Wednesday, February 22, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 8

நீதித் துறையும் மற்றவையும்

சிறிய நாடு என்றாலும், சிஷெல்ஸின் நீதித் துறை குறிப்பிடும்படியான சிறப்புக்கள் கொண்டது. நீதிமன்றங்கள் இரண்டு அடுக்கு கொண்டவை. குற்றவியல் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்ற இரண்டே நிலைதான். நீதிபதிகளில் நான்கு பதவிகள். மாஜிஸ்டிரேட், சீனியர் மாஜிஸ்டிரேட், ஜட்ஜ், சீ·ப் ஜட்ஜ் என்று பதவிகள் உயரும். உச்ச நீதிமன்றத்திற்கு நான்கு நீதிபதிகள். தலைமை நீதிபதி மொரீஷியஸில் பிறந்தவர். இங்கு குடியேறி இந்நாட்டுப் பிரஜையாக ஆனவர். மற்ற மூன்று நீதிபதிகளில் ஒருவர் மண்ணின் மைந்தர். இன்னொருவர் இலங்கையைச் சேர்ந்தவர். நாலாமவர் தமிழர். நீதித் துறையும் நடுவர்களும் இந்தியா போலவே அரசியலாக்கப் படுகின்றனர். தற்போதுள்ள தலைமை நீதிபதி எதிர்க்கட்சி அனுதாபி என்பதால், அரசியல் நிர்ப்பந்தம் காரணமாய் பதவி இறங்கப் போகிறார் என்றார்கள். தலைமை நீதிபதிக்கும் மற்ற நீதிபதிகளுக்கும் சம்பளத்தில் வேறுபாடு இல்லை.

நான் சென்றபோது உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை. விடுமூறை முடிந்து மீண்டும் உச்ச நீதிமன்றம் துவங்குவதைப் பெரிய கோலாகலமான விழாவாகக் கொண்டாடினார் கள். 15-9-05 காலை 9 மணிக்கு கிறிஸ்துவ தேவாலயத்தில் தலைமை பிஷப் தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது. சிஷெல்ஸ் கிறிஸ்துவ நாடானதால் அங்கு எல்லாமே தேவாலய வழிபாடுடனேயே துவக்கப் படுகிறது. தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தமக்குரிய இடங்களில் அமர்ந்திருக்க, முறையான பிரார்த்தனைப் பாடல்களுடன் நிகழ்ச்சி துவங்கியது. பொதுமக்களும் அனுமதிக்கப் படுவதால் நானும் அந்நிகழ்ச்சியைக் காணச் சென்றிருந்தேன். பொதுமக்கள் அதிகம் வந்திருந்தார்கள். பிரார்த்தனை முடிந்ததும் தலைமை பிஷப் பிரார்த்தனைச் சொற்பொழிவு நிகழ்த்தினார். பின்னர் கிறிஸ்துவ மற்றும் இதர மதங்களின் வேதங்களிலிருந்து பகுதிகள் வாசிக்கப் பட்டன. இந்து மதத்துக்கு தமிழ் வழக்கறிஞரான திரு. ராஜசுந்தரம் அவர்களுக்கு பகவத்கீதையிலிருந்து சில பகுதிகளைப் படிக்கும் வாய்ப்பு தரப்பட்டது.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் போலீஸ் படையும் பேண்டு கோஷ்டியும் அணிவகுத்து முன்னே நடக்க, ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உச்சி நீதிமன்றத்துக்கு ஊர்வலமாகச் சென்றார்கள். அது ஒரு பரவசமான காட்சியாக இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் ராணுவ அணிவகுப்பு நடை பெற்றது. ராணுவ மரியாதையை ஏற்ற தலைமை நீதிபதி எல்லா வழக்கறிஞர்களையும் தனித்தனியே கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னார். பிறகு உச்சநீதிமன்ற அறையில் தலைமை நீதிபதியின் உரைக்குப் பின் வௌ¤யே வந்து வழக்கறிஞர்களுடன் நீதிபதிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். பின்னர் வந்திருந்த பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் தேனீர் விருந்தளிக்கப் பட்டது. விடுமுறைக்குப்பின் மீண்டும் நீதிமன்றம் தொடங்குவதை இவ்வளவு கோலாகமாய்க் கொண்டாடுவதை இங்குதான் பார்த்தேன்.

இங்குள்ள மொத்த வழக்கறிஞர்களின் எண்ணிக்கை வெறும் 40 தான். அதிலும் ஒழுங்காகத் தொழில் செய்பவர்கள் 20 பேர்தானாம். அவர்களில் ஒரே தமிழ் வழக்கறிஞர் திரு.ராஜசுந்தரம் அவர்கள் தான். அங்குள்ள மக்களுக்கு இந்திய வழக்கறிஞர்களிடம் மிகுந்த நம்பிக்கையும் நல்ல மரியாதையும் இருக்கிறது.


நீதிபதிகளில் ஒருவரான திரு.கருணாகரன் அவர்கள் தமிழ்நாட்டின் மயிலாடுதுறையைச் சேர்ந்ந்தவர். இங்குள்ள தமிழர்களில் 50 சதவீதம் பேர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்கள்தாம். இவரது தந்தை மயிலாடுதுறையில் பெயர் பெற்ற காங்கிரஸ்காரர். ஆனால் திரு.கருணாகரன் படிக்கும் போதே திராவிடச் சிந்தனைகளில் ஊறியவர். கல்லூரி நாட்களில் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தவர். புரட்சிகரமான சிந்தனையும் செயல்பாடும் உடையவர் என்பதால் இவரது தந்தை இங்கிருந்தால் தன்னைப் போல் அரசியல்வாதி ஆகிவிடக்கூடும் என்று பயந்து தனது நண்பரும் சிஷெல்ஸின் பிரபல தொழிலதிபருமான திரு.கே.டி.பிள்ளை என்பவரிடம் ஒப்படைத்து சீஷெல்ஸ¤க்கு அழைத்துப் போகச் செய்தார். அப்படியே கே.டி.பிள்ளையால் சிஷெல்ஸ் வந்து காலூன்றியவர் முதலில் கே.டி.பிள்ளையின் நிறுவனங்களுக்கு வழக்கறிஞராக சிறிது காலம் பணி செய்தார். பின்னர் அவரது திறமை காரணமாக மாஜிஸ்டிரேட் ஆக நியமனம் பெற்றார். பின்னர் சீனியர் மாஜிஸ்டிரேட் ஆகி, தற்போது உச்ச நீதிமன்றத்து நான்கு நீதிபதிகளில் ஒருவராகத் திகழ்கிறார். பெரிய பதவியில் இருந்தாலும் தான் இந்நிலையை அடைய அஸ்திவாரமிட்ட திரு.கே.டி.பிள்ளையிடம் விசுவாசமிக்கவராகவும் தன்னுடைய சட்டக் கல்லூரித் தோழரும் அவரது நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி செய்பவருமான என் மாப்பிள்ளை திரு.ராஜசுந்தரம் அவர்களிடம் அதே நட்பு மாறாமல் இருப்பதுமான உயரிய பண்பினைக் கொண்டவர். ஒருமுறை எனது இலக்கியக் கூட்டத்தில் என்னை அறிமுகப் படுத்திப் பேசியபோது - திரு.கே.டி பிள்ளையின் ஆரம்ப கால உதவிகளையும் ஆதரவையும் அவர் மனம் திறந்து நன்றியுடன் நினைவு கூர்ந்தது, கே.டி.பிள்ளை அவர்களையும் பார்வையாளர் களையும் நெகிழ வைத்தது. ஆனால் தொழில் வேறு நட்பு வேறு என்ற கொள்கையால் தனது தொழில் நெறிக்கு மாறாக சலுகையோ தயவோ காட்டாத நேர்மையாளர் என்று என் மாப்பிள்ளை சொன்னார். பரந்துபட்ட இலக்கிய அறிவும் ரசனையும் மிக்கவர். பலமுறை எனது நேரடி சந்திப்பிலும், இலக்கியக் கூட்டங்களிலும் அவர் காட்டிய தமிழுணர்வு என்னை வியக்க வைத்தது. எனது இலக்கியக் கூட்டங்களில் எப்போதும் முன்வரிசையிலிருந்து அவர் ரசித்தது எனக்கு உற்சாகமும் கௌரவமும் தருவதாக இருந்தது. அவரது இந்த முகம் அங்கிருக்கும் தமிழர்களில் பலருக்கும் தெரியவில்லை என்றே தோன்றியது. அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தஸ்து காரணமாய் அவர் சமுதாயத்தில் கலந்து பழகவியலாத சூழ்நிலையும் காரணமாய் இருக்கக் கூடும். அவருடைய மனைவி திருமதி.செல்வி அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியை ஆகப் பணிபுரிகிறார். அவர் சிறந்த இசை ரசிகர் மற்றும் நல்ல ஓவியரும் கூட. நீதிபதி தம்பதிகள், என்னையும் என் மனைவியையும் கௌரவிக்க அவர்களது வீட்டில், நெருங்கிய சில நண்பர்களுடன் ஒரு நல்ல விருந்தளித்தது இன்றும் என் மனதில் பசுமையாய் நிற்கிறது.

தலைநகரான விக்டோரியாவில்தான் குற்றவியல் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உள்ளன. மாஹேக்கு அடுத்த பெரிய தீவான பிராலினில் ஒரு குற்றவியல் நீதிமன்றமும் உள்ளது.

சிஷெல்ஸின் காவல்துறை, இந்தியக் காவல்துறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஏக்கத்தை தருவதாக உள்ளது. 'உங்கள் நண்பன்' என்று தமிழ்நாட்டில் படமெல்லாம் எடுத்துப் பொதுமக்களுக்குக் காவல்துஆறை மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்த எவ்வளவோ முன்றார்கள், இன்றும் அவ்வகையில் பலவித முயற்சி¤களில் ஈடுபட்டும் வருகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளையும் குற்றவாளிகளையும் தவிர மற்ற அனைவருக்கும் காவல்துறை என்றால் அச்சம் எழுவது மாறவில்லை. ஆனால் சிஷெல்ஸில் அது சாத்யமாகி இருக்கிறது. அங்கு காவல்துறை ஒன்று இருப்பதாகவே தெரியாது. தாங்கள் மக்களின் சேவகர்கள் என்பதை அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். மக்களும் காவல் துறை என்றால் அஞ்சி நடுங்குவதில்லை. நான் அங்கிருந்த இரண்டு மாதத்திற்கும் மேலான நாட்களில், உச்ச நீ¦திமன்ற ஊர்வலத்தின்போது போக்குவரத்தைக் கண்காணிக்கும் காவலரை மட்டுமே பார்த்தேன். வேறு எங்கும் என் கண்ணில் காவலர்கள் தென்பட்டதில்லை.

காவல்துறை நிலையங்களும் அச்சமூட்டும் இரத்த வண்ணத்தில் இல்லை. தமிழ்நாட்டுக் கிராமப் பஞ்சாயத்து சாவடிபோல மிக எளிமையாய்ப் பயமுறுத்தாமல் உள்ளன. தலைநகரில் மட்டும் பிரம்மாண்டமான கட்டடத்தில் தலைமைக் காவல் அலுவலகம் நவீன சாதனங்களுடன் அமைந்திருக்கிறது. அங்குதான் நான் பல காவலர்கஆளைக் கண்டேன்.

இப்படிப் பரபரப்பில்லாமல் மக்களுக்கு அச்சமளிக்காமல் எப்படி இங்கு காவல்துறை இருக்கிறது என்று கேட்டேன். அற்குக் கிடைத்த பதில் நம்ப முடியாதபடி இருந்தது. ஆனால் அதுதான் உண்மை! அங்கே திருட்டே நடைபெறுவதில்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி அபூர்வம். குடிகாரர்கள் எல்லை மீறினால் தான் உண்டு. பின் அங்கே காவல்துறைக்கு அங்கே என்ன அவசியம்? நான் அங்கிருந்த நாட்களில் என் மகள் வீட்டிலும் இன்னும் பல வீடுகளிலும் விலையதிகமான பொருட்கள் வீட்டு வராந்தாக்களிலும், கார்ஷெட்களிலும் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்திருக்கிறேன். கணவனும், மனைவியும், பிள்ளைகளும் பணிக்கும் பள்ளிக்கூடத்திற்கும் காலை 7 மணிக்குப் போய் மாலைதான் திரும்புகிறார்கள். ஆனால் பொருட்கள் போட்டது போட்டபடி கிடக்கின்றன. ஆரம்ப காலங்களில் மக்கள் வீட்டைப் பூட்டுவதே இல்லை என்று ஒருவர் சொன்னார். நம்பலாம் என்றே தோன்றியது.

அஞ்சல் துறையும் ஆரோக்கியமான அமைப்பாகவே உள்ளது. அஞ்சல் பட்டுவாடா செய்பவர்களில் பெண்களே அதிகம். வீட்டுக்கு வீடு சென்று தர அதிகம் தேவை இல்லாதபடி அங்கு அநேகமாக எல்லோரும் தனி அஞ்சல் பெட்டிகளை அஞ்சலகங்களில் வைத்திருக்கிறார்கள்.

விளையாட்டுத் துறை மிகவும் விறுவிறுப்புடன் இயங்குகிறது. அவர்களது தேசீய விளையாட்டு டென்னிஸ்தான். சிறுவர்களுக்கு - ஆண், பெண் இருபாலாருக்கும் அரசே டென்னிஸ் விளையாட பயிற்சி தர ஏற்பாடு செய்திருக்கிறது. ஆண்டு முழுதும் உலகின் பலநாடுகளுக்கும் போட்டிகளில் பங்குபெற, பயிற்சி தரப்பட்டவர்கள் அனுப்பி வைக்கப் படுகிறார்கள். மிகப்பெரிய ஸ்டேடியம் தலைநகர் விக்டோரியாவில் உள்ளது. பிள்ளைகள் தொலைக்காட்சிகளில்- படிப்பு நேரம் போக விளயாட்டுச் சேனல்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

- தொடரும்

No comments: