1.நான் என் அனுபவங்களை என் எழுத்தில் ஆராய்கிறேன். அவற்றில் விழுந்து கிடக்கும் திரையை அகற்ற முடியுமா என்று பார்க்கிறேன்.ரியாலிட்டியைச் சந்திப்பதும் அதை மனப்பூர்வமக ஏற்றுக் கொள்வதும் நமக்கு மிகவும் சங்கடமான விஷயம். இந்த எதிர் கொள்ளலுக்கு என்னையும் மற்றவர்களையும் தயார்ப்படுத்த முயல்பவைதான் என் எழுதுக்கள்.
2.சுய அனுபவம் சார்ந்துதான் ஒரு எழுத்தாளன் எழுத முடியும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. சிறு வயதில் ஏற்பட்ட எண்ணம் இது.இன்று வரையிலும் விசேஷப் பாதகம் இல்லாமல் அந்த எண்ணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
3.எனக்கே முற்றிலும் தெளிவாகாத ஒரு இயற்கைத் தாகந்தான் இன்றும் என்னை எழுதத் தூண்டுகிறது எனத் தோன்றுகிறது.ஒரு விதத்தில் இதைத் தவிர வேலை ஏதும் மேற்கொள்ள என்னால் ஆகாது என்றும் சொல்லலாம். எழுதுகிறபோது எனக்கேற்படுகிற ஒரு 'அட்ஹோம்' உணர்ச்சி எனக்கு வேறு வேலைகளில் ஏற்படுவதில்லை. வேறு காரியங்களில் ஈடுபட்டிருக்கும்போது எனது மூர்த்திகரம் சிந்திச் சிதறுவதாகத் தோன்றுவதாலும், எழுத்தில் குவிந்து தன்னம்பிக்கையையும் ஆத்ம திருப்தியை ஏற்படுத்துவதாலும் இயற்கை இந்த ஒரு வேலைக்கே என்னைத் தயார் செய்திருக்கிறதோ என எண்ணிக் கொள்கிறேன்.
4.குறைவாக எழுதி இருக்கும் நிலையிலும் எனக்கு மனநிறைவைத் தரும் சில விஷயங்களும் உள்ளன.என் எழுத்தின் உருவம் எதுவாக இருந்தாலும் சரி, எழுதும் காலத்தில் எனக்கிருந்த ஆற்றலையும்,அறிவையும், மனதையும் முழுமையாகச் செலுத்தியே எழுதி இருக்கிறேன்.அத்துடன் ஒவ்வொரு படைப்பையும் செம்மை செய்யவும் செப்பனிடவும் முயன்றிருக்கிறேன்.அவசரமாகவோ கவனக் குறைவாகவோ எதையும் எழுதியதில்லை.
5.எழுதுவதன் மூலம் நான் வாசகர்களுக்கு எந்த விதத்திலும் கடமைப் பட்டவனாக உணரவில்லை. என்னுடைய வாசகர்கள் யார் என்பதும் எனக்குத் தெரியாது.வாசகர்களை சுவாரஸ்யப்படுத்துவதோ, அவர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டுவதோ, வாழ்க்கைப் பாதையில் அலுப்பு நடை நடந்து அவர்கள் 'அப்பாடா!' என்று ஆயாசத்துடன் சோர்ந்து உட்காரும்போது குதிரைச் சதை பிசைந்து விடுவதோ என்னுடைய வேலை அல்ல.
6.லட்சக்கணக்கான வாசகர்களின் பலவீனங்களைத் திருப்தி படுத்துவது என்னுடைய வேலை அல்ல என்று நினைக்கிறேன்.அவர்களுடைய பாலுணர்வுகளை நான் சுரண்ட விரும்பவில்லை. அவர்களுடைய அறிவுகளை மழுங்கடித்து வாழ்க்கையைப் பற்றி ஒரு கனவை உருவாக்க விரும்பவில்லை.கலை பற்றிய என் நம்பிக்கைக்கு எதிரான காரியங்கள் இவை என்று நினைக்கிறேன்.
7.நான் எனக்காக மட்டும் எழுதக்கூடியவனாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.எனக்குள் புதையுண்டு கிடக்கும் கலை உணர்ச்சி ஒரு வடிவம் பெற்று வெளிவந்த பின்புதான் எனக்கே அது இருந்திருப்பது தெரிய வருகிறது. இதே போல் வேறு என்ன என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொண்டுவிடவே நான் எழுத முற்படுகிறேனோ என்னவோ! இவ்வாறு வெளிப்பட வெளிப்பட, நான் அத்தகைய அனுபவங்களுக்கு ஆளாக
ஆளாக,என்னை நான் கண்டு கொள்வது ஒரு விதத்தில் சாத்யமாக இருக்குமென்று தோன்றுகிறது.
8.வாசிப்புத்தன்மை என்பது முக்கியமான விஷயம். ஒரு விஷயத்தை எழுதி அது வாசகனுக்குப் போய்ச் சேரவில்லை என்றால் எந்த எழுத்தாளனுக்கும் அது ஏமாற்றம்தான்.ஆக நான் ஒரு விஷயத்தைச் சுலமாகச் சொல்ல வேண்டியது முக்கியமானது.ஆனால் நான் என்ன நினைக்கிறேனோ அதைச் சொல்லவும் வேண்டும். அதுவும் முக்கியம்தான்.என்னுடைய சிந்தனையில் பல்வேறுபட்ட மாற்றங்கள் நிகழும் சந்தர்ப்பத்தில் அதையும் நான் சொல்ல ஆசைப்படுகிறேன்.
9.நான் உள்ளடக்கத்துக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பேன்.உள்ளடக்கம் சரியாகச் சொல்லப் பட்டிருக்கிறதா, பரிபக்குவமாக இருக்கிறதா, அனுபவமாக மாற்றப் பட்டிருக்கிறதா, கருத்துக்கள் வெறும் கருத்துக்களாக இல்லாமல் கலையாக மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் பார்ப்பேன்.
10.புதுமை மீது எனக்குத் தீராத கவர்ச்சி உண்டு. புதுமை என்று மொழி சார்ந்து நிற்கும் வடிவத்தை மட்டுமே நான் குறிப்பிடவில்லை. புதுமை என்பது முக்கியமாக எனக்கு விஷயம் சார்ந்த விமர்சனம் ஆகும்.அது வாழ்க்கை சார்ந்த புதிய பார்வையும் ஆகும்.இன்றைய வாழ்க்கை சார்ந்த தாழ்வுகளை விவாதித்துக் குறைகளை இனம் கண்டு அவற்றை நீக்கும் வழிவகையாகும். இந்த வேட்கை சார்ந்ததுதான் என் புதுமை. புதிய படைப்பு, இன்று வரையிலும் படைப்பாளிகள் போயிராத வாழ்க்கையின் புதிய பிராந்தியத்துக்குள் போயிருக்க வேண்டும்.புதிய அனுபவங்களைக் கொண்டு வந்து வாழ்க்கை சார்ந்த பார்வைகளை விரிவுபடுத்தி இருக்க வேண்டும்.புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி நம் சிந்தனைகளைக் கூர்மைபடுத்தி இருக்க வேண்டும். பழைய மொழியை வைத்து இந்த லட்சியங்களை நிறைவேற்ற முடியாது.வாழ்க்கையின் விமர்சனம் தரும் புதிய மொழிதான் புதிய அனுபவங்களையும் சிந்தனைகளையும் படைத்துக் காட்டும்.
11.ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல.நடைமுறை அர்த்தப்படி கட்சிகள்,அரசாங்கம்,சமூகம்,மதம்,தேசம் இவற்றிற்கெல்லாம் பூரண விசுவாசம் அளித்து விடக்கூடாது என்பதை எனது இலக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். வெகு ஜனத்தின் நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதோ, புதிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களைத் தூண்டுவதோ என் வேலலையல்ல. அவர்களுடைய பொது நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட விதிவிலக்கான உண்மைகளைச் சொல்லி,அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்களுடைய விரோதியாகவும், காலத்தின் நண்பனாகவும் இருப்பதே என் வேலை என்று எண்ணுகிறேன். மனிதனின் சராசரித்தன்மையின் அழுத்தத்தினால் வெளியே பிதுங்கிவிடும் விதிவிலக்கான உணமைகள் அலட்சியப் படுத்தப்பட்டு முக்கால் உணமைகள் முழு உண்மைகளின் தோற்றம் கொள்கிறபோது, மைனாரிட்டியின் கால் உண்மையில் கலந்து கொண்டு கத்துவது தவிர்க்க முடியாத காரியமாகவே எனக்குப் படுகிறது.
12.வாழ்வின் அந்திமதசையில் இவ்வாறு கூறிக் கொள்ள முடிந்தாலே போதும்."என்னுடைய கலைத்திறன் மிகச் சொற்பமானதுதான் எனினும் அந்த சொற்ப கலை உணர்வையும் நான் பேணிச் சீராட்டி வளர்த்தேன். எனது அந்தரங்கத்துக்கு உவப்பான விஷயத்தையே நான் அளித்தேன். மூன்று வார்த்தைகளில் சொல்லக் கூடியதை நாலு வார்த்தைகளில் சொல்லலாகாது என்ற விதியைக் கடைசி வரையிலும் நான் காப்பாற்ற முயன்றேன். எனக்குக் கிடைத்த மொழியை மலினப் படுத்தாமல் மறு சந்ததிக்கு அளிக்க நானும் என்னால் ஆன முயற்சி எடுத்துக் கொண்டேன்." இவ்வளவு போதும் எனக்கு. 0
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment