Wednesday, December 13, 2006

உவமைகள் வர்ணனைகள் - 47

நான் ரசித்த உவமைகள் வருணனைகள் - 47

க.சீ.சிவகுமார் படைப்புகளிலிருந்து:

1. வானில் கண்ணுக்குத் தெரியாத ஆலை இருப்பது போலச் சத்தம். உண்மையில் காற்று பொருட்களால் கிழிபடும் ஓசை அது. ஆடிக் காற்று ஆனியிலேயே தொடங்கி விட்டது. காற்று இல்லாதபோது பங்குனி போலக் கொளுத்தியது வெயில். பாளம் பாளமாய் வெட்டி உருவலாம் போலத் தெளிவான வெயில். நிமிடத்தில் வியர்வைச் சுரப்பிகள் கனன்றன. இன்றைக்கு மழை வருமா என்று யோசித்தான்.

- 'மேகங்கள் தீர்ப்பதில்லை' கதையில்.

2. ஊரின் மேலாக உலவித் திரியும் மேகங்கள் இரக்கமற்றவை.மேகம் பார்த்த பூமியின் பரிதவிப்பைப் பழித்துக் காட்டிய வண்ணம் ரூபம்மாறித் திரிபவை. வீட்டு நிலைகளைப் பெயர்த்தும், ஓடுகளைப் பிரித்தும் விற்றுவிட்டு பாத்திர பண்டத்தோடு வண்டியேற 'பெய்யா மழை' காரணமாய் இருந்தது.

- 'அண்டமா நதிக்கரையின் ஊரில் ஒரு வீடு'.

3. ஆறு. ஓடுகிறபோது நீரழகு. ஓடாதபோது மணலழகு. சிறு பெரு கற்கள் அழகு. கரைமரம் அழகு. மேவி ஓடிய நீர்க்காலத்தில் எய்திய வழவழப்புப் பாறை அழகு. சண்முகசித்தாறு ஒரு காட்டாறு. எப்போதாவதுதான் அது கரைமீறிப் பிரவகித்து ஓடுகிறது. பிறகெல்லாம் காய்ந்தே கிடக்க்¢றது.

- 'சண்முகசித்தாறு'.

4. சில சமயம் காலக்குயவன் விவஸ்தையற்றுத் தவறு புரிகிறான்.எனக்கு ஒரு வருஷம் முந்தி அவளை வனைந்து விட்டான். பள்ளியின் நான் பத்தில் படிக்கையில் அவள் பதினொன்றில் வந்து சேர்ந்தாள். புல்நுனித் திவலை போல. புல்லாங்குழலைப்போல. மண்துகள்களைப் பொன்னாய் மாற்ற மணல் ஆரண்யத்தின் மையத்தில் பூத்த மாயமலர் போல.

- 'வெளிச்ச நர்த்தனம்'.

5. காலத்தினதும் அனுபவத்தினதுமான ஒரு நான்கு வருடத்திய முட்கள் முகத்தில் கீறுவத்ற்கு முன்பு. தென்னைகளும், வழிந்தோடும் 'புழ'களும், அரபிக் கடலின் அருகாமையுமாக ஜீவிதமே மரகதப் பசுமையாய் திகைந்து விட்டதான தோற்றம்.

- 'காற்றாடை'.

6. அநாதரவின் பாலொளி எங்கும் வீசுகிறது. நிலவின் நீண்ட இறக்கை வெளிச்சம் புவிமேவிக் கவிந்திருப்பது ஊதாத்திட்டுகளுடன் எனது ஓட்டைக் கூரை வழியே காட்சிக்குக் கிடைக்கிறது. வேர் தேடி அலையும் மேகங்களின் கீழாக விருப்பங்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன.பூக்களின் தொடுநாராகி என் கைகள் மாலையாகின்றன இக்கணம். தனியே கழற்றி உதறி எங்கேனும் சுயம்வரச் சங்குக்கழுத்தில் போட்டு விடலாம் என்று தீர்மானிக்கிற நேரம் கைகளற்று உதறுவது எங்கனம் என்ற கேள்வியும் எழுகிறது.

- 'நிணநீர்ச் சுவடி'.

7. நிலவின் இணுக்கோ உயித்துள்ளலில் பன்மடங்கு வசீகர வியாபகம் பெற்றவாறிருந்தது. கூந்தல் கோதிப் போயின பறவைகள். அண்டமாநதியில் அவள் நீர் முகக்கப் போகையில் துவரையளவு வாய் திறந்து சிறுமீன்கள் பேசின. 'பாவம்! இவள் - நிரந்தரத்தின் பேரழகி... நித்யயௌவனி. 'நிலவாழிகள் அறியாததை நீர்வாழிகள் அறியும்.

- 'தீண்டாநாயகி'.

8. ஊரின்மீது முதலில் படிந்தது இரவே எனும்படி பனைகள் சூழ்ந்த ஊரில் அநேக காலம் பனைத்தண்டி பொதிந்திருந்து உயிர் பெற்றுப் பறந்தவையென காகங்கள் நிறைந்தன.அவற்றின் நிழல்களுக்கோவெனில் கால்படத் தேவையில்லை நிலத்தில். பகலின் தரைவெளுப்பில் படகுபோலச் சரிந்தோடும் அவற்றின் நிழல்கள். இரவுக்கே மரமுரையும்
காகம். முகம் ஓயும் வரை பகலிற் பறந்து இரைகாணும் அவற்றின் நிழல்படியும் சாலையிலும் தெருக்களிலும்.

- 'கன்னிவாடி'.

9. விளக்குகளை ஏற்ற முற்பட்டபோது காற்றின் வேகத்தில் அணைந்து விட்டன. பாவத்தை வாயுபகவான் மீது போட்டுவிட, விளக்குகள் சுடரின்றி ஒதுங்கின ஓரமாய்.

- 'நாற்று'.

10. மரத்தின் கீழ்க்கிளையொன்றில் தேன்கூடு அப்பியிருந்தது - ஓரத்தை தட்டி எறிந்த தோசைக் கல்லைப் போல. சலனமற்று தேனீக்களின் இயக்கமும் சிறகடிப்பும் இல்லாமல்
உண்ணிகளைப்போல ஒட்டியிருந்ததில் பளபளப்பும் காணாமலாகி இருந்தது.

- 'வான்சிறப்பு'.

- வே.சபாநாயகம்.

கடித இலக்கியம் - 35

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 35

3, செங்குந்தர் தெரு,
திருப்பத்தூர்.வ.ஆ.

21-9-89

அன்புள்ள சபா அவர்களுக்கு,

வணக்கம்.

சென்னையில் JK யின் மகள் அம்முவின் கல்யாணத்தில் நாம் சரிவரக் கலந்து பேசவில்லைதான். ஆனால், இரண்டு மூன்று வேளைகள் தொடர்ந்தாற்போல நாம் அருகிருந்து உணவருந்திய காட்சிகள் நாம் அதிகம் கலந்துறவாடிய நிறைவையே தந்தன. நான் என் வாழ்வின் முதல் அனுபவத்தை - குருநாதர் ஒரு தந்தையாக முன் நின்று நடத்திய சௌபாக்கிய தரிசனத்தைக் கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பில் மூழ்கி விட்டிருந்த போதிலும், நாம் பேசிக் கொண்டவை எல்லாமும் கூட அவ்வனுபவத்தின் பகுதிகளாகவே இருந்தன.

நான் மறுநாள் 11-9-89 திங்கள் இரவு திருப்பத்தூர் திரும்பினேன். 16-9-89 சனியன்று புதூர்நாடு ஆசிரியர் சங்கக் கூட்டம் நடந்தது. மழை சரிவரப் பெய்து, ஜவ்வாது மலை இன்னும் களைகட்டாத காரனத்தால், தங்களை அழைப்பதை ஒத்திப் போட்டேன். கூட்டமும் ஒரு பதினாறு பதினேழு பேர் உள்ள கூட்டம் தான். தங்களை அதற்குத் தவிர்த்ததும் சரியென்றே தோன்றியது.

இப்போது இரண்டு நாட்களாகச் சுமாரான மழை. இன்னும் போகப்போக ஜவ்வாது மலை கோலாகலமாகிவிடும். கானாறுகள் உயிர்பெற்றெழுந்து துள்ளிக் குதித்து ஓடும். தங்கள் பெரும்பாலும் அக்டோபரில் திருப்பத்தூர் தவறாது விஜயம் செய்வீர்கள்.

ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றித் தாங்கள் எழுதப் போகிற நூலுக்குத் தேவையான பல ஆதாரங்களை நான் தாங்கள் திருப்பத்தூர் வருகிறபோது தர இயலும்.

இப்பொழுது ஒன்று தருகிறேன். அந்த நூலை எழுதும் முன், தங்களுக்கு உருவாக வேண்டிய முக்கியமான மனோபாவம் ஒன்றை இது உங்களுக்கு உண்டாக் கும். கீழ்க் கண்ட வரிகள் ஸ்வாமி விவேகாநந்தருடையவை.

"இப்போது கீதையில் விளக்கப்படும் சில சிறந்த கருத்துக்களைக் கவனிப்போம். இதற்கு முன்னுள்ள சமய நூல்களைவிடச் சிறந்தாகக் கருதப்படும் கீதையின் புதுமை எதில் உள்ளது? அது இதுதான்: அது தோன்றுவதற்கு முன் யோகம், ஞானம், பக்தி முதலியவற்றுள் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த பற்றுள்ளவர்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் ஒருவரோடொருவர் வாதம் செய்து கொண்டு ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான நெறியே சிறந்ததெனக் கூறி வந்தனர் என்றும் அறிகிறோம். இந்த நெறிகளைச் சமரசப் படுத்த யாரும் முயலவில்லை. கீதாச்சாரியரே முதன்முதலாக இவற்றைச் சமரசப்படுத்த முயன்றார். அந்தக் காலத்திலிருந்த ஒவ்வொரு பிரிவினருடையவும் சிறந்த பகுதிகளை எடுத்துக் கீதையில் அவர் தொகுத்தார். எதிர்வாதம் புரியும் சமயங்களுள் ஸ்ரீகிருஷ்ணர் சமரசப் படுத்தாமல் விட்ட இடங்களை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பத்தொன்பதாவது நூற்றாண்டில் வந்து முற்றிலுமாக நிறைவேற்றினார்."

தாங்கள் திருப்பத்துர் வருகிறபோது, அருகிலுள்ள நாட்றம்பள்ளி ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துக்கும் நாம் போவோம். அங்கு கிடைக்கும் புத்தகங்களும் துறவிகளும் நாம் வினவும் பலவிஷயங்களை நமக்குத் தெரிவிப்பர். அதுவுமின்றி, ஸ்ரீராம கிருஷ்ணப் பேராற்றின் கிளைகள் எந்தெந்த மூலைமுடுக்குகளிலெல்லாம் பாய்ந்தன, அவை இன்று எவ்வாறிருக்கின்றன எனதையும் நாம் நேர்முகமாகக் காண்போம்.

- புத்தகங்களைப் பொறுத்தவரை அந்த மடத்தில் தங்கள் தேவைகள் பூராவும் பூர்த்தியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்.

தங்கள் - பி.ச.குப்புசாமி

கடித இலக்கியம் - 34

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 34

களர்பதி - முகாம்
1-4-88

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

மலைப்பாம்பு போன்ற எனது சோம்பலை இன்று முறிக்கிறேன். தங்கள் மனம் துடிக்க நேர்ந்ததற்கு நான் வெறுமனே மன்னிப்புக் கேட்டால் போதாது. அந்தத் துடிப்பைப் பரவசத் துடிப்பாக மாற்றுவதுதான் தக்க பரிகாரம். எனவே நாங்கள் எல்லாம் பெருங்குழுவாகப் பாப்பாவின் கல்யாணத்திற்கு வந்து மகிழப் போகிறோம் என்கிற தகவலை முன் வைக்கிறேன்.

உங்களையத்த மனிதர்களுக்கு எழுதுகிற விஷயத்தை, சம்பிரதாயத்துக்கும் சகட்டுமேனிக்கும் செய்ய என்னால் என்றும் இயன்றதே இல்லை. அதையெல்லாம் விசேஷமாகக் கற்பனை செய்தே எனக்குப் பழக்கமாகி விட்டது. எனவே, எழுத வேண்டும் என்று நான் நினைத்த ஆயிரம் வேளைகளிலும் அதை நான் ஒத்திவைத்தேன். இதுதான் உண்மை.

ஒருவரி இரண்டு வரி எழுதிப் போட்டிருக்கலாம்தான்! ஆனால் நாம் அனைவரும் இந்நிலவுலகில் வாழ்கிறோம் என்கிற உண்மை அதனினும் போதுமானது! எனது புலன் அதை எஞ்ஞான்றும் சுவைத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் கவனம் எனக்கு இல்லை என்கிற காரணத்தைத் தவிரவும், உங்களால் என் மனம் புண்பட்டி ருக்கக் கூடும் என்கிற காரணத்தை தவிரவும், வேறு காரணங்களை நான் கடிதம் எழுதாது இருந்ததற்குக் கற்பனை செய்துபாருங்கள். அவை அனைத்தும் எனக்கு அற்புதமாகப் பொருந்தும்.

ஆனால் எனக்குள் ஒரு ரகசிய விம்மல் இருக்கிறது. இத்தகைய அன்பிற்கும், இத்தகைய இடங்களின் பரிச்சயத்திற்கும், நான் எப்பொழுது எந்தப் பிறவியில் என்ன புண்ணியம் செய்தேன் என்கிற விம்மல் அது.

அப்படி ஒரு எட்டா உயரத்தில் அதை நான் வைத்ததனால், எழுதாமல் விட்ட கொடுமை எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

அதுவுமன்றி, வாழ்வில் நான் பெறுகிற பிற தாக்கங்களை, நான், சகலத்தையும் மறந்த ஒரு மெய்ம்மறதியில், மூர்த்தாட்சண்யத்தில், ஒடுக்கத்தில், ஒரே குறியாய் இருந்து எதிர்த்துச் சமாளிக்க வேண்டியிருந்தது.

தூர தூரங்களில் என் மனசு சஞ்சரிக்கிறது! நான் எதைச் சொல்வேன்! எதை எண்ணுவேன்!

இந்த வரி எனது என்று கருதற்க! இது ரிக்வேதத்தில் ஒரு சுலோகம்!

எனவே, எக்காலத்தும் எனது மௌனத்தைப் பொருட்படுத்தாது, அதை அறவே புறக்கணித்து வீழ்த்துக.!

--------------------------------------------------------------------------------

மகளே, நீ ஒரு தனி நபரா? ஒரு மரமே அல்லவா? எங்கள் தலைமுறைகளின் புண்ணியம் பூராவும் உன்னைச் சாரும் - என்கிற முதல்வரி என்னுள் எந்நேரமும் ஒரு மந்திர உச்சாடனம் போல் முணுமுணுக்கப் பட்டுக் கொண்டிருந்ததாலும் என்னால் கடிதம் எழுதுவதில் இவ்வளவு நிதானமாக இருக்க நேர்ந்துவிட்டது.

--------------------------------------------------------------------------------

திருப்பத்தூர்.வ.ஆ.
7-4-88

6ஆம் தேதி புதன் இரவு ஆறுமுகம் வந்து, தங்களிடமிருந்து மேலும் ஒரு கடிதம் வந்தது என்றார். அத்ற்கு முன்பு 5ஆம் தேதி நான் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதி விட்டிருந்தேன்.

முன் பகுதியில் உள்ள கடிதம், எல்லாவற்றுற்கும் முன்பு 1-4-88ல் எழுதி நிறுத்தப்பட்டதாகும். இம்மாதிரி இவ்வருடத்தில் நான்கைந்து நிற்கின்றன. ஆறுமுகம் படித்து இதையும் அனுப்புங்கள் என்றதால் இந்தப் பழையதையும் அனுப்பத் துணிந் தேன்.

எல்லார்க்கும் ஆசியும் வாழ்த்தும் எஞ்ஞான்றும் உள!

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

கவிதை அணியில் ஒரு புதிய 'அணி'

கவிதை அணியில் ஒரு புதிய 'அணி'

- வே.சபாநாயகம்

மும்பையிலிருந்து புதியமாதவிதான் இதுவரை தமிழரின் படைப்புத் திறனை வெளிப்படுத்திக்கொண்டிருநார். இப்போது அன்பாதவனும் அவரது நண்பர் மதியழகன் சுப்பையாவும் அணி சேர்ந்து 'அணி' என்றொரு இரு மாத கவிதை இதழைத் தொடங்கி மே '06 முதல் கொண்டு வந்திருக்கிறார்கள். மாறுபட்ட வடிவமைப்பில் - நீளவாட்டில் (A4 தாளை நெடுக்க வாட்டில் மடித்து) 32 பக்கங்களில் முழுதும் 'கவிதையும் கவிதை சார்ந்தும்' என்ற பிரகடனத்துடன் 'அணி' வந்திருக்கிறது. 3வது இதழ் இப்போது செப்டம்பர் - அக்டோபர் இதழாக மலர்ந்துள்ளது. இதழின் பெயரில் காணப்படும் logo எழுத்தும் புதுமையானது. முதல் எழுத்து இந்தியின் 'அ' வாகவும் அடுத்த எழுத்து 'ணி' தமிழ் எழுத்தாகவும் அமைந்துள்ளது. 'அணி என்பதை இந்தி எழுத்தின் அடிப்படையில் டிசைன் செய்திருப்பது புதுமையாக இருப்பினும் ஏற்பதற்கில்லை' என்ற விமர்சனத்துக்கு, 'ஹிந்தி பேச்சும் பகுதியிலிருந்து வெளிவரும் தமிழ் இலக்கிய இதழ் என்பதந் குறியீடு மற்றுமின்றி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்ற creative ஆவலும் காரணம்' என்று 2ஆம் இதழில் விளக்கம் தந்துள்ளார்கள்.


'அணி'யின் லட்சியமாக முதல் இதழில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்:

"தமிழ்க் கவிதைகளை உலகக் கவிதைகளின் திசைகளுக்கு இணையாக நகர்த்தும் முயற்சியில், மும்பையிலிருந்து தன் தமிழ்ப் பணியைத் தொடங்கும் 'அணி' தன்னையும் இணைத்துக் கொள்கிறது. கலை மக்களுக்காகவா அன்றி கலைக்காக மட்டுமேவா என்ற விவாதங்களைத் தாண்டி தமிழின் மரபையும், நவீன சிந்தனைப் போக்கையும் இணைக்கும் பாலமாக அணி செயல்பட விரும்புகிறது. 'அணி' அனைத்துப் படைப்பாளிகளுக்குமான சங்கப் பலகை. தமிழ் இலக்கியத்தில் எந்த அணியையும் சாராத, கவிதை வளர்ச்சி ஒன்றையே குற்¢க்கோளாய்க் கொண்டது நமது 'அணி' "

முதல் இதழில் 'அணி'க்கு இத்தனை பொருளா என்று புருவம் உயர்த்துமாறு 'அழகு, வரிசை, படை, வகுப்பு ஒப்பனை, அருகில், அலங்காரம், ஆபரணம், ஒழுங்கு, நன்மை, பெருமை, மாலை, எல்லை, கருவி, சம்பாரம், வேடம், கோலம், கூட்டம், நிரை, நுணா என்று ஒரு அகராதிப் பட்டிலையே தந்திருப்பதும் புதுமையாய் இருக்கிறது.

முழுதும் கவிதைக்கே என்றாலும் ஓரிரண்டு உரைநடைப் படைப்புகளும் இதழ்தோறும் சிறப்புச் சேர்க்கின்றன. அவற்றில் ஒன்று இணைய இதழ்களின் அறிமுகம்.

இதழ்தோறும் ஒரு இணைய இதழ் என்று இதுவரை 'அந்திமழை', 'கீற்று', 'பதிவுகள்' என்று அறிமுகம் செய்துள்ளார்கள். இது ஒரு நல்ல முயற்சி. 'உலகக் கவிஞர்கள் வரிசை' என்றொரு தலைப்பில் இதழ்தோறும் உலகக் கவைஞர்களை அறிமுகப் படுத்தும் முயற்சியில் 'மைக்கேல்கோப்', 'புகோவஸ்கி', 'ஜெரால்டு மான்லே ஹாப்கின்ஸ்' என்ற கவிஞர்கள் இதுவரை அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இரண்டாம் இதழிலிருந்து 'இந்தியக் கவிஞர்கள் வரிசை' என்ற அறிமுகத் தொடர் வருகிறது. உருதுக் கவிஞர் 'தரன்னம் ரியாஜ்', இந்திக் கவிஞர் 'குல்ஜார்' பற்றிய பதிவுகள் குறிப்பிடும்படி உள்ளன.

தமிழுக்குப் புதிய அறிமுகங்களான ஹைக்கூ, ஹைபுன், லிமரைக்கூ, சென்ரியூ, இயைபு நகைத் துளிப்பா எனும் லிமெரி சென்ரியூ (லிமரைக்கூ + சென்ரியூ = லிமரி சென்ரியூ விளக்கக் கட்டுரைகளும் அம்மரபிலான கவிதைகளும் இதழ்தோறும் இடம் பெற்றிருப்பது 'அணி' யின் சிறப்பாகும்.

முதல் இதழில் கறாரான விமர்சகன் நக்கீரன் பாணியில் 'கம்ப்யூடர் தராசும் சமகால ஹைக்கூவும்' என்ற தலைப்பில் வந்துள்ள ஒரு அரிய அலசல் கட்டுரை அவசியம் படிக்கத் தக்கது.

நிறைய நூல் விமர்சனங்களும் இதழ் தோறும் வெளியாகின்றன. தனது கூர்மையான விமர்சனங்களின் மூலம் 'அன்பாதவன்' தான் கவிஞர் மட்டுமல்ல ஒரு சிறந்த விமர்சகர் என்றும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். கவிஞர்கள் தமிழன்பன், பழமலய் போன்ற கவிதையில் சாதனை படைத்த கவிஞர்களும் இதழ்தோறும் எழுதுகிறார்கள். இதழ் 3ல் கவிதையிலும் சாதனை காட்டிய

புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற 'தொழில்' கவிதையை 'புதையல்' என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். நிறைய கவிதைகள், நிறைய கவிஞர்கள் என்று படித்து மாளவில்லை. கவிதைகளுக்கான சிறு ஓவியங்களும் கருத்தை ஈர்க்கின்றன.

'அணிச்சேர்க்கை' என்ற தலைப்பில் புதிய, பழைய சிற்றிதழ்களையும் பட்டியலிட்டு வருகிறார்கள்.

4வது இதழ் 'பெண் கவிஞர்களின் சிறப்பிதழா'க வர உள்ளது.

மொத்தத்தில் இதுவரை வந்துள்ள இதழ்களிலிருந்து 'அணி' வித்தியாசமான, புதிய சாதனைகளை நிகழ்த்தும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. 'அணி'க் குழுவினர்க்குப் பாராட்டுக்கள்!

'அணி' - இருமாத இதழ்,
ஆண்டு சந்தா ரூ.50/-
10/1 Trivedi & Desai Chawl,
D'Monte Lane, Orlem, Malad-West,
MUMBAI - 400 064.