Wednesday, September 12, 2012

நினைவுத்தடங்கள் - 40
   
    ரசனை, இலக்கியம், ஓவியம், புகைப்படம், மேடைப்பேச்சு, இசை, நாடகம் போன்ற பல்வேறு ஈடுபாடுகளுடன் சோதிடக்கலை மீது எனக்கு ஏற்பட்ட ஈடுபாட்டையும் சொல்ல வேண்டும்.

    எங்கள் தகப்பனார் சோதிடக்கலையில் வல்லவர்கள். நிறைய சோதிட நூல்களைக் கற்றதோடு, சோதிடப் பத்திரிகைகளையும் வரவழைத்து அவ்வப்போதைய சோதிடக்கலை பற்றிய புதிய தகவல்களையும் அறிந்தவர்கள். உள்ளூரில் இருந்த எங்கள் புரோகிதர் துரைசாமி அய்யர் அவர்கள் சோதிடம் பார்ப்பதைத் தன் தொழிலாகவும் கொண்டிருந்தவர். அப்பா அவருடன் அடிக்கடி ந்துரையாடி தன் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வார்கள்.அய்யரைப் போல தொழிலாகச் செய்ததில்லை. தவிர்க்க முடியாத, தன் மீது நம்பிக்கை வைத்து வற்புறுத்திக் கேட்பவர்க்கு மட்டும் பார்த்துப் பலன் சொல்வதுண்டு.

    எங்கள் குடும்பத்திற்கென்று ஆஸ்தான சோதிடர் போல சதாசிவம் என்கிற பக்கத்து ஊரில் வசித்த வள்ளுவர் இனத்தவரான ஒருவர் இருந்தார். அப்பாவுக்கு அவரது திறமையில் மிகுந்த நம்பிக்கை. ஒருவரது ஜாதகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுப் பலன் சொல்லுவதில் அவர் கில்லாடி என்பார்கள் அப்பா. உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியைச் சொலலுவார்கள். உள்ளூரில் ஒருவர் தன் மகனது திருமணத்தை முன்னிட்டு ஜாதகத்தைக் கொடுத்து எப்போது நடைபெறும் என்று அறிய விரும்பினார். அப்பாவும் அப்போது அருகில் இருந்தார்கள். வள்ளுவர் சதாசிவம் கணக்கிடத் தொடங்கி, ''இந்த ஜாதகனுக்குத் தந்தை இல்லை" என்றார். ஜாதகத்தைக் காட்டியவர் ஏளனமாகச் சிரித்து, அப்பாவிடம், "கில்லாடி ஜோசியர் என்கிறீர்கள், எடுத்த எடுப்பிலேயே தப்பா இருக்கே?" என்றார். அப்பா "சரியாகப் பார் சதாசிவம். இவர்தான் பையனோட அப்பா!" என்றார்கள். சதாசிவம் உறுதியாக, "ஐயா! என் கணக்கில் பிசகில்லை. ஜாதகனது தகப்பன் இப்போது இல்லை. 5 வருஷத்துக்கு முன்னால ஒரு விபத்துலே காலமாகி  இருக்கணும்" என்றார். வந்தவர் கோபித்துக் கொண்டு. "அட! போய்யா நீயும் உன் ஜோசியமும்!" என்று கிளம்பி விட்டார். அவர் போன பிறகு சதாசிவம் அப்பாவிடம் அது பற்றிக் கேட்க அப்பா சிரித்தபடி, "உன் கணக்கில் தப்பில்லைதான். அவரது அடுத்த வீட்டுக்காரர் அஞ்சு வருஷத்துக்கு முன்னே ஒரு பஸ் விபத்துலே இறந்து போனது உணமைதான்" என்றார்களாம்.

    "சோதிடத்தில் இப்படியெல்லாம் கூட சரியாகச் சொல்ல முடியுமா?" என்று அப்பாவிடம் கேட்டேன்.

    "நிச்சயமாக முடியும். சோதிடம் ஒர் கணித சாஸ்திரம். கணிதம் போலவே கடினமான, கவனத்துடன் புத்தி கூர்மை உள்ளவர்களே பயிலக்கூடிய சாஸ்திரம். ஆழ்ந்து கற்றபின், சதாசிவம் போல அனுபவமும் அர்ப்பணிப்பும் உள்ள சோதிடர்களின் வழிகாட்டுதலோடு பயிற்சி மேற்கொள்ளுவது அவசியம். நிறைய உழைப்பும், மதியூகமும், சரியாகக் கணிக்கும் புத்திகூர்மையும் தேவை. அப்படி இல்லாமல் வயிற்றுப் பிழைப்புக்காகப பலரும் இதில் ஈடுபட்டு வாய்ச்சவடால் பேசி மக்களை ஏமாற்றுபவர்கள் கிளம்பி விட்டதால் சோதிடக்கலையின் நம்பகத்தன்மை பற்றிப் பேச்சு எழுகிறது. சோதிடக்கலை எல்லோருக்கும் சாத்தியமாகி விடுவதில்லை. அதற்கும் உன் ஜாதகத்தில் இடம் இருக்க வேண்டும். அப்போதுதான் உன் வாக்குப் பலிக்கும்" என்றார்கள் அப்பா. அப்பாவுக்கு தனக்குப் பின் தன் பிள்ளை யாராவது சோதிடம் பயிலவேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்கலாம்.

    நான் கணித ஆசிரியனாக இருந்தாலும் ஏனோ எனக்கு சோதிடத்தில் ஆர்வமில்லை. பத்திரிகைகளில் வரும் ராசிபலன்களை நான் பார்ப்பதில்லை. இன்று எல்லா பத்திரிகைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிற அசட்டு ராஜா ராணி நகைச்சுவைத் துணுக்குகளைப் பார்க்காமலே ஒதுக்கித் தள்ளுகிற மாதிரி, ராசிபலன் பக்கங்களையும் நான் ஒதுக்கி விடுவதுண்டு. ஒரே நட்சத்திரம், ஒரே ராசியுள்ள பல்லாயிரக் கணக்கானவர்களில் யாராவது பத்துப் பேருக்காவது இந்த ராசிபலன்கள் ஒத்துப் போவதுண்டு. ஆனால் இந்த ராசிபலனை நம்பி லாட்டரிச் சீட்டு வாங்கி நஷ்டமடைபவரே அதிகம். ஆனாலும் என் தகப்பனார் என் ஜாதகப்படி எனக்கு occult power என்கிற வாக்கு சொல்கிற சக்தி இருப்பதாகச் சொன்னதை நான் அப்போது நம்பவில்லை. பின்னாளில் எனக்கு கைரேகை சாஸ்திரம் கற்றதன் மூலம் அது ஓரளது சாத்யமானது நேர்ந்தது.

    தமிழ்வாணன் எழுதிய கனத்த புத்தகம் 'கை ரேகை சாஸ்திரம்' ஒன்று எனக்கு என் பதிப்பாளரால் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அதைப் படித்துப் பார்த்தேன். அது கைரேகை சாஸ்திரத்துக்கு ஒரு அறிமுகம்தான். அது அந்த சாஸதிரத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. மேலும் அது சம்பந்தமான பலர் எழுதிய நூல்களை பழைய புத்தகக் கடைகளில் வாங்கினேன். எல்லாமே மேலோட்டமான நூல்கள். கடைசியாக 'ஷீரோ'(Cheiro) என்ற மேலைநாட்டு கைரேகை நிபுணர் எழுதி'ய 'Palmistry for all' என்ற அற்புதமான நூல் ஒரு நடைபாதைக் கடையில் கிடைத்தது. அதைப் படித்ததும்தான் கைரேகை சாஸ்திரத்தின் உண்மையான மதிப்பு தெரிந்தது. அதன்மீது நம்பிக்கை பிறந்தது.

    ஷீரோ கைரேகைக் கலையை அறிவியல் ரீதியாக அணுகினார். அதைப் பயில நூற்றுக்கணக்கானவர் களின் - ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, அரசியல்வாதி, குழந்தைகள், முதியவர்கள் என பலதரப்பட்ட ஆண் பெண்களின் கைகளைப் பார்வையிட்டு பதிவு செய்து கொண்டு, 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ந்து அனுபவ அறிவில் அந்த நூலை எழுதி உள்ளார். உதாரணத்துக்கு உள்ளங்கையின் நடுவில் உள்ள தனரேகை என்னும் Fate line கடினமான கைவேலை செய்வர் கைகளில் இல்லாமலிருப்பதும், செல்வந்தர் கைகளில் நடுவிரல் வரை நீண்டிருப்பதும் கண்டு அந்த ரேகையின் நீளத்தைக் கொண்டும் கையின் அமைப்பைக் கொண்டும் ஒருவரது பொருளாதார நிலையையும் வாழ்வின் திருப்பங்களையும் கணக்கிட்டுச் சொல்லாம் என்று கண்டார். அப்படியே மற்ற எல்லா ரேகைகளும் கைக்குக் கை அவரவர் அன்றைய வாழ்நிலையை ஒட்டி மாறுபடுவதைக் கண்டறிந்து அதைக்கொண்டு எப்படிப் பலன் சொல்வது என்று பதிவு செய்துள்ளார். இது அறிவுபூர்மான அனுபவக் கணிப்பு என்பதால் ஆர்வத்துடன் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். சோதனை முறையில் பலருடைய கைகளைப் பார்த்துப் பலன் சொன்னேன். பல முடிவுகள் சரியாகவும் பல சரியில்லாமலும் இருந்தன. பின்னர் அனுபவத்தில்தான் சிலவற்றை யூகித்துச் சொல்ல முடிந்தது.

    உதாரணத்துக்கு ஒன்று. எனது ஒன்று விட்ட சகோதரி ஒருவர் காசநோயால் உடல் நலிந்து, என்ன வைத்தியம் செய்தும் பலனில்லாமல் வாழ்வின் முடிவை நெருங்கிக் கொண்டிருந்தார். அவரது கையைப் பார்த்து அவரது ஆயுளைக் கணித்துச் சொல்லும்படி அப்பா சொன்னார்கள். உள்ளங்கையில் கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் புறப்பட்டு, மணிக்கட்டுவரை நீண்டிருக்கும் ஆயுள்ரேகையின் நீளத்துகேற்ப ஓருவரது ஆயுட்காலத்தைக் கணக்கிடும் முறைப்படி அவருக்கு 80வயது வரை ஆயுள் உள்ளது என்று சொன்னேன். ஆனால் என் தகப்பனாரது சோதிடக் கணக்குப்படி அவருக்கு அப்போது - 50 வயதில் கண்டம் இருப்பதாகச் சொன்னார்கள்.அப்படியேதான் ஆயிற்று. அவர் ஓராண்டுக்குள் இறந்து போனார். அப்பா என் கணக்கில் என்ன பிழை என்று பார்க்குமாறு சொன்னார்கள். ஷீரோவின் நூலை மீண்டும் படித்துப் பார்த்தேன். சுண்டு விரல் அடியிலிருந்து புறப்பட்டு சாய்வாக ஆயுள்ரேகை நோக்கிச் செல்லும் ஆரோக்கியரேகை, ஆயுள்ரேகையை வெட்டும் இடம் கண்டம் என்று கணக்கிடவேண்டும் என்று தெரிந்தது. நான் அக்காவின் கையில் ஆரோக்கியரேகை இருந்ததா, அது எங்கே ஆயுள்ரேகையை வெட்டுகிறது என்று பார்க்கவில்லை. இப்போது அது ஒரு பாடமாயிற்று.

        என் அப்பாவின் கணிப்புக்கு மாறுபட்ட எனது இன்னொரு கணிப்பு பலிதமானது. என் நெருங்கிய உறவினர் ஒருவருக்குத் திருமணமாகி, ஒரு குழந்தை பிறந்த பிறகு கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து தாய் வீட்டிற்குப் போய் விட்டார். 4ஆண்டுகள் அவர் திரும்பாத நிலையில் அவரது தாயார் மகனை இன்னொரு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால் மகன் மனைவி எப்படியும் திரும்பி விடுவார் என்ற நம்பிக்கையில், தாயாரின் கோரிக்கைக்கு இணங்கவில்லை. தாயார் என் தகப்பனாரிடம் மகனின் ஜாதகத்தைக் கொடுத்து, பிரிந்தவர்கள் மீண்டும் சேர வாயப்பிருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். அப்பாவும் பார்த்து, மருமகள் திரும்புவது சாத்யமில்லை என்று சொன்னார்கள். என்னிடம் அப்பா கணவரது கையைப்  பார்த்துச் சொல்லுபடி சொன்னார்கள. சுண்டு விரலுக்குக் கீழே பக்கவாட்டில் செல்லும் சிறிய ரேகையான திருமணரேகையில் பிளவு ஏற்பட்டிருந்தால் இப்படி ஏற்படும் என்று படித்திருந்த நான் மீண்டும் பிழை ஏற்படாதிருக்க, ஷீரோ திருமணரேகை பற்றி சொல்லி உள்ளதைக் கவனத்துடன் படித்தேன். பிளவுபட்ட திருமணரேகையில், பிளவு பட்ட ரேகையின் இரு துண்டுகளும் சற்று மேலும் கீழுமாக overlapping ஆக இருந்தால் பிரிந்தவர் மீண்டும் சேரக்கூடும் என அறிந்தேன். கணவரது ரேகையை ஆராய்ந்தபோது அது பிளவுபட்டும் மேலும் கீழுமாக overlapping ஆகவும் இருந்தது. எனவே பிரிவு நிரந்தரம் அல்ல, விரைவில் இணைவது சாத்யமே என்றேன். அப்படியே ஆயிற்று. மறு ஆண்டில் மனைவி திரும்பி வந்தார்.

    இப்போது அப்பாவுக்கு, தான் விரும்பியபடி தன் வாரிசுகளில் ஒருவர் தன்னை இக்கலையில் தொடருவார் என்று நம்பிக்கை ஏற்பட்டது. என் ஜாதகப்படி என் வாக்கு பலிதமாகும் அம்சம் எனக்கு இருப்பதாகச் சொன்னது போலவே, கைரேகைப்படியும் occult power என்கிற இந்த அம்சம் எனக்கு இருப்பதை அறிந்தேன். தொடர்ந்து நான் அக்கலையைப் பயின்று செயல்படுத்தி இருந்தால் அதில் சோபித்திருக்கலாம். ஆனால் பின்னாளில் வேலைப்பளு காரணமாகவும் என் ரசனை இலக்கியத்தின்பால் திரும்பி விட்டதாலும்  அக்கலையை மறந்து போனேன். இன்றும் அக்கலையின் அறிவியல் அம்சம் கருதி மீண்டும் முயற்சிக்கத்தான் விரும்புகிறேன். ஆனால் இப்போது முதுமை காரணமாக அதில் ஆழ்ந்த கவனம் செலுத்த முடியவில்லை.     0