Friday, November 03, 2006

கடித இலக்கியம் - 26

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் -26


நாகராஜம்பட்டி
9-3-81

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

எனது சென்ற கடிதம் தங்கள் திசை நோக்கி வந்து கொண்டிருந்தபொழுது, தங்களுடைய கடிதம் என்னை நோக்கிப் புறப்பட்டிருக்க வேண்டும்.

நான், ஒரு பள்ளிச் சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்புப் பெற்ற ஆசிரியனின் பணிகள் குறித்து, இப்பொழுதெல்லாம் பெரிதும் யோசிக்கிறேன்.

போன கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த அந்தோன் மக்காரென்கோ என்கிற போதனை இயல் மேதை, போதனை இயற் கவிஞர், உயரிய சமூகங்களை வடித்தெடுக்கப் போதனா வழிமுறைகள் கண்ட சிற்பி - என்னுள் பெருத்த பாதிப்பு களை ஏற்படுத்தி விட்டிருக்கிறார். நாம் அறிந்து வியக்கிற அவரது பரிசோதனை களும் அவற்றின் வெற்றிகளும் எல்லாம் சோஷலிஸப் புரட்சி நடந்த சமுதாயத்தில்! இங்குதான் எனக்கு அவரைப் பின்பற்றுவதில் சிரமமும், குழப்பமும் உண்டாகிறது. ஆயினும், அவரது வழிமுறைகள், யோசனைகள் பெரும்பாலானவற்றை, நாம் நமது சுரண்டல் சமுதாயத்தில் அமைந்துள்ள இந்த நமது பள்ளிகளில், ஒரு கனவு போலவும் - ஒரு கவின்மிகு விளையாட்டுப் போலவுமாவது அறிமுகப் படுத்திப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்ப்பதும் உழைப்பதும் நமது தவிர்க்கவே இயலாத, தார்மீகப் பொறுப்பு, என்பதை அந்தோன் மக்காரென்கோ நமக்கு உணர்த்தி விடுகிறார்.

நீங்கள் முடிந்தால் , சென்னையில் NCBH ல், "சோவியத் பாடபோதனையில் சில பிரச்சினைகள்" என்கிற அவரது சிறு பிரசுரத்தை வாங்குங்கள். போதனை இயல் பற்றி, அவர் எழுதிய வேறு பல - இன்னும் பெரியதான - புத்தகங்களும் இருக்கின்றனவாம். அவற்றில் ஏதேனும் வாங்குங்கள்.

இந்நூல்களை நீங்கள் படிப்பது, பள்ளி நிர்வாகத்தில் உங்களுக்குப் பெரிதும் உதவும். குறிப்பிட்ட திசைகளை அவை உங்களுக்குக் காட்டிக் கொடுக் கும். பள்ளிகளில் ஏற்கனவே தாங்கள் பின்பற்றி வருகிற நடைமுறைகள் சிலவற்றிற் கான ஈடு இணையற்ற பாராட்டுதல்களையும், உங்களை ஒரு சிறப்பான நபர் அங்கீகரித்தது போன்ற உயர்ந்த திருப்தியையும் நீங்கள் உணர்வீர்கள்.

அந்தோன் மக்காரென்கோவைத் தாங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டபிறகு, நாம் பேசுவதற்கும் பரிமாறிக் கொள்வதற்கும் களம் இன்னும் பெரிதாய் அமையும். பலன் தரத்தக்கப் பரிசோதனைகளை நடத்துவதற்கும், அவற்றை மிக ஒழுங்கமைந்த - ஒரு பள்ளிச் சமுதாய அரங்கில் நிகழ்த்துவதற்கும், என்னை விடவும் ஏராளமான நல்வாய்ப்புக்களும் திறமைகளும் தங்களுக்கு இருக்கின்றன.

எனக்கு இனிமேல் தங்கள் பள்ளிக்கூடமும் மிகுந்த ஆர்வத்துக்குரிய பொருள். தங்கள் சென்னைப் பயணத்தில் அந்தோன் மக்காரென்கோவைப் பிடித்து விடுங்கள். மார்ச் 15 - தமையனார் மகள் திருமணத்துக்கு நானும் வந்தால், தாங்களும் நானுமாய் JK வோடு அளாவளாவும் அளப்பறிய மகிழ்ச்சி கிட்டும் தான். வர முடிவதற்கான ஒரு சூசகம் தெரிகிறது. அவ்வாறாயின், மாசி மாதத்து முதிர்ந்த பிறையை நாம் பட்டினத்து ஆகாயத்தில் கண்டு கொண்டாடுவோமாக. இன்ஷா அல்லாஹ்!

தங்கள் கடிதங்களில் தாங்கள் கோருகிற எல்லா விஷயங்களுக்கும், எப்பொழுதும் வரிசையாய் ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்து, நான் பதிலளிப்பதில்லை என்கிற குறை எனக்கு நன்கு தெரிகிறது. இப்பொழுது கூட அந்தோன் மக்காரென்கோ இக்கடிதத்தை ஆக்கிரமித்து விட்டார். இவ்வாறு, தவறவிட்ட எல்லா விஷயங்களையும் நமது கடிதங்கள் ஒரு முறை இல்லாவிட்டால், இன்னொரு முறை அலசி விடும்!

வறட்சி நிலவரம் பற்றி அடுத்த கடிதத்தில் விவரிக்கிறேன். ஒரே பம்புதான் ஊரெல்லாம் தாங்குகிறது.

ஆண்டு விழா அல்லது பாரதி விழாவில் பிரசங்கம் நிகழ்த்த வருபவனாக அல்லாமல், நான் தற்போது கனவு காணுகிற, பள்ளிச் சமுதாயம் பற்றிய எனது மானஸ சித்திரத்துக்கு மிக நெருங்கியதான ஒரு தூய புனிதமான மடத்துக்குச் சும்மா ஒரு நேரம் ஒரு பொழுது ஒரு பார்வையாளனாக, பக்தியோடு வந்து போவதைப் பெரிதும் விரும்புவேன்.

நமது நட்பு மேலும் ஆழமாக வேர் பாய்கிறது. அவரவர் ஆற்றும் தலையாய பணிகளில் நாம் கலந்திருப்பதை இந்தக்ஷணம் தெளிவாகக் காண்கிறேன்.

தங்கள் - பி.ச.குப்புசாமி.

No comments: