Wednesday, February 22, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 11

சிஷெல்ஸின் சில முக்கிய தீவுகள்

மொத்தம் 116 தீவுகளின் கூட்டமான சிஷெல்ஸின் பிரதான - பெரிய தீவு மாஹே. உலகில் நிச்சயம் குறிப்பிடத் தக்கதும் மிகவும் அழகானதுமான இத்தீவின் 76 கடற் கரைகள் ஒவ்வொன்றும் வித்யாசமான இயல்புடையவை. இவைகளின் பின்னணியில் அமைந்துள்ள மலைகளின் அமைப்பு ஒரு நாடகத் தன்மை வாய்ந்தது. இக் கடற்கரைகளில் அமைந்துள்ள உணவு விடுதிகளின் சிற்பக் கட்டமைப்புக்கு அழகான பின்னணியாக இம்மலை அமைப்புகள் உள்ளன. ஏறக்குறைய 150 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இத்தீவின் உட்பகுதிகள் மலைப்பகுதிகளும், அபூர்வத்தாவரங்களும் நிரம்பி சிறு அதிசயமாய் விளங்கும் இத்தீவின் அசல் பெயர் 'ILE D' ABONDANCE' ஆகும்.

இதன் மிக உயரமான மலைச்சிகரமான 'MORNE SEYCHELLOIS' கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் மேலே உள்ளது. மலையின் உயரமான பகுதிகளில் கூட சாலைகள் மிக நன்றாக இருக்கும். வளைந்து வளைந்து மேலேறும் இதன் பாதைகள், மிக அருகில் நெருங்கி வித்யாசமான தாவரங்கஆளையும் பிராணிகளையும் பார்க்க வசதியாய் அமைந்துள்ளன.

சீஷெல்ஸின் தலைநகரான விக்டோரியா சமப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் அமைக்கப் பட்டுள்ளது. விமான நிலையமும், துறைமுகமும் இதில்தான் உள்ளன. நகரின் மத்தியில் அமைந்துள்ள கடிகாரக் கோபுரம் இலண்டனில் விக்டோரியா தெருவும் வாக்சால் பால சாலையும் சந்திக்க்¤ற மையப்பகுதியில் உள்ள கடிகாரக் கோபுரத்தின் நகலாகும்.

விக்டோரியா மஹாராணியின் நினைவாக 1903ல் எழுப்பப் பட்ட இக்கோபுரம் அந்த ஆண்டில், சிஷெல்ஸ் பிரிட்டிஷ் காலனியானதின் அடையாளச் சின்னமாகவும் கருதப்படுகிறது.நகரின் மத்தியில் புகழ்பெற்ற சிற்பி 'LORANZO APPIANI' யால் உருவாக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சிற்பம், சீஷெல்ஸில் ஆதியில் குடியேறிய மக்களின் மூன்று கண்டங்களைக் குறிப்பதாகும். இங்குள்ள படகுத்துறை பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலாச் செல்கிறவர்கள் புறப்படும் இடமாகும். இயற்கை வரலாற்றுக் காட்சி சாலையும் , தேசீய வரலாற்றுக் காட்சி சாலையும் இங்குதான் உள்ளன. தேசீய நூலகமும், ஆவணக் காப்பகமும், தாவரவியல் பூங்காவும் தலைநரில்தான் உள்ளன. இதன் கடற்கரைகள் ஆழமில்லாமல் நீச்சல் விரும்பிகளுக்கு உகந்ததாக உள்ளன. இத்தீவின் கரை ஓரத்தில் ஒரு இடத்திலிருந்து கிழக்கு நோக்கிக் காரில் பயணம் செய்தால் ஒரு மணி நேரத்தில் திரும்பவும் கிளம்பிய இடத்துக்கே வந்து சேரலாம்.

அதற்கு அடுத்த இரண்டாவது பெரிய கிரானைட் தீவு பிராலன்(Praslin) ஆகும். இது ஒரு இரண்டாவது தலை நகரம் போல. இங்கு தலைநகரின் அலுவலகங்களின், மருத்துவ மனைகளின், நீதிமன்றத்தின் கிளைகள் உள்ளன. இதன் ஜனத்தொகை 5000. திருவோடு காய்க்கும் பனைமரங்கள் இங்குதான் அதிகம். அலுவலுக்காக மட்டுமன்றி, வார விடுமுறைகளில் வந்து தங்கி ஓய்வெடுக்கவும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வந்து தங்கவுமான அருமையான ஓய்வுத் தலமாகவும் இத்தீவு விளங்குகிறது.

மாஹேயிலிருந்து 40கி.மீ தூரத்தில் உள்ள இத்தீவுக்கு வந்துபோக எந்திரப் படகுசேவை இருந்தாலும் 'AIR SEYCHELLESன் விமான சேவையும் இருக்கிறது. மினிபஸ்கள் போல இயங்கும் குட்டி விமானங்கள் - 18 பேர் ஏறலாம் - அரைமணிக்கு ஒன்று என ஒரு நாளைக்கு 20 தடவைகள் புறப்பட்டுப் போய்த் திரும்புகின்றன. பயணநேரம் 15 நிமிஷங்கள்தாம். எந்திரப் படகில் போனால் 2 1/2 மணி நேரம் பிடிக்கும். இதில் பயணம் செய்து பிராலன் போய் 3 நாட்கள் கடலோர விடுதி ஒன்றில் தங்கிப் பார்த்து வந்தோம். இங்கு தங்கி இருந்த விடுதியின் முன்னால் இருந்த மரம் ஒன்றில் பச்சைநிறப் பல்லிகளைப் பார்த்தேன். பச்சைப்பாம்பு வண்ணத்தில் இருந்த இப்பல்லிகள் இங்குமட்டுமே உள்ளனவாம். கறுப்புக் கிளிகளும் இங்கு மட்டுமே காணக்கூடியவை. 'BLACK PEAERLS' எனப்படும் கறுப்பு முத்துக்களும் இங்கே மட்டுமே கிடைக்கின்றன. இங்கு மிகச் சிறப்பான 'LAMURIA RESORT', 'PARADISE SUN', 'EMERALD GOLD' போன்ற உணவு விடுதிகளும் கேளிக்கை அரங்கங்களும் உள்ளன. வட இந்திய உணவு வகை கிடைக்கும் உணவு விடுதி ஒன்றிற்கும் சென்றோம். இங்குள்ள கடைகள் - டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்' - எல்லாமும் மயிலாடுதுறைப் பகுதித் தமிழர்களுடையவை தாம். பல ஆண்டுகளுக்கு முன்பே வந்து தங்கள் ஜாதிப்பெயருடன் - படையாச்சி, நாயுடு - என்று நீடிப்பவர்கள். இங்கும் சர்ச்சும், வங்கியும் உள்ளன.

இங்கு மாஹேயின் மிக உயர்ந்த மலை போல இல்லை என்றாலும் மாஹேயைப் போலவே கிரானைட் பாறைகளும், பவழப்பாறைகளும், நீச்சலுக்கு ஏற்ற- பளிங்கு போல் நீர் உள்ள ஆழமற்ற கடற்கரைகளும் உள்ளன. சாலைகள் மிக நன்றாகப் பராமரிக்கப் படுகின்றன. பல்விதமான தாவர வகைகள், பாதைகளின் இருபுறமும் உள்ளன.

கார்கள் இங்கு குறைவு. ஆனால் வாடகைக்குக் கிடைக்கும். சுற்றுலா செல்பவர்கள் விமான நிலயத்திலிருந்தே போன் செய்தால் வாடகைக் கார்கள் தேடி வரும். சாவியை வாங்கிக் கொண்டு நீங்களே அங்கு தங்கும்வரை பயன் படுத்திக் கொள்ளலாம். திரும்பும் போது விமான நிலையத்திலேயே நிறுத்திவிட்டு வாடகையைச் செலுத்திவிட்டு சாவியைக் கொடுத்துவிடலாம். பேருந்து வசதியும் காலை 5-30 முதல் இரவு 7 மணி வரை உண்டு.

சைக்கிள்களும் வாடகைக்குக் கிடைக்கும். படகுகளும் கூட சில விடுதிகளில் வாடகைக்குக் கிடைக்கும். அருகில் உள்ள சிறு தீவுகளுக்கு படகுச் சுற்றுலாவும் ஏற்பாடு செய்து கொள்ளலாம். 'ST. PIERRE' என்கிற சிறிய பாறைத் தீவு பவழப் பாறைகளுக்குப் புகழ் பெற்றது. அது மட்டுமல்ல - இந்தப் பகுதி நீருக்கடியில் படம் எடுக்க (UNDER WATER PHOTOGRAPHY) - அனுகூலமானது.

மாஹேக்கு அருகிலேயே அரைநாள், ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சுவாரஸ்யமான சின்னத்தீவுகள் - CERF, MOYENNE, ROUND, DENNIS, ST.ANNE போன்றவை உள்ளன. கடலின் அடியில் உள்ள பவழப் பாறைகளையும் பலவண்ண மீன் கூட்டங்களையும் கண்டு ரசிக்க ஒரே வழி, அடிப்பக்கம் கண்ணாடியாலான படகுகளில் பயணம் செய்வதுதான். அப்படி ஒருநாள் நண்பர் குடும்பங்களுடன் எந்திரப் படகில், 15 நிமிஷ பயணத் தொலைவிலுள்ள CERF தீவுக்குப் சென்றோம். அடிப்பகுதி பக்கச் சுவர்கள் கண்ணடியால் ஆனதாகவும், உட்கார வசதியான இருக்கைகளுடனும் இருந்தது. அதில் அமர்ந்து பவழப் பாறைகளையும் வண்ணவண்ண மீன் கூட்டங்களையும் கண்டு ரசித்தோம்.

1973ல் நிறுவப்பட்ட 'ST.ANNE MARINE NATIONAL PARK' இந்துமாக் கடலில் முதன் முதலாக அமைந்ததாகும். இங்கு 150 வகையான மீன் வகைகள் பராமரிக்கப் படுகின்றன. மீன்பிடித்தல் இப் பகுதியில் தடை செய்யப் பட்டுள்ளது. பவழங்களையும், கிளிஞ்சல்களையும் சேகரிக்க அனுமதியில்லை. அங்குள்ள தகவல் பலகையில் 'போட்டோக் களையும், நினைவுகளையும் தவிர வேறெதையும் இங்கிருந்து எடுத்துப் போக வேண்டாம்' என்று எழுதப் பட்டுள்ளது.

CERF தீவுக்கு அடுத்து உள்ள 'M0YENNE' என்னும் தீவு MR.BRENDON என்ற ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் ராஜதந்திரிக்குச் சொந்தமானது. 82 வயதான இவர் ஆப்பிரிக்கா கண்டத்தில் பணியாற்றியவர். தன் தந்தையின் சமாதி அமைந்துள்ள இத்தீவை 45 ஆண்டுகளுக்கு முன் விலைக்கு வாங்கி குடியேறியவர். அங்கு இவர் ஒரு பரந்த தோட்டத்தை அமைத்துத் தனியாக தன் செல்லப் பிராணிகளுடன் வாழ்கிறார். பிரதான தீவான மாஹேக்கு அடிக்கடி தன் சொந்த எந்திரப் படகில் வந்து செல்வார். இவர் ஒரு சுழற்சங்க (ROTARIAN) உறுப்பினர். தத்துவ சிந்தனைகள் கொண்டவர். 'A GRAIN OF SAND - THE STORY OF ONE MAN AND AN ISLAND' என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். இந்நூல் சிஷெல்ஸின் கடந்த அரை நூற்றாண்டின் வரலாற்றையும் உள்ளடக்கியது.

ROUND என்பது மாஹேயிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள செழுமையான தாவரங்கள் கொண்ட சிறு தீவாகும். இந்த முழுத்தீவும் நீரடி ஆய்வுக்கானது (UNDER WATER EXPLORATION). ஷெல் மீன்களும் நட்சத்திர மீன்களும் மணற்பாங்கான கடற்கரை ஓரங்களில் அதிகம் காணப்படும். பல ஆண்டுகள் வரை - 1942 வரை - இத்தீவு தொழுநோயாளிகளின் காப்பகமாகமாகப் பயன்பட்டு வந்தது.

COUSIN என்கிற தீவு இயற்கைச் செல்வங்கள் பாதுகாகப்படும் தீவு. 1986ல் 'ROYAL SOCIETY FOR NATURE CONSERVATION' என்ற அமைப்பால் வாங்கப்பட்ட இத்தீவு பல்வேறு வகையான பறவைகளின் சொர்க்க பூமியாக உள்ளது. இது பறவை ஆய்வாளர்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ள இடம். எங்கு பார்த்தாலும் ஒரே பறவைக் கூட்டமாக உள்ள இத்தீவு சுற்றுலாப் பயணிகள், தவற விடாத இடமாகும். எங்கு கால் வைத்தாலும் பறவை முட்டைகள்தாம். அவ்வளவு நெருக்கமாகப் பறவைகள் சூழ்ந்துள்ள தீவு இது. சுற்றுலாப் பயணிகள் முட்டைகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. சுவாரஸ்யமான ஊர்வன மற்றும் ராட்சச ஆமைகளும் இங்கு காணப்படுகின்றன.

BIRD ISLAND என்பது இரண்டாவது பறவைக்காப்பகம் ஆகும். இதுவும் பறவை ஆய்வாளர்களுக்கு விருப்பமான தீவாகும். இங்கு வேடந்தாங்கல் போல பலதேசத்துப் பறவைகளும் வந்து தங்கிப் போகின்றன. இங்குதான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 200 வயதான, உலகத்திலேயே மிகப் பெரிய, ESMERALDA என்கிற ராட்சச ஆண் ஆமை பாதுகாக்கப் படுகிறது.

DENIS என்கிற சிறு தீவு மிகுந்த மீன் வளமிக்கது. ஆண்டு முழுதும் மீன்பிடிக்க உகந்தது. நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுக்கு ஏற்ற இடம்.

ARIDE, LA DIGUE ஆகிய இரண்டும் கிரானைட் பாறைகள் அதிகம் உள்ள தீவுகள்.

FRE'GATE என்பது வெகு தொலைவில் தனித்திருக்கும் கிரானைட் தீவாகும். இது ஒரு புதையல் தீவாகும். இங்கு 17,18 வது நூற்றாண்டுகளில் கடற்கொள்ளைக்காரர்கள் வந்து தங்களது செல்வங்களைப் புதைத்து வைத்ததாகச் சொல்கிறார்கள். விலை மதிப்பற்ற அரிய மரங்கள் அடர்ந்த தீவு இது.

இன்னும் இவை போன்ற ஏராளமான சுவாரஸ்யமான குட்டித் தீவுகளும் சீஷெல்ஸின் பெருமையைப் பேசுவன.

-தொடரும்

No comments: