Thursday, August 11, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 10.பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (2. கி.வா.ஜ)



1951ல் நான் கல்லூரியில் சேர்ந்தது முதல் 'கலைமகள்' பத்திரிகை எனக்குப் பிடித்த
இலக்கியப் பத்திரிகையாக இருந்தது. பள்ளிப் படிப்பு வரை 'அணில்'. 'கண்ணன்',
'பாப்பா' போன்ற குழந்தைப் பத்திரிகைகளையே விரும்பி வாங்கிப் படித்து வந்த நான்
வாங்கிய முதல் இலக்கியப் பத்திரிகை 'கலைமகள்'. அதன் ஆசிரியர் வாகீச கலாநிதி
கி.வா ஜகந்நாதன் அவர்கள் தனது குருநாதர் உ.வே.சாவிறகுப் பிறகு அவரது பரிந்துரை
யால் கலைமகளின் ஆசிரியராகி 50 ஆண்டுகளுக்கு மேலாக அவர் மறையும் வரை
பணியாற்றியவர். அவர் எனக்குப் பிரமிப்பூட்டிய பத்திரிகை ஆசிரியர். அவர் தோற்றத்தில்
பழமைவாதியாக இருந்தாலும் எண்ணத்தில் புதுமை விரும்பியாக இருந்தார்.

கலைமகள் மிகவும் ஆசாரமான பத்திரிகை என்று சொல்லப்பட்டாலும், அதில்தான்
புதுமைப்பித்தனின் - ராஜாஜி முகம் சுளித்த - சர்ச்சைக்குள்ளான 'சாபவிமோசனம்'
என்கிற கதை பிரசுரமானது. 'பு.பி' யைப் போலவே பல மணிக்கொடி எழுத்தாளர்களை
கலைமகளில் எழுத வைத்த சாதனையாளர் கி.வா.ஜ அவர்கள். லா.சரா, தி.ஜானகிராமன்,
ஆர்வி, மாயாவி, அகிலன் போன்றவர்களைக் கொண்டு, 'கொட்டுமேளம்' போன்ற ஒரே
தலைப்பில் இரண்டு எழுத்தாளர்களை எழுத வைத்தும், 'கதவைப் படீரென்று சாத்தினாள்'
என்பது போன்ற துவக்க வரியைக் கொடுத்து கதையைத் தொடரச் செய்தும், கதையின்
முடிவு வரியைத் தந்து கதை எழுதச் செய்தும், 'மலரும் சருகும்' போன்ற எதிரெதிர்
தலைப்பில் எழுத வைத்தும், 'இரட்டைமணி மாலை'. 'வண்ணக் கதைகள்' என்று புதிய
புதிய சோதனைகளை மேற்கொண்டும், புதுப் புது அம்சங்களைப் புகுத்தியும் இலக்கிய
ரசிகர்களுக்குத் திகட்டத் திகட்ட விருந்தளித்தவர் அவர். அடுத்த இதழ் எப்போது வரும்
என்கிற ஆவலை ஏற்படுத்திய காலகட்டம் அவருடையது.

அவரைச் சந்திக்க வேண்டும் என்ற எனது நெடுநாளைய ஆசை 1966ல் தான் பூர்த்தி
ஆயிற்று. விருத்தாசலம் உயர்நிலைப் பள்ளியில் நான் பணியாற்றிய காலத்தில் பள்ளி
இலக்கிய மன்றத்தில் 1960ல் சொற்பொழிவாற்ற வந்திருந்த் போது அவரைப் பார்த்திருக்
கிறேன். எனது வழக்கப்படி, அவர் பேசிக்கொண்டிக்கையில் அவரைப் பார்த்து வரைந்த
அவரது ஓவியத்தை, கூட்டம் முடிந்ததும் அவரிடம் காட்டினேன். அதன் தத்ரூபத்தைப்
பாராட்டி, ஓவியத்தின் கீழே 'கலையால் காலத்தைக் கொல்லலாம்' என்று எழுதி
கையொப்பம் இட்டுத் தந்ததை இன்னும் வைத்திருக்கிறேன். பிறகு தலைமை
ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில்தான் அவரது அலுவலகத்தில் தனிப்பட்ட
முறையில் அவரைச் சந்திக்க நேர்ந்தது.

1966ல் நான புதிதாக ஒரு டேப் ரெகார்டர் வாங்கினேன். இப்போதுள்ள 'காசட் டைப்'
ரெகார்டர்கள் வராத காலம். வானொலி நிலையங்களில் இருப்பது போன்ற 'ஸ்பூல் டைப்'
ரெகார்டர் அது. கைப்பெட்டிக்குள் அடங்கும் அந்தப் பதிவுக் கருவியுடன் ஒரு தடவை
சென்னை சென்ற போது, கி.வா.ஜ அவர்களைச் சந்தித்து பேட்டி கண்டு பதிவு செய்யும்
எண்ணத்துடன், 'கலைமகள்' காரியாலயம் சென்றேன். அதே இடத்தில் இருந்த
'கண்ணன்'பத்திரிகையின் ஆசிரியரான திரு.'ஆர்வி' அவர்களை - அதில் நான்
எழுதியதால் முன்பே அறிந்திருந்ததால் - அவருடைய உதவியால் கி.வா.ஜ அவர்களைச்
சந்திக்க முடிந்தது.

அவரிடம் ஆர்வி அவர்கள் என் பணி, எழுத்து முயற்சி எல்லாம் சொல்லி அறிமுகம்
செய்த போது, நான் 1960ல் அவர் விருத்தாசலம் பள்ளிக்கு வந்த போது அவரை நேரில்
பார்த்து வரைந்து அவரிடம் கையொப்பம் பெற்றதை நினைவூட்டினேன். முகமலர்ச்சியுடன்
பேட்டி அளித்தார். பல்வேறு கேள்விகளுக்கு இடையில், கலைமகளில் என்னைப் போன்ற
இளம் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காததைக் குறையாக்க் குறிப்பிட்டேன்.
அதற்கு அவர்," நாங்கள் இளம் எழுத்தாளர், மூத்த எழுத்தாளர் என்றெல்லாம் பேதம்
காட்டுவதில்லை. படைப்பைத்தான் பார்க்கிறோம், படைப்பாளி யார் என்று பார்ப்பதில்லை.
இன்றும் பிரபல எழுத்தாளர் அகிலன் அவர்களது கதையையும் எங்களுக்கு ஏற்றதாக
இல்லாவிடில் திருப்ப அனுப்பவே செய்கிறோம். எனவே விடாது எழுதி அனுப்பிக் கொண்டே
இருங்கள். உங்கள் கதையும் ஒருநாள் பிரசுரமாகும்!" என்று வாழ்த்தி விடை கொடுத்தார்.
'காந்தமலை' என்பது அவரது வீட்டின் பெயர். அவரே காந்தமலைதான் என்று அவரது இனிய பேச்சையும் பண்பையும் வியந்தபடி திரும்பினேன். 0







No comments: