Saturday, June 24, 2006

கடித இலக்கியம் - 10

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதியவை)

நாகராஜம்பட்டி
15-10-76

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று தங்களுக்குப் பதில் எழுதுவதற்கு ஓர் 'இன்லண்ட்' கவர் தான் வாங்கி வைத்தேன். வெளியே மூட்டம் போட்டுக் கொண்டு மழை தூறிக் கொண்டு இருக்கிறது. வீட்டில், அறையில் விளக்குப் போட்டுக் கொண்டு, கதவுகளையெல்லாம் அடைத்து விட்டு, மிகப் பாந்தமாக எழுத உட்காரும்போது ஒரு சிறிய பதில் போதாது என்று தெரிகிறது.

வெகு அழுத்தமாகப் பதில் எழுத வேண்டிய, இரண்டு மூன்று ஸ்பஷ்டமான விஷயங்கள் தங்கள் கடிதத்தினால் எழுந்திருக்கின்றன.

முதலாவது தங்கள் துயரம்.

நமக்குத் தெரிகிற துக்கங்களின் தோற்றம் - ஆன்மீகமாக அல்ல, யதார்த்தமாகவே - மாயையானது. இந்த அடிப்படையிலே தான் நான் தங்களை அணுகுகிறேன்.

எது குறித்துத் துக்கம்?

தாங்கள் எனக்கு ஒரு சந்தோஷமான பிரகிருதியாகவே தோன்றுகிறீர்கள். கொஞ்ச நேரம் இதைத் திரும்ப உணர்ந்து கொள்ளுங்கள். உதித்த குலமும், ஊடாடும் குடும்பமும், உத்தியோக வாழ்வும், புத்திரோற்பத்தியும் வாழ்வின் போக்கும் எதுவும் உங்களுக்கு எத்தனையோ பேரையும் விடவும் மேலானவை. நமது வாழ்வு விரயமாவதாக நாம் உணர்வது பொதுவான அந்தரங்கப் பிரச்னை. ஒரு விதத்தில் அது கூட - டால்ஸ்டாயாகவும், பாரதியாகவும் நாம் ஆக முடியாதது குறித்து வருந்துவது - சிறுபிள்ளைத்தனம் தான். நம்மை உந்துவதாக இந்த ஜாக்கிரதையான வருத்தம் இருக்கலாமே ஒழிய - நம் வாழ்நாளின் மகிழ்ச்சியைக் குறைப்பதாக அது மாறக் கூடாது. இனி எது குறித்துத் துக்கம்?

எவரும் தவற விடக் கூடாத இன்பங்களோடு கூட உங்களுக்கு இன்னும் சில சலுகைகள் உண்டு. சோழமண்டல வாழ்வு என்றும், காவேரி தீரம் என்றும், தொன்மையும் பெருமையும் சொல்லும் ஒரு சைவ வேளாள மிராசுதார்க் குடும்பம் என்றும் நான் வர்ணம் தீ£ட்டிக் கொள்வது எனது இயல்பின் மிகையான கணிப்பு என்று ஒருக்கால் கருதப் பட்டுக் கொண்டாலும், நிச்சயமாக எனக்கு இல்லாத பல அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளில் தங்களுக்கு அதிகம் 'ஸ்கோர்கள்' உண்டு.

உண்மையிலேயே நாம் உருப்படியாய்ப் பெரிதாய் எதுவும் சாதிக்கவில்லையா? தொலையட்டும் பரவாயில்லை. அந்த வருத்தத்தை இன்னும் ஒரு extra பாரமாக மேலே ஏற்றிக்கொள்ளத் தேவையில்லை. மானிடப் பிறவியிதில் மாகாதல் கொண்டு வாழ்கிற, "வல்லார்க்கும் மாட்டார்க்கும்" பொதுவாக அளிக்கப்பட்ட வரத்தை நன்கு துய்ப்போம். "உற்றாரும் உறவினரும், தாயும் தந்தையும், உடன் பிறப்பும், பெண்டும் பிள்ளையும்" - "வாழ்க்கையும், சம்பாத்தியமும், உடையும் உணவும்" - எதுவும் உங்களுக்கு இந்த சமூகத்தில் எல்லார்க்கும் போல இயல்பேயாம். துன்பமே இயற்கை என்னும் சொல் என்றும் உண்டு. அதைத் துறந்து மகிழ்ச்சியுறுவோம்!

இரண்டாவது உங்கள் கனவுகள்.

முதலாவது விஷயத்தைப் பிரஸ்தாபித்திருப்பதிலேயே இக் கனவுகளின் காரணங்கள் அடங்கி இருக்கின்றன. பரீ¨க்ஷக்குத் தவறி நின்று விடுவதும், கிணற்றங் கரையின் விளிம்பில் தடுமாடுவதும், ரயிலைத் தவற விடுவதுமான கனவுகளை நானும் கண்டிருக்கிறேன்.எத்தனையோ கோடிச் சலனங்களில் அவையும் சில. அவை, தொடர்ந்து வருகிற கனவுகளாக இருப்பதை நாமே தவிர்த்துக் கொள்ள முடியும். அதற்கு நமது அகம், பகல் பூராவும், விழித்திருக்கும் போதெல்லாம் ஆனந்தத்தில் தளும்ப வேண்டும்.

கனவுகள் குறித்து அஞ்ச வேண்டாம். நிதரிசனங்களைக் குறித்தும் அஞ்ச வேண்டாம். சமூகம் குறித்தும், இழந்து விடுவோம் என்று தோன்றுகிற எது குறித்தும் அஞ்ச வேண்டாம். courage is a great quality என்று என் காது கேட்டிருக்கிறது. தொற்றுநோய்க் கிருமிகளுக்கு அஞ்சுங்கள். மானத்தை இருட்டில் விற்று சம்பாதிக்கும் புகழுக்கு அஞ்சுங்கள்.

மனம் நிறைந்து, காம்பீர்யம் துலங்கத் துலங்க, நமது கழிவுகளை மொய்க்கும் உலகோர்ப் பழிகளுக்கு அஞ்சாதீர்கள். அஞ்சாமையும், ஆனந்தமாயிருத்தலும் உங்கள் கனவுகளை மாற்றும்.

மூன்றாவதாக, நீங்கள் தெரிவித்திருக்கும் சில மேலெழுந்தவாரியான அபிப்பிராயங்கள்.

"இடையில், கண்ணதாசன், துக்ளக், குமுதம் என்று Tit bits கணக்காய் எழுதி 'இவர் எல்லோரையும் போல சாதாரண மனிதரே' என்று சலிப்பேற்படச் செய்து விட்டார்......." என்று JK வைப் பற்றி ஓர் இடத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

தாங்கள் அவற்றைப் புரிந்துகொண்டது குறித்து எனக்கு வருத்தம் உண்டாகிறது.

இலக்கியம் என்பது என்ன? படைப்பிலக்கியம் என்பது ஒரு அநாவசியமான அடைமொழி என்று எனக்குத் தோன்றுகிறது. வாழ்வே இலக்கியமாகிற போது, அங்ஙனம் எழுதத் தகும் எதுதான் இலக்கியமில்லாமல் போய்விடும்? நமது சமூகம், நமது உறவுகள், நமது பிரச்னைகள், நமது கவிதை, கலை, நாகரீகம், தோல்வி, வெற்றி, எதிரே காணும் பொருள் - எது குறித்து ஓர் இலக்கியவாதியின் பொறுப்பு கைகழுவப்பட்ட சிந்தனைகளை அந்த Tit bits களில் அவர் காட்டியிருக்கிறார் என்று இன்னொரு தடவை "கணக்காய்"ப் பாருங்கள்.

- இங்கே திருப்பத்தூருக்கு அவர் வந்திருந்த போது, காம்ரேடும், வக்கீலுமான ஒரு நண்பர் - "வெற்றிகர"மான வாழ்க்கை வாழ்பவர் - JK வுக்கு எங்கள் வட்டத்தில் பழைய நாளிலேயே பரிச்சயமானவர் - அவரைக் காண வந்து பேசிக் கொண்டிருந்தார். விசாரிப்பின் போது, தனக்கு மூன்று பெண்குழந்தைகள் என்றும், அதோடு நிறுத்தியாயிற்று என்றும், ஆண்குழந்தை இல்லை என்கிற குறை தனக்கு இல்லை என்றும் சொல்லிக் கொண்டார். இதுவரை எல்லாம் சரி. அப்புறம், அந்தக் குறையை உணராததற்கு ஒரு காரணமும் வேடிக்கையோ என்னவோ - சொன்னார்: "பையன் இருந்தால் அவன் நம்மை சொத்துக் கேட்பான். "அப்பா, நீ எனக்கு என்ன வைத்தாய், தந்தாய்" என்பான். நாம் என்ன தரமுடியும் அவனுக்கு (அவர் ஒருகாம்ரேட் - வெற்றிகரமான வக்கீல்- கவனம் வையுங்கள்)?" என்று பேசிவிட்டு, ஒரு 'ஜொக்' அடித்தது போலச் சிரித்தார்.

அப்போது JK ஒரு மஹாராஜாவைப் போல் தமது மீசையைத் தடவிக் கொண்டிருந்தார். தடவியவாறே சற்றுப் பொறுத்துச் சொன்னார்: "நமக்கு" - (அதாவது JK வுக்கு, அவர் மகனுக்கு) -"இந்தப் பூமியையே சம்பாதித்துத் தரும் உத்தேசம் உண்டு!". இதை ஒருவிதக் கனம் தந்து, நிதானமாகச் சொன்னார். இதிலே கூட அவரது இலக்கியச் சலாகை விழுந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அவர் எழுதி அரங்கேற்றிய எதிலும், நாம் விஷயங்களைச் சரியாகப் பிரதிபலிக்கச் செய்து கண்டு கொள்ளாதது - குறைந்த பக்ஷம் (இந்த "அளவு" எப்போதும் JK க்கு உரியது அன்று), அவரது வெளிப்பாட்டின் மொழி நயத்தையும் இலக்கியப் பாங்கையும் உணராது பின் தங்கி நிற்பது - நமது ரசனையின் குறைபாடாகவே எனக்குத் தோன்றுகிறது. வேண்டுமானால் அவை நமக்குச் சிரத்தை இல்லாத, ஈடுபாடு இல்லாத விஷயங்களாக இருக்கலாம். அதனால்?

Fiction பற்றியும் non-fiction பற்றியும் அவரே தமது புத்தகத்தின் முன்னுரையில் எழுதி இருக்கிறார். Non-fiction என்பது அவ்வளவு சுலபமானதோ, சாமான்யமானதோ அல்ல.

கதைகளில் மட்டுமே இலக்கியம் என்றால், உலக இலக்கியத்துக்கே ஆகாரம் காணாது.

சரியாகப் பரிமாணம் அறியாதவர்கள், அவர் Fiction எழுதாததற்கு உள்ளூர ஒரு சந்தோஷம் கொண்டவர்கள், அவர் வீழ்ந்து விட்டதாகப் பிரபலப் படுத்த விரும்பியவர்கள், மோசமான fiction ஐயும் அதைவிடப் படுமோசமான non-fiction ஐயும் எழுதியவர்கள் - எழுதுகிறவர்கள் போட்ட ஒரு கோஷம், தவறாகத் தங்கள் தலையிலும் விழுந்தது அங்கு தங்கி விட்டிருக்கிறது.

வையவன் எப்பொழுதாவது சொல்வார்: "அவர் non-fiction நல்லா எழுதுகிறார் என்றே இருக்கட்டுமப்பா! Literary world ல் என்ன தெரியுமா அர்த்தம்? ஒரு writer, non-fiction எழுதுகிறான் என்றாலே அவன் தீர்ந்தான் என்று அர்த்தம்!"

Business world போல literary world டிலும் மார்க்கெட், விலைவாசி.......இத்யாதி Tricks and Trends உள்ளது போலும்!!!!!!

அப்பொழுதும் நான் இக்கருத்துக்கு உடன்பட்டதில்லை. அதே அபிப்பிராய வலிமையை ஏற்றித்தான் மேலே தங்களுக்கும் எழுதியிருக்கிறேன். JK வை பற்றி ஏதோ எழுதி விட்டீர்கள் என்பதால், நான் தங்களை உறுதியிருப்பதாகக் கருதமாட்டீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

இதோடு இது போதும்.

".................happiness knows no marrow nor has it any yesterday. Happiness forgets the past and takes no thought for the future. It knows only the present - and that not a day, but a moment"

- Turgenev.

எனவே ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு கணமும், மகிழ்ச்சியாயிருந்து விடுங்கள். இதை ஒரு விரதம் போல் மேற்கொள்ளுங்கள். அதைத் தேடிக் கொண்டே இருந்து விட்டோ, எதிர்பார்த்துக் கொண்டே இருந்து விட்டோ ஏமாந்து விடக் கூடாது.

எது சந்தோஷமோ அதைச் செய்யுங்கள். அதையே நினையுங்கள். இடைமறிப்புகளிடமிருந்து லகுவாக நழுவுங்கள். "A thing of beauty is ajoy for ever.............." ( ஆனால் இதைச் சொன்ன கீட்ஸின் வாழ்க்கையைப் பார்த்தால் அது ரொம்ப சோகம் )

- இன்னொன்று கூட. நாம் சாதிக்காவிட்டால் பரவாயில்லை. லக்ஷ¢யப் பிரகாரம் எழுதாவிட்டால் பரவாயில்லை. எதை அடைந்தாலும் அடையாவிட்டாலும் பரவாயில்லை. இந்த வாழ்வு சந்தோஷமானது என்று மட்டும் அறிய, அறிவிக்கத் தவறக் கூடாது. தங்கள் குடும்பமும் சூழலும் வாழ்வும் இதற்கு அனுசரணையாய் இருக்க மிகவும் விரும்புகிறேன்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.
15-10-76

Friday, June 16, 2006

கடித இலக்கியம் - 9

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

நாகராஜம்பட்டி
5-10-76

அன்புள்ள சபா அவர்களுக்கு,

வணக்கம்.

பள்ளி மீண்டும் திறந்திருக்கும். இந்நேரம் பழைய வாழ்க்கை தொடர்ந்திருக்கும்.


நீங்கள் வராமற் போனது பெரிய ஏமாற்றமாகத்தான் இருந்தது. கடிதம் எழுதக்கூடத் தோன்றாமல் மனம் காய்ந்து போயிற்று. இங்கும் பள்ளி திறந்து, வாழ்வும் வேலையுமான பளு தோள்களை அழுத்துகையில், சுகமாக ஏதாவது எழுதத் தொடங்கி ஒதுங்க வேண்டும் போல் தோன்றுகிறது. தங்களுக்கு எழுதுகிறேன்.

ஜேகேவின் "ஜய ஜய சங்கர" வந்திருக்கிறது. பார்த்தீர்களா? மிகக் கனமான கதை. வெகு உயரமான பாத்திரங்கள். அதிகாரமான அணுகல். அழகான வார்ப்பு.

திருப்பத்தூரில், கார்த்திகை மோடம் போல் பட்டிமன்றக் கவியரங்கச் சொற்பொழிவு விழாச் சீஸன். பெரிய வட்டிக்கடை முதலாளியின் பள்ளி ஆண்டுவிழா. சன்மானங்களும் விருந்தும் எல்லா ஊர்களின் கல்லூரிகளின் பேராசிரியர்களையும், M.A பட்டம் சூடிக் கொண்ட கவிஞர்களையும் வரவழைத்து, தங்கள் தொந்தி பெருத்த கூன் விழுந்த முதலாளிக்கும் ஒரு பொன்னாடையை வாங்கிப் போர்த்திவிட்டன. நகரத்தில் வாழ்கிற தோஷமுள்ளவர்களுக்கு, தவிர்க்க முடியாமல் அங்கேயும் போய்க் கழிகிறது.

எனக்கு இங்கே கிராமத்து வீடும், விடுமுறைக்கு வந்திருக்கும் பிள்ளைகளும் மனைவியும் புறாக்களுமே பொழுதாகி விட்டன. நீங்கள் வந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும். ஜமுனாமரத்தூர் நண்பர்களும் ஆவலோடு எதிர்பார்த்து ஏமாந்தார்கள்.

ஆயிற்று. உத்தியோகச் சகடக்கால் மறுபடியும் ஓட ஆரம்பித்து விட்டது. குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைக் கேஸ்களைப் பிடிக்கும் அவலம் வேறு. விச்ராந்தியான கொஞ்ச நாட்கள் மறுபடியும் எப்பொழுதோ? தங்களுக்கு இங்கே வரத் தோன்றுவது மறுபடியும் எப்பொழுதோ?

மறுபடியும் எப்பொழுதோ நமது கனவு போன்ற நாட்கள்?

மேல் ஒலக்கூருக்கு வந்த போது, வழியில் வராக நதிக்கரையில் ஒரு குழந்தையின் பிணம் போயிற்று. வாழ்வின் துக்கம் நினைப்புக்கு வந்தும் மனத்தில் உறைந்து நின்று தாக்க வில்லை. கழிந்து போன நாட்களிலும் எவ்வளவோ கடன் வருத்தம் இருந்தது. வாழ்வின் வசந்தமான பசுமை அப்போதும் வாடவில்லை. வரவர நாளுக்குநாள் துக்கமும், அதிருப்தியும், அவலமான உத்தியோக வாழ்வும் ஒரு குறுகிய கூண்டில் நேரடியாகப் பிடித்து நிற்கவைக்கப்பட்டு விட்டன போல் தோன்றுகிறது.

கவியின் குரல், இது மாயை போலும் என்று கற்றுக் கொடுத்திருக்கிறது.

- சுற்றியிருப்பவர்கள் எந்த நிலையிலும் சந்தோஷமாய் இருப்பார்கள் என்றால், நாமும் இன்னும் எவ்வளவு சந்தோஷமாய் இருப்போம் என்று இப்போதும் மனம் தாக்குப் பிடித்துத் தான் பார்க்கறது.

போகப் போகப் பார்க்கலாம்.

வாழ்வின் முக்கியமான பருவத்துக்கு - அதாவது, இனியும் இதுபோலவே இருந்தால் இது ஒரு விரயமான வாழ்க்கை எனக் கூறத்தகும் பருவத்துக்கு - வந்து விட்டோம். வயது முப்பத்துமூன்று முடிந்து விட்டது.

நாடெங்கிலும் பாரதி விழாக்கள் நடந்தன போலும். நமக்கு எவ்வளவு பரிச்சயமான பாரதி! முப்பத்தொன்பது வயதுக்குள் அவன் ஏறி நின்ற சிகரங்கள் எத்தனை! வருஷாவருஷம் இல்லாமல், இந்த வருஷம் பாரதி விழாக் கொண்டாடச் சொல்லி சுற்றறிக்கை வந்தும் எங்கள் பள்ளியில் இன்னும் விழா எடுக்கவில்லை. சடங்கு நிகழ்த்த சம்மதமில்லை.

எங்கள் வைஷ்ணவி உங்களை வரச் சொல்லி எழுதச் சொல்கிறாள். சிவகுமார் "ஊரிலேயே எதுக்கு இருந்துனு இருக்கீங்க? இங்கே வந்து பாருங்க......பட்டிக் காட்டிலே எவ்வாவு பயிர்ச்செடி கொடியெல்லாம் இருக்குதுன்னு........" என்று எழுதச் சொல்கிறான்.நீங்கள் அசல் அழகான கிராமவாசி என்று அவனுக்குத் தெரியாது.

குமுதத்துக்கு இரண்டு கதைகள் எழுதி அனுப்பினேன். அனேகமாகத் திரும்பி வரலாம்.

எதையாவது எதையாவது எதையாவது எழுத இப்பொழுது தயங்குவதில்லை.

***** ***** *****

7-10-76

சற்றுமுன், 'ஜனசக்தி'யில் 'ஜெயஜெய சங்கர' பற்றி எழுதி இருப்பதைப் படித்தேன்.

கலை, இலக்கியம் சம்பந்தமான அடிப்படை உணர்வுகள் வாய்க்கப் பெறாத இந்த வறியவர்களுக்கு ஞானோபதேசம் பெறுவது இயலாத காரியம் என்றே தோன்றுகிறது. இவர்கள் ஒருவகையில் தமிழகத்தின் திமுக இலக்கியவாதிகளுக்கு நிகரான மூடத்தன்மை வாய்ந்தவர்களும்கூட. இவர்கள் மார்க்ஸ் பேராலும் லெனின் பேராலும் பாட்டாளி வர்க்கச் சார்பிலும் பேசுவது அவை சம்பந்தமான எதிர்காலப் போக்குகளுக்கே அபாயகரமாதாகும். இந்தியக் கம்யூனிஸ்டு இயக்கம் மிக மேல்மட்டத்தில் நன்கு சிந்தித்து இவர்களை வாயடைக்கச் செய்ய வேண்டும். இது நமது கோரிக்கையன்று. ஒரு எச்சரிக்கை.

- எனது முந்தைய கடிதம் தங்களுக்குக் கிடைத்ததா? என்னென்னவோ எழுதினேன். தங்களை அந்த நேரத்தில் திடமுறச் செய்வதாக மட்டுமே கூட அவற்றிலேதேனும் தங்களுக்குக் கிடைத்ததா?

ஒரு கடிதம் எழுதுங்களேன்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 8

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

பேராம்பட்டு,வ.ஆ.
13 - 8 - 76

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம். தங்கள் கடிதம் மகிழ்ச்சியையும், ஒரு விதத்தில் லஜ்ஜையையும் உண்டாக்கிற்று.

ஆகஸ்ட் பிறந்து பாதி மாதம் பறந்து விட்டது. ஆகஸ்டில் வருகிறென் என்று சொன்னீர்களே? தயாரா? தங்கள் நிலைமையை எழுதுங்கள்.

எல்லா விஷயத்தையும் நேரில் பேசுவோம்.

துன்பம் வாழ்க்கையில் எப்போதும் எங்கும் இருக்கிறது. இன்பம் வேண்டுவதும், நாடுவதுமே நமது தொழில். இந்த சிறிய கடிதத்தை நிரப்பவும் கூட mood இல்லை.

இங்கு நீங்கள் வரும்பொழுது, இங்கிருந்து இன்னோரிடத்துக்கும் உங்களை ஒரு 'பிக்னிக்' ஆக அழைத்துச் செல்லப் போகிறேன். ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூர் என்னும் ஊர். அங்கே ஒரு Forest Department நடத்தும் ஹைஸ்கூல் (தமிழ் நாட்டில் அது ஒன்றே ஒன்றுதான்) இருக்கிறது. தங்க நேர்ந்தால் நாள் கணக்கில் தங்க மாட்டோமா என்று ஏங்க வைக்கிற ஒரு பிரிட்டிஷ் சாம்ராஜ்யக்கால Travellers' Banglow இருக்கிறது. பிரின்ஸ் நீல் என்னும் அதிசயமான மீசை வைத்த ஒரு அருமை நண்பர் அங்கே தலைமை ஆசிரியர். திருநெல்வேலிக்காரர். அவர்கள் staff எல்லோரும் நம்மைப் போன்றவர்களை வியந்தும் விரும்பியும் கவனிக்கிறவர்கள். அந்த ஜமுனாமரத்தூருக் குப் போகும் வழியிலெயே காவனூர் என்கிற Telescope நிலையம் (தெ.கி.ஆசியாவிலேயே முக்கியமானது) இருக்கிறது. சனி வளையத்தைப் (Saturn Ring) பார்க்கலாம்.

- அந்த T.B ரொம்ப நாட்களூக்கு அப்படியே மனசில் பதிந்திருக்கும்.

நாகராஜம்பட்டியிலேயே வைத்துத் தங்களைப் போரடிக்கக் கூடாது என்பதற்காக இப்படியெல்லாம் யோசனை செய்கிறேன். ஜமுனாமரத்தூருக்கு என்னை ரொம்ப நாட்களாக அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை ஒரு அன்பளிப்பு போல் உடன் கொண்டு செல்வேன். நாம் அங்கு சம்பிரதாயமான கூட்டம் போல் இல்லாவிட்டாலும் கூட, கிட்டத்தட்ட நண்பர் வட்ட இலக்கியப் பிரசங்கம் மாதிரி ஏதேனும் செய்ய வேண்டி இருக்கும்.

- எல்லாம் நாகராஜம்பட்டியில் நமது தாகம் தணிந்த பிறகே. எதுவும் தங்கள் விருப்பத்தையொட்டியே.

***** ***** *****

17 - 8 -76.

பெரும்பாலும், பள்ளிக்கூடமும் நாகராஜம்பட்டியும் தான் என் இயக்கமெல்லாம். வீட்டில் எல்லோரும் நலமே. பெரியப்பாவிற்கு, எனது பட்டிக்காட்டுவாசமும், புறா வளர்ப்பும், கோழி வளர்ப்பும் கொஞ்சம் மனத்தாங்கல். அவருக்குச் செடிகள் பிடிக்கும். பிற கிராமீய விஷயங்கள் எல்லாம் வெறுப்பு. எனக்கோ வாழ்வின் எந்தப் பாகத்தை உரசினாலும் ருசியாயிருக்கிறது.

நிறையப் பேச வேண்டும், ஆற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுவன எல்லாம் சில நேரங்களில் சலனங்களே. சந்தோஷம் நித்தியமாய் நிலைத்து நிற்கிறது.சந்தோஷம் பிறரிடம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாய்ந்து, தன் வெள்ளப் பெருக்கைத் தான் காண விரும்புகிறது. சந்திப்பின் நோக்கங்கள் இவ்வளவே.

நானும் கூடத்தான், கடிதங்களில் தெரிவித்துத் தங்களுக்குப் பயம் காட்டாமல் நேரில் சிரித்துக் கொண்டே கொட்ட, பல வண்டிப்பாரங்களைச் சுமந்து கொண்டிருக்கிறேன். அது கூட, நான் மட்டுமே நினைக்கிற போது தான் பாரம். பிறருக்குச் சொல்லத் தொடங்குகிறபோது - அதுவும் ஒரு entertainmentடே! வாழ்க்கையை இப்படித்தான் எடுத்துக் கொள்ள முடியும். அதன் அவலத்துக்குத் தொடர்ந்த ஆயுள் தரப் படக்கூடாது.

நான்கைந்து நண்பர்கள் 'பொறுக்கானவர்கள்" சேரவேண்டும். சிதம்பரம் கோயிலில் சிறிது இருந்துவிட்டு சோழமண்டலக் குக்கிராமங்களிலும் ஆற்றங்கரைகளிலும் வண்டிப் பயணம், பஸ் பயணம், கால் நடைப் பயணம் என்று நாட்களை மறந்து நடக்க வேண்டும். புதிய புதிய வீடுகளில் சத்திரங்களில் சூழ்நிலைகளில் தங்கவேண்டும். கவிதை பிறக்கும் காலை மகிழ்ச்சி, தன் கரத்தை நீட்டி மாலையின் மேனியைத் தழுவ வேண்டும். "வாடித் துன்பம் மிக உழலும் வாழ்க்கையை" ஒரு விரதகால அளவுக்காவது முறிக்க வேண்டும்.

தாங்கள் இங்கு வருகிற சந்தர்ப்பத்தில் ஜமுனாமரத்தூருக்கு அவசியம் போகலாம். ஆட்சேபணை இல்லையே?

நம்மை அறிந்த அனைவருக்கும் நமது நலமும் விசாரிப்பும் கூறுக.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 7

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதியவை)

கடிதம் - 7


நாகராஜம்பட்டி
6 - 4 - 76


அன்புமிக்க சபாவுக்கு,

தாங்கள் என்மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறீர்கள்.(அது என் பாக்கியங்களுள் ஒன்று) அதனாலேயே என் கடிதம் வராத காலத்தும், திடீரென்று வந்த போதும் - இவ்வளவு உணர்ச்சி கொள்கிறீர்கள். யோசித்தால், இதைச் சார்ந்த எனது பொறுப்பு களை நான் அதிகம் உணர்கிறேன்.

தங்களை ஏமாற்றாமல் விரைந்து பதில் எழுதியிருக்க வேண்டும். மறுபடியும் தவறிவிட்டேன்.

ஒன்பது வாத்தியார்கள் வேலை செய்கிற பெரிய ஆரம்பப் பாடசாலை. நான்தான் தலைமை ஆசிரியர். நேரம் தவறிக்கூடப் போக முடியாத நிலை. அவசர அவசரமாகக் காலையில் போக வேண்டியிருக்கிறது.. அங்கே போனபின் ஆயிரம் ஜோலிகள்.

வீட்டிலும் எனது பாத்திரம் இப்போதெல்லாம் வேறு மாதிரியானது. மனைவி பாவம்! அவளுக்கு உடல் சிரமத்தையாவது குறைப்பது எனது தர்மம். தண்ணீர் சேந்திக் கொடுக்கிறேன். அவள் அரிசியில் கல் பொறுக்கும்போது நான் அடுப்பை எரிக்கிறேன்.

வெங்காயம் அரிந்து தருகிறேன். இப்படி பல சில்லறைப் பணிகள். அவற்றின் வெளி மதிப்பு மிகக் குறைவானதாக இருக்கலாம். ஆனால் இருவர் உறவிலும் இந்தச் சிறிய பங்கு மிகவும் செம்மையுண்டாக்குகிறது.

இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறாரே என்கிற சலிப்புக்கூட அவளுக்குத் தோன்றாத நாளாகப் பார்த்து, லாந்தர் வைத்துக் கொண்டு கவிழ்ந்து எழுத வேண்டும். அப்படித்தான் எழுதுகிறேன். ஆனால், தங்களுக்கெல்லாம் கடிதம் எழுதுவது, உருப் படியாகக் கதை எழுதுவது - ஆகிய இந்தக் காரியங்களுக்கு அவளைத் தடையாகச் சொல்லுவது என்னைப் பொய்யனாக்கும். இதுவரை நான் குறிப்பிட்ட சூழ்நிலையில், சிறிது நேரமே சுகமாக அனுபவிக்கிற சோம்பல்தான் உண்மையில் காரணம்.

இன்று காலை பள்ளிக்கூடம் போனதும், "கண்ணதாசன்" பத்திரிகை தபாலில் வந்து சந்தோஷமளித்தது. அட்டையில் பதினாலு வயது ஜெயகாந்தன். போட்டோ: ஜே.எம்.கல்யாணம். கவர்னர் கே.கே.ஷா, ஹக்கீம், ஆர்.கே.கண்ணன், எம்.எஸ்.வெங்கட ரமணி ஆகியோரின் கட்டுரைகளுடன் என் கட்டுரையும் எழுத்துக்கு எழுத்து வந்துள்ளது.

பத்திரிகை கிடைத்தால் படியுங்கள்.

தங்கள் கடிதம், என் விசாரிப்புகளுக்கு மிகுந்த விவரமான, பெரும்பாலும் சந்தோஷமான தகவல்களைத் தந்திருந்தது. தந்தையாரின் முதுமை நிலை மட்டும் காலத்தின் சோகக் கனவைக் காட்டுகிறது. இருப்பினும் அவர் குறித்து, மாந்தரை அவரவர்

"எச்சத்தால்" கண்டு அறியும் நமது மரபு பிரகாரம் நாம் பெருமிதமும் சந்தோஷமுமே கொள்வோம். 'யாருக்குத்தான் இல்லை' என்கிற பதிலை அறிந்துள்ள போதும், உங்களுக்குக் கூடவா இடையில் வாட்டமும் துன்பமும் வருந்தி ஆற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிகளும் நேர்ந்தன என்று கேட்க நினைக்கிறேன். வசந்தம் துளிர்விடும் காலத்தில் நெடுநாளைக்குப் பிறகு மீண்டும் பரஸ்பரம் எழுதிக் கொள்வதிலும் ஒரு processன் அழகு தெரிகிறது. எல்லாவற்றிற்கும் சந்தோஷமே படுவோம். துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறப்போம். இன்பமே வேண்டி நிற்போம்.

தாங்கள் எஸ்.எஸ்.எல்.சி பேப்பர்கள் திருத்த சென்னை செல்ல நேர்ந்தால், நாம் சந்திக்கும் தருணம் நெருங்குகிறது என்று நினையுங்கள். தேவபாரதி சமீபத்தில் ஒரு கார்டில், ஏப்ரலில் JKவின் பிறந்த நாளை முன்னிட்டு(ஏப்ரல் 24) சென்னை L.L.Aயில்(லோகல் லைப்ரரி அத்தாரிட்டி) எள்¢ய முறையில் ஒரு விழாக் கொண்டாடவும் உத்தேசம் என்று எழுதியிருந்தார். ஒருமுறை சென்னை செல்ல வேண்டும் என்ற தாகத்தை நானும் அதை உத்தேசித்துப் பொறுத்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் சென்னை போகும் முன்பும், போன பின்பும் எனக்கு அடுத்தடுத்துக் கடிதம் எழுதி உந்துங்கள். கிளம்புகிறேன். இன்ஷா அல்லாஹ்!

வாழ்வில் என்ன ஏற்றத் தாழ்வுகளில் விழுந்தாலும், எழுத்தின் மேல் உள்ள மரியாதையான உறவைக் காப்பாற்றிக் கொண்டே வருவதாகவும், இதையே என் எளிய வாழ்க்கை நிறைவாகவும் உணர்கிறேன். இது என்னை எல்லாப் பரிமாணங்களிலும் காப்பாற்றும் என்ற நம்பிக்கையையே முலதனமாகக் கொண்டு வாழ்கிறேன்.

"தீபம்" பத்திரிகையை நான் பார்த்து வருஷக் கணக்காகிறது. எப்பொழுதோ தென்பட்டபோதும், தங்கள் குறுநாவல் பிரசுரமான செய்தியைக் கேள்விப்படவில்லை. "ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது" நாவலை எழுதி முடித்திருக்கிறீர்களே இது பெரிய விஷயம். சகட்டு மேனிக்கு எழுதித் தள்ளிவிடும் நபரின் நாவல்களில் ஒன்று எனில் இது சகஜமான விஷயம். நீங்கள் அப்படி இல்லை.

இந்த எல்லா விஷயங்களும் தங்களைப் பற்றி எனக்கு மிகுந்த நிறைவும் சந்தோஷமும் அளித்தன. இவ்வாறே தொடர்ந்து இருக்கட்டும்.

நான் மத்தியில் B.A Literatre படிக்கும் சபலத்துக்கு வேண்டா வெறுப்பாய் ஆளானேன். "ஒத்தெல்லோ" பற்றி ஒரு ஷேக்ஸ்பிரின் அதாரிடி எழுதிய 1920 காலப்புஸ்தகம் ஒன்றை ரஸித்துப் படித்தது மட்டுமே லாபம். பிற புத்தகங்கள் தூசு படிந்து விட்டன. கயிற்றால் கட்டிப் போட்டு விட்டேன். வீட்டு அழுக்குத் துணிகளுக்கு அது இப்போது மேடை. எல்லாம் ஒரு மாதக் கூத்து.

வையவன் B.A.வுக்குப் பிறகு வெங்கடேஸ்வரா யூனிவர்ஸிடியிலோ என்னவோ - தமிழ் M.A பாஸ் செய்து விட்டு B.T B.Ed எதுவும் போகாமல் செகண்டரி கிரேடாகவே இருந்து கொண்டிருக்கிறார்.

Turgenev ரொம்ப நாட்கள் ரஷயாவை விட்டு நீங்கிப் பாரிஸில் இருந்தார். தூர இருந்துகொண்டுதான் அவரது முக்கிய நாவல்க¨ளை எழுதினார். டால்ஸ்டாயும்,டாஸ்டாவ்கியும் ரஷ்யாவை விட்டு வெளியே போனால் எழுதவே முடியாத பழக்கம் உள்ளவர்கள்). துர்கனேவுக்கு ஒரு artistic distance தேவைப் பட்டது போலும் என்று ஒரு விமர்சகன் குறிக்கிறான். வையவனோடு எனக்கு இப்போது நேர்ந்திருக்கிற இந்தப் பிரிவு - அவரது எழுத்துக்களை சரியாகவும் உரக்கவும் விமரிசிக்கத் தடையில்லாத ஒரு artistic seperation ஆகும்.

சபரிமலைக்கு, முதல் இரண்டு வருஷங்கள் JKவுடன் காரில்தான் போனோம். மூன்றாவது நான்காவது ஐந்தாவது வருஷங்கள், ஒரு நிதானமான, சௌகரியம் மிக்கப் பாசஞ்சர் வண்டியில் பயணம். இரண்டு இரவுகளும் ஒரு பகலும் ரயிலிலேயே கழியும் அந்த அனுபவம் ரொம்ப அருமையானது. ஒரு கம்பார்ட்மெண்ட் என்கிற உணர்ச்சியே உண்டாவதில்லை. ஏதோ, நகரும் ஒரு சிறிய குடில் போல், மிதக்கும் பல்லக்கு போல் - எத்தனை விஷயங்கள், என்னென்ன சம்பாஷணைகள் - நேரில் விவரிக்கிறேனே!

திருப்பத்துரிலிருந்து திருவண்ணாமலை போகும் சாலையில் 7 அல்லது 7 1/2 மைலில் நாகராஜம்பட்டி இருக்கிறது. 8வது மைலில் பேராம்பட்டு. மனைவி நாகராஜம் பட்டியில் உதவி ஆசிரியை. நான் 73 - அக்டோபரிலிருந்து பேராம்பட்டுக்குத் தலைமை ஆசிரியர். குடித்தனம் நாகராஜம்பட்டியிலேயே வைத்துக் கொண்டுள்ளோம். சிவகுமார், திருப்பத்தூரிலேயே, வீட்டெதிரில் உள்ள ஸ்ரீராமநிலையம் ஆரம்பப் பாட சாலையில் இரண்டாம் வகுப்பு. தாத்தாக்களும், பாட்டிகளும், அத்தைகளும் கவனித்துக் கொள்கிறார்கள். நாங்கள் அவ்வப்போது போய் வருவதோடு சரி. வைஷ்ணவி சிறு பிராயத்தில் எங்களோடு இருந்தாள். இப்போதெல்லாம் நான்கு நாட்கள் அங்கே, நான்கு நாட்கள் இங்கே.

சென்னையில் தவறினாலும், மே மாதத்தில் தாங்கள் இங்கு வந்தால் சில நாட்கள் சௌகரியமாகத் தங்கிப் போகலாம்.

தங்கள் கடிதத்தில் கேட்டுள்ள ஒவ்வொன்றுக்கும் கவனமாகப் பதில் எழுதச் சொல்லி இருந்தீர்கள். எது எதற்கு எழுதியிருக்கிறேன், எவற்றிற்கு எழுதவில்லை என்று தெரியவில்லை. இன்னும் எழுதிக் கொண்டிருந்தால், நாள் இன்னும் தாமதமாகும்.எனவே முடிக்கிறேன். உடனே பதில் எழுதுங்கள். சென்னை வர முயலுங்கள்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.
8-4-76.

Friday, June 02, 2006

கடித இலக்கியம் - 6

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதியவை)

நாகராஜம்பட்டி
28-5-76.

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தம்பிக்கு நேர்ந்த துக்கத்தை இங்கு அனைவரும் பகிர்ந்துகொண்டோம். வீட்டில் அம்மா, பெரியம்மா போன்றவர்கள் மிகவும் பரிதபித்தார்கள்.

துக்கங்களின் எதிரே நான் வாயடைத்து நின்றுவிடுவது வழக்கம். அதற்கு உள்ளானவர்களிடம் போய்ப் பேசக் கூடத் துணிச்சல் வருவதில்லை. (ஒரு விதத்தில் சொன்னால், இதேதான் நான் "கண்ணதாசனு"க்கு எழுதிய கதையின் கருவுக்கும் காரணம்) ஒரு தனித்த நேரம் கண்டு, தங்களை நேரடியாக வைத்துப் பேசுவது போல எழுத வேண்டும் என்று நினத்தேன். ஆனால் என் வாழ்க்கைச் சூழலின் மாறுபாடுகளை அனுசரிக்க மேற்கொண்ட வேலைப் பளுவில், அத்தகைய நேரம் இதோ அதோ என்று இவ்வளவு நாளும் நழுவி வந்து விட்டது.

இவ்வளவு அவலத்தில் எதற்கு வாழ்க்கை என்று தோன்றுகிற கணங்கள் நேரத்தான் செய்கின்றன. இருந்தாலும் வாழ்க்கை எவ்வளவு சந்தோஷம் என்று நினைக்கிறோமே....... அவரவர் தனிப்பட்ட அனுபவமா இது? இந்தப் பொதுமை, வாழ்வின் பரிபூரணத்துக்குத் தேவைப்படுகிறது போலும்......

தங்களின் தனிமை குறித்து எழுதியிருந்தீர்கள். எனது தனிமை எவ்வளவு தனித்தது தெரியுமா? விவரித்தால், அது சுயசரிதையின் ஒரு பாகமாகும். ஆனால் நம்முள் நாம் நிகழ்த்திக் கொண்டே வரவேண்டிய யோகத்தின் மூர்ச்சனை கலையாத வரை, நாம் எங்கு, எந்தச் சூழலில், எவருடனும் அல்லது எவரின்றியும் இருந்தாலும் நமக்குத் தனிமை இல்லை. இதை, உங்களுக்கு எழுதுகிற இப்போதுதான் நானும் அறிந்து உணர்கிறேன்.

எனது சூழல் மாறிய செய்தி என்னவென்றால், நான் அதே கிராமத்தில் ஒரு புதிய வீட்டுக்குக் குடிபோய்விட்டேன். முன்பு ஒரு குடிசையில் ஒண்டுக் குடித்தனம். இப்போது, போன கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேனே அந்த அய்யர் வீடு....... திடீரென்று இது நேர்ந்தது. கோடை விடுமுறையில் பார்த்துக் கொள்வதற்கு மட்டும் என்னிடம் ஒப்படைக்கப் பட்ட அந்த கொஞ்சம் வசதியான வீடு, மாதம் பத்து ரூபாய் வாடகைக்கு (அதற்கு மேலாக நான் அதைப் பராமரிப்பேன் என்கிற நம்பிகையில்) எனக்கு விடப்பட்டு, பொருள்களை மாற்றிக் கொண்டு குடித்தனமும் பெயர்ந்து விட்டேன். அதை ஒட்டிப் பல வேலைகள். இடையில் "கண்ணதாசனு"க்கு கதை வேறு கனத்த நிர்ப்பந்த நெருக்கடியில் என் இயல்புக்கு மாறாக எப்படியோ எழுதினேன்.......ஜூனில் வரலாம்.

இந்த வீடு, தங்களை வரவேற்கிற வீடு என்று சொல்லலாம். இத்தனை நாள் இருந்தது கணவனும் மனைவியும் ஆத்திரம் தீரவும் அன்பு கொஞ்சியும் கூடப் பேச முடியாத வீடு. இந்த வீடு, நண்பர்களுடனும் கூட நள்ளிரவு வரை பேசத் தக்க தனி வீடு.

மூன்று தென்னை மரங்கள் உண்டு. ஒரு சிறிய மாமரம் உண்டு. என் ஆசைக்குத் தோட்டவேலை செய்யலாம். புறாக் கூட்டையும் வெற்றிகரமாக இடம் மாற்றி விட்டேன். அந்தப் பெட்டி இப்போது எனக்கு 'டெலிவிஷன்'. பழங்காலத்து வீடு. நிறைய ஒழுகும். ஆனால் பரவாயில்லை. வாழைக் கன்றுகளுக்கு அக்கறையுடன் நீர் வார்த்து வருகிறேன். தண்ணீருக்குப் பஞ்சப் பயம் காட்டாத நல்ல கிணறு.

குறித்து வைத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்து ஒன்று பாக்கி இல்லாமல் செய்வது என்பது, மளிகைக் கடையில் சாமான்கள் வாங்குகிற ஒரு விஷயத்தில் மட்டுமே - அதுவும் இப்போது சமீப காலமாகத்தான் எனக்குப் பழக்கம். எழுத ஆரம்பித்து விட்ட பிறகு, எழுத ஆரம்பித்ததை நிறுத்தி 'அயிட்டங்'களை யோசித்தால் தூக்கம் வருகிற மாதிரி தெரிகிறது. தங்கள் ஆர்வ விசாரிப்புகளை அலட்சியப் படுத்துகிறேன் என்று அர்த்தமல்ல. சங்கீதம் தெரியாத குறைக்கு நான் 'சபா'வுக்குக் கடிதம் எழுதுகிறேன். உங்களுக்கு எழுதுகிற போது நான் ஒரு புல்லாங்குழலை ஊதத் தொடங்குகிறேன். மனசின் ஏதேதோ தாகங்களைத் தணிவிக்கிற வீணையை இயற்றுகிறேன். என் போக்கில் எங்கேயோ நிறுத்துவதுதான் எனக்கு சௌகரியமாக இருக்கிறது. ஆயினும் எல்லாவற்- றையும் பற்றி எழுதுவேன் - இன்ஷா அல்லாஹ் - என்று நினைக்கிறேன்.

தாங்கள் அவசியம் ஒரு முறை வந்து போக வேண்டும். நாங்கள் இந்த வீட்டுக்கு வந்த நாள் முதல் உங்களை வரவேற்கத் தயாராகிவிட்டோம். நாங்கள் இப்போது விருந்தினர்க்குப் பசித்திருக்கிறோம். எங்கள் வாழ்வின் வியப்புகளையெல்லாம் அவர்களுக்குக் காட்ட விரும்புகிறோம். அவர்களோடு பேச விரும்புகிறோம்.

***** ******

30-5-76

"கண்ணதாச"னில் எழுதிய கட்டுரை "குத்தூசி"யில் மறு பிரசுரம் ஆகியிருக்கிறது. அவர்களும் JK மலர் போட்டிருகிறார்கள்.

கம்யூனிஸ்டு முகாமில் வளர்ந்த சிலர், அதில் சேர்ந்ததாகப் பெருமை கொள்ளும் சிலர், எம்.ஜி.ஆரை நயந்து பிழைக்கும் பிழைப்பாக, JKயின் "சினிமாவுக்குப் போன சித்தாளு"வை விமர்சிக்கவும் மறுக்கவும் முனைந்துள்ளனர். வர்க்க சாஸ்திரங்களைப் பேசிக் கொண்டு, வர்க்கம் சார்ந்த இலக்கிய உலகின் கருங்காலிகளாக மாறியிருக்கிறார்கள். அந்த நாவல் குறித்து நாம் ஏதாவது எழுதலாமா என்று யோசிக்கிறேன்.

நேற்று டவுனுக்குப் போய் வீரமணியிடம் பேசிக் கொண்டிருந்தேன். தீபத்தில் உங்கள் கதை வந்திருப்பதாகச் சொன்னார். படித்து விட்டு எழுதுகிறேன்.

JK, திருப்பத்தூருக்கு வருகிற 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறார். ஒரு கூட்டம். மறுநாள் 7ஆம் தேதி நாங்கள் பூண்டி போகவிருக்கிறோம்.

கணையாழி, அது, இது என்று சில ஏடுகளை இப்போதுதான் பார்த்தேன். இந்தக் கூட்டத்தைத் தொடர்ச்சியாகக் கவனித்து வராதது நமது வளர்ச்சிக்கு நல்லது என்றே நினைக்கிறேன். ரஸமாக எழுதுகிறவர்கள் சில பேர் இருக்கிறார்கள். அதுவும், வம்பு, வழக்கு, இலக்கியத்தை மையமிட்ட கட்சிச் சண்டைகள், இவைகளில் சிக்காது ஒதுங்கி நின்று பார்ப்பது போன்ற நடுநிலைத் தோரணை, அதிலும் ஓர் உட்சாயல் - இவை சம்பந்தமாக, எழுதி எழுதித்தான் அந்த ரஸம் செலவாகிறது. creative ஆகவோ, அல்லது non-fiction ஆக இருந்த போதிலும் அதிலும் காணப்பட வேண்டிய இலக்கிய மேன்மையுடனோ யாரும் ஒரு single piece கூட எழுதுவதில்லை போல் தெரிகிறது. வண்ணதாசன், வண்ணநிலவன் என்கிற பெயர்கள் கண்ணில் பட்டிருக்கின்றன. எனக்குச் 'சொல் அலர்ஜி' யே உண்டு. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறபோது நான் 'வண்ணமுத்து பி.ச.குப்புசாமி' - இப்போது அந்தப் பேரில் எனக்கு மஹா சிரிப்பு வருகிறது - என்று புனைபெயர் வைத்துக் கொண்டிருந்தேன். தமக்கு வந்திருக்க வேண்டிய இலக்கியத் தெளிவிலும், அதனடிப்படை யில் வந்திருக்க வேண்டிய சொல்லலங்காரப் பண்பிலும் அவர்களால் எப்படி இந்த 'வண்ணப் பெயர்க'ளைத் தாங்கி நிற்கக் கூசாமல் இருக்கிறது? புரியவில்லை.

- திருப்பத்தூர் அடுத்த 'வேலன் நகர்' என்னும் பகுதியில் என்னை வீடு வாங்கச் சொன்னார்கள். வடிவேலு என்கிறவன் தன் நிலத்தைத் துண்டு போட்டு மனைகளாக்கி அதற்குத் தன் பெயரை வைத்து விட்டான் 'வேலன் நகர்' என்று. '' 'வடிவேலு மங்கலம்'
என்று வைத்திருந்தாலும் நான் அதை விரும்பியிருப்பேன். ஆனால் இந்த வேலன் நகர் பேரில், சமீபத்தில் தமிழில் படிந்த ஓர் அசிங்கமான நடையின் வாடை வீசுகிறது" என்று கூறி நான் வாங்க மறுத்து விட்டேன். சொத்துடைமைக்குக் கூட எனக்குச் சொல்லின் அலங்காரம் தேவை.

- அவர்கள் கதையை விமர்சிப்பதற்கு இது முன்னுரை ஆகாது. அவர்களைப் பார்த்ததும் நான் படிக்காமல் விட்டதன் காரணம் இது. எஸ்.முனியாண்டி, எஸ்.முனியாண்டி என்று தொடர்ந்து வந்திருந்தாலும் பார்த்திருப்பேன். வண்ண வண்ண என்று வருகிற எழுத்துக்கள் என்னைப் படிக்கத் தூண்டவில்லை.

- வண்ணநிலவன் சிறுகதைத் தொகுதி வந்திருக்கிறதாமே! எங்கேயாவது கிடைத்தால் படிக்கிறேன். நீங்களும் குறிப்பிடிருக்கிறீர்களே?

தன் எழுத்தோடும் வாழ்வோடும் integrity கொண்டுள்ளவர்களின் எழுத்தில் மட்டுமே கலையின் அழகு அமையும். அது இல்லையேல், வெறும் ஒரு தனிமனப் பயிற்சி மட்டும் கலையைப் பெற்றுத் தந்துவிடாது.

***** *****

10-6-76


- தங்களுக்கு எழுதுகிற கடிதம் இம்முறை மிகவும் நீள்கிறது - நாள் கணக்கில்.

இடையில், சென்ற 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூருக்கு JK வந்திருந்தார். மறுநாள் திங்கட்கிழமை காலை இங்கே நாகராஜம்பட்டிக்கு என் புது வீட்டுக்கும் வந்திருந்தார்.

- இந்த விவரங்களை நேரில் சொல்கிறேன்.

கல்கியில் சிறுகதைப் போட்டி வைத்திருக்கிறார்களாமே? தேவபாரதி சொன்னார். JK வந்திருக்கிற சமயம் அவர் இதைச் சொன்ன போது, போட்டிகளுக்கும் எனக்கும் -நமக்கும் - சம்பந்தமில்லை என்று நினைத்தேன். இன்று, இந்தக் கடிதம் எழுதுகிற சற்று முன்பு ஒன்று தோன்றிற்று. எழுதுவோமே!

- என்னுள் ஒரு வீழ்ச்சியை உணர்கிறேன். இதை வெளித்தள்ள வேண்டும். மனசுக்குள் இதைச் சுமந்து கொண்டிருக்கக் கூடாது. ஒரு கதையில் தான் இந்த வலி தீர நான் முனக முடியும். போட்டிக்காக அல்லாவிடினும், இதற்காக நான் அதை எழுதித் தீரவேண்டும். பொதுவாக எழுதலாம் என்றால், அதற்கு ஒரு கால வரையறை மேற்கொண்டு செவ்வையாய் முடிக்க என்னால் இயலாது. நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டே எழுதுவோம். கல்கியின் தேதி ஜூன் முப்பதாம். இருபது நாட்களூக்குள் இந்த ஆவேசத்தைத் தணித்துக் கொண்டு, பிறகு ஒதுங்கி என் இலக்கிய முயற்சிகள் சம்பந்தமாக ஒரு பெரிய முடிவு மேற்கொள்வேன்.

எழுதுவதானால் நீங்களும் எழுதுங்கள். ஏதோ எழுதினோம் என்று நம்மைப் பொறுத்தவரை ஒரு லாபம் தானே?

ஜூலையில் இங்கு வருகிற 'புரோகிராம்' வைத்துக் கொள்கிறீர்களா? எங்கள் பள்ளியின் இலக்கிய மன்றத் துவக்க விழாவிற்கு அப்போது உங்களை அழைக்கிறேன். ஆரம்பப் பள்ளிக்கூடம் தான். ஐந்து வகுப்புகள் மட்டுமே உள்ளதுதான். ஆனால், நீங்கள் ன்னையும் நான் உங்களையும் அல்லவோ சந்திக்கிறோம்? இதை ஒரு பெரிய புரொகிராமாக ஒப்ப வேண்டுகிறேன்.

***** *****

15-6-76.


என்னவோ, தங்களுக்கு எழுதுவதைத் தபாலில் சேர்க்க இந்த முறை இத்தனை நாள் ஆகிவிட்டது. மன்னிக்க வெண்டுகிறேன்.

- இன்னும் வளர்த்தால் இன்னும் தாமதமாகும். இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.


தங்கள்,
பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 5

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதியவை)

நாகராஜம்பட்டி
18-3-76


அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

ஒரு சகாப்தம் கழித்து எழுதுகிற உணர்ச்சி உண்டாகிறது.

சகோதரரின் கல்யாணத்துக்கு மாயவரம் வந்ததும், மத்தியில் உங்கள் ஊரில் இறங்கியதும், அந்த ஏரியில் குளித்ததும், பெருமாள் கோயில் பிரகாரமும், சோழ தேசத்துக் குடும்பம் ஒன்றின் மிக மேம்பாடான பண்புகளை அனுபவித்ததும்- நினைத்தால் ஒரு உன்னதமான கனவு போல் இருக்கின்றன.

மிகவும் கலகலப்பான உங்களுக்குக் கூட கல்லின் மௌனம் வந்து விட்டது, கடித விஷயங்களில் என் அதீதமான அலட்சிய சுபாவம் தந்த விரக்தியில், இல்லையா?

எப்போது நாம் சந்திக்கிறோமோ, எப்போது நாம் எழுதிக் கொள்கிறோமோ அப்பொழுதெல்லாம் பூமியை மறந்த சந்தோஷத்தில் நாம் திளைப்பதே போதுமானது. யாரும் எதற்கும் வருந்த வேண்டியதில்லை.

தங்களை ஒருமுறை அழைக்க வேண்டும். முன்பாவது என் வாழ்க்கையில் கொஞ்சம் நகர வாசனை இருந்தது. இப்பொழுது நான் இருக்கிற சூழலில் நீங்கள் உங்கள் அறியா இளம்பிராயத்தில் கூட பிரவேசித்தீர்களோ இல்லையோ! அப்பேர்ப்பட்ட குக்கிராம வாழ்க்கையில் இருக்கிறேன். எனினும் வாழ்வின் ஒவ்வொரு வழிப் போக்கும் அதிசயமான சுவையுடனேயே இருக்கிறது என்றுதான் காண்கிறேன்.

சொந்தப் பிரச்சினைகளும் கவலைகளும் சொல்லி முடியாது. இருப்பினும் என்ன என்கிற கேள்வியின் முன்னே சந்தோஷத்துடனேயே எழுந்து நிற்கிறோம்.

எழுதுகிற விஷயம் பற்றி நாளுக்குநாள் கற்க நேர்கிற அம்சங்கள், எழுதுவதை மேலும் மேலும் கட்டுப் படுத்துகின்றன. இப்பொழுதான் கருவிலிருக்கிற, நாபி வழி வந்த சத்து நரம்பு மண்டலம் கொண்டு கால் உதைக்கிற மாதிரி இருக்கிறது. ஆயிற்று இன்னும் கொஞ்ச காலம்...........(என்று யாருக்குச் சொல்கிறேன்? உங்களுக்கா? எனக்கா? ஏன் சொல்ல வேண்டும்?)

சமீபத்தில் விரும்பிச் செய்த எழுத்து வேலை, கண்ணதாசனுக்கு JK பற்றி ஒரு 'குறிப்புகள் வடிவிலான' கட்டுரை.

ஒண்ணரை வருஷங்களுக்கு முன்பு பி.எஸ்.கே என்று 'சிதம்பரத்தின் மனைவி' என்று அவர்கள் வைத்த தலைப்பில் ஒரு கதை குமுதத்தில் வந்தது. 'குமுதத்திலும் நாம் நம்மை இழக்காமல் எழுதலாம் என்பதற்குக் குப்புசாமியின் கதை ஒரு மாதிரி' என்று நண்பரொருவர் சொல்ல உஷாராகி விட்டேன். பைத்தியமா? மேலும் எழுதிச் சறுக்கி விழ?

அல்லாமலும், நாம் எழுதுவதைத்தான் எழுதுவோம் ஸ்வாமி, சும்மா எழுத்தைப் பற்றி வம்பளப்பு எதற்கு?

தங்கள் சிறுகதை எட்டாம் வகுப்புக்கோ என்னமோ, பாடமாக வைக்கப் பட்டிருப்பதை அறிந்த போது ஒருமுறை கடிதம் எழுத நினைத்தேன். மகிழ்ந்தேன். சில இடங்களில் தங்கள் சொற்கள் தமிழ் மயமாகி இருந்தது கண்டு இரங்கினேன். நான்

எட்டாம் வகுப்புப் புத்தகத்தைச் சொல்லித் தருவதற்கான பதவியில் உள்ள ஆசிரியனும் அல்லன். எனவே, அது சம்பந்தமாக மேலே எதுவும் நினைக்க முடியாமல் போயிற்று.

டயரி எழுதுகிறேன். எலிப்பொறியில் எலி விழுவது பற்றிய எங்கள் சம்பாஷணையை சில நாட்கள் குறிக்கிறேன். பொறியில் அகப்பட்டும், எலி தப்பித்துப் போய் எங்களுக்கு வேடிக்கை காட்டுகிறது. புறா வளர்க்கிறேன். சிபி, அபி, மது, மைதிலி என்று பெயர்கள்.

ஐந்து முறை சபரி மலை போய் வந்தாகிவிட்டது. ஒரு முறை சபரிமலைக்குப் போகும்போது தங்களை எட்டிப் பார்த்துவிட்டு ஓடியதும், ஓர் இரவு உங்கள் பள்ளி மைதானத்தில் நிலாவொளியில் கும்மாளம் போட்டதும் கவனம் வரும்போது கொஞ்சம் புன்சிரிப்பு உண்டாகும். அப்படியும் வாழ்ந்து பார்க்கிற போக்கு நமக்கே அல்லாவிட்டால் வேறு யாருக்குப் பொருந்தும்? நமக்கே என்பது, நமக்குத் தொழில் கவிதை என்பதில் உள்ள நமக்கே.

நான் என் போக்கில் போய்க் கொண்டிருக்கிறேன். வாழ்ந்த காலம் லாபம் தான் என்று காட்டும் கட்டம் பின்னால் வருகிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.

இந்தக் கடிதத்தில் எத்தனையோ விஷயங்கள் எழுதப்பட்டிருப்பினும், இதன் மொத்த நோக்கமும் தங்களை விசாரிப்பதே; தாங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று அறியும் ஆவலே.

உறவினர் பற்றி எல்லாம் எழுதுங்கள். உணர்வன பற்றியெல்லாம் எழுதுங்கள். நம்மை அறிந்த அனைவர்க்கும் நலம் விசாரித்து நல்வாழ்த்து கூறுங்கள்.


தங்கள்,
பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 4

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) - கடிதம் - 4

குமாரம்பட்டி
19 - 6 -68

பிரிய நண்பர்க்கு,

நமஸ்காரம்.

தங்கள் கடிதம் கிடைத்தது.

இந்த வாரக் குமுதத்தில் 'கங்கபட்டன்' வையவன். விகடனில் வந்த "செண்பக மரங்கள்" வையவனிடமிருந்து வந்த கதைகளுள் எனக்கு மிகவும் திருப்தி தராத ஒரு கதை. "ஆச்சாள் புரத்துச் செண்பக மரங்கள்" என்கிற ஒரு அழகான தலைப்பு இப்படிப் பாழ்பட்டிருக்க வேண்டாம். வையவன் அவசரத்தில் எழுதுகிற எந்தக் கதையிலும் எதாவது ஒன்று எனக்குப் பிடித்திருக்கும். முழுக்க ஏமாற்றம் தந்தது இந்தக் கதை.

- இதெல்லாம் இப்போது பிரச்சினையில்லை. வையவனின் எழுத்து நோக்கம் இப்போது வேறு. அந்த நோக்கம் எனக்கும் பிடித்திருக்கிறது. அந்த நோக்கத்திற்கு ஏற்றவாறு காரியமாற்றுவது கூட ஒரு கலைதான். வையவன் அதை மிகத் திறமையாகச் செய்கிறார்.

எப்போதும் போல் இல்லாமல், வெளியூர்ப் பயணத்துக்கு எவ்வளவு ஆசையிருக்கிறதோ அவ்வளவு தடைகளும் உள்ளன. எல்லாவற்றையும் தாண்டிக் கொண்டு நான் செப்டம்பரில் அங்கு வருவது சிரமம்தான். ஆனாலும் வர முயற்சிக்கிறேன். வருவேன்.

மே மாத ஆரம்பத்தில் ஒரு பத்து நாட்கள் JKவுடன் பாண்டி, தஞ்சை, திருச்சி, பாபநாசம், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர் என்று சுற்றினேன். ஜூலை மாதம் சென்னை போயிருந்தபோது சுந்தர ராமசாமியைப் பார்த்தேன். ஜூன் கடைசி வாரத்தில் JK இங்கே குமாரம்பட்டிக்கும், வெள்ளக்குட்டைக்கும், ஏலகிரிக்கும் வந்திருந்தார்.

- நமது இடைவெளி ரொம்ப stuff ஆனது. நிகழ்ச்சிகளின் நெருக்கம் அதிகம். எனவே நேரில் பேசச் சுவையகத்தான் இருக்கும்.

என்ன கொழுப்பு பாருங்கள் மனசுக்கு? சந்திப்பையும் சுவையையும் பற்றி என்ன இன்பமாய்க் கற்பனை செய்கிறது! அலுப்பு சலிப்பான - மிகக் கசக்கும் சம்பவங்களும் நேரங்களும் இன்னும் எத்தனை இருக்கின்றனவோ?

- இலக்கியத்தில் எதுவும் சாதிக்க முடியாது! பேசாமல் - காசுக்கு எழுதுகிற கலை கைவந்தால் அதுவே போதும்!

கவிதை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்!

அரசியலில் மிகுந்த அவநம்பிக்கை!

வாயில் எல்லாம் சாபங்களாக வருகின்றன. ரொம்பப் பண்படாத - பக்குவப்படாத ஒரு மனநிலை மிக ஆபத்தானது. மெள்ள மெள்ள பழைய நிலைக்கு மாறினாலொழிய உய்வில்லை.

அனைவருக்கும் என் வணக்கங்களும் வாழ்த்துக்களும். செல்வன்.அகிலனின் பிறந்த நாளில் அவசியம் கலந்து கொள்ள முயல்வேன்!

தங்கள் - பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 3

கடிதம் - 3

திருப்பத்தூர்.வ.ஆ.
18- 3 - 68

பிரிய நண்பருக்கு,

நான் எந்தச் சமாதானம் சொல்வதும் நியாயமில்லை. நீண்ட கடிதங்களாக யாருக்குமே எழுத முடியவில்லை. உங்களுக்கென்று எழுதும்போது, சுருக்கமான 'நலம், நலமறிய அவா' என்று எழுதுவதும் எப்படியோ போல் இருக்கிறது.

நிறைய படிக்கிறீர்களா? இங்கிருந்து கொண்டு சென்ற புத்தகங்களில் எவ்வெவற்றைப் படித்தீர்கள்? புதியதாக எழுதினீர்களா? அனைத்தையும் தெரிவியுங்கள்.

நான் தொடர்ந்து எழுதாமலிருந்து விட்டதற்குச் சோர்வோ சினமோ கொள்ள வேண்டாம். விறுவிறுப்பாக எழுத முடியாவிட்டால், எழுதாமல் இருந்து விடுவது மேல் என்று இருந்து விட்டேன்.

சில நாட்களாக நிறையப் படிக்கிறேன். ரதுலன் என்பவர் மொழிபெயர்த்த மாபஸானின் நாவல்கள் சில படித்தேன். வெள்ளக்குட்டை ஹைஸ்கூல் லைப்ரரிக்கு பல அருமையான Penguin புத்தகங்கள் வந்துள்ளன. Turgenevன் Hunter's sketches இப்பொழுது கைவசம் இருக்கிறது. மாபஸானின் சிறுகதைத் தொகுப்பாக, ஒரு பெரிய இங்கிலீஷ் புத்தகத்தையும்
இங்கே லோகல் லைப்ரரியிலிருந்து கொண்டு வந்திருக்கிறேன். இது ஏழாவது முறையோ, எட்டாவது முறையோ - அந்தப் புத்தகத்தைக் கொணர்வது!

மாபஸானிடம் ஒரு விசேஷம் - நாம் ஒரு பொருளைப் பற்றி, ஒரு சம்பவத்தைப் பற்றி, ஒரு நிகழ்ச்சியைப் பற்றி - வாழ்வின் ஒரு திருப்பத்தைப் பற்றி - எதைப் பற்றியும் - என்னென்ன விதமாக உணர்கிறோமோ, அவ்வவ்விதமெல்லாம் அவனும் உணர்ந்திருக்கிறான்.

சொல்லப் போனால் - இன்னும் விரிவாக, இன்னும் ஆழமாக! மாபஸான் என்கிற திரவக் கரைசைலில், நம் மனம் என்கிற பிலிமையே அலசி எடுத்துப் பார்த்துக் கொள்ள முடிகிறது!

- ரஸானுபவம் என்கிற முறையிலும் அவன் எழுத்து ஒரு நல்ல விருந்து.

உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம். 31-3-68 ஞாயிறன்று காலை, திருப்பத்தூரில்
ஜெயகாந்தன் பேசுகிறார். "மெல்ல தமிழ் இனி சாகும்" என்னும் தலைப்பில் இலக்கியக்
கூட்டம் ஒன்று. எங்கள் ஏற்பாடுதான். சனி இரவு அவர் திருப்பத்தூர் வந்து விடுகிறார்.
தாங்கள் அவசியம் வந்து இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். "இப்பொழுது தானே
திருப்பத்தூர் போய் வந்தோம்?" என்கிற சம்பிரதாயமான மனிதர்களின் தயக்கமும், "நிறைய
வேலை!" என்கிற 'உண்மையான ஹெட்மாஸ்டர்'களின் தட்டிக் கழித்தலும் வேண்டாம்.
அவசியம் - அவசியம் வந்து கலந்து கொள்ளுங்கள். இந்தப் பயணம் உங்களுக்கு முந்தையப்
பயணத்தைவிட லாபகரமாயிருக்கும்.

போக, இன்னொரு விஷயம்.

'ராமநாதனின் கடிதங்கள்" என்று ஒரு கதை எழுதப் போகிறேன். அதற்கு சில மூலப் பொருள்கள் தேவை. நான் உங்களுக்கு எழுதிய கடிதங்களில் - குடும்ப வாழ்க்கையைப்
பற்றி, மனைவியைப் பற்றி, மணவாழ்க்கையைப் பற்றி ஏதேனும் அவ்வப்போது எழுதியிருப்பேனா? அந்தப் பகுதிகள் இப்பொழுது தேவை. தயவுசெய்து எனக்காக எல்லாக்
கடிதங்களையும் எடுத்துப் பார்த்து, அப்படிப் பட்ட பகுதிகளை எனக்குக் கொஞ்சம் திருப்பி
அனுப்பி வையுங்கள். அல்லது அந்தப் பகுதிகளை நகல் செய்தாவது (தேதிவாரியாக)
அனுப்பி வையுங்கள். (ஆனால், நகல் செய்கிற சிரமம் தங்களுக்கு வேண்டாம். கடிதங் களையே அப்படியே அனுப்புங்கள். அந்தக் கடிதங்கள் உங்களுக்குச் சொந்தமானவை.
அவற்றைத் திருப்பி உங்களுக்கு நான் அனுப்பி விடுவேன்!)

- எனது அடுத்த கதை இதுதான். உங்களிடமிருந்து 'கச்சாப் பொருள்கள்' வந்த
பிறகே நான் கதையை ஆரம்பிக்கவிருக்கிறேன். (வையவனிடமிருந்தும் சில கடிதங்களைக் கேட்டிருக்கிறேன்.)

திருச்சி வானொலியில் நிகழ்ச்சி அறிவிப்பாளர் வேலைக்கு மனுச் செய்துள்ளேன்.
வையவன் மூலமாக இதை அறிந்திருப்பீர்கள்.

தாங்கள் வந்து போன பிறகு, மன உணர்ச்சிகளுக்குப் பலப்பல படிமங்கள் விழுந்து அழிந்து, பிறகு மறுபடியும் விழுந்து அழிந்து, நாட்கள் வளர வளர விதவிதமான மனப்
பாங்குகள் மாறிமாறி வருகின்றன; போகின்றன!

'ஆச்சாள்புரத்து செண்பக மரங்கள்' என்று, வையவன் ஒரு கதை எழுதுவதாகச் சொன்னார். எழுதுவாரோ என்னவோ? இந்த வாரம் JK கதை எப்படி?

31-3-68 அன்று அவசியம் வாருங்கள். சனி மத்தியானம் புறபட்டால், இரவு இங்கு
வந்து சேரலாம். S.S.L.C பரீ¨க்ஷ சம்பந்தமாகக் கூட, தங்கள் பயணம் தவிர்க்கப்படக்
கூடாது.

இத்தனை நாட்கள் கடிதம் எழுதாததை மன்னித்து விடுங்கள். சித்தம் போக்கு சிவன் போக்காக இருந்தது.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 2

கடித இலக்கியம் ('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) -கடிதம் - 2

திருப்பத்தூர்.வ.ஆ.

24-11-67

பிரிய நண்பருக்கு,

நமஸ்காரம். உங்கள் கடிதம் வந்தது. வையவனிடமிருந்து இன்று கடிதம் வந்தது. தங்களுக்குப் 'பெரிசான ஒரு கடிதம்' அனுப்பி வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

நாளை நாங்கள் எல்லோரும் ஏலமலைக்குப் போகிறோம். நாளை இரவு அங்கு தங்கி, ஞாயிறன்று திரும்பி அவரவர் ஊருக்கு ருவோம். அது ஒரு ஒரு நல்ல இடம். எதிர்காலத்தில் ஒரு மிகச் சிறந்த கோடைவாசஸ்தலமாகும். பனிக்காலம் அல்லவா? எங்கும்
பசுமையும் மூடுபனியுமாய் பார்ப்பதற்கு அருமையாய் இருக்கும்.

விந்தன் 'நாலாவது கதை' என்று ஒன்று எழுதியிருந்தாரே, படித்தீர்களா? உயரங்களி லிருந்து விழுந்த பிறகு, மனிதர்களுக்குப் படக்கூடாத இடங்களில் எல்லாம் அடிபட்டு விடுகிறது போலும். என்னென்னவோ வயிற்றெரிச்சல்களில் உளறியிருந்தார்.

உங்களுக்கு அனுப்பவென ஒரு புத்தகம் வாங்கி வைத்திருக்கிறேன். லெர்மான்தவ் எழுதிய "நம்காலத்து நாயகன்" (Hero of the age). ஏற்கனவே என்னிடம் ஒரு பிரதி அந்தப் புத்தகம் இருக்கிறது. இப்பொழுது, தங்களுக்கு அனுப்பவென, என்னிடம் இருக்கிற பிரதியை இழக்க விரும்பாமல், இன்னொரு பிரதியை வாங்கினேன். அதன் இலக்கியத்தரத்தை இதிலிருந்து தாங்கள் உணரலாம். டால்ஸ்டாய் லெர்மான்தவ் பற்றிக் குறிப்பிடுகையில், "சகல அதிகாரங்களும் ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்டால் எப்படி எழுதுவானோ,

அப்படிஎழுதினார் லெர்மான்தவ்" என்று சொல்லியிருக்கிறார். இன்னொரு இடத்தில், "Pushkin is a literary man. Turgenev is 'cent percent' literary man. Mr X and Mr.Y(பெயர் மறந்து போயிற்று) are more than literary men. Lermentov and I are not at all literary men" என்று சொல்லிவிட்டு, சாதாரண எழுத்தாளன், கலைஞன் எனும் நிலைக்கு மேம்பட்ட எதையோ மாற்றிப் பார்க்க வேண்டும், தலைகீழாய்ப் புரட்டிப் புதிது செய்ய வேண்டும்' என்று அவா கொண்ட "scholars" அல்லது reformers என்கிற மாதிரி சொல்லியிருக்கிறார்.

நட்ஹாம்சனின் "சிதைந்த கூடு" படித்தேன் என்று எழுதியிருந்தேன் அல்லவா? அது ஒரு புதுமையான நல்ல கதை. பௌருஷமும், வீரமும் மற்றும் பல பெருங்குணங்களும் கொண்ட ஒரு ராணுவக் கர்னல். வடதுருவப் பிரதேசம் ஒன்றில் ஒரு தீவில், சின்னஞ்சிறு குடிசையில், தனது தாயின் துணையுடன், அருகில் உள்ள காடுகளில் வேட்டையாடி, காடுகளை நேசித்து, காட்டு மரங்களை நேசித்து, இலை கிளைகளையெல்லாம் நேசித்து, சின்னஞ்சிறு பாறைகளையும் பெரிய பெரிய பாறைகளையும் காட்டின் ஒற்றையடிப் பாதைகளையும் நேசித்து, சூரியனின் உதயாஸ்தமனங்களில் லயித்துப்போய், பறவைகளை நேசித்து, ஆனால் அவைகளை வேட்டையாடி, பசிக்காக மட்டுமே வேட்டையாடி, மிகுந்த நன்றியுணர்வுடன் வேட்டையாடி ...........

- இப்படி எல்லாம் ஒர் உயர்ந்த, சிறந்த, நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். அவனைவிட எவ்வளவோ வயது சின்னவளான ஒரு சின்னப் பெண்ணின் உறவு அவனுக்கு ஏற்படுகிறது. அவளுடன் அவனுக்கு ஏற்பட்ட நேசம்- முழுமைவாய்ந்த அவனது ஆத்மாவையே எங்ஙனம் சிதைக்கிறது என்பதுதான் கதை. இந்த ஆத்மச் சிதைவின் காரணமாக,

அங்கிருந்து மாறி, அவளை விட்டு அடியோடு பிரிந்து வேற்றூருக்கு வந்துவிட்ட பின்பும், ரிடையர் ஆன பின்பும், அவன் வாழ்க்கையை எவ்வளவு அக்கறையின்றி, ஒரு பழிதீர்க்கும் பாங்கில் வாழ்கிறான் தெரியுமா? கடைசியில் இந்தியாவின் காடு ஒன்றில், ஒரு நெருங்கிய

நண்பனையே வலிய வாய்ச் சண்டைக்கு இழுத்து, அவனை சுடச் செய்து அந்தக் கதாநாயகன் செத்துப் போகிறான்.

- இந்தக் கதையின் களம்: ஒரு வட துருவப் பிரதேசத்தைச் சார்ந்த நார்வேதேசக் காட்டுப்புற கிராமம். காலம்: ஓர் அரை நூற்றாண்டுக்கும் முந்தையதாய் இருக்கும். பாத்திரங்கள்: ஒரு Middle aged ராணுவக் கர்னல், அந்தக் காட்டுப்புறக் கிராமத்தின் தலைவன் போலும் ஒருவனின் மகள். இந்தக் கதையிம் 'தீம்': முழுமை வாய்ந்ததாயிருக்கிற ஒரு மனிதனின் ஆத்மா, அந்தச் சிறுபெண்ணின் நேசத்தால் எப்படிச் சிதறிப் போகிறது- சிதைந்து போகிறது என்பதே!

- இப்படியொரு கதை எனக்குத் தெரிந்தும் உண்டு. களம்: சர்வசாதரணமாய் நாம் கண்டு கண்டிருக்கிற களம்தான். காலம்: தற்காலம். பாத்திரங்கள்: அந்த ராணுவக் கர்னலுக்கும் இவனுக்கும் தன்மைகளிலும் வாழ்க்கைகளிலும் ஏகப்பட்ட வித்யாசங்கள் உண்டு எனினும் இவனது ஆத்மாவும், ஏறக்குறைய அந்தக் கர்னலின் ஆத்மாவைப்போலவே முழுமை வாய்ந்தது. அதேமாதிரி இங்கும் ஒரு சின்னஞ்சிறு பெண். தீம்: அதேதான். ஒருவனின் ஆத்மா சிதைந்து போகிற விதம்.

இலக்கியம் எத்தகைய அபூர்வமான, மந்திர சக்திவாய்ந்த கண்ணாடியாயிருக்கிறது? வடதுருவம் எங்கே, வடாற்காடு எங்கே? ஆனால் வாழ்க்கையின் இந்த ஒருமித்த தன்மை! என்ன விசித்திரம்! இந்த விசித்திரங்களையும் அற்புதங்களையும் கண்டு கொண்டே -

வாழ்க்கயில் solid ஆக வேறு எவ்வித லாபமும் இல்லாவிடினும் கூட - வாழ்ந்து விடலாம் போல் இருக்கிறது.

என்ன எழுத்வது என்று தெரியாமல் இந்தக் கடிதத்தைக் கையிலெடுத்தேன். ஆனால் திருப்பிப் பார்க்கும்போது, நிறையவே எழுதியிருக்கிறேன் என்று தோன்றுகிறது. திங்கள் அல்லது செவ்வாய் தபாலில் உங்களுக்கு 'நம் காலத்து நாயகனை' அனுப்புகிறேன்.

தவறி தாமதமானாலும் மன்னிக்க. பதில் போடுங்கள். நாம் ஒருவருக் கொருவர் எழுதிக் கொள்ள மறுதரப்பின் பதில்கள் அவசியமா என்ன? எனவே என் கடிதமோ, உங்கள் கடிதமோ வரட்டும் என்று நாம் காத்திருக்க வேண்டியதில்லை. தோன்றினால் உட்கார்ந்து எழுதுவோம். அவ்வளவுதான். எழுதுங்கள்.

நிறைய எழுதுங்கள். வாழ்க்கையின், உணர்ச்சிகளின் வெள்ளத்தில் வெறுமனே மிதந்து போய்க் கொண்டு இருந்து விடாதீர்கள். அது சிறப்புத்தான். ஆனால் எழுதினால் தான் அந்தச் சிறப்புக்குப் பிரயோசம் உண்டு. இல்லையேல் வீண்தான். பாத்திரச் சிருஷ்டிக்கு உதாரணமாக உங்கள் முன்னே 'தேவனை' வைத்துக் கொள்கிறீர்களா என்ன? வேண்டாம் அது ஆபத்து. பு.பி போன்றவர்களாயின் பரவாயில்லை. ஆனால் அவர்க:ளையே கூட, எப்படி என்று ஆழம் பார்த்து ரசித்து, பிறகு ஒதுங்கிக் கொண்டு, நம் பார்வையில்,

நம் போக்கில் பாத்திரங்களை உருவாக்க வேண்டும்.

- பி.ச.குப்புசாமி.