Sunday, May 30, 2004

நினைவுத் தடங்கள் - 18

என் உடைக்காகக் கேல்¢ செய்த சக ஆசிரயர்கள் நாளடைவ்¢ல் பழகிப்போய் அதை அங்கீகரித்து விட்டார்கள். ஒரு மூத்த தமிழாசிரியர், தலை பொல்லென்று நரைத்து, எப்போதும் வெள்ளுடையில் இருப்பவர்- அதன் காரணமாகவே அவரிடம் எங்களுக்கெல்லாம் ஒரு மரியாதை ஏற்படுத்தியிருப்பவர்-மட்டும் ஒரு கருத்தைச் சொன்னார்.''கவர்ச்சியான உடைதான் மரியாதையை ஏற்படுத்தும் என்பதை ஏற்க முடியாது. மகாத்மா காந்தி இடுப்புத் துண்டோடுதான் இருந்தார்.
அவரது உடையாலா அவருக்கு மரியாதை ஏற்பட்டது?'' என்றார். நான் சொன்னேன்: "காந்தி
அடிகள் மகாத்மா ஆன பிறகுதான் தன் ஆடை பற்றிக் கவலைப் படவில்லை. அதற்கு முன் அவர் மேனாட்டு உடையில்தான் இருந்தார். நான் மஹாத்மா அல்ல". அதற்குப் ப்¢றகு என் உடை பற்றிய சர்ச்சை என் சகாக்களிடையே எழுவதில்லை.

வேறுவகையிலும் என்னை அதைரியப்படுத்தியவர் உண்டு. ஆனால் அது என்மீது கொண்ட
அக்கறையால்தான். நான் எப்போதும் உரத்துதான் பாடம் சொல்வேன். ஒரு வகுப்பின் பக்கத்து அறைதான் ஆசிரியர் ஓய்வறை. நான் பேசுவது அந்த அறையில் கேட்கும். நான் வகுப்பை முடித்துவிட்டு வந்து ஓய்வறையில் நுழைந்ததும், ஒரு மிக மூத்த ஆசிரியர்- நான் 6- 8 வகுப்பு வரை படித்த நடுநிலைப் பள்ளியில் எனக்கு ஆசிரியராய் இருந்தவர்- இப்போது சக ஆசிரியர், "ஏண்டா சபா, ஏன் இப்படித் தொண்டத்தண்ணிக் காயக் கத்துறே? உனக்கு மட்டும் ஜில்லா போர்டுலே நெய் அலவன்சா தர்ரான்? இப்பவே இப்படிக் கத்திப் பாடம் நடத்தினியானா
சீக்கிரமே செத்துப் போவே?' என்பார். 'அதுக்கில்லே, உரத்துப் பேசுலேன்னா கடைசி வரிசைப் பையன்கள் கவனிக்க மாட்டாங்க!' என்பேன். ''அவன் கவனிக்கணுங்கிறத்துக்காக எங்க தூக்கத்தக் கெடுக்கிறீரே- இது நியாயமா?" என்று கேட்பார் எப்போதும் அனந்தசயனத்தில் இருக்கும் ஒரு ஆசிரியர். உரத்துப் பேசுவதில் மாணவரிடையே ஒரு விழிப்புணர்வு இருப்பதைக் கண்டிருக்கிறேன். மேலும் நான் பாடம் நடத்தும்போது நாற்காலியில் உட்காருவதில்லை.
உட்கார்ந்து நடத்துவதால் பின் வரிசை மாணவர்கள் கவனிக்காமலும் விஷமம் செய்யவும் வாய்ப்புண்டாகும் என்பதால் என் பணிக்காலம் முழுதிலும் -36 ஆண்டுகளில்- ஒரு நாள் கூட
உட்கார்ந்து பாடம் நடத்தியதில்லை. இதுவும்கூட மாணவரிடையே எனக்கு மரியாதையை அதிகமாக்க்¢ற்று.

இன்னொரு வ்¢ஷயத்திலும் மாணவரிடயே ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. அது என் நினைவாற்றல். அது நான் அண்ணாமலையில் பயின்றபோது எனது முதல்வர் பேராசிரியர் ஆர்.ராமானுஜாச்சாரி அவர்களிடம் கற்றது. "உனக்கு நிறைய நண்பர்கள் வேண்டுமென்றால்
அவர்களது பெயர்களை மறவாது பெயர் சொல்லி அழைக்க வேண்டும்''என்று யாரோ எழுதியதை நான் இன்றுவரை மறக்க வில்லை. இன்றும் - 40 ஆண்டுகளுக்குப் பிறகும் - என் பழைய
மாணவர்களைப் பார்க்கும்போது தடுமாறாமல் பெயர் சொல்லி விசாரிப்பேன். அவர்களது இனிஷியலைக்கூட, படித்த வகுப்புப் பிரிவு, உட்கார்ந்த இடம் முதற்கொண்டு சொல்லுவேன். அது அவர்களுக்கு ஆச்சரியத்தையும் மேலும் மரியாதையையும் உண்டாக்கும். வருகைப் பதிவு எடுக்கும்போதும் குனிந்தபடியே இராமல் பத்து பெயருக்கு ஒரு தடவை பார்த்துக் கொண்டு
தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கிற மாதிரி பார்க்காமலே அழைப்பேன். இதெல்லாம் இளம் வயதில் மாணவர்க்கு பெரிய பிரமிப்பை ஏற்படுத்துபவை. ஆசிரியரிடம் ஒரு ஈடுபாட்டை
-யும் பிரமிப்பையும் ஏற்படுத்துபவை. ஆசிரி¢யர் தன்னை விட எல்லா வ்¢தத்திலும் பெரியவர்தான் என்று மாணவரிடையே ஒரு பிரமிப்பை ஏற்படுத்தினால் தான் நமது போதனையில் அவர்களுக்குக் கவனமும் பிடிப்பும் ஏற்படும் என்பது என் அனுபவம்.

அதோடு என் 'நல்லொழுக்கக் கல்வி' (Moral education) வகுப்பில் மற்றவர்களைப் போல பாடம் நடத்தவோ, 'ஏதாவது படிங்க' என்றோ விட்டு விடுவதில்லை. பெரிய வகுப்புகளில், நான் படித்து ரசித்த எழுத்தாளர்களையும் அவர்களது கதைகளையும் கவிதைகளையும் சொல்லி இலக்கிய ஈடுபாட்டை ஏற்படுத்தினேன். தமிழாசிரியர்கள் செய்யவேண்டியதை - அவர்கள் அக்கறை காட்டாததை - நான் செய்தேன். பாரதியும், பாரதிதாசனும், கவிமணியும், கல்கியும்,
புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும், சுந்தர ராமசாமியும் என்னால் அறிமுகப்படுத்த பட்டார்கள்.
இது பெரிய ஆர்வத்தை மாணவரிடையே ஏற்படுத்தியது. என் வகுப்பு இல்லை என்றாலும் மற்ற
வகுப்புகளில் யாராவது ஆசிரியர் வரவில்லை என்றால் எனக்கு ஓய்வாக இருந்தால் அந்த வகுப்பு மாணவர்கள் என்னை வந்து அழைத்துப்போய் இலக்கியம் பேசச் சொல்லுவார்கள். அப்படிக் கேட்டவர்களில் பலர் என் தாக்கத்தால் கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் பரிணமித்தார்கள். அவர்களில் குறிப்பிடத்த தக்க இருவர் கவிஞர் பழமலய்யும் கவிஞர் கலபனா
தாசனும் ஆவர்.

நான் வகுப்பாசிரியராக இருந்த ஒரு வகுப்பில் வெள்ளிக்கிழமை கடைசி பாடவேளை
நல்லொழுக்கக் கல்வி. அந்த வகுப்பில் நான் ஆண்டு முழுதும் கல்கியின் 'சிவகாமி சபதத்தை'
முக்கால் மணி நேரம் சுவாரஸ்யமாய்ச் சொன்னேன். மணி அடிப்பதற்குச் சரியாக, ஒரு சஸ்பென்ஸில் முடிகிறமாதிரி பார்த்துக் கொள்வேன். மனி அடித்ததும் 'மீதி அடுத்த வாரம்' என்று எழுந்து விடுவேன். 'சார் சார்! இன்னும் கொஞ்சம்" என்று பெண்கள் கெஞ்சுவார்கள்.
அந்த வகுப்பில் பாதிக்குமேல் அக்ரஹாரத்துப் பெண் குழந்தைகள். அவர்கள் வெள்ளிகிழமை கடைசிப் பாட வேளை என்றால் உயிரை விடுவார்கள். இப்படி நான் கணித ஆசிரியராக மட்டு மின்றி கதாசிரியராகவும் மாணவரிடையே புகழ் பெற்றேன். அதை இன்றளவும் மறக்காத மாணவிகளை இப்போதும் சந்திக்கிறேன்.

ஒரு தடவை, நான் அக்ரஹாரத்தில் வசித்த ஒரு வழக்கறிஞரை ஒரு வேலையாகப் பார்க்கச் சென்றேன். அவரது மகன் என்னோடு கல்லூரியில் படித்தவன். அதனால் உரிமையோடு என்னை ஒருமையில் அழைத்துப் பேசுவார். அவரது மகள்கள் இருவர் என் வகுப்பில் படித்தார்கள். நான் போனதும் அவர், "வாப்பா சபாநாய்க்கம்! ஆமா, அப்புறம் அந்த நாகநந்தி என்னானான்?'' என்றார். எனக்குப் புரியவில்லை. 'அதாம்பா! நீ என்னவோ வெள்ளி¢க் கிழம அன்னிக்கு கல்கியோட சிவகாமி சபதம் கதை சொலிண்டு வரயாம். எங்க அக்ரஹாரமே அன்னிக்கு சாய்ங்காலம் 'எப்படா பசங்க ஸ்கூல்லேர்ந்து வரும்'னு காத்திண்டிருக்கு!" என்றார். பிறகு கேட்டுத் தெரிந்து கொண்டேன் - என் மாணவிகள் என்னிடம் கதை கேட்டுவிட்டு வந்து அப்படியே அடிமாற்றாமல் அவர்கள் அம்மாக்களிடம் வந்து பிளேட் வைத்திருக்கிறார்கள் என்று.

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

Tuesday, May 25, 2004

நான் ரசித்த வருணனைகள்-உவமைகள் - 22

ஜெயகாந்தன் படைப்புகளிலிருந்து:

1. மனிதனே ரொம்பப் பழமையான உலோகம் தான். காலம்தான் அவனைப் புதிது புதிதாக
வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்ப்பந்தத்துக்கு, முடிந்தவர்கள் வளைகிறார்கள். வளைய
முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள். வளைந்தாலும் சரி உடைந்தாலும் சரி,
காலம் புதிது புதிதாய் மனிதனை வார்த்துக்கொண்டே செல்கிறது.
- 'புதிய வார்ப்புகள்' கதையில்.

2. 'பால்ய விவாகத்தை கொடுமையென்று தடை செய்ய ஒரு சாரதா சட்டம் வந்ததே, இந்தப்
பாலிய சந்நியாசம் என்னும் கொடுமையைத் தடுக்க ஒரு சட்டம் இல்லையா?' என்று
அந்தத் தாயின் உள்ளம் பொறுமியது.
- கழுத்தில் விழுந்த மாலை' என்ற நாவலில்.

3. நல்ல நிலா வெளிச்சம் அந்தக் காதலர்களுக்கு இன்ப மளிக்க வில்லை. இடைஞ்சலாக
இருந்தது. (நடைபாதைவாசிகள் பற்றி)
- 'தாம்பத்யம்'.

4. அவர்கள் வாழ்வு என்னதான் அமைதியாக, ஆனந்தமாக இருப்பதுபோல் எல்லா வகையிலும்
தோன்றினாலும், மேலே சலசலத்தோடுவதுபோல் தோன்றும் ஆழநீர்ப் பரப்பின் அடிமட்டத்தில்
பாறைகளைப் பிளந்து மண்ணை அறுத்துசெல்லும் வேகம் இருக்குமே, அதுபோல ஒரு
சோகம், ஒரு குறை, ஒரு கறை, ஒரு கனம் வெகு நாட்களாகவே இருக்கிறது. கனம் என்ற
உணர்ச்சியே அற்றுப் போய்,மனம் வெகு நாட்களாக அதைத் தாங்கி மரத்துப் போய்விட்டது.
ஆம்; அவர்களுக்குச் சந்ததி இல்லை.
- 'கைவிலங்கு' நாவலில்.

5. கண்களின் முன்னே பேய் நிழல்போல் கரிய இருள் திரை ஒன்று நகர்ந்தது......மண்டை சிதறி
யது போல் கண்கள் குருடானது போல், உலகமே தலைகீழாய் உருள்வதுபோல், என்
தேகாந்திரமும் பற்றி எரிவதுபோல், செந்நெருப்பாய்க் காய்ச்சிய உலோகக் கம்பியைக்
கண்களில் ஆழச் செருகியதுபோல்.....ஆ! அந்தக் காட்சி !..... ஐயோ சொல்லக் கொதிக்
கிறதே.........
- 'சாளரம்' கதையில்.

6. கால ஓட்டத்தில் ஒரு நாகரீகத்தின் வாழ்க்கையே பொய்யாய், கனவாய், பழங்கதையாய்
மெல்லப் போயிற்றோ என்று எண்ணும்படியாகவும், இறந்த காலத்தின் எலும்புக்கூடு
போலவும் சங்கராபுரம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அங்கும் நாஸ்திகம்
என்னும் நிர்மூடவாதம் நாரீகமாய்க் கவிந்திருக்கிறது. கோயிலுக்கு முன்னாலுள்ள
மைதானத்தில் கால மழையில் கரைந்துபோகிற ஓர் சிலையை எழுப்பி அதன் கீழ்
'கடவுளை நம்புகிறவன் முட்டாள்' என்றும், அதுமாதிரியான இன்னும் ஏதோதோ மொழி
களையும் கல்லில் செதுக்கி வைத்திருக்கிறது.ஊர் எத்தனை வகைப்பட்டுப் பகைகொண்டு
பிரிந்து மோதிக் கொண்டிருக்கிறது என்பதற் கடையாளமாய்ப் பல கம்பங்களில் பல
கொடிகள் அங்கு பறந்து கொண்டிருக்கின்றன. அக்ரகாரம் முழுதும் அநேகமாய்க் குட்டிச்
சுவர். இன்னும் கூட உயிர்ப்போடு விளங்குவது சிவன் கோயில் அர்ச்சகர் அப்பைய
குருக்கள் வீடு ஒன்றுதான். அவருக்குப் புத்திர பாக்கியம் இல்லாதது சிவன் செய்த பாக்கியம்.
- 'ஜய ஜய சங்கர' நாவலில்.

7. சங்கராபரணம் என்கிற இந்த ஆறு, அந்தக் காலத்தில் ஒரு ஜீவநதியாக ஓடிக்கொண்டிருந்
ததே. ஒரு நாகரீகத்தின் உயிரோட்டம் மாதிரி இந்த நதியில் எப்போதும் நீரோட்டம்
இருந்ததே. கோடைக்காலத்தில் கூட அகன்ற மார்பில் கிடக்கும் யக்ஞோபவீதம் மாதிரி
பளிங்கு போல் தண்ணீர் சலசலத்து ஒரு ஓரத்தில் ஓடிக்கொண்டிருந்ததே!...... அதெல்லாம்
அப்போது...... இதோ, கண்முன்னே அந்த ஜீவநதி வெப்பம் மிகுந்து வரண்ட சுடுமணல்
பிரதேசமாகிக் கானல் அலைகள் பறந்து கொண்டிருக்கின்றனவே......
'மஹா யக்ஞம்' நாவலில்.

8. ந்¢னைத்தால்தான் நினைவா? நினைக்காதபோது நினைவுகள் எங்கு இருக்கின்றன?....நினைவு
ஏன் பிறக்கிறது, எப்படிப் பிறக்கிறது.....நினைவு!....அப்படியென்றால்?.....நினைப்பதெல்லாம்
நடந்தவைதானா? நடக்காதனவற்றை நினைப்பதில்லையா? நினைப்பு என்பது முழுக்கவும்
மெய்யா? பொய்யை, ஆசைகளை, அர்த்தமற்ற கற்பனைகளை, அசட்டுக் கற்பனைகளை,
நினைத்து நினைத்து நினைவு என்ற நினைப்பிலேயே நிசமாவதில்லையா?
- 'பிணக்கு' கதையில்.

9. ரிக்ஷா அவனுக்குச் சொந்தம்.... அவன் ரிக்ஷாவுக்குச் சொந்தம். அந்த லொட லொட்டை
வண்டியை வேறு எவன் சீந்துவான்? கிழவனுக்கு ஜீவனம் அதுதான் என்று சொன்னால்
போதுமா, ஜீவனே அதுதான்!
- 'பற்றுக்கோல்' கதையில்.

10.புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்பொழுது மழையில்
நனைந்து ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து
நீலம் பாரித்துப் போய் , பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக்கொண்டு
சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில் அப்படியே
கையில் தூக்கிக் கொண்டு போய்விடலாம் போலக்கூடத் தோன்றும்.

- 'அக்கினிப்பிரவேசம்' கதையில்.
- தொடர்வேன்.

- அடுத்து மௌனி யின் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

V.Sabanayagam

Friday, May 21, 2004

நினைவுத்தடங்கள் - (17)

நான் கணித ஆசிரியராகப் பணியேற்றபோது அப் பள்ளியில் மேல் வகுப்புகளில் 13 பிரிவுகள் இருந்தும் ஒரு கணித ஆசிரியர் கூட இல்லை. கணிதம் படித்தவர்கள் ஆசிரியத் தொழிலை அவ்வளவாக விரும்பி ஏற்காத நிலை அப்போது இருந்ததால் கணித ஆசிரியருக்குப் பஞ்சம். கணிதத்தில் திறமை மிகுந்த இடைந்¢லை ஆசிரியர்கள்தான் தற்காலிகமாக அவ் வகுப்புகளுக்குப் பாடம் எடுத்தார்கள். ஆனால் அவர்களால் 'காம்போசிட் மாத்ஸ்' என்கிற 'அல்ஜீப்ரா & ஜியோமிதி' போதிக்க முடியவில்லை. எனவே பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்க்கு அந்த வாய்ப்புக்கு வழி இல்லாதிருந்தது. இந்த நிலையில்- 4,5 ஆண்டுகளுக்குப் பிறகு கணித ஆசிரியராக நான் அங்கே நியமிக்கபட்டதும் பெற்றொருக்கும் மாணவர்க்கும் பெருத்த மகிழ்ச்சி. அதனாலும் எனக்கு ஒரு மரியாதை ஏற்பட்டிருந்தது.

என்னுடன்- அண்ணாமலையில் இண்டர் முதல் ஆசிரியப் பயிற்சி வரை உடன் படித்த- என் நெருங்கிய நண்பன் ஒருவனும் கணித ஆசிரியனாக அப் பள்ளியில் நியமனம் ஆனான். அவன் என்னைப்போல இறுக்கமாக இல்லாமல் மாணவர்களிடம், அணுக லகுவாக இருந்தான். அதோடு அவன் தி.மு.கவின் தீவிர விசுவாசி. அப்போது (1957) தி.மு.க முதல் தடவையாக தேர்தலில் இறங்கி 15 இடங்களில் வென்றிருந்தது. அது இளைஞரிடம் ஒரு எழுச்சியை உண்டாக்கி இருந்தது. என் நண்பன் தன் வகுப்புகளில் தன் கட்சி விசுவாசத்தை அடிக்கடி ஏதாவது ஒரு வகையில் காட்டுவான். அதனால் மாணவர்களிடம் அவனுக்கும் வரவேற்பிருந்தது. முக்கோணத்தின் முனைகளுக்கு நான் A, B, C என்று பெயர் கொடுத்தால் அவன் அ, ஆ, இ என்று பெயர் கொடுப்பான். 'காலமும் தூரமும்' பாடத்தில் 'A என்கிற நிலையத்திலிருந்து B என்கிற நிலையத்தை நோக்கி ஒரு புகை வண்டி மணிக்ககு 50 மைல் வேகத்தில் செல்கிறது' என்று நான் சொன்னால், அவன் 'அ என்கிற நிலையத்தைவிட்டு ஆ என்கிற நிலையத்தை நோக்கி.......' என்று சொல்லுவான். 'அதாவது அண்ணா என்கிற நிலையத்தை விட்டு ஆசைதம்பி என்கிற நிலயத்தை நோக்கி.....' என்று விளக்கம் சொல்வான். மாணவர்களிடமிருந்து 'ஆகாகாரம்' எழும். எங்கள் தலைமை ஆசிரியர் மிக நல்லவர். அபேதவாதி. அவர் இதையெல்லாம் கண்டு கொள்ளமாட்டார். அவன் நல்ல திறமையான ஆசிரியர் என்பதால் இதில் தலையிடமாட்டார். அவன் என்னைப் போல கோட் சூட்டில் வரவில்லை என்றாலும் பளிச் சென்ற வெள்ளை பேன்ட் சட்டையில் எப்போதும் இருப்பான். அந்த எளிமைக்கும் மாணவர்கள் மதிப்புக் கொடுத்தார்கள். நாங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கி போல இணைந்து செயல்பட்டோம். நாங்கள் வந்த பிறகு தான் மாணவர்களுக்கு கணக்குப் பாடம் என்றால் இருந்த மிரட்சி நீங்கியது.

நான் கணித பாடம் எவ்வளவு சுவாரஸ்யமானது- அது எப்படி மற்ற பாடங்களுக்கு சாணைக்கல் போல கூர்தீட்டிக் கொள்ள உதவுகிறது என்றெல்லம் உற்சாகப்படுத்தி மாணவர்க்கு ஒரு சுவையை ஏற்படுத்தினேன். அதோடு நடத்திய பகுதி புரியவில்லை என்றால் எத்தனை முறை கேட்டாலும் அலுத்துக் கொள்ளாமல் அப் பகுதியை மீண்டும் நடத்துவேன். கொஞ்சம் புத்திசாலி மாணவர்களுக்கு திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைக் கேட்க அலுப்பு ஏற்பட்டு சந்தேகம் கேட்பவனை நோக்கி 'உச்'சுக் கொட்டுவா¡ர்கள். நான் 'உனக்கென்னடா, நான் அல்லவா நடத்துகிறேன். நொண்டி மாடு வந்துதான் கதவைச் சாத்தணும்'' என்று சொல்லி மீண்டும் நடத்துவேன். இது பின்தங்கிய மாணவர்க்கு என்னிடம் மிகுந்த நம்பிக்கையையும் மரியாதையையும் உண்டாக்கியது. மேலும் நான் வகுப்புக்குச் செல்லும் போது சம்மந்தப்பட்ட பாடத்தின் பாடநூல், சாக்கட்டி, டஸ்டர் எல்லாம் கையோடு கொண்டு போவேன். மற்றவர்கள் போல மாணவர்களிடம் பாட நூலை வாங்குவதோ, பாடம் நடக்கையில் மாணவர்களை அனுப்பி சாக்கட்டி எடுத்து வரவோ செய்வதில்லை. மாணவர்களை விட்டு கரும்பலகையை அழிக்கச் சொல்வதுமில்லை. மானிட்டர் இதெல்லம் செய்வான் என்றாலும் நான் அதைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.

சமயத்தில் அசம்பாவிதமாகவும் நேர்வதுண்டு. என் நண்பன் கையை வீசிகொண்டுதான் வகுப்புக்குப் போவான். மானிட்டர்தான் சாக்கட்டி தருவது, கரும்பலகையை அழிப்பது எல்லாம். ஒரு தடவை மானிட்டரிடம் அவன் சாக்கட்டிக் கேட்டபோது- மானிட்டர் கொஞ்சம் வயதான பையன், ஆசிரியரைப் போலவே இருப்பான்- சட்டைப் பையில் கைவிட்டு எடுத்து நீட்டினான். என் நண்பன் பார்க்காமல் வாங்கி எழுத முயன்ற போது மாணவர்கள் சிரித்தார்கள். என் நண்பனுக்குச் சங்கடமாகிவிட்டது. ஏனென்றால் மானிட்டர் நீட்டியது ஒரு முழு சிகரெட்! 'சீச்சீ! போடா வெளியே!' என்று மட்டும்தான் என் நண்பனால் சொல்லமுடிந்தது. அதற்கு மேல் கோபிக்க அவனுக்கு முடியவில்லை. ஏனென்றால் மானிட்டர் இவனால் வளர்க்கப்படும் தீவிர தி.மு.க தொண்டன். நான் அப்படி மானிட்டரையோ மற்ற மாணவர்களையோ பயன்படுத்தாமல் முன்ஜாக்கிரதையாய் இருந்ததும் மாணவர்களிடம் அச்சம் கலந்த மரியாதையை உண்டாக்கியது. அதோடு நான் என் ஜியோமிதி நிரூபணங்களுக்கு படம் வரைய பல வண்ணச் சாக்கட்டிகளைப் பயன்படுத்தி அச்சுப் போல எழுதிக் கவர்ச்சிகரமாய்ப் பாடம் நடத்துவேன். இதுவும் ஒரு கூடுதல் கவர்ச்சி. இதனால் என் கணித வகுப்பு எப்போது வரும் என்று மாணவர்கள் ஆர்வமாய்க் காத்திருப்பார்கள்.

முதல் ஆண்டில் பயம் காரணமாய் காம்போசிட் கணிதத்தில் எட்டு பேரே சேர்ந்தார்கள். மறு ஆண்டில் பயம் தெளிந்து ஒரு முழு வகுப்புக்கான 48 மாணவர்கள் என உயர்ந்தது. என் மாணவர்கள் யாரும் கணிதப் பாடத்தில் தோற்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். நிறைய நூற்றுக்கு நூறு வாங்குவதற்குப் போட்டி உண்டாகி சாதிக்கவும் செய்தார்கள். அதனால் பொறியியல் படிப்பில் என் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து இன்று வாழ்வில் நல்ல உயர்ந்த நிலையில் இருப்பதோடு அவர்கள் பொறியாளர் ஆனதற்கு நான் தான் காரணம் என்று விசுவாசத்தோடு குறிப்பிடுகிறார்கள். அதைக் கேட்க பூரிப்பாக இருக்கிறது. அப்போது படித்த மாணவர்கள் பலர் இப்போது 60 வயதை நெருங்கி, பேரன் பேர்த்தி எடுத்தவர்கள். இருந்தாலும் இன்றும் சந்திக்கும் போது அன்றைய அதே பக்தி மரியாதையுடன் இருப்பது புனிதமான ஆசிரியத் தொழிலை நான் தேர்வு செய்தது பற்றி நிறைவை ஏற்படுத்துகிறது.

ஆறு மாதத்துக்கு முன் ஒரு சிலிர்ப்பான சம்பவம். 1963ல் என்னிடம் கணிதம் பயின்ற ஒரு மாணவன்- தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாக இருந்தும் நான் பாரபட்சமற்று உற்சாகப்படுத்தி கணிதத்தில் வெற்றி பெறச் செய்ததால்- இன்று நெய்வேலியில் எக்சிக்யூட்டிவ் எஞ்சினீயராகி ஓய்வு பெறும் நிலையில் தன் முதல் மகனுக்கு என் தலைமையில் திருமணம் நடத்த விரும்பி என்னையும் என் மனைவியையும் கார் அனுப்பி அழைத்துச் சென்றார். என் கையால் மங்கலநாணை எடுத்துத்தரச் செய்து பூட்டச் செய்ததுடன் தம்பதி சமேதராய் தானும் தன் மகனும் எங்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது எனக்குச் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. வேறு எந்தத் தொழிலில் இந்த மகத்தான மரியாதை கிட்டும்? இன்று நான் வசிக்கிற இந்த நகரில் இருக்கும் வி.ஐ.பி-களில் 90 விழுக்காடு என் மாணவர்கள் என்று சொல்வதில் எனக்கு மாளாத பெருமை!

(- தொடர்வேன்...)

Wednesday, May 19, 2004

எனது களஞ்சியத்திலிருந்து: 1

யாப்பு வகைகளில் வெண்பா ஒரு எளிய இனிய வெளிப்பாட்டு வகையாகும். எழுதி எழுதி மெருகேறிய கையானால்- நம் ஹரிகிருஷ்ணன் போல- வெண்பா படிக்கச் சுகமக இருக்கும். வெண்பா இலக்கணம் தெரிந்தால் மட்டும் போதாது. இறுக்கமிலாமல் லகுவாக- தி.ஜானகிராமன் கதை போல-கி.ராஜநாராயணன் கதை போல -படிக்கும் சுமை தெரியாமல் ரஸமாகச் சொல்ல நல்ல பயிற்சியும் கற்பனையும் வேண்டும். வெண்பாவில் சாதனை புரிந்தவர்கள் அனந்தம். 'வெண்பாவில் புகழேந்தி' என்று சிறப்பிக்கப்பட்ட புகழேந்தி ஒரு காவியத்தையே -'நளவெண்பா' - இயற்றிப் புகழ் பெற்றவர். வெண்பா எழுத விரும்புவோர் அவசியம் படிக்கவேண்டிய வேத நூல் 'நளவெண்பா'. அதை, முழுதும் படித்து முடிக்கு முன்னரே வெண்பா எழுதக் கை துறுதுறுக்கும். அதன் கற்பனை அழகும் கலை நேர்த்தியும் ரஸன இல்லாதவரையும்
கிறங்கவைகும். கவிமணியின் வெண்பாக்களும் அற்புதமானவை. அவசியம் படித்து மகிழ வேண்டியவை. எல்லோரும் இளமையில் படித்த ஔவையாரின் மூதுரை, நல்வழி மற்றும் நன்னெறி போன்றவற்றை இப்போது படித்தால் வெண்பா பயிற்சிக்கு மிகவும் பயன் கிடைக்கும்.

வெண்பாவில் காவியம் மட்டுமல்ல - சமத்காரமாய் பல்வித சோதனைகளை காளமேகம் போன்ற முன்னோடிகள் செய்து பார்த்திருக்கிறார்கள். சிலேடை, புதிர் எனப் பலவகை. திருக்குறளை கடைசி அடிகளாகக் கொண்டு திருக்குறள் வெண்பா - ச்¢வ சிவ வெண்பா, குமரேச வெண்பா போன்றவை எழுதப் பட்டன. இரண்டாம் அடியில் கடைசி தனிச்சீர் 'சிவ சிவா' என்றோ 'குமரேசா' என்றோ இவற்றில்
வரும். ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதச் செய்வது ஒரு வகை 'கவித்திறம்'காட்டல். கவியரசு கண்ணதாசன் தன் 'தென்றல்' இதழில் இப்படி ஈற்றடி கொடுத்து ஏராளமான கவிஞர்களை உருவாக்கினார். இன்றும் சில மரபிலக்க்¢ய இதழ்களில் - கவிஞர் செ.வரதராசனார் நடத்தும் 'குறள் மணம்' இதழில் - குறள் பா ஒன்றின் ஈற்றடியைக் கொடுத்து வெண்பா எழுத வைக்கிறார்கள். இவ்வாறான ஈற்றடி சோதனையில் சிலிர்ப்பினைத் தரும் வெண்பாக்கள் உருவாகி உள்ளன.

பாரதி சிறுவனாய் இருக்கும்போது எட்டையபுரம் சமஸ்தானத்தில் அவரது கவித்திறனைச் சோதிக்க, காந்திமதிநாதன் என்ற மூத்த கவிஞர் 'பாரதி சின்னப் பயல்' என்று ஈற்றடி கொடுத்து மூக்குடைபட்ட வரலாறு அனைவரும் அறிந்ததே. கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியன் என்ற கவிஞரிடம் 'பஞ்சாங்கம் பார்க்கப்படும்' என்ற ஈற்றடி கொடுத்துப் பாடச் சொன்னார்கள். அதற்கு அவர் உடனே சொன்ன வெண்பா இது:

"வான்மதியும் கான்மானும்
வன்முயலும் பாதலத்தோர்
கோன்குலமும் தீயும் ஒன்றில்
கூடுமோ? - ஏன் கூடா
நஞ்சாங்கமரர் உய்ய
நல்லமுதாக் கொண்ட பரன்
பஞ்சாங்கம் பார்க்கப் படும்.

நிலவு, மான், முயல், தீ,பாம்பு என்கிற இந்த ஐந்தினையும் ஒரே இடத்தில் பார்க்கக் கூடுமோ? ஏன் கூடாது - நடராசப் பெருமானின் ஐந்து அங்கங்களையும் (பஞ்ச அங்கம்) பார்த்தால் தெரியும் என்று சத்காரமாய்ப் பாடினார்.

செய்குதம்பிப் பாவலர் என்றொரு சதாவதானி இருந்தார். ஒரே நேரத்தில் நூறு அவதானங்களைச் செய்யும் ஆற்றல் பெற்றவர். அவரிடம் 'துருக்கனுக்கு ராமன் துணை' என்று ஈற்றடி கொடுத்துப் பாடச் சொன்னார்கள். அவர் முஸ்லிம். கேள்வியில் கொஞ்சம் விஷமம் இருந்தது. மறந்தும் மாற்று மதத்தைத் தொழாதவர் பாவலர். சற்று யோசித்து ஒரு வெண்பாவினைச் சொன்னார். ஈற்றடிக்கு முன் அடியின் முடிவில் இப்படி அமைத்துப் பாடினார்:

.............................பரதன் லட்சுமணன் சத்
துருக்கனுக்கு ராமன் துணை.

அரசஞ்சண்முகனார் என்ற ஒரு பெரும் புலவருக்கும் இப்படி ஒரு இக்கட்டு ஏற்பட்டது. ஒரு விருந்தில் ராமானுஜம் என்பவர் பரிமாறினார். அவரை விளிப்பதாக வெண்பா எழுத வேண்டும். ஈற்றடி 'சம்தருக ராமானுஜம்' என்று முடிய வேண்டும். முன் அடியில் மற்றவர் கேட்ட பலகாரத்தை மறுமுறையு கேட்கலாகாது என்பது விதி. ஒவ்வொருவரும் பாட வேண்டும். பலரும் பாடினார்கள்.

''...................................அதி
சம் தருக இராமானுஜம்."

"..................................பாய
சம் தருக இராமானுஜம்" - இப்படி.

அரசஞ்சண்முகனாரது முறை வந்தது. பந்தியில் கடைசி ஆள் அவர். எல்லாப் [பண்டங்களும் கேட்டாகி விட்டது. யோசித்தார். பிறகு சொன்னார்:

"......................இன்னும் கொஞ்
சம் தருக இராமானுஜம்." என்று பாடி முடித்தார்.

-மேலும் சொல்வேன்.

Sunday, May 16, 2004

நான் ரசித்த வருணனைகள்- உவமைகள் - 21

கு.ப.ரா வின் படைப்புகளிலிருந்து:


1. ஒரு சிறுமியின் முக்காடிட்ட குற்றமுகம்; அதில் மை தீட்டிய இமைகள்¢டையே குறுகுறு
என்று சஞ்சலித்த இரண்டு குறை கூறும் விழிகள். ரோஜாக்களிடையே மல்லிகை போல்
கீழிதழை சற்றே கடித்து வெளியே தோன்றிய பல் வரிசை.இத்தகைய உருவம் மோகினி
போல் என் மனதில் குடி கொண்டு ஆட்டி வைத்ததே - அது அவளுடையது.
- 'நூர் உன்னிஸா' கதையில்.

2. என் ஹிருதயத்தின் நிலைமையை அவள் அறிவாளோ? முடியாது. பூவின் அவா மணமாக
வெளியேறி உணர்வைத் தாக்குகிறது. நினைவில் புறப்படும் அலை எப்படி அவள் ஹிருதயக்
கரையில் போய்ச் சேரமுடியும்? சாத்யமில்லை.....
- 'நூர் உன்னிஸா'.

3. மனத்தில், ஆழத்தில் பீதி அது பாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக்கொண்டே இருந்-
தது. மேலே மட்டும் சமாதானம். கொஞ்ச நேரத்துக்கு ஒரு தரம் அந்தத் திகில், மேல்
மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடிவயிறு
கலங்கும்;முகம் விகாரமடையும்.மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும்;
பயத்தை கீழே அமுக்கிவிடும்.
சுகமோ துக்கமோ, எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபா-
வத்தில் இதுவும் ஒரு அத்தாட்சியோ?
- 'விடியுமா?.

4. அந்தரங்கம் திறந்து கிடந்தது போன்ற அந்த அறையை அதற்குமேல் அவளால் பார்க்க
முடியவில்லை. ஏகாந்தம் ஆடையற்று நின்றது போன்ற அந்த ஒளி அவள் கண்களுக்குக்
கூச்சத்தைக் கொடுத்தது. சத்தப்படாமல் அறைக் கதவைச் சாத்திக் கொண்டாள்.
-'ஆற்றாமை'.

5. ''என்னடா இந்தப் பெண் இப்படிப் பேசுகிறாளே என்று நீங்கள் நினைப்பீர்கள்.நினைத்துக்
கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் எனக்கு ஒன்றுதான். புருஷனா? புருஷனிடம்
வந்த சில மாதங்கள் பெண் புதிதாக இருக்கிறாள். பிறகு புதிதான பானம் குடித்துத்
தீர்த்த பாத்திரம் போலத்தான் அவள்".
- 'சிறிது வெளிச்சம்'.

6. புருஷன் இறந்ததால் புஷ்பம் மட்டும் போகவில்லை; போகம் மட்டும் போகவிலை; சுய
மரியாதையே போயிற்று - அவளுடைய மானிடப் பெண்மையே போயிற்று. வெறும் மிருகம்-
அல்ல, மிருகத்திலும் கேடுகெட்ட அவமதிப்புக் கொண்ட ஜன்மம். அழகு போகவில்லை;
ஆனந்தம் போயிற்று; உயிர் போகவில்லை, உயிரின் சின்னம் போய்விட்டது.
- 'கனகாம்பரம்'.

7. பெண்ணின் உடலில் ஏதோ ஒரு மயக்க மருந்து இருக்கிறது. அது நெருங்கியதும்
ஏக காலத்தில் பஞ்சேந்திரியங்களும் மயங்கி விடுகின்றன.
- முற்றுப் பெறாத 'வேரோட்டம்' நாவலில்.

8. மனிதன் கஷ்டம் வருகிறபோதுதான் கடவுளை நினைக்கிறான். அது போலவே தேசங்க-
ளுக்கு நெருக்கடி ஏற்படும்போது லட்சியங்களைப் பற்றிய பேச்சுக்களும் நல்லெண்ணங்-
களும் ஏற்படுகின்றன.
- 'எதிர்கால உலகம்' கட்டுரையில்.

9. சிவ பெருமான் ...பார்வதியை நோக்கிக் கைகளை நீட்டினார். மெய்ம்மறந்த மகிழ்ச்சி-
யுடன் பார்வதி சிவபிரான் மார்பில் சாய்ந்தாள். மலைச்சாரலில், மரநிழலில்,மடுக்கரையில்-
எங்கும் ஆண்குரல் பெண்ணை அழைத்தது. - 'புனர்ஜென்மம்'.

10. மொழி பெயர்ப்பு என்பது எழுதுவதைக் காட்டிலும் அதிக தொல்லை கொடுப்பது. சீமை ஓட்டைப் பிரித்துவிட்டு கீற்று வைக்கும் வேலை போன்றது. ஒரு கட்டுக் கோப்பைக்
கலைத்து விட்டு மற்றொரு கட்டுக்கோப்பை ஏற்றுவதில் எப்போதுமே பூரண வெற்றி
கொள்ளமுடியாது. அடிக்குஅடி நிர்ப்பந்தம். எல்லைக் கோட்டைத் தாண்டினால் மொழி
பெயர்ப்பில்லை. வியாக்கியானம்! தாண்டாமல் வார்த்தைக்கு வார்த்தை போட்டால்
கருத்து விளங்குவதில்லை நடையும் சரளமாவதில்லை. இவைகளின் நடுவே நீந்திக்கொண்டு
போய்க் கரையேற வேண்டும்.

- ' இரட்டைமனிதன் ' நாவல் முன்னுரையில்.
- தொடர்வேன்.

- அடுத்து ஜெயகாந்தன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Wednesday, May 12, 2004

நினைவுத்தடங்கள் -16

1957ல் நான் ஆசிரியப் பணி ஏற்றபோது அப்போதைய ஜில்லா போர்டுகள் 'கழக உயர்நிலைப் பள்ளி' என்ற பெயரில் உயர்நிலைப் பள்ளிகளை நிர்வகித்து வந்தன. முன்பே நான் குறிப்பிட்டுள்ளபடி முதலில் நியமனம் ஆன பண்ருட்டி, என் ஊரிலிருந்து வெகு தொலைவு என்பதால் அருகில் இருந்த விருத்தாசலம் தான் வேண்டும் என்று கேட்டுப் பெற்றேன். அப்போது கணித ஆசிரியர்கள் கிடைக்காமையால் கேட்ட இடத்தில் நியமனம் கிடைத்தது.

முதல் நாள் அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆசிரியப் பணியின் முதல் நாள் அனுபவம் பற்றி தேர்வில் கூடக் கேட்பதுண்டு. எனது முதல் நாள் அனுபவம் சுவாரஸ்யமானது. ஆசிரியத் தொழிலில் உடைக்கு முக்கியப் பங்குண்டு. ஆசிரியர்கள் என்றால் பாவப்பட்ட ஜன்மங்கள், ' ஊருக்கு எளச்சவன் பள்ளிக் கூடத்து வாத்தி' என்று அவர்களது ஏழ்மையான உடை காரணமாகவும் இளக்காரமாக நினைத்த காலம் அது. எனவே 'பளிச்'சென்று உடை உடுத்த வேண்டும், மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிய வேண்டும் என்பதில் நான் அதிக கவனம் காட்டினேன். தலைமை ஆசிரியர்கள் மட்டும் வேட்டி கட்டி திறந்த கோட்டுடன் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகத் தெரிவார்கள். நான் முதல் நாளே கோட்டு, 'டை'யுடன் வகுப்புக்குச் சென்றேன். ஆசிரியர்களை அந்த உடையில் பார்த்திராத அந்தப் பள்ளி மாணவர்களின் புருவங்கள் உயர்ந்தன. ஒரு உற்சாகம் அவர்களிடையே எழுந்ததைக் கண்டேன். ஆனால் சக ஆசிரியர்களிடம் அது ஏதோ தகாத செயல் போல கருதப்பட்டது. வகுப்பில் நுழைந்ததும் 'வணக்கம் அய்ய்ய்ய்...யா!' என்ற கூச்சலுடன் மாணவர்கள் எழுந்து நின்றார்கள். "உஸ்ஸ்....! இதென்னக் கூச்சல்!. எனக்குக் கூச்சல் பிடிக்காது. மௌனமாக எழுந்து கை கூப்பினால் போதும்!" என்று கண்டித்தேன். அது அவர்கள் புது ஆசிரியரிடமிருந்து எதிர்பார்க்காதது. பலரது முகங்களில் மிரட்சி தெரிந்தது. என் பெயர், நான் எடுக்கும் பாடம் பற்றித் தெரிவித்துவிட்டுப் பாடத்தைத் தொடங்கினேன்.

மூன்றாவது வரிசையிலிருந்து ஒரு மாணவன் எழுந்து "உங்களைப் பற்ற்¢ சொல்லுங்கள் சார்!" என்றான். "உட்கார்! என்னைப் பற்றி எதற்கு உனக்குத் தெரிய வேண்டும்? நான் நடத்தும் பாடத்தைப் பற்றி மட்டும் கேள்!" என்று அவனை அடக்கினேன். அவன் ஏன் அப்படிக் கேட்டான் என்பதை பிறகுதான் சக ஆசிரியர்களிடமிருந்து அறிந்து கொண்டேன். சில புதிய ஆசிரியர்கள் அப்படிக் கேட்கப்பட்டதும், அதைக் கௌரவப் பிரச்சினை போல எண்ணி, தங்களைப் பற்றி மாணவர்களிடயே மதிப்பாக இருக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் "எனக்குக் கிராமத்தில் பத்துக் காணி நஞ்சையும், அஞ்சு காணி புஞ்சையும் அதில் நாலு மோட்டரும் ஓடுது. எனக்கு இந்த வேலைக்கு வரணும்னு அவசியம் இல்லே. நான் I.A.S எழுதி கலெக்டர் ஆகணும். அதுவரைக்கும் சும்மா இருப்பானேன்னு தான் இதுக்கு வந்தேன். சீக்கிரமே போயிடுவேன்" என்று ஏதோ ஆசிரியர் தொழிலுக்கு வந்தது கேவலம் போலச் சொல்வார்கள்.

அவர்களுக்கே தன் தொழிலில் மரியாதை இல்லாத போது மாணவர்களுக்கு எப்படி ஆசிரியத் தொழிலின் மீது மரியாதை ஏற்படும்? அப்படிச் சொன்னதும் அடுத்த பையன் "உங்களுக்குக் கல்யாணமாயிடுச்சா சார்?" என்று அவரது சரித்திரம் முழுவதையும் கேட்க ஆரம்பித்து விடுவான். அப்புறம் அன்றைக்குப் பாடம் ஏது? மாணவர்களும் ஆசிரியரைத் தொட்டுப் பேசுகிற நெருக்கம் ஏற்பட்டு பயம் போய்விடும். எனவே நான் அதில் கவனமாக இருந்தேன்.

இன்னொருவன் எழுந்து புது ஆனந்த விகடன் இதழ் பக்கம் ஒன்றைக் காட்டி "இது நீங்க தானே சார்?" என்றான். இது பற்றி நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன். ஆனந்த விகடன் மாணவர் திட்டத்தின் கீழ் அன்று விகடனில் வெளிவந்த என் கதை என் புகைப் படத்துடன் வந்திருந்தது. சட்டென்று ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. புகழாசை கொஞ்சம் தலை காட்டியது. ஆகா என்று மகிழ்ந்து பரவசத்தை மாணவர்களிடம் உடனே காட்டினால் இடம் கொடுத்ததாக ஆகிவிடும் என்பதால் சுதாரித்துக் கொண்டு, "அதெல்லாம் வெளியிலே! உட்கார்!!" என்று அதட்டினேன். வகுப்பு 'கப் சிப்' ஆகி விட்டது. பாடத்தை ஆரம்பித்தேன். இது மாணவர்களிடையே ஒரு மதிப்பை ஏற்படுத்தியது.

வகுப்பு முடிந்து ஆசிரியர்களின் ஓய்வறைக்குச் சென்றபோது சக ஆசிரியர்கள் சிலரது கண்களில் என் உடை உறுத்தியிருக்க வேண்டும். தங்களுக்குள் கண்ஜாடை காட்டி உதட்டைச் சுழித்ததைப் பார்த்தேன். நானாக அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். "ஒகோ! புதுசா?'' என்று ஒருவர் இழுத்தார். "சார் டிரஸ்ஸைப் பாத்துச் சொல்றீரா?, இன்னிக்குத் தானே காப்புக் காட்டியிருக்கு? மொத நாளு கோட்டும் சூட்டுமா வர வேண்டியது தான். அப்புறம் டிகிரி வாங்கத் தச்சதை எப்பதான் போட்டுக்கறதாம்?" என்று அவர்களில் மூத்தவராகத் தென்பட்ட ஒருவர் நக்கல் செய்தார். அவரது பின்பாட்டுகள் போல ஓரிருவர் சிரித்தனர். கல்லூரி ராகிங் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் அதற்கெல்லாம் மிரண்டு விடவில்லை.

மறுநாள் ஆசிரியர்கள் அறைக்குச் சென்ற போது, "வாங்க ரிங்மாஸ்டர்!" என்று அட்டகாசமாய் வரவேற்றார் முதல் நாள் நக்கல் செய்த மூத்த ஆசிரியர். என் கோட்டும் சூட்டும் கருநீல வண்ணத்தில் இருந்ததால், 'ரிங் மாஸ்டர்' என்று அவர் அழைத்தார் என்பதைப் பிறகு அறிந்தேன். "என்ன சார் மொத நாள் அப்படித்தான் இருக்கும்னு சொன்னீங்க- இன்னிக்கும் அதே டிரஸ்லே தானே வந்திருக்காரு" என்று ஒருவர் சீண்டினார். "வெள்ளக்காரன் போய்ட்டா என்ன? அவனோட நாகரீகத்தையும் அவனோடவே அனுப்பிச்சுடணுமா?" என்று நமட்டுச் சிரிப்பை உதிர்த்தார் இன்னொருவர். "புது விளக்குமாறு கொஞ்ச நாளைக்குப் பளபளப்பாத்தான் இருக்கும்" என்றார் முதலில் தொடங்கிய மூத்த ஆசிரியர். நான் அலட்டிக் கொள்ளவில்லை. தினமும் இந்தக் கேலி தொடர்ந்தது. "கல்யாணம் ஆனா இந்த மேனியா போய்டும்" என்று அவர் ஜோசியம் சொன்னார். கல்யாணம் ஆனபிறகும் நான் அதே மாதிரி கோட் சூட்டில் வரவே,"கொழந்தை பிறந்தா சரியாகிவிடும்" என்றார். குழந்தை பிறந்தும் நான் மாறாதிருக்கவே அவருக்கு அலுத்துப் போய்விட்டது. "இந்த ஆசாமிகளைத் திருத்தவே முடியாது. பெரிய கலெக்டர்னு நினைப்பு!' என்று சொல்லி அத்துடன் விட்டுவிட்டார்.

ஆசிரியர்களுக்குத்தான் கேலியாக இருந்ததே தவிர மாணவர்களிடையே மதிப்பு, கூடவே செய்தது. பளிச்சென்று உடை உடுத்தி காலையில் அவர்களைச் சந்திக்கையில் அவர்களிடையே ஒரு புத்துணர்ச்சியும் பொலிவும் தென்படுவதைக் கண்டேன். பெற்றோர்களிடமும் என் உடை என்னை உயர்த்திக் காட்டியது. என்ன திறமை இருந்தாலும் பொலிவான தோற்றம் உண்டாக்கும் முதல் அபிப்பிராயம் நம் வெற்றிக்கு கணிசமாக உதவவே செய்கிறது என்று அனுபத்தில் கண்டேன். அதனால் என் பணி இறுதிக்காலம் வரை 36 ஆண்டுகள் விடாப் பிடியாக அதைப் பின்பற்றினேன். என் வெற்றிகரமான ஆசிரியப்பணிக்கு அதைச் சவாலாக ஏற்றுப் பெயர் வாங்கினேன். 'செட்டியார் முடுக்கா, சரக்கு முடுக்கா?' என்று பழமொழி சொல்வார்கள். செட்டியார் முடுக்காக இருந்து சரக்கு முடுக்காக இல்லாவிட்டால் மறுபடி கடைக்கு வரமாட்டார்கள்; சரக்கு முடுக்காக இருந்து செட்டியார் முடுக்காக இல்லாவிட்டாலும் வியாபாரம் அமோகமாக இராது. செட்டியாரும் முடுக்காக இருக்கவேண்டும்- சரக்கும் முடுக்காக இருக்கவேண்டும். அப்போதுதான் வியாபாரம் அமோகமாக இருக்கும். ஆசிரியர் தொழிலுக்கு இதுமிக அவசியம்.

-தொடர்வேன்...