Friday, September 03, 2004

எனது களஞ்சியத்திலிருந்து - 8: புலம்பல் கவி

பொருள் கொடுத்தால் போற்றிப் பாடுவதும் பொருள் கொடாவிடில் தூற்றிப் பாடுவதும் புலவர்களது இயல்பு என்பார்கள். சில சாதுப் புலவர்கள் தகுதி இல்லா தவரைப் பாடச் நேர்ந்ததற்காக சுயபச்சாதாபத்துடன் புலம்புவதும், இறைவனிடம் முறையிடுவதும் உண்டு.

இராமச்சந்திரக் கவிராயருக்கு இப்படி நிறைய அனுபவம் உண்டு. பணம் படைத்த பலருக்குப் புலவர்களின் அருமையோ அவர்தம் கவிதைகளின் பெருமையோ தெரிவதில்லை. அவர்களுக்குப் பணம்தான் பெரிது. பணம் படைத்திருப்பதால் தாங்களே உயர்ந்தவர்கள் என்று அவர்களுக்கு எண்ணம். அதனால் அவர்கள் புலவர்களை மதிப்ப தில்லை. கவிஞர்கள் உதவி நாடி வந்து விட்டால் ஒரு சமயம் வெறும் கும்பிடு போட்டு அனுப்பி விடுவார்கள்; மற்றொரு சமயம் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுவார்கள்; வேறொரு சமயம் ஏதோ கணக்குப் போடுகிறவர்களைப் போல விரல்களை மடக்கிக் கொண்டு வாயால் முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள்; பிறிதொரு சமயமோ வேட்டைநாய் போலச் சீறி விழுவார்கள். இவர்கள் மனம் ஒத்து வரும்படி கவிகள் பாடி அவருக்கு அலுத்துப் போய்விட்டது. 'இப்படி நான் எத்தனை நாள் கயவர்களிடம் போய் அலைந்து திரிவது - திருப்பரங்குன்றில் வாழும் மூருகப் பெருமானே' என்று முறையிடுகிறார்:

வணக்கம் வரும் சில நேரம்,
குமர! கண்ட
வலிப்பு வரும் சில நேரம்;
வலியச் செய்யக்
கணக்கு வரும் சிலநேரம்;
வேட்டைநாய் போல்
கடிக்க வரும் சில நேரம்;
கயவர்க்கெல்லாம்
இணக்கம்வரும் படிதமிழைப்
பாடிப் பாடி
எத்தனை நாள் திரிந்து திரிந்(து)
உழல்வேன், ஐயா?
குணக்கடலே! அருட்கடலே!
அசுர ரான
குரைகடலை வென்ற பரங்-
குன்றுளானே!

( குமர - குமரக் கடவுளே. கண்ட வலிப்பு - கழுத்து வலிப்பு. அசுரரான குரைகடலை - அரக்கர்களன் கடல் போன்ற கூட்டத்தை. குரை - சப்திக்கும்.)

பொதியமலைச் சாரலில் உள்ள பெரியம்மை கோவிலுக்கும் போய் இராமச்சந்திரக் கவிராயர் தன் தலை விதியை நொந்து கொண்டு புலம்புகிறார். ' புல்லுக் கட்டும், விறகும் சுமந்து பிழைத்தவர்கள் பூர்வபுண்ணிய வசத்தினால் இன்று சீமான்கள் ஆகி விட்டார்கள்.ஏராளமாக விளைந்த நெல்லை மூட்டையாகக் கட்டி வைத்திருக்கிறார்கள். பண மூட்டையும் சேர்ந்திருக்கிறது. அந்தஸ்தைக்காட்டிக் கொள்ள நீலக் கல்லில் கடுக்கனும் போட்டுக் கொள்கிறார்கள். சொல்லால் கவிதை கட்டும் புலவர்களைக் கண்டு விட்டால், பாய்ந்து கதவை அடைத்துக் கொள்ளுகிறார்கள். புலவரோடு மல்யுத்தம் நிகழ்த்த எதிரே வருகிறார்கள். இப்படிப் பட்ட மடையர்களைப் பாடி நான் காலம் தள்ளவா? இதுதான் என் தலை விதியா?'

'புல்லுக் கட்டும்
விறகும் சுமந்தபேர்
பூர்வ காலத்துப்
புண்ணிய வசத்தினால்,
நெல்லுக் கட்டும்
பணக்கட்டும் கண்டபின்
நீலக்கல்லில்
கடுக்கனும் போடுவார்;
சொல்லுக் கட்டும்
புலவரைக் கண்டக்கால்
தூரிப் பாய்ந்து
கதவை அடைத்தெதிர்
மல்லுக் கட்டும்
மடையரைப் பாடவோ,
மலயச் சாரலில்
வாழ் பெரியம்மையே?'

( தூரி - நெருங்கி, மலயம் - பொதிகைமலை.)

இதே கவிராயர் ஒரு பிரபுவிடம் சென்றார். பலவாறாக அவனுக்கு ஏற்பில்லாத பல பெருமைகளை அவன் மீது ஏற்றிப் புகழ்ந்து பாடினார். அப்படியும் பயனில்லை. 'இல்லை' என்று அவன் கைவிரித்துவிட்ட சோகத்தைப் பாடுகிறார்:

'கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்;
காடுறையும் ஒருவனை நாடாள்வாய் என்றேன்;
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்;
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்;
மல்லாரும் புயமென்றேன் சூம்பல் தோளை;
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்;
இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே!'

அட்டாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் என்றொரு புலவருக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் கவிநயத்துடனும் நகைச் சுவையுடனும் பாடியிருக்கிறார்.

பெருஞ்செல்வன் ஒருவன் ஒருநாள் தன் வீட்டில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் ஈயாத உலோபி. ஏழைகளையும் புலவர்க¨ளையும் அருகே அண்ட விட மாட்டான். அவனிடம் பொருட் செல்வம் இருந்ததே ஒழிய கல்விச் செல்வம் இல்லை. அவனைக் காண புலவர் வந்தார். அவர் புலவர் என்று அவனுக்குத் தெரியாது. அதனால் 'வாரும், நீர் யார்' என்று கேட்டுவிட்டான். அது கேட்ட புலவர் 'யான் வித்து வான்' என்றார். அதைக் கேட்டதும் அவனது உடல் மின்சாரம் தாக்கியதுபோல நடுங்கியது; வாய் குழறியது; உள்ளம் ஒடுங்கியது; மதிமோசம் வந்து விட்டதே என்று பதறினான்; மெல்ல சுதாரித்துக் கொண்டு 'நீர் வந்த காரியம் எது?' என்றான். புலவரிடம் பேச்சை வளர்க்க அவன் விரும்பவில்லை. பேச்சு வளர்ந்தால் இந்தப் பொல்லாத புலவர்கள் சொல்லால் மயக்கிப் பணம் பிடுங்கிவிடுவார்கள் என்று பயம். சுருக்கமாய்ப் பேசி அனுப்பி விட எண்ணினான்.

ஆனால் புலவர் அவ்வளவு எளிதில் பதில் சொல்லிவிடுவாரா? கடல் மடை திறந் தாற்போல் புகழுரைகளை அள்ளி வீசலானர். 'விண்ணுகில் காமதேனு என்றொரு பசு இருக்கிறது. அது கேட்டவர்க்கு எதையும் இல்லை என்னாது அளிக்கும் என்பார்கள். அத்தகைய - மண்ணுலகக் காமதேனு நீதான்! விண்ணுலகில் கற்பக விருட்சம் என்றொரு மரம் உண்டு. அதனடியில் நின்று என்ன கேட்டாலும் அது உடனே வழங்கும். நீ மண்ணுலகக் கற்பக விருட்சம்! தேவருலகில் சிந்தாமணி என்றொரு அரிய கல் உள்ளது. அது கேட்டதைக் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டது. அந்த சிந்தாமணி நீயே! அரிச்சந்திரன் என்ற மன்னன் சொன்ன சொல் தவறாதவன். நீயும் அவனைப் போல வாக்குத் தவறாதவன். இந்தக் காலத்து அரிச்சந்திரன் நீதான்!' என்றெல்லாம் புகழ்மொழிகளை எடுத்து விட்டார். இத்தகைய புகழ்மொழிக்கு மயங்காதிருக்கவும் முடியுமா?

ஆனால் அவனது முகம் மகிழ்ச்சியைக் காட்டுவதற்குப் பதில் சிவந்தது. கண்கள் சினத்தால் சிவப்பேறியது. அவரது புகழுரைகளை எல்லா இகழுரைகளாகக் கருதினான். கோபம் கொப்பளிக்கப் புலவரை நோக்கி, 'யாரைப் பார்த்து மாடு, மரம், கல் என்று கூறினீர்?' என்று கேட்டான். 'அய்யா! நான் எங்கே தங்களை அப்படியெல்லாம் சொன்னேன்?' என்று அச்சத்துடன் கேட்டார். ' காமதேனு என்று அழைத்தீரே- மாடே என்று சொல்லாமல் சொல்கிறீரா? மரமே என்று சொல்லாமல் கற்பக விருட்சமே என்றீர். கல்லே என்று சொல்லாமல் சிந்தாமணியே என்றீர். நீர் குறிப்பினால் சொன்னதை நான் உணரமட்டேன் என்று நினத்தீரா? இதையாவது பொறுத்துக் கொள்ளலாம்- கடைசியாக ஒரு அவதூறு சொன்னீரே அதை மன்னிக்கவே முடியாது. அரிச்சந்திரன் என்றீரே எத்தைய இழிசொல் அது! அரிச்சந்திரன் போல நான் யாருக்காவது அடிமைத் தொழில் செய்தேனா? யார் கையில் என் மனைவியை விற்றேன்? அடாத சொல் சொன்னீரே? இந்த வசை தீருமோ?' என்று கடுமையாய்ப் பேசினான்.

'வாரும் நீர் யார் என்ன வித்துவான் என்னவும்
மதிமோசம் வந்ததென்றே
வாய் குழறி மெய்எலாம் நடுக்குற்று நீர்
வந்த காரியம் எது எனச்
சீருலாவிய காமதேனுவே தாருவே
சிந்தாமணிக்கு நிகரே
செப்புவனத்து அரிச்சந்திரனே எனலும்
சினந்து இரு கணும் சிவந்தே
யாரை நீர் மாடு கல் மரம் என்று சொன்னதும்
அலால் அரிச்சந்திரன் என்றே
அடாத சொல் சொன்னையே யார்க்கடிமையாகினேன்
ஆர்கையில் பெண்டு விற்றேன்
தீருமோ இந்தவசை என்றுரைசெய் வெகுகொடிய
தீயரைப் பாடி நொந்தேன்
திருமன்றுள் நடுநின்று நடம் ஒன்று புரிகின்ற
தில்லை வாழ் நடராசனே`.

என்று புலம்புகிறார் புலவர்.

இவையெல்லாம் இடைக்காலப் புலவர்களின் புலம்பல். நம் காலத்து நாயகர் ஒருவரின் புலம்பலைப் பார்க்கலமா?

ஜெமினியின் ஔவையார் படத்துக்கு ஆரம்பத்தில் வசனம் எழுதியவர் பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தன். அவரது நண்பரும் ஜெமினியின் கதை இலாகா பொறுப் பாளருமான கொத்தமங்கலம் சுப்புதான் அவரை அப்பணிக்கு திரு வாசனிடம் சிபாரிசு
செய்தவர். புதுமைப்பித்தனின் பணிக்கான ஊதியமும் திருப்திகரமாக இல்லை; அதற்கான அங்கீகாரமும் கௌரவமாக இல்லை. யாரோ அது பற்றி புதுமைப்பித்தனிடம் கேட்டபோது எரிச்சலோடு புலம்பிய கவிதை இது:

அவ்வை எனச் சொல்லி
ஆள்விட்டுக் கூப்பிட்டு
கவ்வக் கொடுத்தடித்தால்
கட்டுமா - சவ்வாது
பொட்டு வச்சுப் பூச்சணிந்து
பூப்போல ஆடை கட்டும்
மொட்டைத் தலையனையே
கேளு.

கொத்தமங்கலம் சுப்புவைப் பார்த்திராதவர்களுக்கு காட்டப்படும் ஒரு சின்ன சித்திரம் கசப்பின் முழுமையைக் காட்டுகிறதல்லவா!

-மேலும் சொல்வேன்.

-வே.சபாநாயகம்.

No comments: