Wednesday, May 19, 2004

எனது களஞ்சியத்திலிருந்து: 1

யாப்பு வகைகளில் வெண்பா ஒரு எளிய இனிய வெளிப்பாட்டு வகையாகும். எழுதி எழுதி மெருகேறிய கையானால்- நம் ஹரிகிருஷ்ணன் போல- வெண்பா படிக்கச் சுகமக இருக்கும். வெண்பா இலக்கணம் தெரிந்தால் மட்டும் போதாது. இறுக்கமிலாமல் லகுவாக- தி.ஜானகிராமன் கதை போல-கி.ராஜநாராயணன் கதை போல -படிக்கும் சுமை தெரியாமல் ரஸமாகச் சொல்ல நல்ல பயிற்சியும் கற்பனையும் வேண்டும். வெண்பாவில் சாதனை புரிந்தவர்கள் அனந்தம். 'வெண்பாவில் புகழேந்தி' என்று சிறப்பிக்கப்பட்ட புகழேந்தி ஒரு காவியத்தையே -'நளவெண்பா' - இயற்றிப் புகழ் பெற்றவர். வெண்பா எழுத விரும்புவோர் அவசியம் படிக்கவேண்டிய வேத நூல் 'நளவெண்பா'. அதை, முழுதும் படித்து முடிக்கு முன்னரே வெண்பா எழுதக் கை துறுதுறுக்கும். அதன் கற்பனை அழகும் கலை நேர்த்தியும் ரஸன இல்லாதவரையும்
கிறங்கவைகும். கவிமணியின் வெண்பாக்களும் அற்புதமானவை. அவசியம் படித்து மகிழ வேண்டியவை. எல்லோரும் இளமையில் படித்த ஔவையாரின் மூதுரை, நல்வழி மற்றும் நன்னெறி போன்றவற்றை இப்போது படித்தால் வெண்பா பயிற்சிக்கு மிகவும் பயன் கிடைக்கும்.

வெண்பாவில் காவியம் மட்டுமல்ல - சமத்காரமாய் பல்வித சோதனைகளை காளமேகம் போன்ற முன்னோடிகள் செய்து பார்த்திருக்கிறார்கள். சிலேடை, புதிர் எனப் பலவகை. திருக்குறளை கடைசி அடிகளாகக் கொண்டு திருக்குறள் வெண்பா - ச்¢வ சிவ வெண்பா, குமரேச வெண்பா போன்றவை எழுதப் பட்டன. இரண்டாம் அடியில் கடைசி தனிச்சீர் 'சிவ சிவா' என்றோ 'குமரேசா' என்றோ இவற்றில்
வரும். ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதச் செய்வது ஒரு வகை 'கவித்திறம்'காட்டல். கவியரசு கண்ணதாசன் தன் 'தென்றல்' இதழில் இப்படி ஈற்றடி கொடுத்து ஏராளமான கவிஞர்களை உருவாக்கினார். இன்றும் சில மரபிலக்க்¢ய இதழ்களில் - கவிஞர் செ.வரதராசனார் நடத்தும் 'குறள் மணம்' இதழில் - குறள் பா ஒன்றின் ஈற்றடியைக் கொடுத்து வெண்பா எழுத வைக்கிறார்கள். இவ்வாறான ஈற்றடி சோதனையில் சிலிர்ப்பினைத் தரும் வெண்பாக்கள் உருவாகி உள்ளன.

பாரதி சிறுவனாய் இருக்கும்போது எட்டையபுரம் சமஸ்தானத்தில் அவரது கவித்திறனைச் சோதிக்க, காந்திமதிநாதன் என்ற மூத்த கவிஞர் 'பாரதி சின்னப் பயல்' என்று ஈற்றடி கொடுத்து மூக்குடைபட்ட வரலாறு அனைவரும் அறிந்ததே. கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியன் என்ற கவிஞரிடம் 'பஞ்சாங்கம் பார்க்கப்படும்' என்ற ஈற்றடி கொடுத்துப் பாடச் சொன்னார்கள். அதற்கு அவர் உடனே சொன்ன வெண்பா இது:

"வான்மதியும் கான்மானும்
வன்முயலும் பாதலத்தோர்
கோன்குலமும் தீயும் ஒன்றில்
கூடுமோ? - ஏன் கூடா
நஞ்சாங்கமரர் உய்ய
நல்லமுதாக் கொண்ட பரன்
பஞ்சாங்கம் பார்க்கப் படும்.

நிலவு, மான், முயல், தீ,பாம்பு என்கிற இந்த ஐந்தினையும் ஒரே இடத்தில் பார்க்கக் கூடுமோ? ஏன் கூடாது - நடராசப் பெருமானின் ஐந்து அங்கங்களையும் (பஞ்ச அங்கம்) பார்த்தால் தெரியும் என்று சத்காரமாய்ப் பாடினார்.

செய்குதம்பிப் பாவலர் என்றொரு சதாவதானி இருந்தார். ஒரே நேரத்தில் நூறு அவதானங்களைச் செய்யும் ஆற்றல் பெற்றவர். அவரிடம் 'துருக்கனுக்கு ராமன் துணை' என்று ஈற்றடி கொடுத்துப் பாடச் சொன்னார்கள். அவர் முஸ்லிம். கேள்வியில் கொஞ்சம் விஷமம் இருந்தது. மறந்தும் மாற்று மதத்தைத் தொழாதவர் பாவலர். சற்று யோசித்து ஒரு வெண்பாவினைச் சொன்னார். ஈற்றடிக்கு முன் அடியின் முடிவில் இப்படி அமைத்துப் பாடினார்:

.............................பரதன் லட்சுமணன் சத்
துருக்கனுக்கு ராமன் துணை.

அரசஞ்சண்முகனார் என்ற ஒரு பெரும் புலவருக்கும் இப்படி ஒரு இக்கட்டு ஏற்பட்டது. ஒரு விருந்தில் ராமானுஜம் என்பவர் பரிமாறினார். அவரை விளிப்பதாக வெண்பா எழுத வேண்டும். ஈற்றடி 'சம்தருக ராமானுஜம்' என்று முடிய வேண்டும். முன் அடியில் மற்றவர் கேட்ட பலகாரத்தை மறுமுறையு கேட்கலாகாது என்பது விதி. ஒவ்வொருவரும் பாட வேண்டும். பலரும் பாடினார்கள்.

''...................................அதி
சம் தருக இராமானுஜம்."

"..................................பாய
சம் தருக இராமானுஜம்" - இப்படி.

அரசஞ்சண்முகனாரது முறை வந்தது. பந்தியில் கடைசி ஆள் அவர். எல்லாப் [பண்டங்களும் கேட்டாகி விட்டது. யோசித்தார். பிறகு சொன்னார்:

"......................இன்னும் கொஞ்
சம் தருக இராமானுஜம்." என்று பாடி முடித்தார்.

-மேலும் சொல்வேன்.

No comments: