Sunday, December 13, 2009

பாவண்ணனின் 'துங்கபத்திரை' கட்டுரைகள்.

பாவண்ணன் லா.ச.ராவைப் போல ஒரு அழகு உபாசகர். 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று பாரதிதாசன் சொன்னது போல அவருக்கு எங்கெங்கும் அழகே தென்படுகிறது. வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் அவரது கண்களில் தென்படுபவை எல்லாமே அழகுதான். பூங்காக்களில் தத்தித் தாவும் வண்ணப் புள்ளினங்களில், அங்கே விளையாடும் குழந்தைகளில், வானில் வலசை போகும் பறவைகளில், மஞ்சு தவழும் மலைக்குன்றுகளில், அவற்றிடையே வானின்று ஒழுகும் அருவிகளில், ஆரவாரமற்று அமைதியாய் ஓடும் ஆறுகளில் என்று - 'தொட்ட இடமெல்லாம் 'புரட்சிக் கவிஞருக்கு 'அழகென்பாள் கவிதை தந்த' மாதிரி, பாவண்ணனுக்கு படைப்புக்கான விஷயங்கள் கிடைக்கின்றன. தொட்டதில் எல்லாம் மனம் தோய்கிற வரம் பெற்றவராக, 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடிய வள்ளலாரைப்போல தான் காணும் வதைபடும் மாந்தர்களுக்காக மனங்கசிந்து உருகுபவராக அவரது கட்டுரைகள் அவரை நமக்குக் காட்டுகின்றன. பார்க்கிற காட்சிகள் மட்டுமல்ல, படிக்கிற கவிதைகள், பழம்பாடல்கள் எல்லாமும் அவரைப் பரவசப் படுத்துகின்றன. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' எனும் பெருநோக்கில், அவற்றைத் தான் பரவசப்பட்டு உணர்ந்தவாறே தனது வாசகரையும் உணர வைத்து உருகவைப்பதில் வெற்றி காண்பவர். 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள இந்த 'துங்கபத்திரை' கட்டுரைத் தொகுப்பு அதை நிரூபிக்கிறது. இதில் அவர் காட்டும் காட்சிகள், நிகழ்வுகள் எல்லாம் நாமும் காண்பவையாகவும், நம்முடையவையாகவும் இருப்பதால் நாம் அவருடன் நெருக்கத்தை உணர முடிகிறது. இது ஒரு சிறந்த படைப்பாளிக்கே சாத்தியம்.

ஒவ்வொரு கட்டுரையுமே ஒரு சிறுகதைபோல் சுவாரஸ்யமாக இருக்கிறது. 'ஒரு வீட்டின் ஆயுட்காலம்'என்னும் முதல் கட்டுரை, தேவையைப் பொறுத்து அமைகிற சொந்த வீடு பற்றிய அபிமான உருக்கத்தின் பல நிலைகளைப் பேசுகிறது. ஆசைப்பட்டுக் கட்டிய, வாங்கிய வீட்டை விற்க நேரும்போது உள்ள மனநிலை, நேசித்த வீட்டைப் பிரியும்போது ஏற்படும் மனக்கிலேசம் பற்றியெல்லாம் இதில் பாவண்ணன் காட்டும் காட்சிகள் நம்மையும் உருக வைக்கின்றன. வீட்டை இடிக்கிற தொழிலாளிகூட 'கட்டினவங்களுக்கு என்ன மொடையோ, பாத்துக்க முடியாத பிரச்சினையோ, வித்துடறாங்க. ஆனா வீடுங்கறத வெறும் சிமிட்டும் மண்ணும் கலந்த செவுருன்னு நெனச்சிடலாமா ஐயா. எவ்வளவோ நல்லது கெட்டதுங்க இந்த வீட்டுக்குள்ள நடந்திருக்கும். மனுஷங்க சந்தோஷம், துக்கம், சிரிப்பு, அழுகை எல்லாத்தயும் இதுவும் மௌனமாப் பாத்துக்கிட்டுதானே இருக்குது. அதுக்கும் உயிர் இருக்குமில்லையா?' என்று பாவண்ணனிடம் வீட்டை இடிக்க நேருகிற பாவத்தை மனம் வலிக்கப் பேசுகிறான். நமக்கும் வலிக்கவே செய்கிறது.

அடுத்துள்ள 'எரிந்த வீடும் எரியாத நினைவும்' என்கிற கட்டுரையும் ஒரு வீட்டின் இழப்பைப் பேசுகிறது.கண்ணனின் இதழ் ஸ்பரிசத்தை அறிந்த வெண்சங்கு- ஆண்டாளுக்கு எழுப்பியிருக்கும் கேள்விகளும், தலைவனின் வருகையை எதிர்பார்த்து ஏங்கும் குறுந்தொகைத் தலைவி தோழியிடம் எழுப்பும் ஐயங்களும், கன்னடக் கவிஞர் சிந்தாமணி கொட்லேகெரேயின் 'கங்கைக் கரையில் கிடந்த கல்' எனும் கவிதையில் வரும் கல் அவருள் எழுப்பும் காட்சிகளுமான - பாவண்ணனை அசைபோட வைக்கும் அவரது அவதானிப்புகளால் நமக்கு ரசமான இலக்கிய அறிமுகங்கள் கிடைக்கின்றன. இலங்கைக் கவிஞர் வில்வரத்தினத்தின் வீடு இந்திய அமைதிப்படையால் அழிக்கப் பட்ட போது, அந்த வீட்டின் நினைவாக ஒரு பொருளை எடுத்துவரச் சென்ற அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை வேதனையோடு குறிப்பிடுகையில் கவிதைப்பரப்பின் அதிசயங்களை தானும் வியந்து நம்மையும் வியக்க வைக்கிறார்.

கல்வி வியாபாரமாகி விட்ட நிலையில் அன்று 15 ரூபாய் பரீட்சைக்குக் கட்ட முடியாத பெற்றோரையும், இன்று லட்சக்கணக்கில் பணம் கட்ட வசதி இருந்தும் பிள்ளைகளின் கல்வி வாய்ப்புக்கு அலைகிற, பிள்ளைகளின் மனப்போக்கு பற்றிக் கவலைப்படுகிற இன்றைய பெற்றோர்களையும் ஒப்பிட்டு சில யதார்த்தங்களைச் சுட்டி 'புதிய பெற்றோர்கள்' என்னும் கட்டுரை பேசுகிறது.

தலைப்புக்கட்டுரையான 'துங்கபத்திரை'- துங்கபத்திரை நதி பாவண்ணனுக்கு ஏற்படுத்திய வித்தியாசமான அனுபவங்களை ரசமாகச் சொல்கிறது. பல்வித எண்ண அலைகளை அங்கு சுற்றுலாவரும் பள்ளிக் குழந்தகளும் அவர்களை வழி நடத்தும் ஆசிரியர்களும் எழுப்புகிறார்கள்.

அவரது சொந்த ஊரில் அவர் மிகவும் நேசிக்கும் ஏரி - நீர்தளும்பி அலையடித்த நிலை மாறி இன்று வறண்டு கிடக்கும் கோலத்தைப் பார்க்கும் பாவண்ணனுக்குள் மனித வாழ்கையின் சுமைகள், முடிவே இல்லாத - பெண்களின் வாழ்க்கைப் போராட்டம்பற்றி எல்லாம் எழும் ஆழ்ந்த சிந்தனைகளை 'வாழ்க்கை எனும் சுமை' என்கிற கட்டுரை விரிவாகப் பேசுகிறது. வாழ்க்கைச் சுமையை யதார்த்தமாக ஏற்கும் லட்சுமி அம்மா என்கிற உழைக்கும் பெண்மணியின் கதை இந்தியாவின் உழைக்கும் பெண்களின் வாழ்வே இப்படித்தான் என்று
காட்டுகிறது.

'மகிஜா என்றொரு மனிதர்' கட்டுரையில், பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடம் ஆண்டுக் கணக்கில் குப்பை மேடாக மாறி இருந்தது - மகிஜா என்றொரு மாமனிதரின் முயற்சியால் அற்புதப் பூங்காவாக மாறியது பாவண்ணனைக் கவர்கிறது. அதற்கு அவர் பட்ட சிரமங்கள், அரசியல்வாதிகளின் அலட்சியம், அரசு அலுவலர்களின் சிகப்புநாடா நடைமுறை என்று எவ்வளவோ தடை ஏற்பட்டும் அம்மாமனிதர் அயராது நடை நடையாய் நடந்து வெற்றி கண்டதற்கு தானும் நண்பர்களும் உதவியதையும், இடையே அரசியல்வாதிகளைப் பற்றிய எள்ளல்களையும் பாவண்ணன் ரசிக்கும்படி பதிவு செய்திருக்கிறார்.

பார்க்கிற எளிய மனிதர்களிடம் எல்லாம் பாவண்ணனுக்குப் பரிவும் அக்கரையும் உண்டாகின்றன. 'ஆறுதல்' என்கிற கட்டுரையில் பூங்காவில், கடலை விற்கும் ஒரு மனிதரின் சோகக் கதையைக் கேட்டு உருகி அவருக்கு ஆறுதல் சொன்னதை நினைவு கூர்கிறார். 'சந்திப்பு' உதவ யாருமற்ற குப்பம்மாள் என்கிற வயதான ஏழை மூதாட்டியின் சோகக் கதையை விவரிக்கிறது.

'சொர்க்கத்தின் நிறம்' என்னும் ஈரானிய திரைப்படம் தந்த, அழுத்தமான விடுபடமுடியாத தாக்கம் பற்றி ஒரு கட்டுரையில் சொல்கிற பாவண்ணன், அப்படம் 'செல்வமோ வசதியோ சொர்க்கமாக இருக்க முடியாது. மனம் விரும்புவதை அடைவதே மிகப்பெரிய சொர்க்கம்' என்று உணர்த்துவதைக் காட்டுகிறார். வில்லியம்ஸ் என்கிற மேலைநாட்டு மருத்துவர் ஒருவரைப் பற்றி அவர் படிக்க நேர்ந்த புத்தகத்தில் கண்ட அம் மருத்துவரது அரிய சாதனை அவரை நெகிழ்த்திய அனுபவத்தை 'சாவை வென்ற வீரர்' சிலிர்ப்புடன் விவரிக்கிறது. புரந்திர
தாசரின் பாடல்களைத் தேடிப் படிக்கத் தூண்டுகிறது 'நெஞ்சை நிரப்பிய பாடல்கள்' என்கிற புரந்திரதாசர் பாடல்கள் பற்றிய பாவண்ணனின் ரசானுபவம்.

இயற்கையின் மீதான பாவண்ணனின் தீராத தாகத்தையும் பரவசத்தையும், கர்நாடகாவின் 'ஜோக்' அருவியை அவர் கண்டு சிலிர்த்த அனுபவத்தை அதே பரவசம் நமக்கும் ஏற்படுகிற மாதிரி சொல்லியுள்ள 'அருவி எனும் அதிசயம்' கட்டுரையில் காண்கிறோம். அந்த அருவி பற்றிய கவித்துவமான வருணனையே அற்புதமானது.நாமும் அவருடன் நின்று ஜோக் அருவியின் சாரலையும் அது ஒழுகும் அழகையும் ரசிக்கிறோம்.

'Out of sight is out of mind' என்பார்கள். நம் பார்வையிலிருந்து தப்பியவை நம் கவனத்திலிருந்தும் தப்பிவிடுவது நம் அனுபவம். ஆனால் பாவண்ணன் பார்வைக்குத் தப்பியதை அவர் மறப்பதே இல்லை. அவரது தேடல் மனம் விடாது அதைத் தேடிக் கண்டடைகிறது என்பதற்கு 'பச்சை நிறத்தில் ஒரு பறவை' என்கிற கட்டுரையே சான்று. ஒரு நாள் மைதானம் ஒன்றில் புதிய பச்சைநிறப் பறவை ஒன்றைக் கண்டவர் அதன் அழகில் மயங்கி அதன் பெயரை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து அது என்ன பறவை என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. நண்பர்களுடன் காத்திருந்தும் அந்தப் பறவை மீண்டும் வரவில்லை. போகட்டும் என்று நாமானல் விட்டு விடுவோம். ஆனால் பாவண்ணன் அதை மறந்துவிடாமல் மறுநாள் அதே நேரத்தில் அதே இடத்தில் காத்திருந்தும் பறவை வரவில்லை. பிறகு ஒரு நாள் அவருக்கு மட்டும் அது காட்சி தருகிறது. தன்னை ஈர்த்த எதையும் பற்றி, விடாது தேடி ஆராய்கிற அவரது தேடல் மனத்தை இதில் பார்க்கிறோம்.

'தாமரை இலையின் தத்துவம்' எனும் கட்டுரையும் அவரது தன்னை மறந்த தேடல் தாகத்தைச் சொல்வதாக உள்ளது. அவரது மேலதிகாரியின் புதுமனை புகுவிழாவிற்காக திருவானைக்காவுக்குச் சென்றவர் மலைக்கோட்டையையும், சித்தன்னவாசல் ஓவியங்களையும், கல்லணையையும் பார்க்கப்போய் நிகழ்ச்சி முடிந்தபின் அதிகாரியின் வீட்டுக்குப் போகும்படி நேர்ந்து விடுகிறது. மலைக்கோட்டையின் உச்சியில் நின்று கருநீல வண்ணத்தில் விரிந்திருக்கும் வானத்தையும், இறைந்துகிடக்கும் நட்சத்திரங்களையும் ரசிப்பதிலும், சித்தன்னவாசல் ஓவியங்களில் கண்ட பற்றின்மையை உணர்த்தும் தாமரை இலைகள் சுட்டும் வாழ்க்கைத் தத்துவத்திலும் ஆழ்ந்து போகிறார்.

சித்தமருத்துவ நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் அவருடைய ஊர்த் திருவிழாவில் கலந்து கொள்ளச் சென்றவர் அந்த நண்பரின் குடும்பத்தாரிடையே பரம்பரையாகத் தொடரும் சித்த மருத்துவம், சிலம்பம் முதலிய கிராமியக் கலைகள், அங்குள்ள ஈஷா மையப் பள்ளியின் கல்விமுறை ஆகியவற்றைக் கண்டு வியந்த அனுபவத்தை'அழிந்து போன அறிதல் முறை' கட்டுரை சுவைபடச் சொல்கிறது.

கடைசிக் கட்டுரையான 'பார்வையும் பரிவும்', இன்றைய தாராளமயப் பொருளாதாரமும் ஏழைகளின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதாயில்லை என்பதும், அப்பாவி எளிய மக்கள் மீது பலருக்கும் உள்ள மனச்சித்திரம் அவ்வளவு உயர்ந்ததாய் இல்லை என்பதும் அவர் பார்க்க நேரிடும் பிச்சைக்காரர்களும், கழைக் கூத்தாடிகளும் உழைக்கும் மக்களும் உணர்த்தி மனதைப் பாரமாக்குவதை உருக்கமாகச் சித்தரிக்கிறது.

இவ்வாறு, தன்னைச் சுற்றியுள்ள புறவுலகின் நிகழ்வுகளையும் உரையாடல்களையும் கூர்ந்து கவனிப்பவராகவும், தொடர்ந்து தன்னைப் பாதித்தவற்றை அசை போடுபவராகவும் பாவண்ணனைக் இக்கட்டுரைகளில் காண்கிறோம். அத்துடன் அழகுணர்ச்சியொடும் சமூக அக்கரையோடும் மனித நேயத்தோடும் தான் கண்டுணர்ந்தவற்றையும், ரசித்தவற்றையும் - அலுப்பை ஏற்படுத்தாத எளிய இனிய நடையில் படைத்தளிக்கும் திறம் கொண்டவராகவும் அவரை இவை நமக்குக் காட்டுகின்றன. 0

நூல் : துங்கபத்திரை
ஆசிரியர் : பாவண்ணன்
வெளியீடு : எனி இந்தியன் பதிப்பகம், சென்னை

Tuesday, December 08, 2009

இ.பா வின் 'வேதபுரத்து வியாபாரிகள்' - ஒரு அரசியல் அங்கத நாவல்.

இன்று புதுமைப்பித்தனுக்குப் பிறகு அற்புதமான அங்கதம் அமைய எழுதுபவர் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்கள். இவரது சிறுகதைகள் மட்டுமல்லாமல் நாவல்களும் அங்கதச்சுவை மிக்கவை. புதுமைப்பித்தனின் அங்கதம் கடுமையாகவும் எள்ளலாகவும் இருக்கும். ஆனால் இ.பா வின் அங்கதம் மென்னகை பூக்க வைப்பதோடு, சில சமயங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைப்பதாகவும், மறைமுகமாகச் சாடுவதாகவும் இருக்கும். 'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டிருக்கும் இவரது 'வேதபுரத்து வியாபாரிகள்' ஒரு மிகச் சிறப்பான அரசியல் அங்கத நாவல்.

கல்கியில் தொடராக வந்த இந்நாவலின் பிறப்பு பற்றி முன்னுரையில் குறிப்பிடும்போது, இ.பா அவர்கள் அங்கதம் எழுதுவது பற்றிச் சொல்கிறார்: "கல்கி ராஜேந்திரன் 'கல்கி'க்கு ஒரு அரசியல் அங்கதத் தொடர் எழுதித் தரும்படி கேட்டார். "அங்கதம் இனி எழுத முடியாது என்று தோன்றுகிறது' என்று நான் அவரிடம் சொன்னேன். 'ஏன்?' என்றார் அவர். 'நடப்பு நிகழ்வுகளை மிகைப்படுத்திக் கற்பனையுடன் நகைச்சுவை தோன்ற எழுதுவதுதான் அங்கதம்
என்றால், இப்போது நாட்டில் நடப்பன அனைத்துமே அங்கதம்தான். நான் அங்கதம் என்று நினைத்துக்கொண்டு எழுதினால், அது படிப்பவர்களுக்கு வெறும் செய்தித் திரட்டாக இருக்கக் கூடும்' என்றேன்." அந்தளவு இன்றைய அரசியல்வாதிகளின் செயல்கள் கற்பனயாக எழுத அவசியமில்லாமல் அப்படியே எழுதுவதே அங்கதம் மிக்கதாக இருக்கும் என்று இன்றைய யதார்த்தத்தை எள்ளலுடன் குறிப்பிடுகிறார். அப்படி அவர் யதார்த்தமாக உணர்ந்தவற்றை
வரிக்குவரி அங்கதச்சுவை அமைய இந்நாவலைப் படைத்திருக்கிறார்.

'எல்லா மொழிகளிலுமே 'அங்கதங்களுக்கு' ஒரு ஆயுள் வரையறை (morality rate) உண்டு. பதினெட்டாம் நூற்றாண்டில், ஜானதன் ஸ்·ப்ட் (Jonatan SWift) 'கலிவரின் பயணங்கள்' என்ற ஒரு மகத்தான சமூக அங்கத நாவல் எழுதினார். சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, ஜார்ஜ் ஆர்வெலின் '1984', 'விலங்குப்பண்ணை' (Animal Form) ஆகிய இரண்டு நாவல்களுமே மனித சுபாவம் பற்றிய உளவியல் படைப்புகளாகவே அறியப்படுகின்றனவே அன்றி, கம்யூனிசக் கோட்பாடுகளை பற்றிய விமர்சனம் என்ற கருத்தோட்டம் மறைந்து வருகிறது' என்றுகுறிப்பிடும் இ.பா'நல்ல வேளை, இந்திய, தமிழ்நாட்டு அரசியல், சமூக சூழ்நிலைகள் நான் இந்நாவலை எழுதிய பத்தாண்டு காலத்தில் மாறுதல் இல்லாமலே இருந்து வருகின்றன என்பது இந்த நாவலின் அதிர்ஷ்டம்' என்கிறா¡ர். ஏனெனல், எந்தக்காரணத்துக்காக இந்த அங்கதம் அன்று எழுதப்பட்டதோ அதே காரணத்துக்காக இன்றும் அங்கதமாகவே' இதைப் படிக்க முடிவதற்குக் காரணம் நமது அரசியல்வாதிகளின் செயல்பாட்டுகள் பல ஆண்டுகளாக மாறாது கேலிக்குரியதாக இருப்பதுதான்.

அபூர்வா என்கிற தமிழின் மூலத்தைக் கொண்ட, அமெரிக்கப் பெண்ணொருத்தி தன் தாய் நாடான தமிழ்நாட்டுக்கு - மக்களுடன் பழகி இந்நாட்டைப் பற்றி புத்தகம் எழுதும் எண்ணத்துடன் வருகிறாள். இங்கே வந்துஇங்குள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்கையில், அவள் வந்த நோக்கத்திலிருந்து விலகி, அவளது விருப்பத்துக்கு மாறாக இந்த நாட்டு அரசியலில் பங்கேற்கவும் தலைவி ஆகவும் நேர்கிறது. 'இக்கலாச்சாரத்தில்
உய்ய வேண்டும் என்றால், ஆட்கொள்ளப்படுதலைத் தவிர வேறு வழியில்லை என்கிற ஓர் அவல நிலையை எய்துதல்தான், இந்நாவலின் துன்பியல் முடிவு' என்கிறார் ஆசிரியர்.

இந்நாவலில் வரும் பாத்திரங்களும், இடங்களும் வாசிப்பவருக்கு எளிதில் அர்த்தமாகின்றன. வேதபுரம் என்பதுபுதுச்சேரியின் பெயர்களில் ஒன்று என்றாலும், அது தமிழ்நாட்டையும், 'வேதபுரத்தில் வியாபாரம் பெருகுது என்ற பாரதியின் வார்த்தைகள் அங்கு நடக்கும் அரசியல் வியாபாரத்தையும் சுட்டுவதை உணர முடிகிறது. 'இந்திரப்பிரஸ்தம்' என்று நாவலில் வரும், நாட்டின் தலைநகர் 'தில்லி' என்பதையும் அறிய முடிகிறது. தலைநகர் ஒன்று உள்ளது என்ற பிரக்ஞையே இல்லாமல், வேதபுரத்தைத் தனி சுதந்திர நாடாகக் கருதி அங்கு ஆளும் அரசியல் தலைவர்கள் முடியாட்சி நடத்தும் விசித்திரத்தையும், அங்கு நிலவும் கலாச்சாரச் சீரழிவையும் ஒளிவு மறைவின்றித் தத்ரூபமாய் நாவல் சித்தரிக்கிறது. தலைவரைச் சந்திக்க முடியாத, தலவரை நேரில் பார்க்க வியலாத கீழ்மட்டத் தலைவர்களின் அவலத்தையும், காலில் விழும் கலாச்சாரத்தையும், தலைவருக்கு நெருக்கமான ஒருவரே எல்லாவற்றையும் இயக்குவதையும் கதை நாயகி அபூர்வா பார்க்கிறாள். எந்த நேரத்தில் யாருக்கு அதிர்ஷ்டம் அல்லது வீழ்ச்சி நிகழும் என்று தீர்மானிக்க இயலாத தலைவரின் விசித்திர நடவடிக்கை கண்டு வியக்கும் அவளுக்கே, அந்த அதிர்ச்சியான உயர்வும் விசித்திரங்களும் நேர்கின்றன. அவளும் சந்திக்க முடியாத அந்தத் தலைவரையும் அபூர்வவின் மூலப்பாத்திரத்தையும் நாம் இனங்கண்டு ரசிக்க முடிகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ, அரசியல் தலைவரையோ கிண்டல் செய்வது தன் நோக்கமில்லை என்று ஆசிரியர் சொன்னாலும், நமக்கு அந்தக் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் எளிதில் அடையாளம் காண முடிகிறது.
வரிக்குவரி கிண்டலும் கேலியுமாய் படிப்பவரை நாவல் பரவசப்படுத்துகிறது. எழுத்தாளர்களை இப்படியும் ஒரு அற்புதமான அங்கத எழுத்தை நம்மால் எழுத முடியுமா என்று ஏங்க வைக்கிறது.

என்னதான் நான் இ.பாவின் அங்கதச் சிறப்பை வளைத்து வளைத்து எழுதினாலும் நாவலைப் படித்தால் மட்டுமே பரிபூரண வாசிப்பு சுகத்தை அனுபவிக்க முடியும். இந்த வாசிப்பு சுகம் தி.ஜானகிராமன் போன்று, அபூர்வமாக ஒரு சிலரது எழுத்துக்களில்தான் காணமுடியும். அப்படிப்பட்ட அபூர்வமான எழுத்து இ.பாவினுடையது. வாசகர்ளின் வாசிப்புக்குப்புத் தூண்டும் விதமாக கீழ்க்கண்ட சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும்கூட கேலியும் கிண்டலும் தொனிக்கிற கற்பனையான எடுத்துக்காட்டு கள் - 'வேதபுரத்தில்தான் தலைவர்களின் பாதங்களைத் தொட்டுக் கும்பிடுதல் என்ற மரபு ஏற்பட்டிருக்க முடியும்;மேலைநாடுகளில் இம்மரபு தோன்றி இருக்க இயலாது. காரணம் அந்த நாடுகள் குளிர்ப்பிரதேசங்கள், காலில் எப்போதும் பூட்ஸ் போட்டிருப்பார்கள்; பாதங்களின் நேரடி தரிசனம் கிடைப்பது சாத்தியமில்லை'. ('பாத பூஜை ஆய்வு' - ஆசிரியர், எஸ்.எம்.ஆர்.என்.கிருஷ்ணசாமி. பக்.34-35)' போன்று தரப்பட்டிருப்பதும் ரசனைக்குரியது.

'வேதபுரத்துக்கு வந்த புதிதில், அவள் இங்கு நடைபெறுவது முடியாட்சிதான் என்று நினைத்தாள். தலையில் கிரீடத்துடன் தெரு ஓரங்களை அலங்கரித்த ஆளுங்கட்சித் தலைவரின் விஸ்வரூப படத் தோற்றங்கள் அவளை அவ்வாறு நினைக்க வைத்தன.'

'இடக்குத்தகை'ன்னா.... ஒவ்வொரு மூலையிலும் நம்ம தலைவரு ஜனங்களுக்கு தரிசனம் கொடுத்துக்கிட்டிருக் காரில்லே? அந்த இடத்தை ஏலத்துலே குத்தகைக்கு விடுறது. குத்தகைக்கு எடுத்தவரு அப்புறம் ஒவ்வொரு மூலையையும், தலைவரது உருவத்தை வைக்கப் பிரியப்படறவங்களுக்கு வாடகைக்கு விடுவாரு....'

'எங்க நாட்டை நீங்க புரிஞ்சிக்கணும்னா, தேவைப்படுகிற அளவுகோலே வேற... பகுத்தறிவுக்கு டாட்டா சொல்லணும். ஆனா நாங்க கொடுக்கிற பட்டங்களெல்லாம் 'பகுத்தறிவுச் செம்மல்', பகுத்தறிவு மறவன்', அது இதுன்னுதான். சுயமரியாதைன்னு சொல்லுவோம், கால்லே விழுந்து காரியத்தைச் சாதிச்சுப்போம்.'

'எங்கள் நாட்டில் யார் என்ன சொன்னாலும் அப்படியே அரசாங்கம் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு கமிஷன் அமைத்து விசாரிப்பதுதான் மரபு.'

'நீங்க பகுத்தறிவு, பகுத்தறிவுன்னு பிரசாரம் பண்ணலாம். ஆனா, சாதாரண ஜனங்க விரும்பறது, பகுத்தறிவிலேருந்து விடுமுறை, 'நம்பிக்கையின்மைய விரும்பிப்புறக்கணித்தல்'ங்கறது வேதபுரத்திலேதான் சாத்தியம்'.

- அரசியல்வாதியை மட்டுமல்ல ஆன்மீகவாதிகளையும் இ.பா விட்டு வைக்கவில்லை: 'ஞானச்செல்வர் சிங்காரம் அடிகளார், சிவப்பு வேட்டி, சிவப்பு சால்வை சகிதமாக அவள் (தலைவர்) வருகைக்காகக் காத்துக் கொண்டு மேடையருகே நின்றார்.

'வேதபுரத்து மக்கள ஆளப்பட வேண்டிய இனமே தவிர, ஆள்ற இனமே இல்ல. எல்லோரும் இந்நாட்டு மன்னர்ங்கிறதெல்லாம் வேதபுரத்துக்குப் பொருந்தி வராது. 'எங்களைப் போட்டு மிதிங்க, மிதிங்க'ன்னு சொல்லி, ஒருத்தரைத் தலைவராகவோ, தலைவியாகவோ ஆக்கி, அவங்களாலே மிதிபடறதையே சொர்க்கமா நினைக்கிற அப்பாவிக் கூட்டம்'.

'அபூர்வா தேவி தர்ம தரிசனம் கொடுக்கத் தயாரான போது அவரெதிரெ, அவர் தோழி வனிதா தேவி, சர்வாலங்கார பூஷிதையாய், சரீரமே நகைக்கடையாய் வந்து நின்றாள்.'

அங்கதம் மட்டுமல்ல இ.பாவின் வருணனைகளும் அற்புதமானவை: 'வீட்டுக்காரர் முற்றத்தில் நின்று கொண்டுஇருந்தார். இடுப்பை ஒரு சிறு துண்டு அலங்கரித்தது. மற்றபடி, 'அல்லையாண்டு அமைந்து', திறந்த திருமேனி.'

'உள்ளே வந்தவர் நீளமான ஒரு சாய்ந்த நேர்க்கோடு போலிருந்தார். கண்ணாடி. மைனஸ் ஏழு அல்லது எட்டு இருக்கலாம். முகத்தில் தெரிந்தது புன்னைகையா, வேதனைக் குறிப்பா என்று கண்டு பிடிப்பது கஷ்டமாக இருந்தது.'

- இவ்வாறு நாவல் முழுதும் நிறைந்துள்ள அங்கதமும், சொல்லாடல்களும், வருணனைகளும், கலைத்தன்மையும் வாசகனது நெஞ்சில் பரவசத்தை ஊட்டுகின்றன.

'இத்தகைய கலாச்சார சூழ்நிலை உருவாவதற்கு யார் காரணம்? நாம்தான். நமக்குத் தகுதியான அரசியலும் கலாச்சாரமுந்தான் நமக்குக் கிடைக்கிறது' என்று சாடும் இ.பா இந்நாவலை எழுதியதற்கான காரணத்தைப்
பின்கண்டவாறு விவரிக்கிறார்:

'பிந்தைய அறுபதுகளுக்குப் பிறகே நம் கலாச்சார வீழ்ச்சி தொடங்கியது என்று கூறமுடியும். தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் இரண்டறக் கலந்தன. ''சினிமாவும் அரசியலும் இரண்டென்பர் அறிவிலார், அரசியலே சினிமா என்றறிந்தபின், நிழலே நிஜம் என்றிருப்பாரே" என்ற ஒரு 'ஆன்மிகக் கொள்கையின்அடிப்படையில்ஒரு புது சமயம் உருவாயிற்று. அதை உருவாக்கிய 'சித்தர்'களே அரசியல் தலைவர்களானார்கள். இதன் வெளிப்பாடாக அமைந்ததுதான் தமிழ்நாட்டின் அன்றைய, இன்றைய கலாச்சாரம். இது எல்லாத் துறைகளையும் பாதித்தது. இதைச் சுட்டிக் காட்டவே இந்நாவலை எழுதினேன்.'

'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்' என்ற சமூகப் பிரக்ஞையுடனும் நமது கலாச்சாரத்தின் சீரழிவு பற்றிய கவலையுடனும் எழுதப்பட்ட இந்நாவலுக்கு 1997ஆம் ஆண்டின் பாரதீய பாஷா பரிஷத் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 0

நூல்: வேதபுரத்து வியாபாரிகள்
ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை.

Sunday, November 29, 2009

'யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை' - விமர்சனக் கட்டுரைகள்

'தலைப்பே படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும்' என்பார்கள். அப்படி
'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள வெங்கட்சாமிநாதனின் இந்த விமர்சனத் தொகுப்பின் தலைப்பும் உள்ளே நுழையத் தூண்டுகிறது. ஒரு புதிய எழுத்தாளர் தொடங்கி புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் வரை தமிழ் இலக்கியப் படைப்புகளின் பரிணாம மாற்றங்களைச் சொல்வதாக
இருக்கும் என்று கருதி உள்ளே நுழைந்தால் மேற் சொன்ன இருவரையும் உள்ளடக்கிய,
பல்வேறு சந்தர்ப்பங்களில் தானாகவும் - அவரே தலைப்பினடியில் குறிபிட்டுள்ளபடி 'கேட்டீர்கள், சொல்கிறேன்' என்று - கேட்கப்பட்டும் எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் என்று தெரிய வருகிறது. தலைப்பு பற்றிய நமது குழப்பத்தை எதிர் பார்த்தே வெ.சா தனது முன்னுரையில் (முன்னுரையே ஒரு சுவாரஸ்யமான கட்டுரை) எழுதுகிறார்: 'யூமாவாசுயிலிருந்து' - என்று நான் இத்தொகுப்பின் தலைப்பைத் தொடங்குவது ஒரு கோட்டின் தொடக்கத்தைக் குறிக்க. சு.சமுத்திரம் அக்கோடு முடியும் புள்ளி. இக்கோட்டைப் பலவாறாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இதன் பல நிலைகளில், பரிமாணங்களில் பலவும் உண்டு. வண்ணங்களில், தரும் சுவாரஸ்யத்தில், எழுத்துத்திறனில், இலக்கிய நோக்கில் தான் பெற்ற அனுபவத்திலிருந்து அர்த்தம் பெறப்படுகிறதா அல்லது வெளியிலிருந்து பெற்ற அர்த்தம் அந்த அனுபவத்துக்குள் திணிக்கப்படுகிறதா என்று பலவாறாக அவரவர் பார்வைக்கேற்றவாறு பொருள் கொள்ளலாம்'.

இப்படி ஒரு விளக்கம் தருவதற்கு, தொடர்ந்து அதே முன்னுரையில் அவர் தன்னைப்பற்றி சொல்கிற -'நான் பிறக்கும்போதே சங்கிலிப் பிணைப்புடன் பிறந்தவன். சாதி மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள குண்டாந்தடி.அதை நான் மறந்தாலும் மற்றவர்கள் மறப்பதில்லை. அதெப்படி மறப்பார்கள்? அதுதான் அவர்களுக்குக் கிடைத்த வலுவான ஆயுதமாயிற்றே, என் சுதந்திரப் போக்குப் பிடிக்காதவர்கள் என்னை தாக்க' - என்கிற சுய பச்சாதாபமும் காரணமாக இருக்கக்கூடும். ஆனால் நடுநிலையான சிந்தனையுள்ள வாசகர்கள் - அவர் அகிலனையும், வல்லிக் கண்ணனையும், தி.க,சியையும், சமுத்திரத்தையும், தன்னை விமர்சிக்கிற ச.தமிழ்ச்செல்வன் போன்ற இன்னும் சிலரையும் கடுமையாய்த் தாக்கினாலும், தன்னைக்கடுமையாய்த் தாக்கும் சோலை சுந்தரப் பெருமாள் போன்றவர்களின் 'தப்பாட்டம்'
போன்ற தரமான படைப்புகளை மனமாற லயிப்புடன் பாராட்டுதைப் பார்க்கும்போது, அவரது விமர்சனத்திறனையும், தரமானவற்றை மறுக்காமல் பாராட்டும் நேர்மையையும் மட்டுமே கருத்தில் கொள்வார்கள்.

இத்தொகுப்பில் உள்ள 39 விமர்சனக் கட்டுரைகளில், இரண்டு விதமான விமர்சனப்போக்கைக் காண முடியும். ஒன்று- தில்லி வானொலி, அமுதசுரபி, சி·பி.டாட்காம், கணையாழி போன்றவை கேட்டதன் பேரில் எழுதியுள்ள - அவரது அடையாளமற்ற, யாரும் எழுதக்கூடிய சாதாரண விமர்சனங்கள். மற்றது அவரே விரும்பி, அல்லது இலக்கிய நெறிகள் மீறப்படும் போது பொங்கி எழும் உணர்வின் சீற்றத்தால் காத்திரத்துடன் எழுதியுள்ள விமர்சனங்கள் மற்றும் முன்னுரைகள். பின்னதிலுல் இரு வகை. தனக்குப் பிடித்தவற்றை வஞ்சனையின்றி ஓகோ என்று பாராட்டுவதும், தனக்குப் பிடிக்காதவற்றை, தாட்சண்யமற்றுக் கடுமையாய்ச் சாடுவதுமான விமர்சனங்கள்.

தனக்குப் பிடித்த நூல்களை - நீல பத்மனாபனின் 'தலைமுறைகள்',
அமிர்தம் சூர்யாவின் கட்டுரைத் தொகுப்பு, கந்தர்வனின் 'கொம்பன்' சிறுகதைத் தொகுப்பு, சு.தமிழ்ச்செல்வியின் 'கீதாரி' நாவல், அஸ்வத்தின் 'நல்லூர் மனிதர்கள்' கதைத்தொகுப்பு, என்.சிவராமனின் 'சுவர்கள்' போன்றவற்றின் நயங்க¨ளையும் சிறப்புகளையும் ரசித்துச்
சொல்லி அவற்றைத் தேடிப் படிக்கவைக்கும் விமர்சனங்கள் அவரது ஆரோக்கியமான நேரிய சிந்தனைக்கு உதாரணங்களாகும்.

ஜெயகாந்தனோடு பலசமயங்களில் முரண்பட்டாலும், அவருக்கு 'ஞானபீட விருது கொடுக்கப்பட்ட போது, அவரது தகுதியை மனமாரப் பாராட்டியும், அவரது எழுத்தின் கம்பீரத்தை வியந்தும் எழுதிய இரு கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

தனக்குப் பிடிக்காதவர்களை இவர் சாடுவதும் ரசமானதுதான். அகிலனுக்கு 'ஞானபீட விருது' கிடைத்த தற்கும், தி.க.சிக்கு வல்லிக்கண்ணனின் சிபாரிசில் சாகித்ய அகாதமி விருது கிடைத்ததற்கும் அவரது சாடல்கள் அத்தகையவை. சு.சமுத்திரத்துக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது இவருக்கு அது சம்மதமில்லை எனினும் அகாதமியின் 'Indian Literature'ன் அப்போதைய ஆசிரியர் D.S.ராவின் வற்புறுத்தலின் பேரில் விருப்பமின்றி அப்பரிசு பற்றி, சமுத்திரத்தைப் பற்றிய பாராட்டா அல்லது கேலியா என்பது புரியாதபடி எழுதியது பற்றி முன்னுரையில் குறிப்பிடுகிறார். 'அவர் வேலை பாதிக்கப்படக்கூடாது என்று, ஒரு வார்த்தைகூட பாதகமாக இல்லாது மறைமுகமாகவே கிண்டலாகவே சமுத்திரத்தின் எழுத்தைப் பற்றியும் பரிசு பெற்ற புத்தகத்தைப் பற்றியும் எழுதினேன். 'சாமிநாதனே என்னைப் பாராட்டி விட்டார். மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை' என்று சமுத்திரம் சொல்லிக் கொண்டி ருந்தார்/எழுதி இருக்கிறார் என்று கேள்விப் பட்டேன். அந்தக் கட்டுரையும் இத்தொகுப்பில். எத்தகைய பாராட்டு அது என்பதை எல்லோரும் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.' என்று வெளிப்படையாகவே எழுதியுள்ளார். பாவம் சமுத்திரம்! சாமிநாதனைப் பிடிக்காதவர்களில் ஒருவராக இருந்தும், அவரது வஞ்சகப் புகழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் அகமகிழ்ந்தது, தனக்குப் பாராட்டுக் கிடைத்தால் பழையதை மறந்து போகும் பலரது பலவீனத்துக்கு உதாரணம்.

பாராட்டானாலும் மறுப்பானாலும் அவரது விமர்சனங்கள் சுவாரஸ்யமானவை.
யூமா வாசுகியின் 'ரத்த உறவுகள்' நாவலை விமர்சிக்கும் போது, 'யூமா வாசுகியின் ரத்த உறவு
படிக்க சுவாஸ்யமான புத்தகம் அல்ல. வல்லிக்கண்ணன் குறிப்பிடும் எத்தகைய, எந்த ரக
இன்பமும் அதில் கிடைப்பதற்கில்லை. படிப்பதற்கு மிகவும் மனதைச் சிரமப் படுத்தும் வாழ்க்கையைச் சொல்கிறது இந்த நாவல். நமக்குக் கொஞ்சம்கூட வாசிப்பு இன்பம் தராத
இதை நாம் ஏன் படிக்க வேண்டும், யூமா வாசுகி இதை ஏன் எழுதியிருக்க வேண்டும் என்றால்,
யூமா வாசுகி, 'நான் வாழ்ந்த வாழ்வு யாருடைய சுவாரஸ்யத்துக்காவும் இலக்கிய இன்பத்துக்காவும் மாற்றி எழுதக் கூடிய ஒன்றல்ல; இது என் அனுபவம்;இதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என்று சொல்லலாம். நம்மில் ஒருவர் வாழ்ந்த வாழ்வும் பெற்ற அனுபவமும் இப்படி என்றால், நம்முன் அது வைக்கப்பட்டுள்ளது என்றால் நாம் அதை ஒதுக்க முடியாது.' என்று எழுதுவது அவரது பொறுப்பு
மிக்க விமர்சனத்துக்கு ஒரு சான்று.

ஒரு வகையில் வெ.சாவின் விமர்சனங்களைப் படிப்பது அவற்றின் சுவாரஸ்யத்துக்காக மட்டுமின்றி, எத்தனையோ புதிய தகவல்கள், நாம் அறிந்துகொள்ள வேண்டிய இலக்கிய ஆளுமைகள், நமக்குப் பரிச்சயமில்லாத புதிய எழுத்தாளர்கள், இலக்கிய இதழ்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று அறிமுகங்கள் பெறுவதற்கும் உதவும்.

சில இலக்கிய ஆளுமைகளை இத்தொகுப்பில் அறிமுகப் படுத்துகிறார்.
'அதிசயப் பிறவி வ.ரா', 'செல்லப்பா நினைவில்'. 'என்னைக் கேட்டால்' - கணையாழியில் இத்தலைப்பில் பத்தி எழுதிய என்.எஸ்.ஜெகந்நாதன் ஆகிய கட்டுரைகள் சம்மந்தப்பட்ட அறிவுஜீவிகளின் நம் அறியாத பெருமைக¨ளைச் சொல்வன.

'அட்லாண்டிக்குக்கு அப்பால்' கட்டுரைகள் எழுதியுள்ள பி.கே.சிவகுமார், 'மேட்டுக்குடியினரின் தலித்துகளா'ன சவுண்டி பிராமணர்களது வாழ்க்கையின் அவலத்தைச் சித்தரிக்கும் 'கல்மண்டபம்' எனும் நாவலின் ஆசிரியர் வழக்கறிஞர் சுமதி,
'அடிவாழை' கதைத்தொகுப்பின் பெங்களூரு தமிழாசிரியர் சகதேவன் என்று குறிப்பிடத்தக்க
புதிய இளம் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி வாழ்த்தும் உள்ளமும் வெ.சாவுக்கு இருப்பதை அவர்களைப் பற்றிய கட்டுரைகளில் பார்க்க முடிகிறது.

ந.முத்துசாமி - சி.மணி நடத்திய 'நடை'. இவரது ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்த 'யாத்ரா', இவருக்குக் கென்றே இவர் பெயரில் தஞ்சை பிரகாஷ் நடத்திய 'வெ.ச.எ' ஆகிய இதழ்களின் தோற்றம் மற்றும் சாதனைகள் பற்றியும் வெ.சா இத்தொகுப்பில் விரிவாக எழுதியுள்ளார்.

'நேற்றையவற்றின் மதிப்புகள் இன்று நமக்குத் தரப்படும்போது, புனர் விசாசரணை செய்யப்பட வேண்டி இருக்கின்றன என்று தொடங்கும் 'ஒரு மறுவிசாரணை', 'தமிழ் நாவலில் சில புதிய முயற்சிகள்', 'எதிர்ப்பு இலக்கியம்', 'நாமும் எழுத்தாளர்களும்' ஆகிய இலக்கிய விசாரம் பேசும் - சிந்தனையைக் கிளறும் அரிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

சிட்டியும் சிவபாதசுந்தரமும் இணைந்து எழுதிய 'தமிழ் நாவல் நூறாண்டு
வளர்ச்சி' என்கிற நூல் பல முக்கியமான- அன்றுவரை தெரிந்திராத பல நீண்ட உரைநடை நூல்களை வெளிக் கொணர்ந்திருப்பதைச் சொல்லும் போது, அவற்றில் மிக முக்கியமானதும் சுவாரஸ்ய மானதுமான 'முத்துக்குட்டி ஐயரின் வசன சம்பிரதாயக் கதை' நூலை வெ.சா மிக அருமையாய் அறிமுகப்படுத்துகிறார். வாய்மொழியாகச் சொல்லப்பட்ட அக்கதையின்
வித்தியாசமான உரைநடைக்கு ஒரு சில மாதிரிகளைக் காட்டி, அது பிறந்த கதையையும்,
அதன் சிறப்புகளையும் ரசமாகச் சொல்லி அவசியம் படிக்க வேண்டிய நூல் என்று அவர் சிபாரிசு செய்திருக்கும் பாணியே அதைத் தேடிப் படிக்கத் தூண்டுகிறது. இன்னும் இது போன்ற அரிய நூல்களை அறிமுகம் செய்து தொகுப்பை கவனத்துக்குள்ளாக்குகிறார்.

விமர்சனங்கள் எப்படி எழுதப்பட வேண்டும் என்று காட்டும் கட்டுரைகளும் அவற்றை அவர் சொல்லியுள்ள வாசிப்பை சுவாரஸ்யமாக்கும் நடையும் கொண்ட இத்தொகுப்பை வெ.சாவின் ரசிகர்கள் மட்டுமின்றி, மாற்றுக் கருத்து உள்ளவர்களும் படிக்கலாம். 0


நூல் : யூமா வாசுகி முதல் சமுத்திரம் வரை.
ஆசிரியர் : வெங்கட் சாமிநாதன்.
வெளியீடு : எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

Sunday, November 22, 2009

'குறுந்தொகை'க்கு ஒரு புதிய உரை

மிகப் பழங்காலத்தில் எழுதப்பட்டும், தமிழரின் பெருமை பேசும் 'சங்க இலக்கியங் கள்' போன்ற நமது அரிய கருவூலங்களை இன்றும் நம்மால் படிக்க முடிவதால் தான் 'கன்னித்தமிழ்' என்று தமிழ்மொழி போற்றப்படுவதற்குக் காரணம் என்று ரசிகமணி டி.கே,சி ஒரு முறை குறிப்பபிட்டார். 400 ஆண்டுகளே ஆகி இருந்தாலும் ஆங்கில
இலக்கியத்தின் 'ஷேக்ஸ்பியரி'ன் நாடகங்கள், சமகால வாசிப்பில் பொருள் கொள்வதில் நெருடலாக இருப்பதையும், 2000 ஆண்டுகளுக்கு மேலாகியும் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் அன்று எழுதப்பட்ட அதே பொருளில், நயத்தில் ரசிக்க முடிவதையும் குறிப்பிட்டே அவர் இதைச் சொன்னார். ஆனால் சங்க இலக்கியத்தைப் பண்டிதராக இல்லாத சாமான்யரும் படித்து ரசிப்பதில் உள்ள சிரமம் 'அதன் காலத்தாலும் மொழியாலும் உள்ள தொலைவுதான்' என்பார் முனைவர் சற்குணம். எனவேதான் தமிழ்நாட்டுக்குள்ளேயே ஒரு வட்டார மொழியை இன்னொரு வட்டாரத்தில் புரிந்து கொள்வதில் சிரமமாய் உள்ளது என்று அவர் சொல்வதை நாம் இன்று அதிகமும் உணர்கிறோம். இதே பிரச்சினைதான் மிகப் பழைய இலக்கியங்களைப் படித்து ரசிப்பதிலும். எனவேதான் அகராதிகளும் உரைகளும் அறிஞர்களால் எழுதப்பட்டன.

சங்க இலக்கியத்தில் 'எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான, 'நல்ல குறுந்தொகை' என்று பாராட்டப் பட்டுள்ள 'குறுந்தொகை' நூலுக்கு, பேராசிரியர் தொடங்கி ரா.இராகவ அய்யங்கார், டாக்டர் உ.வே.சா போன்ற பெரும் புலவர்கள் உரை எழுதியுள்ளார்கள். இப்போது நம் தலைமுறையில், புதிய கண்ணோட்டத்துடனான வித்தியாசமான உரை ஒன்று 'கவிஞர் சக்தி'யால் எழுதப் பெற்று வெளியாகி உள்ளது.

தென்னார்க்காடு கவிஞர் பெருமன்றத்தின் தலைவராக உள்ள கவிஞர் சக்தி ஒரு அற்புதமான மரபுக் கவிஞர். புதுக்கவிதை புகுந்து 40 ஆண்டுகளுக்கு மேலாகியும், மரபுக்கவிதை செத்துவிட்டது என்று பலர் பிதற்றியும், இன்னும் அவர் மரபுக்கவிதைக் காதலராகவே நீடிக்கிறார். கவிமணி, பாரதியின் பாடல்களுக்குச் சொன்னதைப் போலவே அவரது கவிதைகள் 'துள்ளும் மறியைப்போலத் துள்ளும். வீரியமும் விறுவிறுப்பும் மிக்க காத்திரமான சொல்லாட்சியும், கற்பனை வளமும், நயமும் நகாசும் நிறைந்த வருணனைப் பாங்கும், 'சடசடவென கோடைமழையெனக் கொட்டும் கவித்திறமும் கருதி 'கவிக்காளமேகம்' என்று சக கவிஞர்களாலும் கவிதை ரசிகர்களாலும் போற்றப்படுபவர். கவிதைத் தொகுப்பு ஒன்றும். கதைத் தொகுப்பு ஒன்றும், குறுநாவல் தொகுப்பு ஒன்றும் சிறுவர் நூல் இரண்டும், உரைநூல் ஒன்றும் என இவரது இலக்கியப் பங்களிப்பு கணிசமானது. மகாகவி பாரதியின் தீவிர பக்தரான இவர் சங்க இலக்கியங்கள் மீதும் தராத காதலுடையவர். அதன் காரணமாகவே சங்க இலக்கியங்களை ரசிக்க புதிய அணுகுமுறைகளைத் தேடி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அம்முயற்சிகளில் ஒன்றுதான் இந்த 'குறுந்தொகை - புதிய உரை'.

அப்படியென்ன மற்றவர் இதுவரை செய்திடாத புதுமை இவரது உரையில் என்று கேட்கத் தோன்றும். அதற்கான பதிலை கவிஞர் சக்தியே கூறுகிறார்:

'கலித்தொகை, ஐங்குறு நூறு போன்று இந்நூல் திணைவழியில் பகுக்கப்படவில்லை. ஒரே கவிஞரின் பாடல்கள் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. ஒரு திணையைப் பற்றிய பாடல்கள் ஒரே இடத்தில் இருந்தால் கற்க எளிதாக இருக்கும். ஒரு கவிஞரின் பாடல்களை ஒரே இடத்தில் தொகுப்பது, அக்கவிஞரின் நடை அமைதியையும் கவிதைச்
சிறப்பையும் அறியப் பெரிதும் உதவும்.'

- இதனைக் கருத்தில் கொண்டே கவிஞர் சக்தி, திணை அடிப்படையிலும், பாடல் ஆசிரியரது பெயர் அடிப்படையிலும் அப்பாடல்களை மாற்றி அமைத்து இதனைப் பதிப்பித்துள்ளார். மேலும், 'சங்ககால மொழி தெரிந்த ஒருவர், எந்த உரையுமின்றி, நேரே கவிதைகளை உணர்ந்து திளைக்க முடியும். சங்ககாலத் தமிழுக்கும் இக்காலத் தமிழுக்கும் உள்ள வேறுபாடுதான் சங்ககாலக் கவிதைளைப் படிக்கத் தடையாய் அமைகிறது. கவிதையின் உயிர்ப்பை உணர வேண்டுமானால், கவிதையை நேரே படித்து உணர்ந்து, அதில் ஒன்ற வேண்டும். அதற்கு உரைகள் உதவி செய்ய வேண்டும். கவிதையின் உயிர்ப்பைக் கூடியவரை வெளிக்காட்டுகிற, எளிய நடையில் அமைந்த உரை எழுத வேண்டும் என்பது என் ஆசை. இலக்கிய ஆர்வம் உள்ள எவரும் அறியவேண்டும் என்ற ஆசையாலும், கவிதைகளின் நேரான பொருளை எளிய தமிழில் தரவேண்டும் என்ற எண்ணத்தினாலும், சுவைஞர்கள் நேரே கவிதைகளைப் படித்து, உணர்ந்து, சுவைத்து மகிழத்தக்க வகையில்' இந்த உரையை எழுதியிருப்பதாக ஆசிரியர் சொல்கிறார்.

இப்பதிப்பில், பாடல்கள் திணைவழி பிரிக்கப் பட்டுள்ளதுடன், ஒரே திணையுள்ளும்ஒரே கவிஞர் பாடிய பாடல்கள் ஒன்றாகத் தொகுக்கப் பட்டுள்ளன. ஐங்குறுநூறு, கலித்தொகை போலன்றி பொருள் தொடர்பு கருதி பாடல்களை குறிஞ்சி,நெய்தல், மருதம், பாலை, முல்லை என்னும் முறையில் தாம் வரிசைப்படுத்தி இருப்பதற்கான காரணங்களைக் குறிப்பிடுகையில், தலைவனும் தலைவியும் முதலில் சந்திப்பது முதல் பின்னர் இல்வாழ்வில் ஈடுபட்டு நிகழும் பிரச்சினைகள் வரிசையில் - களவின்பம் துய்ப்பது குறிஞ்சி, தலைவன்திருமண ஏற்பாட்டுக்காகப் பிரிதல் நெய்தல், பின்னர் இல்வாழ்கை, பரத்தையரது தொடர்பால் ஊடல் முதலியன மருதம், அரசுப் பணிக்கோ, பொருளீட்டலுக்கோ தலைவன் பிரிதல் பாலை, அதன்பின் அவனது திரும்புதலை எதிர்நோக்கித் தலைவி காத்திருப்பது முல்லை எனவரிசைப்படுத்தி இருப்பதாக
உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.

இவரது உரை சொல்லும் பாணி - முதலில் பொருள் விளங்காத கடினச் சொற்களுக் குப் பொருள் தருதல், பின்னர் பாடலின் நேர் பொருளைத் தருதல், தேவையான பாடல் களுக்கு சிறப்புரை தருதல், குறிப்புகள் எழுதுதல், பாடல் பொருளுக்கேற்ப சில இடங்களில் கூற்றுக்களை மாற்றி அமைத்தல் - எனும் வகையில் உள்ளது.

மற்ற உரை பொருந்தாது என்றோ தன் உரையே சரியானது என்றோ வாதிடாமல், ஆங்காங்கே பிறர் கூறும் உரைகளையும் ஏற்கும் போக்கில் அவற்றைச் சுட்டிச் செல்வது அவரது நேர்மையைக் காட்டுகிறது. தேவையான இடங்களில் நுட்பமாக தன் உரை வேறுபாட்டைச் சுட்டவும் செய்கிறார். சான்றாக ஒரு பாடலில், தலைவி தன் தலைவனோடு கொண்ட நட்பு. 'நிலத்தினும் பெரிதே, நீரினும் உயர்ந்தன்று - நீரினும் ஆரளவின்றே' என்கிறாள். 'நீரினும் ஆரளவின்றே' என்பதற்கு முந்தைய உரைகாரர்கள். 'கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழமுடையது' என்று உரை கூறியுள்ளனர். ஆனால் சக்தி 'நீரினும் அருமை உடையது' என்று கூறுவதுடன் சிறப்புரையில், 'நீர் உணவாவது, நீர் உயிர் தருவது, நீர் இனிது. எனவே நீரினும் அருமை உடையது என் நட்பு' என்றும் குறிப்பிடுகிறார்.

'மடல் ஊர்தல்' பற்றிய இவ்வுரையாசிரியரின் கருத்து சிந்திக்கத் தக்கது. 'மனதில் காமம் முற்றினால், குதிரை என எண்ணி மடலும் ஊர்வர். பூ என எண்ணி முகை அவிழும் எருக்கம் கண்ணியையும் சூடுவர். பிறர் தன்னைக் கண்டு கேலி செய்யும்படியும் நடந்தும் கொள்வர். பிறவும் செய்வர்.' என்று மனம் திரிந்த நிலையாகக் கூறுகிறார்.

நம் எல்லோருக்கும் பரிச்சயமான, புராணக்கதையாகவும் பேசப்படும் 'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?' என்னும் சர்ச்சையைக் கிளறும் 'கொங்குதேர் வாழ்க்கை...' என்ற பாடலுக்கு சிறப்புரை எழுதுகையில் பகுத்தறிவு சார்ந்த நோக்குடன், நாம் ஆமோதித்து ஏற்கும் வகையில் சொல்கிறார்: 'காதல் வயப்பட்டவன் மனத்தடுமாற்றத்தை இப்பாடல் உணர்த்துகிறது. வண்டு உண்மையைக் கூறுமோ என ஐயம் கொள்கிறான். 'வண்டே! நீ அறிந்த மலர்களிலே என் காதலியின் கூந்தலைவிட அதிக மணமுள்ள மலரும் உண்டோ?' எனக் கேட்கிறான். முதல் வினாவில் நம்பிக்கை இன்மை தொனிக்கிறது. இரண்டாவது வினாவில் தன் காதலியின் கூந்தலைக் காட்டிலும் மணமுள்ள மலர்கள் எதுவும் இல்லை என வண்டு கூறவேண்டும் என்ற ஆதங்கம் தொனிக்கிறது. இது காதலர்க்கே உரிய உளப்பாங்காகும்.'

- இப்படி திணை மற்றும் பாடல்கள் பகுப்பு முறையாலும், யதார்த்தமான சிந்தனையை உள்ளடக்கிய சிறப்புரையாலும் இவ்வுரையைப் படித்து முடித்ததும் இதனைப் 'புதிய உரை' என ஏற்பதில் நமக்குத் தயக்கமிராது என்றே கருதுகிறேன். 0

நூல்: குறுந்தொகை - புதிய உரை
ஆசிரியர்: கவிஞர் சக்தி.
வெளியீடு: மகாகவி பதிப்பகம், பாரதி வீடு, கெடிலம், திருநாவலூர் 607 204.

Sunday, November 08, 2009

'மூன்று விரல்' மோகம்! விரல்' - இரா.முருகனின் நாவல்பற்றி.

நூல் வாசிப்பு பற்றி கி.ரா ஒருதடவை எழுதியதாக ஞாபகம். 'புஸ்தத்துக்குள் நுழையாலாம்னுதான் பாக்ககுறேன். ஆனா உள்ள நொழைய விட மாட்டேங்குறானே! காலைப் பிடிச்சு இழுக்குறானே!' என்பது போல வாசிப்புக்கு இடம் தராத எழுத்து பற்றிச் சொன்னதாக நினைவு. இரா.முருகனின் எழுத்தில் அந்தச் சங்கடமே இல்லை. உள்ளே நுழைய வேண்டியதுதான் - முதலை தண்ணீருக்குள் இழுத்துக்கொண்டு அடிஆழத்துக்குக் கொண்டுபோகிறமாதிரி அவரது எழுத்து நம்மை மெய்மறக்கச் செய்து தன்னுள் ஆழ்த்தி விடும்! அதற்கு சரியான எடுத்துக்காட்டு 'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டுள்ள அவரது 'மூன்று விரல்' என்கிற நாவல். 'கையில் எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்கமுடியாது' என்பது உயர்வு நவிற்சியல்ல - இந்த நாவலைப் பற்றியவரை உண்மை!

'சிலிகன் வேலி' என்கிற கணினி உலகத்து உத்தியோகம் பற்றி நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கும் மோகத்தைச் சிதைக்க வைப்பதாய் - அசலான அந்த உலகத்தின் பிரச்சினைகள், மாயைகள், வலிகள் பற்றிய யதார்த்தத்தை, அத்துறையில் வல்லுனரான, அதில் பணியாற்றிய வெளிநாட்டு அனுபவங்களின் அடிப்படையில், இரா.முருகன் அற்புதமாக இந்நாவலைப் படைத்துள்ளார். சுஜாதாவை நினைவூட்டுகிற - அவரை விடவும் இன்னும் அதிகமான புருவ உயர்த்தலுக்கு வாசகனை ஆளாக்குகிற, வரிக்கு வரி மென்னகை பூக்க வைக்கிற, திகட்ட வைக்கிற நடை!

'சிலிகன் வேலி' மோகமும் அதன் விபரீத யதார்த்தமும் பற்றி தான் எழுத நேர்ந்ததுபற்றி இரா.முருகனே தனது முன்னுரையில் இப்படிக் கூறுகிறார்: 'மற்ற எந்தத் தொழிலில் இருப்பவர்களையும்விட, முழுக்க முழுக்கக் கற்பித்துக் கொண்ட பிம்பங்களின் அடிப்படையில் தமிழ்ப் படைப்புகளில் சித்தரிக்கப்படுகிறவர்கள் கம்ப்யூட்டர் சா·ப்ட்வேர் துறையில் இருப்பவர்கள்தாம். கணினி மென்பொருள் தொழில்நுட்பப் பணியாளர்கள் பெரும்
பாலும் இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும். இந்த வயதுவரம்பு, கம்ப்யூட்டர் என்ற பழைய மந்திரச் சொல்லின் பரவலான எச்சச்சொச்ச கவன ஈர்ப்பு. அங்கோலாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பறந்து இறங்கிக் கூடு கட்டி இந்த மென்பொருள் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் - இந்தியச் சராசரி வருமானத்தைவிடப் பலமடங்கு கூடுதலானது என்று பலராலும் கருதப்படும் - வருமானங் களைப்பற்றிப் பலுனாக ஊதப்பட்ட வண்ணவண்ண இமேஜ்கள் தமிழ்க் கதைகளில் ஆரம்பித்தபோது,இதெல்லாம் சீக்கிரமே தரைக்கு வந்துவிடும் என்று நினைத்து நான் என்பாட்டுக்கு கம்ப்யூட்டர் தொழிலிலும் அதோடு சம்பந்தப்படாத என் படைப்புலகத்திலும் மூழ்கி இருந்தேன். ஆனால், தமிழில் ஒரு படைப்புக்கூட
இதுவரை மென்பொருளாளர்களைப்பற்றிய இப்படிப்பட்ட தட்டையான படிமத்தை உடைத்து அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களை நகமும் சதையுமாகச் சித்தரித்து அவர்களின் தொழில் சார்ந்த சிக்கல்களையோ,தினமும் சந்திக்க வேண்டி இருக்கும் சவால்களைப் பற்றியோ பேசவே இல்லை என்று எனக்குப் பட்டபோது, கம்ப்யூட்டர் துறையில் இருக்கும் தமிழ்ப் படைப்பாளன் என்ற முறையில் இவர்க¨ளைப் பற்றிய ஒரு முறையான பதிவை, என் படைப்பாக்கங்களின் ஒரு பகுதியாக முன் வைக்க உத்தேசித்தேன்'.

இக்கதையில் வரும் சுதர்சன் மத்தியதர வர்க்கத்தின் பிரதிநிதி; சாண் ஏறினால் முழம் சறுக்குகிற வகையைச் சேர்ந்தவன். இங்கிலாந்து, தாய்லாந்து, அமெரிக்கா என விமானத்தில் பறந்து சென்று மென்பொருள் தயாரித்துக் கொடுக்கிறவன். தற்செயலாக ஒரு விமானப்பயணத்தின்போது பக்கத்து இருக்கையில் இருந்த அவ்தார்சிங் என்கிற சா·ப்வேர் கம்பனி முதலாளியின் பார்வையில் பட்டு அவரதுவேலைக்காக தாய்லாந்துக்கு பிராஜெக்ட் மானேஜராக தன்னுடன் ஒரு கோஷ்டி சா·ப்ட்வேர் ஆட்களுடன் போகிறான். அங்கே அவனுக்கேற்படும் வெற்றிகளும், வித்தியாசமான பிரச்சினைகளும், இடையே அமெரிக்கப் பெண்
ஒருத்தியிடம் ஏற்படும் காதலும், ஊரில் இருக்கும் ஆசாரமான அப்பா அம்மாவின் பாசமும், ஊரில் இவனை விரும்பும் பெண்ணின் நினைவும் என வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறான பிரச்சினைகளில் சிக்கித் தடுமாறுகிறான். விதியின் விளையாட்டுக்கு மென்பொருள் விற்பன்னனும் விதிவிலக்கு அல்ல என்று காட்டுவதுபோல எதிர்பாராதவிதமாய் சிகரத்தை எட்டியவன் தலைகுப்புற விழுகிறான். காதலியும், முதலாளியும் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தகர்ப்பில் ஈடுபட்ட விமானத்தில் சிக்கி இறக்கிறார்கள். ஊரில் இவனுக்காகக் காத்திருக்கும் பெண்ணையும் முன்பே உதறியாயிற்று. இவனது வாழ்க்கையே புரண்டு போகிறது. பிராஜெக்ட் மானேஜராக இருந்தவன் வெறும் புரொகிராமராக, தான் நிராகரித்த உள்ளூர்ப் பெண்ணின் தயவில் பிழைக்கிற அவலத்துக்கு ஆளாகிறான். சரசரவென்று உச்சாணிக்கு ஏறிக்கொண்டிருந்தவன், சடசடவென மரம் முறிந்து விழுகிறமாதிரி சரிய, வெகுசுவாரஸ்யமாய் ஓடிக் கொண்டிருந்த கதை மகா சோகத்தில் முடிவது நெஞ்சில் வலியை ஏற்படுத்துகிறது.

'திடீரென்று இயக்கம் மறந்து உறைவதும், திரும்பச் செயல்படத் தொடங்குவதும் கம்ப்யூட்டர் குணாதிசயம் மட்டுமில்லை, அதோடு சம்மந்தப்பட்டவர்களின் வாழ்க்கை நியதியும் கூட' என்பதை இந்நாவலின் மூலம் முருகன் உணர்த்துகிறார். கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள் நம்மில் பெரும்பாலோர் நினக்கிறபடி தலையில் கொம்பு முளைத்த, சட்டைபையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுகள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும், நுனி நாக்கு ஆங்கிலமுமாக சூயிங்கம் மென்றபபடி தரைக்கு மேலே சரியாகப் பத்து செண்டிமீட்டர் உயரத்தில் பறக்கிற' அசாதாரண மனிதர்கள் இல்லை. அவர்கள் சாதாரண மனிதர்கள் தாம்; மென்பொருள் பிழைப்பு என்பது நாய் படாத பாடு என்று நமக்குத் தெரியப்படுத்துகிறது நாவல்.

நாவலின் அநாயசமான ஓட்டம் நம்மையும் உடனிழுத்துக் கொண்டு ஓடுகிறது. 'இரா.முருகனின் நேர்த்தியான கதை சொல்லலில் நாமும் நிரந்தரமில்லாத மென்பொருள் உலகத்தில் குதிக்கிறோம். காசுக்காக உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பறக்கிறோம்'. 'நேரம், காலம், சுற்றுப்புறம், கலாச்சாரம், சொந்த வாழ்க்கை
என்று எதையும் சட்டை செய்யக்கூட நேரமில்லை. குறிப்பிட்ட டெட்லைனுக்குள் புராஜெக்ட் முடியவேண்டும்.மென்பொருள் சரியாக வேலை செய்ய வேண்டும். கிளையண்ட் பணம் தர வேண்டும். அது ஒன்றுதான் முதலாளிக்குக் குறி. அவனது ஏவல் நாயான நமக்கும் அதுதான் குறியாகிறது,' என்கிற சா·ப்ட்வேர்காரர்களின் அவசரமும் அவஸ்தையும் நம்மையும் பற்றிக்கொள்கிறது.

வேலைக்கிடையே என்னகாரணத்தாலோ ஸ்தம்பித்துப் போகிற கணினியை ரீபூட் செய்ய 'கன்ட்ரோல்-ஆல்ட்-டெலிட்' என்கிற 'மூன்று விரல் இயக்கத்'தை மேற்கொள்வது போல, வாழ்க்கையின் பல கணங்களிலும் எதிர்கொள்ள கடினமான பிரச்சினையிலிருந்து விலகி மீண்டும் புதுமையாக உயிர்த்துவிட முடியாதா என்கிற ஏக்கத்தின் குறியீடாக நாவலின் தலைப்பு அமைந்திருக்கிறது.

'அரசூர் வம்சம்' நாவலில் வந்த மாதிரி இந்நாவலிலும் பாத்திரங்கள் காதருகில் வந்து கற்பனையில் பேசுகின்றன. முன்னதில் பின்நவீனத்துவ உக்தியாகக் கையாளப்பட்டது இதில் நனவோடை உக்தியாகக் கையாளப்பட்டிருப்பது ரசிக்கத் தக்கதாக உள்ளது. சுதர்சன் போனில் அம்மாவிடம் பேசும்போதும், அவனது காதல், காமம் நினைவுகளினூடேயும் அவனது காதலி சந்தியா குறுக்கிட்டு காதருகில் வந்து எச்சரிப்பது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது போன்றவை மென்னகை பூக்க வைக்கின்றன.

அவரது வித்தியாசமான சுவாரஸ்யம் கூட்டும் நடைக்கு ஒரூ உதாரணம்: வாசல் கதவுக்குக் கீழே பத்திரிகை உள்ளே வரலாமாப்பா இல்லே இன்னும் கொஞ்சம் தூங்கப் போறியா என்று எட்டிப் பார்த்து விசாரித்தது.' அவர் கையாளும் உவமைகளும் ரசமானவை: 'பெரிய கான்கிரீட் வனமாகக் கோலாலம்பூர் விமான நிலையம் ஆள் அரவமில்லாமல் அச்சமூட்டிக் கொண்டிருந்தது.'

'ஒரு விபத்தின் பயங்கரத்தை அசலாக உணர வேண்டுமென்றால் விபத்து நடந்த வண்டிக்குள் நீங்கள் இருந்தாக வேண்டும்' என்று காண்டேகர் சொன்னது போல - 'வரிக்கு வரி நகைச்சுவையும், மனதைச் சுண்டுகிற உவமைகளுமாய் நிறைந்திருக்கிற இந்நாவலைப் படிப்பதே தனி சுகம்தான்' என்று நான் என்னதான் திருப்பித் திருப்பிச் சொன்னாலும். அதை நீங்கள் திகட்டத் திகட்ட அனுபவிக்க நாவலை முழுதுமாய்ப் படிப்பதுதான் ஒரே வழி!

'எல்லாப் படைப்புகளும் எழுதியவனை மீறி ஏதோ சொல்ல முற்படுகின்றன. முற்பட வேண்டும். அவற்றோடு ஊடாடும் வாசகர்கள், சொல்லப்பட்ட கதையையும் கடந்து தங்கள் எண்ண ஓட்டங்களை விரிக்க வழி செய்வதோடு எழுதியவனின் கடமை முடிந்துவிடுகிறது' என்கிறார் முருகன் தன் முன்னுரையில். உண்மைதான். கதை முடிந்த பின்னும் நம் எண்ண ஓட்டங்கள் விரிந்து பரவுவதைத் தவிர்க்க
முடியவில்லைதான்!. 0


நூல்: மூன்று விரல்.
ஆசிரியர்: இரா.முருகன்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், சென்னை.

Sunday, October 11, 2009

ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகள் - 'விசும்பு'

தமிழில் அறிவியல் புனைகதைகளை முதலில் தொடங்கி வைத்தவர் திரு.சுஜாதாஅவர்கள். ஆரம்பத்தில் அவர் எழுதியவற்றில் அதிகமும், அறிவியல் கூறுகள் நிறைந்த விண்வெளிப் பயணம், மற்றும் திரில்லர் கதைகள். அதை ஒரு விளையாட்டாகவே செய்திருக்கிறார். ஆனால் பின்னாட்களில் சாதனைக் கதைகளும் படைத்தார். ஆனாலும் நமது அறிவியல் கதைகள் - நம்பவியலாத மேலை நாட்டு அறிவியல் கற்பனைக் கதைகள் போன்று இல்லாமல் - நம் மண்சார்ந்த யதார்த்தக் கற்பனைகளாக இருக்க வேண்டும் என்று எண்ணும் திரு.ஜெயமோகன் தாமே அப்படிப்பட்ட சில அறிவியல் கதைகளை - சமூக விசாரத்தை, தத்துவச் சிந்தனைகளை உள்ளடக்கிய கதைகளை - எழுதினார். இவற்றை எழுதியதின் நோக்கம் வாசிப்பவர்கள் தமிழ்ச்சூழல் சார்ந்து, தமிழ்நாட்டு அறிவியல்மரபு சார்ந்து உணர வேண்டும் என்பதாக ஜெயமொகன் தன் முன்னுரையில் கூறுகிறார். விரிந்த தளத்தில் இலக்கியப் படைப்புகளாக அவற்றை ஆக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அப்படி எழுதப் பெற்ற கதைகளில் பத்துக் கதைகளைத் தொகுத்து 'எனி இந்தியன் பதிப்பகத்'தார் 'விசும்பு' என்ற தலைப்பில் நூலாக்கி இருக்கிறார்கள்.

முதலில் பராட்ட வேண்டிய விஷயம் - வழக்கமாக அவரது கதைகள் 'சிறு' கதைகளாக இல்லாமல் அவசரயுகத்தின் வாசிப்பில் அயர்வை ஏற்படுத்தும் நெடும் கதைகளாக இருக்கிற அவரது மரபுக்கு மாறாக -இத்தொகுப்பில் உள்ள கதைகள் வாசிப்பை விரும்பி ஏற்கிற சிறுகதைகளாகவே இருப்பதாகும். எல்லாக் கதைகளுமே நமக்குப் பரிச்சயமான, நம் மண்சார்ந்ததாக, நமக்கு அன்னியமாக இல்லாத நெருக்கத்தைக்
கொண்டதாக இருப்பது சிறப்பம்சம் எனலாம்.

இதில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களில், வித்தியாசமான விஷயங்கள் பற்றி, நாம் முன்பே செவிவழியாகவோ, படித்தோ அறிந்த - பறவைகள் வலசை போதல், ரசவாதம், சித்த மருத்துவம், தியான மரபுகள், இரட்டை மனநிலை மாந்தர்கள் போன்றவற்றை மையக்கருத்துகளாய்க் கொண்டவை. 'முற்றிலும் இந்திய - தமிழ்ச்சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளன'.

'ஐந்தாவது மருந்து என்கிற முதல் கதை 'எயிட்ஸ்' நோய்க்கு. மூதாதையரின் ஓலைச் சுவடிகளிலிருந்து சித்த வைத்தியத்தை ஒட்டி ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்கிற நண்பனைக் சந்திக்கச் செல்லும் ஒரு டாக்டரின் கூற்றாகச் சொல்லப்படுவது. சித்த வைத்தியச் சுவடிகளில் எயிட்ஸ் மாதிரி ஒரு நோயின் இலக்கணம் இருப்பதாகவும், ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு பாண்டிய ராஜகுடும்பத்தை இந்நோய் தாக்கியதாகவும், அப்போது இருந்த ஒரு போகர் ஒரு மருந்தை - கருங்குரங்கின் ரத்தம், சிறுநீர் இரண்டையும் கலந்து செய்து நோயை விரட்டியதாகவும் நண்பன் சொல்கிறான். இப்போதுள்ள மூன்று வகை மருந்துகளான - பென்சிலின் மாதிரியான தாவர மருந்துகளான அஜீவம், வாக்சின்கள் போன்ற ஜீவம், மற்றவையான ரசாயனங்கள் ஆகிய மூன்றுமே எயிட்ஸைக் குணப்படுத்தாது என்பதால், நான்காவதாக ஒரு மருந்தைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்கிறான். அது கதிர்வீச்சு சம்பந்தமானது. ஏற்கனவே சித்த வைத்தியத்தில் கதிரியக்கம் பற்றி இருப்பதாகவும், அதில் உள்ள ரசக்கட்டு என்கிற உக்தியைப் பயன்படுத்தி, பழைய அஜீவ, ஜீவ, ரசாயன மருந்துகளில் கதிர்வீச்சை செலுத்திபுதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாகவும் சொல்கிறான். அதன் மூலம் தான் குணப்படுத்திய இருவரைக் காட்டுகிறான். அதைப் பார்த்த மருத்துவரான நண்பர் அவனைக் கட்டித் தழுவிப் பாராட்டுகிறார். ஆனால் அவன் அடுத்து சொல்வது அவரை அச்சப் படுத்துகிறது.

அவன் கண்டுபிடித்துள்ள இந்த நாலாவது மருந்துக்கு மறு பக்கம உள்ளது. "இந்த வைரஸ் முதலில் தாக்கிய பிறகு, பல ஆயிரம் வருஷம் தாவர மருந்துகளோட கட்டுக்குள் இருந்திருக்கு. ஆனா ஜீவ மருந்து கண்டு பிடிச்ச பிறகு ஆயிரம் வருஷத்திலே மறுபடியும் தாக்கி இருக்கு. உலோகரசாயன மருந்துகளை ஐந்நூறு வருஷங்களிலே தாண்டி வந்திருக்கு. அதாவது அதன் பரிணாம வேகம் அதிகமாகிக் கிட்டே இருக்கு. இப்ப மனுஷங்க மருந்துகளை உபயோகிக்கிறது ரொம்ப அதிகம். மனுஷங்க உலகம் முழுக்க சுத்திகிட்டே இருக்காங்க.அப்ப அது சீக்கிரமா அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியை அடைஞ்சுடும். அதாவது அடுத்த தாக்குதல் நூறு வருஷத்துக்குள் இருக்கலாம். அப்ப கதிரியக்க மருந்தையும் இந்த வைரஸ் தாண்டிடும். அஞ்சாவது மருந்தைமனிதன் கண்டுபிடிப்பான்னு என்ன உத்திரவாதம் இருக்கு? இந்த வைரஸ் அப்ப இந்த உலகத்தையே அழிச்சுடும்" என்று பயமுறுத்துகிறான். நண்பர் அதிர்ந்து போகிறார். அந்த மருந்தை வெளியிடச் சொன்ன நண்பரிடம், "இல்லை. நான் நூறு வருஷம் கழிச்சு மனுஷகுலமே அழியக் காரணமா இருக்க விரும்பலை. இந்த விஷயத்துக்கு ஒரு தெளிவான விடை கிடைக்காமல் நான் இந்த மருந்தை வெளியிட மாட்டேன்" என்று நாலாவது மருந்தைக் கண்டு பிடித்தவன் சொல்வதோடு கதை முடிகிறது.

அடுத்த கதையான 'இங்கே, இங்கேயே....', வேற்றுக் கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் பறக்கும் தட்டுகள் போன்ற கதைகளை நம்பாத ஒரு பகுத்தறிவுவாதியான விண்வெளி ஆய்வாளருக்கு ஏற்படும் அனுபவம் பற்றியது. விண்வெளி ஆய்வில் 40 ஆண்டு அனுபவம் உள்ள டாக்டர் பத்மநாபன் என்பவர் மலையடிவாரத்தில் உள்ள தன் நண்பரின் பங்களாவுக்கு ஓய்வெடுக்க வருகிறார். நண்பர் மலையுச்சியில் விண்வெளி ஊர்தி வந்திறங்கிய சக்கரத் தடங்கள் உள்ளதாகவும் அதை அவர் பார்த்தால் வேற்றுக் கிரக ஊர்திகள் பூமிக்கு வருவது பற்றிய அவரது அவநம்பிக்கை மாறும் என்று அதைப் பார்க்க அழைக்கிறார். டாக்டர் விருப்பமில்லாமலே மலையுச்சிக்கு அவருடன் செல்கிறார். நண்பர் காட்டிய சக்கரத் தடங்கள், சீராக வெட்டிய எட்டடி அகலம் மூன்றடி ஆழம் உள்ள ஒரு ஒடை போன்று தெரிகிறது. டாக்டர் அது இயற்கையாய் ஏற்பட்டதாக இருக்கலாம் என்றும், பாறையில் மூன்றடி ஆழத்துக்குத் தடம் பதிக்க வேண்டுமானால் அந்த ஊர்தி மிகமிக எடை கொண்டதாக கனமாக இருக்க வேண்டும் என்றும் அப்படிப்பட்ட கனமான ஊர்திக்கான தனிமம் ஏதும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மறுக்கிறார். 'மக்களுக்குப் பூமி மீது நம்பிக்கை போய்விட்டது. வானத்திலிருந்து யாரோ வர வேண்டியிருக்கிறது. கடவுளை விஞ்ஞானிகள் ஒழித்துக் கட்டி விட்டார்கள். ஆகவே விஞ்ஞானிகளை வைத்தே புது மூட நம்பிக்கைகளைக் கட்டிக் கொள்கிறார்கள். ஆகவே புதிய தேவதைகள், புதிய சைத்தான்கள்....."
என்கிறார்.

தலைப்புக் கதையான 'விசும்பு' பறவைகள் வலசை போகும் ரகஸ்யம் பற்றியது. நஞ்சுண்டராவ் என்னும் பறவையியல் ஆய்வாளர் பறவைகள் வலசை போகும் ரகஸ்யம் பற்றிய புதிய கண்டுபிடிப்பு ஒன்றைச் செய்திருக்கிறார். பறவைகளை நாம் விரும்பியபடி கட்டுப்படுத்தலாம், விரும்பிய இடத்துக்கு அனுப்பலாம் என்பது அவரது கண்டு பிடிப்பு. அவருடைய அப்பாவுக்கு பறவைகள் வழிபடும் தெய்வங்கள் மட்டுமே. 'பறவைகள் வலசை போவதை மனிதன் அறிந்துகொள்வது சாத்யமில்லை. வானம் என்பது விசும்பு. புவனங்களை எல்லாம் ஆள்வது பறவை. அது விசும்பின் துளி. அதைக்கட்டுப் படுத்த முடியாது' என்கிறார். புற ஊதாக் கதிர்களை, காதுக்குப் பின் உள்ள மூளைப் பகுதியால் வாங்கும் சக்தியுள்ள வலசைப் பறவைகளை நாம் விரும்பிய இடத்துக்கு அனுப்ப முடியும் என்றுசோதனை செய்து அப்பாவைச் சீண்டுகிறார். அப்பாவுக்கும் மகனுக்குமான இந்தக் கருத்து மோதலின் முடிவில் மகனின் முற்சி தோல்வியில் முடிகிறது.

'பூர்ணம்' என்கிற கதை அவசரநிலைப் பிரகடனக்காலப் பதிவு. பத்திரிகைக் கட்டுப்பாடு காரணமாய் பத்திரிககைகள் ஆன்மீகத்துக்குத் திரும்பிய வேளை. ஒரு பத்திரிகை நிருபர் ஒரு மடத்தின் மௌனசாமியைப் பேட்டி காணக் காத்திருக்கிறார். அவரது எதிர் அறையில் தங்கியுள்ள நரம்பியல் பேராசிரியர் ஒருவரும் சுவாமியைப் பார்க்க விரும்புகிறார். அவர் 30 ஆண்டுகளாய் மூளையின் திறனை அதிகரிக்கும் மருந்துகள் பற்றி ஆய்வு செய்பவர். அவர் கண்டு பிடித்த மருந்தை தன் வீட்டுக் காவலாளிக்குக் கொடுத்துச் சோதிக்கிறார். ஒரு
காட்டில் அவனை வைத்திருக்க அவன் தப்பி விடுகிறான். அவன்தான் இந்த மௌனச்சாமி என்று அவருக்குச் சந்தேகம். மறுநாள் இருவரும் அனுமதி கிடைத்து சாமியைச் சந்திக்கப் போகிறார்கள். ஒரு பெரிய தோட்டத்தில் ஒரு பாறை மீது ரமண மகரிஷியைப் போல ஒரு கோவணம் மட்டும் அணிந்து, மூளை மந்தித்தவர் போல மூளை இயங்காதவராய்க் காட்சியளிக்கிறார் சாமியார். பேராசிரியரின் சோதனையின் காரணமாகவும் அப்படி ஆகி இருக்கலாம். நிருபர் அவரைப் பார்த்ததும் நெகிழ்ச்சியுற்றவராய் கண்ணீர் பெருக அவரிடம் எதுவும் கேட்கத் தோன்றாமல் வெளியே வந்துவிடுகிறார். பேராசிரியர் அது பூரணம் என்று உணர்ந்து தன் பிரச்சினைக்கு விடை கிடைத்து விட்டது என்கிறார். அவரது முதல் சோதனைக்கு ஆளான காவலாளி தப்பிய பின் அவரது தம்பியையும் பரிசோதனைக்கு ஆளாக்கி இருக்கிறார். ஆனால் அவனுக்கு மூளையின் மையத்தை மட்டும் - அதாவது மூளையின் முகப்பு தொகுத்துக் கொள்ளும் பகுதி - அதாவது அதிகாரம், தன் முனைப்பு, அதன் காரணமாய் குரூரம் -
உக்கிரப் படுத்தியுள்ளார்.

ரசவாதம் பற்றிய கதை 'பித்தம்'. செம்பைத் தங்கமாக்கும் ஆசையில் நல்ல குத்தாலலிங்கம் பிள்ளை இருபது வருஷமாய் அந்த முயற்சியில் ஈடுபட்ட கோயில் பண்டாரத்துக்கு பண உதவி செய்து ஏமாந்து போகிறார். கடைசி முயற்சி என்று சொல்லி மீண்டும் பண உதவி செய்ய பண்டாரம் கேட்க, தர மறுக்கிறார். பகுத்தறிவுவாதியான பிள்ளையின் மகன் கோலப்பன் ரசவாத பித்தம் கொண்ட தன் அப்பாவையும் பண்டாரத்தையும், ரசவாதம் பற்றிய சித்தர் பாடலுக்கு வித்தியாசமான விளக்கம் தந்து நக்கல் செய்கிறான். கடைசியில் பிள்ளை பண்டாரத் துக்கு பணம் கொடுக்கிறார். மறுநாள் காலைவரை பொறுத்திருந்து பார்க்கச் சொல்லி விட்டுப் போய், பண்டாரம் ரசவாத முயற்சியில் தீவிரமாக முனைகிறான். ஆனால் மறுநாள் காலை கோயிலருகில் ஒரு மரத்தில் அவன் தூக்கில் தொங்குவதைப் பார்க்கிறார்கள். அங்கெ போகிற கோலப்பன், பண்டாரத்தின் காலடியில் உடைந்து கிடக்கும் சட்டியில் காய்ந்து போன ரசாயனக் கலவையில் பட்டுக் கிடக்கிற பண்டாரத்தின் ஒரு செருப்பின் ஆணியின் தலை மட்டும் தங்கமாய் மின்னுவதைக் காண்கிறான் என்று முடிகிறது கதை.

இரட்டை மன நிலை மனிதர்கள் பற்றிய கதை 'உற்று நோக்கும் பறவை'. ஸ்டீவென்சனின் Dr.Jekiland Mr.Hide' என்னும் சிலிர்ப்பூட்டும் -ஒரே மனிதனுக்குள்ளிருக் கும் 'சாந்தமும் குரூரமும் கொண்ட இரட்டை மனநிலை போன்ற - கதை. பழைய திருவிதாங்கூர் பிரிட்டிஷ் ஆவணங்களில் மட்டுமே உள்ள 'துவாத்மர்கள்' - மனப்பிளவை திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ளும் இரட்டை மனநிலை கொண்ட மனப்பிளவு சமூகம் பற்றி -
திகிலூட்டும் தகவல்கள் கொண்டசுவாரஸ்யமான கதை.

அடுத்த கதையான 'நம்பிக்கையாளன்' உலகில் அணு ஆயுதம் பெருகினால் ஏற்படும் பயங்கரம் பற்றி எச்சரிக்கும் கதை.அணு ஆயுதம் பல்கிப் பெருகி, இறை நம்பிக்கையாளர்களுக்கும், இறைமறுப்பாளர்களுக்கும் போர் நடக்கிறது. இறைமறுப்பாளர்கள் யாருமே மிஞ்சவில்லை. இறைநம்பிக்கையாளர்களும் கதிரியக்கம் பற்றிய ரேடியோ எச்சரித்தும் மறைந்திருந்த பாதாள அறையை விட்டு வெளியே வந்து கதிரியக்கத்தை உண்டு
மடிகிறார்கள். கதிரியக்கத்தின் பின் விளைவுகளால் உலகம் அழிவது பற்றிய பீதியை ஊட்டும் கற்பனை.

1220-1203ல் நைல் நதி வறண்டு போய் ஏற்பட்ட கொடுமையான பஞ்சம் பற்றிய கதை 'நாக்கு'. கடும் பஞ்சத்தால் மக்கள் கண்ணில் பட்ட பச்சைகள் எல்லாம் தின்றார்கள். கொலையும் கொள்ளையும் செய்தார்கள். நாய், நரிகளை எல்லாம் பிடித்துத் தின்றார்கள். புழுப்பூச்சிகளைத் தின்றார்கள். பிறகு எதுவுமே எஞ்சாமலாயிற்று. எல்லோரும் பட்டினியானார்கள். அப்போதுதான் நரமாமிசம் தின்னும் பழக்கம் உண்டாயிற்று. முதலில், செத்த மனிதர்களைச் சுட்டு உண்டார்கள். அடுத்த நிலையாக மனித வேட்டையாடினார்கள். பின்புகுழந்தைகள், முதியவர்களைத் தின்பதில் ருசி கண்டதும் விதம் விதமாய்ச் சமைத்து உண்ண ஆரம்பித்தார்கள். தங்கள் தேவைக்கு மிஞ்சியதை விற்றார்கள். அது ஒரு வணிகமாயிற்று. கடைகளில் வேக வைத்த மாமிசம் விற்கப் பட்டது. பிறகு வேறு ஊர்களிலிருந்து உணவு வந்ததும் பஞ்சம் அடங்க ஆரம்பித்தது. ஆனால் ஏராளமான மக்கள் இதில் ருசியும் தொழிலில் சுகமும் கண்டு கொண்டார்கள். அவர்களை, வேட்டையாடுவதிலிருந்து தடுக்க முடியவில்லை. எகிப்திய அரசாங்கம் கடையில் அவர்களை ஒடுக்கியதும் மெல்ல அப்பழக்கம் அழிந்தது என்று கதை போகிறது.

கடைசி இரண்டு கதைகளும் எதிர்கால இலக்கிய உலகின் போக்குகள் பற்றிய அங்கத பாணியில் அமைந்த நகைச்சுவையான கற்பனைகள். 'தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஒரு ஆய்வு' - ஜெயமோகனின் இயல்பிலான நீண்ட கதை. கருத்தரங்கு ஒன்றில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை வடிவில் எழுதப்பட்டுளது. இதில் ஜெயமோகன், இலக்கிய வடிவங்களின் காலமாற்றத்திற்கேற்ப மாற்றங்களையும், மற்றும் கதைப் பாடல்களின் பரிணாம வளர்ச்சி, நாவல்களின் மின் நவீனத்துவ வளர்ச்சி, மின்கதைகளின் காரணிகள், நுண்கதை பற்றியெல்லாம் எதிர்காலக் கண்ணோட்டத்தில் பாதி யதார்த்தமாகவும் பாதி கேலியாகவும் சித்தரித்திருக்கிறார். கி.பி.2800 வரை கற்பனை நீள்கிறது. அக்கால கட்டத்தில் இலக்கிய வடிவங்களும், படைப்பாளிகளும், வாசகர்களும் மீண்டெழுந்து உருவாகும் நிலை பற்றிக் கற்பனை செய்யப் பட்டுள்ளது.

'குரல்' என்ற கடைசிக் கதை ஆய்வாளர்கள் மத்தியில் வாசிக்கப்பட்ட 'சமூக மானுடவியல் கூறுகள் அரசியலில் ஆற்றும் பங்கு' என்னும் தலைப்பிலான ஒரு ஆய்வேட்டின் சுருக்கமாக உள்ளது. அதனை ஒரு கதை போலச் சொல்லி இருக்கிறார்.

அறிவியல் கதைகள் என்றாலும் ஜெயமோகனின் நடையும், கதை சொல்லலும் - சுஜாதாவின் மென்னகை பூக்க வைக்கும் சாயலோடு அலுப்பில்லாத வாசிப்புக்கு ஆர்வமூட்டு வனவாய் அமைந்துள்ளன. 'பித்தம்' என்கிற கதை, அசல் புதுமைப்பித்தனின் கதை போன்ற தெற்கத்தி யதார்த்த வட்டார வழக்குப் பாணியில் வெகு ரசமாக, அறிவியல்கதை என்ற பிரக்ஞையே எழாமல் சொல்லப்பட்டுள்ள சிறப்பான கதை. 'ஜெயமோகனின் பிற கதைகள் போலவே இக்கதைகளும் வாழ்க்கையின் அடிப்படைகளைத் தத்துவ நோக்குடன் விசாரனை செய்பவையும் கூட' என்று நூலின் பின் அட்டையில் கூறப்பட்டிருப்பது கொள்ளத் தக்கது. 0


நூலின் பெயர் : விசும்பு.

ஆசிரியர் : ஜெயமோகன்.

வெளியீடு : எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

Thursday, September 24, 2009

'தேவனி'ன் நாவல் 'கல்யாணி'

'சிலரது எழுத்துக்களில் காந்த சக்தி உண்டு. படிக்கத் தொடங்கினால் படித்து முடித்துவிட்டுத்தான் அந்தப் புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றும். நாவல்களில் வாசகர்களை ஈர்த்து ஒன்றிடச் செய்ய ஆவலைத் தக்க வைக்க நீரோட்டமாய் கதை இருக்கும்' - இது தேவனின் நாவல்களுக்குக் கச்சிதமாய்ப் பொருந்தும். கதையானாலும், கட்டுரையானாலும், நாவலானாலும் வாசகரைக் கவர்ந்திழுக்கிற, கட்டிப் போடுகிற காந்த சக்தி தேவனின் எழுத்தின் சிறப்பு அம்சம். சுவாரஸ்யமான, நகைச்சுவை நிறைந்த, புருவம் உயர்த்த வைக்கிற யதார்த்த படைப்புகள் அவருடையவை.

பேராசிரியர் 'கல்கி' யின் கண்டுபிடிப்பு அவர். ஆனந்த விகடனுக்கு அவரது 20ஆவது வயதில் அனுப்பிய கட்டுரையைப் படித்த கல்கி, 'ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில் நாடெங்கும் பிரசித்தியாகிவிட்டார். தேவன். குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் பற்றி மட்டுமல்ல; வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக்கூடியவர் தேவன்' என்று பாராட்டியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, கல்கியின் தூண்டுதலால் தேவன் நிறைய சிறுகதைகளும், தொடர் நாவல்களும், பயணக் கட்டுரை களும் விகடனில் எழுதிப் பிரபலமாகிப் பின்னாளில் அதன் நிர்வாக ஆசிரியராகவும் உயர்ந்து அப்பத்திரிகையின் விற்பனையையும் புகழையும் உயர்த்தியவர்.

சமீப காலத்தில் தனது வித்தியாசமான எழுத்துத் திறத்தால் பெருமளவு வாசகரைத் தன் வசமாக்கிய 'சுஜாதா' வின் ஆதர்ச முன்னோடி தேவன். 'அவர் ஒரு தலை சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். அவரது உரைநடையின் சரளமும் துடுக்கும், தொடர்கதை அத்தியாயங்களில் ஆரம்பத்தில் பிரயோகிக்கும் ஆச்சரியங்களும், சிறுகதைகளில் வாசகரின் கவனத்தைப் பிடித்து இழுத்தி நிறுத்தியிருக்கும் அற்புதமும் அவரை விட்டால் தமிழ்
எழுத்தாளர்களில் மிகச் சிலரிடமே உள்ளன. என் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் தேவன் இருந்திருக்கிறார். அவரை இன்று படித்தாலும் புதிதாகவே இருக்கும். தேவன் என்றைக்கும் இருப்பார். அவர் நிஜமாகவே தேவன்தான்' என்கிற சுஜாதாவின் வியப்பை இந்நாவலைப் படிக்கிற எவரும் அடையவே செய்வர்.

எப்போதும் தர்மத்தின் பக்கமே பேசுகிற நாவல்கள் அவருடையவை. 'துஷ்ட நிக்கிரஹ சிஷ்ட பரிபாலனம்' என்கிற நீதியைப் பின்பற்றிச் சொல்லப் பட்டுள்ளவை அவை. இந்த நாவல் 'கல்யாணி'யும் அப்படித்தான். கல்யாணி என்கிற பெண் சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். திடீரென்று கும்பகோணத்தில் இருந்த அவளது ஒரே ஆதரவான தாத்தா இறந்து போன செய்தி வந்து கிளம்புகிறாள். ரயில் பயணத்துக்கு டிக்கட் கிடைக்கவில்லை. அப்போது அதே ரயிலுக்கு கும்பகோணத்துக்கு டிக்கட் வாங்கியிருந்த சுந்தரம் என்கிற இளைஞன் தன் டிக்கட்டைக் கொடுத்து உதவுகிறான். தாத்தா வீட்டுக்கு வந்த கல்யாணி, வீட்டுச் சமையற்காரியாய் இருந்த நாகலட்சுமி என்பவள் தந்திரமாய் கிழவரை வசப்படுத்தி தன் மூத்த மகளை வயது வித்தியாசம்
அதிகமிருந்தும் பணத்தாசையால் மணம் செய்து வைத்து, பேத்தியுடன் அவருக்கு சாகும்வரை தொடர்பில்லாதபடி செய்து சொத்துக்களை வசப்படுத்தி இருப்பதை அறிகிறாள். அது மட்டுமல்லாமல் அவளுக்கு எதுவுமில்லாமல் துரத்தவும் முற்படுகிறாள். அப்போது கல்யாணியைத் தொடர்ந்து கும்பகோணம் வந்த சுந்தரம், நரசிம்மன் என்கிற தன் நண்பன் உதவியால் அவனுக்குப் பழக்கமான நாகலட்சுமியின் வீட்டுக்குக் குடிவருகிறான். வந்தபின்தான் தெரிகிறது அது கல்யாணியின் வீடு என்பதும் அவளும் அங்கேதான் இருக்கிறாள் என்பதும். அவளை நாகலட்சுமி வஞ்சனையால் துரத்த முயல்கிறாள் என்பதை அறிந்து, சென்னையில் அவளது டிக்கட் கிடைக்காத பரிதாபத்துக்கு இரங்கி உதவியது போலவே இப்போதும் அவளுக்கு உதவி அவளுக்கு உரியவற்றை நாகலட்சுமியிடமிருந்து பெற்றுத் தர முனைகிறான். அதற்காக தன் நண்பன் நரசிம்மன் உதவியை நாடுகிறான்.

நரசிம்மன் ஒரு போக்கிரி. பல இடங்களில் கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டு போலீஸின் குற்றப் பட்டியலில் இருப்பவன். அவனுக்கு நாகலட்சுமியின் விஷயம் முழுக்கத் தெரியும். கல்யாணியின் தாயின் நகைகள் மற்றும் வைரக்கற்களை அவள் கிழவர் இறந்ததும் கைப்பற்றி வைத்திருப்பதையும் அறிந்தவன். அந்த வைரக் கற்க¨ளை அடித்துக் கொண்டு போய்விட வேண்டும் என்பதற்காக அவன் நாகலட்சுமிக்கு ஒத்தாசையாய் இருப்பதாக நடித்துக் கொண்டிருப்பவன். இப்போது சுந்தரம் அழைத்ததும் அவனைக் கொண்டே வைரங்களைத் திருடிவிடத்
திட்டமிடுகிறான். அதன்படி ஓர் இரவு, தங்கையுடன் வந்தபோது தனது கார் ரிப்பேர் ஆகிவிட்டதாகச் சொல்லி இரவு நாகலட்சுமி வீட்டில் தங்குகிறான். நாகலட்சுமி இரவு தன் அறையில் இல்லாத சிறிது நேரத்தைப் பயன் படுத்திக்கொண்டு நரசிம்மன் வைரக் கற்களைத் திருடி சுந்தரத்திடம் கொடுத்து வெளியே அனுப்புகிறான். சுந்தரம் வெளியே எடுத்துப்போய் நரசிம்மனது கார் சீட்டினடியில் பதுக்கி வைக்கிறான். அதே வேளையில் நாகலட்சுமியின் மகன் விபூவும் திடீரென்று உறவு கொண்டாடி வந்து சேர்ந்திருக்கும் பெரியப்பாவுடன் சேர்ந்து வைரங்களை
எடுக்கத் திட்டமிட்டும், அவர்களுக்கு முன்பே அவை களவு போய்விடுகின்றன. நாகலட்சுமி போலீஸில் புகார் செய்கிறாள். தேவனது துப்பறியும் நாவல்களில் வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலனும், ஸி.ஐ.டி சந்துருவும் துப்பறிகிறார்கள், அதற்குள் வைரக் கற்கள் பல கை மாறி, நாகலட்சுமியின் இரண்டாவது மகள் காந்தாவுடன் தொடர்புள்ள அவர்களது டிரைவர் ராஜூவின் கைக்குக் கிடைக்க, அவன் காந்தாவுடன் காரில் பறந்து விடுகிறான். சுந்தரத்தின் மீது நாகலட்சுமி சந்தேகப்படுகிறாள். போலீஸ் சுந்தரத்தையும், நரசிம்மனையும் விசாரிக்கிறது. ஆரம்பத்தில் ஜவடாலாய்ப் பேசுகிற நரசிம்மன், சந்துருவின் கேள்விக் கணைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இறுதியில் பணிந்து விடுகிறான், கடைசியில் திருடு போனது போலி வைரங்கள் என்று தெரிய வருகிறது. கல்யாணியின் தாத்தா, நாகலட்சுமியிடமிருந்து நகைகளைப் பாதுகாக்கத் திட்டமிட்டு எல்லாவற்றிற்கும் போலிகள் தயாரித்து வைத்து விட்டு அசல் நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருப்பது, தற்போது கிடைத்த - தன் பேத்திக்கு எழுதிய அவரது கடிதத்தின் மூலம் தெரிகிறது. சுந்தரம் விடுவிக்கப்பட்டு நரசிம்மன் சிறையில் அடைக்கப் படுகிறான். சுந்தரத்துக்கும், கல்யாணிக்கும் திருமணம் நடக்கிறது என்று கதை முடிகிறது.

கதை ஒன்றும் புதிய விஷயமல்ல. கதையில் எதுவும் புதிதாகத் தேவன் செய்துவிடவில்லைதான். ஆனால் கதையைச் சிடுக்குகளுடன் அமைத்து விறுவிறுப்புடன் நடத்திச் சென்று இறுதியில் மர்ம முடிச்சுகளை லகுவாக அவிழ்த்து சுபமாகக் கதையை முடிக்கும் சாமர்த்தியத்தில் மற்ற படைப்பாளிகளிடமிருந்து வித்தியாசப் படுவதுதான் அவரது தனித்தன்மை. கதையை சுவாரஸ்யமாக்க இயல்பிலேயே அவரிடமுள்ள நகைச்சுவை உணர்வும் பெரும் பங்கு வகிக்கிறது. உரையாடல்களில், வருணனைகளில் எல்லாவற்றிலும் அவரது சாமர்த்தியம் நம்மை வியக்க வைக்கும்.

கதையை நடத்திச் செல்கையில், உச்சத்தை நெருங்கும்போது இடையே நிறுத்தி, பின்னோக்கிச் சென்று கதைக்கு அவசியமான பழைய சம்பவங்களைச் சொல்லும் Flash back உக்தி ஒரு நாவலுக்கு எப்படி உதவும் என்பதைச் சொல்கிறார். எதைச் சொன்னாலும் அதற்குத் தக்க உவமைகளோடு சொல்வது தேவனின் மற்றொரு சிறப்பு. இங்கு, தான் பிறந்து வளர்ந்த திருவடமருதூரின் தேர் உற்சவத்தை உவமைக்கு எடுத்துக் கொள்கிறார்.

"தேர் உற்சவம் ஆரம்பமானவுடனே உத்சாகிகள் சரசரவென்று பிள்ளையார் தேரை ஒரு மூச்சில் இழுத்து நிலைக்குப் பத்து கஜம்வரை கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள். அடுத்தபடி சுப்ரமணியத்தின் தேரும் இவர்கள் கவனத்துக்கு வந்து, இரண்டு மூலைகளாவது திரும்பி வந்து நிற்கும். பிறகுதான் ஒரே மூச்சாக ஸ்வாமி தேர் கிளப்பப்படும். கொல்லங் கோடியில் ஒரு பக்க்ஷம்; வாணக்கோடியில் பதினைந்து நாள்; ராஜங்கோடியில் இரண்டு வாரம். இப்படியாக அது அசைந்தசைந்து கம்பீரமாக வந்து கொண்டிருக்கும்போது, சமயத்துக்கேற்றாற்போல் அம்மன் தேரும் சுப்ரமணியத்தின் தேரும் சிறிது சிறிதாக முன் நோக்கி நகர்த்தப்பட்டு வரும். கதையைத்
தொடர்ச்சியாகச் சொல்லி வரும் ஆசிரியரும், தமது மனதுக்குள் அநேகமாக ஒரு சின்னத் தேர் உத்சவத்தையே நடத்தி விடுகிறார்! ஒரு சம்பவத்தைத் திடுதிடுவென்று இழுத்துச் சென்று, ஒரு முக்கிய கட்டத்தில் கொண்டுபோய் நிறுத்திக் கொள்கிறார். திரும்பி, மற்றப் பெரிய சம்பவங்களுக்கு வருகிறார். பின் இவற்றைக் கிரமமாக நகர்த்திக் கொண்டே வருகிறார். பெரிய தேர் நிலையை அணுகி விட்ட சமயத்தில், சின்னத் தேர்களைச் சட்டுச்சட்டென்று நிலைக்குத் தள்ளுவது போலவே, கதையை முடிக்கும் காலத்திலும் நடந்து கொள்கிறார். இந்த நியதியை ஒட்டி நாமும் சில பழைய சம்பவங்களைத் திரும்பவும் பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது." ஒரு துப்பறியும் நாவல்
எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு தேவன் தரும் பயன்மிக்க குறிப்பு இது.

ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அந்த அத்தியாய சம்பவங்களுக்கேற்ற பொருத்தமான பாடல் அல்லது தகவல் அறிவிப்புக்களைத் தருவதும் தேவனின் நாவல்களில் நாம் ரசிக்கக் கூடிய அம்சமாகும். உதாரணத்துக்கு முதல் அத்தியாயத்திற்கு சங்கீதக் கச்சேரியின் முதல் பாட்டான 'வாதாபி கணபதிம் பஜே ஹம்.....' வரிகளையும் கடைசி அத்தியாயத்திற்கு கச்சேரியின் கடைசிப் பாட்டின் வரிகளையும் தருகிறார்.

நகைச்சுவை இல்லாமல் தேவனின் எந்தப் பகுதியும் நகர்வதில்லை. அது அவரது தனித்தன்மை. இந்நாவலில்நாகலட்சுமி தன் அசட்டு மகன் விபூவின் அசட்டுப் பேச்சுக்கெல்லாம் - 'அடக் கட்டேல போறவனே', 'கடங்காரா...' என்று செல்லமான வசவுகளால் அடிக்கடி அர்ச்சிப்பதும், நரசிம்மன் சுந்தரத்தை வார்த்தைக்கு வார்த்தை ' யூ சீல்லி டாங்கி', 'யூ சில்லி பொட்டட்டோ', 'யூ ஒல்ட் பிரிஞ்சால்' என்றெல்லாம் வகைவகையாய் நம் திரைப்படங்களில் கவுண்டமணி செந்திலைத் திட்டுகிற பாணியில் பேசுவதுமான அந்தப் பாத்திரங்களின் நகைச்சுவையான மேனரிசத்தைப் படிக்கையில் அழுமூஞ்சிக்கும் சிரிப்பு வரும்.

அவரது உரையாடல்களும் ரசமானவை; மென்சிரிப்பை உண்டாக்குபவை. எப்போதும் கிண்டலும் கேலியுமாய் பேசுகிற பாத்திரமான நரசிம்மன், சுந்தரத்தை நாகலட்சுமி வீட்டுக்கு அழைத்துப்போய் அவள் வீட்டில் தங்க ஏற்பாடு செய்துவிட்டுத் திரும்பியதும், அவனது தங்கையாக வீட்டில் இருப்பவளிடம் பேசுவது அப்படிப் பட்டது:

"ரொம்ப சீக்கிரம் திரும்பிட்டேள்! போன காரியம் என்னாச்சு?

"பழந்தான்! நிமிஷத்திலே அந்தச் சமையல்காரியை மசிச்சுட்டேன். நல்ல கருணைக் இழங்குதான். எலுமிச்சம் பழத்தை அதன் தலையிலே பிழிஞ்சு, மத்தாலேயும் கடைஞ்சதிலே, காறல் எல்லாம் போயே போச்சு!"

அவரது வர்ணனைகளும் நகைச்சுவை கொண்டவையாக இருக்கும். பஞ்சுவய்யன் என்கிற பாத்திரம் அறிமுகம் ஆகும்போது இப்படி எழுதுகிறார்: 'ஒரு மகா அழுக்கு வஸ்திரத்தை அரையில் மூல கச்சமாகக் கட்டிக் கொண்டு, அதே வர்ணனைக்கு இம்மியும் குறைச்சல் இல்லாத ஒரு துணியை மேலேயும் போட்டுக் கொண்டு துணி மூட்டை ஒன்றைக் கையில் இடுக்கியவாறு வாசலில் நின்றார் கருவலாக ஒரு ஆசாமி. இடுப்பைத் தடவி ஒரு பொடி மட்டையை எடுத்துப் பெரிய சிமிட்டாவாக அதிலிருந்து அள்ளிக் கொண்டார். ஒரு தடவை பொடியைச் சுருதி சுத்தமாக இழுத்து விட்டு, மூட்டையையும் கீழே வைத்துக் கொண்டு உட்கார்ந்தார்."

அதோடு இலக்கிய ரசனையுடனும் வர்ணனைகள் இருக்கும்: 'நம் கதாபாத்திரங்களில் முக்கியமானவர்களாக மூன்று பேர் ஏககாலத்தில் 'பொழுதுவிடியட்டும்' என்று விரும்பிய காலத்தில், அந்த ஆதித்த பகவான் சவுக்கினால் இரண்டடி போட்டானோ என்னவோ! ஆறு முப்பத்தைந்துக்கு அவன் கிழக்கே உதயமாகி விட்டான்."

குறை என்று ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், கதை முடிவை நெருங்கும்போது, அவர் குற்¢ப்பிட்ட தேரோட்ட முடிவின் வேகத்தைப் போல சரசரவென்று நிகழ்வுகள் ஓட்டமாக ஓடுவதைச் சொல்லலாம். தொடர் கதையாக வந்த இக்கதை, முடிக்க வேண்டிய அவசரம் காரணமாகவும் அது நேர்ந்திருக்கலாம்.

இவ்வளவு அபூர்வமான எழுத்திறன் படைத்த அரிய எழுத்தாளரான தேவன் அவர்கள் 50 வயதுக்குள் மறைந்தது தமிழர்களின் துர்ப்பாக்கியமான - பாரதி, புதுமைப்பித்தன் போன்ற மேதைகளை அற்பாயுளிலேயே இழக்கிற - வழமையாய் ஆனது பெரும் சோகமாகும்.

இக்கதை 1944ல் ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது. இரண்டு பதிப்பகங்களால் நூலாக வந்த பின் இப்போது 'கிழக்கு பதிப்கத்'தாரால் செம்பதிப்பாக வெளியாகி உள்ளது. 0


நூல் : கல்யாணி

ஆசிரியர் : தேவன்

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், சென்னை.

Sunday, September 06, 2009

வெங்கட்சாமிநாதனின் - 'இன்னும் சில ஆளுமைகள்' ஒரு பார்வை

சங்கீத உலகில் இசை விமர்சகர் சுப்புடுவுக்கு நிகரான பிரபல்யம், இலக்கிய உலகில் ஒருவருக்கு உண்டென்றால் அது இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதன் அவர்கள்தான். இருவரும் தங்களது தாட்சண்யமற்ற
விமர்சனங்களால் பலரது அதிருப்தியையும் விரோதங்களையும் சம்பாதித்துக் கொண்டவர்கள். கடந்த 40 வருஷங்களுக்கு மேலாக தில்லியில் இருந்து இலக்கிய, நாடக விமர்சனங்களை தமிழ் மற்றும் ஆங்கில ஏடுகளில் எழுதிவந்த சாமிநாதன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவர் கடந்த காலங்களில் 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி', 'பேட்ரியட்'.
'நேஷனல் ஹெரால்ட்' போன்ற ஆங்கில ஏடுகளிலும், தமிழ் 'இந்தியா டுடே', 'அமுத சுரபி' போன்ற தமிழ்ப் பத்திரிகை
களிலும் மற்றும் 'தமிழ் சி·பி.காம்' போன்ற இணைய இதழ்களிலும் எழுதிய விமர்சனங்கள், பல்வேறு இலக்கிய நிகழ்வு
களில் படித்த கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்த 27 கட்டுரைகளை 'எனி இந்தியன் பதிப்பக'த்தார் 'இன்னும் சில ஆளுமைகள் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்கள்.

எப்போதும், இப்போதும் சாமிநாதன் தமிழ் இலக்கிய உலகில் பிரச்சினக்குரிய, சூடான விவாதங்களைக்
கிளப்புகிறவராகவே பேசப் படுகிறவர். அவரது விமர்சனங்களால் பாதிக்கப்பட்ட, எரிச்சலுற்ற பல குழுவினர் அவரைக் கடுமையாய் விமர்சித்திருக்கிரார்கள். இடதுசாரிக் கருத்துக்களுடைய கலாநிதி கைலாசபதி போன்றோர் அவரை
CIA ஏஜண்ட் என்றும், 'அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காவல் நாய்' என்றும் இழித்தும் பழித்தும் வந்திருக்கிறார்கள்.
முற்போக்கு எழுத்தாளர் குழு அவர் 'பார்ப்பன வெறியர்' என்று முத்திரை குத்தினார்கள். ஒரு தடவை அவர் திராவிட இயக்கங்களின் இலக்கியப் பங்களிப்பு பற்றி 'இந்தியா டு டே' யில் கடுமையாய் விமர்சிக்கப்போய், அ.மார்க்ஸ் குழுவினர் அவர் எழுதிய பக்கங்களில் மலம் துடைத்து 'இந்தியா டுடே'க்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரிதும் பேசப்பட்டதுண்டு. முன்பு அவரைப் பாராட்டி எழுதிய இலங்கையைச் சேர்ந்த நு·மான், சுந்தர ராமசாமி போன்றோர் பின்னாளில் அவரை மறுத்தும் எதிர்த்தும் எழுதியதுண்டு. ஆனால் சாமிநாதன் அவர்கள் சுப்புடுவைப் போலவே எந்த சலசலப்புக்கும் அஞ்சாது, எந்த மிரட்டலுக்கும் பணியாது, எந்த சதிச்செயலுக்கும் கவலைப் படாது, 'போற்றுபவர் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்............என் வழியில் தொடர்ந்து செல்வேன், நில்லேன் அஞ்சேன்" என்று தனது விமர்சனப்
பணியைத் தொடர்கிறவர்.

இத்தொகுப்பில் அவர் சந்தித்த, படித்த, பழகிய, அறிந்த பல்வேறு ஆளுமைகளை - இலக்கியம், அரசியல்,
ஆன்மீகம் எனப் பல்துறையைச் சார்ந்தவர்களையும் - பாராட்டியும், கடுமையாய் விமர்சித்தும் எழுதியிருக்கிறார். அவருக்கு
எதிரான விமர்சனங்களைப் படித்து அவர்மீது கசப்பான எண்ணங்களையும் வெறுப்பையும் வளர்த்துக் கொண்டிருப்பவர் கள், இங்கு மொத்த வாசிப்பில், மேலோட்டமில்லாத ஆழ்ந்த தளங்களில் செயல் பட்டு - தான் முன்பின் அறியாத புதிய எழுத்தாளர் சோ.தர்மன் போன்றவர்களை உளமாறப் பாராட்டி, விமர்சித்திருப்பதைப் படித்து மனம் மாறக்கூடும்.

முதல் கட்டுரை பாரதிதாசனைப் பற்றியது. ஆரம்பகாலத்தில் பாரதியின் பாதிப்பில் சமுகப் பிரக்ஞைனை யுடனான இயற்கை வண்ணங்களை, பெண்மை அழகை வியந்து போற்றுகிற அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசுவில் பல இடங்கள், புரட்சிக்கவி, எதிர்பாராத முத்தம் போன்ற கவிதைகளை எழுதிய பாரதிதாசன் பின்னாளில் அரசியல்
சார்பான, இனத்துவேஷத்தின் வெளிப்பாடுகளான கவிதைகளை எழுதியதைக் குறிப்பிட்டு, 'ஜாதி வேற்றுமைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து எழும் அவரது கோபம் நியாயமானதே, ஆனால் இதற்கெல்லாம் காரணமாக அவர்
சாடுவது ஹிந்து சமூகத்தில் ஒர் குறிப்பிட்ட வகுப்பினரைத்தான்' என்று ஆதங்கப்படுகிறார். 'இதன் விளைவாக,
பாரதிதாஸன் என்ற கவிஞரை, அவரது பிற்கால எழுத்துக்களில் காணமுடியாது போயிற்று. தமிழச்சியின் கத்தி, குறிஞ்சித் திரட்டு, தமிழ் இயக்கம் போன்ற இன்னும் பலவற்றில், நாம் பார்ப்பது உரத்த குரலில் சீறும் ஒரு துண்டு பிரசாரகரைத் தான். கவிஞரை அல்ல', என்றும் 'பாரதிதாஸனைக் கவிஞராக்கியது, என்னுடைய அபிப்பிராயத்தில் - ஏதும் கவித்துவ உணர்வுகளோ, ஆழ்ந்த சிந்தனைகளோ, ஏதும் அவரதேயான மகத்தான தரிஸனங்களோ அல்ல. இவை ஏதும் அவரிடம் இருந்ததில்லை' என்றும் கடுமையாய் விமர்சிக்கிறார்.

அடுத்து, 'பாரதி என்னும் பன்முக மேதை' என்னும் கட்டுரையில் பாரதியை பலவாறு விதந்து போற்றுகிறார். 'ரஷ்யப் புரட்சியை முதன்முதலில் இந்தியாவில் வரவேற்றுப் பாடிய ஒரே கவிஞர் பாரதிதான். அதுவே அவரைப் பற்றி
விசேஷமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்' என்று பாராட்டுகிறார். பார் புகழும் பாரதியை நம்மூர் 'ஈ.வே.ராவும் சரி, அவரது சீடர்களும் சரி ஒரு கவிஞனாகவே அங்கீகரித்தது இல்லை.ஏனெனில் பாரதி பிராமணன்' என்பதுதான் என்கிறார். பாரதியின் முற்போக்குச் சிந்தனைகளையும் பன்முக மேதைமையையும் பட்டியலிடுகிறவர் அவர் தன் மனைவியிடம்
காந்திஜியைப் போல ஆணாதிக்க மனப்பான்மையுடன் தன் அதிகாரத்துக்குப் பணிய வைக்க கடுமையாக நடந்து
கொண்டதையும் குற்றச்சாட்டாகக் கூறுகிறார்.

'திலீப்குமார் மொழியின் எல்லைகளைக் கடந்து' என்கிற கட்டுரையில், தாய்மொழி குஜராத்தி என்றாலும் அற்புதமாகத் தமிழில் எழுதும் இவரைப் போன்ற எழுத்தாளர்கள் அபூர்வ ஜீவன்கள், தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவர்கள் என்று பாராட்டுகிறார். 'அவரது ஆளுமையிலும், உணர்வுகளிலும் தமிழ்நாட்டின் பொதுஜனக் கலாச் சாரத்திலிருந்து அவரை அன்னியப்படுத்தும் கூறுகளும் உண்டு' என்பதையும் பதிவு செய்கிறார்.

'வ,ராவின் நூற்றாண்டு நினைவில்' என்கிற கட்டுரை 'வ.ரா பேசக்கிடைத்த மேடைகளில் எல்லாம் இருபதாம் நூற்றாண்டின் மகாகவி பாரதி என ஸ்தாபிப்பதிலேயே தீவிரமாக இருந்தார். இன்று அந்த விவாதங்களைப் பற்றி நினைக் கும்போது. "இந்த விஷயத்திற்கு இவ்வளவு போரும் புழுதி கிளப்பலும் தேவையா?"என்று ஆச்சரியப்படத் தோன்றும். தேவையாகத்தான் இருந்தது அந்தச் சூழலில்' என்று, வ.ரா உணர்ச்சிவசப்பட்டு சண்டைத் தொனியில் பாரதிக்காக
வாதிட்டதை வியந்து பேசுகிறது. 'வ.ரா பிராமண குடும்பத்தில் பிறந்தாலும் சாதி, மத விஷயங்கள்பற்றிய பேச்சு எழுந்தால் முள்ளம் பன்றி சிலிர்த்தெழுவது போலச் சீற்றம் கொள்வார்' என்பதையும், '40களில் தீவிர பிராமண எதிர்ப்பும், சாதி
ஒழிப்புப் பிரச்சாரமும் செய்து வந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பாராட்டி ஒரு சிறு புத்தகம் எழுதி, அது பிராமணர்
களிடையே மட்டுமல்லாது, உயர்ஜாதி இந்துக்கள் பெரும்பான்மையோரது எதிர்ப்பையும், கசப்பையும் சந்திக்க வேண்டி வந்தது' என்பதையும் வெ.சா, வ.ராவின் பெருமையாகக் குறிப்பிடுகிறார். இன்னும் தன்னைப் பற்றிய கண்டனங்களை அவர் பொருட்படுத்தாததையும், அவரது எளிமையான எழுத்து நடையையும், அவரது இலக்கிய சாதனைகளையும்
பற்றியெல்லாம் இதில் பதிவு செய்திருக்கிறார்.

'லா.ச.ராமாம்ருதம் - கலாச்சாரம் ஒரு கலைச் சிமிழுக்குள்' என்ற கட்டுரையில், 'ராமாம்ருதம் இவ்வளவு வருஷங்களாய் ஒரே கதையைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்' என்கிற க.நா.சு.வின் விமர்சனத்தைக் குறிப்பிட்டு,
'ராமாம்மிருதம் இதை சந்தோஷத்துடன் ஒப்புக் கொள்வார். "நான்தான் நான் எழுதும் கதைகள் என்னைப்பற்றித்தான் என இவ்வளவு நாளும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறேன்" என்பார் என்று எழுதுகிறார். 'ராமாம்ருதம் எழுதும்
போதும், நண்பர்களிடம் பேசும்போதும் அவர் உணர்வு மேற்பட்ட மனிதர்தான்' என்கிறவர், 'என்னதான் உணர்ச்சிகளின் வெப்பமும், சில்லிட வைக்கும் படிமங்களும் ராமாம்ருதத்தின் எழுத்துக்களில் நிறைந்திருந்த போதிலும், அவர் எழுத்து அதன் சாரத்தில் மனிதனையும் தெய்வநிலைக்கு உயரும் நினைப்புகளையும் கொண்டாடும் எழுத்துத்தான்' என்று
பாராட்டுகிறார்.

'அம்பை' பற்றி ' 'அம்பை - பெண்மையின் அழகும் பெண்மையின் சீற்றமும்' என்றொரு கட்டுரை எழுதி
யுள்ளார். அம்பை எழுதத் தொடங்கியபோது, தமக்கென புதிதாகச் சொல்ல ஏதுமில்லாமல், பணத்திற்காகவும்,
எழுத்தாளராகப் பேசப்பட வேண்டும் என்பதற்காகவும் பெரும் அளவில் வந்த பெண் எழுத்தாளர்கள் போலன்றி, தனக்கென சொல்வதற்கு இருப்பதை எழுத நினைப்பவராக, இடதுசாரிச்சிந்தனையாளாராக, தீவிரப் பெண்ணியவாதியாக போராளியாக அம்பை தன் இருப்பை உணர்த்தியதை வெ.சா பாராட்டுகிறார். 'அம்பை எழுதிய கதைகளில் அவரது பெண்ணியச் சிந்தனைகள் பெண்ணின் வாழ்க்கைக் களன் முழுவதையும் தன் பார்வைக்கு எடுத்துக் கொள்வதையும் அவர் எழுத்தின் அடிநாதம் காலம் காலமாக உலகெங்கும் காணும் அடக்குமுறைக்கு எதிரான குரலாக இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். 'இதுதான் அம்பையின் எழுத்துக்க¨ளை மற்ற பெண் எழுத்தாளர்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது' என்றும் கருதுகிறார்.

'கி.ராஜநாராயணன் தொடரும் வாய்மொழிப் பண்பு' என்னும் கட்டுரை கி.ராவின் வாய்மொழி மரபு எழுத்தைப்பற்றிப் பேசுகிறது. அவர், கதை சொல்லும் தாத்தாவின் வார்ப்பில் தன்னைக் காண்பவர் என்றும், அவரது எழுத்து வாய்மொழி மரபின் அடையாளங்களான - கிராமத்து விவசாயியின் அட்டகாசச் சிரிப்பைக் கிளறி ரகளை செய்யும் கிண்டல், அவ்வப்போது வெளிப்படும் பாலியல் கவர்ச்சி ஆகியவற்றைக் கொண்டவை என்றும், அவருடைய உலகமே அவரது மக்கள் வாழ்ந்த சிறிய வட்டத்துக்குள் அடங்கியதுதான், அதைவிட்டுத் தாண்டியதில்லை என்றும்
விமர்சிக்கிறார்.

ஜெயமோகனைப் பற்றிய கட்டுரை, 'வாழ்க்கையின் புதிய உண்மைகளை ஆராயும், புதிய அனுபவத் தளங்
களைக் காணும், அத்தளங்களில் மறைந்திருக்கும் ஆழங்களைக் காணும் உந்து சக்தியை, புதிய வடிவங்கள், புதிய நடை, புதிய மொழி எனத் தேடிச் செல்லும் அவரது சோதனை முயற்சிகளைப்பற்றிப் பேசுகிறது. 'அவரது எழுத்துக்கள் ஓரோர் சமயம் விளையாட்டுத்தனமாகவும், கேலி செய்வனவாகவும், துன்புறுத்தாத நகையாடலாகவும், அழகிய கவித்துவத்தோடும், உருக்கமான நாடகமாகவும், உயர்ந்த தளத்தில் மேலெழுந்த தத்துவர்த்தமாகவும், சமயத்திற்கேற்ப வெவ்வேறு குணங்கள்
கொண்டதாகக் காணப்படுவதை'யும் சொல்கிறது.

'காதுகள்' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது எம்.வி.வெங்கட்ராம் அவர்களுக்கு வழங்கப்பட்டபோது எழுதியுள்ள பற்றி கட்டுரையில் 'அவரது எழுத்துக்கள் மனித வாழ்கையின் மனித உணர்வுகளின் ஒரு விஸ்தாரமான தளத்தைத் தம் கருவாக நிகழ்களனாகக் கொண்டவை' என்றும், 'புராண இதிகாசங்களிருந்தும் தன்னைக் கவர்ந்த
பாத்திரங்களைத் தன் பார்வையில் மீட்டுருவாக்கம் தந்தவர்' என்றும், அவர் படைப்புகளில் 'மயக்க நிலை அனுபவங்கள், பயங்கர சொப்பன அவஸ்தைகள், அதியதார்த்த வண்ணக்கோலங்கள், கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட அனுபவங்கள், வாழும் அவஸ்தைகள், பயங்கள், வறுமையில் காலம் தள்ள நேரும் காலத்திய சோகங்கள், உடல் ஊனத்தினால் ஏற்படும் வதைபடும் வாழ்க்கை, இவற்றின் இடையே அவ்வப்போது தன் இஷ்டதெய்வம் முருகனிடத்தில் தன்னை அற்பணித்துவிடும் கணங்களில் கிடைக்கும் மனச்சாந்தி - இவையெல்லாம் உறவாடுகின்றன' என்றும் குறிப்பிடுகிறார்.

அடுத்தது நமக்கு அதிகமும் தெரியாத - நாடகத்துறையில் ஆழ்ந்த அனுபவமும் அறிவும் கொண்டிருந்த
நேமிஜெயின் என்பவரைப் பற்றிய அறிமுகம்.

'எழுதும் முனைப்போ ஆர்வமோ இல்லாத எழுத்து மேதை மௌனியைப்பற்றி என்ன சொல்ல?' என்று
தொடங்குகிறது 'மௌனியின் உலகு' என்ற கட்டுரை. 'அவர் ஒன்றும் எழுதிக் குவிப்பவர் இல்லை. அவர் முதலில் எழுத ஆரம்பித்ததே இதில் ஏதும் உருப்படியாகச் செய்ய முடியுமா என்று பார்க்கத்தான்' என்கிறார் வெ.சா. அக்காலத்திய
மற்ற எழுத்தாளர்களைப் போல மௌனியின் போராட்டம் மொழியை ஒரு ஆற்றல் பெற்ற சாதனமாகக் கையாளுவதில் மட்டுமில்லை, மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதும், தனக்கே உரியதுமான தன் உள்ளுலகை வெளியிடுவதற்கு ஏற்ற
வெளியீட்டு மொழியைக் காண்பதற்கும் அவர் சிரமப்பட வேண்டி இருந்தது' என்று அவரது தனித்தன்மை பற்றிக்
குறிப்பிடுகிறார்.

'ந.பிச்சமூர்த்தி நூற்றாண்டு நினைவு' கட்டுரை, அவரை நவீன சிந்தனையாளராகவும், பழமைவாதியாகவும்
காட்டும் முரண்பாட்டைச் சொன்னாலும், முரண்பாடுகளாகக் காண்பவற்றை ஒருமைப்படுத்தியுள்ள அவரது ஆளுமையின்
இசைவைப் பற்றியும், எதையும் விசாரணைக்கு உட்படுத்தும் மனவோட்டம் பற்றியும் பேசுகிறது. 'எழுத்து என்பது அவ்வளவு முக்கியமானதல்ல. வாழ்க்கைக்குப் பிறகுதான், இரண்டாம் பட்சமாகத் தான் இலக்கியம் இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார்' என்பதையும் வெ.சா எடுத்துக் காட்டுகிறார்.

'திரிலோக சீதாராம் - சப்தங்களின் உலகோடு ஒரு மீள் பரிச்சயம்' என்கிற கட்டுரையில், அவர் 'வாழ்ந்ததே கவிதை என்னும் ஒலி உலகில்தான், அச்சிட்ட உலகில் அல்ல', சப்தலோகங்களுடன் வாழ்ந்த அவர் புது சப்த
லோகத்தைச் சிருஷ்டிப்பவராகவும், அதிலேயே வாழ்பராகவும் இருந்தார் என்பதை வெ.சா சொல்கிறார்.

'ஜானகிராமன் எழுத்து அத்தனையையும் ஒரே ஒரு வார்த்தைச் சிமிழுக்குள் அடைக்க முடியுமானால் அந்தச் சிமிழுக்குப்பெயர் 'வியப்பு' என்று தி.ஜானகிராமனைப் பற்றி வியந்து பேசும் வெ.சா, க.நா.சு பற்றியும் அவரைப் பற்றிய
தனிக்கட்டுரையில், இலக்கிய விமர்சனத்தை ஒரு இயக்கமாகவே அவர் கையாண்டதும், அவரது விமர்சனங்கள் வெறும் அபிப்பிராயங்கள் தான் என்ற பலரது எழுத்தைக் காப்பாற்றி இன்றுவரை ஜீவிக்க வைத்துள்ளவர் அவர்தான் என்பதும்
பற்றி விரிவாகப் பேசுகிறார்.

'சே.ராமானுஜம் நாற்பது ஆண்டுகளாக' என்கிற கட்டுரையும், 'தமிழ்நாட்டில் மறுபடியும் ஒரு அதிசயம்'
என்கிற கட்டுரையும் ராமானுஜம் என்கிற நாடக இயக்குனரின் சாதனைகளைச் சொல்கிறது.

சேலத்தில் 'காலச்சுவடு' நடத்திய சி.சு.செல்லப்பா கருத்தரங்கில், சாதாரண - ஆனால் அசாதாரணங்கள்
நிறைந்த அவரது தனித்தன்மை வாய்ந்த ஆளுமைகள் பற்றி வெ.சா மிக உயர்வாகப் பேசியது - 'சி.சு.செல்லப்பா
என்றொரு ஆளுமை' என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள விசேஷமான கட்டுரை.

தில்லி ராமகிருஷ்ணா மடத்தின் தலைவரான ரங்கதானந்தா பற்றியும், ஒரு வித்தியாசமான ஆன்மீக
வாதியான விவேகானந்தர் பற்றியும், கர்நாடக இலக்கியவாதி கே.வி.சுப்பண்ணாவின் இழப்பு பற்றியும் நாம் அறியாத பல புதிய தகவல்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் அறிகிறோம்.

'சுந்தரராமசாமி பற்றிய நினைவுகள்' அவரோடு இணக்கமாய் வெ.சா இருந்த காலகட்டத்தையும் பிறகு அவரோடு சு.ரா பிணங்கிய காலகட்டத்தையும் உள்ளடக்கிய சில கசப்பான நினைவுகளைச் சொல்கிறது. ஆரம்பத்தில் சு.ராவின் கதைகளையும் பாராட்டிய வெ.சா அவருடன் நடத்திய ஒரு வானொலிப் பேட்டியில், 'அவரிடம் திட்டமிடல் இருந்தாலும் spontaneaty இல்லை, அவரது observation- களில், கிண்டலில், வெகு கரிசனத்தோடு நம் கவலைகளைப் பகிர்ந்துகொள்வது - பின்னாட்களில் மெதுவாக மறையத் தொடங்கி விட்டனவோ?' என்று கேட்டபோது, சு.ரா மறுத்திருக்கிறார். பின்னர் வெ.சாவுக்கு 'இயல் விருது' கிடைத்தபோது உற்சாகத்தோடு பாராட்டியவர், நு·மான் வெ.சாவுக்கு அவ்விருது கொடுக்கப்பட்டதைக் கண்டித்த போது அதை அங்கீகரித்த அளவுக்கு உணர்வுகள் குறுகிவிட்டதைக்
குறிப்பிட்டு 'எது உண்மை?' என்ற வினா எழுப்பி, 'இரண்டுமே உண்மைதான்' என்று முடிக்கிறார்.

2005ல் தனது 86ஆம் வயதில் மறைந்த பஞ்சாபி பெண்ணியக் கவிஞர் அம்ரிதா பிரீதம் பற்றி சுவாரஸ்யமான
தகவல்களை ஒரு கட்டுரையில் வெ.சா பதிவு செய்திருக்கிறார். நிறைந்த புகழும், தன் வாழ்நாளிலேயே வெற்றியும் பெற்ற அம்ரிதா பிரீதத்தின் கவிதை ஆளுமை பற்றியும், பெண்ணியம் fashionable-ஆன லேபிள் ஆகும் முன்னரே
பெண்ணிய வாழ்க்கை வாழ்ந்த பெண்ணிய ஆளுமை பற்றியும் விரிவாகப் பேசுகிறது கட்டுரை.

சோ.தருமன் பற்றிய கட்டுரை அவரைப் 'பார்ப்பன வெறியர்' என்று பழி சொன்னவர்க்குப் பதில் போல அமைந்திருக்கிறது. சோ.தருமனைப் பற்றி முன்னதாக ஏதும் - அவர் ஒரு தலித் என்பது போன்ற ஏதும் அரியாத நிலை
யிலேயே 'கதாவிருது'க்கு அவரது 'நசுக்கம்' கதையைச் சிபாரிசு செய்ததையும், அதை நம்பாத கோவில்பட்டி எழுத்தாளர்கள் மேற்கண்ட பழிச்சொல்லைச் சொன்னதையும் குறிப்பிட்டு, சோ.தருமன் 'தான் பிறப்பால் தலித், எழுத்தால் அல்ல' என்பவராகவும், இடதுசாரிக் கோணல் பார்வையில் தலித்துகளை ஒரு பக்கச் சார்புடன் காட்டி வந்ததை மறுத்து
தலித்துகளின் பன்முக வளர்ச்சி, ஆன்மா இவைகள் பதிவு செய்யப்படவேண்டும்' என்பராகவும் விளங்குவதையும் வெ.சா இக்கட்டுரையில் சொல்கிறார். அதோடு அவரது 'தூர்வை' நாவலைப் பற்றியும் அவரது இலக்கிய ஆளுமை பற்றியும்
சிறப்பித்துச் சொல்கிறார்.

அடுத்து நாம் மறந்துவிட்ட - ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் எழுத்தாளர் ஆ.ர்.கே.நாராயணனின் இலக்கிய ஆளுமை பற்றியும், பசுவையாவின் 'கை நகத்தை வெட்டி எறி, அழுக்குச் சேரும்' என்ற 'எழுத்து' கவிதைக்கு எதிர்
வினையாக, 'சிந்தி எறி. மூக்கைச் சிந்தி எறி, சளிவரும்' என்று கவிதை எழுதி அதைப் போட மறுத்த செல்லப்பாவிடம்
சண்டைக்கு நின்ற சிட்டியின் எழுத்தாளுமை பற்றியும், பேச்சும், சிந்தனையும், வாழ்வும் ஒன்றாக இருந்த ம.பொ.சி யின்
தமிழுணர்வு, அரசியல் நேர்மை, 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' எழுதி தமிழக அரசின் பரிசு பெற்ற எழுத்தாளுமை பற்றியும் எழுதியுள்ள கடைசி மூன்று கட்டுரைகளும் சுவாரஸ்யமானவை.

இப்படிப்பட்ட தனது பதிவுகளை வெ.சா தனித மனித அபிப்பிராயங்கள் என்று சொன்னாலும், அவரது
பார்வைகள் வெறும் அபிப்பிராயங்கள் அல்ல, அவை அவர் கருத்துக் கோர்வைகளின் முன் வைக்கப்பட்ட ஆளுமைகளின் செயல்பாடுகள் பற்றிய விமர்சனமும் கூட என்பதுடன், இப்பதிவுகள் பலரது ஆளுமைகள் பற்றியது மட்டுமல்ல வெங்கட் சாமிநாதனின் ஆளுமை பற்றியது கூடத்தான் என்னும் பதிப்பாசிரியர் கோ.ராஜாராமின் கருத்தை இந்நூலைப் படித்து முடித்த பிறகு வாசகரும் ஏற்பார்கள். 0

நூல்: இன்னும் சில ஆளுமைகள்.
ஆசிரியர்: வெங்கட் சாமிநாதன்.
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

Monday, August 31, 2009

கடித விமர்சனம் - திரு.பாரதிமணியின் 'பல நேரங்களில் பலமனிதர்கள்' கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து

கடிதம் - 1
----------

அன்புள்ள பாரதிமணி அவர்களுக்கு,

வணக்கம். 'உயிர்மை' வெளியிட்டுள்ள உங்களது 'பல நேரங்களில் பல மனிதர்கள்'
கட்டுரைத் தொகுப்பைப் படித்தேன். இதிலுள்ள 23 கட்டுரைகளில் அதிகமும் நான் முன்பே
'உயிர்மை' இதழ்களில் படித்ததுதான். எனினும் தொகுப்பில் ஒரு சேரப் படிப்பதில் ஒரு
தனித் திருப்தி உண்டல்லவா? 'ஒரே மூச்சில் படித்தேன்' என்பது உயர்வு நவிர்ச்சியாகும்.
நான் முழு லட்டையும் அப்படியே விழுங்கி விடாமல், ஒவ்வொரு துணுக்காய் உதிர்த்து,
சீக்கிரம் தீர்ந்துவிடப் போகிறதே என்று நிதானித்துச் சுவைக்கிற குழந்தை மாதிரி, தினமும்
கொஞ்சமாய் ரசித்துப் படிக்கிறேன். படிக்கப் படிக்க நான் ரசித்தபடி உங்களது ரசிகர்களோடு
பகிர்ந்து கொள்கிற ஆசையில் தொடர் கடித விமர்சனமாக இதனை எழுதுகிறேன்.

'கட்டுரை இலக்கியம்' தி.ஜ.ர வுக்குப்பின் யாரும் திரும்பத் திரும்பப் படிக்கிற
வகையில் சுவாரஸ்யமாக படைக்க முயற்சிக்கவில்லை அல்லது முடியவில்லையோ என்ற
ஆதங்கம் எனக்குண்டு. உங்களின்- முன் எழுத்து அனுபவமே இல்லாமல், சுயம்புலிங்கம்போலத்
திடீரென்ற முளைத்த இலக்கியப் பிரவேசம் இந்த தொகுப்பின்
மூலம் அந்த ஆதங்கத்தைத் தீர்த்து வைக்கிறது.

'பல நேரங்களில் பல மனிதர்கள்' தலைப்பே உள்ளடகத்தைப் படிக்கத் தூண்டுவதாக
உள்ளது. படித்த பிறகு எவ்வளவு கச்சிதமாய்ப் பொருந்துகிற தலைப்பு என்று தலையாட்டத்
தோன்றுகிறது. உங்களுக்குக்கிடைத்த பலதிறப்பட்ட இந்த அரிய அனுபவங்கள் உண்மையில்
சாத்தியமா என்று மலைப்பாக உள்ளது. ஆனால் அத்தனையும் சாத்தியமாகி இருப்பதை நம்பித்தான்
ஆக வேண்டும் என்பது நம்மை அறியாமலே தோன்றுவதைத்தவிர்க்க முடியவில்லை. அட! எத்தனை
வித மனிதர்கள் - எல்லா மட்டத்து மனிதர்களும் அது வங்க தேசத்து குடிசைவாழ் இந்தியக்
குடியேறிகளாக இருக்கட்டும், வங்கபந்துவின் மகள் ஹசீனா பேகமாகட்டும் - அத்தனை
பேரும் உங்களுடனான தொடர்பில் எங்களை அசத்துகிறார்கள்!

ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் கேள்விப்பட்ட ஆனால் அதிகமும் அறியாத முக்கிய
பிரமுகர்கள் பற்றியும் முற்றும் புதிதாகத் தோன்றுகிற பல தகவல்களுமாய் அடிக்கடி வாசிக்கிறவரைப்
புருவம் உயர்த்த வைக்கின்றன. 'அருந்ததிராயும் என் முதல் ஆங்கிலப் படமும்' என்கிற முதல்
கட்டுரையில் உங்களது முதல் ஆங்கிலப்பட அனுபவத்தில் அந்தப் பட இயக்குநர் காட்டிய
அக்கரையும் முன்னேற்பாடும், டெக்னாலஜியும் புதிய செய்திகள். கொசுறாக அருந்ததிராய்
என்.டீ.டிவி பிரணாப்ராயின் சகோதரி என்கிற தகவலும் பலருக்குத் தெரியாதுதானே!


கடிதம் - 2
-----------


'சிரிப்புத்தான் வருகுதையா' என்ற இரண்டாவது கட்டுரையில், தங்களது 50 ஆண்டு
தில்லி வாசத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடனான உங்களது நட்பையும் அவர்கள்
தொடர்பான பல ரசமான தகவல்களையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.அதோடு சாமான்யனை வாய்
பிளக்க வைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களது இலவச சலுகைகளைப் பட்டியலிட்டிருப்பது
மூச்சு முட்ட வைக்கிறது. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை
ஒரு அறையை மட்டும் வைத்துக் கொண்டு பாக்கிப்பகுதியை வாடகைக்கு விட்டு அதிலும்
தேற்றுகிற கேவலத்தையும் அறிய நாம் தான் வெட்கப்பட நேருகிறது. இதற்கெல்லாம் ஏற்பாடு
செய்து பிழைக்கும் கும்பல் பற்றிய தகவலும் 'சிரிப்புத்தான் வருகுதய்யா' தலைப்பை அர்த்தப்
படுத்துகின்றன.

'அமுதசுரபி' தீபாவளிமலரில் வந்த 'நாதஸ்வரம் - என்னை மயக்கும் மகுடி'
என்னும் கட்டுரை நாதஸ்வரம் பற்றியும் அதில் மன்னராக விளங்கிய திருவாவடுதுறை
ராஜரத்தினம் பிள்ளை மற்றும் அவரது அத்யந்த சீடர் காருகுறிச்சி அருணாசலம்
பற்றியெல்லாம் பல ரசமான தகவல்களைச் சொல்கிறது. 'நாதஸ்வரமா - நாகஸ்வரமா'
எனும் சர்ச்சை, ரயிலில் பயணம் செய்யும் போது தன் ஊர் நெருங்குகையில் 50ரூ
அபராதத்தை தன் உதவியாளரிடம் கொடுத்துவிட்டு சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி
தன் வீட்டுக்கருகே இறங்கிக் கொண்ட ராஜரத்தினம் பிள்ளையின் சாகசம் என எத்தனை
சுவாரஸ்யமான தகவல்கள்!

'தீராநதி'யில் வந்த 'சுப்புடு சில நினைவுகள்' அவரைப் பற்றிய பல புதிய செய்திகளைச்
சொல்கிறது. சிறு வயதில் பர்மாவிலிருந்து பலநாட்கள் உணவில்லாமலே நடந்தே இந்தியா
வந்து, குமாஸ்தாவாகச்சேர்ந்து அண்டர் செகரட்டரியாக ஓய்வுபெற்ற சாதனை பெரிதல்ல
எனும்படி பின்னர் உங்கள் சிபாரிசில் உங்கள் அலுவலகத்தில்நல்ல சம்பளத்தில் வாங்கிக்
கொடுத்த வேலையில் அலுவலுக்கே வராமல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு உங்களைச்
சங்கடத்தில் ஆழ்த்தியதும், நீங்கள் அவரை நம்பி ஒப்படைத்த பல முக்கிய, அவரது துறைசார்ந்த
வேலைகளில் அவர் நாணயமற்று நடந்து ண்டதுமான நிகழ்வுகளை நீங்கள் பெரிது படுத்தாமல்
பெருந் தன்மையுடன் அவரது கடைசிக்காலம் வரை நடந்துகொண்டதும் நெகிழ்ச்சியூட்டுபவை.
ஆனால் உங்களிடம் நன்றி உணர்வை பலமுறை வெளிப்படுத்தியதையும், உங்களது திறமைகள்
பலவற்றை மனம் திறந்து பாராட்டிய குணத் தையையும் குறிப்பிட்டுள்ளீர்கள். உபரியாக செம்பை
வைத்தினாத பாகவதருடனான உங்கள் பரிச்சயத்தையும், அவருக்குப்பிடித்த உங்கள் ஊர்
மட்டிப்பழத்தையும்,அது தொடர்பாக அவர் சொன்ன ஜோக்கை உங்களிடமிருந்த அறிந்தது
நினைவில்லாமல் உங்களிடமே சுப்புடு தனது ஜோக்காகக் குறிட்டதும் வேடிக்கைதான்.
பலாபலன்களை எதிர் பார்த்து சுப்புடுவின் நட்பு அடிக்கடி மாறும் என்னும் பலரது
குற்றச்சாட்டுகளுக்கு மாறாக உங்களிடம் அவர் ஆத்மார்த்தமான நட்புடன் இருந்ததைப்
பெருந்தன்மைடன் மறவாது குறிப்பிட்டுள்ளீர்கள்.


கடிதம் - 3
-----------

'நான் பார்த்த ரோஜாவின் ராஜா' என்கிற கட்டுரையும் உங்களது அதிர்ஷ்டவசமான
வாய்ப்புகள் பற்றி சிலிர்ப்பான சம்பவங்களைச் சொல்கிறது. 21 வயதில் தில்லி
நாடகக்குழு பழக்கத்தால் மோதிலால் நேருவின் நூற்றாண்டு விழாக் கமிட்டியில் இடம்
பெற்றதும் அது தொடர்பான ஏற்பாடுகளின்போது பார்வையிட வந்த நேருஜியிடம்
அறிமுகமும் நேரடி பாராட்டும் பெற்றதும் அரிய வாய்ப்புகள்தான். தொடர்ந்துஉங்களது
நாடகங்களை அவர் பார்த்துப் பாராட்டியதுடன் உங்களது தோள்மீது கைபோட்டுக்கொண்டு
படம் எடுததுக்கொண்டதும் யாருக்கு வாய்க்கும்?

அடுத்து அன்னை தெரஸாவோடு நேர்ந்த விமானப்பயணத்தில் அவரது இருக்கைக்கு
அடுத்து அமரும் பாக்யம் கிட்டியதும் அவர் சிறு பைபிள் புத்தகமும் ஜெபமாலையும்
தந்து உங்களை ஆசீர்வதித்ததும் குருட்டு அதிஷ்டம் என்று சொல்ல முடியுமா?
எல்லோருக்கும் அந்தக் கொடுப்பினை வாய்த்து விடுவதில்லை.

அடுத்து வங்கபந்துவின் மகளான ஷேக் ஹசீனாவின் சந்திப்பும் தொடர்ந்த நான்கு
ஆண்டு நட்பும் உங்களுக்கு மட்டும் எப்படி சாத்யமாகிறது என்ற வியப்பைஏற்படுத்துகிறது.
தில்லியில் மறைவாக அவர் இந்திரா அம்மையாரின் பாதுகாப்பில்இருந்தபோது கடுமையான கட்டுக்காவலுக்கிடையே அவரைச் சந்திக்க நேர்ந்ததும் பின்னர்பங்களாதேஷ் போய்த்
திரும்பிய போதெல்லாம் அவருக்கு மிகவும் பிடித்தமான 'ஹீல்ஸாமீன்'பார்சலைத் தவறாமல்
கொண்டு வந்து கொடுத்ததும் பெரிய சாகசம் போல வியக்கவைக்கிறது. அவருடனான
சந்திப்பின் போது நம் தமிழர் போலல்லாமல் ஒரு ஆங்கிலச்சொல்கூடக் கலக்காது
தம்மொழியில் மூன்று மணி நேரம் பேசியது நம் டாக்டர் ராமதாசை மகிழ வைத்திருக்கும்
என்ற உங்கள் விமர்சனத்தையும் ரசித்தேன்.

அடுத்த கட்டுரையான 'நான் வாழந்த திருவாங்கூர் சமஸ்தானம்' பல புதிய ரசமான
தகவல்களைத் தருகின்றன. 1940களில் இந்தியாவில் மதிய உணவுத்திட்டம் முதன்முதலில்
அறிமுகப்படுத்தபட்டது திருவிதாங்கூரில்தான் என்கிற தகவல் இன்றைய 'மூன்று முட்டைத்
திட்டம்'பற்றி உரிமை கொண்டாடுபவர்க்கு மட்டுமல்ல நமக்குமே புதியதுதான்.
பத்மநாபசுவாமிகோயில் பக்கத்தில் உள்ள பத்மதீர்த்தத்தில் குளித்தவர்களில் பத்துக்கு நாலு
பேருக்காவதுயானைக்கால் நோய் இருந்ததும் பலருக்கு விரைவீக்கம் காரணமாய் பெரிய
மூட்டையைக்காலிடுக்கில் சுமந்த சோகத்தையும்பற்றிச் சொல்கையில் அது சார்ந்து
நீங்கள்குறிப்பிட்டுள்ள பழமொழி 'பத்மதீர்த்தத்தில் குளிச்சால், ஸ்ரீபத்மநாபன் கடாட்சிச்சு
வெச்சு எழுதான் மேசைவேண்டா' குபீர்ச்சிரிப்பை உண்டாக்குகிறது. அடுத்து
இந்தியத் தலைநகரங்களிலேயேசேரிகள்இல்லாத நகரமாக திருவனந்தபுரம் திகழந்தது
என்பதும் வியப்பான செய்திதான். மற்றுமமுறைஜபம் நடக்கும் நாட்களில் கோயில்
ஊட்டுப்புரையில் தினமும் ஆயிரக்கணக்கானவருக்குஅன்னம் வழங்க உணவு தயாரிக்கிற
பிரம்மாண்டத்தைப் பற்றி சிறுவயதில் நீங்கள் உங்கள்தகப்பனாரைக்கேட்ட கேளவியும்
அதற்கு அவர் சொன்ன பதிலும் கூட நினைக்கும்தோறும்சிரிப்பை வரவழைப்பதாகும்.
ஆயிரக்கணக்கானவருக்குச் சமைக்க நாம் வசிக்கும் அறையின்கொள்ளளவுகொண்ட
பெரிய வெண்கல உருளிகளில் , சாம்பார், ரசத்துக்காகப் புளி கரைக்க இரண்டு
மூட்டைப் புளியைப்போட்டு ஆட்கள் உள்ளெ இறங்கி காலால் மிதிப்பதைபற்றி 'அந்த
சமயத்திலே அவங்களுக்கு ஒண்ணுக்கு வந்தா என்னப்பா செய்வாங்க?' என்ற
குழந்தைத்தனமான கேள்வியும்'அது எனக்குத் தெரியாதததனாலேதாண்டா நான்
ஊட்டுபபுரையிலெ சாப்பிடறதேயில்லே' என்றஉங்கள் தந்தையார் பதிலும் எந்த உம்மணா
மூஞ்சியையும் சிரிக்க வைத்துவிடும். இன்னும், உங்கள்தகப்பனாரின் சிக்கன நடவடிக்கையால்
S.S.L.C வரை முழுப்பென்சிலையே உபயோகித்ததில்லைஎன்பது இன்றைய தலைமுறையால்
நம்பமுடியாதுதான்! திருவனந்தபுரம் மகாராஜா. மற்றும்திவான் சி.பி.ராமஸசாமி அய்யர் பற்றிய
ரசமான புதிய தகவல்கள் தனி அத்தியாயம். அதுஅடுத்த கடிதத்தில்.


கடிதம் - 4
----------

'நாற்பதுகளில் நமது சுதந்திரத்துக்கு முன்னால் திருவிதாங்கூரில் நடைபெற்ற
ஆட்சியை வஞ்சி நாட்டின் பொற்காலம் என்பார்கள். அதற்கு ஸ்ரீசித்திரைத்திருநாள்
மகாராஜாவும், திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யருமே காரணம். கல்வி, சுகாதாரம்,
மின்சார வசதி தவிர, கலையுலகிலும் திருவிதாங்கூர் முன்னணியிலிருந்தது. என்பதும்,
மூன்றுபோக நெல் விவசாயத்துக்காக பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டு,
நாஞ்சில்நாடு 'திருவிதாங்கூரின் நெற்களஞ்சியம்' எனப் பெயர் பெற்றதும்,
விமர்சையாகக் கொண்டாடப்படும் நவராத்திரி இசைவிழா நிகழ்ச்சிகள் திருவிதாங்கூர்
வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்யப் பெற்றதும் இதெல்லாம் நடை பெற்றது
நாற்பதுகளில் என்று எண்ணிப் பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது' என்று
குறிப்பிட்டுள்ளீர்கள். அதோடு திருமணம் செய்து கொள்ளாத ஸ்ரீசித்திரைத்திருநாள்
மகாராஜாவின் ஒழுக்கம், தெய்வபக்தி, அவர் தினமும் காலையில் பத்மநாபசாமி கோயில்
தரிசனத்துக்குச் செல்லும் நேரம் பார்த்து, கடிகாரத்தைச் சரி செய்து கொள்ளலாம்
என்கிற நேர ஒழுங்கு - எனும் செய்திகளும் பிரமிப்பை அளிப்பவைதாம்.

திவான் சர்.சி.பி யும் பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்தவர் என்பதையும்
சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய முப்பதுபேர் கொண்ட மந்திரிசபை செய்ய முடியாததை,
தனி ஆளாக நிர்வகித்த சிறந்த நிர்வாகி அவர் என்பதும், அளந்துதான் சிரிப்பவரான
அவர் He was a 'no nonsense' man என்பதாலேயே அவருக்கு இடது வலதுசாரி அரசியல்
கட்சிகளிடையே விரோதிகள் இருந்தனர் என்பதும் எமக்குப் புதிய செய்திகள்தாம், ஆனால்
அவரது இந்தப் பெருமைகளை எல்லாம் குலைக்கிறமாதிரி பின்னால் நிகழ்ந்தவற்றைக்
கேட்கத்தான் கஷ்டமாக இருக்கிறது. அவருக்கும் 'அம்மை ராணி'க்கும் இடையே கள்ளத்
தொடர்பு இருந்ததாக வதந்தி பரவியதும், அதன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட கொலை
முயற்சியால் இரவோடிரவாக அவர் சென்னை திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதும்,
அதற்குப் பின்னர் அவர் திருவிதாங்கூர் திரும்பவே இல்லை என்பதும், அவருக்கு எதிராக
நடந்த கிளர்ச்சிக்கு மறுநாள் தம்பனூர் பேருந்து நிலையத்துக்கு எதிரே தலைப்பாகையுடன்
நின்றிருந்த, கைதேர்ந்த சிற்பியால் உருவாக்கப்பட்ட அவரது வெள்ளைப் பளிங்குச்சிலை
தரையில் கோலமாவாய்ச் சிதறடிக்கப்பட்டதும் வேதனை தரும் தகவல்கள். கேரளம் ஒரு
தலைசிறந்த நிர்வாகியை இழந்தது பெரிய சோகம். திருவனந்தபுரத்தை விட்டு அவர்
போவதற்கு முன் மகாராஜாவுக்கு எழுதிய கடைசிக் கடிதம், ' it is impossible for me
tofunction here as one of several Ministers,....By temperament and training, I
am unfit forcompromises; being autocratic and over-decisive, I don't fit into the
present environment' -அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகிறது.

மேலும் அவர் 'The man with a silver tongue' என்று பெயர் பெற்ற சீனிவாச
சாஸ்திரிக்குஇணையான ஆங்கிலப் புலமை மிக்கவர் என்பதும், பண்டிட் ஜவஹர்லால்
நேருவுக்கு அவரது ஆங்கிலத்தில் மோகம் என்பதும் அறிய அவரது பெருமை மேலும்
உயர்கிறது.


கடிதம் - 5
----------

'தில்லியின் நிகம்போத் காட் (சுடுகாடு)' இங்குள்ள தமிழர்களுக்கு புதிய செய்திகளைச்
சொல்லும் ரசமான கட்டுரை. தில்லியில் நீங்கள் இருந்த காலத்தில் எங்கே தமிழர்கன் வீட்டில்
மரணம் நிகழ்ந்தாலும் 'கூப்பிடு மணியை' என்று உரிமையோடு உங்களை அணுகி உதவி
கேட்டதும், உடனே பையில் 500 ரூபாயைப் போட்டுக் கொண்டு ஸ்கூட்டரில் புறப்பட்டுப்
போய் நீங்கள் பலனை எதிர் பாராது மயானத்தில் இடம் பிடித்து இறுதிச் சடங்குகள்
முறைப்படி நடக்க உதவியதுமாய் சுமார் 200 தடவைக்கு மேலாக தில்லி சுடுகாட்டுக்கு (நிகம்போத்)அலைந்ததும் அறிய சிலிர்ப்பாய் இருக்கிறது. இப்படியும் ஒரு மனிதநேயமா என்று
வியக்க வைக்கிறது. அது தொடர்பான உங்களது அனுபவங்களும் - நெகிழ்ச்சியும் உருக்கமும்
மிக்கவை. மாதத்துக்கு இரண்டு முறையாவது தவறாது இந்த சுடுகாட்டுக்குப் போயிருந்தாலும்
உங்களுக்காகப் போனது இரண்டு தடவைதான் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் ஒன்று
உங்கள் மாமனார் க.நா.சுவுக்காகப் போனது. இதையொட்டி க.நா.சு பற்றி கூறியுள்ள பல
ரசமான தகவல்கள் இலக்கிய ரசிகர்களுக்கு புதியதும் இனியவையுமாகும்.

அடுத்து தில்லி திரைப்பட விழாக்கள் பற்றிய உங்களது அனுபவங்களையும் தகழியின்
'செம்மீன்' 'தங்கத் தாமரை' விருது பெற்றதில் உங்களது பங்கு பற்றியும் 'செம்மீனும்
தேசீயவிருதுகளும்' என்ற கட்டுரை சொல்கிறது. திரைப்பட விருது தேர்வுக் கமிட்டியின் ஜூரிகள்
நியமனத்தில் நடக்கும் அபத்தங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளவை சுவாரஸ்யமானவை. ஒரு சிலர்
சினிமாவையே சுவாசிப்பவர்கள். ஹாலிவுட் படங்களை frame by frame ஆக அலசுபவர்கள்.
எந்த இந்திய சினிமாவைப் பார்த்தாலும், அதற்கு நதிமூலம் ரிஷிமூலமாய், எந்த ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பதற்கு லிஸ்டே வைத்திருப்பவர்கள். மாறாக சினிமா மொழியின் 'ஆனா ஆவன்னா'
கூடத் தெரியாத பலர் மத்திய அரசின் ஏதாவது ஒரு அமைப்பில் தலைவர்களாக இருக்கும்
ஒரே தகுதியில் ஜூரிகளாகத் தேர்வு செய்யப்படும் பலருக்கு எல்லாப் படங்களும் ஒன்றுதான்,
மற்ற ஜூரி நண்பர்களின் கருத்தை ஒட்டியே இவர்களது தேர்வு இருக்கும் என்பதெல்லாம்
உங்களைப் போன்று அருகிருந்த பார்த்தவர்கள் சொன்னால்தான் தெரிகிறது. இத்தகைய
அபத்தத்தால், நல்ல தென்னிந்தியப் படங்கள் - குறிப்பாகத் தமிழ்ப் படங்கள் அடிபட்டுப்போகும் அநீதியைப் பல சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளீர்கள்.

ஒரு தடவை மட்டும் க.நா.சு நடுவராக இருந்தபோது வெ.சாமிநாதன் எழுதி ஜான்
ஆபிரகாம் இயக்கிய 'அக்கிரகாரத்தில் கழுதை' படம் தேர்வானது ஆறுதலான செய்தி. 1965ல்
'செம்மீன்' படத் தேர்வில் ஐந்து ஜூரிகள் தேர்வு செய்த பட்டியலில் ஹாலிவுட் படத்துக்கு
இணையான 'செம்மீன்' இல்லாதது கண்டு அதிர்ச்சியுற்ற நீங்கள், நடுவரில் ஒருவரும்
உங்களின் நெருங்கிய நண்பருமான புல்லா ரெட்டியிடம் முறையிட்டும் பயனில்லாது போய்,
மறுநாள் அதுவரை 'செம்மீன்' படத்தைப் பார்க்காத பிரபல சினிமா விமர்சகரும், உங்களுடன் தில்லி பிலிம் சொசைட்டியின் நிர்வாகக்குழு உறுப்பினரில் ஒருவருமான திருமதி.அமீதாமாலிக்
அவர்களை வற்புறுத்தி அவருக்கென ஸ்பெஷல் ஸுகிரீனிங் போடச் செய்து பார்க்க வைத்து
அவரை உங்கள் கடசிக்கு மாற வைத்து, பட்டியலில் 'செம்மீனை'ச் சேர்க்க வைத்ததும் பிறகு
அப்படம் தேசீய விருது பெறுவது சுலபமாயிற்று என்பதும் உங்களது அரிய சாதனைகளில்
ஒன்று என்பது மட்டுமல்ல - முதல் தடவையாக 'தங்கத்தாமரை' விருது விந்திய மலைக்குத்
தெற்கே பயணித்ததும் அற்புதமானது ஆகும்.


கடிதம் - 6
----------

'சுஜாதா: சில நினைவுகள்' கட்டுரையில் அவருடனான சில இனிய அனுபவங்களை
எழுதி விட்டு, இறுதியில் அவரைக் கடைசிவரை சாகித்யஅகாதமி கண்டு கொள்ளாததைக்
குறிப்பிடுகையில், 'சுஜாதாவின் எழுத்துலகத்தை 'நைலான் கயிறுக்கு முன்/நைலான் கயிறுக்குப்பின்'
என்று பிரித்தால், நைலான் கயிறுக்குப்பின் அவரைக் கட்டவே முடிய வில்லை! அவர் இருந்த
போது கண்டு கொள்ளாத சாகித்ய அகாதமி, இப்போது விழித்துக்கொண்டு - நிச்சயமாக
விழித்துக் கொள்ள மாட்டார்கள் - 'மரணோபராந்த்' (மரணத்துக்குப்பின்னால்)விருது கொடுக்க
முன் வந்தால், அவர் குடும்பத்தினர் அதை நிராகரிக்க வேண்டும். அப்போதுதான் சுஜாதாவின் ஆத்மாவுக்குச் சாந்தி கிடைக்கும். அவரும் அதைத்தான் செய்திருப்பார். உலகெங்குமிருக்கும்
கோடிக்கணக்கான 'சுஜாதா விசிறிகள்'அவருக்களித்திருக்கும் அபரிமிதமான அன்புக்கும்
ஆதரவுக்கும் மேலல்ல இவ்விருதுகள். பலவருஷங்களுக்கு முன்பே சென்னையில் அந்த மாபெரும்
எழுத்தாளருக்கு 'கட்-அவுட்' வைத்தவர்களல்லவா நாம்' என்று குறிப்பிட்டிருப்பது அவரது விசிறி
அல்லாதவரும் ஏற்கக் கூடியதே.

'தில்லியில் தென்னிந்திய ஹோட்டல்களும் கையேந்தி பவன்களும்' கட்டுரை தில்லியில்
தமிழருக்குத் தங்கு மிடங்களும் உணவு வசதிகளும் கடந்த 50 ஆண்டுகளில் வளர்ந்த கதையைச்
சொல்கிறது.

அடுத்த கட்டுரையான 'காந்திபாய் தேசாய்: தலைவர்களும் தனையர்களும்', நம்மூர்த்
தலைவர்களின் வாரிசுகளை நல்லவர்களாக்கி விடுவதாக உள்ளது. நேர்மைக்கும் நாணயத்திற்கும்
சிறந்தவர் என்று அனைவராலும் போற்றப்பட்ட மொராய்ஜி தேசாயின் மகன் காந்திபாய் தேசாயின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கை களை அறியும்போது இது ஊர்ஜிதமாகிறது.'இவர் மொராய்ஜியின்
மகனாகவே இருக்க லாயக்கில்லை என்பார்கள். ஊர்வன பறப்பனவில் ரயில் வண்டியையும்,
ஏரோப்பிளேனையும் தவிர மற்றவையெல்லாம் தள்ளுபடியல்ல! தண்ணியில் மீன் குட்டி போல
நீந்துவார்' என்பது உண்மையில் வெட்கக்கேடானதுதான். இதைவிடக் கேவலம் நீங்கள்
குறிப்பிட்டுள்ள அவரது நாணயக்குறைவான செயல் பற்றியது. தங்களது முதலாளி வினோத்
என்பவர் நெருக்கமாய் இருந்த உங்களிடம்கூட சொல்லாமல், காந்திபாய் தேசாய்க்கு -
மொராய்ஜி மகன் ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கையில் 40 லட்சம் கைமாற்றாகக் கொடுத்ததைக்
கேட்டபோது காந்திபாய் அடியாட்கள் வைத்து மிரட்டி பணத்தைத் திருப்பித் தராததுபற்றி அறிய
அதிர்ச்சியாக உள்ளது. முடிவில் காந்தியவாதியாக அறியப் பட்ட மொராய்ஜிக்குத் தன் மகன்
காந்திபாய் நடத்திய பண ஊழல்களை விசாரிக்க வைத்தியநாதன் கமிஷனை நியமிக்க
நேர்ந்துதான் பரிதாபம்!

அடுத்து தில்லியில் சுலபத்தில் சாதிக்க முடியாத பலவற்றை வி.ஐ.பி களுக்காக உங்களால்
மட்டும் எப்படி செய்து தர முடிந்தது என்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் புருவத்தை
உயர்த்த வைப்பது:

'அந்தக் காலத்தில் என்னைப் போன்றவர்கள் தில்லியில் குப்பை கொட்ட கீழ்கண்ட
திறமைகள் இல்லாமல் முடியாது -

1. Indian Airlines- ல் வீட்டில் இருந்து கொண்டே தொலைபேசியில் யாருக்கும் எந்த
நேரத்திலும் எந்த ஊருக்கும் Ticket confirm செய்யும் திறன். இது இந்தியன் ரயில்வேக்கும்
பொருந்தும்.

2. தில்லியில் அசோகா ஹோட்டலில் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், நடு இரவிலும்
telephone மூலம்ஒரு டபுள் ரூம் ஏற்பாடு செய்யும் சாமர்த்தியம்.

3. தில்லி ஏர்ப்போர்ட்டில் எந்த ஹாஜி மஸ்தானையும் சுங்கப் பரிசோதனை இல்லாமல்
வெளியே அழைத்து வருவது.

4. Takkal வராத காலத்தில் 24 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கச் செய்யும் திறமை.

5. நடு நிசியில் ஆயிரம் டாலர் கரன்சியோ இரு பாட்டில் ஸ்காட்சோ வரவழைக்கும் மாஜிக்.

6. போலீஸ் கேசில் மாட்டிக் கொண்டவரைப் பூப்போல எந்தக் கேசும் இல்லாமல் வெளியே
கொண்டு வருவது.

7. Delhi Telephones General Managerன் அந்தந்த நட்பு.

- உண்மையாகவே இது அசாதாரணமானதுதான்!

'தில்லியிலிருக்கும் ஒரு மத்திய மந்திரிக்கே மேலே சொன்ன பல விஷயங்கள் செய்ய
வராது. எங்களைப் போன்ற பாமரருக்கத்தான் இது அத்துபடி. அதனால்தான் எங்களுக்கும்
ஒரு 'விலை' இருந்தது' என்பது சுவாரஸ்யமான முத்தாய்ப்பு!
கடிதம் - 7
----------

'ஒரு நீண்ட பயணம்' என்கிற கட்டுரையில் தில்லிக்கும் தமிழ் நாட்டிற்குமான
இந்தியன் ரயில்வே பயணம் கடந்த 50 ஆண்டுகளில் கண்ட மாற்றங்களை, வளர்ச்சிகளை -
முன் பதிவு செய்வதில் அந்தக்காலத்து அவஸ்தை, அப்போதைய ஜனதா எக்ஸ்பிரஸ்,
கிராண்டிரங்க் எக்ஸ்பிரஸ்களின், இன்றைய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் போலன்றி எப்போது
போய்ச்சேரும் என்று ரயில்வே அமைச்சரே சொல்ல முடியாத ஆமை வேகம், புகை எஞ்சின்
என்பதால் வண்டியைவிட்டு இறங்கும் போது எல்லோருக்கும் போடப்படும் கரிப்பொடி
மேக்கப், பல ரயில்வே அமைச்சர்கள் இந்திய ரயில்வேயை தம் சொந்த ஜமீனாகவே கருதி
ஆட்சி செய்தது(ஜாபர்ஷெரீப் இரவு இரண்டு மணிக்குப்பெயர் தெரியாத ஸ்டேஷனில்ஐஸ்கிரீம்
வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து ரயிலை இரண்டு மணி நேரம் நிறுத்திவைத்தது, டிக்கட்
வாங்காமல் பயணம் செய்து பிடிபட்டபோது 'எங்கள் மருமகன்ரயில்வே மந்திரியாக
இருக்கும்போது யார் எங்களிடம் டிக்கட் கேட்பது?' என்று லாலுபிரசாத்தின் மாமனார்
மாமியார் அடம் பிடித்தது போல), முதன் முதலில்ரயில்வேயில் Aluminiyam foil
உபயோகத்துக்கு வந்ததின் பின்னணி ரகஸ்யம் - என்றுஏகப்பட்ட ரசமான தகவல்களைச்
சொல்லியுள்ளீர்கள்.

'பங்களாதேஷ் சில நினைவுகள்' கட்டுரையில் இந்தியாவிற்குள் பங்களாதேஷ்
அகதிகள்வந்ததின் ரகசியம் பற்றிச் சொல்லி இருப்பது - நமது எல்லைப் பாதுகாப்பு
ஜவான்களுக்கு கையூட்டு தந்து, நாடகம் ஆடும் அவலம் - நம்மைத் தலைகுனிய வைக்கும்
செய்தி. மாதம் இருமுறை உங்கள் நிறுவனத்தின் பிரதிநிதியாக நீங்கள் பங்களாதேஷ் செல்லும்
வாய்ப்பு கிடைத்தபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை - வங்கஅதிபர் முஜீபூர்
ரஹ்மானைச்சந்தித்தது, அவரது மனித நேயம், அவரது படுகொலை தந்த அதிர்ச்சி,
கொல்கத்தா - டாக்காபயணிகள் ரயில் விட்டதில் நமது கசப்பான அனுபவம் என நிறைய
புதிய தகவல்களைச்சொல்லியுள்ளீர்கள். நம்மில் பலருக்கும் தெரியாத தகவலான
பங்களாதேஷில் தமிழ் பேசும் குடும்பங்கள் இருப்பது பற்றி எழுதும்போது, பல ரசமான
செய்திகள் சொல்லப் பட்டுள்ளன. நாற்பதுகளில் நாகப்பட்டினம், கீழக்கரை, கிருஷ்ணாபுரம்,
ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து தம் குலத்தொழிலான வாசனைத்திரவியம் வாங்கி விற்க
அப்போதைய கிழக்கு வங்காளத்துக்குப் போன முஸ்லிம்கள் அங்கேயே தங்கிப்போனதும்,
அவர்களுக்குத் தமிழ்நாட்டைப்பற்றியோ,அங்கு தற்போது நடப்பவை பற்றியோ எதுவுமே
தெரிந்திருக்கவில்லலை என்பதும், 1974ல் உங்களிடம் ஒரு முதியவர் 'எம்.கே.தியாகராஜ
பாகவதர், ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், எல்லாம் இன்னமும் நடித்துக்
கொண்டிருக்கிறார்களா?' என்று கேட்டதும் அவர்களுக்காக அங்கே போகும் போதெல்லாம்
பழைய ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் போன்ற தமிழ்ப்பத்திரிகைகளுடன், தமிழ் கற்க உதவும்
பாலபாட நூல்களை தில்லி தமிழ்ப்பள்ளியிலிருந்து வாங்கிப்போய்க் கொடுத்ததும்
நெகிழ்ச்சியான செய்திகள். அதோடு வெளியுறவுச்செயலர் திரு.கே.பி.எஸ்.மேனனனுடன்
அதில் உள்ள நடைமுறைச் சிக்கலைச் சொன்னதால் உதவமுடியாமல் போன தகவலும்
மனதை உருக்குபவை.
கடிதம் - 8
----------

'சிங் இஸ் கிங்' என்கிற கட்டுரை சீக்கியர்கள் பற்றி நாங்கள் அதிகம் அறியாத
பல செய்திகளைச் சொல்கின்றது. 1984ல் இந்திராகாந்தி படுகொலையை முன்னிட்டு
அப்பாவி சீக்கியர் பலர் கொல்லப்பட்டதையும் அதன் பரிதாபத்தையும் நேரில் பார்த்த
நீங்கள் உருக்கமாகச் சொல்லியுள்ளீர்கள். இப்போது கேட்டாலும் மனதை நடுங்கச்
செய்யும் கொடுமை அது. அது தொடர்பாக சீக்கியர்களின் பழக்கங்கள், வாழ்க்கைமுறை
அவர்களது தனித்தன்மை, பெருமை பற்றி எல்லாம் குறிப்பிட்டு சர்தார்ஜி, சிங் பற்றி
யெல்லாம் நம்மிடையே புழங்கும் அசட்டு நையாண்டிக் கதைகளைக் களையவும்
அவர்களைப்பற்றி உயர்ந்த எண்ணம் ஏற்படவும் செய்திருக்கிறீர்கள்.

'எல்லா சர்தார்ஜிகளும் பஞ்சாபிகள். ஆனால் எல்லா பஞ்சாபிகளும் சர்தார்ஜிகள்
அல்லர்'. அதேபோல 'எல்லா சர்தார்ஜிகளும் சிங்தான். ஆனால் எல்லா சிங்குகளும்
சர்தார்ஜிகள் அல்லர்' என்ற உண்மைகள் எம்மில் பலர் அறியாயதுதான். இவ்வுண்மைகள்
பற்றி உதாரணங்களுடன் விளக்கியிருப்பதுடன் பஞ்சாபிகளின் கடின உழைப்பைப்
பற்றியும், புத்திசாலித்தனம் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர்களது கடின
உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் தான் இன்று பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில்
இந்தியா முன்னணியில் இருக்கிறது என்கிற செய்தி பாராட்டுக்குரியதும் பஞ்சாபிகள்
பற்றிய நம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக்கூடியதும் ஆகும். இன்னொரு சுவாரஸ்யமான
தகவலையும் சொல்லியுள்ளீர்கள். 'இந்தியமொழிகளிலேயேபஞ்சாபியைப்போல் ஒரு
வாக்கியத்துக்கு இரு அர்த்தங்கள் உள்ள வேறு மொழியே இல்லை' என்பதை
உதாரணங்களுடன் ரசமாகச் சொல்லியுள்ளீர்கள். அதிகார வர்க்கத்தின் காலில் விழும்
கலாச்சாரம் அவர்களுக்குத் தெரியாது என்பது தமிழர்கள் தலை குனிய வேண்டிய செய்தி.
சீக்கியர்கள் வாழ்க்கையில் எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள், நன்கு பழகி விட்டால்
நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள் என்பவையும் அவர்களைப் பற்றிய
நமது மரியாதையைக் கூட்டுகிறது.

கடைசிக் கட்டுரையான 'பூர்ணம் விசுவநாதன் நினைவுகள்' ஒரு ஆரோக்கியமான
நினைவஞ்சலி. 50களில் அவர் அகில இந்திய வானொலியில் தமிழ்ச் செய்தி வாசிப்பாளராக
இருந்ததும், அவரது குரலைக்கேட்க தினமும் தமிழர்கள் ஆவலோடு காத்திருந்ததும்
என்னைப்போன்ற வயதில் மூத்தவர்கள் அறிந்ததுதான் என்றாலும் இந்தியா சுதந்திரம்
பெற்ற செய்தியை முதலில் தமிழில் உலகுக்குச் சொன்னவர் அவர்தான் என்பது எம்மில்
பலரும் அறியாதது. அவரது சகோதரர்கள் பூர்ணம் சோமசுந்தரம், 'முள்ளும் மலரும்'
திரைப்படக் கதாசிரியர் உமாசந்திரன், தங்கை பூர்ணம் லட்சுமி அனைவருமெ எழுத்தளார்கள்
என்பதும் இளைய தலைமுறையினர் பலர் அறியாதது. பூர்ணம் விசுவநாதன் சிறந்த நாடக
ஆசிரியராக மட்டுமின்றி அற்புதமான குணச்சித்திர நடிகராகத் திகழ்ந்ததும், சுஜாதாவின்
நாடகங்கள் அவரது நடிப்பால் பிரபலமானதும் பலரும் அறிந்ததுதான். ஆனால் அவருடனான
உங்கள் வானொலி நாடக அனுபவங்கள் உங்களது ரசமான பதிவுகளின் மூலமே அறிய முடிகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்னர் தில்லியில் தங்கிப் படித்த, 1991ல் சமாதானத்துக்கான நோபல்
பரிசினைப்பெற்ற பர்மியப் போராளி ஆங் ஸான் ஸு கி அம்மையாரை நீங்கள் பூர்ணத்துடன்
சந்தித்ததும், அப்போது அவருக்கு இந்தியாவில் தங்க அனுமதி கிடைப்பதில் பிரச்சினை
இருந்ததை அறிந்து உங்கள் நண்பரின் உதவியால் மேலும் இரண்டு ஆண்டுகள் தங்க அனுமதி
ஒரு நொடியில் பெற்றுத் தந்தமைக்காக அவர் உங்களுக்கு நன்றி சொன்னதுமமான உங்கள்
சாதனையும் பிரமிப்பைத்தருகிறது. பிரமிப்புக்குக் காரணம் 60 ஆண்டுகளுக்கு முன்னர்
வெறும் பள்ளி இறுதி வகுப்புத் தகுதியுடன், சிறுவனாகத் தனியே தில்லி சென்ற பாலக்காட்டுத்
தமிழன் படிப்படியாக எல்லாவிதத்திலும் தன்னைத் தகுதியாக்கிக்கொண்டு தில்லியில் எவருக்கும்
எதையும் சாதித்துக் கொடுப்பவராக உயர்ந்ததும், உலகம் முழுழும் சுற்றி வந்ததும், உலகத்
தலைவர் பலரது அறிமுகமும் அன்பும் பெற்றதும் மட்டுமல்ல - இத்தனை சாதனைக்கும்
அதிர்ஷ்ட தேவதையின் பூரண அருள் இப்படி யாருக்கு வாய்க்கும் என்பதும்தான்.

தமிழ் நாட்டிற்கு வெளியே - 50 ஆண்டுகளுக்கு மேலாய் தில்லியில் இருந்த உங்களது
அலுப்புத் தராத எழுத்துத் திறனும் அரிதான அனுபவங்களும் தமிழகம் திரும்பிய பிறகே நாங்கள்
அறிய உதவிய 'உயிர்மை' ஆசிரியர் மனுஷ்ய புத்திரனுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

இத்தொகுப்பில் உள்ள உங்களது கட்டுரைகளைப் போலவே உங்களைப்பற்றி பிரபல
எழுத்தாளர்கள், திரைத்துறைக் கலைஞர்கள் என்று 25க்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ள
பாராட்டுரைகளும் உங்களைப்பற்றி மேலும் பல ரசமான செய்திகளைச் சொல்கின்றன. அவையும்
படித்து ரசிக்கத்தக்கவையே.

- நிறைவுற்றது