Tuesday, August 23, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 12. பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு - 4 (தி.க.சி)



சாகித்ய அகாதமி விருது பெற்ற, சிறந்த திறனாய்வாளர் திரு.சிவசங்கரன்
அவர்களுடன் 'தாமரை' இதழின் ஆசிரியராக அவர் இருந்த போது எனக்கு
ஏற்பட்ட தொடர்பு இன்று வரை கடிதம் மூலம் தொடர்கிறது. அவரும் அவரது
குருநாதரான அமரர் வல்லிக்கண்ணன் அவர்களும் தங்களுக்கு வரும் கடிதங்களுக்கு
உடனுக்குடன் முத்து முத்தான கையெழுத்தில் தாமே தம் கைப்பட பதில் எழுதும்
பண்பிற்காக பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டவர்கள். இன்று முதுமையினாலும் உடல்
நலிவினாலும் தி.க.சி அவர்களால் முன்பு போல எல்லோருக்கும் பதில் போட
முடியாதிருப்பினும் 'தினமணி'யிலும், அநேகமாக எல்லா இலக்கிய இதழ்களிலும்
அயராமல் அவர் விமர்சனக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பது இளைஞர்களைப்
புருவம் உயர்த்த வைப்பதாகும்.

அவர் ஆசிரியராக ஆன பிறகு 'தாமரை'யின் இலக்கிய அந்தஸ்து வெகுவாக
உயர்ந்தது. அநேகமாக இன்றைய புகழ் பெற்ற படைப்பாளிகளில் பலரும் அவரால்
இனங்காணப்பட்டு ஊக்குவிக்கப் பட்டவர்கள் தாம். இன்று நான் ஒரு இலக்கிய
விமர்சகனாகவும் இருப்பதற்கு அவர் தான் காரணம். தாமரைக்கு நான் நேரடியாக
அனுப்பாதிருந்தும், பக்தனைத் தேடி வந்து அருள்பாலிக்கும கடவுளைப் போல,
'தீபம்' பத்திரிகைக்கு நான் அனுப்பிய எனது முதல் விமர்சனக் கட்டுரையை
அவரே விரும்பி வாங்கி தாமரையில் வெளியிட்டு என்னை ஊக்குவித்தார்.

அப்போது நான் இலக்கிய இதழ்களில் அறிமுகம் ஆகி இருக்கவில்லை. 'தீபம்'
இதழில் வாசகர்களை 'நான் ரசித்த புத்தகம்' என்ற தலைப்பில் எழுதும்படி ஆசிரியர்
நா.பா கேட்டிருந்தார். அதற்காக அப்போது நான் மிகவும் லயித்துப் படித்திருந்த
'நித்தியகன்னி' என்கிற எம்.வி.வெங்கட்ராமின் அற்புதமான நாவலைப் பற்றி ஒரு
விமர்சனம் எழுதி அனுப்பி இருந்தேன். அனுப்பி மூன்று மாதங்கள் ஆகியும் தீபம்
இதழில் அது வரவில்லை. திடீரென்று ஒரு நாள் தாமரை இதழ் ஒன்று எனக்குத்
தபாலில் வந்தது. நான் சந்தா எதுவும் கட்டாத நிலையில் இது எப்படி என்று
புரியாமல் பிரித்துப் பார்த்தேன். அதில் எனது 'நித்தியகன்னி' விமர்சனம் வெளியாகி
இருந்தது. தீபத்துக்கு அனுப்பியது எப்படி தாமரையில் வெளியாகி இருக்கிறது
என்பது எனக்குப் புரியாத புதிராக இருந்தது. ஆனாலும் ஆசிரியர் தி.க.சி
அவர்களுக்கு உடனே நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதினேன்.

வெகு நாட்களுக்குப் பின்னர் தான் அந்தப் புதிரை, தீபம் அலுவலகத்துக்குச்
சென்ற போது திரு.எஸ்.திருமலை விடுவித்தார். பக்க அளவு காரணமாய் தீபத்தில்
வெளியிட இயலாமல் எனக்குத் திருப்பி அனுப்ப இருந்த எனது கட்டுரை, அங்கு
வந்த தி.க.சி அவர்களது கண்ணில் பட்டிருக்கிறது. படித்துப் பார்த்த அவர், தீபத்தில்
பிரசுரிக்க இயலாவிடில் தாமரையில் தான் பிரசுரிப்பதாக வாங்கிப்போய்
வெளியிட்டிருக்கிறார் என்று அறிந்து, சிலிர்த்துப் போனேன்.

பிறகு சில ஆண்டுகள் கழித்து சென்னையில் 'இலக்கிய சிந்தனை' ஆண்டுவிழா
ஒன்றின் போது தி.க.சி அவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது
அருகில் சென்று வணங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். பெயரைச்
சொன்னதும், "அடடே! நித்யகன்னி சபாநாயகமா?" என்று வாத்ஸல்யததுடன்
தட்டிக் கொடுத்தார். அவரது நினைவாற்றலும் மனித நேயமும் என்னை நெகிழ
வைத்தன. அன்று தொடங்கி இன்று வரை அந்தப் பெருந்தகையுடன் கடிதங்கள்
மூலம் தொடர்பு கொண்டிருப்பதையும் அவரது கடிதங்களில் தென்படும் பாசமும்
நேசமும் மிக்க அக்கறையையும் என் பாக்கியமாகக் கருதுகிறேன். 0


Thursday, August 11, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 11. .பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு - 3 (ஆர்வி)



'ஆர்வி' என்கிற - 1950 -80 களில் பிரபலமாக விளங்கிய திரு ஆர்.வெங்கட்ராமன்
என்கிற எழுத்தாளரை இன்றைய தலைமுறையினரில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
'கலைமகள்' ஆசிரியர் குழுவில் முக்கிய உறுப்பினரான அவர் அற்புதமான 'கதை
சொல்லி'. 'சுதேசமித்திரன் வார இதழி'ல் அவர் எழுதிய 'கனவு மயக்கம்' தொடர்
நாவலையும், தனி நூலாக வந்த திரை உலகப் பின்னணியில் அமைந்த 'திரைக்குப்பின்',
'யுவதி' மற்றும் வரலாற்று நாவலான 'ஆதித்தன் காதல்' போன்ற ரசமான படைப்பு
களையும் என்னைப் போன்ற அன்றைய வாசகர்கள் ஐம்பது ஆண்டுகள் ஆகியும்
இன்னும் மறவாமல் அசைபோடுவதே அவரது எழுத்தின் பெருமைக்குச் சான்றாகும்.
அவரது நாவல்களைப் போலவே அவரது குறுநாவல்களும் சிறுகதைகளும் திகட்டாதவை.

கலைமகள் நிறுவனம் 1950ல் துவங்கிய 'கண்ணன்' என்கிற சிறுவர் பத்திரிகையின்
ஆசிரியராகப் பொறுப்பேற்று, இருபதாண்டுகளுக்கு மேலாகப் பல சாதனைகளை
நிகழ்த்தியவர் ஆர்வி. இன்று பிரபலமாக விளங்கும் 'அம்பை', ஜோதிர்லதா கிரிஜா,
ஜே.எம்.சாலி, 'ரேவதி' என்கிற ஹரிஹரன், லெமன், காலம் சென்ற புவனை கலைச்
செழியன் போன்றவர்கள் அவரால் உருவானவர்கள்தாம். 70களில் எனது சிறுகதை
களையும், நான் எடுத்த புகைப்படங்களையும் 'கண்ணனி'ல் வெளியிட்டு, குழந்தை
எழுத்தாளராகவும் என்னை உற்சாகப்படுத்தியவர். அதன் மூலமாகத்தான் ஆர்வியுடன்
எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது.

நான் சென்னை செல்லும் போதெல்லாம் தவறாமல் சந்திப்பவர்களில் அவரும்
ஒருவர். சந்திக்கும் போதெல்லாம் ஆரம்ப எழுத்தாளர் என்று அலட்சியப்படுத்தாமல்
பாசத்துடன் வரவேற்றுப் பேசுவார். என் நண்பரும் சக தலைமை ஆசிரியருமான
திரு.புவனை கலைச்செழியன் எனது மாவட்டக்காரர் என்பதால் அவரைப்பற்றி
ஒவ்வொரு தடவையும் அக்கறையுடன் விசாரிப்பார். அதே போல என் நண்பரைப்
பார்க்கும் போதும் என்னைப் பற்றி விசாரிப்பார். அந்த அளவுக்கு குடும்ப உறுப்பினர்
போன்று இளம் எழுத்தாளர்களிடம் பாசம் காட்டிய பத்திரிகை ஆசிரியர் வேறு
யாரையும் நான் கண்டதில்லை.

பின்னாளில், 20 ஆண்டுகளுக்கு மேலாக 'கண்ணனை' வளர்த்த அவர், நிறுவனத்துடன்
ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்த் விலகினார். அவருடன் 'கண்ணனு'ம் நின்று
போயிற்று. குழந்தை இலக்கியத்தின் ஒரு மறக்க இயலாத சகாப்தமாய் இன்றும்
நினைவில் இருக்கும் 'கண்ணன்' நின்று போனது குழந்தைகளுக்கும், குழந்தை இலக்கியப் படைப்பாளிகளுக்கும் பெரும் இழப்பு என்றே சொல்ல வேண்டும்.

'கண்ணனி'லிருந்து விலகிய பின் அவர் எழுதுவதைக் குறைத்துக் கொண்டார்.
மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் பிறகு ஒரு முறை சந்தித்தேன்.
1993ல் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நானும் சென்னை செல்வது குறைந்து
போனதால் அவரது தொடர்பு விட்டுப் போயிற்று.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் தொடர் கொள்ள, 'கலகி' பத்திரிகை மூலம்
ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. 'பாலம்' என்கிற அறிவிப்பின் மூலம் வாரந்தோறும் பலரும்
தம் விருப்பங்களைத் தெரிவித்து, சம்பந்தப்படடவர்கள் பதிலளிக்கும் ஒரு நல்ல
ஏற்பாட்டை'கல்கி' செய்து வந்தது. அதில் ஒரு வாரம் ஆர்வி அவர்கள, பல ஆண்டு
களுக்கு முன் 'வானதி பதிப்பகம்' வெளியிட்ட தனது 'ஆதித்தன் காதல்' நாவலை மறு
பிரசுரம் செய்ய, அதன் பிரதி தன்னிடமோ பதிப்பகத்தாரிடமோ இல்லாததால் அதனை
தனது ரசிகர்கள் யாரேனும் வைத்திருந்தால் கொடுத்து உதவுமாறு வேண்டுகோள்
விடுத்திருந்தார். அதிர்ஷ்டவசமாக என்னிடம் அந்த நாவல் இருந்தது. ஆர்விக்கு நன்றிக்
கடனாக நாம் என்ன செய்ய முடியும் என்று எண்ணி இருந்த எனக்கு, இது ஒரு நல்ல
வாய்ப்பாக அமைந்தது. உடனே ஆர்வி அவர்களுக்கு எழுதினேன். அவருக்கு மிகுந்த
மகிழ்ச்சி. பிரதி கிடைக்கும் என்ற நம்பிக்கையற்று இருந்த நிலையில் அது கிடைத்து
இருப்பதோடு அதுவும் அவரது அன்பர்களில் ஒருவனான என் மூலம் சாத்தியமாகி
இருப்பதைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து, பிரதியை அனுப்பித் தருமாறும், மறுபிரசுர
மானதும் புதிய பிரதி ஒன்றினை எனக்கு அனுப்பி வைப்பதாகவும் எழுதினார். நானும்
உடனே அனுப்பினேன். சில மாதங்களுக்குப் பிறகு 'வானதி பதிப்பகம்' மறுபிரசுரமான
'ஆதித்தன் காதல்' நாவலின் பதிய பிரதி ஒன்றினை அனுப்பி வைத்தது. அதன் பிறகு
ஆர்வியிடம் தொடர்பில்லை.

வெகு நாட்களுக்குப் பிறகு, நண்பர் 'ரேவதி' மூலம் எண்பதாண்டு நிறைவுக்குப்பின்
ஆர்வி அவர்கள் இயற்கை எய்தியதை அறிந்து மனம் கனக்க அவருடன் துக்கத்தைப்
பகிர்ந்து கொண்டேன். 0








.



எனது இலக்கிய அனுபவங்கள் - 10.பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (2. கி.வா.ஜ)



1951ல் நான் கல்லூரியில் சேர்ந்தது முதல் 'கலைமகள்' பத்திரிகை எனக்குப் பிடித்த
இலக்கியப் பத்திரிகையாக இருந்தது. பள்ளிப் படிப்பு வரை 'அணில்'. 'கண்ணன்',
'பாப்பா' போன்ற குழந்தைப் பத்திரிகைகளையே விரும்பி வாங்கிப் படித்து வந்த நான்
வாங்கிய முதல் இலக்கியப் பத்திரிகை 'கலைமகள்'. அதன் ஆசிரியர் வாகீச கலாநிதி
கி.வா ஜகந்நாதன் அவர்கள் தனது குருநாதர் உ.வே.சாவிறகுப் பிறகு அவரது பரிந்துரை
யால் கலைமகளின் ஆசிரியராகி 50 ஆண்டுகளுக்கு மேலாக அவர் மறையும் வரை
பணியாற்றியவர். அவர் எனக்குப் பிரமிப்பூட்டிய பத்திரிகை ஆசிரியர். அவர் தோற்றத்தில்
பழமைவாதியாக இருந்தாலும் எண்ணத்தில் புதுமை விரும்பியாக இருந்தார்.

கலைமகள் மிகவும் ஆசாரமான பத்திரிகை என்று சொல்லப்பட்டாலும், அதில்தான்
புதுமைப்பித்தனின் - ராஜாஜி முகம் சுளித்த - சர்ச்சைக்குள்ளான 'சாபவிமோசனம்'
என்கிற கதை பிரசுரமானது. 'பு.பி' யைப் போலவே பல மணிக்கொடி எழுத்தாளர்களை
கலைமகளில் எழுத வைத்த சாதனையாளர் கி.வா.ஜ அவர்கள். லா.சரா, தி.ஜானகிராமன்,
ஆர்வி, மாயாவி, அகிலன் போன்றவர்களைக் கொண்டு, 'கொட்டுமேளம்' போன்ற ஒரே
தலைப்பில் இரண்டு எழுத்தாளர்களை எழுத வைத்தும், 'கதவைப் படீரென்று சாத்தினாள்'
என்பது போன்ற துவக்க வரியைக் கொடுத்து கதையைத் தொடரச் செய்தும், கதையின்
முடிவு வரியைத் தந்து கதை எழுதச் செய்தும், 'மலரும் சருகும்' போன்ற எதிரெதிர்
தலைப்பில் எழுத வைத்தும், 'இரட்டைமணி மாலை'. 'வண்ணக் கதைகள்' என்று புதிய
புதிய சோதனைகளை மேற்கொண்டும், புதுப் புது அம்சங்களைப் புகுத்தியும் இலக்கிய
ரசிகர்களுக்குத் திகட்டத் திகட்ட விருந்தளித்தவர் அவர். அடுத்த இதழ் எப்போது வரும்
என்கிற ஆவலை ஏற்படுத்திய காலகட்டம் அவருடையது.

அவரைச் சந்திக்க வேண்டும் என்ற எனது நெடுநாளைய ஆசை 1966ல் தான் பூர்த்தி
ஆயிற்று. விருத்தாசலம் உயர்நிலைப் பள்ளியில் நான் பணியாற்றிய காலத்தில் பள்ளி
இலக்கிய மன்றத்தில் 1960ல் சொற்பொழிவாற்ற வந்திருந்த் போது அவரைப் பார்த்திருக்
கிறேன். எனது வழக்கப்படி, அவர் பேசிக்கொண்டிக்கையில் அவரைப் பார்த்து வரைந்த
அவரது ஓவியத்தை, கூட்டம் முடிந்ததும் அவரிடம் காட்டினேன். அதன் தத்ரூபத்தைப்
பாராட்டி, ஓவியத்தின் கீழே 'கலையால் காலத்தைக் கொல்லலாம்' என்று எழுதி
கையொப்பம் இட்டுத் தந்ததை இன்னும் வைத்திருக்கிறேன். பிறகு தலைமை
ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில்தான் அவரது அலுவலகத்தில் தனிப்பட்ட
முறையில் அவரைச் சந்திக்க நேர்ந்தது.

1966ல் நான புதிதாக ஒரு டேப் ரெகார்டர் வாங்கினேன். இப்போதுள்ள 'காசட் டைப்'
ரெகார்டர்கள் வராத காலம். வானொலி நிலையங்களில் இருப்பது போன்ற 'ஸ்பூல் டைப்'
ரெகார்டர் அது. கைப்பெட்டிக்குள் அடங்கும் அந்தப் பதிவுக் கருவியுடன் ஒரு தடவை
சென்னை சென்ற போது, கி.வா.ஜ அவர்களைச் சந்தித்து பேட்டி கண்டு பதிவு செய்யும்
எண்ணத்துடன், 'கலைமகள்' காரியாலயம் சென்றேன். அதே இடத்தில் இருந்த
'கண்ணன்'பத்திரிகையின் ஆசிரியரான திரு.'ஆர்வி' அவர்களை - அதில் நான்
எழுதியதால் முன்பே அறிந்திருந்ததால் - அவருடைய உதவியால் கி.வா.ஜ அவர்களைச்
சந்திக்க முடிந்தது.

அவரிடம் ஆர்வி அவர்கள் என் பணி, எழுத்து முயற்சி எல்லாம் சொல்லி அறிமுகம்
செய்த போது, நான் 1960ல் அவர் விருத்தாசலம் பள்ளிக்கு வந்த போது அவரை நேரில்
பார்த்து வரைந்து அவரிடம் கையொப்பம் பெற்றதை நினைவூட்டினேன். முகமலர்ச்சியுடன்
பேட்டி அளித்தார். பல்வேறு கேள்விகளுக்கு இடையில், கலைமகளில் என்னைப் போன்ற
இளம் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காததைக் குறையாக்க் குறிப்பிட்டேன்.
அதற்கு அவர்," நாங்கள் இளம் எழுத்தாளர், மூத்த எழுத்தாளர் என்றெல்லாம் பேதம்
காட்டுவதில்லை. படைப்பைத்தான் பார்க்கிறோம், படைப்பாளி யார் என்று பார்ப்பதில்லை.
இன்றும் பிரபல எழுத்தாளர் அகிலன் அவர்களது கதையையும் எங்களுக்கு ஏற்றதாக
இல்லாவிடில் திருப்ப அனுப்பவே செய்கிறோம். எனவே விடாது எழுதி அனுப்பிக் கொண்டே
இருங்கள். உங்கள் கதையும் ஒருநாள் பிரசுரமாகும்!" என்று வாழ்த்தி விடை கொடுத்தார்.
'காந்தமலை' என்பது அவரது வீட்டின் பெயர். அவரே காந்தமலைதான் என்று அவரது இனிய பேச்சையும் பண்பையும் வியந்தபடி திரும்பினேன். 0







Wednesday, August 03, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 9.பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)

திரைப்பட ரசிகர்களுக்குத் தம் அபிமான நடிகர்களைச் சந்திப்பதில் ஆர்வம் இருப்பதைப்
போல, வாசகர்களுக்கும் தம் அபிமான எழுத்தாளர்களைச் சந்திப்பதில் ஆர்வம் இருப்பது
இயல்பு தான். அது போன்ற ஆர்வம் எனக்கும் வாசகனாகவும் எழுத்தாளனாகவும் ஆரம்ப
நாட்களில் இருந்தது. எனவே அப்போதெல்லாம் சென்னை சென்ற நாட்களில் பல
எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன். பத்திரிகை அலுவலகங்களுக்குப் போய் பத்திரிகை
ஆசிரியர்களையும் சந்திப்பதுண்டு.

'குமுதம்' அலுவலகம் சென்றால் ஆசிரியர் எஸ்.ஏ.பி யைச் சந்திக்கவே முடியாது.
யாராவது உதவி ஆசிரியர் தான் வெளியே இருக்கும் 'காத்திருப்போர் அறை'யில் வந்து
விசாரிப்பார். விகடனிலும் அப்படித்தான். இப்போது நினைத்துப் பார்த்தால் என் பேதமை
குறித்து வெட்கமாக இருக்கிறது. ஒரு பிரபல பத்திரிகையின் ஆசிரியர் தனது அவசர,
அவசிய வேலைகளைப் போட்டு விட்டு எல்லோரையும் சந்திக்க முடியாது தான். என்
கதைகளையும் நான் எடுத்த போட்டோக்களையும் பிரசுரத்துக்குக் கொடுக்கத்தான் நான்
அந்த அவலுவலகங்களுக்குச் சென்றிருக்கிறேனே அல்லாமல் ஆசிரியரகளைத்
தரிசிப்பதற்காகச் சென்றதில்லை. அதனால் எனக்கு ஏதும் ஏமாற்றமில்லை. ஆனால்
அவர்களால் அழைக்கப்பட்டு ஆசிரியர்களைச் சந்திக்க நேர்ந்ததுண்டு. அப்படி ஒரு தடவை
ஆனந்த விகடன் ஆசிரியர் திரு.எஸ.எஸ் வாசன் அவர்களை, அழைப்பின் பேரில் நேரில்
சந்திக்கிற வாய்ப்பு நேர்ந்தது.

திரு.வாசன் அவர்கள் தான் இன்றைய விகடனின் 'மாணவர் திட்டத்'தை 1956ல்
உருவாக்கியவர். அது இன்றைய மாணவ நிருபர் போன்றது அல்ல. அது 'மாணவ
எழுத்தாளர்' திட்டம். வாரம் ஒரு மாணவரது படைப்பை வெளியிட்டு, ஒரு ஆண்டு
முடிந்ததும் அதுவரை அறிமுகமான 52 வார மாணவப் படைப்பாளிகளில் இருவரைத்
தேர்வு செயது உதவி ஆசிரியர் பணிக்கு அமர்த்துவதான திட்டம். அப்படி 1956 -57ல்
வெளியான 52 படைப்புகளை எழுதிய மாணவர்களுக்கு, வழக்கமான சன்மானத்துடன்
ஆண்டிறுதியில் 'ஆனந்தவிகடன்' என்று பெயர் பொறித்த 'பைலட்' பேனா ஒன்றும்
அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அந்த 52 பேரில் நானும் ஒருவன்.

அப்போது நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பயிற்சிக்
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் அனுப்பிய 'குழந்தைததெய்வம்'
என்ற எனது சிறுகதை நான் படிப்பை முடிக்கும் போது, 1957 மே மாதம் பிரசுரமாயிற்று.
அதுதான் 'ஆனந்த விகடனி'ல் வெளிவந்த எனது முதல் கதை. எனது போட்டோவுடன்
என்னைப் பற்றிய குறிப்புகளோடு கதை பிரசுரமான போது பெரிதும் கிளர்ச்சியுற்றேன்.
அடுத்து, ஜூலையில் நான் பட்டதாரி ஆசிரியராகப் பணி ஏற்ற சுருக்கில், எனக்கு
ஆனந்தவிகடன் மாணவர் திட்டத்தின்படி, உதவி ஆசிரியருக்கான நேர்காணலுக்கு
அழைப்பு வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. 52 மாணவப் படைப்பாளிகளில்
பத்து பேரைத் தேர்வு செய்து நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள். போக வர பயணப்
படியும் அனுப்பி இருந்தார்கள். ஆசிரியர் வாசன் அவர்களே அந்தப் பத்து பேரையும்
அவரது அலுவலக அறையில் வைத்து நேர்காணல் நடத்தினார்கள்.

எனது முறை வந்த போது, ஜெமினி எஸ்.எஸ்.வாசன் என்கிற பிரம்மாண்ட சாதனை
யாளரைச் சந்திக்கப் போகிறோம் என்கிற படபடப்போடு அவரது அறையில் நுழைந்தேன்.
பெரிய நீண்ட மேஜையின் பின்னனால், பளீரென்ற தூய வெள்ளைக் கதருடையில்
இன்முகத்துடன் தலையை அசைத்து வரவேற்றார். எதிரில் மேஜை மீது எங்களது கதைகள்
வந்த விகடன் இதழ்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அவரது கையில் என் கதை வந்த
இதழ் பிரித்து வைக்கப் பட்டிருந்தது. எதிரே அமரும்படி சொல்லி விட்டு, "இப்போது என்ன
செய்கிறீர்கள்?" என்று விசாரித்தார். உயர் நிலைப்பள்ளிக்கு அபோது தன் நியமனம் ஆகி
பணியில் சேர்ந்திருப்பதைச் சொன்னேன். "ஆசிரியராக இருப்பதால் தான் குழந்தைகளின்
உளவியலை வைத்து எழுதி உள்ளீர்கள். கதை நன்றாக உள்ளது. ஆனால் நம் திட்டத்தின்
நோக்கம் உங்களுக்குத் தெரியுமல்லவா? வேலை இல்லாதவருக்கு வேலை கொடுப்பது
தான் நமது நோககம். உங்களுக்குதான் வேலை கிடைத்து விட்டதே - வேலை இல்லாத
ஒருவருக்கு இதைத் தரலாமல்லவா?" என்றார்.

எனக்குள் ஏமாற்றம் பரவியது. முகத்தில் அதைக் காட்டாமல், "சரி!" என்றேன் குரல்
இறங்கி. வேறு என்ன சொல்ல முடியும்?

"விகடனுக்குத் தொடர்ந்து எழுதுங்கள்" என்று கை கூப்பி விடை கொடுத்தார். படி இறங்கி
வரும் போது நடை கனத்தது. ஆனந்தவிகடனில் உதவி ஆசியராகப் போகிறோம் என்ற
கனவோடு வந்தவனுக்கு அது கிடைக்காதது ஏமாற்றமாக இருந்தாலும், "சரி, போய்
வாருங்கள். முடிவைப் பிறகு தெரியப்படுத்துகிறோம்" என்று சொல்லாமல் உண்மை
நிலைமையை மறைக்காது உடனே தெரிவித்த வாசன் அவர்களது நேர்மையை மனதுக்குள்
பாராட்டியபடி திரும்பினேன்.

பிறகு அந்த இரண்டு இடங்களுக்கும் ஆம்பூர் கோ.கேசவன் அவர்களும், பின்னாளில்
முகுந்தன் என்ற பெயரில் சிறந்த நகைச்சுவை எழுத்தளராய்ப் புகழ் பெற்று மறைந்த
எஸ்.வரதராஜன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப் பட்டார்கள். ஆனால் அந்த
இருவரும் அதிக நாட்கள் உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றவில்லை. ஆம்பூர் கேசவன்
வெகு சீக்கிரமே மரணமடைந்தார். வரதராஐன் சுதந்திர எழுத்தாளராக ஓரிரு ஆண்டுகளில்
விகடனிலிருந்து விலகினார். அத்துடன் அந்தத் திட்டமும் முடிந்து போனது.

வாசன் அவர்களைச் சந்திக்கும் முன்பாக பத்திரிகைத் துறையில் அனுபவம் கொண்டிருந்த
என் உறவினர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் "பத்திரிகையில் சேர்ந்து நீ ஒன்றும் எழுதி
விட முடியாது. பள்ளிக்கூடத்தில் நோட்டுத் திருத்துவதறகுப் பதில் இங்கு வரும் கதை
களைத் திருத்தப் போகிறாய். வெளிப் பத்திரிகையில் எழுத அனுமதிக்க மாட்டார்கள்.
சம்பளமும் இப்போது உள்ள வேலையில் கிடைப்பதை விட அதிகம் கிடைத்து விடாது.
உத்தியோக உயர்வெல்லாம் கிடையாது" என்றார். பின்னாளில் அத உண்மையும் ஆயிற்று.
கல்வித் துறையில் பதவி உயர்வுகளும் கணிசமான ஊதியமும் பெற்றுத் திருப்தியாக
இருந்ததுடன், விகடனிலும் பிற பத்திரிகைகளிலும் நிறைய எழுதி ஓரளவு சாதிக்கவும்
முடிந்தது. ஆனால் இன்றளவும், வாசன் அவர்களைச் சந்தித்தது இனிய நினைவாகவே
இருந்து வருகிறது. 0