Tuesday, November 16, 2004

நினைவுத் தடங்கள் - 25

எனது ஆரம்பக் கல்வி அரசு உதவி பெற்ற துவக்கப் பள்ளியில்தான் என்றாலும் அது பழைய திண்ணைப் பள்ளிக்கூட பாணியில் தான் நடைபெற்றது. அதன் நிர்வாகியான லிங்காயத் இன சிதம்பரம் சாமிநாத அய்யர், பள்ளிப் பாடத் திட்டத்துக்கு அப்பாற் பட்டு எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவைதான் இன்றும் நிலைத்திருக்கின்றன. அவரை நாங்கள் 'அய்யா' என்றுதான் சொல்லுவோம். அப்படித்தான் சொல்ல வேண்டும். 'சார்' என்றெல்லாம் சொல்லக் கூடாது. 'சாராவது, மோராவது' என்று அவர் கண்டிப்பார்.

அவர் ஆசிரியர் பயிற்சி பெற்றவரில்லை. பள்ளி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.30 வரை என்றால் அதற்கு முன்னும் பின்னும், எல்லா வகுப்புகளையும் அவரே பார்த்துக் கொள்வார். பள்ளி நேரத்தில் மற்ற பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வர்கள். அய்யா பார்த்துக் கொள்ளும் நேரம் தான் உருப்படியானது, கட்டுப்பாடும் ஒழுங்கும் கொண்டது. பிள்ளகள் பயந்து அமைதி காக்கும் நேரமும் அதுதான்.

அய்யாவின் நேரம் அதிகாலையிலேயே தொடங்கி விடும். எல்லோரும் பொழுது புலருமுன்னே எழுந்து, கைகால் சுத்தம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு, புத்தகம் எதுவுமில்லாமல் சிலேட்டு மட்டும் எடுத்துக் கொண்டு, பள்ளிக்கு வந்து விட வேண்டும். முதலில் வருபவன் 'வேத்தான் சீட்டு' என்கிற வரிசைப் பட்டியலை, சிலேட்டில் பதிவு செய்வான். முதலில் வந்தவன் 'வேத்து' - அடுத்து வருபவன் 'ஒன்று' எனப் பதிவாகும். எல்லோரும் கையெழுத்து தெரியுமுன்னரே வந்து சேர்வார்கள். அய்யா குடும்பம் இல்லாதவர் என்பதால் பள்ளியிலேயே - ஊர் மக்கள் கொடுத்த பொதுச் சாவடி- தங்கி இருப்பவர், சரியாக ஆறு மணிக்கு எழுந்து வெளியில் வருவார் - அக்குளில் மணிப்பிரம்புடன். அதுவரை மூச்சு விடுவதுகூடக் கேட்காதபடி எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும். முதலில் வந்த 'வேத்து'- பட்டியலை வாசிப்பான். வேத்துக்கு அடி கிடையாது. அதனால் முதலில் வரப் போட்டி போடுவோம். பிறகு, வந்த வரிசைப்படி நீட்டும் கரங்களில் வரிசை எண்படி பிரம்படி விழும். பிரம்படி என்றால் பலமாக இராது. கடைசி அடிக்கு முன் வரை லேசாகப் பிரம்பு ஆடி உள்ளங்கையைத் தட்டும். கடைசி அடி சற்றுப் பலமாக விழும். 'உஸ்' என்று கையை உதறி வாயால் ஊதிக் கொள்கிற மாதிரி இருக்கும். அடி வாங்குபவரது முகத்தையோ அது காட்டும் வேதனையையோ அய்யா கவனிப்பதில்லை. முதலாக வந்தவனைப் பாராட்டுவதோ, கடைசியாக வந்தவனைக் கண்டிப்பதோ இல்லை. இது பிள்ளைகள் விடியற்காலையில் சீக்கிரம் எழுந்திருக்கவும் அமைதியாக இருக்கவுமான பயிற்சியே தவிர வேறு கண்டிப்பு கிடையாது.

'வேத்தடி' முடிந்ததும் வீட்டுக்குத் திரும்ப வேண்டியதுதான். திரும்பு முன் எல்லோ ரும் உரத்த குரலில் ராகம் போட்டு ஒரு பாட்டு எங்களுக்கு முன் தலைமுறைகளில் பாடுவது உண்டு.

'காலமே எழுந்திருந்து
கைகால் சுத்தம் செய்து
கோலமாய் நீறும் பூசி
குழந்தைகள் பசியும் ஆற,
பாடமும் சொல்லிக் கொண்டோம்
'படியடி' ஏந்திக் கொண்டோம்
சீலமாய் அனுப்புமையா
திருவடி சரணம்"

- என்று தண்டமிட்டு சிலேட்டுடன் வீடு திரும்புவார்கள். பாட்டில் குறிப்பிட்டுள்ளபடி நிகழ்ச்சிகள் நடக்க வேண்டுமென்பதில்லை. விடியற்காலைப் பள்ளி முடிந்ததும் பாடியாக வேண்டிய சம்பிரதாயம் அது. போய்க் குளித்து. சாப்பிட்டு, சீக்கிரம் புத்தகங் களுடன் திரும்பவேண்டும். ஆனால் இதற்கு 'வேத்தடி' கிடையாதாகையால் ஓடிவர வேண்டியதில்லை. நிதானமாக வரலாம். ஆனால் ஒன்பது மணிக்குள் வரவேண்டும். அப்புறம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பொறுப்பு. அய்யா மாலைப் பள்ளி நேரம் முடிகிற வரை தலையிட மாட்டார். பிள்ளைகளுக்கு சுதந்திரமான நேரம் அது.

-மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

No comments: