Tuesday, November 28, 2006

கடித இலக்கியம் - 30

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 30


3, செங்குந்தர் வீதி,
திருப்பத்தூர். வ.ஆ.

14-12-82

அன்புமிக்க சபா அவர்களுக்கு.

கண்ணீரின் முதல் வரிகள் தங்களுக்குக் கடிதமாய் அமைகிறது......

தங்கள் கடிதமும் நூலும் நேற்று திங்கள் (13-12-82) அன்று - பெரியம்மாவின் உடலை அடக்கம் செய்த மறுநாள் கிடைத்தது. உங்களுக்குக் கடிதம் எழுத நினைத்தேன். உங்கள் கடிதம் எதிரே வந்து நின்றது. "இதிலே பெரியம்மாவை விசாரித் திருப்பார்" என்கிற நினைப்புடனேயே படித்தேன். அவ்வாறே இருந்தது. அந்த இடம், நின்று கொண்டிருந்த கண்ணீரை மறுபடியும் வெளியே இழுத்து விட்டுவிட்டது.

இப்படித்தான்.............

சனி (11-12-82) இரவு 10.25 மணிக்கு, வேலூர் CMC ஆஸ்பத்திரியில் ஆறுமுகம் என் அருகிருக்க அந்தச் செய்தி என் காதில் விழுந்தது. இங்கு ஞாயிறு அன்று அடக்கம் செய்தோம்.

அந்தக் கிரியை இன்னும் முடியவில்லை என்பது போல் எனக்குக் கண்ணீர் இன்னும் வந்து கொண்டே இருக்கிறது.

லேசான ரத்த உறைவு மூளையில் ஓரிடத்தில் நேர்ந்து, அது சமாளிக்கப் பட்டுத் தேறி வரும் சமயத்தில் இன்னும் ஓர் ரத்த உறைவு நேர்நது அவர்களது 'மெடிக்கல்' வரலாறு............

கோட்சேயைத் தூக்கில் போட்ட நாளிலிருந்து சாந்த ஸ்வரூபிணியாக அவர்கள் எனக்குத் தெரிந்த அந்த நீண்ட வரலாற்றை, இந்தக் குறுகிய வரலாறு முடித்து வைத்து விட்டது.

இதுவரை ஒரு காலம், இனிமேல் வருவது வேறொரு காலம் - என்பது போல், வாழ்நாள் எனக்கு இரண்டாகப் பிளந்து போயிற்று. நான் மணந்த போதும், பிள்ளைகள் பெற்ற போதும், தலை நரைத்த போதும் கூட, இந்த மாதிரி ஒரு காலப் பிளவின் வித்தியாசத்தை அனுபவித்ததில்லை. மிகப்பெரிய நிகழ்ச்சியான இது, இனிமேல் என்னைவெகுவாக மாற்றி விடக்கூடும்.

சாதாரணப் பெண்டிர் போல் ஆகி விட்டேன். எள்ளப் பட்டுவிடுமோ என்கிற அளவுக்கு என் அழுகை எல்லை கடக்கிறது. ஆகாயம் பார்த்தல்லாமல் வேறு யார் முகமும் பார்த்து தொடர்ந்து அழ முடியவில்லை.

இந்த அழுகை மிகை என்றோ, பரிசோதித்துப் பார்த்துச் செயற்கை என்றோ நிறுத்தினாலும் கூட, மீள வெகு விரைவில் அது ஒரு நொடிப் பொழுதில் உதித்து விடுகின்றது.

ஏதாவது காரியங்கள் செய்யலாம் என்றுதான், தங்களுக்குப் பதிலளிக்கிற காரியத்தை இவ்வளவு விரைவில் செய்கிறேன்.

சிவகுமார் தாங்கள் எழுதியபடியே புத்தகத்தை இரவே படித்து முடித்து விட்டான். அதற்கு விமர்சன வடிவம் கொடுக்கக் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்வான் போல் தெரிகிறது. இப்பொழுது, பாட்டிக்குச் சமரகவிகள் எழுதுகிற முயற்சியில் இருந்து கொண்டிருக்கிறான். எனக்கு வாழ்வின் irony என்பது ஆகமிகப் பெரிய தோற்றமாகத் தெரிந்து கொண்டிருக்கிறது.

விவேகாநந்தரிடம் படித்தேன் 'நீ இல்லாதிருந்த காலம் இதற்கு முன் எப்பொழுதும் இருந்ததில்லை; இனிமேலும் இருக்கப் போவதில்லை' - என்று.இப்படியெல்லாம் தேற்றிக் கொண்டாலும், சாவு என்பது ஒன்று பூசி மெழுகப்பட முடியாததோர் உண்மை போல் இருக்கிற யதார்த்தம் வந்து மனசை அவ்வப்போது அடிக்கிறது. அந்த அடியின் வலி தீர ஆனந்தமாய்க் கண்ணீருகுக்க வேண்டியிருக்கிறது.

துணைவியாருக்கு நன்றியும் வணக்கமும் கூறுங்கள். எங்கள் பெரியம்மாவுக்கு உங்கள் எல்லோரையும் நன்கு தெரியும்.

நான் விருத்தாசலம் வந்தாலும் கூட, பெரியம்மா இங்கெல்லாம் வந்திருந்தால் எவ்வளவு சிலாக்கியமாக இருந்திருக்கும் என்கிற Mood தவிர்க்க முடியாமல் வரும். இனி வரும் வாழ்க்கை பூராவும் அப்படித்தான் வரும்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி

No comments: