Thursday, February 21, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 15.-ஜெயமோகன்.

1. சிறுகதை என்பது ஒரு அசைவை மட்டுமே பதிவு செய்யும் காமிரா ஷாட் போல. ஒரே ஒரு அசைவுக்குள் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் ஒரு அசைவு மட்டுமே.

2. நாவல் என்பது எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டக் கூடிய காமிரா ஷாட்.

3. சிறுகதைக்கு கட்டுக் கோப்பு இருக்க வேண்டும் என்பது அதன் செவ்வியல் விதி. அதை மாற்ற முயன்று எழுதப்பட்ட சிறுகதைகளில் கலைவெற்றிகள் பல உண்டு ஆனால் அவை மெல்ல மெல்ல சிறுகதையின் வடிவத்தை இல்லாமல் ஆக்கி விட்டன.

3. சிறுகதையின் மௌனம் அது முடிந்த பிறகு உள்ளது.

4. நாவலின் மௌனம் அது விடும் இடைவெளிகளில் உண்டு. நிகழ்வுகள், சித்தரிப்புகள் நடுவே இடைவெளி.

5. கவிதையின் மௌனம் அதன் சொற்களுக்கும் படிமங்களுக்கும் இடையே ஆன இடைவெளியில் உள்ளது. இடைவெளி என்பது வாசகன் தன் கற்பனை மூலம் நிரப்பிக்கி கொள்ள வேண்டிய ஒன்று.

6. நாவல் ஒருமை கொள்ள முடியாது. ஏனென்றால் அது தன் பேசு பொருளை 'முழுமையாக' சொல்லிவிட வேண்டு மன்று முனைகிறது. அந்த எண்ணத்தை நம்மில் ஏற்படுத்துகிறது.

7. இலக்கண ரீதியாக நோக்கினால் ஒரு நாவலுக்கு சிறுகதையின் கூர்மை வந்துவிட்டதென்றாலே அது குறுநாவல் தான்.

8 .நாவலுக்கு உச்ச கட்டம் இருக்கலாம். ஆனால் இறுதி முடிச்சு இருக்குமென்றால் அதற்காகவே அதன் உடல் முழுக்க உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படியானால் அதன் உடலுக்குள் வாசக இடைவெளி நிகழ முடியாது. ஆகவே முடிவில் திருப்பங் கொள்ளும் நாவல்கள் சிறப்பாக அமைவதில்லை

Tuesday, February 19, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள்............14- அ.ச.ஞானசம்பந்தன்.

1. ஒரு சிறுகதை நம் மனதில் தங்க வேண்டுமானால் இரண்டே வழிகள்தான் உண்டு. அதில் ஒப்பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண்டும். இன்றேல் அதில் வரும் பாத்திரங்கள் நாம் மதித்து விரும்பும் ஒப்பற்ற பண்பு ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

2. ஆழமான உணர்ச்சியை வெளியிடுவதிலும் அதையும் சுருங்கச் சொல்லிப் பதிய வைப்பதிலும் சிறுகதை கவிதையை அடுத்து நிற்கிறது.

3. கதை உயிர் பெறுவது நிகழ்ச்சிகளால் அன்று ! அவற்றைக் கூறும் ஆசிரியன் பயன்படுத்தும் கற்பனைத் திறமும் கூறும் திறமுமே கதைக்கு உயிர் தருகின்றன. அவன் பொறுக்கிய நிகழ்ச்சிகள் கூறப்படும் முறையில் இருந்தே கதையின் உயர்வும் தாழ்வும் விளங்கும்.

4. ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சி சிறுகதையில் இருக்கக் கூடாது என்பதன்று. ஆனால், இரண்டு நிகழ்ச்சிகள் இருப்பின் அவற்றின் தொடர்பு நன்கு அமைக்கப் படல் வேண்டும். படிப்பவர் கவனம் இரண்டிலும் பட்டுத் தெறித்து விடாதபடி நிகழ்ச்சிகள் அமைக்கப்படல் சிறந்தமுறை. நிகழ்ச்சிகள அதிகப்படினும் ஒரு நடு நிகழ்ச்சி இருக்க, அதன் கிளைகளாக ஏனையவை அமைதல் நன்று.

5. சிறுகதைகளில் காணப்பெறும் நிகழ்ச்சி அன்றாடம் நாம் காணும் ஒன்றாகவே இருக்கலாம். ஆனால், வாழ்க்கைச் சூழலில் பட்டுக் 'கருமமே கண்ணாயினார்' என்று திரியும் நமக்கு அது பெரிதாகப் படுவதில்லை. ஆனால், தக்க சூழ்நிலையில் அதே நிகழ்ச்சி சிறுகதையில் இடம் பெறின் நம்மைக் கவர்ந்து விடுகிறது.

6. சிறுகதை எல்லைக்குள் அடங்கும் நிகழ்ச்சி வேண்டும். அந்நிகழ்ச்சியும் பூரணமாக அமைய வேண்டும். இனி அது வளர்க்கப்பட இயலாது; மேலும் வளர்த்துச் சென்றால் பயன் ஒன்றுமில்லை என்று கூறத் தக்க நிலையில் அது முழுவதாக அமைந்திருத்தல் வேண்டும். இம் முழுத்தன்மை கதையின் எல்லைக்குள் அமைந்து விட்டால் அன்றிச் சிறப்பில்லை.

7. சிறுகதை எந்த ஒன்றைப் பற்றி விவரிக்க எழுந்ததோ அது தவிர ஏனையவற்றில் நம் கவனத்தை ஈர்த்தல் கூடாது. குறிக்கோளிலும் அடைவிக்கும் பயனிலும் ஒருமைத் தன்மை இருப்பதே சிறுகதையின் சிறப்புக்கு அடையாளம்.

8. எங்கே ஒரு சொல்லானது கற்பனையைத் தூண்டும் சக்தியோடு காணப்படு கிறதோ, எங்கே ஒரு சொல் ஒரு சம்பவத்தை அல்லது படத்தை அப்படியே நினைவிற்குக் கொண்டு வருகிறதோ, எங்கே ஒரு சொல் கற்பனைச் சக்திக்கு விருந்தளிக்கிறதோ, அங்கே, அந்தச் சொல் தோன்றும் இடத்திலே, நாம் கவிதையைக் காண்கிறோம்.

Tuesday, February 12, 2008

'எழுத்துக்கலை பற்றி இவர்கள்.............13. புதுமைப் பித்தன்;

1. இலக்கியத்தின் ஜீவநாடி உணர்ச்சியும் சிருஷ்டி சக்தியும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் அது வெறும் குப்பை.

2. எழுத்துக்குக் கைப்பழக்கம் மிகவும் அவசியம். முடுக்கி விட்ட யந்திரம் மாதிரி தானே ஓரிடத்தில் வந்து நிற்கும்.

3. ஒரு தனிச் சம்பவம் அல்லது உணர்ச்சி அல்லது குணவிஸ்தாரம் அல்லது வர்ணனை எடுத்தாளப்படும் லிரிக் என்ற கவிதைப் பகுதி போல் சிறுகதை. சிறுகதையின் ரூபம் எழுதுபவனின் மனோதர்மத்தைப் பொறுத்தது.

4. சிறுகதைப் பின்னலில் ஆரம்பம், மத்திய சம்பவம், அதன் வளர்ச்சிஅல்லது வீழ்ச்சிஎன்ற மூன்று பகுதிகள் உண்டு. இம்மூன்றும் படிப்படியாக வளர்ந்து கொண்டே போகும். சமீபத்தில் எழுதப்பட்ட அமெரிக்கச் சிறுகதைகளில் பழைய சம்பிரதாயமான ஆரம்பம், முடிவு என்ற இரண்டு பகுதிகளும் கிடையவே கிடையாது. கதை திடீரென்று மத்திய சம்பவத்தின் உச்சஸ்தானத்தில் ஆரம்பிக்கிறது. அதிலேயே முடிவடைகிறது. இன்னும் வேறு விதமான கதைகளும் உண்டு. அவற்றில் முடிவு என்பதே கிடையாது. அதாவது, கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடியும் போது அதைப் பற்றிய சிந்தனை முடிவடைந்து விடாது. இப்படிப் பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகிறது என்று சொன்னால் விசித்திரமாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை. கடவுள் வாழ்க்கையின் கடைசிப் பக்கத்தை எழுதி விடவில்லை. அவரால் எழுதவும் சாத்யப் படாத காரியம்......கதைகளுக்குச் சம்பவம் அவசியமா? இப்படிப்பட்ட விகற்பங்கள் இருக்கலாமா? என்று பலர் கேட்கிறார்கள். கதைகள் அவரவருடைய சுவையையும் ரசனையையும்தான் பொறுத்தது. அவரவருடைய அனுபவத்திற்கும், ரசனைக்கும் ஏற்றபடிதான் கதைகளைப் படிக்க முடியும்.

5. பலர் இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என்று ஒரு தத்துவம் இருப்பதாகவும் , அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவித சீலைப்பேன் வாழ்வு நடத்தி விட்டோம். சில விஷயங்களை நேர்நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம். அதனால்தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றிப் பேசுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக் களரியையும், மனக் குரூரங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால் ஏழை விபச்சாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போகப் போகிறது? இற்றுப் போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப் போகிறதா? மேலும், இலக்கியமென்பது மன அவசத்தின் எழுச்சிதானே?

6. நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரம்மநாயகம் இத்தியாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு இவர்களது வழ்க்கைக்கு இடமளிக்காமல் காதல், கத்தரிக்காய் பண்ணிக் கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை.

7. பயன் கருதாது தன்மயமாகி லயித்து ஒட்டிப் புளுகுவதுதான் கதை.

8. சிறுகதை வாழ்க்கையின் சிறிய சாளரம். வாழ்வுக்குப் பொருள் கொடுப்பதுதான் கலை. சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மாணித்துக் காண்பிக்கிறது.

(இன்னும் வரும்)

Tuesday, February 05, 2008

எழுத்துக்கலை பற்றி இவர்கள்..........12- க.நா.சுப்ரமண்யம்

1. 'கண்ணீத்துளி வர உள்ளுருக்குதல்' கலையின் ஒரு கோடிச் செய்கை. அசைந்து கொடுக்காமல் ஒதுங்கி நிற்கச் செய்வது கலையின் மறு கோடி.

2. இரண்டாந்தரம் படிக்க முடியாத ஒரு நூல் இலக்கியத் தரமான நூல் அல்ல. இரண்டாம் தடவை படிக்கும்போது ஒரு நூலில் பல புது அம்சங்கள் கண்ணில் படவேண்டும். கருத்தில் உறைக்க வேண்டும். அப்படிப் புதிதாக எதுவும் உறைக்கா விட்டால் அது தரமான நூல் அல்ல என்பது என் இலக்கிய அபிப்பிராயங்களில் ஒன்றாகும்.

3. ஒரு அனுபவத்தை விவரிக்கிற நல்ல கவியின் வார்த்தைகள் நமது ( அதாவது வாசகனின்) உள்ளத்தில் மறைவாகக் கிடக்கிற அனுபவங்களில் எதோ ஒன்றைப் பாதாளக் கரண்டி போலப் பற்றி இழுக்கிறது. எதொ புரிகிறமாதிரி தெரிகிறது. உடனடியாகவே இந்த அனுபவ எதிரொலிப்பு நிகழ்கிறபடியால் நாம் அதைப்பற்றி அதிகமாக சிந்தித்துப் பார்ப்பதில்லை. நம்முடைய செயல்., சிந்திப்பு எதுவும் இல்லாமலே, தானாகவே, ஒரு அனுபவம் இன்னொருவரின் அனுபவத்தை தட்டி எழுப்புகிற மாதிரி இருக்கிறது. அப்படித் தட்டி எழுப்பாது போனால், ஒரு அனுபவத்தைச் சித்தரிக்கிற வார்த்தைகள் படிப்பவன் உள்ளத்தில் எதிரொலியை எழுப்பாது போனால் அதை நல்ல கலை என்று நாம் ஏற்றுக்கொள்வதில்லை.

4. கலை எனபது என்ன என்று யோசிக்கையில் அது சற்று சிரமமான விஷயந்தான். கடவுளை எடுத்துக் கொண்டு அதைச் சொல்லலாம் அல்லது கடவுளை மறுக்கிற வேதாந்தத்¨, பிரம்மவாதத்தை எடுத்துக் கொண்டு அதை நாம் தெளிவாக்கலாம். எந்த தெய்வத்தையுமே, எந்த நிர்க்குண பிரம்மத்தையுமே வார்த்தைகளில் அகப்படாதது என்று வர்ண்¢ப்பதுதான் நமது மரபு. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட என்கிற நிர்குண பிரmமத்தையும், கடவுளையும் போன்றதுதான் இலக்கியமும்.

5. ஒருவகை மொழிகடந்த பொருள்தான் இலக்கியம். எனவே இலக்கியத்தை பூனை காலால் தூரத்தில் தொட்டுப் பார்ப்பது போல் தான் செய்ய முடியும்.

6.கலைக்கும் பிரச்சாரத்துக்கும் இடையில் ஒரு மயிரிழைதான் வித்தியாசம் இருக்கிறது.

7. இலக்கியம் ஒன்றும் (ஒன்றையும்) சொல்லாமலும் இருக்கலாம்.

8. எழுத்தாளன் அவனுடைய அரசியல், பொருளாதார, சமூகப் பின்னணியைப் பிரதிபலித்தே ஆக வேண்டும் என்பதில்லை. இந்த அம்சங்களோடு ஒத்துப் போகலாம். அல்லது எதிர்த்துக் கலகம் செய்யலாம். அது ஒரு பிரக்ஞா பூர்வமான செயல்.