Wednesday, February 22, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 10

சேவை அமைப்புகள்

சீஷெல்ஸில் பல நல்ல சேவை அமைப்புகள் உள்ளன. அவற்றில் முதலாவதாகக் குறிப்பிடத் தக்கது ISFA என்கிற 'INDO SEYCHELLES FRIENDSHIP ASSOCIATION'.

இது ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். இச்சங்கம் 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த இந்தியன் அல்லது சிஷெல்வாவும் உறுப்பினராகச் சேரலாம். இச்சங்கத்தின் அடிப்படை நோக்கம் 'இந்திய - சிஷெல்ஸ் நல்லுறவு, இரு நாட்டுக் கலாச்சாரம், சமூக வாழ்க்கை, கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் ஒத்துழைப்பது' ஆகும். இச் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் இந்தியக் குடியரசு தினத்தை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்தியத் தூதரகமும் இந்திய சுதந்திரத் திருநாளையும் குடியரசுத் தினத்தையும் கொண்டாடுகிறார்கள். இவ்வாண்டு சுதந்திர தினத்தன்று 15-7-05ல் நானும் பார்வையாளனாகச் சென்றிருந்தேன். ஏராளமான இந்தியர்கள் தேசீயக் கொடியேற்றத்தைக் காண வந்திருந்தார்கள். இந்தியத் தூதர் தேசியக் கொடியினை ஏற்றி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை அன்று இரவு தொலைக் காட்சியிலும் மறுநாள் தினசரிகளிலும் சிறப்பாக வௌ¤யிட்டார்கள் . இது போன்ற நமது விழாக்கள் மூலம் ஒரு ஆரோக்கியமான இந்திய ஒருமைப்பாடு நிலவுவதை அப்போது பார்த்தேன். இதை இன்னும் சிறப்பான முறையில் இந்தோ சிஷெல்ஸ் நல்லுறவுச் சங்கத்தார் வளர்த்து வருகிறார்கள். குடியரசு தினவிழா அன்று இரவு இந்தியக் குழந்தைகளும் உள்ளூர்க் கலைஞர்களும் அவரவர் சார்ந்த கலாச்சாரநிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அருமையான கலை நிகழ்ச்சியை இந்திய தூதரகத்தின் சார்பில் சுதந்திரதின விழா அன்று கண்ணைக் கவரும் வண்ண உடையிலும் வண்ண ஔ¤யமைப்பிலும் கண்டு வியந்தேன். இந்தியாவின் பல்வேறு இன மக்களது கலை நிகழ்ச்சிகளும் சிஷெல்வாக்களின் கலை நிகழ்ச்சிகளும் அந்தந்த இன மக்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தன. இச் சங்கத்தார் ஆண்டுதோறும் 'FOOD FAIR' என்றொரு விழாவினை நடத்துகிறார்கள். இதன் மூலம் இந்திய உணவு வகைகளின்மீது உள்ளூர்வாசிகளுக்கு ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தவும், அதேசமயம் இந்திய உணவுகளின் விற்பனை மூலம் சங்கத்துக்கு நிதி திரட்டவும் செய்கிறார்கள்.

இந்த ஆண்டு இந்த விழாவினை 2006 மே மாதம் நடத்தப் போகிறார்கள். இதற்குமுன் இச் சங்கத்தின் தலைவர்களாகத் திருவாளர்கள் கே.டி.பிள்ளை, வி.ஜே.பட்டீல், டி.எஸ்.கே.நாயர், ரமணி ஆகிய மூத்த இந்தியப் பிரமுகர்கள் சிறப்பாகப் பணி செய்திருக்கிறார்கள். இப்போது இதன் தலைவராகி இருப்பவர் இளைய தலைமுறையைச் சேர்ந்தவரான திரு.எஸ்.ராஜசுந்தரம் அவர்கள். 31 ஜூலை 2005ல் பவியேற்ற இவருடன் 11 பேர் செயற்குழு உறுப்பினர்களாகப் பொறுப்பேற்று இருக்கிறார்கள்.


திரு.ராஜசுந்தரம் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். 1983ல் சென்னை சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் படிப்பை முடித்த இவர் 1990வரை சொந்த ஊரில் வழக்கறிஞர் பணி செய்து விட்டு 1990 அக்டோபரில் சீஷெல்ஸ் வந்தார். அங்கு SEYCHELLES HOUSIG DEVELOPMENT CORPORATIONன் சட்ட ஆலோசகராகச் சேர்ந்தார்.

1997ல் சிஷெல்ஸ் குடியுரிமை பெற்று இப்போது 2000 முதல் தனியாகத் தொழில் செய்கிறார். 'நோட்டரி பப்ளிக்' ஆகவும் உள்ள இவர் மூன்று உதவியாளர்களுடன் தனி அலுவலகம் வைத்துக் கொண்டு சிஷெல்ஸின் ஒரே இந்திய - தமிழ் வழக்கறிஞர் என்ற பெருமையுடன் தொழில் புரிவதோடு இந்தோ-சிஷெல்ஸ் நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவராகப் புதிய திட்டங்களுடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.1990ல் கணவருடன் சீஷெல்ஸ் வந்த இவரது துணைவி திருமதி. மங்களநாயகியும் அந்நாட்டுப் பிரஜை ஆகி அங்குள்ள அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகப் பணி செய்கிறார். தனியார் பள்ளியில் பயிலும் இவர்களது இரு பிள்ளைகளும்கூட அந்நாட்டுப் பிரஜைகள் ஆகிவிட்டார்கள்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர்- காலஞ்சென்ற ராஜீவ்காந்தியின் பெயரில் இயங்கும் 'ராஜீவ் காந்தி பவுண்டேஷனி'ன் கிளை அமைப்பான 'ராஜீவ்காந்தி பவுண்டேஷன்- இந்தியன்ஓஷன் சாப்டர்' என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர்- திரு.கே.டி.பிள்ளை அவர்கள். கல்வி, சமூகம், கலாச்சாரம், சுகாதாரம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாக இவ்வமைப்பின் பணி இருக்கிறது. இவ்வமைப்பின் ஒட்டு மொத்தச் சேவையையும் - சிஷெல்ஸ் மக்களுக்கும், இந்துமாக் கடலில் இருக்கும் தீவுக்கூட்டங்களில் வாழும் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் மாபெரும் பணியில் பிள்ளை அவர்கள் தலைமை ஏற்று சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். மொரீஷியசுக்கு வந்த திருமதி சோனியாகாந்தியை சிஷெல்ஸ¤க்கு அழைத்து வந்து இவ்வமைப்பின் பணிகளைக் காட்டி அவரது பாராட்டைப் பெற்றிருக்கிறார். இவ்வமைப்பின் சார்பில் பிள்ளை அவர்களின் பெரும் முயற்சியால்தான் 1970ல் இந்திராகாந்தி திறந்தவௌ¤ப் பல்கலைக் கழகத்தின் கல்வி மையம் இங்கு தொடங்கப் பட்டது.


இந்த அமைப்பு இன்னொரு குறிப்பிடத் தக்க சேவையையும் செய்கிறது. சிஷெல்ஸ் மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் வௌ¤நாட்டுப் பயணிகள் வருகையால், எயிட்ஸ் நோய் பாதிப்பு சீஷெல்ஸில் இருக்கவே செய்கிறது. 300 பேருக்கு மேல் எயிட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டிருகிறார்கள். சீஷெல்ஸின் மக்கள் தொகைக்கு இது ஓரளவு அதிகமான பாதிப்புதான். அதுமட்டுமின்றி சிஷெல்ஸின் பொருளாதாரம் வௌ¤நாட்டு சுற்றுலாப் பயணிகளை நம்பி இருப்பதால் 'எயிட்ஸை'க் கட்டுப் படுத்துவது அவசியமாகிறது. அதனால் தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ வல்லுனர்களை அழைத்து வந்து கருத்தரங்குகளைப் பிள்ளை நடத்தி இருக்கிறார். மக்களிடையே 'எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு' சேவையை இவ்வமைப்பு சிறப்பாகவே செய்து வருகிறது.

இதன்னியில் பிள்ளை அவர்கள் 'கே.டி.பிள்ளை அறக்கட்டளை' யின் சார்பில் சர்க்கரை நோய்த் தடுப்பு சங்கம் ஒன்றையும் 'DIABETIC SOCIETY OF SEYCHELLES' என்ற பெயரில் தொடங்கி சிறப்பான சேவை செய்து வருகிறார்கள்.

திரு.கே.டி. பிள்ளை என்கிற க.தீனதயாளு பிள்ளை அவர்கள்தான் மயிலாடுதுறை வட்டாரத்துக்கு வழி காட்டிய முதல் தமிழர். அதற்கு முன்பாகவே அவருடைய தந்தை திரு.கலியபெருமாள் பிள்ளை 1940களில் தொழில் நிமித்தமாய் சிஷெல்ஸ் வந்து வியாபாரம் செய்தவர். 50 ஆண்டுகளுக்கு முன் கே.டி.பிள்ளை தன் தந்தையைப் போல சிஷெல்ஸ் வந்தார். ஆரம்பத்தில் கடையில் எடுபிடியாய் வேலை செய்து பின்னர் அக் கடைக்கே உரிமையாளராகி படிப்படியாய் - ஆனால் நிதானமாய் முன்னேறி இன்று சிஷெல்ஸில் மிகப் பெரிய தொழிலதிபராய், உலகளாவிய செல்வாக்கும் புகழும் மிக்கவராக விளங்குகிறார். எந்த அளவுக்கு இவர் பிரபலம் என்றால், இவருக்கு உலகின் எந்த மூலையிலிருந்து

கடிதம் எழுதினாலும் முழு முகவரியை எழுதாமல், வெறுமனே 'கே.டி.பிள்ளை, சிஷெல்ஸ்' என்று எழுதினால் போதுமாம். சரியாக இவரைத் தேடி அக்கடிதம் வந்துவிடுமாம். கே.டி.பிள்ளை அவர்கள் அரசியலில் சேர விரும்பாதிருந்தும் அவருக்கு எல்லா அரசியல் தலைவர்களிடமும் நல்ல நட்பும் செல்வாக்கும் இருக்கிறது. இவரது ஒரே மகன் டாக்டர் விநாயமூர்த்தியும் இங்கு அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். தன்னுடய சகோதரர், சகோதரி பிள்ளைகளையும் இங்கு அழைத்து வந்து தன்னோடு வைத்துப் பயிற்சியளித்து அவர்கள் தனித்தனியே வியாபாரம் செய்யவும் உதவியிருக்கிறார். அதோடு நீதிபதி திரு.கருணாகரன் போன்ற தன் ஊர்க்காரர்களின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் பெரிதும் காணமாக இருந்திருக்கிறார்.

தமிழ் கலாச்சார வளர்ச்சி மையம் - 'TAMIL CULTURAL DEVELOPMENT CENTRE' என்றொரு அமைப்பும் இங்கு உள்ளது. இவ்வமமைப்பின் சார்பில் தமிழ்ப் பள்ளி ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். அங்கு வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்குப் பள்ளியில் தமிழ் படிக்க வாய்ப்பில்லாதால் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்திடமிருந்து தமிழ்ப்பாட நூல்களை வாங்கி பயிற்றுவிக்கிறார்கள். மாதக்கட்டணம் 50ரூ. தான் என்றாலும் ஞாற்றுக் கிழமைகளை இதற்கென்று வீணாக்க விரும்பாத பெற்றோரின் அசிரத்தையால் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழ் கற்பிப்பது மட்டுமல்லாமல், நாட்டியம், கருவி இசை போன்ற இந்தியக் கலைகளையும் அங்குள்ள தமிழர்களைக் கொண்டே பயிற்றுவிக்கிறார்கள். இவ்வமைப்பின் சார்பில் அடிக்கடி தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. உள்ளூர்த் தமிழ்க் குழந்தைகளின் நிகழ்ச்சிகளுடன் தமிழ் நாட்டிலிருந்து கலைஞர்களையும் தமிழ் அறிஞர்களையும் ஆன்மீகவாதிகளையும் இசை விற்பன்னர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். கடந்த காலங்களில் வாரியார் சுவாமிகள், பித்துக்குளி முருகதாஸ், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், சுகிசிவம், நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமன ஷோபனா போன்றோர் வந்திருக்கிறார்கள். நான் போயிருந்தபோது, இலங்கையிலிருந்து கம்பனிலும் பாரதியிலும் கரைகண்ட அற்புதப் பேச்சாளர் திரு.கம்பவாரிதி ஜெயராமன் அவர்களையும் கவிஞரும், பத்திரிகையாளரும், கல்லுரித் தமிழ் விரிவுரையாளருமான திரு. ஸ்ரீபிரசாந்த் அவர்களையும் 4 நாள் சொற்பொழிவுக்காக அழைத்திருந்தார்கள். அவர்களோடு நானும் ஒரு நாள் ஒரு பட்டி மன்றத்தில் அணித் தலைவராகக் கலந்து கொண்டேன். சிஷெல்ஸ் சென்றதில் திரு.கம்பவாரிதியின் அற்புதமான சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியதை எனக்குக் கிடத்த பெரும் பேறாகக் கருதுகிறேன். இந்த மன்றத்தை திரு.சிவசண்முகம் பிள்ளை என்கிற தொழிலதிபர் தலமையேற்று அயராது நடத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக முனைவர் புகழேந்தி என்பவரும் மற்ற தமிழ் ஆர்வலர்களும் சிறப்பாக ஒத்துழைப்பு நல்கி தமிழ்க் கலாச்சார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறார்கள்.

'தமிழ் மன்றம்' என்று ஒரு அமைப்பும் உள்ளது. இதில் தமிழ் நாட்டிலிருந்து வரும் அதிதிப் பேச்சாளர்களைச் சொற்பொழிவாற்றச் செய்து இலக்கிய சேவை செய்கிறார்கள். இந்த அமைப்பின் சார்பில்தான் நான் ஒரு நாள் இலக்கியச் சொற்பொழிவாற்றினேன். 'சிஷெல்ஸ் இந்து ஆலோசனை சபை' - 'HINDU COUNCIL OF SEYCHELLES' என்றொரு அமைப்பு இங்கு உள்ளது. இது இங்குள்ள இந்துக்களிடையே இந்து மதத்தின் முக்கியத்துவத்தைப் பரப்புவதும், உயர்த்துவதும் ஆன சேவையை செய்து வருகிறது.

'SANSKRITI' என்கிற அமைப்பு முழுக்க முழுக்க இந்திய கலாச்சார வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டது.

'சிஷெல்ஸ் இந்து கோவில் சங்கம்' என்கிற அமைப்பு ஆன்மீக சேவைகளைச் செய்து வருகிறது. இது இந்துக்களால் கட்டப்பட்டுள்ள 'நவசக்தி விநாயகர் கோவிலி'ன் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறது. இந்த விநாயகர் கோவில் பற்றி பின்னால் சிஷெல்ஸ்வாழ் தமிழர் பற்றி எழுதும்போது விரிவாக எழுதவுள்ளேன்.

- தொடரும்

No comments: