Tuesday, November 28, 2006

எனது களஞ்சியத்திலிருந்து - 24

பாராட்டுக் கவி

கவிஞர்கள் எதையும் மிகைப் படுத்துபவர்கள் என்பது பொதுவான கருத்து. பாராட்டுவதானாலும் ஏசுவதானாலும் எதிலும் அதிகம்தான்.பரிசில் வழங்கியவர் மட்டுமல்ல பசிக்கு வயிறார உணவிட்டாலும் பாராட்டிப் பாடல் எழுதி விடுவார்கள்.

அவ்வையார் இப்படி அற்ப உணவுக்கும் பாராட்டுக் கவி எழுதுபவர். அவரே சொல்கிறார்,

'உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் என்றன் உளம்' -என்று.

ஒருமுறை மழையில் நனைந்து, மிகுந்த பசியோடு பாரி மளிர் அங்கவை, சங்கவை வாழும் குடிசைக்குச் செல்கிறார்.அந்தப் பெண்கள் அவருக்கு மாற்றுடை அளித்து, குளிருக்கு கணப்பு மூட்டிக் குளிர் போக்கி, முருங்கையுடன் சமைத்த கேழ்வரகுக் களியினையும் தந்தனர். அதை
வியந்து பாடுகிறார்."என்ன இந்தப் பெண்கள் கீரைக்கறி என்று சொல்லி, அமுதத்தை அல்லவா படைத்திருக்கிறார்கள்? இந்தக் குளிரில் வெப்பமுடை யதாய், நல்ல மணமுடையதாய் நெய் நிறைய பெய்து, வேண்டுமட்டும் உண்டாலும் கெடுதியை உண்டாக்காததாய் அமுதத்தை அளித்துள்ளார் களே!" என்று வியக்கிறார்.

"வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்த - பொய்யா
அடகு என்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் செரிந்த கையார்".

(வெய்தாய் - வெப்ப முடையதாய்; நறுவிதாய் - நல்ல மணமுள்ளதாய்)

இதேபோல் இன்னொரு பாராட்டுக் கவி. வேளூர் என்ற ஊரில் வாழ்ந்த பூதன் என்பவன் விரும்பி அளித்த விருந்தை வியந்து பாடிய பாடல் அது. சாதாரண வரிகரிசிச் சோறு; கத்தரிக்காய்ப் பொரியல்; மிகவும் புளித்த மோர். இவ்வளவுதான் அந்த விருந்து! இந்த விருந்துக்கு ஈடாக உலகம் முழுவதையும் தந்தாலும் தகும் என்கிறது பாடல்.

"வரகசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்,
முரமுரெனவே புளித்த மோரும், - திரமுடனே
புல்வேளூர்ப் பூதன் புரிந்து விருந்து இட்ட சோறு
எல்லா உலகும்பெறும்".

(வழுதுணங்காய் - கத்தரிக்காய்; முரமுரென - நுரை உண்டாகுமாறு புளித்த;
புரிந்து - விரும்பி)

கீரைக்கறியின் மகத்துவம் பற்றி நாமறிந்த நம்காலத்துக் கவிமணியும் ஒரு மணியான கவிதையை எழுதியிருக்கிறார்.

ஆரைப்பதி என்கிற ஊரில் அவர் விரும்பி உண்ட கீரைக்கறிக்கு அவர் படிய பாராட்டுக் கவி இது:

"பச்சடியும் தீண்டேன் பருப்பினிலும் கைவையேன்
கிச்சடியும் தீண்டேன் கிழங்கு மெடேன் - மெச்சு புகழ்
ஆரைப்பதியில் அவித்துக் கடைந்து வைத்த
கீரைக்கறி கிடைக்குமேல்."

வெண்பா இவரிடம் வெகு சரசமாய் விளையாடும்.

சாப்பாடு என்றில்லை, புலவர்க்குப் பிடித்த எதுவும் பாராட்டுக் கவி பெறும்.'பொடி'விஷயம் கூடப் பாராட்டுப் பெறுகிறது -தமிழ்த்தாத்தா வின் 'என்சரித்திரத்'தில்.

அய்யரின் ஆசான் தியாகராச செட்டியார் பொடி போடும் பழக்கம் உடையவர். ஆசானுக்காக திருவானைக்காவலில் சோமசுந்தரம் பிள்ளை என்பவரின் கடைக்கு அடிக்கடி சென்று பொடிவாங்கி வருவது வழக்கம். பொடிக்கடை சோமசுந்தரம் பிள்ளை செட்டியாரிடம் பாடம் கேட்டவர். அவர் தயாரிக்கும் பொடி மிகவும் பிரபலமானது. சுடச்சுட அப்பொடியை மூக்கில் ஏற்றிக் கொள்வதற்காகப் பலர் அவர் கடையில் காத்திருப்பார் களாம். வெளியூர்களுக்கும் அவரது பொடிக்கு நல்ல டிமாண்ட்.

செட்டியார், சோமசுந்தரம் பிள்ளை அவர்களின் பொடி மகிமை யைக் குறிப்பிட்டு பாடல் அமைக்க வேண்டும் என்று அய்யரிடம் சொல்லியிருக்கிறார். அதன்படி செட்டியாரும் சாமிநாத அய்யரும் சேர்ந்து ஒரு பாடலை இயற்றினார்கள். அப் பாடல்:

'கொடியணி மாடமோங்கி குலவுசீர் ஆனைக்காவில்
படியினி லுள்ளார் செய்த பாக்கிய மனையார் செங்கை
தொடியினர் மதனன் சோம சுந்தரன் கடையிற் செய்த
பொடியினைப் போடா மூக்கு புண்ணியம் செய்யா மூக்கே".


சாப்பாடு சுமாராய் இருந்தாலும் பாராட்டிச் சொல்லுவது மரபு. 'பெயக்கண்டும் நஞ்சுண்டமையும் நாகரிகம்'பற்றிப் பேசுவார் திருவள்ளு வர். சாப்பாடு மோசமாக இருந்தால், பாராட்டாது விட்டாலும் இகழ்ந்து சொல்வதில்லை. ஆனால் ஒரு புலவர் ஒரு வீட்டில் தனக்களித்த உணவு பற்றி மிகவும் இகழ்ந்து ஒரு பாடல் பாடி இருக்கிறார்.

அவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்கிற பெரும் புலவர். பிறக்கும் போதே அவருக்குப் பார்வை இல்லை.ஆனால் பிற்காலத்தில்
சிறந்த கவிஞராகவும் விளங்கியதால் 'அந்தகக்கவி' என்றழைக்கப் பட்டவர். இவர் 'சீட்டுக் கவி' பாடுவதில் வல்லவர். நகைச்சுவை ததும்பப் பாடல் எழுதுவதில் புகழ் பெற்றவர்.

நாகதேவன் என்பவன் இவருக்கு உணவளித்தான். மகா மோசமான சாப்பாடு அது. மறக்கமுடியாத அந்த சாப்பாடு குறித்துக் கேலியும் குமுறலுமாய் இப்படிப் பாடினார்:

"வாயிலொன்று கல்லுமொன்று நெல்லுமான அன்னமும்,
வாடலாக ஆறு மாதம் வைத்திருந்த கத்தரிக்
காயிலிட்ட கறியும், உப்பி லாத கஞ்சி அன்னமும்.
காம்பொடிந்த ஓர் அகப்பை கைப் பிடித்த வண்ணமும்,
தூயதாகத் துலக்கலின்றி அழுக்கடைந்த பாத்திரம்
தூக்கியுள்ள அசுத்த நீர் துறுத்து வந்த நேர்த்தியும்,
ஓயலின்றி ஈக்கள் வீழ்ந்து மொலுமொலென்ற சட்டியும்,
உடன் கொணர்ந்த நாகதேவன் ஊண் மறப்பதில்லையே!

( தூக்கியுள்ள - முகர்ந்துள்ள; துறு - அழுக்கு )

நகைச்சுவையும், துள்ளும் சந்தமும், திட்டினாலும் பாடல் அழகுக்காகவே ரசிக்கலாம் தானே?

'போற்றினும் போற்றுவர், பொருள் கொடாவிடில் தூற்றினும் தூற்றுவர்'அல்லவா புலவர்கள்? பொருள் என்று இல்லாது சாப்பாட்டுக்கும் அதுவே புலவர் மரபு என்பதைக் காட்டுகிறது பாடல்.

கடித இலக்கியம் - 33

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

திருப்பத்துர்.வ.ஆ.
26 - 7 - 85

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

எனது நேற்றைய கடிதத்துக்குத் தாங்கள் பதில் எழுது முன்பாகவே அடுத்த கடிதத்தை எழுதுகிறேன்.

இந்திய முற்போக்கு எழுத்தாளர் தேசீயச் சம்மேளனத்தில், தமிழ் மாநிலக்கிளைதான் அதிக விறுவிறுப்பாகச் செயல்படுவதாக 'மத்தியில்' பெயராம். நாங்கள் வேறொன்றும் செய்வதில்லை; உலகளாவிய கோஷங்களை உடனுக்குடன் வழங்குகிறோம். 'மகாநதி' என்று ஒரு மாதப் பத்திரிகை ஆரம்பிக்க முயன்று தோற்றோம். மூன்று நான்குமாதங்களுக்கு ஒரு முறை ஆங்காங்கே 'எழுத்தாளர் முகாம்' நடத்துகிறோம். சுமார் நாற்பது ஐம்பது எழுதாளர்கள் - பிரபல்யமுள்ளோர் இல்லாதோர் - சேருகிறார்கள். முதல் முகாமைத் திருப்பத்தூரில் நாங்கள் நடத்தினோம். அடுத்து, திண்டுக்கல்லில் ஒன்று வெகு சிறப்பாக நடந்தது. JK வைச் சந்தித்துக் கால் நூற்றாண்டு இந்த செப்டம்பரில் பூர்த்தியாவதால், அதையொட்டியும் சம்மேளனத்தின் செயல்பாடாகவும், அடுத்த முகாம் ஜம்னாமரத்துரில் செப்டம்பர் 6,7,8 தேதிகளில் வைக்க இருக்கிறோம்.

- பாவனை மிக முக்கியம் என்கிறார் விவேகானந்தர். பாவனை இல்லாமல் பக்தி என்பதே இருக்க முடியாது. நான் எனது சிறுசிறு போராட்டங்களையும் இதிகாச யுத்தங்களாகத்தான் பாவித்துக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் தேவாசுர யுத்தம்தான் தெரிகிறது. எங்கும் தேவர்கள். எங்கும் அசுரர்கள். இலக்கியம் என்பதும், இலக்கிய புருஷர்கள் என்பதும் போல நான் ஈடுபட்டறிந்தது இன்னொன்று இல்லை. எனவே எனக்குப் பாரதி வாழ்ந்த காலமும் கம்பன் வாழ்ந்த காலமும் புஷ்கினும் டால்ஸ்டாயும் வாழ்ந்த காலமும் எந்தத் தேசத்தின் எந்தக் காலத்தின் கதைகளோ அன்று. அவையே ஒத்தது என் காலம். அவர்களின் நேரடிச் சந்ததியுடன் தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் நான். இந்தப் பாவனையே இந்த முகாம்கள் விஷயத்தில் எனக்கு உந்துசக்தியாக இருக்கிறது.

இந்த முகாமில் நான் 'பால்ய இலக்கிய'த் தோழர்களில் ஒருவரையும் இதுவரை சந்திக்கவில்லை. - JK வையும் தேவபாரதியையும் தவிருங்கள். வையவன் இல்லை. நீங்கள் இல்லை. ஆதிராஜ் இல்லை. நீலவன் இல்லை. இது குறைபாடும் அன்று. குற்றச்சாட்டும் அன்று. ஒரு யதார்த்தம். யார் யாரோ புது முகங்கள். சா.கந்தசாமி, இதயன், பரிணாமன் போன்றோரும் உண்டு.

சில நேரங்களில் எங்கள் முகாம் வீண் அரட்டை போலவும் தோன்றும். ஆனால் அப்போது காதிலே விழுகிற வார்த்தைகள் போன்று அவ்வளவு அழகான வற்றைத் தமிழ் கூறும் நல்லுலகம் வரலாற்றில் எப்பொழுதும் வெகு காலம் காத்திருந்த பிறகே கேட்கிறது.

கவிதைகள் கூடப் படித்துவிட்டுப் போகிறார்கள்.

முகாமின் நடுநாயகம் JK என்பதால் நிகழ்ச்சிநிரல்களின் போக்கை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம்.

அணு ஆயுத எதிர்ப்பு, உலசமாதானம், மனிதகுல நம்பிக்கை இவற்றை ஏந்திச் செல்லும் பேரணிப் பொதுக்கூட்ட அலைகளிலும் கூட, நான் முதலில் சொன்ன பாவனையின் மகத்துவத்தால், எங்களாலும் அணிவகுக்க முடிகிறது. அதற்காக இறும்பூதெய்துகிறோம்.

எழுத்தாளர் சம்மேளன நடைமுறைகளை அறிமுகப்படுத்த இவ்வளவும் எழுதினேன்.

காடு வனங்களின் மீதெல்லாம் காதல் அதிகரித்து விட்டது. அருணாசலத்திடம் ஒரு 'புல்லட்' இருக்கிறது. அவர் தந்தையார் பாரஸ்டராயிருந்தவர். ஹாஸ்டலில் படித்திருந்த பிள்ளை அவ்வப்பொழுது விடுமுறையில் அப்பாவைக் காண தனியாகக் காட்டுவழி நடந்து சென்றதில் எவ்வளவு கவிதை இருக்கும் பாருங்கள்! எனவே அருணாசலத்துக்கும் காட்டுப் பித்து. நன்றாக எங்கள் ஜவ்வாது மலைப்புறங்களில் எல்லாம் சுற்றுகிறோம். அவரது பூர்வீகம் செஞ்சி பக்கம்தான். 'முட்டிப்பூ' என்று ரோட்டோரம் பூக்கிற ஒரு பூவைக் காண்பிப்பதற்காக அங்கெல்லாம் என்னைக் கூட்டிச் சென்றார். தென்னாற்காட்டுக்கும் எனக்கும் எப்பொழுதும் விசேஷ உறவு. JK, நீங்கள், இவர். தொண்டை நன்னாட்டின் தொடர்பிது.

கூட்டங்கள் முன்னைவிடவும் இப்போது தீர்மானகரமாக அமைகின்றன. எத்தனையோ காலமாக எவ்வளவோ பேர் இயற்றிச் சலித்த இந்தக் காரியத்தில் நமக்கு மட்டும் இன்னும் ஏன் சலிப்பில்லை என்று தோன்றும்.

இனிமேல்தான் எழுதவேண்டும். அதற்கு முன்னதாக, காப்புச் செய்யுள் போல சோவியத் யூனியனில் உள்ள டாக்டர் விதாலி பூர்ணிகோவிற்கு, JK வைப் பற்றியும் நமது இலக்கிய வளர்ச்சியைப் பற்றியும் இரு கூறுகளும் இணைந்து நடந்த பகுதிகள் பற்றி விவரித்து ஒரு கடிதம் எழுத வேண்டும் - ஒரு நீண்ட கட்டுரை ஆகிறாற் போல.

- இல்லை. மேல்கண்ட பாராவில் நான் தெளிவாகச் சொல்லவில்லை. JKவை

எந்தப் பருவத்தில் எவ்வாறிருந்து, நான் சந்தித்தேனோ அதிலிருந்து இந்தக் கால் நூற்றாண்டுக் கால JK + நாம் + தமிழிலக்கியம் பற்றிய விவரிப்பு இது.

இது பாயிரமாக, பின்னால் நிறைய எழுத வேண்டும். புனைகதைகள் அல்லாததோர் இலக்கிய வடிவத்தை என் மனம் நாடுகிறது. "My land, my people" "எனது பூமி, எனது மக்கள்" என்று, வாழ்க்கை நமக்குத் தந்த காட்சிகளையும் தரிசனங்களையுமே விவரித்து எழுதலாமா என்று தோன்றுகிறது.

ஒர் விரதம் பூண்டுள்ளேன். பத்திரிகைகளை மறந்து எழுதுவேன்.

எவ்வாறோ உங்களுக்கு இம்முறை உடனுக்குடன் இவ்வளவு பெரிய கடிதம் எழுதிவிட்டேன். அன்றாடம் எழுதினால் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் பற்றி எழுதலாம். சீக்கிரம் தபாலில் சேர்த்து தங்கள் கைக்குக் கிடைக்கட்டும் என்று நிறுத்திக் கொள்கிறேன்.

- தங்கள், பி.ச.குப்புசாமி

கடித இலக்கியம் - 32

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 32

திருப்பத்தூர்.வ.ஆ.
24-7-85

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தங்கள் கடிதம் கிடைத்தது. க்ஷண நேரத்தில் எந்தப் பழைய காலத்துக்கும் போய்விடுவது சாத்யந்தான் என்று இருந்தது அந்த அனுபவம்.

கையெழுத்தின் பழைய அழகேகூட, நடுவில் காணாமல் போயிருந்து - இப்போது காணப்படுவது, தங்கள் கடிதம் தன் பூர்வீக அழகுகள் பூராவும் பொருந்தி வந்திருப்பதற்குப் புலப்பாடு.

கடிதம் மிகவும் மகிழ்ச்சியளித்தது. கடிதம் பூராவையும் புன்சிரிப்புடன் படித்தேன். அதில் கண்டுள்ள நல்ல நல்ல விஷயங்களுக்கெல்லாம் மேலும் எங்கள் நல்வாழ்த்துக்கள். எனக்கு உங்கள் அழைப்பு touching ஆக இருந்தது. அது குறித்து என் பெருமையை - பெருமிதத்தை இவ்வªவு சுருக்கமாகத்தான் சொல்ல முடியும். குடும்பத்தோடு அங்கு வருவது எளிதில் சாத்தியப்படுகிற விஷயமா என்ன? திருப்பதி யாத்திரை போவது போன்றதோர் திட்டம் அது. எவ்வளவு சிரமம் இருந்தாலும் பக்தர்கள் அதை வெகு நாளைக்குத் தட்டிக்கழிப்பதில்லை. யாதும் எவ்வாறோ கூடும்!

- இவ்வாறு அந்த அழைப்பை மிகச் சிரத்தையுடன் கருதி, எடுத்து வைத்துக் கொள்கிறேன்.

பல நேரங்களில் என்னால் அகஸ்திய அவதாரம் எடுக்க முடிகிறது. எங்கோ இருந்து கொண்டு எதையெதையோ காண முடிகிறது. தங்களது மங்கள நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் அவ்வாறுதான் நான் கண்டு வருகிறேன். அத்தகைய நிகழ்ச்சிகள் அணி அணியாக வரட்டும். வாழ்க்கை ஆறு அழகாக ஓடட்டும்.

25-7-85

நல்ல மழை. ஆடி மாதத்தில் இம்மாதிரி பெய்து ஐந்தாறு வருஷமாயிற்று என்கிறார்கள். நமது கடிதங்கள் முன்பொரு முறை புனர்ஜன்மம் எடுத்தபோதும், இப்படித்தான் நல்ல மழை என்று எழுதியிருந்தீர்கள்.

நம்மிடையே நிலவிய மௌனத்தில், நான் துருப்பிடித்துப் போய் விட்டே னோ என்று நீங்கள் ஐயுற்றிருந்தாலும் நியாயமே! ஆனால் நன்கு துலங்கிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு உழைப்பு! பள்ளி, வீடு, ஆசிரியர் கூட்டணி, இலக்கிய வட்டங்கள், எழுத்தாளர் சம்மேளனம், மாட்டுத் தொழுவம், நாலைந்து நாட்களாய் மூன்று சிறுமிகளுக்கு ட்யூஷன் - என்று எல்லா அரங்குகளிலும்

அதிக பட்சம் உழைக்கிறேன். அதே நேரத்தில் என்னுள் இன்னும் ஒரு மாளாச் சோம்பல் இருக்கிற ரகசியத்தையும் அறிந்திருக்கிறேன். நகரத்துக்கு வந்து அலைச்சல் அதிகம் என்று பட்டாலும், நகரத்துக்கு வந்தது நல்லது என்றே தெரிகிறது. புதிய புதிய ரசிகர்கள், புதிய புதிய அறிமுகங்கள் போகிற இடமெல் லாம் கிடைக்கின்றன. அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம் - பொறிகளின் மீது தனியரசாணை மட்டும் இன்னும் மேலும் பழக வேண்டும். கருமயோகத்தில் நிலைத்திடல் என்பது இன்னும் கைவர வேண்டும். கோபத்தை அடக்கவும், அடக்கவியலாத போது அதை, சீறிப்பாயும் அழகிய வார்த்தைகளில் ஆற்றிக் கொள்ளவும் கற்று வருகிறேன்.

நாற்பதைக் கடந்த பிறகு "கடந்து செல்லுதல்" பற்றிய கருத்து நாட்டம் அதிகமாகிறது. இபோது எங்கள் பள்ளியின் குறிக்கோள்: குறைந்தபட்சம் அன்பு! அதிகபட்சம் அமரத்வம்! மனிதன் மீண்டும் திரும்பி வருகிற மார்க்கம், மார்க்ஸீயப் போதனைகளில்தான் எனக்கு ஸ்தூலமான நிஜமாகச் சுட்டிக் காட்டப் படுகிறது. அதுவே convince ஆகவும் இருக்கிறது. மரணத்திற்குப் பின்பு திரும்பி வருகிற கருத்தாக்கங்கள் முயற்சிகள் எல்லாம் போதிய பலன் தராதவையாகவும் பெரும்பாலும் பொய்யாகவும் உள்ளன.

தம்பி திருநாவுக்கரசுவின் கல்யாணத்தன்று மாலை பாப்பா விசேஷம் நேர்ந்தது. நான் கேள்விப்பட்ட தந்தைகள் எல்லாம் அத்தருணத்தில் ஒரு மறந்திருந்த விசனத்தை நினைவுகூர்ந்தவர்கள் போலும், வாழ்வில் இனிமேல் உஷராக இருக்க வேண்டும் என்று புதுத் தீர்மானம் கொள்கிறவர்கள் போலும் எனக்குத் தோற்றமளித்தார்கள். எனக்கு அது ஒரு இறக்கை கட்டிப் பறக்கிற அனுபவமாகவும் இருந்தது. திடீரென்று என் ஹிருதயம் அகண்டமாகிவிட்டது. வாழ்வில் தீர்ந்து விட்டது என்று சம்சயப்பட்ட அழகுகள் எல்லாம் மறு தலைமுறைக்கு மேலும் பல தலைமுறைக்கு முளைத்துத் துளிர்த்துத் தழைத்துப் பூத்தது போன்ற தரிசனம் நிகழ்ந்தது. நான் மிகவும் உன்னதமானவன் ஆனேன்.

இங்கே பெரியப்பா எங்கள் போஷிப்பில். அவரோடு பல சிலுவை யுத்தங்கள் நிகழ்த்தி, எனக்கு நானே ஞானம் புகட்டிக் கொண்டு, சினத்தின் தூண்டுதல் களுக்கு இரையாகாமல் சிறிது காலமாய் சாத்வீகம் காத்து வருகிறேன். அவர்

பிரக்ஞை வலியது. பேரன்தான் எல்லாம். உயிர் வாழ்வதே அவனுக்காகத்தான். இன்னும் கொஞ்சகாலம் இருந்தால் அவ்வப்பொழுது வரும் பென்ஷனை அவனுக்குச் செலவழிக்கலாம். வாழ்வில் எல்லாவற்றையும் இழந்துவிட்டது போன்ற ஒரு துயர் நிலையை - அதன் கொடுமை பூராவையும் - பேரன் நினைவில் சகித்துக் கொள்ள முடிகிறது போலும். அவருக்கும் உடம்பு மிகவும் தளர்ந்து விட்டது.

- வாருங்கள்! நீங்கள் இன்னொரு முறை வந்தால், பார்த்து மிகவும் மகிழ்வார். Slide projectorல், தாங்கள் எடுத்த 'பெரியப்பா -பெரியம்மா' போட்டோவை ஆளுயரத்துக்குச் சுவரில் போட்டுக் காட்டினால் - பெரியம்மா அசலாக எதிர் நிற்பது போன்ற அந்தக் காட்சி - இயலுமானால் - அவருக்கு வரப் பிரசாதம்.

தங்கள்- பி.ச.குப்புசாமி

கடித இலக்கியம் - 31

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 31

மட்றபள்ளி
4 2-85

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

வாழ்க்கை வலியது. அது நம் இச்சைக்குகந்த இடங்களுக்குச் சென்று தோயா வண்ணம் நம்மை நன்கு இழுத்துப் பிடித்து விலங்கிட்டு விட்டது. கடிதங்களில் கனவுகளைப் பங்கிட்டுக் கொண்ட பொற்காலம் மலையேறிப் போய்விட்டதோ என்கிற பிரமை பிறக்கிறது.

எழுதாமலிருப்பதைவிடவும், சாத்தியப்படுகிறதோ சாத்தியப்படாதோ ஒரு விஷயம் சம்பந்தமாக இந்தக் கடிதம் எழுதுவதில் மகிழ்கிறேன்.

திண்டுக்கல்லில், பிப்ரவரி 9,10 (சனி,ஞாயிறு) தேதிகளில், இந்திய முற்போக்கு எழுத்தாளர் தேசீய சம்மேளனத்தின் இரண்டு நாள் முகாம் நடைபெறுகிறது. JKயும் தேவபாரதியும் 8ஆம் தேதி இரவு, பாண்டியன் எக்ஸ்பிரஸில் புறப்பட்டு 9 காலை திண்டுக்கல் வருகிறார்கள். திருப்பத்தூரிலிருந்து நான், வெங்கடாசலம், தண்டபாணி உள்ளிட்ட ஐவர் குழு ஒன்று 9ஆம் தேதி காலை அங்கு வந்து விடும். தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள பல எழுத்தாளர்கள் அங்கு குழுமுவர். 10ஆம் தேதி ஞாயிறு, அணு ஆயுத எதிர்ப்புப் பேரணியும், பொதுக் கூட்டமும். 9ஆம் தேதி எழுத்தாள நண்பர்கள் கதை, கட்டுரை, கவிதை வாசிக்கலாம்; கலந்து பேசலாம்.

தங்களோடு பல நேரங்களில் தொடர்பு கொள்ள விழைகிறேன். காண்பதொன்றே களிப்பு தருகிற விஷயம். சகல வித்தைகளையும் காட்டி ஓய்ந்து, கடிதக் கலை அலுத்துவிட்டது. திண்டுக்கல் வரை இவ்வளவு பெரிய பயணம் போகிறோமே,

இந்த §க்ஷத்திராடனத்தில் சபாவும் சங்கமித்தால் நன்றாயிருக்கும் என்று மனசு நினைக்கிறது. அதுவுமின்றி, எழுத்தாளர் முகாமில், நம் ஆர்க்காட்டு ஜில்லாக்களின் தரப்பில் தாங்கள் இடம் பெறுவதும், நண்பர்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்த நேர்வதும் - கடமையை ரொம்ப திவ்யமாக ஆற்றியது போல் ஆகும். தாங்கள் முகாமில் ஒரு சிறுகதையோ அல்லது வேறெதேனும் ஒரு படைப்போ வாசிப்பது சிலாக்கியமாக அமையும். அதற்குத் தக வருக.

வேலைப்பளு, நெருக்கடி, நேரமின்மை முதலிய எல்லா விஷயங்களும் எல்லோர் வாழ்க்கையையும் ஆக்கிரமித்துக் கொண்டு, இவ்வளவு பெரிய நீண்ட அற்புதமான வாழ்நாட்களைக் கவ்வி நிற்பது போதாதா? வெடுக்கென்று பிய்த்துக் கொண்டு இந்த மாதிரி சந்தர்ப்பங்களிலாவது, எதிர்பாரா விரைவில், எல்லாம் நல்ல படி அமைய நாம் சந்தித்தால், அது இறையருளுக்கு ஒரு நிரூபணம் போன்றதோர் நிகழ்ச்சியாகாதா - என்றெல்லாம் மனசு ஏங்குகிறது.

நாங்கள் திருப்பத்தூர் - சேலம் - நாமக்கல் - கரூர் - திண்டுக்கல் பாதையில் வருகிறோம். நீங்கள் வருவதானால், தங்களுக்குச் சௌகரியமான பாதையைத் தேர்க! நேரிலேயே சந்தித்து விடுகிற மகிழ்ச்சி கிட்டும் என்று நினக்கிறேன். அவசியம் வருவதற்கு முயற்சி செய்யவும்.

தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்? மனப்பாங்கை விவரியுங்கள். முடிந்தால் எனக்கு, பள்ளி விலாசத்துக்கு 8-2-85 வெள்ளி காலைத் தபாலில் கிடைக்கிற மாதிரியான ஒரு பதிலை எழுதுங்கள்.

தங்கள் பி.ச.குப்புசாமி

கடித இலக்கியம் - 30

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 30


3, செங்குந்தர் வீதி,
திருப்பத்தூர். வ.ஆ.

14-12-82

அன்புமிக்க சபா அவர்களுக்கு.

கண்ணீரின் முதல் வரிகள் தங்களுக்குக் கடிதமாய் அமைகிறது......

தங்கள் கடிதமும் நூலும் நேற்று திங்கள் (13-12-82) அன்று - பெரியம்மாவின் உடலை அடக்கம் செய்த மறுநாள் கிடைத்தது. உங்களுக்குக் கடிதம் எழுத நினைத்தேன். உங்கள் கடிதம் எதிரே வந்து நின்றது. "இதிலே பெரியம்மாவை விசாரித் திருப்பார்" என்கிற நினைப்புடனேயே படித்தேன். அவ்வாறே இருந்தது. அந்த இடம், நின்று கொண்டிருந்த கண்ணீரை மறுபடியும் வெளியே இழுத்து விட்டுவிட்டது.

இப்படித்தான்.............

சனி (11-12-82) இரவு 10.25 மணிக்கு, வேலூர் CMC ஆஸ்பத்திரியில் ஆறுமுகம் என் அருகிருக்க அந்தச் செய்தி என் காதில் விழுந்தது. இங்கு ஞாயிறு அன்று அடக்கம் செய்தோம்.

அந்தக் கிரியை இன்னும் முடியவில்லை என்பது போல் எனக்குக் கண்ணீர் இன்னும் வந்து கொண்டே இருக்கிறது.

லேசான ரத்த உறைவு மூளையில் ஓரிடத்தில் நேர்ந்து, அது சமாளிக்கப் பட்டுத் தேறி வரும் சமயத்தில் இன்னும் ஓர் ரத்த உறைவு நேர்நது அவர்களது 'மெடிக்கல்' வரலாறு............

கோட்சேயைத் தூக்கில் போட்ட நாளிலிருந்து சாந்த ஸ்வரூபிணியாக அவர்கள் எனக்குத் தெரிந்த அந்த நீண்ட வரலாற்றை, இந்தக் குறுகிய வரலாறு முடித்து வைத்து விட்டது.

இதுவரை ஒரு காலம், இனிமேல் வருவது வேறொரு காலம் - என்பது போல், வாழ்நாள் எனக்கு இரண்டாகப் பிளந்து போயிற்று. நான் மணந்த போதும், பிள்ளைகள் பெற்ற போதும், தலை நரைத்த போதும் கூட, இந்த மாதிரி ஒரு காலப் பிளவின் வித்தியாசத்தை அனுபவித்ததில்லை. மிகப்பெரிய நிகழ்ச்சியான இது, இனிமேல் என்னைவெகுவாக மாற்றி விடக்கூடும்.

சாதாரணப் பெண்டிர் போல் ஆகி விட்டேன். எள்ளப் பட்டுவிடுமோ என்கிற அளவுக்கு என் அழுகை எல்லை கடக்கிறது. ஆகாயம் பார்த்தல்லாமல் வேறு யார் முகமும் பார்த்து தொடர்ந்து அழ முடியவில்லை.

இந்த அழுகை மிகை என்றோ, பரிசோதித்துப் பார்த்துச் செயற்கை என்றோ நிறுத்தினாலும் கூட, மீள வெகு விரைவில் அது ஒரு நொடிப் பொழுதில் உதித்து விடுகின்றது.

ஏதாவது காரியங்கள் செய்யலாம் என்றுதான், தங்களுக்குப் பதிலளிக்கிற காரியத்தை இவ்வளவு விரைவில் செய்கிறேன்.

சிவகுமார் தாங்கள் எழுதியபடியே புத்தகத்தை இரவே படித்து முடித்து விட்டான். அதற்கு விமர்சன வடிவம் கொடுக்கக் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்வான் போல் தெரிகிறது. இப்பொழுது, பாட்டிக்குச் சமரகவிகள் எழுதுகிற முயற்சியில் இருந்து கொண்டிருக்கிறான். எனக்கு வாழ்வின் irony என்பது ஆகமிகப் பெரிய தோற்றமாகத் தெரிந்து கொண்டிருக்கிறது.

விவேகாநந்தரிடம் படித்தேன் 'நீ இல்லாதிருந்த காலம் இதற்கு முன் எப்பொழுதும் இருந்ததில்லை; இனிமேலும் இருக்கப் போவதில்லை' - என்று.இப்படியெல்லாம் தேற்றிக் கொண்டாலும், சாவு என்பது ஒன்று பூசி மெழுகப்பட முடியாததோர் உண்மை போல் இருக்கிற யதார்த்தம் வந்து மனசை அவ்வப்போது அடிக்கிறது. அந்த அடியின் வலி தீர ஆனந்தமாய்க் கண்ணீருகுக்க வேண்டியிருக்கிறது.

துணைவியாருக்கு நன்றியும் வணக்கமும் கூறுங்கள். எங்கள் பெரியம்மாவுக்கு உங்கள் எல்லோரையும் நன்கு தெரியும்.

நான் விருத்தாசலம் வந்தாலும் கூட, பெரியம்மா இங்கெல்லாம் வந்திருந்தால் எவ்வளவு சிலாக்கியமாக இருந்திருக்கும் என்கிற Mood தவிர்க்க முடியாமல் வரும். இனி வரும் வாழ்க்கை பூராவும் அப்படித்தான் வரும்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி

கடித இலக்கியம் - 29

கடிதம் - 29
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

நாகராஜம்பட்டி
10-11-81

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று மாலை சைக்கிளில் புல் கட்டுடன் பள்ளியிலிருந்து திரும்பியதும், வைஷ்ணவி தங்களின் 'ஹெலன் கெல்லர்' நூலுக்குத் தங்கப் பதக்கம் பரிசு கிடைத்திருக்கும் இனிய செய்தியைச் சொன்னாள்.

தங்களின் கடிதத்தைப் படித்ததும், காலத்தின் மீது நாமும் ஏதோ ஆதிக்கம் கொண்டிருப்பது போன்ற கர்வ உணர்ச்சி உண்டாயிற்று. மிகவும் பெருமிதம் கொண் டேன்.

மஹா உன்னதமான நமது வாழ்க்கைக்குச் சின்னஞ் சிறிய அங்கீகார அடையாளங்கள் இவை என்ற போதிலும், இந்தப் பரிசு தாங்கள் பெற்றதில் நான் மஹா இறும்பூதெய்துகிறேன்.

எங்கும் நமது தோழர்களின் சூரத்தனம் கண்டு பொங்கும் உற்சாகம் இது. களங்களில் நன்கு போராடும் சகபாடிகளைக் காணும் சந்தோஷம் இது.

குடும்ப, சமூக, இலக்கியக் கடமைகளைத் தாங்கள் சரியாகவே ஆற்றியிருக்கிறீர்கள் என்பதற்குச் சாட்சியமும் இது.

தங்கப் பதக்கம் பெறத் தாங்கள் காரைக்குடி புறப்படுங்கால் நான் உங்களுக்குப் பூச்செண்டு கொடுத்து வழியனுப்புவது போலவும், சன்மானம் அளிக்கும் அந்தச் சபையில் தங்களுக்குச் சூட்டப்படுகிற மலர்மாலைகள் என் கரங்களாலேயே சூட்டப்படுகின்றன என்றும் நிணையுங்கள்.

கம்பனை நினைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் பாரதியைப் போல பாருங்கள்.

கடிதத்தைக் கண்ட அடுத்த க்ஷணமே நானும் காரைக்குடி வந்து அந்தக் காட்சியைக்காண அவாவினேன். அப்படியொரு பயணம் மேற்கொள்ள இப்போது அவகாசமில்லை. ஆயினும் காற்றைக் குதிரைகொண்டேறித் திரியுமோர் உள்ளம் பெற்றவர் நாம். ஆதலால், வருக வருகவென்று அந்தச் சபையின் வாயிலில் தங்களை வரவேற்பவனும் நானே.

நண்பர்கள் அனைவருக்கும் இந்த மகிழ்ச்சிகரமான சேதியை அறிவிப்பேன்.பேச்சுக்கு இது ஒரு பாயாசம் அல்லவா?

தங்களை வேலாயுதம் பிள்ளை போல் வாழ்த்துகிறேன். வயதுபற்றியல்ல, ஆசைபற்றி, என் ஆசீர்வாதங்களையும் சொரிகிறேன்.

தங்கள் - பி.ச.குப்புசாமி

Friday, November 03, 2006

கடித இலக்கியம் - 28

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 28

நாகராஜம்பட்டி
31-7-81

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

இன்று என் பிறந்த நாள். இரவு தூக்கம் வரும் முன், எவ்வளவு நேரம் எழுத முடியுமோ அவ்வளவு நேரம் தங்களுக்கு ஒதுக்கியிருக்கிறேன்.

தங்கள் அழைப்பு சம்பிரதாயமானதா அல்லவா என்று இனம் பிரித்துப் பார்க்கிற பேதம் நமக்குள் இருக்கிறதா என்ன? எங்கள் சௌகரியம் அசௌகரியம் முன்னிட்டே அந்த ஆனந்தமான புதுமையான அனுபவத்துக்கு எங்களை இன்னும் கொஞ்சம் தயாராக்கிக் கொண்டிருக்கிறோம். காலாண்டு விடுமுறை யின் போது வரப் பார்க்கிறோம். இன்ஷா அல்லாஹ்! சிதம்பரம் கோயிலையும் அந்தப் பயணத்தில் சேர்க்க வேண்டும். நான் இன்னும் அந்த சபாநாயகத்தைத் தரிசித்ததில்லை.

நான் சென்ற 21, 28 தேதிகளில், அவலூர்ப்பேட்டைக்கு நான்கைந்து மைல்கள் தொலைவில் இருக்கிற இரண்டு ஊர் ஆசிரியச் சங்கங்களில் போய்ப் பேசினேன். பிள்ளகள் எங்களுடனே இருப்பது, மாடும் கன்றுகளும், மனைவியின் உடல்நலிவு - இவற்றிற்கிடையே, கூட்டங்களுக்காக மேற்கொள்ளுகிற சிறுசிறு பயணங்களில் மட்டுமே நான் சுதந்திரப்பட்டுச் சிறகை விரித்து உல்லாசமாகப் பறக்க ஆரம்பித்து விடுகிறேன். அல்லது, தங்களைப் போன்ற நண்பர்களுக்கு இந்த மாதிரி அத்யந்தமாகச் சாங்கோபாங்கமாக எழுத ஆரம்பித்து விட வேண்டும். இவ்வேளைகளில் எல்லாம், நமது பிறவி, தனித்த பொருளும் பயனும் உடையது போல் துலங்குகின்றது.

'ஹெலன் கெல்லர்' பற்றி நீங்கள் நூல் எழுதுவது நல்லதே. வாழ்வு எவருடையதானாலும் தமிழ் நம்முடையதாகையால், அதில் நாமும் கூட கரைந்து நின்று ஒரு தனியழகு காட்டலாம். அனாயசமாக அல்வா சாப்பிடுவது போலச் செய்யுங்கள். என்னிடம் ஹெலன் கெல்லர் சம்பந்தமாக எதுவும் இல்லை. எங்காவது இனிமேல் என் கண்ணில் பட்டால் உங்கள் கவனம் வரும்.

உங்கள் 'ஸ்காலர்ஷிப்' குறுநாவல் பற்றி நான் விரிவாக எதுவும் விமர்சனமாக எழுதவில்லை என்று ஞாபகம் வருகிறது. ஒரு காலத்தில் எல்லாவற்றையும் அக்கு வேறு ஆணிவேறாய்ப் பிரித்துப் போட்டுப் பரிசோதிப்பதும் பேசுவதும் ஒரு விளையாட்டுப் பையனின் நோக்கமற்ற குரூரம் போல் அவ்வப்போது பழக்கமாகத்தானிருந்தது. இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. நான் நினைத்த சட்டங்களுக்குள் இன்னொரு படைப்பு ஹிருதயத்தை நான் அடைக்கலாகாது. (இதில் என்ன வேடிக்கையெனில், எந்தச் சட்டங்களும் எனக்குச் சரியாகத் தெரியாது.) படித்ததும் உண்டாகும் விளைவு பற்றி மட்டுமே இனி நாம் பேசத்தகும். பேசுகின்ற பிற விஷயங்கள் எல்லாம், படைக்கப்பட்ட ஒன்றை எடுத்துக் கொண்டு, அது துணையாக நமது அறிவின் திறனை நாம் வெளிப் படுத்திக் கொள்வதேயாம். "உங்கள் ஸ்கேலைத்தான் என்னிடம் கொண்டு வருகிறீர்கள்!" என்று அதனால்தான் விமர்சகர்களை எச்சரித்தார் புதுமைப்பித்தன்.

'ஸ்காலர்ஷிப்' படித்த போது, இதைப் படைத்த மனம், எழுத்து கொண்டு என்னென்ன வெல்லாம் சித்தரிக்கிற ஆர்வத்தை இயல்பாகக் கொண்டிருக்கிறது என்பது நன்கு விளங்கிற்று. சம்பாஷணைக் கலை எனக்கு ரொம்ப 'வீக்'(எழுத்தில்). தங்களுக்கு அதில் நல்ல தேர்ச்சி இருப்பதை இந்தக் கதையும் உணர்த்துகிறது. கதை பூராவும் முதலிலேயே விரைவில் சொல்லப்பட்டு விடுகிறது. ஒரு கதையின் கடைசியில், அதுகாறும் சொல்லப் படாத ஒரு புதிய விஷயம் மீந்து நிற்க வேண்டும். அதற்கு இடம் இல்லாமல், எவ்வளவு ஸ்காலர்ஷிப் வரப்போகிறது, என்னென்ன வெல்லாம் கஷ்டங்கள் படப் போகிறார் என்பதெல்லாம் முதலிலேயே, விளங்குமாறு தெரிவிக்கப்பட்டு விட்டது.

ஆனால் தங்கள் முயற்சிகள் எல்லாம் sincere ஆன முயற்சிகள். இது இக்கால எழுத்துலகில் நிறையப் பேருக்குத் தரத் தகாத ஒரு பெரிய பாராட்டு. எழுத்தை ஏதோ தவமென்றும் யோகமென்றும் உயர் புனிதப் பொருள் என்றும் மனமொப்பி ஏற்றுக் கொண்டுவிட்ட ஜாதி நாம்! நாம் எழுதுவதெல்லாம் எழுதத் தக்கனவே!

ஆடிப் பதினைந்தைப் பார்த்தால் முந்தாநாளும், அமாவாசையைப் பார்த்தால் நேற்றும், ஜூலை 31 ஐப் பார்த்தால் இன்றும் எனக்குப் பிறந்த நாள். "நேற்றும் இன்றும், நாளையும் - எல்லாக் காலங்களிலும் பிறப்பவன் நான்" என்று எழுதினேன். இது என்னைக் குறித்த சவடால் ஆகாது. மனிதகுல உறுப்பினனான ஒவ்வொருவனின் பெருமையும் ஆகும் இது.

தங்கள் புத்தகங்களை, நான் காலாண்டு விடுமுறையின்போது வருகிறபோது பார்க்கலாம் என்று நம்புகிறேன்.

இப்பொழுதெல்லாம் என் கடிதத் தாமதங்களுக்கு என் சோம்பல் காரணமில்லை. உழைப்பே காரணம். காலையில் கண் விழிப்பதிலிருந்து இரவு பத்தரை மணி பதினொன்றரை மணி வரைக்கும் ஓயாத உடல், மன வேலைகள். அமுதூறச் சுரக்கும் எண்ணங்களை எழுதுவதற்கான அவகாசமே கிடைப்பதில்லை. இரவெல்லாம் எழுதினால், உடல் தளர்ச்சியினூடே இரவுத் தூக்கமும் பாழ் என்னும் நிலைமை. அவ்வாறே அதைப் பொருட்படுத்தாது எழுதினாலும் ஒவ்வோர் இரவும் அவ்வாறே! ஆறுமுகத்துக்கு எழுதுவேன். ஆதிராஜுக்கு, ந்£லவனுக்கு, ருத்ராச்சாரிக்கு, தங்களுக்கு, என் மைத்துனருக்கு என்று எத்தனை பேருக்கு எழுதுவது? ஒரு சுற்றில் யாராவது ஒருவரைச் சிறிது காலம் காக்க வைக்க நேரும். அப்படி ஒரு கடித சர்வீஸ் செய்கிறேன் நான். ஆனால், வாழ்வையே கடிதங்களால் இட்டுப் பரப்பி இருப்பது போல் உணர்கிறேன். எனக்குப் பிறகு இந்தக் கடிதங்கள் படித்துப் பார்க்கப்பட வேண்டும் என்று ஏனோ 'செண்டிமெண்ட'லாகத் தோன்றுகிறது. வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருக்கிறது. பல கஷ்டங்கள், பல பயங்கள் படுகிறோம். துணிந்து நின்று பார்க்கும் போது வாழ்க்கை நம்மை வளைய வந்து வாலைச் சுழற்றிக் கொண்டு, காலடிக் கிசை வாக கூட நடந்து வருவது போல் இதுக்கிறது. We are walking.

ஆபீஸ் வேலையைக் குறைத்துக் கொள்ளவே முடியாதா? வீட்டில் அதிக நேரம் தோய்ந்து இருந்து, Bliss என்பார்களே அப்படி மன நிலைகள் வாய்க்கப் பெற்று, நிறைய எழுதுகிற வேலையைக் கவனியுங்கள்.

- தங்கள் பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 27

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 27

நாகராஜம்பட்டி,
1-6-81


அன்புள்ள சபா அவர்களுக்கு,

வணக்கம்.

ஏழெட்டு இன்லாண்டு கவர்களை ஏக காலத்தில் எழுதும் காரியங்களில் இருக்கிறேன்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் நானும் 13-5-81 முதல் 24-5-81 வரை வேலூர் சிறையில் இருந்தேன். முதல்முதலாக வாழ்வில் முகூர்த்தப் பந்தலுக்குள் நுழைவது போல் மங்கல உணர்ச்சிகளோடு வலது காலை முதலில் எடுத்து வைத்துச் சிறைக்குள் நுழைந்தேன். ஆலமரங்களினடியிலும் அரசமரங்களினடியிலும் ஒரு ரிஷி போன்றிருந்தேன். ஆத்மாவை எவரும் சிறைப்படுத்த முடியாது என்று அறிந்தேன். இரவுகள் தோறும் பாரதிக்குப் பல்லாண்டு பாடிக் கொண்டிருந்தேன். நள்ளிராக் கடந்த நிலவொளியில் மதிற் சுவரோரம் குழுக்களிடையே அமர்ந்து நான் கற்ற வேதங்களை ஓதிக்கொண்டிருந்தேன். மனிதமன ஆழங்களை முக்குளித்துப் பார்ப்பது போல் அனுபங்கள் அடைந்தேன். நீங்களும் நானறிந்த நண்பர்கள் எல்லோருமே சேர்ந்திருப்பது போல் உணர்ந்தேன். நாங்கள் நுழைந்த போது குச்சிகளாக நின்றிருந்த அரசமரம், மெள்ளமெள்ளத் துளிராகி இலை விரித்து நிழல் பரப்பிய கோலத்தை அனுதினமும் கவனித்தேன். சிறை சம்பந்தமாகப் பின்னால் உங்களுக்கு ஏராளம் எழுதுவேன்................

சிறையிலும் ஒரு நட்புச் சிகாமணி கிடைத்தார். ருத்ராச்சாரி. பாட்டனார் பெயர் வேதாந்தி பொன்னாச்சாரி. ஆசிரியர். Blacksmith. கிராமத்துத் தேவைகளுக்கு வீட்டின் முன்னறை உலைக்கூடத்தில் இரும்படித்துத் தருகிறவர். உள்ளங்கைகளில் அந்தத் தழுபுகள் கொண்டவர். "தோழர்".

வரட்சிக் கொடுமையிலும், சிறை உல்லாசத்திலும், இவற்றுக் கிடையே பட்ட எண்ணிரண்டாயிரம் ஈனக் கவலைகளிலும் விடுமுறை சென்றது. மாட்டுக் கவலை வேறு.

தங்கள் விருந்தினராக அங்கு வருகிற பாக்கியம், வாழ்வின் அரிய தனங்களில் ஒன்று, அதை வெகு எளிதிலா தீர்த்து விடுவது என்கிற தெவிட்டாத வியப்புக்கு ஆட்பட்டுள்ளோம். தங்களையெல்லாம் அழைக்கும் பாக்கியத்துக்கும் பருவம் பார்த்து ஏமாறுகிறோம். இவ்வாறு நடக்கிறது வாழ்க்கை.

சோகமுற்றுள்ளேன். ஆனால் சோர்ந்திலேன். எனது களத்தில் எனது உக்கிரத்தைக் காட்டுவேன்.

அந்தோன் மக்காரென்கோ கிடைத்தாரா எழுதுங்கள்.

அஞ்சுதல் வேண்டா. குழம்புதல் வேண்டா. திகைத்தல் வேண்டா. சிதையா நெஞ்சு கொள்ளுங்கள்.

'செய்தலுன் கடனே - அறஞ்
செய்தலுன் கடனே - அதில்
எய்துறும் விளைவினில்
எண்ணம் வைக்காதே' -
என்றான் பார்த்தனுக்குச் சாரதி.

நமது செல்வங்கள் நம்மினும் நிறை வாழ்வு வாழும்! இதைச் சாதனை செய்க பராசக்தி - அவள் கடைக் கண்ணுக்குப் பெயர் சோஷலிஸம்.

- பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 26

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் -26


நாகராஜம்பட்டி
9-3-81

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

எனது சென்ற கடிதம் தங்கள் திசை நோக்கி வந்து கொண்டிருந்தபொழுது, தங்களுடைய கடிதம் என்னை நோக்கிப் புறப்பட்டிருக்க வேண்டும்.

நான், ஒரு பள்ளிச் சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்புப் பெற்ற ஆசிரியனின் பணிகள் குறித்து, இப்பொழுதெல்லாம் பெரிதும் யோசிக்கிறேன்.

போன கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த அந்தோன் மக்காரென்கோ என்கிற போதனை இயல் மேதை, போதனை இயற் கவிஞர், உயரிய சமூகங்களை வடித்தெடுக்கப் போதனா வழிமுறைகள் கண்ட சிற்பி - என்னுள் பெருத்த பாதிப்பு களை ஏற்படுத்தி விட்டிருக்கிறார். நாம் அறிந்து வியக்கிற அவரது பரிசோதனை களும் அவற்றின் வெற்றிகளும் எல்லாம் சோஷலிஸப் புரட்சி நடந்த சமுதாயத்தில்! இங்குதான் எனக்கு அவரைப் பின்பற்றுவதில் சிரமமும், குழப்பமும் உண்டாகிறது. ஆயினும், அவரது வழிமுறைகள், யோசனைகள் பெரும்பாலானவற்றை, நாம் நமது சுரண்டல் சமுதாயத்தில் அமைந்துள்ள இந்த நமது பள்ளிகளில், ஒரு கனவு போலவும் - ஒரு கவின்மிகு விளையாட்டுப் போலவுமாவது அறிமுகப் படுத்திப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்ப்பதும் உழைப்பதும் நமது தவிர்க்கவே இயலாத, தார்மீகப் பொறுப்பு, என்பதை அந்தோன் மக்காரென்கோ நமக்கு உணர்த்தி விடுகிறார்.

நீங்கள் முடிந்தால் , சென்னையில் NCBH ல், "சோவியத் பாடபோதனையில் சில பிரச்சினைகள்" என்கிற அவரது சிறு பிரசுரத்தை வாங்குங்கள். போதனை இயல் பற்றி, அவர் எழுதிய வேறு பல - இன்னும் பெரியதான - புத்தகங்களும் இருக்கின்றனவாம். அவற்றில் ஏதேனும் வாங்குங்கள்.

இந்நூல்களை நீங்கள் படிப்பது, பள்ளி நிர்வாகத்தில் உங்களுக்குப் பெரிதும் உதவும். குறிப்பிட்ட திசைகளை அவை உங்களுக்குக் காட்டிக் கொடுக் கும். பள்ளிகளில் ஏற்கனவே தாங்கள் பின்பற்றி வருகிற நடைமுறைகள் சிலவற்றிற் கான ஈடு இணையற்ற பாராட்டுதல்களையும், உங்களை ஒரு சிறப்பான நபர் அங்கீகரித்தது போன்ற உயர்ந்த திருப்தியையும் நீங்கள் உணர்வீர்கள்.

அந்தோன் மக்காரென்கோவைத் தாங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டபிறகு, நாம் பேசுவதற்கும் பரிமாறிக் கொள்வதற்கும் களம் இன்னும் பெரிதாய் அமையும். பலன் தரத்தக்கப் பரிசோதனைகளை நடத்துவதற்கும், அவற்றை மிக ஒழுங்கமைந்த - ஒரு பள்ளிச் சமுதாய அரங்கில் நிகழ்த்துவதற்கும், என்னை விடவும் ஏராளமான நல்வாய்ப்புக்களும் திறமைகளும் தங்களுக்கு இருக்கின்றன.

எனக்கு இனிமேல் தங்கள் பள்ளிக்கூடமும் மிகுந்த ஆர்வத்துக்குரிய பொருள். தங்கள் சென்னைப் பயணத்தில் அந்தோன் மக்காரென்கோவைப் பிடித்து விடுங்கள். மார்ச் 15 - தமையனார் மகள் திருமணத்துக்கு நானும் வந்தால், தாங்களும் நானுமாய் JK வோடு அளாவளாவும் அளப்பறிய மகிழ்ச்சி கிட்டும் தான். வர முடிவதற்கான ஒரு சூசகம் தெரிகிறது. அவ்வாறாயின், மாசி மாதத்து முதிர்ந்த பிறையை நாம் பட்டினத்து ஆகாயத்தில் கண்டு கொண்டாடுவோமாக. இன்ஷா அல்லாஹ்!

தங்கள் கடிதங்களில் தாங்கள் கோருகிற எல்லா விஷயங்களுக்கும், எப்பொழுதும் வரிசையாய் ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்து, நான் பதிலளிப்பதில்லை என்கிற குறை எனக்கு நன்கு தெரிகிறது. இப்பொழுது கூட அந்தோன் மக்காரென்கோ இக்கடிதத்தை ஆக்கிரமித்து விட்டார். இவ்வாறு, தவறவிட்ட எல்லா விஷயங்களையும் நமது கடிதங்கள் ஒரு முறை இல்லாவிட்டால், இன்னொரு முறை அலசி விடும்!

வறட்சி நிலவரம் பற்றி அடுத்த கடிதத்தில் விவரிக்கிறேன். ஒரே பம்புதான் ஊரெல்லாம் தாங்குகிறது.

ஆண்டு விழா அல்லது பாரதி விழாவில் பிரசங்கம் நிகழ்த்த வருபவனாக அல்லாமல், நான் தற்போது கனவு காணுகிற, பள்ளிச் சமுதாயம் பற்றிய எனது மானஸ சித்திரத்துக்கு மிக நெருங்கியதான ஒரு தூய புனிதமான மடத்துக்குச் சும்மா ஒரு நேரம் ஒரு பொழுது ஒரு பார்வையாளனாக, பக்தியோடு வந்து போவதைப் பெரிதும் விரும்புவேன்.

நமது நட்பு மேலும் ஆழமாக வேர் பாய்கிறது. அவரவர் ஆற்றும் தலையாய பணிகளில் நாம் கலந்திருப்பதை இந்தக்ஷணம் தெளிவாகக் காண்கிறேன்.

தங்கள் - பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 25

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 25

நாகராஜம்பட்டி
2-3-81

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

பணிகள் பலவாகி விட்டன. எத்தனையோ நேரங்களில் எவ்வளவோ அனுபவங்களில் தங்களோடு கடிதங்களுடன் கலந்து கொண்டிருக்கலாம். ஆயினும் பரவாயில்லை. நாம் நித்யப் பெருவெளியில் நீந்திக் கொண்டிருக்கிறோம். அசதிகள் வந்து ஆளைக் கவ்விக் கொண்டு விடுகின்றன. அவற்றை யெல்லாம் பேசாது விடுவோம்.

நான் சித்தாந்த ரீதியாகச் செழுமைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். காரல் மார்க்ஸ¤ம் எங்கெல்ஸ¤ம் லெனினும் அந்தோன் மகரென்கோவும் பாரதியாரும் விவேகானந்தரும் JKயும் நாளூம்நாளும் அறிவினுள் அருள் மழை பொழிந்து கொண்டிருக்கின்றனர்.

திட்டமிட்டதோர் ஆசிரியப் பணியாற்றாமல் பதினெட்டு ஆண்டுகளை வீணாக்கியது போன்ற எண்ணம் உண்டாகிறது. அந்த ஆண்டுகளில் அற்புதமான போதனை நேரங்களை நாம் நிகழ்த்தியதுண்டு. ஆனால் திட்டம் இல்லை. நமது கல்விமுறையே திட்டவட்டமான குறிக்கோள் இல்லாதது என்பது ஒருபுறம் இருக்க, விசேஷமாய், பேணி வையமெல்லாம் நன்மை பெருக வைக்கும் விரதம் பூண்டு, கண்ணனின் பொறிகளில் ஒன்றாய்ப் பிறந்த நமக்கு, நம்மளவிலாவது நமது தனித் திட்டம் வேண்டுமல்லவா?

இதை இனித் துவங்க உத்தேசம். உத்தேசமென்ன? உடனடிக் கருமமாய் அது என்னால் இயன்ற அளவு நடந்து வருகிறது. உபகரணங்களும் ஜோடனைகளும் இல்லாத உயரிய நம்பிக்கையில் அதை நடத்துகிறேன்.

அந்தோன் மகரென்கோவை நீங்கள் படிக்க வேண்டும். போதனை இயல் நிபுணர். மகாப் பெரிய பெர்ஸனாலிட்டி ஆகியும், ஒரு எழுத்தாளர் ஆகமுடியாமல் போய் விட்டதே என்ற சிறு ஏக்கம் கொண்டவர். அவர் தன் நூலில் விவரிக்கிற உத்தி முறைகள் சிலவற்றை நீங்களும் நானும் சமயங்களில் நமது ஆசிரியப்பணியில் கையாண்டிருக்கிறோம். உங்கள் பள்ளியின் பலநிகழ்ச்சிகள் எனக்குக் கவனம் வருகின்றன. அவை அந்தோன் மகரென்கோவைத் தாங்கள் படிக்கிற பொழுது, மேலும் integrity (ஒருமை) கொள்ளும்; எல்லாம் ஒன்றையன்று நன்கு சார்ந்து கொள்ளும்.

மாடு கன்று போட்டு, அந்தக் குடித்தனம் பெருகி விட்டது. நாட்டிலோ பஞ்சம்.

தமையனார் புதல்வியின் திருமணச் செய்தி, மகிழ்ச்சியோடு மனசில் பல ஆசிகளைச் சுரக்கச் செய்தது. அந்த அழைப்பிதழை முற்றிலும் ரசித்து, என்னென்னவோ விவரங்கள் தெரிய வருகிற ஒரு செய்தி போல் படித்தேன். தங்கள் குடும்ப விசேஷங்கள் எல்லாவற்றிலும் பங்குபெற்று மகிழ்கிற அனுபவம் ரொம்ப பாக்கியமானதுதான். ஒரு சமூக இயலின் observation போல் அது ஓர் உன்னதமான அனுபவம். ஆயினும் உன்னதமான விஷயங்களைக்கூடத் துறந்து விட்டு, உப்புப் புளி பருப்புக்கு அலைகிற உலகத்தில், அத்தகைய அனுபங்கள் நம்மைப் போன்றவர்களுக்குக் கிட்டுவது அரிதாகி விடுகிறது.

மணமக்களுக்கு எனது நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்; வாழ்த்துகிறேன்!

தங்கள் -
பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 24

('சந்திரமௌலி' என்கிற பி.ச. குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 24

நாகராஜம்பட்டி
12-12-80

அன்புள்ள சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தங்கள் கடிதம் கிடைத்தது. Slideகள் அனைத்தும் பத்திரமாகக் கிடைத்தன. அவை கிடைத்த அன்றே, 8ஆம் தேதி திங்கள் இரவே தங்களுக்குக் கடிதம் எழுத நினைத்தேன். வேலைகள் இழுத்துக் கொண்டு விட்டன. இங்கே, புறக்கடை வாசற் படிக்கு வடக்குப்புறம் ஒரு சிறு கொட்டகை விழுந்துள்ளது. அதில் மகாலக்ஷ்மி என்று ஓர் எட்டுமாதக் கன்றுக் குட்டி இப்போது படுத்து அசை போட்டுக் கொண்டிருக்கிறது.

Slideகள் அனைத்தும் மிக அழகாக இருந்தன. எல்லோரும் ஒரு குழந்தையின் உற்சாகத்தோடும் ஆவலோடும் அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டோம். அன்றே, நகரத்துக்கு எடுத்துச் சென்று வீட்டில் அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா எல்லோருக்கும் காட்டினோம். எல்லோருக்கும் பெருமையாய் இருந்தது. நீங்கள் நமது ஞாபகார்த்தங்களை ரொம்ப rich ஆக அலங்கரித்திருக்கிறீர்கள். மற்ற slideகளையும் தங்கள் காமிரா வண்ணம் பூராவையும் காண ஆசை. மற்றவற்றை நேரில் பார்ப்போம்.

தங்களுக்கு நான் முன்பு எழுதியது, நான் எழுத நினைத்த கடிதத்தில் கால்பாகம் தான். மலையனுபவம் பற்றி ஒன்று, எழுத்து சம்பந்தமாக ஒன்று, JK பற்றி ஒன்று - என்று தொடர்ந்து பகுதி பகுதியாகக் கடிதங்கள் எழுதலாம் என்று நினைத்தேன். அந்த ஒரு கடிதம்தான் எழுத முடிந்தது.

துணைவியாரும் குழந்தைகளும் நீங்கள் இங்கு எடுத்த போட்டோக்களைப் பார்த்து என்ன சொன்னார்கள்? மலையில் எடுத்த காட்சிகள், தங்கள் காமிராவுக்குக் கொள்ளை வேட்டையாய் இருந்திருக்குமே! ஆர்வத்துடன் பார்த்தார்களா? ஜவ்வாது மலையைப் பற்றி ஒரு சுமாரான சித்திரம் அவர்களுக்குக் கிடைத்ததா?

நாம் லாரியில் போனோமே, அப்போது சில எடுத்திருக்க வேண்டும். தாங்கள் பிரின்ஸ்நீலுடன் பேசிக் கொண்டிருந்ததில், கொஞ்சம் சுற்றிலும் கூர்மையாகக் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். பசுமை நிறமான ஒரு சொர்க்கத்தில் நாம் அப்போது சஞ்சாரம் செய்து கொண்டிருந்தோம். காவலூர் கோபுர உச்சியில் எடுத்தவை எப்படி உள்ளன?

மத்தியில், நான், JK ரஷ்யாவிலிருந்து திரும்பிய புதுசில் மறுபடியும் ஒருமுறை சென்னை சென்று வந்தேன். அந்தமுறை பத்து நாட்கள் அங்கு தங்கினேன்.

போன நவம்பர் - 27ல், வெள்ளக்குட்டை உயர்நிலைப் பள்ளியின் இலக்கிய மன்றத் துவக்க விழாவிற்குப் போய் பேசினேன். பள்ளி மாணவர்களிடம் பேசுவது சிரமமாய்த்தான் உள்ளது. நம், வகுப்பு மாணவர்களிடம் பேசுவது மிக எளிது; வெகு ஆனந்தம். பள்ளி மாணவர்கள் என்கிற போது, மாணவர்களுக்குள்ளேயே இருக்கும் வயசு வித்தியாசங்கள், அந்த வித்தியாசங்களுக்கேற்ற மாறுபாடான சுவைகளை வரிசையாக நமக்கு நேர்கிற நிர்ப்பந்தம், அதன் தவிப்பு, நமக்கும் அவர்களுக்குமே உள்ள வயசு வித்தியாசம் - இவை கலந்த அனுபவம் சிரமமாகத் தான் தெரிந்தது.

ஜனவரியில் பாரதி விழாவிற்கா அழைக்கிறீர்கள்? பள்ளி மாணவர்களிடம் தானே பேச வேண்டும்? அவர்களும் அதிகம் எதிர்பாராதிருக்க, நீங்களும் எதிர்பாராதிருக்க வேண்டுகிறேன். ஒத்திப் போட்டால் மகிழ்ச்சியே.

ஆனால், உங்களையெல்லாம் பார்ப்பது என்பது தெவிட்டாத மகிழ்ச்சி தருகிற விஷயம். அந்த மகிழ்ச்சியின் பொருட்டு எதுவானாலும் நடக்கட்டும்!

வெள்ளக்குட்டையில் ஆறுமுகம் குடும்பத்தினர்க்கு, தங்கள் மின்னல் வேக visit பற்றிக் குறைதான். ஓரிரு நாட்கள் அங்கு தங்கியிருந்தால், அவர்கள் மகிழ்ந்து போனதற்கு எல்லை இருந்திருக்காது. எல்லா வீடுகளுக்கும் எத்தனையோ விருந்தினர் கள் வருகிறார்கள். ஆனால் தங்களின் அன்னியத் தன்மை அழிந்து, மிக அன்னியோன்யமாக ஒரு வீட்டின் அங்கத்தினர்கள் அனைவராலும் மதிக்கப்பட்டும் நேசிக்கப்பட்டும் எடுத்துக் கொள்ளப் படுகிற மனிதர்கள் அபூர்வமான எண்ணிக்கையில் உள்ளவரே ஆவர். அடுத்தமுறை நீங்கள், வெள்ளக்குட்டையில் வாசலில் அந்தத் திண்ணையில் உட்கார்ந்து நாள்பூரா பேசிக் கொண்டிருக்க வேண்டும். அந்த மாதிரி வரவேண்டும்.

இந்தப்பக்கம் மழை மிகவும் ஏமாற்றி விட்டது. கால்நடைகளின் தீவனத்துக்கே பெரும்பாடு. இந்தக் காலத்தில் நான் கன்று வாங்கியுள்ளேன். ஆனால், தவறாமல் அதன் வயிற்றை நிரப்புகிறேன். நானே மேய்க்கிறேன். நானே போய்ப் புல் பிடுங்கி வருகிறேன். புல்லில் எத்தனை ஜாதிகள் இருக்கின்றன தெரியுமா? ஓ, மறந்து போனேன், நீங்கள் காவிரிக்கரை ஊரில் பிறந்தவராயிற்றே! கொல்லன் தெருவில் ஊசி விற்கப் பார்க்கிறேன்.

கன்றுக்குட்டி சம்பந்தமான அனுபவங்கள் பற்றி ஒரு தனிக்கடிதம் எழுதுகிறேன்.

தங்கள் கடிதம் மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அடடா! இந்த மாதிரி, அன்பான மனிதர்களின் சந்திப்புகளோடும், அந்தச் சந்திப்பின் மகிழ்ச்சியின் நல்லடையாளங்களோடும் நிரம்பி நிரம்பிச் சென்று கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

- பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 23

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 23

நாகராஜம்பட்டி
29-10-80

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தாங்கள் இங்கிருந்து புறப்பட்ட பிறகு, ஆர அமர நிதானமாகத் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிற அவகாசமும் மனநிலையும் இப்போதுதான் கிடைத்துள்ளன. தங்களுடைய ஆர்வம் கலந்த எதிர்பார்ப்புக்கு இன்னமும் ஏமாற்றமளிக்ககூடாது என்கிற உணர்வின் உறுத்தலால்தான் இதுவும் இப்போது சாத்யமாகிறது. இல்லையேல் இன்னும் எவ்வளவு தாமதமாகியிருக்குமோ?

கடந்த ஒரு மாத காலமாக நான் தொடர்ச்சியாகவும், சாவதானமாகவும் வீட்டில் இருக்க முடியவில்லை. அதற்கப்புறம் ஒருபயணம் ஆலங்காயமும் வெள்ளக் குட்டையும் போனேன். இந்தமாதம் 12ஆம் தேதி வரை சென்னையில் இருந்தேன்.

சென்னையில், நான் சென்றபோது எதிர்பாராத விதமாக, ரஷ்யாவிலிருந்து திரும்பி இருந்த JK வைப் பார்த்துச் செல்வதற்காக, வையவனும் வந்திருந்தார். ஜீவகன் அவரிடம் நமது மலைப் பயணத்தின் மகிழ்ச்சி பற்றி நிறையச் சொல்லியிருக்கிறான். நிறைய விசாரித்தார்.

தங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருந்தாலும், எங்களுக்கு என்னவோ ஏராளமான குறைதான். நினைத்துப் பார்த்தால் எங்கள் உபசாரங்களில் எவ்வளவோ அசௌகரியமான அம்சங்கள் தெரிகின்றன. கோரைப் பாயும் கொசுவும், குளியல் போன்றவைகளும் ஒரு third class guest house தான். காவிரி நீர் பாயாத கலாச்சாரம். வடாற்காடு ஜில்லாவின் பாமர வாடை. வாழ்க்கைப் போராட்டங்களில் ஆசாரங்களை மறந்த மனிதர்கள். எனது திட்டமிடப்படாத, பாங்கற்ற, வெறும், பேச்சை மட்டுமே பிரதானமாககொண்ட treatment...........

ஆயினும், தாங்கள் இவற்றை மறுப்பீர்கள் என்பதும், இன்னும் சொல்லப் போனால், இவையெல்லாம் இவ்வாறாகத் தங்கள் பார்வைக்குப் பட்டிராது என்பதும் எனக்கு நன்கு தெரியும். இப்படி ஒரு உயர்நிலை இருப்பதாலேயே நாம் நண்பர்கள் ஆனோம். நண்பர்கள் எனில், கால தேச வர்த்தமானங்களையும், தேக வாழ்க்கை யையும் கடந்த நண்பர்கள்......

எங்களுக்கு இம்முறை மிகவும் மகிழ்ச்சியளித்த விஷயம், குடும்ப சமேதரான உங்கள் காட்சிகளின் தரிசனம்தான். இதை வாய் விட்டு, வார்த்தைகளில் எழுதுவதில் எங்கள் உணர்வின் அன்யோன்யம் தெரியவராது. அவ்வாறு நாங்கள் உணர்ந்தோம்.

புத்¢ய முகங்களையோ புதிய மனிதர்களையோ பார்ப்பது போல் அல்லாமல், சபாநாயகம் என்கிற சாளரத்தின் வழியே கண்ட ஜன்மஜன்மாந்திர அறிமுகங்கள் கொண்ட பிம்பங்களாகப் பாப்பாவும் தம்பியும் அனைவரும் தெரிந்தனர். ஒரு தகப்பனாரின் மனநிறைவும் தாயின் மனநிறைவும் என்கிற மகத்தான உணர்வனுபவத்தை நாங்கள் மிக எளிதாக லகுவாக எட்டினோம். " நன்று. நன்று. உலகம் இனியது...." என்று நவநவமாய்க் கவி புனைய மனிதகுல மன நாக்கை தூண்டுவதற்கு, மூல காரணமான

பொக்கிஷமாக ஒரு நல்லுணர்வு தேவையன்றோ? அதனைத் தாங்களும் துணைவியாரும் குழந்தைகளும் - உங்கள் எல்லாருக்கும் பின்னால் நிற்கின்ற குடும்பம் என்னும் சீரிய தத்துவத்தின் கட்புலனாகாத தோற்றமும் தந்ததை, பின்னால் ஒரு கடிதத்தில்தான் விவரித்துச் சொல்லவேண்டும் என்று நான் அப்போதே நினைத்துக் கொண் டேன்.

ஒரு வெட்கமும் பிறக்கிறது. "மற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்து மண்டும் என் வெட்கத்தின் ஆணை" என்று பாரதியின் மாஜினி கூறுவது போன்ற ஒரு வெட்கம் அது. தங்கள் துணைவியாரின் மிக உயர்ந்த பாங்கு கொண்ட உபசாரத்தின் முன்னும், அவர்கள் கவனித்தும் போஷித்தும் கைகொடுத்தும் வளப்படுத்தியிருக்கும் உங்கள் அன்றாடவாழ்கை ஒழுங்கு என்கிற நியமத்தின் முன்னும் வருகிற வெட்கம் அது. சரசுவுக்கு அவர்களிடம் தான் பாராட்டுப் பெறும் அளவுக்குப் பேசி நடந்து கொள்ள முதலில் தன்னால் முடியுமோ என்கிற பிரமிப்பு இப்போது ஏராளமாய் ஏற்பட்டு விட்டி ருக்கிறது. அவர்களைச் சந்தித்தால் ரொம்ப exciting ஆகவும் nervous ஆகவும் இருப்பாள் என்று நினைக்கிறேன். ஆனால் அந்தச் சந்திப்பு வெகு விரைவில் சட்டென்று நடந்து தீர்வதாக இருப்பின் அது சரியில்லை. காலத்தின் கர்ப்பப்பையில் வெகு பத்திரமாகவும் ஆவலாகவும் வளர்த்து வர வேண்டிய கனவு அது. எப்படியும் பாப்பா சம்பந்தமான ஒரு மங்கள அழைப்பு இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னால், எங்கள் "மலை நாட்டு வளம்" காண அவர்களெல்லாம் வருவது என்னும் திட்டம் ஒன்றை, நாம் இருவரும் மிக ஆசையோடு பேசியது எனக்குக் கவனம் வருகிறது. உங்களுக்கு அது கவனத்தில் சதா இருக்க வேண்டும்.

இம்முறை உங்களுக்குக் கொஞ்சம் தேனும் கொடுத்து அனுப்பி இருந்தால், அது ஒரு குகனின் பரிசு போல் இருந்திருக்குமே என்றும், அகிலனும் ஒரு குழந்தை தான் என்பதைச் சரியான நேரத்தில் கவனம் கொள்ளாமல், தோழமையுணர்வு கொள்ளத் தக்க ஒரு மூத்த பிம்பமாக மனசுக்குள் பார்த்து விட்டோமோ என்கிற சிந்தனையும் - இவ்வாறு தாங்கள் சென்ற பின்பு நாங்கள் நினைத்து அலசியது நிறைய.

மொத்தத்தில் நீங்கள் தான் ஒரு நடமாடும் விருந்துக் கூடமாக வந்து எங்களையெல்லாம் உபசரித்தது போலும், ஆட்பட்டவர்களும் அனுபவித்தவர்களும் நாங்கள் தான் போலும், தாங்கள் வந்து சென்ற நாட்கள் எங்களுக்கு மனம் நிறைய நிறைய நிற்கின்றன. அவ்வப்போது ஆனந்தமாக அசை போடுகிறோம்.

ஓரிரு நாட்களில், அடுத்த கடிதத்தில், தொடர்கிறேன்.

- பி.ச.குப்புசாமி
30-10-80

தென் பெண்ணையாற்றுக்கரை கதைகள்

இராமமூர்த்தியின் "தென் பெண்ணையாற்றுக்கரை கதைகள்"

- வே.சபாநாயகம்


ஆற்றங்கரை நாகரீகம் எப்போதும் சிறப்பாகப் பேசப்படுவது. அது போலவே இப்போது ஆற்றங்கரைக் கதைகளும் பேசப்படுவனவாகிக் கொண்டிருக்கின்றன. மணிமுத்தாற்றங் கரையில் அந்தப் பிராந்திய வழக்குகளோடு கதைகள் அமைந்துள்ளது போல தென் பெண்ணையாற்றங்கரையிலும் வட தமிழ் மாவட்ட வட்டாரப் பின்னணியில் ரசமான சொல்லாட்சிகளுடன் கதைகள் - இராசேந்திரசோழனில் தொடங்கி இன்று இரா. இராமமூர்த்தியால் பெருமைப் படுத்தப் பட்டுள்ளதை அவரது முதல் கதைத் தொகுப்பான 'கனவு துளிர்த்த கதை' காட்டுகிறது.

இத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே வாசகனுக்கு நெருக்கமாய், கதாபாத்திரங்கள் முன்பே பரிச்சயமானவர்களாக இருப்பதால் கதை லகுவாக தடையற்று அலுப்புத் தராமல் ஓடுகின்றன. ஆசிரியர் அடிப்படையில் கிராமத்து விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அசலான கிராமத்து நடைமுறை வாழ்க்கை, பேச்சு எல்லாவற்றையும் வெகு நுட்பமாக உள்வாங்கி, தேனீ- மலர்களில் சேகரித்ததை திடமான சுவைமிக்க தேனாக மாற்றித் தருவது போல- தன் அநாயசமான நடை ஓட்டத்தால் ரசமான கதைகளாக ஆக்கி அளித்திருக்கிறார். கதைகள் எல்லாமே மனித நேயத்தைப் பேசுபவை. அதோடு மனித மனத்தின் ஆசாபாசங்களையும், அற்பத்தனங்களையும், அற்புதத்தையும் படம் பிடித்துக் காட்டுபவை. நாம் தினமும் பார்க்கிற மனிதர்களின் குண வேறுபாடுகளை, விசித்திரங்களை - ஆமாம் நாம் சொல்லியிருக்கலாமே என்று நினைக்கும்படியான நிகழ்வுகளை - அதாவது நித்திய யதர்த்தங்களை ஆரவாரமில்லாமல் அலங்கார ஜோடனையின்றி நாமே நேரில் நின்று காண்பது போலப் படைத்தளிப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்.

'வாத்து' கதையில் வாத்துமேய்க்கிற சிறுவன் அவைகளை வழி நடத்திச் செல்கிற உக்தியும் வாத்துக்களின் இயல்புகளும், வாத்துக்களுடன் நடந்து நடந்து அவனுக்கும் வாத்து நடை வந்துவிடுகிற யதார்த்தமும் - கதையோடு கதையாய் சொல்லப்படுவது கதாசிரியரின் கூர்ந்த நோக்குக்கும் நுட்பமான வெளிப்பாட்டுத் திறனுக்கும் உதாரணம்.

'திருப்பதி சட்டை' என்கிற கதை மேல்ஜாதியினரின் அற்பத்தனத்தில் பெண்களும் விதிவிலக்கல்ல என்பதைச் சொல்லுகிறது. வேலைக்காரியின் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதும், கொடுத்ததை விரும்பிச் சாப்பிடுவதும், சூட்டிகையாய்ப் பேசுவதும் - எல்லா வசதிகளும் கிடைத்தும் தன் பேரக் குழந்தை அப்படி இல்லாததை ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமை கொள்ளும் எஜமானியம்மாள், மருமகள் தன் குழந்தையின் பயன்படுத்தாத சட்டையை வேலை செய்யும் பெண்ணின் குழந்தைக்குத் தந்திருப்பதைப் பொறுக்க முடியாது கழற்றித் துவைத்துத் தரச் சொல்கிற அற்பத்தனம் - 'இப்படியுமா பெண்கள்?' என்று முகம் சுளிக்கச் செய்கிறது?

'நாற்றுகள்' கதை இன்னொரு விதமான - வசதி படைத்தோரின் வக்கிரத்தைச் சொல்கிற கதை. வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க அரசாங்கம் ஊக்குவிப்பதை மறுக்கும் விதமாக தன் மண்ணில் குடிசை போட்டிருக்கும் பணியாளின் மகன் நட்டு வத்திருக்கிற செடியைப் பிடுங்கி எறிந்து அதன் மூலம் அவன் தன் மண்ணில் சாந்தம் கொண்டாடு வதைத் தடுக்கிற நிலவுடைமை அதிகாரத்தின் சிறுமையை உளம் நெகிழ இக்கதை சொல்கிறது. 'அண்ணா'வின் 'செவ்வாழை'க் கதையின் சோகமும், பூர்ஷ¤வா அக்கிரமும் நினைவுக்கு வருகிறது.

தலைப்புக் கதையான 'கனவு துளிர்த்த கதை' அடிமட்ட மக்களின், எளிய கனவுகள் கூடப் பொய்த்துப் போவதும், பிறகு தன் வாரிசுக்கு அந்த வாய்ப்புக் கிட்டும் போது நிறை வேறாத தன்னுடைய கனவு மீண்டும் துளர்ப்பதில் பெருமிதம் கொள்வதுமான வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஒரு சின்னப் பூசல் என்றதும் நேர்மையைப் புறக்கணித்து விட்டு சாதிப்பற்று வெறிநாய் போலப் புகுந்து பிடுங்குகிற இன்றைய சாதீய வெறியின் கேவலத்தைப் பதிவு செய்துள்ளது - 'ஒரு மனிதன் சோகப்படுகிறான்' என்கிறகதை.

காந்தியடிகள் போராடிய ஹரிஜன ஆலயப்பிரவேசத்தை இன்னும் மேல் வர்ணத்தார் மனதார ஏற்காத நிஜத்தை 'வர்ணம்' என்கிற கதை காட்டுகிறது.

ஒடுக்கப்படுகிறவர்களும் ஒரு நாள் விழித்துக் கொள்வார்கள், அப்போது பழிதீர்க்கும் அவர்களது செயல் எவ்வளவு குரூரமாக அவர்களை இயக்கும் என்பதை 'சேதி' என்கிற கதை எச்சரிக்கிறது.

'பஞ்சாயத்துக்காரன் அடியாளா மாறுனா நீதி செத்துப் போகும்' என்று நியாயம் பேசும் நியாயவான்கள் 'கட்டப் பஞ்சாயத்து' மலிந்திருப்பதாய் நாம் கருதும் கிராமங்களில் இன்னும் இருக்கவே செய்கிறார்கள் என்று காட்சிப்படுத்தும் கதையான 'நியாயம்' ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு.

'கண்ணாலம்' கதை வரதட்சிணைக் கொடுமைக்கு எதிரான ஒரு கிராமத்துப் பெண்ணின் ஆவேசமான குரலைப் பதிவு செய்துள்ளது.

காலந்தோறும் எல்லா ஊர்களிலும் 'சீசனு'க்குத் தக்கவாறு மக்கள் பிழைப்பை நாடி தூரப் பயணம் செய்வது இயல்பான காட்சிதான். ஆனால் தென்னார்க்காடு மக்களின் 'மல்லாட்டை'ப் பொறுக்கச் செல்பவர்களது கோராமையை அம்மாவட்டத்தின் வடபகுதியான திண்டிவனம் - விழுப்புரம் பகுதியின் ரசமான வட்டார மொழிநயத்துடன் சொல்வதில் 'கி.ரா' போலவே இராமமூர்த்தி வெற்றி பெறுகிறார் - 'மேற்கிலிருந்து ஒரு பயணம்' என்கிற கதையில்.

'வாய்ப் பேச்சு' ஒரு ரசமான நையாண்டி கதை. 'கூட்டத்தில் கூடி நின்று கூவ்¢ப் பிதற்றலின்றி நாட்டத்தில் கொள்ளாத' வெட்டி மேடைப் பேச்சாளர்களைக் கேலி செய்கிறது கதை.

'வெற்றிகள்' இன்னொரு வித அரசியல் அங்கதக் கதை. அரசியல் கட்சிகளின் தலைவர்களது சுயநலமிக்க, காரியம் ஆனதும் கண்டு கொள்ளாத பாராமுகம் அவர்களைநம்பும் அப்பாவித் தொண்டர்க¨ளைச் சிறுமைப் படுத்துகிற அவலத்தை ஆதங்கத்தோடு சித்தரிக்கிறது இக்கதை.

கடைசிக் கதையான 'பலி' ஒரு நெடுங்கதை. பெண்ணையாற்றங்கரையில் மட்டுமே இன்னும் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் தெருக்கூத்துக்கலை அதற்கு ஆதரவு காட்டுபவர்களாலேயே பலியாக்கப் படுகிற கொடுமையை உருக்கமாகக் சொல்லுகிறது. இளைத்தவர்களை இடைத் தரகர்கள் எப்படி ஆளாளுக்கு அடித்துப் பிடுங்குகிறார்கள் என்கிற சொல்லி அழ முடியாத சோகத்தைக் கதை காட்சிப் படுத்துகிறது.

எல்லாக் கதைளுக்குமே மனித நேயமே அடிநாதமாய் இருக்கிறது. தான் பார்க்கும் தன் மக்களின் அவல வாழ்வினை, அவர்களது பெருமைகளை, சிறுமைகளை ஆச்சரியத்தோடும் ஆதங்கத்தோடும் - வாசப்பவர் மனம் கொள்ளுமாறு கதையாக்கித் தருவதில் பெரும் வெற்ற்¢ கண்டிருக்கிறார் ஆசிரியர். பாத்திரப் படைப்புகள் அருமை. நாம் நேரில் பார்க்கிற மாதிரியான மயக்கம் தரும் வருணனைகள், வாக்கு சாதுரியங்கள், ரசமான சொல்லாட்சிகள், சொலவடைகள் என்று எல்லாவகையிலும் திரு. இராமமூர்த்தி தான் ஒரு தேர்ந்த கதாசிரியர் என்ற இத்தொகுப்பின் மூலம் மெய்ப்பித்திருக்கிறார். 'கரிசல் காட்டுக் கதைகள்' தொகுப்பு போல 'ஆற்காட்டுக் கதைகள் ' என்று ஒன்று வெளி வருமானால் தவறாமல் இராமமூர்த்தியின் கதைகள் இடம் பெறும். பெண்னையாற்றங்கரைக்கு ஒரு புதிய வெளிச்சத்தை அவர் கொடுத்திருக்கிறார்.

கடித இலக்கியம் - 22

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

மட்றபள்ளி,
27-8-80

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம். உங்களுக்குத் திடுமென ஒரு சந்தோஷத்தை அளிக்கிறேன். அடுத்த மாதம் 27-9-80 சனிக்கிழமை எங்கள் ஆசிரியர் சங்கத்தில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம். அதற்குத் தங்களைச் சிறப்புச் சொற்பொழிவாளராக அழைத்துத் தருவதாக ஒப்புக் கொண்டு விட்டேன். தாங்கள் 26-8-80 வெள்ளி ஒருநாள் மட்டும் லீவு போட்டால் போதுமானது.

இவ்வாறு நாம் சந்தித்தால்தான் உண்டு போலும். எனவே தாங்கள் தயவு செய்து தவறாமல் இவ்வழைப்பை ஏற்றருள வேண்டுகிறேன். ஆசிரியர்தின விழா என்பதைக் கருத்தில் கொண்டு தாங்கள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் பேசலாம். வேறு பிரமுகர்கள் யாரும் இல்லை. ஒரு தனியறையில் நண்பர்கள் கூட்டம் போல் அமைதியாக நடக்கும். செயலாளர் ஆகியோர், என்னிடம் பேராம்பட்டில் பணியாற்றிய நெருங்கிய நண்பர்கள்.

வாருங்கள். நிறையப் பேசலாம். இயலுமானால் 29-9-80 திங்களும் லீவு போட்டு விட்டு வாருங்கள். வெள்ளக்குட்டையில் ஆறுமுகத்தைச் சந்திக்கலாம். அல்லது, ஜவ்வாது மலையில் உள்ள ஜம்னாமரத்தூருக்குப் போகலாம். தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய வானோக்கும் நிலையம் அங்கு உள்ளது. Telescopeல் எல்லாம் பார்க்கலாம் . Saturn ring தெரிகிறதாம். மலைவளம் மாளாது உள்ளது.

தென்னார்க்காடு ஜில்லா, பெரிய சமவெளியானது ஆதலால், ஜம்னாமரத்தூர் என்னும் மலைப்பகுதிக்குச் செல்வது, தங்களின் நெடுந்தூரப் பயணத்துக்கு- இன்னும் ஒரு, நியாயம் செய்வதாகும்.

தாங்கள் வருவதற்கு முன்பு நான் சென்னைக்கு ஒரு பயணம் போய் வர நேரும் போல இருக்கிறது. 18 அதிகாலையில் JK ரஷ்யா புறப்படுகிறார்.16 பிற்பகல் 17,18 - ஆக ஓர் இரண்டரை நாட்கள் லீவு போட்டுவிட்டுச் சென்னை போக நேரும். போவதைத் தவிர்க்கலாம் என்றுதான் பார்க்கிறேன். தண்டபாணி வற்புறுத்துகிறது. எத்தனையோ அருமையிலும் அருமையான சந்தர்ப்பங்களில், இடையூறு செய்யும் எத்தனையோ விதிகளை வென்று நாம் அவருடன் இருந்திருக்கிறோம். ரஷ்யாவிற்கு வழியனுப்புவதில் இல்லாமல் போவதா என்னும் இந்நினைவே பெருஞ்சக்தி கொண்டு எல்லாவற்றையும் வென்று என்னைச் சென்னைக்குப் போக வைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்!

தங்கள் குறுநாவல், தீபம் கதை இரண்டுமே நான் பார்க்கவில்லை. நான் படித்தது தினமணிச் சுடரில் வெளிவந்த, ஒரு ரிட்டையரான ஆசிரியரின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய அந்த ஒரு கதைதான். அதில், அரிய கதைப் பொருள் இருந்தது.

நான் எழுதுவது எப்போதும் போல் தான் இருக்கிறது. 1973ல் எழுதிய "கிருஷ்ண ரெட்டியாரின் குதிரைச் சவாரி" என்னும் கதை இந்த வருஷ ஜூலைக் கடைசியில் அலிபாபா பத்திரிகையில் வந்தது. மத்தியில் என்னென்னவோ எழுதினேன். நான் இப்பொழுது, கதை என்பது எப்படி எழுதுவது என்று தெரியாத, வேறு ஏதோ கலை சம்பந்தமான கச்சப் பொருள்கள் நிரம்பிய மனமுள்ள மனிதன். ஆரம்ப எழுத்தாளன். அனுப்புகிற கதைகளும் எழுதுகிற கதைகளும் பிரசுரத்துக்கு ஆகாத அந்த "ஓர் எழுத்தாளனின் ஏமாற்ற உணர்ச்சியை" அனுபவிப்பதற்கு எனக்குப் பூரண வாய்ப்பிருக்கிறது. ஆனால் என் பிரச்சினையாக அது இல்லை.

நான், வெள்ளைத் தாளில் ஓர் அறுபது பக்கங்களுக்கு இருந்தாலும் கூடப் போதும், இன்னும் ஒரு நாவல் எழுதலாம். கல்பனாவில் வரும். என்ன எழுதுவது என்கிற யோசனையை ஒரு முடிவுபெறாத வேலையாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் உங்கள் சமீபத்திய புத்தகத்தைக் கொண்டு வாருங்கள்.வாழ்க்கையை உணர்கிற உங்களது நாடிப் படபடப்பில்தான் உங்கள் மற்ற எல்லாக் கதைகளையும் நாங்கள் படிக்கிறோமே! பத்திரிகை வாசிப்பு என்பது என்ன பெரிய விஷயம்? எல்லாவற்றையும் பேசுவோம். ஒருவர் மாற்றி ஒருவர் நெடு நேரம் பேசுவோம். ஒருவர் மாற்றி ஒருவர் நெடு நேரம் கேட்டுக் கொண்டிருப்போம். இருவரும் கலந்து கலந்து பேசுவோம். எல்லாக் கதைகளையும் அது பேசி விட்ட மாதிரி.

நாம் எழுதுகிற விஷயங்களும் கதைகளும் சம்பந்தப்பட்ட நிர்ணயிப்பு அல்ல, நமது உறவின் தலையெழுத்தை நீட்டித்துக் கொண்டிருப்பது! ஆத்மாவின் தேவைகளாக நமது உறவுகள் எப்பொழுதும் ஏதோ ஒரு ரூபத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நாம் அவற்றைப் பேணுபவர்கள் என்பதும், கதை எழுதுவது என்பதும் சரிசமமான பொறுணர்ச்சியோடு கூடியதாகும். இரண்டிலுமே தோல்வியுறல் ஆகாது.

இந்த மாதிரி இன்னும் ந்¢றைய விஷயங்கள் இருக்கின்றன. நாம் பார்ரத்துக் கொள்ளாதிருப்பது போய், கடிதமெழுதாதிருக்கிற காலத்துக்கும் வந்து விட்டோம். இதை உடனடியாக முறிப்பது அவசியம். எனவேதான் இந்த ஆசிரியர் சங்க ஆயுதம்.

எங்கு நோக்கினும் வாழ்க்கை அற்புதமாக இருக்கிறது. சொந்தப் பிரச்சினை களால் பாதிக்கப்படாத பரம நிலையில் நின்று மிகத் துணிச்சலாகச் சொல்ல வேண்டிய விஷயம் இது. ஆறுமுகத்தின் குடும்பம், வையவனின் குடும்பம் என்று நண்பர்களின் குடும்ப வாழ்வை நெருங்கிச் சென்று அறியும் போது, எவ்வளவோ ஆசீர் வாதங்களுடனும் அழகுகளுடனும் அவை அமைந்திருப்பது தெரிகிறது. அடிக்கடி தங்களையும் நினைத்துக் கொள்வதுண்டு.

இந்த ஆண்டு எனக்கு மறக்க முடியாத விருந்தினர்களின் வருகை நிரம்பிய ஆண்டாகும். அந்தப் பட்டியலில் தாங்களும் எப்படியும் இடம் பெற்று விட வேண்டும். தவறாது வருக.

தங்கள் கடிதத்தில், குழந்தைகளின் படிப்பு முதலிய விவரங்களை எழுதுங்கள். உங்கள் ஒப்புதல் கடிதம் வந்ததும், வழிவிவரம் இறங்க வேண்டிய இடம் முதலியன குறித்து எழுதுகிறேன்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி

கடித இலக்கியம் - 21

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 21

நாகராஜம்பட்டி
24-10-78

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

ஒரு மூன்று மாதங்களுக்கு முன்னால் தங்களுக்கு எழுதி, தபாலில் சேர்க்காது விட்ட ஒரு கடிதம் இத்துடன் வருகிறது. இது எவ்வளவு அநியாயம் என்பது இன்று தான் - இப்போதுதான் எனக்கு உறைக்கிறது என்று இல்லை. இந்த உணர்க்கை எப்பொழுதுமே எனக்கு உண்டு. என்ன செய்வது? வாழ்க்கையில் நேரங்கள் எதெதற்கோ பங்குபோய் விடுகின்றன.

அதுவுமின்றி, சில இடங்களுக்கு எல்லாம் வெறுமனே கடிதம் எழுதினால், அதில் ஒன்றும் அவ்வளவாகத் திருப்தி இல்லை. எண்ணுவதை எல்லாம் எழுதுவதில் ஏதோ திருப்தி கிடைக்கிற அந்தப் பிராயம் போய் விட்டது. சொல்ல நினைப்பதை எல்லாம் சொல்லாமல் - பரவாயில்லை என்று விட்டு விடுகிற ஒரு பக்குவம் வந்தாயிற்று.

நாமெல்லாம் எங்கெங்கோ இருந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கற்பூரம் இன்னும் கரையாமல் இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் பூஜைக்கு ஏற்றிக் கொள்ளலாம்.

தாங்கள் எழுதிய பரீட்சை முடிவுகள் வந்தாயிற்றா? அமைதியாகவும் அதே சமயத்தில், உணர்ச்சியின் இனிய குரலொலிகளுடனும், தெம்பாகவும், தீம்பு எதுவும் நேர்ந்துவிடாது என்கிற திட நம்பிக்கையுடனும், தங்களுக்கே உரிய விசேஷ குணமான சிரத்தை மற்றும் sensitivity உடனும் இருங்கள் என்று வாழ்த்துகிறேன்.

நான் உங்களைவிடச் சின்னவன். ஆனால் ஒரு குழந்தையை வாழ்த்தத் தோன்றுவது போல் வாழ்த்துகிறேன். இதனைப் பெறுக.

இங்கே அனைவரும் நலம். வாழ்க்கை எப்பொழுதும் போல். ஆனால் நான் எப்பொழுதும் எப்படி வாழ்கிறேன் என்று தங்களுக்குத் தெரியுமா? அது ஒரு பரம நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறது. வெளிச் சித்தரிப்புகளில் வேறு எந்தவித விசேஷமுமில்லை. என் பாஷையின் கிரீடம் எப்போதும் என் தலைமேல் இருக்கிறது. அவ்வளவுதான்.

சிவகுமார் ஐந்தாவது படிக்கிறான். வைஷ்ணவி மூன்றாவது படிக்கிறாள். அவர்கள் டவுனில். நாங்கள் இங்கே. விடுமுறைகளில் குழந்தைகள் கூடுவார்கள். அவர்களுக்காக நான் தருவதும் குறைவுதான். அவர்களுக்கு அந்தக் குறை தெரியவில்லை. வாழ்வு அவர்களுக்குப் பெரிய வியப்பாகவும் களிப்பாகவும் இருக்கிற பருவத்தில் வேறு குறைகள் எல்லாம் ஏன் வரும்?

குறைபட்டுக் கொள்ளும் கல்வியை உலகுதான் போதிக்கிறது. நிறைவு கொள்ளும் பண்பு ஓர் அருளாகும்.

தங்கள் வாழ்க்கையின் தோற்றமே மாறியிருக்கும் அல்லவா? ஒரு மருமகனை ஏற்கும் பருவம் தானே உங்களுக்கு? தலையில் நரையோடியிருக்கிறதா? எதிர்காலத்தைப் பற்றி ரொம்பப் பொறுப்பாகவெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறதா?

அகிலன் ஒரு தஞ்சாவூர் இளைஞன் போல்தான் இருப்பான். அன்று அவன் வாயில் குதப்பிக் கொண்டிருந்தசிவந்த வெற்றிலையும் சிரிப்பும் பேச்சும் அப்படித்தான் என்னை நினைக்க வைத்தன. நமது நல்லுணர்ச்சிகள் அவர்களுக்கு மெருகுகளாகச் சென்று சேர்வதாக.

எனது நீண்ட "பதிலின்மை", தங்களது வருகையைத் தடுத்துவிட்டது. இந்தக் குற்றம் என்னைச் சார்கிறது. எனவே வருமாறு அழைப்பதில் ஒரு அநாகரீகமோ - நாசூக்கின்மையோ தட்டுகிறது. ஆனால், வந்தால் எவ்வளவு மகிழ்வேன் தெரியுமா? இதெல்லாம் நமக்குள் சொல்லிக் கொள்ளத் தேவையற்றவையே.

பேராம்பட்டிலேயே பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். JKவை மே மாதம் பார்த்ததுதான். நவம்பரில் போகலாமா என்று ஒரு நப்பாசை.

தங்கைக்கு இன்னும் டீச்சர் வேலை கிடைக்கவில்லை. வீட்டிலேயே சிறு பிள்ளைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் தருகிறது. நியாயமாக அதன் கல்யாணம் குறித்துக் கவலைப்பட வேண்டும். ஆனால் வாழ்வு இப்போது முதன்மையாக அதன் உத்தியோகத்துக்கே தவம் கிடப்பதாக இருக்கிறது.

"போதிக்கிற தொழிலுக்கென்று அரசாங்கம் எனக்குத் தருகிற சன்மானம் அல்லாமல், வேறொரு காசு அதற்காக நான் இதுவரை பெற்றதில்லை" என்கிற பெருமையை இழந்து, நானும் தற்சமயம் பேராம்பட்டில் ட்யூஷன் வைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் முதல் மாதச் சம்பளக் காசுகளை வாங்கவில்லை.

மனைவி நலமே. அவ்வப்பொழுது சகஜமான நலிவுகள். பல விஷயங்களில் முதிர்ந்த ஞானியாகி விட்டாள். ஆனால் பெண்ணின் இலக்கணங்களுக்குள்ளும் அடக்கலாம்.

என்னைச் சுற்றி இருக்கும் எல்லோருக்கும் என் வாழ்முறைகள் வித்தியாசமானவையாகத்தான் தெரிகின்றன. நான் சாதாரண மாதிரியாய் இருந்து விட்டால் பல பிரச்சினை இருக்காது. ஆனால் எனக்குச் சுவையும் இருக்காது. எனினும் நானும் ஜனங்களும் எங்கள் உறவுகளில் திருப்தி பட்டுக் கொள்கிறோம். அப்படி மனிதர்களை வசீகரிக்கிறவனாகத்தான் நான் இருக்கிறேன்.

மேடைகளில் எப்பொழுதாவதுபேசினால், நான் ஒரு செகண்டரிகிரேடு வாத்தியார் என்பதை மறந்து விடுகிறேன்.

இந்தக் கடிதம் எங்கள் தீபாவளி வாழ்த்துக்களைக் கொண்டு வருவதாகவும் அமைவதாக.

நான் எழுதினால் என்ன, எழுதாவிட்டால் என்ன? நீங்கள் எழுதுங்களேன். தொடர்ந்து உங்கள் கடிதங்கள் வந்து கொண்டிருந்து, அந்தச் சுழற்சியால் என்னையும் இழுத்துச் சுற்றிக் கொண்டால் ஒழிய கடித விஷயத்தில் நான் இனி மிகுந்த குறை பாடுடையவனாக மாறி விடுவேன் போலிருக்கிறது.

ஒரு ஸ்பரிசம். அது பரிமாறுகிற விஷயங்கள் எவ்வளவோ. அது போல், எப்பொழுதோ ஒன்றாக நான் எழுதத் துவங்கினாலும், மிக்க அத்யந்த உணர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறேன். நான் சொல்லாததையெல்லாம் கூட நீங்கள் உணர்ந்து கொள்ளுமாறு உங்களைத் தொட்டுக் கொண்டு விட்டேன். கடிதங்களின் தேவை இது. அவை எப்பொழுதும் இங்ஙனம் தீரும்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி

நாகராஜம்பட்டி,
24-10-78

கடித இலக்கியம் - 20

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 20

நாகராஜம்பட்டி
11-6-78

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

லோகதயமாகத் தங்களுக்குச் சில கடிதங்கள் எழுதிவிட்டதாகத் தோன்றுகிறது. மனசைப் பறிமாறிக் கொள்ள இதை எழுதுகிறேன்.

நாளாக நாளாகப் பெரும் பொறுப்புகள் நம்மை எதிர்நோக்கி வருகின்றன போல் தெரிகிறது. ஆனால் உண்மையில், எந்த ஒரு பெரிய பொறுப்புக்கும், நாம் நம்மால் முடிந்த அளவு பங்கைச் செலுத்தினால் போதும்; வாழ்க்கை நம்மை அலைக்கழிப்பதைப் போல, அதுவே எல்லாவற்றையும் தாங்கியும் கொள்கிறது. தொடர்ந்த துயரங்கள் எதிலும் மனித உள்ளம் உழல்வதே இல்லை. எலையற்ற துன்பச் சூழலிலும் அது இடையிடையே எண்ணற்ற ஆனந்தங்களை கண்டு அனுபவித்துக் கொண்டி ருப்பதுதான் உயிரின் சத்தியம். நமது சிந்தனையில் நாமாகக் கெடுத்துக் கொள்வது தான் எல்லாக் கவலைகளூம்.

உங்களை நேர்முகமாகப் பார்த்து நெடுங்காலம் ஆகிவிட்டது. உங்கள் வாழ்வு எங்கேயோ, என் வாழ்வு எங்கேயோ என்று இருந்து கொண்டிருக்கிறோம். ஆயினும் சிதம்பரவெளியில் சிவமணம் கலந்தது போல், நினைவுவெளியில் பிரிவுகளையெல்லாம் தாண்டி நாம் எப்பொழுயும் நேர்ப்பட்டுக் கொள்கிறோம். கடிதங்கள் இதற்குத் தானோ என்னவோ?

இதுகூட இரண்டாம் பட்சம்தான் என்று தோன்றுகிறது. கடிதங்கள் எழுதக் கஷ்டமாயிருக்கிறது சபா! எழுத்து ஒரு தடை அல்லது மடைமாற்றம்.

நேருறச் சொல்லி ஆனந்திக்க வேண்டும். அல்லாத பட்சத்தில் பிற வெளிப்பாடுகள் யாவும் கவிதையாய்க் கலையாய்ப் பல்வகைக் கானமாய்ப் பெருக்கெடுக்க வேண்டும். எருக்களை ஓவியம் தீட்டி புஷ்பங்களின் காட்சியருகே கொண்டுபோய் வைத்து என்ன பயன்? நமது சின்னஞ்சிறு கவலைகளை, நமது கரம் கொண்டு எழுதிச் சாஸனமாக்க, அவற்றுக்கு என்ன யோக்கியதை! கரப்பான் பூச்சிகளையோ தின்று ஒரு சிங்கம் பசியாறும்? எனவேதான் கஷ்ட நஷ்டங்களைச் சொல்வதுமில்லை;

அவற்றைக் கேட்கும் போதும் இவை இந்த வாழ்வில் நிலையானவை என்று நினைப்பதுமில்லை.

அஞ்சாதிருப்பது நமது வீரம். முடிந்ததைச் செய்வது நம் கடமை. பக்தி செலுத்துதல் நமது பாங்கு. கலைகளே நமது சுக துக்கங்கள். இவ்வாறு போகிற நாம் ஏதோ ஒரு தவறால் வழி தவறினாலும், சரியான வழிக்கு வெகு அருகிலேயே இருந்து, சட்டென்று மறுபடியும் அதில் சேர்ந்து கொள்வோம்.

சென்னையில் இம்முறை ஜெயகாந்தனோடு இருந்த நாட்களில், இரண்டு நாட்கள் அவரைக் கண்ணெதிரே வைத்து ஒப்பிட்டுக் கொள்கிற மாதிரி 'Gospel of Sri.Ramakrishna' என்கிற புத்தகத்தில் ஒரே மூச்சாய்த் தோய்ந்தேன். ராமகிருஷ்ணரின் சபைக்கும் இவர் சபைக்கும் பல ஒற்றுமைகள் தென்படுகின்றன. (ஆனால் வழித் தோன்றல்களாகத்தான் இங்கே யாருமில்லை.) பணிகள் வேறுவேறு. ஆனால் நோக்கம் ஒன்றே. ஓர் உன்னத வாழ்வியலுக்கு மனிதர்களை உயர்த்துதல்.

பக்தியென்பது இப்போதெல்லாம் வேறு மாதிரி ஆகிவிட்டது. அப்படி ஒன்று தனியாக இல்லை. அதற்கு நாம் எதுவும் செய்ய வேண்டியது இல்லை. ஏற்கெனவே நம்முள் நிரம்பி வழிந்து ஒரு harmony கொண்டு விட்டிருக்கிறது. (சரியான ஆங்கிலச் சொல்தானா என்று தெரியவில்லை.) தமிழில் நான் நினைத்ததைச் சொல்லுகிறேன். "ஒரு லயம் கொண்டிருக்கிறது". நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே பக்தியினால் தான் என்று நம்புகிறேன். உலகக் காரியங்களை இனி நம் போக்கில் செவ்வனே செய்ய முயற்சி எடுப்பதுதான் இனி நமது பிரயாசை; அதுவே நமது பூஜை.

பூசும் சாந்து என் நெஞ்சமே! புனையும்
கண்ணி என்னுடைய
வாசகம் செய் மாலையே! வான் பட்டாடையும்
அ·தே!
தேசமான அணிகலனும் செங்கை
கூப்பும் செய்கையே!

ஈசனோடு என் பூஜா கைங்கரியங்களை நான் இவ்வாறு வைத்துக் கொண்டு விட்டேன். உங்களையும் பிற நண்பர்களையும், என்னைச் சந்தித்துப் பிரிந்தவர்களையும், சந்திக்கப் போகிறவர்களையும் எப்போழுதும் பார்த்துப் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். எனவேதான் கடிதங்கள் எழுதுவதில்லை......

- பி.ச.குப்புசாமி

கடித இலக்கியம் - 19

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 19

திருப்பத்தூர்.வ.ஆ.
23-5-77

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

தங்கள் கடிதங்கள் வந்தன. திடீரென்று ஒரு நாள், தந்தையாரின் இறுதிக் கடன் அறிவிப்புக் கார்டு வந்து, அந்த நாளை வேறு விதமாக மாற்றியது. இரண்டு மூன்று நாட்களுக்கெல்லாம், "தகவல் தங்களுக்குத் தெரிந்ததா?" என்று கேட்டுத் தாங்கள் எழுதிய கார்டும் வந்தது.

எனக்கு முகமில்லாமல் போய்விட்டது. வாழ்வை உல்லாசம் என்றும் விளையாட்டு என்றும் வர்ணிக்கப் புகுந்தவன், இதற்கு என்ன எழுதுவேன்?

உடனேயே இங்கு கிராம ஜனங்களோடு நான் ஒரு டூர் போக வேண்டியிருந்தது. அந்த டூரின் முடிவில் உங்கள் ஆசனூர் வழியாகக் கூட பஸ் வந்தது. அப்புறம் தாங்கள் சென்னை செல்கிற தேதியும், எப்போது வருவீர்கள் என்ற தேதியும் எனக்குக் கொஞ்சம் குழப்பமளித்தன. இடையில் ஏதோ ஒரு விலாசத்துக்கு எழுதலாம் என்று பேனா எடுத்த போதெல்லாம், ஓரிரு வரிகளுக்கப்புறம் நகரவே இல்லை. அந்த மாதிரி எழுதிஎழுதி வைத்த காகிதங்கள் சில உண்டு.

எனக்கு எழுதத் தோன்றியவற்றை எழுதியிருந்தால் அவை உங்கள் உணர்ச்சிகளை இன்னும் கொஞ்சம் விசிறி விட்டிருக்கும். என்றைக்கோ ஒரு நாள் வந்தவன், தெற்கு வடக்குப் புத்தூரில் அந்த வீட்டில் அந்தப் பெரியவர் நிலவிய காட்சியை, இனி எப்போது காண்பது என்று நினைவு பிறக்கையில், இவ்வாறு நினைக்கவும் ஏங்கவும் நெடுங்கடல்கள் உள்ள தாங்கள் அவற்றை நீந்திக் கரை ஏறுவது, பிறர் எழுதுகிற, சொல்கிற எதையும் பொறுத்ததன்று.

எனக்குத் தோன்றியவற்றை உள்ளடக்கி, வாழ்வின் பொது விதிகளைப் பேசி, ஆறுதலும் தேறுதலுமாக எதை எழுதுவதும் எனக்குச் செயற்கையாகப் பட்டது.

- ஒருநாள் ஆறுமுகத்துக்குச் சொன்னேன், 'பித்ரு சோகத்துக்கும் புத்திர சோகத்துக்கும் தான் எனக்கு மாற்று தெரியவில்லை' என்று. தாரமிழப்போர் சோகமும் இதில் அடங்கும்.

இப்பொழுதும் கூட, நேரில் சந்திக்கும்பொழுது அல்லாமல், நடுவில் நடக்கிற எத்தனை கடிதங்களினாலும் இந்த விஷயம் குறித்த நமது சம்பாஷணை முழுமையாக நடத்தப்பட முடியாது என்றே தோன்றுகிறது.

அவர் பெருமைகளை நினைவதும் பேசுவதும் நலம் பயக்கும். அதன் தொடர்பாகவும் முடிவாகவும் உருவாகிற சோகத்துக்கு என்ன செய்வது என்பது மட்டும் எனக்குத் தெரியவில்லை.

தாங்கள் மனம் கொட்டி விரிவாக ஒரு கடிதம் எழுதுங்கள். தாயார், சகோதரர்கள் தங்களுக்குத் தந்தையார் பற்றி வந்த நினைவுகள் - அனைத்தையும் எனக்கு எழுதுங்கள். விவரிக்க முடியாத அந்த ஆழம் எப்படி மனதுக்குள் பகீரென்று பிறந்தது

என்றெல்லாம் எழுதுங்கள். அந்த ஆழியின் அலைகளில் எற்றுண்டு, மெள்ள மெள்ள எப்படி உலகத்தின் கரைக்கு ஒதுங்குனீர்கள் என்று விவரியுங்கள். இவற்றின் மூலம் தங்கள் மனசில் நான் பங்கேற்றுக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. அப்படிப் பங்கேற்றுக் கொள்வதன்றி, நான் எதுவும் எழுத இருப்பதாக எனக்குத் தோன்ற மாட்டேனென்கிறது.

- மறுபடியும் தற்சமயம் தங்கள் இருப்பிடம், விலாசம் பற்றி உறுதியாக எதுவும் தெரியாமல் சூழ்நிலை மயங்குகிறது. பரீட்சைகளை ஊதித் தள்ளிவிட்டு வாருங்கள். தங்களுக்கு எப்படியும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இதை அரியூர் முகவரிக்கே எழுதுகிறேன்.

தாயாருக்கும், தங்கையற்கும் ஆதரவுணர்ச்சியும் அன்பும் மிகக் காட்டுவீர்கள் என்று உணர்கிறேன். தங்களுக்கு நான் இருப்பதாகக் கருதவும் வேண்டுகிறேன். சந்திப்பதும் பேசுவதும் எழுதுவதும் என்று மட்டும் ஏதும் வரம்பிலாத வெளிகளில் நாம் சஞ்சரிக்கிற காரணத்தால் இது சாத்தியம்.

- ஒவ்வொரு சமயத்திலும் இன்னும் கொஞ்சம் திடம் கொண்டு நாட்களை எதிரிடுங்கள்.

தங்கள்பால்
மிக்க அன்புடன்,

பி.ச.குப்புசாமி

கடித இலக்கியம் - 18

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 18

நாகராஜம்பட்டி
16-3-77

அன்புள்ள சபா,

வணக்கம்.

பக்தி செய்வது ஒரு நல்ல மனநிலை. அது உத்தமமான பலன்களை உண்டாக்கும். பக்தியில் அதீத நிலை உண்டாகிற போது அதற்குப் பயப்படாதீர்கள். உஷத் காலமும், ஒரு குளியலும், குத்துவிளக்கும், கூப்பிய கரங்களும் மனசுக்கு அபாரமான தெம்பையும் நம்பிக்கையையும் ஒரு தெளிவையும் தரும். அதை மேலும் உங்கள் உதவியால் எவ்வளவு மகிழ்ச்சிகரமாக்க முடியும் என்று பாருங்கள். கூடச் சேர்ந்து நீங்களும் பிரார்த்தியுங்களேன். ஓய்ந்த நேரத்தில் இதிஹாஸ சம்பவங்களையும் அவற்றின் உள்ளார்ந்த அர்த்தங்களையும் அழகுகளையும் உங்கள் நயம் கலந்து விவரித்துச் சொல்லுங்களேன். 'தெய்வம் நமக்குத் துணை பாப்பா, ஒரு தீங்கு வரமாட்டது பாப்பா' என்று சிறு வயதிலேயே நாம் படித்ததை ஞாபகப் படுத்துங்களேன். அன்பின் மகத்தான பரிமாணங்களில் சகிப்புத்தன்மை அதற்கு எப்பேர்ப்பட்ட காவிய உருவைத் தருகிறது என்று முடிந்தால் மெள்ளக் கற்றுக் கொடுங்களேன்.

உங்களது ரகசியமான ஒரு குரல் கூட துயரம் தோய்ந்து தனக்குத் தானே எப்போதேனும் பேசிக் கொள்ளக் கூடாது. நீங்கள் உல்லாசி. அது உங்களுக்கே மறந்து போய்விட்டதா? விளையாட்டு மைதானத்தில் பந்தாடுகிற உங்களுக்கு விசன வேதாந்தத்தின் பல்லவி எதற்கு? வேதாந்தத்தில் தைரியமானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (உண்மையில் வேதாந்தம் என்பது தைரியம் அன்றி வேறு எதுவும் கலவாததே ஆகும்.)

நீங்கள் எம்.ஏ படிப்பதுதான் மிகவும் பரிவுக்குரிய விஷயமாயிருக்கிறது. நிறைய வேலை வாங்குகிறது போலும். கடவுள் எதனாலோ என்னை அந்தப் பக்கம் போக விடவில்லை. உங்கள் முயற்சிகள் நிறைவேறவும், அதனால் வாழ்வு மேலும்மேலும் நிறைந்து வளரவும் வாழ்த்துகிறேன்.

என் வீட்டில் இப்போது ஏராளமான உயிர்கள் இருகின்றன. இருபதுக்கு மேலே புறாக்கள், பதினாறு கோழிக்குஞ்சுகள், மூன்று கோழிகள், ஒரு சேவல், பீமா என்று ஒரு நாய்க்குட்டி. மற்றும் இங்கே நானும் என் மனைவியும் மகளும். சிவகுமார் திருப்பத்தூரில். இந்தக் குடும்பத்தைக் குந்தகமின்றிக் கொண்டுபோய்க் கொண்டு நானும் குதூகலமாயிருப்பது ஒன்றே எனக்குப் போதும் போல் தோன்றுகிறது.

வருத்தங்கள் வேண்டவே வேண்டாம். எப்போதும் விளையாடிக் கொண்டு வாருங்கள். அல்லது பக்தி செய்துகொண்டு வாருங்கள். எதைச் செய்தாலும் அதைப் பக்தியாக்கிக் கொள்கிற ஒரு பரம ரகசியத்தைப் புரிந்து கொள்ளுங்கள். பிரச்னை பெரிது இல்லை.

நான் உங்களுக்கு உபதேசங்களாக எழுதுகிறேனா? அப்படி ஒரு குரல் ஜாடையின் குறை என் பாஷையில் இருக்குமானால் மன்னியுங்கள். நான் எனக்கே சில மந்திரங்களை மறுபடியும் மறுபடியும் உருவேற்றிக் கொள்கிறேன். எதிரே ஒரு ஆள் வேண்டும். தங்களை நண்பராய் அடைந்த பேற்றினுக்கும் இவ்வாறெல்லாம் ஒரு நட்பில் பேசிக்கொள்ள முடிகிறதே என்னும் பேற்றினுக்கும் பெரிதும் நன்றி சொல்லிக் கொண்டே ஒவ்வொன்றையும் நான் எழுதுகிறேன்.

***** ***** *****

19-3-77

வாழ்விலேயே அதிக சந்தோஷத்தோடும் நம்பிக்கையோடும் நாம் இருக்கிற தருணம் மற்றவர்களுக்குச் சந்தோஷம் பற்றியும் நம்பிக்கை பற்றியும் நாம் சொல்கிற தருணம் தான் என்று, மூன்று நாட்களுக்குப் பிறகு மறுபடியும் உங்களுக்குத் தொடர்ந்து எழுத ஆரம்பிக்கும்போது தோன்றுகிறது. அச்சத்தை வென்று விட்டால் எல்லாம் பரிபூரண ஆனந்தமே. பாரதியின் அச்சமில்லை பாட்டை நம் குழந்தைகளுக்கெல்லாம் இப்போதிருந்தே சொல்லிக் கொடுக்கவேண்டும்.

மனசைப் பரிசோதிக்கும் போது - அல்ல, அதன் அடிநிலை அறியும்போது, வரண்டு விரக்தியுற்ற மனமாயினும் அதனுள் உணர்ச்சிகளின் மாயம் எவ்வாறெல்லாம் மறைந்திருக்கும் என்பதை நான் சமீபத்தில் அறிந்து கொண்டேன். இதனால், வயசும் காலமும் நமது வர்ணங்களை மாற்றிவிட முடியாது என்பதையும் தெரிந்து கொண்டேன்.

நான் மிகச் சிறந்த விஞ்ஞானியாயினும் பக்தி செய்ய விரும்புவேன். எனது பக்திக்கு எது பொருள் என்னைக் கேட்காதீர்கள். அது பக்தி செய்கிறது என்பது ஒன்றே நான் அறிந்தது. மற்றவையெல்லாம் எனது இதிஹாஸங்களும், கவிகளும், உலக சமயங்களும் இதுவரை எனக்குத் தந்த வர்ணணைகளின் மேல் நான் கட்டும் மாய மாடமொன்றில் நின்று தொலைவையளக்கும் என் தூரப்பார்வைகளேயாம்.

***** ***** *****

6-4-77

இந்தக் கடிதத்தை எழுதி எதிலோ ஒரு நோட்டுப் புத்தகத்தில் வைத்து விட்டேன். நேற்றுத்தான் கவனமாய்த் தேடி கண்டுபிடித்தேன்.

அடேயப்பா, இடையில் உலகத்திலும் நமக்குள்ளும் எத்தனை பெரிய விஷயங்கள் நடைபெற்றிருக்கின்றன! நமது உறவும் சம்பாஷணைகளூம் அபூர்வமானவைதாம். எவ்வளவோ விஷயங்களில் ஆழ்ந்து போயினும், உங்களைப் பற்றி நினைக்கின்ற பொழுதும் உங்களுக்கு எழுதுகிற போதும் அதிலும் ஓர் அடிநிலை வரைக்கும் ஆழ்ந்து போகிறேன். மேலே எழுதியிருக்கிற விஷயங்களை நீங்கள் ஒரு காரணமாயிருந்து தெரிவிக்கிற விஷயங்களாகவே கருகிறேன். இதுதான் இதற்கு முத்தாய்ப்பு.

விரைவில் சென்னை போகலாம் என்று இருக்கிறேன். அது மே விடுமுறைத் தொடக்கம் வரைக்கும் அதிக பட்சம் ஒத்திப் போகும். நீங்கள் பரீட்சைக்கு மதுரை போகிறீர்கள் இல்லையா? நல்லது. காரியங்கள் நன்கு நடக்கட்டும்.

பரீட்சையும் எழுதுங்கள். ஒரு பதிலும் எழுதுங்கள்.

- பி.ச.குப்புசாமி.