Tuesday, December 14, 2004

களஞ்சியம் - 13

எனது களஞ்சியத்திலிருந்து - 13: விவேகசிந்தாமணி விருந்து - 2

பயனற்றவை:

காந்தியடிகள் 'ஒழுக்கமில்லாத கல்வி, நாணயமில்லாத வியாபாரம்........என்பதாக பயனற்ற ஏழைக் குறிப்பிடுவார். விவேகசிந்தாமணி இப்படிப் பல 'பயனற்றவை'களைப் பட்டியலிடுகிறது.

"தெருள் இலாக் கலையினார் செருக்கும் ஆண்மையும்,
பொருள் இலா வறிஞர்தம் பொறி அடக்கமும்,
அருள் இலா அறிஞர்தம் மௌன நாசமும்,
கரு இலா மங்கையர் கற்பும் ஒக்குமாம்."

தெளிவு இல்லாத கல்வி கற்றவர்களின் கர்வமும் மன ஊக்கமும், செல்வம் இல்லாத வறியவரின் ஐம்பொறிகளின் அடக்கமும், அருள் இல்லாத ஞானியரின் மௌன அழிவும், பிள்ளைப்பேறு இல்லாத பெண்களின் கற்பும் பயனற்றவை. இவை நான்கும் ஒன்றுக்கு ஒன்று சமமானவை எனலாம்.

இன்னொரு விதமான ஆறு பயனற்றவைகளும் சொல்லப் பட்டுள்ளன. அவை-

"திருப்பதி மிதியாப் பாதம்,
சிவனடி வணங்காச் சென்னி,
இரப்பவர்க்கு ஈயாக் கைகள்,
இனியசொல் கேளாக் காது,
புரப்பவர் தங்கள் கண்ணீர்
பொழிதரச் சாகா தேகம்
இருப்பினும் பயனென்? காட்டில்
எரிப்பினும் இல்லை தானே".

இறைவன் எழுந்தருளி உள்ள தலங்களை மிதியாத பாதமும், சிவனின் திருவடியை வணங்காத தலையும், யாசிப்பவர்க்கு ஏதும் அளிக்காத கைகளும், இனிய சொற்களைக் கேளாத செவிகளும், தம்மை ரட்சிப்பவர்கள் கண்ணீர் பொழிவதைப் பார்த்தும் உயிர் கொடாத தேகமும் பயனில்லாதவை. இந்த ஆறும் இருப்பதால் என்ன பயன்? சுடுகாட்டில் வைத்து எரித்திடினும் ஒன்றும் பயன் இராது.

அடுத்து, பயனில்லாத ஏழினை முதல் பாடல் கூறுகிறது:

"ஆபத்துக்கு உதவாப் பிள்ளை,
அரும்பசிக்கு உதவா அன்னம்,
தாபத்தை தீராத் தண்ணீர்,
தரித்திரம் அறியாப் பெண்டிர்,
கோபத்தை அடக்கா வேந்தன்,
குருமொழி கொள்ளாச் சீடன்,
பாபத்தைத் தீராத் தீர்த்தம்,
பயனில்லை ஏழும் தானே".

மிக்க துன்பம் உண்டான காலத்தில் உதவி செய்து அத் துன்பத்தை நீக்காத மகனும், அரிய பசியை நீக்க உதவாத உணவும், நீர் வேட்கையைத் தணிக்காத தண்ணீரும், வீட்டின் வறுமை நிலைமையை உணராமல் அதிகம் செலவு செய்யும் மனைவியும், சினத்தை அடக்கிக் கொள்ளாத அரசனும், ஆசிரியரின் உபதேசத்தை மனத்தில் கொள்ளாத மாணவனும், பாவங்களை நீக்காத தீர்த்தமும் - என்ற இந்த ஏழினாலும் பயனில்லையாம்.

தக்க சமயத்துக்கு உதவாத இன்னொரு எட்டு வகை பற்றியும் விவேகசிந்தாமணி கூறுகிறது. அவை-

"தன்னுடன் பிறவாத் தம்பி,
தனைப்பெறாத் தாயார் தந்தை,
அன்னியரிடத்துச் செல்வம்,
அரும்பொருள், வேசியாசை,
மன்னிய ஏட்டின் கல்வி,
மறு மனையாட்டி வாழ்க்கை,
இன்னவாம் கருமம் எட்டும்,
இடுக்கத்துக்கு உதவா தன்றே".

உடன் பிறவாத சகோதரன், தன்னைப் பெறாத தாய் தந்தை, அயலவரிடம் உள்ள செல்வம், கைக்குக் கிடைத்தற்கு அரிய பொருள், வேசியரிடம் ஆசை, ஏட்டில் எழுதியிருக்கும் கல்வி, அயலான் மனைவியோடு கூடிய வாழ்க்கை என்னும் இந்த எட்டு வகைகளும் (ஏழு தான் உள்ளன) தக்க சமயத்துக்கு உதவமாட்டா.

கடையாக, பயனளிக்காத சிலவற்றையும் விவேகசிந்தாமணி பட்டியலிடுகிறது.

"சந்திரன் இல்லா வானம்,
தாமரை இல்லாப் பொய்கை.
மந்திரி இல்லா வேந்தன்,
மதகரி இல்லாச் சேனை,
சுந்தரப் புலவர் இல்லாத்
தொல்சபை சுதரில் வாழ்வு,
தந்திகளில்லா வீணை,
தனமில்லாக் கொங்கை போலாம்"

நிலவு இல்லாத ஆகாயம், தாமரை இல்லாத நீர்நிலை, நல்ல அமைச்சரைப் பெறாத அரசன், மதங்கொண்ட மலைபோன்ற யானைகள் இல்லாத படை, அழகிய மொழியாளுமை மிக்க புலவர் இல்லாத தொன்மையான சபை, பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை, நரம்புகள் இல்லாத வீணை - இவை யாவும் கொங்கை இரண்டுமில்லாத மங்கையர் இன்பம் போல வீணாகும்.

- இப்படி அருமையான கருத்துப் பெட்டகமாகவும் இனிய யாப்புவகைகள் நிரம்பியதாகவும் உள்ள விவேகசிந்தாமணி, வாசிக்கும் தோறும் நல்வ்¢ருந்தாய் இருப்பதை இன்னும் வரவிருக்கிற பாடல்களால் உணரலாம்.

-மேலும் சொல்வேன்.

-வே.சபாநாயகம்.

No comments: