Friday, August 20, 2004

எனது களஞ்சியத்திலிருந்து - 7: இரங்கற்பா

கவிவளம் மிக்க கவிஞர்கள் எது பாடினாலும் - அது பாராட்டோ, வசையோ, பரவசமோ எதுவாக இருந்தாலும் கவிநயத்துடனும் நெஞ்சைத் தொடுவதாகவுமே இருக்கும். அப்படியே, தமக்கு அருமையானவர் மறைந்தால் மனம் நொந்து கவிஞர்கள் பாடும் இரங்கற்பாக்களும் அற்புதமானவை.

கம்பர் காலத்தில் வாழ்ந்த ஒரு பெரும் புலவர். வாணியன் தாதன் என்பது அவரது பெயர். தமிழில் உத்தரகாண்டத்தைப் பாடியவர். கம்பருடன் சதாபோட்டி. கம்பரது வாழ்நாள் முழுதும் அவரிடம் விரோதம் பாராட்டியவர். ஆனால் அந்தரங்கத்தில் கம்பரது புலமையில் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கம்பர் காலமானபோது அவரோடு கவியும், கலையும், கல்வியுமே செத்துவிட்டதுபோல் வாணியன் தாதனுக்குத் தோன்றியது. கவிச்சக்கரவர்த்தி மறைந்த நாளிலேயே சரஸ்வதிதேவி தன் மாங்கல்யத்தை இழந்து விட்டாள் என்றும் அவர் கருதினார். அதோடு இனி அற்பமான புலமையுடை யவர்கள் பாடு கொண்டாட்டமாய்ப் போய்விடும். கம்பர் இல்லாத உலகில் அவர்கள் பேரும் புகழும் சம்பாதித்து வாழ்வார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது வாணியன் தாதனுக்குத் துயரம் பொறுக்கவில்லை. கம்பர் இல்லாத உலகத்தில் மகாலட்சுமிக்கு வாழ்வு உண்டு; பூமாதேவியும் என்றும் போல் இருப்பாள்; சரஸ்வதியின் பாக்கியந்தான் போய்விடும் என்று புலம்புகிறார்:

` இன்றோ நம் கம்பன்
இறந்தநாள்! இப்புவியில்
இன்றோ அப் புன்கவிகட்கு
ஏற்ற நாள்! - இன்றோதான்
பூமடந்தை வாழப்
புவிமடந்தை வீற்றிருப்ப
நாமடந்தை நூல் வாங்கும்
நாள்!`

நமச்சிவாயப் புலவர் என்பவர் வள்ளல் சீதக்காதியால் மிகவும் மதிக்கப் பெற்றவர். சீதக்காதி இறந்த செய்தியைக் கேட்டு ஆற்றொணாத் துயரம் கொண்டார். `சீமான் இறந்திட்டபோதே புலமையும் இறந்ததுவே` என்று புலம்பினார். மனம் குழைந்து அவர் வருந்திப் பாடுகிறார்:

பூமாது இருந்தென்
புவிமாது இருந்தென்? பூதலத்தில்
நாமாது இருந்தென்?
நாம் இருந்தென்? நல் நாவலர்க்குக்
கோமான் அழகமர் மால்
சீதக்காதி கொடை மிகுந்த
சீமான் இறந்திட்ட போதே
புலமையும் செத்ததுவே!
( பூமாது- லட்சுமி; புவிமாது - நிலமகள்; நாமாது- பிரமன் நாவிலிருக்கும் சரஸ்வதி; பூதலம்-நிலவுலகம்; மால் - திருமால் )

இந் நிலவுலகில் இலக்குமி இருந்து என்ன பயன்? நிலமகள் இருந்தும் யாது பயன்? நல்ல புலமை வாய்ந்த புலவர்களுக்கு வள்ளலும் திருமால் போன்று அழகு பொருந்தியவனுமான மன்னன் சீதக்காதி உயிர் நீத்தபோதே புலவரின் கல்விச் சிறப்பும் ஒழிந்து போயிற்று.

தமக்கு அருமையானவர் இறந்தால் மனம் வெதும்பி சாபமிடும் புலவர்களும் உண்டு. கூவத்து நாரணன் என்றொரு வள்ளல் இருந்தார். அவர் இறந்தபோது ஒரு புலவர் கதறிப் புலம்பினார். அவரது உயிரைப் பறித்த எமனை வயிறெரிந்து சாபமிட்டார்.

`உலகத்தில் வள்ளல்கள் ஒரு சிலர் தான். ஆனால் உதவி நாடி யாசிப்பவர்களோ மிகப் பலர். இதைத் தெரிந்திருந்தும் கூவத்து நாரணன் உயிரை எமன் கொண்டு போய் விட்டான். எமனே! நீ நாசமாய்ப் போக! கரி வேண்டுமென்றால் ஏதாவது காட்டு மரங்களை வெட்டி எரித்துக் கொள்ளாமல் கற்பக விருட்சங்களையா வெட்டுவது? அநியாயமாகக் கூவத்து நாரணனைக் கொன்று விட்டாயே?`

`இடுவோர் சிறிது; இங்கு
இரவோர் பெரிது
கெடுவாய், நமனே!
கெடுவாய் - படுபாவி!
கூவத்து நாரணனைக்
கொன்றாயே! கற்பகப் பூங்
கா வெட்டலாமோ
கரிக்கு?

கூவத்து நாரணன் உயிரை அபகரித்து விட்டான் எமன் என்று சொல்லாமல், அவனைக் கொலை செய்துவிட்டான் என்றே புலவர் உக்கிரத்துடன் சொல்லுகிறார்.

ரசிகமணி டி.கே.சியின் அருமைப் புதல்வர் தீத்தாரப்பன் நல்ல கவிஞர்; கதாசிரியர்; அவரது கதை - கவிதை சேர்ந்த தொகுப்பு ஒன்று `அரும்பிய முல்லை` என்ற பெயரில் வெளியாகியுள்ளது. டி.கே.சியின் இந்த அருமைப் புதல்வர் 32 வயதில் இறைவனடி சேர்ந்தார். டி.கே.சியின் சோகம் அவரது ரசிகர்களின் சோகம் அல்லவா? கவிமணி டி.கே.சியின் அரிய நண்பர். அவரது அருமை மகன் இறந்த செய்தி கேட்டதும் ஒரு பாடல் எழுதி டி.கே.சிக்கு அனுப்பி வைக்கிறார்.

`எப்பாரும் போற்றும்
இசைத் தமிழ்ச் செல்வா என்
அப்பா அழகிய செல்
லையா நான் - இப்பாரில்
சிந்தை குளிரச்
சிரித்தொளிரும் உன் முகத்தை
எந்த நாள் காண்பேன்
இனி?`
(செல்லையா என்பது தீத்தாரப்பனின் செல்லப் பெயர். தீபன் என்ற புனை பெயரில் எழுதினார்.)

இந்தப் பாடலைப் பார்த்ததும் டி.கே.சி எப்படித் துடித்தாரோ என்று தானே நினைக்கத் தோன்றுகிறது? அதுதான் இல்லை! டி.கே.சி மகனை மறந்தார்; அவர் இறந்ததை மறந்தார்; பாட்டின் அருமையை மிக ரசித்து அனுபவித்தார். அதன் பிறகு அவர் சொன்னார்: " இப்படி ஓர் அற்புதமான கவி தமிழுக்குக் கிடைக்குமானால் உயிரைக் கொடுத்துக்கூட அதைப் பெறலாம்!''

" இப்படி மகனைப் பிரிந்த காலத்தும் அவன் மேல் பாடப்பட்ட பாட்டை அனுபவிக்கும் அற்புதப் பிறவியை என்ன என்பது! அவரை `ரஸஞ்ஞான்¢` என்கிறார் நண்பர் மகராஜன். ஆம், ரஸிகத்தன்மை சிலருக்கு இருக்கலாம். இவ்வுலக நிலையாமையைப் பற்றி ஞானம் பிறக்கலாம் பிறருக்கு. ஆனால் தன் உடல் ஆடும்போதுகூட, ஞான திறமும் மீறி ரஸமாகப் பாட்டை அனுபவிப்பது என்றால் அப்படி அனுபவிப்பவரை ரஸஞ்ஞானி என்று கூறாமல் என்ன கூறி விளக்க முடியும்? " என்று எழுதுகிறார் தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான்.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

No comments: