Friday, June 16, 2006

கடித இலக்கியம் - 8

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

பேராம்பட்டு,வ.ஆ.
13 - 8 - 76

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம். தங்கள் கடிதம் மகிழ்ச்சியையும், ஒரு விதத்தில் லஜ்ஜையையும் உண்டாக்கிற்று.

ஆகஸ்ட் பிறந்து பாதி மாதம் பறந்து விட்டது. ஆகஸ்டில் வருகிறென் என்று சொன்னீர்களே? தயாரா? தங்கள் நிலைமையை எழுதுங்கள்.

எல்லா விஷயத்தையும் நேரில் பேசுவோம்.

துன்பம் வாழ்க்கையில் எப்போதும் எங்கும் இருக்கிறது. இன்பம் வேண்டுவதும், நாடுவதுமே நமது தொழில். இந்த சிறிய கடிதத்தை நிரப்பவும் கூட mood இல்லை.

இங்கு நீங்கள் வரும்பொழுது, இங்கிருந்து இன்னோரிடத்துக்கும் உங்களை ஒரு 'பிக்னிக்' ஆக அழைத்துச் செல்லப் போகிறேன். ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூர் என்னும் ஊர். அங்கே ஒரு Forest Department நடத்தும் ஹைஸ்கூல் (தமிழ் நாட்டில் அது ஒன்றே ஒன்றுதான்) இருக்கிறது. தங்க நேர்ந்தால் நாள் கணக்கில் தங்க மாட்டோமா என்று ஏங்க வைக்கிற ஒரு பிரிட்டிஷ் சாம்ராஜ்யக்கால Travellers' Banglow இருக்கிறது. பிரின்ஸ் நீல் என்னும் அதிசயமான மீசை வைத்த ஒரு அருமை நண்பர் அங்கே தலைமை ஆசிரியர். திருநெல்வேலிக்காரர். அவர்கள் staff எல்லோரும் நம்மைப் போன்றவர்களை வியந்தும் விரும்பியும் கவனிக்கிறவர்கள். அந்த ஜமுனாமரத்தூருக் குப் போகும் வழியிலெயே காவனூர் என்கிற Telescope நிலையம் (தெ.கி.ஆசியாவிலேயே முக்கியமானது) இருக்கிறது. சனி வளையத்தைப் (Saturn Ring) பார்க்கலாம்.

- அந்த T.B ரொம்ப நாட்களூக்கு அப்படியே மனசில் பதிந்திருக்கும்.

நாகராஜம்பட்டியிலேயே வைத்துத் தங்களைப் போரடிக்கக் கூடாது என்பதற்காக இப்படியெல்லாம் யோசனை செய்கிறேன். ஜமுனாமரத்தூருக்கு என்னை ரொம்ப நாட்களாக அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை ஒரு அன்பளிப்பு போல் உடன் கொண்டு செல்வேன். நாம் அங்கு சம்பிரதாயமான கூட்டம் போல் இல்லாவிட்டாலும் கூட, கிட்டத்தட்ட நண்பர் வட்ட இலக்கியப் பிரசங்கம் மாதிரி ஏதேனும் செய்ய வேண்டி இருக்கும்.

- எல்லாம் நாகராஜம்பட்டியில் நமது தாகம் தணிந்த பிறகே. எதுவும் தங்கள் விருப்பத்தையொட்டியே.

***** ***** *****

17 - 8 -76.

பெரும்பாலும், பள்ளிக்கூடமும் நாகராஜம்பட்டியும் தான் என் இயக்கமெல்லாம். வீட்டில் எல்லோரும் நலமே. பெரியப்பாவிற்கு, எனது பட்டிக்காட்டுவாசமும், புறா வளர்ப்பும், கோழி வளர்ப்பும் கொஞ்சம் மனத்தாங்கல். அவருக்குச் செடிகள் பிடிக்கும். பிற கிராமீய விஷயங்கள் எல்லாம் வெறுப்பு. எனக்கோ வாழ்வின் எந்தப் பாகத்தை உரசினாலும் ருசியாயிருக்கிறது.

நிறையப் பேச வேண்டும், ஆற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுவன எல்லாம் சில நேரங்களில் சலனங்களே. சந்தோஷம் நித்தியமாய் நிலைத்து நிற்கிறது.சந்தோஷம் பிறரிடம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாய்ந்து, தன் வெள்ளப் பெருக்கைத் தான் காண விரும்புகிறது. சந்திப்பின் நோக்கங்கள் இவ்வளவே.

நானும் கூடத்தான், கடிதங்களில் தெரிவித்துத் தங்களுக்குப் பயம் காட்டாமல் நேரில் சிரித்துக் கொண்டே கொட்ட, பல வண்டிப்பாரங்களைச் சுமந்து கொண்டிருக்கிறேன். அது கூட, நான் மட்டுமே நினைக்கிற போது தான் பாரம். பிறருக்குச் சொல்லத் தொடங்குகிறபோது - அதுவும் ஒரு entertainmentடே! வாழ்க்கையை இப்படித்தான் எடுத்துக் கொள்ள முடியும். அதன் அவலத்துக்குத் தொடர்ந்த ஆயுள் தரப் படக்கூடாது.

நான்கைந்து நண்பர்கள் 'பொறுக்கானவர்கள்" சேரவேண்டும். சிதம்பரம் கோயிலில் சிறிது இருந்துவிட்டு சோழமண்டலக் குக்கிராமங்களிலும் ஆற்றங்கரைகளிலும் வண்டிப் பயணம், பஸ் பயணம், கால் நடைப் பயணம் என்று நாட்களை மறந்து நடக்க வேண்டும். புதிய புதிய வீடுகளில் சத்திரங்களில் சூழ்நிலைகளில் தங்கவேண்டும். கவிதை பிறக்கும் காலை மகிழ்ச்சி, தன் கரத்தை நீட்டி மாலையின் மேனியைத் தழுவ வேண்டும். "வாடித் துன்பம் மிக உழலும் வாழ்க்கையை" ஒரு விரதகால அளவுக்காவது முறிக்க வேண்டும்.

தாங்கள் இங்கு வருகிற சந்தர்ப்பத்தில் ஜமுனாமரத்தூருக்கு அவசியம் போகலாம். ஆட்சேபணை இல்லையே?

நம்மை அறிந்த அனைவருக்கும் நமது நலமும் விசாரிப்பும் கூறுக.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

No comments: