Thursday, December 30, 2004

உவமைகள் வர்ணனைகள் - 33

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 33: ஜெயந்தன் படைப்புகளிலிருந்து:

1. சுப்ரமணியம் உறக்கத்திலிருந்தார். அது நிம்மதியான தூக்கம். சந்தோஷமான தூக்கம். இத்தனை நாள் இல்லாத ஒரு மன அமைதியும் கவலை விடுதலையும் நேற்று மாலை அவருக்கு ஏற்பட்டிருந்தது. அநேகமாக இந்த வரன் அமைந்த மாதிரிதான். இரவு ஒன்றிரண்டு முறை விழிப்பு வந்தபோதுகூட தான் இந்த சந்தோஷத்துடனேயே தூங்கிக் கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்தது. நீண்ட நாள் ஒழுகும் வீட்டிலிருந்தே கஷ்டப்பட்டு பழகிய ஒருவன் ஒருநாள் அந்தக் கூரை வேயப்பட்ட பிறகு, அதன் மீது மழை கொட்டித் தீர்க்கும்போது அவன் உள்ளிருந்து அடைகிற சந்தோஷத்தை அவர் அனுபவித்துக் கொண்டிருந்தார்- தூக்க நிலையிலும்.

- 'முறிவு' நாவலில்.

2. வனஜா அவனது அருமைக் காதலி. ஒரு காலத்தில் இவனது கையில் இருந்த ஐஸ் கட்டி. அது கரைவதற்கு முன்பே, தட்டிப் போன ஒன்று. அதனால் என்றுமே கரையாத ரூபத்தில் இவன் நினைவில் இருப்பவள். இன்னும் இவன் நினைவாகவே இருப்பாள் என்று இவனால் நம்பப்படுபவள்.

- 'பச்சை' சிறுகதையில்.

3. அவனுக்கு இப்படித்தான் தோன்றியது. சில கவிஞர்கள் கவிதை என்றால் என்னவென்று தெரியாமலே நல்ல கவிதைகளை எழுதி விடுவதைப் போலவே, இவர்களும் வியாபாரம் என்றால் என்னவென்று தெரியாமலே வியாபாரத்தில் நிலைத்து நின்று நின்று கொண்டிருக்கிறார்கள்.

- 'வாணிகம்'.

4. யோசிக்கிறது நாய் வளக்குற மாதிரி. நாயோட சங்கிலி நம்ம கையிலே இருக்கணும். நம்ம பிடியிலே இருக்கணும். அது நம்ம கால்ல மாட்டிக்கிட்டு அது பின்னாலே நாம ஓடக்கூடாது.

- 'சங்கிலி'.

5. - ஆமாம். மனுஷக் குரங்குக்கு எந்தப் பூமாலையும் ஒன்றுதான். புத்தனிலிருந்து மார்க்ஸ் வரை எல்லாப் பூமாலைகளையும் இது பிய்த்துத்தான் போட்டிருக்கிறது.

- '542'.

6. நீ குயவன் பானை வனையும்போது பார்த்திருக்கிறாயா? பாற்கடலிலிருந்து அமுதம் வந்தமாதிரி அந்த மாய விரல்களை வணங்கிக் கொண்டே வெறும் களி மண்ணிலிருந்து பானை வரும்.

- 'பட்டம்'.

7. -அது ஒரு பெரிய சாவு. இறந்து போன காளியப்பக் கவுண்டருக்கு வயது 72. இந்தப் பெரிய சாவுகளில் ஒரு பெரிய முரண்பாடு. இதில் அநேகமாக எந்தத் துக்கமும் இருக்காது. 'பெரிய சாவுடா, போய்ட்டு வந்துடு'.

- வீடு வழிந்து, வாசல் வழிந்து, கூட்டம் ஜே ஜே என்று இருந்தது.

- ஆண்களிடம் ஒரு social gathering- கிற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பெண்கள் உள்ளே, ஒப்பாரிப் போட்டியில் கலந்து கொண்டிருப்பவர்களைப்போல ஆவேசம் கொண்டு அழுது கொண்டிருந்தார்கள்.

- 'துக்கம்'.

8. அவளுக்கு அவளது உடம்பின் பரிமாணத்திற்கு எதிரிடையான சிறிய இடுங்கிய கண்கள். அவை ஆண்களில் யாரைப் பார்த்தாலும் இவன் நமது இரையா என்று ஒளியைப் பாய்ச்சும். இல்லையென்று அறிகிற போது தாட்சண்யமற்ற ஒரு குரோதத்தை வீசும்.

- 'சம்மதங்கள்'.

9. நல்ல ஆஜானுபாகுவான உருவம். வயது ஐம்பத்திரண்டு இருக்கலாம். ஆனால் முப்பதின் முறுக்கு உடலில் தெரிந்தது. இப்போதும் தனி ஆளாய் நின்று இவரால் நான்கு பேரைச் சமாளிக்க முடியும் என்கிற தோற்றம். அந்த் உடல் பலமே சதைத்திமிராகி, அவரது ஆகாத செயல்களுக்கு மூல காரணமாய் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும்படியான திரண்டு முறுகிய உடல் அமைப்பு.

- 'துப்பாக்கி நாய்க்கர்'.

10. எந்த மிருகமும் தான் தின்பதற்கு மேல் தன் இரையை எந்தக் கேவலமும் செய்வதில்லை. மனிதன் மிருகத்திடமிருந்து பரிணாமம் பெற்றவன் என்பதை விடக் கேவலமான பொய் இருக்க முடியாது என்று மனம் குமைகிறது.

- 'மாரம்மா'.

- தொடர்வேன்.

- அடுத்து எஸ்.வி.வி யின் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Thursday, December 23, 2004

நினைவுத்தடங்கள் - 28

ஐயாவின் பள்ளியில் விடுமுறை கிடையாது. சனிக்கிழமை மதியம் அரை நாளும் ஞாயிறும் ஆசிரியர்களுக்கு மட்டும்தான் விடுமுறை. அதற்காகப் பெற்றோர்கள் ஏதும் குறை சொல்வதில்லை. மாதத்தில் ஒரு சனிக்கிழமை ஆசிரியர் சங்கக் கூட்டத்துக்கு பக்கத்து நகரத்துக்கு எல்லோரும் கட்டாயம் போக வேண்டும் என்பதால் மாதம் ஒரு நாள் மட்டும் மாணவர்களுக்கும் விடுமுறை கிட்டும். அன்று தெருக்கள் திமிலோகப்படும். ஏரி, குளம் தூள் கிளம்பும். அப்போது சிலர் மட்டும் 'எங்கே போய்த் தொலைஞ்சார் செதம்பரத்து வாத்தி? ஏ அப்பாடி! அவுரு இல்லேன்னாலும் இதுகளை மேய்க்க முடியாது!' என்று அலுத்துக் கொள்வார்கள். ஐயாவும் கூட இவர்களைக் கட்டி மேய்க்க அலுத்துக் கொள்ளாது போனாலும் சமயங்களில் 5 வயதுக்குள்ளான பிள்ளைகளையும், பெற்றோர்கள் வீட்டில் அவர்களைச் சமாளிக்க முடியாமல் பள்ளிக்கு அனுப்பும்போது, 'ஏன் வயத்துக்குள்ளே இருக்கிற பிள்ளைங்களையும் எறக்கி அழச்சிக் கிட்டு வந்துடுங்களேன்! அதான் இங்கே செதம்பரத்து வாத்தி ஒருத்தி இருக்கானே- அவனுக்கு வேறே என்ன வேலை?' என்று சீறுவார்.

சனி பிற்பகலும் ஞாயிறும் பள்ளி உண்டே தவிர அந்நாட்களில் பாடம் கிடையாது. சனி மதியம் வந்ததும் தோட்ட வேலை செய்ய விட்டு விடுவார். பள்ளிக்கூடம் ஒரு பரந்த ஆல மரத்தடியில் நடந்தது. ஐயா தங்கியிருந்த சாவடியை ஒட்டிய பகுதியை வளைத்து சாவடிக்கு முன்னால் 'ப' வடிவில் பாத்திகள் அமைத்து பூச்செடிகள், குரோட்டன்கள் எல்லாம் வைத்திருந்தார். பாத்திகளின் நடுவில் பன்னீர் மரமும் பவழமல்லிகையும் வளர்த்திருந்தார். விடிகாலை 'வேத்தாஞ் சீட்டு'க்கு வரும் போது 'கம்' மென்று, பன்னீர்ப் பூவும் பவழமல்லிகையும் கிழே சிதறிக் கிடந்து நாசிக்கும் மனதுக்கும் சுகந்தத்தையும் புத்துணைர்வையும் ஊட்டும். ஆண்பிள்ளைகள் பாத்திகளுக்கிடையே சருகு பொறுக்கி, களை நீக்கி வேலை செய்கையில் பெண் பிள்ளைகள் வீட்டிலிருந்து ஒவ்வொருவரும் கொண்டு வந்திருக்கிற சின்னச் சொம்புகளால் பள்ளிக்குப் பக்கத்திலேயே உள்ள ஏரியிருந்து நீர் மொண்டு வந்து செடி மரங்களுக்கு ஊற்றுவார்கள். இந்த வேலை என்றால் பிள்ளைகளுக்குப் படு குஷி. இப்போது அவர்களது கூச்சல், கும்மாளங்களை ஐயா கண்டுகொள்ள மாட்டார். வேலை முடிந்ததும் பொழுதிருக்கவே வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.

ஞாயிற்றுக் கிழமை வேறு வேலை. மாதம் ஒரு முறை ஆண் பிள்ளைகள் எல்லாம் கூப்பிடு தொலைவில் ஓடும் ஆற்றுக்குப் போய் ஆற்று மணலை சின்னக் கூடைகளில் அள்ளி வந்து பாத்திகள் போக முன்னால் உள்ள உட்காரும் இடத்தில் கொட்டிப் பரப்பி எழுதிப் பழகவும் உட்காரவும் சமப்படுத்துவார்கள். அதிகாலையே எல்லாப் பையன்களும் கையில் சின்னக் கூடையுடன் வந்துவிட வேண்டும். ஐயா மேற்பார்வையில் வரிசையாய் ஆற்றுக்குப் போய், மணலை அள்ளி தலையில் சுமந்தபடி வரிசையாய் வரவேண்டும்.

அன்று கொஞ்சம் தாமதமாக 10 மணிக்குப் பள்ளி தொடங்கும். அன்று பொது அறிவு, மற்றும் நடைமுறைக்குப் பயனுள்ள படிப்பாக அமையும். பிராமிசரி நோட்டு எழுத, குடக்கூலி-போக்கிய பத்திரம் எழுத அன்று ஐயா கற்பிப்பார். இதுதான் பள்ளிப்படிப்பைத் தொடராமல் ஊரோடு நிறுத்திக் கொள்கிறவர்களுக்குப் பின்னாளில் கை கொடுக்கக் கூடியதாக இருந்தது. அதோடு பஞ்சாங்கம் பார்ப்பது, நாள் பார்ப்பது எல்லாம் சொல்லிக் கொடுப்பார். அதற்காக தமிழ் வருஷங்கள், திதிகள், நட்சத்திரங்கள் எல்லாம் மனப் பாடம் செய்ய வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் அதனைச் சோதிக் கவும் பயிற்சி கொடுக்கவும் ஐயா பயன் படுத்தினார். மாலையில் விளையாட அனுமதிப் பார். பெண் பிள்ளைகள் எல்லைக் குள்ளேயும், பிள்ளைகள் பாத்திகளுக்கு வெளியே தெருவிலும் விளையாடலாம். அவரவர்க்கு ஏற்றபடி- பெண்களானால் கும்மி, கிளித் தட்டு பையன்களானால் சடு குடு, சரணா என்று ஐயாவே பிரித்துக் கொடுத்து ஆடச் செய்வார். 5 மணி ஆனதும் "போதும்
விளையாடுனது! வீட்டுக்குக்குக் கிளம்புங்க!" என்று அனுப்பி வைப்பார். அந்த இரண்டு நாட்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரமாக மூச்சு விடக்கூடிய நாட்களாக அமையும்.

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

Tuesday, December 14, 2004

களஞ்சியம் - 13

எனது களஞ்சியத்திலிருந்து - 13: விவேகசிந்தாமணி விருந்து - 2

பயனற்றவை:

காந்தியடிகள் 'ஒழுக்கமில்லாத கல்வி, நாணயமில்லாத வியாபாரம்........என்பதாக பயனற்ற ஏழைக் குறிப்பிடுவார். விவேகசிந்தாமணி இப்படிப் பல 'பயனற்றவை'களைப் பட்டியலிடுகிறது.

"தெருள் இலாக் கலையினார் செருக்கும் ஆண்மையும்,
பொருள் இலா வறிஞர்தம் பொறி அடக்கமும்,
அருள் இலா அறிஞர்தம் மௌன நாசமும்,
கரு இலா மங்கையர் கற்பும் ஒக்குமாம்."

தெளிவு இல்லாத கல்வி கற்றவர்களின் கர்வமும் மன ஊக்கமும், செல்வம் இல்லாத வறியவரின் ஐம்பொறிகளின் அடக்கமும், அருள் இல்லாத ஞானியரின் மௌன அழிவும், பிள்ளைப்பேறு இல்லாத பெண்களின் கற்பும் பயனற்றவை. இவை நான்கும் ஒன்றுக்கு ஒன்று சமமானவை எனலாம்.

இன்னொரு விதமான ஆறு பயனற்றவைகளும் சொல்லப் பட்டுள்ளன. அவை-

"திருப்பதி மிதியாப் பாதம்,
சிவனடி வணங்காச் சென்னி,
இரப்பவர்க்கு ஈயாக் கைகள்,
இனியசொல் கேளாக் காது,
புரப்பவர் தங்கள் கண்ணீர்
பொழிதரச் சாகா தேகம்
இருப்பினும் பயனென்? காட்டில்
எரிப்பினும் இல்லை தானே".

இறைவன் எழுந்தருளி உள்ள தலங்களை மிதியாத பாதமும், சிவனின் திருவடியை வணங்காத தலையும், யாசிப்பவர்க்கு ஏதும் அளிக்காத கைகளும், இனிய சொற்களைக் கேளாத செவிகளும், தம்மை ரட்சிப்பவர்கள் கண்ணீர் பொழிவதைப் பார்த்தும் உயிர் கொடாத தேகமும் பயனில்லாதவை. இந்த ஆறும் இருப்பதால் என்ன பயன்? சுடுகாட்டில் வைத்து எரித்திடினும் ஒன்றும் பயன் இராது.

அடுத்து, பயனில்லாத ஏழினை முதல் பாடல் கூறுகிறது:

"ஆபத்துக்கு உதவாப் பிள்ளை,
அரும்பசிக்கு உதவா அன்னம்,
தாபத்தை தீராத் தண்ணீர்,
தரித்திரம் அறியாப் பெண்டிர்,
கோபத்தை அடக்கா வேந்தன்,
குருமொழி கொள்ளாச் சீடன்,
பாபத்தைத் தீராத் தீர்த்தம்,
பயனில்லை ஏழும் தானே".

மிக்க துன்பம் உண்டான காலத்தில் உதவி செய்து அத் துன்பத்தை நீக்காத மகனும், அரிய பசியை நீக்க உதவாத உணவும், நீர் வேட்கையைத் தணிக்காத தண்ணீரும், வீட்டின் வறுமை நிலைமையை உணராமல் அதிகம் செலவு செய்யும் மனைவியும், சினத்தை அடக்கிக் கொள்ளாத அரசனும், ஆசிரியரின் உபதேசத்தை மனத்தில் கொள்ளாத மாணவனும், பாவங்களை நீக்காத தீர்த்தமும் - என்ற இந்த ஏழினாலும் பயனில்லையாம்.

தக்க சமயத்துக்கு உதவாத இன்னொரு எட்டு வகை பற்றியும் விவேகசிந்தாமணி கூறுகிறது. அவை-

"தன்னுடன் பிறவாத் தம்பி,
தனைப்பெறாத் தாயார் தந்தை,
அன்னியரிடத்துச் செல்வம்,
அரும்பொருள், வேசியாசை,
மன்னிய ஏட்டின் கல்வி,
மறு மனையாட்டி வாழ்க்கை,
இன்னவாம் கருமம் எட்டும்,
இடுக்கத்துக்கு உதவா தன்றே".

உடன் பிறவாத சகோதரன், தன்னைப் பெறாத தாய் தந்தை, அயலவரிடம் உள்ள செல்வம், கைக்குக் கிடைத்தற்கு அரிய பொருள், வேசியரிடம் ஆசை, ஏட்டில் எழுதியிருக்கும் கல்வி, அயலான் மனைவியோடு கூடிய வாழ்க்கை என்னும் இந்த எட்டு வகைகளும் (ஏழு தான் உள்ளன) தக்க சமயத்துக்கு உதவமாட்டா.

கடையாக, பயனளிக்காத சிலவற்றையும் விவேகசிந்தாமணி பட்டியலிடுகிறது.

"சந்திரன் இல்லா வானம்,
தாமரை இல்லாப் பொய்கை.
மந்திரி இல்லா வேந்தன்,
மதகரி இல்லாச் சேனை,
சுந்தரப் புலவர் இல்லாத்
தொல்சபை சுதரில் வாழ்வு,
தந்திகளில்லா வீணை,
தனமில்லாக் கொங்கை போலாம்"

நிலவு இல்லாத ஆகாயம், தாமரை இல்லாத நீர்நிலை, நல்ல அமைச்சரைப் பெறாத அரசன், மதங்கொண்ட மலைபோன்ற யானைகள் இல்லாத படை, அழகிய மொழியாளுமை மிக்க புலவர் இல்லாத தொன்மையான சபை, பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை, நரம்புகள் இல்லாத வீணை - இவை யாவும் கொங்கை இரண்டுமில்லாத மங்கையர் இன்பம் போல வீணாகும்.

- இப்படி அருமையான கருத்துப் பெட்டகமாகவும் இனிய யாப்புவகைகள் நிரம்பியதாகவும் உள்ள விவேகசிந்தாமணி, வாசிக்கும் தோறும் நல்வ்¢ருந்தாய் இருப்பதை இன்னும் வரவிருக்கிற பாடல்களால் உணரலாம்.

-மேலும் சொல்வேன்.

-வே.சபாநாயகம்.

Wednesday, December 08, 2004

களஞ்சியம் - 12

எனது களஞ்சியத்திலிருந்து - 12: விவேகசிந்தாமணி விருந்து:

1. அறிமுகம்:

தமிழின் சிறந்த அற நூல்களுள் 'விவேக சிந்தாமணி' குறிப்பிடத்தக்கது. அதன் எளிமை கருதியும், அது கூறும் மனங் கொள்ளத்தக்க சிறந்த அறிவுரைகளாலும் எல்லோராலும் விரும்பிக் கற்கப் பட்டதனால் அது பெருவழக்குப் பெற்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை திண்ணைப் பள்ளிகூடங்களில் விவேகசிந்தாமணி கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்பட்டது. அதனால் திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பு மட்டும் உடைய நாட்டுப்புற மக்கள், அச்சு வடிவம் பெற்ற அல்லி அரசாணி மாலை, நல்லதங்காள் கதை போன்று மனப்பாடமாகக் கூறுவர். 'மக்கள் இலக்கிய வரிசை'யில் 'விவேக சிந்தாமணி'க்கு ஒரு நிச்சயமான இடம் என்றும் உண்டு.

விவேக சிந்தாமணி மிகவும் பிற்பட்ட காலத்தது. நாயக்கர் மன்னர்கள் தமிழகத்தை ஆண்டபோது, பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரால் பாடப்பட்ட தனிப்பாடல்களின் தொகுப்பே விவேக சிந்தாமணி. இதில் பல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட செய்யுட்களும் பிற்காலத்தே பலர் பாடிய தனிப் பாடல்களும் தொகுக்கப் பட்டுள்ளன. இந்நூலில் சாதாரண நடைமுறை அறங்களும், வாழ்க்கை ஒழுங்குகளும், உயர்தர்ம நெறிகளும் கதைகள், நகைச்சுவை, அவலம், வீரம், காதல் போன்ற சுவைகளுடன் எளிய நடையில் சொல்லப் பட்டுள்ளன.

'விவேக சிந்தாமணியைத் தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. அவர் வாழ்ந்த காலம், இடம் ஏதும் அறிய முடியவில்லை. பாடல்களை இயற்றியவர், பாடல் தோன்றிய சூழல் எதுவும் குறிப்பிடப் படவில்லை. பாடல்களைத் தொகுத்து வரிசைப் படுத்துவதற்குப் பாடலின் சிறப்பு, யாப்பு, கருத்து ஆகியவற்றை மனதில் கொண்டு ஒரு வரன்முறையைப் பின் பற்றவில்லை. அதனால் விவேக சிந்தாமணி பல்சுவை இலக்கிய மாய் - ஒர் கலவை நூலாக உள்ளது' என்பார் புலவர் மாணிக்கம்.

கடந்த நூறு ஆண்டுகளில் ஏறக்குறைய இருநூறு பதிப்புகள் போல மூலமும் உரையுமாய் விவேக சிந்தாமணி வந்திருப்பதே அதன் செல்வாக்கை உணர்த்தும். கடவுள் வாழ்த்து உட்பட 135 பாடல்கள் பல்வகை யாப்பில் உள்ளன. வெண்பாக் களும், கட்டளைக் கலித்துறைகளும், ஆசிரிய விருத்தங்களும் அமைந்த பாடல்கள். முதற்பாடல் கணபதி துதியாக அமைந்த வெண்பாவாகும். பிற 134 பாடல்களும் பெரும்பாலும் நீதிக்கருத்தை உணர்த்தும் பாடல்களே. சில பாடல்கள் நாட்டில் வழங்கும் பழமொழிகளுக்கு விளக்கம் தருபவை. சில திருக்குறளுக்கு விளக்க உரை போல்வன. புத்த ஜாதகக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், நாட்டில் வழங்கும் பழங்கதைகள், புராண இதிகாச நிகழ்ச்சிகளைக் கற்பனை நயத்தோடு கூறும் கதைகள் பல பாடல்களில் உள்ளன. வடமொழியில் உள்ள தனிப்பாடல்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்பாகவும் சில பாடல்கள் உள்ளன. காதல் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இன்பச்சுவையை மிகைப்படுத்தும் பாடல்களும் உள்ளன. பெண்ணையும் சிற்றின்பத்தையும் பழித்துரைக்கும் பாடல்களும் பல உள்ளன.

டி.கே.எஸ். சகோதரர்கள் தங்களது 'இராஜ ராஜ சோழன்' என்னும் வரலாற்று நாடகத்தில் விவேக சிந்தாமணிப் பாடல் ஒன்றை இனிய இசையோடு பாடச் செய்தனர்.

"சங்கு முழங்கும் தமிழ்நாடன்
தன்னை நினைந்த போதெல்லாம்,
பொங்கு கடலும் உறங்காது!
பொழுதோர் நாளும் விடியாது!
திங்கள் உறங்கும்! புள் உறங்கும்!
தென்றல் உறங்கும் சில காலம்!
எங்கும் உறங்கும் இராக் காலம்!
என் கண் இரண்டும் உறங்காவே!

இந்தப் பாடலின் கருத்து, இனிமை, கற்பனை காரணமாய் நாடகத்தில் இடம் பெற்ற போது மக்களின் போற்றுதலுகு உள்ளானது. இது போன்ற அரிய இனிய பாடல்களை நான் ஆரம்பப்பள்ளிப் பருவகாலத்தில் மனப்பாடம் செய்ததால் இன்று பேச்சிலும் எழுத்திலும் அவை தாமாகவே வந்து விழுகின்றன. அந்த அற்புதப் பாடல்கள் சிலவற்றை பல் வேறு தலைப்புகளில் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பெரு நோக்கில் குழுமத்தில் எழுத விழைந்தேன்.

- தொடரும்.

-வே.சபாநாயகம்.

நினைவுத் தடங்கள் -27

மதியப் பள்ளி 2 மணிக்குத்தான் என்றாலும், பிள்ளைகள்- அனேகமாக எல்லோரும் போன உடனே சாப்பிட்டுவிட்டு வந்து விடுவார்கள். ஐயா அதற்குள் தானே சமைத்த சாதத்தைச் சாப்பிட உட்காருவார். சாதம் மட்டும் தான் அவர் சமைப்பது. பிள்ளை களை அனுப்பி வசதியான வீடுகளிலிருந்து குழம்போ ரசமோ வாங்கி வரச் சொல்லிபோட்டுச் சாப்பிடுவார். 'அய்யோ பாவம்! தனி ஆம்பிள்ளை எப்படிக் குழம்பெல்லாம் வைப்பார்' என்று அனுதாபப்பட்டுத் தாய்மார்கள் முகம் சுளிக்காமல் தாராள மனதுடன் தருவார்கள். சாப்பிட்ட பின் ஐயா கூடத்தில் பாய்விரித்து சிரமபரிகாரம் செய்து கொள்ளுவார். அப்போது இரண்டு பையன்கள் உள்ளே அழைக்கப் படுவார்கள்- ஒருத்தன் கால் அழுத்தவும் இன்னொருத்தன் விசிறி கொண்டு விசிறவும். சற்று நேரத் தில் ஐயாவின் லேசான குறட்டை கேட்டதும் எழுந்து வெளியே வருவார்கள். அப்புறம் தான் எல்லோருக்கும் நிம்மதியாய் மூச்சு விடவும் பேசிக்கொள்ளவும் முடியும்.

மற்ற ஆசிரியர்கள் 2 மணிக்குத்தான் வருவார்கள். அதுவரை சட்டாம் பிள்ளைதான் சத்தமில்லாமல் பார்த்துக் கொள்வான். அப்போது அவனது அதிகாரம் தூள்பறக்கும். ஐயாவின் கெடுபிடியே தேவலை என்கிற மாதிரி இருக்கும். பிள்ளைகள் சிலரிடம், மதியம் சாப்பிட்டு வரும்போது ஏதாவது தின்பண்டம் எடுத்து வரும்படி சொல்லுவான். கொடுக்காப்புளி, இலந்தை, வெல்லம் என்று அவரவர்க்குக் கிடைத்ததைக் கொண்டு வருவார்கள். சமயங்களில் சில பிள்ளைகளால் கொண்டு வரமுடியாது போய்விடும். அதை மனதில் வைத்துக் கொண்டு, ஏதாவது கோள் மூட்டி, பேசியதாக எழுதி வைத்து, கோமணம் கட்டாத போது காட்டிக் கொடுத்து - ஐயாவிடம் 'கொலை அடி' வாங்கிவைத்து விடுவான். ஒரு தடவை புரோகிதர் விட்டுப் பெண்ணுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தினமும் நச்சரித்துக் கொண்டிருந்தான். அன்றும் கொண்டு போகாவிட்டால் அவன் என்ன செய்வானோ என்ற பயத்தில் அகப்பட்டதைக் கொண்டு வந்து விட்டாள். "என்ன இன்னிக்காச்சும் எதுனாகொணாந்தியா?" என்று அவன் கேட்கவும் அவள் பயத்துடன் தலையசைத்தாள். "எடு சீகிரம்'' என்று அவன் அவசரப்படுத்தவும், அவள் மிரட்சியுடன் சுற்று முற்றும் பார்த்தபடி இடது கையைப் பின்னால் முதுகுப் பக்கம் கொண்டுபோய் பாவாடை நாடாவின் அடியில் செருகி சுருட்டி வைத்திருந்ததை விடுவித்து கையை மூடியபடி அவனது கையில் வைத்து மூடினாள். அவன் ஆவலோடு திறந்து பார்த்தால் - அதில் இருந்தது ஒரு சாம்பார் முருங்கைக்காய்த் துண்டு! 'அடச் சீ!' என்று கையை உதறி வெளியே விட்டெறிந்தான். எல்லோரும் சத்தம் போடாமல் நமுட்டுச் சிரிப்பு சிரித்தோம். அதற்குப் பிறகு அவன் அந்தப் பெண்ணை எதுவும் கொண்டு வரக் கேட்பதில்லை.

மணி இரண்டானதும் மற்ற ஆசிரியர்கள் வந்து விடுவார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் பள்ளி இறுதி வகுப்புவரை படித்த இடைநிலை ஆசிரியர். அவர்தான் விருப்பப்பட்டவர்க்கு மட்டும் மூன்றாம் வகுப்புக்கு மேல் ஆங்கிலம் சொல்லித் தருவார். மணி நாலரை வரை அவர்கள் பாடம் நடத்தி விட்டுக் கிளம்புவார்கள். பள்ளி நேரம் முடிவதை அறிவிக்க மணியெல்லாம் அடிப்பதில்லை. அவர்கள் கிளம்பினால் பள்ளி நேரம் முடிவதாகக் கொள்ளவேண்டும். அவர்கள் போனால் பிள்ளைகளும் போய்விட முடியாது. அப்புறம் ஐயா பிடித்துக் கொள்வார் ஆறு மணி வரை.

அதற்குப் பிறகு ஐயா எல்லா வகுப்புகளுக்கும் சோதனையில் இறங்குவார். காலையில் முறை போட்ட வாய்ப்பாடு, எழுத்து எல்லாம் சோதிக்கப்படும். அரிச்சுவடிப் பையன்கள் கேட்ட எழுத்தை மணலில் எழுதிக்காட்ட வேண்டும். வாய்ப்பாடுகள் கெட்டி எண்சுவடியில் உள்ளபடி தமிழ் எண்கள், நெடுங்கணக்கில் மாகாணி, அரைக்கால், கால், அரை, முக்கால் வாய்ப்பாடு என்று எதைக் கேட்டாலும் திக்காமல் திணறாமல் சொல்ல வேண்டும். பாடங்களின் தலைப்பு வரிசைகள்- பாட எண் சொன்னால் தலைப்பு, தலைப்பு சொன்னால் வரிசை எண்- இப்படி எப்படி மடக்கினாலும் பதில் சொல்ல வேண்டும். இல்லாவிடில் தொலைந்தது. ஐயா எப்போதும் கக்கத்தில் வைத்திருக்கும் மணிப் பிரம்பு இரக்கமின்றி உடல் மீது விளையாடும். ஆக, எண்ணும் எழுத்தும் எல்லோருக்கும் அத்துப்படி ஆவது இந்த நேரத்தில் தான். பெரிய வகுப்புப் பையன்கள் சதகம், விவேக சிந்தாமணி போன்ற நீதிநூல்களை மனப் பாடம் செய்ததை ஒப்பிக்கக் கேட்பதும் இப்போதுதான்.

ஒவ்வொருவரும் அவரவர் வீட்டு மத ஆசாரப்படி ஒரு சதகத்தைத் தேர்ந்து, அதை மனப்பாடம் செய்ய வேண்டும். சைவக் குடும்பமானால் 'அறப்பளீசுரர் சதகம்', 'குமரேச சதகம்' - வைஷ்ணவக் குடும்பமானால் 'திருவேங்கட சதகம்' - இப்படி ஒன்றை ஐயாவே அவரவர் குடும்பத்திற்கேற்ப வகைப்படுத்திக் கொடுத்து விடுவார். ஒன்றாம் வகுப்புக்கு 'உலகநீதி, இரண்டாம் வகுப்புக்கு 'ஆத்திசூடி', மூன்றாம் வகுப்புக்கு
'கொன்றைவேந்தன்' நான்காம் வகுப்புக்கு 'வெற்றிவேற்கை', ஐந்தாம் வகுப்புக்கு 'விவேக சிந்தாமணி' - நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு சதகம் பாடம். சதகம் ஒப்பிக்கிற வேளை பலருக்குக் கண்டம்தான்! வார்த்தைகளைச் சந்தி பிரித்துப் சொல்லத் தெரியாமல் திணறினால், ஐயாவிடம் அடிவாங்காமல் முடியாது. இப்படித்தான் நான் ஐந்து வகுப்புக்குள் எண்ணும் எழுத்தும் கசடறக் கற்றேன். அறப்பளீசுரர் சதகமும், விவேக சிந்தாமணியும் மனப் பாடம் செய்தேன். இன்று அவை எனக்கு உதவுகின்றன.

லேசாகப் பொழுது மங்கத் தொடங்கியதும் ஐயா, "ம்ம்.. போயி வெளக்கு முன்னாலே ஒக்காந்து படிக்கணும். நா வந்து பாப்பேன்" என்று மிரட்டலாகச் சொல்லி அனுப்பி வைப்பார். சொன்னபடி இரவு வீட்டுக்கு வருவார் என்பதும் உண்மைதான்; ஆனால் வராமல் போகிற அதிர்ஷ்டமும் சிலருக்குக் கிட்டுவதுண்டு.

எங்களுக்கு முன் தலைமுறையில் மாலைப் பள்ளி முடிந்து கீழ்க்கண்ட பாடலை பிள்ளைகள் அனைவரும் ஒரே குரலில் பாடி விடை பெறுவதுண்டு.

"அந்திக்குப் போறோம் நாங்கள்
அகத்திலே விளையாடாமல்
சுந்தர விளக்கிகன் முன்னே
சுவடிகள் அவிழ்த்துப் பார்த்து
வந்தது வாராதெல்லாம்
வகையுடன் படித்துக் கட்டி
இந்திரன் சேவல் கூவ
எழுந்திருந்து வாரோமையா
திருப்தியாய் அனுப்புமையா
திருவடி சரணம் தானே"

பின்னொட்டு:-

இதற்கு முன் கட்டுரையில், நெற்றிக்கு இட்டுக் கொண்டு வராத மாணவனின் நெற்றியில் சட்டாம் பிள்ளை சாணத்தைப் பூசி விடுவான் என்று எழுதியிருந்தேன். அதை இணையத்தில் படித்த என் தம்பி அது தொடர்பான ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தி எழுதியுள்ளார். ஒரு தடவை எங்களூரில் இருந்த ஒரே முஸ்லிம் குடும்பத்துப் பையன் அவனது மத முறைப்படி நெற்றிக்கு இடாமல் வந்திருந்தான். அப்போதைய சட்டாம் பிள்ளைக்கு முஸ்லிம்கள் நெற்றிக்கு இடமாட்டார்கள் என்பது தெரியாமல் அவனது நெற்றியிலும் பட்டையாய் சாணத்தைப் பூசி விட்டான். அந்தப் பையன் அழுது கொண்டே வீட்டுக்குப் போய் அவன் அப்பாவிடம் சொல்லிவிட்டான். அப்பாக்காரர் கோபாவேசமாக வந்து ஐயாவிடம் சத்தம் போட்டு மகனை நிறுத்திவிடப் போவதாகச் சொன்னார். ஐயா யாருக்கும் பணிகிறவர் அல்ல. ஆனாலும், பெற்றவரின் உணர்வை மதித்து மன்னிப்புக் கேட்காத குறையாக சமாதானப் படுத்தி அனுப்பினார். அவர் போன பிறகு சட்டாம்பிள்ளைக்குக் கிடைத்த மண்டகப்படி அவனது ஜென்மத்துக்கும் மறக்காது! அத்தோடு அவனது சட்டாம்பிள்ளை பதவியும் பறிக்கப் பட்டது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.