Monday, August 02, 2004

எனது களஞ்சியத்திலிருந்து - 5: பாராட்டுக் கவி

கவிஞர்கள் பொன்னுக்கும் புகழுக்கும் மட்டும் பாடியவர்களில்லை. அரசர்களையும் செல்வந்தர்களையும் மட்டும் படியவர்களில்லை. எளியோர்களையும் சாதாரண மக்கள் ஊழியர்களையும் கூடப் பாடியிருக்கிறார்கள். பெரிய உதவி என்றில்லை; பெரிய விருந்து என்றில்லை. அற்ப உதவி செய்தாலும் எளிய உணவளித்தாலும் அதையும் மனம் நெகிழ்ந்து பாடியிருக்கிரார்கள்.

அப்படிப்பட்ட கவிஞர்களில் முன் நிற்பவர் ஔவை. `உப்புக்கும் பாடி கூழுக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் எந்தன் உளம்` என்று தன் கவிப்பொருள் பற்றிக் கூறுகிறவர். ஒரு தடவை மழையில் நனைந்து பசியோடு ஒரு குடிசைக்குள் ஔவை நுழைகிறார். அது, தந்தையை இழந்து ஏழ்மையில் ஆதரவற்று தனியே வாழ்ந்த பாரி மன்னனின் மக்களான அங்கவை, சங்கவை யின் குடிசை. தந்தையின் நண்பரான ஔவையைக் கண்டதும் அப் பெண்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தந்தையைப் போல் அவருக்கு விருந்தளிக்க வசதியில்லை. தங்களுக்காகக் சமைத்திருக்கிற எளிய உணவை இடுகிறார்கள். நல்ல உணவை அளிக்கமுடியாமைக்கு வருந்துகிறார்கள். ஆனால் கவிஞருக்கு
அது அமுதமாகப் படுகிறது. வயிறும் மனமும் நிறைய, ஔவை பாடுகிறார்.

`வெய்தாய் நறுவிதாய் வேணளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறையிட்டுப் - பொய்யே
அடகு என்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் செறியாதோ கைக்கு?

`அடடா! என்ன அருமை! சூடாக, நறுவிசாக, வேண்டியமட்டும் தின்னும்படியாய் நிறைய நெய்விட்டு `கீரை` என்று பொய் சொல்லி விட்டு அமுதத்தை அல்லவா படைத்திருக்கிறார்கள்? இந்தக் கைகளுக்கு இரத்தினக் கடகம் அல்லவா செய்து போட வேண்டும்?` என்று உருகுகிறார்.

( வெய்து - சூடு; அடகு - கீரை )

இன்னொரு இடத்திலும் பசிக்கு ருசியான - ஆனால் மிக எளிமையான உணவு படைக்கப் பட்டபோதும் இப்படித்தான். கவிஞருக்கு உணவின் தரம் பெரிதல்ல. அளிக்கும் மனமே முக்கியம். புல்வேளூர் என்ற ஊரில் வாழ்ந்த பூதன் என்கிற ஒரு எளி-யவன் விருப்பத்தோடு
ஔவையாருக்கு மிக எளிய உணவைப் படைத்தான். வரகு அரிசியைக் கொண்டு சமைத்த சோறு; கத்தரிக்கய்ப் பொரியல்; முரமுர வெனப் புளித்த மோர்; இதுதான் அவன் இட்டது. ஆனால் கவிஞருக்கு எல்லா உலகங்களையும் ஈடாகக் கொடுத்தாலும் அந்த விருந்துக்கு இணையாகச் சொல்ல முடியவில்லையாம்!

கவிதை பிறக்கிறது:

`வரகரிசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்
முர முர வெனவே புளித்த மோரும் - திரமுடனே
புல்வேளுர்ப் பூதன் புரிந்து விருந்திட்டான்; ஈது
எல்லா உலகும் பெறும்.

( வழுதுணங்காய் - கத்தரிக்காய்; புரிந்து - விரும்பி )

கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கும் கவிதையின் பாடு பொருள் - உயர்ந்ததாக, உயர்ந்த மனிதர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. எள்¢ய மனிதர் செய்யும் சிறு உதவியையும் பெரிதாகக் கருதி அவர்களைப் பாராட்டிக் கவி புனைந்தளிப்பார்.

ஸ்ரீராமன் என்றொரு சலவைத் தொழிலாளி ஒருமுறை கம்பருடைய ஆடைகளை மிக அருமையாய் ஒப்புமை காட்டவியலாத வெண்மையுடன் வெளுத்துக் கொடுத்தான். அவனது சலவையின் நேர்த்தியை வியந்த கம்பர் அத்திறனை கொஞ்சம் உயர்வு நவிற்சியுடன் பாராட்டிக் கவிதையை வழங்கினார்.

வெள்ளைவெளேரென்ற - ஸ்ரீராமன் வெளுத்துக் கொடுத்த வேட்டியைப் பார்த்தார் சிவபெருமான். உடனே தம் தலையை அண்ணாந்து பார்த்தார். ஏன்? அந்த சலவை அதிகப் பிரகாசமாகமாக இருக்கிறதா அல்லது தாம் தலையில் சூடியுள்ள பிறைநிலா அதிகப் பிரகாசமாக இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்க்கத்தான்!

பிரம்மதேவர் தம் மனைவியான சரஸ்வதி தேவியைப் பார்த்தார். சரஸ்வதி ஸ்படிகம் போன்று வெண்மையானவர். ஸ்ரீராமனது வெண்மையான சலவை, தம் மனைவியோடு அதனை ஒப்பிட்டுப் பார்க்கச் செய்தது.

மும்மூர்த்திகளில் மூன்றாமவரான மகாவிஷ்ணுவுக்கும் ஸ்ரீராமனின் சலவையை கண்டு வியப்புண்டாகி தன் கையிலிருக்கிற வெண்சங்கைப் பார்க்கிறார் - எது அதிக வெண்மையானதென்று!

- இப்படி மும்மூர்த்திகளும் வியக்குமாறு மலைபோன்ற தோள்களையுடைய வண்ண ஸ்ரீராமனின் சலவையின் நேர்த்தி இருந்ததாம்!

இப்போது கவிதையைப் பார்ப்போம்:

`சிரம் பார்த்தான் ஈசன்; அயன்
தேவிதனைப் பார்த்தான்;
கரம் பார்த்தான் செங்கமலக்
கண்ணன்; - உரம்சேர்
மலை வெளுத்த திண்புயத்து
வண்ணான் சீராமன்
கலை வெளுத்த நேர்த்திதனைக்
கண்டு.

(சிரம் - தலை; அயன் - பிரம்மா; மலை வெளுத்த - மலையையும் தோற்கடித்த;
கலை - துணி)

இப்படித்தான் இன்னொரு தொழிலாளி - கம்பரின் பாராட்டுக் கவியைப் பெறுகிறான். மாமண்டூர் என்ற ஊரில் இருந்த சிங்கன் என்ற கொல்லன் கம்பருக்கு ஒரு அருமையான எழுத்தாணியை கலைநேர்த்தியுடன் வடித்துக் கொடுத்தான். இரும்பு வேலையில் மகா நிபுணனான அந்தக் கொல்லனைப் பாராட்டி கம்பர் ஒரு கவிதை பாடினார். பாராட்டு என்றாலே கொஞ்சம் உயர்வு நவிற்சி இருக்கும்தானே?

இந்தக் கலைஞனைத் தேடி மும்மூர்த்திகளும் அவனது உலைக்களத்துக்கே வந்து காத்துக் கிடக்கிறார்கள். ஏன் தெரியுமா?

மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் ஆயுதமான சக்கராயுதம் அநேக யுத்தங்களில் பயன்படுத்தியதால் தேய்ந்து போயிருக்கிறது. அடுத்து அதற்கு வேலை வருவதற்குள் புதிய சக்கராயுதம் செய்தாக வெண்டும். நல்ல வலுவான இரும்பில் செய்ய வல்லவன் மாமண்டூரில் இருக்கிற சிங்கன் என்கிற கொல்லன்தான். எனவே அவரே நேரில் உலைகளத்துக்கே வந்து `அப்பா, எனக்கு அவசரமாய் ஒரு சக்கரம் செய்து கொடு` என்று கேட்டுக் கொண்டு நிற்கிறார்.

அப்போது பிரம்மதேவன் அங்கு வருகிறார். கோடிக்கணக்கான மக்களது தலையில் எழுதி எழுதி அவரது எழுத்தாணி தேய்ந்து போய்விட்டது. இனிப் பிறக்கிறவர்களுக்கு புது எழுத்தாணி கொண்டுதான் தலையெழுத்தை எழுதவேண்டும். என்வே ` எனக்கு உடனே ஒரு எழுத்தாணி செய்து கொடப்பா` என்று கேட்டுக்கொண்டு அவர் நிற்கிறார்.

இந்த சமயத்தில் கோழிக்கொடியோனான முருகப் பெருமான் அங்கு வந்து குன்றைத் துளைக்கும்படியான கூரிய வேல் ஒன்றை வடித்துக் கொடு என்று கேட்கிறார். கடைசியாக சிவபெருமானும் வந்து விட்டார். `சிங்கா! எனக்கு ஒரு மழு செய்து கொடேன்` என்கிறார்.

இப்படி - தெய்வங்களே கொல்லனைத் தங்கள் இருப்பிடத்துக்கு அழைத்து ஆயுதங்களைச் செய்யச் சொல்லாமல் தாங்களே நேரில் சென்று கேட்கிறார்கள் என்றால் சிங்கன் எப்பேர்ப்பட்ட கலைஞனாக இருக்க வேண்டும்!

இப்போது பாடலைப் பார்ப்போம்:

`ஆழியான் `ஆழி`
அயன் `எழுத்தாணி` என்பார்;
கோழியான், `குன்றெறிய
வேல்` என்பான்; - பூழியான்
`அங்கை மழு` என்பான்,
அருள்பெரிய மாவண்டூர்ச்
சிங்கன் உலைக் களத்தில்
சென்று.

(ஆழியான் - திருமால்; ஆழி - சக்கரம்;ராயன் - பிரும்மா; கோழியான் கோழிக் கொடியோனான முருகன்; பூழியான் - உடலெங்கும் புழுதி போல விபூதியைப் பூசியுள்ள சிவபெருமான்; அங்கை மழு - கையில் வைத்துக் கொள்ளும் அழகிய மழு; அருள் பெரிய - கருணை மிகுந்த; மாவண்டூர் - மாமண்டூரின் பழைய பெயர் )

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

No comments: