Tuesday, March 29, 2011

இவர்களது எழுத்துமுறை - 32.அ.முத்துலிங்கம்

1. ஒரு நல்ல எழுத்தாளர் தான் எந்த வகை எழுத்தில் பிரகாசிப்பார் என்று தெரிந்துவைத்து அதிலே பயிற்சி செய்து சிறப்படைய முடியும். இப்படித்தான் நானும் ஒருவகை எழுத்தை தெரிவு செய்து அப்படி எழுதிக்கொண்டு வருகிறேன்.

2. ஒரு சொற்தொடரை, வசனத்தை, வார்த்தையை வாசகர் ரசிக்கவேண்டும் என்பது என் விருப்பம். அவர் எழுப்பும் 'ஆ, ஓ' சத்தம்தான் ஆகக் கிடைக்காத பரிசு என்று நினைக்கிறேன்.

3.முதல் எழுத்தில் நாம் விரும்பிய உருவம் கிடைப்பதில்லை. அந்த உருவம் கிடைக்க கொஞ்சம் பாடுபடவேண்டும். பல தடவைகள் திருத்திய பிறகும் மனதிலே தோன்றியது பேப்பரில் வராமல் போவதும் உண்டு.

4.நான் எழுதியதை பலமுறை வாசித்து திருத்தங்கள் செய்வதுண்டு. எளிமைப் படுத்துவதுதான் நோக்கம். எழுத்து வாசகரை அடையாவிட்டால் எழுதி என்ன பிரயோசனம்.

5.அந்தக் காலத்தில் இருந்து என் கதைகளில் யாழ்ப்பாண வழக்கு இருக்கும். சம்பாஷணைகளில் அது ஒரு நிஜத்தன்மையை கொடுக்கும். ஆனால் வாசகர்களுக்கு இன்னும் நெருக்கமாக வேண்டும் என்று முழு வட்டார வழக்கில் நான் கதை சொன்னதில்லை.

6.ஒரே கூறு முறையை நான் பின்பற்றவில்லை. மாறுபட்ட முறைகளை பல கதைகளில் பரீட்சித்துப் பார்த்தபடியேஇருக்கிறேன்.'செங்கல்','நாளை', 'ஏவாள்', 'ஆயுள்', 'கொழுத்தாடு பிடிப்பேன்' என்று பலவிதமான உத்திகளையும், கூறு முறைகளையும் என் கதைகளில் காணலாம். இன்னும் பல முறைகளையும் பரீட்சித்துப் பார்க்கும் ஆசையிருக்கிறது. அதற்காக முதலிலேயே உத்தியை தீர்மானித்துவிட்டு பிறகு நான் கதையை தேடுவதில்லை. சொல்லப்போகும் பொருள்தான் வடிவத்தையும் உத்தியையும் தீர்மானிக்கிறது. புதுமையை தேடுவதே இலக்கியம்.

7.என்னுடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் சில அங்கதச் சுவை கொண்டு இருக்கின்றன. அது கதைகளுக்கு அழகு சேர்ப்பதாகவும், அவசியமானதாகவும் கூட இருக்கலாம். ஆனால் கால, நேரம், இடம் தெரியாமல் எல்லா கதைகளிலும் புகுந்து விட்டால் அது சரியென்று எனக்கு படவில்லை. கதையை ஒட்டி இயல்பாக அமைவதுதான் நல்லாக இருக்கும். என்னுடைய கதைகள் பலவற்றில் கிண்டல் என்பது கிட்டவும் வரவில்லை. கதையின் திசையை அவை மாற்றக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்

8.உத்தி சோதனைகளில் நான் அதிக கவனம் செலுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பொருள்தான் உத்தியையும் தீர்மானித்து விடுகிறது. சமீப காலங்களில் எனக்கு anti-hero வில் ஒரு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் சாத்தியப்பாடுகள் பிரமிப்பூட்டுகின்றன. கதையை நகர்த்திக்கொண்டு போகும்போது வாசகர் ஒரு தீர்மானம் செய்ய வேண்டிய நிலமைக்கு தள்ளப்படுகிறார். அப்பொழுது நான் மெள்ள நழுவிவிடுவேன். வாசகர் எப்படியான முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதமே. அவருடைய திண்டாட்டமே என் திருப்தி. 0

Tuesday, March 22, 2011

இவர்களது எழுத்துமுறை - 31.ஜெயமோகன்

1. கேள்வி: (அ.முத்துலிங்கம்) நீங்கள் உங்கள் சிறுகதைகளை தொடக்கம், நடு, முடிவு
என்று ஒருவித திட்டமிடாமல் எழுதுவதாகச் சொல்கிறீகள். இது எப்படி சாத்தியமாகும்?

ஜெ: நான் கம்புயூட்டரின் முன் போய் அமரும்போது ஒரு படிமம் இருக்கும் அல்லது ஒரு
கவிதை போன்ற வசனம். அதிலிருந்து ஆரம்பித்துத்தான் எழுதிக்கொண்டு போவேன்.
ஏற்கனவே கதையை திட்டமிட்டு அது எனக்கு தெரிந்துபோனால் எழுதும் ஆர்வம் எனக்கு
வடிந்துபோகும். அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. மெசின்போல எழுதவேண்டும்,
உற்சாகமே இல்லாமல். என்ன வரப்போகிறது என்று தெரியாமல் இருந்தால்தான் சஸ்பென்ஸ்
போல எனக்கே எழுதி அதன் முடிவை அறியும் ஆர்வம் உண்டாகும். வாசகரைப்போல அந்த
முடிவை தெரிந்து கொள்ளும் ஆசை எனக்குள்ளும் இருக்கும்.

2. கேள்வி: குறைந்தது இருபது வெளிநாட்டு எழுத்தாளர்களிடம் நான் இதே கேள்வியைக்
கேட்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம் திட்டமிட்டுத்தான் எழுதுகிறார்கள்.

ஜெ: இருக்கலாம். நான் கம்புயூட்டரின் முன்னால் உட்கார்ந்து \'ஜெயமோகன்
ஜெயமோகன்\' என்று திருப்பி திருப்பி அடித்தே என்னால் ஒரு கதையை உருவாக்க
முடியும். தமிழில் புதுமைப்பித்தன், மௌனி போன்றோர் அப்படித்தான் திட்டமிடாமல்
எழுதினார்கள் என்று நான் நினைக்கிறேன்.

3. கேள்வி: சமீபத்தில் புக்கர் பரிசு பெற்ற அரவிந் அடிகா பற்றி ஒரு விசயம்
படித்தேன். அவர் தன்னுடைய நாவலை முதலில் படர்க்கையில் எழுதினார். ஆனால் எழுதி
முடித்தபின் அவருக்கே அது பிடிக்கவில்லை. ஆகவே முழு நாவலையும் திரும்பவும்
வேலைக்காரன் கோணத்தில் அவன் பேசுவதுபோல தன்மையில் எழுதினாராம். உங்களுக்கும்
எப்போதாவது எந்தக் கோணத்தில் எழுதுவது என்ற குழப்பம் உண்டாகியிருக்கிறதா?

ஜெ: எந்தக்கோணத்தில் எழுதுவது என்பது முற்றிலும் தற்செயலாகத்தான் தீர்மானமாக
வேண்டுமென நான் நினைக்கிறேன். தற்செயல் என்ற சொல்லை மிக கவனமாக
பயன்படுத்துகிறேன். தற்செயல் என்பது முழுக்க முழுக்க ஆழ்மனத்தை
சார்ந்திருப்பதன் விளைவு. என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பதே ஆழ்மனதை
மொழியில் வெளிப்படுத்த வேண்டிய ஒரு செயல்பாடுதான். ஆழ்மனம் மிக அருவமானது.
ஆகவேதான் கதை, கதைச்சூழல், படிமங்கள் போன்ற பல விஷயங்கள் தேவைப்படுகின்றன.
அதாவது என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பதே ஒருவகை கனவு காண்பதுதான். சில
பயிற்சிகள் மூலம் நாம் தானாகவே கனவுகளை உருவாக்கிக் கொள்வது. கனவுகளில்
நம்முடைய கட்டுப்பாடு ஏதுமில்லை. அவை முற்றிலும் தன்னிச்சையானவை.

4. கேள்வி: மறுபடியும் திட்டமிடுவது பற்றிய சந்தேகத்தை தீர்க்கவேண்டும் என்று
நினைக்கிறேன். Gone with the Wind நாவலை எழுதிய மார்கிரெட் மிச்செல் அதை
எழுதுவதற்காக ஒருவித திட்டமும் போடவில்லை. அவர் முதலில் எழுதியது நாவலின் கடைசி
அத்தியாயம். கடைசியில் எழுதியது நாவலின் முதல் அத்தியாயம். நேரம்
கிடைக்கும்போது அங்கும் இங்குமாக எழுதி நாவலை முடித்தாராம். அதற்கு புலிட்சர்
பரிசு கிடைத்தது. உங்கள் எழுத்துமுறையும் அப்படியானதா? அவுட்லைன் திட்டம்கூடக்
கிடையாதா?

ஜெ: நான் எப்போதுமே எந்தக் கதைக்கும், நாவலுக்கும் விரிவான திட்டங்களை முன்னரே
போட்டுக் கொண்டதில்லை. சில சமயம் ஓர் உணர்ச்சித் தூண்டலில் உடனடியாக எழுத
ஆரம்பித்துவிடுவேன். சிலசமயம் அப்படிப்பட்ட தொடக்கம் வராது. ஏழெட்டுதடவை கூட
எழுதிப் பார்ப்பேன். எழுத எழுத அந்தக் கனவு வளர்ந்தபடியே செல்ல வேண்டும். அப்படி
நிகழாதபோது அதை அப்படியே விட்டுவிட்டு வேறு வகையில் எழுத ஆரம்பித்துவிடுவேன்.
\'கொற்றவை\' நாவல் என் மனதில் ஒரே பிம்பமாகத்தான் இருந்தது. பாலைவனத்தில்
கைவிடப்பட்ட கோயில் ஒன்றின் கருவறைக்குள் கண்ணகி காளிசிலையாக நிற்கிறாள். அவள்
கண்கள் உயிருள்ள கண்கள். அதை பலவகையில் எழுதிப்பார்த்தேன். எதுவுமே
சரிவரவில்லை. பல இடங்களில் தொடங்கிப் பார்த்தேன். திருப்தியில்லை. அப்படி
நான்கு வருடங்கள் சென்றன பின்னர் ஒரு வரி மனதில் வந்தது. \'அறியமுடியாமையின்
நிறம் நீலம்.\' அந்த வரி ஒரு பெரிய எழுச்சியைக் கொடுத்தது. அந்த வரியிலேயே
நாவலின் மொழிநடையின் அமைப்பு உள்ளது. படிமங்கள் கொண்ட மொழி. உணர்ச்சிகரமானது.
செந்தமிழ். அப்படியே தொடங்கி அந்நாவலை எழுதி முடித்தேன்.

5. கேள்வி: சில நாவல்களுக்கு நிறைய தகவல்கள் தேவைப்படுமே?

ஜெ: திட்டமிடுவது ஓரளவுக்கு தேவையாக இருப்பது வரலாற்றுப் பின்னணி கொண்ட
நாவல்களுக்குத்தான். தகவல்களைச் சேர்ப்பது ஒருங்கிணைப்பது போன்றவற்றுக்கு.
மற்றப்படி திட்டமிடல் என்பது பிரக்ஞை சார்ந்தது. அது இலக்கியத்தின் அக
இயக்கத்துடன் சம்பந்தமற்றது. நன்றாக திட்டமிடப்பட்ட ஒரு படைப்புக்கு
இலக்கியத்தன்மையே இருக்காது. என் பல நாவல்கள் மிகச் சிக்கலான \'பொறியியல்
அமைப்பு\' கொண்டவை என்று சொல்லப் படுகின்றன. தேர்ச்சியும் திட்டமிடலும் கொண்ட
எழுத்து என்று அவற்றைச் சொல்லி யிருக்கிறார்கள். ஆனால் அவற்றை வெளியிட்ட
வசந்தகுமார் போன்றவர்களுக்கு தெரியும் அவை தன் போக்கில் எழுதப்பட்டு அவ்வப்போது
அனுப்பப்பட்டு எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே நூலாக வெளிவந்தவை. நான் என்
நூல்களை திரும்பப் படிப்பதுகூட இல்லை. வசந்தகுமார்தான் பிழைகளைக்கூட
திருத்துவார்.

6. கேள்வி: உலகப்பிரபல ரஸ்ய எழுத்தாளர் கோகொல் அவர் எழுதி வெளியிட்ட முதல்
புத்தகத்தை திரும்பவும் அவரே வாங்கி எரித்தார். அதே போல இறுதிக் காலத்தில்
இறப்பதற்கு முன்னர் அவருடைய Dead Souls இரண்டாம் பகுதியையும் எரித்தார்.
கோகொலுக்கு இறுதிவரை தன் எழுத்தில் மதிப்பு கிடையாது. பல எழுத்தாளர்களுக்கு
தாங்கள் எழுதுவது திருப்தியை கொடுப்பதில்லை. நீங்கள் எப்பொழுதாவது எழுதி
முடித்ததை திருப்தியில்லாமல் தூக்கிப்போட்டதுண்டா?

ஜெ: என்னைப் பொறுத்தவரை எழுத ஆரம்பித்ததும் எழுத்து வந்துகொண்டே இருக்க
வேண்டும். வயலில் மடையை திறந்து விட்டதும் நீர் வந்து நிறைவதுபோல அந்த வடிவத்தை
என் மனதில் உள்ள மொழி வந்து நிறைக்க வேண்டும். அது நிகழாவிட்டால் தூக்கி
போட்டுவிடுவேன். அப்படி பல நாவல்களை தூக்கிப் போட்டிருக்கிறேன். கைவசம் பல
சிறுகதைகள் முடிவடையாமல் இருக்கின்றன. சில சமயம் அவை மீண்டும் தொடங்கப்படலாம்.
சிலசமயம் அப்படியே அழிந்தும் போகலாம்.

7. கேள்வி: திருத்துவதும் உங்களுக்கு பிடிக்காத ஒன்று. சு.ரா தன் எழுத்தை பல
தடவைகள் திருத்துவார். ஒரு 300 பக்க நாவலை எழுதுவதென்றால் 1500 பக்கங்கள்
எழுதவேண்டியிருக்கும் என்று என்னிடம் ஒருமுறை கூறினார். அசோகமித்திரன்
திருத்துவது மிகவும் கடினமான வேலை அது தனக்கு அலுப்பை தருவது என்று கூறுகிறார்.
ஒஸ்கார் வைல்டு ஓர் அரைப்புள்ளி இடுவதற்கு அரை நாள் எடுத்தது எல்லோருக்கும்
தெரியும். மார்க் ட்வெய்ன் தன்னுடைய புகழ்பெற்ற Huckleberry Finn நாவலை பல தடவை
திருத்தி எழுதுவதற்கு பத்து வருடங்கள் எடுத்துக்கொண்டார். நீங்கள் திருத்தங்கள்
செய்வதே இல்லையா?

ஜெ: இல்லை. திருத்துவதென்பது எனக்கு மிக எந்திரத்தனமான வேலை. எழுதியபின்
மீண்டும் படிப்பதைக்கூட நான் விரும்புவதில்லை. திருப்பித்திருப்பி எழுதும்
எழுத்தாளர்கள் உண்டு. திருப்பி எழுதவே எழுதாத எழுத்தாளர்களும் உண்டு. முன்னது
என்பது ஒரு மனச்சிக்கல் தான். ஒரு சொல்லை திருப்பி எழுதுவதனால் ஒன்றும் பிரதி
மேம்பட்டுவிடப் போவதில்லை. சிலருக்கு வீட்டை சுத்தம் செய்துகொண்டே இருப்பது ஒரு
வகையான \'அப்ஸெஷன்\' அதுபோலத்தான் இதுவும். அத்துடன் திருத்துவது மிகவும்
பிரக்ஞைபூர்வமானது. தர்க்க பூர்வமானது. ஒரு படைப்பை உருவாக்கிய
படைப்பூக்கத்துக்கு நேர் எதிரானது. அறியமுடியாமையின் நிறம் நீலம். அதை தெரிய
முடியாமை என்று மாற்றலாம். அறியாமை என்று மாற்றலாம். அறிவின்மை என்று
மாற்றலாம். அறியப்படாமை என்று போடலாம். இந்த சாத்தியங்களை உட்கார்ந்து
சிந்தித்தால் ஒருவரியில் ஒரு நாளைக் கழித்துவிடலாம். என்னைப் பொறுத்தவரை அதில்
எனக்கு படைப்பு இன்பம் இல்லை. ஆகவே அதை நான் ஈடுபட்டு செய்யமுடியாது. அந்த
நேரத்தில் நான் அடுத்த படைப்பைப் பற்றிக் கனவு காண்பேன். கடிதங்களைக்கூட நான்
முதலில் வரும் கைப்பிழைகளுடன் தான் அனுப்புவேன். திருத்தும் நேரத்தில்
இன்னொன்று எழுதலாமே.


8. கேள்வி: எழுத்து துறையைப் பற்றி சொல்லுங்கள். ப்ரான்ஸ் காஃப்கா இறப்பதற்கு
முன்னர் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய கடிதங்கள், நாட்குறிப்புகள்,
கையெழுத்துப் பிரதிகள் என்று அனைத்தையும் எரித்துவிடச் சொல்லி வேண்டினார்.
ஆனால் நண்பர் அந்த வேண்டுகோளை நிறைவேற்றாததால் இலக்கியம் தப்பியது.
உலகம் எவ்வளவுதான் மதித்தாலும் காஃப்கா தன் எழுத்தை மதிக்கவில்லை. தான் இந்த
துறைக்கு தவறுதலாக வந்துவிட்டதாகவே இறுதிவரை நினைத்தார். நீங்கள் எழுத்து
துறைக்கு எப்படி வந்தீர்கள்? திட்டமிட்டு எழுத வந்தீர்களா அல்லது தற்செயலானதா?

ஜெ: நான் என் உளச்சிக்கல்களை எழுத்துமூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என்றுதான்
எழுத வந்தேன். வெறிபிடித்தது போல எழுதி என் மொழி வடிவத்தைக் கண்டுகொண்டேன்.
எழுதுவது எனக்கு ஒரு சுய கண்டடைதல். தியானம். என் யோகசாதகம் அதுவே. என்
வாழ்க்கையை இனிமையாகக் கழிக்கும் வழியும்கூட. ஆகவே நான் எழுதுகிறேன். ஒரு
ஓட்டப்பந்தயவீரன் அவனால் முடிந்தவரை வேகமாக ஓட முயல்வதுபோல முடிந்தவரை
உச்சத்தை அடைய முயல்கிறேன். அளவிலும் தரத்திலும்.


9. கேள்வி: அசிமோவ் தன்னுடைய 21வது வயதில் Nightfall என்னும் சிறுகதையை
எழுதினார். அதற்கு பின்னர் 51 வருடங்கள் தொடர்ந்து நூற்றுக்கணக்கான சிறுகதைகள்
எழுதினார். ஆனால் அவரால் Nightfall சிறுகதையின் உச்சத்தை தாண்டமுடியவில்லை.
அறிவியல் சிறுகதைகளில் அது இன்றைக்கும் ஒரு மைல்கல். ஆனால் கோகொலின் எழுத்து
தரம் வரவர அதிகமாகிக்கொண்டே வந்திருக்கிறது. அவர் கடைசியாக எழுதிய The Overcoat
சிறுகதை மூலமே அவர் இன்றும் நினைவுகூரப்படுகிறார். உங்கள் விசயத்தில் வயது ஏற
ஏற படைப்பூக்கம் குறையுமா அல்லது கூடுமா? முந்திய படைப்புகளை தாண்டி உங்கள்
படைப்புகள் மேலும் உயர்ந்த தரத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாமா?

ஜெ: முதுமையில் இப்படி எழுதுவேனா என்று கேட்டால் எழுதலாம். எழுதாமலும் போகலாம்.
என்னைப் பொறுத்தவரை எழுத்து என் கடைசி இலக்கு அல்ல. எழுத்தாளனாக இருப்பது என்
திட்டமும் அல்ல. எழுத்து ஏணி மாதிரி. ஏணியிலேயே நின்றுகொண்டிருப்பதைவிட மேலே
ஏறிவிட்டால் நல்லதுதானே?


10. கேள்வி: எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸ் பற்றி ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது.
அவர் அப்பொழுது யூலிசிஸ் நாவலை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல் எழுதுவதற்கு
அவர் பொறாமை உணர்வை முழுமையாக அனுபவிக்கவேண்டும். தன் மனைவியை
யாருடனாவது தொடர்பு வைக்கச்சொல்லி வற்புறுத்தினார். மனைவி மறுத்துவிட்டார்.
தன்னால் உச்சமான பொறாமை உணர்ச்சியை நேரடியாக அனுபவிக்காமல் அதை நாவலில்
சித்தரிக்கமுடியாது என்பது அவர் வாதம். ஆனால் உங்கள் கதைகளில் எல்லாவிதமான
உணர்ச்சிகளும் தத்ரூபமாக பதிவாகின்றன. ஏராளமான அக அனுபவங்களும் புற
அனுபவங்களும் கட்டுரை, நாவல், சிறுகதைகள் வழியாக வெளிப்பட்டவண்ணமே இருக்கின்றன.
இந்த வேகத்தில் நீங்கள் படைத்தால் விரைவில் எல்லாமே முடிந்து எழுத ஒன்றுமே
இல்லாமல் போய்விடும் என்று பயம் உங்களுக்கு ஏற்படுவதில்லையா?

ஜெ: இல்லை. என் அக அனுபவங்களில் சிறு பகுதியை மட்டுமே எழுதியிருக்கிறேன். புற
அனுபவங்களிலும் பெரும்பகுதியை எழுதியதில்லை என்பதே உண்மை. உதாரணமாக என்
பெற்றோர் தற்கொலை செய்து கொண்டார்கள். எவ்வளவு பெரிய நிகழ்ச்சி அது? இன்றுவரை
அது என் படைப்புகளில் வந்ததில்லை. இனிமேல்தான் அதை நான் எழுதவேண்டும். எந்த
மனிதனுக்கும் வாழ்க்கையனுபவங்கள் எழுதித்தீராது. நான் ஓயாது பயணம் செய்பவன்.
ஓயாது வாழ்க்கையை எதிர்கொள்பவன். எழுதும் ஆற்றல் தீர்ந்து போகலாம்.
எழுதுவதற்கான தேடல் முற்றுபெறலாம். அனுபவம் தீர்ந்துபோய் யாருமே எழுதாமல்
ஆவதில்லை.


11. கேள்வி: சரி, சந்தைப்படுத்துதலுக்கு வருவோம். சி.சு.செல்லப்பா தன் நூல்களை
ஊர் ஊராக எடுத்துச் சென்று தானே விற்று வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.
அவருக்கு பணம் தேவைப்பட்டது மட்டுமல்ல காரணம். நூல்களைப் பதிப்பித்தால் போதாது
அவை வாசகருக்கும் போய்ச்சேரவேண்டும் என்ற நல்லெண்ணமும்தான். சார்ல்ஸ் டிக்கன்ஸ்
எழுத்தில் மட்டும் திறமை காட்டவில்லை. சந்தைப்படுத்துவதிலும் வல்லவராய் இருந்தார்.
அவருடைய புத்தகங்கள் அனைத்தும் அவர் காலத்திலேயே அமோகமாக விற்றன.
அவருடைய தொடர்நாவல் பத்திரிகைகளில் வெளியானபோது அந்தப் பத்திரிகையை
காவிய கப்பல்கள் நியூயோர்க் துறைமுகத்தை அடையும்போது 6000 வாசகர்கள் அந்தக்
காலத்திலேயே காத்துக் கொண்டிருப்பார்களாம். சார்ல்ஸ் டிக்கன்ஸ் இறந்தபோது
அவருடைய புத்தக வருமானச் சேமிப்பு 93000 பவுண்டுகளாக ( இன்றைய மதிப்பில் ஒரு
கோடி டொலர்கள்) இருந்தது. எழுத்தாளருக்கு பணம் தேவை, அத்துடன் அவருடைய
நூல்கள் வாசகரையும் சென்று அடையவேண்டும். நீங்கள் ஏன் உங்கள் நூல்களை
சந்தைப்படுத்துவதைப் பற்றி யோசிப்பதில்லை?


ஜெ: சந்தைப்படுத்துவதில் ஈடுபட்டால் படைப்பூக்கத்தை இழந்துவிடவேண்டியதுதான்.
நான் அன்றாட வாழ்க்கையின் சாதாரண செயல்களைக் கூட செய்வதை தவிர்க்கிறேன்.
எழுத்து, பயணம் இவ்விரண்டுமே என் வாழ்க்கை. வேறு எதைச் செய்தாலும் என்னுடைய
எழுத்து ஆற்றலின் ஒரு பகுதியை கழித்துக் கொள்கிறேன். இந்நிலையில் என் எழுத்தை
\'புரமோட்\' செய்ய நான் முயல்வெதென்பது என்னை நானே அழிப்பதற்குச் சமம். அதுவும்
படைப்பூக்கம் வேகமாக இருந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அதையெல்லாம்
செய்வதென்பது மிக மிக தவறான செயல். இப்போது என் நேரத்தின் கவனத்தின் ஒவ்வொரு
துளியும் இலக்கியத்துக்கு மட்டுமே உரியது.

12. கேள்வி: ஆங்கிலத்தில் எழுதும் இந்தியர்கள் சந்தைப்படுத்துவதால் பெரும்
பிரபலமடைந்துவிடுகிறார்களே?

ஜெ: மேலைநாடுகளில் புகழ்பெறும் இந்திய இலக்கியம் ஒரு குறிப்பிட்ட வகையானது.
அவர்களுக்கு இந்தியாவைப் பற்றி இரு மனப்பிம்பங்கள் உள்ளன. (ஒன்று) இந்தியா
\'பாக\' மத நம்பிக்கையால் கண்மூடிப்பழக்கங்கள் கொண்டு சீரழிந்த நிலையில்
இருக்கும் ஒரு தேசம். இது அங்கே செல்லும் இந்திய பாதிரிகள் உண்டாக்குவது.
(இரண்டு) இந்தியா ஐரோப்பியர் விட்டுச் சென்றபின் அழிந்துகொன்டிருக்கிறது.
சல்மான் ருஷ்டி முதல் இப்போது அரவிந் அடிகா வரை எல்லா எழுத்துகளிலும் உள்ள
பொது அம்சம் என்பது \'இந்தியாவைப் பழித்தல்\' தான். இந்தக் காரணத்தால்தான் நமது
ஆங்கில இந்திய எழுத்தாளர்கள் பெரும் புகழ் பெறுகிறார்கள். தாராசங்கர் பானர்ஜி
போன்ற மேதைகள் கூட அங்கீகாரம் பெறுவதில்லை. மேலைநாட்டு இலக்கிய வாசகர்கள்
இந்திய இலக்கியம் என்பது ஆங்கில இந்திய எழுத்து மட்டுமே என நம்ப
விரும்புகிறார்கள். மேலைநாட்டில் புகழ்பெற்ற இந்திய இலக்கியங்கள் கூட இந்த
எதிர் மறைப் பண்பு கொண்டவை. இந்தியாவை இருட்டாகக் காட்டக்கூடியவை.
உதாரணமாக வெங்கடேஷ் மாட்கூல்கரின் பன்கர் வாடி, யூ. ஆர். ஆனந்தமூர்த்தியின்
சம்ஸ்காரா போன்றவை. இந்தியாவை இகழ்ந்து வெறுத்து எழுதும் காஞ்சா ஐலயா போன்ற
விமரிசகர்களுக்கும் இதேபோல மேலைநாடுகளில் பாராட்டுகளும் பரிசுகளும்
கிடைக்கின்றன. இன்னொரு மனநிலையும் உண்டு. ஐரோப்பிய மேட்டிமைத்தனம்தான்
அதுவும். அதாவது தத்துவப்பிரச்சினைகள், ஆன்மீகப்பிரச்சினைகள் அழகியல்கூறுகள்
நம்மால் எழுதப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. அதை தாங்களே எழுத முடியும்
என அவர்கள் எண்ணுகிறார்கள். நமது வாழ்க்கையை \'தெரிந்துகொள்ள\' மட்டுமே
விரும்புகிறார்கள். அதாவது அவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பதை ஒட்டி தெரிந்து
கொள்ள. அதை மட்டும் நாம் எழுதினால் போதும் என்பது அவர்களின் எண்ணம்.
ஆகவே நம்முடைய \'ரிப்போர்ட்டிங்\' வகையான தட்டையான சமூக ஆவணங்களை
மட்டுமே அவர்கள் ரசிப்பார்கள். இதையெல்லாம் செய்து நான் அங்கே வெளியாக
வேண்டுமா என்ன? நம் எழுத்தை நாம் முதலில் ரசிப்போம். பிறகல்லவா அவர்கள்.
இங்கே ஒரு நாவல் வந்தால் 100 பிரதிகள் விற்க ஒருவருடம் ஆகிறது. ஒரு தமிழ்
நாவலை படித்தேன் என்று சொல்ல தமிழனுக்கு மனம் கூசுகிறது. நம் இலக்கியம்
நமக்காக எழுதப்படுவது. நாம் அதை மதித்தால் பிறரும் மதிப்பார்கள். 0

Friday, March 18, 2011

இவர்களது எழுத்துமுறை - 30.பிரபஞ்சன்

1. சமூக உணர்வுதான் எனக்கு முக்கியம். கதை எழுதுவது, நல்லா இருக்கிறதனாலே
கதை எழுதிக்கிட்டிருக்கிறேன். ஒரு அரசியல் நடவடிக்கை மூலம் சிறப்பாகப்
பணியாற்ற முடியும்னா கதை எழுதுவதை விட்டுட்டு அதுக்குத்தான் நான் போவேன்.

2. எனக்குக் காலம் முழுதும் எழுத்தாளனா இருக்கணும்கிற அபிப்பிராயம் இல்லை.
இந்த சூழ்நிலையில் இலக்கியத்தில் எதை வேணும்னாலும் எழுதி பணம் பண்ண
முடியும். ஆனால் அதைச்செய்யக்கூடாதுன்னுதான் இருக்கேன்.

3. எழுத்தில் வித்தை காட்ட நான் விரும்பவில்லை.

4. கதை எழுதும்போது ரொம்ப அமைதியாக முழுமை பெற்ற மனிதனாக எழுதுகிறேன்.
கட்டுரை எழுதும்போது எப்படியோ எனக்கு ஆக்ரோஷம் வந்து விடுகிறது. ஒரு கோபம்
சகிக்க முடியாமல் வந்து விடுகிறது. சில சமயம் இன்னொரு எல்லைக்கே போய்
விடுகிறேன் என்று எனக்கே தெரிகிறது. அது என் குறைபாடுதான்.

5. மூளையைப் பிராண்டும்படி என்னால் எழுத முடியாது. உண்மை என்பது சிக்கலானது
அல்ல. எளிமையானது, தெளிவானது. எல்லோருக்கும் புரியும்படியாக உள்ளது. அதுதான்
எனக்கு உடன்பாடு. 'இந்த எழுத்தாளர் இதை நினைச்சு எழுதியிருப்பாரோ' என்பன
போன்ற சந்தேகங்களை வாசகனுக்குக் கொடுக்க விரும்பவில்லை. 0

Monday, March 07, 2011

இவர்களது எழுத்துமுறை - 29. சிவசங்கரி

1.எனக்கு எழுத்தாளர் ஆகணும்கிற கனவோ, மோகமோ, வெறியோ
இல்லாம, நான் எழுத்தாளர் ஆனேன். என்னுடைய எழுத்தை எந்த
நோக்கத்தில் எழுதறேன்னு கேட்டா நான் சார்ந்திருக்கிற இந்த சமுதா
யத்தை ரொம்ப நேசிக்கிறேன். என்னைப் பாதிக்கிற விஷயங்களை....
நான் ஆக்கபூர்வமாக பகிர்ந்துக்க என் எழுத்தை ஒரு கருவியாகப்
பயன்படுத்தறேன்.

2. என்னைப் பாதித்த பல விஷயங்களை அதே - பாதிப்பை வாசகரிடம்
உண்டு பண்ண.... அந்தப் பாதிப்பு கோபமாக இருக்கலாம், நல்லதாக
இருக்கலாம்.... ஒரு பாதிப்பு எனக்குள்ளே உண்டாகிற போது, தீர்வுக்கு
ஏதோ ஒரு வழி கிடைக்கிற மாதிரி எனக்குத் தோணுது. அதே மதிப்பை
என்னுடைய வாசகர்கள்கிட்டே எழுத்த வச்சு, நான் செய்ய முடிஞ்சு
துன்னா, அவங்க, அவங்க, அந்தந்த கோணத்ததுலே சிந்திச்சு, தீர்வு
வேணும்னா எடுத்துக்கலாம். பாதிப்பு உண்டாக்குவதுதான் என் நோக்கம்,
தீர்வு சொல்வதல்ல.

3. என்னுடைய கண்ணோட்டம், எழுத்து எல்லாம் புத்திசாலிகளை விட
சாதாரண ஜனங்களுக்குத்தான். ஏன்னா எனக்கு தெரிஞ்ச விஷயங்கள்
எல்லாம் சாதாரண விஷயங்கள்தாம். வாழ்க்கையில் நல்லது, கெட்டதைப்
புரிந்து கொண்டு அடுத்தவர்கள் வேதனையை புரிந்து கொண்டு, ஒரு
நல்ல மனிதப் பிறவியாக, வாழ்க்கையில் கூடுமானவரை முரண்டல்கள்
இல்லாமே சமரசம்னு சொல்ல வரல்லே.... சூழ்நிலை மாற்றத்தை
உணர்ந்து கொண்டு அதை என் எழுத்திலே சாதாரண மக்களுக்கு
கொண்டு போனா போதும்னு நினைக்கிறேன்.

4. நான் மனுஷியாகப் பிறந்தேன். எழுத்தாளர் என்பது நடுவிலே வந்த
விஷயம். இது எத்தனை வருஷம் இருக்கும்னு நினைக்கிறீங்க.....
எழுத்தாளர் சிவசங்கரி' என்னிக்கும் மனுஷி சிவசங்கரிக்கு அடங்கின
வளாகத்தான் இருக்கணும். அதனால உங்க படைப்புத்திறன் அடிபடா
தான்னு நீங்க கேக்கலாம். அதனாலே என்னவோ, நான் நீங்க சொல்ற
அந்த class writters லெவல்ல எழுத முடியலையோ என்னவோ. எனக்கு
எது வேணுங்கறதப் பத்தி நான் தெளிவாக இருக்கேன். மனித மதிப்புகள
இழக்காம வாழத்தான் ஆசைப்படுகிறேன்.

5. எழுத்தோட மிகப் பெரிய வேலை என்னன்னா....இவர்களுக்காகத்தான்
எழுதறேன், அவர்களுக்காகத்தான் எழுதறேன்னு சொல்லக்கூடாது.
இவர்களுக்கும் எழுதணும், அவர்களையும் லேசா சிந்திக்க வைக்க
முடியும்னா அதைச் செய்யத் தவறக்கூடாதுன்னு நினைக்கிறேன். நீங்க
நூறு பேர் படிக்கிறதை, லட்சம்பேர் படிக்கிறார்களா என்றுதான்
கேட்கிறேன். அந்த வீச்சு கிடைக்கும்னா, வீர்யம் குறையாம, அந்த
வீச்சை அடைய முடியும்னா, அந்த எழுத்தை நான் பாராட்டறேன். 0