Tuesday, December 25, 2012

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.............9. இந்திராபார்த்தசாரதி – ஆதவன் சிறுகதைகள்.


'கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே  இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோர்வுகளையும், ஆரோகண அவரோகங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.

'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில், ஆதவன் தம்முடைய சிறுகதைகளைப் பற்றி  இவ்வாறு விமர்சிக்கிறார். அவர் 'கூடாரங்கள்' என்று குறிப்பிடுவது அவருடைய சிறுகதைகளை. 

இலக்கியத்தைப் பற்றி ஆதவன் கொண்டிருக்கும் கொள்கையையும், மேற்காணும் கூற்று நிறுவுகிறது. ஆரவார மற்ற அமைதியான சூழ்நிலையில், தனிமையின் சொர்க்கத்தில், தன்னுருவ வேட்டையில் இறங்கி, தன் அடையாளத்தைக் காணும் முயற்சியே இலக்கியம். இவ்வடையாளம், சூன்யத்தில் பிரசன்னமாவதில்லை 'நான் - நீ' உறவில்தான் அர்த்தமாகிறது. இலக்கியம் தனி மொழியன்று. உரையாடல். உரையாடல் என்பதால் இது நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது எண்ணத்தின் நிழல். வாசகன் மீது நம்பிக்கை வைக்காமல் தனக்குத்தானே உரக்கச் சிந்தித்துக் கொண்டிருக்கும் எழுத்து இலக்கியமாகாது.
 
            அவர் தன் எழுத்தின் மூலம், சமூகத்துடனிருக்கும் தம் உறவை, அடையாளத்தை, மிக நளினமாக, கலை நேர்த்தியுடன் உறுதிப்படுத்திக் கொள்ள முயலுகிறார்.
 
            இவர் தம்முடைய நூல்களுக்கு எழுதிய பல முன்னுரைகளில், தாம் எழுதுவதை, ஒரு 'விளையாட்டு' என்றே குறிப்பிடுகிறார். 'விளையாட்டு' என்றால் வெறும் பொழுதுபோக்கு என்று கொள்ளக் கூடாது. தத்துவக் கண்ணோடு பார்க்கும்போது, எல்லாமே, பாவனைதான். 'அலகிலா விளையாட்டுடையார்' என்று முத்தொழில் செய்யும் இறைவனையே குறிப்பிடுகிறான் கம்பன். இலக்கியமும் முத்தொழில் ஆற்றுகின்றது. எழுத்தாளனை இவ்வகையில் இறைவன் என்று கூறுவதில் எந்தத் தடையுமிருக்க முடியாது.
 
'விளையாட்டு' என்று கொள்ளும் சிந்தனையில்தான், எழுத்தாளனால் தன்னைச் சமூகத்தோடு ஆரோக்கியமான உறவு கொண்ட நிலையில், தத்துவார்த்தமாக 'அந்நியப் படுத்தி'க்கொள்ளவும் முடியும். இதுதான் அவனுக்குப் 'பார்வையாளன்' என்ற தகுதியைத் தருகிறது. 'பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன், உலகத்தினர் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதையோ அல்லது சமரஸம் செய்து கொள்வதையோ, ஒதுங்கிய நிலையில் தன் கைவிரல் நகத்தைச் சீவியவாறு பார்த்துக் கொண்டிருக்கிறான்' என்று ஜேம்ஸ் ஜாய்ஸ் கூறுவது போல், எழுத்தாளனும் இறைவன் நிலையிலிருந்து, பார்வையாளனாக இருக்கும் போதுதான் அவன் படைக்கும் இலக்கியம் கலைப் பரிமாணத்தைப் பெறுகின்றது.

ஆதவன் கூறுகிறார்: 'சொற்களைக் கட்டி மேய்ப்பது எனக்குச் சின்ன வயதிலிருந்தே பிடித்தமான காரியம். அவற்றின் இனிய ஓசைகளும், நயமான வேறுபாடுகளும், அவற்றின் பரஸ்பர உறவுகளும், இந்த உறவுகளின் நீந்துகிற அர்த்தங்களும், எல்லாமே எனக்குப் பிடிக்கும். மனிதர்களையும் எனக்குப் பிடிக்கும். மனிதர்களுடன் உறவு கொள்வது பிடிக்கும்.

சொல், தனி மனிதன் சமூகத்தோடு கொள்கின்ற உறவை நிச்சயப்படுத்தும் ஒரு கருவி. சமூகரீதியாக உணர்ச்சிப் பரிமாற்றங்களைத் தெரிவிப்பது சொல். சமுதாயத்தில் மனிதச் சந்திப்பினாலோ அல்லது மோதலினாலோ ஏற்படும், அல்லது ஏற்பட வேண்டிய மாறுதல்களை அறிவிப்பது சொல் விஞ்ஞானத்தின் பரிபாஷை கலைச்சொற்கள். (Technical language) இலக்கியத்தின் பரிபாஷை அழகுணர்ச்சி (aesthetics). சமுதாய ஒப்பந்தமான சொல், இலக்கியமாகப் பரிமாணமமுறும்போது, அது அச்சொல்லை ஆளுகின்றவனின் உள் தோற்றமாக (Personality) அவதாரம் எடுக்கின்றது. இதுதான் அவனது சமூகத்தில் அவனுக்கேற்படும் அடையாளம். சொல்தான் சமுதாய உணர்ச்சியைத் தெரிவிக்கும் கருவி. சமுதாய ஒப்பந்தத்தின் செலாவணி.
 
ஆதவன் தம் உருவ வேட்டையில் தம்மை இழந்து விடவில்லை. 'இயற்கையைப் பற்றிப் பாடிய  இருவர்களில் ஷெல்லி இயற்கையில் தம்மை இழந்தார். வேர்ட்ஸ்வொர்த் தம்மைக் கண்டு தெளிந்தார்' என்று விமர்சகர்கள் கூறுவார்கள். ஆதவன் தன்னை, 'சொற்களை மேய்த்து' 'விளையாடி'க் கண்டு கொள்ளும் முயற்சிகளாகத்தாம் அவர் எழுத்து அமைகின்றது.
 
இவருடைய 'அடையாளம்' என்ன? அவரே எழுதுகிறார். என்னுடைய 'நானை' இனம் கண்டு கொள்வதற்காக நான் எழுதுவதுண்டு.  என்னுடைய 'நானி'லிருந்து விலகி இளைப்பாறவும் எழுதுவதுண்டு. எல்லா 'நான்'களுமே நியாயமானவையாகவும், முக்கியமானவையாகவும் படும். ஆகவே, என்னுடைய 'நான்' என்று ஒன்றை முன் நிறுத்திக் கொள்வதும், பிறருடைய 'நான்'களுடன் போட்டியிடுவதும் குழந்தைத்தனமாகவும் தோன்றும். ஆமாம். நான் ஓர் 'இரண்டு கட்சி ஆசாமி

இரண்டு கட்சி ஆசாமி எனும்போது அவர் தம்மை ஒரு Paranoid Schizo Phrenic ஆகச் சித்திரித்துக் கொள்ளவில்லை. உளவியல் தர்க்கத்தின்படித் தம்மை வாதியாகவும் பிரதி வாதியாகவும் பார்க்கும் தெளிவைத்தான் குறிப்பிடுகிறார். இதனால், தனிமனிதனுக்கும், சமுதாயத்துக்குமிடையே உள்ள உறவில் காணும் முரண்பாடுகளை அவரால் புரிந்துகொள்ள முடிகின்றது. புரிந்து கொள்கின்றாரேயன்றித் தீர்ப்பு வழங்க முன் வருவதில்லை. இது தம்முடைய பொறுப்பில்லை என்று ஒதுங்கி விடுகிறார்.
 
இதனால்தான் இவருக்கு இலக்கியம் பற்றிய கொள்கைத் தீவிரம் எதுவுமில்லை என்ற ஓர் அபிப்பிராயம் இவரைப் பற்றி சில இலக்கிய விமர்சகர்களிடையே உண்டு.
 
இதைப் பற்றியும் அவரே கூறுகிறார்: 'திட்டவட்டமான சில எதிர்பார்ப்புகளைத் திசை காட்டியாகக் கொண்டு இலக்கியத்தில் ஏதோ சில இலக்குகளைக் கணக்குப் பிசகாமல்  துரத்துகிற கெட்டிக்காரர்கள் மீது எனக்குப் பொறாமை உண்டு. திசைகாட்டி ஏதுமின்றி, பரந்த இலக்கியக் கடலில் தன் கலனில் காற்றின் போக்கில் அடித்துச் செல்லப்பட விரும்பும் சோம்பேறி நான். இலக்குகளிலும், முடிவுகளிலும் அல்ல, வெறும் தேடலிலேயே இன்பங் காணும் அனைவரையும் இனிய தோழர்களாக என் கலன் அன்புடன் வரவேற்கிறது!

எழுத்தாளன் ஒருவனுக்குக் 'கொள்கைத் தீவிரம்' தேவையா என்ற கேள்வி எழுகின்றது. பட்டயத்தைக் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு, அப்பட்டயத்தை நியாயப்படுத்துவதற்காக எழுதுவதுதான் 'கொள்கைத்தீவிரமா' என்றும் கேட்கலாம்.
 
படைப்பாளி படைக்கிறான். விமர்சனப் பாதிரி நாமகரணம் சூட்டுகிறான். இதுவே பட்டயமும் ஆ கிவிடுகின்றது. பல சமயங்களில், இப்பட்டயத்தையே ஓர் சிலுவையாக எழுத்தாளன் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது தான், அவன் படைப்பாற்றல் ஒரு வரையறைக்குள் குறுகி, அவன் எழுத்து, சலிப்பைத் தரும் ஓர் 'எதிர்பார்க்கக் கூடிய' (Predictable) விஷயமாக ஆகிவிடுகின்றது.
 
கலையின் சிரஞ்சீவித்தன்மை, அது தருகின்ற 'ஆச்சர்யத்தில்' தான் இருக்கிறது. ஒரே ராகத்தை ஒரு சங்கீத மேதை பல்வேறு சமயங்களில், பல்வேறு விதமாகப் பாடுவது போல. ஆதவன் எழுத்தில் இந்த 'ஆச்சர்யத்தை' என்னால் காண முடிகின்றது. ஆனால் எல்லாக் கதைகளிலும், அடிப்படையாக ஒரு விரக்தியை நம்மால் உணர முடிகின்றது. அவர் கதை 'இன்டர்வியூ'வில் வரும் சுவாமிநாதன் கூறுவது. ஆசிரியருடைய மன நிலையையும் பிரதிபலிக்கின்றது. 

            'முதலாவதாக இருப்பதற்கும் கூச்சம், கடைசியாக இருப்பதற்கும் வெறுப்பு' 'முதலில் இரவு வரும்' என்ற தலைப்பே, இவர் மன இயல்பை வெளிப்படுத்துகின்றது. 'குளிர் காலம் வந்தால், இதற்குப் பிறகு வசந்தம் நிச்சயம் வந்துதானே ஆகவேண்டும்?' என்று ஷெல்லி கூறுகிறான். ஆதவனும் வரவேற்பது 'முதலில் இரவு'; அக்கதையில் ராஜாராமன் சொல்லுகிறான்: 'ராத்திரி, ராத்திரி முடிஞ்சப்புறம் மறுபடியும் சூரியன் வரும். வெளிச்சமா ஆயிடும். அதுதான் நாளைக்கு'.

            நிகழ்காலம் நரகம், வருங்காலம் சொர்க்கம், நிகழ்கால விரக்தியைத் தவிர்க்க முடியாது. ஆனால் 'நாளைக்கு' என்பதும், 'இன்றைக்கு' என்று ஆகிவிட்டால், அப்பொழுதும் சொர்க்கம் நரகமாகிவிடும். அது, நிச்சயமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய 'நாளை'யாக இருப்பதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது. இந்த எதிர்பார்ப்புதான் வாழ்க்கையின் கால அட்டவணை.
 
            'பழமை நேர்மையும் ஆழமும் கொண்டிருந்தால், ஒருவனால் தன்னை நியாயமான, சரித்திர நிர்ப்பந்தங் களினால் ஏற்படுகின்ற புதிய மாறுதல்களுக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும். அத்தகைய உள் வலு அதற்கு உண்டு'  என்று ஜார்ஜி மார்க்காவ்  கூறுகிறார்.
 
ஆதவனின் ஒவ்வொரு கதையும் உள் நோக்கிச் செல்லும் பயணம். அப்பயணத்தின் விளைவாகப் புலப்படும் மதிப்பீடுகளின் அடிப்படையில், புற நிகழ்ச்சிகள் பரிசீலனைக்குள்ளாகின்றன. ஆனால் ஆதவன் தீர்ப்பு வழங்குவதில்லை. மென்மையும், நளினமும், நாசூக்கும் கலந்த நடையின் மூலம், சொல்ல விரும்பும் கருத்தை, எழுத்தின் வடிவத்தின் வழியாக உணர்த்துகின்றார்.
 
இதுவே அவர் கலையின் வெற்றி.
                                          இந்திராபார்த்தசாரதி
                                                                                                   




           

Tuesday, December 18, 2012

சுஜாதாவின் 'ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்'.



    மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் மலிவுப் பதிப்பாக 'நாலாயிர திவ்வியப் பிரபந்தம்' வாங்கினேன்.ஆழ்வார் பாடல்களின் கவிநயத்தை பலரது எடுத்துக்காட்டுகளில் ரசித்து, முழுதும் படிக்க விரும்பி வாங்கிய நூலை இன்னும் படித்தபாடில்லை. முறையான அறிமுகமும், வழிகாட்டுதலும் இருந்தால் ரசித்து அனுபவிக்கலாமே என்ற ஏக்கம் இருந்தது. சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள சுஜாதாவின் 'ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்' என்ற நூலைப் படிக்க நேர்ந்தபோது அந்த ஏக்கம் தீர்ந்தது. சுஜாதா தன் சிறுகதைகள், நாவல்களால் மட்டுமல்லாமல் திருக்குறள் புதியஉரை, சங்க இலக்கியப் பாடல்கள் அறிமுகம் போன்றவற்றாலும் வாசகரை சுகானுபவத்தில் ஆழ்த்துவதில் மன்னன் என்பது இந்த நூலைப் படித்தபின் மிகையாகத் தோன்றாது.

     'அறிமுகம்' என்னும் முதல் அத்தியாயமே அத்தனை பாடல்களைதயும் தேடிப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. 'ஆழ்வார்களுக்கு அறிமுகம் மட்டும்தான் இந்த நூல். இதைப் படிக்கிறவர்களுக்கு ஆழ்வார் பாடல்களின் மேல் ஆர்வம் நிச்சயம் ஏற்பட்டு நாலாயிரத்தையும் நாடுவார்கள் என்பதில் ஐயமில்லை' என்கிற ஆசிரியரின் நம்பிக்கையை ஒவ்வொரு அத்தியாயமும் உறுதிப் படுத்துகிறது.

    இத்தகைய விளக்கங்களில் சுஜாதா அவர்களின் பெருமையே இறுக்கத்தை தவிர்த்து வாசிப்புக்கு பாடலை மிக எளிமையாக்குவதே. இது பண்டிதத்தனமான, வாசிப்பை மேலும் இறுக்கமாக்குகிற விளக்க உரைகளுக்கு மாறானது. எடுத்துக்காட்டுக்கு ஒரு பாடலுக்கு அவர் தரும் எளிய விளக்கம் இதோ:
   
    'நீயே உலகெலாம் நின் அருளே நிற்பனவும்
    நீயே தவத்தேவ தேவனும் - நீயே
    எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்(து)
    இரு சுடரும் ஆய இவை(2401)'
   
    ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ள இந்த வெண்பா ஏறக்குறைய புரிகிறதுதான். ஆனாலும் சுஜாதாவின் விளக்கத்தில் பாமரர்க்கும் புரிதல் மேலும் இலகுவாகிறது.

    'நீதான் எல்லா உலகமும்,
    பூமியில் நிலைத்திருப்பவை எல்லாம் உன் அருள்.
    நீதான் தேவர்களுக்கெல்லாம் தேவன்.
    நீதான் நெருப்பு, நீதான் மலை, நீதான் எட்டுத் திசைகளும்
    தீதான் சூரியன்,சந்திரன்.'

என்று படித்ததும் மனம்  கும்மாளியிட்டு நாலாயிரம் பாடல்களையும் உடனே படித்துவிடத் துடிக்கிறது.

    முதலில் ஆழ்வார்கள் 12 பேர் யார் எவர் என்ற விளக்கத்தில் நம்மில் பலரும் அறியாத தகவல்களைத் தருகிறார். பெண்களையும் ஆழ்வார்கள் என்று குறிப்பிடும் பழக்கம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது (ஆண்டாள்),  நாலாயிர திவ்விய பிரபந்தத்தை எழுதிய ஆழ்வார்கள் அனைவரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை, இவர்கள் ஒரே குலத்தைச் சேரந்தவர்களும் இல்லை - அந்தணர், அரசர், தாழ்ந்த குலத்தில் பிறந்தவர், கள்வர் என்று எல்லா குலத்தையும் சேர்ந்தவர்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சாதி வித்தியாசம் பார்க்காமல் இருப்பது வைணவக் கருத்துக்களில் தலையாயது, அந்தணருக்கான கிரியைகள் அவர்களுக்கு முக்கியமில்லை - என்கிற சாதி வித்தியாசம் பாராட்டாத பக்தித் குரல் எட்டாம் நூற்றண்டிற்குரியது என்பதையும் எடுத்துக்காட்டு களோடு நிறுவுகிறார்.

    திவ்வியப் பிரபந்தத்தின் தமிழ் நடையும், சொற்பிரயோகங்களும் தன் எழுத்துத் திறமைக்கு வலுவான பின்னணியாக இருந்திருக்கின்றன, நம்மழ்வார் திருமொழியில் உள்ள பிரபஞ்சக் கருத்துக்கள் இயற்பியல் காஸ்மாலஜி கருத்துக்களுடன் ஒத்துப்போவதை ஓர் அறிவியல் உபாசகன் என்ற முறையால் தன்னை வியக்க வைக்கிறது என்றும் கூறி ஆழ்வார் பாடல்களை நாடிப் படிக்க நம்மை மேலும் தூண்டுகிறார்.

    பொய்கை ஆழ்வாரில் தொடங்கி பனிரெண்டு ஆழ்வார்களது பெருமை மற்றும் அவர்களது கவிச்சுவை எல்லாம் ஒவ்வொரு அத்தியாயமாகச் சொல்லி வருகிறார். சமகாலத்தவர்களாகக் கருதப்படும் பொய்கைஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் ஆளுக்கு நூறு பாடல்கள் பாடி இருக்கிறார்கள். அவை அந்தாதி வடிவில் உள்ளன. முதலாழ்வார் ஆன இந்த மூவரும் பாடிய மூன்று திருவந்தாதி பற்றிய வசீகரமான மரபு வழி கதை ஒன்றை சுஜாதா தருகிறார்.

    'திருக்கோயிலூருக்கு ஒரு முறை பொய்கை ஆழ்வார் சென்றார். நல்ல மழை.இருள். ஒரு முனிவருடைய ஆசிரமத்தில் இடைகழியில் மழைக்கு ஒதுங்கினார். சிறிய இடம். ஒருவர் மட்டுமே படுக்கலாம்.படுத்துக்கொண்டார்.
சற்று நேரத்தில் அங்கே பூதத்தாழ்வார் வந்தார். 'ஒருவர் படுக்கலாம் எனில், இருவர் உட்காரலாம்' என்று இருவரும்உட்கார்ந்தார்கள். சற்று நேரத்தில் மூன்றாவதாக பேயாழ்வார் வந்து சேர்ந்தார்.'இருவர் உட்காரலாம் எனில், மூலர்
நிற்கலாம்' என அவரும் ஒதுங்க மூவரும் நின்று கொண்டிருந்தார்கள். இருளில் நான்காவதாக ஒருவர் இருப்பதை உணர்ந்தாரகள். இவர்களோடு நெருக்கத்தை உணர்ந்த பகவான், இவர்களை நெருக்கத் தொடங்கினார். யார் இப்படிப் போட்டு நெருக்குகிறார்கள் என்று காண்பதற்காக 'வையம் தகளியா' என்று தொடங்கி, பொய்கையார் நூறு பாடல்களைப் பாடினார். பூதத்தார், 'அன்பே தகளியாய்' என்று தொடங்கி நூறு பாடல்களைப் பாடினார்.முதல் நூறு பாடல்களால் புறவிருள் அகன்றது. இரண்டாவது நூறு பாடல்களால் அகவிருள் அகன்றது.

    பகவானை அவர்களால் தரிசிக்க முடிந்தது. அந்த தரிசனத்தின் பரவசத்தில் பேயாழ்வார் 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்' என்று நூறு பாடல்ளைப் பாடினார்.'

    அவர்கள் இயற்றிய முந்நூறும் இயற்பா என்கிற பாகுபாட்டில் மூன்று திருவந்தாதிகளாக மிளிர்கின்றன.

அந்த மூன்று முதற்பாடல்களும் இவை:

    'முதல் திருவந்தாதி'யில் பொய்கையார் -

       வையம் தகளியா வார்கடலே நெய்யாக
        வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
       சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
       இடராழி நீங்குகவே என்று (2082)

    'இரண்டாம் திருவந்தாதி'யில் பூத்தாழ்வார் -

       அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
       இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
       ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
       ஞானத் தமிழ்புரிந்த நான். (2182)

    'மூன்றாம் திருவந்தாதி'யில் பேயாழ்வார் -

       திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
       அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
       பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
       என்னாழி வண்ணன்பால் இன்று (2282).

    வைணவ மரபுக்கும் முதலாழ்வார்களுகும் அறிமுக வாயிலாக இக்கதை உள்ளது.

    சைவ வைணைவப் பிணக்குகள் நிறைந்த அக்காலத்தில் இரண்டு தெய்வங்களும் ஒன்றே என்று கூறிய முதல் குரல் பொய்கையாருடையது. இக் கருத்து எல்லா ஆழ்வார்களிடமும் காணப்படவில்லை.

    அன்பே தகளியா என்ற மென்மையாய் விளக்கேற்றிய பூதத்தாழ்வார் ஒரு புரட்சியாளரும் கூட. வேதத்தை மறந்தாலும் பரவாயில்லை; பிராமணன் தன் ஒழுகத்தை இழக்கூடாது என்பார் வள்ளுவர். ஆனால் பூதத்தார் இதற்கு மேலே ஒரு படி போய், வேதமே வேண்டாம் என்கிறார்.

       ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன்பேர்
       எத்தும் திறமறிமின் ஏழைகாள் - ஓத்ததனை
       வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர்
       சொல்லுவதே ஓத்தின் சுருக்கு (2220)

ஓத்து என்பது வேதத்துக்கான தமிழ்ச் சொல்.

    'ஏழைகளே, வேதத்தைப் படிக்க முடிந்தால் நல்லது. முடியாவிட்டாலும் பரவாயில்லை, மாதவனின் பேர் சொன்னால் போதும். அதுதான் வேதத்தின் சுருக்கம்!'

    ஏழாம் நூற்றாண்டின் இந்தப் புரட்சிக் குரலின் எதிரோலியை பிற்கால சித்தர் பாடலில் - சிவ வாக்கியர் பாடலில் பார்க்கலாம்.

      சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
      வேத்திரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ? -

ஏன்? இதனை பாரதி, நம் நவீன கவிஞர்கள் வரை காணலாம் என்கிறார் சுஜாதா.

    இவ்வாறே மற்ற ஆழ்வார்களின் பெருமைகளையும், அவர்களது சிறந்த பாடல்களையும், சொல்லாட்சி களையும், கவிச்சுவையையும் எடுத்துக்காட்டுகளோடு நயம் சுட்டி எழுதிச் செல்கிறார். அத்தனையையும் இங்கே சொல்வது சாத்தியமில்லை என்பதோடு வாசிப்பவரின் நேரடி அனுபவத்துக்குக் குறுக்கே நிற்பதும் ஆகும். எனவே இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

    'வைணவம் என்னும் மகா சாகரத்தின் கரையில் இருந்துகொண்டு அதை வியப்பாக பார்த்தோம். ஆழ்வார்கள் மேல் ஒரு பிரமிப்பையும் மரியாதையையும் உங்களிடம் ஏற்படுத்தி இருந்தால் நன் தொடங்கிய காரியம் முற்றுப்பெற்றது என்று சொல்லலாம்' என்று நூலை முடிக்கிறார் சுஜாதா. நூலை முழுதுமாய்ப் படித்து முடிந்ததும் நமக்கு ஆழ்வார்கள் மீது ஏற்படும் பிரமிப்பும், சிலிர்ப்பும் சுஜாதா மீதும் ஏற்படுகிறது.       0
        


நூல்:       ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம்.
ஆசிரியர்:  சுஜாதா.
வெளியீடு:  கிழக்கு பதிப்பகம், ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. - தொலைபேசி எண்: 044-42009601/03/04.
விலை:     ரூ.80.                                
   

   

Monday, December 10, 2012

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8.தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ



 ”இதென்ன கழைக்கூத்தாடியின் கூச்சல் போலிருக்கிறதே!’’ என்று பிரமித்துவிட்டார் ஒரு நண்பர். யார்? ஸ்ரீ ப.ராமஸ்வாமி அவர்கள்தான். “ஆஹா ஊகூ!” என்ற தலைப்பு அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கட்டுரை அவருக்குப் பிடித்தது; அதன் விறுவிறுப்பும் வேகமும் தொனியும் பிடித்தன. கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை எடுத்து, அதை ஆமோதிக்கும் முறையில், ஒரு சிறு குறிப்புடன், ஒரு தினசரி பத்திரிகையின் இலக்கியப்பகுதியிலும் கூட அவர் எழுதிவிட்டார். கட்டுரை ’சக்தி’ யில் முதன் முதலாக வெளிவந்தபோது, இப்படி அவர் செய்தார்.

அவருக்கென்ன? தலைப்பு இன்னும் பல பேருக்குப் பிடிக்காது. உண்மையைச் சொன்னால், எனக்கே அது பிடிக்கவில்லை. அதாவது, சில சமயம., மற்றும் பல சமயங்களில், நன்றாய்ப் பிடிக்கிறது. அப்படிப் பிடித்தமாய் இருந்த ஒரு சமயத்தில், புத்தகத்துக்கே  இந்த் தலைப்பு  இருக்கட்டுமென்று முடிவு செய்துவிட்டேன். செய்த முடிவு முடிவுதான். அதை எதற்காக மாற்றவேண்டும்? வாழ்ந்த வாழ்வைத் திருத்தி அமைக்க முடியுமா? வாழ்ந்த வாழ்வுக்கு வருந்துவது  சாவை அழைப்பதாகும். அது வாழ்வை நலியச் செய்யும்; நரம்புகளைச் சீர்குலைக்கும். வாழ்ந்த வாழ்வு என்ற ஞாபகச் சின்னத்தை, வாழப்போகும் வாழ்வைத் திருத்தும் வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும். அந்த ஞாபகச் சின்னத்தை அழிக்க முயல்வது கோழையின் வேலை.

    இத்தொகுப்பில், ஆறு கட்டுரைகள் இருக்கின்றன. இந்தக் கட்டுரைகள் அனைத்தும் யுத்த காலத்தில் எழுதப்பட்டவையாகையால், இவைகளில் அதன் எதிரோலி இருக்கும்.

கலையையும் இலக்கியத்தையும் பற்றி, என் கருத்துக்களில் சில இந்தக் கட்டுரைகளில் அடங்கி இருக்கின்றன. நீங்களும் யோசித்துப் பாருங்கள். சரியென்று தோன்றினால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்கெனவே மாறுபட்ட கருத்துக்கள் இருந்து, இப்போது நான் சொல்வதே சரியென்று தோன்றினால் உங்கள் பழைய கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால், என் விஷயம் என்னவென்    று கேட்கிறீர்களோ! நான் மாற்றிக் கொள்ளப்போவதில்லை. ஏனென்றால், அது என் தற்போதைய நிச்சயம். தவிர, ’புத்தகத்தில் நான்’ என்ற என் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.என் காரணம் புரியும்.


       1946                                                                                                                          தி.ஜ.ர

Monday, December 03, 2012

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து................7. சுந்தரராமசாமி – ஒரு புளியமரத்தின் கதை..




    இது என்னுடைய முதல் நாவல்.

தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபைத் திசை திருப்பிவிட வேண்டுமென்றோ, உத்தி இத்யாதிகளில் மேல் நாட்டுக் களஞ்சியத் திலிருந்து கொஞ்சம் கொள்ளையடித்துத்தான் தீருவது என்று ஆசைப்பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதிய நாவல் அல்ல இது. தமிழ் அன்னைக்கு இதோ ஒரு புதிய ஆபரணம் என்று எண்ணியும் இதை எழுதவில்லை.  எந்தக் கலைஞனும் தன் மொழியில் இல்லாததைத் தேடி அளிக்கவோ, இடைவெளிகளை நிரப்பவோ, இலக்கிய வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கவோ, மொழிக்குச் செழுமையூட்டவோ எழுதுவதில்லை. நவநவமாய் ஆபரணங்களைச் செய்து அன்னையின் கழுத்தில் சூட்டுவது அல்ல, தன் கழுத்திலேயே மாட்டிக்கொண்டு அழகு பார்க்கவே அவனுக்கு ஆசை.. கலைஞனின் சமூகப் பொறுப்புகளும் பொதுநல உணர்ச்சிகளும் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டுவிட்ட காலம் இது. அவன் எந்த அளவுக்கு சுயநலக்காரன், திமிர் பிடித்தவன், அரசாங்க அமைப்பின் எதிரி, அனைவரையும் திரணமென மதிக்கும் அகங்காரி, சகோதரத் தொழிலாளிகள் மீது தீராத பொறாமை உணர்ச்சியை அடைகாத்து வருபவன், சில வேளைகளில் எப்படி மனிதனிலும் கடைமனிதன் அவன் – இவை எல்லாம் மறந்து போய்விட்ட பாவனை காட்டும் காலம் இது. வெகுளிகளில் அவன் அக்கிர கண்ணியன். அவனால் சொந்தம் பாராட்ட முடியாத அர்ச்சனைகள் சொரியப்படுகிற போது அதையும் அவன் கேட்டுக்கொண்டுதான் இருப்பான். ஆமோதிக்க, உணமை உணர்ச்சி  அவனை உறுத்தும். மறுக்க அவனுடைய புகழாசை விடாது. விமர்சகர்களுக்கு வேட்டைதான். காண ஆசைப்படுவதையெல்லாம் கண்டுவிட்டதாகவே சொல்லிவிடலாம். ஆட்சேபணை இல்லை. 

எழுதாளனும் ஒரு கலைஞன். தன் எழுத்து எவ்வாறு பிறர் படித்து ரசிக்கும்படியாக அமைந்து விடுகிறது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தத்தளிக்கும் அப்பாவி அவன். அவன் வாழ்கிற காலத்தின் ஜீவரசம் அவனுள் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய பொறிகளுக்கு வசப்பட்ட வாழ்க்கையின் கோலத்தை எழுதுவதிலும், எழுதாமல் விடுவதிலும், அதன் அடுக்கிலும், தேர்விலும், அழுத்தத்திலும், முடிப்பிலும் அவனுடைய ரத்த நம்பிக்கைகள் துளிர்க்கின்றன. வைஷ்ணவ நெற்றியில் நாமம் போல்  டைட்டில் பக்கத்தில் அவை பொறிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது இல்லை. பிரமாணமாக உருவாகாத சிந்தனைகளும், தீர்ப்புகளுமே படைப்பில் கசிகின்றன. விஞ்ஞான பத்ததிக்கும், தருக்க சாஸ்திர முறைக்கும் இலக்காகாத அவ்வுணர்வுகளின் தீர்ப்புகளில் முரண்பாடுகள் சகஜம்; தவிர்க முடியாதவை. இதற்கு நேர்மாறாக, கலையுலகில் அங்கீகரிக்கப்பட்ட தத்துவங்களுக்குத் தலையணை உறை தைப்பவன் கலைஞனே அல்ல. தெருக்கோடி கிறிஸ்துவ பஜனையில் தொண்டையைக் கிழித்துக் கொள்பவனுக்கும் அவனுக்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது. கலைஞனின் படைப்பின் விளைவால் புதிய மாற்றங்கள் நிகழலாம்: மொழி செழுமை அடையலாம்; இடைவெளிகள் அடைக்கப்படலாம். இவை விளைவுகள். தலைகீழாகச் சொல்லிப் பழகி விட்டார்கள். சமூக சாஸ்திரிகளான விமர்சகர்கள். கலைஞனின் வெகுளித்தனம் மறுக்காமல் பழகிவிட்டது.

நாவல் துறைக்கு இந்நாவல்வழி நான் அறிமுகமாக நேர்ந்தது எனக்கு ஏதேதோ வகைகளில் திருப்தி தருகிறது..

படித்துப் பாருங்கள். இந்நாவல் உங்களுக்குப் பிடிக்கலாம். பிடிக்காமலும் இருக்கலாம். சில நாவல்கள் நன்றாக இருக்கும். சில நாவல்கள் நன்றாய் இராது.

நான் இதைவிடவும் விரும்பும் நாவல் ஒன்றைப் பின்னால் எழுதக்கூடுமென்று தோன்றுகிறது.


நாகர்கோயில்
23 ஜூன் 1966                              சுந்தரராமசாமி.




   

Monday, November 26, 2012

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து................6. எஸ்.வைதீஸ்வரன் - உதய நிழல்..




நீங்கள் வாசிக்கப்போகும் இவைகள் - கவிதைகள். சாதாரணமானதாக பொருளற்றதாக பழகிப்பொய்விட்ட தவிர்க்க முடியாத நியதியாகத் தோன்றும் வாழ்க்கையிலிருந்து ஆசையால் அறிவால் உணர்வால் கல்லிடியடுக்கபட்ட சில கலையுண்மைகள் இவைகள்.

பூமியில் வெகு நாட்களாகப் பதிந்து போய்க்கிடக்கிற ஒரு பாறாங்கல்லை சலித்துப் போன வெறும் ஆத்திரத்தால் புரட்டிவிட அடியிலிருந்து திடீரென்று கொப்பளிக்கும் நீரூற்றையோ நெளியும் அநேக ஜீவராசிகளையோ கண்டு பிரமிப்படைந்து நிற்கும் நிலைகள் - எனக்கு கவிதை யுணர்வுகளாகத் தோன்றுகின்றன.

வாழ்க்கைப் பாறாங்கல்லை நாம் அடிக்கடி புரட்டிப் பார்க்க நமக்கு சக்தியும் ஆவலும் கோபமும் அவசியம். இரண்டாவதாக வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்கும் சுதந்திரம்.

பிறந்த கணத்திலேயே பூமியின் ஆகர்ஷணப் பிடிப்பில் சிக்கிக்கொண்டு விடுகிற நமக்கு வளர வளர வாழ்வில் நம்மை சுற்றிக் கொள்ளுகிற சூழ்நிலைக் கட்டுகளை சதா எதிர்த்துப் போராடி நம்மை நாம் உறுதிப் படுத்திக் கொள்ளுகிற முயற்சியிலேயெ வாழ்க்கை முடிந்துவிடுகிறது.

குடும்பம் சமூகம் அரசியல் மதம் இவைகள் ஒவ்வொன்றும் தங்கள் விசேஷ ஆக்ரமிப்பைச் செலுத்தும்போது தனி மனிதனின் சிந்தனை வெறும் சந்தை மாடாக உணர்வற்றுப் போய்விடுகின்ற நிலை ஏற்படுகின்றது.

மனிதன் வாழ்வதாலேயெ தூசுபடிந்துபோய்விடுகிற அவனுடைய உண்மை வாழ்க்கையைகண்டறிந்து கொள்வதற்கு கலைகள் உதவி செய்ய முடியும். ஆனால் கலைகள் உண்மையான மன விழிப்பைக் கொடுக்க வேண்டுமானால் அவைகள் சுதந்திரமான தெளிவான பயமற்ற உள்ளத்திலிருந்து படைக்கப் பட்ட சிருஷ்டி - சுதந்திரம் கூடியவரை மக்களிடமிருந்து பற்க்கப் படாமலோ அல்லது நசுக்கப்படாமலோ இருக்கிறதோ அங்கே இயல்பான வளர்ச்சிக்கும் ஆரோக்யத்திற்கும் இடமுண்டு. ஒரு நாட்டின் நல்ல எதிர்காலம் இப்படிப்பட்ட ஒரு சுதந்திர நிலையை வெகுவாக நம்பி இருக்கிறது.அப்படிப்பட்ட தனிமனித சுதந்திரத்தின் அத்தாடசிகளாக என் கவிதைகளை உங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன்.

முக்கியமாக இக்கவிதைகள் நீங்கள் வாசித்துஅனுபவிப்பதற்காகத்தான் எழுதப்பட்டவைகள் - புரிந்துகொள்ளக் கூடாதென்ளோ உங்களை அனாவசியக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும என்பதோ என் நோக்கமல்ல. ஆனால் வாசகன் என்ற முறையில் நீஙக்ள எந்த கலைப்படைப்பை ரஸிக்க அணுகும்போதும் அவசியமாகிற ஆரம்ப முயற்சியை  இவைகளை ரஸிக்கும்போதும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

நான் இக்கவிதைகளை இன்று திரும்பப் படித்தபோது எனக்குப் புலப்பட்ட அடிப்படையான கருந்தை உங்களுக்குச் சொன்னால் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாக என் கவிதைகள் மனத்துக்கும்   வயிற்றுக்கும் மனத்துக்கும் கொள்கைக்கும் மனத்துக்கும் உயற்கைக்கும் ஏற்படுகிற நிலையான மோதல்களாகக் கூறலாம். இம்மோதல்களின் விளைவுகள் - இன்பமாகவோ துயரமாகவோ ஏமாற்றமாகவோ தொனிக்கலாம். ஆனால் அந்த உணர்வுகளை மீறிய ஒரு அமைதி நிலைக்கு வழிகாட்டும் ஏணிகளாக இவைகள் பயன்பட வேண்டும் என்பதுதான் என் உள் ஆசை.

இக்கவிதைகளின்  வடிவங்கள் அவைகள் சொல்லும் கருத்துக்களாலேயே தீர்மானிக்கப் பட்டவைகள். இவைகள் இன்று வாழ்கின்ற என்னால் எழுதப்பட்ட கவிதைகள் என்பதைத் தவிர இவைகளைப் புதுக் கவிதைகள் என்றோ பழங்கவிதைகள் என்றோ பெயரிட்டு விளையாட நான் விரும்பவில்லை.

தமிழ் கவிதைகளிலே மரபு என்று கூறப்படும் ஒன்றை வளர்ப்பதோ அல்லது வெட்டி வீழத்துவதோ இப்படைப்புகளின் நோக்கமேயில்லை. அதனாலேயே அந்தமாதிரி வளர்ச்சி வீழ்ச்சி விளைவுகளுக்குஇக்கவிதைகள் நேரடியாக பொறுப்பேற்காது.

முடிவில் என் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கை. கவிதைகள் ஒரே மூச்சில் படித்து அனுபவித்துவிடக்கூடிய நாவல்கள் அல்ல. ஒவ்வொரு கவிதைக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட மன அவகாசம் தேவை. ஒவ்வொரு கவிதையைப் படிக்க ஆரம்பிக்கும்போதும் ஆர்வமுள்ள திறந்த மனம் மிக மிக அவசியம்.

கவிதையனுபவம் நல்ல கனவு காண்பது போல. நல்ல கனவுகள் தனைமறந்த துயிலில்எதிர்பார்க்கலாமே தவிர நினைத்தபோது தோன்றி நிற்கும்படி கட்டளையிட முடியாது.

                - இனி நீங்கள என்னைத் தாண்டிப் படிக்கலாம்.

சென்னை                                                                    எஸ்.வைதீஸ்வரன்.                                                           
மார்ச் 1970