Monday, December 27, 2010

இவர்களது எழுத்துமுறை - 21.நீல.பத்மநாபன்

1. 'ஒரு கவிதை அல்லது கற்பனைப் படைப்பு உள்ளுக்குள் ஆனந்தத்தை
ஆத்மானந்தத்தைத் தரத் தவறிவிட்டால் அது தரம் குறைந்ததாகி விடுகிறது.
ஆனால் அறிவியல் படைப்பாக இருந்தால் நாம் எதிர் பார்க்கும் அதிகமான
அறிவாற்றல் செழுமையில் திருப்தி அடைந்து விடுகிறோம்' என்று
ஜான் பரோஸ் குறிப்பிட்ட ஆத்மானந்தத்தை ஒரு எழுத்தாளன் என்ற
முறையில் என் படைப்புகள் மூலம் ஆத்மசோதனையும் சுயஉணர்தலும்
பயில்வதின் வழி நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

2. தப்போ, சரியோ தன்னிச்சையாக இயல்பாக என்னைச்சுற்றிய மனிதர்கள்
பேசும் பழமொழிகள், கொச்சைச் சொற்கள் கலந்த ஜீவத்துடிப்பான
மொழிநடைக்குப் பதிலாக ஒரு பொதுநிலை மொழியை என் அநாயசமான
எழுத்து முயற்சிக்குப் பயன்படுத்த என் அகம் துணியவில்லை. வளமையான
வக்கணையான நடையை நான் நாடவில்லை. எடுத்துக்கொண்ட கருத்தை
சுருக்கமாய் அழுத்தமாய் சொல்ல முயல்வதே என் பாணி. இவை எல்லாம்
என் தனித்தன்மை முன்னிலை கொண்ட ஒரு குறிப்பிட்ட நடைக்கு என்னை
இட்டுச் சென்றன.

3. எல்லா படைப்பு எழுத்தாளர்களையும் போல நானும் ஒரு முழுமைநாடி.
எனவே அசல் வாழ்வில் லட்சியத்துக்கும் நடப்பியலுக்கும் இடையே நிலவும்
முரண்பாடுகளையும் போராட்டங்களையும் கண்டுணர்ந்து எப்போதும்
அமைதியற்ற மனநிலைமை...இந்த மனநிலைதான் என் படைப்பாக்கத்தை,
கடந்த 50 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தொடர்ந்து செயலாற்றத் தூண்டவும்
சீண்டவும் செய்து கொண்டிருக்கிறது.

4. நெகிழ்வாய் இருக்க வேண்டியுள்ளது. இறுக்கத்துக்கும் நெகிழ்வுக்குமான
யுத்தத்தில் செத்தொழிபவன் கலைஞன். என் எழுத்தில் நான் கொஞ்சம்
இருக்கலாம். முழுதும் நானல்ல. எழுதும்போது நான் நானல்ல. பேனா
பிடித்ததும் அவன் தேவதையாகி விடுகின்றான்.

5. ஒரு கலைஞனை - எழுத்தாளனைப் பொறுத்தவரையில் முதலாவதும்
முடிவாவதும் அவனது ஆன்ம பலம்தான் அவன் உந்து சக்தி. அன்றும்
இன்றும் விமர்சகர்களிடம் சிலரைப்போல் எனக்கு அலர்ஜி இல்லை. ஏன்
என்றால் நானே என்னுடைய ஈவிரக்கமற்ற விமர்சகன். என் நிறைகளை
விட என் குறைகளே எனக்குத் தெரிகின்றன.

6. வாழ்க்கை என்னில் விளைவிக்கும் அனுபவத் தழும்புகள் என்னை
எழுதத் தூண்டும்போது நான் அறியாமல், எழுதும் பகைப்புலனுக்கு -
அட்மாஸ்பியருக்கு ஏற்ப ஒரு உருவம் அமைகிறது. எல்லா இஸம்களையும்
தன்னுள் அடக்கியாண்டு கலை அனுபவத்தை விளைவித்துக்கொண்டு,
நிலைத்து நிற்கும் வலு என் படைப்புகளுக்கு இருக்க வேண்டும்.
இல்லையேல் அவை செத்துவிடும். 0

Friday, December 24, 2010

இவர்களது எழுத்துமுறை - 20.பாலகுமாரன்

1. இலக்கியதாகம் கொண்டவனாக நான் என் வாழ்க்கையை ஆரம்பிக்க
வில்லை. வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தேன். ஆணாதிக்கத்தின்
உச்சகட்டம்தான் என் அப்பா. இங்கே என் அம்மா மட்டுமல்ல, என்னைச்
சுற்றி உள்ள என் சித்தி, அத்தை, பாட்டி, ஒன்றுவிட்ட சகோதரிகள்
போன்ற எல்லா பெண்களுமே ஆணாதிக்க சமூகத்தில் அழுத்தப்பட்டு
வேதனைப்படுகிறவர்கள். இதற்கெல்லாம் புகலிடமாக வேறு வழி இல்லாமல்
இலக்கியத்தில் போய்ச் சேர்ந்தோனோ என்று தோன்றுகிறது. அதனால்
எனக்கு நானே வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு நல்ல அப்பாவைக்
கற்பனை செய்து கொள்வேன். எங்கம்மாவுக்கு வேறு ஒரு நல்ல அப்பாவைக
கல்யாணம் செய்துவைத்துப் பார்ப்பேன். இதனுடைய விளைவுதான் நான்
கதை எழுத ஆரம்பித்தது.

2. 'கசடதபற'வில் சேர்ந்தபோது இலக்கியம் கற்க வேண்டும் என்ற,
நல்ல இலக்கியம் படைக்கவேண்டும் என்ற எண்ணம் தவிர என்னை
அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசையும் இருந்தது.
என் பேரு எப்படியாவது வெளியே வர வேண்டும். அதுவே எனக்கு
முக்கியமாய் இருந்தது அப்போது!

3. பணம் சம்பாதிப்பதற்காக எழுதவில்லை. நான் எழுதுவது ஜனங்களுக்குப்
பிடித்திருக்கிறது. அதே சமயம் நான் என்ன எழுத வேண்டும் என்று
விரும்புகிறேனோ அதை எழுதிக் கொண்டிருக்கிறேன். எப்படி எழுதக்கூடாது
என்பதைக் 'கசடதபற'வில் கற்றுக்கொண்டேன்.

4. நாவல் எழுதும் பிராயத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே
பெரிய பனிக்கட்டி இருப்பதை உணர்ந்து கொண்டேன். இந்த பனிக்கட்டி
என் நாவல் மூலம் உடைய வேண்டும் என்று எண்ணினேன். ஆண்களைக்
கண்டு அச்சப்படும் பெண்கள். பெண்களைத் துச்சமாக மதிக்கும் ஆண்கள்.
இவர்கள் மூலம் பிறக்கின்ற குழந்தைகள் இந்த தேசத்தில் எந்த
யோக்கியதையுமற்று நல்ல அரசியலோ, நல்ல கலை இலக்கியமோ, நல்ல
வாழ்கையோ, நல்ல மதமோ கொள்ள முடியாமல் வீரியமில்லாத
வித்துக்களாக இருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
அன்றிலிருந்து இன்று வரை என் நாவல் இந்த ஒரு விஷயத்தைப்
பற்றித்தான் மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

5. எனக்குக் கிராமம் அதிகமாகத் தெரியாது. எனக்கு என்ன தெரிந்ததோ
அதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதைத் தவிரவும் என்னுடைய
கதையை இந்த மத்தியதர வர்க்கத்து நகர்ப்புற குடும்பங்கள்தான் அதிகம்
படிக்கின்றன. யார் என்னைப் படிக்கிறார்களோ அவர்களுக்கு நான்
என்னை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.

6. திருப்தி என்பது மனதுக்கு ஏற்பட்டால் காரியம் நின்றுவிடும். என்
எந்த ஒரு நாவலும் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பதுதான்
உண்மை. எந்த நூலையும் திரும்பப் படிக்கும்போதும் இன்னும் நன்றாகச்
செய்திருக்கலாமே என்று நினைக்கிறேன். ஆனால் எந்த ஒரு நாவலையும்
நான் ஆன்ம ஈடுபாட்டோடுதான் செய்கிறேன். I am a very sincere and
a very hard worker. எந்த ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டாலும் நான்
ஒரு வெறியனைப் போல சுறுசுறுப்பாக வேலை செய்வேன். 0

Monday, December 13, 2010

இவர்களது எழுத்துமுறை -19.வல்லிக்கண்ணன்

1.எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற துடிப்போடுதான் நான் எழுதினேன்.
எழுதிப் பணம் பெற்று, பிழைப்பு நடத்த வேண்டும் - நடத்த முடியும் - என்ற
நோக்கத்தோடு நான் எழுதத் தொடங்கியதில்லை; இன்றும் எழுதவுமில்லை.

2. எழுத்து என்னை வசீகரித்தது. அதனிடம் நான் ஆட்பட்டேன். அதை
ஆளும் ஆற்றலும் பெற்றேன். அதுவே எனக்கு மாண்புமிகு வெற்றியாகத்
தோன்றியது. 'எழுத்து எனக்குச் சோறு போடுமா? வாக்கை வசதிகள் பெற்றுத்
தருமா? பகட்டான உலகத்திலே படாடோபமாக வாழ்வதற்கு எழுத்து ஒரு
கருவியாகப் பயன்படுமா?' என்று நான் யோசிக்கவே இல்லை.

3. எழுத்தை தொழில் (profession) ஆகக் கொண்டிருந்தால் நான் எழுதிய -
எழுதுகிற விஷயங்களே வேறுவேறாக இருந்திருக்கும். படிப்பதும் எழுதுவதும்
எனக்குத் தொழில் இல்லை. அதுவே என் வாழ்க்கை.

4. முதலில் நான் வாசகன்; அப்புறம்தான் எழுத்தாளன். படிப்பது எனக்குப்
பொழுதுபோக்கு அன்று; எழுதுவது எனக்கு வேலையும் இல்லை. படிப்பது -
எழுதுவது - ஊர்சுற்றுவது என்பதை ஒரு வாழ்க்கை முறையாகவே வகுத்துக்
கொண்டவன் நான். 'ஊருக்கு நல்லநு சொல்வேன். உண்மை தெரிந்து
சொல்வேன்' என்ற வாக்குத்தான் எனது நோக்கும் போக்கும் ஆகும்.

5. என் எழுத்துக்களை யார் யார் படிக்கிறார்கள், எப்படி வரவேற்கிறார்கள்
என்று அறிய நான் கவலைப்படுவதே இல்லை. 'நான் இப்படி எழுதி
இருக்கிறேனே அதைப் படித்துப் பார்த்தீர்களா?' என்று எவரிடமும் நான்
கேட்பதுமில்லை. எழுத வேண்டியவற்றை எழுதுகிறேன். படிக்க விருப்பமும்
வாய்ப்பும் இருக்கிறவர்கள் படிக்கட்டும்; அல்லது படிக்காமலே ஒதுக்கி
விடட்டும்; அதைப்பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும்?

6. நான்ன ஏன் எழுதுகிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்ள
வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. 'ஏன் எழுதவேண்டும் என்ற
விரக்தியும் எனக்கு ஏறபடவில்லை. மாறாக 'ஐயோ எழுத நேரம் இல்லையே,
வசதிகள் போதுமானபடி இல்லையே, தான் இன்னும் எவ்வளவோ எழுதியாக
வேண்டுமே, நான் எழுத ஆசைப்படுகிறவற்றுள் - எழுத வேண்டும் என்று
திட்டமிட்டிருப்பனவற்றுள் அரைவாசி கூட இன்னும் எழுதப்படவில்லையே!'
என்ற வேதனைதான் என்னை வருத்துகிறது. 0

Sunday, December 05, 2010

இவர்களது எழுத்துமுறை - 18 - எம்.டி.வாசுதேவன் நாயர்

1. தொடக்கத்திலிருந்தே நான் ஒரு எழுத்தாளனாக இருக்க விரும்பினேன். வெற்றி
தோல்வி பற்றி நான் கவலைப்படவில்லை. எழுத்தாளன் ஆகவேண்டும் என்பதே
என் விழைவாக இருந்தது. ஏன் என்று எனக்குத் தெரியாது.

2. நான் எழுத்தாளனாக இருக்க முடிவு செய்துள்ளேன். அஃது எனது வாழ்க்கைத்
தொழில்; வேண்டுமானால் என் காதல்; என் வெறி; என்று - வாழ்வை உந்தித்
தள்ளும் ஆற்றல் என்று அதைக் கூறலாம்.

3. நான் ஹீரோ அல்ல....கிராமத்துக்காரன். மழை, மண், விவசாயம் என கிராமீய
மானவன். என் கலை, கவனிப்பில் கருத்தரிக்கிறது. எல்லாவற்றையும் கவனிக்கிறேன்.
ஒவ்வொரு சின்ன நிகழ்ச்சியிலும் ஒரு கதை இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்
குள்ளும். மனிதர்கள்தான் என் புத்தகம்.

4. கிராமம்தான் எனக்குள் இலக்கியத்திற்கான இன்ஸ்பிரேஷனைத் தருகிறது. நான்
என் கிராமத்தை விரும்புகிறேன். எல்லாவற்றையும் பார்க்கிறேன். என் படைப்பு
அப்சர்வேஷனில் இருக்கிறது. என் கதைகள் கற்பனைக் கதைகள் அல்ல. வெறும்
கற்பனையிலிருந்து எதுவும் வராது. ஆனால் எழுத கற்பனையும் வேண்டும்

5. எழுதுவது எனக்குப் பயமூட்டுகிற விஷயம். கேட்கிறர்கள் என்பதற்காக நான்
எதையும் எழுதிக் கொடுத்து விடுவது கிடையாது. இன்றைக்கும் பேனா எடுத்து எழுத
உட்காரும்போது முதன் முதலாக பரீட்சை எழுதப் போகும் மாணவனின் மனசைப்
போல் கைநடுங்குகிறது. இதுதான் என் முதல் கதை என்பதுபோல பயத்தோடு
எழுதுகிறேன். எழுதுவது என்பது எனக்கு சவால். அது பெரிய போராட்டம்.

6. எழுத்துக்கலை தனக்கு ஒரு பொழுதுபோக்கு என்கிறார் ஆல்பட்டோ மொறோவியா.
எனக்கு அதைப் பொழுதுபோக்காகச் சிந்திக்க முடியவில்லை. என்றைக்குமே எழுத்து
என்கிற பணி எனக்கு வேதனையாய்த்தான் இருந்திருக்கிறது. ஆத்மாவின் கடும்
தாகமாய்த்தான் இருந்திருக்கிறது. வாழ்வதற்கே அவசியமான கனவாய்த் திகழ்ந்
திருக்கிறது.

7. எனக்காகத்தான் நான் எழுதுகிறேன். நான் எழுதும்போது எனக்கு முன் பத்திரிகைக்
காரர்கள் இல்லை. பாராட்டுகிறவர்கள் இல்லை. வாசித்து மகிழ்கிற ரசிகர்கள் இல்லை!
நான் மட்டும்தான் இருக்கிறேன்! பத்திரிகை, வாசகன், ரசிகர், அச்சுப் புத்தகம்....
இத்யாதி எல்லாம் நான் எழுதி முடித்த கதையின் பௌதீக வாழ்க்கைக்குத்தான். எழுதி
முடித்த என் கதை பெறவேண்டிய உலகவாழ்வு அது! அவையெல்லாம் நான் எழுதி
முடித்த பின்னர்தான் வருகின்றன. கதை வாழ்ந்த ஆத்மீக ஜீவிதம் எனக்குள்தான்.
கிளர்ந்தெழுவதும், படர்ந்து விரிந்து பரவுவதும் பூத்து வெளிவந்து குலுங்குவதும்
என்இதயத்தில்தான்.

8. புகழ்வோர் புகழ் மொழிகளும் பிரசுரிப்போர் ஆணையும் எழுத்தின் தூண்டுதல்
அல்ல. என் துக்கங்களும் கண்ணீர்களும் என் அவதிகளும் என் கனவுகளும்
ஆசைகளும் என்னை அழுத்தித்தான் மேல்வர முந்தும்போது நான் எழுதியாக
வேண்டும். ; எழுதித் தீரவேண்டும். எழுதாமல் இருக்க முடியாது. அப்படி எழுத
முடியாமல் நின்றால் எங்கோ எனக்குள் கீறல்களாக அழுகை குமுறிக் கிளம்புகிறது.
அதை அமைதியாக நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

9. ஒரு புதிய கதை - முழு ஆத்மதிருப்தியோடு எழுதித் தீர்ந்துவிட்டால் அந்தக்
கணத்தில் அந்த ஆனந்தக் களிமயக்கில் சொக்குகிறேன். அது சொல்லொணாத
ஆனந்தம். - அது அனுபூதி - விவரிப்பதைவிட அனுபவித்தாலன்றி அதன்
முழுமை தெரியப் பாதி வழியில் நின்று அறிய முடியாது.

10. நான் போதனை செய்வதில்லை. போதிக்கத் தொடங்கினால் படைப்பின் நயம்
குறைந்துவிடும். அதை அரசியல்வாதிக்கோ, மறையியல் வல்லுனருக்கோ விட்டு
விடலாம். 0

Tuesday, November 30, 2010

இவர்களது எழுத்துமுறை - 17 - தி.ஜானகிராமன்

1. நான் பணத்திற்காக, பேருக்காக, பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நானும்
இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்வதற்காக, தாட்சண்யத்திற்காக, எனக்கே
எனக்காக, கொஞ்சம் எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு,
யாருக்கு என்று தெரியாமல் - இப்படிப் பல மாதிரியாக எழுதுகிறேன்.

2. எனக்குத் தெரிந்தவர்களையும், தெரிந்ததுகளையும் பற்றி எழுதுகிறேன். நான்
பார்த்தவர்களையும், பார்த்ததுகளையும் பற்றி எழுகிறேன்.....அல்லது என்
கண்ணிலும் மனதிலும் பட்டவர்களையும் பட்டவைகளைப் பற்றியும் எழுகிறேன்.
சில சமயம் அம்மாமி பாஷையாய் இருக்கிறதே என்று சிலர் சொல்கிறார்கள்.
அதற்கு நான் என்ன செய்ய? அம்மாமிகளைத்தான் எனக்கு அதிகமாய்த் தெரியும்.
ஆத்தாள்களைப் பற்றி ஏதோ சிறிதளவுதான் தெரியும். தெரிந்த விகிதத்துக்குத்தான்
எழுத்தும் வரும்.

3. எப்படி எழுதுகிறேன் என்று சொல்வதைவிட எப்படி எழுத ஆரம்பிக்கும்
நிலைக்கு வருகிறேன் என்று சொல்வதுதான் இன்னும் பொருந்தும். புகையிலையை
மென்று கொண்டு சும்மா உட்கார்ந்து மனம் சுற்றிச்சுற்றி ஒன்றை முற்றுகையிடுகிற,
வழி காணாமல் தவிக்கிற, வழிகாணப் பறக்கிற ஆட்டங்களைப் பார்த்துக்
கொண்டே உட்கார்ந்திருக்கிறேன். சாப்பிடும்பொழுது, வேறு வேலை செய்யும்
பொழுது, யாருடனோ பேசும்பொழுது இந்த அமர்க்களமும், தவிப்பும், நடந்து
கொண்டுதான் இருக்கின்றன. நடப்பது தெரிகிறது. வழி தெரிந்ததும் எழுத
முடிகிறது. அவ்வளவுக்குமேல் அதைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

4. என் தவம் எத்தனைக்கெத்தனை தீவிரமாக ஒன்றிப்பிலும் தன் மறப்பிலும்
கனிந்து எரிகிறதோ அப்போது வடிவம் தானாக அமைந்து விடும். அது சில
சமயம் மூளியாகவோ குறையுள்ளதாகவோ இருக்கலாம். ஆனால் பூப்பு நிலையில்
பூவில் இட்ட முட்டை வண்டாக வளர்கிற மாதிரி, அதை நான் தடுத்திருக்க
முடியாது. தவிர்க்க முடியாத நிலையில் எழுதப்பட்ட விதி. இந்தக் கனிவில்தான்,
இந்தத் தவத்தில்தான் என் சுயரூபம் எனக்குத் தெரிகிறது.

5. என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரசனையை
எனக்கு எளிதாகக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன்.
என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக
சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப்
பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம்தான். அதைத்தான் நான் பகிர்ந்து
கொள்கிறேன்.

6. சிறுவயது முதலே என்னுடைய மனத்தில் "கன்வென்ஷன்" என்று சொல்லப்
படும்படியான கட்டுப்பாடுகளை எதிர்க்கும்படியான ஒரு மனோபாவம்
உருவாயிற்று. நம்முடைய மக்கள் மரபையும்(டிரெடிஷன்) கட்டுப்பாட்டையும்
ஒன்றுசேர்த்து குழப்பிக் கொள்ளுகிறார்கள் என்று நினைக்கிறேன். கட்டுப்பாடுகள்
காலத்துக்கு ஏற்றபடி மாறும் தன்மையுடையன. ஆனால் அவைகளுக்கு அன்றாட
வாழ்வில் நிரந்தரமான ஒரு இடத்தை அளிக்க முற்படும்போதுதான் தனி மனித
சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. ஒரு சமுதாய நாகரீகத்தின் உயிர்ப்புச்
சக்தியுடன் கூடிய ஜீவனானது இம்மாதிரியான கட்டுப்பாடுகளினால் நசித்துப்
போக ஏது இருக்கிறது. மனித உணர்ச்சிகளைப் பற்றி, மன விகாரங்களைப்
பற்றி எழுத முற்படும்போது கட்டுப்பாடுகளை அறுத்தெறிய வேண்டியிருக்கிறது.
"அம்மா வந்தாள்" பற்றி எனக்கு வேறு சொல்லத் தோன்றவில்லை. 0

Monday, November 22, 2010

இவர்களது எழுத்துமுறை - 16 - சா.கந்தசாமி

1. கேள்வி: நீங்க எழுதுகிற எழுத்து உங்களுக்குத் திருப்தியாக இருகிறதா?

எல்லாமே திருப்திதான். எப்படி திருப்தி இல்லாமல் அது வெளிவர முடியும்?
எழுதுகிறபோது அது பரிபூரணமாக வரும்கிற நம்பிக்கைதான். எழுதி முடித்த
பிறகு அதைப் பலமுறை திருத்தி எழுதறேன். ஒரு நாவலையோ சிறுகதையையோ
அச்சுக்குக் கொண்டு போறதுக்கு முன்னால் நான் அதில பரிபூரணமாக உழைக்கிறேன்.
பரிபூரணமாக என்று சொல்லும்போது 'இதைப் பத்திரிகை ஆசிரியர்கள் எப்படி
ஏற்றுக் கொள்வார்கள், வாசகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள' என்பதைப்
பற்றிய பரிபூரணமில்லை.என்னளவில் எப்படிப் பரிபூரணமாகச் செய்ய முடியும்
என்பதுதான் என் கவலை.

2. உங்கள் எழுத்துக்களில் மொழி வளமாக மிடுக்காக இல்லை என்ற குற்றச்சாட்டு
இருக்கிறதே?

மொழி என்பது அலங்காரமாக இருக்கக்கூடாது என்பது என் கொள்கை.
அண்ணா, கருணாநிதி, லா.ச.ரா இவர்களைப் படிச்சதுனாலே ஏற்பட்ட விளைவு
மொழியை அலங்காரமாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான்.

3. இலக்கியத்துக்கு அடிப்படை மொழி. அந்த மொழிக்கு நடை, அழகு அல்லது
அலங்காரம் எதுவும் தேவையில்லைன்னு நினைக்கிறீங்களா?

இலக்கியத்துக்கு மொழியே அவசியமில்லை. நான் அறிவு உள்ளவர்களை,
ஞானமுள்ளவர்களைப் பற்றி எழுதுகிறேன். எனக்கு craftல் நம்பிக்கை இல்லை.
கலையற்றவன்தான் craftஐப் பிடித்துக் கொள்ளவேண்டும். எனக்கு மொழியும்
தேவையில்லை. நான் பயன்படுத்துவதெல்லாம் புழக்கத்தில் உள்ள இருநூறு,
முன்னூறு சாதாண வார்த்தைகள்தான்.

4. இப்ப தமிழ் மொழியிலதான் எழுதப் போகிறோம். இந்த மொழிக்கு ஒரு வளம்
இருக்கு. அதை ஒட்டி சில விஷயம் இருக்கு.......

வளம் என்பது அலங்காரமில்லை. சங்க இலக்கியம் அலங்காரத்தை ஒழிச்சிருக்கு.


5. உங்கள் கதைகளில் 'கதைகளே' இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே!

நிச்சயமாக அதுதான். கதையிலிருந்து 'கதை'யை வெளியேற்றுவதுதான் என்
வேலை. கதை சொல்வது என் வேலை இல்லை. எல்லோரும் கதை சொல்வது
போல, கற்பனையாக, போலியாக கதை சொல்ல முடியாது. நான் வாழ்க்கையை
எழுதுகிறேன். வாழ்க்கை எனபது கதை அல்ல. நான் தனிப்பட்ட மனிதனுடைய
வாழ்க்கையைப் பற்றியும் சொல்வதில்லை. தனிப்பட்ட மனிதனை முன் நிறுத்தி
மனித சமுதாயத்தின் வாழ்க்கையை முழுக்கச் சொல்ல முடியுமா என்று பிரயாசைப்
படுகிறேன். மனிதன் சாசுவதமில்லை என்றாலும் மானுடம் சாசுவதமானது.
மனிதனுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் என்னுடைய நாவல்கள்.


6. நாவல்கள் எழுதுவதில் உங்களது கொள்கை என்ன?

வாழ்க்கையைப் பற்றி சொல்வதுதான் என் நாவல்கள். வாழ்க்கை எவ்வாறு
இருக்கிறது என்று நான் எழுதுகிறேன். இதற்கான தீர்வை வாசகர்கள்தான்
கண்டுபிடிக்க வேண்டும். வாழ்க்கையைப் பற்றிய அறிதலுக்கான வழிகாட்டி
யாகத்தான் நான் எழுதுகிறேன். 0

Tuesday, November 16, 2010

இவர்களது எழுத்துமுறை - 15 - ஆர்.கே.நாராயணன்

1. எழுதியவற்றில் எப்போதுமே நான் நிறைவு பெறுவது கிடையாது. என் முக்கிய
கவனம் எழுதவிருக்கும் புத்தகத்திலும், எழுத எண்ணிக் கொண்டிருக்கும் புத்தகத்திலும்
தான். கதையோ நாவலோ அது அச்சுக்குப் போனதுடன் அதைப் பற்றிய உற்சாகம் மறந்து
விடுகிறது. எழுதியதை நான் மீண்டும் பார்ப்பதில்லை. பார்க்கத் துணிவதுமில்லை.
வாழ்க்கையில் நான் முக்கியம் எனக் கருதுவது எது, அவற்றை எந்த அளவிற்கு என்
படைப்புகளில் வெளிப்படுத்தினேன் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல இயலாது.

2. வெளி நாட்டில் இருந்து கொண்டு இந்தியாவைப் பற்றி எழுத வேண்டிய ஆசிரியர்களுக்கு
தாய் நாட்டைப்பற்றி ஒரு ஏக்க மனப்பான்மை உள்ள காரணத்தால், அவர்களால் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் எழுத முடியும். யாரையும் இப்படி எழுதவேண்டும், இப்படி எழுதக்கூடாது என்று கூறுவதை நான் வெறுப்பவன். எனினும் எங்கு வாழ்க்கை அமைந்து விடுகிறதோ அந்த நாட்டின் உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டினால்தான் அது சாரமுள்ள உண்மைப் படைப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

3. மனித உறவைத்தான் நான் மிகவும் அதிகமாக, நெருக்கமாக மதிக்கிறேன். எந்த உருவில்
இருப்பினும், எல்லா உருவில் இருப்பினும், வீட்டிலும் சரி, வெளியிலும் சரி மனித உறவுதான்
உயிர் வாழ்வதைப் பயனுள்ளதாக ஆக்குகிறது. இந்தத் தத்துவத்தை என் படைப்புகளில்
நேர்த்தியுடன் வெளிப்படுத்தியதாகவே கருதுகிறேன்.

4. என்னுடைய படைப்புகளுக்கு யாருடைய தூண்டுகோலும் கிடையாது. நாவலை எழுதும்
போது வேறு ஆசிரியர்களின் எந்த நாவலையும் படிக்காத வண்ணம் மற்றவர்களின்
தூண்டுகோலைத் தவிர்க்கிறேன். எப்போதும் ஏதாவது ஒரு நாவலில் நான் ஈடுபட்டுக்
கொண்டுள்ளதால், மற்றவர்கள் எழுதிய எந்த நாவலையும் நான் அநேகமாகத் தவிர்க்கிறேன்.
ஏனெனில் அவற்றில் ஏதாவநு ஒரு வகையில் ஒற்றுமைத் தனமை இருக்க நேரிடலாம். அல்லது
ஏதாவது ஒரு வழியில் தூண்டுகோலாகவும் அமைந்து விடலாம்.

5. எனக்குத் தூண்டுகோலாக அமைவதெல்லாம் வாழ்க்கை, சுற்றுப்புற சூழ்நிலை, ஒரு சிறிய
பெட்டிக்கடை (street shop) இவைதான். எங்கு சென்றாலும் நான் தேடுவது வாழ்க்கையைத்தான்.
மக்கள் அவர்களின் ஈடுபாடுகள், ஆசைகள், அவதிகள் - இவற்றைத்தான் நான் தேடுவது. 0

Monday, November 08, 2010

இவர்களது எழுத்துமுறை - 14 - டாக்டர். மு.வரதராசனார்

1. கேள்வி: கதைகளுக்கான கருத்து, சம்பவம் முதலியவைகளை நீங்கள் உண்மை
வாழ்க்கையிலிருந்து தேர்ந்து கொள்வதுண்டா? அல்லது எல்லாம் கற்பனையா?

பெரும்பாலும் சுற்றப்புறத்தார், நண்பர்கள், உறவினர்களின் வாழ்க்கையில்
காணும் உண்மைச் சம்பவங்களையே கதைகளுக்குத் தேர்ந்து கொள்கிறேன். சில
சமயங்களில் கற்பனைச் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.

2. கேள்வி: நீங்கள் பலதரப்பட்ட நூல்களை எழுதியிருக்கிறீர்கள். அவற்றுள்
உங்களுக்கு மிகப் பிடித்தமானவை எவை?

நாவல்கள் கட்டுரைகள் எழுதுவதே.

3. தங்கள் நாவல்களில் எத்தகைய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன?

என் முந்தின நாவல்களில் காதலே முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால்
பின்னர்எழுதிய நாவல்களிலோ சமூக, பொருளாதாரப் போராட்டங்களே முக்கியமாக
இடம் பெற்றுள்ளன.

4. கதாபாத்திரங்களின் விஷயமும் இப்படித்தானா? அதாவது வாழ்க்கையில் காணும்
நபர்களையே கதாபாத்திரங்களாக அமைத்து விடுவீர்களா?

ஆம். அறிந்தோ, அறியாமலோ சில நாவல்களில் என்னையே கூட
கதாபாத்திரமாகச் சித்தரித்தரித்துக் கொண்டிருக்கிறேன்.

5. நீங்கள் வேகமாக எழுதக் கூடியவரா? அல்லது, சொல்லி எழுதச் செய்யும்
வழக்கமுண்டா?

இரண்டுமில்லை. என் எழுத்துக்களை நானேதான் எழுதி முடிக்கும் வழக்க
முடையவன். கட்டுரைகள் மட்டும் சில வேளைகளில் சொல்லி எழுதச் செய்வதுண்டு.

6. தினமும் ஒரு குறிப்பிட்ட மணிநேரத்தில் - இந்த அளவு எழுதி முடிக்க
வேண்டுமென்ற நிர்ணயம் உண்டா? ஒரு நாவலை எழுதி முடிக்க சாதாரணமாக
எவ்வளவு காலம் பிடிக்கும்?

தினமும் எழுதுவது எனும் வழக்கம் கிடையாது. நினைத்தபோது எழுதுவேன்.
ஒரு நாவலை எழுதி முடிக்க மூன்று முதல் ஆறு மாதங்கள் பிடிக்கும்.

7. நாவலை எழுதி முடித்தபின் அதைப் படித்துத் திருத்தங்கள் செய்வதுண்டா?

அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.

8. வெறும் பொழுது போக்காக என்று நான் எதையும் எழுதுவதில்லை. இடையிடையே
பொழுபோக்கு அம்சங்களை வாசகர்களைக் கவருவதற்கான ஒரு கருவியாகவே
பயன்படுத்துகிறேன். 0

Tuesday, November 02, 2010

இவர்களது எழுத்துமுறை - 13 - கு.அழகிரிசாமி

1. சிறுகதைகளைப் படைப்பதில் தாங்கள் கடைப்பிடிக்கும் நுணுக்க நெறிகள் யாவை?

என்ன உக்தியைக் கையாளலாம் என்பது பற்றி நான் தனியே யோசிப்பது கிடையாது.
நுணுக்கம், அமைப்பு இவைகளைப்பற்றியும் வரையறுத்துக்கொண்ட ஒருசட்ட வரம்புக்குள்
உட்பட்டு நான் எண்ணிப் பார்ப்பதும் கிடையாது. நேரடியாக அன்றாட வாழ்வில் பெறும்
அனுபவங்களை,அவற்றின் உணர்வுகளின் தூண்டுதலின் பேரில் மனத்தில் ஏற்படும்
கற்பனை வளத்துடன் சேர்த்து எழுதுகிறேன்.

2. மனிதத் தன்மையை விளைநிலமாகக் கொண்டு வளர்ந்து படரும் பல்வேறு கொடிகளே,
எழுத்துத் துறையில் நான் செய்யும் பல்வேறு பணிகள். சிலசமயங்களில் நான் கண்ட
உண்மைகளைக் கூறுவேன், நான் பெற்ற இன்பத்தை உணர்த்துவேன். நான் விரும்பும்
சீர்திருத்தை வற்புறுத்துவேன். நான் அழிக்க விரும்பும் தீமைகளைச் சாடுவேன்.
இத்தனையும் செய்யாவிட்டால் மன உலகில்கூட நான் சுதந்திர புருஷனாய் இருக்க
முடியாது.

3. எனக்கு அமைந்த எழுத்துக்கலையின் மூலம் நான் என்னையும், நான் வாழும்
உலகத்தையும் என்னளவில் உயர்த்த விரும்புகிறேன்.

4. என்.ஆர்.தாசன்:
------------
i. கு.அழகிரிசாமி ஒரு வித்தியாசமான நடையில் எழுதினார். அவரது நடையின்
குண அம்சங்கள் என்ன? அது எளிமையானது. நேரடித்தன்மை கொண்டது. சுற்றி
வளைத்து மூக்கைத் தொடாதது. மற்றவர்களைப்போல வார்த்தைகள் மூலம் மிரட்டவும்,
மயக்கவும், பிரமிப்பூட்டவும் முயலாமல், வார்த்தைகளுக்கான முக்கியத்துவத்தைக்
குறைத்து, அதன் மூலம் கதையின் உள்ளடக்கங்களைத் தூக்கலாகத் தெரிய வைத்தவர்.

ii. கு.அ வின் கதைகள், வாசிப்பில் மேலான உணர்ச்சிரூபங்களை
(visual feelings)த்தோற்றுவிக்கும். அவை சொல்லப்படுவதற்கு வசதியாகச்
சுருக்கப்படும் போது சாதரணமாகத் தோன்றும். காரணம் அவரது கதைகள் ஸ்தூல
நிகழ்ச்சிகளில் காலூன்றிநிற்கவில்லை. நவீனச் சிறுகதையின் கூறு என்று கூட இதைச்
சொல்லலாம்.

iii. பொதுவாக கதைக்கான விஷயத்தில் மரபுவழிப்பட்டதை ஒதுக்கி விடுவதுதான்
கு.அ வின் வழக்கம்.

iv. மன இயல்புகளையும், இயக்கங்களையும் நினைவு வழியே 'அப்ஸ்ராக்ட்'டாக
கு.அசொல்வதில்லை. தத்ததுவ வாசகங்களாகவோ, சித்தாந்த வாய்ப்பாடுகளாகவோ
அவர்மாற்றித் தருவதில்லை. சிறுசிறு சம்பவங்களின் மூலமே இதைச் செய்கிறார்.

v. பொதுவாகவே கு.அ வின் கதைகளில் ஆசிரியரே வெளியில் தெரியமாட்டார்.
பிரச்சினைகளும், அவற்றின் முகங்களுமே தெரியும். அவை அவைகளை, அவை
அவைகளுக்குரிய ஸ்தானங்களில் அமர்த்திவிட்டு அவர் ஒதுங்கி விடுவார்.

vi. உக்திகளை சிலுவைகளாக்கி அவர் கதைகளைச் சுமக்கச் செய்யவில்லை. அதே
சமயத்தில் கதையின் உள்ளடக்கத்திற்கேற்ப, இயல்பான முறையில், வாசகரது
புரிதலுக்கு வசதியாக உக்திகளைக் கையாண்டுள்ளார். o

Monday, October 25, 2010

இவர்களது எழுத்துமுறை - 12 - ஜெயகாந்தன்

1. என் மனத்தால், புத்தியால், உணர்வால் நான் அறிந்து அனுபவப்படாத எதைப்பற்றியும் நான் எழுதினதில்லை.என் படைப்புகளில் கற்பனைக்கு அதிக இடம் அளிப்பதில்லை. அனுபவத்தின் அடிப்படையில் கிடைத்த யூகத்தின் துணை கொண்டே பெரிதும் எழுதுகிறேன். நான் பொறுமையாக உலகின் பேச்சைக் கேட்கிறேன். அதை என் பார்வையில் உட்படுத்திப் பார்க்கிறேன். அதனால் கிடைக்கும் காட்சியைக் கலை வடிவம் கொடுத்துப் பாரக்கிறேன்.

2. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சினைகளே. என்னைப் பொறுத்தவரை எழுத்தாளனுக்கு அவனது படைப்புகளுக்குப் பகைப்புலனாக அமைய வேண்டியது மனிதவாழ்வின் பிரச்சினைகளே.

3. சமுதாயத்திற்கு தனிப்பட்ட முறையில் தீவிர சுயஉணர்வு (இன்டென்ஸ் செல்ஃப் ஃபீலிங்)இல்லை யென்பேன். ஆனால் எழுத்தாளனுக்கு இது இன்றியமையாதது. அலனுடைய படைப்புகளில் சமுதாய நோக்கமே முதலிடம் பெற வேண்டும். உருவம் உத்தி முதலிய கலை நுட்பங்கள் உள்ளடக்கத்தைப் பொறுத்தே அமைகின்றன. சமுதாயத்தின் வாழ்க்கை முறையினால், ஏற்றத் தாழ்வுகளினால், சட்ட திட்டங்களினால் பெரிதும் பாதிக்கப் பட்டவர்களைப் பற்றி எழுதுவது அவசியம் என்பேன். இதை நீங்கள் என் எழுத்தில் காண்பீர்களானால் அதுவே என்னுடைய தனித்துவம் நிலை என்பேன்.

4. நான் எழுதுவதற்கு ஒரு URGE-ம் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு லட்சியமும் உண்டு. நான் எழுதுவது முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும் எனது தனிமுயற்சியின் பலனுமாகும்.

5. நான் பணத்துக்காகவும் எழுதி இருக்கிறேன். நான் எழுதுவதன் முலம் பணம் சம்பாதித்திருக்கிறேன். ஆனால் நான் எழுதுவதே பணத்துக்காக அல்ல. அப்படியென்றால், வேறு எதற்காக? புகழுக்காகவா? ஆம்! புகழுக்காகத்தான்.....நிரந்தர புகழுக்காக.

6. நான் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதியவை எல்லாம் ஆபாசமென்று என்னை ஏசியவர்கள் பலர். மனிதனுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருப்பதே பால் உணர்ச்சி. ஆகவே அதற்கும் நான் மதிப்பளிக்க விரும்பினேன். ஒரேயடியாக அதைப் பற்றி மட்டுமே எழுதுவவதோ அல்லது அதை அறவே வெறுத்து ஒதுக்குவதோ சரியல்ல என்று எண்ணுபவன் நான்.

7 . என் எழுத்துக்கள் எந்தத் தனிமனிதரையும் தனிப்பட்ட முறையில் அலசுவதில்லை; ஆராய்வதில்லை; அவமதிப்பதில்லை. அப்படி நான் செய்துவிடுகிற பட்சத்தில் அதுவே என்னுடைய எழுத்துக்களின் வீழ்ச்சியாகும்.

8. என்னுடைய கதைகள் நஞ்சுக் கொடியோடு, நாற்ற நீரோடு, உதிரக் கவிச்சியோடு, உரத்த குரலுடன் பிறக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிறக்கிற கதைகள் இலக்கியச் சுத்தமாக இருந்தால் போதும். மொழிச் சுத்தம் அவ்வளவு முக்கயமில்லை.

9. வாசகர்களுக்குப் பிடித்ததை நான் எழுதுவதில்லை. நான் எழுதுவதை விரும்புகிறவர்களே என் வாசகர்கள்.

10.எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். எழுதுவதனால் என் மொழி வளம் பெறுகிறது. எழுதுவதால் என் மக்கள் இன்பமும் பயனும் எய்துகிறர்கள். எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. எதிர்காலச் சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்ல இலக்கியம் ஒன்று தேவை. இதற்காகவெல்லாம் நான் எழுதுகிறேன். வாழ்க்கைப் போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். 0

Monday, October 18, 2010

இவர்களது எழுத்துமுறை - 11 - சுந்தரராமசாமி

1.நான் என் அனுபவங்களை என் எழுத்தில் ஆராய்கிறேன். அவற்றில் விழுந்து கிடக்கும் திரையை அகற்ற முடியுமா என்று பார்க்கிறேன்.ரியாலிட்டியைச் சந்திப்பதும் அதை மனப்பூர்வமக ஏற்றுக் கொள்வதும் நமக்கு மிகவும் சங்கடமான விஷயம். இந்த எதிர் கொள்ளலுக்கு என்னையும் மற்றவர்களையும் தயார்ப்படுத்த முயல்பவைதான் என் எழுதுக்கள்.

2.சுய அனுபவம் சார்ந்துதான் ஒரு எழுத்தாளன் எழுத முடியும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. சிறு வயதில் ஏற்பட்ட எண்ணம் இது.இன்று வரையிலும் விசேஷப் பாதகம் இல்லாமல் அந்த எண்ணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

3.எனக்கே முற்றிலும் தெளிவாகாத ஒரு இயற்கைத் தாகந்தான் இன்றும் என்னை எழுதத் தூண்டுகிறது எனத் தோன்றுகிறது.ஒரு விதத்தில் இதைத் தவிர வேலை ஏதும் மேற்கொள்ள என்னால் ஆகாது என்றும் சொல்லலாம். எழுதுகிறபோது எனக்கேற்படுகிற ஒரு 'அட்ஹோம்' உணர்ச்சி எனக்கு வேறு வேலைகளில் ஏற்படுவதில்லை. வேறு காரியங்களில் ஈடுபட்டிருக்கும்போது எனது மூர்த்திகரம் சிந்திச் சிதறுவதாகத் தோன்றுவதாலும், எழுத்தில் குவிந்து தன்னம்பிக்கையையும் ஆத்ம திருப்தியை ஏற்படுத்துவதாலும் இயற்கை இந்த ஒரு வேலைக்கே என்னைத் தயார் செய்திருக்கிறதோ என எண்ணிக் கொள்கிறேன்.

4.குறைவாக எழுதி இருக்கும் நிலையிலும் எனக்கு மனநிறைவைத் தரும் சில விஷயங்களும் உள்ளன.என் எழுத்தின் உருவம் எதுவாக இருந்தாலும் சரி, எழுதும் காலத்தில் எனக்கிருந்த ஆற்றலையும்,அறிவையும், மனதையும் முழுமையாகச் செலுத்தியே எழுதி இருக்கிறேன்.அத்துடன் ஒவ்வொரு படைப்பையும் செம்மை செய்யவும் செப்பனிடவும் முயன்றிருக்கிறேன்.அவசரமாகவோ கவனக் குறைவாகவோ எதையும் எழுதியதில்லை.

5.எழுதுவதன் மூலம் நான் வாசகர்களுக்கு எந்த விதத்திலும் கடமைப் பட்டவனாக உணரவில்லை. என்னுடைய வாசகர்கள் யார் என்பதும் எனக்குத் தெரியாது.வாசகர்களை சுவாரஸ்யப்படுத்துவதோ, அவர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டுவதோ, வாழ்க்கைப் பாதையில் அலுப்பு நடை நடந்து அவர்கள் 'அப்பாடா!' என்று ஆயாசத்துடன் சோர்ந்து உட்காரும்போது குதிரைச் சதை பிசைந்து விடுவதோ என்னுடைய வேலை அல்ல.

6.லட்சக்கணக்கான வாசகர்களின் பலவீனங்களைத் திருப்தி படுத்துவது என்னுடைய வேலை அல்ல என்று நினைக்கிறேன்.அவர்களுடைய பாலுணர்வுகளை நான் சுரண்ட விரும்பவில்லை. அவர்களுடைய அறிவுகளை மழுங்கடித்து வாழ்க்கையைப் பற்றி ஒரு கனவை உருவாக்க விரும்பவில்லை.கலை பற்றிய என் நம்பிக்கைக்கு எதிரான காரியங்கள் இவை என்று நினைக்கிறேன்.

7.நான் எனக்காக மட்டும் எழுதக்கூடியவனாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.எனக்குள் புதையுண்டு கிடக்கும் கலை உணர்ச்சி ஒரு வடிவம் பெற்று வெளிவந்த பின்புதான் எனக்கே அது இருந்திருப்பது தெரிய வருகிறது. இதே போல் வேறு என்ன என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொண்டுவிடவே நான் எழுத முற்படுகிறேனோ என்னவோ! இவ்வாறு வெளிப்பட வெளிப்பட, நான் அத்தகைய அனுபவங்களுக்கு ஆளாக
ஆளாக,என்னை நான் கண்டு கொள்வது ஒரு விதத்தில் சாத்யமாக இருக்குமென்று தோன்றுகிறது.

8.வாசிப்புத்தன்மை என்பது முக்கியமான விஷயம். ஒரு விஷயத்தை எழுதி அது வாசகனுக்குப் போய்ச் சேரவில்லை என்றால் எந்த எழுத்தாளனுக்கும் அது ஏமாற்றம்தான்.ஆக நான் ஒரு விஷயத்தைச் சுலமாகச் சொல்ல வேண்டியது முக்கியமானது.ஆனால் நான் என்ன நினைக்கிறேனோ அதைச் சொல்லவும் வேண்டும். அதுவும் முக்கியம்தான்.என்னுடைய சிந்தனையில் பல்வேறுபட்ட மாற்றங்கள் நிகழும் சந்தர்ப்பத்தில் அதையும் நான் சொல்ல ஆசைப்படுகிறேன்.

9.நான் உள்ளடக்கத்துக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பேன்.உள்ளடக்கம் சரியாகச் சொல்லப் பட்டிருக்கிறதா, பரிபக்குவமாக இருக்கிறதா, அனுபவமாக மாற்றப் பட்டிருக்கிறதா, கருத்துக்கள் வெறும் கருத்துக்களாக இல்லாமல் கலையாக மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் பார்ப்பேன்.

10.புதுமை மீது எனக்குத் தீராத கவர்ச்சி உண்டு. புதுமை என்று மொழி சார்ந்து நிற்கும் வடிவத்தை மட்டுமே நான் குறிப்பிடவில்லை. புதுமை என்பது முக்கியமாக எனக்கு விஷயம் சார்ந்த விமர்சனம் ஆகும்.அது வாழ்க்கை சார்ந்த புதிய பார்வையும் ஆகும்.இன்றைய வாழ்க்கை சார்ந்த தாழ்வுகளை விவாதித்துக் குறைகளை இனம் கண்டு அவற்றை நீக்கும் வழிவகையாகும். இந்த வேட்கை சார்ந்ததுதான் என் புதுமை. புதிய படைப்பு, இன்று வரையிலும் படைப்பாளிகள் போயிராத வாழ்க்கையின் புதிய பிராந்தியத்துக்குள் போயிருக்க வேண்டும்.புதிய அனுபவங்களைக் கொண்டு வந்து வாழ்க்கை சார்ந்த பார்வைகளை விரிவுபடுத்தி இருக்க வேண்டும்.புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி நம் சிந்தனைகளைக் கூர்மைபடுத்தி இருக்க வேண்டும். பழைய மொழியை வைத்து இந்த லட்சியங்களை நிறைவேற்ற முடியாது.வாழ்க்கையின் விமர்சனம் தரும் புதிய மொழிதான் புதிய அனுபவங்களையும் சிந்தனைகளையும் படைத்துக் காட்டும்.

11.ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல.நடைமுறை அர்த்தப்படி கட்சிகள்,அரசாங்கம்,சமூகம்,மதம்,தேசம் இவற்றிற்கெல்லாம் பூரண விசுவாசம் அளித்து விடக்கூடாது என்பதை எனது இலக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். வெகு ஜனத்தின் நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதோ, புதிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களைத் தூண்டுவதோ என் வேலலையல்ல. அவர்களுடைய பொது நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட விதிவிலக்கான உண்மைகளைச் சொல்லி,அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்களுடைய விரோதியாகவும், காலத்தின் நண்பனாகவும் இருப்பதே என் வேலை என்று எண்ணுகிறேன். மனிதனின் சராசரித்தன்மையின் அழுத்தத்தினால் வெளியே பிதுங்கிவிடும் விதிவிலக்கான உணமைகள் அலட்சியப் படுத்தப்பட்டு முக்கால் உணமைகள் முழு உண்மைகளின் தோற்றம் கொள்கிறபோது, மைனாரிட்டியின் கால் உண்மையில் கலந்து கொண்டு கத்துவது தவிர்க்க முடியாத காரியமாகவே எனக்குப் படுகிறது.

12.வாழ்வின் அந்திமதசையில் இவ்வாறு கூறிக் கொள்ள முடிந்தாலே போதும்."என்னுடைய கலைத்திறன் மிகச் சொற்பமானதுதான் எனினும் அந்த சொற்ப கலை உணர்வையும் நான் பேணிச் சீராட்டி வளர்த்தேன். எனது அந்தரங்கத்துக்கு உவப்பான விஷயத்தையே நான் அளித்தேன். மூன்று வார்த்தைகளில் சொல்லக் கூடியதை நாலு வார்த்தைகளில் சொல்லலாகாது என்ற விதியைக் கடைசி வரையிலும் நான் காப்பாற்ற முயன்றேன். எனக்குக் கிடைத்த மொழியை மலினப் படுத்தாமல் மறு சந்ததிக்கு அளிக்க நானும் என்னால் ஆன முயற்சி எடுத்துக் கொண்டேன்." இவ்வளவு போதும் எனக்கு. 0

Monday, October 11, 2010

இவர்களது எழுத்துமுறை - 10 - வண்ணநிலவன்

1. உங்களது இலக்கியக் கொள்கை என்ன?

இலக்கியம் என்பது ரசனைதான். எல்லோராலும் ரசிக்கப்படுவதால், எல்லோருக்கும் பிடித்திருப்பதால் கலை வாழ்கிறது. சாதிப்பிரச்சினையை வைத்து ஒரு கதை எழுதினேன். அந்தப் பிரச்சினை என்னைப் பாதித்தது எழுதினேன். அவ்வளவுதான் கலையில் முடியும். அதிர்ஷ்டவசமாய் கலையில் தீர்வு இருக்கலாம். எனக்கு முக்கியமானது கலைதான்.

2. உங்களை வெளி உலகுக்கு பிரபலப்படுத்திய 'கடல்புரத்தில்' அச்சில் வந்தபோது உங்கள் மனநிலை என்னவாக இருந்தது?

என்னைப் பொறுத்தவரை எதுவுமே பாதிக்கல. எனக்கு எல்லாமே ரொம்ப சாதாரணமாகத்தான் படுது. ஏதோ நாம ரொம்ப சாதாரணமா செஞ்சா எல்லோரும் இப்படி பிரமாதமா இருக்குன்னு சொல்றாங்களேன்னுதான் எனக்கு ரொம்ப ஆச்சரியம் ஏற்பட்டது. மகிழ்ச்சியோ, கர்வமோ, அகந்தையோ எனக்கு ஏற்படல.

3. இது தன்னடக்கமா?

நல்ல எழுத்து எது என்று எனக்குத் தெரியும். என்னைவிட பிரமாதமாய் எழுதுபவர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். நான் எழுதிய எழுத்துக்கள் எனக்குத் திருப்தியா இல்லை. என்னை விடவும் பிரமாதமான எழுத்துக்களைப் பார்க்கும்போது நான் அதற்கு அருகே இல்லை. என் நல்ல எழுத்தை இனிமேல்தான் எழுத வேண்டும். அது முடியுமான்னு தெரியல.

4. உங்கள் படைப்புகளில் குறிப்பாக கடல்புரத்தில் மற்றும் ரெயினீஸ் அய்யர் தெரு நாவல்களில் தகாத உறவு அதிகம் இருக்கிறதே? இது உங்கள் வயதின் மனோ நிலையா?

நான் கண்ட, கேட்ட விஷயங்களைத்தான் கதைகளில் சொல்லி இருக்கிறேன். இவை அல்லாத விஷயங்களும் நிறைய இருக்கின்றன.

5. புதுமைப்பித்தனைப் போல் என் சிறுகதைகளிலும் நாவல்களிலும் நிறைய பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறேன். ஒன்றை மாதிரி ஒன்றை நான் எழுதுவதே இல்லை. இந்த என் பரிசோதனை முயற்சி ஒருவேளை வாசகனை எட்டாமல் போயிருக்கலாம். என் தாமிரபரணிக் கதைகளைப் பார்த்தால் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு முகத்தோடு இருக்கும். நான் எல்லாக் கதைகளையும் ஒரே மாதிரி, ஒரே குரலில் சொல்வதில்லை. நான் எந்தப் பாத்திரத்தை அமைக்கிறேனோ அதன் குரலில்தான் பேசுகிறேன்.எனது குரல் வேறு வேறு விதமாய் இருக்கும். என் ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு ட்யூன் மாதிரி பார்க்கிறேன். என் நாவலுக்கும் இது பொருந்தும். இதற்கு மத்தியிலும் வண்ணநிலவன் பார்க்கும் பார்வை, இது வண்ணநிலவனின் கோணம் என்பது இருக்கும். விதம் விதமாய், நவம்நவமாய் நான் சொல்ல நினைப்பதை வேண்டுமானால் என் தனித்துவம் என்று சொல்லலாம். காதலையும் வறுமையையும் மட்டும் நான் எழுதவில்லை.

6. எனக்கு எழுத்து எப்போதுமே தாகம் அல்ல. எதோ தோணிச்சி எழுதினேன். இலக்கியத்தை மேலெழுந்த வாரியாகச் செய்ய இஷ்டமில்லை. எதையாவது எழுதுவது என்று நான் எழுதுவதில்லை. என் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்றோ வாராவாராம் என் பெயர் பத்திரிகையில் வரணும்னோ, என் நோக்கம் கிடையாது. பொறக்கும் போது பேனாவோடா பொறந்தேன்? சாகும்தன்னியும் எழுதிக்கிட்டே இருக்கணும்கிற சங்கல்பமும் இல்லை. 0

Sunday, October 03, 2010

இவர்களது எழுத்துமுறை - 9. - இந்திராபார்த்தசாரதி

1. நான் என்னை என் எழுத்தில் கரைத்துக் கொண்டு, அதே சமயத்தில் ஒதுங்கி நின்று ரசிக்கவேண்டும் என்கிற அற்ப ஆசை கொண்டவன்.

2. எனக்கு ஏற்பட்ட, நானறிந்த மற்றவர்களுடைய அனுபவங்களையுந்தாம், நான் எழுத்தில் காண முயற்சி செய்து வந்திருக்கிறேன். இதுதான் நேர்மையான விஷயம் என்று எனக்குப் படுகிறது. நான் சொல்லுகிற விஷயம் புதிது என்பதையோ அல்லது நான் எனக்காக எழுதுகிறேன் என்ற அசட்டுத்தனத்தையோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

3. உலகத்தை உய்விக்க வேண்டும் என்ற அதிகப் பிரசங்கித்தனம் எனக்குக் கிடையாது. இலக்கியம் இத்தகைய பொறுப்புக்களை மேற்கொள்ளவும் இயலாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு கலை நுணுக்கத்துடன் நோக்கி, மனிதன் தன்னுடைய எலும்புக்கூட்டைத் தானே பார்க்கும்படியான ஒரு கண்ணாடியைப் பிடிப்பதுதான் இலக்கியத்தின் வேலை. இதை நான் நன்குணர்ந்திருப்பதால்தான் என்னைச் சில விமர்சகர்கள் சினிக் என்று சொல்லுகிறார்கள் போலிருக்கிறது.

4. என் எழுத்தில் ஆங்கிலச் சொற்கள் விரவி வருகின்றன என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். நான் மொழியை வெறும் சாதனமாகத்தான் கருதுகிறேன். ஒரு கருத்தை எவ்வளவு வலுவாக, இயல்பு குன்றாமல் சொல்ல முடியும் என்பதுதான் என் அக்கறை. தமிழில் சொன்னால் நான் நினைக்கின்ற கருத்து வலுவாகச் சொல்லப்படவில்லை என்று தோன்றும்போது, ஆங்கிலத்தில் எழுதுகிறேன். இது ஒரு குறைதான். மறுக்கவில்லை. இது என் குறையை மட்டுமல்ல சமூகத்தின் பலஹீனத்தையே காட்டுகிறது.

5. எப்படி ஒரு காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவையாக இருக்கின்றதோ, அதைப்போலவே என்னைப் படிப்பதற்கு வாசகன் தேவையென்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன். எதிரில் உள்ளவனைப்போய் அது அடைய வேண்டும் என்று நினைக்கிறேன். புரியாமல் எழுதுவதை ஒரு ஸ்டைல் என்று கொள்ள முடியாது.

6. என்னுடைய எழுத்தினால் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கருதுகிறேன். மாற்றம் என்றால் புரட்சி என்று அரத்தமல்ல. 'மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தவொரு இலக்கியத்துக்கும் அர்த்தமில்லை' என்று சொல்லலாம்.

7. Writing, basically is a kind of co-ordination. பல நிகழ்ச்சிகள், சம்பவங்கள் மனதில் ஏற்றப்பட்டு, பாதிப்புடன் கலந்து ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் பொழுது இலக்கியம் பிறக்கிறது. கேரக்டர்களை வைத்துக்கொண்டுதான் நிகழ்ச்சிகளை நான் என் நாடகங்களில் உருவாக்குகிறேன்.

8. இலக்கியம் இலக்கியத்துக்காக, கலை கலைக்காக என்பதெல்லாம் பித்தலாட்டம். பழையகாலச் சிந்தனை.பத்தொன்பதாம் நூற்றாண்டில் Walter Pater ஆரம்பித்தான் Art for artsake என்று. தூய இலக்கியம் என்று ஒன்று கிடையாது. அடுத்த வீட்டுக்காரனைப்பற்றி நான் எழுதும்போதே அது ஒரு சமூகச்செயலாகவிடுகிறது. 0

Monday, September 27, 2010

இவர்களது எழுத்துமுறை - 8 கி.ராஜநாராயணன்

1. நான் என் கதைத் தொகுப்புகளுக்கு முன்னுரை எழுதுவதில்லை. கதையில் சொல்லாததையா முன்னுரையில் சொல்லிவிட முடியும்?

2. கதை எழுதுவதற்கு முன்பு நான் கடிதங்கள்தான் எழுதிக் கொண்டிருப்பேன். பத்துப் பக்கம் இருபது பக்கம்கூட எழுதுவேன். ஒரே நாளில் எழுத மாட்டேன். தினமும் கொஞ்சம் கொஞ்சமாய் எழுதுவேன். பின்னாளில் என் எழுத்துக்களுக்கு ஒரு ஸ்டைல் உருவானதென்றால் அதற்கு இந்தக் கடிதங்களே காரணம்.

3. கோபல்ல கிராமம் எழுத உங்களைத் தூண்டியது எது?

ஆந்திராவிலிருந்து தமிழகத்தில் குடியேறி ஒரு கிராமத்தையே அமைத்த கம்மா நாயுடுகளைப் பற்றி எழுதத் திட்டமிட்டிருந்தேன். அவர்கள் அங்கே குடியேறியதைப் பற்றி ஒரு கதை வைத்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு ஜாதிக்காரர்களிடமும் ஒரு கதை இருக்கு. ஒவ்வொரு தொழில்காரர்களிடமும் ஒரு கநை இருக்கு. கோபல்ல கிராமத்தை எழுதி முடிக்க ஏழு வருஷங்கள் ஆயின. தொடர்ச்சியாக அல்ல விட்டு...விட்டுத்தான் எழுதினேன். எழுதி முடிச்சி கொஞ்சம் கொஞ்சமாய் செதுக்கி செழுமைப் படுத்தினேன். கயத்தாறு ஆசாரி வண்டி
செய்யற மாதிரி நிதானமா செய்தேன்.

4. போராட்டக்காரரான உங்கள் எழுத்தில் மென்மையும் - வருத்தமும் மேலோங்கி இருக்கிறதே?

சில சில எழுத்தாளர்களுக்கு சில சில இயல்பு. அதன்படித்தான் அவர்களது எழுத்துக்கள் இருக்கின்றன. சிலர் கண்டிப்பதே கூட மென்மையாய் இருக்கும். பாராட்டுவதும் அப்படியே. அந்தோன் செகாவ் ரொம்ப மென்மையா, ரொம்ப சுகமா கதை சொல்வார். ஒரு வேளை அந்த பாதிப்பு என் கதையில் இருக்கலாம். ரோம்ப டாம்-டூமு-ன்னு நான் எழுதறதில்லே.

5. நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது உங்கள் கதைகளில் இருந்த பிரச்சினைகளின் தீவிரம், கூர்மை வீச்சு எல்லாம் பின்னளில் வெறும் லயிப்பில் ஆழ்ந்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு...?

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ஒரு தீவிரம் இருந்தது. அது எழுத்தையும் பாதித்தது. அப்புறம் மனிதனுடைய வயது ஆக... ஆக... அவன் பகுவப் படறான். அனுபவப் படறான். பழம் பழுக்கிற மாதிரி. அப்ப அந்த மாறுதல் எழுத்தில் வரத்தானே செய்யும்! பத்தொன்பத வயதில் ஒரு கண்டக்டர் உங்களைத் திட்டினால் உங்களுக்குக் கோபம் வரும். நாற்பது வயதில் சரிதான் போ என்ற சகிப்புத் தன்மை வந்துவிடும். இதைப் பக்குவம் என்று வைத்துக் கொண்டாலும் சரி, மழு மாறிப்போச்சு என்றாலும் சரி.

6. செக்ஸ் கதைகளை எழுதுவதனால்உங்கள் இமேஜ் கெட்டுவிடாதா?

இமேஜ் என்பது நான் எழுதிய விஷயத்திற்காக வந்தது. அது அப்படியே நிற்கும். இந்தக்கதைகள் சரி என்றால் காலம் பாராட்டும்.

7.. எழுதுவது போராட்டமா?

சிலர் தண்ணீர் குடிக்கிற மாதிரி சுலபமா எழுதிடறாங்க. நாட்டியம் ஆடறவ சந்தோஷமா ஆடறா. பாடறவன் சந்தோஷமா பாடறான். எழுத்து மட்டும் ஏன் பிரசவ வலியா இருக்கு? எழுத்து மாதிரி கஷ்டமான கலை எதுமில்லை. 0

Monday, September 20, 2010

இவர்களது எழுத்துமுறை - 7 வண்ணதாசன்

1. லா.ச.ராவுக்குப்பின் தமிழ் இலக்கியத்தில் உங்கள் மொழிநடை(style) மிகவும் தனித்துவமானது என்பது பற்றி?

என்னோட 'ஸ்டைல்' எனக்குத் தடையா இருக்குன்னுதான் நெனக்கிறேன். என்னை அது கட்டிப் போடுது. இது யாருக்கும் நடக்கக்கூடாதுன்னு நெனக்கிறேன். எந்த ஒரு எழுத்தாளனின் ஸ்டைலும் அவனைக் கட்டிப் போடக் கூடாது. நானே ஒரு பிரத்தியேக பாஷையை உருவாக்கி, அதற்குள் சிக்கிக் கொண்டேன்னுதான் சொல்லணும். நானே அதிலிருந்து விடுபட முயற்சித்தும் முடியல. இது யாரும் எழுத முடியாத ஸ்டைல், நாமஎழுதறோம் அப்படின்னல்லாம் ஒண்ணுமே கெடையாது. ரொம்ப ரொம்ப எளிமையான பாஷை எதுவோ, அதுதான் நல்ல பாஷைன்னு இப்பல்லாம் எனக்குத் தோணுது. ஜி.நாகராஜன் எழுதின 'குறத்திமுடுக்கு' மாதிரித்தான் எளிமையா எழுதணும்னு தோணுது.

2. உங்கள் சிறுகதைகள் உங்களுள் கருத்தரித்த விதத்தை விளக்க முடியுமா?

என் சிறுகதைகள் எல்லாமே என்னைச் சுற்றி நடந்த விஷயங்களை வைத்தே எழுதியிருக்கேன். 99 சதவீதம் உண்மைக் கதைகள். சில சமயம் நிஜப்பேரு போடாமே, சில சமயம் போட்டு எழுதியிருக்கேன்.எப்படி நிகழ்ச்சியை தேர்ந்தெடுகிறேன்னு தெரியல. இதை எழுதிட வேண்டியதுதான்னு டக்குன்னு படுது.

3. யதார்த்தபாணியில்தான் உங்கள் கதைகள் அமைந்துள்ளன. இனி எதார்த்தவாத எழுத்துக்களுக்கு எதிர் காலமில்லை என்பது பற்றி...?

கடைசிவரைக்கும் நான் எதார்த்தவகை எழுத்துக்களையே எழுதுவேன். இலக்கியமே எதார்த்தம்தான்.கடைசிவரை எதார்த்தமே நிலைக்கும். மற்றவகைகளெல்லாம் வரும் போகும்.

4. கவிதையிலே மிக எளிமையான சொற்களாலே புஷ்பம் தொடுக்கிறமாதிரி இயல்பா கவிதை எழுதறீங்க. இந்த எளிமை நீங்க திட்டமிட்டு செய்வதா?

கவிதை இப்படித்தான் எழுகணும்னு மனசுலே எதுவும் வச்சுக்கல. திட்டமிட்டு நான் எதுவுமே பண்ணலே. இதைத்தான் எழுதணும், இந்த விஷயத்தை எழுதக்கூடாது, இந்த யுக்தியிலே எழுதணும், எழுதக் கூடாதுன்னு, தமிழல்லாத வார்த்தை போடக்கூடாது, English வராமப் பார்த்துக்கணும் அப்படியெல்லாம் நான் திட்டமிடுதலே கிடையாது. சரியா சொல்லணும்னா என் கதைகளைவிட கவிதைகள்தான் சரியான பாதையிலே போகுதுன்னு நெனக்கிறேன். எளிமைதான் என்னோட மொழியா இருக்கணும்னு நெனைக்கிறேன்.

5. இன்றைய உங்கள் இலக்கிய வாழ்வு எப்படி இருக்கிறது?

என்னுடைய கதைகளையும் சரி, கவிதைகளையும் சரி, அந்தத் துறைகளில் ஒரு அலையெழுப்புகிற தாகவோ, வலிமைமிக்க ஒரு உந்து சக்தியாகவோ, சுவடுகளை பதித்துச் செல்ல வேண்டிய அவசியமுடையவை என்றோ நான் கருதியதில்லை. அப்படியெல்லாம் கருதாமலும், அப்படியெல்லாம் பிறர் கருதுவதற்கு எந்த அடையாளமும் இல்லாமலுமே என் படைப்புகளை எழுதிக்கிட்டு வர்ரேன். வாழ்வு குறித்தும், வாழ்வின் அர்த்தங்கள் குறித்தும், எந்தத் தீவிரமான கேள்விகளும் எழுப்பாமல் அதே சமயம் சிறுமைகளுடனும் சமரசம்
செஞ்சுக்காம, எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேனோ, அப்படியே என் எழுத்துக்கள் எழுதப்படுகின்றன. நான் எவ்வளவு நிஜமோ அவ்வளவு நிஜம், நான் எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய் என் எழுத்துக்கள். 0

Wednesday, September 15, 2010

இவர்களது எழுத்துமுறை - பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)

1. எந்த நேரத்தில் எழுதுவீர்கள்?

குறிப்பிட்ட நேரம் ஒன்றுமில்லை. இரவோ பகலோ எப்பொழுது வேண்டுமானாலும் எழுதலாம். பெரும்பாலும் விடியற்காலையில் எழுதுவதுண்டு. மத்தியான நேரத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதும் எழுதிக்கொண்டிருப்பதுண்டு. மத்தியானத்துக்குப் பின் எழுதுவதில்லை. இரவில் கொஞ்ச நேரம் எழுதுவது பின் படிப்பதுதான் வேலை.

2. எப்படி எழுதுவீர்கள்?

தொடங்கும்போது முன்பு எழுதியவைகளை ரசித்துப் படிப்பேன். அப்போது கற்பனை வளரச் சூழ்நிலையைத் தயாராக்குவேன். சில சிறிய திருத்தங்களைச் செய்வேன். அப்போது நிறுத்தியதிலிருந்து தொடர்ந்து வேறொன்று கிடைக்கும். கொஞ்சம் அதிகம் எழுதினால் படிக்க முடியாதல்லவா? எப்படியும் நான்கு பக்கமாவது படிப்பதுண்டு. எழுதிக்கொண்டிருக்கும் போது எங்கேயாவது கற்பனை நின்று விடுவதுண்டு. சில நேரங்களில் வாக்கிய அமைப்புக்காக நிறுத்தப்படும். அது கிடைத்து விட்டால் மறுபடியும் தொடருவேன்.

3. எழுத்தைப் பற்றிய நியமம், குறிக்கோள் ஏதேனும் உண்டா?

உதிரியான காகிதங்களில் எழுதுவது எனக்குப் பிரியமில்லை. முழுநீளமுள்ள புத்தகங்களில் எழுதுவதுதான் பழக்கம்.

4. ஒரு நாளைக்கு எத்தனை பக்கங்கள் எழுதுவீர்கள்?

நல்ல சூழ்நிலையில் மூன்று பக்கங்கள் எழுதுவேன். மோசமன நாட்களில் கால் அல்லது அரைப் பக்கம் தான் எழுதுவேன். ஒன்றும் எழுத முடியாத நாளும் உண்டு.

5. எழுதும் போது தனிமை தேவையா?

எழுதும் போது தனிமை தேவைதான். நன்றாக எழுதும் தினத்தில் அசதியும் உண்டாகும். என்னுடைய சக்தி எங்கேயோ குறைந்து போனதுபோன்று தென்படும் அப்போது தனிமையே பயங்கரமாகத் தோன்றும். நான்என் மகளைச் சத்தமிட்டு அழைப்பேன். அவளுடைய குரல் கேட்டால் மீண்டும் நிம்மதி அடைவேன். அதனால் நான் தனிமையில் இல்லை என்பது நிச்சயமாகுமல்லவா?

6. எழுதுவது சுலபமா?

பொறுக்க முடியாத வேதனையைத் தருவதாகும். 0

Sunday, September 05, 2010

ஒரு திரைப்பட இயக்குனரின் சுயசரிதம்

சிறந்த சமூக சிந்தனையாளரும் படைப்பாளியுமான திரு.சங்கமித்ரா அவர்களோடு
ஒருதடவை பேசிக்கொண்டிருந்தபோது, ''உங்கள் சுயசரிதையை எழுதி விட்டீர்களா?'' என்று கேட்டார். ''சுயசரிதை எழுதுமளவிற்கு நான் என்ன பெரிய ஆளா? காந்தி நேரு போல என் வாழ்க்கை என்ன பிறருக்கு வழிகாட்ட வல்லதா?'' என்றேன். ''அப்படியல்ல. பெரிய ஆளாய் இருந்தால்தான் எழுத வேண்டுமா? ஒரு புழு கூட தன் வரலாற்றை எழுதலாம். அதிலிருந்து நாம் பல புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியும்!'' என்றார் சங்கமித்ரா. அது உண்மைதான் என்று தோன்றுகிறது. தன் வரலாறுகள் நமக்குத் தெரியாத பல தகவல்களைத் தருகின்றன. ஆனால் ஒரு விஷயம். அது சுவாரஸ்யமாய் - நாமக்கல் கவிஞரின் 'என் கதை' போல, உ.வே.சாவின் 'என் சரித்திரம்' போல - சொல்லப் பட்டிருக்க வேண்டும்.


ஸ்பெயின் நாட்டவரான லூயி' பனுவல் ஒருபுகழ் பெற்ற திரைப்பட இயக்குனர். அவர் ஃபிரிட்ஸ் லாங் என்னும் திரைப்பட இயக்குனரை ஆதர்ஸமாய்க் கொண்டிருந்தவர். 'The milky way', 'The Discreet charm of the Bourgeoise', 'The Phantom of Liberty' என்கிற மிகச் சிறந்த திரைப்படங் களை உருவாக்கியவர். அவர் தனது திரைப்பட அனுபவங்களையும், தனது இயக்குனர் நண்பர்களான டாலி பிரெட்டன், மேக்ஸ் எர்னெஸ்ட், பால் எலுவர்ட் ஆகியோரின் ஆளுமைகளையும் விவரிக்கும் சுய வரலாற்றினை 'இறுதி சுவாசம்' என்றதலைப்பில் எழுதியுள்ளார். 77வது வயதில் தன் இறுதிப் படத்தை எடுத்த அவர் தனது உருவாக்கங்களில் தான் கண்டறிந்ததையும், சிலவற்றைக் கைவிட்டு விடுவதன் அவசியத்தையும் இந்நூலில் வற்புறுத்துகிறார். புரட்சிகரமானதும் கவிதாபூர்வமானதுமான
இந்நூலை திரு.சா.தேவதாஸ் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.


'மொழிபெயர்ப்பு நூல்களைத் திறனாய்வு செய்வது சற்று சிக்கலான வேலை: ஏனெனில் திறனாயப்படுவது மொழிபெயர்ப்பா அல்லது மூல நூலா என்பதைத் திறனாய்வில் தெளிவு படுத்துவது சற்று அசாத்தியம். மூல நூலின் மொழி திறனாய்வாளனுக்குத் தெரியாவிட்டால்? அல்லது அந்த மூல நூல் திறனாய்வாளனுக்குக் கிடைக்காவிட்டால்? அத்தருணங்களில் திறனாய்வாளனால் உருப்படியாக ஒன்றும் செய்ய இயலாது' என்று தேவக்கோட்டை வா.மூர்த்தி தனது திறனாய்வு ஓன்றில் சொல்லி இருப்பதைப்போல் இந்நூலைத் திறனாய்வு செய்வதில் எனக்குள்ள பிரச்சினை இதன் மூல நூல் எந்த
மொழியில் எழுதப்பட்டது, திரு.தேவதாஸ் அம் மொழியிலிருந்து நேரடியாக இதனை மொழிபெயர்த்தாரா அல்லது மூல மொழியின் ஆங்கில வழி மொழிபெயர்ப்பா என்பதற்கான குறிப்பு ஏதுமில்லாததால் மொழிபெயர்ப்பை விமர்சிப்பது இங்கு தேவையற்றதாகிறது. எனவே மூல நூலை மட்டும் விமர்சிக்க நேருகிறது.


தன் தாயாரின் நினைவுகளுடன் தன் சரிதையைத் தொடங்குகிறார் புனுவல். தனது ஆயுளின் கடைசி பத்தாண்டுகளில் தன் தாயார் படிப்படியாகத் தன் நினைவுகளை இழந்ததையும் தன் பிள்ளை களில் எவரையும் அவருக்கு அடையாளம் காண முடியாது போனதையும் குறிப்பிட்டு, தனக்கும் அத்தகைய ஞாபக மறதி தனது எழுபதாவது வயதில் ஏற்பட்டதையும் சொல்கிறார். இதனால் இச் சரிதத்தில், விஷயத்திலிருந்து அடிக்கடி விலகித் திரிவது நேர்ந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.


எட்டு அத்தியாயங்கள் வரை இடைக்காலங்களில் இருந்ததான நினைவுகள் சொல்லப்
பட்டிருக்கின்றன. தனது பிறந்த கிராமமான காலந்தா இடைக்காலங்கள் முதல் உலகப்போர் வரை நீடித்த சூழ்நிலை பற்றி விரிவாகச் சொல்வது சற்று அலுப்பூட்டினாலும் அவரது இளமைக்காலம் பற்றிய அந்நினைவுகள் கத்தோலிக்கப் பிரிவின் சில முரண்பாடுகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. அக்கால கட்டத்தில் நிலவிய வர்க்க, இன வேறுபாடுகள், நினைத்துப் பார்க்க முடியாத சொர்க்கம் நரகம் பற்றிய மத நம்பிக்கைகள் ஆகியவற்றால் தனது இளமைக்காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளார்.


தனது எட்டாவது வயதுக் காலகட்டத்தில் தான் பார்த்த திரைப்படங்கள் பற்றிச் சொல்லும் போது ஒவ்வொரு அரங்கமும் ஒருகதை சொல்லியை வைத்திருந்ததையும், அவர் திரையருகே நின்று பார்வையாளருக்கு காட்சிகளை விளக்கியது பற்றியும் சுவாஸ்யமாகச் சொல்கிறார். 'இன்றைக்கு இதனைக் கற்பிதம் செய்வது கடினம். ஆனால் திரைப்படம் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது, புதியதும் வழக்கத்துக்கு மாறான எடுத்துரைப்பு வடிவமும் கொண்டிருந்ததால், என்ன நிகழ்ந்து கொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்வதில் பார்வையாளருக்குச் சிரமம் இருந்தது. இப்போது திரைப்பட மொழி, படத்தொகுப்பு அம்சங்கள் ஒரே நேரத்தில் மற்றும் அடுத்தடுத்து நிகழும் நடவடிக்கை மலரும் நினைவுகள் ஆகியன நமக்கு மிகவும் பழகிப் போயுள்ளதால், நமது புரிந்து கொள்ளுதல் தன்னிச்சையாக உள்ளது; ஆனால் ஆரம்ப ஆண்டுகளில் புதிய காட்சி இலக்கணத்தை விடுவித்துக் கொள்வது மக்களுக்குக் கடினமானதாயிருந்தது. காட்சிக்குக் காட்சி தம்மை வழிகாட்டிச் செல்ல அவர்களுக்கு விளக்கம் சொல்பவர் தேவைப்பட்டார்' என்று அதற்கு விளக்கம் சொல்கிறார்.
தொடர்ந்து தன் சகோதரி கொன்சிடாவின் நினைவுகள், தனது மதுவிடுதி அனுபவங்கள்
போன்ற மண்ணுலகச் சந்தோஷங்கள், டெநோயெல்ஸ், டாலி போன்ற இயக்குனர்களுடனான
தொடர்புகள் மற்றும் அது தொடர்பான அனுபவங்களைச் சொல்லிச் செல்கிறார். தனது அமெரிக்க அனுபவங்களைச் சொல்லும் எட்டாவது அத்தியாயத்திலிருந்து சுவாரஸ்யமாகச் செல்கிறது. இது முதல் திரைப்படங்களை அவர் இயக்கிய அனுபவங்களை ரசிக்க முடிகிறது. இயக்குனராக விரும்புகிறவர் களுக்குப் பயனுள்ள பதிவுகள்.


லூயி பனுவலின் திரைப்பட இயக்க அனுபவங்கள் மட்டுமின்றி அவரது அரசியல்

அனுபவங்களும், நம்மூரைப் போன்றே நடிகர்களின் அரசியல் தொடர்பு ஆகியவையும் இடையிடையே சொல்லப்பட்டுள்ளன. இதன் பின்னர் அவரது காதல் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னர் அவரது இலக்கிய நண்பர்களுடனான தொடர்புகள், இங்கே நம்மூர் போலவே இலக்கியவாதி களுக்கிடையே நிகழ்ந்த கைகலப்புகள் பற்றிய பதிவுகள் சுவாரஸ்யமாக உள்ளன.


அமெரிக்க அனுபவங்களைத் தொடந்து அவரது பாரிஸ், ஸ்பெயின், மெக்ஸிகோ அனுபவங் களும் அவரது கனவுகள், மிகையதார்த்தவாதம் பற்றிய கருத்துக்களும் ரசனைக்குரியவை. இறுதிப் பகுதியில் முதுமைக்காலம் பற்றிய சிந்தனைகள், மரணம் பற்றிய எண்ண வோட்டங்கள் என வாசிப்பவர்க்கு நிறைய ஆன்மீகத் தகவல்கள் உள்ளன. நமக்குத்தொடர்பில்லா திருந்தாலும் எந்தவொரு தன் வரலாறும் எதாவது ஒரு வகையில் பயன் தரும் எனபதற்கு லூயி பனுவலின் 'இறுதி சுவாசம்' என்கிற இச்சுயசரிதை ஒரு சான்று. 0



நூல்: இறுதி சுவாசம்

ஆசிரியர்: லூயி பனுவல்.

தமிழில்: சா.தேவதாஸ்

வெளியீடு: வம்சி புக்ஸ், திருவண்ணாமலை.

Thursday, August 26, 2010

இவர்களது எழுத்துமுறை - 5 மௌனி

எம்.ஏ.நுஃமானின் 30-12-1984 சந்திப்பின்போது;

---------------------------------------------------------------------


1. கேள்வி: நீங்கள் எப்படிக் கதை எழுதுகிறீர்கள்?


மனதில் தோன்றுகிறவை, கற்பனையானவை, திடீரென்று எழும் கருத்துக்கள் -

எல்லாம் ஒரு நோட்டில் குறித்து வைக்கிறேன். எழுதும்போது அதில் சில எனக்கு

உபயோகப்படும். எனது கதைகளை நான் ஒரே இருப்பில் எழுதி முடித்து விடுகிறேன். ஒரே

இருப்பில் முடியாவிட்டால் முடிந்த அவ்வளவும்தான் கதை.


2. உங்கள் மொழி நடையைப் பிரக்ஞைபூர்வமாகக் கையாள்கிறீர்களா?


இல்லை. அப்போது வருவதுதான் எழுத்து.


3. கேள்வி: பெரிய எழுத்தாளர்கள் தங்கள் கதைகளைப் பல முறை திருத்தித் திருத்தி

எழுதுவார்களாமே, நீங்கள் அப்படிச் செய்வதில்லையா?


இல்லை. செப்பனிடும் பழக்கம் இலை. ஒரே முறையில் எழுதுவதுதான்.

எழுத்துபிழைகள் இருந்தால் அதைத் திருத்திக் கொள்வேன். இப்போது என்னால் எழுதவோ

வாசிக்கவோ முடியவில்லை.



4. கேள்வி: எழுதவேண்டும்போல் இருந்தால் யாரையும் கொண்டு எழுதுவிக்கலாமே....


அப்படி டிக்டேட் பண்ணுவது எழுத்தல்ல.



கி.அ.சச்சிதானந்தம்:

-----------------------------


மௌனி எழுதுவற்கு நிரம்ப கால அவகாசம் எடுத்துக் கொள்வார். ஒவ்வொரு

சொல்லையும் சுண்டிச் சுண்டிப் பார்ப்பார். ஒரு நாளைக்கு ஒரு வாக்கியத்தோடு

நிறுத்திக் கொண்டதும் உண்டு. தமிழில் முதலில் வரவில்லை என்றால் ஆங்கிலத்தில்

எழுதிவிடுவார். பின்னால் தமிழ்ப்படுத்துவார். ஒரு கதைக்கு இருபது டிராப்ட்

கூடப் போட்டிருக்கிறார்.


கேள்வி 1: தாங்கள் நீண்ட காலமாக எழுதாமல் இருக்கிறீர்களே ஏன்?


ஏதோ ஒரு சமயம் எழுதியவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற ஆவலில்

என்னை இந்த கேள்வி கேட்டதற்கு நான் பெருமை கொள்கிறேன். அப்போது நான்

எப்படி எழுதினேன் என்பதே எனக்குப் புரியவில்லை.எனக்கு நிறைய எழுத வேண்டும்

என்ற ஆவல் எப்போதும் உண்டு. எப்படி எழுதுவது என்பது வர வர வெகு கடினமாகவே

தோன்றுவதை உணர்கிறேன். நான் எழுதுவதை சந்தர்ப்பம் நிர்ப்பந்தத்தினாலல்லாது

பிறருக்குத் தெரியப்படுத்திக் கொள்வது இல்லை. எழுத்தாளன் எனப் பிறருக்குக்

காட்டிக்கொளவதில் வெட்கம் கொள்ளுபவன்.


கேள்வி 2: சிறுகதை இலக்கியப் படைப்பில் தங்கள் நோக்கில் தொழில் நுணுக்கங்களாக

எவற்றைக் கூறுகிறீர்கள்?


எந்த அம்சம் தொழில் நுணுக்கமென நான் என் சிறுகதைப் படைப்பில் கையாண்டேன்

என்பது சொல்லும் வகைக்குத் தெளிவாக உணர்வு கொள்ளவில்லை. ஆனால் ஒன்று

சொல்லலாம் என நினைக்கிறேன். எதைச் சொல்கிறோம் என்பது, எப்படிச்சொல்லுவது

என்ற உணர்வுடன் கலந்து உருவாவதுதான் இலக்கியம். ஒன்றைவிட்டால் இரண்டும்

கெட்டு ஒன்றுமே இலக்கியம் எனத் தோன்ற உண்டாகாது. ('தீபம்' பேட்டி அக்.1967)



பிரமிள்:

-----------


1. மௌனிக்குத் தன் கதைகளில் ஒவ்வொரு சொல்லுமே முக்கியமானது. சொற்களின்

அர்த்தத்தோடு, சில வேளைகளில், அவற்றின் சப்த அமைப்பையும் கூட அவர் கவனத்தில்

ஏற்கிறார்.


2. தமது கதாபாத்திரங்களின் பெயர்கள்கூட கதையின் முக்கியமான ஓட்டத்தை மீறி

சப்தம் போட்டுவிடக்கூடாதே என்ற அக்கறையுடன் பாத்திரங்களின் பெயர்களையும்

சாமானியமானவையாகவே உபயோகிக்கிறார். சில கதைகளில், அவசியமில்லை என்று

காணும்போது பாத்திரத்துக்குப் பெயரே இராது.


3. மௌனி தன் கதைகளில் பெரும்பாலும் நிகழ்ச்சிகளினாலன்றி கவித்துவத்தினாலேயே

பாத்திரங்களிடையே உறவு போன்றவற்றைக் கொண்டு வருகிறார். ஆழமான கதையம்சத்தின்

துணையின்றி, சாதாரண கதைகளிலேயே ஒரு காவிய உணர்வைத் தருகிறார்.



நகுலனுடனான சந்திப்பில்:

------------------------------------


கேள்வி; நீங்கள் எப்படி எழுகிறீர்கள்?


அனுபவம் ஒரு புள்ளி. அந்தப் புள்ளியை இசை பிசகாமல் ஒரு வட்டமாகப்

பூரணமாக்க, அனுகூல அனுபவ பாவனையாலும், அனுபவ சாத்திய பாவனையாலும்

முயற்சிக்கிறேன். சில சமயம் வெற்றி; சிலசமயம் தோல்வி. 0

Monday, August 09, 2010

இவர்களது எழுத்துமுறை - 4 --சுஜாதா

1. கேள்வி : நடை ஒன்றை ஆரம்பம் முதல் நீங்க கையாள ஆரம்பிச்சீங்க. இது மற்ற தமிழ் இலக்கியங்களைப் படிச்சு அதில் வருகிற வர்ணனைகளில் சலிப்பு ஏற்பட்டு 'நாம் இதையெல்லாம் விட்டுவிட்டு வேற ஒரு ஸ்டைல்ல அப்படியே அடிக்கணும்' - என்கிற மாதிரி திட்டமிட்டு உங்க நடையை அமைத்துக் கொள்வதில் ஒரு முயற்சி எடுத்துக்கிட்டீங்களா?


ஆமாம், எடுத்துக்கிட்டேன். அதுக்கு முக்கியமான தூண்டுகோல் புதுமைப்பித்தன். அப்புறம் கு.ப.ரா, தி.ஜானகிராமன் இவங்களையும் படிச்சிருக்கேன். லா.ச.ரா நடை அப்படியே என் கண்ணைக் கூச வச்சது. அதொட ஆங்கிலத்தைப் படிக்கிறபோது involuted writing, convoluted writing, pattern writting இந்த நடையெல்லாம் ஏன் தமிழில் பயன் படுத்தக்கூடாதுன்னு தோன்றியது.


2. கேள்வி : உங்களுடைய எழுத்து நடையை நீங்களேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்களா?


ஆமா, நானேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். 'அவன் அங்கே போனான்' அப்படின்னு எழுதணுமானா' அவன்'ஐ எடுத்துட்டு 'அங்கே போனான்'னு எழுதுவேன். திரும்பப் படிக்கும்போது எழுதினதைச் சின்னதாக ஆக்குவது. இலக்கணம் ஒழுங்காகத் தெரிஞ்சதனாலே அதைக் கொஞ்சம் மீறலாமேன்னு தோணித்து. இதுலே ஏற்படுகிற பலன் என்னன்னா படிப்பதிலே வாசகனுக்கும் ஒரு பங்களிப்பைக் கொடுக்கிறது. அவனுடைய புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டு அவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் எழுதுவது. இதுதான் என் வெற்றின்னு நினைக்கிறேன்.


3. எனக்கு சில வருஷங்கள் எழுதின பிறகு கவனிப்பதில் கஷ்டம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் எழுதும் போது சொந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுபடுவதுதான் கஷ்டமாக இருந்தது. இருக்கிறது.


4. வாசகர்கள் புத்திசாலிகள்; அவர்களால் இடைவெளிகளை நிரப்ப முடியும். முகவாயைப் பிடித்து ஸ்பூன் வைத்துப் புகட்ட வேண்டாம்; எழுதியதை இடைவெளி விட்டுப் படிக்கையில் ஒரு வாசகனின் கோணம் கிடைத்துஎத்தனை முறை திரும்ப எழுதினாலும் ஒவ்வொரு முறையும் எழுதியது மெருகேறுகிறது; என்பதெல்லாம் இருபத்தோரு வருஷங்களாய்க் கற்ற பாடங்கள்.


5. எழுத்து எனது மிகத் தனிப்பட்ட சமாசாரம். என் எழுத்து என் வீட்டில், ஒரு மூலையில், ஒரு மேஜை விளக்கின் அடியில், மிகமிகத் தனியான ஒரு சூழ்நிலையில் உருவாவது. அப்போது எனக்கும் வெளிஉலகத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 0

Monday, July 26, 2010

இவர்களது எழுத்துமுறை - 3 அகிலன்

1. நான் பகலில் முக்கியமாக அதிகாலையில் எழுதும் பழக்கமுள்ளவன். எழுதும்போது
கண்டிப்பாகத் தனிமை வேண்டும். அந்த வேளைகளில் மட்டும் யாருடைய குறுக்கீடும்
எனக்குப் பிடிப்பதில்லை. காப்பியும் தண்ணீரும் எனக்கு உற்சாகம் தருபவை.

2. அதிகாலையில் 5 மணி முதல் எழுகிறேன். ஒரு நாளைக்கு 5,6 பக்கங்கள் எழுதுவேன்.
மறுநாள் எழுதியதைப் படிப்பேன். அடிப்பேன். திருத்துவேன். சரியில்லாவிட்டால்
கூசாமல் கிழித்து எறிந்துவிட்டு, வேறு ஒன்று எழுதுவேன். பத்திரிகைக்குப் போகும்
வரை, நான் எழுதியவைகளைப் பன்முறை படித்துத் திருத்துவதுண்டு.

2. சில நாட்களில் மணிக்கணக்காகச் சிந்தித்தும்ஒரு வரிகூட எழுத முடிந்ததில்லை.
கற்பனைத் தேவியின் ஊடல், மிகுந்த தாபத்தைத் தருவதுண்டு. ஆனால் மறுநாளே அனுதாபம் கொண்டு என் வயப்பட்டுப் பல பக்கங்களாக உருவாகிச் சிரித்திடுவாள்.
பத்திரிகாசிரியர்களின் தந்திகளும் அவசரத் தூதுவர்களும் கற்பனை ஓட்டத்தைத்
தூண்டிவிடுவதும் உண்டு.

3. கதாபாத்திரங்களுக்காக நான் எங்கும் தேடிப் போய்ச் சிரமப்படும்
வழக்கமில்லை.என்னைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களில் என்னைப் பாதிjfபவர்கள் என்
கதாபாத்திரங்களாகிவிடுவார்கள்! வழக்கமான மனிதர்களைவிடச் சிற்சில விஷயங்களிலாவது
குண மாறுதல்கள் உள்ளவர்களே என்னை மிகவும் கவர்ந்து விடுகிறார்கள். அவர்களை நான்
தப்ப விடுவதில்லை.

4. தினமும் இத்தனை பக்கங்கள் என்று நான் கணக்குப் பார்த்து கதை எழுதுவதில்லை.
அச்சு இயந்திரங்கள், பத்திரிகை வெளிவரும் தேதி இவைகள் என்னை நெருக்கினாலும்
என்கற்பனை என்னவோ இயந்திர ரீதியில் கட்டுப்பட மறுக்கிறது. ஒவ்வொரு வாரமும், சில
தினங்கள் அதன் போக்கில் விட்டுவிட்டு, திடீரென்று அதை வளைத்துக் கொள்வேன்.
முதலில் அது என்னிடம் கண்ணாமூச்சி விளையாடும். பிறகு அகப்பட்டுக் கொள்ளும்.
கற்பனை மனத்தின் ஊடலில் எழுத்தாளர் தவிக்கும் காலம், மிகவும் விந்தைக்குரிய
காலந்தான். இளம் காதலர்களின் ஏக்கம் நிறைந்த காலத்துக்கு அதனை ஒப்பிடலாம்.

5. வாழ்கையில் சந்திக்கிற அல்லது பழகுகிற ஒரு சிலரை நான் மாற்றியோ அல்லது
கற்பனைக் கலப்புடனோ கதாபாத்திரங்களை அமைக்கிறேன். சொல்ல விரும்பும் கதையைப்
பற்றி மேலெழுந்தவாரியாக ஒரு உருவம்(Outline) அமைத்துக் கொள்ளுவேன். கதையை எழுதப்போகும் சமயத்தில், கதாபாத்திரங்களுக்குரிய பண்புகளும், குணங்களும், நிகழ்ச்சிகளும் கதையின் ஓட்டமும் தாமாகவே அமைந்துவிடுகின்ற என்றுதான் சொல்ல வேண்டும்.
அதாவது எழுதும் நிலையில் (Semi conscious or Unconscious) அரை நினைவோ அல்லது
நினைவற்ற நிலையில் இருந்தோதான் என்னுடைய கதைகள் அநேகமாக எழுதப்படுகின்றன.
உலகத்தின் ஓரத்துக்கே சென்று ஓரளவு என்னை மறந்து எழுகிறேன் என்றுகூடச்
சொல்லலாம். கொஞ்சமும் சத்தம் இல்லாத இடத்திலிருந்துதான் எழுதுவேன். நான்
எழுதும்போது என்னை மறப்பதால், யாரும் என்னை எழுதும் நேரத்தில் பார்ப்பது
இயலாது.

6. சிறுகதைகளுக்குக்குறிப்பு எடுப்பதில்லை. நாவல்களுக்கு எழுதுவதற்கு முன்பாகவே
எழுதவேண்டிய விஷயங்களைச்(Raw materials) சேகரித்துக் குறிப்பில் சேர்ப்பேன்.
நான் எழுத நினைக்கும் பாத்திரங்களோடு பழகி, அவர்களுடைய இயல்புகளையும்
குணங்களையும் எழுதப்போகும் நிகழ்ச்சிகளில் பொருத்திப் பார்ப்பேன்.பெரும்பாலும் கதை மனத்தில் உருவானதும், தலைப்பும் உருவாகிவிடுகின்ற காரணத்தால் தலைப்புகளை முன்னதாகவே நான் வைக்கிறேன். 0

இவர்களது எழுத்து முறை - 2 . புதுமைப்பித்தன்

1. அச்சுப்பிழை பார்ப்பவரை ஒதுக்கி விட்டால் என் கதையின் முதல் வாசகன் நான்தான். அவ்வளவு ரசித்துப் படிப்பேன். வேகமாக எழுதிக்கொண்டு போவதனால் எழுதியதில் அங்கொன்றும் இங்கொன்றும்தான் என் ஞாபகத்தில் இருக்கும். கோர்வையாக, எழுத்து ரூபத்தில் என் கதைகளை நான் அச்சில்தான் பார்த்து வருகிறேன்.

2. பிரசுரிக்கும் நோக்கமே இல்லாமல் நான் கிழித்துப்போட்ட கதைகள் எந்தனயோ. எழுத்துக்கும் கைப்பழக்கம் மிகவும் அவசியம். முடுக்கிவிட்ட இயந்திரம் மாதிரி தானே ஒரு இடத்தில் வந்து நிற்கும். இது என் அனுபவம்.

3. நான் கதை எழுதுவதற்காக நிஷ்டையில் உட்கார்ந்து யோசித்து எழுதும் வழக்கம் இல்லை. என் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு எடுத்த எடுப்பில் எழுதியும் வெற்றி பெறுவதற்குக் காரணம் என் நெஞ்சில் எழுதாக் கதைகளாகப் பல எப்போதும் கிடந்து கொண்டே இருக்கும். அந்தக் கிடங்கில் இருந்து எப்போதும் நான் எடுத்துக் கொள்வேன். கதை எழுதும் சிலர் இவற்றை விவரப் பட்டியல் எழுதி ஒரு மூலையில் போட்டு வைப்பார்கள். நான் அப்படியல்ல. ஞாபகமறதிக்கு அரிய வசதியளிப்பேன். ஆனால் ஒன்று. எழுத்து ரூபத்தில் அமையும்வரை மனதில் உறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில்அந்தக் கதைகள் யாவும் இதைவிடச் சிறந்த ரூபத்தில் இருந்தன என்பது என் நம்பிக்கை. எழுதி முடித்த பிறகு அவை சற்று ஏமாற்றம் அதிகநேரம் நீடிப்பதில்லை.

4. கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு, தாவித்தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது. அந்த முறையை சிறிதுகாலத்துக்குப் பிறகு கைவிட்டு விட்டேன். காரணம் அது சௌகரியக் குறைவுள்ள சாதனம் என்பதற்காக அல்ல. எனக்குப் பல முறைகளில் கதைகளைப் பின்னிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் அதைக் கைவிட்டு வேறு வழிகளைப் பின்பற்றினேன்.

5. ரகுநாதன்: புதுமைப்பித்தன் கதையோ கட்டுரையோ எழுதும்போது நிதானமாக ஆர அமர இருந்து எழுதமாட்டார். பேனாவை எடுத்து விட்டால், அந்தப் பேனாவுக்குள் எங்கிருந்தோ ஒரு அசுரவேகம் வந்து புகுந்துவிடும். விறுவிறு என்று மெயில் வேகத்தில்கை ஓடும். இடையில் வெற்றிலை போட்டுக்கொள்ளும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் எழுதுவதில் ஸ்தம்பிப்பே ஏற்படாது.

(அடுத்து அகிலன்)

Monday, July 19, 2010

இவர்களது எழுத்து முறை - 1 . லா.ச.ராமாமிர்தம்

கேள்வி: எழுதுவதற்கு எவ்விதச் சூழ்நிலையை நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுக்குப் புத்துணர்வு தரும் தூண்டுதலாக ஏதேனும் பழக்கம் உண்டா?

எனக்கு லேசாக ரத்தக்கொதிப்பு இருப்பதால் இரைச்சல் ஆவதில்லை. எனக்கு அமைதி வேண்டும். தூய வெண்மையான தாளையும், பட்டையடிக்காமல், சன்னமாய் எழுதும் பவுண்டன் பேனாவையும் நான் பெரிதும் விரும்புவேன். கதை எழுதுவதற்கென்று தனியாக எனக்கு எந்தப் பழக்கமும் கிடையாது. காலை ஏழு மணியிலி ருந்து ஒன்பது மணி வரையிலும், மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிவரையிலும் எனக்கு எழுத உகந்த நேரம்.

என் எழுத்தைப் பொறுத்தவரை நான் அயராத உழைப்பாளி! நான் தேடும் அந்த லயம் எனக்குக் கிட்டும் வரை மீண்டும் மீண்டும் எழுதியதையே திருப்பித் திருப்பி பலமுறை எழுத நான் அலுப்பதில்லை. ஒரு கதையை எழுத எனக்குக் குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும். அவை நினைவின் அடிவரத்தில் வருடக் கணக்கில் ஊறிக்கிடந்தவை. அம்மாதிரி இன்னும் கிடப்பவை. அவை தாம் உருப்பெறக் காத்திருக்கும் வேளையை நான் தடியால் அடித்துக் கனிய வைப்பதில்லை. அம்மாதிரி அவசரமாய் எழுதவே எனக்குத் தெரியாது.

எந்தச் சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்டும் தொட்டுக் கொள்ள என் நினைவை நான் பழக்கிக் கொண்டிருக்கிறேன். நான் சொல்வதெல்லாம் ஒன்றும் சித்து வித்தையல்ல. தளராத சாதனை காரணமான விளைவுதான். படிப்பதே தவமானால், எழுதுவது அதைவிடக் கடினமான, கடுமையான தவம். இல்லையா? ஆனால் தவமும் ஒரு பழக்கம் என்பதைத்தான் இங்கு உறுதி கூற விரும்புகிறேன்.



கேள்வி : உங்கள் படைப்பையும் வார்த்தைகளையும் பற்றி?

என் கதைக்கான வார்த்தைகள் எல்லாமே என்னோடதுன்னு சொந்தம் கொண்டாடறதில்லை. சிலநேரம் சுவரின் கிறுக்கல், தெருவில் அகஸ்மாத்தாய் காதுலே விழும் சம்பாஷணை இவையெல்லாம் கூட கதையில் வார்த்தைகளாய் அமைஞ்சிருக்கு.

கேள்வி: நீங்கள் எழுதும் முறை பற்றி?

அதை மண்உணிப் பாம்புடன் ஒப்பிடலாம். அது ஊரும் விதம், வாயால் பூமியைக் கவ்விக் கொண்டபின் உடலின் பின் பாகத்தை இழுத்துக் கொள்ளும். அது நகரும் வழியும், விதியும் இப்படித்தான். அதுபோல, கதையை ஆரம்பித்து முதல் ஒன்று, அல்லது இரண்டு பக்கங்கள் முன்னேறிய பின்னர், அதை அடித்துத் திருத்தி திரும்ப எழுதி, அன்றைய பொழுதுக்குப் படுத்த பின், மறுநாள் காலை திரும்பவும் திருத்தி, பூராத் திரும்பவும் அந்த இரண்டு பக்கங்களையும் எழுதி - அந்த இரண்டு பக்கங்கள் இந்த சிகிச்சையில் ஒரு பக்கமாய்ச் சுண்டி விடும் - கதையின் அடுத்த இரண்டு பக்கங்கள் எழுதியாகும். உடனே கதையை ஆரம்பித்திலிருந்து, அதாவது இந்த மூன்று பக்கங்களைத் திருத்தித் திரும்ப எழுதுவேன். மறுநாள் காலை இதே processing. இப்படியே எழுதி எழுதி, ஏதோ ஒரு கட்டத்தில் நடை தன் ச்ருதியில் விழுந்து விடும். அது எனக்கே அடையாளம் தெரியும். பிறகு இந்த
மண்உணிப் புழுவின் பிரயாசை அவ்வளவாகத் தேவையிருக்காது. இப்படி முதல் draft முடிந்தபின் Revision, re-writting முதலிலிருந்து. இதற்குமேல் மெருகு சாத்யமில்லை என்று கண்டபின் - அப்பாடா! கரடி ஆலிங்கனத்தி லிருந்து விடுபடுவேன்.


கதைக்கரு ஊன்றி, சிந்தனையில் ஊறி வேளிப்படத் தயாரான பின்னர் மேற் சொன்ன விதத்தில் எழுத்தில் வடித்து முடிக்க, சிறுகதைகளுக்கு எனக்கு மூன்று மாதங்களேனும் ஆகும். நான் வேகமாக எழுதவல்லேன். ஆனால் ஓயாமல் எழுதிக் கொண்டிருப்பவன். ஆமை நடை. எறும்பு ஊரக் கல் குழியும். தவிர, எழுதுவதையே திரும்பத் திரும்ப எழுதுவதில் மெருகு எழுவது மட்டுன்று. எழுத்துக்கே சக்தி கூடுகிற ஜபமாலை உருட்டுவது போல், உருவேற்றுவது போல, உருவேறத் 'திரு'வேறும். திரு இந்த சந்தர்ப்பத்தில் உருவேற்றலின் சக்தி.

திரும்பத் திரும்ப எழுதுகிறேன். சொல்லுக்குக் காத்திருக்கிறேன். வார்த்தைகளளை உட்செவியில் ஒட்டுக் கேட்டு, ஓசை நயம் தட்டிப் பார்ப்பேன். வார்த்தைகளைக் கோர்ப்பது, வாக்கியங்களை ஒன்றுக்கொன்று அடுத்தடுத்து, பொருள் நயம் ஓசை நயம் குன்றாமல் அமைப்பது, பூஜைக்கு மலர் தொடுப்பற்குச் சமானம்.



( அடுத்து புதுமைப்பித்தன் )

Sunday, March 07, 2010

அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப் பிறவி

மகாகவி பாரதியின் வரலாற்றை முதன்முதலில் எழுதிய பாரதியின் அணுக்க சீடரான வ.ரா என்கிற வ.ராமசாமி ஒரு விசித்திர மனிதர். அவர் பிறப்பில் பிராமணராக இருந்தும் பிராமணர்க்கான ஆசார அனுஷ்டானங்களைக் கடைப் பிடிக்காதவர். பூணூலைக் கழற்றி எறிந்தவர். பிராமணர்களின் - பால்ய விவாகம், விதவைக்கொடுமை, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றைக் கடுமையாய்ச் சாடி, கட்டுரைகளும் நாவல்களும் எழுதியவர்.அதோடு சமூகத்தின் கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகள், அறியாமை ஆகியவற்றையும் சாடிய பகுத்தறிவாளர்.
திராவிடக் கழகத்தார் மட்டுமே பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பி வந்த அன்றைய நிலையில் சனாதனக் கும்பலி லிருந்து எழுந்த இந்த பகுத்தறிவாளரை வியந்து 'அக்கிரஹாரத்தில் ஒரு அதிசயப் பிறவி' என்று பாராட்டினார் அறிஞர் அண்ணாத்துரை. வ.ராவின் குருவான பாரதியும், தான் பிறந்த சமூகத்தின் பிற்போக்குத்தனங்களைத் தனது கவிதைகளில் சாடியவர்தான். அதே போல புதுமைப்பித்தனும், தான் பிறந்த சைவவேளாளர் இனத்தவரைத் தன் கதைகளில் மிகவும் கடுமையாய்க் கேலியும் கண்டனமும் செய்தவர். ஆனால் அவரைப் பாராட்ட, அண்ணாத் துரையின் பெருந்தன்மை பெற்றிராத இன்றைய நவீன(!)ச் சிந்தனையாளர் சிலருக்கு மனமில்லை. சாதிக் கண்ணோட்டத்துடனேயே எதையும் பார்க்கிற ஆன்மரோகிகளான அவர்கள் அவரை சைவவேளாளச் சார்பினர் என்று, சாதிச் சிமிழுக்குள் அடைக்கிற வக்கிர புத்தியைப் பார்க்கிறோம். ஆனால் உண்மையான இலக்கிய ரசிகர்கள் அவர்களது பிதற்றலைப் புறக்கணித்து வ.ராவைப் போல அவரும் ஒரு புரட்சிவாதி என்றே போற்றுகின்றனர்.

இன்றைய இளம் படைப்பாளிகளிடையேயும் வ.ரா போன்ற அதிசயப்பிறவிகளைப் பார்க்க முடிகிறது. இந்த ஆண்டின் 'தமிழ் வளர்ச்சிக் கழக'ப் பரிசினைப் பெற்றுள்ள 'நெருப்புக்கு ஏது உறக்கம்' என்கிற நாவலை எழுதியுள்ள 'எஸ்ஸார்ஸி' என்கிற திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்களை அக்கிரஹாரத்தின் இன்னொரு அதிசயப் பிறவி என்று சொன்னால் அது மிகையாகிவிடாது. அவரது இந்த நாவல் அந்த அபிப்பிராயத்தை எனக்கு ஏற்படுத்துகிறது.


திரு.எஸ்ஸார்ஸி அடிப்படையில் ஒரு தொழிற்சங்கவாதி. இவரது முதலிரண்டு நாவல்களான - 'மண்ணுக்குள் உயிர்ப்பு', 'கனவு மெய்ப்படும்', என்பவை முறையே - வடலூர் பீங்கான் தொழிற்சாலைத் தொழிலாளர் பிரச்சினையைப் பேசுவதாகவும், அவரது சொந்த ஊரான தருமநல்லூரின் சில பிற்போக்குத் தனங்களைச் சாடுவதாகவும் அமைந்தவை. 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய' வள்ளலாரைப்போல, இவரும் தன் ஊரிலும், தன் பணி இடங்களிலும் ஒடுக்கப்பட்ட ஆதரவற்றோரின் துயர் கண்டு மனம் வாடி அவற்றைத் தன் படைப்புகளில் பதிவு செய்பவர். இவரும் வ.ரா போலவே சனாதனக் கருத்துடைய அக்கிரஹாரத்தில் பிறந்தவர் தான். அவரது குடும்பத்தார் இன்னமும் ஆசார அனுஷ்டானங்களை விடாது பின்பற்றுகிறவர் கள்தான். அந்தப் பின்னணியில் வளர்க்கப்பட்டவர்தான். ஆனால் கல்லூரிப் படிப்பினாலும், பணியிட அனுபவங்களாலும் மார்க்சீயத்தில் ஈடுபாடு கொண்டதால் சமூக நீதிக்காகப் போராடும் மனஉரம் பெற்றவர். சாதி மத சழக்குகளை முற்றாக வெறுப்பவர். அதனால், இவர் தன் ஊராரும், தன் இனத்தாரும் முகம் சுளிக்கிற கற்பனையை இந்நாவலில் துணிந்து பதிவு செய்துள்ளார்.

ஆர்.கே.நாராயணினின் 'மால்குடி'போல, இவர் தனது ஊரான தருமநல்லூரை - 'தருமங்குடி' என்ற பெயரில் தனது கதைகளிலும், நாவல்களிலும் களமாகக் கொண்டு எழுதுகிறார். அந்த தருமங்குடியில் பிறந்த அக்கிரஹாரத்து தருமு என்கிற பெண்ணும், ஊர்ச் சேரியைச் சேர்ந்த பழமலய் என்கிற பையனும் அண்ணாமலைப் பல்கலையில் படித்து, அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்குச் சென்று, அங்கே காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே தங்கி விடுகிறார்கள். ஊர்ப்பக்கம் திரும்பவே இல்லை. தருமுவின் பெற்றோர் - உள்ளூர் கோவில் அர்ச்சகரும், அவரது மனைவியும் - மகளைத் தலைமுழுகி விடுகிறார்கள். பழமலையின் தகப்பனார் - கோபால் என்கிற சுதந்திரப் போராட்டத் தியாகி மட்டும் ஊரில் தங்கி இருக்கிறார். பிறந்த ஊரையும் தன் மண்ணின் கலாச்சாரத்தையும் மறவாமல், பழமலய் தன் மகனுக்கு தன் பிராந்தியத்துப் பழக்கத்தின்படி - கொளஞ்சி என்று பெயர் வைத்து, தமிழும் தமிழ்க்கலாச்சாரமும், தமிழ் இலக்கியங்களும் கற்பித்து வளர்த்திருக்கிறார். ஒரு நாள் கொளஞ்சி தாத்தாவையும், தன் பெற்றோரது ஊரையும் பார்க்கக் கிளம்பி வந்தவன், தன் ஊர் மக்களின் அவல வாழ்க்கையையும், தலித்துகள் நந்தன் காலத்திலிருந்து வஞ்சிக்கப் பட்டிருப்பதையும் அந்த இடங்களுக்கெல்லாம் போய்ப் பார்த்து அறிந்து, அமெரிக்கா திரும்பாமல் இங்கேயே தங்கி தன் ஊர் மக்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முனைகிறான். இதுதான் கதை.

பிராமணப் பெண்ணுக்கும் தலித் பையனுக்கும் திருமணம் செய்து வைத்தது ஒன்றும் புதிய புரட்சி அல்லதான். ஆனால் சொந்த கிராமத்தில், இன்னும் அறியாமையும் சாதிக் கட்டுப்பாடும், சனாதனப் பழம் பஞ்சாங்கங்களும் இருக்கிற நிலையில், தன் குடும்பமே ஏற்காத தன் இனத்தவரின் எதிர்ப்புக்குரிய புரட்சிகரமான கற்பனையைத் துணிந்து - அதனால் வரும் பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் - எழுத்தில் வடித்திருப்பது அவரைப் பொறுத்தவரை, அவரது ஊராரைப் பொறுத்தவரை பெரிய புரட்சிதான். இந்நாவலில் வரும், சதா வண்டையாய்ப் பேசும் ஒரு பாத்திரமான சபாபதிப் பிள்ளை (தற்போதும் ஜீவியவந்தராய் தருமநல்லூரில் வாழ்பவர்) இந்நாவலைப் படிக்க நேர்ந்தால், அவர் கோயில் அர்ச்சகரை அடிக்கடி 'இழித்துப்பேசுகிற 'பாப்பாரக் குசும்பு' என்ற வசையைச் சொல்லி திட்டக்கூடும். அது மட்டுமல்ல - அமெரிக்கவின் நவீன சுக வாழ்வை கொளஞ்சி துறப்பதும், தன்
பணிக்குத் துணையாய் சென்னையில் நல்ல பதவியில் உள்ள, அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெற்றிருந்த சந்துரு என்கிற பிராமண இளைஞனையும் தன் வளமான எதிர்காலத்தைத் துறந்து தன்னுடன் தங்க வைத்ததும், உள்ளூர்ப் பெரிய மனிதர் சேதுராமன் பிள்ளை என்பவர் தன் 60 ஏக்கர் நிலத்தையும், தனது நிர்வாகத்தில் இருந்த மேனிலைப் பள்ளியையும் கொளஞ்சி பேரில் உயில் எழுதி விட்டு இறந்ததும், அந்த நிலங்களைக் கொளஞ்சி ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பதும், வேலை வாய்ப்புக்காக ஊருக்கு சர்க்கரை ஆலை ஒன்றை நிறுவுவதும் ஆனவை - அந்த ஊருக்கு கற்பனையில் கூடக் கண்டிராத புரட்சிகள் ஆகும். இப்படியெல்லாம் நடக்குமா நடப்பது சாத்தியமா என்ற யதார்த்தத்தை ஒட்டிய கேள்வி எழலாம். ஆனால் இப்படி நடக்குமா என்பதல்ல ஆசிரியரின் நோக்கம்! இப்படி நடக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை! இலட்சியம் என்றும் சொல்லலாம்.

எங்கும் எப்பொழுதும் நல்ல முயற்சிகளுக்குத் தடங்கல் ஏற்படுவது போலவே கொளஞ்சியின் கனவும் நிறை வேறுவதாயில்லை. உள்ளூரின் ஆதிக்க சக்தியினரின் சதியால், ஊருக்கு அருகில் வேகமாக வளர்ந்து வரும் நெய்வேலி சுரங்கப் பணிக்கு அவனது இட்சிய கிராமத்தையும் கையகப்படுத்தி விடுவதால் அவனுள் எரியும் நெருப்பு அணைக்கப்படுகிறது. ஆனால் நெருப்பை அணைக்கலாம்; அழிக்கமுடியுமா? நெருப்புக்கு ஏது உறக்கம்? அது இங்கில்லை என்றாலும் வேறு எங்காவது புதிய உத்வேகத்துடன் மீண்டும் உயிர் பெற்று எரியும் என்னும் சிந்தனையோடு கதை முடிகிறது.

'எஸ்ஸார்சி' யின் பாத்திரப் படைப்பும் தத்ரூபமானவை. ஒவ்வொரு ஊரிலும் மேலே சொன்ன - ஊருக்கு எந்த நல்லதும் நடந்து விடுவதைச் சகிக்காத சபாபதிப் பிள்ளைகள் இருப்பது கண்கூடு. இந்த நாவலில் அவர்தான் 'வில்லன்'. கொளஞ்சியின் கனவைப் பாழடிப்பவர் அவர்தான். அவரது பாத்திரப் படைப்பு அசலானது - நம்மில் பலருக்கும் பரிச்சயமானது என்பதால் வாசிப்பு நெருக்கமாகிறது. அதே போல அஞ்சாம்புலி, அவனது மனைவி சாரதம் இருவரும் நாம் கிராமங்களில் அபூர்வமாய்க் காண்கிற எளிய, எப்போதும் நல்லதையே எண்ணுகிற வெள்ளந்தி பாத்திரங்கள். அவர்கள் இருவரது உரையாடல்கள் எப்போதும் எடக்கு மடக்காகவே இருப்பதும் அதனால் அவர்களுக்கிடையேயான பந்தத்தில் நெருக்கம் ஏற்படுவதும் ரசிக்கத்தக்கவை. இன்னும் தியாகி கோபால், பேராசிரியர் சீனுவாசன், நாட்டாண்மை முத்தையா சேதுவராயர் என்று நிறைய நினைவில் நிலைத்து விடுகிற பாத்திரங்கள் மிகையில்லாமல் இயல்பாய்ப் படைக்கப்பட்டு இருக்கின்றனர். நாவல் நெடுக கடலூர் மாவட்டத்தின் வட்டார வழக்கு மொழி சரளமாய்ப் பிரயோகமாகி வாசிப்புக்கு இதம் சேர்க்கிறது. இடையிடயே விரவியுள்ள சமஸ்கிருத மற்று தமிழ் இலக்கிய எடுத்துக்காட்டுகளும், மார்க்சிய சிந்தனைச் சிதறல்களும் ஆசிரியரின் பரந்துபட்ட அனுபவ மற்றும் அறிவுஜீவித்தனத்தைக் காட்டுவதாக உள்ளன.

குறை என்று சொல்வதானால் எல்லாப் புத்தகங்களுக்கும் சொல்கிற அச்சுப்பிழை அனர்த்தம், தவிர்த்திருக்கக் கூடிய - வாசிப்பில் உறுத்துகிற சில சொல்லாக்கங்களைச் சொல்லலாம். கைக்கும் கனமான இந்நாவலை கவனமாய் எடிட் செய்து இன்னும் இறுக்கமாகச் செய்திருக்கலாம். ஆனால் நாவலின் விறுவிறுப்பான கதையோட்டம் காரணமாக அவை வாசகர் கவனத்தைச் சிதற விடவில்லை என்பது சாதகமான அம்சம்.மொத்தத்தில் கவிஞர் பழமலய் சொல்கிறபடி இது ஒரு சமுதாய சீர்திருத்த நாவலல்ல - இது ஒரு இலட்சிய நாவல்! 0


நூல்: நெருப்புக்கு ஏது உறக்கம்.
ஆசிரியர்: எஸ்ஸார்சி.
வெளியீடு: அலமேலு பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.
விலை: ரூ.160/-

Sunday, January 31, 2010

கள்ளர் சரித்திரம் - ஒரு அறிமுகம்

'கள்ளர்' என்ற சொல் பொதுவாக 'களவுத்தொழில் புரிபவர்' என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள 'கள்ளர் சரித்திரம்' என்ற நூலைப்படித்த பின்னர்தான் தெரிந்தது. வேளாளர்களில் தம்மை மேம்பட்டவராகக் கருதும் 'கார்காத்த வேளாளர்கள்' காலப்போக்கில் இன்று எல்லோருமே தம்மையும் வேளாளர்கள் என்று சொல்லிக் கொள்வதாக, "கள்ளர் மறவர், கனத்த அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனார்'' என்பதைச் சொல்லிக் குறைப்படுவதுண்டு. ஆனால் கள்ளர் குலத்தவர், நாம் நினைப்பது போல தாழ்ந்தவர்கள் அல்லர், அவர்கள் அரசாண்ட இனத்தவர், அவர்களும் அவர்கள் இனத்தைச் சேர்ந்த மறவர், தேவர், அரையர் ஆகியோரும் தமிழகத்தில் தொன்றுதொட்டு கோலோச்சியவர்கள் என்று இந்நூல் மூலம் தெரியவருகிறது. இந்த இனத்தவர் நாளடைவில் நலிவடைந்து, பெருமை குன்றி பின்னாட்களில் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் நமக்கு அவர்களது பெருமை தெரியவில்லை. இன்று அவ்வினத்தவர் மீண்டெழுந்து சமூகத்தில் பல உயரிய பதவிகளிலும் அரசியலிலும் முன்னணிக்கு வந்துவிட்டாலும் இன்னும் அவர்களில் பலர் ஏழ்மையில் இருப்பதும், குற்றப்பரம்பரையினராகவே எண்ணப்படுவதும் குறித்து வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த இனத்தைச் சேர்ந்த தொண்டைமான் பரம்பரையினர், நாம் அறிய புதுக்கோட்டை மன்னர்ர்களாக இருந்ததையும், இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பரம்பரையினர் மறவர் எனவும், கள்ளர் இனத்தவரான சோழ மன்னர்களில் பலர் ஆண்ட நாடுகள் 'கள்ளர் நாடு' என்றே வழங்கப் பட்டிருப்பதையும், முத்தரையர் இனத்தவர் பல்லவ மன்னர்களாக இருந்ததையும், அரையர் என்பார் சோழ பாண்டிய நாடுகளில் தன்னாட்சி புரிந்திருப்பதையும், நாயன்மார்கள், ஆழ்வார்களிலும் இவ்வகுப்பினர் புகழ் பெற்றிருந்ததையும் - சங்க இலக்கியங்களையும், கல்வெட்டுகளையும், அரசாங்க கெசட்டீர்களையும் சான்று காட்டி நாட்டார் அவர்கள் 'கள்ளர்'களின் பெருமையை நிறுவுகிறார்.

இந்நூல் 1932ல் முதன் முதல் வெளியானது. இதன் முன்னுரையில் ஆசிரியர், கள்ளர் இனத்தவர்களான ஜமீன்தார்களும், பாளையக்காரர்களும் சமீபகாலம் வரை செல்வமும் செல்வாக்கும் உடையவர்களாக வாழ்ந்திருப்பதை 'இவ்வகுப்பினரைக் குறித்து எழுதினோர் யாரும் சிறிதும் ஓர்ந்தவரெனக் காணப்படவில்லை' என்னும் காரணத்தாலேயே இந்நூல் எழுதப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.மேலும், இன்று கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும் கீழ்நிலை அடைந்தவர்களாய்க்கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள் என்ற உண்மையால் அத்தகையோர் சிறிதேனும் நன்மையடையத் துணை புரிதலே இதனை எழுதியதன் முதல் நோக்கம் என்றும் குறிப்பிடுகிறார்.

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமும் காணப்படும் கள்ளர் எனப்படும் பெருங்குழுவினரின் முன்னோர்கள் - பழைய நாளில் எவ்விடத்தில் எந்நிலையில் இருந்தனர், இடைக்காலத்தில் அவரது நிலைமை யாது, இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பன போன்றவை இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.

முன்னதாக மிகப் பழைய நாளில் இந்தியா முழுதும் பரவி இருந்த நாகர் என்ற ஒரு வகையினர் பற்றிய வரலாறு கூறப்படுகிறது. முதல் அத்தியாயத்தில், அவர்கள் வாழ்ந்த நாகநாடு பற்றியும், அங்கு வாழ்ந்த நாகர்கள், அதன் பின் நிகழ்ந்த - தமிழ்நாட்டுக்கு திராவிடர், ஆரியர் வருகை, நால்வகை வருணப் பாகுபாடு எழுந்த சூழ்நிலை பற்றியெல்லாம் விரிவாக ஆதாரங்களுடன் ஆசிரியர் சொல்லிச் செல்கிறார்.

இரண்டாம் அத்தியாயத்தில், நாக பல்லவ சோழர் மற்றும் கள்ளர் பற்றிய செய்திகளை, சங்ககாலம் முதற்கொண்டு அகநானூறு, புறநானூறு போன்ற பழம்பெரும் நூல்களில் பதிவாகியுள்ளவற்றை எடுத்துக்காட்டி கள்ளர் இனத்தவரின் பல்வேறு பிரிவினரான பல்லவர், சோழர், பாண்டியர் நாடாண்ட பகுதிகள், மற்றும் அவர்களின் இனத்தவரான மறவர், தேவர், அரையர் பற்றிய விவரங்களுடன் ஆசிரியர் கவனப்படுத்துகிறார்.

இவர்களின் பொதுப் பெயரான 'அரையர்'களின் முற்கால நிலமை மூன்றாம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. கள்ளர் அல்லது அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த வகுப்பினர் என்று வலியுறுத்திய பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு பெயர்களைப் பட்டியலிடுகிறார் ஆசிரியர். இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலிருந்து அறியப்படும் அப்பெயர்களாவன: கச்சிராயன், காடவராயன், காடுவெட்டி, காளிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான், நந்திராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன். இவ்வாறே வேறு சில பெயர்களும் கல்வெட்டுகளில் காணப்படுவதையும் குறிப்பிடுகிறார். நூலின் இறுதியில் 348 பட்டப் பெயர்கள் கொண்ட பட்டியல் பின்னிணைப்பாக்கத் தரப்பட்டுள்ளது.

12வது நூற்றாண்டி எழுந்த தமிழ் நூல்களில் இருந்தும் இன்னோரின் உயர்ந்த நிலை வெளிப் படுவதை, முதற் குலோத்துங்கனுடைய முதலமைச்சராக இருந்த கருணாகரத் தொண்டைமானை உதாரணமாகக் காட்டி நிறுவுகிறார். இனி, கள்ளர் சிற்றரசர்களாய் இருந்த காலத்தில் பல இடங்களில் அரண்கள் கட்டியதையும் பட்டியலிடுகிறார்.

நான்காம் அத்தியாயம் இக்குலத்தாரில், அரசரும் குறுநில மன்னருமாய் உள்ளாரின் வரலாறு காட்டப்படுகிறது. இவற்றில் 1686 முதல் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான்களின் பரம்பரையினரின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை யாராலும் வெளிவராத பல அரிய செய்திகள், 'நாடு, நாட்டுக்கூட்டம்,நாடுகாவல்' என்னும் ஐந்தாம் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழரது நாடு தமிழ்நாடு என வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர் மிகுந்துள்ள நாடு கள்ளர்நாடு, எனவும் கள்ளகம் எனவும் வழங்கப் பட்டுள்ளது. சோழ நாடு, தொண்டை நாடு, திருமுனைப்பாடிநாடு, கொங்கு நாடுகள் ஆகியவை பல மண்டலங்களாகவும், கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டிருக்கின்றன. மதுரைக் கள்ளர்நாடுகள் என பத்து நாடுகள் சொல்லப்பட்டுள்ளன. கள்ளர் நாடுகளில் கிராம பஞ்சாயத்து வழக்கமாக இருந்ததை அவர்களது ஆட்சிமுறை பற்றிய தஞ்சை மாவட்ட கெசட்டை ஆதாரம் காட்டி ஆசிரியர் விளக்குகிறார். அடுத்து கள்ளர்
களின் நாடுகாவலின் சிறப்பை எடுத்துச் சொல்கிறார்.

ஆறாம் அத்தியாயமான கடைசிப்பகுதி, கள்ளர் குலத்தில் புகழ் பெற்றிருந்த பக்தர்கள், ஞானிகள், புலவர்கள், வள்ளல்கள் பற்றி பல அரிய தகவல்களைத் தருகிறது. பெரிய புராணத்தில் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் கூற்றுவர், நரசிங்கமுனையரையர், ஐயடிகள் காடவர்கோன், மெய்ப்பொருளார் ஆகிய ஐவரும் இக்குலத்துக் குறுநிலமன்னராவர். திருமால் அடியவரான திருமங்கை ஆழ்வாரும் இவ்வகுப்பினர் தான். புலவர்கள் பலராலும் புகழ்ந்தேற்றப்பட்ட வள்ளல் அரித்துவாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத ராசாளியாரும் தமிழ்ப்புலமை வாய்ந்த பெண்மணிகள் சிலரும் இவ்வகுப்பினரின் பெருமைக்குக் காரணமாவர்.

இவ்வினத்து ஜமீன்தார்களும் பெருந்தனக்காரர்களும் பண்டுதொட்டுச் செய்த அறச் செயல்கள் பலவாகும்.கோயில்களுக்குத் திருப்பணி செய்தும், அன்ன சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்தும், குளங்கள் வெட்டியும், தரும வைத்தியசாலை அமைத்தும் போற்றுதலுக்கு உரியவராக இருந்துள்ளனர். போர் புரிதலிலும் இவ்வகுபினர் விருப்பமுடையோராய் இருந்து வீரச்செயல்கள் பல புரிந்துள்ளனர்.

இவ்வளவு சிறப்பும் புகழும் பெற்று வாழ்ந்தவர்களின் இன்றைய நிலை குறித்து, இவ்வினத்தைச் சேர்ந்தவரான நூலாசிரியர் நாட்டார் அவர்கள் கவலையும் வருத்தமும் தெரிவிக்கிறார். கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாகவும், காவல் மற்றும் நீதித் துறைகளில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களாகவும் பலர் இருந்தபோதும், இவ்வினத்தவரில் நூற்றுக்கு எழுபத்தைந்து பேர், பொருளிழந்து வாழ்க்கையை நடத்த முடியாதபடி தத்தளிப்ப வராய் இருப்பதையும். ஆடம்பர வாழ்க்கையாலும், மதுவுக்கும் தீயபழக்ககங்களுக்கும் அடிமையாகி சீரழிந்திருப் பதையும் வேதனையோடு குறிப்பிடுகிறார். இவர்கள் மீண்டும் பழைய உன்னத நிலைபெற சில யோசனைகளை தன் அவாவாகவும் சொல்கிறார்.

1932ன் வெளியான இந்நூலின் மறுபிரசுரத்தின் பதிப்பாளரான திரு.கோ.ராஜாராம் அவர்கள் தனது பதிப்புரையில் 'ஒரு சமூகத்தின் உபக்குழுக் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக சாதியைக் காணும் முயற்சியை இந்த மறுவெளியீடு தொடங்கி வைக்கும் என்று நம்புகிறோம். இந்தியச் சமூகத்தில் மட்டுமல்லாமல், ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற சாதி அமைப்பைப் பற்றியும், கீழைநாடுகளின் சமூக அமைப்பு பற்றியும் மேலும் ஆய்வுகள் வளர இந்நூல் ஒரு புதிய தொடக்கமாய் அமையும் என நம்புகிறோம்' என்கிறார். நூலை வாசித்து முடித்த
பின்னர் நமக்கும் அந்த நம்பிக்கை ஏற்படவே செய்யும். 0


நூல்: கள்ளர் சரித்திரம்
ஆசிரியர்: நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

Thursday, January 07, 2010

வண்ணநிலவனின் நாவல் - 'ரெயினீஸ் ஐயர் தெரு'

வண்ணநிலவனின் நாவல்களில் அதிகமும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டதாய் இருக்கும். அவர் கிறிஸ்துவர் இல்லை என்றாலும் அவர்களோடு நெருக்கமான பழக்கம் இருந்ததாலும், கிறிஸ்துவ சூழ்நிலையில் வசிக்க நேர்ந்ததாலும் அவர்களது வாழ்வை ஈடுபாட்டோடு அவர் எழுதநேர்ந்திருக்கலாம். 'கடல்புரத்தில்' நாவலில் கிறிஸ்தவ மீனவர்களின் வாழ்க்கை அசலாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த 'ரெயினீஸ் ஐயர் தெரு' நாவலும் கிறிஸ்தவர்கள் வாழும் தெருவில் உள்ள மக்களைப் பற்றியதாகும். 'ரெயினீஸ் ஐயர்' என்பவரது கல்லறையை ஒட்டிய, அவர் பெயரால் வழங்கும் ஒரு சின்னத் தெருவில் உள்ள - இரு புறமும்
எதிரெதிரே அமைந்துள்ள ஆறே வீடுக¨ளைக் களமாகக் கொண்ட நாவல் இது. இவ்வீடுகளில் வாழும் எளிய மனிதர்களைப் பாத்திரங்களாக்கி பிரமிப்பைத் தரும் படைப்பை உருவாகியுள்ளார் வண்ணநிலவன்.

ரெயினீஸ் ஐயர் தெரு பலவற்றிலும் புரிந்து கொள்ள வியலாத வினோதத் தோற்றம் கொண்டது. தெரு மிகவும் சின்னது. இரண்டே எட்டில் எதிர் வரிசை வீட்டின் வாசல்படிக் கல்லை மிதித்துவிடலாம். அதில் வாழும் மக்கள் அனைவரும் அன்புக்காக ஏங்குபவர்கள். எல்லோரும் எல்லோரையும் நேசிப்பவர்கள். அவரவர்கள்போக்கில் ஒருவரை ஒருவர் வெறுக்கவும் செய்பவர்கள். அதே சமயம் பிரியத்தையும் காட்டுபவர்கள். இவ்வாறான - சாதாரண மக்களின் யதார்த்தமான மனநிலையை வண்ணநிலவன் அற்புதமாய் இந்நாவலில் படம் பிடித்துக் காட்டுகிறார்.

டாரதி என்னும் சிறுமியின் சிந்தனை ஓட்டமாக நாவல் தொடங்குகிறது. முதல் வீடு அவளுடையது. முன் வாசலில் தெரு நடையில் அமர்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள். எதிர் வீட்டு இருதயத்து டீச்சர் வீட்டுக் கோழிக் குஞ்சுகள் தெரு முனையில் குனிந்து இரை பொறுக்கிக் கொண்டிருப் பதைப் பார்க்கிறாள். ஏதோ காரணத்தால் தாய்க் கோழியைப் பிரிந்திருக்கிற அக்குஞ்சுகளின் அநாதரவான நிலைமை அவளுக்கு வருத்தத்தை உண்டாக்குகிறது. அந்த வருத்தம் தாயில்லாமல் பெரியம்மா வீட்டில் தங்கிஇருக்கிற தன்னுடைய நிலைமையை எண்ண வைக்கிறது. தொடர்ந்து சிறுமியின் நினைவோட்டம், வெகு இயல்பான - நாமே அருகிருந்து பார்க்கிற மாதிரி எளிமையாய், நினைவோடை உக்தியில் சொல்லப்படுகிறது.

இரண்டாவது வீடு இருதயத்து டீச்சரின் நாழி ஒடு போட்ட வீடு. டீச்சரின் புருஷன் சேசய்யா பனிரெண்டு வருஷமாய் தொண்டைப் புகைச்சலில் கிடந்து உழன்று கொண்டிருப்பவன். ஒவ்வொரு வருஷமும் மழைக் காலத்தில் 'இந்தா போயிருவான், அந்தா போயிருவான்' என்று மூச்சு இழுத்துக் கொண்டிருக்கும். பிறகு பிழைத்துக் கொள்வான். அவன் இரும ஆரம்பித்தால் இருதயம் கைவேலையைப் போட்டுவிட்டு ஓடி வந்து அவனை மார்பில் சாய்த்துக் கொள்ளுவாள். கல்யாணமான புதிதில் தெருவாசிகள் கண் பட்டுவிடும்படி எவ்வளவோ சந்தோஷமாய் இருந்த அவளுடைய வாழ்வு இப்போது சீரழிந்து போய்விட்டிருக்கிறது.

மூன்றாவது வீடு ஹென்றி மருதநாயகம் பிள்ளை வீடு. அவரது மகள் - டாரதி போன்ற சிறுமி - அற்புத மேரியிடம் எதிர் வீட்டு இருதயம் டீச்சர் அவள் வீட்டுப் படியேறி வந்து பள்ளிக்கு விடுப்புக் கடிததத்தைக் கொடுத்து விட்டுப் போனதில் அவளுக்கு மிகவும் பெருமை. அவள் வீட்டு குளிர்ச்சி மிகுந்த நடைக் கல்லில் உட்கார்ந்து தெருவில் நிறைந்து கிடக்கிற, நேரத்துக்கு ஒரு வாசனை தரும் வாகைப் பூக்களைப் பார்த்தபடி டாரதி போல சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறாள். அவள் வீட்டில் யாருமே சரியில்லை. அவள் அப்பா மறைமுகமாகப் பல காரியங்களைச் செய்வதாக எல்லோரும் சொல்கிறார்கள். அவள் அண்ணன் சாம்ஸன் ஒருதடவை மோசமான செய்கை ஒன்றைச் செய்வதை அவள் நேரில் பார்த்து விட்டாள். அவன் எஸ்தர் சித்தியுடன் மாடியறையில் ஒரே படுக்கை விரிப்பில் விசித்திரமாய்க் கிடந்ததைப் பார்த்து வியர்த்துப் போய்விட்டாள். அதனால்தான் அவனையும் எல்லோரும் மோசமென்று எல்லோரும் சொல்கிறார்கள் என்று தோன்றியது.

நான்காவது வீடு ஆசீர்வாதம் பிள்ளையினுடையது. தெருவிலெயே வெகுவாகப் பாழ்பட்ட வீடாக அது இருந்தது. ஆசீர்வாதம் பிள்ளையும் அவருடைய மனைவி ரெபக்காள் மட்டுமே அதில் இருந்தனர். அந்தத் தெருவிலேயே முதன்முதலாக் மேஜை அடுப்புப் போட்டது அந்த வீட்டில்தான். மாதத்தில் ஏழு தேதியிலிருந்து பத்து தேதிக்குள் அவருக்கு மணியார்டர் கொண்டுவரும் தபால்காரரைத் தவிர வேறு யாரும் அந்த வீட்டுக்கு வருவதில்லை. ஒவ்வொரு மழையின் போதும் வீட்டில் ஒரு அறை இடிந்து விழுந்து கொண்டிருந்தது. இப்போது மீத மிருப்பதுதான் அடுப்படியாகப் பயன் பட்டு வந்தது. கூரையெல்லாம் ஓடுகள் விழுந்து சரிந்து தொங்கின. கஷ்டமும் துயரமும் நிரம்பிய அந்தத் தம்பதியரின் கடைசி நாட்களில் ஆஸ்பஸ்திரிக்குக் கூட்டிப் போக அவர்களுக்கு யாரும் உதவுவதில்லை. அவர்களுக்கு உதவக்கூடாது என்பதில்லை; அவரவர் வீட்டிலும் ஏதாவது ஒரு கஷ்டம். ஒரே ஒருவன் - குடிகாரன் என்று யாரும் கண்டுகொள்ளாத தியோடர் மட்டும் அவ்வப்போது வந்து அவர்களுக்கு உதவுவான். அவர்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்ல்லும்போது மட்டும் அவன் குடிக்க மாட்டான். அவர்களுக்கு உதவுவதில் அவனுக்கு ஒரு சந்தோஷம் இருந்தது. அடுத்த கன மழையில் அவர்களது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தபோதும் தியோடர் தான் அவர்களுக்கு உதவி செய்தான்.

தெரு பிரிந்து வருகிற இடத்தில் இரு புறங்களிலும் திருவனந்தபுரம் ரோட்டைப் பார்க்க இரு பெரிய வீடுகள் இருந்தன. ஒரு புறத்து வீட்டில் காளிமார்க் கம்பனி இருந்தது. மறுபுறத்து வீடு அடிக்கடி ஆட்கள் வசிக்காமல் காலியாகக் கிடக்கும். இந்த வீடு ஜாஸ்மின் பிள்ளையினுடைய குடும்பத்தாருக்குச் சொந்தமானது.ஜாஸ்மின் பிள்ளை இப்போது இல்லை. அவர் இறந்து போய் கொஞ்சகாலம் ஆகி இருந்தது. அவருக்கு வெள்ளைக்காரர்கள் மீது அளவற்ற மதிப்பு இருந்தது. அவர் இறந்தபோது தியோடர் தான் வந்திருந்து எல்லா காரியங்களையும் செய்தான்.

- இப்படி ஆறு வீடுகளுக்கும் நம்மைக் கையைப் பிடித்துக் கொண்டு போவதுபோல, வீடுவீடாய்ச் சித்தரித்தும், அங்கு வாழும் மனிதர்களது வாழ்க்கை பற்றி விவரித்தும் நம் கண்முன்னே அவர்கள் தெரிவது போல் வண்ணநிலவன் படம் பிடித்திருப்பதைப் படிக்க நமக்கு ஆயாசமே ஏற்படவில்லை. இச்சித்தரிப்புகளில் கிறிஸ்துவ மக்களின் கலாச்சாரம் பண்பாடு, எளிமை, பழக்கவழக்கம் எல்லாம் சொல்லப் படுகிறது. அதோடு பருவகால மாற்றத்தின்போது ரெயினீஸ் ஐயர் தெருவாசிகளின் மன நிலைமையும் ரசமாக வருணிக்கப் படுகிறது.

'வேன காலம் புழுக்கமாக இருந்தாலும், ரெயினீஸ் ஐயர் தெருவிலும், தெருக்காரர்களுக்கும் வேன காலமே அற்புதமான காலம். வேன காலத்தை ருசித்துப் பார்க்கவே வருஷத்தின் பன்னிரெண்டு மாதங்களில் மற்ற பத்து மாதங்களும் வாழ்ந்தார்கள். வேன காலத்துக்காக ஏக்கத்துடன் காத்திருந்து வருஷா வருஷம் வாழ்கிறார்கள்.' இதே போல்தான் மழைக்காலம் பற்றியும் சொல்லப்படுகிறது. 'ரெயினீஸ் ஐயர் தெரு மனுஷர்கள்எல்லாருமே மழையின் அடிமைகள். மழை பெரும் துக்கத்தை அளிப்பது. ஆனாலும் மழையை விரும்பாமல் போய்விடவில்லை. மழைக் காலத்தில் பயத்தோடும் ஆனந்தத்தோடும் வீடுகளுக்குள்ளிருந்து வேடிக்கை பார்த்தார்கள்.

வண்ணநிலவன் வருணனைகள் கலாரசனை மிக்கவை. நான்காவது வீடான ஆசீர்வாதம் பிள்ளையின் வீட்டை மிகவும் ரசித்து வருணிப்பார். அங்கிருந்த அறைகளின் வாசற்படிகளில் அமைக்கப்பட்டிருந்த கல்படிகளின் வருணனை அத்தகையது. 'நல்ல இரண்டு ஜாண் அகலமுடையதாக அக் கல்படிகள் ஒவ்வொன்றும் அமைந்திருந்தன. அப்படிகளில் கல்தச்சன் சில தாமரைப் பூக்களைச் செதுக்கி இருந்தான். அப்பூக்களைச் செதுக்கியிருந்த கல்தச்சன், ரசனை மிகுந்தவன். அக் கல்படிகளில் பிருஷ்டம் அழுந்த யார் உட்கார்ந்தாலும் அதை மறக்க முடியாது. கல் பூவின் அழுந்தல், உட்கார்ந்த இடத்தில் குளிர்ச்சியோடு படிந்து போகும். எத்தனை காலத்துக்கும் பின்னே அந்தக் கல்படி ஞாபகம் வந்தாலும், அக்குளிர்ச்சி நிரம்பிய, கல் தாமரைப் பூக்களிலிருந்து அப்போதுதான் உட்கார்ந்து எழுந்தது போல இருக்கும். வெறும்கல்லில் இத்தனை பெரிய காரியம் பண்ணி வைத்திருந்தான் கல் தச்சன்'.

பாத்திரப் படைப்புகளும் அப்படியே கண்ணில் நிற்பவை. இருதயம் டீச்சரின் அத்தையம்மாளும் சேசய்யாவின் தாயாருமான இடிந்தகரையாளின் தோற்றமும் செயல்களும் பற்றி இப்படி எழுதுகிறார்: 'இடிந்தகரையாளுக்கு அவளது நிஜப் பெயர் என்னவென்று அவளுக்கே கூட மறந்து போயிருக்கும். அவளுக்கு இடிந்தகரையாள் என்றுதான் அங்கே பேர் வழங்கி வருகிறது. இந்திய சர்க்காரின் சென்சஸ் குறிப்புகள், வோட்டர் ஜாபிதாக்களில் கூட அந்தப் பெயர்தான் எப்படியோ இடம் பெற்று விட்டது. அதனால் என்ன? அவள் ஒரு இந்தியப் பெண் பிரஜை என்பது போதாதா என்ன? அவளது கருத்த தோல் இனியும் சுருங்க வழியே கிடையாது. அவளது மார்பெல்லாம் கருத்த கருப்பட்டிப் புகையிலைத் துண்டு தொங்குகிற மாதிரி சுருங்கித் தொங்க ஆரம்பித்துப் பலகாலமாகி விட்டது. இடிந்தகரையாளுக்கு சதாவும் காதில் கோழி இறகை வைத்துத் திரித்துக் குடைந்துகொண்டே இருக்க வேண்டும். பெரிய சேவலுடைய இறகு, சின்னக் குஞ்சுகளுடைய இறகு, நன்கு விளைந்த கோழிகளுடைய இறகு என்று எல்லா தினுசு இறகுகளையும் தினுசு தினுசாகப் பிரித்துக் கட்டி வைத்திருப்பாள். அந்த இறகுக் கட்டுகள் அவளுடைய படுக்கைத் தலைமாட்டிலேயே பத்திரமாக இருக்கும். நன்றாக விளைந்து போன ஏழு எட்டு வயது சேவல்களுடைய இறகுகளின் பேரில் அவளுக்குத் தனிப் பிரியம் உண்டு. வயசான சேவல் யார் வீட்டில் செத்தாலும் அந்த இறகுகளை அந்த வீட்டுக் குழந்தைகள் கட்டாகக் கட்டிக் கொண்டு வந்து இடிந்தகரையாளிடம் கொடுத்து விடுவார்கள். அந்த இறகுகளைப் பார்த்து அவள் சந்தோஷப்படுகிறது போல யாராலும் அவ்வளவு சந்தோஷப்பட முடியாது. உலகமே தன்னுடைய கைக்குள் கோழி இறகாக ஆகிவிட்ட களிப்பு அவளுடைய சுருக்கம் விழுந்து போன முகத்தில் தெரியும்'. இப்படித்தான் எல்லா பாத்திரங்களும், கொஞ்சம் கூட மிகையாகத் தெரியாமல் அசலாக நாமே நேரில் கண்டு அனுபவிக்கிற மாதிரி சித்தரிக்கப் பட்டுள்ளன.

நடை ஒரு கூடுதல் கொடை வண்ணநிலவனுக்கு. அசோகமித்திரனின் நடை போல முன்னுதாரணம் காட்ட முடியாத, அவருக்கேயான - இதமான வாசிப்பு சுகம் தரும் எளிய நடை. அலட்டல், சாமர்த்தியம் காட்டல், அநாவசியமான அலங்காரம், வாசிப்பைத் தடைசெய்யும் சிடுக்கு-எதுவும் இல்லாத, வெகு எளிமையாய் சாதாரண நாலு முழ வேட்டியும், அரைக்கைச் சட்டையும் உடுத்துக்கொண்டு நம் கண்முன்னே அமைதியாய் நடந்து போகும் ஒரு சாமானியனைப் பார்ப்பது போன்று, எரிச்சலோ ஆயாசமோ தராத நடையானதால், வாசிப்பு இதமாக இருக்கிறது. ஒரே வாசிப்பில், கீழே வைத்து விட இடம் தராத ஓட்டமும், விறுவிறுப்பும் கொண்ட எழுத்து.

கதை என்று பார்க்கப் போனால், கேட்பவருக்கு எடுத்துச் சொல்கிற மாதிரியான - எடுப்பு, தொடுப்பு, முடிவு என்று இல்லைதான். ஒரு தனிப்பட்ட கதாநாயனோ, கதாநாயகியோ அவர்கªது சாகசங்களோ கொண்டதில்லைதான். ஆனால், ஒரு வாழ்க்கைமுறையை உள்ளது உள்ளபடியே மிகையின்றி யதார்த்தமாகக் காட்சிப்படுத்தி இருப்பதுதான் இப்படைப்பின் சுவாரஸ்யத்துக்குக் காரணம். அளவில் சிறியதாக இருந்தாலும் இந்நாவல் வண்ணநிலவனின் படைப்புத் திறனுக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது எனலாம். 0


நூல்: ரெயினீஸ் ஐயர் தெரு.
ஆசிரியர்: வண்ணநிலவன்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை.
விலை: ரூ.70/-