Monday, August 12, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து............30 - வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’




    எதுவும் சூனயத்தில் பிறப்பதில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை. எந்தப் படைப்பும் படைத்தவனிடமிருந்து பெற்றதை உடன் எடுத்துத்தான் வருகிறது. படைத்தவனின் குணத்தை அது பிரதிபலிக்கும். அல்லது அவன் எண்ணத்தைப் பிரதிபலிக்கும். படைத்தவனும், அவன் எண்ணங்களும் குணங்களும் மறுபடியும் சூன்யத்தில் பிறந்ததில்லை. அதற்கும் முந்திய தடங்களைக் காட்டும் சங்கிலித்தொடர் பின்னோக்கிப் போய்க்கொண்டே இருக்கும். அதுபோலத்தான் படைப்பின் முன்னோக்கிய வாழ்வும்.. தான் ஒரு வரலாற்றோடு வந்தாலும், வந்தபின் தனித்து விடப்பட்டு அவ்வக்காலத்து சூழலுக்கு ஏற்ப இன்னொரு வரலாற்றை அது உருவாக்கிக்கொண்டே போகிறது. சூன்யத்தில் பிறப்பதுமில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை.

     இப்படிக் சொல்லிக்கொண்டே போனால், இன்றைய அரசியல்வாதிகளின் வாய்ப்பந்தல் போலாகிவிடும் அபாயம் உண்டு. குறள் எழுதக் காரணமான வள்ளுவனின் நிர்ப்பந்தங்கள் கட்டாயம் உண்டு. நாம் பலவாறாக ஆராய்ந்து தற்காலிகமாக யூகித்துப் பலவற்றைச் சொல்லாம். அதுபோக அதன் அர்த்தங்கள் எனவும் நிறைய நம் அப்போதைய தேவைகளுக்கு ஏற்ப பல சொல்வோம்.. வள்ளுவன் எழுத நேர்ந்த நிர்ப்பந்தங்களும் அவன் ஒவ்வொரு குறளுக்கும் கொண்ட அர்த்தங்களும், இடைப்பட்ட நூற்றாண்டுகள் பலவற்றின் நீட்சியில் அதற்குத் தரப்படும் அர்த்தங்களும் இன்று வள்ளுவனும் குறளும் அர்த்தம் என்னவாக இருந்தாலும் பெறும் பயன்பாடும் வள்ளுவனாலோ குறளாலோ தீர்மானிக்கப்படவில்லை. நம் தேவைகளால் தீர்மானிக்கப் படுகின்றன. அப்படித்தான் எல்லாமே. அவன் ஏட்டுச்சுவடியில் எழுதும்போது அவனுக்கு இருந்த தேவையும், இன்று பேருந்துகளில் நாம் காணும் குறள் எழுத நேர்ந்த தேவையும் ஒன்றாக இருக்குமா?

       என்னால் எதையும் அதன் சூன்யத்தில் பார்க்க, படிக்க. புரிந்து கொள்ள முடிவதில்லை. வார்த்தை விழும்போதே அதன் குரலுக்கு முன்னும் பின்னு முள்ளதெல்லாம் அந்த வார்த்தைகளோடு சேர்ந்து விஸ்வரூபம் கொண்டுதான் என் காதில் அது விழுகிறது. கேட்கும்போதும், படிக்கும்போதும், எந்த ஒரு எழுத்தையும் அதை எழுதியவனிடமிருந்து அவன் சூழலிடருந்தும், அந்த எழுத்து பின் சேரும் சூழலிடமிருந்தும் பிய்த்துப் பார்க்க முடிவதில்லை. அதன் பொய்மையும் உண்மையும் தெரியாது போய்விடுவதில்லை. மறுபடியும் எந்த எழுத்தையும் படிக்கும்போதும் அதை எழுதியவனைப் பற்றி அவன் இதுகாறும் எழுதியவற்றிலிருந்தும் அவனைப் பற்றி, வாழ்க்கை பற்றி அறிந்தவற்றிலிருந்தும் பெற்ற சேமிப்பு அத்தனையோடும்தான் அந்த எழுத்து எனக்கு அர்த்தம் பெறுகிறது. அந்த எழுத்தாளனின் ஆளுமை பற்றிய பிம்பம் இப்படி உருவாகிக்கொண்டே போகிறது. அந்த பிம்பத்தின் இதுவரைய சேர்க்கை முழுதும், இப்போது நான் படிக்கும் அவனது எழுத்துக்கு அர்த்தம் தந்து கொண்டிருக்கிறது. எழுதியது பேசியது மட்டுமல்ல, அவன் சொல்ல விரும்பாத  நிர்ப்பந்தங்களின் மௌனங்களும் பேசுகின்றன, அர்த்தம் கொள்கின்றன. பல பேச்சுக்களில், எழுத்துக்களில் பொய்மை பளிச்சிடுவதை உடனே உணர முடிகிறது. அதற்கான காரணங்களை நான் அடுக்கலாம். உணர வைக்கலாம்.. ஆனால் நிரூபிக்க முடியாது.


     அதெல்லாம் இருக்கட்டும். எந்தப் படைப்பும் என்னனை எவ்வாறு பாதிக்கிறது, நான் அவற்றை  எப்படி அர்த்தப்படுத்திக் கொள்கிறேன் என்பதை சொல்லத்தான் எழுதினேன். படிக்கும்போது என் முன் நிற்பது அதுவரை நான் அந்தப் படைப்பாளியின் அறிந்த ஆளுமை முழுதும். அந்த ஆளுமை உருவாகிக் கொண்டே இருப்பது. நீங்கள் ஏன் ராஜ்கபூரின் அந்தப் படத்துக்கும் பாட மறுத்தீர்கள்? என்று மிகப் பெரிய அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டீர்களே என்ற அர்த்ததில் கேட்ட கேள்விக்கு எனக்கு அந்தப் பாடலைப் பாடப் பிடிக்கவில்லை என்று லதா மங்கேஷ்கர் பதில் சொன்னார். அவர் மறுத்தது மட்டுமல்ல அவரது ஆளுமை பற்றிய உண்மையையும், அந்தப் பாடல், ராஜ்கபூரின் படம் பற்றிய எல்லா உண்மைகளையும் அந்தப் பதில் சொன்னது. இன்னமும் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து, அது ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர் இருவர் ஆளுமையையும் என் முன் நிறுத்தியது அந்தப் பதில். எந்த அரசியல்வாதியின் பேச்சிலும் உள்ள உண்மையும் பொய்யும் பளிச்சிடவில்லையா உடனுக்குடன். அப்படிப் பளிச்சிடச் செய்வது எது? என் மூச்சில் தமிழிருக்கும் என்ற பாடலைக் கேட்டிருக்கிறோம். சரி த்மிழ் இருக்கிறதா? இருந்ததா? அது எந்த ஆளுமையைச் சேர்ந்தது? இப்படித்தான் எல்லாமே.

     இலக்கியத்தின் அழகு அது பேசும் உண்மையிலிருந்து பிறக்கிற.து. திட்டமிட்ட வடிவங்களால், சொல் அலங்காரங்களல் அல்ல. அந்த உண்மையையும் அதன் பின்னிருக்கும் ஆளுமையையும் உணரத்தான் முடியும்.

     இங்கு நான் சந்ததித்த ஆளுமைகள். இன்னும் சிலர். படித்தும், கண்டும் பழகியும் அறிந்த ஆளுமைகள்.

வெங்கட்சாமிநாதன்
19-11-06.

Monday, August 05, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து............29 - ஞானக்கூத்தன் – ‘கவிதைகளுக்காக’.



டினமான காரியங்களுள் ஒன்று படிப்பபது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள். முற்றிலும் தப்பித்துக்கொள்ள முடியாதபடி நவீன மனிதனின் வாழ்க்கை அமைந்துவிட்டது.. எனவே சிலவற்றைப் படித்தும் வேறு சிலவற்றைப் படிக்காமலும் விட மனிதன் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் எழுதுகிறவர்களுக்குப் பெரிய நஷ்டம். நாவல் படிக்கிறவர்கள் கவிதை படிப்பதை விட்டு விடுகிறார்கள். கவிதை படிபவர்கள் நாவல் படிப்பதாகத் தெரியவில்லை. பலர் பழைய இலக்கியங்களை முற்றிலும் தவிர்த்து விடுகிறார்கள். தமிழாசிரியர்கள் நவீன இலக்கியங்களைப் படிப்பதில்லை. படிப்பவர்கள் அதைக் கேலி செய்ய இடம் தரும் எழுத்துக்களைப் படிக்கிறார்கள். இப்படி வாசகர்களின் கடைத்தெரு வீணாகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் படிக்கிறார்களோ இல்லையோ வெளியிடும் வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ எழுதுகிறவர்கள் இருந்து வருகிறார்கள்.

     இந்த நிலையில் எழுதுங்கள் வெளியிடுகிறேன் என்றால் கசக்கவா செய்யும்? திரு.கி.கஸ்தூரிரங்கன் எழுதச் சொன்னார். எழுத வருகிறதா என்று பார்க்கும் பொருட்டு எழுதினேன். எழுத வருகிறது என்று தெரிகிறது. சிரமமில்லாமல் படிக்க வசதியாகச் சிறிய கட்டுரைகள் இவை., கருத்துக்களும் மூச்சுத்திணறச் செய்யாமல் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளன.

     கணையாழி திரு.கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு நன்றி.

ஞானக்கூத்தன்
சென்னை -5 
  27-3-96

Tuesday, July 23, 2013

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………28 - ஆ.மாதவன் – ‘மோக பல்லவி’




Share
கடற்கரையில ஒரு இலக்கிய உரையாடலின்போது, ‘புதிய அலைகள்’ என்று இலக்கியத்தில் இப்பொழுது ஒரு சொல் அடிபடுவது பற்றி சர்ச்சை எழுந்தது ‘அலைகளில் புதிசு உண்டா?’ என்று கேட்டேன் நான். ‘’அலைகளில் ஏது புதிது, கரைகள் வேண்டுமானால் புதிது புதிதாகத் தோன்றலாம்” என்றார் நண்பர். .அலையா, கரையா? என்ற சர்ச்சையை ஒதுக்கிவிட்டு, பொதுவாக இன்று பெரிய பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் கதைகளைப் பார்த்தோமானால் இலக்கியத் தரம் என்ற ரசமட்டத்தில் துல்லியமாக அடங்குவது மிக அரிது.

ஆனால் இன்று சிறுகதைகளில் ஒரு சோதனைக் காலம் அரும்பி தலைதூக்கி நிற்கிறது. என்பது மட்டும் உண்மை. எனினும் இன்று சிறுகதை உலகம் சற்றே பரபரப்பு உடையதாக அமைந்துள்ளது. இந்த காலகட்டத்தின் அத்தனை பிரதிபலிப்பையும் கண்ணாடியாகத் துலக்கும் கதை இலக்கியம் இனிமேல்தான் பிறக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன்.
வரப்போகிற அந்த நல்ல காலத்தை நினைவிலிருத்திக் கொண்டு ‘மோக பல்லவி’ மூலம் என் பத்தாண்டு காலச் சிறுகதைகள் சிலவற்றை வாசகர் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஆ.மாதவன்

திருவனந்தபுரம்.
19-6-1975.

Tuesday, July 16, 2013

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………27 - சி.சு. செல்லப்பா – ‘ நீ இன்று இருந்தால்’


Share
நான் காந்தி காலத்தோடு ஒட்டி வளர்ந்தவன். ஏன், செயலும் சிந்தனையும் அந்த அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பியவன், கொஞ்சம் முயற்சி செய்தவனும் கூட. நான் படைப்பாளியாக ஆன பிறகும் என் வாழ்க்கைப் பார்வை காந்தீய ஈடுபாடு கொண்டதாகவே இருந்து வருகிறது. என் இலக்கிய முயற்சிகளிலும் அந்தச் செல்வாக்கு அங்கங்கே என்னை வெளிக்காட்டி இருக்கிறது.

உலக இலக்கியங்களைப் புரட்டிப் பார்த்தால் நெப்போலியன் காலம், பிரஞ்சுப்புரட்சி நாட்கள், ரஷ்யப் புரட்சி ஆண்டு,, ஸ்பானிய உள் நாட்டுப் போராட்ட காலம், அமெரிக்க உள் நாட்டுப் போராட்ட காலம் போன்றவை சம்பந்தமாக எல்லாம் நாவல்கள், நாடகங்கள், கதைகள், கவிதைகள்,  இயற்றப் பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் நம் தமிழ் இலக்கியத்திலோ கல்கி ஆரம்பித்து வைத்த சேர, சோழ பாண்டிய, பல்லவ காலத்து கற்பித நிலையைத்தாண்டி வரவில்லை. ஏன் கிழக்கு இந்திய கம்பனி நாட்களுக்குக்கூட வரவில்லை. அப்படி இருக்க காந்தி காலத்துக்கு எப்போது வரப்போகிறோம் என்றுதான் கேட்டுக்கொள்ளவேண்டி இருந்தது. ஏதோ அத்திப்பூத்ததாக சில சிறுகதைகளும், ஒரு சில நாவல்களும்.தான் இதுவரை வெளியாகி இருப்பது. கவிதைகளும் அதே போலத்தான்.

அந்தகாலத்தை சாட்சிக்காரனாக நின்று பார்க்கும் ஒரு பார்வை, ஒதுங்கி நின்று விருப்பு வெறுப்பு இன்றி, சாதனையை உணர்ந்து, அதை மதிப்பிட்டுப் பார்க்கும் சக்தியும் படைப்புக்கு அதைப்ப யன்படுத்தும் திறமையும் இன்னும் போதிய அளவு ஏற்படாததே காரணம் என்று தோன்றுகிறது.

என் பதினைந்து காந்தி கால கதைகளுக்குப்பிறகு ஒரு காந்தியுகநாவல் எழுத திட்டமிட்டு ஆரம்பித்தேன். முயல் கதையாக  வேகமாக ஓடி ஒரு கட்டத்தில் நின்று இருக்கிறது. அதுக்குள் ‘ நீ இன்று இருந்தால்’ எனக்குள் உருவானது.

‘நீ இன்று இருந்தால்’ குறுங்காவியத்தை நான் ஒரு வாழ்க்கை வரலாற்றுக் காவியமாக ஆக்க விரும்பவில்லை. ஆன்மீகத்தையும் அரசியலையும் பிணைத்து ஒரு  தத்துவ அடிப்படையில் ஒரு தேசத்துக்கு, சமூதாயத்துக்கு விமோசனம் ஏற்படச்செய்தது மட்டுமல்ல, மானிட ஜாதிக்கே விமோசனமாக  உதாரணமாக இருந்து வழிகாட்டிய ஒரு மாமனிதனின் தேஜஸை காட்டுவதுதான் என் நோக்கம். அதோடு அந்த அவதார புருஷன் வாழ்ந்த அடிச்சுவடே இல்லாது போய்விடுமோ என்ற மனப் புழுக்கத்தினிடையே ஏக்கத்தை வெளியிடும் மனக்குரலாகவும் பேசுகிறது.

இந்தக் குறுங்காவியம் வெளியாகி சில மாதங்கள் ஆன பிறகு சிறந்த ரஷ்யக் கவி மயகாவ்ஸ்கியின் 2500 வரிகள் கொண்ட ‘லெனின்’ என்ற நீண்ட கவிதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

‘லெனினின் கதையை
நான் ஆரம்பிக்க வேண்டிய
நேரம் வந்து விட்டது-
ஆனால் துக்கம்
இனிமேல் கிடையாது
என்பதல்ல’

என்று ஆரம்பித்து,

‘சரித்திரம் தெரியவந்த
எல்லா போர்களிலும்
தலை சிறந்த போர் இது’

என்ற முடியுமுன் ரஷ்ய புரட்சி சரித்திரத்தையும் லெனின் சாதனையையும் பிணைத்து தன் பார்வையில் எழுதி இருக்கிறார். அவர் பாணி வேறு, என் பாணிவேறு என்றாலும் அந்த இரண்டு ஆளுமைகளும் வெளித்தெரிய வந்திருக்கிறதாகவே படுகிறது.

    இந்தக்குறுங்காவியம் 1968ல் மகாத்மா காந்தியின் சத ஆண்டுக்கு முந்தின ஆண்டில எழுதப்பட்டது.. ‘எழுத்து’வில் வெளியானது. இந்தக்கவிதை நெடுகிலும் அங்கங்கே சில தமிழ் கவிகளின் வரிகள் பல என் வரிகளோடு இழையும்படி சேர்க்கப் பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் கவி டி.எஸ். இலியட் தன் ‘பாழ் நிலம்’ கவிதையில் கையாண்டுள்ள ஒரு உத்தியை பின்பற்றியதாகும். அந்த வரிகள் என் கவிதைக்கு மேலும் நயமும் சத்தும் ஏற்றுகின்றன. கவிதை வாசகர்கள் இதை படிக்கும்போது உணரமுடியும்.

சி.சு.செல்லப்பா
சென்னை
21-6-74.

Monday, July 08, 2013

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………26 - ஜெயமோகன் – ‘புதிய காலம்’


Share

             தமிழில் சென்ற பத்தாண்டுகளில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க ஆக்கங்களைபற்றியும ஆசிரியர்களைப் பற்றியும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. எழுத்தாளர்கள் சமகால எழுத்தாளர்களைப் பற்றி விமர்சனம் செய்வது சிக்கலானது. அதிலும் அவர்கள் நம்முடைய அதே வயதை ஒட்டியவர்கள் என்றால் இன்னும் சிக்கல். அவர்கள் ஏதோ ஒருவகையில் நம்முடன் தங்களை ஒப்பிட்டபடியே இருக்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ அந்த ஒப்பீட்டின் பகுதியாகவே இந்த விமர்சனங்கள் ஆகிவிடும்.

              ஆனாலும் எழுதத் தூண்டிய காரணங்கள் சில உண்டு. சமகாலத்தில் வந்த பல முக்கிய ஆக்கங்கள் எளிய மதிப்புரைகள் வழியாகத் தாண்டிச் செல்லப்பட்டன. அவற்றின் மீது விரிவான விமர்சன ஆராய்ச்சி நிகழவே இல்லை. இது பல வகையில் சமகால வாசிப்புச் சூழ்நிலையைப் பாதிக்கிறது. சமகாலப் படைப்புகளை உள்வாங்கிக் கொள்ளாமல் நம்மால் இலக்கிய விவாதங்களை நிகழ்த்த முடியாது.

             இந்த விமர்சனங்களில் ஒரு பொது அம்சம் உண்டு. நான் என்னை மிகவும் கவர்ந்த ஆக்கங்களைப்பற்றி மட்டுமே பேசி இருக்கிறேன். பிடிக்காத, கவராத ஆக்கங்களைபற்றி ஏதும் சொல்லவில்லை. அவை காலத்தை வென்று வருமென்றால் பார்க்கலாம். இக்கட்டுரைகளில்.

                இவ்வாக்கங்கங்களின் சில குறைகள் சுட்டப்பட்டிருக்கலாம். அவைகள் குறைகள் என்றல்ல, அவ்வாசிரியர்களில் இயல்புகள் என்றே பொருள் படவேண்டும். ஓர் ஆசிரியனில் ஓர் அம்சம் இல்லை அல்லது பலவீனமாக இருக்கிறது என்றால் அது அவனது அகத்துக்குள் செல்வதற்கான ஒரு வழித்திறப்பாகவே அமையவேண்டும்.

               உதாரணமமாக தஸ்தயேவ்ஸ்கி ஒருபோதும் புறவயமான யதார்த்தங்களில் தன் புனைவை ஊன்றுவதில்லை. ஏனென்றால் அவர் கதைகளில் ஒவ்வொரு கணமும் மனம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த அகத்தின் தன்னிச்சையான நகர்வை காட்டகூடிய ஒன்றே அவர் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தைச் சொல்லும் விதம்.

          இந்தக்கட்டுரைகளில் எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகரன். போன்று சமகாலத்து முக்கியமான இலக்கிய ஆசிரியர்களும் ஒரே நாவல் மூலம் கணிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். ஒரே நூலில் இவர்களது ஆக்கங்கள்பற்றிய அவதானிப்புகள் தொகுக்கப்படும்போது வாசகர்களுக்கு தமிழில் என்ன நடக்கிறது என்று ஒட்டு மொத்தமாக பார்க்கும் வாய்ப்பு கிடைககிறது.

        விமர்சனம் எதுவாக இருந்தாலும் அது படைப்புகளை வாசிப்பதற்கான ஒரு பயிற்சி மட்டுமே. என் வாசிப்பு இன்னொருவர் வாசிப்புக்கு சில புதிய சாத்தியங்களை அளிக்கும். அதன் மூலம் அவர் இன்னும் விரிந்த வாசிப்பு ஒன்றை அடைகிறார். எந்த விமர்சனமும்  படைப்பை ‘மதிப்பிட்டு’ விட முடியாதென்றே நினைக்கிறேன். இது ஒரு வாசிப்பு மட்டுமே.

ஜெயமோகன்
நாகர்கோயில்.

Monday, July 01, 2013

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………25 - அசோகமித்திரன் – ‘தண்ணீர்’



    எனக்குத் தெரிந்து 1948–லிருந்தே சென்னையில தண்ணீர் ஒரு கவலைப் படவேண்டிய பொருள்தான். தனித்தனி வீடுகள், கிணறுகள்; ஆனால் குடிக்கும்படி இருக்காது. ஆதலால் (அன்று கார்ப்பரேஷன்) குழாய்த் தண்ணீரை நம்பித்தான் சென்னை வாசிகள் எல்லோரும் இருந்தார்கள். தெருக் குழாய்கள் எனப் பல இருந்தன. அவற்றில் எந்நேரமும் தண்ணீர் வரும். தண்ணீருக் கென்று யாரும் தனியாகச் செலவழித்தது கிடையாது. குழாய்த் தண்ணீரை நேரடியாகப் பயன்படுத்துவார்கள். நானே சிறுவனாக இருந்தபோது குழாயடியில் உள்ளங்கையைக் குவித்துக் கொண்டு தண்ணீர் குடித்திருக்கிறேன். ரயிலில் வெளியூர் போவதாக இருந்தால்தான் ஒரு கூஜாவில் தண்ணீர் எடுதுத்துப் போவார்கள். வாழ்க்கையில் உன்னதமானதெல்லாம் இலவசம் என்று ஒரு பழமொழி அன்று உண்டு. அன்று அது உண்மை.

    முப்பது முப்பந்தைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீர் வரி விதிக்கக்கூடியதாகவும் விலை கொடுக்க வேண்டியதாகவும் மாறத் தொடங்கிற்று. இந்த மாற்றம் மிக மெதுவாக வந்தது. இது எளிதில் புலப்படவில்லை.. உண்மையில் அன்று சென்னை மக்கள் அனுபவித்த பல இன்னல்கள் இந்த மாற்றம் வந்து கொண்டிருப்பதை உணராததுதான். தண்ணீர் வினியோகமும் ஒழுங்குபடவில்லை, இன்று சென்னை நகரில் குடிசைவாசிகள் உட்படத் தண்ணீருக்குக் கட்டணம் ஏதாவது ஒரு வகையில் கட்ட வேண்டியிருக்கிறது. கூரையிட்ட வீடுகளில் ஒரு குடும்பம் நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை மாதாமாதம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. பத்து மாடி. பனிரெண்டு மாடிகளில் வசிக்கும் செல்வந்தர்கள்(!) மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் தண்ணீர் வசதிக்காக ஏராளமாகச் செலவழிக்க வேண்டியிருக்கிறது.

    ‘தண்ணீர்’ நாவல் இதெல்லாம் பற்றியல்ல. ஆனால் இவற்றிற்ககான அறிகுறிகள்ள் கொண்டதுதான். இதெல்லாம் நான் திட்டமிட்டு எழுதவில்லை. ஊர் பெயர் தெரியாத ஒரு பெண் குடத்தை வைத்துக்கொண்டு அலைவதைத் திரும்பத் திரும்பப் பார்த்ததன் விளைவாகத்தான் கதை எழுதப்பட்டது.

    இந்த 2006-ஆம் ஆண்டின் இந்தத் ‘தண்ணீர்’ நாவலுக்கு எப்படிப் பொருத்தம் தேடுவது? தண்ணீர் மூலம் இருக்க முடியாது. ஆனல் இந்தக் கதையிலுள்ள நெருக்கடிகள் வேறு வேறு பொருட்களுக்காகவும் காரணங்களுக்காவும் நிகழ்கின்றன. நிர்பந்தங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. முயற்சி, வெற்றி, தோல்வி, நிராசை, இன்னும் வாழத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுப்பும் தருணங்கள் இருந்து கொண்டுதான். உள்ளன.

அசோகமித்திரன்

சென்னை,நவம்பர் 2005.

Monday, June 17, 2013

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து............24 கிருஷ்ணன் நம்பி – ‘காலை முதல்’



      சிறு வயசிலிருந்தே நான் பொம்மைகள் செய்ய ஆசைப்பட்டே.ன். முதலில் சில காலம் பாடல் பொம்மைகள் செய்து பார்த்தேன். பின்னால் கதைப் பொம்மைகள் செய்ய முற்பட்டேன்; பாடல் பொம்மைகளை விடவும் கதைப் பொம்மைகளிடமே  எனக்கு ஆசை மிகுந்தது. ஆனால் ஒரு பொம்மையைச் செய்து முடித்துவிட்ட மறுகணமே  அப்பொம்மை எனக்கு அலுத்துப் போய்விடும் ; சலித்துப் போய்விடும். வேறு பொம்மைகளுக்கான திட்டங்களைĪ போடத் தொடங்குவேன். சிலர் அடுக்கடுக்காகப் பொம்மைகள் செய்து கொண்டே இருக்கிறார்கள். அது எப்படித்தான் அவர்களால் முடிகிறதோ! அவர்களிடம் பொம்மை பண்ணும் யந்திரம் ஏதேனும்  இருந்தாலும் இருக்கலாம். என்னிடம் அம்மாதிரி எந்திரம் எதுவும் இல்லை. வெறும் கையாலேயே நான் என் பொம்மைகளைச செய்கிறேன். யந்திரம்தான்  இல்லை, சிறிது  சுறுசுறுப்பாக இருக்கக்கூடாதா? அதுவும் இல்லை. சோம்பல்  என் அருமை நண்பன்; எக்காரியத்தையும் சோம்பலை அணைத்தபடிதான் செய்து தீர்ப்பேன் ; அல்லது செய்து தீர்க்காமலிருப்பேன்.

     கடந்த ஏழு ஆண்டுக் காலத்தில் நான் படைத்துத் தீர்த்த கதைப் பொம்மைகள் இரண்டு டஜன் இருக்கலாம். இந்த இரண்டு டஜனிலிரிந்து நான் தேர்ந்தெடுத்த அரை டஜனின் தொகுப்பே நீலக்கடல். அதை ஒரு வியாபாரி ஜோராக  வெளியிட்டிருக் கிறார். அதுவும் ஒரு பொம்மைதான் ; புத்தகப் பொம்மை. அது எனது முதல் புத்தகப் பொம்மை. 

     இதோ இந்த காலை முதல், இது என் இரண்டாவது புத்தகப் பொம்மை. இதில் பத்து கதைப் பொம்மைகள் இருக்கின்றன. நான் படைத்துள்ள பொம்மைகளில் எனக்குப் பிரியமானவை நாலோ ஐந்தோதான்.  அந்த நாலோ ஐந்தில் இரண்டோ மூன்றோ இந்த காலை முதலிலும் அடங்கியுள்ளன. இவ்விரண்டோ மூன்றோ, பத்தோ இருபதோ தரமான இலக்கிய வாசகர்களுக்குப் பிடித்திருக்குமாயின் அதுவே என் வெற்றி என்று கருதுபவன். 

     இன்னும் முப்பது நாற்பது கதைப் பொம்மைகளும், நாலைந்து நாவல் பொம்மைகளும் பண்ணிப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன். என்று தெரிவித்துவிட்டு என் வணக்கத்தையும் உங்களுகுகுத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

கிருஷ்ணன் நம்பி.
பூதப்பாண்டி                
14-6-1965.




Monday, March 25, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து......22. வல்லிக்கண்ணன் – ‘வல்லிக்கண்ணன் கடிதங்கள்’



    தை எழுதுவது எனக்குப் பிடிக்கும். அதைவிட அதிகம் பிடிக்கும் கடிதங்கள் எழுதுவது.

     கதை எழுதினால், அது அச்சாக பத்திரிகையைத் தேடவேண்டும். அப்படியே கதை அச்சில் வந்தாலும் அதை எத்தனை பேர் படித்து ரசிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.

     சில கதைகள் எவராலும் படிக்கப்படாமலே கூடப் போகலாம்.  ஆனால் கடித விஷயம் அப்படி அல்ல. அதைப் பெறுகிறவர் அதைப் படித்தே தீர்வார். அவர் அதில் உள்ள விஷயங்களை ரசித்து மகிழ்கிறாரா, படித்து விட்டு வெறுப்போ கோபமோ அல்லது வேறு ஏதோ உணர்ச்சி கொள்கிறாரா என்பது வேறு விஷயம். எழுதி அனுப்பப்படும் கடித்துக்கு நிச்சயமாக  ஒரு வாசகர் உண்டு. எனவே நான் கடிதங்கள் எழுதுவதில் மிகு விருப்பமும் ஈடுபாடும் கொண்டேன்.

     நான் அதிகம் பேசுகிறவன் அல்லன். ஆனாலும் கடிதங்களில்தான் நான் அதிகம் பேசினேன். நான் கண்டது, கேட்டது, படித்தது, படிக்க விரும்பியது, எனது கனவுகள், ஆசைகள், பயணங்கள், எனக்குப் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், என்னைச் சுற்றிலும் நடந்தவை நடந்ததாகப் பிறர் சொன்னவை – இப்படி சகல விஷயங்கள் பற்றியும் நான் என் கடிதங்களில் பேசுவது உண்டு. ஆகவே, என் கடிதங்களை வரப் பெற்றவர்கள் அவற்றை மேலும் எதிர்பார்த்தார்கள்.

            நான் என் அண்ணாவுக்கு எழுதினேன். அன்புச் சகோதரர் தி.க.சிவசங்கரனுக்கு நிறைய நிறைய எழுதினேன். நான் வெளி உலகத்தில் திரியத் தொடங்கிய 1943ஆம் வருடம் முதலே இவர்களுக்கு எழுதினேன். பிற நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியதவர்கள், என்னோடு தொடர்பு கொண்டு பல்வேறு தகவல்கள் – விளக்கங்கள் பெற விரும்பியவர்கள் என்று எண்ணற்ற பேர்களுக்குக் கடிதங்கள் எழுதினேன்.

     என் கடிதங்கள் தங்களுக்கு உற்சாகம் ஊட்டுகின்றன என்றார்கள். சந்தோஷமும், நம்பிக்கையும், ஆறுதலும் தருகின்றன என்றார்கள். இலக்கியம், புத்தகம், பத்திரிகைகள், எழுத்தாளர்கள், மனிதர்கள் பற்றி சுவையான விஷயங்களைத்  தெரிந்து கொள்ள அவை உதவுகின்றன என்றார்கள்.

     என்மீது அன்பு கொண்டு தங்கள் புத்தகங்களையும் சிறு பத்திரிகை களையும், தொடர்ந்து பலரும் அனுப்பலானார்கள். புத்தகங்களைப் படித்து விட்டு என் அபிப்பிராயத்தை அவர்களுக்கு எழுதினேன். பத்திரிகைகளைப் பாராட்டியும் வாழ்த்தியும் எழுதினேன். அவை தங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக அதைப் பெற்றவர்கள சொன்னார்கள்.

புத்தகம் – பத்திரிகை அனுப்பினால் வரப்பெற்றேன் என்று கடிதம் எழுதித் தெரிவிக்கக் கூட மனமில்லாத எழுத்தாளர்கள் பெருத்த இந்த நாட்டிலே கிடைத்த்தும் படித்து விட்டு கடிதம் எழுதுகிற என் பண்புக்காக மகிழ்ச்சி அடைந்தவர்கள், கடித வாசகங்களை தங்கள் பத்திரிகைகளிலும் பத்தகங்களிலும் அச்சடித்து மகிழ்ந்தார்கள்.

இவன் எல்லோரையும், எல்லாவற்றையும், எப்பவும் பாராட்டிக் கொண்டிருக்கிறான் என்று எழுத்துலகத்தைச் சேர்ந்தவர்கள் பரிகசிக்கலானார்கள்; குறை கூறினார்கள். ஆனாலும், என் கடிதங்களை எதிர்பார்த்து எனக்கு வரும் பத்திரிகைகள், புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன.

இச்சிறு தொகுப்பில் உள்ளவை வல்லிக்கண்ணன் கடிதங்களின் சிறிய ‘சாம்பிள் தான். பல்வேறு ரசங்களையும், சுவைகளையும், குணாதிசயங்களையும் கொண்ட எண்ணற்ற கடிதங்கள் – தி.க.சிவசங்கரன், ‘முத்தமிழ் கலாவித்வ ரத்ன அவ்வை டி.கே.சண்மும், எழுத்தாளர் ஆதவன்(கே.எஸ்.சுந்தரம்), வண்ணதாசன் மற்றும் சில நண்பர்களுக்கு, வெவேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை – கால வெள்ளத்தோடு அடிபட்டுப் போனவைதான்.  ‘இழப்பு கணக்கில் எழுதப்பட வேண்டியவை அவை.

வல்லிக்கண்ணன்.

    


Monday, March 18, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.... 21. இரா.முருகன் - ‘மூன்றுவிரல்’



    ற்ற எந்தத் தொழிலில இருப்பவர்களையும்விட முழுக்க முழுக்கக் கற்பித்துக் கொண்ட பிம்பங்களின் அடிப்படையில் தமிழ்ப் படைப்புகளில் சித்தரிக்கப்படுகிறவர்கள் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையில் இருக்கப்பட்டவர்கள்தாம்.

     கணினி மென்பொருள் தொழில்நுட்ப் பணியாளர்கள் பெரும்பாலும் இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும். இந்த வயது வரம்பு, கம்ப்யூட்டர் என்ற பழைய மந்திரச் சொல்லின் பரவலான எச்ச சொச்ச கவன ஈர்ப்பு. அங்கோலாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பறந்து இறங்கிக் கூடு கட்டி இந்த மென்பொருள் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் – இந்தியச் சராசரி வருமானத்தைவிடப் பல மடங்கு கூடுதலானது என்று பலராலும் கருதப்படும் – வருமானம் போன்றவற்றின் அடிப்படையில் சாப்டவேர் இஞ்சினீயர்களைப் பற்றிப் பலூனாக ஊதப்பட்ட வண்ண வண்ண இமேஜ்கள் தமிழ்க் கதைகளில் பிறக்க ஆரம்பித்தபோது இதெல்லாம் சீக்கிரம் தரைக்கு வந்துவிடும் என்று நினைத்து நான் என்பாட்டுக்கு கம்ப்யூட்டர் தொழிலிலும் அதோடு சம்மந்தப்படாத என் படைப்புலகத்திலும் மூழ்கி இருந்தேன்.

            ஆனால் தமிழில் ஒரு படைப்புக்கூட இதுவரை மென்பொருளாளர்களைப் பற்றிய இப்படிப்பட்ட தட்டையான  படிமத்தை உடைத்து அந்த்த் தொழிலில் ஈடுபட்டவர்களை நகமும் சதையுமாகச் சித்தரித்து அவர்களின் தொழில்சார்ந்த சிக்கல்களையோ, தினமும் சந்திக்க வேண்டி இருக்கும் சவால்களைப் பற்றியோ பேசவே இல்லை என்று எனக்குப் பட்டபோது, கம்ப்யூட்டர் துறையில் இருக்கும் தமிழ்ப் படைப்பாளன் என்ற முறையில் இவர்களைப் பற்றிய ஒரு முறையான பதிவை, என் படைப்பாக்கங்களின் ஒரு பகுதியாக முன் வைக்க உத்தேசித்தேன்.

     நண்பர் பா.ராகவன் திடீரென்று தொலைபேசியில், தான் சார்ந்திருந்த பத்திரிகையின் இணையதளத்தில் நான் உடனே ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, அது கம்ப்யூட்டர் துறை பற்றியதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு யோசனையையும் தெரிவித்தார்.

     ‘ஐந்து நிமிடத்தில் திரும்ப ஃபோன செய்யறேன்.......தலைப்பைச் சொல்லுங்க.

     நான் என் கம்பஃயூட்டரில் வழக்கமான வேலையில் மூழ்கி இருந்தேன். புராஜெக்ட் மானேஜ்மென்ட் தொடர்பான சிக்கலான வேலைப் பங்கு பிரிப்புக்கு இடையே என்ன காரணத்தாலோ அந்த இயந்திரப் பிசாசு ஸ்தம்பித்து நின்றுபோக  நான் அதைத் திரும்ப இயங்க வைக்க ரீபூட் செயது கொண்டிருந்தபோது  உதயமான தலைப்புதான் ‘மூன்று விரல்

     திடீரென்று இயக்கம் மறந்து உறைவதும், திரும்பச் செயல்படத் தொடங்குவதும் கம்ப்யூட்டரின் குணாதிசயம் மட்டுமில்லை, அதோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை நியதியும்கூடத்தான் என்று தோன்றிய அந்தக் கணத்தில் உருவான கதையே இது.

     இந்த நாவலில் வளைய வருகிறவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள. ஆனால், தலையில் கொம்பு முளைக்காத, சட்டைப் பையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுகள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும் கோட்டும் துனிநாக்கு ஆங்கிலமுமாக சூயிங் கம்மை மென்றபடி தரைக்கு மேலே சரியாக பத்து சென்டிமீட்டர் உயரத்தில் மிதக்காத சாதாரண மனிதர்கள் இவர்கள். 

     ‘அவனா...... அமெரிக்காவிலே பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியிலே மாசம் பத்து லட்சம் சம்பாதிச்சு, லாஸ் ஏஞ்சல்ஸிலே வீடும் காரும் வெள்ளைக்காரி தொடுப்புமா இருக்கானாம்...... என்று பொருமி வியத்தலும், ‘கம்ப்யூட்டர்காரங்களுக்கு எல்லாம் அஷ்டமத்திலே சனி பிடிச்சு தொழிலே நசிஞ்சு போய், அவனவன் ராயர் காப்பி ஹோட்டல்லே வாழைக்காய் நறுக்கிக் கொடுத்திட்டு கிடக்கானாம்...... நல்லா வேணும் என்று இருமி எச்சில் உமிழ்ந்து இகழ்தலும் இங்கு இலமே!

     இருபது வருடங்களாக இந்தத் துறையில் இருக்கும் அனுபவம், எனக்கு இந்த நாவலை எழுத மிகவும் பயன்பட்டாலும், அது மட்டும் ‘மூன்று விரல் இல்லை.

     எல்லாப் படைப்புகளும் எழுதியவனை மீறி ஏதோ சொல்ல முற்படுகின்றன. முற்பட வேண்டும். அவற்றோடு ஊடாடும் வாசகர்கள், சொல்லப்பட்ட கதையையும் கடந்து தங்கள் எண்ண ஓட்டங்களை விரிக்க வழி செய்வதோடு எழுதியவனின் கடமை முடிந்து விடுகிறது.

     இந்த முன்னுரையையும் இதோடு முடித்துக் கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.

அன்புடன்
இரா.முருகன்.

Monday, March 11, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.... 20 அ.முத்துலிங்கம் – ‘மகாராஜாவின் ரயில் வண்டி’.



கீத் மில்லர் சொல்கிறார், “உண்மையான கதைகளை எழுத வேண்டாம். யாரும் நம்பமாட்டார்கள். உண்மைத் தன்மையான கதைகளை எழுதுங்கள்.

அப்படித்தான் இந்தக் கதைகளும். எல்லாமே உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் கணிசமான அளவு கற்பனை வாசகம் கலக்கப்பட்டவைதான். கீத்மில்லர் சொன்னதுபோல் உண்மைச் சம்பவங்களை எழுதினால் யார் நம்பப்போகிறார்கள்?

நாலு வருடங்களாக எழுதிச் சேர்த்தவை இவை. ஆப்பிரிக்கா, கனடா, பொஸ்னியா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை என்ற உலக நாடுகளின் பின்னணியில் எழுதப்பட்டவை.

வார்த்தைகளே என் கதைகளுக்கு ஆரம்பம். நடுநிசியில் அபூர்வமாக ஒரு வார்த்தை வந்து என்னைக் குழப்பிவிடும். அது என்னை வசீகரிக்கும்; சிந்திக்க வைக்கும்; பிறகு ஆட்கொள்ளும் அப்படித்தான் தொடக்கம்.

ஜீன் ஜெனே என்ற பிரபல பிரஞ்சு எழுத்தாளர் சொலகிறார்: ‘வார்த்தை என்ற ஒன்று இருந்தால் அது உபயோகப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் அது கண்டுபிடிக்கப்பட்டிருக்கக் கூடாது; ஒரு வார்த்தை அரைகுறை வயதாக அழிய நேரிடுவது சோகமானது; உயர்ந்த கலைஞனின் பங்கு எந்த வார்த்தைக்கும் அதன் மதிப்பை உயர்த்துவதுதான்.

சிலர் வேறு மாதிரி. எனக்குத் தெரிந்த ஒருவர் வித்தியாச மானவர். மை படாத ஆறு தாட்களை எடுத்துக்கொண்டுபோய் மேசையில் குந்துவார். அப்படியே நிறுத்தாமல் எழுதிக்கொண்டு போவார். பேப்பர் முடியும் போது கதையும் முடிந்து விடும். ‘இது எப்படி? என்று கேட்டால் ‘கதையை அது தொடங்கும்போது ஆரம்பித்து, அது முடியும்போது முடித்துவிட வேண்டும்என்பார். நானும் புரிந்ததுபோல தலையை ஆட்டுவேன்.

சிறுகதை படைப்பது அவ்வளவு இலகுவான காரியமா?
என் நண்பர் ஒருவர் பிற மொழி எழுத்தாளர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் படைத்த மிகச் சிறந்த கதைகளைத தமிழில் மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டிருந்தார். அந்த முயற்சிக்கு உதவுவதற்காக நான் ஒரு 200 வெளிநாட்டுக் கதைகளைப் படிக்க வேண்டி வந்தது. இந்தக் கதைகள் உலகத்துச் சிறந்த எழுத்தாளர்களால் படைக்கப்பட்டு வாசகர்களாலும், விமர்சகர்களாலும் உன்னதமானவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை. அந்த அற்புதமான குவியலில் இருந்து இருபது கதைகளை மாத்திரம் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு.

அந்தத் தொகுப்பில் கதாசிரியர்கள் பற்றிய குறிப்புகளையும், கதைகளின் பின்னணி பற்றி ஆசிரியர்களது உரைகளையும் பின்னிணைப்பாகக் கொடுத்திருந்தார்கள். 

அவற்றிலிருந்து இரண்டு உண்மைகள் எனக்குப் புலப்பட்டன. ஒன்று அந்தக் கதைகளை எழுதிய ஆசிரியர்களில் பெரும்பான்மை யானவர்கள் சிருஷ்டி இலக்கியத்தைப் பாடமாக எடுத்தவர்கள், அதைக் கற்பித்தவர்கள், பட்டறைகளில் பங்கேற்றவர்கள். இரண்டு எல்லோருமே அந்தக் கதைகளைப் பல மாதங்கள் செலவழித்து உருவாக்கி இருக்கிறார்கள். ஒருவராவது ஒரே அமர்வில் எழுதி முடிக்கவில்லை. ஜூம்பா லாகிரி என்ற இளம் எழுத்தாளர், புலிட்ஸர் பரிசு பெற்றவர், தான் அந்தக் கதையைத் திட்டமிடுவதற்காகப் பல மணி நேரங்களை நூலகத்தில் செலவழித்ததாகச் சொல்கிறார். அதை முடிக்க அவருக்கு ஆறு மாத காலம் பிடித்ததாம். இன்னொரு எழுத்தாளர் ஹாஜின், 1999ஆம் ஆண்டின் National Book Award பெற்றவர், தனக்குக்  குறிப்பிட்ட கதையை எழுதுவதற்கு ஒரு வருட காலம் எடுத்ததாகக் கூறுகிறார்.

இவற்றைப் படித்தபோது எனக்கு மிகுந்த ஆசுவாசம் ஏற்பட்டது. இந்தத் தொகுப்பில் இருக்கும் ஒரு கதையாவது ஒரு மாதத்திற்கும் குறைவான நேரத்தில் எழுதப்படவில்லை. நாலு வருடத்து உழைப்பு இவ்வளவு சொற்பமாக இருப்பதன் காரணம் ஆமை வேகத்தில் செயல்பட்ட என் படைப்பு முயற்சிகள்தான். வேகதில் என்ன சாதனை? தரம்தான் முக்கியம். அதை வாசகர்கள் தீர்மானிக்க வேண்டும்.


பிரியமுடன்,
அ.முத்துலிங்கம்.
19 நவம்பர் 2001.