Tuesday, May 25, 2004

நான் ரசித்த வருணனைகள்-உவமைகள் - 22

ஜெயகாந்தன் படைப்புகளிலிருந்து:

1. மனிதனே ரொம்பப் பழமையான உலோகம் தான். காலம்தான் அவனைப் புதிது புதிதாக
வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்ப்பந்தத்துக்கு, முடிந்தவர்கள் வளைகிறார்கள். வளைய
முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள். வளைந்தாலும் சரி உடைந்தாலும் சரி,
காலம் புதிது புதிதாய் மனிதனை வார்த்துக்கொண்டே செல்கிறது.
- 'புதிய வார்ப்புகள்' கதையில்.

2. 'பால்ய விவாகத்தை கொடுமையென்று தடை செய்ய ஒரு சாரதா சட்டம் வந்ததே, இந்தப்
பாலிய சந்நியாசம் என்னும் கொடுமையைத் தடுக்க ஒரு சட்டம் இல்லையா?' என்று
அந்தத் தாயின் உள்ளம் பொறுமியது.
- கழுத்தில் விழுந்த மாலை' என்ற நாவலில்.

3. நல்ல நிலா வெளிச்சம் அந்தக் காதலர்களுக்கு இன்ப மளிக்க வில்லை. இடைஞ்சலாக
இருந்தது. (நடைபாதைவாசிகள் பற்றி)
- 'தாம்பத்யம்'.

4. அவர்கள் வாழ்வு என்னதான் அமைதியாக, ஆனந்தமாக இருப்பதுபோல் எல்லா வகையிலும்
தோன்றினாலும், மேலே சலசலத்தோடுவதுபோல் தோன்றும் ஆழநீர்ப் பரப்பின் அடிமட்டத்தில்
பாறைகளைப் பிளந்து மண்ணை அறுத்துசெல்லும் வேகம் இருக்குமே, அதுபோல ஒரு
சோகம், ஒரு குறை, ஒரு கறை, ஒரு கனம் வெகு நாட்களாகவே இருக்கிறது. கனம் என்ற
உணர்ச்சியே அற்றுப் போய்,மனம் வெகு நாட்களாக அதைத் தாங்கி மரத்துப் போய்விட்டது.
ஆம்; அவர்களுக்குச் சந்ததி இல்லை.
- 'கைவிலங்கு' நாவலில்.

5. கண்களின் முன்னே பேய் நிழல்போல் கரிய இருள் திரை ஒன்று நகர்ந்தது......மண்டை சிதறி
யது போல் கண்கள் குருடானது போல், உலகமே தலைகீழாய் உருள்வதுபோல், என்
தேகாந்திரமும் பற்றி எரிவதுபோல், செந்நெருப்பாய்க் காய்ச்சிய உலோகக் கம்பியைக்
கண்களில் ஆழச் செருகியதுபோல்.....ஆ! அந்தக் காட்சி !..... ஐயோ சொல்லக் கொதிக்
கிறதே.........
- 'சாளரம்' கதையில்.

6. கால ஓட்டத்தில் ஒரு நாகரீகத்தின் வாழ்க்கையே பொய்யாய், கனவாய், பழங்கதையாய்
மெல்லப் போயிற்றோ என்று எண்ணும்படியாகவும், இறந்த காலத்தின் எலும்புக்கூடு
போலவும் சங்கராபுரம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அங்கும் நாஸ்திகம்
என்னும் நிர்மூடவாதம் நாரீகமாய்க் கவிந்திருக்கிறது. கோயிலுக்கு முன்னாலுள்ள
மைதானத்தில் கால மழையில் கரைந்துபோகிற ஓர் சிலையை எழுப்பி அதன் கீழ்
'கடவுளை நம்புகிறவன் முட்டாள்' என்றும், அதுமாதிரியான இன்னும் ஏதோதோ மொழி
களையும் கல்லில் செதுக்கி வைத்திருக்கிறது.ஊர் எத்தனை வகைப்பட்டுப் பகைகொண்டு
பிரிந்து மோதிக் கொண்டிருக்கிறது என்பதற் கடையாளமாய்ப் பல கம்பங்களில் பல
கொடிகள் அங்கு பறந்து கொண்டிருக்கின்றன. அக்ரகாரம் முழுதும் அநேகமாய்க் குட்டிச்
சுவர். இன்னும் கூட உயிர்ப்போடு விளங்குவது சிவன் கோயில் அர்ச்சகர் அப்பைய
குருக்கள் வீடு ஒன்றுதான். அவருக்குப் புத்திர பாக்கியம் இல்லாதது சிவன் செய்த பாக்கியம்.
- 'ஜய ஜய சங்கர' நாவலில்.

7. சங்கராபரணம் என்கிற இந்த ஆறு, அந்தக் காலத்தில் ஒரு ஜீவநதியாக ஓடிக்கொண்டிருந்
ததே. ஒரு நாகரீகத்தின் உயிரோட்டம் மாதிரி இந்த நதியில் எப்போதும் நீரோட்டம்
இருந்ததே. கோடைக்காலத்தில் கூட அகன்ற மார்பில் கிடக்கும் யக்ஞோபவீதம் மாதிரி
பளிங்கு போல் தண்ணீர் சலசலத்து ஒரு ஓரத்தில் ஓடிக்கொண்டிருந்ததே!...... அதெல்லாம்
அப்போது...... இதோ, கண்முன்னே அந்த ஜீவநதி வெப்பம் மிகுந்து வரண்ட சுடுமணல்
பிரதேசமாகிக் கானல் அலைகள் பறந்து கொண்டிருக்கின்றனவே......
'மஹா யக்ஞம்' நாவலில்.

8. ந்¢னைத்தால்தான் நினைவா? நினைக்காதபோது நினைவுகள் எங்கு இருக்கின்றன?....நினைவு
ஏன் பிறக்கிறது, எப்படிப் பிறக்கிறது.....நினைவு!....அப்படியென்றால்?.....நினைப்பதெல்லாம்
நடந்தவைதானா? நடக்காதனவற்றை நினைப்பதில்லையா? நினைப்பு என்பது முழுக்கவும்
மெய்யா? பொய்யை, ஆசைகளை, அர்த்தமற்ற கற்பனைகளை, அசட்டுக் கற்பனைகளை,
நினைத்து நினைத்து நினைவு என்ற நினைப்பிலேயே நிசமாவதில்லையா?
- 'பிணக்கு' கதையில்.

9. ரிக்ஷா அவனுக்குச் சொந்தம்.... அவன் ரிக்ஷாவுக்குச் சொந்தம். அந்த லொட லொட்டை
வண்டியை வேறு எவன் சீந்துவான்? கிழவனுக்கு ஜீவனம் அதுதான் என்று சொன்னால்
போதுமா, ஜீவனே அதுதான்!
- 'பற்றுக்கோல்' கதையில்.

10.புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்பொழுது மழையில்
நனைந்து ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து
நீலம் பாரித்துப் போய் , பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக்கொண்டு
சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில் அப்படியே
கையில் தூக்கிக் கொண்டு போய்விடலாம் போலக்கூடத் தோன்றும்.

- 'அக்கினிப்பிரவேசம்' கதையில்.
- தொடர்வேன்.

- அடுத்து மௌனி யின் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

V.Sabanayagam

No comments: