Tuesday, June 29, 2004

எனது களஞ்சியத்திலிருந்து - 4: கூட்டுக் கவி

தனிக் கவிஞர்களின் பாடல்களல்லாமல் இரண்டு மூன்று கவிஞர்கள் சேர்ந்து பாடிய கூட்டுக் கவிகளையும் தனிப்பாடல் திரட்டு போன்றவற்றில் பார்க்கிறோம். பெரிதும் இரட்டைப் புலவர்கள் பாடியுள்ளவற்றையே நம்மில் பலரும் அறிவோம். இரட்டையர் பாடி பூர்த்தியாகாதிருந்த ஒரு வெண்பாவை காளமேகம் பூர்த்தி செய்ததாக ஒரு பாடல் உண்டு.

இரட்டைப் புலவர்கள் திருவாரூர் சென்று தியாகேசரைத் தரிசித்துவிட்டு ஒரு மண்டபத்தில் வந்து உட்கார்ந்தனர். வழக்கம் போல் ஒருவர் ஒரு பாடலைத் தொடங்கி இரண்டு அடிகள் பாடும் போது
" நாணென்றால் நஞ்சிருக்கும்; நற்சாபம் கற்சாபம்;
பாணந்தான்......
- என்பதோடு நிறுத்திவிட,
அடுத்தவர் அதைத் தொடரத் தோன்றாமல் தியங்கினார். அப்போதைக்கு மண்டபத்துச் சுவற்றில் பாடியவரையில் அங்கு கிடைத்த கரிக்கட்டியால் எழுதி வைத்து விட்டு தங்களது யாத்திரையைத் தொடர்ந்தனர். பிறகு கொஞ்ச நாட்கள் சென்று, திரும்பி வந்தபோது அவர்கள் முடிக்காமல் விட்டிருந்த பாடலை யாரோ பூத்தி செய்திருந்ததைப் பார்த்து
வியப்புடன் நெருங்கிப் பார்த்த போது பூர்த்தி செய்த வரிகளின் கீழே, - 'காளமேகம்' என்று கைஎழுத்திட்டிருந்ததைக் கண்டு
சிலிர்த்துப் போனார்கள்.

இரண்டாவது வரியில் 'பாணந்தான்....' என்பதைத் தொடர்ந்து,

........மண்தின்ற பாணமே - தாணுவே
சீராருர் மேவும் சிவனே நீர் எப்படியோ
நேரார் புரம்எரித்த நேர்'.
- என்று எழுதப் பட்டிருந்தது.

சிவபெருமான் முப்புரங்களை எரித்த போது பூமியைத் தேராகவும், சந்திர சூரியரைச் சக்கரங்களாகவும், மேருமலையை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பினை நாணாகவும் மண்ணை உண்ட கண்ணனை(திருமாலை) அம்பாகவும் கொண்டு சென்றார் என்பது புராணக் கதை. அதை
அடிப்படையாகக் கொண்டு இரட்டையர் சொல் நயமுடன் பாடத்தொடங்கிய பாடலைக் காளமேகம், தனக்கேயுரிய சாதுர்யத்துடன் சிலேடையில் நையாண்டி செய்கிறார்.

'நாண் என்றால் நஞ்சிருக்கும்- நாகத்தின் நஞ்சு உள்ளது- நைந்து போயுள்ளது;
நல்ல வில்லோ (நற்சாபம்) - கல்சாபம்-கல்லால் ஆனது;
பாணமோ மண்தின்ற பாணம் - மண்தின்று மக்கிப்போனது- மண்ணைத் தின்றது;
-இப்படி இருக்க இவற்றைக் கொண்டு, திருவாரூர் ஈசனே! நீர் எப்படித்தான் திரிபுரத்தை எரித் தீரோ?-
அறியோம்.

முழுப்பாடல்: நாண் என்றால் நஞ்சிருக்கும்; நற்சாபம் கற்சாபம்:
பாணந்தான் மண்தின்ற பாணமே- தாணுவே
சீராரூர் மேவும் சிவனே நீர் எப்படியோ
நேரார்புரம் எரித்த நேர்.

இப்பாடலில் மயங்கிப்போன இரட்டையர் காளமேகத்தைக் காண விழைந்து அவரது ஊருக்குச் சென்றார்கள். அந்தோ பரிதாபம்! அவர்கள் சென்ற நேரத்தில் காளமேகத்தின் உடல் மயானத்தில் எரியூட்டப் பட்டதைத்தான் காணமுடிந்தது. ஆசுகவியின் உடல் வேகிறதைக் கண்டு மனம் நொந்து அவர்கள் பாடினார்கள்:

ஆசு கவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ் காள மேகமே! - பூசுரா!
விண்கொண்ட செந்தழலிலே வேகுதே ஐயையோ!
மண்தின்ற பாணம் என்ற வாய்.
-என்று பரிதவித்தார்கள்-வழக்கம்போல் ஆளுக்கு இரண்டடியாகத்தான்!

இப்படி ஒட்டக்கூத்தனும் குலோத்துங்க சோழனும் பாடிய ஒரு கூட்டுக் கவியும் உள்ளது. சோழன் உலா வரும்போது ஒட்டக் கூத்தன் அவனைப் புகழ்ந்து இரண்டடி பாட, சோழன் இரண்டடி பாடி முடித்த பாடல் இது:

ஆடும் கடைமணி நாவசையாமல், அகிலமெங்கும்
நீடும் குடையைத் தரித்த பிரான்; இந்த நீள்நிலத்தில்
பாடும் புலவர் புகழ் ஒட்டக்கூத்தன் பதாம்புயத்தைச்
சூடும் குலோத்துங்க சோழன் என்றேயெனைச் சொல்லுவரே!

- கொஞ்சம் பரஸ்பர ஒத்தடம்தான்! ஆனாலும் அருமையான கவியல்லவா கிடைத்திருக்கிருக்கிறது!.

நம் காலத்து நாயகர்களான இரண்டு இலக்கியவாதிகளும் இப்படிக் கூட்டுக் கவிபாடியுள்ளார்கள். காலஞ்சென்ற கவிஞர் தமிழ் ஒளியும் ஜெயகாந்தனும் நெருக்கமான இலக்கிய நண்பர்கள். ஜெயகாந்தனும் அற்புதமான கவிஞர் என்பது பலருக்குத் தெரியுமோ என்னவோ?
தொ.மு.சி.ரகுநாதன்- தான் புதுமைப்பித்தனுக்கு மிகவும் நெருங்கியவர் என்பதை 'புதுமைப் பித்தன் வரலாறு', 'புதுமைப்பித்தன் கவிதைகள்', இன்னும் பல கட்டுரைகள், பேச்சுக்கள் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்ததில் அலுப்படைந்த நண்பர்கள் இருவரும் ஒரு கூட்டுக்கவி மூலம் தங்களது எரிச்சலை வெளிப்படுத்தினார்கள்.

முதல் இரண்டடியை ஜெயகாந்தன் பாட, ப்¢ன் இரண்டடியை தமிழ் ஒளி பாடினார்:

பித்தன் உனைப்புகழ்ந்து பேசினான் என்பதனால்
கத்தலாம் என்று கதைக்காதே - எத்தனே
ஆடும் சிவனுடனே ஆடுகின்ற பேய்க்கும்பல்
ஆடுமோ சிற்றம்பலம்?

கொஞ்சம் கடுப்படிக்கிற பாடல்தான். ஆனால் அப்படிக் கடுப்படிக்க நேர்ந்து விடுவதும் உண்டு தானே? எனக்கும் கூட அப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தது. நான் ஆசிரியராகப் பணிபுரிந்த போது, நானும் பக்கத்து ஊரில் இருந்த ஒரு இலக்கிய நண்பரும் சீட்டுக்கவி மூலம் இலக்கியப் பரிவர்த்தனை செய்து கொள்வதுண்டு. அதையறிந்த- கவிஞரான நண்பரிடம் கவிதை எழுதக் கற்று வந்த ஒரு இளைஞர், என்னோடு பரிச்சயமில்லாத நிலையில் எனக்கு ஒரு சீட்டுக்கவியை அனுப்பினார்.

'கூட்டுப்பணி புரிய
கூட்டாளி தேவையென்று
சீட்டுக்கவி தந்தேன்
சிந்தையொடு - ஓட்டாலே
நாட்டுக்கு என்ன
நலம்பயக்கச் செய்வதென்று
கூட்டுக் குகந்தோய் நீ
கூறு'.

முன்பின் பழக்கமில்லாமலே இவ்வளவு நெருக்கமாய் அவர் எழுதியது எனக்கு எரிச்சல் ஊட்டியது. அதனால் அவரது வேண்டுகோளை மறுக்கிற விதமாக இப்படி எழுதி அனுப்பினேன்:

'கூட்டுப்பணி புரிய
கூட்டாளி தேவை என்றீர்
கூட்டுப்பணி எனக்குக்
கட்டாது - கூட்டு
கொள்ளைக்குப் போனாலும்
கூடாதாம் கூட்டென்ற
சள்ளை உதவா
தெனக்கு!'

பாவம்! மிகவும் காயப்பட்டுப் போனரோ என்னவோ? பின்பு அவரிடமிருந்து எதுவும் வரவில்லை.

- மேலும் சொல்வேன்.

No comments: