('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் - 35
3, செங்குந்தர் தெரு,
திருப்பத்தூர்.வ.ஆ.
21-9-89
அன்புள்ள சபா அவர்களுக்கு,
வணக்கம்.
சென்னையில் JK யின் மகள் அம்முவின் கல்யாணத்தில் நாம் சரிவரக் கலந்து பேசவில்லைதான். ஆனால், இரண்டு மூன்று வேளைகள் தொடர்ந்தாற்போல நாம் அருகிருந்து உணவருந்திய காட்சிகள் நாம் அதிகம் கலந்துறவாடிய நிறைவையே தந்தன. நான் என் வாழ்வின் முதல் அனுபவத்தை - குருநாதர் ஒரு தந்தையாக முன் நின்று நடத்திய சௌபாக்கிய தரிசனத்தைக் கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பில் மூழ்கி விட்டிருந்த போதிலும், நாம் பேசிக் கொண்டவை எல்லாமும் கூட அவ்வனுபவத்தின் பகுதிகளாகவே இருந்தன.
நான் மறுநாள் 11-9-89 திங்கள் இரவு திருப்பத்தூர் திரும்பினேன். 16-9-89 சனியன்று புதூர்நாடு ஆசிரியர் சங்கக் கூட்டம் நடந்தது. மழை சரிவரப் பெய்து, ஜவ்வாது மலை இன்னும் களைகட்டாத காரனத்தால், தங்களை அழைப்பதை ஒத்திப் போட்டேன். கூட்டமும் ஒரு பதினாறு பதினேழு பேர் உள்ள கூட்டம் தான். தங்களை அதற்குத் தவிர்த்ததும் சரியென்றே தோன்றியது.
இப்போது இரண்டு நாட்களாகச் சுமாரான மழை. இன்னும் போகப்போக ஜவ்வாது மலை கோலாகலமாகிவிடும். கானாறுகள் உயிர்பெற்றெழுந்து துள்ளிக் குதித்து ஓடும். தங்கள் பெரும்பாலும் அக்டோபரில் திருப்பத்தூர் தவறாது விஜயம் செய்வீர்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றித் தாங்கள் எழுதப் போகிற நூலுக்குத் தேவையான பல ஆதாரங்களை நான் தாங்கள் திருப்பத்தூர் வருகிறபோது தர இயலும்.
இப்பொழுது ஒன்று தருகிறேன். அந்த நூலை எழுதும் முன், தங்களுக்கு உருவாக வேண்டிய முக்கியமான மனோபாவம் ஒன்றை இது உங்களுக்கு உண்டாக் கும். கீழ்க் கண்ட வரிகள் ஸ்வாமி விவேகாநந்தருடையவை.
"இப்போது கீதையில் விளக்கப்படும் சில சிறந்த கருத்துக்களைக் கவனிப்போம். இதற்கு முன்னுள்ள சமய நூல்களைவிடச் சிறந்தாகக் கருதப்படும் கீதையின் புதுமை எதில் உள்ளது? அது இதுதான்: அது தோன்றுவதற்கு முன் யோகம், ஞானம், பக்தி முதலியவற்றுள் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த பற்றுள்ளவர்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் ஒருவரோடொருவர் வாதம் செய்து கொண்டு ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான நெறியே சிறந்ததெனக் கூறி வந்தனர் என்றும் அறிகிறோம். இந்த நெறிகளைச் சமரசப் படுத்த யாரும் முயலவில்லை. கீதாச்சாரியரே முதன்முதலாக இவற்றைச் சமரசப்படுத்த முயன்றார். அந்தக் காலத்திலிருந்த ஒவ்வொரு பிரிவினருடையவும் சிறந்த பகுதிகளை எடுத்துக் கீதையில் அவர் தொகுத்தார். எதிர்வாதம் புரியும் சமயங்களுள் ஸ்ரீகிருஷ்ணர் சமரசப் படுத்தாமல் விட்ட இடங்களை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பத்தொன்பதாவது நூற்றாண்டில் வந்து முற்றிலுமாக நிறைவேற்றினார்."
தாங்கள் திருப்பத்துர் வருகிறபோது, அருகிலுள்ள நாட்றம்பள்ளி ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துக்கும் நாம் போவோம். அங்கு கிடைக்கும் புத்தகங்களும் துறவிகளும் நாம் வினவும் பலவிஷயங்களை நமக்குத் தெரிவிப்பர். அதுவுமின்றி, ஸ்ரீராம கிருஷ்ணப் பேராற்றின் கிளைகள் எந்தெந்த மூலைமுடுக்குகளிலெல்லாம் பாய்ந்தன, அவை இன்று எவ்வாறிருக்கின்றன எனதையும் நாம் நேர்முகமாகக் காண்போம்.
- புத்தகங்களைப் பொறுத்தவரை அந்த மடத்தில் தங்கள் தேவைகள் பூராவும் பூர்த்தியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்.
தங்கள் - பி.ச.குப்புசாமி
Wednesday, December 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment