Saturday, October 13, 2007

கால நதிக்கரையில் - 27

கால நதிக்கரையில்......(நாவல்)-27

- வே.சபாநாயகம்

தெருக் குறட்டிலிருந்து சிதம்பரத்தின் பார்வை பூட்டி இருந்த தெருக் கதவுக்கு மாறியது. இந்த வாயிற்படி பின்னால்தான் அமைக்கப்பட்டது. பெரியப்பாவுக்கும் அப்பாவுக்கும் பாகம் பிரிக்கப்பட்டபோது கூட இப்படித் தனித் தனித்தனி வாயில் இல்லை. பெரிய வீட்டின் மேலண்டைப் பகுதி நடைமுறை வழக்கப்படி மூத்தவரான பெரியப்பாவுக்கும், கீழண்டைப் பகுதி இளையவரான அப்பாவுக்கும் ஒதுக்கப்பட்டது. முன் வாசற்படி மட்டும் பொது. மற்ற புழக்கம் எல்லாம் அவரவர் பகுதியில் இருந்தது. பெரியப்பா காலம் வரை அப்படியேதான் இருந்தது. அவரது காலத்துக்குப் பின் அவரது இரண்டு மகன்களும் பாகம் பிரித்துக் கொண்டபோது அந்தப் பகுதி பெரியண்ணனுக்கு விழுந்தது. அவர் தன் பகுதியைத் தனியே பிரித்துக் கட்ட விரும்பியதால் பழைய வாயிற்படியின் நடுப்பகுதியில் சுவர் எழுப்பப்பட்டு இப்போதுள்ள மாதிரி இந்த வாசற்படி அப்பாவால் அமைக்கப்பட்டது.

இப்போது பலரது காலடிகளின் கீழே மிதிபடுகிற - இந்த வாசற்படிக்குப் பின்னால் இருக்கிற பகுதி முன்பு சின்னக் கூடமாக இருந்தது. அதுதான் சிதம்பரமும் அவரது உடன்பிறப்புகளும் ஜனித்த இடம். அம்மாவின் தலைப்பிரசவம் தவிர மீதி ஒன்பது பிரசவங்களும் அங்கு தான் நிகழ்ந்தன. வாசற் படியைத் தாண்டியதும் இருந்த வலது புறத்துக் கூடம், முற்றம் வரை தட்டியால் மறைக்கப்பட்டு பிரசவ அறையாகி விடும். முற்றத்தில் இறங்கித்தான் உள்ளே போக முடியும். அப்போதெல்லாம் ஆஸ்பத்திரிக்குப் பிரசவம் பார்க்கச் செல்வதில்லை. ஆஸ்பத்திரிகளும் அபூர்வமாய்த் தொலைவில் நகரத்தில் இருந்தன. போக்குவரத்து வசதியும் இல்லை. உள்ளூர் மருத்துவச்சிதான் எல்லாப் பிரசவத்துக்கும்.

புண்ணியாக வாசனம் வரை அம்மாவின் அக்கா, இளம் வயதில் விதவை ஆன ஒரு பெரியம்மாதான் எல்லாப் பிரசவத்துக்கும் வந்து இருந்தார்கள். அம்மா ஆரோக்கியமான அந்தக்காலத்து மனுஷி என்பதால் எல்லாப் பிரசவமும் சுகப் பிரசவம்தான். அதுவே ஊரில் மற்றப் பெண்களுக்கு அம்மாவிடம் ஒரு மரியாதையை - பத்துப் பிள்ளைகளையும் ஆரோக்கியமாய்ப் பெற்றெடுத்து ஆளாக்கிய நிறைவான மனுஷி என்று - ஏற்படுத்தியது. பொறாமையோ கண்ணெறியோ யாருக்கும் அப்போதெல்லாம் ஏற்பட்டதில்லை. அதைப் பெரிய கொடுப்பினையாக நினைத்தார்கள்.

அப்பா பெரிய பூஜை செய்பவர்கள் என்பதால் புண்ணியாக வாசனம் வரை, வீட்டுக்குள் பூஜை செய்வதில்லை. எதிர் வீட்டில் பூஜை செய்துவிட்டு வீட்டின் முன் வாயில் வழியாக நுழையாமல் பின்பக்கத்து வழியாகத்தான் வீட்டுக்குள் வந்து சாப்பிடுவார்கள். அந்த நாட்களில் அப்பா தீட்டு என்று கோவிலுக்கும் போக மாட்டார்கள்.

அம்மாவை இப்போது நினக்கும்பொது சிதம்பரத்துக்கு மலைப்பாக இருக்கிறது. இன்றைய நடைமுறைப்படி இரண்டு பிள்ளைக¨ளையே தங்களால் நல்லபடி வளர்த்து ஆளாக்கத் தடுமாறும் போது அம்மா பத்துப் பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்க என்ன பாடு பட்டிருக்க வேண்டும்? வாழ்நாளில் பாதியைப் பிள்ளைப் பேற்றிலும் பிள்ளைகளை வளர்ப்பதிலுமே கழித்து விட்ட அம்மாவை நினத்தால் மனம் கனக்கிறது.

வேலைக்குப் போன பிறகு சிதம்பரம் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கியதும் அம்மாவின் குரலைத்தான் முதலில் அதில் பதிவு செய்தார். ஒரு பேட்டி போல அம்மாவிடம் பேசிப் பதிவு செய்தபோது அம்மாவிடம் சிதம்பரம் கெட்டார்: "இப்ப எங்கியும் குடும்பக் கட்டுப்பாடுன்னு வந்துட்டுது. 'ஆசைக்கு ஒர் பொண்ணு ஆஸ்திக்கு ஒரு பிள்ளைன்னு' ரெண்டு போதும்; அதிகம் பிள்ளைங்க பெத்துக்கிட்டு அவஸ்தப்பட வேணான்னு சர்க்காரே சொல்றாங்களே- நீங்க பத்து பிள்ளைங்க பெத்துக்கிட்டது சங்கடமா இல்லியா? அதுக்காக நீங்க கூச்சப் படலியா?"

அம்மாவிடம் பிள்ளை கேட்கிற கேள்வி இல்லைதான் அது. ஆனாலும் அம்மா அதுபற்றிக் கூச்சப்படாமல். ''இதுல என்னா சங்கடம், என்னா கூச்சம் இருக்குது? வீடு நெறையா புள்ளைங்க இருக்கிறது ஒரு அழகுதான். 'ஒரு மரம் தோப்பாவுமா ஒரு பிள்ளையும் பிள்ளையாகுமா' ம்பாங்க. ஒரு நல்லது கெட்டதுண்ணா ஒண்ணாக் கூடி சந்தோஷப்படவும் கட்டிக்கிட்டு அழவும் ஒடன் பிறப்புன்னு இருந்தா அது ஒரு பலந்தான். ஒரு பிள்ளயா இருந்தா அது கெடைக்குமா?" என்றார்கள்.

"அதில்ல, இப்ப வெலைவாசி இருக்குற நெலைமையிலே ரெண்டு பிள்ளை களையே வளக்க எங்களுக்குக் கஷ்டமா இருக்கே, நீங்க எப்படி பத்து பிள்ளை களையும் வளத்தீங்க? கஷ்டமா இல்லியா?'

"இதுல என்னா கஷ்டம்? 'கொடிக்குக் காய் பாரமா'ம்பாங்க. இப்ப மாதிரியா? வீட்டுலே நெல்லு வெளைஞ்சது, எள்ளும் கடலையும் வீடு கொள்ளாம எறஞ்சுது. செலவுக்குக் கஷ்டமில்ல; அதோட இப்ப இருக்கிற பிள்ளைங்க மாதிரியா? மூணு அணாவுக்கு அழவாரத்தான் கைத்தறித் துண்டு வாங்கிக் குடுத்தா நீங்கள்ளாம் கட்டிக்கிட்டீங்க. உங்க பிள்ளைங்க எல்லாம் இப்ப டெரிலினும் டெரிகாட்டும் கேக்குதே! காலைலே குளிப்பாட்டி பாலக் குடுத்து, எதிர்த்த வீட்டு வள்ளிமை அக்காக் கிட்டியோ பக்கத்து வீட்டு கார்மாங்குடி புள்ள வீட்டிலியோ உட்டுட்டு வந்தா சமத்தா அழாம நீங்க இருந்திங்களே- இப்ப உங்க பிள்ளைங்க அப்பிடி இருக்குமா? அதும் மாதிரி முகம் சுளிக்காம புள்ளைகள வச்சுக்கத்தான் இப்ப உங்க எதிர்வீடு அண்டை வீட்டுலே ஒத்துக்குவாங்களா? கூடத்துல ஒக்கார வச்சு பொரி, கடலன்னு முன்னால ஒரு கிண்ணத்துல குடுத்துட்டா நீங்கள்லாம் பேசாம திண்ணுக்கிட்டு படுத்தாம இருப்பீங்களே, உங்க பிள்ளைங்க இப்ப சாக்லேட்டும் ஆர்லிக்சும்ல கேக்குதுங்க! எங்க காலத்துல புள்ள வளக்குறது இப்ப மாதிரி கஷ்டமா ஒண்ணும் இல்ல" என்றார்கள்.

அம்மா சொன்னது உண்மைதான். நெல்லைத் தொம்பையில் போட்ட மாதிரி, மணிலாக் கொட்டையைப் போட இடமில்லாமல் விற்கிறவரை வீடு முழுதும் கொட்டிக் கிடக்கும். கடலையின் கதகதப்பின் மீது தான் வீட்டுக்குள் நடமாட முடியும்.

தெருவில் எது விற்றாலும் - மாம்பழம், எலந்தைப் பழம், பாலப் பழம், முந்திரிப் பழம், பெலாச்சுளை என்று எது வந்தாலும் அம்மா கூப்பிட்டு பிள்ளைகளுக்காக வாங்கி விடுவார்கள். பணமாகக் கொடுப்பதில்லை. பதிலாக நெல்தொம்பையின் அடிச்சொருகுக் கதவைத் திறந்து விட்டால், மடையைத் திறந்து விட்டால் தண்ணீர் சீறிப் பாய்கிற மாதிரி 'சரசர' வெனச் சரியும் நெல்லை முறத்தில் ஏந்தி பண்டமாற்றாக அதைக் கொடுத்துதான் வாங்குவார்கள்.

அம்மா பிள்ளைகளைப் பேணி வளர்த்த மாதிரி இப்போது யார் செய்கிறார்கள்?சனிக்கிழமை தோறும் எண்ணை முழுக்காட்டு; மாதத்திற்கொரு முறை விளக் கெண்ணை; வெள்ளிக்கிழமைகளில் எல்லோரையும் நெருக்கி உட்காரவைத்து

திருஷ்டி சுற்றிப் போட்டது என்று ஒவ்வொன்றாய் சிதம்பரத்தின் நினைவில் அம்மாவின் நினைவுகள் புரள்கின்றன.

அம்மா படித்தது மூன்றாம் வகுப்பு வரைதான். அந்தக் காலத்து சாத்தாணிப் பள்ளிக்கூடப் படிப்பு என்பதால் எண்ணும் எழுத்தும் அத்துபடி. திக்காமல் திணறாமல் வாசிக்கவும் எழுதவும் செய்தார்கள். வீட்டின் வரவு செலவை எல்லாம் அதற்கான கணக்கு நோட்டில் அன்றாடம் எழுதி வைப்பது அம்மாதான். அம்மாவிடம் கற்றதுதான் சிதம்பரம் கல்லூரிக்குப் போன காலம் முதல் இன்று வரை வரவு செலவுக் கணக்கை எழுதுகிற பழக்கம். பிள்ளைகளுக்குப் பெரியம்மா, மாமா போன்றவர்கள் பார்க்கும் போது கொடுக்கிற காசுகள், காணும் பொங்கலில் கிடைக்கும் காசு ஆகியவற்றை ஒவ்வொருவருக்கும் தனியாக சுருக்குப் பை வைத்து அதில் விவரச்சீட்டுடன் போட்டு வைப்பது அம்மாவின் பழக்கம். அப்பாவை விட ஒரு பத்து வருஷம் அதிகமாக 95 வயது வரை வாழ்ந்ததும், நினைவு தப்பிய கடைசி ஐந்து வருஷத்துக்கு முன்வரை அம்மா கண்ணாடி போடாமலே புத்தகங்கள் படித்ததும் கணக்கு எழுதியதும், ஒரு பல் கூட சொத்தை சோடை இல்லாமல் தேங்காய்ச் சில்லு போல பளிச்சென்ற வெண்மை யுடன் திடமாக இருந்ததும் இப்போது சொன்னால் நம்புவது கஷ்டம்தான்.

அப்பா பாம்புக்கடி பச்சிலையும், காலரா மருந்தும் வாங்கி பலரது உயிரைக் காப்பாற்றிய மாதிரி, அம்மா குழந்தைகளுக்கான மருந்துகளை - கோரோசனை, தஞ்சாவூர் மாத்திரை போன்றவற்றை வாங்கி வைத்துக் கொண்டு குழந்தை வைத்தியத்துக்காகத் தன்னிடம் உதவி கேட்டு வருகிறவர்களுக்கு அனுசரணையாய்க் கொடுத்து உதவியதாலும் ஊர்ப்பெண்களுக்கு அம்மாவிடம் மிகுந்த மரியாதையும் ஈடுபாடும் இருந்தது. திருமணத்துக்கு நெல் புழுக்குவதற்கு முதல் கை எடுத்துப் போட அம்மாவைத்தான் கூப்பிடுவார்கள். எல்லோர் வீட்டுத் திருமணச் சடங்குகளும் அம்மா இல்லாமல் நடக்காது. கைராசி கருதியும் நிறையப் பிள்ளைகளைப் பெற்றுப் பெருக வாழ்ந்தவர்கள் என்பதாலும், ஊரில் நல்லது கெட்டதுகளுக்கு அம்மாவின் யோசனை தான் முதலில் நாடப்படும்.

அம்மாவின் அப்பா உடையார்பாளையம் ஜமீனுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தின் ஜாகிர்தாராக இருந்தவர். அம்மா சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் தான் ஜமீந்தார் மகளாக்கும் என்று சொல்லிக் கொள்வார்கள். சரியான தருணங்களில் அப்பா அதை இடித்துக் காட்டுவதுண்டு. அத்தகைய சம்பவம் ஒன்று சிதம்பரத்துக்கு ஞாபகம் வந்தது.

தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் அம்மா நிறைய செய்து வைத்துக் கொண்டு வந்து கேட்கிற ஏழை பாழைகளுக்கு சுணங்காமல் கொடுப்பார் கள். அப்படி வாங்கிப்போகிறவர்கள் எல்லொரும் எப்போதும் விசுவாசம் காட்டுவார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. அப்பா கண்பார்வை போய் தெருத் திண்ணயில் அமர்ந்திருக்கையில் தெருவில் ஆள் அரவம் கேட்டால், "ஆருப்பா அங்கே போறது?" என்பார்கள். போகிறவர் நின்று என்ன வேண்டும் என்று கேட்பார்கள். ஆட்களாக இருந்தால் அப்பா இடும் சின்ன வேலைகளை முகம் சுளிக்காமல் செய்து கொடுத்து விட்டுப் போவார்கள். எல்லோரும் அப்படி இல்லை. ஒரு தடவை ஒரு இளவட்டப் பையன் - அப்பாவிடம் மருந்தும் அம்மாவிடம் பலகாரமும் பல தடவை பெற்றுச் செல்கிறவன் அப்பா கூப்பிட்டபோது, 'தோ போய்ட்டு வரேங்க' என்று நழுவினவன் திரும்ப வரவில்லை. அடுத்த முறை அவன் தென்பட்டபோது, அம்மா "அவ்வளவு கணக்காயிப் போச்சா? கண்ணு புரியாமத்தான ஒன் கிட்டச் சொன்னாரு? 'வரேன்'னுட்டு போனியே வந்தியா? அடுத்தாப்பல பாம்பு பச்சில, தீவாள்¢ பொங்கலுன் னுட்டு வருவீல்ல அப்ப சொல்றேன்" என்று கடிந்தார்கள். அப்பாவுக்கு அப்படிச் சொல்லிக்காட்டுவது பிடிப்பதில்லை. "சே! அவந்தான் அல்பம்னா நீ அதவிட அல்பமா சொல்லிக்காட்டறதா? அப்றம் என்ன 'நா ஜமீந்தார் மக'ன்னு பீத்திக்கறது?" என்று இடித்தார்கள்.

"என்ன அப்பிடியே கதவையே வெறிச்சுப் பாத்தபடியே இருக்கீங்க?" என்று மருது அவரை நினைவுகளிலிருந்து மீட்டான்.

"அந்தக் கதவைப் பாத்ததும் அதுக்குப் பின்னாலே அந்தக் காலத்துலே சிறு பிள்ளையா பாத்ததும், அப்பா அம்மாவைப் பத்திய நெனவுகளூம் ஞாபகம் வந்துடுச்சு!" என்று திரும்பினார்.

பிறகு எதிரே பார்த்து, "ஆமா, வீட்டுக்கு எதிரே அந்த சந்துக்குப் பக்கத்திலே நிக்குமே விளக்குக் கல்கம்பம் எங்கே அதக் காணுமே......" என்றார்.

"அதோ எதிர்வீட்டு வாசப்படிக்கிட்டே தரையிலே பொதஞ்சிருக்கு பாருங்க" என்றான் மருது.

பெரியப்பாவின் புகழ் பாடும் அந்தக் கல்கம்பத்தை மனதுக்குள் நிமிர்த்தி பழைய இடத்தில் வைத்துப் பார்த்தார் சிதம்பரம்.

(தொடரும்)

No comments: