Saturday, October 13, 2007

கால நதிக்கரையில் - 27

கால நதிக்கரையில்......(நாவல்)-27

- வே.சபாநாயகம்

தெருக் குறட்டிலிருந்து சிதம்பரத்தின் பார்வை பூட்டி இருந்த தெருக் கதவுக்கு மாறியது. இந்த வாயிற்படி பின்னால்தான் அமைக்கப்பட்டது. பெரியப்பாவுக்கும் அப்பாவுக்கும் பாகம் பிரிக்கப்பட்டபோது கூட இப்படித் தனித் தனித்தனி வாயில் இல்லை. பெரிய வீட்டின் மேலண்டைப் பகுதி நடைமுறை வழக்கப்படி மூத்தவரான பெரியப்பாவுக்கும், கீழண்டைப் பகுதி இளையவரான அப்பாவுக்கும் ஒதுக்கப்பட்டது. முன் வாசற்படி மட்டும் பொது. மற்ற புழக்கம் எல்லாம் அவரவர் பகுதியில் இருந்தது. பெரியப்பா காலம் வரை அப்படியேதான் இருந்தது. அவரது காலத்துக்குப் பின் அவரது இரண்டு மகன்களும் பாகம் பிரித்துக் கொண்டபோது அந்தப் பகுதி பெரியண்ணனுக்கு விழுந்தது. அவர் தன் பகுதியைத் தனியே பிரித்துக் கட்ட விரும்பியதால் பழைய வாயிற்படியின் நடுப்பகுதியில் சுவர் எழுப்பப்பட்டு இப்போதுள்ள மாதிரி இந்த வாசற்படி அப்பாவால் அமைக்கப்பட்டது.

இப்போது பலரது காலடிகளின் கீழே மிதிபடுகிற - இந்த வாசற்படிக்குப் பின்னால் இருக்கிற பகுதி முன்பு சின்னக் கூடமாக இருந்தது. அதுதான் சிதம்பரமும் அவரது உடன்பிறப்புகளும் ஜனித்த இடம். அம்மாவின் தலைப்பிரசவம் தவிர மீதி ஒன்பது பிரசவங்களும் அங்கு தான் நிகழ்ந்தன. வாசற் படியைத் தாண்டியதும் இருந்த வலது புறத்துக் கூடம், முற்றம் வரை தட்டியால் மறைக்கப்பட்டு பிரசவ அறையாகி விடும். முற்றத்தில் இறங்கித்தான் உள்ளே போக முடியும். அப்போதெல்லாம் ஆஸ்பத்திரிக்குப் பிரசவம் பார்க்கச் செல்வதில்லை. ஆஸ்பத்திரிகளும் அபூர்வமாய்த் தொலைவில் நகரத்தில் இருந்தன. போக்குவரத்து வசதியும் இல்லை. உள்ளூர் மருத்துவச்சிதான் எல்லாப் பிரசவத்துக்கும்.

புண்ணியாக வாசனம் வரை அம்மாவின் அக்கா, இளம் வயதில் விதவை ஆன ஒரு பெரியம்மாதான் எல்லாப் பிரசவத்துக்கும் வந்து இருந்தார்கள். அம்மா ஆரோக்கியமான அந்தக்காலத்து மனுஷி என்பதால் எல்லாப் பிரசவமும் சுகப் பிரசவம்தான். அதுவே ஊரில் மற்றப் பெண்களுக்கு அம்மாவிடம் ஒரு மரியாதையை - பத்துப் பிள்ளைகளையும் ஆரோக்கியமாய்ப் பெற்றெடுத்து ஆளாக்கிய நிறைவான மனுஷி என்று - ஏற்படுத்தியது. பொறாமையோ கண்ணெறியோ யாருக்கும் அப்போதெல்லாம் ஏற்பட்டதில்லை. அதைப் பெரிய கொடுப்பினையாக நினைத்தார்கள்.

அப்பா பெரிய பூஜை செய்பவர்கள் என்பதால் புண்ணியாக வாசனம் வரை, வீட்டுக்குள் பூஜை செய்வதில்லை. எதிர் வீட்டில் பூஜை செய்துவிட்டு வீட்டின் முன் வாயில் வழியாக நுழையாமல் பின்பக்கத்து வழியாகத்தான் வீட்டுக்குள் வந்து சாப்பிடுவார்கள். அந்த நாட்களில் அப்பா தீட்டு என்று கோவிலுக்கும் போக மாட்டார்கள்.

அம்மாவை இப்போது நினக்கும்பொது சிதம்பரத்துக்கு மலைப்பாக இருக்கிறது. இன்றைய நடைமுறைப்படி இரண்டு பிள்ளைக¨ளையே தங்களால் நல்லபடி வளர்த்து ஆளாக்கத் தடுமாறும் போது அம்மா பத்துப் பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்க என்ன பாடு பட்டிருக்க வேண்டும்? வாழ்நாளில் பாதியைப் பிள்ளைப் பேற்றிலும் பிள்ளைகளை வளர்ப்பதிலுமே கழித்து விட்ட அம்மாவை நினத்தால் மனம் கனக்கிறது.

வேலைக்குப் போன பிறகு சிதம்பரம் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கியதும் அம்மாவின் குரலைத்தான் முதலில் அதில் பதிவு செய்தார். ஒரு பேட்டி போல அம்மாவிடம் பேசிப் பதிவு செய்தபோது அம்மாவிடம் சிதம்பரம் கெட்டார்: "இப்ப எங்கியும் குடும்பக் கட்டுப்பாடுன்னு வந்துட்டுது. 'ஆசைக்கு ஒர் பொண்ணு ஆஸ்திக்கு ஒரு பிள்ளைன்னு' ரெண்டு போதும்; அதிகம் பிள்ளைங்க பெத்துக்கிட்டு அவஸ்தப்பட வேணான்னு சர்க்காரே சொல்றாங்களே- நீங்க பத்து பிள்ளைங்க பெத்துக்கிட்டது சங்கடமா இல்லியா? அதுக்காக நீங்க கூச்சப் படலியா?"

அம்மாவிடம் பிள்ளை கேட்கிற கேள்வி இல்லைதான் அது. ஆனாலும் அம்மா அதுபற்றிக் கூச்சப்படாமல். ''இதுல என்னா சங்கடம், என்னா கூச்சம் இருக்குது? வீடு நெறையா புள்ளைங்க இருக்கிறது ஒரு அழகுதான். 'ஒரு மரம் தோப்பாவுமா ஒரு பிள்ளையும் பிள்ளையாகுமா' ம்பாங்க. ஒரு நல்லது கெட்டதுண்ணா ஒண்ணாக் கூடி சந்தோஷப்படவும் கட்டிக்கிட்டு அழவும் ஒடன் பிறப்புன்னு இருந்தா அது ஒரு பலந்தான். ஒரு பிள்ளயா இருந்தா அது கெடைக்குமா?" என்றார்கள்.

"அதில்ல, இப்ப வெலைவாசி இருக்குற நெலைமையிலே ரெண்டு பிள்ளை களையே வளக்க எங்களுக்குக் கஷ்டமா இருக்கே, நீங்க எப்படி பத்து பிள்ளை களையும் வளத்தீங்க? கஷ்டமா இல்லியா?'

"இதுல என்னா கஷ்டம்? 'கொடிக்குக் காய் பாரமா'ம்பாங்க. இப்ப மாதிரியா? வீட்டுலே நெல்லு வெளைஞ்சது, எள்ளும் கடலையும் வீடு கொள்ளாம எறஞ்சுது. செலவுக்குக் கஷ்டமில்ல; அதோட இப்ப இருக்கிற பிள்ளைங்க மாதிரியா? மூணு அணாவுக்கு அழவாரத்தான் கைத்தறித் துண்டு வாங்கிக் குடுத்தா நீங்கள்ளாம் கட்டிக்கிட்டீங்க. உங்க பிள்ளைங்க எல்லாம் இப்ப டெரிலினும் டெரிகாட்டும் கேக்குதே! காலைலே குளிப்பாட்டி பாலக் குடுத்து, எதிர்த்த வீட்டு வள்ளிமை அக்காக் கிட்டியோ பக்கத்து வீட்டு கார்மாங்குடி புள்ள வீட்டிலியோ உட்டுட்டு வந்தா சமத்தா அழாம நீங்க இருந்திங்களே- இப்ப உங்க பிள்ளைங்க அப்பிடி இருக்குமா? அதும் மாதிரி முகம் சுளிக்காம புள்ளைகள வச்சுக்கத்தான் இப்ப உங்க எதிர்வீடு அண்டை வீட்டுலே ஒத்துக்குவாங்களா? கூடத்துல ஒக்கார வச்சு பொரி, கடலன்னு முன்னால ஒரு கிண்ணத்துல குடுத்துட்டா நீங்கள்லாம் பேசாம திண்ணுக்கிட்டு படுத்தாம இருப்பீங்களே, உங்க பிள்ளைங்க இப்ப சாக்லேட்டும் ஆர்லிக்சும்ல கேக்குதுங்க! எங்க காலத்துல புள்ள வளக்குறது இப்ப மாதிரி கஷ்டமா ஒண்ணும் இல்ல" என்றார்கள்.

அம்மா சொன்னது உண்மைதான். நெல்லைத் தொம்பையில் போட்ட மாதிரி, மணிலாக் கொட்டையைப் போட இடமில்லாமல் விற்கிறவரை வீடு முழுதும் கொட்டிக் கிடக்கும். கடலையின் கதகதப்பின் மீது தான் வீட்டுக்குள் நடமாட முடியும்.

தெருவில் எது விற்றாலும் - மாம்பழம், எலந்தைப் பழம், பாலப் பழம், முந்திரிப் பழம், பெலாச்சுளை என்று எது வந்தாலும் அம்மா கூப்பிட்டு பிள்ளைகளுக்காக வாங்கி விடுவார்கள். பணமாகக் கொடுப்பதில்லை. பதிலாக நெல்தொம்பையின் அடிச்சொருகுக் கதவைத் திறந்து விட்டால், மடையைத் திறந்து விட்டால் தண்ணீர் சீறிப் பாய்கிற மாதிரி 'சரசர' வெனச் சரியும் நெல்லை முறத்தில் ஏந்தி பண்டமாற்றாக அதைக் கொடுத்துதான் வாங்குவார்கள்.

அம்மா பிள்ளைகளைப் பேணி வளர்த்த மாதிரி இப்போது யார் செய்கிறார்கள்?சனிக்கிழமை தோறும் எண்ணை முழுக்காட்டு; மாதத்திற்கொரு முறை விளக் கெண்ணை; வெள்ளிக்கிழமைகளில் எல்லோரையும் நெருக்கி உட்காரவைத்து

திருஷ்டி சுற்றிப் போட்டது என்று ஒவ்வொன்றாய் சிதம்பரத்தின் நினைவில் அம்மாவின் நினைவுகள் புரள்கின்றன.

அம்மா படித்தது மூன்றாம் வகுப்பு வரைதான். அந்தக் காலத்து சாத்தாணிப் பள்ளிக்கூடப் படிப்பு என்பதால் எண்ணும் எழுத்தும் அத்துபடி. திக்காமல் திணறாமல் வாசிக்கவும் எழுதவும் செய்தார்கள். வீட்டின் வரவு செலவை எல்லாம் அதற்கான கணக்கு நோட்டில் அன்றாடம் எழுதி வைப்பது அம்மாதான். அம்மாவிடம் கற்றதுதான் சிதம்பரம் கல்லூரிக்குப் போன காலம் முதல் இன்று வரை வரவு செலவுக் கணக்கை எழுதுகிற பழக்கம். பிள்ளைகளுக்குப் பெரியம்மா, மாமா போன்றவர்கள் பார்க்கும் போது கொடுக்கிற காசுகள், காணும் பொங்கலில் கிடைக்கும் காசு ஆகியவற்றை ஒவ்வொருவருக்கும் தனியாக சுருக்குப் பை வைத்து அதில் விவரச்சீட்டுடன் போட்டு வைப்பது அம்மாவின் பழக்கம். அப்பாவை விட ஒரு பத்து வருஷம் அதிகமாக 95 வயது வரை வாழ்ந்ததும், நினைவு தப்பிய கடைசி ஐந்து வருஷத்துக்கு முன்வரை அம்மா கண்ணாடி போடாமலே புத்தகங்கள் படித்ததும் கணக்கு எழுதியதும், ஒரு பல் கூட சொத்தை சோடை இல்லாமல் தேங்காய்ச் சில்லு போல பளிச்சென்ற வெண்மை யுடன் திடமாக இருந்ததும் இப்போது சொன்னால் நம்புவது கஷ்டம்தான்.

அப்பா பாம்புக்கடி பச்சிலையும், காலரா மருந்தும் வாங்கி பலரது உயிரைக் காப்பாற்றிய மாதிரி, அம்மா குழந்தைகளுக்கான மருந்துகளை - கோரோசனை, தஞ்சாவூர் மாத்திரை போன்றவற்றை வாங்கி வைத்துக் கொண்டு குழந்தை வைத்தியத்துக்காகத் தன்னிடம் உதவி கேட்டு வருகிறவர்களுக்கு அனுசரணையாய்க் கொடுத்து உதவியதாலும் ஊர்ப்பெண்களுக்கு அம்மாவிடம் மிகுந்த மரியாதையும் ஈடுபாடும் இருந்தது. திருமணத்துக்கு நெல் புழுக்குவதற்கு முதல் கை எடுத்துப் போட அம்மாவைத்தான் கூப்பிடுவார்கள். எல்லோர் வீட்டுத் திருமணச் சடங்குகளும் அம்மா இல்லாமல் நடக்காது. கைராசி கருதியும் நிறையப் பிள்ளைகளைப் பெற்றுப் பெருக வாழ்ந்தவர்கள் என்பதாலும், ஊரில் நல்லது கெட்டதுகளுக்கு அம்மாவின் யோசனை தான் முதலில் நாடப்படும்.

அம்மாவின் அப்பா உடையார்பாளையம் ஜமீனுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தின் ஜாகிர்தாராக இருந்தவர். அம்மா சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் தான் ஜமீந்தார் மகளாக்கும் என்று சொல்லிக் கொள்வார்கள். சரியான தருணங்களில் அப்பா அதை இடித்துக் காட்டுவதுண்டு. அத்தகைய சம்பவம் ஒன்று சிதம்பரத்துக்கு ஞாபகம் வந்தது.

தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் அம்மா நிறைய செய்து வைத்துக் கொண்டு வந்து கேட்கிற ஏழை பாழைகளுக்கு சுணங்காமல் கொடுப்பார் கள். அப்படி வாங்கிப்போகிறவர்கள் எல்லொரும் எப்போதும் விசுவாசம் காட்டுவார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. அப்பா கண்பார்வை போய் தெருத் திண்ணயில் அமர்ந்திருக்கையில் தெருவில் ஆள் அரவம் கேட்டால், "ஆருப்பா அங்கே போறது?" என்பார்கள். போகிறவர் நின்று என்ன வேண்டும் என்று கேட்பார்கள். ஆட்களாக இருந்தால் அப்பா இடும் சின்ன வேலைகளை முகம் சுளிக்காமல் செய்து கொடுத்து விட்டுப் போவார்கள். எல்லோரும் அப்படி இல்லை. ஒரு தடவை ஒரு இளவட்டப் பையன் - அப்பாவிடம் மருந்தும் அம்மாவிடம் பலகாரமும் பல தடவை பெற்றுச் செல்கிறவன் அப்பா கூப்பிட்டபோது, 'தோ போய்ட்டு வரேங்க' என்று நழுவினவன் திரும்ப வரவில்லை. அடுத்த முறை அவன் தென்பட்டபோது, அம்மா "அவ்வளவு கணக்காயிப் போச்சா? கண்ணு புரியாமத்தான ஒன் கிட்டச் சொன்னாரு? 'வரேன்'னுட்டு போனியே வந்தியா? அடுத்தாப்பல பாம்பு பச்சில, தீவாள்¢ பொங்கலுன் னுட்டு வருவீல்ல அப்ப சொல்றேன்" என்று கடிந்தார்கள். அப்பாவுக்கு அப்படிச் சொல்லிக்காட்டுவது பிடிப்பதில்லை. "சே! அவந்தான் அல்பம்னா நீ அதவிட அல்பமா சொல்லிக்காட்டறதா? அப்றம் என்ன 'நா ஜமீந்தார் மக'ன்னு பீத்திக்கறது?" என்று இடித்தார்கள்.

"என்ன அப்பிடியே கதவையே வெறிச்சுப் பாத்தபடியே இருக்கீங்க?" என்று மருது அவரை நினைவுகளிலிருந்து மீட்டான்.

"அந்தக் கதவைப் பாத்ததும் அதுக்குப் பின்னாலே அந்தக் காலத்துலே சிறு பிள்ளையா பாத்ததும், அப்பா அம்மாவைப் பத்திய நெனவுகளூம் ஞாபகம் வந்துடுச்சு!" என்று திரும்பினார்.

பிறகு எதிரே பார்த்து, "ஆமா, வீட்டுக்கு எதிரே அந்த சந்துக்குப் பக்கத்திலே நிக்குமே விளக்குக் கல்கம்பம் எங்கே அதக் காணுமே......" என்றார்.

"அதோ எதிர்வீட்டு வாசப்படிக்கிட்டே தரையிலே பொதஞ்சிருக்கு பாருங்க" என்றான் மருது.

பெரியப்பாவின் புகழ் பாடும் அந்தக் கல்கம்பத்தை மனதுக்குள் நிமிர்த்தி பழைய இடத்தில் வைத்துப் பார்த்தார் சிதம்பரம்.

(தொடரும்)

கால நதிக்கரையில் - 26

- வே.சபாநாயகம்

தெருவின் நடுப்பகுதிக்கு வந்ததும் சிதம்பரம் வாழ்ந்த வீட்டின் முன்னே சற்று நின்றார்கள். குறட்டில் அப்பா எப்போதும் மாலையில் உட்காரும் சிமிண்ட் திண்ணை அப்படியே இருந்தது. வீடு பூட்டி இருந்தது.

"வெளியிலே ஒண்ணும் மாற்றம் செய்யில. உள்ள மட்டும் கொஞ்சம் மராமத்து செஞ்சிருக்காங்க. வீட்ட நல்லா வச்சிருக்காங்க" என்றான் மருது. குறடேறி தெருத் திண்ணை மீது அமர்ந்தார்கள். திண்ணை மீது அமர்ந்ததும் சிதம்பரத்துக்கு அப்பா எதிர்த் திண்ணையில் அமர்ந்து தன்னிடம் பேசியதெல்லாம் நினவுக்கு வந்தது.

வேலைக்குப் போன பிறகு மாதா மாதம் அப்பாவையும் அம்மாவையும் பார்க்க ஊருக்கு வருவார். காலையில் சாப்பிட்டபின் பெரிய திண்ணையில் அமர்ந்து சிதம்பரம் ஏதாவது படித்துக் கொண்டோ எழுதிக் கொண்டோ இருக்கையில் எதிர்த் திண்ணயில் உட்கார்ந்திருக்கும் அப்பா அரவம் கேட்டு "ஆரு சிதம்பரமா?" என்பார்கள்.

அப்போது அப்பாவுக்குக் கண்பார்வை முழுதுமாய்ப் போய்விட்டிருந்த நேரம். பத்து வருஷத்திற்கு முன்னால் மாமாவின் காரில் ஒருமுறை போய்க் கொண்டிருந்த போது அந்தக் கார் விபத்துக்கு உள்ளானது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த அப்பாவின் முகம் முன்னால் மோதியதில் கண்ணுக்கருகில் மூக்குத் தண்டில் அடிபட்டு பார்வை நரம்பு பாதிக்கப் பட்டது. உடனே வைத்தியம் பார்த்தும், கொஞ்சம் கொஞ்சமாகப் பத்து ஆண்டுகளில் பார்வை குறைந்து கொண்டே வந்து அப்போது முற்ற்¢லுமாகப் போய்விட்டிருந்தது. அப்பாவின் பெரிய பூஜையையும், தெய்வபக்தியையும், அவர்களது தர்மசிந்தையையும், பாம்புக்கடிக்குப் பச்சிலை கொடுத்துப் பலரது உயிரைக் காப்பாற்றிதையும் அறிந்தவர்கள் அப்பாவிடம், "இவ்வளவு புண்ணியம் செஞ்சீங்களே உங்குளுக்கு ஏன் கடவுள் பார்வையைப் பறிச்சாரு?" என்று மனம் உருகக் கேட்கும்போது அப்பா சொல்வார்கள்: "இந்த ஜன்மத்துலே எனக்குத் தெரிஞ்சு எந்தப் பாவமும் நா பண்ணல. இது ஏதோ பூர்வஜென்ம பாவத்தின் பலன்".

புலனுணர்வால் சிதம்பரம்தான் என்று அறிந்துதான் கேட்பார்கள். "ஆமாம்ப்பா" என்றதும், கண்களை மூடியபடியே, "இதப்பார் சிதம்பரம், இனிமேயெல்லாம் எங்காலத் துக்குக்கப்புறம் நீங்க யாரும் இந்த ஊர்ல விவசாயம் பண்ணிடலாம்னு நெனைக்காதீங்க. காலம் மாறிப் போச்சு! அதிகாரமும் அந்தஸ்தும் இனிமே எடுபடாது. தெரியாமியா நா உங்கள எல்லாம் படிக்க வச்சேன்...." என்று நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போவார்கள். சிதம்பரத்துக்கு அப்போது பொறுமையற்ற, துடியான வயது. தான் படிப்பதற்கு அது இடைஞ்சலாக இருப்பது போலத் தோன்றி, 'விடுங்கப்பா! எத்தினி தடவை இதியே சொல்லுவிங்க?' என்று மனதுக்குள் அலுத்துக் கொள்வார். பின்னாட்களில், அப்பா இறந்த பிறகு பல தடவை அந்த தனது அடாத செயலை, குரூரமான முணுமுணுப்பை எண்ணி மனம் நொந்திருக்கிறார். அப்பாவுக்குக் கண் பார்வை தெரிந்திருந்தால் தான் படித்துக் கொண்டிருப்பது தெரிந்திருக்கும். படிப்ப தற்கு இடைஞ்சலாகப் பேசி இருக்க மாட்டார்கள். கண் பார்வையற்றவர்களுக்குப் பிறரிடம் பேசுவதில் நிம்மதி கிட்டும் என்று அறியாமல் எவ்வளவு குரூரமாய் உதாசீனம் செய்தோம் என்று இன்றும் இப்போதும் மனம் அழுகிறது. இனி அப்படிச் சொல்ல அப்பா இல்லை. அதோடு 'அப்பாவுக்கு நாம் என்ன செய்து விட்டோம்? பத்திரிகை படிப்பதில் அப்பாவுக்கு ஆர்வம் அதிகம். கண்பார்வை போன பிறகு ரேடியோ ஒன்று தான் அவர்களுக்குத் தகவல் சாதனம். எப்போதாவது ஊருக்கு வருகிறபோது அப்பாவுக்குப் பேப்பரையாவது படித்துச் சொன்னோமா?' என்ற சுய கழிவிரக்கம் மேலிட சிதம்பரம் அப்பாவை நினைத்து உருகினார்.

அதோ அந்தக் குறட்டின் திண்ணை மீது அமர்ந்துதான் இரவில் சாப்பிட்ட பிறகு சிதம்பரத்துக்கும், இந்த மருதுவுக்கும், எதிர் வீட்டு ஆறுமுகத்துக்கும் அப்பாஆங்கில பாலபாடம் கற்றுத் தருவார்கள். அந்தக் காலத்து 'ஹரிஹர அய்யர் பிரை மர்' என்ற பிரபல பாலபாட நூலை வாங்கி வைத்துக் கொண்டு, அண்ணன் காலத்திலிருந்து தம்பி வரை அலுக்காமல் பாடம் சொன்னார்கள். இப்பொழுது அப்படிப் பட்ட ஆரம்பப் பாட ஆங்கிலப் புத்தகத்தையும் காணோம், அப்பா மாதிரி பொறுமை யாய்ப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் பெற்றோரையும் காணோம்.

அந்தத் திண்ணைமீது அமர்ந்துதான் மாலை வேலைகளில் அப்பா அடுத்த வீட்டு ரத்தினப் படையாச்சிக்கு தனக்கு வரும் தினமணி பேப்பரைப் படித்துக் காட்டி உலக நடப்புகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வடக்குத் தெருவில் தான் படையாச்சிகள் குடி இருந்தார்கள். இந்தத் தெருவில் இரண்டு குடும்பங்கள் - ரத்தினப் படையாச்சியும் அவரது அண்ணனும் அடுத்தடுத்த வீடுகளில் இருந்தார்கள். இவர்கள் மற்றவர் களைப் போல இல்லாமல் கொஞ்சம் வசதியோடும் நாகரீகமாகவும் தெருப் பிள்ளைமார்கள் போல பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தார்கள்.

ரத்தினப் படையாச்சி அப்பாவுடன் சிறுவயது முதலே பழகி வந்ததால் அப்பாவைப்போல் ஆசாரமாகவும், திருத்தமாகவும் இருப்பார். அப்பா எப்போதும் நெற்றியில் திருநீற்றுப் பூச்சுடன் இருப்பது போல அவரும் தம் குடும்ப வழக்கப்படி நெற்றியில் பளிச்சென்ற பாதம் வைத்த நாமத்துடனும் இருப்பார். உடையும் எப்போதும் சுத்தமாக இருக்கும். இடுப்பில் வெள்ளை வேட்டியும், தோளில் வெள்ளைத் துண்டு மாகக் காணப்படுவார். மாமிசம் சாப்பிடுவதில்லை. எல்லா வகையிலும் அப்பாவைப் போல் இருக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வந்தவர். அப்பாவை அண்ணன் என்றே அழைப்பார். அவரªவு அப்பாவுடன் நெருக்கமாகவும் எதிரே அமர்ந்தும், வேறு யாரும் பேசுவதில்லை. அவர்தான் அப்பாவின் சிந்தனைப் பகிர்தலுக்கு உகந்த சகா. அப்பா அவருக்குப் பேப்பர் செய்திகள் மட்டுமல்லாமல் பெரிய புராணம், திருவிளையாடல் புராணக்கதைகளை எல்லாம் சொல்லுவார்கள். அவர்தான் அப்பாவிடம், 'ஏன் எல்லாப் பிள்ளையும் படிக்கப் போட்டீங்க? உங்குளுக்குப் பின்னாலே நெலத்தை பார்க்க யாரும் வேணாமா? ஏன் கடவுள் உங்களுக்கு இந்தப் பார்வைக் கஷ்டத்தைக் கொடுத்தான்?' என்றெல்லாம் கேட்பவர். பிள்ளைகள் எல்லாம் படித்து வேலைக்குப் போன பிறகு அவர்தான் முதுமையில், அப்பா காலமாகிறவரை பேச்சுத் துணைக்கு உடனிருந்தவர்.

அந்தத் திண்ணை மீதிருந்து தான் அப்பா பாம்பு கடித்து எமன் பிடிக்குள் போக இருந்த பலரது உயிரை மீட்டார்கள். ஊரில் காலரா பரவியபோது தம் சொந்தச் செலவில் காலரா மருந்து பாட்டில்களை வரவழைத்துத் தானே சர்க்கரை அல்லது தேனில் கலந்து கொடுத்துப் பலரை மரணவாயிலில் இருந்து மீட்டிருக்கிறார்கள். டிஞ்சர் அயோடினும், மின்சார ரசமும் வாங்கி வைத்துக் கொண்டு காயம் பட்டவர்களூக்கும், வயிற்றுக் கோளறால் அவதிப் பட்டவர்களூக்கும் கொடுத்து உதவி இருக்கிறார்கள். இன்னும்கூட அந்தக் காலரா மருந்தின் வாசம் சிதம்பரத்துக்கு உணர்வில் நிற்கிறது.

அப்பாவின் பாம்புக்கடி வைத்தியம் அப்போது வெகு பிரபலம். தூரத்துக் காட்டுப் பகுதிலிருந்து தன் பண்ணை ஆட்களை அனுப்பி சக்தி வாய்ந்த அந்த விஷக் கடி பச்சிலையை வேரோடு பிடுங்கி வரச் செய்து காயவைத்துப் பொடி பண்ணி வைத்துக் கொண்டு பாம்புக் கடிக்கும் விஷக் கடியால் உடல் முழுதும் தினவும் அரிப்புமாய் தூக்கமின்றித் துன்பப் பட்டவர்களுக்கும் பரிவோடு தந்து அவர்க¨ளைக் குணப்படுத்தினார்கள். எத்தனையோ பேர் அந்த பச்சிலையை அடயாளம் கண்டு பிடுங்கி வந்து அப்பா மாதிரியே கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அப்பாவின் கைராசியும், பொறுமையாய் நடு இரவிலும் முகம் கோணாது எழுந்து பச்சிலைப் பொடியை குழைத்து மணிக்கொரு தடவை மீண்டும் மீண்டும் கொடுத்து மயக்க முற்றவர் கண்விழிக்கும் வரை மணிக்கணக்கில் தூங்காமல் விழித்திருந்து செய்த சேவையும் அவர்களிடம் இல்லை. அதனால் அப்பாவிடம் அண்டை அயல் ஊரிலும் ஒரு மரியாதையும் பக்தியும் கூட இருந்தது.

இந்தக் குறட்டில், வாய் நுரை தள்ள நினைவிழந்து கயிற்றுக் கட்டிலில் கிடத்தி தூக்கி வரப் பட்டவர்க¨ள் எத்தனை பேர்களைக் காப்பாற்றினார்கள் என்பதற்குக் கணக்கே இல்லை. நேரம் காலம் இல்லை; ஜாதி பேதம் பார்த்ததில்லை. உயிர்காக்கும் இந்த சேவையை அப்பா ஒரு தவமாகவே செய்தார்கள்.அதற்காக ஒரு பைசாவும் யாரிடமும் பெற்றதில்லை. எந்தப் பிரதிபலனையும் எதிர் பார்த்ததில்லை. அப்பாவால் மறு பிறவி எடுத்தவர்கள் விசுவாசத்தோடு அப்பாவையும் அவர் வம்சத்தையும் வாழ்த்திப் போற்றியதுதான் இதனால் கிட்டிய பேறாக இருந்தது. சந்தர்ப்பம் வாய்த்தால் எப்படியாவது அந்தக் கடனைத் தீர்க்க அவர்கள் துடித்தார்கள்.

அப்படி ஒரு கடன் தீர்க்கும் வாய்ப்பு ஒரு ஏழை விவசாயிக்குக் கிடைத்தது. விழுதுடையான் என்ற பக்கத்துக் கிராமத்து விவசாயி அவன். வயலில் அண்டை வெட்டும்போது நல்ல பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளி கட்டை போல ஆகிவிட்ட வனை, கட்டைவண்டியில் கிடத்தி, ஐந்து மைல் போலப் பயணித்து அப்பாவிடம் இருட்டும் வேளைக்குக் கொண்டு வந்தார்கள். அப்பா நான்கு மணி நேரத்துக்கும் மேலாக அருகிருந்து மணிக்கொரு தடவை பச்சிலைப் பொடியைக் கரைத்துப் புகட்டச் செய்து, பாதிக்கப் பட்டவனுக்குத் துக்கம் வந்துவிடாதபடி பார்த்துக் கொள்ளச் செய்தார்கள். நள்ளிரவு நேரத்துக்குத்தான் அவன் எழுந்து உட்கார்ந்தான். மாண்டவனாகக் கருதப் பட்டவன் மீண்டெழுந்து கண்களில் நீர் பெருக அப்பாவை விழுந்து வணங்கி, தானே வண்டிஏறிச் சென்றதை ஊரே அதிசயமாய்ப் பார்த்தது. அந்த விவாசாயி அப்பபாவுக்கு எப்படித் தன் நன்ற்¢க் கடனைத் தீர்ப்பது என்று காத்திருந்திருக்கிறான்.

வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் லால்குடியில் வாழ்க்கைப் பட்டிருந்த சிதம்பரத்தின் அக்கா ஒரு விடுமுறையின் போது தன் மூன்று சிறு குழந்தைகளுடன் பிறந்த ஊருக்கு வந்தார். அப்போதெல்லாம் வெள்ளாற்றில் பாலம் கட்டியிருக்க வில்லை. அதனால் திருச்சியிலிருந்து லால்குடி வழியே விருத்தாசலம் நோக்கி வரும் பஸ் மூன்று மைலுக்கு அப்பால் ஒரு கிராமத்துடன் நின்று விடும். அக்கா வழக்கமாய் அப்பாவுக்கு, பஸ் நிற்கும் ஊருக்கு வண்டி அனுப்பச் சொல்லி முன்னெச்சரிகையாய்க் கடிதம் எழுதிவிட்டே வருவது வழக்கம். இம்முறை கடிதம் போட்டும் உரியநேரத்தில் அப்பாவுக்குக் கிடைக்காததால் வண்டி வரவில்லை. மாலை இருட்டும் வேளையில் குழந்தைகளுடன் பஸ்ஸிலிருந்து இறங்கிய அக்காவுக்கு வண்டியைக் காணாமல் பகீரென்று ஆகி விட்டது. அது அத்துவானக் காடு. ஊர் என்கிற பெயரில் ஓரிரு குடிசைகளே அங்கு இருந்தன. அங்கு இரவு தங்கி மறுநாள் போக எந்த நாதியும் இல்லை. திகைத்துப் போன அக்காவுக்கு அழுகை வந்து விட்டது.

அப்போது தெய்வமே அனுப்பியதுபோல ஒரு கட்டை வண்டி அந்த வழியே வந்தது. வண்டியோட்டி குழந்தைகளுடனும் மூட்டை முடிச்சுகளுடனும் ஒரு பெண் அநாதரவாய் நிற்பதைப் பார்த்துப் பரிதாபப்பட்டு வண்டியை நிறுத்தி இறங்கி அருகில் வந்தான். ''ஆரும்மா அது? தனியா அத்துவானக் காட்டுலே இருட்டு நேரத்துக்கு வந்து நிக்கிறியே?" என்று அனுதாபத்துடன் கேட்டான். அக்கா ஆதரவான வார்த்தைகளால் நெகிழ்ந்து அழுதபடியே, வண்டி அனுப்பச் சொல்லி அப்பாவுக்கு எழுதிவிட்டே வந்தும் எதனாலோ இப்படி நிற்கும்படி ஆகி விட்டது என்று சொல்ல, அவன் மேலும் எந்த ஊர், யார் வீடு என்றெல்லாம் கேட்டிருக்கிறான். அக்கா ஊரையும் அப்பாவின் பெயரையும் சொன்னதைக் கேட்டதும் அவன், ''ஆ! எங்க சாமியின் பொண்ணா? ஆண்டவன் சரியான நேத்துலே எங் கடனைத் தீக்க அனுப்பிச்ச மாதிரி இருக்கு" என்று உருகி இருக்கிறான். பிறகு தான்தான் அப்பாவால் உயிர் மீட்கப்பட்ட விழுதுடையான் விவசாயி என்று சொல்லி, ''கவலப் படாதம்மா! அப்பா பண்ணிய புண்ணியம் தான் என்னக் கொண்டாந்து விட்டுருக்கு. வண்டியிலே ஏறு. நா கொண்டு போயி சேக்கிறேன்" என்று சொன்னான். சொன்ன படியே வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பினான்.

அப்பா இருந்தவரை இந்தப் பிராந்தியமே பாம்புக்கடி பயமே இல்லாமல் நிம்மதியுடன் இருந்தது. இன்னும் சொல்வதானால் அப்பா இருக்கும் தைரியத்தில் ஒரே பாம்பால் மூன்று முறை கடிபட்டு அப்பாவிடம் ஓடி வந்து பச்சிலை விழுங்கிஅந்தப் பாம்பை விடாமல் துரத்தி மண் வெட்டியால் வெட்டிக் கொன்று வீரசாகசம் புரிந்தவனும் அடுத்த ஊரில் இருந்தான்.

தெருக்குறடும் திண்ணையும் நினைவூட்டிய அப்பாவின் பெருமை மிக்க அந்தக் நிகழ்ச்சிகளை, சிதம்பரம் மருதுவுக்குச் சொல்லும் சாக்கில் தனக்குள்ளும் ஓடவிட்டு லயித்து நின்றார்.

(தொடரும்)

கால நதிக்கரையில் - 25

நாராயணசாமி பிள்ளையின் வீடு சிதம்பரம் வீட்டுக்கு எதிர்ச் சாரியில் இரண்டு வீடு தள்ளி இருந்தது. அவரது சகோதரர்கள் இருவருடன் பாகப்பிரிவினை நடந்த போது பூர்வீக கல்வீடு அவரது அண்ணனுக்கும் தம்பிக்கும் சமபாதியாக ஒதுக்கப்பட்டு, இவருக்கு தெரு முனையில் மணியப் பிள்ளை வீட்டுக்கு எதிரில் இருந்த காலிமனை ஒதுக்கப்பட்டது. அதில் அவர் வீடு கட்டிக் கொண்டார்.

இப்போது அவர் வாழ்ந்த வீடு கூரை இல்லாமல் சுவர்கள் மட்டும் அரை குறையாய் இடிந்து நின்றன.

"என்னப்பா ஆச்சு இந்த வீட்டுக்கு?" என்று கேட்டார் சிதம்பரம்.

"அவுரு இருக்கும்போதே வித்துட்டாரே! வாங்குனவன் ரொம்ப வருஷமா இப்பிடிப் போட்டு வச்சிருக்கான். அவரு பசங்க மூணு பேரும் தெக்குத் தெருவுலே அவரோட அத்தை எழுதிக் குடுத்த மனையிலே கூர வீடு கட்டிக்கிட்டு அம்மாவோட இருக்காங்க" என்றான் மருது.

நாராயணசாமி பிள்ளை சிறு பிள்ளையிலிருந்தே துடுக்கான பேச்சும் குறும்புத் தனங்களும் மிகுந்தவர். எதிலும் தலையிட்டு கேள்வி கேட்கும் எதிர் சிந்தனைப் போக்கு மிக்கவர். எந்த ஊர்வம்பு தும்புகளிலும் முன்னிருப்பவர். வயது, சாதி, அந்தஸ்து, ஆண் - பெண் என்று எந்த பேதமும் இல்லாமல் யாரையும், எங்கும் கேலி பேசுவதும், வம்புக்கு இழுப்பதும் அவருக்குத் தீராத விளையாட்டு. கள்ளக் காதலர் களுக்கு அவர் சிம்மசொப்பனம். இளம் காதலர்கள் மட்டுமின்றி, குடியும் குடித்தனமுமாய் இருப்பவர்களின் அந்தரங்கங்களும் அவருக்கு அத்துபடி.

ஊரில் முதலில் தென்படுகிற அப்பு வீட்டு அகன்ற திரை போன்ற பெருஞ்சுவரில் எழுதப்படும் அக்கப்போர்களில் அதிகமும் அவரது கோஷ்டியின் கைங்கரியம் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான். கோவில் நிர்வாகி, பெருமாள் கோவில் பட்டர் மற்றும் தர்மகர்த்தாக்களின் ஊழலும் அவரது கண்டனத்துக்குத் தப்ப வில்லை. அவரை யாரும் கண்டிக்கவோ புத்தி சொல்லவோ முடியாமல் 'கைம்பெண் வளர்த்த பிள்ளை அப்படித்தான் இருக்கும்' என்று அவர் அம்மாவுக்கு வசவு வாங்கித் தந்து கொண்டிருந்தார். திருமணம் ஆகி, பிள்ளை குட்டி பிறந்த பிறகும் அவரது விளையாட்டுத்தனமும் மணியப்பிள்ளை போன்ற அப்பாவிகளை வம்புக்கு இழுப்பதும் தொடரவே செய்தன.

'கண்ணாடிப் பிள்ளை' என்பது போல காரணப் பெயராக இல்லாமல் என்ன காரணத்தாலோ 'காத்துப் பிள்ளை' என்று அவருக்கு ஒரு மாற்றுப் பெயரும் ஊரில் வழங்கி வந்தது. சுப்பிரமணிய பிள்ளைக்கு மணியப் பிள்ளை என்று பெயர் வழங்கியது மாதிரி கூட புரிந்து கொள்ள முடியாத பெயர்.

உள்ளூர்வாசிகள் மட்டுமல்ல ஊருக்குத் தற்காலிகமாய்க் குடி வந்தவர்களையும், விருந்தாளியாக வந்திருப்பவர்களையும் கூட அவர் விட்டு வைப்பதில்லை. அப்படி அவரிடம் சிக்கி நிம்மதி இழந்தவர்களில் ஒருவன் கொத்தன் ராஜவேலு.

அவன் பத்து மைலுக்கு அப்பால் இருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு உள்ளூரில் நேர்ந்த ஒரு சிக்கலால் அப்பா அம்மாவுடன் தற்காலிகமாக இந்த ஊரைப் புகலிடமாக்கிக் கொள்ளக் குடி வந்தவன்.

ஊரில் யாருக்கும் அவன் வந்திருப்பது பற்றியோ அதற்கான காரணம் பற்றியோ அக்கரையோ ஆர்வமோ எழவில்லை. ஆனால் காத்துப் பிள்ளையால் அப்படி இருந்து விட முடியவில்லை. ஊர்த் தலைவரோ, மணியமோ கேட்க வேண்டிய விசாரிப்புகளை அவர் மேற்கொண்டார். சொந்த ஊரில் இருக்கப் பயந்து தலைமறைவாய் இருக்க வந்தவன் உண்மையான காரணத்தைச் சொல்லுவானோ? பிழைப்புத் தேடி வந்திருப்ப தாக அவன் சொன்னதை அவர் நம்பவில்லை. சொல்லும்போது ஏற்பட்ட அவனது முகமாற்றமும் முன்னுக்குப் பின் முரணான பேச்சும் அவரைச் சந்தேகிக்க வைத்தன. அவனது உண்மையான ஊரைக் கூட அவரால் அவனிடமிருந்து அறிந்து கொள்ள முடியவில்லை. அவரது வம்புப்பேச்சுக்குப் பயந்து அவன் அவர் கண்களில் படாமல் நடமாடினான். அது அவருக்கு ஒரு கௌரவப் பிரச்சினை போல ஆனது.

சிதம்பரம் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவர் கோடை விடுமுறையில் வந்திருந்தபோது தான் ராஜவேலு என்கிற அவனைப் பற்றிக் கேள்விப் பட்டார். காத்துப் பிள்ளைதான் அவரிடம் அவனைப் பற்றிய சந்தேகத்தைச் சொல்லி, "நீயே கேளு சிதம்பரம். என்ன மெரட்டினாலும் அவங்கிட்ட இருந்து உண்மைய வரவழைக்க முடியல" என்றார்.

சிதம்பரத்துக்கு அது நியாயமற்ற தலையீடாகப் பட்டது. ஆனாலும், காத்துப் பிள்ளையின் நிர்ப்பந்தத்தால் ஒரு நாள் காலை ஆற்றுக்குக் குளிக்கப் போகையில் ராஜவேலுவை அழைத்துப்போய் தனிமையில் பரிவுடன் விசாரித்தார். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு அவன், சிதம்பரத்திடம் ஒரு பாதுகாப்பை உணர்ந்தவனாகத் தன் கதையைச் சொன்னான்.

அவனது கிராமத்தில் நடந்து விட்ட ஒரு பெண்ணின் கொலை சம்பந்தமாக அவன் சிக்கலில் இருந்தான். அவனும் இன்னும் மூன்று விடலைப் பையன்களுமாய் கூட்டாக திருமணமாகாத ஒரு இளம் பெண்ணுடன் கள்ள உறவு கொண்டிருந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணுடைய தகப்பன் மிகவும் மானஸ்தன். முன்கோபமும் முரட்டுத்தனமும் இயல்பாகவே அமைந்த இனத்தின் முக்கியப் புள்ளி. தன் பெண்ணின் தகாத உறவு அவனுக்கு வெகு நாட்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தப் பெண் அதனால் கர்ப்பமுற்றது தெரிந்தபோது அவனுக்கு ஆவேசமாகி விட்டது. தன் மானத் தையும் குடும்ப கௌரவத்தையும் குலைத்த மகளை, கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் பாட்டி வீட்டுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லி பக்கத்து நகரத்தை ஒட்டி இருந்த ஒரு அடர்ந்த காட்டில் வீச்சரிவாளால் வெட்டி தலையை எடுத்துக் கொண்டு நேராகப் போலீஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்து விட்டான்.

போலீஸ் அந்த ஊருக்குப் போய் விசாரித்ததில் ராஜவேலுவும் அவனது கூட்டாளிகளும் இதில் சம்பந்தப் பட்டிருப்பது அறிந்து அவர்களைப் பிடித்துக் கொண்டு போய் லாக்கப்பில் போட்டு விசாரித்தார்கள். அடி, உதை என்று எல்லாவித போலீஸ் மரியாதைகளுக்குப் பிறகு பையன்கள் அந்தப் பெண்ணோடு தங்களுக்கு இருந்த கள்ள உறவை ஒப்புக் கொண்டார்கள். கொலை செய்தது அவர்கள் இல்லை என்பதாலும் கொலை செய்த தகப்பனே குற்றத்தை ஒத்துக் கொண்டதாலும் அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையோடு ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருந்தார்கள். ஆனால் உள்ளூரில் அதற்கு மேலும் இருக்கப் பயந்து கொண்டு நாலு பையன்களும் திசைக் கொருவராகப் பக்கத்து ஊர்களில் புகலிடம் தேடிப்போனபோது ராஜவேலு இந்த ஊருக்கு வந்து விட்டிருந்தான்.

ராஜவேலு தன் சோகமான கதையைச் சொல்லிவிட்டு சிதம்பரத்திடம் மேற்கொண்டு என்ன ஆகுமோ என்ற பயத்தையும், காத்துப் பிள்ளையிடம் சொல்லி மேற்கொண்டு அவனது கதையைத் துருவித் தொந்தரவு தராதிருக்கச் சொல்லும் படியும் கெஞ்சினான். பயத்தில் அவன் கிலிபிடித்தவன் போல் மிரண்டிருப்பது தெரிந்தது. அவனை நிம்மதியாய் வந்த இடத்திலும் வாழவிடாமல் காத்துப் பிள்ளை செய்வது அவனுக்குப் 'புலியிடமிருந்து தப்பி முதலை வாய்க்குள் விழுந்தமாதிரி' ஆகி விட்டது. சிதம்பரத்துக்குப் பாவமாக இருந்தது.

மறுநாள் காத்துப் பிள்ளையிடம் பக்குவமாய் ராஜவேலு விஷயத்தைச் சொல்ல இருந்தபோது அவரே சிதம்பரத்தைத் தேடி வந்தார். அவரது கையில் கைக்கு அடக்கமான ஒரு சின்னப் புத்தகம் இருந்தது. பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்திய பூரிப்பு அவரது முகத்தில் தெரிந்தது.

"இதப் பாத்தியா சிதம்பரம்! இந்தப் பய சொல்லாட்டி நா கண்டுபிடிக்க மாட்டனா? டவுன் சந்தையிலே இவங் கதைய டேப் அடிச்சுப் பாடுறான். இதுதான் அந்தக் கொலைச் சிந்து!" என்று அந்தப் பிரசுரத்தை சிதம்பரத்திடம் நீட்டினார். அதில் ராஜவேல் சொன்ன கதை முழுதும் பாட்டாக எழுதப் பட்டிருந்தது.

அப்போதெல்லாம் பரபரப்பான கொலை கொள்ளைச் செய்திகள் சூடு தணியு முன்பாக, இதுபோல சிந்து பாடி சிறு பிரசுரமாக அச்சிட்டு ஒர் அணா, ரெண்டணா விலையில் சந்தை போன்ற மக்கள் கூடும் இடங்களில் டேப் அடித்துப் பாடி விற்கப்படும்.

"ராஜவேலு எங்கிட்ட எல்லாத்தியும் சொல்லிட்டான். பாவம்! அவன விட்டு ருங்க. நீங்க முரட்டுத்தனமா கேட்டதுலே பயந்துட்டான்" என்றார் சிதம்பரம்.

"அதெப்படி விட்டுடுறது? எங்கிட்டியே மறைச்சா உட்றுவனா? இப்ப அவங்கிட்ட இதக் காட்டி ஒரு உலுக்கு உலுக்கிட்டுதான் வரேன்" என்றார் வெற்றிப் பெருமிதத்துடன். அதோடு "ஜெயில்ல இருக்குற அப்பன்காரன் ஜாமீன்ல வெளீல வந்து உங்க நாலு பேரையு தீர்த்துக் கட்டப் போகிறானாம்" னும் செல்லி வச்சேன்" என்று கெக்கலி கொட்டினார். பாவம், ராஜவேல் அதைக் கேட்டு குற்றுயிரும் கொலை உயிருமாய் ஆகி இருப்பான் என்று மனம் கசிந்தார் சிதம்பரம்.

"போவுது இத்தோட விட்டுடுங்க! ஓடுறவன விரட்டுறது வீரமில்லே!" என்று காத்துப் பிள்ளையைத் தடுத்து ராஜவேலுவை ஆற்றுப் படுத்தியது நினவுக்கு வந்தது. அதை நினைவூட்டி இப்போது மருதுவிடம் சொன்ன போது அவன் சொன்னான்: "ஆயிரம் அடாவடித்தனம் இருந்தாலும் அவுரு தன்னோடத் தம்பியை உங்கள மாதிரியே காலேஜுல படிக்க வைக்கணும்னு ஆசப்பட்டு நீங்க படிச்ச காலேஜுலியே படிக்க வச்சாரே அதுக்காகப் பாராட்டணும்"

"உண்மைதான். ஹைஸ்கூல் வரைக்கும் கடன் வாங்கியோ எப்பிடியோ படிக்க வச்சார். அப்புறமா தன்னாலே முடியாமெ சொத்து வருதுண்ணு காலேஜுக்குப் போறதுக்கு முன்னாலே ஒறவுலே கல்யாணமும் பண்ணி வச்சுட்டாரு. நாங்கள்லாம் ஹாஸ்டல்லே தங்கிப் படிச்சப்போ அவரோட தம்பி டவுன்ல ஒரு சின்னப் போர்ஷன்ல வாடகைக்கி புது மனைவியோட தங்கிக்கிட்டு படிச்சார். அதுவும் இண்டருக்கு மேலே முடியல. அப்றம் என்ன ஆச்சுன்னு தெரியல!" என்றார் சிதம்பரம்.

"அதுக்கு மேல காத்துப் பிள்ளைக்கு சக்தி இல்லே. அவுரு தம்பி டவுன்ல டைப் அடிக்கக் கத்துத் தர ஒரு எடத்தை வாடகைக்குப் பிடிச்சி, நாலஞ்சு மிஷின வாங்கிப் போட்டு ஆரம்பிச்சாரு. அதுல தான் வந்துது வினையே!" என்று சற்றே நிறுத்தினான் மருது.

அப்பொழுது சிதம்பரம் வேலைக்காக வெகு தொலைவுக்குப் போய்விட்டதால் அதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க வில்லை.

"ஏன், என்ன ஆச்சு?" என்றார் ஆர்வமாக.

"டைப் சொல்லித் தர ஒரு பெண்ணை உதவிக்கு வச்சார். அவ அவரை மயக்கி ரிஜிஸ்தர் கல்யாணம் பண்ணிக்கிட்டா. அதோட விடுல. அவர் பங்குக்கு இருந்த வீடு நெலம் எல்லாத்தையும் வித்துக் காசாக்கி அவரையும் வற்புறுத்தி அழச்சிக்கிட்டு தன்னோட சொந்த ஊரான கோயம்புத்துருக்குக் கொண்டு போய்ட்டா. ஊரை எல்லாம் நையாண்டி பண்ணிய காத்துப் பிள்ளைக்கு இப்ப ஊரே தன்னைப் பாத்து நையாண்டி பண்ற மாதிரி ஆயிடுச்சேன்னு மனசு ஒடஞ்சு போய்ட்டுது. தம்பிய வளத்து ஆளாக்கப் பாடு பட்டவருக்குத் தன் பிள்ளைகள அப்படிச் செய்ய முடியாம போயிடுச்சி. அவுரு தம்பியும் சீக்கிரமே ரெண்டாவது பொண்டாட்டியோட கொடுமத் தாங்காம பூச்சி மருந்து குடிச்சி செத்துப் போய்ட்டார்னு சேதி வந்துது. காத்துப்பிள்ளை அப்ப படுத்தவர்தான். அப்றம் எழுந்திருக்கவே இல்லே. மொதல் சம்சாரமும் கொழந்தையும் பொறந்த ஊட்டோடப் போய்ட்டாங்க. நல்லா வாழ்ந்த குடும்பம் இப்படிச் செதறிப் போச்சு" என்று இரக்கத்தோடு சொன்னான் மருது.

சிதம்பரத்துக்குக் கேட்க மிகவும் கஷ்டமாக இருந்தது. "வா, போகலாம்" என்றபடி நடந்தார்.

(தொடரும்)

கால நதிக்கரையில் - 24

கால நதிக்கரையில் - 24

- வே.சபாநாயகம்

கீழ மந்தையிலிருந்து கிளம்பி நடுத்தெருவை நோக்கி நடந்தார்கள். சிதம்பரம் வாழ்ந்த வீடு அந்தத் தெருவில்தான் நடுப் பகுதியில் இருந்தது. தெருமுனையில் இருந்த முதல் வீட்டைப் பார்த்ததும் சிதம்பரத்துக்கு அந்த வீட்டின் மணியப் பிள்ளை ஞாபகத்துக்கு வந்தது.

"மணியப் பிள்ளை இருக்காரா மருது?" என்று கேட்டார்.

"இந்தத் தெருவின் அரவமே அவர் போனதுக்கப்றம் போச்சு!" என்றான் மருது.

"என்னப்பா சொல்றே? மணியப் பிள்ளை இல்லியா?" என்று சற்றே பதற்றத்து டன் கேட்டார். "வயதுகூட அதிகம் இருக்காதே! என்னைவிட ரெண்டு மூணு வருஷம்தானே பெரியவர்?"

"சாகிறதுக்கு வயசு ஒரு காரணமா? இது அவுரு தானே தேடிக்கிட்ட முடிவு. மணியப் பிள்ளை தற்கொல பண்ணிக்கிட்டாரு!" என்றான் மருது சாவதானமாக.

"அய்யய்ய! எப்பிடிப்பா - ஏன்?" என்று சிதம்பரம் பதறினார்.

"எதோ வீட்லே தகராறு! வருமானமுமில்லே. வறுமைதான் முக்கியமான காரண மாயிருக்கணும். அவருதான் ரோஷக்கார மனுஷர்னு உங்குளுக்குத் தெரியுமே! 'குடும்பத்த வச்சிக் காப்பாத்த வக்கில்லாத ஆளு' ன்னு அவரோட புள்ளைகளும் பொண்டாட்டியும் நினைச்சது அவருக்குத் தாங்க முடியாமப் போச்சுன்னு பேசிக்கிட்டாங்க. "

"அப்டியெல்லாம் மனசு தளர்ரவரில்லியே! மாட்டுத் தரகெல்லாம் பண்ணிக்கிட்டிருந்தாரே!"

"அதுலே ஒண்ணும் பெருசா வரல்லே. குடும்பமும் பெரிசாயிடுச்சு. ஒருத்தர் கிட்ட வேலைக்குப் போறதுக்கும் வரட்டுக் கௌரவம்.... விதி முடிஞ்சுட்டா எதாவது ஒரு எமப்பழி" என்றான் மருது வேதாந்தமாக.

சிதம்பரத்துக்கு மனது கனத்தது. எவ்வளவு வெகுளியான நல்ல மனிதர்! தான் அதிகம் படிக்காததால் சிதம்பரம் படித்திருப்பது பற்றி அவரிடம் ஒரு மரியாதை. விடு முறையில் அவர் வந்திருக்கிறார் என்று தெரிந்தால் போதும், தேடி ஓடி வந்துவிடுவார்.

ஆள் வாட்டசாட்டமாக, சிவந்த மேனியுடன் நல்ல உடல் கட்டுடன் இருப்பார். தலை முழுதுமாக வழுக்கை விழுந்து பக்க வாட்டில் இருபுறமும் கொஞ்சமாக முடி இருக்கும். நீளமான கிருதா; இடுப்பில் ஜிப் வைத்த பச்சை சிங்கப்பூர் பெல்ட்; நீல வண்ணத்தில் கட்டம் போட்ட கைலியும் கலர் முண்டா பனியனுமாய், பார்த்தால் சாயபு என்றே நினைக்கத் தோன்றும். வலது முண்டாவில் சிவப்புக் கயிற்றில் கோர்த்த வெள்ளித் தாயத்து; எப்போதும் ஐந்தாறு நாள் தாடி - அரிசியும் உளுந்து கலந்த

மாதிரி. வெற்றிலைக் காவியேறிய பற்களும், சதா மெல்லப்படும் வெற்றிலைப் பாக்கால் சிவந்த வாயுமாக எப்போதும் எங்கேயாவது போய்க் கொண்டும் வந்து கொண்டும்தான் இருப்பார்.

ஊரில் எதற்கும் நியாயம் கேட்கிற முதல் ஆள் அவர்தான். பாரபட்சமாகப் பெரிய மனிதர்கள் யார் நடந்து கொண்டாலும் துணிச்சலாகப் பொது இடத்தில் வைத்தே கேட்டு அவர்களது அதிருப்தியைச் சம்பாதித்திருப்பவர். அவரிடம் எல்லோருக்கும் எப்பொழுதும் ஒருவித தார்மீகப் பயம் இருக்கும். உரிமையை விட்டுக் கொடுத்து யாருடைய தாட்சண்யத்தையும் யாசித்து நிற்பவரில்லை. நமக்கு ஏன் என்று எதையும் விட்டு விடாதவர். எதற்கும் மறுப்பும் சமயத்தில் விதண்டாவாதமும் பண்ணுகிற சுபாவம். அநேகமாக எதனோடும் யாரோடும் ஒத்துப் போகாத மனப் போக்கு.

சிதம்பரத்தின் அண்ணன் உருவாக்கிய கைப்பந்து கழகத்தில் உறுப்பினர் ஆக லேசில் அவரைச் சம்மதிக்க வைக்க முடியவில்லை. கடைசியில் அண்ணனின் மென்மையான அணுகுமுறையால் தான் சேர்க்க முடிந்தது. அண்ணன் வேலைக்குப் போன பிறகு கைப்பந்துக் கழகம் செயலற்றுப் போனதும், மற்றவர்கள்மீது நம்பிக்கை இழந்தவராய், பந்தாடிய வலையிலும் பந்திலும் தன் பங்குக்கு உரியதைத் தந்தாக வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடித்தது நினைவுக்கு வருகிறது. பிறகு சிதம்பரம் தலையிட்டு, அதெல்லாம் சாத்யமில்லை விட்டு விடுங்கள் என்று சமாதானப் படுத்தியபிறகுதான் ஓய்ந்தார்.

இப்படி சில முரட்டுத்தனத்தினால் அவரது வெள்ளை உள்ளமும் நேர்மையான போக்கும் எடுபடாமல், பலருக்கு எரிச்சலையும் அவரைச் சீண்டி வேடிக்கை பார்க்கிற எண்ணத்தையும் உருவாக்கி இருந்தது. அதில் முக்கியமானவர் அவரது எதிர் வீட்டு நாராயணசாமி பிள்ளை.

நாராயணசாமி பிள்ளையும் விதண்டாவாதப் பேர்வழிதான். மணியப் பிள்ளையின் வயதை ஒத்தவர். பிள்ளைப் பிராயத்திலிருந்தே மணியப் பிள்ளையைச் சீண்டி ரசிப்பதில் ஒரு திருப்தி. எதிர்வீடு வேறே. தினமும் பார்த்துக் கொண்டாக வேண்டிய சூழ்நிலை. மணியப் பிள்ளை எது செய்தாலும், தேவையே இல்லாமல் நக்கலான விமர்சனம் அவரிடமிருந்து கிளம்பி மணியப் பிள்ளையை எரிச்சலூட்டும். நேரிடை விமர்சனமாக இல்லாமல் ஜாடைப் பேச்சாக இருப்பதால் நேரிட்டு அவரிடம் சண்டைக்குப் போக முடியாத நிலையில் மணியப் பிள்ளை உரத்துத் திட்டியபடி தெருவில் நடப்பார். சிதம்பரம் ஊரில் இருந்தால் அவரிடம் போய்ப் புகார் செய்வார். ஊரில் தன்னிடம் அனுதாபம் காட்டக் கூடியவர் என்பதால் சிதம்பரத்திடம்தான் தனது குறைகளையும் புகார்களையும் சொல்லுவார்.

மணியப்பிள்ளை தன் தரகுத் தொழில் காரணமாய் பகல் முழுதும் வெயிலில் நிற்க வேண்டி இருந்ததால், வெகுநாட்களாய்ச் சேமித்து ஒரு கருப்பு குளிர் கண்ணாடியை வாங்கி அணிந்து கொண்டார். அன்று மாலை இருட்டும் நேரத்தில் வீடு திரும்பியபோது கண்ணாடியைக் கழற்றாமலே தெருவில் வந்திருக்கிறார். தன் வீட்டில் இருந்தபடி அதைப் பார்த்த நாராயணசாமி பிள்ளை யாரிடமோ பேசுகிற மாதிரி எதிர்ப்பக்கம் திரும்பிக் கொண்டு "என்னுமோ சொல்லுவாங்களே 'எதுக்கோ வாழ்வு வந்தா அர்த்தராத்திரியிலே கொட பிடிக்கும்னு' அதும் மாதிரி இருக்கு" என்று நக்கல் செய்ததுடன், "எங்கியாவது சந்தையிலே அஞ்சு பத்துக்குக் கெடைச்சிருக்கும்" என்று வேறு சொல்லவே மணியப்பிள்ளைக்கு பயங்கரமான கோபம் வந்து விட்டது. உடனே திரும்பி மூன்று வீடுகள் தள்ளி இருந்த சிதம்பரத்திடம் வந்தார்.

கருப்புக் கண்ணாடியைக் கழற்றி சிதம்பரத்திடம் நீட்டி. " இதப் பாரு சிதம்பரம், இது என்னா வெலை பொறும்?" என்று கேட்டார். சிதம்பரம் வாங்கிப் பார்த்து "நல்ல ஒசத்திக் கண்ணாடி மாதிரி இருக்கே! என்னா அம்பது ரூபா இருக்குமா?" என்றார். மணியப் பிள்ளைக்கு ஆவேசம் வந்து விட்டது. உண்மையில அவர் கொடுத்த விலை ஐம்பதுதான். "என்ன இருந்தாலும் பெரிய மனுஷங்க, படிச்சவங்கண்ணா அது தனிதான். உங்குளுக்கு இதோட மதிப்பும் வெலையும் தெரியுது. ஆனா செல நட்டா முட்டிக்கு, படிக்காத முண்டங்களுக்கு - குண்டு சட்டிக் குள்ள குதிர ஓட்டற ஜன்மத்துக்குத் தெரியலியே! என்னுமோ சொல்லுவாங்களே 'எதுக்கோ தெரியுமா கற்பூர வாசனை'ன்னு அதும் மாதிரி பேசுதுங்க. இது அஞ்சோ பத்தோதான் இருக்குமாம். உச்சந்தல எரிய வெயில்ல நிண்ணு சம்பாரிச்சி, ஆசப்பட்ட பொருள வாங்கிகிட்டு வந்தா சில வக்கத்ததுங்களுக்கு வயிறு எரியுது" என்று தெருவே கேட்குமாறு உரத்துச் சத்தமிட்டார். சிதம்பரம் அவரை சமாதானப் படுத்தி 'யார் அப்படிச் சொன்னது என்ன விவரம்' என்று கேட்டதும் "ஆரு சொல்லு வாங்க? எல்லாம் அந்த ஆம்பளக் காந்தாரிதான். நான் நல்லதா ஒண்ண அனுபவிச்சா அவனுக்குப் பொறுக்காதே!" என்று அழாத குறையாய் சிதம்பரத்த்¢டம் நடந்ததைச் சொன்னார். சிதம்பரம் அவரை ஆசுவாசப் படுத்தி ஆறுதல் கூறி அனுப்பினார்.

மணியப் பிள்ளையை இன்னொரு விதத்திலும் நாராயணசாமி பிள்ளை சீண்டுவார். ஊரில் காமுட்டித் திருவிழா நடக்கும் போது முதல் நாள் காப்புக் கட்டும்போது யாராவது ஒருவரைப் பரமசிவனாகத் தேர்வு செய்வார்கள். அவர்தான் ஆற்றிலிருந்து கலசத்தில் நீர் கொண்டு வர வேண்டும். அப்படி ஒரு வருஷம் மணியப் பிள்ளை பரம சிவனாகத் தேர்வாகி காமதகனம் முடியும் வரை சுத்த பத்தத்துடன் இருக்க வேண்டி வந்தது. தினமும் இரவில் காமதகன கதை படிக்கப்படும். முறையாகப் பாடத் தெரிந்த வர்கள் ஊரில் இரண்டு மூன்று பேர் தான். நீட்டி முழக்கி ரசித்து ஒருவித லயத்தோடு பாடுவார்கள். அதற்கேற்றபடி சேரியாட்களின் பறைக் கொட்டு முழங்கும். அது தினமும் ஊரார் தவற விடாத பரவசமான நிகழ்ச்சி.

பாடலில் பரமசிவனுக்குத் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, அங்கு மூலவராக அமர்ந்திருக்கும் மணியப் பிள்ளைக்கு ஆவேசம் வந்துவிடும். திடீரென்று வலிப்பு வந்தவர் மாதிரி உடம்பை முறுக்கி குலுக்கி சாமியாட ஆரம்பித்து விடுவார்.

யாராவது பக்கத்தில் இருப்பவர்கள் வந்து தாங்கிப் பிடித்து அவர் கீழே விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளுவார்கள். இது காமதகனம் முடியும் வரை தொடரும். நாராயணசாமி பிள்ளைக்கு இது அதீத அலட்டலாகப் பட்டது.. 'எல்லோரும் தன்னைப் பார்க்க வேண்டும், தாங்க வேண்டும் என்று அப்படிச் செய்கிறார், சாமியாவது பூதமாவது' என்று கரித்துக் கொட்டுவார். வெளிப் படையாகச் சொல்ல முடியாமலும் அதை நிறுத்த முடியாமலும் முணுமுணுத்தபடி இருப்பார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் வேறு யார் பரமசிவனாகத் தேர்வு செய்யப்பட்டாலும் காமதகனப் பாட்டு பாடும்போது தினமும் மணியப் பிள்ளைக்கு ஆவேசம் வந்துவிடும். அதிலும் இரவு ரதி மன்மதன் படம் ஊர்வலம் வரும்போது தெருவுக்குத் தெரு சாமியாட ஆரம்பித்து விடுவார் மணியப் பிள்ளை. இதற்கு ஒரு முடிவு கட்ட நாராயணசாமி பிள்ளை எண்ணினார். ஒருநாள் காமதகனப் பாடலில் உச்ச கட்டம். மன்மதன் ரதியிடம் அவளது தந்தையான பரமசிவனை இகழ்ந்து பேசும் கட்டம். ஊர்வலம் நடுத் தெருவில் வந்து கொண்டிருந்தது. மன்மதன் பக்கம் பாடுகிறவர், "அடீ! உங்கப்பன் பேயாண்டி........" என்று நீட்டி முழக்கிப் பாடியபோது ஊர்வலக் கும்பலுக்கு நடுவே "ஆய்.."என்று ஆவேசக் குரல் எழும்ப எல்லோரும் அங்கே திரும்பிப் பார்த்தனர். மணியப் பிள்ளைதான் ஆவேசம் வந்தவராய் கண்ணை மூடி உடலை முறுக்கி, கைகளை உயர்த்தியபடி குதிக்க ஆரம்பித்திருந்தார். அவர் விழுந்து விடப் போகிறாரே என்று இரண்டு பேர் அருகே ஓடி அவரை இறுக்கிப் பிடித்தார்கள்.

அதைப் பார்த்துவிட்டு நாராயணசாமி பிள்ளை அங்கு சென்று, மணியப் பிள்ளையைப் பிடித்திருந்தவர்களை ஜாடை காட்டி விலகிப் போகும்படி செய்தார். இறுக்கிப் பிடிக்கப் பிடிக்க மணியப் பிள்ளைக்கு ஆவேசம் அதிகமாகி ஆட்டமும் அதிகமாக ஆகும். இப்போதும் அப்படி ஆவேசமாய் அவர் குதித்த போது பிடித்தி ருந்தவர்கள் விலகிவிடவே தடாலென்று வெட்டிய மரம் போல கீழே விழ வேண்டியதாகி விட்டது. தலையிலும் உடம்பிலும் நன்றாக அடி பட்டு விட்டது. யாரும் போய்த் தூக்காதபடி நாராயணசாமி பிள்ளை பார்த்துக் கொண்டார். ஊர்வலம் நகர்ந்து விட்டது. அவரை அப்படியே விட்டுவிட்டு எல்லோரும் நகர்ந்து விட்டார்கள்.

"இனிமே ஜன்மத்துக்கும் அவன் சாமியாட மாட்டான் பாரு!" என்று நக்கலாகச் சிரித்தார் நாராயணசாமி பிள்ளை. அது உண்மையாயிற்று. அதற்குப் பிறகு மணியப் பிள்ளைக்கு ஒருபோதும் ஆவேசம் வரவில்லை.

அதை நினைத்தபோது சிதம்பரத்துக்கு மணியப் பிள்ளை மீது அனுதாபமும் நாராயணசாமி பிள்ளையின் குறும்பை எண்ணிச் சிரிப்பும் வந்தது.

"ஆனாலும் மணியப் பிள்ளை பாவம்'பா! எதிர்வீட்டு நாராயணசாமி பிள்ளை அவரை ரொம்பவும்தான் படுத்தி விட்டார்" என்றார் மருதுவிடம்.

'அவுரு மட்டும் என்னா வாழ்ந்துட்டார்? அவுரு மணியப் பிள்ளையை மட்டுமா படுத்தி எடுத்தார்? ஊரையே படுத்தியவர் தானே?" என்றான் மருது. பேசிக் கொண்டே மேலே நடந்தார்கள்.

( தொடரும் )