Tuesday, December 18, 2012

சுஜாதாவின் 'ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்'.    மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் மலிவுப் பதிப்பாக 'நாலாயிர திவ்வியப் பிரபந்தம்' வாங்கினேன்.ஆழ்வார் பாடல்களின் கவிநயத்தை பலரது எடுத்துக்காட்டுகளில் ரசித்து, முழுதும் படிக்க விரும்பி வாங்கிய நூலை இன்னும் படித்தபாடில்லை. முறையான அறிமுகமும், வழிகாட்டுதலும் இருந்தால் ரசித்து அனுபவிக்கலாமே என்ற ஏக்கம் இருந்தது. சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள சுஜாதாவின் 'ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்' என்ற நூலைப் படிக்க நேர்ந்தபோது அந்த ஏக்கம் தீர்ந்தது. சுஜாதா தன் சிறுகதைகள், நாவல்களால் மட்டுமல்லாமல் திருக்குறள் புதியஉரை, சங்க இலக்கியப் பாடல்கள் அறிமுகம் போன்றவற்றாலும் வாசகரை சுகானுபவத்தில் ஆழ்த்துவதில் மன்னன் என்பது இந்த நூலைப் படித்தபின் மிகையாகத் தோன்றாது.

     'அறிமுகம்' என்னும் முதல் அத்தியாயமே அத்தனை பாடல்களைதயும் தேடிப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. 'ஆழ்வார்களுக்கு அறிமுகம் மட்டும்தான் இந்த நூல். இதைப் படிக்கிறவர்களுக்கு ஆழ்வார் பாடல்களின் மேல் ஆர்வம் நிச்சயம் ஏற்பட்டு நாலாயிரத்தையும் நாடுவார்கள் என்பதில் ஐயமில்லை' என்கிற ஆசிரியரின் நம்பிக்கையை ஒவ்வொரு அத்தியாயமும் உறுதிப் படுத்துகிறது.

    இத்தகைய விளக்கங்களில் சுஜாதா அவர்களின் பெருமையே இறுக்கத்தை தவிர்த்து வாசிப்புக்கு பாடலை மிக எளிமையாக்குவதே. இது பண்டிதத்தனமான, வாசிப்பை மேலும் இறுக்கமாக்குகிற விளக்க உரைகளுக்கு மாறானது. எடுத்துக்காட்டுக்கு ஒரு பாடலுக்கு அவர் தரும் எளிய விளக்கம் இதோ:
   
    'நீயே உலகெலாம் நின் அருளே நிற்பனவும்
    நீயே தவத்தேவ தேவனும் - நீயே
    எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்(து)
    இரு சுடரும் ஆய இவை(2401)'
   
    ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ள இந்த வெண்பா ஏறக்குறைய புரிகிறதுதான். ஆனாலும் சுஜாதாவின் விளக்கத்தில் பாமரர்க்கும் புரிதல் மேலும் இலகுவாகிறது.

    'நீதான் எல்லா உலகமும்,
    பூமியில் நிலைத்திருப்பவை எல்லாம் உன் அருள்.
    நீதான் தேவர்களுக்கெல்லாம் தேவன்.
    நீதான் நெருப்பு, நீதான் மலை, நீதான் எட்டுத் திசைகளும்
    தீதான் சூரியன்,சந்திரன்.'

என்று படித்ததும் மனம்  கும்மாளியிட்டு நாலாயிரம் பாடல்களையும் உடனே படித்துவிடத் துடிக்கிறது.

    முதலில் ஆழ்வார்கள் 12 பேர் யார் எவர் என்ற விளக்கத்தில் நம்மில் பலரும் அறியாத தகவல்களைத் தருகிறார். பெண்களையும் ஆழ்வார்கள் என்று குறிப்பிடும் பழக்கம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது (ஆண்டாள்),  நாலாயிர திவ்விய பிரபந்தத்தை எழுதிய ஆழ்வார்கள் அனைவரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை, இவர்கள் ஒரே குலத்தைச் சேரந்தவர்களும் இல்லை - அந்தணர், அரசர், தாழ்ந்த குலத்தில் பிறந்தவர், கள்வர் என்று எல்லா குலத்தையும் சேர்ந்தவர்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சாதி வித்தியாசம் பார்க்காமல் இருப்பது வைணவக் கருத்துக்களில் தலையாயது, அந்தணருக்கான கிரியைகள் அவர்களுக்கு முக்கியமில்லை - என்கிற சாதி வித்தியாசம் பாராட்டாத பக்தித் குரல் எட்டாம் நூற்றண்டிற்குரியது என்பதையும் எடுத்துக்காட்டு களோடு நிறுவுகிறார்.

    திவ்வியப் பிரபந்தத்தின் தமிழ் நடையும், சொற்பிரயோகங்களும் தன் எழுத்துத் திறமைக்கு வலுவான பின்னணியாக இருந்திருக்கின்றன, நம்மழ்வார் திருமொழியில் உள்ள பிரபஞ்சக் கருத்துக்கள் இயற்பியல் காஸ்மாலஜி கருத்துக்களுடன் ஒத்துப்போவதை ஓர் அறிவியல் உபாசகன் என்ற முறையால் தன்னை வியக்க வைக்கிறது என்றும் கூறி ஆழ்வார் பாடல்களை நாடிப் படிக்க நம்மை மேலும் தூண்டுகிறார்.

    பொய்கை ஆழ்வாரில் தொடங்கி பனிரெண்டு ஆழ்வார்களது பெருமை மற்றும் அவர்களது கவிச்சுவை எல்லாம் ஒவ்வொரு அத்தியாயமாகச் சொல்லி வருகிறார். சமகாலத்தவர்களாகக் கருதப்படும் பொய்கைஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் ஆளுக்கு நூறு பாடல்கள் பாடி இருக்கிறார்கள். அவை அந்தாதி வடிவில் உள்ளன. முதலாழ்வார் ஆன இந்த மூவரும் பாடிய மூன்று திருவந்தாதி பற்றிய வசீகரமான மரபு வழி கதை ஒன்றை சுஜாதா தருகிறார்.

    'திருக்கோயிலூருக்கு ஒரு முறை பொய்கை ஆழ்வார் சென்றார். நல்ல மழை.இருள். ஒரு முனிவருடைய ஆசிரமத்தில் இடைகழியில் மழைக்கு ஒதுங்கினார். சிறிய இடம். ஒருவர் மட்டுமே படுக்கலாம்.படுத்துக்கொண்டார்.
சற்று நேரத்தில் அங்கே பூதத்தாழ்வார் வந்தார். 'ஒருவர் படுக்கலாம் எனில், இருவர் உட்காரலாம்' என்று இருவரும்உட்கார்ந்தார்கள். சற்று நேரத்தில் மூன்றாவதாக பேயாழ்வார் வந்து சேர்ந்தார்.'இருவர் உட்காரலாம் எனில், மூலர்
நிற்கலாம்' என அவரும் ஒதுங்க மூவரும் நின்று கொண்டிருந்தார்கள். இருளில் நான்காவதாக ஒருவர் இருப்பதை உணர்ந்தாரகள். இவர்களோடு நெருக்கத்தை உணர்ந்த பகவான், இவர்களை நெருக்கத் தொடங்கினார். யார் இப்படிப் போட்டு நெருக்குகிறார்கள் என்று காண்பதற்காக 'வையம் தகளியா' என்று தொடங்கி, பொய்கையார் நூறு பாடல்களைப் பாடினார். பூதத்தார், 'அன்பே தகளியாய்' என்று தொடங்கி நூறு பாடல்களைப் பாடினார்.முதல் நூறு பாடல்களால் புறவிருள் அகன்றது. இரண்டாவது நூறு பாடல்களால் அகவிருள் அகன்றது.

    பகவானை அவர்களால் தரிசிக்க முடிந்தது. அந்த தரிசனத்தின் பரவசத்தில் பேயாழ்வார் 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்' என்று நூறு பாடல்ளைப் பாடினார்.'

    அவர்கள் இயற்றிய முந்நூறும் இயற்பா என்கிற பாகுபாட்டில் மூன்று திருவந்தாதிகளாக மிளிர்கின்றன.

அந்த மூன்று முதற்பாடல்களும் இவை:

    'முதல் திருவந்தாதி'யில் பொய்கையார் -

       வையம் தகளியா வார்கடலே நெய்யாக
        வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
       சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
       இடராழி நீங்குகவே என்று (2082)

    'இரண்டாம் திருவந்தாதி'யில் பூத்தாழ்வார் -

       அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
       இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
       ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
       ஞானத் தமிழ்புரிந்த நான். (2182)

    'மூன்றாம் திருவந்தாதி'யில் பேயாழ்வார் -

       திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
       அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
       பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
       என்னாழி வண்ணன்பால் இன்று (2282).

    வைணவ மரபுக்கும் முதலாழ்வார்களுகும் அறிமுக வாயிலாக இக்கதை உள்ளது.

    சைவ வைணைவப் பிணக்குகள் நிறைந்த அக்காலத்தில் இரண்டு தெய்வங்களும் ஒன்றே என்று கூறிய முதல் குரல் பொய்கையாருடையது. இக் கருத்து எல்லா ஆழ்வார்களிடமும் காணப்படவில்லை.

    அன்பே தகளியா என்ற மென்மையாய் விளக்கேற்றிய பூதத்தாழ்வார் ஒரு புரட்சியாளரும் கூட. வேதத்தை மறந்தாலும் பரவாயில்லை; பிராமணன் தன் ஒழுகத்தை இழக்கூடாது என்பார் வள்ளுவர். ஆனால் பூதத்தார் இதற்கு மேலே ஒரு படி போய், வேதமே வேண்டாம் என்கிறார்.

       ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன்பேர்
       எத்தும் திறமறிமின் ஏழைகாள் - ஓத்ததனை
       வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர்
       சொல்லுவதே ஓத்தின் சுருக்கு (2220)

ஓத்து என்பது வேதத்துக்கான தமிழ்ச் சொல்.

    'ஏழைகளே, வேதத்தைப் படிக்க முடிந்தால் நல்லது. முடியாவிட்டாலும் பரவாயில்லை, மாதவனின் பேர் சொன்னால் போதும். அதுதான் வேதத்தின் சுருக்கம்!'

    ஏழாம் நூற்றாண்டின் இந்தப் புரட்சிக் குரலின் எதிரோலியை பிற்கால சித்தர் பாடலில் - சிவ வாக்கியர் பாடலில் பார்க்கலாம்.

      சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
      வேத்திரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ? -

ஏன்? இதனை பாரதி, நம் நவீன கவிஞர்கள் வரை காணலாம் என்கிறார் சுஜாதா.

    இவ்வாறே மற்ற ஆழ்வார்களின் பெருமைகளையும், அவர்களது சிறந்த பாடல்களையும், சொல்லாட்சி களையும், கவிச்சுவையையும் எடுத்துக்காட்டுகளோடு நயம் சுட்டி எழுதிச் செல்கிறார். அத்தனையையும் இங்கே சொல்வது சாத்தியமில்லை என்பதோடு வாசிப்பவரின் நேரடி அனுபவத்துக்குக் குறுக்கே நிற்பதும் ஆகும். எனவே இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

    'வைணவம் என்னும் மகா சாகரத்தின் கரையில் இருந்துகொண்டு அதை வியப்பாக பார்த்தோம். ஆழ்வார்கள் மேல் ஒரு பிரமிப்பையும் மரியாதையையும் உங்களிடம் ஏற்படுத்தி இருந்தால் நன் தொடங்கிய காரியம் முற்றுப்பெற்றது என்று சொல்லலாம்' என்று நூலை முடிக்கிறார் சுஜாதா. நூலை முழுதுமாய்ப் படித்து முடிந்ததும் நமக்கு ஆழ்வார்கள் மீது ஏற்படும் பிரமிப்பும், சிலிர்ப்பும் சுஜாதா மீதும் ஏற்படுகிறது.       0
        


நூல்:       ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம்.
ஆசிரியர்:  சுஜாதா.
வெளியீடு:  கிழக்கு பதிப்பகம், ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. - தொலைபேசி எண்: 044-42009601/03/04.
விலை:     ரூ.80.                                
   

   

2 comments:

சே.வேங்கடசுப்ரமணியன் said...

தொடர்ந்து இடைவிடாமல் படிக்கத்தூண்டும் நடையில் இருக்கும் இந்த நூல். புத்தூர் கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்களின் எதிர்ப்பையும் பதிவு செய்து அதற்கு பதில் சொல்லும் தில்லும் சுஜாதாவுக்கு மட்டுமே இருக்க முடியும்.

வே.சபாநாயகம் said...


மிக்க தன்றி மணிசேஷன்

-வே.சபாநாயகம்.