Friday, April 14, 2006

கடித இலக்கியம் - 1

'சந்திரமௌலி' என்ற புனைப்பெயரில் 1970களில் 'தினமணிகதிரி'ல் நட்சத்திரக் கதைகளும் பின்னர் அப்பெயரில் அற்புதமான கவிதைகளும் எழுதியுள்ள திரு.பி.ச.குப்புசாமி அவர்கள் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர்.

கம்ப ராமாயணத்திலும், திவ்யப் பிரபந்தத்திலும் திளைத்து அவைபற்றி அருமையாய்ச் சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். 'இராமகிருஷ்ண அமுதத்தி'ல் உருகி உருகி மெய்மறப்பவர். திரு.ஜெயகாந்தன் அவர்களோடு கடந்த 50 ஆண்டுகளாய் பக்தியும் பரவசமுமாய் அவரது பாசத்துக்கும் பகிர்தலுக்கும் உரியவராய் இருப்பவர். அவரது அணுக்கத் தோழர்; தொண்டர். அவரது 'கற்றுச்சொல்லி'யாய் அவரது அறிவார்ந்த பேச்சுக்களையும், அபூர்வமாய்ப் பீரிடும் கவிதைகளையும் நெஞ்சுக்குள் பதிவு செய்துகொண்டு அவ்வப்போது எங்கள் வேண்டுகோளுக்குக்கிணங்க அஞ்சல் செய்பவர். எனக்கு முன்பே ஜெ.கா அவர்களுடன் பழக்கம் உண்டெனினும் அவரால்தான் எனக்கு நெருக்கமும் பரவசமும் ஏற்பட்டன. 1964ல் பரிச்சயமான எங்கள் நட்பு, இன்றுவரை கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாய் தொடர்கிறது. பரிச்சயமானது முதல் 1996 வரை நானும் அவரும் கொண்டிருந்த இடையறாத கடிதப் பரிமாற்றம் இலக்கியச்சுவை நிரம்பியது. கதையும், கவிதையும் எழுதுவதை நிறுத்தி இருப்பதைப் போல கடிதம் எழுதுவதையும் அவர் இப்போது நிறுத்தி வைத்திருப்பது என்னளவில் பெருத்த இழப்புதான். அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் கடிதங்களில் செய்துகொண்ட சிந்தனைப் பரிமாற்றத்தின் சுகம் கிட்டுமா என்ன? கடிதம் எழுதுவதை இலக்கியமாக்கியவர்கள் திரு டி.கே.சியும், கி.ராவும், கு.அழகிரிசாமியும் தாம். என்னைப் பொறுத்தவரை திரு குப்புசாமியின் கடிதங்களும் இலக்கியமே. இந்த 45 ஆண்டுகளாய் எனக்கு அவர் எழுதியுள்ள ஏராளமான கடிதங்களிலிருந்து இலக்கியச்சுவை மிகுந்த பகுதிகளை மட்டும் எடுத்து இலக்கிய அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைந்ததன் விளைவே இப்பகுதி.

இனி கடிதங்களிலிருந்து :

- வே.சபாநாயகம்.
----

கடிதம் 1.
=======

திருப்பத்துர். வ.ஆ.
4-2-65.

அன்பு நண்பருக்கு,

நமஸ்காரம். தங்களது சென்ற கடிதத்துக்குப் பிறகு, திடீரென்று பல கவலைகள் குறுக்கிட்டுவிட்டன. தேசத் துரோகக் கோஷங்களை எழுப்பிக் கொண்டு, மாணவர்கள் என்கிற பெயரில் மிருகங்களின் மந்தையொன்று புறப்பட்டிருக்கிறதே, அந்த மந்தையின் ஒரு பகுதி, இங்கே திருப்பத்தூரிலும் உண்டு. 'விவேகாநந்தா சங்கம்' என்கிற ஒன்றைத் துவக்கி, அந்த மாணவ மந்தையுடன் உள்ளூர்ப் போராட்டம் ஒன்று நடத்தினோம்.

பஞ்சாயத்துத் தேர்தல்கள் வேறு; தேர்தல் அலுவலராக நியமித்துவிட்டனர். அது ஒரு மூன்று நாள். பிறகு, நேற்று உங்களுக்குக் கடிதம் எழுதக் கருதினேன். ஆனல், இன்று காலை வரை நல்ல ஜூரம். எனவே கடிதம் தாமதமாகிறது.

இப்போதும் படுக்கையில் சாய்ந்தவாறு நிதானமாக எழுதுகிறேன். உடலின் ஆயாசம் இக் கடிதத்திலும் தென்படலாம். மன்னியுங்கள்.

'விழுதுகள்' உங்களுக்குப் பிடித்தது போலவே, இங்கு எல்லோருக்கும் வெகுவாகப் பிடித்திருக்கிறது.

ஓங்கூர், திண்டிவனத்துக்குப் பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறதாக நினைக்கிறேன். ஒங்கூர் சாமியாரிடம் ஜெ.காவுக்கு நேரிடையாகவே பழக்கம் உண்டு. இப்போதும் கூட அவர் - ஓங்கூர் சாமி பேசுகிற விதத்தையும், சிரிக்கிற விதத்தையும் அப்படியே செய்து காண்பிப்பார். 'விழுதுகளி'ல் வருகிற சாமியாரின் உரையாடல்களை எல்லாம், ஜெயகாந்தன் பேசிக் காட்டுவதைப் பார்க்க வேண்டும்! அற்புதமாய் இருக்கும். அதை அனுபவித்தவர்கள் 'விழுதுகளை' இன்னும் அனுபவிப்பார்கள்.

'உன்னைப் போல் ஒருவன்' படம் முடிந்துவிட்டது. அதைப் பற்றி போன கடிதங்களில் எழுதி இருந்தேனா? அருமையாக வந்திருக்கிறது. 'We deal with the problems of life....' என்பது படத்துக்கு முன்னே காட்டப் படுகிற 'எம்ப்ளம்' (emblem). படம் முடிந்ததும் எம்ப்ளமும் இவ்வாறு முடிகிறது: '....and those problems never END'.

காமராஜ் படத்தைப் பார்த்துவிட்டு, "இந்த மாதிரிப் படங்களையெல்லாம் அரசாங்கமே விலை கொடுத்து வாங்கி, ஜனங்களுக்கு இலவசமாகக் காட்டி, அவர்கள் ரசனையை மாற்ற வேண்டும்" என்று கூறினார். படம் இப்போது டெல்லிக்குப் போயிருக்கிறது. ஜனாதிபதியின் பரிசு உண்டா இல்லையா என்பது மார்ச்சில் தெரிந்துவிடும்.

இதன் வேலைகள் முடிந்த பிறகு 'பிரம்மோபதேசத்'தைப் படமாக்குவார்.

தாங்கள் ஏதாவது எழுதினீர்க்ளா? எழுதியிருந்தால் விகடனுக்கே முதலில் அனுப்புங்கள்.

ஏனெனில், மற்ற பத்திரிகைகளிலிருந்து அவர்கள் சற்று மாறுபட்டு, இலக்கியம் என்கிற மஹாவீணையின் அனந்தகோடித் தந்திகளில் ஒன்றை ஏறக்குறையவாவது அவர்கள் இப்போது உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, பெரும்பாலும் அவர்கள் நல்ல சரக்கை வேறு எக்காரணங்களாலும் நிராகரிக்கமாட்டார்கள். 'வாழ்வை நினைத்த பின்....' என்கிற சிறுகதையொன்று - நண்பர் வையவனுடையது - வருகிற வாரங்களில் விகடனில் வரும். படித்துப் பாருங்கள்.

பொதுவாக, எழுத்தாளர்கள் மட்டுமன்று, எல்லாவிதமான கலைஞர்களுமே கவிதையின் நாடியை உணர்ந்து கொள்ளவேண்டும் என்று கருதுகிறேன். கவிதை என்றால் verse formஐச் சொல்லவில்லை. 'Poesy in emotions'. அதைக் குறிப்பிடுகிறேன்.

'புதுமைப் பித்தன் கட்டுரைகள்' (ஸ்டார் பிரசுரம்) பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் அவரது கலைப் பிரக்ஞையும், அவ்விஷயத்தில் அவர் கொண்டிருந்த உஷார்த் தன்மையும் எவ்விதமாய்த் தெரிகிறது பாருங்கள்!

புதிய புத்தகங்கள் எதுவும் சமீபத்தில் படிக்கவில்லை. ஜவாஹர்லால் நேருவின் பிரசங்கங்களை ஆதியோடந்தமாகத் தற்போது படிக்கத் தொடங்கியிருக்கிறேன். India had never seen such a person....

தங்கள் சித்திரம் மற்றும் புகைப்படக்கலை முயற்சிகள் எவ்வாறுள்ளன? சில புகைப் படங்களை அனுப்பி வையுங்கள். நீங்கள் எழுத்தையும் பயின்றிருக்கிற காரணத்தால், வெறும் யந்திர உணர்வோடு காமிராவைக் கையிலெடுப்பவர்களைக் காட்டிலும், தங்களது காமிராவின் காட்சிகள் கவித்துவத்தோடு இருக்கும். அதனாலேயே இதை ஆவலோடு அடிக்கடி கேட்கிறேன்.

தங்களது 'பார்சல் கடிதங்களை'யும் எதிர்பார்க்கிறேன்.

- நிறைய ஆயாசத்தின் காரணமாகவே கடிதம் சுருங்குகிறது.

பதில் எழுதுங்கள்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

==========

- வே.சபாநாயகம்

(தொடரும்...)

1 comment:

walterhuron1708941103 said...

While you read this, YOU start to BECOME aware of your surroundings, CERTIAN things that you were not aware of such as the temperature of the room, and sounds may make YOU realize you WANT a real college degree.

Call this number now, (413) 208-3069

Get an unexplained feeling of joy, Make it last longer by getting your COLLEGE DEGREE. Just as sure as the sun is coming up tomorrow, these College Degree's come complete with transcripts, and are VERIFIABLE.

You know THAT Corporate America takes advantage of loopholes in the system. ITS now YOUR turn to take advantage of this specific opportunity, Take a second, Get a BETTER FEELING of joy and a better future BY CALLING this number 24 hours a day.
(413) 208-3069