Friday, December 28, 2007

எழுத்துக்கலைபற்றி இவர்கள்.........(9) இந்திராபார்த்தசாரதி.

1. ஒரு நல்ல சிறுகதையை எழுதுவது எப்படி என்பதற்கு 'யூரிடைன்யனாவ்' என்ற ரஷ்ய எழுத்தாளர் 'கோடுகள் போடாத நீண்ட வெள்ளைத் தாளில் எழுதாதீர்கள். வடிவத்தில் மிகச் சிறிய குறிப்புப் புத்தகத்தில் எழுதுங்கள்' என்று யோசனை சொல்கிறார். மாப்பசானின் சிறுகதைகள் காகிதப் பற்றாக்குறை காலத்தில் எழுதப் பட்ட காரணத்தால்தான் சிறப்பாக இருக்கின்றன என்று ஒரு விமர்சகர் சொல்கிறார்.

2. ஒருவன் வாசகன்மீது நம்பிக்கை வைக்காமல் தனக்குத்தானே சமுதாயத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் உரக்கச் சிந்தித்துக் கொண்டிருந்தானானால் அது இலக்கியமன்று.

3.செயலூக்கத்துக்கு உதவி செய்யாமல் வெறும் ஏமாற்றத்தை மட்டும் சொல்லிச் செல்லும் கதைகள் எனக்கு உடன்பாடன்று. சமூகச் சிந்தனையில் ஆக்கபூர்வமான மாற்றங்களை விளைவிக்க முற்படாத ஏமாற்றங்கள் இலக்கியமாவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

4. ஒரு நல்ல சிறுகதை, எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே நிகழ்கிற உரையாடலாக இருக்க வேண்டும். வாசகன் அக்கதையைப் படித்து முடித்த பிறகு
அவன் சிந்தனையைத் தூண்டும் முறையில், அதன் கருத்து எல்லை அதிகரித்துக் கொண்டு போதல் அவசியம். ஒரு பிரச்சினையை மையமாக வைத்துக் கொண்டு எழுதப்படும் கதைகளுக்குத்தாம் இந்த ஆற்றல் உண்டு. பிரச்சினையை நேரடியாகச் சுட்டிக்காட்டுவது தினசரிப்பத்திரிகைகளின் வேலை. இலக்கியத்தின் பரிபாஷையா கிய அழகுணர்ச்சியோடு பிரச்சினையைச் சொல்வதுதான் ஒரு சிறந்த படைப்பாளி யின் திறமை.

5. ஒரு கதை தன் உள்ளடக்க வலுவிலேயே ஒரு பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்த வேண்டுமே தவிர, அக்கதையை எழுதுகிறவனுடைய இலக்கியப் புறம்பான கட்சி அல்லது குழுச்சார்பினால் விளைகின்ற உரத்த குரலினால் அல்ல. உரத்த குரல் இடைச்செருகலாய் ஒலித்துவிடக்கூடிய வாய்ப்புண்டு. வெறும் ஏமாற்றத்தையும், விரக்தியையும், தோல்விமனப்பான்மையையும் இலக்கியமாக்கி விடக்கூடாது.

6. ஒரு எழுத்தாளன் எழுத முனையும் போது தன்னை நேரடியாகப் பாதித்த விஷயங்க¨ளை எழுதுகிறான். அவன் எந்த அளவு பாதிக்கப் பட்டிருக்கிறான் என்பதை அவனது கல்வி, வளர்ந்த சூழ்நிலை, பண்பாட்டுச்சூழல், மனப்பரிமாணம் ஆகியவைகளே முடிவு செய்கின்றன. அவன் எப்படி உருவாகி இருக்கிறானோ அந்த அளவிலிருந்து பிரதிபலிப்பு செய்கிறான். தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.
வெளிப்படுத்திக் கொள்கிறபோது அது பகிர்ந்துகொள்ள வேண்டிய விஷயமாகிறது. பகிர்ந்துகொள்ளல் வருகிறபோதே வடிவம் வந்து விடுகிறது. உரையாடல் தேவையாகிறது. அது தனிமொழியாக இருக்க முடியாது.

7. புரியாமல் எழுதுவதை ஒரு ஸ்டைல் என்று கொள்ளமுடியாது. ''பத்து பேருக்கு மேல் புரிந்து கொண்டால் அது எழுத்தே இல்லை'' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 'ஆயிரம் பேருக்கு மேல் தனது பத்திரிகையை படித்தால் நிறுத்தி விடுவேன்' என்று யாரோ சொன்னாராம். ஒரு கஷ்டமான விஷயத்தைச் சுலபமாகச் சொல்ல முடியாதா? பெட்ரண்ட் ரஸ்ஸலைப் படித்தால் சாதாரண மனிதன் கூட புரிந்து கொள்ளலாம். அறிவிலே தெளிவு உள்ளவர்கள் எந்த விஷயத்தையும் எளிமையாகச் சொல்ல முடியும். அது இல்லாதவர்கள் குழப்புகிறார்கள்.

8. இலக்கியம் இலக்கியத்துக்காக, கலை கலைக்காக என்பதெல்லாம் பித்தலாட்டம். பழைய காலச் சிந்தனை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் Walter parter ஆரம்பித்தான் Art for art sake என்று. தூய இலக்கியம் என்ற ஒன்று கிடையாது. அடுத்த வீட்டுக்காரனைப்பற்றி நான் எழுதும்போதே அது ஒரு சமூகச் செயலாகிவிடுகிறது.

Sunday, December 23, 2007

'எழுத்துக்கலை' பற்றி இவர்கள் ...(8)-கு.ப.ராஜகோபாலன்

1. 'கண்டதை எழுதுவதுதானா கதை?' என்று கேட்கலாம். கதை உருவாகும் பொழுது, கண்டதுமட்டுமின்றிக் காணாததும் தங்கத்துடன் செப்புச் சேருவதுபோல் சேருகின்றன. அந்த அனுபவமும், காந்தத் துண்டுபோல, தான் இழுக்கக்கூடிய பல இரும்புத் துகள்களைப்போன்ற நிகழ்ச்சிகளையும் நிலைகளையும் ஆகர்ஷித்துக் கொள்ளுகிறது. ஆசிரியனுடைய அனுபவம் என்ற நிலையில் அடிபட்டு, பல்வேறு உருக்களில் கதைகளாக மாறுகின்றன.

2. வாழ்க்கையின் உண்மையான விஷயங்களைப்பற்றித் தைரியமாக எழுதுவதே - எடுத்துக் காட்டுவதே - சிறுகதை.

3. குணச்சித்திரம் பல வகைப்பட்டது. அசாதாராண பிரகிருதிகள், வாழ்க்கை விதிக்கும் சுவட்டில் போக முடியாமல், அதை எதிர்த்து, வேறு தனிப்பாதைகளில் போக முயலும் காட்சியை வர்ணிப்பது ஒரு வகை. அலைமோதும் வாழ்க்கைக் கடலில் இறங்கி, நீந்தத் தெரியாமல் தத்தளித்து மாயும் மென்மையான மனித இயல்புகளை அனுதாபத்துடன் படம் பிடிப்பது மற்றொரு வகை. லட்சிய வீரர்கள் (ஆண்களும், பெண்களும்) வாழ்க்கத் தரையிலிருந்து கிளம்பி, சம்பாதியைப் போல மனோரத சூரியனிடம் செல்ல முயன்று, சிறகெரிந்து வீழும் வீழ்ச்சியைச் சித்தரிப்பது
மேலும் ஒருவகை. கடைசியாகக் குறிப்பிட்ட இந்த இலட்சிய வீரர்கள்தான் வாழ்க்கையின் விதிக்கும் விதியாக நிற்பவர்கள். இவர்களுடைய சித்திரங்களே எதிர்காலச் சமுகத்துக்கு வழிகாட்டிகள்.

4. எழுத எழுதத்தான் மனிதனின் ஆத்மா வெளிப்படும்.

5. இலக்கிய ஆசிரியன் என்னதான் சொல்லவேண்டும் வாசகனுக்கு?
ஒன்றுமே சொல்லக்கூடாது. சொல்லாமல் சொல்ல வேண்டும்.

(இன்னும் வரும்)

Wednesday, December 12, 2007

'எழுத்துக்கலை' பற்றி இவர்கள்.......(7) தி.ஜ.ரங்கநாதன்

1. எழுதுவது நீந்துகிறமாதிரி. தண்ணீர் வெதவெதக்கிறதா, சில்லிட்டிருக்கிறதா
என்று விரலை ஆழம் விட்டுப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். குதி. குதித்துவிடு.

2.கதையாம், கட்டுரையாம், சரித்திரமாம்! கதை என்னடா கதை? ஒருமுறை திறந்த
கண்ணோடு உன் வீட்டுத் தெருவில் நடந்துவிட்டு வா. கதைக்கோ கட்டுரைக்கோ விஷயம் கிடைச்சாச்சு! ஊர்வலம், கருப்புக்கொடி, சட்டத்தின் தடை, எதிர்ப்பு, லத்திசார்ஜ், துப்பாக்கிச்சூடு இவை எல்லாம் தெருவில் நடக்கும் சரித்திரமன்றி வேறென்ன?

3. ஒரு கதையில் உள்ள ஓர் அம்சம் அதற்குப் பலமா, பலவீனமா என்று நிர்ணயிக்கச் சோதனை அதைப் படிப்பதில் உள்ள சுவாரஸ்யத்தின் அளவுதான்.

4. கதைகளையெல்லாம் பொதுப்படையாக இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்; ஒன்று, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரம்.; மற்றது அமானுஷ்யக் கற்பனை. மேதைகள்தாம் சுவைக்குறைவு இல்லாத அமானுஷ்யக் கற்பனைகளைப் படைக்க முடியும். என்னைப் போன்றவர்களுக்கு பத்திரமான வழி, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரங்களே. எங்க¨ளைச் சூழ்ந்த உலக அரங்கத்தை நாங்கள் போட்டோ எடுப்போம். எங்களுடைய வாழ்க்கை ஆதர்சங்களும் லட்சியங்களும் அந்தப் போட்டோவுக்கு மெருகு கொடுத்திருக்கும். எங்களுக்கும் பல கனவுகள் உண்டு. ஆனால் அவற்றில் 'மண்' வாசனை வீசும்; சுகந்தமான வாசனைதான். அஜந்தா ஓவியங்களையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள், போட்டோப் படங்கள ¢ல் கலைச் சுவையைக் காண முடியாது என்று நினைப்பது சகஜம். மீனுக்கு ஒரே சொர்க்கம்தான் உண்டு - தண்ணீர். அதில் வியப்பென்ன? போட்டோப் படங்களிலும் ஒருவிதக் கலைச் சுவையை அனுபவிக்க முடியும் என்று நம்பும் கோஷ்டியைச் சேர்ந்தவன் நான். எனவே, என் கதைகள் அத்தனையும் பெரும்பாலும், முழுவதுமோ அல்லது பெரும் பகுதியோ பிரத்தியட்ச நிகழ்ச்சிகள்.

5. கலைஞன் நமக்கு அழகைக் காட்டுவது மாத்திரம் அல்ல, அநேக சமயங்களில் அதைக் காண நம்மைச் சித்தப் படுத்தியும் விடுகிறான். குதிரையின் கண்களில் ஒரு மறைப்பைப் போட்டு ஓட்டுகிறார்கள் பாருங்கள்; அதே மாதிரி கலைஞனும் நம் கண்களை நேர்வழியில் திருப்புகிறான். மறைக்க வேண்டியதை மறைத்து, விளக்க வேண்டியதை விளக்கி, திருத்த வேண்டியதைத் திருத்தி, மெருகு கொடுப்பது கலைஞனின் நுட்பம்.

6. கலையிலே பிரச்சாரம் இருக்கலாமா கூடாதா? இதைப் பற்றி ஒரு பெரிய விவகாரம்! இருந்தாலும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்.; இருந்தாலும் இல்லாவிட்டாலும், கலை கலையாகவே இருப்பது மாத்திரம் அவசியம்.

7. நாம் எழுதும் கதை, கதையாயிருக்க வேண்டும்; அதாவது சுவாரஸ்யம் நிறைந்திருக்க வேண்டும். இப்படி எழுதப் படாததால்தான், அநேகம் கதைகளை, ஜனங்கள் ரசிக்காமல் தள்ளுகிறார்கள். கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க ரசமாக இருந்ததா என்ற ஒரே பரீட்சைதான், நல்ல கதைக்கு முக்கியமாகும். மற்ற லட்சணங்கள் எல்லாம், அதற்கு உதவுபவையே ஆகும்.

8. கதையின் ஒவ்வோர் அம்சமும், ஆரம்பம் நடு முடிவு ஒவ்வொர் அமைப்பும் , ஒவ்வொரு சொல்லும், கதையிந் சுவாரஸ்யத்துக்கு, திட்டத்துக்கு உதவ வேண்டும். கதை முழுவதையும் படித்த பின், 'பூ! இவ்வளவுதானா? இதை ஏன் படித்தோம்?' என்ற உணர்ச்சி, படிப்பவருக்கு ஏற்படக் கூடாது. கதையின் முடிவு ஏமாற்றமாயிருந்தால், அந்த ஏமாற்றமும் ஓர் இன்பமாயிருக்க வேண்டும். இதுதான் முக்கியம்.

Friday, December 07, 2007

'எழுத்துக்கலை' பற்றி இவர்கள்..........6. அகிலன்.

அகிலன்.
=======

1. கதையைப் படித்தபின், எழுதி முடித்த கதைக்குப் பின்னேயும் முன்னேயும் உள்ள எழுதப்படாத கதைகள் படிப்போர் உள்ளத்தில் விரிய வேண்டும். இதில் வெற்றி பெற்றுவிட்டால் அது அருமையான சிறுகதைச் சித்திரம் என்பதில் ஐயமில்லை.

2. வாழ்க்கையின் ஒரே ஒரு கோணம், வாழ்க்கை வெள்ளத்தின் ஒரே ஒரு சுழிப்பு,
உணர்ச்சிப் பெருக்கின் ஒரே ஒரு திருப்பம் இவற்றில் ஒன்று போதும் சிறுகதைக்கு.

3. கற்பனை வித்துக்கள் தாமாகவே வரும் என்று காத்திருக்காமல், எப்போதும் அவற்றை வரவேற்பதற்காகப் புலன்களைக் கூர்மையாக வைத்துக் கொண்டிருப்பது எழுத்தாளர்களுக்குத் தேவையான ஒரு மனப்பழக்கமாகும். கதைக் கலைஞன் என்ற சுய உணர்வோடு நாம் இருந்தால் போதும். விழிப்போடிருக்கும் கலைஞனைத் தேடி கற்பனை ரகசியங்கள் தாமே வரத் தொடங்கி விடுகின்றன.கற்பனை உணர்ச்சி இல்லாதவர்களுக்குச் சுவையற்றதாகத் தோன்றும் காட்சி, பேச்சு, அனுபவம் இவற்றிலெல்லாம் நாம் ஏதாயினும் ஒரு புதுமையைக் கண்டுவிட முடியும்.

4. ஒருவர் கதை எழுதத் தொடங்கும் ஆரம்ப காலத்தில் உணர்ச்சி மின்னல்கள் தாமாக ஏற்படத் தொடங்குவதுண்டு. கதாசிரியரின் சுய உணர்வு இன்றியே சிலகாட்சிகளோ, அனுபவங்களோ அவருடைய கற்பனையை வேகமாக இயக்குவதுண்டு. இவற்றை அவர் புரிந்து கொண்டாரானால் அவர் அந்த வித்துக்களைச் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும்.

5. கண்களால் காணும் காட்சிகளால் மட்டும் கதை பிறப்பதில்லை. செவி வழியே வரும் சொற்களாலும், பிற புலன்களின் அனுபவங்களாலும், அவ்வனுபவங்கள் எழுப்பும் உணர்ச்சிகளாலும் கதைகள் பிறக்கின்றன. உணர்ச்சியைத் தூண்டும் நிகழ்ச்சிகளிலிருந்து கதைக் கருக்கள் வெளிப்படுகிறன. காற்றில் மிதப்பது போன்ற அந்த நுண்பொருளைத் தேடிப் பெற முடியும்; சேகரிக்க முடியும். பிறகு அவசியம் வரும்போது உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.

6. உலகில் ஒவ்வொரு நாளும் ஆயிரமாயிரம் கதைக் கரு நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கதை எழுத விரும்பும் கலைஞர்கள் கருப்பொருளைத் தேடி அதிகமாகக் கஷ்டப்பட வேண்டுமென்பதில்லை. அவற்றை உணர்ந்து ஏற்றுக் கொள்வற்கு அவர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அந்தப் பழக்கம் வந்து விட்டால் பிறகு கற்பனைகளுக்குப் பஞ்சமில்லை.

7. கதைக் கலைக்கு வேண்டிய முதல் தகுதி ரசிகத்தன்மை. அதாவது கலையைப் படைப்பவன் சிறந்த ரசிகனாக இருக்க வேண்டும். வாழ்க்கையைச் சுவைத்து அனுபவிக்கத் தெரியாதவனிடமிருந்து சுவையான கலைப்படைப்புகள் தோன்றமாட்டா.

8. பிறவகை இலக்கியப் படைப்பைப் போலவே சிறுகதையும் உயிர்த்துடிப்புள்ளது. எந்த உணர்ச்சியை அல்லது கருத்தை அது தன்னகத்தே கொண்டிருக்கிறதோ அதைப் படிப்பவரின் நெஞ்சில் மின்வெட்டைப் போல் பாய்ச்சும் ஆற்றல் சிறுகதைக்கு வேண்டும். கதைக்குப் பின்னே உள்ள கதாசிரியரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாக் கூறும் செய்தி, இவ்வளவும் இலக்கண வரம்புகளைவிடவும் மிகமிக முக்கியமானவை.

9. உள்ளடக்கம், உருவம், உத்தி போன்ற பொதுப்படையான இலக்கணங்கநளைத் தெரிந்து கொண்டு, பிறகு அவசியமானால் அவற்றை மீறலாம். சிறந்த எழுத்தாளர்களின் கதைத் தொகுதிகளைப் படித்தால், அவர்கள் எவ்வாறு இந்த வரம்புகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் -அல்லது மீறி இருக்கிறார்கள் - என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

10. கதைக்கலையை எந்தக் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற முடியும் என்று நான் நம்பவில்லை. சைக்கிள் விட விரும்புவோர்கூடப் பலமுறை விழுந்த பிறகுதான் அதைச் சரியாக விடுவதற்குக் கற்றுக்கொள்கிறார்கள். பத்திரிகை அலுவலகங்களி லிருந்து திரும்பி வரும் கதைகளை சைக்கிள் பயிற்சியாளர்கள் கீழே விழும் அனுபவங்களுக்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம். பத்திரிகை ஆசிரியர்கள் காரணம் கூற மாட்டார்கள். நாமே சொந்த அனுபவத்திலு இடைவிடாப் பயிற்சியிலும் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். திரும்பி வரும் கதைகளை சில நாட்கள் சென்று படித்துப் பார்த்தால் நமக்கே சில குறைகள் தென்படும்.

Sunday, December 02, 2007

எழுத்துக்கலை பற்றி இவர்கள்..........(5) கி.சந்திரசேகரன்

1. சொற்செட்டு கலைக்கு மிக முக்கியம். அனுபவம் விரிய விரிய, சொல்லலங்காரங் களின் குறைவும் சித்திக்க வேண்டும்.

2. நன்றாக எழுதக்கூடியவர்கள் கூட ஜனரஞ்சகமாக எழுதவேண்டும் என்பதைத் தான் மிக முக்கியமாக வைத்துக் கொண்டு எழுதுகிறார்கள். இதன் விளைவு உள்ளத்தைக் கிளர்ச்சி செய்யும் எழுத்து வருகிறதே தவிர உள்ளத்தை உருக்கும் இலக்கியம் வருவதில்லை.

3. எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாகச் சொல்லித்தான் உண்மை தெரிய வேண்டும் என்பதில்லை. எதற்கும் ஒரு கோடி காண்பித்து வாசகனின் கற்பனைச் சிந்தனையைத் தூண்டுவதில்தான் அழகான இலக்கியம் இருக்கிறது.

4. 'வாழ்க்கையில் கீழ்த்தரமானவை இல்லையா? நான் இருப்பதை அப்படியே எழுதுகிறேன்' என்று ஒரு கரட்டு வாதம் செய்கிறார்கள். இலக்கியம் ஒரு சத்தியத்தைக் கூறுவதுதான்; வாழ்க்கையைப் பிரதி பலிப்பதுதான். ஆனால் வாழ்க்கையில் காண்பதைத் திறனோடு பொறுக்கி எடுப்பதுதான் இலக்கியம். Literature is selction of life.

5. இலக்கியம் என்பது - கீழ்ப்பட்டது, தாழ்ந்திருப்பது என்பதிலும் ஓர் உன்னத அம்சத்தைக் கண்டெடுப்பது.

6. சிறுகதைகள் பலவிதம். இன்ன மாதிரிதான் சிறுகதைகள் உருவாகவேண்டும் என்று வரையறை செய்வது எளிதல்ல; அவசியமும் அல்ல. ஏனெனில் சிறுகதையின் லட்சணம் எதுவாகிலும் எல்லா இலக்கியப் பிறப்பிலும் உள்ள சிருஷ்டித் தத்துவம் அதற்கும் பொதுவானதுதான். முதலில் இதை உணர்ந்தால் இலக்கியத்துக்கும் இலக்கியம் அல்லாததற்கும் உள்ள வேறுபாடு புரியும். உண்மையில் கலைஞனிடம் இலக்கியமாவது அவனுடைய திருஷ்டி தேர்ந்தெடுக்கும் பொருளின் விசேஷம் என்றாலும் தவறில்லை. கலை பிறப்பது கருத்தின் செழுமையும் தெளிவும் பூரணமான நிலையை எய்தும்பொழுதுதான். ஓரளவு அவனுடைய எழுத்துத் திறமை கூட அப்பியாசத்தின் விளைவு என்று கருதுவதும் நியாயம்.