Monday, December 27, 2010

இவர்களது எழுத்துமுறை - 21.நீல.பத்மநாபன்

1. 'ஒரு கவிதை அல்லது கற்பனைப் படைப்பு உள்ளுக்குள் ஆனந்தத்தை
ஆத்மானந்தத்தைத் தரத் தவறிவிட்டால் அது தரம் குறைந்ததாகி விடுகிறது.
ஆனால் அறிவியல் படைப்பாக இருந்தால் நாம் எதிர் பார்க்கும் அதிகமான
அறிவாற்றல் செழுமையில் திருப்தி அடைந்து விடுகிறோம்' என்று
ஜான் பரோஸ் குறிப்பிட்ட ஆத்மானந்தத்தை ஒரு எழுத்தாளன் என்ற
முறையில் என் படைப்புகள் மூலம் ஆத்மசோதனையும் சுயஉணர்தலும்
பயில்வதின் வழி நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

2. தப்போ, சரியோ தன்னிச்சையாக இயல்பாக என்னைச்சுற்றிய மனிதர்கள்
பேசும் பழமொழிகள், கொச்சைச் சொற்கள் கலந்த ஜீவத்துடிப்பான
மொழிநடைக்குப் பதிலாக ஒரு பொதுநிலை மொழியை என் அநாயசமான
எழுத்து முயற்சிக்குப் பயன்படுத்த என் அகம் துணியவில்லை. வளமையான
வக்கணையான நடையை நான் நாடவில்லை. எடுத்துக்கொண்ட கருத்தை
சுருக்கமாய் அழுத்தமாய் சொல்ல முயல்வதே என் பாணி. இவை எல்லாம்
என் தனித்தன்மை முன்னிலை கொண்ட ஒரு குறிப்பிட்ட நடைக்கு என்னை
இட்டுச் சென்றன.

3. எல்லா படைப்பு எழுத்தாளர்களையும் போல நானும் ஒரு முழுமைநாடி.
எனவே அசல் வாழ்வில் லட்சியத்துக்கும் நடப்பியலுக்கும் இடையே நிலவும்
முரண்பாடுகளையும் போராட்டங்களையும் கண்டுணர்ந்து எப்போதும்
அமைதியற்ற மனநிலைமை...இந்த மனநிலைதான் என் படைப்பாக்கத்தை,
கடந்த 50 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தொடர்ந்து செயலாற்றத் தூண்டவும்
சீண்டவும் செய்து கொண்டிருக்கிறது.

4. நெகிழ்வாய் இருக்க வேண்டியுள்ளது. இறுக்கத்துக்கும் நெகிழ்வுக்குமான
யுத்தத்தில் செத்தொழிபவன் கலைஞன். என் எழுத்தில் நான் கொஞ்சம்
இருக்கலாம். முழுதும் நானல்ல. எழுதும்போது நான் நானல்ல. பேனா
பிடித்ததும் அவன் தேவதையாகி விடுகின்றான்.

5. ஒரு கலைஞனை - எழுத்தாளனைப் பொறுத்தவரையில் முதலாவதும்
முடிவாவதும் அவனது ஆன்ம பலம்தான் அவன் உந்து சக்தி. அன்றும்
இன்றும் விமர்சகர்களிடம் சிலரைப்போல் எனக்கு அலர்ஜி இல்லை. ஏன்
என்றால் நானே என்னுடைய ஈவிரக்கமற்ற விமர்சகன். என் நிறைகளை
விட என் குறைகளே எனக்குத் தெரிகின்றன.

6. வாழ்க்கை என்னில் விளைவிக்கும் அனுபவத் தழும்புகள் என்னை
எழுதத் தூண்டும்போது நான் அறியாமல், எழுதும் பகைப்புலனுக்கு -
அட்மாஸ்பியருக்கு ஏற்ப ஒரு உருவம் அமைகிறது. எல்லா இஸம்களையும்
தன்னுள் அடக்கியாண்டு கலை அனுபவத்தை விளைவித்துக்கொண்டு,
நிலைத்து நிற்கும் வலு என் படைப்புகளுக்கு இருக்க வேண்டும்.
இல்லையேல் அவை செத்துவிடும். 0

Friday, December 24, 2010

இவர்களது எழுத்துமுறை - 20.பாலகுமாரன்

1. இலக்கியதாகம் கொண்டவனாக நான் என் வாழ்க்கையை ஆரம்பிக்க
வில்லை. வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தேன். ஆணாதிக்கத்தின்
உச்சகட்டம்தான் என் அப்பா. இங்கே என் அம்மா மட்டுமல்ல, என்னைச்
சுற்றி உள்ள என் சித்தி, அத்தை, பாட்டி, ஒன்றுவிட்ட சகோதரிகள்
போன்ற எல்லா பெண்களுமே ஆணாதிக்க சமூகத்தில் அழுத்தப்பட்டு
வேதனைப்படுகிறவர்கள். இதற்கெல்லாம் புகலிடமாக வேறு வழி இல்லாமல்
இலக்கியத்தில் போய்ச் சேர்ந்தோனோ என்று தோன்றுகிறது. அதனால்
எனக்கு நானே வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு நல்ல அப்பாவைக்
கற்பனை செய்து கொள்வேன். எங்கம்மாவுக்கு வேறு ஒரு நல்ல அப்பாவைக
கல்யாணம் செய்துவைத்துப் பார்ப்பேன். இதனுடைய விளைவுதான் நான்
கதை எழுத ஆரம்பித்தது.

2. 'கசடதபற'வில் சேர்ந்தபோது இலக்கியம் கற்க வேண்டும் என்ற,
நல்ல இலக்கியம் படைக்கவேண்டும் என்ற எண்ணம் தவிர என்னை
அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசையும் இருந்தது.
என் பேரு எப்படியாவது வெளியே வர வேண்டும். அதுவே எனக்கு
முக்கியமாய் இருந்தது அப்போது!

3. பணம் சம்பாதிப்பதற்காக எழுதவில்லை. நான் எழுதுவது ஜனங்களுக்குப்
பிடித்திருக்கிறது. அதே சமயம் நான் என்ன எழுத வேண்டும் என்று
விரும்புகிறேனோ அதை எழுதிக் கொண்டிருக்கிறேன். எப்படி எழுதக்கூடாது
என்பதைக் 'கசடதபற'வில் கற்றுக்கொண்டேன்.

4. நாவல் எழுதும் பிராயத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே
பெரிய பனிக்கட்டி இருப்பதை உணர்ந்து கொண்டேன். இந்த பனிக்கட்டி
என் நாவல் மூலம் உடைய வேண்டும் என்று எண்ணினேன். ஆண்களைக்
கண்டு அச்சப்படும் பெண்கள். பெண்களைத் துச்சமாக மதிக்கும் ஆண்கள்.
இவர்கள் மூலம் பிறக்கின்ற குழந்தைகள் இந்த தேசத்தில் எந்த
யோக்கியதையுமற்று நல்ல அரசியலோ, நல்ல கலை இலக்கியமோ, நல்ல
வாழ்கையோ, நல்ல மதமோ கொள்ள முடியாமல் வீரியமில்லாத
வித்துக்களாக இருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
அன்றிலிருந்து இன்று வரை என் நாவல் இந்த ஒரு விஷயத்தைப்
பற்றித்தான் மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

5. எனக்குக் கிராமம் அதிகமாகத் தெரியாது. எனக்கு என்ன தெரிந்ததோ
அதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதைத் தவிரவும் என்னுடைய
கதையை இந்த மத்தியதர வர்க்கத்து நகர்ப்புற குடும்பங்கள்தான் அதிகம்
படிக்கின்றன. யார் என்னைப் படிக்கிறார்களோ அவர்களுக்கு நான்
என்னை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.

6. திருப்தி என்பது மனதுக்கு ஏற்பட்டால் காரியம் நின்றுவிடும். என்
எந்த ஒரு நாவலும் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பதுதான்
உண்மை. எந்த நூலையும் திரும்பப் படிக்கும்போதும் இன்னும் நன்றாகச்
செய்திருக்கலாமே என்று நினைக்கிறேன். ஆனால் எந்த ஒரு நாவலையும்
நான் ஆன்ம ஈடுபாட்டோடுதான் செய்கிறேன். I am a very sincere and
a very hard worker. எந்த ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டாலும் நான்
ஒரு வெறியனைப் போல சுறுசுறுப்பாக வேலை செய்வேன். 0

Monday, December 13, 2010

இவர்களது எழுத்துமுறை -19.வல்லிக்கண்ணன்

1.எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற துடிப்போடுதான் நான் எழுதினேன்.
எழுதிப் பணம் பெற்று, பிழைப்பு நடத்த வேண்டும் - நடத்த முடியும் - என்ற
நோக்கத்தோடு நான் எழுதத் தொடங்கியதில்லை; இன்றும் எழுதவுமில்லை.

2. எழுத்து என்னை வசீகரித்தது. அதனிடம் நான் ஆட்பட்டேன். அதை
ஆளும் ஆற்றலும் பெற்றேன். அதுவே எனக்கு மாண்புமிகு வெற்றியாகத்
தோன்றியது. 'எழுத்து எனக்குச் சோறு போடுமா? வாக்கை வசதிகள் பெற்றுத்
தருமா? பகட்டான உலகத்திலே படாடோபமாக வாழ்வதற்கு எழுத்து ஒரு
கருவியாகப் பயன்படுமா?' என்று நான் யோசிக்கவே இல்லை.

3. எழுத்தை தொழில் (profession) ஆகக் கொண்டிருந்தால் நான் எழுதிய -
எழுதுகிற விஷயங்களே வேறுவேறாக இருந்திருக்கும். படிப்பதும் எழுதுவதும்
எனக்குத் தொழில் இல்லை. அதுவே என் வாழ்க்கை.

4. முதலில் நான் வாசகன்; அப்புறம்தான் எழுத்தாளன். படிப்பது எனக்குப்
பொழுதுபோக்கு அன்று; எழுதுவது எனக்கு வேலையும் இல்லை. படிப்பது -
எழுதுவது - ஊர்சுற்றுவது என்பதை ஒரு வாழ்க்கை முறையாகவே வகுத்துக்
கொண்டவன் நான். 'ஊருக்கு நல்லநு சொல்வேன். உண்மை தெரிந்து
சொல்வேன்' என்ற வாக்குத்தான் எனது நோக்கும் போக்கும் ஆகும்.

5. என் எழுத்துக்களை யார் யார் படிக்கிறார்கள், எப்படி வரவேற்கிறார்கள்
என்று அறிய நான் கவலைப்படுவதே இல்லை. 'நான் இப்படி எழுதி
இருக்கிறேனே அதைப் படித்துப் பார்த்தீர்களா?' என்று எவரிடமும் நான்
கேட்பதுமில்லை. எழுத வேண்டியவற்றை எழுதுகிறேன். படிக்க விருப்பமும்
வாய்ப்பும் இருக்கிறவர்கள் படிக்கட்டும்; அல்லது படிக்காமலே ஒதுக்கி
விடட்டும்; அதைப்பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும்?

6. நான்ன ஏன் எழுதுகிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்ள
வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. 'ஏன் எழுதவேண்டும் என்ற
விரக்தியும் எனக்கு ஏறபடவில்லை. மாறாக 'ஐயோ எழுத நேரம் இல்லையே,
வசதிகள் போதுமானபடி இல்லையே, தான் இன்னும் எவ்வளவோ எழுதியாக
வேண்டுமே, நான் எழுத ஆசைப்படுகிறவற்றுள் - எழுத வேண்டும் என்று
திட்டமிட்டிருப்பனவற்றுள் அரைவாசி கூட இன்னும் எழுதப்படவில்லையே!'
என்ற வேதனைதான் என்னை வருத்துகிறது. 0

Sunday, December 05, 2010

இவர்களது எழுத்துமுறை - 18 - எம்.டி.வாசுதேவன் நாயர்

1. தொடக்கத்திலிருந்தே நான் ஒரு எழுத்தாளனாக இருக்க விரும்பினேன். வெற்றி
தோல்வி பற்றி நான் கவலைப்படவில்லை. எழுத்தாளன் ஆகவேண்டும் என்பதே
என் விழைவாக இருந்தது. ஏன் என்று எனக்குத் தெரியாது.

2. நான் எழுத்தாளனாக இருக்க முடிவு செய்துள்ளேன். அஃது எனது வாழ்க்கைத்
தொழில்; வேண்டுமானால் என் காதல்; என் வெறி; என்று - வாழ்வை உந்தித்
தள்ளும் ஆற்றல் என்று அதைக் கூறலாம்.

3. நான் ஹீரோ அல்ல....கிராமத்துக்காரன். மழை, மண், விவசாயம் என கிராமீய
மானவன். என் கலை, கவனிப்பில் கருத்தரிக்கிறது. எல்லாவற்றையும் கவனிக்கிறேன்.
ஒவ்வொரு சின்ன நிகழ்ச்சியிலும் ஒரு கதை இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்
குள்ளும். மனிதர்கள்தான் என் புத்தகம்.

4. கிராமம்தான் எனக்குள் இலக்கியத்திற்கான இன்ஸ்பிரேஷனைத் தருகிறது. நான்
என் கிராமத்தை விரும்புகிறேன். எல்லாவற்றையும் பார்க்கிறேன். என் படைப்பு
அப்சர்வேஷனில் இருக்கிறது. என் கதைகள் கற்பனைக் கதைகள் அல்ல. வெறும்
கற்பனையிலிருந்து எதுவும் வராது. ஆனால் எழுத கற்பனையும் வேண்டும்

5. எழுதுவது எனக்குப் பயமூட்டுகிற விஷயம். கேட்கிறர்கள் என்பதற்காக நான்
எதையும் எழுதிக் கொடுத்து விடுவது கிடையாது. இன்றைக்கும் பேனா எடுத்து எழுத
உட்காரும்போது முதன் முதலாக பரீட்சை எழுதப் போகும் மாணவனின் மனசைப்
போல் கைநடுங்குகிறது. இதுதான் என் முதல் கதை என்பதுபோல பயத்தோடு
எழுதுகிறேன். எழுதுவது என்பது எனக்கு சவால். அது பெரிய போராட்டம்.

6. எழுத்துக்கலை தனக்கு ஒரு பொழுதுபோக்கு என்கிறார் ஆல்பட்டோ மொறோவியா.
எனக்கு அதைப் பொழுதுபோக்காகச் சிந்திக்க முடியவில்லை. என்றைக்குமே எழுத்து
என்கிற பணி எனக்கு வேதனையாய்த்தான் இருந்திருக்கிறது. ஆத்மாவின் கடும்
தாகமாய்த்தான் இருந்திருக்கிறது. வாழ்வதற்கே அவசியமான கனவாய்த் திகழ்ந்
திருக்கிறது.

7. எனக்காகத்தான் நான் எழுதுகிறேன். நான் எழுதும்போது எனக்கு முன் பத்திரிகைக்
காரர்கள் இல்லை. பாராட்டுகிறவர்கள் இல்லை. வாசித்து மகிழ்கிற ரசிகர்கள் இல்லை!
நான் மட்டும்தான் இருக்கிறேன்! பத்திரிகை, வாசகன், ரசிகர், அச்சுப் புத்தகம்....
இத்யாதி எல்லாம் நான் எழுதி முடித்த கதையின் பௌதீக வாழ்க்கைக்குத்தான். எழுதி
முடித்த என் கதை பெறவேண்டிய உலகவாழ்வு அது! அவையெல்லாம் நான் எழுதி
முடித்த பின்னர்தான் வருகின்றன. கதை வாழ்ந்த ஆத்மீக ஜீவிதம் எனக்குள்தான்.
கிளர்ந்தெழுவதும், படர்ந்து விரிந்து பரவுவதும் பூத்து வெளிவந்து குலுங்குவதும்
என்இதயத்தில்தான்.

8. புகழ்வோர் புகழ் மொழிகளும் பிரசுரிப்போர் ஆணையும் எழுத்தின் தூண்டுதல்
அல்ல. என் துக்கங்களும் கண்ணீர்களும் என் அவதிகளும் என் கனவுகளும்
ஆசைகளும் என்னை அழுத்தித்தான் மேல்வர முந்தும்போது நான் எழுதியாக
வேண்டும். ; எழுதித் தீரவேண்டும். எழுதாமல் இருக்க முடியாது. அப்படி எழுத
முடியாமல் நின்றால் எங்கோ எனக்குள் கீறல்களாக அழுகை குமுறிக் கிளம்புகிறது.
அதை அமைதியாக நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

9. ஒரு புதிய கதை - முழு ஆத்மதிருப்தியோடு எழுதித் தீர்ந்துவிட்டால் அந்தக்
கணத்தில் அந்த ஆனந்தக் களிமயக்கில் சொக்குகிறேன். அது சொல்லொணாத
ஆனந்தம். - அது அனுபூதி - விவரிப்பதைவிட அனுபவித்தாலன்றி அதன்
முழுமை தெரியப் பாதி வழியில் நின்று அறிய முடியாது.

10. நான் போதனை செய்வதில்லை. போதிக்கத் தொடங்கினால் படைப்பின் நயம்
குறைந்துவிடும். அதை அரசியல்வாதிக்கோ, மறையியல் வல்லுனருக்கோ விட்டு
விடலாம். 0