Friday, April 14, 2006

கடித இலக்கியம் - 1

'சந்திரமௌலி' என்ற புனைப்பெயரில் 1970களில் 'தினமணிகதிரி'ல் நட்சத்திரக் கதைகளும் பின்னர் அப்பெயரில் அற்புதமான கவிதைகளும் எழுதியுள்ள திரு.பி.ச.குப்புசாமி அவர்கள் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர்.

கம்ப ராமாயணத்திலும், திவ்யப் பிரபந்தத்திலும் திளைத்து அவைபற்றி அருமையாய்ச் சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். 'இராமகிருஷ்ண அமுதத்தி'ல் உருகி உருகி மெய்மறப்பவர். திரு.ஜெயகாந்தன் அவர்களோடு கடந்த 50 ஆண்டுகளாய் பக்தியும் பரவசமுமாய் அவரது பாசத்துக்கும் பகிர்தலுக்கும் உரியவராய் இருப்பவர். அவரது அணுக்கத் தோழர்; தொண்டர். அவரது 'கற்றுச்சொல்லி'யாய் அவரது அறிவார்ந்த பேச்சுக்களையும், அபூர்வமாய்ப் பீரிடும் கவிதைகளையும் நெஞ்சுக்குள் பதிவு செய்துகொண்டு அவ்வப்போது எங்கள் வேண்டுகோளுக்குக்கிணங்க அஞ்சல் செய்பவர். எனக்கு முன்பே ஜெ.கா அவர்களுடன் பழக்கம் உண்டெனினும் அவரால்தான் எனக்கு நெருக்கமும் பரவசமும் ஏற்பட்டன. 1964ல் பரிச்சயமான எங்கள் நட்பு, இன்றுவரை கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாய் தொடர்கிறது. பரிச்சயமானது முதல் 1996 வரை நானும் அவரும் கொண்டிருந்த இடையறாத கடிதப் பரிமாற்றம் இலக்கியச்சுவை நிரம்பியது. கதையும், கவிதையும் எழுதுவதை நிறுத்தி இருப்பதைப் போல கடிதம் எழுதுவதையும் அவர் இப்போது நிறுத்தி வைத்திருப்பது என்னளவில் பெருத்த இழப்புதான். அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் கடிதங்களில் செய்துகொண்ட சிந்தனைப் பரிமாற்றத்தின் சுகம் கிட்டுமா என்ன? கடிதம் எழுதுவதை இலக்கியமாக்கியவர்கள் திரு டி.கே.சியும், கி.ராவும், கு.அழகிரிசாமியும் தாம். என்னைப் பொறுத்தவரை திரு குப்புசாமியின் கடிதங்களும் இலக்கியமே. இந்த 45 ஆண்டுகளாய் எனக்கு அவர் எழுதியுள்ள ஏராளமான கடிதங்களிலிருந்து இலக்கியச்சுவை மிகுந்த பகுதிகளை மட்டும் எடுத்து இலக்கிய அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைந்ததன் விளைவே இப்பகுதி.

இனி கடிதங்களிலிருந்து :

- வே.சபாநாயகம்.
----

கடிதம் 1.
=======

திருப்பத்துர். வ.ஆ.
4-2-65.

அன்பு நண்பருக்கு,

நமஸ்காரம். தங்களது சென்ற கடிதத்துக்குப் பிறகு, திடீரென்று பல கவலைகள் குறுக்கிட்டுவிட்டன. தேசத் துரோகக் கோஷங்களை எழுப்பிக் கொண்டு, மாணவர்கள் என்கிற பெயரில் மிருகங்களின் மந்தையொன்று புறப்பட்டிருக்கிறதே, அந்த மந்தையின் ஒரு பகுதி, இங்கே திருப்பத்தூரிலும் உண்டு. 'விவேகாநந்தா சங்கம்' என்கிற ஒன்றைத் துவக்கி, அந்த மாணவ மந்தையுடன் உள்ளூர்ப் போராட்டம் ஒன்று நடத்தினோம்.

பஞ்சாயத்துத் தேர்தல்கள் வேறு; தேர்தல் அலுவலராக நியமித்துவிட்டனர். அது ஒரு மூன்று நாள். பிறகு, நேற்று உங்களுக்குக் கடிதம் எழுதக் கருதினேன். ஆனல், இன்று காலை வரை நல்ல ஜூரம். எனவே கடிதம் தாமதமாகிறது.

இப்போதும் படுக்கையில் சாய்ந்தவாறு நிதானமாக எழுதுகிறேன். உடலின் ஆயாசம் இக் கடிதத்திலும் தென்படலாம். மன்னியுங்கள்.

'விழுதுகள்' உங்களுக்குப் பிடித்தது போலவே, இங்கு எல்லோருக்கும் வெகுவாகப் பிடித்திருக்கிறது.

ஓங்கூர், திண்டிவனத்துக்குப் பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறதாக நினைக்கிறேன். ஒங்கூர் சாமியாரிடம் ஜெ.காவுக்கு நேரிடையாகவே பழக்கம் உண்டு. இப்போதும் கூட அவர் - ஓங்கூர் சாமி பேசுகிற விதத்தையும், சிரிக்கிற விதத்தையும் அப்படியே செய்து காண்பிப்பார். 'விழுதுகளி'ல் வருகிற சாமியாரின் உரையாடல்களை எல்லாம், ஜெயகாந்தன் பேசிக் காட்டுவதைப் பார்க்க வேண்டும்! அற்புதமாய் இருக்கும். அதை அனுபவித்தவர்கள் 'விழுதுகளை' இன்னும் அனுபவிப்பார்கள்.

'உன்னைப் போல் ஒருவன்' படம் முடிந்துவிட்டது. அதைப் பற்றி போன கடிதங்களில் எழுதி இருந்தேனா? அருமையாக வந்திருக்கிறது. 'We deal with the problems of life....' என்பது படத்துக்கு முன்னே காட்டப் படுகிற 'எம்ப்ளம்' (emblem). படம் முடிந்ததும் எம்ப்ளமும் இவ்வாறு முடிகிறது: '....and those problems never END'.

காமராஜ் படத்தைப் பார்த்துவிட்டு, "இந்த மாதிரிப் படங்களையெல்லாம் அரசாங்கமே விலை கொடுத்து வாங்கி, ஜனங்களுக்கு இலவசமாகக் காட்டி, அவர்கள் ரசனையை மாற்ற வேண்டும்" என்று கூறினார். படம் இப்போது டெல்லிக்குப் போயிருக்கிறது. ஜனாதிபதியின் பரிசு உண்டா இல்லையா என்பது மார்ச்சில் தெரிந்துவிடும்.

இதன் வேலைகள் முடிந்த பிறகு 'பிரம்மோபதேசத்'தைப் படமாக்குவார்.

தாங்கள் ஏதாவது எழுதினீர்க்ளா? எழுதியிருந்தால் விகடனுக்கே முதலில் அனுப்புங்கள்.

ஏனெனில், மற்ற பத்திரிகைகளிலிருந்து அவர்கள் சற்று மாறுபட்டு, இலக்கியம் என்கிற மஹாவீணையின் அனந்தகோடித் தந்திகளில் ஒன்றை ஏறக்குறையவாவது அவர்கள் இப்போது உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, பெரும்பாலும் அவர்கள் நல்ல சரக்கை வேறு எக்காரணங்களாலும் நிராகரிக்கமாட்டார்கள். 'வாழ்வை நினைத்த பின்....' என்கிற சிறுகதையொன்று - நண்பர் வையவனுடையது - வருகிற வாரங்களில் விகடனில் வரும். படித்துப் பாருங்கள்.

பொதுவாக, எழுத்தாளர்கள் மட்டுமன்று, எல்லாவிதமான கலைஞர்களுமே கவிதையின் நாடியை உணர்ந்து கொள்ளவேண்டும் என்று கருதுகிறேன். கவிதை என்றால் verse formஐச் சொல்லவில்லை. 'Poesy in emotions'. அதைக் குறிப்பிடுகிறேன்.

'புதுமைப் பித்தன் கட்டுரைகள்' (ஸ்டார் பிரசுரம்) பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் அவரது கலைப் பிரக்ஞையும், அவ்விஷயத்தில் அவர் கொண்டிருந்த உஷார்த் தன்மையும் எவ்விதமாய்த் தெரிகிறது பாருங்கள்!

புதிய புத்தகங்கள் எதுவும் சமீபத்தில் படிக்கவில்லை. ஜவாஹர்லால் நேருவின் பிரசங்கங்களை ஆதியோடந்தமாகத் தற்போது படிக்கத் தொடங்கியிருக்கிறேன். India had never seen such a person....

தங்கள் சித்திரம் மற்றும் புகைப்படக்கலை முயற்சிகள் எவ்வாறுள்ளன? சில புகைப் படங்களை அனுப்பி வையுங்கள். நீங்கள் எழுத்தையும் பயின்றிருக்கிற காரணத்தால், வெறும் யந்திர உணர்வோடு காமிராவைக் கையிலெடுப்பவர்களைக் காட்டிலும், தங்களது காமிராவின் காட்சிகள் கவித்துவத்தோடு இருக்கும். அதனாலேயே இதை ஆவலோடு அடிக்கடி கேட்கிறேன்.

தங்களது 'பார்சல் கடிதங்களை'யும் எதிர்பார்க்கிறேன்.

- நிறைய ஆயாசத்தின் காரணமாகவே கடிதம் சுருங்குகிறது.

பதில் எழுதுங்கள்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

==========

- வே.சபாநாயகம்

(தொடரும்...)

Tuesday, April 11, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 15

15. சிஷெல்ஸ் விநாயகர் கோயில்

சிஷெல்ஸில் தமிழர்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்திருந்தும், அவர்களில் பெரும்பாலோர்- ஏறத்தாழ 4000 பேர் இந்துக்களாக இருந்தும் அவர்களுக்கென்று ஒரு வழிபாட்டுத் தலம் இல்லாமலிருந்தது. 1980 களில் தமக்கென்று ஒரு கோயில் வேண்டுமென்ற ஏக்கம் இங்குள்ள இளைஞர் சிலருக்கு எழுந்தும் தக்க ஆதரவோ, உற்சாகமோ கிடைக்காததால் அது செயல் வடிவம் பெற இயலவில்லை. 1984ல் ஈழத்தமிழரான மறவன்புலவு கி.சச்சிதானந்தம் அவர்கள் ஐக்கிய நாடுகள் உணவு வேளாண்மைத்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டு வந்ததும் ஒரு உந்துதல் கிடைத்தது. அவரது முயற்சியால் சிஷெல்ஸ் இந்து கோயில் சங்கம் உருவாக்கப் பட்டது. திரு.கே.டி.பிள்ளை அவர்களை இச்சங்கத்துக்குத் தலைவராக்கினார்கள்.

கோயிலுக்கு நிலம் வாங்குவதிலும் நிதி எழுப்புவதிலும் திரு.சிவசண்முகம் பிள்ளை அவர்கள் தலைவருக்குப் பெரும் துணையாக இருந்தார்கள். வங்கி மூலமும், தமிழ்நாட்டு நடிகர் காலஞ் சென்ற திரு.ஜெய்சங்கர், அந்நாள் அறந்¤லைய அமைச்சர் திரு. ராஜாராம் போன்றோரின் உதவியாலும் மக்கள் நன்கொடையாலும் கோயிலுக்கு நிலம் வாங்கி கணபதி ஸ்பதியைக் கொண்டு வரைபடம் தயாரித்து 1990ல் அடிக்கல் நாட்டினார்கள். ஞானபூமி ஆசிரியர் திரு.மணியன் அடிக்கல் நாட்டினார்.

ஆரம்பத்தில் 'குயின்சி சூப்பர் மார்க்கட்' மேல் மாடியை வாகைக்கு அமர்த்தி கோயில் மாதிரி அமைத்து பிரார்த்தனை மண்டபம் உருவாக்கப் பட்டது.

சுவாமி படத்தை வைத்து வழிபாட்டைத் தொடங்கியுள்ளனர். பின்னர் தமிழ் நாட்டிலிருந்து விநாயகரின் வெண்கலச் சிலை ஒன்றைக் கொணர்ந்து, ஞாயிறு தோறும் பஜனை, பூஜை நடத்தினர். 1988ல் தொடங்கிய ஆலயப்பணி 1990ல் முடிவடைந்தது. ஆறாயிரம் சதுர அடியில் ஆலயம் எழும்பியது. விநாயகர், துர்க்கை, நடராஜர், முருகன், திருமால் ஆகிய தெய்வங்களை ஆலயத்தில் நிறுவி சைவ, வைணவ இரு சமயத்தாரும் ஏற்கும் படி ஆலயம் அமைந்தது.

'அருள்மிகு நவசக்தி விநாயகர் திருக்கோயில்' என்று அழைக்கப்படும் இத் திருத்தலத்தின் ஆலய மகாகும்பாபிஷேகம் 6.5.1992ல் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து திரு. ராஜாராம் அவர்களும், மொரீஷியசிலிருந்து கல்வி அமைச்சர் திரு.ஆறுமுக பரசுராமன் அவர்களும், சிஷெல்ஸின் எல்லா அமைச்சர்களும் பங்கு பெற்ற இக் கும்பாபிஷேக நிகழ்ச்சி தமிழர்களுக்கு ஒரு பொன்னாளாக அமைந்தது. இந்த ஆலயம் எழும்பிய பின்னர்தான், இந்துமதம் பற்றி முழுமையாக சிஷெல்ஸ் மக்களும், ஆட்சியாளர்களும் அறிந்தனர். அவர்களுக்கும் இந்த ஆலயம் பிடித்துப் போய் நிதி உதவியும் பிற உதவிகளும் செய்திருக்கிறார்கள். இப்பொது சிஷெல்ஸ் நாட்டில் அடையாளம் சொல்லக் கூடிய இடமாக இந்த ஆன்மீகத் தலம் அமைந்து விட்டது. சீஷெல்ஸ் வரும் சுற்றுலாப் பயணிகளும் ஆலயத்துக்குத் தவறாமல் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

கோயிலில் தினசரி மூன்று கால பூஜை நடக்கிறது. இரண்டு அர்ச்சகர்களும், மேள வாத்தியக்காரர்களும் ஒரு ஓதுவாரும் தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப் பட்டு அவர்கள் நிரந்தரமாகத் தங்க வீட்டு வசதியும் கணிசமான ஊதியமும் இந்து கோயில் சங்கத்தால் வழங்கப் படுகிறது.

ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது. அன்று பக்தர்கள் முருகனுக்குக் காவடி எடுத்து வேண்டுதலை நிறை வேற்றுகிறார்கள். சீஷெல்ஸ் அரசாங்கம் தைப்பூசத்தன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அன்று இந்து வர்த்தகர்களும் வர்த்தக நிறுவனங்களையும் மூடி விடுகிறார்கள். விநாயகர்சதுர்த்தி, புத்தாண்டுப் பிறப்பு, நவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் கோயிலில் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. அர்ச்சகருக்கு தாராளமாக தட்சணையும் உண்டியில் மனநிறைவோடு நிறைய காணிக்கையும் செலுத்தி மகிழ்கிறார்கள். பக்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருமானமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கோயில் பணியும் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது ராஜ கோபுரம் எழுப்பும் வேலை தொடங்கப் பட்டு முடியும் தருவாயில் இருக்கிறது.

திரு.கே.டி.பிள்ளை அவர்கள் தலமையில் தொடங்கப்பட்ட இந்து கோயில் சங்கப் பணிகளில் திரு.சிவசண்முகம் பிள்ளை, திரு.சிவசுப்ரமணியன், திரு.பழனி, திரு பாலசுந்தரம் ஆகியோரது அயராத முயற்சிகளும் பெரிதும் பேசப்படுகின்றன. மகளிரும்- திருமதிகள்.சரோஜினி சிவசுப்ரமணியன், வாசுகி, சித்ரா, வசந்தி, ஜெயா பாலசுந்தரம், சாந்தா நாயர், ரேணு, கலா, மங்களநாயகி ஆகியோர் தொடர்ந்து ஆலய சேவையில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் செலுத்தி வருவதும் நினைவு கூரத் தக்கது.

இந்துகோயில் சங்க நிகழ்வுகள் பெருக வளர்ந்து இந்நாட்டின் வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது. இந்த வளர்ச்சியின் விளைவாக இந்நாட்டு இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் வலுவான கலாச்சார அடித்தளம் அமைந்திருப்பது போற்றுதலுக்கு உரியதாகும். அடிக்கடி தமிழகத்திலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் ஆன்மீகச் சொற்பொழிவாளர்கஆளையும் இசை, நாட்டிய வல்லுனர்கஆளையும் அழைத்து வந்து ஆன்மீக உணர்வைப் பெருக்கி வருகிறார்கள். மொத்தத்தில், என் பார்வையில் அங்கு வாழும் தமிழர்கள் அயல் நாட்டில் இருக்கிறோம் என்கிற உணர்வின்றி தாய்நாட்டில் இருப்பது போன்ற மன நிறைவுடன் ஆனால் தாய் நாட்டை விட மிக வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உலகில் எப்பகுதிக்குச் சென்றாலும் தமிழர்கள் தங்கள் தனிமுத்திரையைப் பதிப்பவர்கள் என்பதை சீஷெல்ஸ் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு- மகளும் மாப்பிள்ளையும் நம்மை விட்டு வெகு தொலைவில் உடனே வந்து அடிக்கடி பார்க்க முடியாதபடி இருக்கிறார்களே, இந்நிலையில் நிரந்தரக் குடியுரிமை பெற்றுத் தங்கிவிட முடிவு செய்து விட்டார்களே என்றகிற கவலை அங்கு போய்ப் பார்க்கும்வரை இருந்தது. அங்கு சென்று 70 நாட்கள் தங்கி அங்குள்ள தமிழர்களின் நிறவான வாழ்வினைப் பார்த்தபிறகு "நீங்கள் இங்கேயே நிறைவாக, நிம்மதியாக வாழுங்கள். காலமும் தூரமும் இந்த அறிவியல் உலகில் சுருங்கி விட்ட நிலையில் சந்திப்பது அப்படி ஒன்றும் சிரமமானது அல்ல; நம்மூரில் இத்தகைய வளமான வாழ்வும் கௌரவுமும் இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையில் வாய்க்காது" என்று வாழ்த்தி விடைபெற்றோம்.

நாங்கள் திரும்பிய 17-9-2005 அன்று அந்த அதிகாலையிலும் என் மகள் மற்றும் மாப்பிள்ளையின் நண்பர்களும் எனக்கு அங்கே ஏற்பட்ட நண்பர்களும் குடும்பத்துடன் வந்து வழியனுப்பி வைத்தது என்றும் என்னால் மறக்க முடியாத ஒன்றாகும்.
வே.சபாநாயகம்

- நிறைகிறது.

- வே.சபாநாயகம்

நான் கண்ட சிஷெல்ஸ் - 14

சிஷெல்ஸில் தமிழர்கள்

ஆதார பூர்வமாகப் பார்த்தால் சிஷெல்ஸ¤க்குத் தமிழர்கள் வந்து 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளன. 1770ல் பதிவான முதல் குடியேற்றத்தின் போது ஐந்து தமிழர்கள் மாகே தீவுக்கு வந்தனர். அவர்கள் வழித்தோன்றல்களே தற்போதைய சிஷெல்ஸ் தமிழர்கள் என்பது வரலாறு.

புதுச்சேரியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் அரசு ஆலோசகராக வந்தார். அரசு அன்பளிப்பாகக் கிடைத்த பெரும் பரப்பளவு நிலங்களுக்குச் சொந்தக்காரர் ஆனார். 1864ல் நாயக்கனும், 1874ல் கந்தசாமி செட்டியும் தமிழகத்திலிருந்து வந்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். இப்போதும் பல வியாபார நிறுவனங்கள் இப்பெயர்களுடன் இயங்குவதைப் பார்க்கலாம்.

முதலில் குடியேறிய தமிழர்களில் பலர் இங்கு கலப்புமணம் செய்து கொண்டு மதம் மாறியுள்ளனர். 1901ல் 300க்கு மேற்பட்ட சைவக் குடும்பங்கள் இருந்துள்ளன.

இவர்கள் தங்கள் தமிழ்மரபு, கலாச்சாரங்களை விடாது பேணி வந்துள்ளனர். இங்கு நிலவும் மக்கள் பெயர்களில் பிள்ளை, செட்டி, நாயுடு, படையாச்சி, வேலு, கந்தசாமி, கோவிந்தன், வடிவேலு ஆகியவை அதிகம். 1944ல் இங்கு நீதிபதியாக யாழ்ப்பாணத் தமிழர் ஹோமர் வன்னியசிங்கம் என்பவர் இருந்திருக்கிறார்.

தமிழத்தின் காவேரிப் படுகையிலிருந்து தமிழ் வர்த்தகர்கள் இந்நாட்டுக்குத் தேவையான நுகர்பொருட்களை மரக்கலங்களில் கொண்டு வந்து விற்று, இங்கிருந்து கப்பல் கட்டுமானத்திற்கான பெரிய பெரிய மரங்களை ஏற்றிச் சென்றுள்ளனர். அப்படி வந்து போனவர்ளில் சிலர் இங்கேயே தங்கி, திருமணம் செய்து கொண்டு பெரும் வர்த்தகங்களில் இங்கேயே ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இவர்களின் வாரிசுகளில் பலர் தமது மொழி, மதம் ஆகியவற்றைத் துறந்து இந்நாட்டு மொழி, மதம் ஆகியவற்றை ஏற்று வாழ்க்கை நடத்துவதும் வழக்கமாயிற்று.

இந்நாட்டில் புழக்கத்தில் உள்ள கிரியோல்சொற்களில் பல தமிழ்ச் சொற்களாய் இருப்பது தமிழர் குடியேற்றத்துக்கு ஆதாரமாய்க் காட்டப் படுகிறது. எடுத்துக்காட்டாக கீழ்கண்ட சொற்களைப் பார்க்கலாம்.

தமிழ்ச் சொற்கள் - கிரியோல் சொற்கள்

முறுக்கு - முலுக்
கறையான் - கறையார்
கள்ளு - காளு
கறிவேப்பிலை - கறிப்பிலை
பீர்க்கங்காய் - பிப்பங்கா
பூசனிக்காய் - பூசனிக்கா
கொத்தமல்லி - கொத்துமல்ல
அம்மா - மம்மா
அப்பா - பப்பா
ஐயையோ - அய்யோயோ
பாதாம் - பாதாமியே

இப்படி ஏராளமான தமிழ்ச் சொற்கள் இங்கு மருவி புழக்கத்தில் உள்ளன.

1971ல் இங்கு பன்னாட்டு விமானநிலையம் செயல்படத் தொடங்கிய பிறகு தமிழர்களின் வரவும் ஈடுபாடும் அதிகரித்தது. இங்குள்ள தமிழரில் பலர் தமிழ் நாட்டில் மணம் புரிவதும், தமிழ்ப் பெண்கள் இப்போது அதிகம் இங்கு வாழ்வதும் அதிகரித் துள்ளது.

சிஷெல்ஸ¤க்கு, தந்தையின் கடையை மூடிவிட்டு ஊர்திரும்ப எண்ணி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு.தீனதயாளு பிள்ளை அவர்கள் எப்படி அங்கேயே தங்கி வர்த்தகம் செய்து இன்று பிரபல தொழிலதிபராக ஆனார் என்பதைப் பார்த்தோம். அவரை வழிகாட்டியாகக் கொண்டு தஞ்சை மாவட்டம் மற்றும் புதுவைப் பகுதிகளிலிருந்து நிறையத் தமிழர்கள் இங்கு வந்து, வர்த்தகம், மற்றும் ஆடிட்டர், மருத்துவர், வழக்கறிகர், ஆசிரியர் என்று பல பணிகளில் ஈடுபட்டுச் செல்வத்திலும் செல்வாக்கிலும் வளர்ந்து, இன்று அவர்களில் பலர் குடும்பத்துடன் குடியுரிமை பெற்றுக் கொண்டு, மனை வாங்கி வீடு கட்டி அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார்கள்.

இவர்களில் தீனதயாளு பிள்ளை அவர்களுக்கு அடுத்தபடியாக இப்படி இங்கே கால் ஊன்றி பல வர்த்தக நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் ஆகி தமிழர்களில் முதலிடத்தில் நிற்கும் டாக்டர் ராமதாஸ் அவர்களைப் பற்றியும் முன்பே கண்டோம். இப்போது அவரது வெற்றி மணிமுடியில் மேலும் ஒரு வண்ணச் சிறகாய் சமீபத்தில் இந்திய ஜனாதிபதி திரு. அப்துல்கலாம் அவர்கள் கையால் ஜனவரி 9, 2006 அன்று 'ஓவர்சீஸ் இந்தியன் அவார்ட்' (PRAVESI BHARATHIYA SAMMAN) என்கிற விருதும் கிடைத்திருப்பது தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பதாகும். உலகம் முழுதுக்குமான 538 பேர் அடங்கிய இறுதிப் பட்டியலிலிருந்து முடிவாக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் டாக்டர் ராமதாஸ¤ம் ஒருவர் என்பது இன்று சீஷெல்ஸ் தமிழரிடையே பெருமையாய்ப் பேசப்படும் செய்தி.

இந்தியாவிலிருந்து பல பகுதிகளிலிருந்தும் வந்து பலவித தொழில்செய்து புகழ் பெற்றவர்களில் ஆடிட்டர்கள் முதலிடம் வகிக்கிறார்கள். இவர்களில் முதலில் வந்தவர் 35 ஆண்டுகளுக்கு முன் 1970ல் கேரளாவிலிருந்து வந்த திரு. டி.எஸ்.கே நாயர் அவர்களாவார். இவர் இலண்டன் ACCOUNT INSTITUTE ல் முறையாகப் பதிவு செய்து கொண்டவர். இவரது மனைவி திருமதி. சாந்தா நாயர் சீஷெல்ஸ் இந்துக்களிடையே மிகவும் பிரபலமான தெய்வ பக்தை. இவர்களது மகள் சீஷெல்ஸ் அரசில் மிக உயர்ந்த பதவியில் -'PRINCIPAL SECRETARY' ஆக இருக்கிறார். இவர்களது மாப்பிள்ளை திரு.நந்தகுமார் நாயரும் ஆடிட்டரே. இவர்களது இரண்டு மகன்களில் ஒருவர் தனியார் நிறுவனத்திலும் மற்றவர் சிஷெல்ஸ் விமானப் பணியில் விமானியாகவும் பணியாற்றுகிறார்கள். இவர்கள் அனைவருமே சிஷெல்ஸ் குடியுரிமை பெற்று அங்கேயே வீடு, மனை என்று தங்கி விட்டவர்கள். தமிழ்ச் சமுதாயத்துடன் கலந்து பாசத்துடனும் நட்புடனும் வாழும் குடும்பம் இவர்களுடையது.

1980ல் இங்குவந்து தற்போது சிஷெல்ஸ் குடியுரிமை பெற்றுள்ள திரு.என்.ரமணி அவர்களும் ஆடிட்டர்தான். இங்குள்ள தமிழ் வர்த்தக நிறுவனங்களில் 75 சதவீதம் இவரது வாடிக்கையாளர்கள். பழகுவதற்கு இனிமையும் எளிமையும் மிக்க திரு.ரமணி அவர்கள் இலக்கிய மற்றும் இசை ரனை மிக்கவர். எப்போதும் நகைச்சுவையுடன் மலர்ந்த முகத்துடன் பேசக் கூடியவர். இவரது துணைவியார் திருமதி.யோகாம்பாள் நல்ல குடும்பத் தலைவி.

இன்னொரு ஆடிட்டர் திரு.பழனி என்பவரும் 1980ல் இங்கு வந்து தன் நிறைவான அனுபவத்தால் பல நிறுவனங்களுக்கு நிதி கட்டுப்பாட்டு அலுவலராகப் பணியாற்றி வருபவர். இவர் சீஷெல்ஸில் பரவலாக அறியப்பட்ட தமிழ்க் கவிஞர். பல தொகுப்புகள் போடும் அளவுக்கு ஏராளமான கவிதைகள் எழுதி வைத்திருக்கிறார்.சிறந்த பேச்சாளரும் கூட. தமிழகத்திலிருந்து பிரமுகர்கள் யார் வந்தாலும் மேடையிலேயே அவர்களுக்குப் பாராட்டிதழ் கவிதையில் வாசித்தளிப்பவர். தினமும் அங்குள்ள நவசக்தி விநாயகரைத் தரிசிக்கத் தவறாத தீவிர பக்தர். இவரது மனைவி திருமதி.வசந்தி அவர்களும் தீவிர தெய்வபக்தி உள்ள குடும்பத் தலைவி. இருவருமே சாயிபாபா பக்தர்கள். பொறியியல் பட்டதாரியான இவரது மகள் செல்வி.லாவண்யா சீஷெல்ஸ் அரசின் செய்தி அமைச்சகத்தில் பணி புரிகிறார். இவர் தமிழ்ப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமைகளில் பரதநாட்டியம் கற்பித்து வருகிறார். மகன் இலண்டனில் ஆடிட்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறார்.

வழக்கறிஞர் திரு.ராஜசுந்தரம் அவர்களின்ன் சகோதரரான திரு.சோ.பாலசுந்தரம் அவர்களும்1983ல் இங்கு வந்து 1992 வரை MASONS TRAVEL என்கிற நிறுவனத்தின் நிதிக்கட்டுப்பட்டு அலுவலராக இருந்தவர். சிஷெல்ஸின் மிகத் திறமையான நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் எனப் புகழ் பெற்றவர். நிதிக் கட்டுப்பாட்டில் கடுமையான ஒழுங்கை அனுசரிக்கும் இவர், ஒருமுறை தனது நிறுவன உரிமையாளரின் சகோதரி மீதே நிதி ஒழுங்கின்மைக்காக நடவடிக்கை எடுத்தவர். இவரும் இவரது மனைவி திருமதி ஜெயா அவர்களும் சீஷெல்ஸில் விநாயகர் கோவில் எழுப்புவதில் அயராது உழைத்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். தற்போது சிங்கப்பூரில் அங்கு படிக்கும் மகனுடன் குடியுரிமை பெற்று ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறவர்கள்.

சிஷெல்ஸ் அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தில் பணியாற்றும் திரு.ரவீந்திரன் அவர்களின் பூர்வீகம் தமிழ்நாடு. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாணத்தில் குடியேறி 1990ல் சிஷெல்ஸ¤க்கு வந்தவர். சிறந்த பாடகர். 'சிஷெல்ஸ் எஸ்பி பாலசுப்ரமண்யம்' என்று நண்பர்களால் அழைக்கப் படுவர். இந்தியக் கலாச்சார நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாது பங்கேற்பவர். இந்து கவுன்சிலின் செயலாளரா கவும், தமிழ்ப் பள்ளியின் முதல்வராகவும் உள்ளார். சிஷெல்ஸ் தமிழ் சமுதாயத்தின் நலன்களுக்காக அர்ப்பனிப்புடன் பாடுபடுபவர். மதுரைக் காரரான இவரது துணைவியார் சிஷெல்ஸ் அரசுப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுபர். இவர்கள் குடும்பமும் சீஷெல்ஸ் குடியுரிமை பெற்றவர்கள்.

யாழ்ப்பாணத்தில் ஒரு கலாசலை முதல்வராக இருந்து ஓய்வுபெற்ற திரு.சிவசுப்பிரமணியன் அவர்கள் மிக முக்கியத் தமிழ்ப் பிரமுகர். இவர் சென்னை 'காந்தளக' உரிமையாளர் திரு மறவன்புலவு கி.சச்சிதானந்தம் அவர்களின் மைத்துனர். திரு சச்சிதானந்தம் சிசெல்ஸில் இலங்கை அரசுத் தூதராக இருந்தபோது அவருடன் இணைந்து அங்கு தமிழ் சமுதாயத்துக்கு இந்து ஆலயம் ஒன்றை உருவாக்குவதில் முன்னோடியாகப் பனியாற்றியவர். சிஷெல்சஸின் 'நேஷன்' பத்திரிகையின் பத்தி எழுத்தாளரும், 'சிஷெல்ஸ் அலை ஓசை" இதழின் ஆசிரியக் குழுவின் தலைவரும் ஆவார். 70 வயதாகியும் அயராது கலை, கலாச்சார, கல்வி வளர்ச்சியிலும் தமிழ் சமுதாய முன்னேற்றத்திலும் அயாராது உழைக்கும் இவர், சிஷெல்ஸ் இளைஞர் களுக்கு தக்க முன் மாதிரியாகத் திகழ்பவர். இவரது துணைவியார் திருமதி. சரோஜினி அவர்கள் சிறந்த தமிழ்க் கவிஞர். சிஷெல்ஸின் நவசக்தி விநாயகர் மீது பாமாலை இயற்றி வௌ¤யிடுள்ளார். இவர்களது மகன் திரு.சிற்சபேசன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சிறந்த தமிழ் அறிஞராகவும் அரசியல் பத்திரிகையாளராகவும் பிரபலமாக இருப்பவர்.

திரு.கே.டி.பிள்ளை அவர்களின் அக்காள் மகனும் மனைவியின் சகோதரருமான திரு.ஜி.சிவசண்முகம் பிள்ளை மிகவும் குறிப்பிடத்தக்க தொழிலதிபரும் பிரமுகரும் ஆவார். எல்லோருடனும் இனிமையாகப் பழகும் இவரை அன்பர்கள் 'சிவா' என்ற செல்லப் பெயரில் அழைக்கிறார்கள். பரபரப்பான 'குயின்சி'தெருவில் உள்ள 'குயின்சி சூப்பர் மார்க்கட்டை' சிறப்பாக நடத்தி வருபவர். தமிழ் மக்களது மளிகை மற்றும் இந்திய வகை உணவுப் பொருள்களை தருவித்துத் தருபவர். இதில் இவரது துணைவியார் திருமதி.சித்ரா (கே.டி.பிள்ளையின் அண்ணன் மகள்) அவர்களின் பணி அதிகம். இவரும் தீவிர சாயிபாபா பக்தை. திரு.சிவா மாமாவுடன் சிறு பிராயத்திலேயே இங்கு வந்து இங்கேயே பயின்றவர் என்பதால் இந்நாட்டின் தாய் மொழியான கிரியோலில் நன்கு பேச வல்லவர். இதனால் சிஷெல்வாக்கள்¤ன் அன்புக்கும் பாத்திரமானவர். தன் ஓய்வற்ற வர்த்தகப் பணிக் கடுமைக்கு இடையேயும் தமிழ்க் கலாச்சார வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும், தமிழ்ப் பள்ளியின் பொறுப்பாள ராகவும் அயராது உழைப்பவர். இவரது மூத்த மகள் டெல்லியில் மருத்துவம் பயில்கிறார். இவரது மற்ற இரு மகள்களும் புதுவையில் படிக்கிறார்கள்.

திரு.ஜோதிநாதன் கே.நாயுடு என்பவர் இன்னொரு முக்க்¤யத் தொழில் அதிபர். இவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே மயிலாடுதுறையிலிருந்து இங்கு வந்து துணி சோப் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கியவர். திரு.ஜோதிநாதனும் அவரது இரு சகோதரர்களும் இங்குதான் பிறந்து வளர்ந்தவர்கள். திரு.ஜோதிநாதன் நாயுடு தந்தையைப் பின்பற்றி, 'BLUE LAGGON' என்ற பெயரில் தயாரிக்கும் வாஷிங் சோப், வாஷிங் பௌடர் ஆகியவை இங்கு மக்களிடையே பிரபமானவை. திரு. ஜோதிநாதன் பழகுவதற்கு மிகவும் எளிமையும் இனிமையும் மிக்கவர். அவரது மழலை ஆங்கிலம் கேட்க மிக இனிமையாயிருக்கும். அவரது துணைவி திருமதி.பாரதி நாயுடு என் மகளின் நெருங்கிய தோழி. மிக இனிமமையான பண்பாளர். ஓவியக் கலையிலும் கைவேலைக் கலையிலும் வல்லவர். என் மகளுடன் சேர்ந்து பல ஓவிய மற்றும் கைவினைப் பொருள் தயாரிப்புப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். இவரும் தீவிர சாயிபாபா பக்தை. இவர்களின் ஒரே மகள் செல்வி.ஷிவானி - சென்னையில் கல்வி கற்றவர்- 'ஏர் சிஷெல்ஸி'ல் ASST MARKETING MANAGER ஆகப் பனிபுரிகிறார். ஒரே மகன் துபாயில் விமானமோட்டிக்கான பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு இளம் ஆடிட்டர் சென்னையை சேர்ந்தவர். திரு.வெ.சீனிவாசன் என்கிற இவர் 1995ல் சிஷெல்ஸ¤க்கு வந்தவர். தற்போது 'CORNIVA' என்கிற மருந்துகள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார். இவரது தந்தையினால் ஆர்வம் பெற்று, மிகுந்த இலக்கிய ரசனையும், சமீபத்திய இலக்கியப் படைப்புகள் பற்றி இணைய தளத்தின் மூலம் வாசிப்பும் மிக்கவர். என்னுடைடைய இலக்கிய ரசிகர். எனது இந்தத் தொடரின் வண்ணப்படங்களை அனுப்பி உதவியவர்.

நான் சிஷெல்ஸ் செல்லுமுன்பே மின்னஞ்சல் மூலம் என்னோடு தொடர்பு கொண்டி ருப்பவர். அனேகமாக எனது எல்லாப் படைப்புகளையும் படித்து ரசித்தவர். சுவாமி விவேகானந்தரின் தீவிர விசுவாசி. அதனால் தன் மகனுக்கு 'நரேன்' என்றும் மகளுக்கு

'ஸ்வரூப் ராணி' என்றும் பெயர் சூட்டி இருப்பவர். இவரது துணைவி திருமதி.கலா சிஷெல்ஸில் உள்ள அரசு தொழிற் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணி புரிகிறார். இவரும் இலக்கிய ரசனையும் தீவிர வாசிப்பு ஆர்வமும் கொண்டவர்.

மயிலாடுதுறையிலிருந்து வந்து இங்கு கடை வைத்திருக்கும் திரு.கண்ணன் நாயுடு என்பவர் சிறுவயதிலேயே தெய்வபக்தியில் பற்றுக் கொண்டு சுத்த சைவமும் ஆசார அனுஷ்டானமுமாய் வாழ்பவர். இவரது மனைவி திருமதி.நர்மதா நல்ல கலைரசனை மிக்கவர். என்மகள் மங்களநாயகியுடன் இணைந்து அங்கு நடக்கும் எல்லா கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் குழந்தைகளை நாட்டியம், ஓரங்க நாடகம் மாற்றுடைப் போட்டி ஆகியவற்றில் பயிற்றுவித்து மேடை ஏற்றுபவர்.

இப்படி அங்குள்ள எல்லாத் தமிழர்களும் தாய் நாட்டில் பெற முடியாத பெருமைகளைப் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள். தங்களுக்குள் மிகவும் நட்பும், உறவும் மிக்கவர்களாய் ஒருவர்க் கொருவர் அனுசரனையாய் வாழ்கிறார்கள். அடிக்கடி பிறந்த நாள், திருமணநாள் மற்றும் எங்களைப் போல விருந்தினராக வந்திருப்பவர் களைக் கௌரவிக்க என்று அடிக்கடி விருந்தளித்து மகிழ்கிறார்கள். தாராளமாக விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கிக் கௌரவிக்கிறார்கள். நாங்கள் அங்கே தங்கியிருந்த 70 நாட்களில், 20 பேர் வீடுகளிலாவது விருந்தும் பரிசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டிருப்போம். தாய் நாட்டிலிருந்து வெகு தொலைவிலிருக்கிறோம் என்ற ஏக்கமே இல்லாமல் அங்கு தமிழர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள்.

தொடரும்

- V. Sabanayagam

நான் கண்ட சிஷெல்ஸ் - 13

சிஷெல்சில் பெண்கள் வாழ்க்கை

சிஷெல்ஸ் பெண்களுக்கு அதிக சுதந்திரம் தரும் நாடு. அங்கு எல்லா இடங்களிலும் - அரசு அலுவலகங்களிலாகட்டும், தனியார் அலுவகங்களிலாகட்டும், மற்றும் கடைகள் என்று எல்லாப் பணிகளிலும் பெண்களே அதிகம் தென்படுகிறார்கள்.

இதற்கு - அவர்களது பணி விவேகமாகவும், சிறப்பாகவும் இருப்பதுதான் காரணம் என்றார்கள்.

திருமணம் அங்கு ஒரு பிரச்சினையே இல்லை. பெண்கள் திருமணம் செய்து கொண்டும் வாழ்கிறார்கள் - திருமணம் செய்துகொள்ளாமலே 'பாய் ·பிரண்ட்' உடன் வாழ்நாள் முழுதும் சேர்ந்தும் வாழ்கிறார்கள். இடையில் மனம் வேறு பட்டால் வேறு ஆணோடு சேர்ந்தும் கொள்வார்கள். திருமணமாகாமலே குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள். அப்படிப் பெற்றுக் கொண்ட பிறகு இருவருக்கும் பிரிவு வந்து விட்டால் குழந்தை யார் பக்கம் செல்வது என்பது அங்கு பெரிய பிரச்சினை இல்லை. பெண்கள் குழந்தைகளைத் தங்களுடன் வைத்துக் கொள்கிறார்கள். ஆண்கள் பொதுவாகப் பிள்ளைகளைக் கோருவதில்லை. அதற்காகப் பெண்கள் நம் நாடு போல 'ஐயோ என் பிள்ளைகளுக்கு என்ன வழி? இனி நான் எப்படி வாழ்வேன்?' என்றெல்லாம் மல்லுக்கு நிற்பதில்லை. பெற்ற தகப்பன் பிள்ளைகளூக்காக மாதா மாதம் செலவுக்குத் தொகை கொடுத்தால் போதும். ஆண்களும் இயல்பாக அதை ஏற்றுக் கொண்டு அதன்படி ஒழுங்காகக் கொடுத்து வருகிறார்கள். இதில் பிரச்சினை எழுந்தால் இறுதி முடிவெடுப்பது தேவாலயங்கள் தாம். அங்கு மக்களின் பல்வேறு வாழ்க்கை முறைகளுக்கு 'பெல்', பிரேக்' என்கிற இரு 'சர்ச்'கள் தாம் தீர்வு காண்கின்றன. அவற்றின் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப் படுகிறார்கள். நம் நாட்டைப் போல பிரிவு அங்கு வலிமிக்கதன்று. சேருவதும் இயல்பானது; பிரிவதும் இயல்பானது. பிரிந்த பிறகு குரோதத்துடன் செயல்பட மாட்டார்கள். நண்பர்களாகவே பழகுவார்கள்.

வெளிநாட்டினரை விரும்பி அப்பெண்கள் ஏற்கிறார்கள். ஆனால் முன்பே திருமணமாகி அங்கே சம்பாதிக்கச் செல்லும் பலர், அங்கு குடும்பத்தை அழைத்துச் செல்ல முடியாத நிலையில், அங்குள்ள பெண்களை சேர்த்துக் கொண்டு வாழ்கிறார்கள். பிடிக்காமல் விலகினால் அவர்களுக்கு அந்நாட்டு ஆண்கள் போல மாதாமாதம் செலவுக்குக் கொடுத்து விட்டால் பிரச்சினை இல்லை. இல்லாவிடில் நாட்டில் எங்கே போனாலும் விடமாட்டார்கள். அதற்காக நாட்டை விட்டே சொல்லாமல் போய் விடுகிறவர்களும் உண்டு.

தகப்பனை விட்டுப் பிரிந்து தாயுடன் வாழும் குழந்தைகள் தாயின் இனிஷியலோடு அங்கீகாரம் பெறுகிறார்கள். வெவ்வேறு கணவர்களுக்கு - சீனர், இந்தியர் என வேறு வேறு இனக் கணவர்களுக்குப் பிறந்த குழந்தைகளாக இருந்தாலும் - மூன்று தேசத்துப் பாரம்பரியம் என்றாலும் வேறுபாடின்றி, அண்ணன் தம்பி பாசத்துடன் சேர்ந்தே வளர்கிறார்கள். இந்த மாதிரி அபூர்வத்தை சிஷெல்ஸில் மட்டுமே காண முடியுமாம். அனேகமாக இக் குழந்தைகள் தாத்தா பாட்டி பராமரிப்பிலே வாழ்வதுண்டு.

சிஷெல்ஸ் பெண்களின் வாழ்க்கை திறந்த வாழ்க்கை. நமது பெண்களைப் போல மனதுக்கும் நடைமுறைக்கும் பிடிக்கா விட்டாலும் ஊருக்காகவும் உறவினர்க்காகவும் ஒன்றாக வாழ்வதாக நடிக்கும் போலி வாழ்க்கையை அவர்கள் வாழ்வதில்லை. எல்லாம் வௌ¤ப்படையான வாழ்க்கை. பிடித்தால் ஒன்றாக இருக்கலாம்; பிடிக்கா விட்டால் பிரிந்து போய்விடலாம். மற்றவர்களுக்காக வாழ்வதில்லை என்பதோடு மற்றவர்களும் அதைப் பொருட்படுத்துவதில்லை.

பெண்களின் வாழ்க்கை - திருமணம் செய்து கொண்டாலும், திருமணம் செய்துகொள்ளா விட்டாலும் - 18 வயதிலேயே தொடங்கி விடுகிறது. வாழ்க்கையைத் தொடங்க ஆசைப்படும் போது காலம் தாழ்த்தாமல் தொடங்கி விடுகிறார்கள். ஜோடியைப் பிடித்து விட்டால், முதலில் நட்பு, பிறகு காதல் , அடுத்து திருமணம். திருமணம் என்றால் அங்கே காதல் திருமணம்தான்.

அவர்களது திருமண நிகழ்ச்சியும், திருமண விருந்தும் வித்யாசமானவை. திருமணத்தை விட அதிக நேரம் பிடிப்பது விருந்துதான். திருமணம் சிறிய சடங்குதான். அதற்குச் செலவிடும் நேரம் குறைவுதான். மணமக்கள் தங்களது பாரம்பரிய கலாச்சார உடையில் தேவாலயத்துக்கு வருவார்கள். திருமண விழாவில் கலந்து கொள்கிற ஆண்கள் எல்லோரும் கோட்சூட் அணிந்திருப்பார்கள். பெண்களும் ஒரே மாதிரியான மேனாட்டுக் கலாச்சார உடையுடன் வருவார்கள்.

திருமணச் சடங்கு முடிந்ததும் நடக்கும் விருந்தில் பலவையான மது, பலவித அசைவ உணவுகள் இருக்கும். மதுவகைகளின் தரமும் அளவும், திருமணம் செய்யும் குடும்பத்தினரின் அந்தஸ்துக்கு அளவு கோல்களாக இருக்கும். மாலையில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 'டிஸ்கோ' நடனத்துடன் தொடங்கும். மணமக்களுடன் மற்ற விருந்தினர்களும் ஆடுவார்கள். நடுநிசிவரைக்கும் நடக்கும். அதற்குமேல் மற்றவர்களை ஆட விட்டுவிட்டு மணமக்கள் முதலிரவைக் கொண்டாடப் போய்விடுவார்கள்.

முன்பெல்லாம் பெண்கள் மக்கள் தொகைப் பெருக்கத்திற்காக 12, 14 குழந்தைகள் கூடப் பெற்றெடுத்தார்களாம். இப்போது விழிப்புணர்வு வந்து விட்டது. அளவோடு 2,3 குழந்தைகளோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சிஷெல்ஸ் பெண்கள் உடல் ஆரோக்கியத்தைக் கவனமாகப் பேணுகிறார்கள். முன்பெல்லாம் வீட்டிலேயே பச்சிலைகளை வளர்த்துத் தாமே வைத்தியம் பார்த்துக் கொண்டார்கள். இப்போது சின்ன அசௌகரியம் என்றாலும் மருத்துவ மனைக்குப் போய்விடுகிறார்கள். சிஷெல்ஸ்வாசி களுக்கு மரணம் என்பது மருத்துவ மனையில்தான். அங்கு எல்லா இறப்பையும் அதிகாரபூர்வமாக்க வேண்டுமாம். மாரடைப்பு நோயாளி மருத்துவ மனைக்குக் கொண்டு செல்கையில் வழியில் இறந்தால் கூட மருத்துவரைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்ற பிறகே அடக்கம் செய்ய முடியுமாம். பிறப்பிலும் பதிவு செய்வதில் கட்டாயம் உண்டு. பிறந்து 16 நாட்களுக்குள் பெயருடன் பதிவு செய்துவிடவேண்டும். இல்லாவிடில் அபராத்தில் இருந்து தப்ப முடியாதாம்.

அந்நாட்டில், பெண்களுக்கு நம் நாட்டில் இருக்கும் வரதட்சினைக் கொடுமைகள் இல்லை. காதலர்களே தாங்கள் குடித்தனம் நடத்தத் தேவையானவற்றைப் பட்டியலிட்டு இருவரும் சேர்ந்தே தம் உழைப்பிலிருந்து வாங்கிக் கொள்கிறார்கள் எல்லாவற்றிலும் அங்கு ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமே. எல்லவற்றையும் வாங்கித் தயார் செய்து விட்டு திருமணம் முடிந்த மறுநாளே தனிக் குடித்தனம் போய்விடுகிறார்கள். இதனால் அங்கு மாமியார் மருமகள் பிரச்சினை எழுவதில்லை.

அங்கு பெண்தான் அதிகம் சம்பாதிப்பவள். பெண்கள் தம் சொந்தக் காலில் நிற்கும் அளவுக்குக் உழைப்பால் உயர்ந்து நிற்கிறார்கள். சேமிப்பிலும் கவனம் செலுத்துகிறார்கள். அதனால் அவர்கள் சுதந்திரமாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். இப்போதெல்லாம் திருமண வாழ்க்கையில் பிடிப்பு வந்து விட்டதாம். அதனால் அதற்கேற்ப மாற்றங்கள் சிஷெல்ஸில் உருவாகிக் கொண்டிருக்கின்றனவாம்.

தொடரும்.

நான் கண்ட சிஷெல்ஸ் - 12

நான் கண்ட சிஷெல்ஸ் - 12

மக்கள் வாழ்க்கையும் - கலாச்சாரமும்

ஒரு இனத்தின், மக்களின் அடையாளங்கள் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவையாகும். சகிப்புத் தன்மை, நிதானம், பணிவு, இனப் புரிந்துணர்வு, சமாதானம் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு சிஷெல்ஸ் மக்கள் தமக்கே உரித்தான அமைதியும், ஆறுதலும் கூடிய வாழ்க்கை முறையை அமைக்துக் கொண்டுள்ளனர். அமைதியும், நிம்மதியும், மகிழ்வும் நிறைந்தவர்களாகவே அவர்கள் எப்பொழுதும் காணப்படுகிறார்கள்.

அசலான சிஷெல்ஸ்வாசியை காட்சிப் படுத்துவது இயலாதகாரியம். அவர்களது முன்னோர்கள் பலதரப்பட்டவர்கள். பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்ச் கடலோடிகள், விடுவிக்கப் பட்ட ஆப்பிரிக்க அடிமைகள், இந்திய சீன வியாபாரிகள் என்று பலருடைய வழிதோன்றல்கள் அவர்கள். அவர்களது நிறங்களும் பலவகையானவை. ஆப்பிரிக்காவை ஒட்டியிருப்பாதால் நீக்ரோக்களின் சாயலில் குட்டையான சுருள் முடியுடன் இருந்தாலும் எல்லோருமே கருப்பு இல்லை. இனக்கலப்பால், சாம்பல் கருப்பு, மாநிறம், நல்ல சிவப்பு எனப் பலநிறங்களில் இருக்கிறார்கள் கருப்பு, செம்பட்டைத் தலைமுடி- நீலம், பழுப்புக் கண்கள்- என்று எல்லா வகையிலும் இருக்கிறார்கள். எல்லோரும் மென்மையான, இனி மையான, எப்போதும் மகிழ்ச்சியான குணவியல்பு கொண்டவர்கள்.

அவர்களது பண்பாடு மனதுக்கு நிறைவளிப்பது. அவர்களது நாட்டைப் போலவே இதமான, வரவேற்கத் தக்க இயல்புள்ளவர்கள் அவர்கள். நாங்கள் சிஷெல்ஸ் சென்ற மறுநாள் காலை 7 மணிக்கு வௌ¤யே நடைப்பயிற்சிக்குச் சென்றபோது எதிரேயும் பக்கவாட்டிலும் சுறுசுறுப்பான எறும்புகள் போல ஆண்களும் பெண்களும் வேலைக்கு விரைந்து கொண்டிருந்தார்கள். எங்கஆளைப் பார்த்ததும் சிறு புன்முறுவலுடன் அதிக சப்தமெழுப்பாமல் லேசாக உதடுகளை அசைத்து 'போன்ஸ¤' என்பது போல எதுவோ சொன்னார்கள். ஒருவர் பாக்கி இல்லாமல், முன்னதாகத் தெரியாதிருந்தும் நம்மிடமிருந்து பதிலை எதிர்பாராமலே, சொல்லியபடி நடந்து கொண்டிருந்தார்கள். முதலில் புரியாது போனாலும் ஏதோ அவர்கள் மொழியில் காலை வணக்கம் சொல்கிறார்கள்

என்று புரியவே, நாங்களும் பதிலுக்கு புன்னகையுடன் 'குட்மார்னிங்' என்றபடி நடந்தோம். வீட்டுக்குத் திரும்பியதும் மகளிடம் கேட்டபோது அது அவர்களது பண்பாடு என்றும் ஆண்கள் பெண்கள் அனைவரும்- தெரிந்தவர், தெரியாதவர் யாரைக் கண்டாலும் தங்கள் மொழியில் வணக்கம் சொல்வார்கள் என்றும் தெரிந்தது. 'போன்ஷ¤' என்றால் காலை வணக்கம் என்றும் 'போன்ஷ்வா' என்றால் மாலை வணக்கம் என்று அறிந்து கொண்டதும் நாங்களும் மறுநாள் முதல் யாரைக் கண்டாலும் அவர்கஆளைப் போலவே புன்முறுவலுடன் 'போன்ஷ¤' சொல்ல ஆரம்பித்தோம். அது முதல் அங்கிருந்த இரண்டு மாதங்களும் தினமும் எங்கள் வழியில் பணிக்குச் செல்கிறவர்கள் எல்லோரும் மனத்தளவில் நட்புப் பூண்டவர்களாக ஆனார்கள். வாய் திறந்து பேசாது போனாலும் அவர்களது அந்த ஆரோக்கியமான பண்பு மனதில் பதிந்து போனது. யாராவது அப்படி வணக்கம் சொல்லாமல் அலுப்பான முகத்துடன் சென்றால் அவர்கள் அந்நாட்டு மக்கள் இல்லை என்பது நிதர்சனம்.

வீட்டு வேலைக்கு வருபவர்களும் - எல்லோரும் சமம், ஏற்றத்தாழ்வு இல்லை என்ற நிலையில் உள்ளவர்கள் என்பதால் - மரியாதையை எதிர்பார்ப்பார்கள். அவர்களை 'போன்ஷ¤' சொல்லி வரவேற்கவேண்டும். இல்லாவிடில் அவமதிப்பாக நினைப்பார்கள். வேலைக்கு வரும் பெண்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள். நம்பி, வீட்டு சாவியைக் கொடுத்து விட்டுப் போகலாம். சம்பளம் கொஞ்சம் அதிகம்தான். தினமும் இரண்டுமணி நேரம் வந்து எல்லா வேலைகளையும் - டாய்லெட் சுத்தம் செய்வது உட்பட, சலவை எந்திரத்தில் துணியைப்போட்டு எடுத்து அவற்றைப் பெட்டி போட்டு உங்கள் அறைக்குள்ளே வைப்பது வரை முகம் சுளிக்காமல் செய்கிறார்கள். சிஷெல்ஸ் ஆண்களும் பெண்களும் உழைப்புக்குச் சளைக்காதவர்கள். ஆண்கள் கூலிவேலைக்குச் சென்றால் தினமும் சீஷெல்ஸ் பணத்தில் 100ரூ ஊதியம் பெறுகிறார்கள். மாதவேலை செய்யும் பெண்கள் 1500ரூ போலப் பெறுகிறார்கள்.

நம்பிக்கைக்கு உரியவர்கள் என்பதுமட்டுமல்ல பாசத்துக்குக்கும் விசுவாசத்துக்கும் பெயர் போனவர்கள் அந்த நாட்டுப் பெண்கள். மரியாள் என்றொரு மூதாட்டி என் மகள் வீட்டில் அவள் அங்கு போன நாளாய், பத்து ஆண்டுகளுக்கு மேலாய் வேலை செய்து வந்தார். கணவன் மனைவி இருவரும் காலை 7 1/2 மணிக்கே பணிக்குப் புறப்பட்டு விடுவதால் மரியாள், காலை அவர்கள் கிளம்பு முன்பே வந்து மகள் பள்ளி முடிந்து மதியம் 3 மணிக்குத் திரும்பும்வரை கைக்குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டு வேலைகளையும் முடித்து வைத்திருப்பார். சொந்த மனிதர்கள் கூட அவ்வளவு பொறுப்பாய் இருப்பார்களா என்பது சந்தேகமே. திரும்பும் போது தினமும் என் மகளுக்கு முத்தம் கொடுத்தே விடை பெறுவார். இப்போது வயது 70க்கு மேல் ஆகிவிட்டதால் ஓய்வு பெற்றுவிட்டார்.

சிஷெல்வாக்கள் எப்போதும் அவசரப்படுவதே இல்லை. நிதானம், பொறுமை, பதற்றமின்மை அவர்கள் இயல்பு. அலுக்காது பேசவும் எப்போதும் சிரிப்பும் கலகலப்புமாய் இருக்கவும் அவர்களுக்கு அவகாசம் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு முறையே இதமான, எதையும் லகுவாக எடுத்துக் கொள்ளுகிற, வௌ¤நாட்டாரின் பழக்கத்தால் தம் இயல்பை மாற்றிக் கொள்ளாத குணச்சித்திரம் கொண்டது. இந்தியப் பெரு நகரங்களில் காணப்படுவது போல எந்தப் பரபரப்பையும் அங்கு காணமுடியாது.

அவர்களது உணவுப் பழக்கம் மிக எளிமையானது. காலையில் காபி அல்லது டீ குடித்துவிட்டுச் செல்பவர்கள் இடையில் எதுவும் எடுத்துக் கொள்வதில்லை. மதியம் சமூசா போல ஏதாவது ஸ்நாக்ஸ். இரவுதான் சமையல். ஏனெனில் காலை 7 மணிக் கெல்லாம் கிளம்பிவிட வேண்டும், மதியம் இடைவேள அரைமணிதான். எனவே சாப்பிட நேரமில்லை. இரவு உணவில் மீன் நிச்சயம் இடம் பெறும். பாசுமதி அரிசிதான் சமைக்கிறார்கள். அங்கு பசு மாடுகள் இல்லாததால் பௌடர் பால்தான் காபி, டீ, தயிர் எல்லாவற்றிற்கும்.

உலகம் முழுக்க மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்பது ஒரு ஓய்வு நாள், .அவ்வளவு தான். அன்று காலை அதிக நேரம் தூங்குவது, மதியம் விருப்பப்படி உண்பது என்பதுதான் நடைமுறை. ஆனால் சிசெல்ஸ் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உற்சாகமான நாள்.

அன்றைய காலையை 'ஹேப்பி அவர்ஸ்' என்று நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். சிஷெல்ஸ் மக்களில் அனைவரும் மது அருந்துபவர்கள். மது அருந்துவது அவர்கள் நாட்டுக் கலாச்சாரம். எல்லா வீடுகளிலும் ஓட்கா, பிராந்தி, விஸ்கி, ஜின் போன்றவை இருக்கும். ஏழையாக இருந்தால் பீர் பாட்டிலாவது வைத்திருப்பார். நமக்குத் தண்ணீர் போல அவர்களுக்கு பீர். அதுதான் தேசீய பானம். உலகில் பீர் அதிகம் குடிக்கும் 10 நாடுகளில் இது ஒன்பதாவது. ஜெர்மனி முதலாவது. இங்கு நம்மூரில் யாராவது வீட்டுக்கு வந்தால் 'காபி சாப்பிடுகிறீர்களா?" என்று கேட்பது போல அங்கே "பிராந்தி சாப்பிடுகிறீர்களா?" என்று கேட்பார்கள். இங்கு காபி, டீக்கு உள்ள மரியாதை அங்கு பிராந்திக்கு. நம் வீட்டுக்கு அவர்கள் வரும்போது இந்தியா ஞாபகத்தில் 'காபி சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்டு விட்டால் வேண்டாம் என்று மறுத்து விட்டுப் பிறகு நம் வீட்டுக்கு வரமாட்டார்களாம். அதனால் நம் வீட்டிலும் மதுவகைகள் வருபவர்களுக்காக வைத்திருக்க வேண்டும்.

சிஷெல்ஸில் விழா என்றாலே மது தான். இப்படி மது கலாச்சாரம் சிஷெல்ஸின் எல்லா இடங்களிலும் பரவி இருந்தாலும் இதற்கு விதி விலக்கும் உண்டு. 'செவன்த்டே அட்வாண்டிஸ்' போன்ற ஒரு சில குறிப்பிட்ட கிறிஸ்தவ அமைப்பினர் மது அருந்துவதில்லை. அவர்களது விழாக்களிலும் மது தலை காட்டுவதில்லை.

சீஷெல்ஸ் மக்கள் மதநம்பிக்கை அதிகம் உடையவர்கள். அது கிறிஸ்துவ நாடு. 95 சதவீதம் கிறிஸ்து மதத்தவர். ரோமன் கத்தோலிகர்களே அதிகம். முஸ்லிம்கள் 3 சதம். இந்துக்கள் சிறுபான்மையினர். 2 சதம். சிஷெல்ஸ் கிறிஸ்துவர்கள் குழந்தைகளுடன் ஞாயிற்றுக் கிழமைகளில் வண்ணவண்ண உடைகளில் அணிஅணியாய்த் தேவாலயத்துக்குச் செல்வதைப் பார்க்க முடிந்தது. அவர்களது ஆன்மீகம் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் மந்திர, தாந்திரிக நம்பிக்கை முதல் - மக்களிடம் செல்வாக்கு மிக்க ரோமன் கத்தோலிக் சர்ச்சின் மீதுள்ள நம்பிக்கை என இணையாகத் தொடர்கிறது.

சிஷெல்வாக்களின் கலப்பினக் கூறுகள் அவர்களது உணவு, கலாச்சாராம், கலை அனைத்திலும் பிரதிபலிகிறது. மேனாட்டுக் களியாட்டங்களான டிஸ்கொதே நடனங்களும் இசையும் அவர்களது வாரவிடுமுறை நாட்களில் காணப்படும். டிஸ்கோ க்ளப்கள் ஆங்காங்கே உள்ளன. மேனாட்டு இசை அங்கு குடியேறிய ஐரோப்பியர்களால் அத்

தீவுக்கு இறக்குமதியானது. வயலின், சிதார், கிடார் ஆகியவை டிரம், மற்றும் முழவு இசைகளின் பின்னணியில் இசைக்கப் படுகின்றன. பாரம்பரிய பழங்குடி நடனங்களும் உயிர்ப்புடன் உள்ளன.

வெளிநாட்டவர் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். கட்டுமானப் பணிகளில் அதிகமும் சீனர்களே ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். மேற்பார்வையாளர் அவசியமில்லை. இடையில் நம்மூர் போல டீ குடிக்க, சிகரெட் புகைக்க என்று வெளியே போய் நேரம் கடத்துவதை அவர்களிடம் பார்க்க முடியாது.

டீ தேவைப் பட்டால் வேலை செய்யும் இடத்தில் அவர்களே போட்டுக் கொள்ளுகிறார்கள். புல்டோசர் போல கனரக எந்திரங்களைக் கையாளுவதில் குஜராத்திகள் திறமையாக இருக்கிறார்கள். கான்ட்ராக்ட் வேலையிலும் அவர்களே திறமையாய்ச் செயல் படுகிறார்கள். கூலிகள் அனைவரும் உள்ளூர் இன ஆண்கள்தாம்.

அவர்களது வீடுகளும் வித்யாசமானவை. பல அடுக்கு மாடிக்கட்டடங்கள் இல்லை. அதிகமும் ஒரு மாடி உடையவைதாம். மேல்மாடி கேரள பாணியில் கூரை வடிவில்தான் அமைந்துள்ளன. திறந்த மொட்டைமாடி இல்லை. ஏனெனில் சுற்றிலும் கடற்பிரதேசம் என்பதால் ஈரக்காற்றால் திறந்தமாடித் தளங்களின் உள்ளிருக்கும் இரும்புக் கம்பிகள் சீக்கிரம் துருப்பிடித்து பலமிழந்து விடுகின்றன. அதனால் நெளிநெளியான ஸ்டீல் தகடுகளால் கூரைகள் வேயப்படுகின்றன. வெப்பம் தாக்காதிருக்க உள்ளே மரப்பலகைகளாலான தளங்கள் அமைக்கப் படுகின்றன.

வாரவிடுமுறை நாட்களில் கடைவீதிகள் மக்களால் நிரம்பிவழிகின்றன. அன்று கடைகளுக்கு நல்ல வியாபாரம். மக்கள் எல்லோரும் நம்மூர் சந்தைகளைப் போல எதையாவது வாங்கித் தின்றுகொண்டோ எதையாவது குடித்துக் கொண்டோ கூட்ட நெரிசலுக்கிடையே புகுந்து வெளிவருகிறார்கள். விக்டோரியா நகர் மைத்தில் ஒரு பெரிய அங்காடி உள்ளது. அதில் எல்லாப் பொருள்களும் கிடைக்கின்றன. காய்கறி, மளிகை, மீன் விற்பனைப் பகுதிகளில் கூட்டம் அதிகம். காய்கறிகள் புதிதாக வாங்க அதிகாலையே வந்துவிடவேண்டும். அந்நாட்டுக் கைவினைப்பொருள்களும் அந்நாட்டு அடையாளம் காட்டும் நினைவுப் பொருள்களும் அங்கே குவிந்து கிடக்கின்றன.

சிஷெல்ஸ் மக்கள் துக்கம், சோகம் ஆகியவற்ரை அதிகம் வௌ¤க் காட்டிக் கொள்வ தில்லை. மனதுக்குள்ளே கட்டுப் பாடாய் வைத்துக் கொள்வார்கள். 'இறப்பு கொடுமை யானதுதான். ஆனால் தவிர்க்க முடியாதது. அதனால் அழுது புலம்புவதால் ஆவது ஏதுமில்லை' என்ற மனநிலை உடையவர்கள். ஒரு சிலர் கண்ணீர் வடிக்கலாம். ஆனால் இறப்பு வீடும் இறப்பு ஊர்வலமும் முழு அமைதியுடன் இருக்கும். ஆண்கள் அனைவரும் கருப்பு சூட், கருப்பு டை அணிந்து இருப்பார்கள். பெண்கள் கருப்பு கலந்த உடை உடுத்தி இருப்பார்கள். அனைவரும் ஒரே மாதிரியான உடையணிந்து, ஒரே மாதிரியான நடையுடன் பிணத்தின் பின்னே நடந்து போவார்கள். இறுதிக் காரியம் முடியும் வரை அதே அமைதி தொடரும். பிறகு துக்கத்தை மறக்க அளவொடு குடிப்பார்கள். இறந்து போனவர்களின் நெருங்கிய உறவினர்கள் என்றால் ஒர் ஆண்டு வீட்டில் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள். கல்யாண நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் அங்கு விருந்துண்ண மாட்டார்கள். நடனம் ஆட மாட்டார்கள். அப்படி அவர்கள் சோகத்தைக் கடைப்பிடிப்பார்கள்.

சிஷெல்ஸ் குடிமகன் நாஆளையைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. இன்றய பொழுதுதான் அவன் கையில் இருக்கும். அதை மட்டுமே அவன் நினைத்துச் செயல்படுவான். கிடைத்ததை வைத்து அனுபவித்துக் கொண்டிருப்பான். கிடைப்பதைச் சேர்த்து வைக்கும் மகிழ்ச்சியைவிடக் கிடைப்பதைச் செலவு செய்யும்போதுதான் அவனுக்கு அதிக மகிழ்ச்சி. ஏனெனில் நான் முன்பே குறிப்பிட்டது போல் 'பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையல்ல' என்பது அவர்களது திடமான அபிப்பிராயம். திருடர்கள், பிச்சைக்காரர்கள் அந்நாட்டில் இல்லை என்பது போல துப்பாக்கிகளும் அங்கு இல்லை என்பதும் அவர்களது நிம்மதியான வாழ்வுக்கு ஒரு காரணம்.

-தொடரும்.