Thursday, February 24, 2005

நினைவுத் தடங்கள் - 30

எங்கள் ஐயா சாமினாத ஐயர் பிள்ளைகளுக்கு, படிப்பில் சிம்ம சொப்பனந்தான் என்றாலும் அவரிடம் கலைநெஞ்சம் இருந்தது. வெறும் எண்ணையும் எழுத்தையும் மட்டும் அவர் கற்பிக்கவில்லை. கோலாட்டம், நாடகம் போன்ற கலைகளையும் அவர் கற்பித்தார். சதா கடுகடுப்பும் ஒரு சின்னத் தப்பு செய்துவிட்டால் கூடப்பொறுக்காத முன்கோபமும் அவரிடம் இருந்ததை, ஊர்மக்கள் ஒரு குறை போலவும் அதுவே அவரது பெருமை போலவும் பேசினார்கள். 'பிரம்மச்சாரிதானே? பிள்ளை குட்டி பெற்றிருந்தால் தானே பிள்ளைங்க அருமை தெரியும்?' என்றும் 'இப்படியும் கண்டிப்பு இல்லேண்ணா படிப்பு எப்படி வரும்?' என்றும் பேசுவார்கள். படிப்புக்கிடையே அவர் விஜய தசமியை ஒட்டி பிள்ளைகளுக்ககு கோலாட்டம் கற்பிப்பதை மன இறுக்கத்து ஒரு வடிகால் என்று எண்ணி சிலாகிப்பார்கள். இந்த கடின நெந்சுக்குள்ளே எப்படி இத்தனை கலைப்பிரேமை என்று வியக்கத்தோன்றும். அன்றைய கால கட்டத்தில் அனேகமாக அவரைப் போன்ற திண்ணைப் பள்ளிக்கூட ஆசி¢ரியர்கள் எல்லோருமே இப்படி படிப்பின் நடுவே கோலாட்டம் போன்ற கிராமீயக் கலைகளையும் கற்பித்தே வந்திருக்கிறார்கள்.

ஆவணியில் - அதாவது செப்டம்பர் மாதத்தில் - தசரா விடுமுறை ஏதும் ஐயா விடுவதில்லை. தசராவுக்குப் பதில் இந்தக் கோலாட்டம்தான் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி தரும் காலம். விநாயகர் சதுர்த்தியை ஐயா விமர்சையாகவே பள்ளியில் கொண்டாடு வார். விநாயகர் சதுர்த்தி வருகிறதென்றால், அன்றிலிருந்து ஒரு மாதத்துக்குத் தினமும் சாயங்காலம் பிள்ளைகளுக்குக் குஷிதான். வாய்ப்பாடு, சதகம் ஒப்பிக்கிற பிடுங்கல் இருக்காது. கோலாட்டப் பயிற்சி, அன்று தொடங்கி சரஸ்வதி பூஜை வரை மாலையில் நடக்கும். அப்புறம் விஜயதசமி அன்று
எல்லோருடைய கோலாட்டக் கழிகளையும் கொலுவில் வைத்துப் படைத்து, அன்று முதல் வீடுவீடாய்ப் போய் கோலாட்டம் அடித்து, பிள்ளைகளுக்குப் பொரிகடலை, மிட்டாய், பழம் எல்லாம் தினமும் கிடைக்கும். ஐயாவுக்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒருரூபாய் வீதம் காணிக்கை கிடைக்கும்.

பதினெட்டாம் பெருக்கு, விநாயகர்சதுர்த்தி போன்ற விசேஷங்களுக்கு பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒரு அணாவோ இரண்டணாவோ ஐயா கேட்கிறபடி தர வேண்டும். அந்தப்பணத்தைக் கொண்டு ஐயா பூஜை சாமான்கள் வாங்கிப் படைப்பார். பதினெட் டாம் பெருக்கன்று ஐயா பிள்ளைகளை அருகில் ஓடும் வெள்ளாற்றுக்கு அழைத்துப் போவார். பிள்ளைகள் விநாயகர் அகவலை உரத்துப் பாடியபடி வரிசையாய்ப் போக வேண்டும். அப்போதெல்லாம் வெள்ளாற்றில் வற்றாத நீர் இருக்கும். நீர் ஓட்டத்தை ஒட்டி மணலில் பிள்ளையார் பிடித்து வைத்து காதோலை கருகமணி மஞ்சள்குங்கும் சார்த்தி பொரிகடலை, காப்பரிசி நைவேத்யம் வைத்து ஐயா படைப்பார். பூஜைமுடிந்து, எல்லொருக்கும் நைவேத்யம் வழங்கியதும் பழையபடி விநாயகர் அகவலைப் பாடியபடி பள்ளி திரும்ப வேண்டும்.

விநாயகர் சதுர்த்தியில் பிள்ளைகள் கொடுத்த காசில், ஐயா கொண்டைக் கடலை வாங்கி சுண்டல் செய்து நைவேத்யம் ஆனதும் எல்லோருக்கும் வினியோகிப்பார். பூஜையில் புதிய கோலாட்டக் கழிகளுக்கு மஞ்சள் மசேலென்று மஞ்சள் பூசி அவரவர் கழிகளுக்குத் தனி அடையாளமிட்டு விநாயகருக்கு முன்னே வைத்துப் படைப்பார்கள். பிறகு ஐயாவே தன் கையால் ஒவ்வொருவரது கோலாட்டக்கழிகளையும் அவரவர் அடையாளத்திற்கேற்ப எடுத்து வழங்குவார். உடனே முதல் அப்பியாசம் தொடங்கும். ஐயாவே பாட்டுப் பாடி, ஜால்ரா சப்திக்கத் தொடங்கி வைப்பார். அன்று முதல் தினமும் மாலையில் கோலாட்டப் பயிற்சி தொடங்கும். ஐயா தான் பயிற்சி தருவார். மற்ற ஆசிரியர்களுக்கு இதில் வேலையில்லை.

பலவித கோலாட்டங்கள்- பின்னல் கோலாட்டம், கப்பல் கோலாட்டம் என்று கால்ஜதியுடன் சொல்லித் தருவார். அருட்பா, அருணசலக்கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தன் நாடகக் கீர்த்தனைகள் என்று ஜதிக் கேற்றபடி ஐயா பாட, பிள்ளைகள் உடன் பாடி கோலாட்டக் கழிகளை அடித்து ஆட வேண்டும். கோலாட்டப் பயிற்சியில் தப்பு செய்தால் ஐயாவுக்குப் பயங்கர கோபம் வரும். தாளம் தப்பினாலும் கால்ஜதி மாறினாலும் அவரால் பொறுக்க முடியாது. தப்புச் செய்தவனது கோலாட்டக் கழியையே ஆயுதமாக்கி, ஒரு கழியை அவன் தலைமீது வைத்து மற்றக்கழியால் அதன்மீது அடிப்பார். 'விண்'ணென்று தலை நோவும். சமயத்தில் தன் கையிலிருக்கும் வெண்கல ஜால்ராவால் தப்புவதும் உண்டு. 'ணங் ணங்' கென்று மோதி அதுவும் வலி உயிர் போகும். ஆனால் பிள்ளைகளுக்கு சாதாரண நாளில் கிடைக்கிற தண்டனையை விட கோலாட்டத் தண்டனைப் பயிற்சி பெரிதாகப் படுவதில்லை. தொடர்கிற கோலாட்டமும் பாட்டும் அதை மறக்கச் செய்து விடும்.

தினசரி கோலாட்டப் பயிற்சி முடிந்ததும், 'வாழிப்பாடல்கள்' என்று எல்லோரும் மனப் படம் செய்ய வேண்டும். பிள்ளைகளின் வீடுவீடாகப் போய் கோலாட்டம் அடிக்குமுன் உள்ளூரில் உள்ள எல்லாக் கோயில்களுக்கும் போய் அடிக்க வேண்டும். முடித்ததும் அந்தந்த தெய்வத்துக்கும் என்று உள்ள வாழிப்பாடலைப் பாட வேண்டும். ஐயாவே ஒவ்வொரு கோயிலுக்கும் ஒருவர் என்று குறிப்பிட்டு எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்யச் செய்வார். வீடுகளில் அடிக்கும்போது அந்தந்த வீட்டுப் பிள்ளைகள் பாட, பொதுவான வாழிப்பாடல் உண்டு. தினமும் எல்லோரும் சேர்ந்து பாடி, பயிற்சி நடைபெறும்.

விநாயகசதுர்த்தி போலவே சரஸ்வதி பூஜைக்கும் பிள்ளைகளிடம் காசு வசூலித்துப் பூஜை நடைபெறும். சரஸ்வதி படம் கீழிறக்கப்பட்டு அதன்முன்னே பள்ளிக்கூட ரிஜிஸ்தர் கள், மைக்கூடு, பேனா, ரூல்தடி, தேசப்படங்கள் எல்லாம் சந்தனம் தெளிக்கப்பட்டு கொலுவில் வைக்கப்படும். எல்லோருடய கோலாட்டக் கழிகளும் கழுவி மஞ்சள்பூசப்பட்டு கொலுவில் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்படும். மறுநாள் விஜயதசமி அன்றும் பூஜை செய்த பிறகு கொலு பிரிக்கப்பட்டு முதலில் பள்ளிக்குப் பக்கத்திலேயே உள்ள பிள்ளை யார் கோயிலில் கோலாட்டம் தொடங்கும். எல்லாப் பிள்ளைகளும் புதிய வண்ண உடைகளில் அந்த நாட்களில் ஜொலிப்பார்கள். மறுநாளிலிருந்து வேளைக்கு ஒரு
கோயிலாக தினமும் கோலாட்டம் நடைபெறும். சிவன், பெருமாள் கோயிலுடன் மாரியம்மன், செல்லியம்மன், துரௌபதை அம்மன், ஐயனார் என்று எல்லா நத்த தேவதை கோயில்களும் அடித்து முடிக்க நாலு நாளாகும்.

பிறகு ஊர்ப்புரோகிதர் வீட்டில் - அந்த வீட்டுப் பிள்ளைகள் படித்தாலும் சரி, இல்லாவிட்டலும் சரி - முதலில் அடித்து விட்டுத் தான் மற்ற வீடுகளுக்கு, யார் பணம், தின்பண்டத்துடன் தயராக இருக்கிறார்களோ அவர்கள் வீடுகளுக்குப் போய் அடிப்பார்கள். வீட்டின் அந்தஸ்துக்கு ஏற்றபடி, கூடுதலாகவோ, குறைவாகவோ, அதிக அயிட்டங்களுடனோ நிகழ்ச்சிகள் இருக்கும். அதற்கேற்றாற் போல் சன்மானமும் ஐயாவுக்குக் கூடுதலாகக் கிடைக்கும். ஒருவீட்டில் அடித்து முடிந்ததும் அந்த வீட்டுப் பையன் அல்லது பெண் வாழி பாட, நிகழ்ச்சி முடிவுறும். பிறகு அந்த வீட்டுப் பையன் திண்ணையில் தயாராய் வைத்திருக்கிற - பழம், வெற்றிலைப் பாக்குடன் ஒருரூபாய் நாணயமும் கொண்ட தட்டை ஏந்தி வந்து ஐயாவிடம் நீட்டி வணங்குவான். ஐயா முகத்தில் மகிழ்ச்சி விகசிக்க, அவனை வாழ்த்தி ஆசி வழங்குவார். பிறகு எல்லோருக்கும் தின்பண்டம் வழங்கப்படும். தங்கள் வீட்டில் வித்தியாசமாகத் தரவேண்டும் என்பதில் எல்லாப் பிள்ளைகளும் ஆர்வம் காட்டுவார்கள். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் வேறு வேறு தின்பண்டங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்கும். வீடுகள் குறையக்குறைய ஐயோ முடியப்போகிறதே என்று பிள்ளைகளுக்குக் கிலேசம் உண்டாகும். கடைசி வீடு முடிந்ததும் எல்லோரும் கனத்த இதயத்தோடு பள்ளி திரும்பு வார்கள். மறுநாள் முதல் வழக்கமான சிறை வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமே!

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

Friday, February 18, 2005

உவமைகள் வர்ணனைகள் - 35

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 35:

ராஜம் க்¢ருஷ்ணன் படைப்புகளிலிருந்து:

1. அவளுடைய பசிகளுக்கு மானம், மரியாதை, நேர்மை, நாணயம் என்ற ஒன்றன் மேல் ஒன்றான உறைகள் உண்டு. வெங்காயத் தோலிகளைப் போல் ஒன்றன்மேல் ஒன்றாக உறைகளைப் போட்டுப் பச்சையான பசிகள் என்ற குருத்துக்களை மூடி வைத்துக் கொள்ளவேண்டும் என்று அவளுடைய குஞ்சுகளுக்குக் கற்பிக்கப் போராடுகிறாள்.

- 'பூந்தோட்டமும் குடிசைகளும்' குறுநாவலில்.

2. கண்கள் எங்கோ பாதாளத்தில் கிடக்கின்றன. குச்சி குச்சியாக, நரைத்து ஒடிந்து சிலும்பிய கூந்தல் - சகிக்காத இரட்டைப் பின்னல் - பிழிந்த எலுமிச்சை மூடி போல ரத்தம் சப்பிய முகத்தில் மூக்குத் தொளையிலும், காதுத் தொளையிலும் ஈர்க்குத் துண்டுகள் நீட்டிக்
கொண்டிருகின்றன. எலும்பு முட்டிய கழுத்தில் தொள தொளப்பான ஆஸ்பத்திரிச் சட்டைக்கு மேல் பிசுக்கேறிக் கறுத்த தாலிச் சரடு.

- 'பவுடர்' குறுநாவலில்.

3. அவளைப் பார்த்ததும் திகைத்தாள் லட்சுமி. பிரம்மதேவன் மனம் போனபடி கை மண்ணை உருட்டி அப்பி, ஒரு நவீனபாணி சிற்பம் உருவாக்கினாற் போல கரணை கரணையாக, கோர்வை இல்லாத அவலங்கள். இரட்டை மண்டையில் நரையில்லை; ஆனால் மண்டை தெரியும் கூந்தல். நெற்றியில் பெரிதாக கருஞ்சிவப்பு ஒட்டுப் பொட்டு. இந்தக் கருப்பு முகத்துக்கு இவ்வளவுதான் அழகு செய்ய முடியும் என்றது வெள்ளைக்கல் தோடு; பேசரி. கழுத்தில் பருமனாக விழித்துப் பார்க்கும் தாலி........... இவளைக் கல்யாணம் செய்து கொண்டவன் யாரோ!

- 'நேத்திர தரிசனம்' கதையில்.

4. ஒரு பாட்டம் அடித்து மழை ஓய்ந்தாற்போல் இருக்கிறது. தாயின் முகம் இறுகிப்போகிறது. விக்கித்துப் போய் சொல் எழும்பாமல், பிடித்து வைத்த மண் குன்றுபோல் உட்கார்ந்திருக்கிறாள். வளையங்கள், சங்கிலி வளையங்கள்....ஒன்றுக்கொன்று மாட்டிக் கொண்டு திருப்ப முடியாமல் கழுத்தைப் பிணிக்கின்றன. திரும்ப முடியாது; திரும்பிப் பார்க்கவும் மறந்து போகிறது. இந்தச் சங்கிலிக் கணுக்களை யார்,
எப்போது துண்டித்து......... தாயின் தலை துவண்டு சாய்கிறது.

- 'கண்ணுக்குத் தெரியாத சங்கிலிக் கணுக்கள்'.

5. இந்த நெருக்கங்களில் டீச்சருக்கு ஒரே பசுமையாக இருந்தது அந்த மாமரம்தான். அது யார் எப்படிப் போனாலும் பூத்தது. தை, மாசி வந்து விட்டால் பூரித்துப் புது மணப்பெண் கோலம் கொள்ளும். பழைய ஒல்லிக் குமரியா அது? இப்போது கிளை களை நான்கு திசையிலும் பரப்பி, பின்புறத்து மாட்டுக் கொட்டகையிலும் ஆக்கிரமித்திருந்தது. அது பிஞ்சுகள் விட்டு, காய்த்து, கனக்கக் கனக்க நகைகள் குலுங்க மஞ்சள் பூச்சுடன் திகழும் பேரிளம் பெண்போல் காட்சி அளிக்கும் காலத்தில் பள்ளி மூடி விடுவார்கள்.

- 'டீச்சரும் மாமரமும்'.

6. ஈர்க்கு மலர்ந்தாற் போன்று,அது வயசுக்கு வந்துவிட்டது. வயசை யார் கண்டார்கள்? மழை கொட்டிய நாள் ஒன்றில் அது பிறந்ததுதான் நினைவு. பூ மலர்ந்து விட்டது. மூத்தார் மக்களும் ஓரகத்தியும் மைக்கு செட்டு வைத்து, பந்தல் சோடித்து, குறையில்லாமல் கொண்டாடினார்கள்.

- 'பக்தி'.

7. வாழ்க்கையின் இடிபாடுகளில் அவலாய் நசுங்கினாற்போன்ற உடல். வெயிலில் காய்ந்து கருகிய முகம். ஏதேதோ பொன்னாபரணக் கனவுகளுடன் வளர்த்து விடப்பட்ட காதுகள் வீண் வீண் என்று வயோதிகத்தைத் தம்பட்டம் அடித்துக் கொண்டு கிழிந்து தொங்குகின்றன.

- 'அவல்காரி'.

8. மனித இதயங்களின் ஒட்டுறவின் தேனைச் சுவைத்த அவள் இப்போது, பொருள் மதிப்பின் உறவுகளில் கசப்பைச் சுவைக்க வேண்டியிருக்கிறது.

- 'தலைமுறைச் சங்கிலிகள்'.

9. ஆனால்.......கட்டிலில் படுத்திருக்கும் இந்தக் கணவன்...... மலையாக ஒரு பாம்பு கழுத்தில் ஆரமாக வளைந்தாற்போல் இருக்கிறது. இவளறியாமலே அது கழுத்துக்கு வந்திருக்கிறது. அது மலைப்பாம்பாகப் பருத்துக் கனத்து இவள் கழுத்தை நெரிக்கு
முன்.........

- 'ஆரங்கள்'.

10. 'நாட்டுப்புறக்கலை' அரங்கேறுகிறது. கறுத்த முகங்களில் அடர்ந்த கறுப்புப் புருவங்களும் கண்களும் செயற்கையாய் மிகைப் படுத்தப்பட்ட பின்னணியில், பவுடர் பூச்சுக்களில் ஜிகினாத் தூள்கள் பளிச்சிடுகின்றன. உதடுகளும் கன்னங்- களும் பளீர் ரோஸ் சிவப்பு. மார்பகங்களில் மட்டும் ஜிகினாத் தாமரைகள் ஒட்டி 'மானம்' மறைக்க, இடையில் அதே ஜிகினாச் சல்லடம் விளங்க முப்பத்தைந்துக்குக் குறையாத நான்கு உடல்களில் வயிற்றுச் சதைகள் குலுங்க, கரகமென்ற பெயரில் தலைகளில் ஏறிய வண்ணப் பிளாஸ்டிக் ஜிகினா அலங்காரங்கள் சரிந்தும் சாய்ந்தும் ரசிகர்களை மகிழ்விக்க, 'நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சி' தொடங்கி விட்டது.

- 'விழிப்புணர்வு'.

- மேலும் வரும்.

- அடுத்து வ.ரா படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Thursday, February 10, 2005

களஞ்சியம்-16

எனது களஞ்சியத்திலிருந்து - 16: விவேகசிந்தாமணி விருந்து - 5:

கூடாதவையும் தகாதவையும்:

வாழ்க்கைக்கு ஒவ்வாதவை, கூடாதவை, தகாதவை, துன்பம் தருபவைகளைக் குறிப்பிட்டு அவற்றை விலக்க அறிவுறுத்துகிறது விவேகசிந்தாமணி.

'செய்யக் கூடாதவை' எவை என்று குறிப்பிடும் பாடல்:

தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க! தன் உடம்பின்
ஊன் கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க! - வான் கவிந்த
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யொடு இடைமிடைந்த சொல்!

தக்க சான்றோர்க்கு உதவுதலால் தனக்கு இழப்பு ஏற்பட்டு கெடுதல் நேரும் என்றாலும் அதைத் தவிர்ப்பதால் தனக்கு நன்மை பெற வேண்டி அவர்க்குத் தீமை செய்ய எண்ணுதல் கூடாது. பட்டினி கிடந்து தன் உடல் அழிய நேரினும் கீழ்மைப் பண்புகளை உடைய உண்ணத்தகாதவர் கையிலிருந்து உணவைப் பெற்று உண்ணுதல் கூடாது. வையகமே கிடைக்கும் என்றாலும் பொய்யுடன் கூடிய சொல்லைச் சொல்லு
தல் கூடாது.

சமூகத்தில் பகைக்கக் கூடாதவர் யார் யார் என்று ஒரு பாடல் பட்டியலிடுகிறது.

மன்னவன், கணக்கன், பார்ப்பான்,
வலுவுள்ளோன், மந்திரவாதி,
பொன்னுளவன், குருக்கள்,
புலவன், பண்டிதன், அமைச்சன்,
அன்னம் செய்திடுவோன், எங்கும்
அடங்காத துட்டனாம் இப்
பன்னிரு பேரொடு என்றும்
பகைகன விலும்கூ டாதே.

நாடாளுபவன், ஊர்க் கணக்கன், அந்தணன், உடல் வலிமையுடையவன், மந்திரவாதி, மிக்க செல்வம் உடையவன், ஆசிரியன், புலவன், மருத்துவன், அமைச்சன், சமையல் செய்பவன், எங்கும் அடங்காத பொல்லாதவன், என்கிற இந்தப் பன்னிரெண்டு பேர்களுடன் பகை கொள்வது யாருக்கும் எப்போதும் கனவிலும் ஆகாததாகும்.

மேற்சொன்னவர்களை விரோதித்துக் கொண்டால் என்ன ஆகும் என்பதை நாம் அனைவரும் அறிவ்வோம் தானே? எனினும் எச்சரிக்கிறது விவேக சிந்தாமணி

எதெல்லாம் செய்யாதவன் எப்படிக் கருதப்படுவான் என்றும் ஒரு பாடல் சொல்லுகிறது:

கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்;
கணக்கறிந்து பேசாதான் கசடன் ஆகும்;
ஒர் தொழிலும் இல்லாதான் முகடி ஆகும்;
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்;
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலப்
பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும்.
பரிவுசொலித் தழுவினவன் பசப்பன் ஆகும்;
பசிப்பவர்க்கு இட்டுண்ணான் பாவியாமே.

மதிக்கத் தக்க நல்ல நூல்களைக் கல்லாதவன் மூடன். அளவறிந்து பேசாதவன் குற்றமுடையவன். ஒரு தொழிலையும் செய்யாதிருப்பவன் மூதேவி. ஒரு செயலுக்கும் பயன் படாதவன் சோம்பேறி. அறிவுடையோர் முன்பாக மரம் போல நின்று அவரை வணங்காதிருப்பவன் பேயன்.
உள்ளத்தில் உண்மையான அன்பில்லாமல் ஆனால் அன்புடையவன் போலக் காட்டித் தழுவுபவன் பசப்பல்காரன். பசியுள்ளவருக்குக் கொடுத்து உண்ணாதவன் பாவியாவான்.

( கசடு - குற்றம்; முகடி - மூத்தவள், மூதேவி; )

எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லுதல் கூடாது. அப்படிச் சொல்வதால் அவற்றின் மதிப்பு கெடும். அவை என்னென்ன என்பதைக் கீழ்க் கண்ட பாடல் சொல்கிறது:

குரு உபதேசம், மாதர்
கூடிய இன்பம், தன்பால்
மருவிய நியாயம், கல்வி,
வயதுறச் செய்த தர்மம்,
அரிய மந்திரம், விசாரம்,
ஆண்மை இங்கு இவைகள் எல்லாம்,
ஒருவரும் தெரிய ஒண்ணாது
உரைத்திடின் அழிந்துபோமே.

ஒருவனுக்கு மறைவாக ஆசிரியர் செய்த உபதேசம், மாதரிடத்து அனுபவித்த இன்பம், தன் மனதில் பொருந்திய நியாயம், தான் கற்ற கல்வி, தன்னால் செய்யப்பட்ட தர்மம், அரியதான மந்திரம், தனது கவலை, தனது வல்லமை என்ற இவையெல்லாம் வேறு ஒருவருக்கும் தெரியச்
சொல்லுதல் கூடாது. சொன்னால் அவற்றின் மதிப்பு அழிந்துபோகும்.

( விசாரம் - கவலை )

இவ்வாறு இன்னும் பல அரிய அற்¢வுரைகளையும் எளிய நடையில் விவேக சிந்தாமணி தருகிறது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.