Tuesday, November 30, 2004

உவமைகள்-வருணனைகள் - 32: இந்திரா பார்த்தசாரதி

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 32 : இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளிலிருந்து:

1. மினி-பஸ் என்பது ஒரு சங்கப் பலகை. அது சாந்தினிசௌக் போய்ச் சேருவதற்குள் குறைந்தது நூறு பேராவது அதற்குள் இருப்பார்கள். ஆண்-பெண் அனைவரும் பால் உணர்வு நீங்கி, ஆத்ம நிலையில் உறவாடும் இடம். வெயிலில் வதங்கி, வியர்வையில் அனைவரும் உருகி ஒருவர் மீது ஒருவராய் நிற்கும் போது, ஆண்- பெண் உணர்வு எங்கிருந்து வரும்? காமத்தைக் கடக்க உதவும் மினி-பஸ் ஒரு தெய்வ சந்நிதானம், சந்தேகமே இல்லை. அல்லது மினி-பஸ் கி.பி 2000ல் இருக்கப்போகும் பாரதமா? எலிப் பொறியில் அகப்பட்ட எலிகள் ஒன்றையன்று அடித்துக்கொண்டு சாகின்றன.

- 'ஒரு ரூபாய்' கதையில்.

2. சில நாட்களுக்கு முன்பு ஹரிஹரன் தன் நண்பர்களிடம் கூறிக் கொண்டிருந்த ஒன்று அவர் நினைவுக்கு வந்தது. சர்வாதிகார நாட்டில் ஒரு நாய்க்கு எல்லாவிதமான சௌகர்யங்களும் இருந்தன; ஆனால் அதற்கு ஒரு ஏக்கம், தன்னிஷ்டத்திற்குக் குரைக்க முடியவில்லையே என்று.

- 'வழித்துணை'.

3. மந்திரிகளின் பூதாகரமான உடம்பு அவருக்கு எரிச்சலை ஊட்டியது. இது செல்வத்தின் வளர்ச்சியா அல்லது வறுமையின் வீக்கமா?

- 'கருகத் திருவுளமோ?'.

4. நேற்று சூரியனுக்கு ஓய்வு. சாம்பல் பூசிய நாளாய் இருந்தது. இன்று, நேற்றுப்பெற்ற ஓய்வில் கலைப்பு நீங்கி புதுப்பொலிவுடன் வானத்தில் பவனி வந்தான். அவனை வாரி உடம்பில் பூசிக் கொள்ள மணலில் மல்லாந்து கிடந்தன பல வெள்ளை உடல்கள். இளைஞர்கள், வயதானவர்கள், பால் வேறுபாடின்றி, கண்களில் மட்டும் கறுப்புக் கண்ணாடி திரையிட்டு உடம்பில் மற்றைய பகுதிகளை சூரியனின் அரவணைப்புக்குச் சமர்ப்பித்திருந்தனர்.

- 'குன்று'.

5. சாமான்களையெல்லாம் சரிபார்த்து. நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு என் சீட்டில் உட்காரப் போன போதுதான் அவரைக் கவனித்தேன். அவர் அறிதுயில் கோலம் கொண்டிருந்தார், கால்களைத் தாராளமாக நீட்டியபடி. இன்னொருவர் அங்கே உட்காரவேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்ததாகவே தெரியவில்லை. உலகத்தைப் பந்தாகச் சுற்றி குர்தாப் பையில் வைத்திருப்பவர் போல் அவர் அலட்சியமாகப்
பார்த்துக் கொண்டிருந்தார்.

- 'அவஸ்தைகள்'.

6. உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் போது, ட்யூப் வெளிச்சத்தில் உயிர்பெற்றெழும் அந்த ஓட்டலில், நெற்றியில் திருநீறு துலங்க, பளிச் சென்ற முகத்துடன், உடையுடன், 'காப்பியா அண்ணா?' என்று ஒருவர் கேட்கும்போது உலகம் ஸ்தம்பித்து நிற்கிறது. காலம் பின்னோக்கிக் கிழிந்து, நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால், கும்பகோணம் அம்பி அய்யர் ஹோட்டலில் நிற்பது போல் ஒரு பிரமை.

- 'கோட்சேக்கு நன்றி'.

7. அருணகிரிக்குச் சற்று பெரிய சரீரம். கனத்த சரீரம். அவர் பக்கத்தில் உட்காரும்போது அவன் சற்றுத் தள்ளித்தான் உட்காரவேண்டும். அருணகிரியின் சரீர ஆக்கிரமிப்பு ஒரு காரணம். இன்னொன்று அவர் உரக்கப் பேசினால் சப்தம் அவரிடமிருந்தா அல்லது கார் இஞ்சினிலிருந்தா என்று சொல்வது கஷ்டம். கார் இஞ்சினில் ஏதாவது தகராறு இருந்து சப்தம் வந்து, அந்த சப்தம் அவரிடமிருந்து வந்ததாக நினைத்துக் கொண்டுவிட்டால் விபத்து ஏற்படுவதற்கான சாத்யக்கூறு உண்டு. அவர் உரக்கப் பேசும்போது குரலை அப்படி ஏன் கனைக்கிறாரென்பது தான் அவனுக்குப் புரியவில்லை.

- 'இறுதிக் கடிதம்'.

8. நாற்காலியின் ஒரு பக்கத்தில் கையை ஊன்றிக் கொண்டு கன்னத்தில் கை வைத்தவாறு உட்கார்ந்திருந்தார் சாம்பசிவன். பக்திக்கு மணமுண்டு என்று காட்டுவது போல் அவர் உடம்பில் பூசியிருந்த திருநீறு சுகந்தமான வாசனையை அறை முழுதும் வாரியிறைத்தது.

- 'அறியாமை என்னும் பொய்கை'.

9. அரை மணி நேரமாக அவன் காத்துக் கொண்டிருக்கிறான். ஒரு பஸ் கூட வரவில்லை. பஸ் நிலையத்தில் நல்ல கூட்டம். இத்தனை பேரும் பஸ்ஸில் ஏறிப் போயாக வேண்டும். இந்தியாவில் வேறெதுவும் பொங்கி வழியாவிட்டாலும், மக்கள் கூட்டத்துக்குப் பஞ்சமே இல்லை. தனி மனிதனின் தனித்வம் கரைய வேண்டுமானால் தில்லியில் பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும்.

- 'பிரச்சினையின் நிறம்'.

10. 'ஸிந்தியா ஹவுஸ்' அருகே அவன் நின்ற போது, அவனை உராய்ந்தவாறு ஒரு பஸ் வந்து நின்றது. பஸ் தன்னை 'வா'என்று அழைக்கும் போது உட்காராமல் இருப்பது அதன் நட்பை அலட்சியம் செய்வது பொல. அவன் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான்.

- 'அவன் பெயர் நாகராஜன்'.

- தொடர்வேன்.

- அடுத்து ஜெயந்தன் படடைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

No comments: