Wednesday, December 08, 2004

நினைவுத் தடங்கள் -27

மதியப் பள்ளி 2 மணிக்குத்தான் என்றாலும், பிள்ளைகள்- அனேகமாக எல்லோரும் போன உடனே சாப்பிட்டுவிட்டு வந்து விடுவார்கள். ஐயா அதற்குள் தானே சமைத்த சாதத்தைச் சாப்பிட உட்காருவார். சாதம் மட்டும் தான் அவர் சமைப்பது. பிள்ளை களை அனுப்பி வசதியான வீடுகளிலிருந்து குழம்போ ரசமோ வாங்கி வரச் சொல்லிபோட்டுச் சாப்பிடுவார். 'அய்யோ பாவம்! தனி ஆம்பிள்ளை எப்படிக் குழம்பெல்லாம் வைப்பார்' என்று அனுதாபப்பட்டுத் தாய்மார்கள் முகம் சுளிக்காமல் தாராள மனதுடன் தருவார்கள். சாப்பிட்ட பின் ஐயா கூடத்தில் பாய்விரித்து சிரமபரிகாரம் செய்து கொள்ளுவார். அப்போது இரண்டு பையன்கள் உள்ளே அழைக்கப் படுவார்கள்- ஒருத்தன் கால் அழுத்தவும் இன்னொருத்தன் விசிறி கொண்டு விசிறவும். சற்று நேரத் தில் ஐயாவின் லேசான குறட்டை கேட்டதும் எழுந்து வெளியே வருவார்கள். அப்புறம் தான் எல்லோருக்கும் நிம்மதியாய் மூச்சு விடவும் பேசிக்கொள்ளவும் முடியும்.

மற்ற ஆசிரியர்கள் 2 மணிக்குத்தான் வருவார்கள். அதுவரை சட்டாம் பிள்ளைதான் சத்தமில்லாமல் பார்த்துக் கொள்வான். அப்போது அவனது அதிகாரம் தூள்பறக்கும். ஐயாவின் கெடுபிடியே தேவலை என்கிற மாதிரி இருக்கும். பிள்ளைகள் சிலரிடம், மதியம் சாப்பிட்டு வரும்போது ஏதாவது தின்பண்டம் எடுத்து வரும்படி சொல்லுவான். கொடுக்காப்புளி, இலந்தை, வெல்லம் என்று அவரவர்க்குக் கிடைத்ததைக் கொண்டு வருவார்கள். சமயங்களில் சில பிள்ளைகளால் கொண்டு வரமுடியாது போய்விடும். அதை மனதில் வைத்துக் கொண்டு, ஏதாவது கோள் மூட்டி, பேசியதாக எழுதி வைத்து, கோமணம் கட்டாத போது காட்டிக் கொடுத்து - ஐயாவிடம் 'கொலை அடி' வாங்கிவைத்து விடுவான். ஒரு தடவை புரோகிதர் விட்டுப் பெண்ணுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தினமும் நச்சரித்துக் கொண்டிருந்தான். அன்றும் கொண்டு போகாவிட்டால் அவன் என்ன செய்வானோ என்ற பயத்தில் அகப்பட்டதைக் கொண்டு வந்து விட்டாள். "என்ன இன்னிக்காச்சும் எதுனாகொணாந்தியா?" என்று அவன் கேட்கவும் அவள் பயத்துடன் தலையசைத்தாள். "எடு சீகிரம்'' என்று அவன் அவசரப்படுத்தவும், அவள் மிரட்சியுடன் சுற்று முற்றும் பார்த்தபடி இடது கையைப் பின்னால் முதுகுப் பக்கம் கொண்டுபோய் பாவாடை நாடாவின் அடியில் செருகி சுருட்டி வைத்திருந்ததை விடுவித்து கையை மூடியபடி அவனது கையில் வைத்து மூடினாள். அவன் ஆவலோடு திறந்து பார்த்தால் - அதில் இருந்தது ஒரு சாம்பார் முருங்கைக்காய்த் துண்டு! 'அடச் சீ!' என்று கையை உதறி வெளியே விட்டெறிந்தான். எல்லோரும் சத்தம் போடாமல் நமுட்டுச் சிரிப்பு சிரித்தோம். அதற்குப் பிறகு அவன் அந்தப் பெண்ணை எதுவும் கொண்டு வரக் கேட்பதில்லை.

மணி இரண்டானதும் மற்ற ஆசிரியர்கள் வந்து விடுவார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் பள்ளி இறுதி வகுப்புவரை படித்த இடைநிலை ஆசிரியர். அவர்தான் விருப்பப்பட்டவர்க்கு மட்டும் மூன்றாம் வகுப்புக்கு மேல் ஆங்கிலம் சொல்லித் தருவார். மணி நாலரை வரை அவர்கள் பாடம் நடத்தி விட்டுக் கிளம்புவார்கள். பள்ளி நேரம் முடிவதை அறிவிக்க மணியெல்லாம் அடிப்பதில்லை. அவர்கள் கிளம்பினால் பள்ளி நேரம் முடிவதாகக் கொள்ளவேண்டும். அவர்கள் போனால் பிள்ளைகளும் போய்விட முடியாது. அப்புறம் ஐயா பிடித்துக் கொள்வார் ஆறு மணி வரை.

அதற்குப் பிறகு ஐயா எல்லா வகுப்புகளுக்கும் சோதனையில் இறங்குவார். காலையில் முறை போட்ட வாய்ப்பாடு, எழுத்து எல்லாம் சோதிக்கப்படும். அரிச்சுவடிப் பையன்கள் கேட்ட எழுத்தை மணலில் எழுதிக்காட்ட வேண்டும். வாய்ப்பாடுகள் கெட்டி எண்சுவடியில் உள்ளபடி தமிழ் எண்கள், நெடுங்கணக்கில் மாகாணி, அரைக்கால், கால், அரை, முக்கால் வாய்ப்பாடு என்று எதைக் கேட்டாலும் திக்காமல் திணறாமல் சொல்ல வேண்டும். பாடங்களின் தலைப்பு வரிசைகள்- பாட எண் சொன்னால் தலைப்பு, தலைப்பு சொன்னால் வரிசை எண்- இப்படி எப்படி மடக்கினாலும் பதில் சொல்ல வேண்டும். இல்லாவிடில் தொலைந்தது. ஐயா எப்போதும் கக்கத்தில் வைத்திருக்கும் மணிப் பிரம்பு இரக்கமின்றி உடல் மீது விளையாடும். ஆக, எண்ணும் எழுத்தும் எல்லோருக்கும் அத்துப்படி ஆவது இந்த நேரத்தில் தான். பெரிய வகுப்புப் பையன்கள் சதகம், விவேக சிந்தாமணி போன்ற நீதிநூல்களை மனப் பாடம் செய்ததை ஒப்பிக்கக் கேட்பதும் இப்போதுதான்.

ஒவ்வொருவரும் அவரவர் வீட்டு மத ஆசாரப்படி ஒரு சதகத்தைத் தேர்ந்து, அதை மனப்பாடம் செய்ய வேண்டும். சைவக் குடும்பமானால் 'அறப்பளீசுரர் சதகம்', 'குமரேச சதகம்' - வைஷ்ணவக் குடும்பமானால் 'திருவேங்கட சதகம்' - இப்படி ஒன்றை ஐயாவே அவரவர் குடும்பத்திற்கேற்ப வகைப்படுத்திக் கொடுத்து விடுவார். ஒன்றாம் வகுப்புக்கு 'உலகநீதி, இரண்டாம் வகுப்புக்கு 'ஆத்திசூடி', மூன்றாம் வகுப்புக்கு
'கொன்றைவேந்தன்' நான்காம் வகுப்புக்கு 'வெற்றிவேற்கை', ஐந்தாம் வகுப்புக்கு 'விவேக சிந்தாமணி' - நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு சதகம் பாடம். சதகம் ஒப்பிக்கிற வேளை பலருக்குக் கண்டம்தான்! வார்த்தைகளைச் சந்தி பிரித்துப் சொல்லத் தெரியாமல் திணறினால், ஐயாவிடம் அடிவாங்காமல் முடியாது. இப்படித்தான் நான் ஐந்து வகுப்புக்குள் எண்ணும் எழுத்தும் கசடறக் கற்றேன். அறப்பளீசுரர் சதகமும், விவேக சிந்தாமணியும் மனப் பாடம் செய்தேன். இன்று அவை எனக்கு உதவுகின்றன.

லேசாகப் பொழுது மங்கத் தொடங்கியதும் ஐயா, "ம்ம்.. போயி வெளக்கு முன்னாலே ஒக்காந்து படிக்கணும். நா வந்து பாப்பேன்" என்று மிரட்டலாகச் சொல்லி அனுப்பி வைப்பார். சொன்னபடி இரவு வீட்டுக்கு வருவார் என்பதும் உண்மைதான்; ஆனால் வராமல் போகிற அதிர்ஷ்டமும் சிலருக்குக் கிட்டுவதுண்டு.

எங்களுக்கு முன் தலைமுறையில் மாலைப் பள்ளி முடிந்து கீழ்க்கண்ட பாடலை பிள்ளைகள் அனைவரும் ஒரே குரலில் பாடி விடை பெறுவதுண்டு.

"அந்திக்குப் போறோம் நாங்கள்
அகத்திலே விளையாடாமல்
சுந்தர விளக்கிகன் முன்னே
சுவடிகள் அவிழ்த்துப் பார்த்து
வந்தது வாராதெல்லாம்
வகையுடன் படித்துக் கட்டி
இந்திரன் சேவல் கூவ
எழுந்திருந்து வாரோமையா
திருப்தியாய் அனுப்புமையா
திருவடி சரணம் தானே"

பின்னொட்டு:-

இதற்கு முன் கட்டுரையில், நெற்றிக்கு இட்டுக் கொண்டு வராத மாணவனின் நெற்றியில் சட்டாம் பிள்ளை சாணத்தைப் பூசி விடுவான் என்று எழுதியிருந்தேன். அதை இணையத்தில் படித்த என் தம்பி அது தொடர்பான ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தி எழுதியுள்ளார். ஒரு தடவை எங்களூரில் இருந்த ஒரே முஸ்லிம் குடும்பத்துப் பையன் அவனது மத முறைப்படி நெற்றிக்கு இடாமல் வந்திருந்தான். அப்போதைய சட்டாம் பிள்ளைக்கு முஸ்லிம்கள் நெற்றிக்கு இடமாட்டார்கள் என்பது தெரியாமல் அவனது நெற்றியிலும் பட்டையாய் சாணத்தைப் பூசி விட்டான். அந்தப் பையன் அழுது கொண்டே வீட்டுக்குப் போய் அவன் அப்பாவிடம் சொல்லிவிட்டான். அப்பாக்காரர் கோபாவேசமாக வந்து ஐயாவிடம் சத்தம் போட்டு மகனை நிறுத்திவிடப் போவதாகச் சொன்னார். ஐயா யாருக்கும் பணிகிறவர் அல்ல. ஆனாலும், பெற்றவரின் உணர்வை மதித்து மன்னிப்புக் கேட்காத குறையாக சமாதானப் படுத்தி அனுப்பினார். அவர் போன பிறகு சட்டாம்பிள்ளைக்குக் கிடைத்த மண்டகப்படி அவனது ஜென்மத்துக்கும் மறக்காது! அத்தோடு அவனது சட்டாம்பிள்ளை பதவியும் பறிக்கப் பட்டது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

No comments: