Wednesday, December 21, 2011

எஸ்.வைத்தீஸ்வரனின் 'திசைகாட்டி'

'அறுபதுகளில் 'எழுத்து'வில் சி.சு.செல்லப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்ட புதுக்கவிதைப் பிரவேசம் என் போன்ற மரபுக்கவிதை ரசிகர்களுக்கு எரிச்சலை ஊட்டியது. புதுக்கவிதை புரியவில்லை என்ற குறை பலருக்கும். அப்போது 'ஞானரதத்தி'ல் வந்த 'உரிப்பு' என்ற ஓரு புதுக்கவிதை என்னை ஈர்த்தது.

"இந்த நகரச்சுவர்கள்
நகராத பாம்புகள்
அடிக்கடி
வால்போஸ்டர் தோல்
வளர்ந்து தடித்துவிட
நள்ளிரவில்
அவசரமாய் சட்டையுரித்துப்
புதுத்தோலில் விடிந்து
பளபளக்கும்
பட்டணத்துப் பாம்புகள்
இந்த நகராச்சுவர்கள்."

- எழுதியவர் பெயரைப்பார்த்தேன். எஸ்.வைத்தீஸ்வரன் என்றிருந்தது. புதுக்கவிதை மேல் இருந்தஎரிச்சல் மாறி இதமளித்தது இந்தக்கவிதை. அதற்குப் பிறகு அவரது கவிதைகளைத் தேடிப் படித்தேன்.அவரது 'கிணற்றில் விழுந்த நிலவு' கவிதை, படித்துப் பல ஆண்டுகள் ஆகியும் இன்றும் நெஞ்சில் அசை போடச் செய்கிறது. அந்தக் காலகட்டத்தில் நிறைய அவரது கவிதைகள் பிரசுரமாகியின. அவர் ஓரு சிறந்த ஓவியர் என்றும் அறிந்தேன். மிகச் சிறந்த கவிஞராகவே அறியப்பட்ட அவர் ஒரு நல்ல உரைநடைக்காரர் என்பதை தாதமாகவே 'யுகமாயினி' பத்திரிகை மூலம் அறிந்தேன். அதில் அவர் தொடர்ந்து 'பத்தி' எழுத்தாளராக பலது பற்றியும் தான் கண்டது, கேட்டது, படித்தது, பார்த்த படங்கள், மேற்கண்ட பயணங்கள் என ஒரு கலவையான சித்திரங்களை சலிப்புத் தராத, வாசிப்புச்சுகம் தருகிற படைப்புகளைத் தந்து வந்தார். இப்போது அந்த 'பத்தி' எழுத்துக்கள் 'திசைகாட்டி' என்ற தலைப்பில் 'நிவேதிதா புத்தகப் பூங்கா'வினால் நூலாக வெளியிடப் பட்டுள்ளதைப் பார்த்தேன்.

அணிந்துரையில் இந்திராபார்த்தசாரதி அவர்கள் கூறியுள்ளபடி, 'இத்தொகுப்பில் கட்டுரை இருக்கிறது. கவிதை இருக்கிறது. கதை இருக்கிறது. தன்வயப்பார்வையாக விமர்சனம் இருக்கிறது.' இவை அவரது வாழ்க்கை அனுவங்களின் பதிவுகள் மட்டுமல்ல - இந்த தலைமுறையினருக்கு கடந்தகாலத்தின் 'கரைந்துபோன சமுதாயத்தின் பொற்கணங்களைச் சொல்லும் வரலாறு. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் எழுதி எழுதி மெருகேறிய கையின்
திகட்டாத அரிய ஆவணம் இத்தொகுப்பு. இடையிடையே அவரது ரசமான பழைய கவிதைகளும் மீள் வாசிப்புக்குக் கிடைப்பதும் இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பம்சம்.

'உள் பயணம்' என்கிற கட்டுரை 'காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்' என்று இனி சொல்ல முடியாத - நரகத்தில் வாழ்வதற்கு முன் அனுபவமாய் விளங்கும் இன்றைய நமது நகரத்துச் சூழலை ஆதங்கத்தோடு கூறுகிறது. 'மரணம் ஒரு கற்பிதம்' கட்டுரை, மரணத்தின் வெவ்வேறு சாயல்களை - மரணம் பலரது பலவீனங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் நிஜத்தைச் சொல்கிறது. இதன் இறுதியில் வரும் அவரது கவிதை ஒன்று மரணத்தின் யதார்த்தத்தை இயற்கையின் நிகழ்வொன்றை மென்குரலில் சொல்கிறது:

"மரத்தை விட்டுப் பிரிந்து
மலர்கள்
மண்ணில் மெத்தென்று விழுகின்றன;
சாவிலிருந்து துக்கத்தை
சத்தமில்லாமல் பிரித்தவாறு".

பல விருதுகளைப் பெற்ற 'Slum dog millionair என்ற திரைப்படத்தின் பாதிப்பினால் எழுந்த மனித துக்கத்தை, ஓரு கலைஞனில் மன நெகிழ்ச்சியை வேதனையோடு சொல்கிறது. 'வறுமை நமக்கோர் பெருமை'என்கிற திரை விமர்சனம். இதனையொட்டி எட்டு ஆண்டுகளுக்கு முன் தான் எழுதிய - இந்திய வறுமையைப் படம் பிடித்து விருதுகள் பெற்ற ஒரு கலைஞனின் அவஸ்தையைப் பற்றிய - கவிதை ஒன்றையும் நம் பார்வைக்காகக் கொடுத்திருக்கிறார். மற்றும் தான் ரசித்த - Daoud Hari என்பவர் எழுதிய 'The Translator' நூலின் சுவாரஸ்யமான விமர்சனமும் கவிஞரின் பன்முக ரசனையைச் சொல்வதாக உள்ளது.

மேலும் கேதார்நாத் பயணத்தின் சிலிர்ப்பான அனுபவத்தைச் சொல்லும், ' ஒரு குத்துப் புல்', இளமையில் மரத்தின் மீது கொண்டிருந்த நேசத்தைச் சொல்லும் 'மரத்தில் வாழ்ந்தவன்', "Shasank redumption' என்ற ஆங்கிலப்படத்தின் ஒரு சின்ன கதாபாத்திரத்தின் வரிகளால் தூண்டப்பட்ட கற்பனைச் சித்தரிப்பான 'அர்த்தமற்ற வார்த்தை', வள்ளலாரின் 'வானத்தின்மீது மயிலாடக் கண்டேன் மயில் குயிலாச்சுதடி' என்ற கவிதை வரிகள் தரும் ஆன்மீகச்சிந்தனைகள் பற்றிய அர்த்தமிக்க விளக்கம் சொல்லும் 'காட்சிப்பிழைதானோ?'. குறும்பாக்களான 'ஹூக்கள்' தரும் இலக்கிய இன்பம் பற்றிப்பேசும் 'மூன்று அடிகள்'. 'வ.ரா நினைவுகள்', Umberto Eco இத்தாலிய எழுத்தாளரின் கட்டுரை காட்டும் Bongoநாட்டு மக்களின் 'ஒரு வினோதமான கலாசாரம்', இந்தப் பூமியையும் இயற்கையையும் வாழ்க்கையையும் புலன்கள் நமக்கு எந்த அளவுக்கு அவசியம் கேள்விக்கு விடை தரும் 'திசைகாட்டி' - என எத்தனை விதமான ரசனைப் பதிவுகள்! இவை 'இது வித்தியாசமான இலக்கிய வரவு'தான் என்பதை நமக்கு உணர்த்தும். கட்டுரைகளினூடே வாசிப்பவரை மென் முறுவல் பூக்க வைக்கிற மொழி நடை
பரவசமூட்டுவன.

தொகுப்பு முழுவதையும் படித்து முடித்ததும், பதிப்பாளர் தன் உரையில் நூல் ஆசிரியர் பற்றிச் சொல்லி உள்ள 'சுகமான எழுத்துக்காரர்' என்ற ரசிப்பை நாமும் ஆமோதிக்கவே செய்வோம். 0

Friday, December 09, 2011

நிறையும் பொறையும் - சிறுகதை

கெட்டிமேளம் முழங்குகிறது; நாதசுரம் அதற்கேற்ப எக்காளமிடுகிறது; வெண்கலத் தாளம் 'கல்கல்' லென்று அவசரமாக ஒலிக்கிறது. அறுபதைக் கடந்த முதியவர்களெல்லாம் அட்சதையை மணவறை நோக்கி வீசுகிறார்கள். இன்னும் அறுபதை எட்டிப் பிடிக்காதவர்கள் - ஆணும் பெண்ணுமாய், கைகூப்பி வணங்குகிறார்கள். அப்பா, புதுமெருகுடன் மின்னுகிற பொற்றாலியை அம்மாவின் சிரத்திற்கு வலப்புறமாகக் கையைச் சுற்றி, அணிவிக்கிறார். அனசூயா அம்மாவின் நெஞ்சுக்கு நடுவில் மாங்கல்யம் வருகிற மாதிரி, பழைய தாலிக்கு மேலே பளிச்சென்று தெரிகிறமாதிரி அந்த மங்கல சூத்திரத்தை இழுத்துப் பொருத்துகிறாள். அப்பா குங்குமத்தை அம்மாவின் தலைக்கு வலப்புறமாகக் கையைச் சுற்றியபடி நெற்றியில் இடுகிறார்.

அனசூயா அம்மாவின் முகத்தைப் பார்க்கிறாள். அம்மா புதுமணப்பெண் போல முகம் முழுதும் நாணமும், பூரிப்பும் விகசிக்க குனிந்த தலையுடன் மென்முறுவல் பூக்கிறாள். அனசூயா அப்பாவை ஒருமுறை பார்க்கிறாள். அவரது முகம் பரப்பிரும்மமாய் எந்த உணர்வும் இன்றி ஆனால் கடமையுணர்வு பொலிவுறத் தோற்றமளிக்கிறது. 'வாத்தியார்' சொல்கிறபடியெல்லாம் கையும் வாயும் எந்திரமாய்ச் செயலபட, கருமமே கண்ணாக இருக்கிறார். அவருக்கு இதில் ஏதும் மகிழ்ச்சியோ சோகமோ இருப்பதாக முகத்திலிருந்து உணர முடியவில்லைதான். ஆனால் அனசூயாவுக்கு அப்பாவின் மன ஒட்டம் புரியும். ஆனால் அவளாலும் கூட முழுமையாய் அதைப் படித்துவிட முடியவில்லை.

"ஆசீர்வாதம்! ஆசீர்வாதம் பண்றவா முதல்லே பண்ணட்டும். ஆசீர்வாதம் வாங்கிக்கிறவா இது முடிஞ்சப்பறம் வரலாம்" என்கிறார் வாத்தியார்.

மணிவிழாக் காணும் தம்பதிகள் எழுந்து நிற்கிறார்கள். அவர்களைவிட மூத்த - தலை நரைத்து, காலதேவனின் முத்திரைகள் பதிந்து, நிறைவாழ்வு வாழ்ந்த பெரியவர்கள் ஜோடி ஜோடியாய் வந்து நிற்க, அம்மாவும் அப்பாவும் விழுந்து சேவிக்கிறார்கள், "தீர்க்காயுசோடே, சதாபிஷேகமும் கொண்டாடணும்" என்ற ஆசீர்வாதத்துடன் பெரியவர்கள் அவர்களுக்கு திருநீறும், குங்குமமும் வழங்குகிறார்கள். அப்பாவும் அம்மாவும் பவ்யமாக அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இப்போதும் அனசூயா அப்பா, அம்மா இருவர் முகங்களையும் பார்க்கிறாள். அப்பா 'சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை'யாய் அப்படியேதான் சலனமற்றிருக்கிறார். அம்மாவின் முகத்தில் ஒரு புதுக்களை! தேஜஸ்,! பெருமிதம்! கண்களில் ஆனந்தபாஷ்பம் முண்டியடிக்கின்றன. அனசூயாவுக்கு மனசுக்குள் வலிக்கிறது.

'அம்மா! நிஜமாகவே உனக்குப் பூரிப்பு தானா? புதுப் பொற்றாலியைச் செல்லமாய் நீவிவிட்டு, பெருமிதததுடன் இழுத்து விட்டுக்கொள்கிறாயே - அதன்மீது மரியாதையும், பக்தியும் மிகுந்ததாலா? இந்தக் கௌரவத்தை – இரண்டாம் தாலி அணிகிற பாக்கியத்தை உனக்குத் தந்தவர் இதோ இந்தத் தியாகபிரும்மம் தான் என்று உனக்கு இப்போது நினைவில் ஓடுகிறதா? உன் கண்களைத் திரையிட்டிருக்கிற ஆனந்தக் கண்ணீர் உன் மனசை மறைக்கிற திரை இல்லையே? நிஜந்தானே?' - என்றெல்லாம் மனசுக்குள் கேட்டுக் கொள்கிறாள் அனசூயா. அதற்குள் இடித்துப் புடைத்துக்கொண்டு, ஆசி வாங்க வரும் தம்பதிகள் கூட்டம் நெருக்குகிறது. சற்று ஒதுங்கி அந்தக் காட்சியில் மனம் பதியாமல் சிந்தனை வலையில் சிக்குண்டபடி நிற்கிறாள் அனசூயா.

அருகே யாரோ ஒரு மாமி அடுத்தவளிடம் சொல்கிறாள், "என்ன பொருத்தம் பாருங்கோ! சாட்சாத் பார்வதி பரமேஸ்வராள் மாதிரி கண்ணுக்கு நெறைவா - இதக்கண்டு சேவிக்கிற பாக்கியம் எல்லோருக்கும் கெடைச்சுடாது''.

"நன்னாச்சொன்னேள்! பொருத்தம்னா அப்படி ஒரு பொருத்தம்! மாமியப் பாருங்கோ - இத்தன வயசுக்கு இன்னும் கட்டு விடாம, பளிச்சுனு, மஞ்ச மசேர்னு மங்களகரமா - நிறைஞ்ச கட்டுக் கழுத்தின்னா இதும்மாதிரி யாருக்கு அமையும்? மாமா குடுத்து வச்சவர் தான்! 'பொண்டாட்டி வாய்க்கும் புண்ணியவானுக்கு'ம்பாளே! 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'னு பாடுனா மாதிரி, அந்த வரம் வாங்கிண்டு வந்தவர்னா இந்த மாமா!" என்று அப்பாவின் அதிர்ஷ்டத்தை வியக்கிறாள் இன்னொரு மாமி.

அனசூயாவுக்கு சிரிப்பும் அழுகையும் சேர்ந்து பொங்குகிறது. சொன்னவளது அறியாமை கண்டு சிரிப்பும், உண்மை நிலையை உணரந்தவள் என்ற முறையில் அழுகையும் போட்டி இடுகின்றன. கணகளில் நீர் திரையிடுகிறது. ஆனால் இது ஆனந்தக் கண்ணீர் இல்லை! அப்பாவின் மீது எழும் அனுதாபத்தின் வேதனைக் கண்ணீர்! உலகம் எப்படி வெளிப்பூச்சைக் கண்டு சுலபமாக ஏமாந்து விடுகிறது! அம்மாவின் முகக் களையும், பரவசமும், ஆனந்தக் கண்ணீரும் இவர்களுக்கு அவள் மீது பொறாமையை ஏற்படுத்து கிறதே தவிர, அப்பாவின் பொறுமையை, அதன் விளைவான அவரது கருணையை, அதற்கு அவர் தினமும் தரும் விலையை இவர்களில் யார் ஒருவருக்காவது கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா? 'ஐயோ, அசடுகளா!' என்று அங்கலாய்க்கிறாள் அனசூயா.

அம்மாவின் இந்தப் பூரிப்பும், பரவசமும் நிலையானதுதானா? இந்த அறுபதாங் கல்யாண நிறைவு நிலைத்திருக்குமா? தாலியைத் தொட்டுத்தொட்டுப் பரவசப்படுகிற மாதிரி காட்டிக் கொள்கிற அம்மா தாலிக்குத் தருகிற மரியாதை என்ன?

'அம்மா! நீ நிஜமாகவே தாலியைக் கௌரவச் சின்னமாக நினைக்கிறாயா? உன் மனசாட்சியைத் தொட்டுச்சொல் - இப்போது இப்படித் தொட்டுத்தொட்டுப் பழசையும் புதுசையும் இணைத்திணைத்துப் பூரிப்புக் காட்டுகிறாயே இது எத்தனை நாளைக்கு அல்லது நேரத்துக்கு? நாளைக்கே, இந்தக் கல்யாணக்களை மறைந்ததும் இதையும கழற்றி எறியமாட்டாய் எனபதற்கு என்ன உத்திரவாதம்? முன்புதான் பழைய தாலியை எடுத்ததற்கெல்லாம் கழற்றி எறிந்து புலம்புவாய் - 'இந்த வெலங்கு ஒண்ணு இருக்கக்கொணடு தானே நா அடிமையா இருக்கேன்? இந்தச் சனியன் ஒண்ணுகழுத்தைச் சுத்தி பாம்பு மாதிரி'ன்னு. இப்போது எதை வீசுவாய்- பழசையா, புதுசையா? அல்லது இரண்டையுமேவா? உனக்குத்தான் தாலி மீது எந்த வித நம்பிக்கையோ, புனிதமான மதிப்போ கிடையாதே - அப்புறம் எதற்கு இன்னொரு தாலி?

'அம்மா! நீ யாரை ஏமாற்றுகிறாய்? ஊரையா அல்லது உன்னையேவா? உன் எண்ணமென்ன? இப்போது இரு மாமிகள் பேசிக் கொண்டது போல, உண்மை வெளியே தெரியாமல் உன்னைப் பற்றிப் பெருமையாய்ச் சொல்ல வேண்டும், உனது தாம்பத்தியம் பற்றிப் பொறாமைப் படவேண்டும் என்பது தானே? இப்படி இரட்டை வாழ்க்கை வாழவேண்டிய அவசியமென்ன? நீ வேண்டுமானால் அப்படி வாழலாம். அப்பாவால் அப்படி இரட்டை வேஷம் போட முடியுமோ? அது கூட உன் ஆதங்கம் தானே? உள்ளே உன் மீது வெறுப்பை வைத்துக் கொண்டு, ஊருக்காக வெளியே அவர் போலியான மகிழ்ச்சியைக் காட்டி ஏமாற்ற வேண்டும் - இல்லையானால் அதுவே உனக்கு:த் தாலியைக் கழற்றி எறிய ஒரு காரணமாகி விடும்! ஆனால் அப்பாவுக்கு அவ்வளவு நடிப்புத்திறன் போதாதுதான்! அதனால் தான் பரப்பிரும்மமாய் - சித்திரப்பாவை போல், ஒரே மாதிரி - விருப்பு வெறுப்புக் காட்டாமல் இருக்கிறார்.

அப்பா! உங்களால் எப்படி இவ்வளவு அவமானங்களையும் சகித்துக்கொள்ள முடிகிறது? அம்மாவின் கொடுமைகளை எல்லாம் ஏன் வாய் பேசாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? தியாக புருஷன் என்று உலகுக்குக் காட்டவா? இதுவே ஒரு சராசரி மனிதனாக இருந்தால் என்ன செய்திருப்பான்? ஒன்று அறைந்து மயிரைப்பிடித்து இழுததுத் தெருவில் விட்டிருப்பான் - அல்லது ஒளவை கூறியபடி கூறாமல் சந்நியாசம் மேற்கொண்டிருப்பான்! இதில் எதையுமே நீங்கள் ஏன் செய்யவில்லை? கொடுமை என்றால் வாழ்நாள் முழுதுமா? அவமானம் என்றால் ஆயுள் முழுதுமா? அப்பப்பா........! எத்தனை முறை? எப்படி எப்படி யெல்லாம்.........? ஒவவொன்றாய் மனம் அவள் விரும்பாமலே அசைபோடத் தொடங்குகிறது.

ஏட்டிக்குப் போட்டியும், எதிலும் முரண்படுகிற எதிர் சிந்தனைகளும் எல்லா வீட்டிலும், எல்லாப் பெண்களிடமும் காணப்படுவதுதான். ஆனால் இது வித்யாசமானது அல்லவா? அம்மா எந்த நேரத்தில், எந்த இடத்தில் எதைச் சொல்லுவாள் - எப்படி அப்பாவைத் தூக்கி எறிந்து பேசுவாள் என்று அவளுக்கே தெரியாது. சுமுகமாக இருக்கிறாளா, சோகமாக இருக்கிறாளா எனபதை நிதானிக்க முடியாது. சுமுகமாக அப்பாவிடம் அவள் இருந்து தான் பார்த்ததாக தன் - இந்த 25 வருஷ வாழ்க்கையில் நினைவில்லை. பாவம், அப்பா! அவரிடம் ஒரு நாள் கூடக் கனிவாக அம்மா நடந்து கொண்டதில்லை.ஆனால் இன்று அதை எல்லாம் மறந்துவிட்டாற் போலவோ, அல்லது இதுவரை எதுவுமே நடக்காதது போலவோ புதுமணத் தம்பதிகளின் புதுசந்திப்பு போல பூரிப்புக் காட்ட எப்படி அம்மாவால் முடிகிறது? இன்றைய இந்தக் கௌரவத்திறகும் பூரிப்புக்கும் அப்பாதான் கதாநாயகன் என்பது அவளுக்கு நினைவில்லையா? இந்தக் கல்யாணக் கோலமும், நிறை கட்டுக்கழுத்தியாய் நாலுபேர் கண் கூசும்படி நிற்கவும் அவர் இல்லாமல் எப்படிச் சாத்தியம் என்று எண்ணிப் பார்த்திருப்பாளா? அவர் உயிரும் உடம்புமாய் இத்தனை ஆண்டுகள் அம்மாவின் கொடுமையால் அழிந்து போகாமல் மனோபலத்தால் நிற்பதால்தானே அவளுக்கு இந்த பாக்கியம்? இதெல்லாம் அவளுக்குத் தெரிந்தே இருக்கலாம். ஆனால் அதற்காக அவள் அப்பாவிடம் பரிவோ பச்சாதாபமோ கொள்ளப் போவதில்லை! நாளைக்கே மீண்டும் தாலியை விட்டெறிந்து இந்தக் கல்யாண உறவே வேண்டாம் என்று சொல்லக்கூடும்.

இதையெல்லாம் எதிர் பார்த்துதான் அப்பா அவளது பூரிப்பில் மனம் கரையாதிருக்கிறார். 'இது போலியானது; இந்தக் கூட்டம் கலைகிறவரை மட்டுமே நிற்கிற அற்பாயுசு ஆனந்தம்' என்பதை உணர்ந்திருக்கிறார். அதனால்தான் எதிலும் பட்டுக்கொள்ளாமல் தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பதுபோல், ,இந்த அறுபதாங் கல்யாணம் நடக்கா விட்டால் அதறகாக ஒருபோரை அம்மா நிகழ்த்துவாள் என்ற அச்சத்தின்பேரில் ஊர் உலகத்திற்காகக் கொண்டாடுவதுபோல் - கல்லாய், மரமாய் நின்று கொண்டிருக்கிறார். அனசூயாவுக்கு மீண்டும் அப்பாவின் நிலை கண்டு மனம் கசிந்து கண்களில் நீர் நிறைகிறது.

அம்மாவை, மேலே சொன்னதை எல்லாம் - ஏன், எப்படி என்றெல்லாம் நேரில் கேட்டுவிட முடியுமா? அதை அவளால் தாங்க முடியுமா? அப்பாவின் 'ஏன் சாதம் குழைந்திருக்கிறது?' என்கிற கேள்வியையே அவளால் பொறுத்துக் கொள்ள முடியாதே! 'என்னால் அதான் முடியும். இஷ்டமிருந்தா சாப்பிடுங்கோ, இல்லேண்ணா ஓட்டலுக்குப் போய் சாப்டுக்கோங்கோ' என்று நிர்த்தாட்ண்சய மாய்த் தூக்கி எறிந்து பேசும்போது நமக்கே ஆத்திரமும் ஆங்காரமும் எழும் என்றால்,கேட்ட அப்பாவுக்கு எப்படி இருக்கும்! ஆனால் அப்பா ஆத்திரப்பட மாட்டார். 'இந்தக் கேள்வியையே கேட்டிருக்க வேண்டாமே' என்று அவர் வருந்துவது முகத்தில் தெரியும். 'நான் ஒட்டலில் சாப்பிடுவதானால் உனக்கு இங்கே என்ன வேலை?' என்று செவிட்டில் அறைந்த மாதிரி திருப்பிக்கேட்க வேண்டாமோ? அதற்குக் கிடைக்கப் போகும எதிர்வினைகள், குழைந்த சாதத்தைச் சாப்பிடுவதை விட மோசமாக இருக்கும் எனபதை அறிந்த அவர் வாய்மூடி, மௌனியாய் அந்தச் சோற்றைக் கிளறிவிட்டு எழுவார். இப்படித்தான் ஓட்டிவிட்டிருக்கிறார் இத்தனை வருஷத்தையும். இந்த லட்சணத்திறகு இப்படி ஒரு அறுபதாங் கல்யாணம் என்ன வேண்டிக் கிடக்கிறது? ஒருவேளை இந்த அபஸ்வர வாழ்க்கைக்குத்தான் அறுபதாண்டு நிறைவோ?

அனசூயாவுக்கு மனம் கனக்கிறது. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைகிறது. தனியாக அப்பா கிடைக்கும்போது, ஊருக்குப் போகுமுன் அவரிடம் கேட்டே ஆக வேண்டும் - 'அவரது பொறுமையின் ரகசியம்தான் என்ன? எப்படி அவரால் இப்படித் தினமும் விஷத்தை விழுங்கிக் கொண்டு அதன் பாதிப்பு இல்லாமல் இருக்க முடிகிறது? இன்னும் என்ன சாதிப்பதற்காக, எந்தப் பொறுப்பிற்காகக் காத்திருக்கிறார்? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா? அம்மாவின் இந்த ஆக்கிரமிப்புக்கு ஒரு எதிர் நடவடிக்கை எடுத்து எப்போது அதைத் தகர்க்கப் போகிறார்?' இதைக் கேட்டுவிட வேண்டும். அம்மா இல்லாத நேரத்தில் கேட்டே ஆகவேண்டும் என்று தீர்மானிக்கிறாள்.

சாயங்காலம் எல்லா அரவமும் அடங்கி, உறவினரெல்லாம் விடை பெற்றுச் சென்று வீடு அமைதியானதும் அம்மா, அப்பா, அனசூயா மூவர் மட்டுமே இருக்கிறார்கள். விளக்கு வைக்கிற நேரம் வந்ததும் அம்மா, "கோவிலுக்குப் போய்விட்டு வரலாமா?" என்று அப்பாவைக் கேட்கிறாள். அறுபதாங் கல்யாணம் முடிந்த கையோடு ஆண்டவனை தம்பதி சமேதரராகத் தரிசித்து அருள்பெற அழைக்கிறாள். அப்பாவின் முகத்தில் அலுப்புத் தெரிகிறது. வேண்டாம் என்று சொன்னால் இன்றைய இந்த நிம்மதி - இந்தக் கோலாகலமும், கும்பலும் விடுவித்த சுதந்திரம் - பாழாகி விடலாம்.. எப்படித் தவிர்ப்பது என்று புரியாமல் முகத்தில் வேதனை நெளியத் தவிக்கிறார். அனசூயா அப்பாவின் உதவிக்கு வருகிறாள். "நீ வேணுமானாப் போய்ட்டு வாயேம்மா. அப்பாவுக்கு ரொம்பக் களைப்பா இருக்கு போலே இருக்கு! காலைலேர்ந்து நின்னுண்டேர்ந்தது காலை வலிக்கறதோ என்னவோ? வாயை விட்டுத்தான் சொல்லுங்களேன் அப்பா! நீங்க எப்பவுமே இப்படித்தான்!" என்று ஆதங்கத்தோடு கூறுகிறாள். அவளுக்கு உள்ளுக்குள் ஒரு திட்டம். அம்மாவை மட்டும் அனுப்பி வைத்தால் அப்பாவிடம் தனியாகப் பேச முடியுமே. எனவே அம்மாவை மட்டும் அனுப்பி வைப்பதில் குறியாக இருக்கிறாள்.

ஆனால் அம்மா விட்டு விடுவதாய் இல்லை. "ஆமாண்டியம்மா! உங்கப்பாவுக்குத் தான் அலுப்பு, களைப்பு எல்லாம்! நா மட்டும் இரும்பாலே சேஞ்சு வந்திருக்கேன் பாரு! இத்தனைக்கும் இந்த சஷ்டியப்தப் பூர்த்திக்கு ஒரு துரும்பை எடுத்து அந்தண்டை போட்டிருப்பாரா உன் தோப்பனார்? உனக்கு அவர் மேலே தானே கரிசனம்? என்னிக்குதான் அவர் எனக்காகக் கவலைப் பட்டாரு - இன்னிக்கு படறதுக்கு? இந்தக் கல்யாணம் நடத்திக்கறதிலே அவருக்குத் துளிக்கூட இஷ்டமே இல்லே! என் பிடுங்கலுக்காகத்தான் மனுஷன் ஒத்துண்டார். வேண்டா வெறுப்பாக் கடனேன்னு மணையிலே உக்காண்டிருந் தார். எல்லாத்துக்கும் குடுப்பினை வேணாமோ?" என்று ஒரு பாட்டம் புலம்புகிறாள். அனசூயா அப்பாவை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தாமல், அம்மாவை வெகுவாகத் தாஜா செய்து அவளை மட்டும் ஒரு வழியாக அனுப்பி வைக்கிறாள்.

அப்பா ஆளோடியில் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார். அனசூயா அருகில் வந்து அமர்ந்தாள். அப்பாவின் பார்வை மேல்நோக்கி இருந்தது. கூரையையே வெறித்தபடி இருந்தார். ஆனால் முகத்தில் ஆயாசமோ ஆற்றமாட்டாமையோ இல்லை. முகம் தெளிவாக நிச்சிலமாக இருந்தது.

"அப்பா........." என்று அவரது மௌனத்தைக் கலைத்தாள்.

"என்னம்மா.........?" என்று பார்வையைத் தழைத்தார்.

"நாளைக்கு நானும் போறேம்பா........."

"போகத்தானேம்மா வேணும்.?" என்று அவளது தலையை வாஞ்சையோடு வருடினார்

"போகத்தாம்பா வேணும். ஆனா உங்களை இங்கே இப்படி விட்டுட்டு அங்கே எனக்கு..........." - அழுகை தொண்டையை அடைத்தது.

"அசடு, அசடு! என்னை இப்படி விடாமே நீ என்ன செய்ய முடியும்? நானும் உங்கூட வந்துடறதோ, நீ இங்கேயே என் கூடவே இருக்கிறதோ சாத்யமா என்ன? வீணா மனசைப் போட்டு அலட்டிக்காதே" என்றார்.

"இல்லேப்பா - நீங்க நித்தியம் படற அவஸ்தையை நெனச்சாத்தான் எனக்கு............." என்று செருமினாள்.

"அது என்னோட போகட்டும்மா, உன்னப் பாதிக்கப்படாது! அது என் சாபம்! ஆனா அதுக்கு நான் பழகிப் போய்ட்டேன். அது என்னப் பாதிக்காது. நீ அதுக்காகக் கவலைப் படாதே." என்று :தட்டிக் கொடுத்தார்.

"கவலைப்படாமே எப்படிப்பா இருக்கமுடியும்? நீங்க இருந்துடுறேள்; உங்களுக்குப் பழகிப் போயிருக்கலாம். ஆனா வாழ்நாள் முழுக்க இப்படியே இருக்கப் போறேளா? இதுக்கு ஒரு முடிவே இல்லையா?" என்று அனசூயா பதற்றமாகச் சொல்லவே,

"அமைதி, அமைதி! இப்ப என்ன ஆய்ட்டுதுங்கிறே? வாழ்நாள் முழுக்கன்னா......! இன்னும் எத்தனை நாள் நா இருந்துடப்போறேன்? இதோ அறுபது ஆய்ட்டுது. இன்னும் மிஞ்சிப்போனா ஒரு பத்து வருஷம். முப்பத்தஞ்சு வருஷத்த இப்படியே ஓட்டியாச்சு! இந்தப் பத்து வருஷம்

என்ன - சுண்டக்காய்!" என்று சிரிக்கிறார்.

"அப்பா! நிஜமா- கவலையில்லாத சிரிப்பா இது? விரக்தியிலே சிரிக்கிற சிரிப்பில்லையே!"

"விரக்தி என்னம்மா? 'நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம் விதியின் பயனே பயன்' கிற மாதிரித்தான் மனைவியும்னு நெனச்சுக்க வேண்டியதுதான்! வாழ்க்கையிலே எல்லாமே திருப்தியா அமைஞ்சுடணும்னு எதிர் பார்க்கிறது பேராசை இல்லையோ? எனக்கொண்ணும் விரக்தி இல்லே! நீ கவலைப்படாமே கௌம்பு" என்றார் அமைதியாக.

"விரக்தி இல்லேன்னாப்பா சொலறேள்? அது நிஜமில்லேப்பா. உண்மையைச் சொல்லுங்கோ - ஏன் இப்படி உணர்ச்சி இல்லாத கல்மாதிரி, எல்லா அவமரியாதையையும் சகிச்சுண்டு, உங்களோட ஆண்மையைக் கேவலப்படுத்துற சிறுமையைக் கண்டு கொள்ளாம இருக்கேள்? புழு கூட நசுக்கப்பட்டா கொஞ்சம் எதிர்ப்பைக் காட்டுமே! இத்தனை சிறுமைக்கும், அம்மாவின் அத்தனை ஆகாத்தியத்துக்கும் ஆடாமே அலுக்காமே, பாதிப்புக் காட்டாமே எப்பிடி உங்களாலே இருக்க முடியறது? 'பொறுமை'ன்னு சொல்லாதேங்கோ! அதுக்கும் அளவு உண்டோல்லியோ? நீங்க காட்டறது பொறுமை இல்லேப்பா! ஐயோ! அம்மா எப்படி எப்படியெல்லாம் உங்கள ரணப்படுத்தறா- என்ன மாதிரி எல்லாம் உங்க மனசக் கீறி ரத்தம் சொட்ட வைக்கறா! ஆனா ஏன் உங்களுக்கு ரோஷமே வரலே? ஏன் கொடுமையின் உச்சத்திலே கூட நீங்க சீறி எழலே? 'பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை அமைய லேண்ணா - கூறாமல் சன்னியாசம் கொள்'னு ஒளவை சொன்னது உங்கள மாதிரி அனுதாபத்திற்குரிய ஆண்களுக்காத்தான் அப்பா! ஒரு தடவை கூட இந்தக் கொடுமைக்காரத் துணையை உதறி விட்டு ஓடிப் போகத் தோணலியா? இதுக்கெல்லாம் முடிவு கட்டிட்டு உசுரை விட்டுடணும்னு ஆவேசம் வரலியா? இது எப்படியப்பா உங்களாலே முடியறது?" - ஆவேசம் வந்தவள் போல் அனசூயா படபடக்கிறாள்.

சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, "அனசூயா...........அனசூயா! என்னம்மா? ஏன் இப்படி ஆவேசப்படறே? இது என்ன நீ புதுசா இன்னிக்குத் தான் பாக்கறயா? உன் இருபத்தஞ்சு வயசுக்கு இதெல்லாம் மரத்துப் போயிருக்க வேண்டாமோ? பாதிக்கப்பட்ட நானே அமைதியா இருக்கேன்,வேடிக்கைப் பார்த்துக் கிட்டிருக்கிற உனக்கு ஏன் இவ்வளவு படபடப்பு?'' என்று ஆசுவாசப் படுத்துகிறார் அப்பா.

"வேடிக்கை பார்க்கறவாளுக்கும் ஒரு எல்லை உண்டுப்பா! எலியைப் பூனை கொதறுற போது அது பூனையோட இயல்புன்னு விட்டுட முடியலியே! அந்தப் பரிதாப ஜீவனுக்காக மனசு வலிக்கறதில்லியா? ஆனா அந்தப் பரிதாப ஜந்துகூட மரணப் போராட்டத்திலே முடிஞ்சமட்டும் எதிர்க்கிறது உண்டு தானே? ஆனா நீங்க ஏன் எதிர்த்துச் சீறக்கூட இல்லைன்னுதாம்பா ஆதங்கமா இருக்கு. ஏன் ஒருதடவை கூட எதிர்த்து, அறைந்து முடியைப் பிடிச்சு வெளியே இழுத்துவிடலை? ஏன் ஒருதடவையாவது உங்க பலத்தை, ஆண்மையைக் காட்டலை? இது பொறுமை இல்லை! கையாலாகாத்தனம்! பயந்தாங் கொள்ளித்தனம்! கோழைத்தனம்..............!" என்று சீறினாள் அனசூயா.

"எப்படி வேணும்னாலும் வச்சுக்கோம்மா. இது என் கையாலாகாத்தனம்தான்; கோழைத்தனம்தான். நீ சொல்றமாதிரி நானும் வீரன்னு காட்டணும்னா நாகரீகம், கௌரவம், மானம் இதெல்லாம் வேண்டாம்னு விட்டாத்தான் சாத்யம். ஒரு கூலிக்காரன், ஒரு குப்பத்து ஆள் இந்த மாதிரி அவன் மனைவி அவனை வருத்தினா - அவளை முடியைப் பிடிச்சு இழுத்து வெளியே தள்ளிக் கதவைச் சாத்திடுவான்கிறது வாஸ்தவந்தான்! இப்படி மானம் மரியாதை எல்லாம் போறமாதிரி அவ வாயாடினா அவளை அறைஞ்சு தெருவிலே வீசறது நடக்கிறது தான்! நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி அவம் பெண்டாட்டி பேசினா - கட்டுன தாலியை விட்டெறிஞ்சு கேவலப் படுத்தினா அவனாலே பொறுத்துக்க முடியாதுதான்! ஆனா, நான் பொறுத்துக்கிட்டிருக்கேன், ரோஷமில்லாமே பிடிச்சுவச்ச பிள்ளையாரா இருக்கேன், கல்லா, மரமா, செவிடா, ஊமையா இருக்கேன்- ஏன்னு உனக்குப் புரியலே! ஒருவேளை உங்கம்மாவுக்கும் அதுதான் ஆதங்கமோ என்னவோ! ஒரு சாமான்யன் மாதிரி, ஒரு படிக்காத பாமரன் மாதிரி கோபம் பீரிட, முரட்டுத்தனமாய் அவளை அடிச்சு நொறுக்கலியேங்கிற கோபமாகக்கூட இருக்கலாம். இவ்வளவு அவமானப் படுத்தியும், இத்தனை குரூரமாக நடந்துண்டும் இந்த மனுஷன் - கோபப்படாம, உடம்பைச் சிலிர்க்காம, மண்ணாங்கட்டி மாதிரி இருக்கானேன்கிற எரிச்சல் அவளை மேன்மேலும் உக்கிரப் படுத்துகிறதோ என்னவோ? ஆனா ஏன் நா அப்படி இருக்கேன்னு கேக்கிறியா? சொல்றேன்.

"கதாசிரியர்களும், சமூக சேவகர்களும் பெண்ணடிமைபத்தியே எப்பவும் பேசுறாங்க. அவங்கெல்லாம் தாம்பத்தியம் என்கிற நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துட்டுப் புலம்புறவங்க. நாணயத்தின் மறுபுறத்தையும் பாத்தா ஆணடிமை பற்றியும் தெரியும். .ஆணைப் போலவே தன் மறு பாதியைக் கொடுமைப்படுத்துற குரூரபுத்தி, பெண்ணிடமும் உண்டுங்கறதப் புரிஞ்சும் ஆணுக்காக அனுதாபப்படுறவா இல்லை. நீயாவது அதைப் புரிஞ்சிக்கிட்டுருக்கியே! ஆனால் நீ சொன்னபடி நான் பொறுத்துப் போவது கோழைத் தனத்தாலோ, கையாலாகாத்தனத்தாலோ இல்லே.. இது ஒரு நாகரீகம்! நிறையுடைமை வேண்டும்கிற நாகரீகம். தாலிமீது நம்பிக்கையோ பக்தியோ இல்லாதவளுக்கு ஏன் புதிசா இன்னொரு தாலி கட்டினேன்னு நீ கேக்கலாம். இப்போது கட்டுன தாலி அவ திருப்திக்காகக் கட்டினதில்ல; எனக்காகத்தான்! ஊரும் உலகமும் - நானும் அவளும் இன்னமும் தம்பதிகளாகத்தான் இருக்கோம்னு நம்பறத்துக்காகத்தான்!

"அறைஞ்சு வெளியே தள்ளுறது முடியாத காரியமில்லே! குப்பத்து ஜனங்களுக்கு இது வேடிக்கை பாக்குற அபூர்வ காட்சியில்லே. அங்கே எல்லா வீட்டிலும் தினமும் நடக்கறதுதான்! மேல்மட்டத்தில இருக்கிறவங்களின் போலித்தனமும் ஊருக்காக வாழுற பொய் வாழ்வும் அல்ல அவங்க வாழறது. பொறையுடை மையும் நிறையுடைமையும் அவங்களுக்குக் கட்டுப்படியாகாது. அதை வச்சு யாரும் அவங்களை எடைபோடப் போறதில்லே. ஆனா நம்மைப் போல நடுத்தர வர்க்கத்துக்கு இதான் அளவுகோல். இதை வச்சுத்தான் நம்மை எடை போடுவாங்க. உள்ளே புண் புரையோடிப் போயிருந்தாலும் அதப் பட்டுத் துணியால அழகா மூடியிருந்தாப் போறும்.. கௌரவம் கெடைச்சுடும். பொய்யை நம்பறவங்க மத்தியிலே பொய்யா வாழறதுதான் கௌரவம்! 'நிறையுடமை வேணும்னா பொறையுடைமை வேணும்'பார் வள்ளுவர். நாலுபேர் பாத்து வியக்கிற நிறையுடைமைய நாம போற்றிக் காக்கணும்னு விரும்பறேன். இத்தனை நாளும் ஊர் மெச்ச நடிச்சதை இனி எதுக்கு உருக்குலைக்கணும்? இதான் என் பொறுமையோட ரகசியம். 'நிறையுடைமை நீங்காமை வேண்டின் - பொறையுடைமை போற்றி ஒழுகப்படத்தான்' வேணும்! நீ கவலைப்படாதே. இதுக்கு மேலும் என் பொறுமையச் சோதிக்க முடியாது. நிம்மதியாப் போய் வா!" என்று அப்பா புன்முறுவல் பூக்கிறார்.

"அப்பா! எப்படி உங்களாலே இதை லேசா எடுத்துக்க முடியறது?” என்று தேம்புகிறாள் அனசூயா.

" அதான் நிறையுடமை பேணும் நாகரீகம்!" என்று அவளைத் தட்டிக் கொடுக்கிறார் அப்பா. 0

Tuesday, November 15, 2011

இதம் தரும் இனிய வங்கக்கதைகள்

1940களில் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு திடீரென்று ஒரு மவுசு ஏற்பட்டது. ஆனந்தவிகடன், கல்கி போன்றவை இந்தி, வங்காளி, மராத்தி மொழிக் கதைகளை போட்டி போட்டுக் கொண்டு மொழி பெயர்த்து வெளியிட்டன. அம்மொழி நாவல்களும் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றன. அதற்கு முன்பே க.நா.சு ஜர்மனி, ஸ்வீடிஷ் போன்ற மேலை நாட்டு மொழி நாவல்களை, அநேகமாக அனைத்து உலக நாவல்களையும் அசுர வேகத்தில் மொழி பெயர்த்துத் தள்ளினார். 60களில் தீபம், கலைமகள் போன்ற இலக்கிய இதழ்களில் நம் சகோதர மொழிகளான மலையாளம, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் படைப்புகள்
வெளியாயின.

நாற்பதுகளின் எழுச்சி, 'மொழிபெயர்ப்பின் பொற்கால'மாக அமைந்தது எனலாம். த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, ஆர்.சண்முகசுந்தரம், அ.கி.கோபாலன், அ.கி.ஜயராமன் ஆகியோரது மொழிபெயர்ப்பில் வங்க நாவலாசிரியர்களான கவிஞர் தாகூர், பக்கிங்சந்திரர், சரத்சந்திரர் ஆகியோரது புகழ் பெற்ற நாவல்களான புயல், தேவதாஸ், ஆனந்தமடம் போன்றவை மக்களை மகிழ்வித்தன. பின்னர் 'தீபம்' இலக்கிய இதழ் மூலம் வங்கச் சிறுகதைகளையும் நாவல்களையும் திரு.சு.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுப் பிரபலமானார். தன் வங்க மொழிபெயர்ப்பு முன்னோடிகளினும் இன்று வங்கப் படைப்புகளை நினைத்ததும் வாசகரது நெஞ்சில் பசுமையாக இருப்பவர் அவரே. அவர் 'அண்மைகால வங்காளச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் 15 இனிய கதைகளை 'அம்ருதா' மூலம்
வெளிட்டுள்ளார்.

வங்கப் படைப்புகளில் அழகுணர்ச்சியும் ரசனையும் மென்மையான மன உணர்வுகளுமே மிகுந்திருக்கும். வன்முறை, கொலை, கொள்ளை, பரபரப்பு, திடீர்த்திருப்பம் போன்றவை வெகு அபூர்வம். ஆரவாரமின்றி மென்மையாய் சிலுசிலுத்து ஓடும் சிற்றோடையின் நளினமும் அழகும் வங்கக்கதைகளின் பொதுத்தன்மை. அப்படிப்பட்ட வாசிப்புக்கு இதமான கதைகள் இத்தொகுப்பில் உள்ளவை. படைப்பாளில் அனைவருமே புதியவர்கள். 1961க்குப் பிறகு பிறந்தவர்கள். நடைமுறை வங்காள வாழ்வை, அதன் பெருமை சிறுமைகளை அசலாகப் பதிவு செய்திருப்பவர்கள்.

உஜ்வல் சக்கரவர்த்தி என்பவரின் 'மண்' என்கிற சிறுகதை அரசியல் காரணங்களால் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்படுவோரின் சோகத்தை உருக்கமாகச் சித்தரிக்கிறது. இத்தொகுப்பில் உள்ள சிறப்பான கதைகளில் ஒன்று இது. வங்கப் பிரிவினையின் போது பிரிந்த குடும்பங்கள் பின்னாட்களில் திருமணம் போன்ற உற்றார் வீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள எதிர் கொள்ளும் சங்கடங்களை, மனவெழுச்சிகளை, கொல்கத்தாவிலிருந்து பங்களாதேஷுக்குச் சென்று திரும்பும் ஒரு பாத்திரத்ததின் அனுபவமாகச் சித்தரித்துள்ளார்.

சுகந்த கங்கோபாத்தயாய் என்பவரது கதையான 'மண்ணுக்கு ராஜா' என்கிற கதை கொல்கத்தாவின் நடைபாதைக் குடும்பம் ஒன்றின் பிரச்சினையைப் பேசுகிறது. இரவானதும் ஷட்டர்கள் மூடப்பட்ட போட்டோக்கடை வாசலில் படுத்து அங்கேயே தாம்பத்யம் நடத்தும் ஜூகியாவுக்கு மூன்று குழந்தைகள். இப்போது அவன் மனைவி பிரசவிக்க இருக்கிறாள். மேலும் குழந்தை பெற்றால், பாவம் கார்ப்பரேஷன் கட்டடத்துக்கு முன்னே ஷூ பாலீஷ் போட்டு பிழைக்கும் அவன் எப்படி சமாளிப்பான் என்கிற நல்லெண்ணத்தில் கடைக்காரர்கள் நூறு ரூபாய் சேர்த்துக் கொடுத்து அவனை குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள அனுப்புகிறார்கள். ஆனால் குடிகாரனான ஜூகியா வாங்கிய பணத்தில் குடித்து விட்டு, அவனுக்கு அடுத்துப் பிறக்கும் ஆண்குழந்தை ராஜா ஆகப் போகிறான் என்று கிளி ஜோஸ்யன் ஒருவன் சொன்னதை நம்பி கடைக்காரர்கள் யோசனையை ஏற்காமல் குடித்துச் சீரழிகிறான் என்பதை அவன் வாழும் நடைபாதையும், சாட்சியாக இருக்கும் நிலவும், கிளி ஜோஸ்யக்காரனின்
கிளியும் சொல்வதாக அமைந்த கதை. போட்டோப் பிடித்தது போன்ற நேரடிக் காட்சித் தன்மையில் அழகாகக் கதை சொல்லப்பட்டுள்ளது.

'உறக்கத்தைக் கெடுப்பவள்' எனும் அமிதாப் தேவ் சௌதுரியின் கதை இத்தொகுப்பின் சிறந்த கதை எனலாம். இதுவும் நாட்டுப் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களின் கதைதான். புலம் பெயர்ந்ததால் சித்தம் பேதலித்த 'சித்தி' என்று அழைக்கப்படுகிற ஒருத்தி, தான் இரு தேசங்களாலும் 'ரத்து செய்யப்பட்ட மனுஷி'என்பதை உணராமல் மீண்டும் பிறந்த மண்ணுக்குப் போகத் துடிக்கிறவள், திருட்டுத்தனமாய்ப் போகப் பல தடவை முயன்று திருப்பி அனுப்படுகிறவள் - தன்னைப்பொலவே புலம்பெயர்ந்த ஆனால் திரும்பும் நம்பிக்கையற்றுப் போன கதை சொல்லியைத் தினமும் அதிகாலை எழுப்பித் தன்னை அக்கரைக்கு அனுப்பக் கேட்டு உறக்கத்தைக் கெடுப்பவளின் தவிப்பு உருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. கதையைப் படிப்பவரின் உறக்கத்தையும் கெடுக்கும் படைப்பு.

மலைப்பிரதேசங்களை, பழங்குடியினரின் வாழ்விடங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு மேற்குவங்க அரசு தத்தம் செய்வதால் இடம் பெயர நேர்கிற, மக்களின் சமகாலப் பிரச்சினையைப் பேசுகிற 'பிந்த்திக்கிழவி, மரஞ்செடிகள், சன்காடிமலை மற்றும்......' என்னும் கதையிள் முடிவு வித்தியாசமானது. பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களின் எதிர்ப்பை வேறோரு கோணத்தில் கதாசிரியர் ஜாமுர் பாண்டே காட்டுகிறார். சன்காடி மலையை லீஸுக்கு எடுத்துள்ள கம்பனி டைனமைட் வைத்துத் தகர்க்கப்போவதாகவும் அதனால் உடனே மூட்டை கட்டிக்
கொண்டு எல்லோரும் கிளம்ப வேண்டும் என்று கேள்விப்படுகிற பிந்த்தி என்கிற கிழவி வெடிக்கிறாள்; ''அப்போ இந்த மலையிலே இருக்கிற மனுசங்க எங்கே போவாங்க? இவ்வளவு மரஞ்செடிகள், புலி, மான், முள்ளம்பன்றி இதெல்லாம் என்ன ஆகும்'' என்று மனிதர்களோடு மரஞ்செடிகளுக்காகவும், மலையில் வாழும் பிற உயிரினங்களுக்காகவும் கவலைப்பட்டு, ''நான் எங்கேயும் போகமாட்டென்'' என்று தீர்மானமாக மறுத்து தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விடுகிறாள்.

புஷ்பல் முகோபாத்யாய் எழுதியுள்ள 'சிறு பிராயத்து நண்பன்' வாசிப்பு சுகமளிக்கும் ஒரு நல்ல கதை. ஓட்டமான நடை. மொழிபெயர்ப்பு என நினைவு படுத்தாத மொழியாக்கம்.

'ரசிக் சாரின் குதிரை' எனும் ஜயந்த தே யின் கதையும் நெஞ்சைத் தொடும் கதை. வகுப்பில் ஏழை மாணவன் என்பதால் ஆசிரியரால் மிகவு அவமானப் படுத்தப்படும் ஒரு மாணவன் பின்னாளில் பெரிய எழுத்தாளன் ஆகிறான். முதுமையில் அநாதரவான நிலையில் உள்ள அதே ஆசிரியரை ஒரு நாள் சந்திக்கும் போது அவர் மனதளவில் அவமானமுறும் வகையில் அடக்கமாக தன் வளர்ச்சியை உணர வைக்கிறான்.

'ஐயோமனுஷா' ஒரு அற்புதமான மனித நேயக்கதை. இந்திரா காந்தி கொலையை ஒட்டி தில்லியில் அப்பாவி சீக்கியர்கள் வேட்டையாடப்பட்ட சூழ்நிலையில் இன, மத வேறுபாடின்றி - ரயிலில் பிரசவித்த ஒரு
பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த ஒரு சீக்கிய மருத்துவ மாணவனின் மனித நேயச்செயலை சிலிர்ப்பாகச் சித்தரித்துள்ளார் சியாமல் பட்டாச்சார்யா என்கிற எழுத்தாளர். இதில் பிரதிபலனை எதிர் பாராமல் உதவும் நிகில் என்கிற ஆட்டோ ஓட்டி மறக்க முடியாத பாத்திரம். வாசிப்பை ஓட்டமாய் நடத்திச் செல்கிற பரபரப்பான கதை நிகழ்வுகள், படித்தே முழுமையாய் ரசிக்க முடிபவை.

விற்பனைப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை ரசமாகச் சொல்லுகிறது சத்யஜித் தத்தா எழுதி இருக்கும் 'மனிதன் மனிதன் மற்றும் ஒரு ஞாயிற்றுக்
சிழமை' என்கிற கதை. வருமானத்தைப் பெருக்கவோ, பொழுது போக்குக்காகவோ, நானும் சம்பாதிக்க முடியும் என்கிற வீம்பிற்காகாவோ வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்யும் பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றிய சாதாரணமான நமக்குப் பரிச்சயமான பிரச்சினைதான். ஆனால் அலுப்புத் தட்டாமல் வாசிக்கவும் ரசிக்கவும் முடிகிற கதை.

இத்தொகுப்பின் மூலம் மாறிக்கொண்டே இருக்கும் நவீன வங்கத்து சமகால வாழ்க்கையையும், அம்மக்களின் சுக துக்கங்களையும், அவர்களது மனிதநேயப் பண்பு மற்றும் ரசனை உணர்வினையும், அம் மண்சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வங்காளம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர் ஆனதால் திரு.கிருஷ்ணமூர்த்தி வங்க மரபிற்கேற்றபடி தமிழ்ப்படுத்தி இருக்கும் நேர்த்தி தடையற்ற வாசிப்புக்கு உதவுகிறது. 0


நூல்: அண்மைக்கால வங்காளச் சிறுகதைகள்.

தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி.

வெளியீடு: அம்ருதா.

Monday, November 07, 2011

காக்கிச் சட்டைக்குள் ஒரு கவிமனம்

காவல்துறை அதிகாரிகளில் படைப்பாளிகள் அறியப்படுவது புதிதல்லதான். ஆனால் அவர்களில் எத்தனைபேர் இலக்கியவாதிகளால், வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இயல்பிலேயே படைப்புத்திறன் அமைந்தவர்களைவிட பதவி காரணமாய் எழுத்தாளர்களாக ஆக்கப்பட்டவர்களே அதிகம். புதுமைப்பித்தனின் மேதமையை வெகு சீக்கிரமே
உணர்ந்து, விவாதத்திற்குள்ளான அவரது 'சாபவிமோசனம்' போன்ற கதைகளை வெளியிட்டு புதுமைப்பித்தன் வரலாற்றில் இடம் பெற்ற 'கலைமகள்' தான், பின்னாளில் கவைக்குதவாத, சில காவல்துறை அதிகாரிகளின் பிதற்றல்களை அவர்களது பதவிகாரணமாய் வெளியிட்டு சேறு பூசிக் கொண்டது. இன்றும் புதுமைப்பித்தன் பேசப்படுவதும் பதவி காரணமாய் தூக்கி நிறுத்தப்பட்டவர்கள்
காணாமல் போயிருப்பதும்தான் யதார்த்தம். இதில் பரிதாபம் என்னவெனில் புதுமைப்பித்தனை இனம் கண்டு வெளிச்சமிட்ட சிறந்த இலக்கியவாதியும் தரமான பதிரிகையாசிரியருமான மதிப்பிற்குரிய வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்களே இப்பழிக்கு ஆளாகி இருப்பதுதான்!

காக்கிச்சட்டை போட நேர்ந்ததாலேயே கல்லாக மனதை மாற்றிக் கொள்ள நேர்ந்தாலும், கலை நெஞ்சம் இயல்பிலேயே அமையப் பெற்றவர்கள், பாலைவனத்து நீரூற்று போல தமது இறுக்கமான பணிக்கிடையே இலக்கிய ஈடுபாட்டை பேணிக்காத்தே வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அபூர்வ
காக்கிச் சட்டைக்காரரர் கவிஞர் பேனா மனோகரன் அவர்கள்.

இலங்கையில் பிறந்து வளர்ந்த இந்தியக் குடிமகனான அவர், ஈழத்தின் கல்லூரிக் காலத்திலேயே கவிஞராக அறியப்பட்டவர். தமிழகத்துக்குப் புலம் பெயர்ந்தபோதும் கவிதை வாசிப்பும், கவிதையாக்கமும் தொடர்ந்திருக்கின்றன. ஆனால் பிழைப்புக்காக ஏற்கநேர்ந்த காவல்துறை பணி காரணமாய் முடக்கப்பட்ட கவிதைமை- பணியிலிருந்த விட்டு விடுதலையான பின்னர் மீட்டெடுக்கப்பட்டதை பெருமிதத்தோடு இப்படி எக்காளமிடுகிறார்:

''பள்ளியில் பாரதியைப் படித்தேன்
வெள்ளைச் சட்டை போட்டிருந்தேன்

கல்லூரியில் காரல் மார்க்ஸ் படித்தேன்
சிவப்புச் சட்டை போட்டிருந்தேன்

காலம் என்மீது காக்கிச் சட்டை போர்த்தியது.
விட்டு விடுதலையாகினேன்.

மறுபடியும்

எனக்குப்பிடித்தமான கவிதைச் சட்டையோடு
காலமெல்லாம் உங்களோடு நான்
காலாற நடந்திடுவேன்".


பேனா.மனோகரன் அவர்கள் பணிக்காலத்தில் அவ்வப்போது எழுதிய கவிதைகளில் 35 கவிதைகளைத் தேர்ந்து 'கற்றறிந்த காக்கைகள்' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பை இப்போது வெளியிட்டிருக்கிறார். இக்கவிதைகள் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மனநிறைவைத் தருவன. கவிதைகளின் பாராட்டுக்குரிய முதல் அம்சம் அத்தனையும் புரிகின்றன! இன்றைய நவீன கவிதைக்காரர்கள் போல வாசிப்பவனுக்குப் புரிந்துவிடக்கூடாது என்கிற வறட்டுப் பிடிவாதமில்லாமல், தன் படைப்பு வாசகனைச் சென்றடைய வேண்டும்
என்ற கவனத்துடனும், பொறுப்புடனும் கவிஞர் செயல்பட்டிருப்பதே அவரது வெற்றிக்குக் காரணம் எனலாம். பூடகமில்லாத, படிமம் பின்நவீனத்துவம் போன்ற மர்மங்களற்ற, இறுக்கமும் சிடுக்குமில்லாத, நெஞ்சை ஈர்க்கும் இனிய எளிய, கவிதைகள் இவை. இவரது பாடுபொருள் சிக்கல் இல்லாத, அன்றாடம் அனைவருக்கும் தென்படுகிற யதார்த்த காட்சிகள் என்பதால் வாசகருக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. யாப்புடைத்த முயற்சிகள் என்றாலும் மரபுக் கவிதைகளின் சந்தநயமும் உறுத்தாத எதுகை மோனை அணி அழகும் விரவி வாசிப்புக்கு ஆர்வமூட்டுவன.

முதல் கவிதையான 'அற்றைத் திங்கள்', செ.கணேசலிங்கம் அவர்களின் 'நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே' போல கடந்த நாட்களின் நினைவை உருக்கமாகச் சொல்கிறது. தொகுப்பின் தலைப்புக் கவிதையான 'கற்றறிந்த காக்கைகள்' மென்னகை பூக்க வைக்கும் ஒரு ரசமான கவிதை காலத்துக்கீர்ர்ர்றபடி காக்கைகளும் தங்கள் நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொண்டு 'கமண்டலத்தைக் கவிழ்த்த காக்கைகளாக்கும் நாங்கள்' என்று கலகம் செய்யக் கற்றுக் கொண்டிருப்பதாகக் கூறுவது ரசமான கற்பனை.

புலம் பெயர்ந்த வலியை 'அணில்' என்னும் சின்னக் கவிதையில் பதிவு செய்திருக்கிறார் கவிஞர். 'புலம் பெயர்ந்த புங்கை மரம்', 'அகதி அணில்' என்னும் பதிவுகள் புலம் பெயர்ந்த அகதி வாழ்வின் உருக்கமான குறியீடுகள்.

புதிதாகக் கட்டிய வீட்டின் முன் புறத்து புங்கைமரம் வெட்டப்பட்ட போது அதில் கூடுகட்டி வாழும் பறவைகளுக்காக இரங்கும் 'வீடும் கூடும்' கவிதையிலும், முச்சந்தியில் சடைத்து நின்ற வேப்ப மரமொன்று வெட்டப்பட்டபோது 'மனுநீதி மனிதனுக்கு மட்டும்தானா?' என்று விசனப்படும் 'வேப்பமரத்திடம் ஒரு விசாரணை' என்ற கவிதையிலும் கவிஞரின் உயிர்நேயத்தைக் காண்கிறோம்.

அற்ப நோய்க்கும் ஆயிரக்கணக்கில் சிகிச்சைக்காக கொள்ளையடிக்க முயலும் இன்றைய அலோபதி மருத்துவர்களைக் கிண்டலடிக்கிறது 'பாலுண்ணிகள்' என்ற கவிதை. 'உறவுகள்' என்ற கவிதைஇன்றைய சில சௌகரியங்களால் ஏற்படும் இழப்பைச் சுட்டிக்காட்டுகிறது. கூரியர் சேவையால் தபால்காரரின உறவு
தொடராத யதார்த்தத்தை இக்கவிதை பேசுகிறது. 'அக்னிக்கோளம் ஆகும் பூமி'என்கிற கவிதையில் கவிஞரின் லோகோதய அக்கறையைப் பார்க்கிறோம்.

'நெல் விளைந்த வயல்களில்
கல் விளைந்து கட்டங்கள்' -

என்று தொடங்கி, மணல் கொள்ளையால் மறைந்து வரும் ஆறுகள், இறால் பண்ணைகளால் இழக்கும் மலர்த் தோட்டங்கள், இரும்பு ஆலைகளால் மறைந்துவரும் கரும்புத்தோட்டங்கள்....என மனிதர்கள் இயற்கையைச் சூறையாடி மறுபடியும் பூமியை அக்னிக்கோளம் ஆக்கும் கொடுமையை ஆற்றாமையோடு விவரிக்கிறது கவிதை.

மேனாட்டு இயற்கை உபாசகரான கவிஞர் Wordsworth போல, பேனா.மனோகரனும் இயற்கையழகில் நெஞ்சைப் பறிகொடுத்து, அதைத் தன் கவிதைகளில் பதிவு செய்பவர். அவருடைய கவிதைகளில் அதிகமும்
அத்தகையவையே. 'இயற்கையின் இரங்கராட்டினம்' எனும் கவிதையை அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். 'Doffodils' கவிதையில் Wordsworth தான் கண்ட மஞ்சள் மலர்களில் மயங்கிய காட்சியை விவரிப்பது போல,

'தகத்தகாயமாய்/ தங்க அரளிகளின்/ தீப ஆராதனைகள்,
அக்னித் தூக்கலாய்...../ ஆகாயத்துக்கு அர்ச்சனை செய்யும்/ இட்டிலிப்பூக்கள்
.....................................................
அடடா....இஃது/ இயற்கை நங்கை நடாத்தும்/ இரங்கராட்டினம்!' - என்று வியக்கிறார்.

ஈழம் பற்றி எரியும் கொடுமையையும் 'தீ இனிது....' என்று அங்கதமாய் எழுதுகிறார்:

'கீழ்வெண்மணியில்/ ஏர்வாடியில்/ தருமபுரியில்/ கோத்ராவில்/ குடந்தையில்/ பானிப்பட்டில்/
ஈழத்தில்/ ஈராக்கில்
பூமிப்பந்தின்/ எங்காவது ஒரு மூலையில்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
மனித ஜீவிதம்
எரிதலும் உயித்தலுமாய்'.

சில ஆண்டுகளுக்கு முன் உலகையே அதிரச் செய்த சுனாமியின் இரக்கமற்ற கோரத்தாண்டவம் இவரை வெகுவாகப் பாதித்ததை 'ஆழிப்பேரலை' என்ற கவிதை காட்டுகிறது. 'சூரசம்காரத்தின் சரித்திரம் தெரியும் - இந்த ஈர சம்காரத்தின் இதிகாசம் என்ன?' என்று வினா எழுப்புகிறார்.'கண்ணில் நீர் வரலாம்/ கடல் வரலாமா?' என்று மறுகுகிறார்.

இன்னும் எத்தனையெத்தனை ஏக்கங்கள், வியப்புகள், விசாரணைகள் சமூகக்கவலைகள்! 'பெட்டை', 'அஸ்தமனம்', 'சீதனச் சிறைகளில் சீதைகள்', 'சித்தார்த்தனைத் தேடும் போதிமரங்கள்' என ஆரோக்கியமான சிந்தனைகளை உள்ளடக்கிய கவிதைகள். எல்லாமே சிறப்பாக வந்திருக்கின்றன.

இவரது உவமைகள் வித்தியாசமானவை. இரை தாக்குதலுக்காக தரை இறங்கும் புறாக்களின் லாகவம் இராணுவ ஹெலிகேப்டர்களின் லாகவம் போல இருக்கிறதாம். சில வித்தியாசமான சொல்லாக்கங்களும் - 'மரக்குருதி', 'மழலை மச்சங்கள்' போன்றவை கவிதை வாசிப்பை சுகமாக்குகின்றன. வறட்டுத்
தனமான இன்றைய புதுக்கவிதை ஆக்கங்களில் அலுத்துப்போன கவிதைப் பிரியர்களுக்கு இவரது கவிதைகள் ஆசுவாசத்தையும் ஆனந்தத்தையும் அளிப்பவை. 0


நூல் : கற்றறிந்த காக்கைகள்.

ஆரிரியர் : பேனா.மனோகரன்.

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்., சென்னை.

Wednesday, October 19, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 20.எழுத்தாளர் சந்திப்பு - 7. சுரதா

அக்டோபர் 1968ல், கவிஞர் சி.மணியின் 'நடை' முதல் இதழில் கண்ணன் என்பவர் 'அகவன் மகளும் அகவும் மயிலும்' என்றொரு கட்டுரை எழுதி
இருந்தார். கவிஞர் சுரதாவின் 'தேன்மழை' என்னும் கவிதைத் தொகுப்பில்
'மயில்' என்னும் கவிதையின் முதல் வரியான, 'அகவும் மயிலே! அகவும் மயிலே!' என்பதை குறுந்தொகையில் வரும் ஒளவையாரின் கவிதையின்
முதல் வரியான'அகவன் மகளே! அகவன் மகளே!' என்பதுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரை அது. அதில் ஒளவையின் கவிதையால் தூண்டுதல் பெற்ற சுரதாவின் கவிதை அந்தத் தரத்தை எடடியிருக்கிறதா என்பதுதான் விமர்சனத்தின் மையம்.

அப்போது நான் சென்னை சென்றிருந்தேன். வழக்கம்போல இலக்கிய
அன்பர்ஒய்ஆர்.கே சர்மா அவர்களைச் சந்தித்து, இருவருமாய் வாலாஜா
சாலை வழியாக திருவல்லிக்கேணியில் இருந்த கவிஞர் ஞானக்கூத்தன் அறைக்குச் சென்று கொண்டிருந்தோம். அப்போது எதிரே அதே சாலையில் - ஜிப்பாவுடனும் தோளில்
சால்வையுடனும் வந்து கொண்டிருந்த ஒருவரைக் காடடி, "அதோ சுரதா வருகிறார். வாருங்கள் அறிமுகப்படுத்துகிறேன்" என்று அழைத்தார். நாங்கள் சாலையில் இறங்கி அவரைச் சந்தித்தோம். சர்மாவை முன்பே அறிந்திருந்த
சுரதா எங்களது வணக்கத்துக்குப் பதில் வணக்கம் செய்து விட்டு "என்ன செய்தி?" என்றார். சர்மா என்னை அறிமுகம் செய்து வைத்தார். சுரதா தலையை மட்டும் அசைத்தாரே தவிர என்னை அதிகம் கண்டு கொள்ளவில்லை. சர்மா 'நடை'யில் வந்துள்ள அவரைப் பற்றிய விமர்சனத்தைச் சொன்னார். "என்ன எழுதியிருக்கான்?" என்றார் ஒருமையில். 'அமுதும் தேனும் எதற்கு?',
'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' என்பன போன்ற அற்புதமான பாடல்களை
எழுதியவரைச் சந்தித்த மகிழ்ச்சியில் இருந்த எனக்கு, சற்று அதிர்ச்சியாக இருந்தது. சர்மா அவரிடம் மேற்கொண்டு பேசியதில் எனக்கு சுவாரஸ்யம் ஏற்படவில்லை. சுரதாவிடம் விடை பெற்றுக் கொஞ்ச தூரம் நடந்ததும், "என்ன இப்படி ஒருமையில் பேசுகிறார்?" என்றேன். "அவர் அப்படித்தான்! அதையெல்லாம் பொருட்டுத்த வேண்டாம்" என்றார் சர்மா

பிறகு 18 ஆண்டுகளுக்குப் பின், மதுரையில் நடந்த ஐந்தாவது உலகத் தமிழ்
மகாநாட்டின் போது, மீண்டும் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அந்த மகாநாட்டுக்கு
கல்வித் துறையிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு மேல்நிலைப்
பள்ளித் தலைமை ஆசிரியரும் ஒரு தமிழாசிரியரும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அதன்படி விருத்தாசலம மாவட்டத்தின் பிரதிநிதியாக நான் அழைக்கப்
பட்டிருந்தேன். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளக்குரிச்சி மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் 'கவிஞர் செ.வ'என்று அறியப்பட்டிருந்த புலவர் செ.வரதராசன் அவர்களை மாநாட்டில் சந்தித்தேன். அவர் ஒத்த இலக்கிய ரசனை காரணமாக என்னோடு நீண்ட நாட்களாக நட்புக் கொண்டவர்; கவிஞர் சுரதாவின் அன்பர். அன்று மாலை, தான் கவிஞர் சுரதாவை அவர் தங்கி இருக்கும் விடுதியில் சந்திக்க இருப்பதாகவும் என்னையும் அழைத்துப் போய் அறிமுகப்படுத்துவதாகவும் அழைத்தார். சுரதா அவர்களைப் பல ஆண்டுகளுக்கு
முனபே சந்தித்திருந்ததையும் அப்போது அவர் என்னைக் கவனிக்கவில்லை என்றும் சொல்லி, அன்றிரவு அவரைச் சந்திக்க ஒப்புக் கொண்டேன்.

அதன்படி அன்றிரவு 8 மணியளவில் இருவரும் சுரதா அவர்கள் தங்கி இருந்த
விடுதிக்குச் சென்றோம். அவரது அறைக்குள் நுழையுமுன் செ.வ அவர்கள்
என்னிடம் "கவிஞரைப் பார்க்கும்போது அவரது நூல் ஒன்றை வாங்கினால் மகிழ்ச்சி அடைவார்" என்றார். எனக்கு அதில் விருப்பமில்லை என்பதை என் முகமாற்றத்திலிருந்து உணர்ந்து, "உங்களுக்கும் சேர்த்து நானே தந்து விடுகிறேன். நீங்கள் அவரிடமிருந்து புத்தகத்தை மட்டும் வாங்கிக்கொண்டால் போதும்" என்றார்.

உள்ளே நுழைந்து வணக்கம் தெரிவித்த பின், கவிஞரிடம் என்னைப் பற்றிச் சொல்லி அறிமுகப்படுத்தினார் செ.வ. என்னை முன்பே பார்தத நினைவு அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. நானும் அது பற்றிச் சொல்லவில்லை. எடுத்தவுடனேயே, "நீங்க என்ன ஜாதி?" என்று கேட்டார் சுரதா. எனக்குக் கொஞ்சம் கசப்பாக இருந்தது. அதிருப்தியுடன் செ.வ வைப் பார்த்தேன். ஜாதியைச் சொல்வதில் எனக்குக் கூச்சம் ஏதும் இல்லைஎன்றாலும் அந்தக் கேள்வி, சாதிமறுப்புச் சிந்தனையாளர் புரட்சிக்கவிஞரின் தாசனான ('சுப்புரத்தினதாசனா'ன) சுரதாவிடமிருந்து வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. செ.வ என் தயக்கத்தை உணர்ந்து எனக்குப் பதிலாக அவரே பதில் சொன்னார். அத்தோடு விடவில்லை கவிஞர்! "அங்க எட்மாஸ்டர் ஒருத்தன் - செவிடன் - உடையான் ஒருத்தன் இல்லே.....?" என்று ஒருமையிலும் நாகரீகமற்றும் கேட்டார். எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. அவர் விசாரித்தவர் என் சக தலைமை ஆசிரியர்; சற்று செவிப்புலன் குறையுளவர். ஜாதியைக் குறிப்பிட்டதுடன் ஒருவரது ஊனத்தைச் சொல்லிக் கேட்பது அநாகரீகத்தின் உச்சம் என்று பட்டது. இதற்கும் செ.வ வே பதில் சொன்னார். அதற்கு மேல் அங்கு இருக்க எனக்கு விருப்பமில்லை. எழுந்து போக முயற்சித்தேன். ஆனால் செ.வ என் கையைத் தொட்டு, கண்களால் பொறுத்துக் கொள்ள ஜாடை காட்டினார். ஆனால் கவிஞர் என் முக மாற்றம், அதில் தென்பட்ட அதிருப்தி எதையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மேற்கொண்டு அவர் செ.வ வுடன் பேசிய எதையும் நான் கவனிக்கவில்லை. பின்னர் அவரிடம் எனக்கும் என்று சொல்லிப் பணம் கொடுத்த இரண்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டு விடை பெற்றார் செ.வ..வெளியே வந்ததும் அவரது பண்பாடற்ற பேச்சு பற்றிய என் அதிருப்தியை செ.வ விடம் தெரிவித்தேன். "அவர் அப்படித்தான். அதைப்பொருட்படுத்த வேண்டாம். எல்லா மேதைகளிடமும் இப்படி ஏதாவது ஒரு குறைபாடு இருக்கவே செய்கிறது" என்று சர்மாவைப் போலவே சொல்லி என்னைச் சமாதானபடுத்தினார்.

அடுத்த சந்திப்பு பிறகு சில ஆண்டுகள கழித்து கள்ளகுறிச்சியில கவிஞர் ஆராவமுதன்அவர்களது பாராட்டு விழாவில் நடந்தது. அவ்விழாவிற்குத் தலைமை தாங்க வந்திருந்தார் சுரதா. விழா தொடங்கு முன்னரே வந்து மேடையின் எதிரே அமர்ந்திருந்தவரின் அருகில், ஆராவமுதன் என்னை வரவேற்று அமரச் செய்து அவருக்கு என்னை அறிமுகம் செய்தார்.
இப்போதும் கவிஞருக்கு என்னை முன்பே பார்த்த ஞாபகம் இல்லை போலும்! தலைஅசைப்பு மட்டுமே செய்தார். உடனே தன் கைப்பையைத் திறந்து ஒரு ரசீது புத்தகத்தை எடுத்து அதில் ஏதோ எழுதிக் கிழித்து என்னிடம் கொடுத்தார் - விசிட்டிங் கார்டைக் கொடுப்பது போல. அந்த ரசீதைப் பார்த்தேன். அது அவரது மணிவிழாவிற்கான நன்கொடைக்கானது. என் பெயர் கூட அதில் இல்லை. தொகை மட்டும் ரூ.25 என்று எழுதப் பட்டிருந்தது. 'இது என்ன நாகரீகம்' என்பது போல நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். அதற்குள் அவர் வேறு யாருக்கோ ரசீது எழுதிக் கொண்டிருந்தார். நான் ஏதும் பேசாமல் எரிச்சலோடு ரசீதைக் கையில் வைத்தபடி இருந்தேன். அரைமணி சென்ற பிறகு அவரை மேடைக்கு அழைத்தார்கள். அவர் என் பக்கம் திரும்பி கை நீட்டினார். நான் ரசீதை அவரிடம் திருப்பி நீட்டினேன். அதை எதிர் பார்க்காத அவர் "பணம்?" என்றார். "எனக்கு வேண்டாம். நான் கேட்கலியே?" என்றேன் - அவர் மீது எனக்கிருந்த எல்லா எரிச்சல்களுக்கும் பழிவாங்குகிற மாதிரி! எதுவும் பேசாமல் கோபத்துடன் ரசீதைப் பிடுங்கிக் கொண்டு மேடைக்குப் போனார். பெயர் போடாததால் அந்த ரசீதை இன்னொருவருக்குக் கொடுத்து விடலாம்! பிறகுதான் கேள்விப்பட்டேன் -
அது அவரது ஆத்மார்த்த சீடர்கள் நிரம்பிய ஊர். அவரது இத்தகைய செயல்கள் எல்லாம் அவர்களுக்குத் திருவிளையாடல்கள் போல - யாரும் அச்செயல்களுக்கு முகம் சுளிப்பதிலை என்று.

அதன் பிறகு சில நிகழ்ச்சிகளில் அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் நேர்ந்ததுண்டு. ஆனால் மறுபடியும் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டேன். 0

Tuesday, October 11, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 19. எழுத்தாளர் சந்திப்பு - 6. 'சிற்பி'பாலசுப்பிரமணியன்.

அண்மையில் பவள விழாக் கண்ட கவிஞர்.சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்கள் என்னுடைய கல்லூரித் தோழர். அண்ணாமலைப் பல்கலையில் 1954ல் அவர் தமிழ் ஆனர்ஸ் படித்த அதே காலத்தில் நான் பி.எஸ்.சி கணிதம் பயின்றேன். ஒரே விடுதியில் வெவ்வேறு சிறகுகளில் தங்கிப் படித்தோம். அவருடைய வகுப்புத் தோழரும் எங்கள் வட்டாரத்துக்காரருமான 'மருதூர் இளங்கண்ணன்'
(பாலகிருஷ்ணன்) என்ற நண்பர் மூலம் தான் எனக்கு சிற்பியின் அறிமுகம்
கிட்டியது. அப்போது 'சிற்பி' என்ற பெயரில் தான் கவிதைகள் எழுதி வந்தார்.
'சிற்பி' என்ற பெயரில் இலங்கையில் ஒருவர் எழுதியதால் பின்னர் 'சிற்பி'
பாலசுப்பிமணியன் என்று மாற்றிக் கொண்டார். 'முத்தமிழ்' என்ற கையெழுத்து இதழை அப்போது அவர் நடத்தினார். அவருடன் பயின்ற 'பதிப்புச் செம்மல்' மெய்யப்பன்(அப்போது அவர் பெயர் சத்தியமூர்த்தி) அவர்களையும் சிற்பியின் அறையில் தான் முதலில் சந்தித்தேன்.

சிற்பியினுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது 'முத்தழிழ்' காரணமாகத்தான்.
இதழின் ஆசிரியராக அவரும் திருவாளர்கள் மெய்யப்பன், மருதூர் இளங்கண்ணன், வேல்முருகன் மற்றும் சில ஒத்த ரசனை உடைய நண்பர்களும் ஆசிரியக் குழுவில் இருந்தனர். இதழின் ஓவியராக என்னை ஏற்றுக்கொண்டார் சிற்பி. நான் ஓவியம் வரைவதை அறிந்திருந்த மருதூர் இளங்கண்ண்ன், அதற்காகாகத்தான் அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

'முத்தமிழ்' காலாண்டு இதழாக, 'கல்கி' அளவில் வெளியிடப்பட்டது. அட்டைப்
படங்களையும் உள்ளே தலைப்பு மற்றும் சிறு சிறு ஓவியங்களையும் வரைய சிற்பி எனக்கு வாய்ப்பளித்தார். சங்க இலக்கியப் பாடல்களுக்கான ஓவியங்கள் தான் அட்டையில் வெளியாயின. அதற்கான விளக்கங்களை சிற்பி உள்ளே எழுதினார். சிற்யின் படைப்புகள் நிறைய வந்தன. சொல்லப் போனால் சிற்பி பின்னாட்களில் புகழ் பெற்ற கவிஞராவதற்கு 'முத்தமிழ்', பயிற்சிக் களமாக இருந்தது எனலாம். மெய்யப்பனும் இளங்கண்ணனும் இதர தமிழ் பயின்ற நண்பர்களும் சிறப்பான கவிதை, கட்டுரைகளை 'முத்தமிழி'ல் எழுதினார்கள். ஓராண்டு முடிந்ததும் 'முத்தமிழி'ன் ஆண்டு மலரை 1955ல் சிறப்பாகத் தயாரித்தார் சிற்பி.

கல்கி, அமுதசுரபி தீபாவளி மலர் அளவுக்கு பெரிய அளவில் பைண்டு செய்யப்பட்டு ஆர்டதாளில் ஜாக்கட் அட்டையுடன், அச்சு மலருக்கு இணையாக இருந்தது அம்மலர். சென்னிகிருஷ்ணன் என்ற என் வகுப்பு நண்பர் 'அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்' என்ற பாடலை நினைவூட்டும் - பாரிமகளிர் நிலவொளியில் அமர்ந்து ஏங்குவதைச் சித்தரிக்கும் காட்சியை அழகான வண்ணத்தில் வரைந்திருந்தார். நான் மலரின் உள்ளே பல ஓவியங்களையும், தலைப்புகளையும் வரைந்திருந்தேன். எனக்கும் கூட 'முத்தமிழ்' பயிற்சிக்களமாக இருந்தது என்றால் மிகை இல்லை.

ஆண்டு மலர் வெளியிட்டதும் 'முத்தமிழ்' இதழின் நினைவாக சிற்பி அவர்கள்
ஆசிரியக் குழுவினரையும் அதன் ஓவியர்களான எங்கள் இருவரையும் கொண்டதான ஒரு போட்டோ எடுக்கவும் ஏற்பாடு செய்தார். காலடியில் 'முத்தமிழ்' இதழ்களும் வைக்கப்பட்டிருந்த அந்தப் படம் 50 ஆண்டுகள் கடந்தும் என் வசம் இன்னும் உள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன் சிற்பி அவர்கள் பாரதியார் பலகலையில் தமிழ்த்துறைத்
தலைவராக இருந்தபோது என்னையும், நண்பர்கள் பூவண்ணன், புவனைகலைச்செழியன், தம்பிசீனிவாச்ன், பூவை அமுதன் போன்ற 16 குழந்தை இலக்கியப் படைப்பாளிகளை அழைத்து கோவையில் 'குழந்தை இலக்கியக் கருத்தரங்கு' நடத்திய போது, அவர் எங்களுக்கு அளித்த முக்கியத்துவத்தையும், விருந்தோம்பலையும் மறக்கவியலாது. தொடர்ந்து அவரிடம் தொடர்புக்கு வாய்ப்பு ஏற்படாதிருந்தும் இது போன்ற நிகழ்வுகளில் அவ்வப்போது சந்தித்திது வந்தேன்.

அதன் பின்னர் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் என்னை மறவாது அதே அன்புடன் இன்றும் நட்புப் பாராட்டும் அவருடைய இனிய பண்பில நான் மிகவும் நெகிழ்கிறேன். அண்மையில் நடைபெற்ற அவரது பவளவிழாவிற்கு எனக்கு அழைப்பு அனுப்பியதுடன் விழாஔ நினைவு மலருக்கு எனது கட்டுரையையும் கேட்டிருந்தார். உடல் நலிவு காரணமாய் என்னால் நேரில் சென்று விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.வாழ்த்தும் கட்டுரையும் அனுப்பி வைத்தேன். உடன் முத்தமிழ் ஆண்டு மலரின் நினைவாக எடுக்கப்பட்ட போட்டோவின் நகலையும் அனுப்பி வைத்தேன். 0

Friday, October 07, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 18.எழுத்தாளர் சந்திப்பு - 5. சி.மணி

சென்னை சென்றபோதெல்லாம் நான் தவறாமல் சந்தித்த இலக்கிய நண்பர்-
திரு.ஒய்ஆர்.கே.சர்மா என்பவர். நண்பர் பி.ச.குப்புசாமி அவர்கள் மூலம்
அறிமுகமானவர். அவருக்கு எல்லா எழுத்தாளர்களிடமும் நெருக்கமான பழக்கம்
உண்டு. ஜெயகாந்தனின் அணுக்கக் குழுவினரில் ஒருவர். எல்லா இலக்கியப்
பத்திரிகைகளுடனும், 'தமிழ்ப் புத்தகாலயம்' போன்ற பதிப்பகங்களுடனும்
தொடர்பு உடையவர். சென்னையில் நடக்கும் எல்லா இலக்கியக் கூட்டங்களிலும்
அவரைப் பார்க்கலாம். சென்னை சென்றதும் முதலில் அவரைத்தான் பார்ப்பேன்.
அன்று சென்னையில் எங்கெங்கு, என்னென்ன இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்க
உள்ளன என்று தெரிவிப்பார். அங்கெல்லாம் என்னையும் அழைத்துப் போவார்.
அங்கு வரும் எழுத்தாளர்களை அறிமுப்படுத்துவார். இலக்கியச் சிற்றிதழலாளர்
களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அப்படி அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் - 70களில் பரபரப்பை ஏற்படுத்திய
இலக்கிய இதழான் 'ஒரு வல்லின மாத ஏடு' என்று பிரகடனப்படுத்திக் கொண்ட
'கசடதபற'வின் ஆசிரியர் குழு, மற்றும் அதன் முக்கியப் படைப்பாளிகளான
திருவாளர்கள் ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, ந.முத்துசாமி ஆகியோர். திருவல்லிக்கேணியில் திரு.ஞானக்கூத்தன் அறை தான் 'கசடதபற'வின் அலுவலகம். அங்கு தான் அநேகமாக எல்லா நாட்களிலும் கசடதபற குழுவினர் மாலையில்சந்திப்பார்கள். சர்மாவின்அறிமுகத்தால் நான் சென்னையில் இருக்கும் நாட்களில்எல்லாம், அவருடன் சென்று அவர்களது உரையாடல்களில் கலந்து கொள்வேன். அப்படிப்பட்ட ஒரு சந்திப்பில் தான் திரு.ந.முத்துசாமியுடன் பரிச்சயம் ஏற்பட்டது.

அறிமுகம் ஆனபிறகு முத்துசாமி, என் ஊர், நான் படித்த கல்லூரி, படித்த ஆண்டு பற்றியெல்லாம் விசாரித்தர். நான் அண்ணாமலையில் 1956-57ல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்ததைச் சொன்னதும், "அப்படியானால் உங்களுக்கு சி.மணியைத் தெரிந்திருக்க வேண்டுமே! அவரும் அந்த ஆண்டில் தான் அங்கு ஆசிரியர் பயிற்சி பெற்றார்", என்றார். அப்போது சி.மணி 'எழுத்து' பத்திரிகை மூலம் புதுக்கவிதைக் கவிஞராய் பிரபலமாகி இருந்தார். "அப்படி யாரும் என்னுடன் படித்ததாக நினைவில்லையே" என்றேன். "இல்லை, உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இன்று மாலை அவர் வருகிறார். பாருங்கள் தெரியும்" என்றார். எனக்கு வியப்பாகவும் புதிராகவும் இருந்தது. அப்போது அண்ணாமலையில் படித்து 15 ஆண்டுகள் ஆகி இருந்தபோதிலும் என்னுடன் படித்த 75 பேரையும் நன்றாக நினைவில் இருந்தது. எனவே பிரபல கவிஞரான சி.மணி என் வகுப்புத் தோழரா என்ற வியப்பில் அவரைப் பார்க்க ஆர்வமுடன் காத்திருந்தேன்.

மாலையில் ஞானக்கூத்தன் அறைக்குச் சென்ற போது, முத்துசாமி, அருகில்
அமர்ந்திருந்த ஒருவரைக் காட்டி, "இதோ, இவர் தான் சி.மணி" என்றார்.
"அடடே! நம்ம பழனிசாமி!" என்று நான் மகிழ்ச்சியில் கூவினேன். "ஆமாம், சி.மணி என்கிற பெயரில் எழுதுகிறவர் பழனிசாமி என்று நான் சொல்லத் தவறி விட்டேன்"என்றார் முத்துசாமி.

சி.மணி, பல ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கிற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்."முத்துசாமி உங்கள் பெயரைச் சொன்னதும் புரிந்து கொண்டேன். 'கன்னாங்குளம் கேம்பி'ல் நீங்கள் வரைந்த பாரதி போர்ட்ரெயிட்டை மறக்க முடியுமா? எப்படி இருக்கிறீர்கள்?" என்று விசாரித்தார் மணி. இப்படித்தான் என் வகுப்புத் தோழரான சி.மணியுடன் எனக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. ஆசிரியர் பயிற்சிக்குப் பிறகு ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, குமாரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அப்போது அவர் ஆங்கில விரிவுரையாளராக இருந்தார் என அறிந்தேன்.

பழனிசாமி எங்களுடன் பயின்றபோது மிகவும் அமைதியானவர். அதிர்ந்து
பேசாதவர். அவரது குரலே பலருக்குக் கேட்டிராது. மெலிந்த உருவம். தீர்க்கமான
கண்கள். எப்போதும் மெல்லிய பன்னகை. எல்லோராலும் விரும்பப்படுகிற அரிய
பண்பாளர். எங்களுடன் பயின்றபோது அவர் கவிதை எழுதுவார் என்று தெரியாது.
ஆனால், அப்போதே நான் பத்திரிகைகளில் கதைகள் எழுதி வந்ததை அவர் அறிவார்.

அதன் பிறகு, சென்னையில் கிடைத்தபோதெல்லாம் அவரைச் சந்தித்து வந்தேன்.ஒருமுறை, "சி.மணி, வே.மாலி என்ற பெயர்களில் நீங்கள எழுதிய கவிதைகளை 'எழுத்து'வில் படித்திருக்கிறேன் ஆனால் நீங்கள் தான் அவர் என்று அப்போது தெரியாது. தெரிந்த பிறகு மீண்டும் தேடிப் படித்தேன்" என்றேன். என் கவிதைகள் எப்படி உள்ளன என்று அவர் கேட்கவில்லை. நானாகச் சொன்னேன். "ஆனால் இப்போதும் உங்கள் கவிதைகள் எனக்குப் புரியவில்லை. புதுக்கவிதைகளை என்னால் ரசிக்க முடியவில்லை" என்றேன். அதற்காக அவரது முகம் வாடவில்லை. என்னிடம் விவாதிக்கவோ விளக்கவோ இல்லை. மென்னகை மட்டும் அவரது இதழ்களில் மலர்ந்தது. அவ்வளவு சாந்தசீலர் அவர். ஆனால் பின்னாளில் எனக்காகத்தானோ என்னவோ 'புததுக்கவிதை புரியவில்லை' என்ற தலைப்பில் 'நடை' இதழில் ஒருகட்டுரை எழுதினார்.

பிறகு அவரும் ந.முத்துசாமி போன்ற நண்பர்களும் சேர்ந்து 'நடை' என்றொரு
இலக்கிய இதழைத் தொடங்கியபோது, முதல் இதழைப் படித்து விட்டுப பாராட்டி
அவருக்குக் கடிதம் எழுதினேன். முதல் இதழில் சங்கக் கவிதைப் பாணியில்
சி.மணி என்ற பெயரில் கீழ்க்கண்ட கவிதையை எழுதி இருந்தார்.

'காதல் காதல் என்ப; காதல்
வெறியும் நோயும் அன்றே; நினைப்பின்,
இறக்கம் நோக்கிப் பாயும் நீராம்;
சாதல் கவிந்த வாழ்வில்
வானம் தந்த வாம நீராம்' .

- இந்தக் கவிதை எனக்குப் புரிகிற மாதிரி இருந்தது. அதையும் அவருக்கு எழுதி
இருந்தேன். கவிதை மட்டுமல்லாமல், 'செல்வம்' என்ற பெயரில் 'திரைப்படப் பாடல்' என்றவொரு ஆய்வுக் கட்டுரையும் எழுதியிருந்தார். 3வது இதழுடன் யாப்பிலக்கணம் பற்றி 'செல்வம்' என்ற பெயரில் எளிமையான, கவிதை எழுதுவோருக்குப் பாடப்புத்தகம் போன்ற ஒரு 28 பக்க இணைப்பையும் எழுதி வெளியிட்டார். ஆங்கிலப் பேராசிரியராக இருந்தும, ஒரு தமிழ்ப் பேராசிரியரையும் விடத் தெளிவுடன் எழுதி இருந்தது மிகுந்த பாராட்டுக்குள்ளாயிற்று .

அதே இதழில் 'வாழ்வு தந்த செல்வன்' என்ற, சி,.ஏ.பாலன்,மலையாளத்திலிருந்து
மொழிபெயர்த்திருந்த எம்.டி வாசுதேவன் நாயரின் சாகித்ய அகாதமி விருது பெற்ற
'நாலு கெட்டு' என்ற நாவலுக்கு சி.மணிகேட்டுக்கொண்டபடி, நான் விமர்சனம்
செய்திருந்தேன். அதுதான் நான் முதன் முதல் எழுதிய விமர்சனமும் ஆகும்.

தரமான படைப்புகளுடனும், புதிய சோதனை முயற்சிகளுடனும் சிறப்பாக
வெளிவந்து, தனக்கென ஒரு சிறப்பிடத்தை சிற்றிதழ் வரலாற்றில் பதித்த 'நடை'
8 இதழ்களுடன் நிறுத்தப்பட்டு விட்டது- இலக்கிய உலகுக்குப் பெரிய இழப்பு
என்றே சொல்ல வேண்டும். வழக்கமாக சிற்றிதழ்கள் நின்று போவதற்குப்
பொருளாதார நெருக்கடிதான் காரணமாய் இருந்திருக்கிறது. ஆனால் 'நடை'
அதனால் நின்று போய்விடவில்லை. நடையை நடத்தியவர்கள் அனைவரும்
வசதியான வருவாய் வரும் நல்ல வேலையிலதான் இருந்தார்கள். அதனால்
அவர்களுக்குப் பண நெருக்கடி இல்லை. ஒரு இலட்சியத்தோடு நடத்தியவர்கள்,
வெளியிடுவதற்குத் தரமான படைப்புகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில்
தாமாகவே வெளியீடை நிறுத்தி அதிலும் ஒரு சாதனையைப் படைத்தார்கள்.

பின்னர் பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்பு விட்டுப்போயிற்று.
அவரும் பணி ஓய்வுக்குப்பின் எழுதுவதை நிறுத்திக் கொண்டதாகக் கேள்விப்
பட்டேன். உடல் நலிவு காரணமாக, இலக்கிய நிகழ்வுகளையும் தன்னைச் சந்திக்க வருபவர்களையும் தவிர்த்து வந்ததாகவும் அறிந்தேன்.

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் அவருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு
நேரிட்டது. அவருக்கு 'விளக்கு' பரிசு வழங்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள் மூலம்
அறிந்து அவருக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதினேன். அவரும் நன்றி தெரிவித்து
அதற்குப் பதிலும் எழுதினார். பிறகு நான் விரும்பினாலும் அவருடன் தொடர்பு
கொள்ள முடியாதபடி 2009 ஏப்ரலில் அவரது மறைவுச் செய்தியையும், அடுதடுத்த
மாதங்களில் அவரது மறைவிற்கான அஞ்சலிக் கட்டுரைகளையும் இலக்கிய
ஏடுகளில் படிக்க நேர்ந்தது. இனிய நண்பரை நானும், ஒரு சிறந்த படைப்பாளியை
இலக்கிய உலகமும் இழந்த சோகத்தை, இன்னும் மனம் வலிக்க எண்ணிப்
பார்க்கிறேன். அவரது 'வரும் போகும்' கவிதைத் தொகுப்பு மட்டும் அவரை
நினைவூட்ட என்னிடம் இருக்கிறது. 0

Saturday, October 01, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 17. எழுத்தாளர் சந்திப்பு - 4. (மௌனி)

“நினைவுப்பாதை” முற்றிலும் ஒரு மாறுபட்ட வாசிப்பாகவே எனக்கு அமைந்தது. இப்பொழுது கூட அக்கதையில்(கதையா?) வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவிருக்கிறதே தவிர அவற்றின் தன்மைகள் விளங்கவில்லை எனக்கு. மேலும் பெரும்பாலான இடங்களில் வார்த்தை விளையாட்டு காணப்படுகிறது. அதுவே வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் தெரியவில்லை. அவர் எழுத்து நடையே அப்படிதானா? என்று எண்ணத் தோன்றுகிறது"

- நகுலனின் 'நினைவுப்பாதை' நூலை வாசித்த பிரவின் என்கிற வாசகரின்
விமர்சனம் இது. 'மணிக்கொடி' எழுத்தாளர் திரு.மௌனி அவர்களது சிறுகதைகளைப் படித்தபின் எனக்கும் இதே எண்ணம்தான் எழுந்தது. இன்னும் அதில் மாற்றமில்லை. புதுமைப்பித்தன் அவரை 'தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்' என்று விமர்சித்தது எதை உத்தேசித்து என்று எனக்கு இன்றளவும் புரியாத புதிர்தான். 'நிந்தாஸ்துதி' போல புகழ்வது போல கேலி செய்திருக்கிறாரோ என்று கூட நினைத்திருக்கிறேன்.ஜெயகாந்தன் அவரது 'மாறுதல்' கதைதான் தனக்குப் பிடித்த கதை என்று சொன்னதும் எனக்கு ஒத்துப் போகவில்லை. அந்தக் கதை மட்டுமல்ல அவரது மற்ற கதைகளும் என்னை ஈர்க்கவில்லை. 'எவற்றில் நடமாடும் நிழல்கள நாம்' என்பது போன்ற ஓரிரு வரிகள் ஒருவித மயக்கத்தைத் தருகின்றன என்ற அளவில் மட்டுமே அவரது எழுத்து என்னுள் நிற்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன் 18-1-92 &19-1-92 தேதிகளில் நெய்வேலியில் 'வேர்கள் கலை இலக்கிய அமைப்பின் சார்பில் 'வேர்கள் ராமலிங்கம்' ஏற்பாடு செய்த 'மௌனி கதைகள்'என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், மௌனி கதைகளைப் பதிப்பித்தவரும் இன்றளவும மௌனியைத் தூக்கிப் பிடிப்பவருமான திரு.கி.சச்சிதானந்தம் அவர்களும் மற்றும் எம்.டி.முத்துக்குமார், 'லயம் சுப்பிரமணியம் ', சா.தேவதாஸ், எம்.வேதசகாயகுமார், பூர்ணசந்திரன், ஞானி, அ.மார்க்ஸ், தமிழவன் எனப் பலரும் மௌனியின் படைப்புகளை விதந்து விமர்சித்தர்கள். அதில் கலந்து கொண்ட எனக்கு அப்போதும் மௌனியிடம்
ஏதும் பிரமிப்பு ஏற்படவில்லை. எல்லோரும் பாராட்டுகிற எழுத்தைப் புரியவில்லை என்று சொல்வது எனது அஞ்ஞானத்தைக் காட்டுவதாக யாராவது நினைத்தால் அது என்னைச் சங்கடப் படுத்தாது. உண்மையில் அதிகம் பேர், 'புரியவில்லை' என்று சொல்லக் கூச்சப்பட்டே அப்படிப் பாராட்டி இருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

அதற்கு முன்பாகவே மௌனி அவர்களை நான் திட்டமிடாமலே சந்திக்கும் ஒரு
வாய்ப்பு ஏற்பட்டது. 1970ல் ஓருநாள் நான் அவர் வசித்த சிதம்பரத்துக்கு ஒரு
வேலையாகச் சென்றிருந்த போது அது நிகழ்ந்தது. தெற்கு ரத வீதியில், அவர் வசித்த சத்திரம் போன்ற வீட்டிற்கு அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் விருத்தாசலம் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்த நேரத்தில், மௌனி இங்குதான் குடி இருக்கிறார் என்பதை முன்பே கேள்விப்பட்டிருந்தது நினைவுக்கு வரவே, அவரைப் போய் பார்த்தால் என்ன என்று திடீரென்று தோன்றவே உடனே பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு அவரது வீட்டை நோக்கி நடந்தேன்.

முன்புறம் ஒரு சின்ன திண்ணையும், மறுபுறம் விசாலமான நீண்ட திண்ணையும் இருந்தன. சின்ன திண்ணை மீது, கச்சலான கருப்பு உடம்புடன, சரியாகச் சீவப்படாமல் சிலும்பி நின்ற வெள்ளை முடியுடன், தீர்க்கமான பர்வையுடன் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். 'மௌனி கதைகள்' பின்னட்டையில் பார்த்த உருவம் போல இருந்தது. அருகில் நெருங்கி வணக்கம் தெரிவித்தேன். அவர் நிமிர்ந்து உட்கார்ந்து "வாங்கோ, யாரப் பார்ககணும்" என்றார். "மௌனி அவர்கள்.........." என்று இழுத்தேன். "நாந்தான்! என்ன வேணும்?" என்றார். நான் என்னை பற்றியும், என் எழுத்து முயற்சி பற்றியும் சொல்லி ஒரு மூத்த எழுத்தாளர் என்ற முறையில் அவரைப் பார்க்க வந்ததாகச் சொன்னேன். "என்ன எழுதி இருக்கேள்?" என்று கேட்டார். எப்போதும் கைப்பையில் வைத்திருக்கிற அந்த ஆண்டில் வந்த என் முதல் சிறுகதைத் தொகுதியை எடுத்து
நீட்டினேன். அதை வாங்கிப் புரட்டியபடி, "என் கதைகளைப் படிச்சிருக்கேளா?" என்று கேட்டார். "படிச்சிருக்கிறேன்" என்றேன். பின் தயக்கத்தடன் "ஆனால் உங்கள் கதைகள் எனக்குப் புரியவில்லை" என்றேன். கையிலிருந்த என் புத்தகத்தைக் கீழே வைத்து விட்டு, "என்ன புரியவில்லை? எந்தக் கதை புரியவில்லை?" என்று கேட்டார். "எனக்குச் சொல்லத் தெரியவில்லை. எந்தக் கதையும் புரியவில்லை" என்றேன். அவர் என் பதிலால் ஏமாற்றமோ அதிருப்தியோ கொண்டமாதிரி தெரியவில்லை. "திரும்பவும் படிச்சுப் பாருங்கோ!" என்று மட்டும் சொன்னார்.

அப்போதுதான் பெரிய திண்ணையில் கடைசியில், ஒருவர் சம்மணமிட்டு
அமர்ந்திருந்ததைக் கவனித்தேன். அவரது முகம் எனக்குப் பரிச்சயமானது போல்
தோன்றியது. அவர் எங்கள் பக்கம் பார்காமல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த வெள்ளைப் பேன்ட், வெள்ளைச் சட்டையில் - அண்ணாமலையில் நான் பயின்ற கடைசிநாட்களில் புகுமுக வகுப்பில் பயின்ற கிரிக்கட் விளையாட்டுக்கார மாணவரை ஒத்து இருக்கவே, "அவர்......" என்று இழுத்தேன். "அவன் என் பையன்!" என்றார். "கல்லூரியில் பார்த்திருக்கிறேன்" என்றேன். "அவனுக்கு கொஞ்சம் சித்த சுவாதீனம் இல்லை" என்று எந்த முகமாற்றமும் இன்றிச் சொன்னபோது அதிர்ந்து போனேன். கொஞ்சமும் இங்கிதமின்றி, ஒரு தந்தையிடமே அப்படி ஒரு விசாரிப்பைக் கேட்டதற்காக மிகவும் வருந்தினேன். அதற்கு மேல் அவரிடம் பேச்சைத்
தொடர எனக்குச் சங்கடமாய் இருந்தது. நெருப்பில் கை வைத்துவிட்ட துடிப்புடன் எழுந்து விடை பெற்றேன். அவரும் மேற்கொண்டு பேசாமல் தலை அசைத்து விடை கொடுத்தார்.

பின்னாளில், அதற்கு முன்னதாக அவரது இன்னொரு மகன் இறந்து போனதை
அறிந்தேன். புத்திர சோகத்தில் அவர் இருந்ததை அறியாமல் அவர் கதை பற்றிய என் கசப்பான விமர்சனத்தை அவரிடமே பேசி விட்ட எனது இங்கிதமற்ற செயலை எண்ணி, அதன் பின் அவர் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறேன். 0