Sunday, January 18, 2009

எழுத்துக்கலைபற்றி இவர்கள் -38 -மாக்சிம் கார்க்கி.

1. கலைஞன் என்பவன் தன் நாட்டின், தன்னுடைய சமுதாயத்தின் செவியாக,
கண்ணாக, நெஞ்சமாக விளங்குபவன். தான் வாழும் காலத்தின் உண்மைகளை எடுத்துக் கூறுபவன்தான் கலைஞன்.

2. எழுதத் தொடங்குபவர்களுக்கு இலக்கிய வரலாறு பற்றிய பரிச்சயம் இருக்க
வேண்டும்; எந்தக் கலையானாலும் அதன் வரலாற்றினையும் அதன் வளர்ச்சியினையும் அறிந்திருக்க வேண்டும்.

3. எந்த நூலானாலும் நேர்மையுடனும், மக்கள் மீதான நேசத்துடனும், நல்லெண்ணத் துடனும் எழுதப்படுமானால் அது பாராட்டினைப் பெறும்.

4. மனதின் தவறான புரிதலுடனும், தவறான மனஎழுச்சியுடனும் அமைந்தாலும்
எந்தவிதமான அறிவும் உபயோகமானதுதான்.

எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 37 - கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)

1. ஒரு கதையின் வெற்றிக்கு முக்கியமான அம்சம் ஒன்றுண்டு. ஒவ்வொரு முக்கியமான பாத்திரத்தின் மீதும், ஏதேனும் ஒரு கட்டத்திலாவது, கதை கேட்போருக்கு அனுதாபம் ஏற்படவேண்டும் என்பது நல்ல கதையின் கட்டுக்கோப்பின் முக்கிய அம்சம்.

2. உனக்கென - உன்னுடையது எனத்தக்க ஒரு தனித்தன்மை இருக்குமானால் அதை எழுது. அப்படி ஒன்றும் இல்லையானால் அதை நீ பெற்றாக வேண்டும். திறமை என்பது மிகுந்த பொறுமையின் விளைவு. நீ எழுத மேற்கொண்ட பொருளைப்பற்றி ஆழ்ந்து அதிக நேரம் எண்ணிப்பார். அதன் பின்பு வேறெவரும் கண்டுணராததை - வெளியிலே சொல்லாததைப் பற்றி எழுது. எதிலுமே ஆய்ந்து பாராத - அகழ்ந்து காணாத பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. காரணம், யாராவது கண்டு எண்ணியதை நம் நினைவிலே கொண்டுதான் எதையுமே பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். மிகமிக அற்பமான பொருள் எனப்படுவதில்கூட நமக்குத் தெரியாதது ஒன்று இருக்கத்தான் செய்யும். நாம் அதனைக் கண்டு பிடிக்கவேண்டும். எரியும் தீப்பிழம்பையோ, எதிரே
நிற்கும் பசுமரத்தையோ வருணிக்க முற்படும்போது அந்தப் பிழம்பும் மரமும் எவருக்குமே சொல்லாத புதுக்கருத்தை - விளக்கத்தை நமக்குத் தரும் வரை அவற்றின் முன்பு நாம் நிற்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் நாம் 'நம்முடையது' என்று ஒன்றைத் தரும் நிலைமையை அடைய முடியும்.

3. கடையொன்றின் முன்புறத்திலே உட்கார்ந்திருக்கும் ஒரு வணிகனையும், புகைபிடித்த படி நிற்கும் வாயில் காவலன் ஒருவனையும், ஒரு குதிரை லாயத்தையும் பார்ப்பதாக
நினைத்துக் கொள். ஒரு திறமை மிக்க ஓவியன் வணிகனையும், வாயிற்காப்போனையும் நம் கண்முன் காட்டுவது போல் வருணிக்க வேண்டும். அவர்களது உள்ளப் போக்குகளை யும் எழுத்திலே வடிக்க வேண்டும். அதுமட்டுமல்ல அவ்விருவரையும் வேறு பல வணிகர்களுக்கும், காவலாளிகளுக்கும் இடையில் கூட கண்டுபிடிக்கும் அளவுக்கு உன்னுடைய படைப்பு இருக்க வேண்டும்; அதைப் போல வண்டியிழுக்கும் அந்த ஒரு குதிரையை முன்னும் பின்னும் ஐம்பது குதிரைகள் நிற்கும்போது கூட பிரித்துணரக்கூடிய வகையில் ஒரு வார்த்தையாலே இலக்கணம் வகுத்து எழுது.

4. ஒரு நாவலுக்கு உரிய ஒரு நல்ல விஷயம் எடுத்த எடுப்பிலேயே மொத்தமாகவும், ஒரே உந்தலிலும் வருகிறதோ அதுதான் தாய்க்கருத்து. அதிலிருந்துதான் மற்ற எல்லாம் பெருக்கெடுத்து வழிகின்றன. இதையோ அதையோ ஏதாவது எழுதிவிட அவ்வளவு சுதந்திரம் யாருக்கும் கிடையாது. ஒருவன் தன் விஷயத்தை தானே தேர்ந்தெடுத்துக்
கொள்கிறான் என்பதல்ல. இதைத்தான் பொதுமக்களும் விமர்சகர்களும் அறிந்து கொள்வதில்லை. விஷயத்துக்கும் ஆசிரியரது சுபாவத்துக்கும் இடையே ஏற்படுகிற ஒருமைப்பாட்டைப் பொறுத்துத்தான் இருக்கிறது பெரும் படைப்புகளின் வெற்றிரகசியம்.

Sunday, January 04, 2009

அரவ¨ணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்.....

பொதுவாக, மொழிபெயர்ப்புகள் மற்றும் அந்நிய மண்ணின் நிகழ்வுகளையும்,
பாத்திரங்களையும் கொண்டு எழுதப்படும் நாவல்கள் - வாசகரை மருட்டும் அந்நியத்தன்மை
கொண்டவைகளாக அமைவது இயல்புதான். ஆனால் பிரான்சு நாட்டில் வாழும் புதுச்சேரிக் காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின் இந்த நாவல் - 'மார்த்தாஹரி' அந்தக் குறைபாடின்றி, வாசகனுக்கு நெருக்கமாய் நின்று, நிகழ்வுகளினூடே சுகமாகப் பயணம் செய்ய வைப்பதாய் இருக்கிறது.

கதையின் மையம் - பெண்கள் அவர்கள் எந்த நாடாயினும் - எப்போதும், எந்த மட்டத்திலிருந்தாலும் காலம்காலமாய் அல்லல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகிற வர்கள்தாம் என்பது. இருபதாம் நூற்றண்டின் மூன்று காலகட்டங்களில் மூன்று பெண்கள் - மார்த்தாஹரி, பவானி, ஹரிணி பிரான்சில் ஒரே மாதிரியான அல்லலுக்கும் வதைக்கும் ஆளாவதை மூன்று அடுக்குகளில் ஒரு துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்போடு நாவல் சொல்கிறது.

இருபதாம் நூற்றண்டின் துவக்கத்தில் ஹாலந்தில் பிறந்து பிரான்சுக்குப் போன
மாத்தாஹரி என்பவள் பார்ப்பவரை எல்லாம் வசப்படுத்தும் அற்புத அழகி. அதிகாரிகளும், இராணுவத்தினரும், அரசியல்வாதிகளும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவளது அழகுக்கு அடிமையாகிறார்கள். தானாய் வாய்க்கும் சந்தர்ப்பங்களினால் அவள் தன் உடலையே முன்னிறுத்தி தனக்கென ஒரு அதிகார மையத்தை உருவாக்கிக் கொள்கிறாள். பின்னால் அவள் ஒரு வேவுக்காரியாகத் தவறாகச் சந்தேகிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படு
கிறாள். ஆனால் இறந்த பின்னரும் அவள் வழிபாட்டுக்குரிய ஒரு தேவதையென அவளது
ரசிகர்களால் உருவாக்கப்பட்டு அவள் பெயரில் இயக்கங்களும் புனைவுகளும் பெருகி,
அமானுஷ்யப் பிறவியாய் பூஜிக்கப்படுகிறாள்.

புதுச்சேரியில் ஒரு வழக்கறிஞராக இருந்த பவானி, அவள் காதலித்து மணந்த தேவசகாயத்தின் வற்புறுத்தலால் அவளுக்கு விருப்பமில்லாமலே பிரான்சுக்குச் சென்று குடியேறுகிறாள். அவள் தோற்றத்திலும் அழகிலும் அச்சு அசலாய் மார்த்தாஹரியைப் போல இருப்பதால் மார்த்தாஹரியின் பெயரால் இயங்கும் 'மார்த்தஹரி சமயக்குழு' அவளை
மார்த்தஹரியின் மறுபிறவியென்று கருதி அவளையும் வழிபாட்டுக்குரியவளாக ஆக்க முயல்கிறது. பவானியின் கணவன் தேவசகாயமும் மார்த்தாஹரியின் உபாசகனாக ஆக்கப்பட்டு¢, அவனும் பவானியை மார்த்தாஹரியென்றே நம்புவதுடன் அவளை மார்த்தாஹரியென்றே அழைக்கவும் செய்கிறான். இவர்களால் ஏற்படும் மன உளைச்சலாலும் தேவசகாயத்தின்
கொடுமைகளாலும் பவானி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறாள். அதற்குக்
காரணமானவன் என்பதால் தேவசகாயமும் சிறையில் அடைக்கப்படுக்கிறான்.

பவானியின் மகள் ஹரிணி தன் தாயின் மரணம் தற்கொலை அல்ல எனச் சந்தேகித்து பவானியின் நாட்குறிப்பில் கண்ட நபர்களை ஒவ்வொருவராகத் தொடர்பு கொண்டு உண்மையை அறிய முயல்கிறாள். ஆனால் வேறொரு உண்மையை - பவானி தன்னைப் பெற்றவள் அல்ல, வளர்த்தவள் என்பதையும் தான் தேவசகாயத்துக்கும் எலிசபெத் என்பவளுக்கும் பிறந்தவள் என்றும் அறிகிறாள். அவளுக்கு ஆதரவாய் வரும் அவளது காதலன் அகால மரணமுற மனஉளைச்சலுக்கு ஆளாகிறாள். வலைத்தளம் மூலம் இரண்டாம்
வாழ்க்கை பற்றி அறி¢ய முயன்று, தான் மார்த்தாஹரியின் மகள் நோனாவின் மறுபிறவி என்று நம்புகிறாள். பின்னர் தன் தகப்பன் தேவசகாயத்தைச் சிறையில் சந்தித்துவிட்டு, காணாமல் போகிறாள்.

- இப்படி ஒரே நூற்றாண்டின் முன்று காலகட்டங்களில் வாழ்ந்த மூன்று பெண்களுடைய அவல வாழ்வும் ஒரேமாதியாக அமைந்துள்ள இந்த நாவல், பதிப்புரையில் திரு.கோ.ராஜாராம் சொல்வதுபோல் 'அரவணைக்க நீளும் கைகளில் இறுக்கப்பட்டு மரணிக்கும் பெண்களின் குறியீடாக' அமைந்திருக்கிறது எனலாம்.

நாவலின் தொடக்கமே புதுமையான அறிமுகத்துடன் வாசிப்பைத் தூண்டுகிறது. நாவல் பிறந்த கதையை ஒரு மாய யதார்த்த உக்தியோடு சொல்வதில் ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.
நடக்காத, நடக்க முடியாத ஒன்றைக் கற்பிதம் செய்து, இறந்துபோன கதாபாத்திரமே கதை சொல்லியுடன் உரையாடுவதும் நாவல் முழுதும் ஆங்காங்கே தோன்றி மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதும், கதையை வளர்க்க உதவுவதுமாய் ஒரு மயக்கத்தை வாசகர்க்கு உண்டாக்கி நாவலின் சுவையைக் கூட்டுகிறார். கதை நிகழ்வுகளும் ஒரு நேர்க்கோட்டுப்பாணியில் இல்லாமல் - ஒரு திறமையான திரைப்படத் தொகுப்பாளர் காட்சிகளை வெட்டி ஒட்டி சுவைகூட்டுவது போல திரு.கிருஷ்ணா அவர்கள் காட்சிகளை மாற்றி மாற்றிச் சொல்வதும்
தமிழ் நாவல் தளத்தில் ஒரு புதிய ரசமான உக்தியாகும்.

இவரது முதல் நாவலைப் போலவே இதிலும் முழுதும் பெண்களையே - அவர்களது அவலங்களையே மையப்படுத்தினாலும் இது ஒரு பெண்ணிய நாவலாக மட்டுமின்றி, நமது பெண்களின் திருமண வாழ்வோடு ஒப்பிடச்செய்கிற பிரஞ்சுக் கலாச்சாரத்தின் வித்தியாசமான கூறுகளையும், பல நுட்பமான தகவல்களையும், அதன் இந்தியப் பாதிப்புகளையும் அனுபவ
ரீதியாகப் பதிவு செய்துள்ள ஆவணமாகவும் திகழ்கிறது.

பாத்திரப் படைப்புகளும், அவை தொடர்பான புருவம் உயர்த்தும் நிகழ்வுகளும் 'கல்கி'
யின் 'சோலைமலை இளவரசி' நாவலை நினைவூட்டுகின்றன. அந்நாவலில் வருவது போலவே மார்த்தாஹரி, பவானி ஆகிய வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த பாத்திரங்களின் அனுபவங்களும் இணையாக நிகழ்வது சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் உள்ளன.

நடையில் 'சுஜதா'வின் பாதிப்போடு கூடிய ஒரு லாகவம் தெரிகிறது. வாசிக்க அலுப்புத் தராத சுகமான நடை. வருணனையில் கிருஷ்ணா சோபிக்கிறார். ஸ்தல விவரணங்கள் கலைத்தன்மையுடன் அழகாக வந்திருக்கின்றன. அத்தியாயம் 4ல் மார்த்தாஹரியின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிகழ்வை வர்ணிக்கும் இடம் உருக்கமாக இருப்பதுடன்
ஆசிரியரின் அற்புதமான கலாரசனையின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள் - இன்றைய அவசர உலகில் வாசகனின் ஆயாசத்தைத் தவிர்க்க உதவும் உக்தியாகும். தேவைக்கும் அதிகமான பிரஞ்சு வார்த்தைகள் ஆங்காங்கே வாசிப்பைக்
கொஞ்சம் தடைப் படுத்தினாலும் அவற்றை முற்றிலுமாய் நீக்கி எழுதிவிடவும் முடியாதுதான்.

தன்னை மட்டுமின்றி, திருமதி. சுதாராமலிங்கம், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஆகிய வாழும் பாத்திரங்களையும் நாவலோடு இணைத்து எழுதி இருப்பதும், மாலதி மைத்ரி போன்ற சமகால கவிஞர்களின் கவிதை வரிக¨ளை தக்க இடங்களில் கையாண்டி ருப்பதும், பாரதியின் பாதிப்பில் - மழை பற்றிய வருணனையில் - எழுதப்பட்டிருக்கும்
வரிகளும், 'உண்மையையே பேசுகிறேன், உரத்துப் பேசுகிறேன்" என்கிற ஆசிரியரின் ஒப்புதல் வாக்கு மூலம் தேவைப் படாமலே அவரது நேர்மையான, பாசாங்கற்ற பதிவு மனைதக் காட்டுவதாக உள்ளன. இதனால் திரு.நாகரத்தினம்கிருஷ்ணாவின் அடுத்த
நாவலை வாசகர் விரும்பித்தேடிப் படிப்பார்கள் என்று நிச்சயம் சொல்லலாம்.

--- 0 ---

'வாசந்தி கட்டுரைகள்' தரும் புதிய தரிசனங்கள்

பெண் படைப்பாளிகள் என்றில்லாமல் இருபாலர்க்கும் பொதுவாக, இன்று
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எழுத்தாளர்களில் திருமதி.வாசந்தி முக்கியமானவர்.
பெண் படைப்பாளிகள் என்றாலே இளக்காரமாய் நினைத்த முன் தலைமுறையினரால்
கூட மிகச் சிறந்த படைப்பாளியாக ஏற்று மதிக்கப்பட்டவர். தான் பெண் என்பதால் பெண்ணியவாதியாகக் கருதப்படுவது தவிர்க்கப்பட முடியாதது என்று அவரே சொன்னாலும், அதையும் தாண்டி அவர் மிகச்சிறந்த மனிதாபிமானி, பொறுப்புணர்ந்த சமூகச்சிந்தனையாளர், உண்மையைக் கண்டடைவதிலும் அதை நேர்மையுடன் பதிவு செய்வதிலும் மனசாட்சிக்குத் துரோகம் செய்யாத பத்திரிகையாளர் என்பதை 'எனிஇந்தியன் பதிப்பக' வெளியீடான
'வாசந்தி கட்டுரைகள்' என்கிற நூல் காட்டுகிறது. அது காட்டும் 'புதிய தரிசனங்கள்'
சிலிர்ப்பானவை.

ஆரம்பத்தில் அவர் ஒரு சிறந்த சிறுகதை மற்றும் நாவலாசியராகவே அறியப்பட்டவர்.
திருமணத்திற்குப் பின் கணவரின் பணி நிமித்தமாய் நேபாளத்தில் நான்கு ஆண்டுகள் வாழ நேர்ந்தபோது வித்தியாசமான கலாச்சாரம் கொண்ட அப்பிரதேச மக்களின் வாழ்வு மற்றும்
அரசியல் நெருக்கடிகள் போன்றவை, அவருள் கல்லூரிநாள் முதலே கருக்கொண்டிருந்த அரசியல் மற்றும் சமூகவியல் சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவரை ஓர் அரசியல்
விமர்சகராகவும் பத்திரிகையாளராகவும் மாற்றின. தமிழ்நாட்டுக்குத் திரும்பியதும் அவர்
'இந்தியா டுடே' வார இதழின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராகப் பணியாற்றிய பத்தாண்டுகளில் எழுதிய தலையங்கங்களும், மற்ற பத்திரிகைகளில் எழுதிய அரசியல் விமர்சனங்களும், இலக்கியக் கட்டுரைகளும், சொற்பொழிவுகளும் 'வாசந்தி கட்டுரைகள்' என்ற நூலாக இப்போது வந்துள்ளது.

அவரது கதைகளிலும் நாவல்களிலும் புதுமைக் கண்ணோட்டமும், ரசமான உரையாடல்
களும், அறிவார்ந்த சிந்தனையோட்டமும், பாவனையற்ற சரளமும், அலுப்புத்தட்டாத வாசிப்பு சுகமும் தென்படுவது போலவே அவரது கட்டுரைகளும் அமைந்துள்ளன. மேல்நாட்டுக் கட்டுரையாªர்களுக்குச் சமமாகத் திகழ்ந்த முன் தலைமுறை எழுத்தாளர் 'தி.ஜ.ர'வின்
வாரிசாய், கட்டுரை இலக்கியத்தில் இன்று அவர் திகழ்கிறார்.

இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் சமகாலப் பிரச்சினைகளை, நிகழ்வுகளை உடனுக்குடன் சூடு ஆறாமல் தெளிவான குழப்பமற்ற மொழியில் அவ்வப்போது பதிவு செய்யப்பட்டவை. பதிப்புரையில் திரு.ராஜாராம் குறிப்பிட்டிருப்பதுபோல 'தன்னைச் சுற்றி
நிகழும் அவலங்களைப் பார்வையிடும் சாதாரண மனிதனின் அச்சத்தையும் அவநம்பிக்கையை யும் அவை எதிரொலிக்கின்றன'.

மே '96 முதல் ஜனவரி '2006 வரை 'இந்தியா டுடே'யில்' 'சிந்திக்க ஒரு நொடி' என்ற தலைப்பில் வெளியான 40க்கும் மேலான சின்னச் சின்னக் கட்டுரைகள் பல்வேறு பிரச்சினை களையும் அவற்றின் தாக்கங்களையும் அலசுகின்றன. கறாரான, தாட்சண்யமற்ற விமர்சனங் கள் சாட்டையடியாய் அரசியல்வாதிகளின் சிறுமைகளின்மீதும், மதவாதிகளின் மக்கள்
விரோதப் போக்குகள்மீதும், விற்பனையையே குறிக்கோளய்க் கொண்ட பாரபட்சமான
பத்திரிகையாளர் மீதும் விழுகின்றன. அன்றாடச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள செய்திகளாய் - ஜனநாயகத் தன்மை இல்லாத ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கு அவரே காரணமாய் இருப்பதுபற்றியும், 'ஆரியமாயை' பற்றி இன்னமும் பேசிக் கொண்டிருக்கிற கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியல் மற்றும் தமிழீழப் பிரச்சியினையில் அவர் அடிக்கும் பல்டிகள்பற்றியும், அன்னை தெரசாவிற்கு 'புனிதர்' பட்டம் வழங்கிய வாட்டிகன் திருச்சபை, போப் சொல்படி
நடக்கும் கத்தோ¡லிக்கர்கள் ஆணுறை உபயோகிக்கத் தடை விதித்ததால் எழும் எயிட்ஸ் பரவும் அபாயம் பற்றியும், ஜனநாயத்தின்மீது விழுந்த சம்மட்டியாய் 'இந்து', 'முரசொலி'
பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைத் தண்டனைபற்றியும், ஓரினத்
திருமணம் பற்றிய சர்ச்சைகள் பற்றியும், நதி நீர்ப் பங்கீட்டில் மக்கள் நலனைவிட அரசியல் ஆதாயமே குறியாய் உள்ள அரசுகளின் 'காவிரி நாடகம்' பற்றியும், தலைவர்களுக்காக தற்கொலை செய்து கொள்ளும் தமிழ்நாட்டுத் தொண்டர்களின் வித்தியாசமான உளவியல் பற்றியும், போலிசாரையும் நீதிமன்றங்களையும் தன் விளையாட்டுப் பொருட்களாக்கிய ஜெயலட்சுமி தரும் பாடம் பற்றியும், காஞ்சிமடாதியின் கைது பற்றியும், வீரப்பனைக்
கதாநாயகனாக்கி தமக்குச் சமாதி கட்டிக் கொண்ட பத்திரிகைகள் மற்றும் அரசுகளின்
நச்சு அரசியல் பற்றியும், சுனாமி சோகத்தையும் தமது சுயநலத்துக்குப் பயன்படுத்திக்
கொண்ட அற்பர்கள் பற்றியும், கற்பு பற்றிய குஷ்புவின் கருத்துக்குச் சாமியாடிய -
தமிழ்தேசீயம் பேசுபவர்களின் சகிப்பற்ற போக்கு பற்றியும், பாரதத்தின் புதிய பாஞ்சாலியாய் அபத்தமாகச் சபதமிட்ட சுஷ்மா ஸ்வராஜின் ஆங்காரம் பற்றியும் இன்னும் பல கவலை
யளிக்கும் வெளிப்பாடுகள் பற்றியுமான - சுதந்திரச் சிந்தனையாளரின் உரத்தசிந்தனைகளாய் இவை அமைந்துள்ளன.

அடுத்து வரும் 'பெண்ணியச் சிந்தனைகள்' கட்டுரைகள் அவரது ஆரோக்கியமான,
நியாயமான பெண்ணிய வாதங்களைக் காட்டுபவை. இன்றைய கலகக்கார இளம் பெண் கவிஞர்கள் போல் பெண்களது உடல் அரசியலைப் பேசுவதுதான் பெண்ணியம் என்று
முரட்டடி வாதம் பேசவில்லை. பெண்ணியவாதிகளுக்கு அவர் சொல்வதெல்லாம்
'முதலாவதாக பெண்ணைப் பற்றிய மரபுச் சிந்தனையை நாம் உடைக்க வேண்டும். அதற்கு மேல் ஆணுக்கு மேலாகத் தகுதி பெற்றவர்கள் நாம் என்று நிரூபிக்க வேண்டும்- வெற்றிக்குக் குறுக்கு வழி எனக்குத்தெரிந்து வேறு இல்லை' என்பதுதான்.

'சீனா எனும் சிகரம்' என்கிற அவரது பயணக் கட்டுரை ஒரு முன் மாதிரியானது. கடந்த காலங்களில் 'ஆனந்தவிகடன் மணியன்' போன்றவர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வந்து, 'எங்கு யார் வீட்டில், நாக்கு செத்துப் போன தங்களுக்கு உணக்கையாய் தமிழ் நாட்டு சாப்பாடு போட்டார்கள், என்னென்ன கிளுகிளுக்கும் கேளிக்கைகள் எங்கெங்கு இருக்கிந்றன' என்று எழுதியதுபோல் அல்லாமல் வாசிப்பவர் கண்ணகல, புருவம் உயர்த்தும் படியான - தான் சீனாவில் கண்ட புதுமைகளை, மாவோ காலத்துக்குப் பின் மக்களிடையே
ஏற்பட்டிருக்கிற சிந்தனை மாற்றம், நடைமுறை வாழ்வில் புதிய கண்ணோட்டம், அபார
பொருளாதார வளர்ச்சி, தீவிரமான மேற்கு நாகரீக ஈர்ப்பு, 'வெளியுலகத் தொடர்புக்கும்
வேலைவாய்ப்புக்கும் ஆங்கிலம் அவசியம்' என்கிற புரிதல் பற்றியெல்லாம் பதிவு செய்திருக்
கிறார். 'இன்னும் நூறாண்டு ஆனாலும்கூட நம்மால் சீனாவின் தரத்தை எட்ட முடியாது' என்கிற ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். அவர் பயணம் போகும் இடங்களுக்கு நாமும் உடன் செல்வது போலவும் அவர் காண்பவற்றை நாமும் காண்பது போலவும் பிரமையை ஏற்படுத்துகிறது கட்டுரை.

'எது பத்திரிகை தர்மம்?' என்கிற கட்டுரை அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகையாளர் களுக்கும் பதில் சொல்வதாக அமைந்துள்ளது.

பெண்களுக்கு அரசியல் தெரியாது என்கிற ஆண்களின் கருத்துக்குச் சவால் விடுபவை அவரது அரசியல் கட்டுரைகள். 'இன்றைய எல்லா கேட்டிற்கும் அரசியல்வாதிகளே
காரணம்' என்கிற அவரது தீர்மானமான குற்றச்சாட்டு அவருக்கு எல்லா பக்கங்களிலிருந்தும் எதிரிகளைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்படாத
சத்தியத்தைத் தேடும் பயணம் அவருடையது.

பின் பகுதியில் உள்ள அவரது இலக்கியக் கட்டுரைகளும் ரசமானவை. 'நானும் என் எழுத்தும்' என்கிற கட்டுரை துவக்க எழுத்தாளர்க்கு மட்டுமின்றி, மூத்த எழுத்தாளர்களுக்கும்
பல சுவையான தவல்களைச் சொல்வது. இசையரசி எம்.எஸ் பற்றிய 'உன்னதத்தின் உறைவிடம்' என்கிற கட்டுரை ஒரு அரிய சித்திரப் பிரதிமை. படிக்கத் திகட்டாத உள்ளத்தை உருக்கும் ஓவியம்.

ஹங்கேரிய எழுத்தாளர் 'ஸாண்டர் மராயி'ன் அற்புதப் படைப்பான 'கனல்' என்கிற நாவல் பற்றிய அவரது நூல்விமர்சனம் அவரது இன்னொரு இலக்கிய முகத்தைக் காட்டுவது. ஒரு
நல்ல படைப்பாளி செய்யும் விமர்சனமும் ஒரு அற்புத இலக்கியமாகிவிடமுடியும் என்பதற்கு இந்த விமர்சனம் நல்ல எடுத்துக்காட்டு.

நூல் முழுவதுமான இவரது எழுத்தில் - அது இலக்கியக் கட்டுரையாகட்டும் அல்லது அரசியல் விமர்சனமாகட்டும் - தென்படும் சுகமான நடையோட்டம், கலைத்திறம்,
சொல்லாட்சி, உவமை நயம், மிகைப் படுத்தாத வருணைகள். 'சகதர்மிகள்' போன்ற
சொல்லாக்கங்கள், இலக்கியங்களிலிருந்து பொருத்தமாய் எடுத்தாளும் நளினம், ராஜம்
கிருஷ்ணனைப் போல் ஆதாரபூர்வமான களப்பணியின் பதிவு, சிறுமைகண்டு சீறும்
அறச்சீற்றம், அரசியல் அங்கதம் ஆகியவை மீண்டும் மீண்டும் படித்து ரசிக்க வைப்பவை.

அவரது இலக்கிய நயமிக்க எழுத்தாளுமைக்கு ஒன்றிரண்டு உதாரணங்களை சுட்டிக் காட்டமல் இவ்விமர்சனத்தை முடிக்க எனக்கு மனமில்லை.

திருமதி.எம்.எஸ் பற்றிய கட்டுரையில் ஒருஇடம்: 'நீ அர்த்தம் உணர்ந்து பாடினா
ஜனங்க உன் பக்கம் வருவா' என்றார் சதாசிவம். வந்தார்கள். திரள் திரளாக கன்னியாக்
குமரியிலிருந்து தில்லிவரை. கல்கத்தாவிலிருந்து மும்பைவரை. அவர் 'சம்போ மஹாதேவா' என்று பாடியபோது நாஸ்திகர்களும் நெகிழ்ந்தார்கள். 'செந்தமிழ்நாடெனும் போதினிலே'
என்று ஆரம்பித்ததுமே பாமரர்கள் சிலிர்த்தார்கள். 'குறையொன்றுமில்லை' என்று உருகி உருகிப் பாடுகையில் சாமான்யர்களும் கரைந்தார்கள்.'

'கனல்' நாவல் பற்றிய விமர்சனத்தில்: 'மராயின் கதைக்களம் மத்திய ஐரோப்பா.
கதையின் காலம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம். இருந்தும் கதை மாந்தருடன்
என்னால் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடிந்தது. பல சமயங்களில் வினோதமாக உபநிஷத்
காலத்துக்குச் சென்றாற்போல, நசிகேதனின் நிலையில் அமர்ந்திருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. வாழ்வியலைப்பற்றி, தர்மத்தைப்பற்றி, பொய்மையைப்பற்றி, மனித உறவுகள்
அவை கொடுப்பதாக நாம் நினைக்கும் உரிமைகள்பற்றி கேள்விகள் துளைத்தன'. இதை
வாசிக்கும்போது எனக்கு புதுமைப்பித்தன் 'அன்று இரவு' கதையில், அரிமர்த்தன பாண்டியன் பொற்பிரம்பால் ஈசனை அடித்தபோது அந்த அடி எவற்றின்மீதெல்லாம் விழுந்தது என்று அடுக்கிக் கொண்டே போகும் அழகு நினவுக்கு வருகிறது.

வாசந்தியின் இக்கட்டுரைத் தொகுப்பைப் படிக்கும் புதியவாசகர்களுக்கு எழுத்துக்கலை பற்றி புதியதரிசனங்கள் கிட்டும் என்று திடமாக நம்புகிறேன்.


------ 0 ------