Friday, May 21, 2004

நினைவுத்தடங்கள் - (17)

நான் கணித ஆசிரியராகப் பணியேற்றபோது அப் பள்ளியில் மேல் வகுப்புகளில் 13 பிரிவுகள் இருந்தும் ஒரு கணித ஆசிரியர் கூட இல்லை. கணிதம் படித்தவர்கள் ஆசிரியத் தொழிலை அவ்வளவாக விரும்பி ஏற்காத நிலை அப்போது இருந்ததால் கணித ஆசிரியருக்குப் பஞ்சம். கணிதத்தில் திறமை மிகுந்த இடைந்¢லை ஆசிரியர்கள்தான் தற்காலிகமாக அவ் வகுப்புகளுக்குப் பாடம் எடுத்தார்கள். ஆனால் அவர்களால் 'காம்போசிட் மாத்ஸ்' என்கிற 'அல்ஜீப்ரா & ஜியோமிதி' போதிக்க முடியவில்லை. எனவே பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்க்கு அந்த வாய்ப்புக்கு வழி இல்லாதிருந்தது. இந்த நிலையில்- 4,5 ஆண்டுகளுக்குப் பிறகு கணித ஆசிரியராக நான் அங்கே நியமிக்கபட்டதும் பெற்றொருக்கும் மாணவர்க்கும் பெருத்த மகிழ்ச்சி. அதனாலும் எனக்கு ஒரு மரியாதை ஏற்பட்டிருந்தது.

என்னுடன்- அண்ணாமலையில் இண்டர் முதல் ஆசிரியப் பயிற்சி வரை உடன் படித்த- என் நெருங்கிய நண்பன் ஒருவனும் கணித ஆசிரியனாக அப் பள்ளியில் நியமனம் ஆனான். அவன் என்னைப்போல இறுக்கமாக இல்லாமல் மாணவர்களிடம், அணுக லகுவாக இருந்தான். அதோடு அவன் தி.மு.கவின் தீவிர விசுவாசி. அப்போது (1957) தி.மு.க முதல் தடவையாக தேர்தலில் இறங்கி 15 இடங்களில் வென்றிருந்தது. அது இளைஞரிடம் ஒரு எழுச்சியை உண்டாக்கி இருந்தது. என் நண்பன் தன் வகுப்புகளில் தன் கட்சி விசுவாசத்தை அடிக்கடி ஏதாவது ஒரு வகையில் காட்டுவான். அதனால் மாணவர்களிடம் அவனுக்கும் வரவேற்பிருந்தது. முக்கோணத்தின் முனைகளுக்கு நான் A, B, C என்று பெயர் கொடுத்தால் அவன் அ, ஆ, இ என்று பெயர் கொடுப்பான். 'காலமும் தூரமும்' பாடத்தில் 'A என்கிற நிலையத்திலிருந்து B என்கிற நிலையத்தை நோக்கி ஒரு புகை வண்டி மணிக்ககு 50 மைல் வேகத்தில் செல்கிறது' என்று நான் சொன்னால், அவன் 'அ என்கிற நிலையத்தைவிட்டு ஆ என்கிற நிலையத்தை நோக்கி.......' என்று சொல்லுவான். 'அதாவது அண்ணா என்கிற நிலையத்தை விட்டு ஆசைதம்பி என்கிற நிலயத்தை நோக்கி.....' என்று விளக்கம் சொல்வான். மாணவர்களிடமிருந்து 'ஆகாகாரம்' எழும். எங்கள் தலைமை ஆசிரியர் மிக நல்லவர். அபேதவாதி. அவர் இதையெல்லாம் கண்டு கொள்ளமாட்டார். அவன் நல்ல திறமையான ஆசிரியர் என்பதால் இதில் தலையிடமாட்டார். அவன் என்னைப் போல கோட் சூட்டில் வரவில்லை என்றாலும் பளிச் சென்ற வெள்ளை பேன்ட் சட்டையில் எப்போதும் இருப்பான். அந்த எளிமைக்கும் மாணவர்கள் மதிப்புக் கொடுத்தார்கள். நாங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கி போல இணைந்து செயல்பட்டோம். நாங்கள் வந்த பிறகு தான் மாணவர்களுக்கு கணக்குப் பாடம் என்றால் இருந்த மிரட்சி நீங்கியது.

நான் கணித பாடம் எவ்வளவு சுவாரஸ்யமானது- அது எப்படி மற்ற பாடங்களுக்கு சாணைக்கல் போல கூர்தீட்டிக் கொள்ள உதவுகிறது என்றெல்லம் உற்சாகப்படுத்தி மாணவர்க்கு ஒரு சுவையை ஏற்படுத்தினேன். அதோடு நடத்திய பகுதி புரியவில்லை என்றால் எத்தனை முறை கேட்டாலும் அலுத்துக் கொள்ளாமல் அப் பகுதியை மீண்டும் நடத்துவேன். கொஞ்சம் புத்திசாலி மாணவர்களுக்கு திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைக் கேட்க அலுப்பு ஏற்பட்டு சந்தேகம் கேட்பவனை நோக்கி 'உச்'சுக் கொட்டுவா¡ர்கள். நான் 'உனக்கென்னடா, நான் அல்லவா நடத்துகிறேன். நொண்டி மாடு வந்துதான் கதவைச் சாத்தணும்'' என்று சொல்லி மீண்டும் நடத்துவேன். இது பின்தங்கிய மாணவர்க்கு என்னிடம் மிகுந்த நம்பிக்கையையும் மரியாதையையும் உண்டாக்கியது. மேலும் நான் வகுப்புக்குச் செல்லும் போது சம்மந்தப்பட்ட பாடத்தின் பாடநூல், சாக்கட்டி, டஸ்டர் எல்லாம் கையோடு கொண்டு போவேன். மற்றவர்கள் போல மாணவர்களிடம் பாட நூலை வாங்குவதோ, பாடம் நடக்கையில் மாணவர்களை அனுப்பி சாக்கட்டி எடுத்து வரவோ செய்வதில்லை. மாணவர்களை விட்டு கரும்பலகையை அழிக்கச் சொல்வதுமில்லை. மானிட்டர் இதெல்லம் செய்வான் என்றாலும் நான் அதைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.

சமயத்தில் அசம்பாவிதமாகவும் நேர்வதுண்டு. என் நண்பன் கையை வீசிகொண்டுதான் வகுப்புக்குப் போவான். மானிட்டர்தான் சாக்கட்டி தருவது, கரும்பலகையை அழிப்பது எல்லாம். ஒரு தடவை மானிட்டரிடம் அவன் சாக்கட்டிக் கேட்டபோது- மானிட்டர் கொஞ்சம் வயதான பையன், ஆசிரியரைப் போலவே இருப்பான்- சட்டைப் பையில் கைவிட்டு எடுத்து நீட்டினான். என் நண்பன் பார்க்காமல் வாங்கி எழுத முயன்ற போது மாணவர்கள் சிரித்தார்கள். என் நண்பனுக்குச் சங்கடமாகிவிட்டது. ஏனென்றால் மானிட்டர் நீட்டியது ஒரு முழு சிகரெட்! 'சீச்சீ! போடா வெளியே!' என்று மட்டும்தான் என் நண்பனால் சொல்லமுடிந்தது. அதற்கு மேல் கோபிக்க அவனுக்கு முடியவில்லை. ஏனென்றால் மானிட்டர் இவனால் வளர்க்கப்படும் தீவிர தி.மு.க தொண்டன். நான் அப்படி மானிட்டரையோ மற்ற மாணவர்களையோ பயன்படுத்தாமல் முன்ஜாக்கிரதையாய் இருந்ததும் மாணவர்களிடம் அச்சம் கலந்த மரியாதையை உண்டாக்கியது. அதோடு நான் என் ஜியோமிதி நிரூபணங்களுக்கு படம் வரைய பல வண்ணச் சாக்கட்டிகளைப் பயன்படுத்தி அச்சுப் போல எழுதிக் கவர்ச்சிகரமாய்ப் பாடம் நடத்துவேன். இதுவும் ஒரு கூடுதல் கவர்ச்சி. இதனால் என் கணித வகுப்பு எப்போது வரும் என்று மாணவர்கள் ஆர்வமாய்க் காத்திருப்பார்கள்.

முதல் ஆண்டில் பயம் காரணமாய் காம்போசிட் கணிதத்தில் எட்டு பேரே சேர்ந்தார்கள். மறு ஆண்டில் பயம் தெளிந்து ஒரு முழு வகுப்புக்கான 48 மாணவர்கள் என உயர்ந்தது. என் மாணவர்கள் யாரும் கணிதப் பாடத்தில் தோற்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். நிறைய நூற்றுக்கு நூறு வாங்குவதற்குப் போட்டி உண்டாகி சாதிக்கவும் செய்தார்கள். அதனால் பொறியியல் படிப்பில் என் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து இன்று வாழ்வில் நல்ல உயர்ந்த நிலையில் இருப்பதோடு அவர்கள் பொறியாளர் ஆனதற்கு நான் தான் காரணம் என்று விசுவாசத்தோடு குறிப்பிடுகிறார்கள். அதைக் கேட்க பூரிப்பாக இருக்கிறது. அப்போது படித்த மாணவர்கள் பலர் இப்போது 60 வயதை நெருங்கி, பேரன் பேர்த்தி எடுத்தவர்கள். இருந்தாலும் இன்றும் சந்திக்கும் போது அன்றைய அதே பக்தி மரியாதையுடன் இருப்பது புனிதமான ஆசிரியத் தொழிலை நான் தேர்வு செய்தது பற்றி நிறைவை ஏற்படுத்துகிறது.

ஆறு மாதத்துக்கு முன் ஒரு சிலிர்ப்பான சம்பவம். 1963ல் என்னிடம் கணிதம் பயின்ற ஒரு மாணவன்- தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாக இருந்தும் நான் பாரபட்சமற்று உற்சாகப்படுத்தி கணிதத்தில் வெற்றி பெறச் செய்ததால்- இன்று நெய்வேலியில் எக்சிக்யூட்டிவ் எஞ்சினீயராகி ஓய்வு பெறும் நிலையில் தன் முதல் மகனுக்கு என் தலைமையில் திருமணம் நடத்த விரும்பி என்னையும் என் மனைவியையும் கார் அனுப்பி அழைத்துச் சென்றார். என் கையால் மங்கலநாணை எடுத்துத்தரச் செய்து பூட்டச் செய்ததுடன் தம்பதி சமேதராய் தானும் தன் மகனும் எங்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது எனக்குச் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. வேறு எந்தத் தொழிலில் இந்த மகத்தான மரியாதை கிட்டும்? இன்று நான் வசிக்கிற இந்த நகரில் இருக்கும் வி.ஐ.பி-களில் 90 விழுக்காடு என் மாணவர்கள் என்று சொல்வதில் எனக்கு மாளாத பெருமை!

(- தொடர்வேன்...)

No comments: