Wednesday, February 22, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 11

சிஷெல்ஸின் சில முக்கிய தீவுகள்

மொத்தம் 116 தீவுகளின் கூட்டமான சிஷெல்ஸின் பிரதான - பெரிய தீவு மாஹே. உலகில் நிச்சயம் குறிப்பிடத் தக்கதும் மிகவும் அழகானதுமான இத்தீவின் 76 கடற் கரைகள் ஒவ்வொன்றும் வித்யாசமான இயல்புடையவை. இவைகளின் பின்னணியில் அமைந்துள்ள மலைகளின் அமைப்பு ஒரு நாடகத் தன்மை வாய்ந்தது. இக் கடற்கரைகளில் அமைந்துள்ள உணவு விடுதிகளின் சிற்பக் கட்டமைப்புக்கு அழகான பின்னணியாக இம்மலை அமைப்புகள் உள்ளன. ஏறக்குறைய 150 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இத்தீவின் உட்பகுதிகள் மலைப்பகுதிகளும், அபூர்வத்தாவரங்களும் நிரம்பி சிறு அதிசயமாய் விளங்கும் இத்தீவின் அசல் பெயர் 'ILE D' ABONDANCE' ஆகும்.

இதன் மிக உயரமான மலைச்சிகரமான 'MORNE SEYCHELLOIS' கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் மேலே உள்ளது. மலையின் உயரமான பகுதிகளில் கூட சாலைகள் மிக நன்றாக இருக்கும். வளைந்து வளைந்து மேலேறும் இதன் பாதைகள், மிக அருகில் நெருங்கி வித்யாசமான தாவரங்கஆளையும் பிராணிகளையும் பார்க்க வசதியாய் அமைந்துள்ளன.

சீஷெல்ஸின் தலைநகரான விக்டோரியா சமப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் அமைக்கப் பட்டுள்ளது. விமான நிலையமும், துறைமுகமும் இதில்தான் உள்ளன. நகரின் மத்தியில் அமைந்துள்ள கடிகாரக் கோபுரம் இலண்டனில் விக்டோரியா தெருவும் வாக்சால் பால சாலையும் சந்திக்க்¤ற மையப்பகுதியில் உள்ள கடிகாரக் கோபுரத்தின் நகலாகும்.

விக்டோரியா மஹாராணியின் நினைவாக 1903ல் எழுப்பப் பட்ட இக்கோபுரம் அந்த ஆண்டில், சிஷெல்ஸ் பிரிட்டிஷ் காலனியானதின் அடையாளச் சின்னமாகவும் கருதப்படுகிறது.நகரின் மத்தியில் புகழ்பெற்ற சிற்பி 'LORANZO APPIANI' யால் உருவாக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சிற்பம், சீஷெல்ஸில் ஆதியில் குடியேறிய மக்களின் மூன்று கண்டங்களைக் குறிப்பதாகும். இங்குள்ள படகுத்துறை பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலாச் செல்கிறவர்கள் புறப்படும் இடமாகும். இயற்கை வரலாற்றுக் காட்சி சாலையும் , தேசீய வரலாற்றுக் காட்சி சாலையும் இங்குதான் உள்ளன. தேசீய நூலகமும், ஆவணக் காப்பகமும், தாவரவியல் பூங்காவும் தலைநரில்தான் உள்ளன. இதன் கடற்கரைகள் ஆழமில்லாமல் நீச்சல் விரும்பிகளுக்கு உகந்ததாக உள்ளன. இத்தீவின் கரை ஓரத்தில் ஒரு இடத்திலிருந்து கிழக்கு நோக்கிக் காரில் பயணம் செய்தால் ஒரு மணி நேரத்தில் திரும்பவும் கிளம்பிய இடத்துக்கே வந்து சேரலாம்.

அதற்கு அடுத்த இரண்டாவது பெரிய கிரானைட் தீவு பிராலன்(Praslin) ஆகும். இது ஒரு இரண்டாவது தலை நகரம் போல. இங்கு தலைநகரின் அலுவலகங்களின், மருத்துவ மனைகளின், நீதிமன்றத்தின் கிளைகள் உள்ளன. இதன் ஜனத்தொகை 5000. திருவோடு காய்க்கும் பனைமரங்கள் இங்குதான் அதிகம். அலுவலுக்காக மட்டுமன்றி, வார விடுமுறைகளில் வந்து தங்கி ஓய்வெடுக்கவும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வந்து தங்கவுமான அருமையான ஓய்வுத் தலமாகவும் இத்தீவு விளங்குகிறது.

மாஹேயிலிருந்து 40கி.மீ தூரத்தில் உள்ள இத்தீவுக்கு வந்துபோக எந்திரப் படகுசேவை இருந்தாலும் 'AIR SEYCHELLESன் விமான சேவையும் இருக்கிறது. மினிபஸ்கள் போல இயங்கும் குட்டி விமானங்கள் - 18 பேர் ஏறலாம் - அரைமணிக்கு ஒன்று என ஒரு நாளைக்கு 20 தடவைகள் புறப்பட்டுப் போய்த் திரும்புகின்றன. பயணநேரம் 15 நிமிஷங்கள்தாம். எந்திரப் படகில் போனால் 2 1/2 மணி நேரம் பிடிக்கும். இதில் பயணம் செய்து பிராலன் போய் 3 நாட்கள் கடலோர விடுதி ஒன்றில் தங்கிப் பார்த்து வந்தோம். இங்கு தங்கி இருந்த விடுதியின் முன்னால் இருந்த மரம் ஒன்றில் பச்சைநிறப் பல்லிகளைப் பார்த்தேன். பச்சைப்பாம்பு வண்ணத்தில் இருந்த இப்பல்லிகள் இங்குமட்டுமே உள்ளனவாம். கறுப்புக் கிளிகளும் இங்கு மட்டுமே காணக்கூடியவை. 'BLACK PEAERLS' எனப்படும் கறுப்பு முத்துக்களும் இங்கே மட்டுமே கிடைக்கின்றன. இங்கு மிகச் சிறப்பான 'LAMURIA RESORT', 'PARADISE SUN', 'EMERALD GOLD' போன்ற உணவு விடுதிகளும் கேளிக்கை அரங்கங்களும் உள்ளன. வட இந்திய உணவு வகை கிடைக்கும் உணவு விடுதி ஒன்றிற்கும் சென்றோம். இங்குள்ள கடைகள் - டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்' - எல்லாமும் மயிலாடுதுறைப் பகுதித் தமிழர்களுடையவை தாம். பல ஆண்டுகளுக்கு முன்பே வந்து தங்கள் ஜாதிப்பெயருடன் - படையாச்சி, நாயுடு - என்று நீடிப்பவர்கள். இங்கும் சர்ச்சும், வங்கியும் உள்ளன.

இங்கு மாஹேயின் மிக உயர்ந்த மலை போல இல்லை என்றாலும் மாஹேயைப் போலவே கிரானைட் பாறைகளும், பவழப்பாறைகளும், நீச்சலுக்கு ஏற்ற- பளிங்கு போல் நீர் உள்ள ஆழமற்ற கடற்கரைகளும் உள்ளன. சாலைகள் மிக நன்றாகப் பராமரிக்கப் படுகின்றன. பல்விதமான தாவர வகைகள், பாதைகளின் இருபுறமும் உள்ளன.

கார்கள் இங்கு குறைவு. ஆனால் வாடகைக்குக் கிடைக்கும். சுற்றுலா செல்பவர்கள் விமான நிலயத்திலிருந்தே போன் செய்தால் வாடகைக் கார்கள் தேடி வரும். சாவியை வாங்கிக் கொண்டு நீங்களே அங்கு தங்கும்வரை பயன் படுத்திக் கொள்ளலாம். திரும்பும் போது விமான நிலையத்திலேயே நிறுத்திவிட்டு வாடகையைச் செலுத்திவிட்டு சாவியைக் கொடுத்துவிடலாம். பேருந்து வசதியும் காலை 5-30 முதல் இரவு 7 மணி வரை உண்டு.

சைக்கிள்களும் வாடகைக்குக் கிடைக்கும். படகுகளும் கூட சில விடுதிகளில் வாடகைக்குக் கிடைக்கும். அருகில் உள்ள சிறு தீவுகளுக்கு படகுச் சுற்றுலாவும் ஏற்பாடு செய்து கொள்ளலாம். 'ST. PIERRE' என்கிற சிறிய பாறைத் தீவு பவழப் பாறைகளுக்குப் புகழ் பெற்றது. அது மட்டுமல்ல - இந்தப் பகுதி நீருக்கடியில் படம் எடுக்க (UNDER WATER PHOTOGRAPHY) - அனுகூலமானது.

மாஹேக்கு அருகிலேயே அரைநாள், ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சுவாரஸ்யமான சின்னத்தீவுகள் - CERF, MOYENNE, ROUND, DENNIS, ST.ANNE போன்றவை உள்ளன. கடலின் அடியில் உள்ள பவழப் பாறைகளையும் பலவண்ண மீன் கூட்டங்களையும் கண்டு ரசிக்க ஒரே வழி, அடிப்பக்கம் கண்ணாடியாலான படகுகளில் பயணம் செய்வதுதான். அப்படி ஒருநாள் நண்பர் குடும்பங்களுடன் எந்திரப் படகில், 15 நிமிஷ பயணத் தொலைவிலுள்ள CERF தீவுக்குப் சென்றோம். அடிப்பகுதி பக்கச் சுவர்கள் கண்ணடியால் ஆனதாகவும், உட்கார வசதியான இருக்கைகளுடனும் இருந்தது. அதில் அமர்ந்து பவழப் பாறைகளையும் வண்ணவண்ண மீன் கூட்டங்களையும் கண்டு ரசித்தோம்.

1973ல் நிறுவப்பட்ட 'ST.ANNE MARINE NATIONAL PARK' இந்துமாக் கடலில் முதன் முதலாக அமைந்ததாகும். இங்கு 150 வகையான மீன் வகைகள் பராமரிக்கப் படுகின்றன. மீன்பிடித்தல் இப் பகுதியில் தடை செய்யப் பட்டுள்ளது. பவழங்களையும், கிளிஞ்சல்களையும் சேகரிக்க அனுமதியில்லை. அங்குள்ள தகவல் பலகையில் 'போட்டோக் களையும், நினைவுகளையும் தவிர வேறெதையும் இங்கிருந்து எடுத்துப் போக வேண்டாம்' என்று எழுதப் பட்டுள்ளது.

CERF தீவுக்கு அடுத்து உள்ள 'M0YENNE' என்னும் தீவு MR.BRENDON என்ற ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் ராஜதந்திரிக்குச் சொந்தமானது. 82 வயதான இவர் ஆப்பிரிக்கா கண்டத்தில் பணியாற்றியவர். தன் தந்தையின் சமாதி அமைந்துள்ள இத்தீவை 45 ஆண்டுகளுக்கு முன் விலைக்கு வாங்கி குடியேறியவர். அங்கு இவர் ஒரு பரந்த தோட்டத்தை அமைத்துத் தனியாக தன் செல்லப் பிராணிகளுடன் வாழ்கிறார். பிரதான தீவான மாஹேக்கு அடிக்கடி தன் சொந்த எந்திரப் படகில் வந்து செல்வார். இவர் ஒரு சுழற்சங்க (ROTARIAN) உறுப்பினர். தத்துவ சிந்தனைகள் கொண்டவர். 'A GRAIN OF SAND - THE STORY OF ONE MAN AND AN ISLAND' என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். இந்நூல் சிஷெல்ஸின் கடந்த அரை நூற்றாண்டின் வரலாற்றையும் உள்ளடக்கியது.

ROUND என்பது மாஹேயிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள செழுமையான தாவரங்கள் கொண்ட சிறு தீவாகும். இந்த முழுத்தீவும் நீரடி ஆய்வுக்கானது (UNDER WATER EXPLORATION). ஷெல் மீன்களும் நட்சத்திர மீன்களும் மணற்பாங்கான கடற்கரை ஓரங்களில் அதிகம் காணப்படும். பல ஆண்டுகள் வரை - 1942 வரை - இத்தீவு தொழுநோயாளிகளின் காப்பகமாகமாகப் பயன்பட்டு வந்தது.

COUSIN என்கிற தீவு இயற்கைச் செல்வங்கள் பாதுகாகப்படும் தீவு. 1986ல் 'ROYAL SOCIETY FOR NATURE CONSERVATION' என்ற அமைப்பால் வாங்கப்பட்ட இத்தீவு பல்வேறு வகையான பறவைகளின் சொர்க்க பூமியாக உள்ளது. இது பறவை ஆய்வாளர்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ள இடம். எங்கு பார்த்தாலும் ஒரே பறவைக் கூட்டமாக உள்ள இத்தீவு சுற்றுலாப் பயணிகள், தவற விடாத இடமாகும். எங்கு கால் வைத்தாலும் பறவை முட்டைகள்தாம். அவ்வளவு நெருக்கமாகப் பறவைகள் சூழ்ந்துள்ள தீவு இது. சுற்றுலாப் பயணிகள் முட்டைகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. சுவாரஸ்யமான ஊர்வன மற்றும் ராட்சச ஆமைகளும் இங்கு காணப்படுகின்றன.

BIRD ISLAND என்பது இரண்டாவது பறவைக்காப்பகம் ஆகும். இதுவும் பறவை ஆய்வாளர்களுக்கு விருப்பமான தீவாகும். இங்கு வேடந்தாங்கல் போல பலதேசத்துப் பறவைகளும் வந்து தங்கிப் போகின்றன. இங்குதான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 200 வயதான, உலகத்திலேயே மிகப் பெரிய, ESMERALDA என்கிற ராட்சச ஆண் ஆமை பாதுகாக்கப் படுகிறது.

DENIS என்கிற சிறு தீவு மிகுந்த மீன் வளமிக்கது. ஆண்டு முழுதும் மீன்பிடிக்க உகந்தது. நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுக்கு ஏற்ற இடம்.

ARIDE, LA DIGUE ஆகிய இரண்டும் கிரானைட் பாறைகள் அதிகம் உள்ள தீவுகள்.

FRE'GATE என்பது வெகு தொலைவில் தனித்திருக்கும் கிரானைட் தீவாகும். இது ஒரு புதையல் தீவாகும். இங்கு 17,18 வது நூற்றாண்டுகளில் கடற்கொள்ளைக்காரர்கள் வந்து தங்களது செல்வங்களைப் புதைத்து வைத்ததாகச் சொல்கிறார்கள். விலை மதிப்பற்ற அரிய மரங்கள் அடர்ந்த தீவு இது.

இன்னும் இவை போன்ற ஏராளமான சுவாரஸ்யமான குட்டித் தீவுகளும் சீஷெல்ஸின் பெருமையைப் பேசுவன.

-தொடரும்

நான் கண்ட சிஷெல்ஸ் - 10

சேவை அமைப்புகள்

சீஷெல்ஸில் பல நல்ல சேவை அமைப்புகள் உள்ளன. அவற்றில் முதலாவதாகக் குறிப்பிடத் தக்கது ISFA என்கிற 'INDO SEYCHELLES FRIENDSHIP ASSOCIATION'.

இது ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். இச்சங்கம் 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த இந்தியன் அல்லது சிஷெல்வாவும் உறுப்பினராகச் சேரலாம். இச்சங்கத்தின் அடிப்படை நோக்கம் 'இந்திய - சிஷெல்ஸ் நல்லுறவு, இரு நாட்டுக் கலாச்சாரம், சமூக வாழ்க்கை, கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் ஒத்துழைப்பது' ஆகும். இச் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் இந்தியக் குடியரசு தினத்தை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்தியத் தூதரகமும் இந்திய சுதந்திரத் திருநாளையும் குடியரசுத் தினத்தையும் கொண்டாடுகிறார்கள். இவ்வாண்டு சுதந்திர தினத்தன்று 15-7-05ல் நானும் பார்வையாளனாகச் சென்றிருந்தேன். ஏராளமான இந்தியர்கள் தேசீயக் கொடியேற்றத்தைக் காண வந்திருந்தார்கள். இந்தியத் தூதர் தேசியக் கொடியினை ஏற்றி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை அன்று இரவு தொலைக் காட்சியிலும் மறுநாள் தினசரிகளிலும் சிறப்பாக வௌ¤யிட்டார்கள் . இது போன்ற நமது விழாக்கள் மூலம் ஒரு ஆரோக்கியமான இந்திய ஒருமைப்பாடு நிலவுவதை அப்போது பார்த்தேன். இதை இன்னும் சிறப்பான முறையில் இந்தோ சிஷெல்ஸ் நல்லுறவுச் சங்கத்தார் வளர்த்து வருகிறார்கள். குடியரசு தினவிழா அன்று இரவு இந்தியக் குழந்தைகளும் உள்ளூர்க் கலைஞர்களும் அவரவர் சார்ந்த கலாச்சாரநிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அருமையான கலை நிகழ்ச்சியை இந்திய தூதரகத்தின் சார்பில் சுதந்திரதின விழா அன்று கண்ணைக் கவரும் வண்ண உடையிலும் வண்ண ஔ¤யமைப்பிலும் கண்டு வியந்தேன். இந்தியாவின் பல்வேறு இன மக்களது கலை நிகழ்ச்சிகளும் சிஷெல்வாக்களின் கலை நிகழ்ச்சிகளும் அந்தந்த இன மக்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தன. இச் சங்கத்தார் ஆண்டுதோறும் 'FOOD FAIR' என்றொரு விழாவினை நடத்துகிறார்கள். இதன் மூலம் இந்திய உணவு வகைகளின்மீது உள்ளூர்வாசிகளுக்கு ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தவும், அதேசமயம் இந்திய உணவுகளின் விற்பனை மூலம் சங்கத்துக்கு நிதி திரட்டவும் செய்கிறார்கள்.

இந்த ஆண்டு இந்த விழாவினை 2006 மே மாதம் நடத்தப் போகிறார்கள். இதற்குமுன் இச் சங்கத்தின் தலைவர்களாகத் திருவாளர்கள் கே.டி.பிள்ளை, வி.ஜே.பட்டீல், டி.எஸ்.கே.நாயர், ரமணி ஆகிய மூத்த இந்தியப் பிரமுகர்கள் சிறப்பாகப் பணி செய்திருக்கிறார்கள். இப்போது இதன் தலைவராகி இருப்பவர் இளைய தலைமுறையைச் சேர்ந்தவரான திரு.எஸ்.ராஜசுந்தரம் அவர்கள். 31 ஜூலை 2005ல் பவியேற்ற இவருடன் 11 பேர் செயற்குழு உறுப்பினர்களாகப் பொறுப்பேற்று இருக்கிறார்கள்.


திரு.ராஜசுந்தரம் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். 1983ல் சென்னை சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் படிப்பை முடித்த இவர் 1990வரை சொந்த ஊரில் வழக்கறிஞர் பணி செய்து விட்டு 1990 அக்டோபரில் சீஷெல்ஸ் வந்தார். அங்கு SEYCHELLES HOUSIG DEVELOPMENT CORPORATIONன் சட்ட ஆலோசகராகச் சேர்ந்தார்.

1997ல் சிஷெல்ஸ் குடியுரிமை பெற்று இப்போது 2000 முதல் தனியாகத் தொழில் செய்கிறார். 'நோட்டரி பப்ளிக்' ஆகவும் உள்ள இவர் மூன்று உதவியாளர்களுடன் தனி அலுவலகம் வைத்துக் கொண்டு சிஷெல்ஸின் ஒரே இந்திய - தமிழ் வழக்கறிஞர் என்ற பெருமையுடன் தொழில் புரிவதோடு இந்தோ-சிஷெல்ஸ் நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவராகப் புதிய திட்டங்களுடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.1990ல் கணவருடன் சீஷெல்ஸ் வந்த இவரது துணைவி திருமதி. மங்களநாயகியும் அந்நாட்டுப் பிரஜை ஆகி அங்குள்ள அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகப் பணி செய்கிறார். தனியார் பள்ளியில் பயிலும் இவர்களது இரு பிள்ளைகளும்கூட அந்நாட்டுப் பிரஜைகள் ஆகிவிட்டார்கள்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர்- காலஞ்சென்ற ராஜீவ்காந்தியின் பெயரில் இயங்கும் 'ராஜீவ் காந்தி பவுண்டேஷனி'ன் கிளை அமைப்பான 'ராஜீவ்காந்தி பவுண்டேஷன்- இந்தியன்ஓஷன் சாப்டர்' என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர்- திரு.கே.டி.பிள்ளை அவர்கள். கல்வி, சமூகம், கலாச்சாரம், சுகாதாரம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாக இவ்வமைப்பின் பணி இருக்கிறது. இவ்வமைப்பின் ஒட்டு மொத்தச் சேவையையும் - சிஷெல்ஸ் மக்களுக்கும், இந்துமாக் கடலில் இருக்கும் தீவுக்கூட்டங்களில் வாழும் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் மாபெரும் பணியில் பிள்ளை அவர்கள் தலைமை ஏற்று சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். மொரீஷியசுக்கு வந்த திருமதி சோனியாகாந்தியை சிஷெல்ஸ¤க்கு அழைத்து வந்து இவ்வமைப்பின் பணிகளைக் காட்டி அவரது பாராட்டைப் பெற்றிருக்கிறார். இவ்வமைப்பின் சார்பில் பிள்ளை அவர்களின் பெரும் முயற்சியால்தான் 1970ல் இந்திராகாந்தி திறந்தவௌ¤ப் பல்கலைக் கழகத்தின் கல்வி மையம் இங்கு தொடங்கப் பட்டது.


இந்த அமைப்பு இன்னொரு குறிப்பிடத் தக்க சேவையையும் செய்கிறது. சிஷெல்ஸ் மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் வௌ¤நாட்டுப் பயணிகள் வருகையால், எயிட்ஸ் நோய் பாதிப்பு சீஷெல்ஸில் இருக்கவே செய்கிறது. 300 பேருக்கு மேல் எயிட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டிருகிறார்கள். சீஷெல்ஸின் மக்கள் தொகைக்கு இது ஓரளவு அதிகமான பாதிப்புதான். அதுமட்டுமின்றி சிஷெல்ஸின் பொருளாதாரம் வௌ¤நாட்டு சுற்றுலாப் பயணிகளை நம்பி இருப்பதால் 'எயிட்ஸை'க் கட்டுப் படுத்துவது அவசியமாகிறது. அதனால் தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ வல்லுனர்களை அழைத்து வந்து கருத்தரங்குகளைப் பிள்ளை நடத்தி இருக்கிறார். மக்களிடையே 'எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு' சேவையை இவ்வமைப்பு சிறப்பாகவே செய்து வருகிறது.

இதன்னியில் பிள்ளை அவர்கள் 'கே.டி.பிள்ளை அறக்கட்டளை' யின் சார்பில் சர்க்கரை நோய்த் தடுப்பு சங்கம் ஒன்றையும் 'DIABETIC SOCIETY OF SEYCHELLES' என்ற பெயரில் தொடங்கி சிறப்பான சேவை செய்து வருகிறார்கள்.

திரு.கே.டி. பிள்ளை என்கிற க.தீனதயாளு பிள்ளை அவர்கள்தான் மயிலாடுதுறை வட்டாரத்துக்கு வழி காட்டிய முதல் தமிழர். அதற்கு முன்பாகவே அவருடைய தந்தை திரு.கலியபெருமாள் பிள்ளை 1940களில் தொழில் நிமித்தமாய் சிஷெல்ஸ் வந்து வியாபாரம் செய்தவர். 50 ஆண்டுகளுக்கு முன் கே.டி.பிள்ளை தன் தந்தையைப் போல சிஷெல்ஸ் வந்தார். ஆரம்பத்தில் கடையில் எடுபிடியாய் வேலை செய்து பின்னர் அக் கடைக்கே உரிமையாளராகி படிப்படியாய் - ஆனால் நிதானமாய் முன்னேறி இன்று சிஷெல்ஸில் மிகப் பெரிய தொழிலதிபராய், உலகளாவிய செல்வாக்கும் புகழும் மிக்கவராக விளங்குகிறார். எந்த அளவுக்கு இவர் பிரபலம் என்றால், இவருக்கு உலகின் எந்த மூலையிலிருந்து

கடிதம் எழுதினாலும் முழு முகவரியை எழுதாமல், வெறுமனே 'கே.டி.பிள்ளை, சிஷெல்ஸ்' என்று எழுதினால் போதுமாம். சரியாக இவரைத் தேடி அக்கடிதம் வந்துவிடுமாம். கே.டி.பிள்ளை அவர்கள் அரசியலில் சேர விரும்பாதிருந்தும் அவருக்கு எல்லா அரசியல் தலைவர்களிடமும் நல்ல நட்பும் செல்வாக்கும் இருக்கிறது. இவரது ஒரே மகன் டாக்டர் விநாயமூர்த்தியும் இங்கு அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். தன்னுடய சகோதரர், சகோதரி பிள்ளைகளையும் இங்கு அழைத்து வந்து தன்னோடு வைத்துப் பயிற்சியளித்து அவர்கள் தனித்தனியே வியாபாரம் செய்யவும் உதவியிருக்கிறார். அதோடு நீதிபதி திரு.கருணாகரன் போன்ற தன் ஊர்க்காரர்களின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் பெரிதும் காணமாக இருந்திருக்கிறார்.

தமிழ் கலாச்சார வளர்ச்சி மையம் - 'TAMIL CULTURAL DEVELOPMENT CENTRE' என்றொரு அமைப்பும் இங்கு உள்ளது. இவ்வமமைப்பின் சார்பில் தமிழ்ப் பள்ளி ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். அங்கு வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்குப் பள்ளியில் தமிழ் படிக்க வாய்ப்பில்லாதால் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்திடமிருந்து தமிழ்ப்பாட நூல்களை வாங்கி பயிற்றுவிக்கிறார்கள். மாதக்கட்டணம் 50ரூ. தான் என்றாலும் ஞாற்றுக் கிழமைகளை இதற்கென்று வீணாக்க விரும்பாத பெற்றோரின் அசிரத்தையால் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழ் கற்பிப்பது மட்டுமல்லாமல், நாட்டியம், கருவி இசை போன்ற இந்தியக் கலைகளையும் அங்குள்ள தமிழர்களைக் கொண்டே பயிற்றுவிக்கிறார்கள். இவ்வமைப்பின் சார்பில் அடிக்கடி தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. உள்ளூர்த் தமிழ்க் குழந்தைகளின் நிகழ்ச்சிகளுடன் தமிழ் நாட்டிலிருந்து கலைஞர்களையும் தமிழ் அறிஞர்களையும் ஆன்மீகவாதிகளையும் இசை விற்பன்னர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். கடந்த காலங்களில் வாரியார் சுவாமிகள், பித்துக்குளி முருகதாஸ், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், சுகிசிவம், நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமன ஷோபனா போன்றோர் வந்திருக்கிறார்கள். நான் போயிருந்தபோது, இலங்கையிலிருந்து கம்பனிலும் பாரதியிலும் கரைகண்ட அற்புதப் பேச்சாளர் திரு.கம்பவாரிதி ஜெயராமன் அவர்களையும் கவிஞரும், பத்திரிகையாளரும், கல்லுரித் தமிழ் விரிவுரையாளருமான திரு. ஸ்ரீபிரசாந்த் அவர்களையும் 4 நாள் சொற்பொழிவுக்காக அழைத்திருந்தார்கள். அவர்களோடு நானும் ஒரு நாள் ஒரு பட்டி மன்றத்தில் அணித் தலைவராகக் கலந்து கொண்டேன். சிஷெல்ஸ் சென்றதில் திரு.கம்பவாரிதியின் அற்புதமான சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியதை எனக்குக் கிடத்த பெரும் பேறாகக் கருதுகிறேன். இந்த மன்றத்தை திரு.சிவசண்முகம் பிள்ளை என்கிற தொழிலதிபர் தலமையேற்று அயராது நடத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக முனைவர் புகழேந்தி என்பவரும் மற்ற தமிழ் ஆர்வலர்களும் சிறப்பாக ஒத்துழைப்பு நல்கி தமிழ்க் கலாச்சார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறார்கள்.

'தமிழ் மன்றம்' என்று ஒரு அமைப்பும் உள்ளது. இதில் தமிழ் நாட்டிலிருந்து வரும் அதிதிப் பேச்சாளர்களைச் சொற்பொழிவாற்றச் செய்து இலக்கிய சேவை செய்கிறார்கள். இந்த அமைப்பின் சார்பில்தான் நான் ஒரு நாள் இலக்கியச் சொற்பொழிவாற்றினேன். 'சிஷெல்ஸ் இந்து ஆலோசனை சபை' - 'HINDU COUNCIL OF SEYCHELLES' என்றொரு அமைப்பு இங்கு உள்ளது. இது இங்குள்ள இந்துக்களிடையே இந்து மதத்தின் முக்கியத்துவத்தைப் பரப்புவதும், உயர்த்துவதும் ஆன சேவையை செய்து வருகிறது.

'SANSKRITI' என்கிற அமைப்பு முழுக்க முழுக்க இந்திய கலாச்சார வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டது.

'சிஷெல்ஸ் இந்து கோவில் சங்கம்' என்கிற அமைப்பு ஆன்மீக சேவைகளைச் செய்து வருகிறது. இது இந்துக்களால் கட்டப்பட்டுள்ள 'நவசக்தி விநாயகர் கோவிலி'ன் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறது. இந்த விநாயகர் கோவில் பற்றி பின்னால் சிஷெல்ஸ்வாழ் தமிழர் பற்றி எழுதும்போது விரிவாக எழுதவுள்ளேன்.

- தொடரும்

நான் கண்ட சிஷெல்ஸ் - 9

ஊடகங்கள், காட்சி சாலைகள்

சிஷெல்ஸின் மக்கள் தொடர்பு சாதனங்கள் பத்திரிகைகளும் வானொலி மற்றும் தொலைக்காட்சியும் ஆகும்.

நாடு முழுதுக்குமான பத்திரிகைகள் மூன்று ஆகும். 'NATION' என்பது அரசாங்கம் நடத்தும் தினசரிப் பத்திரிகை. 'REGAR' எதிர்க் கட்சியான 'தேசீயக்கட்சி'யின் பத்திரிகை.

'PEOPLE' என்பது மக்கள் கட்சியின் பத்திரிகை. எல்லாமே ஆங்கிலம்தான். பக்கங்கள் குறைவுதான். அளவும் சிறியதுதான். ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு பத்திரிகைகள் வௌ¤யாவதில்லை. எதிர்கட்சிப் பத்திரிகைகள் ஆரோக்கியமான முறையிலேயே ஆளும் கட்சியை விமர்சிக்கின்றன.

சிஷெல்ஸ் கலாச்சார மையம் தமிழர்களுக்காக 'சிஷெல்ஸ் அலை ஓசை' என்றொரு தமிழ் சிற்றிதழை நடத்துகிறது. இது காலாண்டிதழ். சென்ற ஆண்டில் தொடங்கப் பெற்ற இப் பத்திரிகை இதுவரை நான்கு சிறப்பான இதழ்களை வௌ¤யிட்டுள்ளது.படுத்து தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழாஅ வர இருக்கிறது.தமிழ் கலாச்சார மையத்தின் சார்பில் அவ்வப்போது நடத்தப்பெறும் இலக்கிய விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், தமிழர் பற்றிய செய்திகள் முழுதுமாக இடம் பெறுகின்றன. கதை, கவிதை,கட்டுரை, தாயகத்திலிருந்து வரும் தமிழரறிஞர்களின் பேட்டி, குழந்தைகள் வரையும் ஓவியங்கள், நிகழ்ச்சிகளின் வண்ணப் படங்கள் என்று இதழ்தோறும் 'அலை ஓசை' அங்குள்ள தமிழர்களின் மன ஓசையாக ஆர்ப்பரிக்கிறது. வழுவழுப்பான வௌ¢ளைத் தாளில் பல வண்ணங்களில் சீரான தரத்தைத் தொடர்ந்து பேணி வருகிறார்கள். இதன் ஆசிரியக் குழு, ஈழத்தில் ஒரு கலாசாலை முதல்வராயிருந்து ஓய்வு பெற்ற தமிழறிஞர் பேராசிரியர் வே.சிவசுப்பிரமணியம் அவர்கள். மற்ற குழு உறுப்பினர்கள் திருமதி.மங்களநாயகி, திருமதி.கிரிஜாபாபு, திருமதி.மேனகா கண்ணன் ஆகியோர். தமிழர்களி¤ன் கலாச்சாரம், படைப்புத்திறன், கலைத்திறனுக்கு ஊக்கம் தருவதாகவும் அவற்றை வெளியிடும் சாதனமாகவும் 'அலை ஓசை' சிறப்பாகச் செயல் படுகிறது.

ஒலி, ஒளிபரப்பு அரசு அமைப்பான 'SEYCHELLES BROADCASTINTING CORPORATION' மூலம் செயல்படுகின்றன. தேசீய மொழிகளான, க்ரியோல், ஆங்கிலம், பிரஞ்ச் ஆகிய மூன்றிலும் செய்தி மற்றும் நிகழ்ச்சிகள் ஒலி, ஔ¤ பரப்பப்படுகின்றன.

உள்ளுர் தொலைக்காட்சி தவிர அனேக வெளிநாட்டு விளையாட்டுச் சேனல்களும் தமிழ் நாட்டு ஜெயா தொலைக்காட்சியும் தெரிகின்றன. தமிழ்நாட்டு அரசியலையும், வௌ¢ளம் மற்றும் விபரீதங்களையும், அழவைக்கும் மெகா தொடர்களையும் ரசிக்க தமிழர்களுக்கு ஜெயா தொலைக் காட்சியை விட்டால் வேறு வழியில்லை. எவ்வளவோ முயன்றும் வேறு தமிழ் சானல்களைப் பெற அனுமதி கிடைக்கவில்லையாம். முன்பே சொன்னபடி சிஷெல்ஸ் அரசும், மக்களும் விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் காட்டுவதால் அதிகமும் விளையாட்டுச் சேனல்களே உள்ளன. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் பிள்ளைகள் விளையாட்டுச் சேனல்களைப் பார்க்க உட்கார்ந்து விடுகிறார்கள்.

மிகப்பெரிய நூலகம் ஒன்றும் தலைநகர் விக்டோரியாவில் உள்ளது. மிகப்பெரிய கண்கவர் கட்டடத்தில் அமைந்துள்ள இந் நூலகம் பார்த்தாலே உள்ளே நுழைந்து பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. ஆங்கிலம் மற்றும் பிரஞ்ச் மொழி நூல்களே அதிகம் உள்ளன.

மிகப் பெரிய அரசு ஆவணக் காப்பகமும் தலைநகரில் உள்ளது. இதில் சிஷெல்சின் வரலாறு தொடக்கமுதல் புள்ளி விவரங்களுடன் சேமிக்கப் பட்டிருக்கிறது.

சிறந்த அருங்காட்சியகமும் இங்கு இருக்கிறது. நூலகம், ஆவணக்காப்பகம், அருங்காட்சியகம் மூன்றுக்கும் போய்ப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. அதனால் விரிவாக அவை பற்றிய சித்திரங்களைத் தர முடியவில்லை.

மிருக காட்சி சாலை என்று தனியாக இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரசு பராமரிக்கும் ஒரு பெரிய தாவர இயல் தோட்டத்தைப் (BOTANICAL GARDEN) பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே அந்த நாட்டின் தனித்தன்மை மிக்க தாவரங்கள் அனைத்தும் வளர்க்கப் படுவதுடன் ஏராளமான ஊழியர்களைக் கொண்டு சிறப்பாகப் பராமரிக்கவும் செய்கிறார்கள். அந்த நாட்டில் மட்டுமே விளைகிற திருவோடு காய்க்கும் பனை மரங்களை அங்கே பார்க்கலாம். பலவகைப் பழ மரங்களும் விளக்கப் பலகைகளுடன் காட்சிக்குரியனவாகப் பேணப் படுகின்றன. அங்கு நான் ஒரு விசித்திரமான, நமக்குப் பார்க்கக் கிடைக்காத நட்சத்திரப் பழம் (STAR FRUIT) காய்க்கும் மரத்தைப் பார்த்தேன். சடை சடையாய் அவை எட்டிப் பறிக்கும் உயரத்தில் தொங்குகின்றன. அந்தப் பழத்தை வில்லை வில்லையாக நறுக்கி விருந்துகளிலும் உணவு விடுதிகளிலும் வைக்கிறார்கள்.

ஒவ்வொறு வில்லையும் ஒரு நடத்திரம் போலத் தோற்றமளிக்கிறது. புளிப்புச் சுவையுடன் கூடிய இதனை மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

மிருக காட்சி சாலை இல்லாத குறையை இத் தோட்டதில் உள்ள ஆமைகள் காட்சி சாலை ஓரளவு போக்குகிறது எனலாம். இங்கு உள்ள ஆமைகள் மிகப் பிரம்மாண்ட மானவை, ஒரு ஆள் உட்கார்ந்து கொள்ளக் கூடிய அளவில் அகலமும் வலுவான ஓடுகளும் கொண்டவை. பெரிய பெரிய கால்களுடன் மிகச் சாதுவாய் சுற்றிவருகின்றன. குழந்தைகள் அச்சமின்றி அவற்றின் மீது அமர்ந்து சவாரி செய்கின்றனர். பெரியவர்கள் அவற்றின்மீது அமர்ந்து படம் எடுத்துக் கொள்கிறார்கள். மனிதர்களைக் கண்டதும் அவை கால்களையும் தலையையும் உள்ள்¤ழுத்துக் கேகொள்வதில்லை. பார்வையாளர்கள் நீட்டும் இலை தழைகளை தலையை நீட்டிக் கவ்வித் தின்கின்றன. இவை தரையில் மட்டும் வாழ்கிற TORTOISE இனத்தைச் சேர்ந்தவை. ஒரு வீட்டில் பெண் பிறந்தால் இது போன்ற ஆமை ஒன்றை வளர்த்து அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகும்போது வெட்டி கல்யாண விருந்தில் விசேஷமாய்ப் பர்¤மாறி வந்திருக்கிறார்கள் இங்குள்ள பூர்வ குடிகள். இப்போது இது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த வகை ஆமைகளை வளர்க்கவும் வேட்டை யாடவும் தடை செய்யப்பட்டு மீறுகிறவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப் படுகிறார்கள். இந்த ஆமைகள் நீண்ட நாட்கள் வாழ்பவை. கின்னஸில் இடம் பெற்றுள்ள 150 வயதுடைய ஒரு மிகப் பெரிய ஆமை ஒரு தீவில் வைத்துப் பாதுகாக்கப் படுகிறது. உலக முழுதிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்க்கத் தவறுவதில்லை.

TURTLE எனப்படும் நீர்வாழ் ஆமைகள் கடலில் அதிகம் தென்படுகின்றன. இவை இந்தியாவில் காணப்படும் ஆமைகள் போல அளவில் சிறியவை.

- தொடரும்

நான் கண்ட சிஷெல்ஸ் - 8

நீதித் துறையும் மற்றவையும்

சிறிய நாடு என்றாலும், சிஷெல்ஸின் நீதித் துறை குறிப்பிடும்படியான சிறப்புக்கள் கொண்டது. நீதிமன்றங்கள் இரண்டு அடுக்கு கொண்டவை. குற்றவியல் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்ற இரண்டே நிலைதான். நீதிபதிகளில் நான்கு பதவிகள். மாஜிஸ்டிரேட், சீனியர் மாஜிஸ்டிரேட், ஜட்ஜ், சீ·ப் ஜட்ஜ் என்று பதவிகள் உயரும். உச்ச நீதிமன்றத்திற்கு நான்கு நீதிபதிகள். தலைமை நீதிபதி மொரீஷியஸில் பிறந்தவர். இங்கு குடியேறி இந்நாட்டுப் பிரஜையாக ஆனவர். மற்ற மூன்று நீதிபதிகளில் ஒருவர் மண்ணின் மைந்தர். இன்னொருவர் இலங்கையைச் சேர்ந்தவர். நாலாமவர் தமிழர். நீதித் துறையும் நடுவர்களும் இந்தியா போலவே அரசியலாக்கப் படுகின்றனர். தற்போதுள்ள தலைமை நீதிபதி எதிர்க்கட்சி அனுதாபி என்பதால், அரசியல் நிர்ப்பந்தம் காரணமாய் பதவி இறங்கப் போகிறார் என்றார்கள். தலைமை நீதிபதிக்கும் மற்ற நீதிபதிகளுக்கும் சம்பளத்தில் வேறுபாடு இல்லை.

நான் சென்றபோது உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை. விடுமூறை முடிந்து மீண்டும் உச்ச நீதிமன்றம் துவங்குவதைப் பெரிய கோலாகலமான விழாவாகக் கொண்டாடினார் கள். 15-9-05 காலை 9 மணிக்கு கிறிஸ்துவ தேவாலயத்தில் தலைமை பிஷப் தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது. சிஷெல்ஸ் கிறிஸ்துவ நாடானதால் அங்கு எல்லாமே தேவாலய வழிபாடுடனேயே துவக்கப் படுகிறது. தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தமக்குரிய இடங்களில் அமர்ந்திருக்க, முறையான பிரார்த்தனைப் பாடல்களுடன் நிகழ்ச்சி துவங்கியது. பொதுமக்களும் அனுமதிக்கப் படுவதால் நானும் அந்நிகழ்ச்சியைக் காணச் சென்றிருந்தேன். பொதுமக்கள் அதிகம் வந்திருந்தார்கள். பிரார்த்தனை முடிந்ததும் தலைமை பிஷப் பிரார்த்தனைச் சொற்பொழிவு நிகழ்த்தினார். பின்னர் கிறிஸ்துவ மற்றும் இதர மதங்களின் வேதங்களிலிருந்து பகுதிகள் வாசிக்கப் பட்டன. இந்து மதத்துக்கு தமிழ் வழக்கறிஞரான திரு. ராஜசுந்தரம் அவர்களுக்கு பகவத்கீதையிலிருந்து சில பகுதிகளைப் படிக்கும் வாய்ப்பு தரப்பட்டது.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் போலீஸ் படையும் பேண்டு கோஷ்டியும் அணிவகுத்து முன்னே நடக்க, ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உச்சி நீதிமன்றத்துக்கு ஊர்வலமாகச் சென்றார்கள். அது ஒரு பரவசமான காட்சியாக இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் ராணுவ அணிவகுப்பு நடை பெற்றது. ராணுவ மரியாதையை ஏற்ற தலைமை நீதிபதி எல்லா வழக்கறிஞர்களையும் தனித்தனியே கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னார். பிறகு உச்சநீதிமன்ற அறையில் தலைமை நீதிபதியின் உரைக்குப் பின் வௌ¤யே வந்து வழக்கறிஞர்களுடன் நீதிபதிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். பின்னர் வந்திருந்த பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் தேனீர் விருந்தளிக்கப் பட்டது. விடுமுறைக்குப்பின் மீண்டும் நீதிமன்றம் தொடங்குவதை இவ்வளவு கோலாகமாய்க் கொண்டாடுவதை இங்குதான் பார்த்தேன்.

இங்குள்ள மொத்த வழக்கறிஞர்களின் எண்ணிக்கை வெறும் 40 தான். அதிலும் ஒழுங்காகத் தொழில் செய்பவர்கள் 20 பேர்தானாம். அவர்களில் ஒரே தமிழ் வழக்கறிஞர் திரு.ராஜசுந்தரம் அவர்கள் தான். அங்குள்ள மக்களுக்கு இந்திய வழக்கறிஞர்களிடம் மிகுந்த நம்பிக்கையும் நல்ல மரியாதையும் இருக்கிறது.


நீதிபதிகளில் ஒருவரான திரு.கருணாகரன் அவர்கள் தமிழ்நாட்டின் மயிலாடுதுறையைச் சேர்ந்ந்தவர். இங்குள்ள தமிழர்களில் 50 சதவீதம் பேர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்கள்தாம். இவரது தந்தை மயிலாடுதுறையில் பெயர் பெற்ற காங்கிரஸ்காரர். ஆனால் திரு.கருணாகரன் படிக்கும் போதே திராவிடச் சிந்தனைகளில் ஊறியவர். கல்லூரி நாட்களில் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தவர். புரட்சிகரமான சிந்தனையும் செயல்பாடும் உடையவர் என்பதால் இவரது தந்தை இங்கிருந்தால் தன்னைப் போல் அரசியல்வாதி ஆகிவிடக்கூடும் என்று பயந்து தனது நண்பரும் சிஷெல்ஸின் பிரபல தொழிலதிபருமான திரு.கே.டி.பிள்ளை என்பவரிடம் ஒப்படைத்து சீஷெல்ஸ¤க்கு அழைத்துப் போகச் செய்தார். அப்படியே கே.டி.பிள்ளையால் சிஷெல்ஸ் வந்து காலூன்றியவர் முதலில் கே.டி.பிள்ளையின் நிறுவனங்களுக்கு வழக்கறிஞராக சிறிது காலம் பணி செய்தார். பின்னர் அவரது திறமை காரணமாக மாஜிஸ்டிரேட் ஆக நியமனம் பெற்றார். பின்னர் சீனியர் மாஜிஸ்டிரேட் ஆகி, தற்போது உச்ச நீதிமன்றத்து நான்கு நீதிபதிகளில் ஒருவராகத் திகழ்கிறார். பெரிய பதவியில் இருந்தாலும் தான் இந்நிலையை அடைய அஸ்திவாரமிட்ட திரு.கே.டி.பிள்ளையிடம் விசுவாசமிக்கவராகவும் தன்னுடைய சட்டக் கல்லூரித் தோழரும் அவரது நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி செய்பவருமான என் மாப்பிள்ளை திரு.ராஜசுந்தரம் அவர்களிடம் அதே நட்பு மாறாமல் இருப்பதுமான உயரிய பண்பினைக் கொண்டவர். ஒருமுறை எனது இலக்கியக் கூட்டத்தில் என்னை அறிமுகப் படுத்திப் பேசியபோது - திரு.கே.டி பிள்ளையின் ஆரம்ப கால உதவிகளையும் ஆதரவையும் அவர் மனம் திறந்து நன்றியுடன் நினைவு கூர்ந்தது, கே.டி.பிள்ளை அவர்களையும் பார்வையாளர் களையும் நெகிழ வைத்தது. ஆனால் தொழில் வேறு நட்பு வேறு என்ற கொள்கையால் தனது தொழில் நெறிக்கு மாறாக சலுகையோ தயவோ காட்டாத நேர்மையாளர் என்று என் மாப்பிள்ளை சொன்னார். பரந்துபட்ட இலக்கிய அறிவும் ரசனையும் மிக்கவர். பலமுறை எனது நேரடி சந்திப்பிலும், இலக்கியக் கூட்டங்களிலும் அவர் காட்டிய தமிழுணர்வு என்னை வியக்க வைத்தது. எனது இலக்கியக் கூட்டங்களில் எப்போதும் முன்வரிசையிலிருந்து அவர் ரசித்தது எனக்கு உற்சாகமும் கௌரவமும் தருவதாக இருந்தது. அவரது இந்த முகம் அங்கிருக்கும் தமிழர்களில் பலருக்கும் தெரியவில்லை என்றே தோன்றியது. அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தஸ்து காரணமாய் அவர் சமுதாயத்தில் கலந்து பழகவியலாத சூழ்நிலையும் காரணமாய் இருக்கக் கூடும். அவருடைய மனைவி திருமதி.செல்வி அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியை ஆகப் பணிபுரிகிறார். அவர் சிறந்த இசை ரசிகர் மற்றும் நல்ல ஓவியரும் கூட. நீதிபதி தம்பதிகள், என்னையும் என் மனைவியையும் கௌரவிக்க அவர்களது வீட்டில், நெருங்கிய சில நண்பர்களுடன் ஒரு நல்ல விருந்தளித்தது இன்றும் என் மனதில் பசுமையாய் நிற்கிறது.

தலைநகரான விக்டோரியாவில்தான் குற்றவியல் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உள்ளன. மாஹேக்கு அடுத்த பெரிய தீவான பிராலினில் ஒரு குற்றவியல் நீதிமன்றமும் உள்ளது.

சிஷெல்ஸின் காவல்துறை, இந்தியக் காவல்துறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஏக்கத்தை தருவதாக உள்ளது. 'உங்கள் நண்பன்' என்று தமிழ்நாட்டில் படமெல்லாம் எடுத்துப் பொதுமக்களுக்குக் காவல்துஆறை மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்த எவ்வளவோ முன்றார்கள், இன்றும் அவ்வகையில் பலவித முயற்சி¤களில் ஈடுபட்டும் வருகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளையும் குற்றவாளிகளையும் தவிர மற்ற அனைவருக்கும் காவல்துறை என்றால் அச்சம் எழுவது மாறவில்லை. ஆனால் சிஷெல்ஸில் அது சாத்யமாகி இருக்கிறது. அங்கு காவல்துறை ஒன்று இருப்பதாகவே தெரியாது. தாங்கள் மக்களின் சேவகர்கள் என்பதை அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். மக்களும் காவல் துறை என்றால் அஞ்சி நடுங்குவதில்லை. நான் அங்கிருந்த இரண்டு மாதத்திற்கும் மேலான நாட்களில், உச்ச நீ¦திமன்ற ஊர்வலத்தின்போது போக்குவரத்தைக் கண்காணிக்கும் காவலரை மட்டுமே பார்த்தேன். வேறு எங்கும் என் கண்ணில் காவலர்கள் தென்பட்டதில்லை.

காவல்துறை நிலையங்களும் அச்சமூட்டும் இரத்த வண்ணத்தில் இல்லை. தமிழ்நாட்டுக் கிராமப் பஞ்சாயத்து சாவடிபோல மிக எளிமையாய்ப் பயமுறுத்தாமல் உள்ளன. தலைநகரில் மட்டும் பிரம்மாண்டமான கட்டடத்தில் தலைமைக் காவல் அலுவலகம் நவீன சாதனங்களுடன் அமைந்திருக்கிறது. அங்குதான் நான் பல காவலர்கஆளைக் கண்டேன்.

இப்படிப் பரபரப்பில்லாமல் மக்களுக்கு அச்சமளிக்காமல் எப்படி இங்கு காவல்துறை இருக்கிறது என்று கேட்டேன். அற்குக் கிடைத்த பதில் நம்ப முடியாதபடி இருந்தது. ஆனால் அதுதான் உண்மை! அங்கே திருட்டே நடைபெறுவதில்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி அபூர்வம். குடிகாரர்கள் எல்லை மீறினால் தான் உண்டு. பின் அங்கே காவல்துறைக்கு அங்கே என்ன அவசியம்? நான் அங்கிருந்த நாட்களில் என் மகள் வீட்டிலும் இன்னும் பல வீடுகளிலும் விலையதிகமான பொருட்கள் வீட்டு வராந்தாக்களிலும், கார்ஷெட்களிலும் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்திருக்கிறேன். கணவனும், மனைவியும், பிள்ளைகளும் பணிக்கும் பள்ளிக்கூடத்திற்கும் காலை 7 மணிக்குப் போய் மாலைதான் திரும்புகிறார்கள். ஆனால் பொருட்கள் போட்டது போட்டபடி கிடக்கின்றன. ஆரம்ப காலங்களில் மக்கள் வீட்டைப் பூட்டுவதே இல்லை என்று ஒருவர் சொன்னார். நம்பலாம் என்றே தோன்றியது.

அஞ்சல் துறையும் ஆரோக்கியமான அமைப்பாகவே உள்ளது. அஞ்சல் பட்டுவாடா செய்பவர்களில் பெண்களே அதிகம். வீட்டுக்கு வீடு சென்று தர அதிகம் தேவை இல்லாதபடி அங்கு அநேகமாக எல்லோரும் தனி அஞ்சல் பெட்டிகளை அஞ்சலகங்களில் வைத்திருக்கிறார்கள்.

விளையாட்டுத் துறை மிகவும் விறுவிறுப்புடன் இயங்குகிறது. அவர்களது தேசீய விளையாட்டு டென்னிஸ்தான். சிறுவர்களுக்கு - ஆண், பெண் இருபாலாருக்கும் அரசே டென்னிஸ் விளையாட பயிற்சி தர ஏற்பாடு செய்திருக்கிறது. ஆண்டு முழுதும் உலகின் பலநாடுகளுக்கும் போட்டிகளில் பங்குபெற, பயிற்சி தரப்பட்டவர்கள் அனுப்பி வைக்கப் படுகிறார்கள். மிகப்பெரிய ஸ்டேடியம் தலைநகர் விக்டோரியாவில் உள்ளது. பிள்ளைகள் தொலைக்காட்சிகளில்- படிப்பு நேரம் போக விளயாட்டுச் சேனல்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

- தொடரும்

நான் கண்ட சிஷெல்ஸ் - 7

7. அத்யாவசியத் தேவைகளும் அரசும்

சிஷெல்ஸில் மக்களின் அத்யாவசியத் தேவைகளை அரசு மிகுந்த அக்கறையுடன் பேணுகிறது. மிக அத்யாவசியத் தேவைகளான குடிநீர், மின்சாரம் போன்றவற்றிற்கு இங்கு நாம் படும் அவஸ்தைகள் நினைவுக்கு வந்தன. அங்குள்ளவர்களுக்கு நம் பிரச்சினைகள் இல்லை.

அங்கு தண்ணீருக்குப் பஞ்சமே இல்லை. மலைப் பிரதேசம் என்பதால் மலையருவி நீர் எப்போதும் குறைவின்றிக் கிடைக்கிறது. முன்பே சொன்னது போல் நீங்கள் எங்கு சென்றாலும் பக்கவாட்டில் ஒர் மலையருவி சிலுசிலுத்தபடி உடன் ஓடி வருவதைப் பார்க்கலாம். என் மகள் வீட்டின் பின்புறத்தில், மயிலாடுதுறையில் அவர்கள் வீட்டின் கொல்லைப்புறம் ஓடும் சிற்றோடை போல இங்கும் ஒரு சிறு அருவி சலசலத்தபடி ஓடிக் கொண்டிருக்கிறது. அதைப் பயன் படுத்தவேண்டிய அவசியமில்லாமல் அரசு குடிந்¦ர் வழங்குதுறையால் இடையறாமல் அபரிமிதமாய் குழாய்மூலம் நீர் வழங்கப் படுகிறது. குடிநீருக்குத் தனியாகவும், மற்ற உபயோகங்களுக்குத் தனியாகவும் வேறு வேறு குழாய்களில் தண்ணீர் வருகிறது. குடிநீர் சுத்திகரிக்கபட்டு அனுப்பப்படுகிறது. நம்மூர் நெய்வேலி போல 24 மணி நேரமும் தண்ணீர் வருவதால் குடிநீர் லாரிக்காக சென்னைவாசிகள் போலக் கண்விழித்துக் காத்திருக்கிற அவலம் இல்லை. அருவிநீர் மிகச் சுவையானது. "கோவை சிறுவாணித் தண்ணீ¦ர் போலச் சுவையாக இருக்கும். சிங்கப்பூர்போல் சாக்கடை நீரை மறுசுழற்சி செய்தளிக்கும் அவசியம் இங்கு இல்லை. சிங்கப்பூர்க்காரன் என்னதான் குபேரபுரி என்று பீற்றிக் கொண்டாலும் சாக்கடைக் கழிவுநீரைத்தானே குடிக்கிறான்? அந்த அவலம் எங்களுக்கு இல்லை" என்றார் டாக்டர் ஜவஹர்.

மின்சாரத்துறையும் இங்கே சிறப்பாகச் செயல்படுகிறது. இங்கு மின்தடை ஒரு நாளும் இல்லை என்று என் மாப்பிள்ளை சொன்னார். அது உண்மை என்பதை அனுபவத்தில் பார்த்தேன். அங்கிருந்த 70 நாட்களில் ஒரு நாள் கூட மின்சாரம் நிற்காதது எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் ஒரு நாள் இரவு நான் அங்கு ஒரு இலக்கியக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது சுவாரஸ்யமான கட்டத்தில் திடீரென்று மின்சாரம் நின்று, பேச்சு தடைப் பட்டது. என்னைவிட அங்கு கூடி இருந்தவர்கள் மிகவும் பதற்றமடைந்தார்கள். அங்கும் இங்கும் ஓடி ஏதோ செய்தார்கள். 10 நிமிஷம் கூட இல்லை- மின்சாரம் திரும்ப வந்துவிட்டது. நான்

தொடர்ந்து பேசும்போது குறிப்பிட்டேன். "நான் வந்தபோது என் மாப்பிள்ளை சொன்னார்கள் 'இங்கு நம் ஊர் போல இல்லை. தண்ணீர் போல 24 மணி நேரமும் மின்சாரமும் தடைப்படாது கிடைக்கிறது' என்று. நான் அதை என் குறிப்பேட்டில் எங்கள் ஊரில் போய்ச் சொல்லக் குறித்துக் கொண்டேன். இப்போது அதை மாற்றி எழுத வேண்டும்". இதைக்கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். என் மாப்பிள்ளை எழுந்து, "மன்னிக்கவேண்டும். மின்சாரம் போனது இந்தக் கட்டடத்தில் மட்டும்தான். வௌ¤யே போகவில்லை. புதிதாக இன்று இந்த அறையில் அமைக்கப் பட்டுள்ள ஏ.சி எந்திரத்தில்

ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாய் இங்கு மட்டும் ப்யூஸ் போயிருக்கிறது. மற்றபடி நாட்டில் எப்போதும் மின்சாரம் தடைப்பட்டதில்லை" என்று விளக்கம் சொன்னார். நம்மூரில் மின்சாரம் எப்போது போகும் எப்போது திரும்ப வரும் என்று நிச்சயமற்று நாம் அவஸ்தைப்படுகிற நிலையில் இது அதிசயமாக இருந்தது. அதற்குக் காரணம் இங்கு மின்சாரம் ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீர் மின்நிலையமோ, அனல் மின்நிலையமோ இங்கு இல்லை. மொத்த நாட்டுக்கும், தலைநகர் விக்டோரியாவில் அமைந்துள்ள சக்திவாய்ந்த ஜெனரேட்டர்கள் மூலமே மின்சாரம் பெறப்பட்டு வினியோகிக்கப் படுகிறது. மிக விழிப்புடன் மின்தடை ஏற்படாதபடி பராமரிக்கிறார்கள்.

அது மட்டுமல்ல. நான் நடைப் பயிற்சிக்கு வௌ¤யே செல்லும் போதெல்லாம் நம்மூரைவிட இங்கே என்ன வித்யாசமாய் இருக்கிறது என்று கவனிப்பேன். அப்படி, சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பங்களைப் பார்த்தேன். மேலே செல்லும் மின் கம்பிகள் முழுதும் நெடுக்க உறையிடப்பட்டதாய் (insulated) இருந்தன. நகரத்தின் பல இடங்களுக்கும் சென்றபோது எங்கும் அவ்வாறே மின்கம்பிகள் உறையிடப்பெற்றே இருந்ததைப் பார்த்தேன். நம்மூரில் உறையிடப்படாத மின் கம்பிகளில் சாலையை ஒட்டியுள்ள மரங்கள் உரசியும், தாழ்வாக உள்ள மின்கம்பிகளில் உயரமாய் கரும்பு ஏற்றிவரும் லாரி, டிராக்டர்கள் இடித்து விபத்து நேர்வதும் நினைவுக்கு வந்தது. இதை நம் நாட்டிலும் அமுல் படுத்தினால் நிறைய விபத்துக்களைத் தடுக்க முடியுமே என்று எண்ணினேன்.

அடுத்து பாராட்டவேண்டியது போக்குவரத்து ஏற்பாடு. இங்கு தனியார் பேருந்து சேவை செய்ய முடியாது. அரசு போக்குவரத்துத் துறை நடத்தும் SPTC என்கிற Sechelles Public Transport Corporation பேருந்துகள் நிறைய நாடு முழுதும் ஓடுகின்றன. அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. 10 நிமிஷத்துக்கு ஒரு பேருந்து, தொடராக வந்து கொண்டிருக்கிறது. எல்லாப் பேருந்துகளும் குளிர்சாதனம் பொருத்தப் பட்டவை.

சிங்கப்பூரைப்போலவே கண்டக்டர் என்று தனியாக யாரும் இல்லை. ஓட்டுனர்தான் பயணச்சீட்டையும் வழங்குகிறார். பேருந்து, நிறுத்தத்தில் நின்றதும் முன் பக்கத்துக் கதவு தானாகவே திறக்கிறது. பேருந்து நிறுத்தங்கள் பேருந்தின் படிக்குச் சமமாய் இருப்பதால் பயணிகள் நம்மூர்போல மலையேறுவதுபோலச் சிரமப்படவோ, இறங்கும்போது உயரத்தி லிருந்து குதிக்கவோ தேவை இல்லை. முதியவர்கள் சிரமமின்றி ஏறவோ இறங்கவோ எளிதாக இருக்கிறது. பயணிகள் ஏறியதும் கட்டணத்தை ஓட்டுனரிடம் தருகிறார்கள். எங்கு செல்லவும் ஒரே கட்டணம்தான். மூன்று ரூபாய்தான். கட்டணம் தெரிந்திருப்பதால் சரியான சில்லறையே தருகிறார்கள். ஓட்டுனர் பணத்தை வாங்கிக் கொண்டு அவர் முன்னே உள்ள ஒரு பொத்தானை அழுத்துகிறார். பயணச்சீட்டு வௌ¤யே வருகிறது. பயணிகள் எடுத்துக் கொள்கிறார்கள். எல்லோரும் ஏறியதும் கதவு தானாகவே மூடிக் கொள்கிறது. ஒலிப்பானின் ஓலத்தை எங்குமே - குண்டூசி வளைவுகளிலும் கூடக் கேட்க முடிவதில்லை. NO HORN அறிவிப்பை எங்குமே காண முடியவில்லை. அங்கு நான் பார்த்த பேருந்துகள் எல்லாமே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டனவாக இருந்தன. அவற்றின் பின்புறம், TATA, ASHOK LEYLEND சின்னங்கள் தென்பட்டன.

டாக்சிகள் நிறைய உள்ளன. ஏனெனில் சாலைகளிலிருந்து உள்ளே இருக்கும் பகுதிகளில் உள்ளவர்கள் சொந்தக் கார் இருந்தால்தான் அங்கிருந்து வௌ¤யே செல்ல முடியும். அதனால் கால் டாக்ச்¤களை செல்பேசியில் அழைக்கிறார்கள். அடுத்த சில நிமிஷங்களில் டாக்ஸி வந்து விடுகிறது. இங்கு எங்குமே ஆட்டோக்கள் இல்லை. சைக்கிள்கூட அரிதாக ஒன்றிரண்டுதான் தென்படுகிறது. மாட்டு வண்டிகளைப் பார்க்கவே முடியாது. சில தீவுகளில் ஒற்றை எருது பூட்டிய சிறு பார வண்டிகள், சுமை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப் படுகின்றன. எல்லோருமே அனேகமாய் கார் வைத்திருக்கிறார்கள். கார் இல்லாவிட்டால் காலை ஏழுமணிக்குக் கிளம்பி அலுவகத்துக்குச் செல்ல முடியாது. மாலை ஆறரை மணியுடன் பேருந்து ஓட்டம் நின்று விடும். அலுவலகங்கள் 4 மணிக்கே முடிந்தாலும் கடைக்கோ, கோயிலுக்கோ, களியாட்டங்களுக்கோ சென்று இரவு திரும்ப, சொந்தக் கார் இருந்தால்தான் முடியும். கார் இல்லாதவர்கள் சாலையில் செல்லும் திறந்த மினி லாரிகளைக் கைகாட்டி ஏறிக் கொள்கிறார்கள். தனியார் கார்களிலும் இடமிருந்தால் யார் என்று பாராமல் முகம் சுளிக்காமல் ஏற்றிச் செல்கிறார்கள். ஸ்கூட்டர்கள் கூட ஒன்றிரண்டையே அரிதாகப் பார்த்தேன்.


50 ஆண்டுகளுக்கு முன் விமானப் போக்குவரத்து இல்லை. கப்பல்தான். இந்தியாவிலிருந்து இங்கு வர ஆறு மாதங்கள் பிடிக்கும். இப்போது விமானப் பயணம் 8 மணி நேரந்தான். தினமும் துபாய்க்கு விமானங்கள் பறக்கின்றன. சிங்கப்பூருக்கு செவ்வாய் தோறும் வாரம் ஒருமுறைதான் விமான சேவை. அங்கிருந்து வியாழக்கிழமையன்று விமானம் வருகிறது. அதனால் வியாபாரிகள் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பூர் சென்று ஒரே நாளில் தங்களது வர்த்தகங்கஆளை முடித்துக் கொண்டு வியாழன் திரும்பி விடுகிறார்கள். இது அவர்களுக்கு மிகவும் சௌகர்யமாக இருக்கிறது.

- தொடரும்.