Friday, November 03, 2006

கடித இலக்கியம் - 19

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 19

திருப்பத்தூர்.வ.ஆ.
23-5-77

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

தங்கள் கடிதங்கள் வந்தன. திடீரென்று ஒரு நாள், தந்தையாரின் இறுதிக் கடன் அறிவிப்புக் கார்டு வந்து, அந்த நாளை வேறு விதமாக மாற்றியது. இரண்டு மூன்று நாட்களுக்கெல்லாம், "தகவல் தங்களுக்குத் தெரிந்ததா?" என்று கேட்டுத் தாங்கள் எழுதிய கார்டும் வந்தது.

எனக்கு முகமில்லாமல் போய்விட்டது. வாழ்வை உல்லாசம் என்றும் விளையாட்டு என்றும் வர்ணிக்கப் புகுந்தவன், இதற்கு என்ன எழுதுவேன்?

உடனேயே இங்கு கிராம ஜனங்களோடு நான் ஒரு டூர் போக வேண்டியிருந்தது. அந்த டூரின் முடிவில் உங்கள் ஆசனூர் வழியாகக் கூட பஸ் வந்தது. அப்புறம் தாங்கள் சென்னை செல்கிற தேதியும், எப்போது வருவீர்கள் என்ற தேதியும் எனக்குக் கொஞ்சம் குழப்பமளித்தன. இடையில் ஏதோ ஒரு விலாசத்துக்கு எழுதலாம் என்று பேனா எடுத்த போதெல்லாம், ஓரிரு வரிகளுக்கப்புறம் நகரவே இல்லை. அந்த மாதிரி எழுதிஎழுதி வைத்த காகிதங்கள் சில உண்டு.

எனக்கு எழுதத் தோன்றியவற்றை எழுதியிருந்தால் அவை உங்கள் உணர்ச்சிகளை இன்னும் கொஞ்சம் விசிறி விட்டிருக்கும். என்றைக்கோ ஒரு நாள் வந்தவன், தெற்கு வடக்குப் புத்தூரில் அந்த வீட்டில் அந்தப் பெரியவர் நிலவிய காட்சியை, இனி எப்போது காண்பது என்று நினைவு பிறக்கையில், இவ்வாறு நினைக்கவும் ஏங்கவும் நெடுங்கடல்கள் உள்ள தாங்கள் அவற்றை நீந்திக் கரை ஏறுவது, பிறர் எழுதுகிற, சொல்கிற எதையும் பொறுத்ததன்று.

எனக்குத் தோன்றியவற்றை உள்ளடக்கி, வாழ்வின் பொது விதிகளைப் பேசி, ஆறுதலும் தேறுதலுமாக எதை எழுதுவதும் எனக்குச் செயற்கையாகப் பட்டது.

- ஒருநாள் ஆறுமுகத்துக்குச் சொன்னேன், 'பித்ரு சோகத்துக்கும் புத்திர சோகத்துக்கும் தான் எனக்கு மாற்று தெரியவில்லை' என்று. தாரமிழப்போர் சோகமும் இதில் அடங்கும்.

இப்பொழுதும் கூட, நேரில் சந்திக்கும்பொழுது அல்லாமல், நடுவில் நடக்கிற எத்தனை கடிதங்களினாலும் இந்த விஷயம் குறித்த நமது சம்பாஷணை முழுமையாக நடத்தப்பட முடியாது என்றே தோன்றுகிறது.

அவர் பெருமைகளை நினைவதும் பேசுவதும் நலம் பயக்கும். அதன் தொடர்பாகவும் முடிவாகவும் உருவாகிற சோகத்துக்கு என்ன செய்வது என்பது மட்டும் எனக்குத் தெரியவில்லை.

தாங்கள் மனம் கொட்டி விரிவாக ஒரு கடிதம் எழுதுங்கள். தாயார், சகோதரர்கள் தங்களுக்குத் தந்தையார் பற்றி வந்த நினைவுகள் - அனைத்தையும் எனக்கு எழுதுங்கள். விவரிக்க முடியாத அந்த ஆழம் எப்படி மனதுக்குள் பகீரென்று பிறந்தது

என்றெல்லாம் எழுதுங்கள். அந்த ஆழியின் அலைகளில் எற்றுண்டு, மெள்ள மெள்ள எப்படி உலகத்தின் கரைக்கு ஒதுங்குனீர்கள் என்று விவரியுங்கள். இவற்றின் மூலம் தங்கள் மனசில் நான் பங்கேற்றுக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. அப்படிப் பங்கேற்றுக் கொள்வதன்றி, நான் எதுவும் எழுத இருப்பதாக எனக்குத் தோன்ற மாட்டேனென்கிறது.

- மறுபடியும் தற்சமயம் தங்கள் இருப்பிடம், விலாசம் பற்றி உறுதியாக எதுவும் தெரியாமல் சூழ்நிலை மயங்குகிறது. பரீட்சைகளை ஊதித் தள்ளிவிட்டு வாருங்கள். தங்களுக்கு எப்படியும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இதை அரியூர் முகவரிக்கே எழுதுகிறேன்.

தாயாருக்கும், தங்கையற்கும் ஆதரவுணர்ச்சியும் அன்பும் மிகக் காட்டுவீர்கள் என்று உணர்கிறேன். தங்களுக்கு நான் இருப்பதாகக் கருதவும் வேண்டுகிறேன். சந்திப்பதும் பேசுவதும் எழுதுவதும் என்று மட்டும் ஏதும் வரம்பிலாத வெளிகளில் நாம் சஞ்சரிக்கிற காரணத்தால் இது சாத்தியம்.

- ஒவ்வொரு சமயத்திலும் இன்னும் கொஞ்சம் திடம் கொண்டு நாட்களை எதிரிடுங்கள்.

தங்கள்பால்
மிக்க அன்புடன்,

பி.ச.குப்புசாமி

No comments: