Thursday, September 09, 2004

நினைவுத்தடங்கள் - 23

எனது பல்வேறு ரசனைக்கு, இளமையில் எங்களூரில் நிகழ்ந்த பலவித திருவிழாக்களும் காரணமாய் இருந்திருக்கின்றன. முக்கியமாக ஒவ்வொரு கோடையிலும் நடைபெற்ற 'காமுட்டி' என்கிற காமதகனம், திரௌபதிஅம்மன் தீமிதி, சிறுத்தொண்டர் அன்னப்படையல் போன்ற
விழாக்களில் நடைபெறுகிற கூத்து, பாட்டு போன்றவை என் கலைரசனைக்கு அந்தச் சின்ன வயதிலேயே ஊக்க சக்தியாய் இருந்தன. அறுவடைக்குப் பின் மக்களிடம் கொஞ்சம் பணப்புழக்கம் அதிகம் என்பதால் இத்தகைய திருவிழாக்கள் கோடையில்தான் சாதாரணமாய் நடக்கும்.

காமன்பண்டிகையில் பெரிதும் ஈர்ப்பது அதில் பாடப்படும் பாடல்கள்தாம். இப்பொதெல்லாம் காமன் பண்டிகை அனேகமாக அருகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். கிராமங்களிலும் தொலைக்காட்சி மக்களை ஆக்கிரமித்திருப்பது மட்டுமல்ல- காமன் பண்டிகைப் பாடல்களைப் பாட வல்லவர் அனேகமாக எல்லா ஊர்களிலும் அற்றுப் பொனதும் காரணம் என்றே சொல்ல வேண்டும்.

எங்கள் ஊரில் அருமையான குரல்வளமுடைய முதியவர்கள் நாலைந்து பேர் அப்போது இருந்தார்கள். பரம்பரை பரம்பரையாய் கைமாறி வந்த பாடல்கள் கொண்ட கைப்பிரதிகளை அவர்கள் பொக்கிஷம் போல் போற்றிப் பாதுகாத்து வந்தனர். அவர்களது பாடல்களைக் கேட்கவென்றே வெளியூரிலிருந்தும் வருவார்கள். உருக்கமும் இனிமையும் நிறைந்த அப்பாடல்கள் இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. காமன் பண்டிகைக்குக் காப்புக்கட்டிய நாளிலிருந்து இரவில் எல்லோரும் சாப்பிட்டான பிறகு ஊர் மந்தையில் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே போட்டிருக்கும் பந்தலின் அருகே கூடுவார்கள். ரதி, மன்மதன் சார்பில் பாட இரு குழுவாக பரம்பரை யாகப் பாடுகிறவர்கள் எதிரெதிரே கயிற்றுக்கட்டிலில் கையில் பாடல்கள் எழுதிய நோட்டுப் புத்தகங்களுடன் அமர்ந்திருப்பார்கள். சற்றுத் தள்ளி ஒதுக்குப் புறமாக பறைக்
கொட்டுகளுடன் உள்ளுர் சேரிவாசிகள் பறைகளை நெருப்பில் காய்ச்சித் தயார் நிலையில் நிற்பார்கள்.

விநாயகர் துதியுடன் நிகழ்ச்சி தொடங்கும்.

'மூலாதரப் பொருளே லீலாவிநோதகரே
முனமது கைப்பொருளே முக்கண்ணார் தன் மகனே!'

என்று முதல் அடியைப் பாடியதும் 'டண் டண்' என்று ஒற்றைக் கொட்டு முழங்கும். பிறகு அடி அடியாகப் பாடிவர ஒற்றைக்கொட்டு ஒவ்வொரு வரிக்கும் தொடர்ந்து முழங்கும். பாடல் வரி முடிகையில் சற்று நீட்டி 'வீ....நாயகரே......வாருமையா' என்று பாடுபவர் முடித்ததும் 'டண்டண் டணக்குடக்.....டண்டண் டணக்குடக்......' என்று ஆவேசமாய் எல்லாப் பறைகளும் முழங்குகைய்¢ல் நமக்கு ஒரு சிலிர்ப்பு உண்டாகும். இப்படி
நடுநிசி கதை தொடரும்.

காமதகனத்தன்று ஊரை ஒட்டியுள்ள வெள்ளாற்றுக்குப் போய் கலசத்தில் நீர் மொண்டு, கொட்டு முழக்குடன் கொண்டு வருவார்கள். உடன் வந்திருக்கிற இளைஞர்களில் திருமணமாகாத இருவரை முன்னறிவிப்பின்றி நீரில் பிடித்துத் தள்ளி குளிக்க வைத்து ரதி மன்மதன் வேடமணிய வைப்பார்கள். முன்பே சொல்லிவிட்டால் யாரும் வேடம் தரிக்க முன் வரமாட்டார்கள். ரதிக்கு எண்ணை கலந்த மஞ்சள் வண்ண மும், மன்மதனுக்கு பச்சை வண்ணமும் முகத்திலும் உடலிலும் பூசப்படும். அந்த வேடத்துடனே அவர்கள் கலசத்துடன் காமதகனம் நடைபெறும் இடத்துக்கு வருவார்கள். ரதி மன்மதனுடன் நெற்றிக்கண்ணால் மதனை எரிக்கப் போகும் பரம சிவனுக்கும் ஒரு இளைஞனை
வேடமிடச்செய்து காவியுடையுடன் கலசத்துடன் அழைத்து வருவார்கள்.முன்பே பந்தலில் நடப்பட்டுள்ள ஆலங்கிளையின் அடியில் பரம சிவன் உட்கார்ந்து தபசில் ஆழ்வார். அருகில் சொக்கப்பனை போன்ற அமைப்பில் ஒரு கூம்பு வடிவத்தில் கட்டப் பட்டுள்ள துவரைமிலார்களின் நடுவே மன்மதன் உருவம் வரையப்பட்டுள்ள படம் வைக்கப்பட்டிருக்கும். பரமசிவம் தபசிருக்கும் ஆலங்கிளைக்கும் மன்மதன் படம் உள்ள கூம்புக்கும் இடையே இரட்டைவாணம் கோத்த கயிறு கட்டப்பட்டிருக்கும். தீபாராதனை முடிந்ததும் சகடையில் ரதி மன்மதன் சுதைச்
சிற்பங்கள் ஏற்றப்பட்டு எதிரே ரதி மன்மதன் வேடமிட்டவர்கள் கைகளில் வில்லேந்தி முன்னே நடக்க ஊர்வலம் புறப்படும். இனிமேல்தான் சுவாரஸ்யமெல்லாம்.

மன்மதன் பரமசிவனின் தபசைக் கலைக்கப்போகிறான். ரதி அவனிடம் அப்படிச் செய்து தன் தந்தையாகிய சிவனின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று இறைஞ்சுவாள். இந்தக் கட்டத்துக்காகவே அனைவரும் காத்திருப்பார்கள். ரதி, மன்மதன் இருவர் பக்கத்திலும் அந்தக் கட்சிக்காகப் பாடுபவர்கள் கையில் நோட்டுடன் இருப்பார்கள். முதலில் ரதியின் உருக்கமான வேண்டுதல் தொடங்கும். பாடுகிறவர் வழக்கம் போல ஒவ்வொரு அடியாய்ப் பாட பறைக்கொட்டு தொடர்ந்து முழங்கும். அப்பாடல் முடிந்ததும் பறைகள் ஒரு உத்வேகத்தொடு முழங்க ரதி வேடமிட்டவர் கையில் வில்லுடன் மன்மதனை நோக்கிப் போய்ப் போய்த் திரும்புவார். பிறகு மன்மதனின் மறுப்புப் பாடல். அதற்கேற்றபடி கொட்டு - மன்மதனின் எதிர் நடை என்று தொடரும்.

மன்மதன் சிவனைப் பழித்து 'அடி! உங்கப்பன் பேயாண்டி......' என்று பாடும்போது ரதி வேடமிட்டவருக்கு ஆவேசம் வந்து விடும். அதற்காகவே பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் இருவர் அவர் கீழே விழுந்து விடாதபடி தாங்கிப் பிடிப்பார்கள். அவருக்கு மட்டுமல்ல - முன் ஆண்டில் ரதி வேடமிட்டவர் அருகில் இருந்தாலும் மன்மதனின் ஏச்சைக் கேட்டு ஆவேசமடைந்து சாமியாடுவார்கள். அவர்களையும் தாங்கிப் பிடிப் பவர்களும் உண்டு. விழட்டும் என்று விட்டுவிடுவதும் உண்டு. இப்படி நான்கு பிரதான தெருக்கள் வழியில் ஊர்வலம் தொடரும். பந்தலுக்குத் திரும்பும்வரை ரதி மன்மதன் சம்வாதம் அருமையான பாட்டுகளில் தொடரும்.

பந்தலுக்குத் திரும்பியதும் மன்மதன் தபசிருக்கும் சிவனை நோக்கி மலர் அம்பு எய்யும் விதமாக, மன்மதன் படம் இருக்கும் பக்கத்தில் தொங்கும் இரட்டை வாணம் பற்ற வைக்கப்படும். உடனே அது 'சுர்'ரென்று சீறியபடி சிவனை நோக்கிப் போகும். மறுமுனையை அடைந்ததும் இரட்டை வாணத்தின் மறுவாணம் தானாகவே பற்றிக் கொண்டு மன்மதனை நோக்கிச் சீறிப்பாயும். சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து காமனை எரிப்பதாக அர்த்தம். காமன் படத்தின் மீது கற்பூரத்தைக் கொளுத்துவார்கள். படம் பற்றியெரிய அதைத்தாங்கி நின்ற துவரை மிலாறும் 'சட சட' வென எரியும் . அதிர் வேட்டு முழங்கி காமதகனம் முடிந்ததை ஊருக்கு அறிவிக்கும்.

பி¢£றகு ரதி, சிவனிடம் அழுது புலம்புவதும் மன்மதனை மீண்டும் உயிப்பிக்க வேண்டுவதுமான பாடல்கள் கொட்டு முழக்குடன் தொடரும். அது ஒப்பாரி வடிவில் வெகு உருக்கமாய் இருக்கும். இந்தப் பாடல்களின் உருக்கத்தை ரசிக்கவென்றே நான் ஒவ்வொரு கோடையிலும் அது நடக்கிறவரை ஊருக்குப் போய் வந்தேன். அது தந்த ரசனை இன்பத்தை என் பிள்ளகளுக்கும் தர விரும்பினாலும் அது இனி கிட்டாது என்பதுதான் சோகம்! எங்கள் வெள்ளாறும் வற்றிப் போனதும் அதைவிடவும் சோகம்!

-தொடர்வேன்.

- வே.சபாநாயகம்

Friday, September 03, 2004

எனது களஞ்சியத்திலிருந்து - 8: புலம்பல் கவி

பொருள் கொடுத்தால் போற்றிப் பாடுவதும் பொருள் கொடாவிடில் தூற்றிப் பாடுவதும் புலவர்களது இயல்பு என்பார்கள். சில சாதுப் புலவர்கள் தகுதி இல்லா தவரைப் பாடச் நேர்ந்ததற்காக சுயபச்சாதாபத்துடன் புலம்புவதும், இறைவனிடம் முறையிடுவதும் உண்டு.

இராமச்சந்திரக் கவிராயருக்கு இப்படி நிறைய அனுபவம் உண்டு. பணம் படைத்த பலருக்குப் புலவர்களின் அருமையோ அவர்தம் கவிதைகளின் பெருமையோ தெரிவதில்லை. அவர்களுக்குப் பணம்தான் பெரிது. பணம் படைத்திருப்பதால் தாங்களே உயர்ந்தவர்கள் என்று அவர்களுக்கு எண்ணம். அதனால் அவர்கள் புலவர்களை மதிப்ப தில்லை. கவிஞர்கள் உதவி நாடி வந்து விட்டால் ஒரு சமயம் வெறும் கும்பிடு போட்டு அனுப்பி விடுவார்கள்; மற்றொரு சமயம் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுவார்கள்; வேறொரு சமயம் ஏதோ கணக்குப் போடுகிறவர்களைப் போல விரல்களை மடக்கிக் கொண்டு வாயால் முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள்; பிறிதொரு சமயமோ வேட்டைநாய் போலச் சீறி விழுவார்கள். இவர்கள் மனம் ஒத்து வரும்படி கவிகள் பாடி அவருக்கு அலுத்துப் போய்விட்டது. 'இப்படி நான் எத்தனை நாள் கயவர்களிடம் போய் அலைந்து திரிவது - திருப்பரங்குன்றில் வாழும் மூருகப் பெருமானே' என்று முறையிடுகிறார்:

வணக்கம் வரும் சில நேரம்,
குமர! கண்ட
வலிப்பு வரும் சில நேரம்;
வலியச் செய்யக்
கணக்கு வரும் சிலநேரம்;
வேட்டைநாய் போல்
கடிக்க வரும் சில நேரம்;
கயவர்க்கெல்லாம்
இணக்கம்வரும் படிதமிழைப்
பாடிப் பாடி
எத்தனை நாள் திரிந்து திரிந்(து)
உழல்வேன், ஐயா?
குணக்கடலே! அருட்கடலே!
அசுர ரான
குரைகடலை வென்ற பரங்-
குன்றுளானே!

( குமர - குமரக் கடவுளே. கண்ட வலிப்பு - கழுத்து வலிப்பு. அசுரரான குரைகடலை - அரக்கர்களன் கடல் போன்ற கூட்டத்தை. குரை - சப்திக்கும்.)

பொதியமலைச் சாரலில் உள்ள பெரியம்மை கோவிலுக்கும் போய் இராமச்சந்திரக் கவிராயர் தன் தலை விதியை நொந்து கொண்டு புலம்புகிறார். ' புல்லுக் கட்டும், விறகும் சுமந்து பிழைத்தவர்கள் பூர்வபுண்ணிய வசத்தினால் இன்று சீமான்கள் ஆகி விட்டார்கள்.ஏராளமாக விளைந்த நெல்லை மூட்டையாகக் கட்டி வைத்திருக்கிறார்கள். பண மூட்டையும் சேர்ந்திருக்கிறது. அந்தஸ்தைக்காட்டிக் கொள்ள நீலக் கல்லில் கடுக்கனும் போட்டுக் கொள்கிறார்கள். சொல்லால் கவிதை கட்டும் புலவர்களைக் கண்டு விட்டால், பாய்ந்து கதவை அடைத்துக் கொள்ளுகிறார்கள். புலவரோடு மல்யுத்தம் நிகழ்த்த எதிரே வருகிறார்கள். இப்படிப் பட்ட மடையர்களைப் பாடி நான் காலம் தள்ளவா? இதுதான் என் தலை விதியா?'

'புல்லுக் கட்டும்
விறகும் சுமந்தபேர்
பூர்வ காலத்துப்
புண்ணிய வசத்தினால்,
நெல்லுக் கட்டும்
பணக்கட்டும் கண்டபின்
நீலக்கல்லில்
கடுக்கனும் போடுவார்;
சொல்லுக் கட்டும்
புலவரைக் கண்டக்கால்
தூரிப் பாய்ந்து
கதவை அடைத்தெதிர்
மல்லுக் கட்டும்
மடையரைப் பாடவோ,
மலயச் சாரலில்
வாழ் பெரியம்மையே?'

( தூரி - நெருங்கி, மலயம் - பொதிகைமலை.)

இதே கவிராயர் ஒரு பிரபுவிடம் சென்றார். பலவாறாக அவனுக்கு ஏற்பில்லாத பல பெருமைகளை அவன் மீது ஏற்றிப் புகழ்ந்து பாடினார். அப்படியும் பயனில்லை. 'இல்லை' என்று அவன் கைவிரித்துவிட்ட சோகத்தைப் பாடுகிறார்:

'கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்;
காடுறையும் ஒருவனை நாடாள்வாய் என்றேன்;
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்;
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்;
மல்லாரும் புயமென்றேன் சூம்பல் தோளை;
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்;
இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே!'

அட்டாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் என்றொரு புலவருக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் கவிநயத்துடனும் நகைச் சுவையுடனும் பாடியிருக்கிறார்.

பெருஞ்செல்வன் ஒருவன் ஒருநாள் தன் வீட்டில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் ஈயாத உலோபி. ஏழைகளையும் புலவர்க¨ளையும் அருகே அண்ட விட மாட்டான். அவனிடம் பொருட் செல்வம் இருந்ததே ஒழிய கல்விச் செல்வம் இல்லை. அவனைக் காண புலவர் வந்தார். அவர் புலவர் என்று அவனுக்குத் தெரியாது. அதனால் 'வாரும், நீர் யார்' என்று கேட்டுவிட்டான். அது கேட்ட புலவர் 'யான் வித்து வான்' என்றார். அதைக் கேட்டதும் அவனது உடல் மின்சாரம் தாக்கியதுபோல நடுங்கியது; வாய் குழறியது; உள்ளம் ஒடுங்கியது; மதிமோசம் வந்து விட்டதே என்று பதறினான்; மெல்ல சுதாரித்துக் கொண்டு 'நீர் வந்த காரியம் எது?' என்றான். புலவரிடம் பேச்சை வளர்க்க அவன் விரும்பவில்லை. பேச்சு வளர்ந்தால் இந்தப் பொல்லாத புலவர்கள் சொல்லால் மயக்கிப் பணம் பிடுங்கிவிடுவார்கள் என்று பயம். சுருக்கமாய்ப் பேசி அனுப்பி விட எண்ணினான்.

ஆனால் புலவர் அவ்வளவு எளிதில் பதில் சொல்லிவிடுவாரா? கடல் மடை திறந் தாற்போல் புகழுரைகளை அள்ளி வீசலானர். 'விண்ணுகில் காமதேனு என்றொரு பசு இருக்கிறது. அது கேட்டவர்க்கு எதையும் இல்லை என்னாது அளிக்கும் என்பார்கள். அத்தகைய - மண்ணுலகக் காமதேனு நீதான்! விண்ணுலகில் கற்பக விருட்சம் என்றொரு மரம் உண்டு. அதனடியில் நின்று என்ன கேட்டாலும் அது உடனே வழங்கும். நீ மண்ணுலகக் கற்பக விருட்சம்! தேவருலகில் சிந்தாமணி என்றொரு அரிய கல் உள்ளது. அது கேட்டதைக் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டது. அந்த சிந்தாமணி நீயே! அரிச்சந்திரன் என்ற மன்னன் சொன்ன சொல் தவறாதவன். நீயும் அவனைப் போல வாக்குத் தவறாதவன். இந்தக் காலத்து அரிச்சந்திரன் நீதான்!' என்றெல்லாம் புகழ்மொழிகளை எடுத்து விட்டார். இத்தகைய புகழ்மொழிக்கு மயங்காதிருக்கவும் முடியுமா?

ஆனால் அவனது முகம் மகிழ்ச்சியைக் காட்டுவதற்குப் பதில் சிவந்தது. கண்கள் சினத்தால் சிவப்பேறியது. அவரது புகழுரைகளை எல்லா இகழுரைகளாகக் கருதினான். கோபம் கொப்பளிக்கப் புலவரை நோக்கி, 'யாரைப் பார்த்து மாடு, மரம், கல் என்று கூறினீர்?' என்று கேட்டான். 'அய்யா! நான் எங்கே தங்களை அப்படியெல்லாம் சொன்னேன்?' என்று அச்சத்துடன் கேட்டார். ' காமதேனு என்று அழைத்தீரே- மாடே என்று சொல்லாமல் சொல்கிறீரா? மரமே என்று சொல்லாமல் கற்பக விருட்சமே என்றீர். கல்லே என்று சொல்லாமல் சிந்தாமணியே என்றீர். நீர் குறிப்பினால் சொன்னதை நான் உணரமட்டேன் என்று நினத்தீரா? இதையாவது பொறுத்துக் கொள்ளலாம்- கடைசியாக ஒரு அவதூறு சொன்னீரே அதை மன்னிக்கவே முடியாது. அரிச்சந்திரன் என்றீரே எத்தைய இழிசொல் அது! அரிச்சந்திரன் போல நான் யாருக்காவது அடிமைத் தொழில் செய்தேனா? யார் கையில் என் மனைவியை விற்றேன்? அடாத சொல் சொன்னீரே? இந்த வசை தீருமோ?' என்று கடுமையாய்ப் பேசினான்.

'வாரும் நீர் யார் என்ன வித்துவான் என்னவும்
மதிமோசம் வந்ததென்றே
வாய் குழறி மெய்எலாம் நடுக்குற்று நீர்
வந்த காரியம் எது எனச்
சீருலாவிய காமதேனுவே தாருவே
சிந்தாமணிக்கு நிகரே
செப்புவனத்து அரிச்சந்திரனே எனலும்
சினந்து இரு கணும் சிவந்தே
யாரை நீர் மாடு கல் மரம் என்று சொன்னதும்
அலால் அரிச்சந்திரன் என்றே
அடாத சொல் சொன்னையே யார்க்கடிமையாகினேன்
ஆர்கையில் பெண்டு விற்றேன்
தீருமோ இந்தவசை என்றுரைசெய் வெகுகொடிய
தீயரைப் பாடி நொந்தேன்
திருமன்றுள் நடுநின்று நடம் ஒன்று புரிகின்ற
தில்லை வாழ் நடராசனே`.

என்று புலம்புகிறார் புலவர்.

இவையெல்லாம் இடைக்காலப் புலவர்களின் புலம்பல். நம் காலத்து நாயகர் ஒருவரின் புலம்பலைப் பார்க்கலமா?

ஜெமினியின் ஔவையார் படத்துக்கு ஆரம்பத்தில் வசனம் எழுதியவர் பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தன். அவரது நண்பரும் ஜெமினியின் கதை இலாகா பொறுப் பாளருமான கொத்தமங்கலம் சுப்புதான் அவரை அப்பணிக்கு திரு வாசனிடம் சிபாரிசு
செய்தவர். புதுமைப்பித்தனின் பணிக்கான ஊதியமும் திருப்திகரமாக இல்லை; அதற்கான அங்கீகாரமும் கௌரவமாக இல்லை. யாரோ அது பற்றி புதுமைப்பித்தனிடம் கேட்டபோது எரிச்சலோடு புலம்பிய கவிதை இது:

அவ்வை எனச் சொல்லி
ஆள்விட்டுக் கூப்பிட்டு
கவ்வக் கொடுத்தடித்தால்
கட்டுமா - சவ்வாது
பொட்டு வச்சுப் பூச்சணிந்து
பூப்போல ஆடை கட்டும்
மொட்டைத் தலையனையே
கேளு.

கொத்தமங்கலம் சுப்புவைப் பார்த்திராதவர்களுக்கு காட்டப்படும் ஒரு சின்ன சித்திரம் கசப்பின் முழுமையைக் காட்டுகிறதல்லவா!

-மேலும் சொல்வேன்.

-வே.சபாநாயகம்.