். அந்த அனுபவம் என்னுள்ளே ஒரு புதுமையான கிளர்ச்சியையும்
உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. அதுவரையில், ஏதோ எழுதித்தள்ள வேண்டு
மென்ற வெறியும் ஆசையும் இருந்ததே தவிர, எதை, எப்படி எழுதவேண்டும்
என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏட்டில் படிக்கும் மிகப் பிரமாதமான
விஷயங்களும்கூட, வாழ்க்கையின் சில நிஜமான கணங்களுக்கு முன்னால்
எவ்வளவு அற்பமானவையென நான் உணர்ந்தேன். எதை எழுதுவது என்ற
பிரச்சினை போய், எதை எழுதாமலிருப்பது என்பது என் பிரச்சினையாகி
விட்டது. என் எழுத்து மலருவதற்குத் தன்னையறியாமல் அவள் பெரும் உதவி
செய்திருக்கிறாள்.

3. கல்லூரி வராந்தாவில் முளைவிட்ட என் முதல் காதல், ரெஸ்டாரெண்டுகளிலும்,
சினிமாத் தியேட்டர்களிலும் விகசித்து மலருவதற்கு வாய்ப்பில்லாமலே போய்
விட்டது. ஆனால் அதன்பின் நான் எழுதிய கதைகளில் வரும் ஆண்களும்
பெண்களும், ரெஸ்டாரெண்டுகள், சினிமாத் தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன்,
ரயில் முதலிய எல்லா இடங்களிலும் தடையில்லாமல் சந்தித்துக் கொண்டார்கள்,
அளவளாவினர்கள். ''ரெஸ்டாரெண்டும், சினிமாத் தியேட்டரும் வராத கதை
ஏதாவது நீ எழுதியிருக்கிறாயா?'' என்று என் நண்பன் ஒருவன் கேட்டான்.
என்ன செய்வது, நான் புழங்கிய சூழ்நிலைகளையும், இடங்களையும் வைத்துத்
தானே என்னால் எழுத முடியும்?

4. என்னிடம் கதை எழுத ஃபார்முலாக்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு
கதையையும் மிகவும் யோசித்து , மிகக் கஷ்டப்பட்டுதான் எழுதுகிறேன்.
ஒவ்வொரு கதையும் நான் தவிர்க்கமுடியாமல் ஈடுபடும் தேடல். என்னை
நானே உட்படுத்திக் கொள்ளும் ஒர் பரீட்சை. ஒரு பிரச்சினை, ஒரு கருத்து,
ஒரு அனுபவம் அல்லது உணர்ச்சி - இவற்றின் சொல் உருவாக்கம், சித்தரிப்பு,
விவரணை, பகிர்ந்துகொள்ளல் ஆகியவற்றில் எனக்குள்ள திறமையின் பரீட்சை,
என்னையுமறியாமல் எனக்குள்ளே ஒளிந்திருக்கக்கூடிய ஆழங்களின்,
சலனங்களின் தேடல்.

5. ஒவ்வொரு கதையையும் எழுதியபின்பு என்னையும் என்னைச் சுற்றியுள்ள
மனிதர்களையும் முன்னைவிட நன்றாகப் புரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும்
முடிகிறது. தாஜ்மகால் கதையை எழுதிய பிறகு, கணவன்-மனைவி சமத்துவம்
என்பது ஒரு இலட்சிய உருவகம் தானென்பதை நான் புரிந்து கொண்டேன்.

6. எழுத்து எனக்கு ஒரு பயணம். பூடகமாகவும் மர்மமாகவும் எனக்குச் சற்றுத்
தொலைவில், எப்போதும் நிழலாடிக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்றைக் கிட்டப்
போய்ப பார்க்கும் ஆசையினால், பிரத்தியேக உலகத்தினுள்ளே சதா இயங்கிக்
கொண்டிருக்கும் பல சூட்சமமான உலகங்களை வெளிக்கொணரும் ஆசையினால்,
அல்லது எனக்கென்று ஒரு புதிய உலகம் நிர்மாணித்துக்கொள்ளும் ஆசையினால்,
நான் மேற்கொண்டுள்ள பயணம்.

7. எழுத்து எனக்கொரு அலங்காரச்சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வ
தற்காககோ, யாராலும் ஒப்புக்கொள்ளப்படுதற்கோ நான் எழுதவில்லை. இது
பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப்போல அல்ல.எழுதுவதை
என்னால் தவிர்க்கமுடியவில்லை. எனவேதான் எழுதுகிறேன். 0

Wednesday, February 09, 2011

இவர்களது எழுத்துமுறை - 25.அனுத்தமா

1. எழுதுவதற்கென்று ஒரு நேரம் என்றெல்லாம் எனக்குக் கிடையாது.
காகிதத்தில் பேனாவை வைத்தால், கதை (அ) சிந்தனை முற்றும்வரை
எழுதிக்கொண்டே இருப்பேன்.

2. எழுதியதை முழுமையாகப் படித்துப் பார்த்து சரி செய்வேன்.
கதையின் கருவைப் பொறுத்தே தலைப்புக் கொடுப்பது வழக்கம்.

3. எனது 'ஒரே ஒரு வார்த்தை' என்ற கதையைப் படித்துவிட்டு என்
அப்பாவின் நண்பர் ஒருவர், 'இது என்ன குறிக்கோளே இல்லாம,
சோம்பேறித்தனத்தை வளக்கிற கதை' என்று விமர்சனம் செய்ய
எனக்கு முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அப்புறம் உடனேயே
'வாழ வழி இருக்கிறதைப் பத்தியும், பிரச்சினையில்லாத வாழ்க்கையப்
பத்தியும்தான் நிறையப்பேர் சொல்லியிருக்காங்களே அதனாலே நான்
யதார்த்த வாழத் தெரியாத பிரச்சினை பற்றி சொன்னேன்' என்றேன்.
ஏற்றுக் கொண்டார்.

வாசந்தி:
------
4. தன்னுடைய எழுத்தாற்றல் தனது சாதனை என்று நினைக்காமல்
ஆண்டவனின் வரப்பிரசாதமாகவே அவர் கருதினார்.

5.அவர் எழுதிய பல சிறுகதைகள் தாமாக எழுதிக் கொண்டவை,
ஒரு தரிசனம் போல என்று வியப்புடன் விவரிப்பார். அருளின்
குரலாகவே அவருக்குப் பட்டது.

6.அவருடைய முதல் கதை (கல்கி சிறுகதைப் போட்டியில் இரண்டாவது
பரிசு பெற்றது) 'அங்கையற்கண்ணி'யின் ரிஷிமூலமும் ஏதோ அனுபூதி
கிடைத்து எழுதியதாகச் சொன்னது சிறு வயதில் எனக்கு ஆச்சரியமாக
இருக்கும்.

7. எழுதும் காலங்களில் ஓய்வில்லாமல் எழுதுவார், ஆட்கொண்டவர்
போல. முற்றத்தை ஒட்டிய தாழ்வாரம் அவருக்குப் பிடித்த இடம்.
எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் அமர்ந்து எழுதுவார். சிலசமயம்
சுவரில் சாய்ந்து நின்றுகூட எழுதுவதாகச் சொல்வார். அவர் எழுதிக்
கீழே போடும் ஒரு பக்கத் தாளை பிறகு அவரது கணவர் அழகாக
அடுக்கி பக்கம் மாறாமல் சேர்த்து வைப்பார். அவரது வேகம் பிரமிப்பை
ஏற்படுத்துவதாகத் தோன்றும்.'அவ எழுதல்லே.ஏதோ ஒரு சக்தி
அவளுக்குள்ளே பூந்து எழுதறது' என்று கணவர் ஒருமுறை சொன்னார். 0