Monday, November 29, 2004

களஞ்சியம் - 11: பாட்டுக்குப் பாட்டு

எனது களஞ்சியத்திலிருந்து - 11: பாட்டுக்குப் பாட்டு:

"பாட்டுக்குப் பாட்டெடுப்பேன்
பாட்டனாரைத் தோற்கடிப்பேன்
எதிர்ப் பாட்டுப் பாட வந்தா
ஏணி வச்சுப் பல்லுடைப்பேன்"

- என்று தெருக் கூத்தில், நடிக நடிகையர் தம் மீது வீசப்படும் பாட்டுக் கணைகளுக்கு அதே பாணியில் பதிலளிப்பது உண்டு. இலக்கியத்திலும் இது போன்று பாட்டுக்குப் பாட்டாலேயே பதிலளித்திருப்பதைக் காணலாம்.

கவிச் சக்கரவர்த்தி கம்பருக்கும், ஔவையாருக்கும் இப்படி ஒரு வாக்குவாதம் நடந்ததாக ஒரு கதை உண்டு. கம்பர் ஔவையை "ஒரு காலடீ நாலிலைப் பந்தலடி!" என்று சொல்லிப் பொருள் கேட்டதாகவும் அதை 'அடீ' என்று தன்னைக் கேலி செய்து பாடியதாகக் கொண்டு ஔவை 'அடா!' என்று வருமாறு அமைத்து எதிர்ப் பாட்டாக கீழ்க்கண்ட பாடலைப் பாடியதாகவும் சொல்கிறார்கள்.

கம்பர் கேட்டது ஒரு கொடியை அடியாகக் கொண்டுள்ளதும் நான்கு இலைகளைப் பந்தல் போல உடையதுமான ஆரைக் கீரையைப் பற்றியதாகும். ஔவை அதற்கு விடை தருவது போலப் பாடுகிறார்:

"எட்டேகால் லட்சணமே! எமனேறும் பரியே!
மட்டில் பெரியம்மை வாகனமே!- முட்டமேல்
கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே!
ஆரை அடா சொன்னாய் அடா!

( எட்டேகால்- தமிழ் எழுத்தில் 'எட்டு'க்கு 'அ' என்றும், 'கால்' அளவைக்கு 'வ' என்றும் குறியீடு உள்ளது. அதன் படி, எட்டேகால் லட்சணமே - அவ லட்சணமே! யமன் ஏறி வரும் எருமை மாடே! அழகு கெட்ட மூதேவி(பெரியம்மை)யின் வாகனமாகிய கழுதையே! முழுதும் மேலே கூரை இல்லாத குட்டிச் சுவரே! ராம தூதனாகிய குரங்கே! நீ சொன்னது ஆரைக்கீரையடா.)

இப்படியா கடுமையாக ஏசிக் கொள்வார்கள்? நமது நவீன எழுத்தாளர்களின் 'நாச்சியார்மட' ஏச்சு இதனிடம் பிச்சை வாங்க வேண்டும்!

கம்பரின் எதிரியான ஒட்டக்கூத்தருக்கும் இப்படி ஒரு ஏச்சு கிடைத்திருக்கிறது. குயவர் இனத்தைச் சேர்ந்த புலவர் ஒருவரை " நீ யாரடா?" என்று அகம்பாவத்தோடு கேட்க, அதற்குப் பதிலாக அவர் பாடிய பாடல் இது:

"மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி
யானை முன் வந்து எதிர்த்தவன் யாரடா?' - என்று கேட்டதற்கு

"கூனையும் குடமும் குண்டுசட்டியும்
பானையும் வனை அங்குசப் பையல் யான்" - என்று பதில் வந்தது.

- 'மோனை முதலியவை நன்கு அமைந்த முத்தமிழ்க் கவிதைகளான மும்மதங்களையும் பொழிகின்ற யானையைப் போன்ற எம்முன் வந்து நின்ற நீ யாரடா?' என்று ஒட்டக்கூத்தர் கேட்க, 'நான் சால், குடம், குண்டுசட்டி, பானை முதலிய மண் பாத்திரங்களைச் செய்யும் அழகிய குயவன் ஆவேன்' என்று பதில் கிடைத்தது. 'அங்குசம் - அழகிய குயவன், யானைய அடக்கும் அங்குசம் போன்றவன் என்றும் பொருள். கூனை - சால்.

நமது புதுமைப்பித்தனும் இப்படி ஒரு கவிஞரைச் சாட நேர்ந்தது சுவாரஸ்ய மானது.

'கிராம ஊழியன்' என்ற பத்திரிகையின் ஆண்டுமலரில் புதுமைப்பித்தன் 'ஓடாதீர்' என்றொரு பாடல் எழுதினார். 'வேளூர் வே.கந்தசாமிப் பிள்ளை' என்ற புனைபெயரில் அவர் எழுதிய முதல் பாட்டு இது. அதற்குச் சில மாதங்களுக்கு முன் காலமான எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் குடும்பத்துக்கு நிதி திரட்டிய தமிழர்களின் தாராள மனப்பான்மை நன்றியறிதலைக் கண்டெழுந்த வயிறெரிச்சலைத்தான், இந்தப்பாடலில்,

"ஐயா, நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளிம்பு கட்டி,
கல்லில் வடித்து
வையாதீர்;
"வானத்து அமரன்
வந்தான் காண்! வந்ததுபோல்
போனான்காண்" என்று
புலம்பாதீர்!
அத்தனையும் வேண்டாம்.
அடியேனை விட்டுவிடும்". - என்று எழுதினார்.

கலைஞனைச் சாக விட்டுவிட்டு, அவனது புகழுடம்பைத் தூக்கி வைத்துக் கூத்தாடும் ரசிகத்தனத்தைக் குத்திக் காட்ட எழுந்த 'வீராப்புத் தார்க்குச்சி'தான் இந்தப் பாடல்.

'ஓடாதீர்' என்ற பாடலைப் படித்த ஒரு எழுத்தாளர், 'மளிகைக் கடை மாணிக்கம் செட்டியார்' என்ற புனைபெயரில், 'ஓடும் ஓய், உம்மால் ஒரு மண்ணும் ஆகாது' என்று புதுமைப்பித்தன்பாணியிலேயே புதுமைப்பித்தன் பாட்டுக்கு ஒரு எதிர் வெட்டுப் பாடல் எழுதி 'கலாமோகினி' என்ற பத்திரிகையில் வெளியிட்டார். அந்தச் 'செட்டியாரு'க்கு மீண்டும் 'கிராம ஊழியன்' மூலம் புதுமைப்பித்தன் அளித்த பதில் இது:

'உருக்கமுள்ள வித்தகரே' என்ற தலைப்பிலான் அந்தப் பாடலில்,

'ஓடும், உழையும்
உழைத்து உருப்படியாய்
வாழுமென்று-
நம்மிடமே
வித்தாரமாக விளக்கும்
வினோதரே!
பொறுமையுடன் கேட்டிருந்து
புத்திமதி சொல்ல வந்த
புரவலரே
அத்தனைக்கும்
அடியோம் கட்டுப்பாடு!

குப்பைகூளம், செத்தை
கூட்டிவைத்த தூசு தும்பட்டம்,
அத்தனைக்கும்-
உப்பு, பருப்பு,
உளுத்தம்பயறு,
சித்தரத்தை, புளி,
சீமை இலந்தை
எனவே,
செப்பி விலை கூறும்
வாணிபத்துக்கு
ஒத்து வருமோ
உயர் கவிதை?

புத்தி சொல வந்தவர் போல்,
ஏனையா
வித்தாரக் கவிதை
கையாண்டீர்?
ஒத்து வராது
ஓட்டாண்டிப் பாட்டு;
உமக்கேன் இந்தப் பொல்லாப்பு!

விட்டுவிடும்
வேறே கணக்கிருந்தால்
பாரும்!
ஐந்தொகையில் புத்திதனைக்
கட்டியழும்
ஆசைக் கனவெழுப்பும்
அமிஞ்சிப் பையல்களின்
காசுக்குதவா
கவைக்குதவா,
கதையிலே
செல்லாதீர்!
புத்தி சொல வந்தவரே
புத்தி தடுமாறி விட்டால்
புத்தியெமக் கெப்படியோ
சித்திக்கும்!
வீணாம் கனவுகளை
எங்களுக்கே விட்டு
பெட்டியடிச் சொர்க்கத்தில்
புகுந்து விடும்!

.........................
........................

சொத்தைக் கதை எல்லாம் அளக்காதீர்
ஒற்றச்சிதையினிலே
உம்மெல்லோரையும்
வைத்து எரித்திட்டாலும்
வயிற்றெரிச்சல் தீராது! - என்று திட்டித் தீர்த்தார்!.

- மேலும் சொல்வேன்.

-வே.சபாநாயகம்.

No comments: