Sunday, July 19, 2009

'கவிஞர் பழமலய்'யின் - 'கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்'

மண் மணம் கமழும் மக்கள் மொழியில் கவிதைபாணியை உருவாக்கிய 'கவிஞர் பழமலய்' யின்
பத்தாவது நூலாக 'கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்' வெளி வந்துள்ளது. இதுகாறும் தன் சொந்த
பந்தங்களின், தன் பிராந்திய மக்களின் கதைகளையும் அவர்களது வாழ்வின் அவலங்களையுமே கவிதைகளில்
பதிவுசெய்து வந்த அவர் இப்போது தன் பிராந்தியத்துக்கு வெளியே நாடு முழுதுமாய் தேசீய அளவிலும்
உலக அளவிலுமாய்த் தன் பார்வையைச் செலுத்தி எழுதும் மாற்றம் பெற்றிருப்பதை இத் தொகுப்பில் காண
முடிகிறது. 2001ல் ஒரிசா மாநிலம் கொனாரக்கில் நடைபெற்ற 'அகில இந்திய கவி சம்மேளன'த்தில் கலந்து
கொண்டு கவிதை வாசித்துத் திரும்புகையில் கொனாரக்கின் சூரியனார் கோயிலையும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளையும் கண்டு வந்தபின் இந்த பரந்துபட்ட பார்வையின் தாக்கம் உண்டாகி இருக்கலாம். கொனாரக்கில் கண்ட கோலூன்றிய ஒரு பாட்டியின் சிலை தந்த கற்பனையைக் கருவாகக் கொண்டதுதான் - நூலின் தலைப்பாக உள்ள 'கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்' என்கிற கவிதை.

முதல் கவிதையிலேயே அவரது பாணியில் ஒரு மாற்றம் தெரிகிறது. சொல்லப்போனால் அது கவிதையே
அல்ல. எழுத வேண்டிய கவிதைக்கான குறிப்புகளாகும். அதுவே தலைப்புமாகியுள்ளது - 'எழுத வேண்டிய
கவிதை: இவை குறிப்புகள்'. உலகின் கவனத்தை ஈர்த்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது இராக்கில் ஒரு
நிருபர் தன் ஷ¥வை வீசிய செய்தியும் அதன் தொடர் நிகழ்வுகளும் செய்திகளாகத் தொகுத்தளிக்கப்
பட்டுள்ளன. இதுதான் தற்போதைய புதிய கவிதையாம்! எனக்கென்னவோ இது அதி நவீன நட்சத்திர விடுதி
களில் காப்பிக்கு ர்டர் கொடுத்தால் பால், சர்க்கரை, டிக்காஷன் கிய மூலப்பொருள்களைக் கொண்டு
வந்து சர்வர் வைப்பதுபோலத் தோன்றுகிறது. இனி அடுத்த நிலையில் பால் கறந்து கொள்ளப் பசுமாட்டைக்
கொண்டுவந்து நிறுத்துவார்களோ என்னவோ? இது என் புரிதலின் வறட்சியாகக் கூட இருக்கலாம். கவிஞர்,
கவிதை உருவாக்கத்தில் பல்வேறு சோதனைகளையும் சாதனைகளையும் அவதானித்து வருகிறவர். அவரது
இந்த பாணி 'கவிதை அறிவுஜீவி'களுக்கு ஏற்புடையதாகவும் இருக்கக் கூடும்.

அடுத்து, இவரது இன்றைய கவிதைகளில் அவரது ரம்பகால மரபுக்கவிதையாக்கத்தின் மீட்சி இத்
தொகுப்பில் உள்ள சில கவிதைகளின் மூலம் தெரிகிறது. 'மழை' என்கிற கவிதை முழுக்க முழுக்க மரபுவழிப்
பட்ட புதுக்கவிதை எனலாம். பாரதியின் வசன கவிதையை ஒத்த சொல்லாட்சிகளும், கலைநயமும், ஒலியமை
தியும் கொண்ட கவிதை அது. ஒவ்வொரு பாடல் (stanza) முடிவிலும் 'மழை...மழை... அது, பெய்யட்டும்!' என்று மரபுக்கவிதையின் அழகைக் கொண்டுள்ளது. மேலும் செய்தி வெளிப்பாடும் சொல்லடுக்குகளாய், புதுமைப்பித்தன் 'அன்று இரவு' கதையில் வசனகாவியமாய் அடுக்கிக் கொண்டே போவது போல நெஞ்சை ஈர்ப்பதாய் சுவை கூட்டுகிறது. கவிதையைப் பார்க்கலாம்:

'மழை..மழை...அது, பெய்யட்டும்!
வீட்டின் மீது,
வீதியில், வெளியில் -
காட்டின் மீது,
மலையில், மனத்தில் -
இண்டில், இடுக்கில், எங்கெங்கும் -
அது பெய்யட்டும்! - என்று கவிதை செல்கிறது.

பழமலய்க்கு 'நகைச்சுவை' இயல்பாகவே அமைந்துள்ள ஒரு கொடை. அவரது கவிதைகளில் நமுட்டுச்
சிரிப்பாய் பல இடங்களில் அங்கதங்கள் அமைந்திருக்கும். அதில் சமூக அக்கறையும், அனுதாபமும்
இருக்கும். இத் தொகுப்பில் அப்படிப் பல கவிதைகளைக் காணலாம். 'புறமுதுகு' என்றொரு கவிதை. இது
போரில் புறங்காட்டுதல் பற்றியது அல்ல. முதுகுப் பகுதியை முழுதும் திறந்து போட்டுக்கொண்டு போகிற
பெண்களுக்கான எச்சரிக்கை.

'.............நம் பெண்களுக்கு
இதில், இவ்வளவு 'இளகிய மனம்' கூடாது.

திறந்து கிடந்தால் நுழைவதற்குத்
திரிகின்ற நாய்கள் இருக்கின்றன.
கண்கள் என்கின்ற நாய்கள் திரும்பவும் வந்து
கால்கள் தூக்கிச் சிறுநீர் பெய்வன.
உரியவருக்குத் தெரியாமலேயே
'அவர் இடம்' ஒன்று கழிவறை கிறது.

ஆண்களின் கண்களும்
அம்புகள் போல் பாய்வன.
'வீராங்கனைகளா'ய் இருக்க விரும்பினால்
'புறமுதுகு' காட்டாதீர்கள்.
புறப்புண் நாணும் புறநாநூறு-

உங்களுக்கும்தாம்!

- தங்கமும் அனுதாபமும் நிறைந்த எள்ளலான கவிதை.

'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்' என்று பழைய இலக்கியங்கள் கூறும். பழமலய் காட்டும்
'பண்பெனப்படுவது' இன்றயை நடைமுறைக்கான வழிகாட்டுதல்.


'பண்பெனப் படுவது'தான் என்ன?
பிறருடைய சுயமரியாதையும்
பார்ப்பது, பாதிக்காதது"

அதாவது -

'வணக்கம் வைத்தல்,
பதிலுக்கு 'வைக்காதவர்களுக்கு வைக்காதது'
சுயமரியாதை.
வைக்கிறவர்களுக்கு வைக்காமை
அவமரியாதை.

பிறர் காலில் விழாதது
சுயமரியாதை.
பிறரைக் காலில் விழ அனுமதிப்பது
அவமரியாதை.

உட்காரச் சொல்லாத போது
உட்கார்ந்து கொள்வது சுயமரியாதை.
உட்காரச் சொல்லாமை அவமரியாதை.' ...........போல.

கவிஞர் மனிதர்களின் சீரழிவிற்கு மட்டுமல்லாமல், நம்மை அண்டி வாழும் பிராணிகளுக்காகவும் உருகு
கிறார். சிங்கப்பூரில் காக்கைகளே இல்லாதபடிக்கு சுட்டுத் தள்ளும் கொடுமை பற்றி எழுதுகையில்,

'என் கவலை:
குயில் இனமும் அழிந்துவிடும்
கொடுமை நடந்து விடுமே!
'கத்தும் குயிலோசை' கனவு கிவிடுமே!

இனிவரும் தலைமுறைகளுக்குக்
கனவுகளும் இருக்காது.
பார்த்திருந்தால்தானே கனவு!
பாவம் எதிர்கால மனிதன்!

நாம் காக்கைகளை நேரில் பார்த்திருக்கிறோம்:
அ·து ஓர் அழகான பறவை.
இருட்டைப் போலவும்
இருட்டு வெளுத்து வருவது போலவும்
இருக்கும் அவற்றின் நிறங்கள்.'

- என்று பரிதாபப்படும் கவிஞர் இறுதி வரிகளில ஒரு நடைமுறை வழக்கைச் சொல்லி நம்மையும் உருக
வைத்துவிடுகிறார். இடுகாட்டில் எரியூடுமுன்னதாக வெட்டியான் சொல்லுவதை -

'மூடப் படப்போகிறது:
முகம் பார்ப்பவர்கள் பார்க்கலாம்!'

- இங்கே சொல்லி காக்கை இனத்தின் மறைவை ஒரு சோகக் காட்சியாக்கி விடுகிறார்.

கவிஞர் பழமலய் குழந்தைகளுக்காகவும் கவிதைகள் எழுதியுள்ளார். பெருங்கவிஞர்கள் குழந்தை
களுக்கு எழுதுவதையும் ஒரு பெரிய பணியாகக் கொள்ள வேண்டும். கவிமணியின் 'தோட்டத்தில் மேயுது
வெள்ளைப்பசு....', பெ.தூரனின் 'நத்தையாரே நத்தையாரே அத்தை வீடு பயணமோ?' என்னும் காலத்தால்
அழியாத கவிதைகளில் மனம் பறி கொடுக்காதோர் நம்மில் யார்?

இத்தொகுப்பில் சில பிரபல ங்கில குழந்தைப் பாடல்களை அருமையாய்த் தமிழாக்கித் தந்திருக்
கிறார் பழமலய். சிறப்பான தமிழாக்கம் என்பது மட்டுமல்ல, நம் சூழலுக்கு ஏற்ப, நமது கலாசாரத்தை
யொட்டியும் ஆக்கியிருக்கிறார்.

'Hot cross bun hot crossbun!
One a penny, two a penny
Hot cross bun'

என்கிற கவிதையை, எப்படி மொழியாக்கம் செய்திருக்கிறார் பாருங்கள்!

'இட்லி, தோசை சூடு!
இட்லி, தோசை சூடு!
இரண்டு ரூபாய்-
மூன்று ரூபாய்-
இட்லி,தோசை சூடு!

- மேலே காட்டப் பட்டவை மாதிரிகள் தாம். கவிஞரின் முழு ளுமையையும் கவித்திறத்தையும் காண

முழுதுமாய்த் தொகுப்பைப் படிக்க வேண்டும்.

வயது மற்றும் அனுபவ முதிர்ச்சி காரணமாய், கவிஞரின் தற்போதைய கவிதைகளில் மரபுக்கவிதையின்
சுகானுபவமும், கலைநயமும் மிகுந்து வருவது ரோக்கியமான வளர்ச்சி எனலாம். 0


நூல் : கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்.

ஆசிரியர் : கவிஞர் த.பழமலய்.
வெளியீடு : பெருமிதம் வெளியீடு, விழுப்புரம்.

Sunday, July 12, 2009

'இலக்க்கிய உரையாடல்கள்'- - ஒரு அறிமுகம்.

அநேகமாக இன்று எல்லா இலக்கிய இதழ்களும் பேட்டிகளை வெளியிடுகின்றன. குறிப்பாக 'தீராநதி', 'காலச்சுவடு'
'புதிய புத்தகம் பேசுது', 'இனிய உதயம்' போன்றவை தவறாது பேட்டிகளை இதழ்தோறும் வெளியிட்டு வருகின்றன. முதலில், 1965ல் தொடங்கப்பட்ட 'தீபம்', 'கணையாழி' இதழ்களில்தான் இப்படித் தவறாது மாதந்தோறும் பேட்டிகள் வந்தன. 'தீபம்' 'இலக்கியச் சந்திப்புகள்' என்ற பெயரில் சிறந்த இலகியவாதிகளைப் பேட்டி கண்டு வெளியிட்டது.
ஆனால் 'கணையாழி' இலக்கியவாதிகள் மட்டுமின்றி அரசியல்வாதிகளையும் பேட்டி கண்டு வெளியிட்டது. பின்னர் பேட்டிகளைக் கலைவடிவத்திற்கு உயர்த்திய கோமலின் 'சுபமங்களா'வில் வந்த இலக்கியப் பேட்டிகள் பெரிதும் பேசப்பட்டன. அதன் பின் கண்ணனின் 'காலச்சுவடு' கனமான ஆழ்ந்த சிந்தனையுடனான பேட்டிக¨ளை இதழ்தோறும் வெளியிட்டதுடன் அவற்றைத் தொகுப்புகளாகவும் வெளியிட்டு வருகிறது. சொற்ப காலமே வெளிவந்திருந்தாலும், ஜெயமோகன் நடத்திய 'சொல்புதிது', இதழ்தோறும் ஆன்மீகம், இலக்கியம், அரசியல் என்று பல்வேறு துறைகளிலும்
சிறந்த சிந்தனாவாதிகளின் நீண்ட பேட்டிகளை வெயிட்டது. கலைவடிவத்திற்கு உயர்த்தப்பட்ட இலக்கியப்பேட்டிகளை மேலும் செழுமைப் படுத்தியதாக அவை அமைந்திருந்தன. ஜெயமோகன், வேதசகாயகுமார், செந்தூரம் ஜெகதீஷ், ஆர்.குப்புசாமி, அ.கா.பெருமாள். சரவணன், ஜி.சந்திசெகர், க.மோகனரங்கம், சுப்பிரமணியம் ஆகியோர் கண்ட பேட்டிகள் இப்போது 'எனி இந்தியன் பதிப்பகத்'தாரால் 'இலக்கியச் சந்திப்புகள்' என்ற தலைப்பில் ஜெயமோகன்,
சூத்திரதாரி ஆகியோரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. பேட்டிகள் சமயத்தில் கேட்பவரும் பதில்
அளிப்பவரும் தம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதாகவும் அமைந்து விடுவதுண்டு. அப்படியான கலந்துரையாடல்களின் தொகுப்பாக இது அமைந்திருப்பதால், வழக்கமான பேட்டி என்ற பெயரில் அல்லாமல் 'இலக்கிய உரையாடல்கள்' என்ற பொருத்தமான தலைப்பில் வெளியாகியுள்ளது.

இப்பேட்டிகள் 'எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையிலான - படைப்புகளின் வழியே அனுமானித்துவிட முடியாத
பல்வேறு காரணிகளை அறிந்து கொள்ள உதவுகின்றன என்கிற வகையில் இவ்வகைத் தொகுப்புகள் பெரிதும் விரும்பிவரவேற்கப்படுகின்றன. 'எனி இந்தியன் பதிப்பக'மும் அத்தகைய சிறந்த பணியாக இத்தொகுப்பைச் சிறப்பாக வெளியிட் டுள்ளது.

இச் சந்திப்புகள் நான்கு தலைப்புகளில் - 'அயல் குரல்கள்', 'மரபின் குரல்கள்', 'முதல் குரல்கள்', 'புதுக் குரல்கள்'
எனத் தரப்பட்டுள்ளன. 'அயல் குரல்களி'ல் நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத 'நித்ய சைத்தன்ய யதி', கே.சச்சிதானந்தன்,
டி.ஆர்.நாகராஜ் ஆகியோரது சந்திப்புகள் இடம் பெற்றுள்ளன. 'மரபின் குரல்களி'ல் பேராசிரியர் ஜேசுதாசன், மற்றும்
நா.மம்மது ஆகியோரது சந்திப்புகளும், 'முதல் குரல்களி'ல் அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி, ஜெயகாந்தன்,
நீல.பத்மநாபன், அ.முத்துலிங்கம் ஆகியோரின் இலக்கிய உரரையாடல்களும் இடம் பெற்றுள்ளன. 'புதுக்குரல்கள்'
பகுதியில் பாவண்ணன், எம்.யுவன் என்கிற இளைய தலைமுறையினரின் சந்திப்புகளும் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேட்டிக்கும் முன்னதாக பேட்டி காணப்படுபவர் பற்றிய விவரமான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

நித்ய சைத்தன்ய யதியினுடனான உரையாடல்கள் அதிகமும் ஆன்மீகம் சார்ந்ததாகவும், கே.சச்சித்தனந்தனின்
சந்திப்பில் மிகுதியும் மார்க்ஸியமும், டி.ஆர்.நாகராஜனின் பேட்டியில் 'பின்நவீனத்துவமு'ம் இடம் பெற்றிருப்பது
அவற்றில் ஆர்வமில்லாதவர்களுக்கு சற்று அலுப்பைத் தரக்கூடும். ஆனாலும் கொஞ்சம் விறுவிறுப்பான உரையாடல்களும் அவற்றில் உண்டு.

நித்ய சைத்தன்ய யதியின் கருத்துக்களில், 'உண்மை என்று அகம் எதை அறிகிறதோ அதில் எவ்வித சமரசமும்
இல்லாமலிருப்பவனே பெரிய படைப்பாளி', 'உன் வாசிப்பனுபவத்தில் இன்றைய நவீனக் கருத்துக்கள் எப்படிச் செயல்
படுகின்றன என்றே பார்க்கவேண்டும். உனக்கு உதவாதபோது நிராகரிக்கவும் வேண்டும். உலகம் சொல்கிறது
என்பதெல்லாம் மடமை. இவையெல்லாம் நிரூபணவாதக் கருத்தல்ல.' என்பவை என்னை ஈர்த்தன. இன்னும் அவர் மிக கனமான தத்துவங்கள்பற்றி எல்லாம் கருத்துச் சொல்லி இருக்கிறார். 'இலக்கியம் பற்றிய மதிப்பீடு', 'நவீனத்துவம்',
'கலை', 'அழகு', 'மதம்', மற்றும் 'தியானம்' பற்றிய அவரது கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்தக்கூடியவை.
'அழகு' என்பது என்ன என்று விளக்குகையில் இப்படிச் சொல்கிறார்: 'அழகு என்பது என்ன? சாக்ரடீஸ் கேட்டார். பெண் அழகு. பானை அழகு. குதிரைக்குட்டி அழகு. இவையனைத்திலும் பொதுவாக உள்ள அழகு என்ன? அதைத் தனியாகப் பிரித்துக் கூறமுடியுமா? முடியாது. அந்தரங்க அனுபவம் சார்ந்தே பேச முடிகிறது. அந்தரங்கமான ஒன்றுக்குப் புழக்க தளத்தில் மதிப்பு இல்லை. ஆகவே நாம் ஏகதேசப் படுத்தலாம். அடிப்படைக் கருதுகோள்கள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் பொருட்டு பொதுமைப்படுத்தப்பட்ட தனி அனுபவங்களே. அழகு என்பது ஒரு பொதுவான ஒப்புதலின்
அடிப்படையிலான ஏகதேசப்படுத்துதல். (Beauty is an approximation of a general agreement) அந்தப் பொது வட்டத்திற்குள் இல்லாதவர்களுக்கு அதில் எந்தப் பொருளுமில்லை.'

கே.சச்சித்தானந்தன் பேட்டியில் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிபற்றிக் கேட்டபோது, 'சோவியத் ரஷ்யாவின்
வீழ்ச்சிக்குப் பல வருடங்களுக்கு முன்னரே நான் மார்க்சியத்தின் போதாமைகளைப் பற்றி நிறையப் பேசியும் எழுதியும்
விவாதித்தும் வந்துள்ளேன். லெனினிசத்தின் போதாமைகள் பற்றி என்று இன்னும் கச்சிதமாய்க் கூறலாம். எனவே
சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி நான் ஓரளவு முன்கூட்டியே ஊகித்ததுதான். இவ்வளவு விரைவாக நிகழும் என்று எதிர்
பார்க்கவில்லை. அவ்வளவுதான்.' என்றும் 'சீனாவிலும் மாற்றம் நிகழத் தொடங்கிவிட்டது. அதிக காலம் அங்கு ஜனநாயக உரிமைகளைத் தடை செய்து வைக்க முடியாது என்றே தோன்றுகிறது' என்று சொல்வது அவரது தீர்க்கதரிசனத்தைக் காட்டுகிறது. மேலும் சொல்கையில், 'மார்க்சீயம் தனி மனிதனை நிராகரிக்கிறது. கூட்டு மனிதனுக்கு அது மிகையான
முக்கியத்துவம் தருகிறது. இதன் விளைவாகவே அது சர்வாதிகாரத் தன்மை உடையதாக ஆகிறது. மார்க்சீயத்துக்கு ஜனநாயக அடிப்படையைத் தர முயன்றவர்களை லெனின் கிண்டல் செய்தார். கடுமையாக ஒடுக்கினார். லெனின் ரஷ்யாவில் கொண்டுவந்த மார்க்சீயத்தை மார்க்ஸ் காண நேர்ந்தால் அவர் கல்லறையில் நெளிவார் என்று மிஷல் ·பூக்கோ
கூறியது முற்றிலும் உண்மை' என்கிறார்.

முற்போக்கு இலக்கியம் பற்றிப் பேசும்போது, 'முற்போக்கு இலக்கியம் என்ற ஒரு இயக்கம் நேற்று இருந்தது.ஆனால் அழகியல் ரீதியாக அப்படி ஒரு தனித்த வகை இல்லை. அந்த உருவத்திலேயே நிறையக் குளறுபடிகள்
உண்டு. முற்போக்கு என்றால் என்ன என்று அது திட்ட வட்டமாக வரையறுத்துக் கொள்ளவில்லை. அடிப்படையில் அது வாழ்க்கையை எளிமைப்படுத்திக் காட்டும் தன்மை கொண்டது. இதன் மூலம் மொழியிலும் அனுபவத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத வெற்றுப் படைப்புகளை அது உருவாக்க நேர்கிறது. மேலும் அதன் மொழி பற்றிய கருத்தாக்கம் மிகவும்
பின் தங்கியது. யதார்த்தவாதமே ஒரே இலக்கியவகை என்ற பிடிவாதம் அதற்கு உள்ளது. இயல்புவாதம் என்றுதான் நான் அதைக் கூறுவேன். யதார்த்தவாதம் இந்த முற்போக்கு எழுத்தை விட விரிவானது. இது ஏன் என்று பார்த்தால்
சம்பிரதாயமான மார்க்சீய சமூக ஆய்வு முறையை முழுமையாக நம்பி ஏற்பதுதான் காரணம் என்று புரிகிறது' என்கிறார்.

இன்னும், கேரள தேசீயம், கவிதை அனுபவம், வாசிப்பின் அரசியல், அமைப்பியல்-பின் அமைப்பியல் பற்றியெல்லாம் சச்சிதானந்தன் விரிவாக இப் பேட்டியில் சொல்லியுள்ளார்.

அடுத்து பிரபல கன்னட எழுத்தாளரான டி.ஆர்.நாகராஜனின் பேட்டியில் தலித்தியமும் பின் நவீனத்துவமும் பேசப்பட்டுள்ளன.'பெரியார் பற்றி உங்கள் கணிப்பு என்ன?' என்று கேட்டதற்கு, 'பெரியாருக்கு இந்தியக் கலாச்சாரத்தில்
பிடிப்பு இல்லை. இங்குள்ள பல விஷயங்களை அவர் கற்றுக் கொள்ளவில்லை; தனக்குச் சாதகமானவற்றைக் கூட.
இங்கிருந்த மறைஞானிகளை (mystics) அவர் அறிந்திருக்கவில்லை. நம் கலாச்சாரத்தில் பிராமணியத்துக்கு எதிரான முக்கிய சக்தி அவர்கள். பெரியார் இம்மரபுகள் எவற்றையும் அறிந்திருக்கவில்லை என்று உறுதியாகக் கூறுவேன்.
அளவுக்கு மீறிய மேற்கத்திய சிந்தனைத் தாக்கம் கொண்டவர் அவர். எளிய மேற்கத்திய வாதத்தை அவர் அப்படியே
நம்பி ஏற்றார். 'முன்னேற்றம்' பற்றிய மேற்கத்தியக் கருத்துக்களிலும், விஞ்ஞானம், தொழில் நுட்பம் பற்றி பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவிய கருத்துக்களிலும் பெரியார் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். விஞ்ஞானமும்
தொழில் நுட்பமும்தான் அவரது கடவுள்கள்' என்று பதில் கூறிய நாகராஜன் இன்னும் பெரியாரின் பௌத்தம் பற்றிய
மதிப்பீடு, மொழி பற்றிய அவரது கண்ணோட்டம் பற்றியெல்லம் தொடர்ந்து சொல்கிறார்.

'தலித் என்ற அடையாளம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு, 'தலித் என்ற அடையாளம் ஒரு ஒற்றைப்படையான முத்திரையோ, தரப்படுத்துதலோ அல்ல. அது பொதுவான நோக்கமுடைய ஒரு பொது அடையாளம்.
அதிகமும் அரசியல் சார்ந்தது. தலித் சாதிகளுக்கு இடையிலான ஒற்றுமையின்மை ஒரு பிரச்சினை. எல்லா சாதிகளுக்கும் இடையே அதிகாரப் பகிர்வும் பங்கேற்பும் இருக்கும் விதமாக இந்த அடையாளத்தை சமரசப்படுத்தியபடியே இருக்க வேண்டும். இச்சாதிகளின் கலாச்சார ஞாபகங்களுக்கும் இன்றைய அரசியல் நடவடிக்கைகளுக்கும் இடையே ஒரு மோதல் உள்ளது. ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட சாதியும் தன் வேர்களை மறுகண்டுபிடிப்பு செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலமே இந்த தேசத்தின் கலாச்சாரம் மறுபிறப்பு பெற முடியும்' என்ற கருத்தை முன் வைக்கிறார். மற்றும் இலக்கியம், இலக்கியப் படைப்பு, வக்ரோத்தி என்கிற மொழிசார்ந்த திரிபுநிலை, பின்நவீனத்துவம்,
காந்தி-அம்பேத்கார் உறவு, காந்தீயத்தில் உள்ள குறைபாடு, அம்பேத்கார் பற்றிய குறை நிறைகள் - பற்றிய கேள்வி
களுக்கும் அவர் அளித்துள்ள பதில்கள் படித்து உணரவேண்டியவை.

பேராசிரியர் ஜேசுதாசனின் உரையாடலில் கம்பராமாயணத்தில் அவருக்கிருந்த மிகுந்த ஈடுபாட்டையும்,
அப்போதைய தமிழ்ப் பேராசிரியர்களுக்கு மாறாக மரபிலக்கியங்களில் மட்டுமின்றி நவீன இலக்கியங்களிலும் ஆழ்ந்த
வாசிப்பும், ரசனையும் கொண்டவராக அவர் இருந்ததையும் அறிய முடிகிறது. 'அறமே' அவரது ரசனையின் அடிப்படி என்பதையும் காண முடிகிறது. கம்பனின் மானிட அனுபவம், சிலப்பதிகாரத்தில் காவிய ஒருமை இன்மை, திருக்குறள்
சிறந்த நீதிநூல்தான் எனினும் நீதி மட்டுமே அதைக் கவிதையாக்கிவிடாது, பாரதியின் கவிதைகள் வெறும் இனிப்பு மட்டுமே - வாசக நிறைவைத் தரவில்லை, சித்தர் பாடல்களில் வடிவத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் அவற்றில் காணப்படும் தனியான மனோபாவமும் அழகியலும் முக்கியத்துவம் பெறுபவை என்றெல்லாம்அவர் கூறியுள்ள கருத்துக்கள் அவரை ஆரோக்கியமான சிந்தனையாளராகக் காட்டுகிறது.

தமிழிசை ஆய்வாளரான நா.மம்மது தன் பேட்டியில் தமிழிசை, தமிழிசை மரபுகளை விரிவாகவே ஆய்வு செய்த
ஆபிரஹாம் பண்டிதர், சிலம்பில் காணக் கிடைக்கும் இசைக் குறிப்புகள், இலங்கை அறிஞர் விபுலானந்தரின் யாழ் பற்றிய ஆய்வுகள், மேளகர்த்தா ராகங்கள் என்று நாம் அதிகமும் அறியாத பலதும் பற்றி புதிய செய்திகளைச் சொல்லி உள்ளார்.

ஐம்பது ஆண்டுகளாக எழுதியும் குறைவாகவே அறியப்பட்டுள்ள அசோகமித்திரனின் பேட்டி அவரது எழுத்தைப்
போலவே எளிமையும் சுவையும் மிக்கது. 'இலக்கியம் Sublimation என்பதைவிட Evation (தவிர்த்தல்) என்பதே சரியாக இருக்கும்', 'அழகியல் பிரக்ஞை பூர்வமானதல்ல, அத்தகைய விளக்கங்கள் எல்லாமே சிறிய அல்லது பெரிய பொய்கள்',
'பேச்சு வழக்கை அப்படியே பதிவு செய்தாலும் அது நுணுக்கங்களைக் காட்ட வேண்டுமென்பதில்லை. சராசரி பேச்சு
நடையைக் கையாண்டு பலரகமான நுணுக்கங்களையும் வெளிப்படுத்துவது சாத்தியந்தான் என்று படுகிறது. படைப்பு உறுதியானதாக இருந்தால் மொழிநடை என்பவை எல்லாம் நம் மனதில் பதிவுபெறாது', 'காவியப் பாத்திரங்கள் திட்ட
வட்டமான அடையாளங்களும் குணாதிசயங்களும் உள்ளவை. அவற்றைத் தன் படைப்புக்குப் பயன் படுத்திக் கொள்வது சுரண்டலுக்குச் சமானமானதாகப் படுகிறது. எத்தனை பலவீனமாக இருப்பினும் அசலாக எழுதுவதே மேல்' என்பவை அவரது பேட்டியில் காணப்பட்ட வித்தியாசமான, ரசமான சிந்தனைகள்.

தமிழின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரும் தமிழில் நவீன நாடகத்தை உருவாக்கியவர்களில் முக்கியமான
வருமான இந்திராபார்த்தசாரதி சிறுகதை, நாவல், நாடகம் என்று எல்லா வடிவங்களிலும் எழுதுபவர். படைப்பாக்கத்தில்
எங்ஙனம் வேறுபாடு காண்கிறார் என்பதை தன் பேட்டியில் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் கூறியுள்ளார். 'இருப்பதிலேயே சவாலான விஷயம் ஒரு நல்ல சிறுகதை எழுதுவதுதான்' என்றும், டெல்லியில் பல கலாச்சார அதிர்ச்சிகளைச் சந்திக்க நேர்ந்ததும், தமிழ் மத்தியதரக் குடும்பங்களில் உள்ள பாசாங்குத்தனங்களைக் கண்டதும் தந்த Reflections தான் தனது எழுத்து என்றும் கூறுகிறார். 'தமிழ் நாடகங்கள் பொதுவாக வளரவே இல்லை' என்பதுதான் தன் அபிப்பிராயம் என்றும் சொல்கிறார்.

ஜெயகாந்தனது சந்திப்பில் இசை பற்றியும் அதில் அவரது ஈடுபாட்டையும் சொல்லும்போது 'இசை ஒரு தூய கலை அல்ல.அதில் கணிசமான பங்கு தொழில் நுட்பமே. இசையைக் கற்பிக்கலாம். கற்பித்து பாரம்பரியமாகக்
கைமாற்றலாம். இலக்கியத்தை அப்படிக் கைமாற்றிவிட முடியாது. ரசிப்பதைக்கூடக் கற்பித்துவிட முடியாது. இலக்கியம் எழுதப்படுவதும் சரி படிக்கப்படுவதும் சரி, மிகவும் அந்தரங்கமான ஒரு தளத்தில்தான் நிகழ்கிறது' என்கிறார். மனிதநேயம்,ஆன்மீகமும் முற்போக்கு அம்சமும் முரண்படுதல், காந்திஜியின் இன்றைய முக்கியத்துவம், விவேகானந்தர், பாரதியின்
கவிதைகள், ஆனந்தவிகடனில் எழுத அவர் சமரசம் செய்து கொண்டதான குற்றச்சாட்டு பற்றியெல்லாம் கேட்டதற்கு
அவர் அளித்துள்ள பதில்கள் வழக்கமான ஆவேசமின்றி இதமான இலக்கிய நயத்துடன் உள்ளன.

'தொட்டாற்சிணுங்கி' என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் நீல.பத்மநாபனுக்கு ஜெயமோகன், மற்றும்
வேதசகாயகுமார் ஆகியோரது கேள்விகள் எதுவுமே இசைவாக இல்லை. மறுத்துக் கொண்டே வருகிறார். அவரது 'தலைமுறைகள்' நாவல் பற்றிய கேள்விகளில் இதைப் பார்க்கலாம். மற்றபடி அவரது இலக்கியக் கோட்பாடுகள், பாத்திரப் படைப்பு, அவரது சொந்த அனுபவப்பதிவுகளால் அவரது படைப்பின் நம்பகத் தன்மை பற்றியெல்லாம் சொல்லியுள்ளவை ஏற்கத் தக்க ஆரோக்கியமான பதில்களாகவே உள்ளன.

சமீபகாலத்தில் நுழைந்து வெகு சீக்கிரம் வாசகரின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள ஈழத்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களது பேட்டி அவரது எழுத்துபோலவே சுவாரஸ்யமாய் உள்ளது. வட்டாரவழக்கு, மாய யதார்த்தம்,
கதைச் சொல்லிக்கு ஏற்படும் புனைவுச்சிக்கல், அவரது கதைகளில் இயல்பாய்த் தென்படும் அங்கதச்சுவை, கவிதை
பற்றிய அவரது கண்ணோட்டம் பற்றியெல்லாம் சொல்லியுள்ள அவருடைய பதில்கள் ரசமானதும் கனமானதும் ஆகும்.
அவர் கடைசியாகச் சொன்ன 'சாகும் பரியந்தம் எழுத்தாளர்கள் எழுதுவதன் நோக்கம் உன்னதத்தைத் தேடும் முயற்சி
தான்' என்பதே அவரது படைப்புகளை நிர்ணயிக்கும் கூறாக அவர் கருதுவதாகும்.

பாவண்ணனின் பேட்டியில் வறுமையின் கொடுமையை அதிகமும் தன் படைப்புகளில் சித்தரிக்கும் அவர் ஏன் ஒரு
இடதுசாரி எழுத்தாளராக முடியாது போனது என்பதற்கும், எழுத்தின்மூலம் சமூகமாற்றம் என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லையா என்பதற்கும், கிராம வாழ்வை அதிகம் எழுதியபோதும் கிராமத்து அற/ஒழுக்க மதிப்பீடுக¨ளை அதிகம்
வலியுறுத்துவதில்லையே என்பதற்கும் அவரது பதில்கள் பாசாங்கற்றதாய், நேர்மையைப் பிரதிபலிப்பதாய், நம்பகத் தன்மை உடையனவாய் உள்ளன. 'எனது இறுதி இலக்கு நாவல்கள்தாம். டால்ஸ்டாயும் தாஸ்தாவஸ்கியும் தொட்டுப் பார்த்த
அந்தச் சிகர நுனியின் ஈரத்தை என் விரலாலும் தீண்டி உணரவேண்டும் என்பது என் உள்ளத்தின் கனவு' என்பது அவரது இப்போதைய லட்சியம்.

இறுதியாக உள்ள, தமிழகத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராய்க் கருதப்படும் எம்.யுவனின் பேட்டி - கவிதை
பற்றியே அதிகமும் பேசுவதாய் உள்ளது. நவீனக் கவிதையின் இலக்கண அமைப்பு, வடிவம், இன்றைய கவிதையின்
சவால், கவிதையில் கறாறான சொல்லாட்சி, கவிதையில் படிமத்துக்கான தேவை, கவிதையில் நாடகத்தன்மை என்று
கவிதை பற்றிய பல்வேறு கேள்விகளுக்கும் விளக்கமளிப்பதாக அவரது பதில்கள் உள்ளன.

'தகவல் அடிப்படையிலான நேர்காணலை இன்று எந்தவொரு தீவிர வாசகனும் பொருட்படுத்த மாட்டான். படைப்
பியக்கத்தின் பின்னணியிலுள்ள எழுத்தாளனின் ஆளுமையையும், அந்த ஆளுமையைக் கட்டமைத்துள்ள காரணிகளையும்
குறித்த ஒரு விரிவான சித்திரத்தை உருவாக்கித் தருவதே நேர்காணலின் முதல் பணி. இரண்டாவது அந்த எழுத்தாள னுக்கும் வாசகனுக்குமிடையிலான ஒரு விவாதத்தைச் சாத்யப்படுத்த வேண்டும். வெவ்வேறு திசைகளிலிருந்து கிளை
பிரிந்து விரியும் இவ்விவாதமும் அதற்கான எழுத்தாளனின் எதிர்வினைகளுமே நேர்காணலைப் பூர்த்தி செய்கின்றன'
என்கிறார் இத்தொகுப்பின் ஆசிரியர்களில் ஒருவரான சூத்ரதாரி முன்னுரையில். அது பூரணமாய் இந் நேர்காணல்களில்
நிறைவேறி உள்ளது என்று சொல்லலாம். 0

நூல் : இலக்கிய உரையாடல்கள்.
தொகுப்பாசிரியர்கள் : ஜெயமோகன், சூத்ரதாரி.
வெளியீடு : எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

Wednesday, July 08, 2009

இந்திராபார்த்தசாரதியின் 'கிருஷ்ணா கிருஷ்ணா'

'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை
இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக் கதையை
நடத்தி வைத்த கிருஷ்ணனது கதையை எடுத்துக் கொண்டு, இந்திராபார்த்தசாரதி அவர்கள் புதிய யுக்தியுடன்
புதுமையான சுவையுடன் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்கிற நாவலை எழுதியிருக்கிறார். 'சொல் புதிது, சுவை புதிது,
பொருள் புதிது' என்று சொன்ன பாரதியைப் பிரதிபலிப்பதாய் இந்நாவலின் கதை சொல்லும் பாணி, உக்தி, சுவை,
எளிமை எல்லாமே புதிதுதான். இதுவரை வெளிவந்த அவரது நாவல்களான 'தந்திரபூமி', 'சுதந்திரபூமி, 'வேர்ப்பற்று',
'ஏசுவின் தோழர்கள்', 'குருதிப்புனல்' போன்றவற்றில் தன் அனுபவத்தையும், சமகால சமூக நிகழ்வுகளையும் பதிவு செய்தது போலன்றி இந்நாவல் நமக்குப் பரிச்சயமான பாரதக்கதையின் புதிய பதிவாகவும், அதே நேரத்தில் சமகால அரசியலை விமர்சிப்பதாகவும் வித்தியாசமான நடையில் அமைந்துள்ளது. உபதேசங்கள் ஏதுமில்லை. இந்நாவல் சமீப
காலத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்ட ஒரு சாதனை என்று கருதப்படுகிறது.

'உலக இலக்கியங்களில் காணமுடியாத பரிமாணங்களை உடைய கதாபாத்திரமான கிருஷ்ணனை' தன் நாவலின்
கருவாகக் கொண்டது பற்றிக் குறிப்பிடுகையில் இ.பா எழுதுகிறார்:

'கிருஷ்ணனை எந்த யுகத்திலும், அந்தந்தக் காலத்திய மதிப்பீடுகளுக்கேற்ப அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் என்பதே அவன் தனிச் சிறப்பு. பாகவதம், ஹரிவம்சம், விஷ்ணுபுராணம், மஹாபாரதம், ஆகிய நூல்களை நாம் படிக்கும்
போது அவற்றில் நம்மை ஈர்க்கும் கதாபாத்திரம் கிருஷ்ணன். ஆனால் இவற்றில் எந்த நூலிலும் அவன் கதைத் தலைவ னல்லன். ஒரு குறிப்பிட்ட ஆசிரியனின் படைப்பாகக் கிருஷ்ணனைக் கொள்ள முடியாது. அவன் ஒரு சமுதாயக் கனவு. பாகவதத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வருகின்ற கிருஷ்ணன், பாரதத்தில் ஒரு முழுநேர அரசியல்வாதியாக வருகிறான். ஆழ்வார் பாடல்களில் பேசும் பொற்சித்திரமாகவும், காதலனாகவும் வருகிறான். நாயக நாயகி பாவம்
(Bridal Mysticism) என்ற கோட்பாட்டுக்கு ஊற்றுக்கண் கிருஷ்ணன். உலக இலக்கியங்களில் அறிய முடியாத இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தின் செய்தியை நாவல் வடிவத்தில் எழுதவேண்டுமென்று எனக்குத் தோன்றிற்று. இந்தக்
காலத்துக்கும் அர்த்தப்படுகின்ற ஒருவனாக அவனை காட்டவேண்டுமென்பது என் விருப்பம்.'

கிருஷ்ணனின் முடிவில் தொடங்குகிறது நாவல். ஜரா என்கிற வேடன், விலங்கு என்று எண்ணி மரத்தில் அமர்ந்
திருக்கிற கிருஷ்ணின் பாதத்தை அம்பால் அடிக்கிறான். பிறகுதான் நரஹத்தி செய்து விட்டோம் என்று பதறுகிறான்.
கிருஷ்ணன் அவனை அமைதிப்படுத்தி தன் முடிவிற்கான காரணத்தைக் கூறுகிறான். பாகவதத்தில் வியாஸர் கதையை சுகருக்குச் சொல்கிறார். சுகர் பரீட்சித்துக்குச் சொல்கிறார். இ.பாவின் கதையில் கிருஷ்ணன் தன் கதையை ஜரா
என்கிற வேடனுக்குச் சொல்கிறான். ஜரா என்கிற வேடன் நாரதருக்குச் சொல்கிறான். நாரதர் நமக்குச் சொல்வதாகக்
கதை. இக்காலத்துக்கும் அர்த்தப்படுகிற ஒருவனாகக் கிருஷ்ணனைக் காட்டவேண்டி நாரதரை நாவலில் கொண்டு
வருகிறார் இ.பா.

நாரதர் எக்கால மொழியிலும் பேச வல்லவர். அவர் திரிகால ஞானி. முக்காலமும் உணர்ந்தவர். 'மாய யதார்த்த' யுக்திக்கு நாரதர் இந்நாவலில் பெரிதும் பயன்படுகிறார். தற்கால பிரச்சினைகளைக் கோடி காட்டுகிறார். அரசியல்வாதிகளைக் கிண்டலடிக்கிறார். ஷேக்ஸ்பியரின் 'மாக்பெத்' நாடகத்தில் வரும் சூன்யகாரிகளின் குரல்களை அசரீரியுடன்
ஒப்பிடுகிறார். கம்சன் கதையில் 'எக்ஸ்டன்ஷியலிசம்' பற்றிக் குறிப்பிடுகிறார். 'சோவியத் யூனியன் மீது ஹிட்லர் ஏன்
குளிர்பருவத்தில் படை எடுத்தான் தெரியுமா?' என்று யுத்தகால யுக்திக¨ளைப் பேசுகிறார். 'ஷேக்ஸ்பியர், ஹிட்லர் அது
இது என்று வெளுத்து வாங்குகிறேனே என்று பார்க்கிறீர்களா? திரிகால சஞ்சாரி, முக்காலமும் உணர்ந்தவன், செய்திக்
கலைஞன் எல்லாமும்தான் தெரிந்திருக்க வேண்டும்' என்று தன் பேச்சுக்கு விளக்கம் தருகிறார். அவரது பேச்சில்
சிலப்பதிகார வரிகளும், ஆண்டாள், ஆழ்வார் பாசுரங்களும் சரளமாகக் கொட்டுகின்றன. நாவலுக்குச் சுவை கூட்டுவதுஅவரது பாத்திரந்தான்.

நாவல் முழுதிலும் கிருஷ்ணனின் பன்முகப் பரிமாணங்களையும் காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் இ.பா. அவனுடைய சாகசங்கள் சராசரி உலகத்துக்கென்று விதிக்கப்பட்டுள்ள ஒழுக்க அளவுகோல்களுக்கு முரணாகத் தென்படக்கூடும். ஆனால் அதைக் கொண்டு அவனை யாரும் மதிப்பிடுவதில்லை. 'சராசரி உலகம் மட்டுமல்ல, காவியக் கதாநாயகர்களுக்கு நிர்ணயிக்கபட்டுள்ள ஒழுக்க அளவுகோல்கள் கூட அவனைப் பொறுத்தவரை பொருந்தாமல்
போவதை' ஆசிரியர் பல நிகழ்ச்சிகள் மூலம் காட்டுகிறார். பாரதத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வருகிற
கிருஷ்ணன் எப்படி பாரதத்தில் ஒரு முழுநேர அரசியல் வாதியாக வருகிறான் என்பதைக் காட்டுகிறார்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் கிருஷ்ணனைப் பற்றி புதிது புதிதாகக் கிடைக்கும் தகவல்கள் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. " 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'. அவரவர் அந்தந்தக் காலத்திய சௌகரிய அசௌகரியங்களுக்கு
ஏற்றாற்போல் அர்த்தம் பண்ணிக் கொள்வதுதான் - நன்மை தீமை. சத்தியமும் பொய்யும், சௌகரிய அசௌகரியங் களைப் பொறுத்த விஷயங்கள்தாம். எதையுமே கருப்பு வெள்ளையாகப் பார்க்கக் கூடாது. தன் வாழ்க்கை வரலாற்றை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்" என்று கிருஷ்ணன் தன்னிடம் சொன்னதாக ஜரா என்கிற வேடன்
சொல்கிறான்.

"கிருஷ்ணன் ஒரு 'anti hero'. ராமாவதாரம் தனக்கு அலுத்துவிட்டதாகவும் அதற்கு மாறுதலாகத்தான் கிருஷ்ணா
வதாரம் எடுத்ததாகவும், அதனால்தான் இந்த அவதாரத்தில் பலர் தன்னை அரசனாக்க முயற்சித்தும் அது தன்
சுதந்திரத்திக் கட்டுப்படுத்தும் என்பதால் ஏற்கவில்லை" என்று கிருஷ்ணனே சொன்னதாக நாரதர் சொல்கிறார்.

கிருஷ்ணன் என்ன செய்தாலும் அது கவர்ச்சியாகப் படுகிறது. இந்தக் 'கவர்ச்சி' பற்றிப் பேசும் போது நாரதர் நம் அரசியல்வாதிகளைக் ஒரு இடி இடிக்கிறார். "கவர்ச்சி மிக்க உங்கள் அரசியல்வாதிகள் என்ன செய்தாலும் அதை
நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். அது சரியா தப்பா என்று ஆராய்கிறீர்களா? ஆனால் கிருஷ்ணனுக்கும் இன்றைய
அரசியல்வாதிக்கும் என்ன வித்தியாசம் என்றால், கிருஷ்ணன் என்ன செய்தாலும் அதை லோக§க்ஷமம் கருதிச்செய்தான்.
உங்கள் அரசியல்வாதிகளுடைய தலையாய தர்மம், அவர்களுடைய சொந்த தர்மம் தான்!". இடிப்பது இ.பாதான்!
நாரதர் ஒரு கருவிதான்.

'ஸம்பவாமி யுகே யுகே'க்கு இ.பா ஒரு விளக்கம் தருகிறார். ''ஸம்பவாமி யுகெ யுகே என்று அவன் சொல்லி
இருப்பதின் பொருள் தெரியுமா? அவன் மறுபடியும் மறுபடியும் அவதாரம் எடுப்பான் என்று அர்த்தம் இல்லை. ஏற்கனவே எடுத்துவிட்ட கிருஷ்ணாவதாரத்தின் அர்த்தப் பரிமாணங்களை அந்தந்தக் காலத்துக்கு ஏற்றபடி மனதில் வாங்கிக்
கொண்டு அவனை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்" என்கிறார்.

மஹாபாரதத்தில் வரும் எல்லாப் பெண்களுமே கிருஷ்ணனை விரும்பினார்கள் என்பது ஒரு முக்கியமான விஷயம் என்கிறார் இ.பா. துரியோதனனின் மனைவி பானுமதி, பீமன் மீது கொள்ளைக் காதல் கொண்ட ஜலந்தரா, கர்ணனின் மனைவி காஞ்சனமாலா எல்லோரும் அவனைச் சகோதரனாக நேசித்து உதவி கேட்கிறார்கள். கிருஷ்ணனும் அவற்றை
நிறைவேற்றுகிறான். இச் செய்திகள் எல்லாம் புராணங்களில் இல்லைதான். ஆனாலும் கிருஷ்ணன் சொன்னதாக ஜரா
என்கிற வேடன் சொன்னதையே தான் சொல்வதாக நாரதர் சொல்கிறார். 'சரித்திரம், புராணம் எல்லாவற்றின் கதையும் இப்படித்தான். நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லும்போது உங்கள் முத்திரையும் இருக்க வேண்டும்' என்கிறார் இ.பா.

'எக்ஸ்டென்ஷியலிசம்' பற்றியும் பேசுகிறார் நாரதர். உயிருக்கு உயிராய் நேசித்த தங்கை தேவகியின் குழந்தைதான் தனக்கு எமன் என்று அசரீரி மூலம் அறிந்ததும் அவளைக் கொல்ல முனைகிறான் கம்சன். அவள்பால் அவனுக்கிருந்த
அன்புக்கும், தற்காப்பு உணர்வுக்குமிடையே நிகழும் எக்ஸ்டென்ஷிலியப் பிரச்சினை இது. உயிரைக் காப்பாற்றிக்
கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற வெறி' என்கிறார்.

'கிருஷ்ணன் ஒரு கலகக்காரன். பிராமணர்களை அழைத்து வந்து மந்திரம் ஓதி, இந்திரனுக்கு யாதவர் நடத்தி வந்த பூஜையை நிறுத்தினான். மலையடிவாரம் சென்று மலைக்குப் பூஜை செய்வேம். அதுதான் நம் பசுக்களுக்குப் புல் தருகிறது. நமக்கு நிழல் தருகிறது. கூட்டுச் சோறு செய்து, மலைக்குப் படைத்து விட்டு, நாம் எல்லோரும் சேர்ந்து உண்டு,
ஆடிப்பாடி மகிழ்வோம் என்கிறான். கண்ணுக்குத் தெரியாத இந்திரனைக் காட்டிலும், மனிதர்கள் கண்ணுக்குத்
தெரிகின்ற, அவர்களுக்குப் பயன்படுகின்ற பொருள்களே முக்கியமானவை, வழிபாட்டிற்கு உரியவை' என்கிறான்.
'சமயச்சடங்கு ஏதுமில்லாமல் முதல் community dinner- ஐத் தொடங்கிவைத்தவனே கிருஷ்ணன்தான்' என்கிறார்
நாரதர் - நாரதர் வாக்காக இ.பா.

'வாழ்க்கையையே ஒரு ரசானுபவமாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் கிருஷ்ணனுடைய கட்சி. ஆண்களும் பெண்களும் மனத்தடை ஏதுமின்றி பழகினால்தான் இது சாத்தியம். முதலில் அகல வேண்டியது மனத்தடை, 'நீ ஆண்,
நான் பெண்', 'நீ பெண், நான் ஆண்' என்கிற பேதஉணர்வு. இந்த மனத்தடை அகன்ற நிலையில்தான் கோபிகைகளால், கிருஷ்ணனோடும், அவனால் அவர்களோடும் மிகச் சுலபமாக, சகஜமாக உறவாட முடிந்தது' என்று கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் கோபிகைகளுடன் லீலைகள் புரிந்ததை கேள்வியாக்குகிறவர்களுக்கு நாரதர் சொல்கிறார்.

அதேபோல கிருஷ்ணன், கோபியர் நீராடும்போது அவர்களது துகில்க¨ளை எடுத்துக் கொண்டு அருகே இருந்த மரத்தின் உச்சாணிக் கிளையில் ஏறிக் கொண்டு அவர்க¨ளை அலைக்கழிப்பதைப் பற்றிப் பேசுபவர்களுக்கும் 'நம் உடலைக் கண்டு நாமே வெட்கப்பட வேண்டியதில்லை. என்ன அற்புதமான உண்மை இது தெரியுமா? நம் உடலைக் கண்டு நாமே வெட்கப்படும்போதுதான், மனத் தடைளும் மனக் களங்கங்களும் ஏற்படுகின்றன என்று இப்பொழுது உங்கள் உளவியல் அற்¢ஞர்கள் கூறுகின்றனர். Strip tease industryயின் மூலதனமே இந்த மனத்தடை உணர்வுதான் என்கிறார்கள் அவர்கள்' என்று விளக்கம் சொல்கிறார் நாரதர்.

மகாபாரதத்தில் முன்னும் பின்னுமாக கதை சொல்லப்படுவது பற்றி பின்நவீனத்துடன் ஒப்பிட்டுக் கேலி செய்கிறார் இ.பா. 'எது முன் எது பின் என்கிற விவகாரம் நம் நாட்டுக் கதைகளில் அந்தக் காலத்திலும் கிடையாது, இப்போது
உங்கள் தீவிர இலக்கியவாதிகள் பேசுகிற பின்நவீனத்துவக் கதைகளிலும் இருக்கக் கூடாது, அப்படித்தானே? ஆனால், ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். நம் நாட்டு அந்தக்காலத்திய கதைகளில் இந்தப் போக்கு இயல்பாகவே
இருந்திருக்கிறது' என்கிறார் நாரதர்.

பீஷ்மனது ராஜபக்தியைப் பற்றிப் பேசும்போது, நாரதர் தற்கால அரசியலை விலாவாரியாகப் பேசுகிறார். ராஜபக்திதான் கடமை என்று கொள்கிறான் பீஷ்மன். அநீதி என்று உணர்ந்திருந்தும், கடமை-ராஜபக்தி உணர்வில் அநீதியை வெறுப்பவன், அநீதியின் பக்கம் இருந்து போராடுகிறான். 'அந்தக் காலத்து ராஜபக்தியைத்தான் இன்று தேசபக்தி
என்கிறார்கள். அரசனுக்காக உயிர் துறப்பதாகச் சொல்லி, உயிர் துறந்தார்கள் அக்காலத்தில். இதை ஒரு புத்திசாலித் தனம் என்று நான் சொல்மாட்டேன். அரசனுக்காகப் போராடினாலும் அதர்மத்துக்காக உயிர் துறப்பது விவேகமன்று
என்கிறான் கிருஷ்ணன். அமெரிக்க அரசு அநியாயமாக வியட்நாம் போரில் வியட்நாம் மக்களைக் கொன்று குவித்தபோது
அமெரிக்க நாட்டு மக்களே அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியதை அறிந்த நீங்கள் ராஜபக்தி என்பதையோதேசபக்தி என்பதையோ ஒரு குறுகிய அர்த்தச் சிறையில், இறுகிப்போன கோஷமாய்ப் பார்க்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். நாட்டு எல்லைகள் மாறிக்கொண்டே வரும் இந்நாளில், வெவ்வேறு இனங்களின் பூகோள
நடமாட்டம் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இந்நாளில், தேசபக்தி என்று பேசுவது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்
காகவா அல்லது 'தேசபக்தி என்பது ஸாமுவல் ஜான்சன் சொன்னது போல 'அரசியல் என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமா?' - என்று வெளுத்து வாங்குகிறார் நாரதர்.

'கனவில் புகுந்து சாகஸங்கள் செய்வதெல்லம் 'post-modern' நாவல்களில்தாம் நடக்கும் என்று நினைத்துக்
கொண்டிருக்கிறீர்களா? அந்தக் காலத்திலேயே நடந்திருக்கிறது. அநிருத்யன் கனவில் உஷா புகுந்திருக்கிறாள்.
அநிருத்தன் உஷா அழகைக் கண்டு சொக்கிப் போனான். என்னுடன் வருகிறாயா என்று கேட்டாள் உஷா. உடனே புறப்பட்டு விட்டான். உடன்போக்கு என்றுதானே தமிழ் இலக்கியத்தில் சொல்வார்கள்? கொஞ்சம் வித்தியாசம்,
தலைவியுடன் தலைவநின் உடன் போக்கு நிகழ்கிறது! அவனைத் தன் ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறாள். இருவரும் அவளது அந்தப்புரத்தில் 'living-in companian' ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்' என்று post-modernism, தமிழ் இலக்கியம் சொல்லும் உடன்போக்கு, இன்றைய நவநாகரீக வாழ்க்கைமுறை எல்லாம் புராண காலத்திலேயே இருந்திருப்பதைப் சுட்டிக் காட்டுகிறார் நாரதர்.

பாரதப்போர் முடிந்ததும் அஸ்வத்தாமன் பாண்டரது வம்சமே இல்லாதொழிக்க இரவில் அனைவரும் ஆழ்ந்த
நித்திரையில் இருந்தபோது பாண்டரது குழந்தைகளைக் கழுத்தை நெருக்கிக் கொலை செய்ததைக் குறிப்பிடும்போது 'ஜாலியன் வாலா பாக் புகழ் ஜெனரல் டயர் மகாபாரதம் படித்திருப்பான் என்று தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள்?'
என்று கேட்கிறார் நாரதர்.

யுத்தத்தின்போது கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு 'பகவத்கீதை' மூலம் உபதேசம் செய்தது பற்றிய ஒரு நியாயமான சந்தேகத்துக்கும் பதிலளிக்கிறார் நாரதர். எப்படி? 'அர்ச்சுனனின் கேள்வியும் கிருஷ்ணன் அவனுக்குக் கூறும் பதில்களும்
என்று 700 சுலோகங்களாக, கீதை விர்¢கிறது. எதிர்த்தாற்போல் பகைவர்கள் போராடத் தயாராக நின்று கொண்டி ருக்கும்போது, கிருஷ்ணன் மணிக்கணக்கில் இவ்வாறு அர்ச்சுனனிடம் பேசியிருப்பான் என்பது சாத்தியமா என்பது
நியாயமான கேள்வி. நானே கிருஷ்ணனிடம் இதுபற்றிக் கேட்டேன். கிருஷ்ணன் சொன்னான், நாரதா, வார்த்தைகளின் உதவியின்றி, மனமும் மனமும் வெறும் எண்ண மொழியில்பேசினால், இந்த உரையாடல் நிகழ அதிக பட்சம் ஐந்து
நிமிஷங்களாகும் என்று. நீங்கள் இப்போது சொல்கிறீர்களே 'telepathi' என்று, அதுவேதான் கிருஷ்ணன் சொல்லும் 'எண்ணமொழி' '- என்பதுதான் அவரது விளக்கம்.

- இப்படி நாவல் முழுதும் அற்புதமான கருத்துக்கள் வைரங்களாய் மின்னுகின்றன. அவற்றைச் சொல்லி மாளாது. நாவலை முழுதும் படித்தே அனுபவிக்க முடியும்.

நாவலுக்குச் சிறப்புச் சேர்ப்பது அத்தியாயங்கள் தோறும் ஓவியர் ஆதிமூலம் அவர்கள் வரைந்துள்ள அற்புதமான
உயிர்த்துடிப்புள்ள கோட்டோவியங்கள் என்றால் அது மிகையல்ல. பாரதத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் நம் கண் முன்னே நிற்பது போல் ஒரு பிரமையை ஆதிமூலம் உருவாக்கியுள்ளார்.

இறுதியாக நாவல் சொல்வதென்ன? 'மகாபாரதப்போர் ஒரு செய்தியைத் திட்டவட்டமாக உலகுக்கு அறிவித்து
விட்டது. மனிதனுக்குத்தான் தர்மமேயன்றி தர்மத்துக்காக மனிதனில்லை என்பதை கிருஷ்ணன் உணர்த்திவிட்டான்' என்பதுதான். 0

நூல்: கிருஷ்ணா கிருஷ்ணா
ஆசிரியர்: இந்திராபார்த்தசாரதி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை.